WFTW Body: 

விசுவாசமில்லாமல் (வேறு எது இருந்தாலும்) தேவனுக்குப் பிரியமாயிருப்பது கூடாதகாரியம் (எபிரேயர் 11:6). ஏதேன் தோட்டத்தில் ஏவாளின் வீழ்ச்சி விசுவாசத்தின் வீழ்ச்சி தான். அந்தக் கவர்ச்சியான விருட்சத்தினால் அவள் சோதிக்கப்பட்டபோது, அன்புள்ள தேவன் ஏன் அதனைப் புசிப்பதைத் தடுக்கிறார் என்பதை அவளால் புரிந்து கொள்ள முடியாவிட்டாலும், தேவனுடைய பரிபூரண அன்பையும் பரிபூரண ஞானத்தையும் அவள் நம்பியிருந்தால், அவள் பாவம் செய்திருக்க மாட்டாள். ஆனால், சாத்தான் அவளை தேவனுடைய அன்பை சந்தேகிக்கச் செய்தவுடன், அவள் அதி சீக்கிரத்தில் வீழ்ச்சியடைந்தாள்.

தேவன் அநேகக் காரியங்களை நமக்கும் தடை செய்திருக்கிறார். நம்முடைய அநேக ஜெபங்களில் நாம் கேட்கிற காரியங்களைக் கொடுக்கத் தகுதியற்றதாய் அவர் காண்கிறார். அத்தகைய நேரங்களில் நாம் அவருடைய பரிபூரண அன்பிலும் அவருடைய பரிபூரண ஞானத்திலும் நம்பிக்கை வைக்க வேண்டும். இயேசு சிலுவையிலே கைவிடப்பட்ட போதும் பிதாவை நம்பினார். "ஓ தேவனே! ஓ தேவனே! ஏன் என்னைக் கைவிட்டீர்?" என்று கூறாமல், "என் தேவனே! என் தேவனே! ஏன் என்னைக் கைவிட்டீர்?" என்றே கூறினார். "நீர் ஏன் என்னைக் கைவிட்டீர் என்பதை நான் புரிந்து கொள்ள முடியாவிட்டாலும், நீர் இன்னமும் என் தேவன் தான்" என்பதே இதன் அர்த்தம். இயேசுவின் கேள்விக்கு பரத்திலிருந்து எந்த பதிலும் வரவில்லை. ஆனாலும், "பிதாவே, உம்முடைய கைகளில் என் ஆவியை ஒப்புவிக்கிறேன்" என்று சொல்லி பிதாவை நம்பி மரித்தார். முடிவுபரியந்தம் விசுவாசத்தில் நிலைத்திருப்பதின் அர்த்தம் இதுதான்

"சாத்தான் உன்னைப் புடைக்கிறதற்கு உத்தரவு கேட்டுக்கொண்டான்" என்று இயேசு பேதுருவிடம் கூறினார். பழைய ஏற்பாட்டில் யோபுவைப் புடைக்கிறதற்கு சாத்தான் தேவனிடம் அனுமதி கேட்டதைப் போலவே இதுவும் இருக்கிறது. தேவனுடைய அனுமதியின்றி சாத்தான் நமக்கு ஒன்றும் செய்ய முடியாது, நம்மை சோதிக்கவும் கூட முடியாது. ஆனால் பேதுரு புடைக்கப்படுகையில் அவருடைய விசுவாசம் ஒழிந்துபோகாதபடிக்கு அவருக்காக வேண்டிக்கொண்டதாக இயேசு கூறினார் (லூக்கா 22:31,32). அதுதான் காரியம். நாம் சோதிக்கப்படக்கூடாது என்றோ அல்லது நமது சுகமோ செல்வமோ அல்லது வேலையோ போய்விடக்கூடாது என்றோ அவர் ஜெபிக்காமல், நம்முடைய விசுவாசம் ஒழிந்துபோகக்கூடாது என்பதற்காக மட்டுமே இயேசு ஜெபிக்கிறார்.

ஆகவே, இயேசுவின் பார்வையில் விசுவாசமே நம்முடைய மிக முக்கியமான பொக்கிஷமாகும். நமக்கு விசுவாசமிருந்தால், பேதுருவைப் போல படுதோல்வியுற்றாலும், ஒருபோதும் சோர்வடையமாட்டோம். வெறுமனே எழுந்திடாமல், குதித்தெழுந்து, நம்முடைய பாவத்திலிருந்து மனந்திரும்பி தேவனிடம் அறிக்கைசெய்யும்போது நம்மை முழுமையாகச் சுத்திகரிக்கிற ஆட்டுக்குட்டியின் இரத்தத்தைப் பற்றிய நம்முடைய சாட்சியின் வசனத்தினால் சாத்தானை ஜெயிப்போம் (வெளி 12:11). நாம் இயேசுவின் இரத்தத்தினால் சுத்திகரிக்கப்பட்டோம் என்றும், தேவன் நம்முடைய கடந்தகால பாவங்கள் எதையும் இனி நினைவுகூரமாட்டார் என்றும் சாத்தானிடம் சொல்ல வேண்டும் (எபிரேயர் 8:12). சாத்தான் நம்முடைய எண்ணங்களைக் கேட்க முடியாதென்பதால், நம்முடைய வாயால் அதனை அவனிடம் சொல்ல வேண்டும். இவ்வாறு நாம் அவனை ஜெயங்கொள்வோம், அவன் நம்மைவிட்டு ஓடிப்போவான்.

என் சத்துருவே, எனக்கு விரோதமாய்ச் சந்தோஷப்படாதே; நான் விழுந்தாலும் எழுந்திருப்பேன்; நான் இருளிலே உட்கார்ந்தால், கர்த்தர் எனக்கு வெளிச்சமாயிருப்பார். அவர் என்னை வெளிச்சத்திலே கொண்டுவருவார். உன் தேவனாகிய கர்த்தர் எங்கே என்று என்னோடே சொல்லுகிற என் சத்துருவானவன் அதைப் பார்க்கும்போது வெட்கம் அவனை மூடும்; இனி வீதிகளின் சேற்றைப்போல (நம்முடைய கால்களின் கீழே) மிதிக்கப்படுவான்.” (மீகா 7:8-10).

"கர்த்தர் எனக்குச் சகாயர், (எந்த மனுஷனுக்கோ, எந்த பிசாசுக்கோ, எந்த சூழ்நிலைக்கோ அல்லது வேறு எதற்காகவோ) நான் பயப்படேன் ஏனென்றால், அவர் என்னைவிட்டு விலகுவதுமில்லை, என்னைக் கைவிடுவதுமில்லை (எபிரேயர் 13:5,6) என்று தேவன் வாக்குப்பண்ணியிருக்கிறாரே" என்று எல்லா நேரங்களிலும் நாம் தைரியமாகச் சொல்ல வேண்டும். இதுவே நம்முடைய விசுவாசத்தின் தைரியமான அறிக்கையாகும்.