WFTW Body: 

அந்தரங்கத்தில் தேவனுடைய முகத்துக்கு முன்பாகவே நீங்கள் வாழ்ந்து, உங்கள் இருதயத்தில் தொடர்ந்தேச்சையாய் தேவனையே வாஞ்சித்து நாடும் ஒரு கதறல் இருக்கட்டும். தேவன் பேரில் கொண்ட இந்த வாஞ்சை இல்லாமல் போகும் போதுதான் கிறிஸ்தவமானது ஒரு வறண்ட வெற்று மதமாக மாறிவிடுகிறது. எனவே தேவன் பேரில் கொண்ட வாஞ்சையை எந்த விலைக்கிரயம் செலுத்தியாகிலும் காத்துக்கொள்ளுங்கள். அதுவே உங்களுடைய விசுவாசத்தின் மிக முக்கியமான அம்சமாகும். மானானது நீரோடைகளை வாஞ்சித்துக் கதறுவதுபோல நாமும் தொடர்ந்தேச்சையாய் தேவனை வாஞ்சித்து நாட வேண்டும்.

தேவன் நமக்கென்று வைத்திருக்கும் பாடத்திட்டத்தில் இந்த உலகம் "ஏமாற்றங்கள்" என அழைக்கும் பல காரியங்களும் உள்ளடங்கும். ஆனால் இவைகளோ நமது நன்மைக்காக "அவர் நியமித்த நியமனங்கள்" ஆகும். நாம் இப்படிப்பட்ட ஏமாற்றங்களைச் சந்திக்கவில்லை என்றால் நாம் ஒருபோதும் மற்றவர்களுக்கு ஆலோசனை கொடுக்க முடியாது. வாழ்க்கைப் படிப்பினையில் தோல்வியும் கூட அடங்கும், ஏனென்றால் இந்த உலகிலுள்ள 99.9% மக்கள் தோல்வியுற்றவர்களே. .இவர்களுக்கு நாம் உதவி செய்ய வேண்டுமானால் நமக்கும் தோல்வி அவசியமாய் இருக்கிறது. தோல்வியின் இரண்டு நோக்கங்கள் என்னவென்றால் (1) நம்மை தாழ்மைப்படுத்தவும் (நம்மை நொறுக்கும்படியாகவும்) (2) மற்றவர்களுடன் நாம் இரக்கம் உள்ளவர்களாய் நம்மை மாற்றும்படியாகவும் ஆகும்.

உங்கள் ஆவிக்குரிய போராட்டங்களும் கூட இந்தப் படிப்பினையின் ஒரு பகுதியேயாகும். தற்காலிகமான பூமிக்குரிய பட்டங்களுக்கென்று நீங்கள் எவ்வளவோ கடினமாக உழைக்கிறீர்களென்றால், நித்திய பரலோகத்துக்குரியவைவைகளுக்காக நீங்கள் எவ்வளவு அதிகமாய்ப் போராட முன்வர வேண்டும்?! காலம் குறுகியது, நாட்களும் பொல்லாதவைகளாய் இருக்கின்றன. நம்முடைய எல்லா பூமிக்குரிய ஈடுபாடுகளிலும் நித்தியத்துக்குரிய கண்ணோட்டத்தையே நாம் நம் மனதில் கொண்டிருக்க வேண்டும். எப்பொழுதும் உங்களை நீங்கள் நியாயந்தீர்த்துக் கொள்ளுங்கள்; எல்லாச் சமயங்களிலும் உள்ளான பரிசுத்தத்துடனேயும் கர்த்தரோடு நடந்திடுங்கள்.

பவுல் தீமோத்தேயுவிடம், “உன்னிடத்தில் ஒப்புவிக்கப்பட்ட அந்த நற்பொருளை நமக்குள்ளே வாசம் பண்ணுகிற பரிசுத்த ஆவியினாலே காத்துக்கொள்” (2தீமோத்தேயு 1:14) என்று கூறினார். பூமிக்குரிய இந்த யாத்திரையில் தேவன் நமக்கு பரிசுத்த பொக்கிஷமாய் கொடுத்திருக்கிற நம் சரீரங்களை நாம் அவருக்கென்று காத்துக்கொள்ள வேண்டும். நம் வாழ்க்கைப் பயணத்தை நிறைவு செய்யும் அந்த நாள்வரைக்கும் நாம் எல்லாப் பாவங்களிலிருந்தும் கழுவப்படும்படியாகவும், பரிசுத்தத்தில் காக்கப்படும்படியாகவும், நமது சரீரங்களை அனுதினமும் அவருக்கு ஒப்புவிக்க வேண்டும்.

உதாரணமாய் சொல்லவேண்டுமானால், இது ஒரு நிறுவனமானது நம்மிடம் 50 லட்சம் ரூபாயை கொடுத்து ஒரு இடத்திலிருந்து மற்றொரு இடத்திற்கு பத்திரமாய் எடுத்துச் செல்லும்படி சொல்வதுபோல் இருக்கிறது. ஆனால் நாமோ போகும் வழியில் சிலவற்றை வீணாக்கியும் மீதம் இருந்ததை தொலைத்தும் விட்டோம். இப்பொழுது நாம் மனந்திரும்பி நம் தோல்வியில் கர்த்தரிடம் திரும்பி வருகிறோம். அவர் என்ன செய்கிறார்? அவர் நம்மைத் தள்ளி விடுவதில்லை. அதற்கு பதிலாக அவர் நம்மை மன்னித்து மேலும் 50 லட்சத்தை கையில் கொடுத்து வாழ்க்கையின் இறுதிவரை அதை பத்திரமாய் எடுத்துச் செல்லும்படி கூறுகிறார். தேவன் எவ்வளவு நல்லவராய் இருக்கிறார்!

கிறிஸ்தவர்களாய் நமது சாட்சியானது உலகத்தின் தரத்தைக் காட்டிலும் மிகவும் மேலானதாய் இருக்க வேண்டும். பொல்லாங்காய்த் தோற்றமளிக்கிற காரியங்களைக் கூட நாம் செய்யக்கூடாது. ஏதாகிலும் ஒரு காரியத்தைக் குறித்து நமக்கு சந்தேகம் ஏற்படும்போது, பாவமாகிய ஒரு காரியத்தை கவனமில்லாமலிருந்து செய்துவிடுவதைக் காட்டிலும், பாவமில்லாத ஒன்றை அதிக எச்சரிக்கையாயிருப்பதினிமித்தம் அதை செய்யாமல் இருப்பது மேலானது.