WFTW Body: 

ஜெபம் என்பது தேவனோடு பேசுவது மட்டும் அல்ல, அவருக்குச் செவிகொடுப்பதும் தான். செவிகொடுத்தல் அவரோடு பேசுவதைப் பார்க்கிலும் அதிக முக்கியம். மூத்தவரும் அதிக தேவபயம் உள்ளவருமான ஒரு நபரிடம் நீங்கள் தொலைபேசியில் உரையாடும்போது, நீங்கள் பேசுவதைக் காட்டிலும் அதிகமாக நீங்கள் செவிகொடுப்பீர்கள். அதைப்போல் தான் மெய்யான ஜெபமும் இருக்க வேண்டும் - நீங்கள் தேவனோடு பேசுவதைப் பார்க்கிலும் அதிகமதிகமாய் அவருக்கு நீங்கள் செவிகொடுக்க வேண்டும்.

நீங்கள் ஏதோ ஒரு காரியம் செய்ய முனைப்புடன் இருக்கையில், “உங்கள் இருதயத்தில் சமாதானமாய்” உணர்கிறேன் என்று உங்களுக்குள்ளே நீங்கள் கூறிக்கொண்டு, உங்கள் மனச்சாட்சியை இலகுவாக்க அதைக்குறித்து சுருக்கமான ஜெபம் செய்து, அது தேவ சித்தம் என்றெண்ணி உங்களை நீங்களே எளிதாக வஞ்சித்திடமுடியும் - மேலும் அதை செய்தும் விடுவீர்கள்! அவ்வாறு செய்வதினிமித்தம் நீங்கள் தேவனுடைய சித்தத்தை முற்றிலும் தவறவிடக்கூடும். எவ்வளவு அதிக முக்கியமான முடிவு நீங்கள் எடுக்க வேண்டுமோ, அவ்வளவுக்கதிகமாக நீங்கள் செயல்படுமுன் தேவனுக்காக நீங்கள் காத்திருக்க வேண்டும் என்பதை நினைவில் கொள்ளுங்கள்.

அடிப்படையில், மாம்சமானது சோம்பலாயும், இன்பம் மற்றும் சொகுசை விரும்புகிறதாயும் இருக்கிறது. அதன் மூலம் வஞ்சிக்கப்படாதிருங்கள். தேவனுடைய சித்தம் அறிய நாடுகையில், உங்கள் உணர்வுகளினால்(senses) வரும் எண்ணங்களுக்கு(impressions) நீங்கள் மறுப்புத் தெரிவிக்க வேண்டும். வானத்துக்கும் பூமிக்கும் இடையே உள்ளதைப்போலவே தேவனுடைய நினைவுகளுக்கும் உங்கள் நினைவுக்கும் அதிக வித்தியாசமுண்டு (ஏசாயா 55:8,9). தேவன் காரியங்களை நடப்பிக்கும் விதம் நீங்கள் நடப்பிப்பதைக்காட்டிலும் அதிக உயர்வானது. ஆகவே தான், தேவனுடைய மிகச்சிறந்ததைப்பெற நீங்கள் அவருக்கு அடங்கியிருக்க வேண்டும் என்று தேவன் விரும்புகிறார்.

ஜெபிப்பதற்கு அதிக நேரம் உங்களுக்கு இல்லாமல் போகலாம். ஆனால், உங்களது முடிவுகளை எடுப்பதற்கு, தேவனுக்காகக் காத்திருக்கும் மனப்பான்மையை நீங்கள் கொண்டிருக்க வேண்டும். ஆகையால் ஒவ்வொரு நாளும் தேவனோடு சில நிமிடங்கள் செலவிட உங்களை நீங்கள் பழக்கப்படுத்திக் கொள்ளுங்கள் - காலையில் முதல் காரியமாக அதற்கு முன்னுரிமை கொடுப்பது நல்லது. காலையில் முடியவில்லையென்றால், பகலில் எப்போதாவது கொஞ்ச நேரம் கொடுங்கள். இல்லையெனில், உங்கள் எண்ணங்கள் (impressions) உங்கள் வாழ்க்கைக்கான தேவ சித்தத்திலிருந்து வழிவிலகிப் போகப்பண்ணும்.

தேவன் ஒவ்வொரு நாளும் உங்களோடு உறவாட விரும்புகிறார். “முதலாம் நாளில், தேவன் பேசினார்… இரண்டாம் நாளில், தேவன் பேசினார்… மூன்றாம், ….நான்காம், …..ஐந்தாம் மற்றும் ஆறாம் நாட்களில், தேவன் பேசினார்” என்ற இந்தச் செய்தி தான் வேதாகமத்தின் முதல் பக்கம் முழுவதும் வருகிறது. தேவன் பேசியபோது, ஏதோ ஒரு காரியம் ஒவ்வொரு நாளும் நடந்தது, மேலும் அதன் முடிவு “அது நல்லது” என்பதாயிருந்தது. நீங்கள் ஒவ்வொரு நாளும் தேவனுக்குச் செவிகொடுத்தால் உங்கள் வாழ்க்கையும் அவ்வண்ணமே இருக்கக்கூடும். “மனுஷன் அப்பத்தினாலேமாத்திரமல்ல, தேவனுடைய வாயிலிருந்து புறப்படுகிற ஒவ்வொரு வார்த்தையினாலும் பிழைப்பான் (மத்தேயு 4:4)” என்று இயேசு கூறினார். உங்கள் வாழ்க்கையில் ஒவ்வொரு நாளும் தேவனை முதலாவதாக வைக்கவில்லையெனில், மிகவும் எளிதாக பின்மாற்றம் அடைந்து விடுவீர்கள்.

“தேவனுக்குச் செவிகொடுத்தல்” என்றால் வேதத்தை வாசிப்பது என்று நான் கூறவில்லை. ஆனால், அவரைப் பிரியப்படுத்தும் காரியங்களை நீங்கள் செய்யவும், அவரை அதிருப்திப் படுத்தும் காரியங்களைத் தவிர்க்கவும், நாள் முழுவதும் உங்கள் மனச்சாட்சியினுள் பரிசுத்த ஆவியின் சத்தத்திற்குச் செவிசாய்ப்பதையே நான் கூறுகிறேன்.

தேவன் எப்போதும் நம் ஜெபங்களுக்குப் பதில் அளிக்கவே விரும்புகிறார். ஆனால், அவரது பதிலுக்காக நாம் ஆர்வமுடன் காத்திருக்க வேண்டும். சில நேரங்களில் “இல்லை” என்பது அவரின் பதிலாயிருக்கலாம். சில நேரங்களில் “காத்திரு” என்பதாக இருக்கலாம். போக்குவரத்து விளக்கில் உள்ள சிவப்பு, மஞ்சள் மற்றும் பச்சை விளக்குகள் போல், தேவனுடைய பதிலும் “இல்லை”, “காத்திரு” அல்லது “ஆம்” என்பதாக இருக்கலாம்.