WFTW Body: 

ஒரு வருடத்தின் முடிவில், பல சகோதர சகோதரிகள் தங்கள் கடந்த கால வாழ்க்கையில், சில சமயங்களில் தேவனுக்கு விரோதமாகப் பாவம் செய்ததினாலும் தேவனுக்கு முன்பாக தவறியதினாலும், தங்களுடைய வாழ்க்கைக்கான தேவனுடைய பரிபூரண திட்டத்தை இப்பொழுது நிறைவேற்ற முடியாது என்று ஒருவேளை உணரலாம்.

இந்த காரியத்தில் நம்முடைய சுயபுத்தியின்மேலும், தர்க்க சாஸ்திர (logic) உணர்வின்மேலும் சாயாமல், வேதவாக்கியங்கள் என்ன கூறுகின்றன என்பதைக் காண்போமாக. வேதாகமம் எவ்வாறு தொடங்குகிறது என்பதை முதலில் கவனித்துப் பாருங்கள். ஆதியிலே தேவன் வானத்தையும் பூமியையும் சிருஷ்டித்தார் (ஆதியாகமம் 1:1). தேவன் அவற்றைப் படைத்தபோது வானங்களும் பூமியும் கண்டிப்பாகப் பூரணமாகவே இருந்திருக்கும், ஏனென்றால் பூரணமற்றதும் முழுமையற்றதுமான எதுவுமே அவருடைய கரத்திலிருந்து ஒருபோதும் தோன்றுவதே இல்லை. இருப்பினும் ஏசாயா 14:11-15, எசேக்கியேல் 28:13-18 ஆகிய வசனங்களில் நமக்கு விவரிக்கப்பட்டிருக்கிறபடி, அவர் சிருஷ்டித்த தூதர்களில் சிலர் விழுந்துபோனார்கள். இதன் விளைவாகத்தான் "ஒழுங்கின்மையும் வெறுமையும் இருளுமாயும் இருந்தது" என்று ஆதியாகமம் 1:2-ல் விவரிக்கப்பட்டுள்ள நிலைமைக்குப் பூமி வந்தது. ஒழுங்கின்மையும் வெறுமையும் இருளுமாயும் இருந்த பூமியின் மீது, தேவன் எவ்வாறாகக் கிரியை செய்து, அதிலிருந்து அவ்வளவு அழகானதொன்றை உண்டாக்கி, முடிவாகத் தாமே "மிகவும் நன்றாக இருக்கிறது" (ஆதியாகமம் 1:31) என்றும் கூறினார் என்பதை மீதமுள்ள ஆதியாகமம் 1-ம் அதிகாரத்தில் விவரிக்கப்பட்டுள்ளது. (1) தேவ ஆவியானவர் ஜலத்தின் மேல் அசைவாடிக்கொண்டிருந்தார் என்றும் (2) தேவனுடைய வாயிலிருந்து அவருடைய வார்த்தை வந்தது என்றும் ஆதியாகமம் 1:2,3 வசனங்களில் நாம் வாசிக்கிறோம். இந்த இரண்டு காரணிகளும் (factors) எல்லா வித்தியாசத்தையும் ஏற்படுத்தினது. இன்று இதிலே நமக்கு இருக்கும் செய்தி என்ன? நாம் எவ்வளவுதான் தோல்வியுற்றிருந்தாலும் அல்லது நாம் எவ்வளவுதான் காரியங்களைச் கெடுத்துப்போட்டிருந்தாலும், தேவன் நம்முடைய வாழ்க்கையிலிருந்து மகிமையான ஒன்றை உண்டாக்க முடியும் என்பதுதான். தேவன் வானங்களையும் பூமியையும் சிருஷ்டித்தபோது ஒரு பரிபூரண திட்டத்தை அவைகளுக்காக வைத்திருந்தார். ஆனால், லூசிபரின் வீழ்ச்சியினிமித்தம் இத்திட்டத்தை ஒதுக்கி வைக்க வேண்டியதாயிற்று. ஆனால், தேவன் வானங்களையும் பூமியையும் மறுபடியும் உண்டாக்கினார் மற்றும் குழப்பத்திலிருந்து மிகவும் நன்றாக இருக்கும் ஒன்றை உண்டாக்கினார்.

ஆதியில் நிகழ்ந்த இந்நிகழ்ச்சிக்குப் பின்பு நடந்த சம்பவத்தையும் கவனித்துப் பாருங்கள். தேவன் சகலவற்றையும் மீண்டுமாய் தொடங்கி, ஆதாமையும் ஏவாளையும் சிருஷ்டித்தார். தேவன் அவர்களுக்காகவும் கூட ஒரு பரிபூரண திட்டத்தைக் கண்டிப்பாக வைத்திருந்திருப்பார். நன்மை தீமை அறியத்தக்க விருட்சத்தின் கனியை அவர்கள் புசிப்பது அந்த பரிபூரண திட்டத்தில் இடம்பெறவில்லை என்பது வெளிப்படையாகவே புலனாகிறது. ஆனால், அவர்களோ தேவனுக்குக் கீழ்ப்படியவில்லை, இதனால் தேவன் அவர்களுக்காக வைத்திருந்த அசலான (original) திட்டத்தை நெகிழச் (frustrated) செய்தனர். தேவனுடைய பரிபூரண திட்டத்தை நிறைவேற்ற இனிமேல் அவர்களுக்குச் சாத்தியமில்லை என்று தர்க்க சாஸ்திரம் (logic) இப்போது நமக்குச் சொல்லும். ஆயினும், தங்களுடைய மீதமுள்ள வாழ்நாள் முழுவதும் அவருடைய இரண்டாம் தரமான திட்டத்தின் படிதான் வாழவேண்டும் என்று தேவன் அவர்களிடம் சொல்லவில்லை. ஸ்திரீயின் வித்து சர்ப்பத்தின் தலையை நசுக்குவார் என்று ஆதியாகமம் 3:15-ல் அவர்களுக்கு வாக்குத்தத்தம் செய்தார். உலகத்தின் பாவங்களுக்காகக் கிறிஸ்து மரித்து, கல்வாரியிலே சாத்தானை மேற்கொண்டு ஜெயிப்பதுவே இந்த வாக்குத்தத்தமாகும்.

கிறிஸ்துவின் மரணம் அநாதியாய் தேவனுடைய பரிபூரண திட்டத்தின் ஒரு பகுதியாக இருந்தது என்பதை நாம் அறிந்திருக்கிறோம். "உலகத்தோற்றமுதல் ஆட்டுக்குட்டி அடிக்கப்பட்டிருந்தது" (வெளி 13:8). ஆதாமும் ஏவாளும் பாவம் செய்து தேவனுக்கு முன்பாக தவறியதால் மாத்திரமே கிறிஸ்து மரித்தார் என்பதையும் நாம் அறிந்திருக்கிறோம். (1) ஆதாமின் தோல்வி இருந்தபோதிலும் என்றல்லாமல், ஆதாமின் தோல்வியின் காரணமாகவே “கிறிஸ்து உலகத்தின் பாவங்களுக்காக மரிப்பதற்கென்று அனுப்பப்பட்டார்” என்கிறதான தேவனுடைய பரிபூரண திட்டம் நிறைவேறியது என்றும் (2) ஆதாமும் ஏவாளும் பாவம் செய்யாவிட்டால் கல்வாரியின் சிலுவையிலே காட்டப்பட்ட தேவனுடைய அன்பை நாம் அறிந்திருக்க மாட்டோம் என்றும் தர்க்கரீதியாக நாம் சொல்லக்கூடும்.

அப்படியானால், வேதாகமத்தின் முதல் பக்கங்களிலிருந்தே தேவன் பிரயாசப்பட்டு நமக்குள் ஊடுருவிச் செல்லும்படியாக கொடுக்கிற செய்திதான் என்ன? தோல்வியுற்ற ஒரு மனிதனை அவர் தூக்கியெடுத்து, அவனிடமிருந்து மகிமையான ஒன்றை உண்டாக்கி, அவனுடைய வாழ்க்கைக்கான தேவனுடைய பரிபூரண திட்டத்தை அவன் நிறைவேற்றும்படி செய்யவும் தேவனால் கூடும் என்பதுதான். இதுவே மனுஷனுக்கு தேவன் வழங்கும் செய்தியாகும்!! இதை நாம் யாவரும் ஒருபோதும் மறவாதிருப்போமாக. தன் வாழ்வில் திரும்பத் திரும்ப தோல்வியுறும் ஒரு மனிதனைக்கூட தேவன் தூக்கியெடுத்து தன்னுடைய சம்பூர்ணதிட்டத்தை அவன் நிறைவேற்றும்படி செய்திட தேவனால் கூடும். அவ்வாறு அந்த மனிதன் நிறைவேற்றப்போவது தேவனுடைய இரண்டாம் தரமான திட்டமல்ல… தேவனுடைய சிறந்த திட்டத்தையே நிறைவேற்றிவிடுவான்! இப்படியெல்லாம் தேவன் செய்திட முடிவதற்கு காரணம்,தேவனுடைய பரிபூரண திட்டத்தில் அம்மனிதனுடைய தோல்வியும் அடங்கியிருக்கக் கூடும். அத்தோல்வி மூலம் அவர் அம்மனிதனுக்கு சில மறக்கமுடியாத பாடங்களைக் கற்றுத் தந்திருப்பார்!!

உங்களுடைய தவறுகளும் தோல்விகளும் எதுவாயிருந்தால் என்ன? நீங்கள் இன்னமும் தேவனுக்குள் ஓர் புதிய ஆரம்பத்தைத் துவங்க முடியும். உங்கள் பழுதடைந்த வாழ்வைக்கொண்டு மகிமையான காரியத்தைச் செய்திட தேவனால் கூடும்!! ஆகவே நாம் யாவரும் "விசுவாசத்தில் வலிமைகொண்டு தேவனை மகிமை படுத்துவோமாக" (ரோமர் 4:20). இனிவரும் காலங்களில் எவைகளையெல்லாம் "கூடாதது" என்று கண்டோமோ அவைகளினிமித்தம் தேவனை முற்றிலும் நம்புவோமாக! சிறியோரே! பெரியோரே!! சகல ஜனங்களே!! நீங்கள் மாத்திரம் உங்கள் தோல்விகளை ஒத்துக்கொண்டு உள்ளம் உடைய உங்களைத் தாழ்த்தி தேவனை நம்பிவிடுங்கள்… அதுபோதும்! நீங்கள் கடந்த காலங்களில் எவ்வளவு தோல்வி அடைந்திருந்தாலும் உங்களுக்கு நம்பிக்கை உண்டு. இவ்வாறு நாம் யாவரும் தோல்வியின் மூலமாய் சிறந்த பாடங்களைக் கற்றுக்கொண்டு தேவன் நம்முடைய ஜீவியத்தில் கொண்ட சம்பூர்ணத் திட்டத்தை நிறைவேற்றிவிட தீவிரம் கொள்வோமாக!! இவ்வாறு காரியம் உங்களில் இனிதே நடந்தேறிவிட்டால், "படுதோல்வி அடைந்த ஓர் மனுஷனுடைய வாழ்க்கையில் தேவன் என்ன செய்திடமுடியும்!" என்பதற்கு நீங்களே சிறந்த மாதிரியாக மாறிவிடுவீர்கள்! வரும் காலங்களில் உள்ளவர்களுக்கு தேவன் மகிழ்ச்சியோடு உங்களை "ஓர் மாதிரியாக" சுட்டிக்காட்டுவார்!! "கிறிஸ்து இயேசுவுக்குள் அவர் நம்மிடத்தில் வைத்த தயவினாலே தம்முடைய கிருபையின் மகா மேன்மையான ஐசுவரியத்தை வரும் காலங்களில்'' தேவன் உங்கள் மூலமாக விளங்கச்செய்வார்! (எபேசியர் 2:6). அல்லேலூயா!