"தேவனுக்குக் கொடுத்தல்" என்ற தலைப்பில் அப்போஸ்தலனாகிய பவுல் 2 கொரிந்தியர் 9:6ல் பேசுகிறார். நாம் கொடுப்பதில் (விதைப்பதில்) கஞ்சத்தனமாக இருந்தால், நாம் அதே அளவுதான் அறுப்போம் என்று அவர் கூறுகிறார். நீங்கள் சிறுக விதைத்தால் உங்களுக்கு ஒரு சிறிய அறுவடை மட்டுமே கிடைக்கும். நீங்கள் பெருக விதைத்தால் உங்களுக்கு ஒரு பெரிய அறுவடை கிடைக்கும். இந்த வசனத்தை பயன்படுத்தி, பணத்தை நேசிக்கிற அநேக பிரசங்கிகள் (குறிப்பாகத் தொலைக்காட்சி சுவிசேஷகர்கள்), தங்களுக்குப் பணத்தைக் கொடுக்கும்படி விசுவாசிகளை வலியுறுத்துகிறார்கள். இத்தகைய பிரசங்கிகள் ‘கூவித் திரிந்து விற்பனை செய்கிறவர்களாய் (hucksters)’ எளிமையான விசுவாசிகளை வஞ்சிக்கிறார்கள்.
இயேசு அவரிடம் வந்த ஐசுவரியமான இளம் அதிபதியிடம் என்ன சொன்னார்? உன்னுடைய எல்லாப் பணத்தையும் தரித்திரருக்குக் கொடுத்துவிட்டு, பின்பு எந்த பணமுமில்லாமல் என்னைப் பின்பற்றிவா என்று இயேசு சொன்னார்!! “நம்முடைய ஊழியத்திற்கு அநேக தேவைகள் இருக்கிறது. நான் 12 சீஷர்களையும் அவர்களுடைய குடும்பங்களையும் தாங்க (ஆதரிக்க) வேண்டும். எனவே உன்னிடம் உண்டானவைகளையெல்லாம் விற்று, பணத்தை என்னிடத்தில் கொடுத்துவிடு” என்று (இன்றைய பெரும்பாலான பிரசங்கிகள் சொல்வதுபோல) இயேசு சொல்லவில்லை. இயேசுவுக்கு அந்த மனிதன் தேவையாயிருந்தது, அவருடைய பணமல்ல. ஆனால் “உங்களுடைய பணத்தின்மீது ஒரு துளிகூட எங்களுக்கு ஆர்வமில்லை. ஆவிக்குரிய ரீதியில் நீங்கள் வளருவதையே நாங்கள் விரும்புகிறோம். ஆகையால் உங்களுடைய பணத்தை உங்களுக்கு விருப்பமானவர்களுக்குக் கொடுத்துவிட்டு, கர்த்தருடைய வார்த்தையைக் கேட்க எங்களுடைய சபைக்கு வாருங்கள்” என்று ஒரு ஐசுவரியவானிடத்தில் சொல்லக்கூடிய கர்த்தருடைய ஊழியக்காரர்களை இன்று நாம் எங்கே காண முடியும்? இருப்பினும், எங்களுடைய சபைக்கு வருகைத் தரும் பார்வையாளர்களுக்கு (visitors) இதையே நாங்கள் தொடர்ச்சியாகச் சொல்கிறோம்.
“உற்சாகமாய்க் கொடுக்கிறவனிடத்தில் தேவன் பிரியமாயிருக்கிறார்” என்று 2 கொரிந்தியர் 9:7ல் நாம் வாசிக்கிறோம். பழைய உடன்படிக்கையின் கீழ், "ஒருவன் எவ்வளவு கொடுக்கிறான்" என்பதே வலியுறுத்தப்பட்டது – 10 சதவீதமும் மற்ற காணிக்கைகளும் கொடுக்க வலியுறுத்தப்பட்டது. இருப்பினும் புதிய உடன்படிக்கையின் கீழ், "ஒருவன் எப்படிக் கொடுக்கிறான்" என்பதே வலியுறுத்தப்படுகிறது – விசனமாய் கொடுக்காமல் உற்சாகமாய்க் கொடுக்க வலியுறுத்தப்படுகிறது. இப்பொழுது “கொடுக்கும் அளவு” என்பது கேள்வியாயிராமல், “கொடுக்கும் தரம்” என்பதே கேள்வியாகும். புதிய உடன்படிக்கையின் கீழ், தரம் மாத்திரமே வலியுறுத்தப்படுகிறது – ஒருவன் கட்டுகிற சபையிலும்கூட தரமே வலியுறுத்தப்படுகிறது.
அநேக விசுவாசிகள் ஆவிக்குரிய விதத்தில் ஏழைகளாக இருக்கிறார்கள். ஏனென்றால் அவர்கள் தேவனுக்குக் கொடுப்பதில் மிகவும் கஞ்சத்தனமாக இருக்கிறார்கள். நீங்கள் தேவனுக்குக் கொடுப்பதில் பரந்த இருதயம் கொண்டவர்களாகவும் உதாரத்துவமாயும் இருங்கள் - முதலாவதாக உங்கள் வாழ்க்கையைத் தேவனுக்குக் கொடுப்பதிலும், பிறகு உங்கள் நேரத்தைத் தேவனுக்குக் கொடுப்பதிலும், உங்கள் உடைமைகளையும் தேவனுக்குக் கொடுப்பதிலும் உதாரத்துவமாய் இருங்கள். அப்பொழுது தேவன் உங்களுக்கு நூறு மடங்காகத் திரும்பக் கொடுப்பதை நீங்கள் காண்பீர்கள்.
நான் வாலிபனாகத் தனித்து இருந்தபோது, எனக்கு அநேக செலவுகள் இருந்ததில்லை, கடற்படையிலிருந்து நான் பெற்ற வருவாயில் பெரும்பகுதியை தேவனுக்குக் கொடுத்தேன். நான் பிற்பாடு திருமணம் செய்துகொண்டபோது, எனக்கு அநேக நிதி தேவைகள் இருப்பதைக் கண்டேன். ஆனால் நான் ஒருமுறை கூட கடனில் அகப்படவில்லை. நான் எந்த நேரத்திலும் யாரிடத்திலும் ஒருபோதும் பணத்தைக் கடன் வாங்க வேண்டிய அவசியமில்லாதிருந்தது. ஏனென்றால் தேவன் எங்களைப் பொறுப்பெடுத்துக்கொண்டு, முன்னமே நான் அவருக்குக் கொடுத்ததைத் திரும்பக் கொடுத்தார். அதனால் என்னுடைய அனுபவத்திலிருந்து நான் உங்களுக்குச் சொல்ல முடியும்:
தேவனுக்கு உதாரத்துவமாய் கொடுக்க கற்றுக்கொள்ளுங்கள் – அப்பொழுது உங்களுடைய நிதி பிரச்சனைகள் தீர்க்கப்படுகிறதைக் காண்பீர்கள். ஆனால் ஞானமாய்க் கொடுக்க உங்களை நான் எச்சரிக்கிறேன். உங்களிடத்தில் பணத்தைக் கேட்கும் பிரசங்கிகளுக்கு பணத்தை கொடுக்காதீர்கள். ஆடம்பரமாக (தாராளமாக) பணத்தைச் செலவழிக்கும் பிரசங்கிகளுக்கு ஒருபோதும் கொடுக்காதீர்கள். அவர்கள் உங்களுடைய பணத்தை வீணாக்குவார்கள். ஜெபித்து, தேவனுடைய சித்தத்தைத் தேடி, தேவன் எங்கே அதிகமான தேவை இருக்கிறது என்பதை உங்களுக்குக் காண்பிக்கிறாரோ அங்கே கொடுங்கள். ஐசுவரியவான்களுக்கு அல்ல தரித்திரருக்குக் கொடுங்கள். உண்மையிலேயே தேவை உள்ளவர்களுக்குக் கொடுங்கள். அப்பொழுது தேவையான சமயத்தில், தேவன் உங்களுக்கு ஒரு பெரிய அறுவடையைக் கொடுக்கிறதை நீங்கள் காண்பீர்கள். அவருடைய பிள்ளைகளில் ஒருவராகிலும் கடனிலோ அல்லது தொடர்ச்சியான நிதி பிரச்சினைகளிலோ இருக்க வேண்டும் என்பது தேவனுடைய சித்தமாக ஒருபோதும் இருக்க முடியாது - பரலோகத்தில் அவர்களுக்கு இத்தகைய ஐசுவரியமுள்ள தகப்பன் இருக்கும்பொழுது அப்படியாக இருக்க முடியாது. அநேக விசுவாசிகள் இப்படிப்பட்ட பிரச்சனைகளை எதிர்கொள்கிறதின் காரணம் என்னவென்றால், அவர்கள் தேவனிடத்தில் ஒருபோதும் உதாரத்துவமாய் இருக்கிறதில்லை. நாம் எதை விதைக்கிறோமோ அதையே நாம் அறுக்கிறோம்.