எழுதியவர் :   சகரியா பூணன் வகைகள் :   தலைவர்
WFTW Body: 

சிறையிருப்பில் மீந்திருந்தவர்களைப் பற்றியும், எருசலேமின் நிலை என்னவாயிற்று என அறிந்து கொள்ளுவதிலும் நெகேமியா மிகுந்த அக்கறை காட்டினான். தேவனால் பயன்படுத்தப்படும் மனிதனின் தலையாய குணாதிசயமும் இதுதான். முதலாவது அந்த மனிதன் மக்கள் மீது கரிசனை உடையவனாய் இருப்பான். அப்பொழுதுதான் தேவன் அவனுக்குப் பாரத்தை அளிக்கிறார். நீங்களும் தேவனுக்கு ஊழியம் செய்ய விரும்பினால், பிறர் மீது கரிசனை கொள்ளுவதிலிருந்து ஊழியத்தைத் தொடங்குங்கள். பிறர் மீது அக்கறை கொண்டிராத எவரையும் தேவன் பயன்படுத்துவதேயில்லை. அவன் ஆனானிடம்,"அங்கு காரியங்கள் எப்படி இருக்கிறது?" என வினவினான். அதற்கு ஆனானி, எருசலேமின் அலங்கம் இடிக்கப்பட்டும், அதன் வாசல்கள் அக்கினியால் சுட்டெரிக்கப்பட்டதுமாய்க் கிடக்கிறது என்ற விவரத்தை அவனுக்குத் தெரிவித்தான். இடிக்கப்பட்ட அலங்கத்தைக் குறித்தும், எரிக்கப்பட்ட வாசல்களைக் குறித்தும் நெகேமியா கரிசனையுற்றான். அவன் இச்செய்தியைக் கேட்ட மாத்திரத்தில் அழுது, துக்கித்து, உபவாசித்து, தேவனிடத்தில் மன்றாடினான். இந்த ரகமான மனிதனையே, அதாவது, தேவனுடைய சபையின் நிலையைக் கண்டு கரிசனையுடனும், பாரத்துடனும் இருக்கிற மனிதனையே, தேவன் இன்றும் தேடிக்கொண்டிருக்கிறார்.

நெகேமியா பழைய உடன்படிக்கையின் கீழ் வாழ்ந்த ஒரு மனிதனாவான். நமக்குள் இன்று பரிசுத்த ஆவியானவர் வாசஞ்செய்வது போல அன்று அவனுக்குள் வாசஞ்செய்யவில்லை. இன்று நாம் பெற்றிருப்பது போல ஒரு முழு வேதாகமத்தையோ, அல்லது நிரம்பிவழியும் அளவிற்கு சபை ஐக்கியங்களையோ, புத்தகங்களையோ, CD-க்களையோ, கான்ஃபரன்ஸ்களையோ அவன் பெற்றிருக்கவில்லை. சிலுவையைப் பற்றியும் அவன் எதையுமே அறிந்திருக்கவில்லை. இருப்பினும், அவனோ மிகப் பிரம்மாண்டமான பாரத்தை உடையவனாய் இருந்தான். அவன் ஒரு "முழு நேர" ஊழியனுமல்ல. அவன் உலக வேலையில் ஈடுபட்டிருந்த ஒரு மனிதனாய் இருந்தான். அவன் தனக்கென்று ஒரு சம்பாத்தியத்தை ஏற்படுத்திக் கொண்டு, கர்த்தருக்கு ஊழியமும் செய்து வந்தான். கடுகளவும் சுயநலமின்றி, முழுக்க முழுக்க தேவ நாமத்தின் மகிமைக்காக அக்கறையுடன் வாழ்ந்த அவன், நமக்கெல்லாம் ஒரு தன்னிகரற்ற முன்மாதிரியாய் திகழ்கிறான். நாமும் இதுபோன்ற முன்மாதிரியை நமக்கு முன்னிறுத்தி, அது போலவே வாழ முற்பட்டால், நம்முடைய ஜீவியங்களிலிருந்தும் தேவனால் ஏதாவது ஒன்றை வெளிக்கொணர இயலும்.

நெகேமியா ஒருபோதும் ராஜாவின் சமூகத்தில் துக்கமாய் இருந்ததில்லை (நெகே 2:1). முகம் வாடிப்போயிருப்பவர்களின் வகையைச் சார்ந்தவனாய் அவன் இருக்கவில்லை. அவன் சந்தோஷமாய் இருப்பதைத்தான் ராஜா எப்பொழுதுமே கண்டிருந்தார். இப்பொழுதோ அவன் துக்கமுகமாயிருந்தான். ஆனால் அவனுடைய துக்கமானது அவனுக்காகவோ அல்லது அவனது குடும்பத்திற்காகவோ உண்டானதல்ல. எருசலேமானது ஓர் இரத்தக்கிளரியான இடமாக மாறியிருந்ததைக் கண்டு அவனுக்கு துக்கம் ஏற்பட்டது. ஓ! இன்றும் இதுபோன்ற ஜனங்கள் சபையிலிருந்தால் எவ்வளவு நலமாய் இருக்கும்!

நெகேமியா எருசலேமுக்குச் சென்று அங்கு மூன்று தினங்கள் தனிமையிலே தங்கினான் (நெகே 2:11). அநேகமாக அவன் அப்போது உபவாசித்து, ஜெபித்திருந்திருப்பான். அவன் ராத்திரியிலே எழுந்து, சில மனுஷரோடே நகரை வலம் வந்தான். அங்கு அவனுக்கு இருந்த சத்துருக்கள் அலங்கத்தைக் கட்டவிடாமல் தடுத்துவிடுவார்கள் என்பதை உணர்ந்திருந்தபடியால், அவன் தன்னுடைய மனதிலே தேவன் கொடுத்திருந்த பாரத்தைக் குறித்து ஒருவனுக்கும் சொல்லவில்லை (நெகே 2:10). மேலும் தேவனுடைய வேலையைக் குறித்து எந்தவித பாரமும் இல்லாத ஜனங்களை ஒன்று திரட்டுவது ஓர் உசிதமான செயலாக இருக்காது என்பதையும் அவன் நன்றாக உணர்ந்திருந்தான். ஆகவே அவன் ஒரு சிலரை மட்டுமே ஒன்று சேர்த்துக் கொண்டு அலங்கத்தையும், வாசல்களையும் சோதனை செய்தான்.

நெகேமியா ஜனங்களை ஒழுங்குபடுத்துவதிலும், அவர்களை ஊக்குவிப்பதிலும் சிறந்து விளங்கினான். அவனே களத்தில் இறங்கி வேலை செய்தபடியால், ஜனங்களுக்கு அவனுடன் சேர்ந்து வேலை செய்வதற்கு இன்பமாயிருந்தது. இவனைப் போலவே உபவாசித்து ஜெபிக்கிறவனாகவும், தேவனுடைய நாமத்தின் மீது கரிசனை உடையவனாகவும், கர்த்தருடைய காரியங்களைச் செய்வதற்கு ஜனங்களை ஒழுங்குபடுத்தி ஊக்கப்படுத்துகிறவனாகவும், தன்னுடைய சொந்த கைகளால் வேலை செய்கிறவனாகவும் இருக்கக்கூடிய தலைவன்தான் தேவனுக்கு இன்றும் தேவையாய் இருக்கிறது.

ஜனங்களுக்கு மத்தியிலே தரித்திரராயும், கடன் சுமையால் நசுக்கப்பட்டவராயும் இருந்தவர்கள் மேல் அவனுக்கிருந்த மிகப் பெரிய கரிசனையைப் பற்றி நெகேமியா 5:1-13-ல் உள்ள வசனங்களில் வாசிக்கிறோம். அவன் கடன் கொடுத்தவர்களிடம் பேசி, கடன்பட்டவர்களையெல்லாம் விடுவித்தான். அவன் கடினமாக உழைக்கிறவனாகவும், அயல் நாடுகளிலிருந்து வந்திருந்த 150 யூதர்களை தினந்தோறும் தன்னுடன் பந்தியிருக்க வைக்கிறவனாகவும் இருந்தான். ஆனாலும், அதிபதிகள் வாங்குகிற எந்தப் படியையும் வாங்காதவனாகவே அவன் இருந்தான் என்பதை 18-ஆம் வசனம் உறுதிப்படுத்துகிறது. இந்த விஷயத்தில் நெகேமியா ஓர் அற்புதமான முன்மாதிரியாக இருக்கிறான். நோவா, பவுல் ஆகியோரைப் போலவே இவனும் தனது சொந்தப் பணத்தைச் செலவு செய்கிறவனாகவும், விருந்தோம்பல் குணம் மிக்க தேவ ஊழியனாகவும் இருந்தான். அலங்கத்தைக் கட்டி முடிப்பதற்காக அவன் தனக்குக் கிடைத்த பணத்தையெல்லாம் செலவு செய்தான். தியாக உள்ளம் கொண்டவனாகவும், கர்த்தருடைய பணிக்காகப் பெறப்பட்ட பணத்தில் தனக்கென்று எந்தவிதத்திலும் ஒரு பைசாவைக்கூட செலவழிக்காதவனாகவும் வாழ்ந்த ஒரு மனுஷனாக அவனை நாம் இங்கே காண்கிறோம். தம்முடைய ஊழியக்காரரில் பண விஷயத்தில் உண்மையாய் இருக்கும் ஒருவனை தேவன் எங்கெல்லாம் காண்கிறாரோ, அங்கெல்லாம் அந்த மனுஷனை அவர் அளவில்லாமல் உபயோகிக்கிறார். தன்னுடைய சகோதரர்களைப் பொருளாதார ரீதியாக தங்களுக்குச் சாதகமாகப் பயன்படுத்திக் கொள்ளுகிற ஊழியக்காரர்களை அவர் கைவிட்டுவிடுகிறார்.

நெகேமியாவின் மூலமாக தேவன் என்னவெல்லாம் செய்தார் என்பதை 9-ஆம் அதிகாரத்தில் நாம் வாசிக்கிறோம். இந்த அதிகாரமானது, இஸ்ரவேல் ஜனங்கள் உபவாசித்து, தங்களுடைய பாவங்களை அறிக்கையிட்டு, மறு ஜாதிகளைவிட்டுப் பிரிந்து வந்தது முதலிய காரியங்களைக் கொண்டு ஆரம்பிக்கிறது (வ.1,2). அதன் பிறகு அவர்கள் மூன்று மணி நேரத்தை வேதவாசிப்பிற்கென்று செலவிட்டு, பிறகு இன்னும் மூன்று மணி நேரத்தைக் கர்த்தரைத் துதித்து, தங்களுடைய பாவங்களை அறிக்கையிடுவதில் செலவிட்டனர். அவர்கள் மத்தியில் மீண்டுமாய் ஓர் எழுப்புதல் உண்டானது (வ.3). லேவியர் எழுந்து நின்று, தங்கள் தேவனாகிய கர்த்தரை நோக்கி மகா சத்தமாய் ஓலமிட்டார்கள் (வ.4). வேதத்திலேயே மிக நீண்ட ஜெபம் 6 முதல் 31 வரையுள்ள வசனங்களில் பதிவு செய்யப்பட்டு உள்ளது. பின்பு லேவியர், ஆபிரகாம் காலம் தொடங்கி இஸ்ரவேலரின் வரலாற்றைப் புரட்டிப் பார்த்தனர். 40 வருட வனாந்தர வாழ்க்கையில் ஏற்பட்ட சரிவையும், நியாயாதிபதிகள், இராஜாக்கள் காலத்தில் தங்களுக்கு உண்டான தோல்வியையும், தங்கள் மீது வந்த தேவனுடைய நியாயத்தீர்ப்புகள் அனைத்தும் நீதியும், நியாயமுமானவைகள்தான் என்பதையும் அவர்கள் அந்நேரத்திலே அறிக்கையிட்டு ஏற்றுக் கொண்டார்கள். அவர்கள் மனந்திரும்பி, தேவனுடன் ஓர் உடன்படிக்கைபண்ணி, முதலாவது நெகேமியாவும் பின்பு மற்ற அனைவருமாகச் சேர்ந்து முத்திரையிட்டார்கள் (10:1).

12-ஆம் அதிகாரமானது, வாசல்களை எடுப்பித்துக் கட்ட ஜனங்கள் எவ்வாறு ஒழுங்குபடுத்தப் பட்டார்கள் என்றும், பூர்வ நாட்களைப் போன்றே தேவனைத் துதித்து ஸ்தோத்தரிக்கும் பாடகர் நியமிக்கப்பட்டதையும் எடுத்துச் சொல்லுகின்றது. பாபிலோனிலிருந்து, எருசலேமை நோக்கி நகரத் தொடங்கிய ஜனங்கள் உபவாசிப்பிற்கும், ஜெபத்திற்கும், பாவ அறிக்கை செய்வதற்கும், பல மணிநேர வேத வாசிப்பிற்கும், நீண்ட நேர கூட்டங்களுக்கும், தேவனைத் துதித்துப் பணிந்து கொள்ளுவதற்கும் எவ்வளாய் தொடர்ச்சியான முக்கியத்துவம் அளித்தார்கள் என்பதைக் கவனித்துப் பாருங்கள்.

13-ஆம் அதிகாரமானது தேவனுடைய வீட்டைப் பற்றிய பரிசுத்தத்தைக் குறித்து நெகேமியாவிற்கிருந்த வைராக்கியத்தைப் பற்றிக் கூறுகின்றது. இயேசு எருசலேம் தேவாலயத்தை எப்படிச் சுத்தப்படுத்தினாரோ, சற்றேறக்குறைய அதே பாணியில் நெகேமியாவும் நடந்து கொள்ளுவதைக் காண்கிறோம். மனந்திரும்பாத உறவினர்கள் தேவாலயத்தில் தங்க அனுமதிக்கப்பட்டிருந்ததை நெகேமியா கண்டான். ஆசாரியனாகிய எலியாசிப், தொபியாவோடே சம்பந்தங்கலந்தவனாயிருந்து, அவனுக்கு ஒரு பெரிய அறையை ஆயத்தம் பண்ணியிருந்தான் (13:4,5). நெகேமியா அவர்கள் எல்லாரையும் வெளியிலே விரட்டியடித்தான். அவன், "தொபியாவின் தட்டுமுட்டுகளை எல்லாம் வெளியிலே எறிந்து விட்டான்" (வ.8). ஓய்வு நாளிலே பொருட்களை விற்றுப் பணம் சம்பாதிப்பவர்களை அவன் பார்த்தான் (வ.15). அவன் அவர்களைக் கடிந்துகொண்டு, எச்சரித்து, தேவைப்பட்டால் அவர்கள் மேல் கைபோடுவதாகவும் மிரட்டினான் (வ.21). தேவனுக்குப் பயப்படாத ஜனங்கள் தேவ மனுஷனுக்காவது பயந்துதான் ஆக வேண்டும். யூதரல்லாத ஸ்திரீகளை சில யூதர்கள் திருமணம் செய்திருந்ததை அவன் கண்டுபிடித்தான். உடனே அவன், "அவர்களைக் கடிந்து கொண்டு, அவர்கள் மேல் வரும் சாபத்தைக் கூறி, அவர்களில் சிலரை அடித்து, மயிரைப் பிய்த்து: நீங்கள் உங்கள் பிள்ளைகளை அவர்களுக்குக் கொடாமல் இருக்க வேண்டுமென ஆணையிட வைத்தான்" (வ.25). இப்படியாக நெகேமியா ஆசாரியத்துவத்தை எவ்வித பாரபட்சமுமின்றி சுத்திகரித்து, ஆசாரியர்களுக்கு ஊழியத்தை நியமித்து, விறகு காணிக்கை செலுத்துவது போன்ற அடிப்படை விஷயங்கள் முதற்கொண்டு எல்லாவற்றையும் திட்டம் பண்ணினான் (வ.30,31).