WFTW Body: 

இயேசுவானவர் இப்பூமிக்கு வருவதற்குப் பல்லாயிரம் ஆண்டுகளுக்கு முன்னதாக, பூரண ஞானமும் பூரண அழகும் கொண்ட லூசிபர் என்னும் தூதனை தேவன் படைத்திருந்தார். தேவன் லூசிபரை தூதர்களின் வரிசைக்குத் தலைவனாக நியமித்திருந்தார். ஆனால் லூசிபரோ, பெருமையினால் உப்பி, தனக்கு ஒதுக்கப்பட்ட அந்தஸ்தில் அதிருப்தி அடைந்து, தேவனுக்கு மேலாகத் தன்னை உயர்த்த வேண்டும் என்று வரிந்து கட்டினான் (எசே 28:11-17; ஏசா 14:12-15). இவ்வாறாக அவன் தேவனுடைய சிருஷ்டிப்புக்குள் பாவத்தைக் கொண்டுவந்தான். தேவன் அவனை உடனடியாக கீழே தள்ளினார். அவன் சாத்தானாக மாறினான். பெருமைதான் ஒவ்வொரு பாவத்திற்கும், இப்பேரண்டத்தின் ஒவ்வொரு தீமைக்கும் வேராக உள்ளது. ஆதாம் பாவம் செய்த போது, அவனும் சாத்தானியப் பெருமையினால் தீண்டப்பட்டான். ஆதாமின் ஒவ்வொரு பிள்ளையும் இந்த நோய்த் தொற்றுடன்தான் பிறக்கின்றது. இந்த நஞ்சிலிருந்து நம்மை மீட்டெடுக்க இயேசு தம்மைத் தாழ்த்தினார். லூசிபரின் பெருமை பாவத்திற்கு ஊற்றுக்கண்ணாய் இருப்பதைப் போலவே, நம்முடைய மீட்பானது இயேசுவின் சுய-தாழ்மையிலிருந்து தோன்றியது. நாம் எந்த அளவிற்கு கிறிஸ்துவின் தாழ்மையைப் பெற்றிருக்கிறோமோ, அந்த அளவிற்குத்தான் அவருடைய சிந்தையையும் பெற்றிருக்க முடியும். இதுதான் நம்முடைய ஆவிக்குரிய வளர்ச்சியைத் துல்லியமாக நிறுத்துக் காட்டும் தவறில்லாத தராசாகும்.

இயேசு பரலோகத்தின் மகிமையைவிட்டு, இப்பூமிக்கு இறங்கி வந்த விந்தை நிகழ்வே, அவரது தாழ்மையை பறைசாற்றும் ஒரு முன்னுதாரணமாகும். மேலும் அவர், “ஒரு மனிதனாக தம்மைத் தாமே தாழ்த்தினார்” என்று தொடர்ந்து சொல்லப்படுகின்றது (பிலி 2:8). “அவர் எவ்விதத்திலும் தம்முடைய சகோதரருக்கு ஒப்பாக வேண்டியிருந்தது” (எபி 2:17). மற்ற மனிதர்கள் தேவனுக்கு முன்பாக என்ன நிலையை எடுப்பார்களோ, அதே நிலையைத்தான் இயேசுவும் எடுத்தார். தேவனே எல்லாமுமாய் இருக்க வேண்டுமென்பதற்காக அவர் ஒன்றுமில்லாதவரானார். இதுவே மெய்யான தாழ்மையாகும். இயேசு முற்றிலுமாய்த் தம்மை மனிதர்களோடு அடையாளப்படுத்திக் கொண்டார். மனுக்குலம் முழுவதும் குலம், குடும்பம், சமுதாய அந்தஸ்து என்னும் பேதங்களின்றி சமத்துவமாய் இருப்பதின் அவசியத்தில் நம்பிக்கை கொண்டு, அவர் சமுதாயத்தில் நலிவடைந்த, கீழான அடித்தட்டு மக்களுடனும் ஒன்றாக மாறினார். அவர் எல்லாருக்கும் வேலைக்காரனாக இருக்கும்படிக்கு, எல்லாரிலும் கீழானவராக வந்தார். மற்றவர்களுக்கு அடியில் இருப்பவனால்தான், அவனுக்கு மேலிருப்பவர்களைத் தூக்க முடியும். இந்த விதமாகத்தான் இயேசு வந்தார்.

முப்பது ஆண்டுகளாக அவர் பூரணமற்ற தமது வளர்ப்பு தந்தை மற்றும் தாயாருக்குக் கீழ்ப்படிந்து வாழ்ந்தார். ஏனெனில் அது பிதாவின் சித்தமாக இருந்தது. அவர் யோசேப்பு, மரியாளைக் காட்டிலும் காரியங்களை அதிகமாய் அறிந்திருந்தார். அவர்களைப் போலல்லாது, அவர் பாவமற்றவராகவும் இருந்தார். இருப்பினும் அவர் அவர்களுக்கு அடங்கி வாழ்ந்தார். ஒருவனுக்கு, தன்னைவிட அறிவிலும், ஆவிக்குரிய ரீதியிலும் குறைவானவர்களுக்குக் கீழ்ப்படிந்திருப்பது மிகவும் சிரமமான விஷயமாகும். ஆனால் மெய்யான தாழ்மைக்கு இது ஒரு பிரச்சனையாகவே இருப்பதில்லை. ஏனெனில் தேவனுடைய கண்களுக்கு முன்பாகத் தான் ஒன்றுமில்லை என்பதை மெய்யாகவே கண்டுவிட்ட ஒருவனுக்கு, தேவன் தன்மீது நியமிக்கும் எந்த அதிகாரமானாலும், அதற்கு அடங்கியிருப்பது ஒரு பொருட்டாக இருப்பதில்லை.

எந்த ஒரு கவர்ச்சியுமில்லாத தொழிலான தச்சு வேலையையே இயேசு தெரிந்தெடுத்தார். அவர் பொது ஊழியத்தில் நுழைந்த போது, தம்முடைய பெயருக்கு முன்னும், பின்னும் சேர்த்துக் கொள்ளத்தக்க எவ்விதமான பட்டங்களும் இல்லாதவராகவே அவர் இருந்தார். அவர் ‘பாஸ்டர் இயேசுவாக’ இருக்கவில்லை. ‘ரெவரென்ட் டாக்டர் இயேசு’ என்றும் இருக்கவில்லை. தாம் யாருக்குப் பணிவிடை செய்ய வந்தாரோ, அவர்களைப் பார்க்கிலும் தம்மை உயர்த்தக்கூடிய இப்பூமிக்குரிய எந்தவிதமான அந்தஸ்தையோ, பட்டத்தையோ அவர் சற்றேனும் நாடவுமில்லை, விரும்பவுமில்லை. காதுள்ளவன் கேட்கக்கடவன்.

ஒரு சமயம், அவரைச் சுற்றியிருந்த கூட்டத்தினர், அவரை ராஜாவாக்க வேண்டுமென விரும்பிய போது, அவர் அவர்கள் நடுவிலிருந்து கடந்து போய்விட்டார் (யோவான் 6:15). தாம் ஒரு ‘மனுஷகுமாரனாக’ அறியப்படுவதையே, அவர் அதிகமாய் வாஞ்சித்தார். அவர் மனுஷருடைய கனத்தைத் தேடவுமில்லை அதைக் குறித்து அக்கறைப்படவுமில்லை. அவர் தம்முடைய பிதாவின் முகத்திற்கு முன்பாக மாத்திரமே வாழ்ந்தார். அதனால் தம்முடைய வாழ்நாள் முழுவதும் மனிதரால் அலட்சியப்படுத்தப்பட்டும், அற்பமாயென்னப்பட்டும் வாழ்வதில் திருப்தி கண்டார். பிதாவின் அங்கீகாரத்தை மட்டுமே ஒரு பொருட்டாக மதித்தார்.

இயேசுவின் தாழ்மையானது, அவரை ஒருவரையும் நியாயந்தீர்க்க அனுமதிக்கவில்லை. தேவன் ஒருவர்தான் எல்லா மனிதருக்கும் நியாயதிபதியாய் இருக்கிறார். பிறரை நியாயந்தீர்க்கிறவன், தேவன் மாத்திரமே அமர வேண்டிய இடத்தைத் தான் பிடித்துவிட வேண்டுமென முயற்சிக்கிறான். இப்புவியில் ஒரு மனிதனாக வாழ்ந்த இயேசு, “நான் ஒருவனையும் நியாயந்தீர்க்கிறதில்லை” என்றார் (யோவான் 8:15). தம்முடைய நியாயத்தீர்ப்பை அவர் பிதாவினிடத்தில் ஒப்புக் கொடுத்துவிட்டார். இந்த இடத்திலும் நாம் இயேசுவின் தாழ்மையின் அழகைக் காண்கின்றோம்.

தம்முடைய சீஷர்களுடன் ஜெபத்திலே ஐக்கியம் கொள்ள நாடுகிற விஷயத்திலும், நாம் இயேசுவின் தாழ்மையைக் காண்கின்றோம். கெத்சமனே தோட்டத்தில், அவர் பேதுருவையும், யாக்கோபையும், யோவானையும் தம்முடன் சேர்ந்து ஜெபிக்கும்படி கேட்டார். ஏனெனில் “அவருடைய ஆத்துமா மரணத்துக்கேதுவான துக்கங்கொண்டிருந்தது” (மத் 26:38). இயேசு தாம் பெற்றிருந்த மாம்சத்தின் உச்சகட்ட பெலவீனத்தை நன்றாய் உணர்ந்திருந்தார். அதனால்தான் அவர் அவர்களின் ஜெப ஐக்கியத்தை நாடினார்.

இயேசு தம்மைத்தாமே தாழ்த்தின காரணத்தினால், தேவன் அவரை இப்பேரண்டத்தின் மிக உயர்ந்த ஸ்தானத்திற்கு உயர்த்தினார் (பிலி 2:9). யாரெல்லாம் இந்தத் தாழ்மையின் பாதையில் அதிக தூரம் பயணிக்கிறார்களோ, அவர்கள் எல்லாரும் மகிமையில், இயேசுவின் வலது இடது பாரிசத்தில் அமர்வார்கள். இயேசு தம்முடைய வாழ்நாள் முழுவதும் கீழ் நோக்கியே சென்று கொண்டிருந்தார். பரலோகத்திலிருந்து கீழே இறங்கி வந்த அவர், சிலுவை வரைக்கும் கீழே, கீழே, கீழே சென்ற வண்ணமாகவே இருந்தார். ஒரேயொரு தடவைகூட, அவர் பின்னோக்கி எதிர்திசையில் மேலே போக நாடவில்லை.

இன்று இப்பூமியில் இருவிதமான ஆவிகள் மாத்திரமே செயல்பட்டுக் கொண்டிருக்கின்றன. ஒன்று, ஜனங்களை மேலே போகத் தூண்டுகிற – அது இவ்வுலகமாகவும் இருக்கலாம், கிறிஸ்தவ வட்டாரமாகவும் இருக்கலாம் - சாத்தானின் (லூசிபரின்) ஆவியாகும். இன்னொன்று, தங்களுடைய குருநாதரைப் போலவே, தங்களையும் கீழ்நோக்கி நடத்துகிற கிறிஸ்துவின் ஆவியாகும். ஒரு கோதுமை மணியைப் போலவே, இயேசு கீழே சென்றார். இத்தகைய சுபாவத்தைக் கொண்டு, அவருடைய மெய்யான சீஷர்கள் யார் என்பதை தவறில்லாமல் துல்லியமாக அடையாளப்படுத்திவிடலாம்.

இயேசுவின் தாழ்மையின் மகுடத்தை, அவருடைய மரணத்திலே நாம் தெளிவாகக் காண முடியும். இயேசு எதிர்கொண்ட ஓர் அநீதியான வழக்கு விசாரணையைப் போன்றதொரு வழக்கு விசாரணை, வேறெப்போதும் இருந்திருக்கவே முடியாது. இருப்பினும், அவர் காயமும், நிந்தையும், அநீதியும், சிறுமையும், கேலியும் செய்யப்படத் தம்மை அமைதியாய் ஒப்புக் கொடுத்தார். தம்முடைய பகைவர்கள்மீது சாபங்களை வரவழைக்கவில்லை. அவர் அவர்களைப் பழிவாங்குவதாகப் பயமுறுத்தவுமில்லை, தூதர்களை துணைக்கு அழைக்கவுமில்லை. தேவக் குமாரன் என்னும் உரிமைகள் எல்லாவற்றையும் துறந்தார். ‘முஷ்டியை மடக்கிக்காட்டுவது’, மனுக்குலத்தை அடையாளப்படுத்திக் காட்டுவதற்கு மிகப் பொருத்தமான சின்னமாகும். அது தான் தன்னுடைய உரிமைகளையும், உடைமைகளையும், அதிகாரங்களையும் நிலைநாட்டுவதற்கு ஆர்வம் உடையவன் என்று ஒருவனைச் சுட்டிக் காட்டவும், தான் தாக்கப்பட்டால் திருப்பி தாக்குவேன் என்று எச்சரிப்பதற்கும் பயன்படுத்தப்படும் சின்னமாகும். ஆனால் அதன் மறுதலையாக, இயேசுவோ சிலுவையிலே, ஆணிகளை ஏற்றுக் கொள்வதற்காகத் தமது உள்ளங்கைகளை விரித்துக் கொடுத்தார். அவருடைய உள்ளங்கைகளோ கொடுப்பதற்காக, கொடுப்பதற்காக, கொடுப்பதற்காக திறந்த வண்ணமாகவே இருந்தன. இறுதியாக, அவர் தம்முடைய சொந்த ஜீவனையே விட்டுவிட்டார். இதுவே மெய்யான தாழ்மையாகும்.