"அவர் குமாரனாயிருந்தும் பட்டபாடுகளினாலே கீழ்ப்படிதலைக் கற்றுக் கொண்டார்" என்று எபிரேயர் 5:8-ல் வாசிக்கிறோம். இயேசு கீழ்ப்படிதலைக் கற்றுக் கொள்ள வேண்டியதாயிருந்தது. "கற்றுக்கொள்ளுதல்" என்னும் வார்த்தையானது கல்வியுடன் சம்பந்தப்பட்டதாகும். இயேசு மாம்சத்திலிருந்த நாட்களில், கீழ்ப்படிதல் என்ற கல்வியைப் பெற வேண்டியிருந்தது. பரத்திலே தேவனாயிருந்த போது, அவர் எவருக்கும் கீழ்ப்படிய வேண்டிய அவசியம் ஏற்படவில்லை. நீங்கள் வாழ்நாள் முழுவதும் செய்திராத ஒரு காரியத்தை முதல் தடவையாகச் செய்யும்பொழுது, நீங்கள் ஒன்றைக் கற்றுக் கொள்ளுகிறீர்கள். இயேசு இப்பூவுலகிற்கு மனிதனாய் வந்த போது கீழ்ப்படிதலைக் கற்றுக் கொண்டார். அச்சமயத்தில் அவர் பிதாவுக்கு மட்டும் கீழ்ப்படிய வேண்டியவராயிராமல், யோசேப்பு, மரியாள் ஆகியோருக்கும் கீழ்ப்படிய வேண்டியவராயிருந்தார். யோசேப்பும், மரியாளும் பாவம் செய்தவர்களும், பூரணமில்லாதவர்களுமாய் இருந்தனர். எல்லா பெற்றோரைப் போலவே அவர்களும் தவறிழைத்திருந்திருக்கக் கூடும். இருப்பினும் இயேசு அவர்களுக்குக் கீழ்ப்படிந்தார். அது அவருக்குக் கடினமானதாகத்தான் இருந்திருக்க வேண்டும். என்றாலும் அவர் கீழ்ப்படிந்தார்; அக்கீழ்ப்படிதலில் அவர் பாடனுபவித்தார். அதன் பொருள் என்னவெனில், அவர் வாழ்நாள் முழுவதும் தமது சுயசித்தத்தை மறுதலித்து, பிதாவின் சித்தத்தையே செய்தார்; அதனால் உண்டான வேதனையின் மூலமாக பாடுபட்டார் என்பதாகும். அவர் பாடுபடுதல் என்னும் விலைக் கிரயத்தைச் செலுத்தித்தான் கீழ்ப்படிதலைக் கற்றுக் கொண்டார்.
கீழ்ப்படிதலில் சில பகுதிகள் சுகமானதாக இருக்கும். நீங்கள் உங்களுடைய குழந்தையை ஐஸ்கிரீம் சாப்பிடச் சொன்னால், அவன் அதற்கு சந்தோஷமாகக் கீழ்ப்படிவான். அதில் அவனுக்கு எந்த ஒரு பாடும் கிடையாது. ஆனால் அவன் நண்பர்களுடன் விளையாடும்போது, விளையாட்டை நிறுத்திவிட்டு, வீட்டு வேலையைச் செய்யச் சொன்னால், அவனுக்கு கீழ்ப்படிதலானது வேதனையாகத்தான் இருக்கும். அப்படிப்போலவே, நம்முடைய வாழ்க்கையிலும், சிலவிதமான கீழ்ப்படிதல் எளிதாகவும், சுகமானதாகவும் இருக்கும். நாம் நமக்கு நல்லதென்று காண்கிறவைகளுக்குக் கீழ்ப்படிகிறோம். ஆனால் நாம் விரும்பாததைச் செய்ய வேண்டிய சூழல் உண்டாகும் போதுதான் நம்முடைய கீழ்ப்படிதலுக்கு விஷப்பரீட்சை ஏற்படுகிறது. நம்முடைய சித்தம் மறுதலிக்கப்பட்டு, வேதனையை வருவிக்கும்போதுதான், நம்முடைய கீழ்ப்படிதல் சோதிக்கப்படு கின்றது. இயேசு தம்மைத் தாமே மறுதலித்ததின் மூலமாகத்தான் கீழ்ப்படிதலைக் கற்றுக் கொண்டார். அவருடைய பிதா "இல்லை" என்று சொன்ன எல்லாவற்றிற்கும், அவரும் "இல்லை" என்றே சொன்னார். அவர் பட்ட பாடுகளினாலே கீழ்ப்படிதலைக் கற்றுக் கொண்டார். இந்தக் கல்வியின் முடிவிலே, "அவர் பூரணராக்கப்பட்டார்" (எபி 5:9). "பூரணமாதல்" என்பது இந்த இடத்தில் "முழுமையாதல்" எனப் பொருள் தருகின்றது. இயேசு ஒரு பட்டத்தைப் பெற்று பட்டதாரியானார். இதே பட்டத்தைத்தான் நாமும் பெற வேண்டும். அதற்கு நாமும் அவரைப் போலவே எண்ணற்ற சோதனைகளை வெல்ல வேண்டும்.
ஒரு பரீட்சையிலே நாம் தோற்கும்போது என்ன நிகழும்? அதே பரீட்சையை நாம் மீண்டும் செய்ய வேண்டியதாகிவிடும். எல்லா பரீட்சைகளிலும் நாம் தேறி விட்டால், பட்டத்தைப் பெற்றுவிடலாம். பின்பு நாமும் ஜெயங்கொண்டவர்களாகி விடுவோம். எனவே நாம் பெறக் கூடிய மிக முக்கியமான பட்டம் இதுவாகத்தான் இருக்க முடியும். இதனுடன் ஒப்பிடும்போது வேறெல்லாப் பட்டமும் வெறும் குப்பையே. "என்னைப் பின்பற்று" என இயேசு சொல்லும் போது, நம்முடைய இரட்சிப்பின் அதிபதியாகிய அவர் என்ன செய்தாரோ, அதையே நாமும் செய்யும்படிக்கே நம்மையும் அழைக்கிறார். அவர் சந்தித்திராத எந்த ஒரு சோதனையையும், நாம் சந்திக்க வேண்டும் என்று அவர் நம்மிடம் எதிர்பார்ப்பதில்லை. நம்முடைய கல்வியை நிறைவு செய்வதற்கு நமக்கு உதவிசெய்யக்கூடிய கிருபையைப் பெற்றுக் கொள்ளும்படிக்கு, நாம் கிருபாசனத்தண்டைக்குக் கிட்டிச் சேருவோமாக. பாடுபடவேண்டியதிருந்தால், நாம் பாடுபடுவோம். ஆனால் நாம் கீழ்ப்படிதலைக் கற்றுக் கொண்டு, நம்முடைய கல்வியை நிறைவு செய்வதிலே உறுதி பூண்டுள்ளோம்.
"தாம் பூரணரான பின்பு, தமக்குக் கீழ்ப்படிகிற யாவரும் நித்திய இரட்சிப்பை அடைவதற்குக் காரணரானார்" என்று எபிரேயர் 5:9-ல் நாம் வாசிக்கிறோம். இந்தக் கீழ்ப்படிதலின் கல்லூரியிலே, இயேசு இப்போது பேராசிரியராகி விட்டார். அவர் இக்கல்லூரியில் எல்லாவற்றிலும் கீழ்ப்படிந்து, தரைமட்டத்திலிருந்து மேலே உயர்ந்து வானத்தைத் தொட்டுவிட்டார்.
அவருடைய ஊழியர்களாகிய நாம் இப்போது, இந்தக் கீழ்ப்படிதலின் கல்லூரியிலே இளநிலை விரிவுரையாளர்களாக அழைக்கப்பட்டிருக்கிறோம். பாடுகளினூடே நீங்கள் எவ்வளவு அதிகமாகக் கீழ்ப்படிதலை கற்றுக் கொள்ளுகிறீர்களோ, அவ்வளவு அதிகமாய் உங்களால் பிறரை கீழ்ப்படிதலுக்குள் நடத்தும் கர்த்தரின் மெய்யான ஊழியக்காரராக இருக்க முடியும். இது மட்டுந்தான் மெய்யான கிறிஸ்தவ ஊழியமாகும். நீங்கள் உங்களது பரீட்சைகளிலெல்லாம் தோல்வியுற்றுக் கொண்டேயிருந்தால், உங்களால் எப்படி இந்தக் கல்லூரியிலே விரிவுரையாளராக மாற முடியும்?
"தமக்குக் கீழ்ப்படிகிற யாவரும் நித்திய இரட்சிப்பை அடைவதற்குக் காரணமானார்" (எபி 5:9). இந்த "நித்திய இரட்சிப்பு" என்பது பாவத்தின் தண்டனையிலிருந்து பெறும் இரட்சிப்பு என்று இங்கு சொல்லப்படவில்லை. அது அனுதின வாழ்க்கையில் பாவத்தின் வலிமையிலிருந்து பெறும் இரட்சிப்பாகும் என்று இங்கு குறிப்பிடப்படுகிறது.