WFTW Body: 

இயேசு, நல்ல சமாரியன் உவமையில், நம் கண்ணுக்கெதிரே ஏதோவொரு தேவையில் இருக்கும் சகோதரனுக்கு உதவுவதன் முக்கியத்துவத்தைக் குறித்துப் போதித்தார் (லூக்கா 10:25-37).

இந்த இடத்திலே வேத பண்டிதன் ஒருவன் இயேசுவினிடத்தில் வந்து நித்திய ஜீவனைப் பெற்றுக் கொள்வது எப்படி என்ற கேள்வியை எழுப்பினான். அதற்கு இயேசு, தேவனிடத்திலே முழு இருதயத்தோடு அன்பு கூற வேண்டுமென்றும், தன்னைப் போல் பிறனை நேசிக்க வேண்டுமென்றும் பதிலளித்தார். ஆனால் அந்த வேத பண்டிதனோ (இன்றைய நாட்களில் உள்ள வேத பண்டிதர்களைப் போலவே), "சில விதமான மக்கள் மீது தான் கொண்ட அன்பின்மையை நியாயப்படுத்தும் பொருட்டு" (லூக்கா 10:29 - Living Bible) இயேசுவிடம் தனக்கு அயலான் யார் என்று கேட்டான். அவனுடைய கேள்விக்கு இயேசு ஒரு உவமையின் மூலம் பதிலளித்தார்.

கள்ளர் கையில் காயப்படுத்தப்பட்டு குற்றுயிராக சாலையில் கிடந்த ஒரு மனிதனைப் பற்றி இயேசு சொன்னார். ஒரு ஆசாரியன் (தேவனுடைய வீட்டின் மூப்பன்) அவனைப் பார்த்தும் புறக்கணித்தான். அந்நாட்களில் இஸ்ரவேலில் இருந்த அனைவரும், ஆபிரகாம், ஈசாக்கு, யாக்கோபின் வம்சாவளியினர். விசுவாசிகளாகிய நம்மைப் போலவே அவர்கள் அனைவருமே சகோதர சகோதரிகள். எனவே, சாலையில் கிடந்த இந்த மனிதன் ஆசாரியனின் சகோதரன். ஆனால் ஆசாரியன் அவனைப் பார்த்தும் புறக்கணித்தான். இரவில் தனிமையான சாலையில் தனியாக நடந்து சென்றிருக்கக் கூடாது என்றும் கூட அவன் நியாயந்தீர்த்திருக்கலாம். சில சமயங்களில், ஒரு சக விசுவாசி பாடனுபவிப்பதைக் காணும்போது, அவனுக்கு உதவி செய்யப் பிரயாசப்படுவதற்குப் பதிலாக அவனை எவ்வளவு விரைவாக நியாயந்தீர்க்கிறோம்.

"பசியாயிருந்தேன், நீங்கள் எனக்குப் போஜனங்கொடுக்கவில்லை; தாகமாயிருந்தேன், நீங்கள் என் தாகத்தைத் தீர்க்கவில்லை; வஸ்திரமில்லாதிருந்தேன், நீங்கள் எனக்கு வஸ்திரம் கொடுக்கவில்லை; வியாதியுள்ளவனாயிருந்தேன், நீங்கள் என்னை விசாரிக்க வரவில்லை. நீங்கள் வெறுமனே பாடல்களைப் பாடி, பிரசங்கங்களை பிரசங்கித்தீர்கள், ஆனால் என்னுடைய தேவையிலே எனக்கு உதவி செய்யவில்லை" என ஆண்டவர் நம்மிடம் ஒரு நாளில் சொல்வாரோ?. அந்த ஆசாரியன், தேவை நிறைந்த சகோதரனுக்கு உதவி செய்வதைவிட, எருசலேம் கூடுகைக்குச் சரியான நேரத்திற்குப் போக வேண்டுமென்பதிலேதான் அதிக ஆர்வம் கொண்டிருந்தான். கூட்டங்களில் தவறாமல் பிரசங்கிக்கிறவர்களில் அநேகர், இறுதியாக நரகத்திற்குச் செல்லக்கூடும் என்று இயேசு நம்மை எச்சரித்துள்ளார் (மத்தேயு 7:22,23).

அதன் பின்பு, ஒரு லேவியன் (தேவனுடைய வீட்டிலுள்ள ஒரு சகோதரன்) அவ்வழியே கடந்து போனான். அவனும் தேவையுள்ள தன்னுடைய சகோதரனை புறக்கணித்துச் சோதனையில் தோற்றுப்போனான். அவனும் கூட்டத்திற்கு குறித்த நேரத்திற்கு போக வேண்டுமென்பதிலேயே குறியாக இருந்தான். இவ்விரு மனிதர்களும் தேவன் தங்களோடு பேச வேண்டுமென விரும்பி கூட்டத்துக்குப் போனார்கள். ஆனால், தேவையுள்ள ஒரு சகோதரனுக்கு உதவுவதற்காக கூட்டத்திற்கு செல்லும் வழியில் தேவன் அவர்களிடம் ஏற்கனவே பேசியிருப்பதை அவர்கள் உணரவில்லை. ஆண்டவர் சொல்வதைக் கேட்க அவர்களுக்குச் செவிகள் இல்லாதபடியால் அந்நாள் காலையில் அவர்கள் பாடின பாடல்களும் ஏறெடுத்த ஜெபங்களும் தேவனுக்கு மதிப்பற்றவை. அநேக நேரங்களில் தேவ பக்தியுள்ள ஜனங்கள் படும் உபத்திரவங்களைக் கொண்டு, அவற்றைக் காண்பவர்களின் இருதயங்களைச் சோதிக்கத் தேவன் பயன்படுத்துகிறார். யோபுவின் கதையைக் கவனியுங்கள். யோபுவின் உபத்திரங்களின் மூலமாக தேவன் அவனுடைய மூன்று நண்பர்களின் இருதயங்களைச் சோதித்தார். மூவருமே அந்த சோதனையில் தோல்வியடைந்தனர்.

இயேசுவின் கதையில் நாம் அந்த ஆசாரியனிலும் லேவியனிலும் நம்மைக் காண்கிறோமா? அப்படியானால் தீவிரமாய் அதற்காக மனந்திரும்பி, வரும் நாட்களில் முற்றிலும் மாறுபட்டவர்களாக இருக்க முற்படுவோம். ஆசாரியனும் லேவியனும் பழைய உடன்படிக்கையின் ஜனங்கள். ஆனால் நாம் புதிய உடன்படிக்கை கிறிஸ்தவர்களென்று கூறி, அதிக உயரத்திற்கு எழும்பியிருப்பதாகக் கூறுகிறோம். அப்படியானால், நாம் இயேசுவைப் பிரதிபலிக்கும்படி அழைக்கப்பட்டுள்ளோம். அவரை சரியாகப் பிரதிபலிக்கிறோமா என்று நம்மை நாமே கேட்டுக்கொள்ள வேண்டும்.

முடிவாக, அசட்டை பண்ணப்பட்ட சமாரியனே (அநேக தவறான உபதேசங்களைக் கொண்ட ஒரு பாபிலோனிய ஸ்தாபனத்தைச் சார்ந்த ஒரு சகோதரனை இன்று அடையாளப்படுத்தலாம்) அந்த காயப்பட்ட ஏழை மனிதனுக்கு உதவினான். அந்த சமாரியன் மூப்பரோ அல்லது பிரசங்கியாரோ அல்ல. தேவையில் இருக்கும் எவருக்கும் உதவி செய்ய எப்போதும் தயாராக இருந்து, தன்னுடைய செயல்களைப் பற்றி யாருக்கும் தெரியப்படுத்தாமல் அமைதியாகச் செயல்படும் ஜனங்களில் அவனும் ஒருவன். காயப்பட்ட அந்த மனிதனைப் பார்த்ததும், தனக்கும் இப்படியொரு பேராபத்து நேரிடக்கூடம் என்பதை உணர்ந்தான். எனவே அவன் தன்னைத் தானே வெறுத்து, தனது நேரத்தையும் தனது பணத்தையும் தேவை நிறைந்த சகோதரனுக்கு உதவுவதற்காக செலவழித்தான்.

கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவின் உண்மை சீஷனாக இருப்பதின் அர்த்தம் என்ன என்பதை இங்கு காண்கிறோம். கிறிஸ்துவின் சாயலை நம்முடைய உபதேசத்தினால் நாம் பிரதிபலிப்பதல்ல, மாறாக நம்முடைய வாழ்க்கைப் பயணத்தில் சந்திக்கும் தேவையுள்ள சகோதரர்களிடம் காட்டும் அணுகுமுறையால் நாம் பிரதிபலிக்கிறோம். எல்லாரிடமும் நன்றாகவும், அன்பாகவும், இரக்கமாகவும் இருப்பதே இதன் பொருள்.

அதே வழியில் எப்பொழுதும் செல்ல கர்த்தர் நம் அனைவருக்கும் உதவி செய்வாராக. ஆமென்.