"கிறிஸ்துவினுடைய நிறைவான வளர்ச்சியின் அளவுக்குத்தக்க பூரண புருஷராகும் வரைக்கும்" படிப்படியாக நாம் வளரவேண்டும் என்று அப்போஸ்தலனாகிய பவுல் எபேசியர் 4:11 -ல் கூறுகிறார். இந்த நிறைவான வளர்ச்சிக்கு நாமும் வளர்ந்து மற்றவர்களும் வளருவதற்கு உதவி செய்வதே நம்முடைய குறிக்கோளாக இருக்க வேண்டும். நாம் இனிக் குழந்தைகளாயிராமல், மனுஷருடைய சூதும் வஞ்சிக்கிறதற்கேதுவான தந்திரமுமுள்ள போதகமாகிய பலவித காற்றினாலே அலைகளைப்போல அடிபட்டு அலைகிறவர்களாய் இருக்கக்கூடாது (எபேசியர் 4:14).
நாம் பகுத்தறிவில் வளருவதற்காக, கர்த்தர் நம்மை வஞ்சகத்திற்கும் கள்ளப் போதகத்திற்கும் வெளியரங்கப்படுத்துகிறார். இல்லையென்றால், நம்முடைய பகுத்தறிவின் உணர்வு வளர்ச்சியடையாது. எனவேதான் அநேக வஞ்சகர்களையும் கள்ளத்தீர்க்கத்தரிசிகளையும் கிறிஸ்தவ வட்டாரத்தில் நடமாட அவர் அனுமதித்து இருக்கிறார். அப்பொழுது யாருடைய ஆவி செம்மையாய் இருக்கிறது என்பதையும், யாருடைய ஆவி செம்மையாய் இல்லை என்பதையும் நாம் பகுத்தறிய முடியும். நாம் மற்றவர்களை நியாயம் தீர்க்க வேண்டியதில்லை. ஆனால் பகுத்தறிய வேண்டும். அப்போது நம்முடைய ஆவிக்குரிய உணர்வுகள் பயிற்றுவிக்கப்படும்.
“அன்புடன் சத்தியத்தைக் கைக்கொண்டு (பேசி), நாம் வளருகிறவர்களாயிருக்க வேண்டும்” என்று எபேசியர் 4:15 -ல் வலியுறுத்தப்பட்டிருக்கிறோம். அங்கே அன்பிற்கும் சத்தியத்திற்கும் உள்ள சமநிலையைக் கவனியுங்கள். நாம் சத்தியத்தைப் பேசவேண்டுமா? ஆம், எப்போதும் சத்தியத்தைப் பேசவேண்டும். ஆனால் நாம் விரும்புகிறபடி எப்படி வேண்டுமானாலும் பேச அனுமதிக்கப் பட்டிருக்கிறோமா? இல்லை. நாம் அன்புடன் சத்தியத்தைப் பேச வேண்டும். நீங்கள் அன்புடன் சத்தியத்தைப் பேச முடியவில்லையென்றால், ஜனங்களிடம் சத்தியத்தைப் பேச அவர்களிடம் செலுத்துவதற்கு போதுமான அன்பை நீங்கள் பெறும்வரை காத்திருக்க வேண்டும். சத்தியத்தின் எழுத்தாணியை அன்பென்னும் பலகையின் மேலேயே பயன்படுத்த முடியும். நீங்கள் பலகையில்லாமல் சத்தியத்தை எழுத முயன்றால், நீங்கள் ஆகாயத்தில் தான் எழுதிக்கொண்டு இருப்பீர்கள். நீங்கள் எழுதுவதை யாராலும் புரிந்துகொள்ள முடியாது. பிரசங்க பீடத்திலோ அல்லது தனிப்பட்ட உரையாடலிலோ, எப்போதுமே நாம் அன்புடன் சத்தியத்தைப் பேசுவதினால் மாத்திரமே "தலையாகிய கிறிஸ்துவுக்குள் எல்லாவற்றிலேயும் வளருகிறவர்களாயிருப்போம்".
"அவராலே சரீரம் முழுதும், அதற்கு உதவியாயிருக்கிற சகல கணுக்களினாலும் இசைவாய்க் கூட்டி இணைக்கப்பட்டு, ஒவ்வொரு அவயவமும் தன்தன் அளவுக்குத்தக்கதாய்க் கிரியைசெய்கிறபடியே, அது அன்பினாலே தனக்கு பக்திவிருத்தி உண்டாக்குகிறதற்கேதுவாகச் சரீரவளர்ச்சியை உண்டாக்குகிறது" என்று எபேசியர் 4:16 -ல் பவுல் பேசுகிறார். இங்கே கணுக்கள் ஐக்கியத்தைக் குறிக்கிறது. ஒரு கரத்தில் மாத்திரம் எத்தனை கணுக்கள் உள்ளது என்பதை எண்ணிப்பாருங்கள். தோள்பட்டையில் ஒன்று, முழங்கையில் ஒன்று, மணிக்கட்டில் ஒன்று, ஒவ்வொரு விரலிலும் மூன்று - என்று குறைந்த பட்சம் 17 கணுக்கள் உள்ளன. இந்த கணுக்களினால் தான் உங்களுடைய கரம் விடுதலையோடு வேலை செய்கிறது. உங்களுக்கு வலிமையான மேல் கையும் (Upper arm), வலிமையான கீழ் கையும் (Lower arm) இருந்து, ஆனால் உங்கள் முழங்கை ஒருவேளை விறைப்பாக இருந்தால் அந்த கரத்தை வைத்து என்ன செய்வீர்கள்? ஒன்றும் செய்ய முடியாது. வெறும் வலிமை மாத்திரமே உங்கள் கரத்தை உபயோகம் உள்ளதாய் ஆக்காது. அது செயல்படுகிற கணுக்களினால் தான் அப்படியாகும். இதை கிறிஸ்துவின் சரீரத்திற்கு ஒப்பிட்டுப் பாருங்கள். இதோ வலிமையான மேல் கையைப் போல ஒரு நல்ல சகோதரர் மற்றும் வலிமையான கீழ் கையைப் போல மற்றுமொரு நல்ல சகோதரர். ஆனால் இவர்கள் இருவரும் ஒருவருக்கொருவர் ஐக்கியம்கொள்ள முடியவில்லை.
இப்படிப்பட்ட பரிதாபகரமான செயல் தான் கிறிஸ்துவின் சரீரத்தில் இன்று காணப்படுகிறது. மனித உடலில், இது மூட்டுவலி (arthritis) எனப்படும், அது மிகவும் வேதனையானது. அநேக ஸ்தல சபைகளிலே இப்படிப்பட்ட மூட்டுவலி இருக்கிறது. உங்களுடைய கணுக்கள் ஒழுங்காகச் செயல்படும்போது, அங்கே சத்தம் இருக்காது. ஆனால் ஒரு சரீரத்தில் மூட்டுவலி இருக்கும்போது அது “கீச்” என்ற ஒலியை ஏற்படுத்தும், ஒவ்வொரு அசைவும் ஆரோக்கியமற்ற சத்தத்தை ஏற்படுத்தும். சில விசுவாசிகளிடத்தில் "ஐக்கியம்" என்று சொல்லப்படுவது இப்படித்தான் இருக்கிறது. அது “கீச்” என்ற ஒலியை ஏற்படுத்துகிறது. ஆனால் கணுக்கள் சீராகச் செயல்படும்போது, அங்கே சத்தம் ஒன்றுமில்லை. நாம் ஒருவரோடு ஒருவர் கொண்டிருக்கும் ஐக்கியம் இப்படித்தான் இருக்க வேண்டும். உங்களுக்கு அப்படி இல்லையென்றால், நீங்கள் மூட்டுவலிக்கு கொஞ்சம் மருந்து எடுத்துக்கொள்ள வேண்டும். உங்களுடைய “சுய-வாழ்விற்கு (self-life)” மரித்து விடுங்கள். அப்போது நீங்கள் குணப்பட்டு, மற்றவர்களோடு நீங்கள் கொண்டிருக்கும் ஐக்கியம் மகிமையாய் இருக்கும். இதுவே கிறிஸ்துவின் சரீரத்தில் தேவனுடைய சித்தமாய் இருக்கிறது.