எழுதியவர் :   சகரியா பூணன் வகைகள் :   திருச்சபை
WFTW Body: 

தேவன் இப்பூமியில், "தேவபக்திக்கு வேண்டிய யாவற்றையும், அவருடைய திவ்விய வல்லமையினாலே நமக்குத் தந்தருளியிருக்கின்றார்" (2 பேது 1:3,4) என்ற நற்செய்தியை பேதுரு தன்னுடைய இரண்டாவது நிருபத்தில் நமக்கு நினைப்பூட்டி மகிழ்கிறார். நாமும் பேதுருவைப் போலவே "மதிப்புமிக்க விசுவாசத்தைப்" (1 பேது 1:1-WBTC) பெற்றிருப்போமானால், அவர் எவ்வண்ணமாகக் கிருபையைப் பெற்று தேவனுடைய சுபாவத்தில் பங்கடைந்தாரோ, அவ்வண்ணமே நாமும் அதே கிருபையைப் பெற்றுக் கொள்வோம். அதன்பின்பு நாம் இயேசுவின் சுபாவமான, "உன்னதமான ஒழுக்கநெறி, அறிவு, இச்சையடக்கம், பொறுமை, தேவபக்தி, சகோதர சிநேகம், அன்பு" (2 பேது 1:5-7) ஆகியவற்றையெல்லாம் பெறுவோம். அவையாவும் நமக்குள்ளே பெருகிக் கொண்டே இருக்கும். அந்த சுபாவமானது நம்மை கனி கொடுக்கிறவர்களாக மாற்றி, நம்முடைய குருட்டாட்டம் மற்றும் கிட்டப் பார்வை ஆகியவற்றிலிருந்து நம்மை விடுவிக்கும் (2 பேது 1:8,9). இயேசுவில் நிலைத்திருக்கிற எவனும், மிகுந்த கனிகளைக் கொடுப்பான் (யோவா 15:5). இயேசுவின் இந்த குணநலன்களெல்லாம் நம்மிலே அதிகதிகமாகப் பெருகி வெளிப்படவில்லையெனில், நாம் கிறிஸ்துவுக்குள் நிலைத்திருக்கவில்லை என்பதைத்தான் அது காட்டுகின்றது. மேலும் நாம் மெய்யான தேவக் கிருபையின் கீழாக வாழவில்லை என்பதையும் அது குறிக்கின்றது.

தங்களைத்தாங்களே தாழ்த்துகிறவர்கள் தேவக்கிருபையைப் பெற்றுக் கொள்ளுகிறார்கள். அந்த கிருபையானது அவர்களுக்கு வெறும் வெற்றியை மாத்திரம் கொடுக்காமல், அவர்களை மற்றவர்களோடு ஒன்றாக்கும் பணியையும் அவர்களுக்குள்ளே நடைபெறச் செய்கிறது. கணவனும், மனைவியும் "நித்திய ஜீவனாகிய கிருபையைச் சுதந்தரித்துக் கொள்ளுகிற உடன்பங்காளிகளாக" இருக்கிறார்கள். அதைப் போலவே, கிறிஸ்துவின் சரீரத்திலுள்ள விசுவாசிகளாலும் தங்களை, சக விசுவாசிகளுடன் இணைத்து, உடன்பங்காளிகளாக மாற்றக்கூடியக் கிருபையை பெற்றுக்கொள்ள முடியும்.

இயேசுவும் பிதாவும் ஒன்றாய் இருப்பது போலவே, நாமும் ஒன்றாய் இருக்க வேண்டுமென இயேசு தம்முடைய பூலோக வாழ்க்கையின் கடைசி இரவிலே வேண்டிக்கொண்டார் (யோவா 17:22). இந்த ஒருமைப்பாட்டை நாம் இந்த பூமியிலேயே உணர்ந்து, அனுபவிக்க வேண்டுமெனவும் அவர் ஜெபித்தார் (யோவா 17:21,23). இது ஓர் அறிவுசார்ந்த ஒருமைப்பாடல்ல; ஆவியின் ஒருமைப்பாடு ஆகும். நாம் பாவம் மிகுந்த சுபாவத்தைப் பெற்றிருக்கிறோம். நம்முடைய மனமானது பாவத்தால் பின்னப்பட்டு மட்டுப்படுத்தப்பட்டுள்ளது. ஆகவேதான் நம்மால் மற்றவர்களோடு சேர்ந்து, ஒவ்வொரு விஷயத்தையும் ஒரே மாதிரியாகக் கண்ணோடு கண் வைத்துப் பார்க்க முடிவதில்லை. ஆனால் இது ஆவியின் ஒருமைப்பாட்டிற்கு எந்த விதத்திலும் பங்கம் விளைவிக்க முடியாது. நாம் நம்முடைய இருதயத்திலே மற்றவர்களுடன்ஒன்றாய் இருக்க முடியும்.

நாம் தலையானவரின் சித்தத்தைச் செய்யாமல் , நம்முடைய சித்தத்தையே செய்ய வேண்டுமென விழைவதால்தான், நம் மத்தியிலே ஒருமைப்பாட்டுக்குத் தட்டுப்பாடு ஏற்படுகின்றது. ஒருமைப்பாடு என்பது நாம் உபதேசத்தை எப்படிப் புரிந்து கொள்ளுகிறோம் என்பதைப் பொறுத்து அமைகின்ற ஒன்றல்ல. அது நாம் நம்முடைய சொந்த சித்தத்தை மறுதலித்து, பிதாவின் சித்தத்தைச் செய்வதைச் சார்ந்தே உள்ளது.

பிதாவிடமிருந்து கேட்ட சத்தத்திற்கு இயேசு எப்பொழுதுமே கீழ்ப்படிந்தார். பிதாவின் சித்தத்திற்குக் கீழ்ப்படிவதே அவருடைய உணவாக இருந்தது (யோவா 4:34). இயேசு பிதாவோடு ஒன்றாயிருந்தார். நாமும் இப்படிப்பட்ட ஒருமைப்பாட்டுக்குள் பிரவேசிக்கவேண்டும் என்பதற்காகத்தான் மெய்யான தேவக்கிருபையைக் கொண்டு அழைக்கப்பட்டிருக்கிறோம்.

இயேசு தீமையை நன்மையாலே வென்றார். அவர் நன்மை செய்வதிலேயே எப்பொழுதும் வேர்விட்டிருந்தபடியால், தீமையானது அவர்மேல் வல்லமை கொள்ள முடியவில்லை. "தீமையை நன்மையினாலே வெல்லுங்கள்" (ரோம 12:21) என்ற வார்த்தைக்கு நாமும் கீழ்ப்படிவோமானால். நமக்கும் அப்படியே ஆகும். ஜனங்கள் நம்மை வெறுத்து, அவமானச் சேற்றை நம்மீது அள்ளி வீசும் போது, அவர்களுக்கு நன்மை செய்து அவர்களுடைய தீமையை நம்மால் ஜெயிக்க முடியும். நாம் மெய்யான தேவக்கிருபையைப் பெற்றிருந்தால் மட்டுமே இது சாத்தியமாகும். அப்பொழுதுதான் இயேசு ஜெபித்தது போலவே, நாமும் இவ்வுலகத்தின் தீமையினின்று பாதுகாக்கப்படுவோம் (யோவா 17:16). பின்பு இதே வழியில் பயணிக்கிற மற்ற யாவரோடும் ஒன்றாகி விடுவோம். இயேசு கட்டுகிற சபையானது, கிருபையை - மெய்யான தேவக்கிருபையைப் - பெற்ற சபையாக இருக்கும். கிறிஸ்துவின் தலைமையின் கீழ் ஒன்றாகக் கூட்டிக் கட்டப்படுகிறதாகவும் இருக்கும். இப்படிப்பட்ட சபை மட்டுந்தான் பாதாளத்தின் வாசல்களை மேற்கொள்ளும் (மத் 16:18).