எழுதியவர் :   சகரியா பூணன் வகைகள் :   திருச்சபை
WFTW Body: 

ஆவியின் வரங்களைக் குறித்து நாம் 1கொரிந்தியர் 12 -ஆம் அதிகாரத்தில் வாசிக்கிறோம். இவ்வரங்களெல்லாம் ஒரு ஸ்தல சபையானது, அதாவது ஒரு ஸ்தலத்திலுள்ள கிறிஸ்துவின் சரீரமானது, எப்படி இயங்க வேண்டும் என்பதுடன் சம்பந்தப்படுத்தப்பட்டுப் பேசப்படுகின்றன. ஒவ்வொரு இடத்திலும் இவை அனைத்தும் கிறிஸ்துவின் சரீரத்தைக் கட்டுவதற்காகவே பயன்படுத்தப்பட வேண்டும் என்பதை அறியாமலேயே, இவ்வரங்களைக் குறித்து யோசிக்கிற அநேகக் கிறிஸ்தவர்கள் உண்டு. ஆதலால் அவர்கள் வழிவிலகிவிடுகிறார்கள். நாம் இன்னும் சிறப்பாய் மற்றவர்களுக்கு ஊழியம் செய்வதற்காகவே, இந்த ஆவிக்குரிய வரங்களை நாட வேண்டும் (லூக்கா 11 :5-13). இந்த அதிகாரத்தின் முதல் பகுதியை (வரங்கள் சம்பந்தப்பட்டவை) வலியுறுத்துகிற அநேகர், அதன் இரண்டாம் பகுதியை (கிறிஸ்துவின் சரீரம் சம்பந்தப்பட்டது) வலியுறுத்துவது இல்லை. மற்றவர்கள் இரண்டாம் பகுதியை வலியுறுத்திவிட்டு, முதல் பகுதியை அலட்சியப்படுத்தி விட்டு விடுகின்றனர். இவர்கள் யாவரும், 11 -ஆம் அதிகாரத்தின் இரண்டாவது பகுதியை வலியுறுத்திவிட்டு, முதலாவது பகுதிக்குக் (இன்றைய காலக்கட்டத்தில் இவையெல்லாம் நமக்குப் பொருந்தாது என்று சொல்லி) கீழ்ப்படியாமல் இருப்பவர்களைப் போலவே உள்ளனர்.

நீங்கள் ஆவிக்குரிய வரங்களைச் சரியாகப் பிரயோகிப்பது எப்படி என்பதை அறிந்து கொள்ள விரும்பினால், அவ்வரங்களெல்லாம் பிறருக்கு ஊழியம் செய்வதற்காகவும், ஒரு ஸ்தல சபையைக் கிறிஸ்துவின் சரீரத்தின் வெளிப்பாடாகக் கட்டுவதற்காகவும் தரப்பட்டவை என்ற கோணத்திலேயே எப்பொழுதும் பார்க்க வேண்டும். 1கொரிந்தியர் 12:13-ல், பவுல், “நாம்” என்னும் வார்த்தையைப் பயன்படுத்துவதன் மூலமாக, உலகளாவிய கிறிஸ்துவின் சரீரம் என்று குறிப்பிடுவதைப் பார்க்கிறோம். ஆனால் 1கொரிந்தியர் 12:27-ல், “நீங்களே கிறிஸ்துவின் சரீரம்” என்று சொல்வதன் மூலமாக, அது ஓர் இடத்தில் கிறிஸ்துவின் சரீரத்தின் வெளிப்பாடாகக் குறிப்பிடுகிறார்.

கிறிஸ்துவின் சரீரத்தில், ஆவியின் வரங்களனைத்தும், நம்முடைய உடலின் உறுப்புகள் இயங்குவதற்கு ஒப்பாக உள்ளன. சரீரத்திலே, காது அல்லது கண் போன்ற உறுப்புகளைப் போல முக்கியத்துவம் வாய்ந்த உறுப்பினராக தாங்கள் இருக்க வேண்டுமென எவரும் விரும்பக்கூடாது. “சரீரம் முழுவதும் கண்ணானால், செவி எங்கே? அது முழுவதும் செவியானால், மோப்பம் எங்கே?” (1கொரி 12:17). ஒரு மூக்கு இருப்பதும் அவசியமாகும். எனவே, நாம் இன்னொருவருடைய வரத்தை பெற்றிருக்க வேண்டுமென விரும்பக் கூடாது. கிறிஸ்துவின் சரீரத்தில், யார் கண்ணாக இருக்க வேண்டும், யார் நாவாக இருக்க வேண்டும் என்பதை தேவனேதான் தீர்மானிக்கிறார். நீங்கள் வெளியிலே தெரிகிற ஒரு நாவாக இருப்பதை அவர் விரும்பாமல், கண்ணுக்குத் தெரியாத ஓர் இருதயமாகவோ, அல்லது கல்லீரலாகவோ, அல்லது சிறுநீரகமாகவோ இருக்க வேண்டுமென அவர் விரும்பலாம். ஆனால் கண்ணுக்குத் தெரியாத இந்த உறுப்புகளெல்லாம் மிக முக்கியமான பணியை ஆற்றுகின்றன. நம்முடைய மனித உடலில், உள்ளங்கால் போன்ற உறுப்புகள், கரடுமுரடான பணிகளைச் செய்வதற்காக நியமிக்கப்பட்டுள்ளன. ஆனால் கண் போன்ற உறுப்புகள் மிகவும் பெலவீனமானதாகவும், வெகு உணர்வு மிக்கதாகவும், எளிதில் காயமடைந்துவிடுவதாகவும் உள்ளன. ஒரு சிறு தூசி நம்முடைய கண்ணுக்குள் சென்றுவிட்டாலும், அது நம்மைத் தொடர்ந்து தொந்தரவு செய்வதாக மாறிவிடுகின்றது. ஆனால் நம்முடைய பாதங்கள் முழுவதும் தூசி மூடியிருந்தாலும், அது நம்மை பாதிப்பதில்லை. சில உறுப்புகள் கவர்ச்சி மிக்கவையாக இருக்க, வேறு சில உறுப்புகளோ அந்தளவிற்கு கவர்ச்சியாக இருப்பதில்லை. ஆகவே நாம் அவற்றை மறைத்துக் கொள்கிறோம்.

சபையிலும், பிரசங்கிப்பவரைப் போன்ற ஒரு சிலர் அடிக்கடி மேடைக்கு வருவதால், அவர்கள் அதிகமாக வெளியிலே தெரிபவர்களாக உள்ளனர். நாம் அவரை நாவைப் போன்றவர் என்று சொல்லலாம். ஆனால் சரீரத்திலே பெரும்பாலானவர்கள் மேடைக்கு வருவதில்லை. ஆனால் அவர்கள் பிரசங்கியாருக்காக அந்தரங்கத்தில் அதிகமாக “ஜெபிப்பவர்களாக” இருக்க முடியும். அவர்கள் பேசுகிற வாயிற்கு இரத்தத்தைச் செலுத்தும் இருதயத்தைப் போன்றவர்கள் ஆவர். இரு உறுப்புகளுமே சம முக்கியத்துவம் வாய்ந்தவையாகும். இருதயம் இரத்தத்தைச் செலுத்தவில்லையானால், வாயால் பேச முடியாது. ஆனால் அதே சமயம், வாயானது நன்றாகத் திறந்து, உணவை உட்கொள்ளாத பட்சத்தில், இருதயம் இறந்துவிடும். இருதயம் வாயையும், வாய் இருதயத்தையும் சார்ந்துள்ளன. ஆதலால் ஆவியின் வரங்களில் நீங்கள் எதைப் பெற்றிருந்தாலும், உங்களுக்கு உங்களுடைய சகோதரன் தேவை, உங்கள் சகோதரனுக்கு நீங்கள் தேவை. அந்தச் சகோதரன் யாருடைய கண்ணுக்கும் தெரியாமலும், பாராட்டப்படாமலும் இருதயத்தைப் போலிருக்க, நீங்களோ, எல்லாருக்கும் தெரிகிற கண்ணைப் போன்ற அல்லது கையைப் போன்ற சகோதரனாக இருக்கலாம்.

ஆவியின் வரங்கள் பலவாக இருப்பினும், அவற்றிற்கிடையே எவ்விதப் போட்டிகளும் இல்லாமல், ஒத்துழைப்பு மாத்திரமே இருக்கின்றது. ஒருவன் அப்போஸ்தலனாகவும், வேறொருவன் தீர்க்கதரிசியாகவும் இருக்கக்கூடும் (1கொாி. 12:28). ஒருவன் பாஷையில் பேசுகிறவனாகவும், வேறொருவன் குணமாக்கும் வரத்தை உடையவனாகவும் இருக்கக்கூடும். ஆனால் எல்லாருமே சம அளவு தேவைப்படுகிறவர்களாகவே இருக்கின்றனர். எவருக்கும் இன்னொருவரது வரம் தேவையில்லை. ஆனால் எவரும் இன்னொருவரிடம், “நீ எனக்கு வேண்டியதில்லை. நானே எல்லாவற்றையும் பார்த்துக் கொள்வேன்” (1கொாி. 12:21) என்று சொல்லிவிட முடியாது.

எப்போதாவது உங்களுடைய இடது கையானது வலது கையைப் பார்த்துப் பொறாமைப்பட்டதுண்டா?
முக்கியமான கடிதங்களை எழுதுவதும், காசோலைகளில் கையொப்பமிடுவதுமான பணிகளை உங்களது வலது கை செய்கின்றது. ஆனால் உங்களது இடது கை எப்பொழுதாவது வலதுகை மீது பொறாமை கொண்டு, “வலது கைதான் எப்போதுமே முக்கியமான பணிகளையெல்லாம் செய்கின்றது. எனக்கு எந்த ஒரு முக்கியமான பணியுமே கிடைப்பதில்லை” என்று சொல்லியதுண்டா? ஒருவேளை உங்களது வலது கையில் காயமேற்பட்டு, மாவு கட்டுப் போடப்பட்டுள்ளது என வைத்துக் கொள்வோம். அப்பொழுது இடது கையானது, “ஆஹா! முக்கியமான வேலைகளைச் செய்ய நல்ல சமயம் வாய்த்துவிட்டது” என்று சொல்லுமா? காசோலையில் இடது கையானது கையொப்பமிட்டால், அது வலது கையொப்பதை போலிராது. ஆகவே அது வங்கியில் செல்லாமற் போய்விடும். அப்படியானால், உங்களுடைய இடதுகை என்னதான் செய்யும்? அது வலது கை சீக்கிரத்தில் பழைய நிலைக்குத் திரும்பி, காசோலையில் கையொப்பமிட எல்லாவித உதவிகளையும் செய்து, அதற்கு உறுதுணையாய் இருக்கும். இவ்வண்ணமாகத்தான் கிறிஸ்துவின் சரீரமானது இயங்க வேண்டும். உங்களைவிட அதிக வரம் பெற்ற ஒரு சகோதரனை நீங்கள் காணும்போது, நீங்கள் எவ்வளவுதான் கடினமாக உழைத்தாலும், அவரது ஊழியத்திற்கு நிகராக முடியாது. ஏனெனில் அவருக்கு அந்த ஊழியம் தேவனால் தரப்பட்டதாகும். சரீரத்தில் ஓர் அவயவம் (வலதுகை) எல்லாக் காசோலைகளிலும் கையொப்பமிட்டால், அதுவே போதுமானதாகும். எங்கெல்லாம் கிறிஸ்துவின் சரீரத்தில் பொறாமையும், போட்டியும் தலையெடுக்குமானால், அங்குள்ள விசுவாசிகள் கிறிஸ்துவின் சரீரத்தைக் காணவில்லை என்பதே அதற்கான காரணமாகும்.

சில சமயங்களில் ஜனங்கள் என்னிடம், “சகரியா பூனன் சகோதரரே, நீங்கள் ஏன் எப்போதுமே, பரிசுத்தத்தைப் பற்றியும், சரீரத்தின் சமநிலை பற்றியுமே வலியுறுத்தி பேசிக் கொண்டிருக்கிறீர்கள்?” என்று கேட்டிருக்கின்றனர். நானும் அவர்களிடத்தில், “சிறுநீரகமானது ஏன் எப்போதுமே இரத்த ஓட்டத்தைச் சுத்திகரித்து, அதிலுள்ள வேதிப் பொருட்களைச் சமநிலைப்படுத்தும் பணியை மாத்திரமே மேற்கொண்டு, வேறெந்த பணியையும் செய்யாமல் இருக்கின்றது?” என்று ஒரு பதில் கேள்வி மூலமாக அவர்களுக்கு விடையளிக்கிறேன். ஏனெனில் அதற்கு தேவன் தந்த பணி அதுவாகும். அது செய்வது உடலின் முழுமையான வேலையாக இல்லாவிட்டாலும், அதனுடைய பணியானது முக்கியமான ஒன்றாகும். உங்களுடைய சிறுநீரகங்கள் செயலிழந்து விட்டால், உங்களுக்கு மரணமேற்படும். அதே வேளையில் சிறுநீரகமானது கை, வாய் ஆகியவற்றின் உதவியின்றி, எதுவும் செய்ய முடியாது. நாம் ஒருவருக்கொருவர் தேவைப்படுகிறோம். சுவிசேஷ ஊழியம் என்பது, கையானது ஓர் உருளைக் கிழங்கை எடுத்து, வாயினுள் போடுவதைப் போல, ஒரு அவிசுவாசியைக் கிறிஸ்துவிடம் கொண்டு வருவதற்கு ஒப்பாகும். ஆனால் அது போதுமா? இல்லை. ஓர் அவிசுவாசி கிறிஸ்துவிடத்தில் வந்த பிறகு, மேற்கொண்டு அவருடைய வளர்ச்சிக்கு வேறொருவர் பொறுப்பேற்க வேண்டியுள்ளது. அந்த உருளைக் கிழங்கானது பற்களால் மெல்லப்பட்டு, வயிற்றைச் சென்றடைகின்றது. அங்கு அது உடைக்கப்படுவதற்காக, அதன்மீது அமிலங்கள் ஊற்றப்படுகின்றன. கடைசியாக, அது பல செயல்முறைகளைத் தாண்டி பிறகு, மனித உடலின் ஓர் அங்கமாகி விடுகிறது. அதைப் போலவே ஒரு புதிய விசுவாசி உடைக்கப்பட வேண்டும். கிறிஸ்துவின் சரீரத்தின் பணிக்குப் பொருத்தமானவராக மாறுவதற்கு, அவர் சிறியவராக்கப்பட்டு, தாழ்மைப்படுத்தப்பட வேண்டும். இப்படித்தான் அவர் கிறிஸ்துவின் சரீரத்தில் ஒரு பயனுள்ள அங்கமாக மாறுகிறார்.

ஒருக்கால், அந்த உருளைக் கிழங்கானது செரிக்காமல், வாயிலேயோ, வயிற்றிலேயோ தங்கிவிட்டதாக வைத்துக் கொள்ளுங்கள். சற்று நேரத்தில் நீங்கள் அதை வாந்தி எடுத்துவிடுவீர்கள். எனவே சுவிசேஷகன் தான் அழைத்துக் கொண்டுவந்த புது விசுவாசியை, போதகனிடத்திலும், தீர்க்கதரிசியிடத்திலும், மேய்ப்பனிடத்திலும் ஒப்படைத்துவிட வேண்டும் (எபே 4:11). இந்த ஊழியங்களில் எது மிகவும் தேவைப்படுவதாக உள்ளது? வரங்களில் முதலாவது அப்போஸ்தலர், இரண்டாவது போதகர், மூன்றாவது தீர்க்கதரிசி என பலவிதமான படிநிலைகள் இருந்த போதிலும், அவ்வரங்கள் அனைத்துமே சம அளவில் தேவைப்படுபனவாக உள்ளன (1கொாி. 12:28). ஆகவே நாம் இன்னொருவரது ஊழியத்தைச் செய்ய முற்படக் கூடாது. அதற்கு பதிலாக, அவர்களுடன் ஒத்துழைக்க வேண்டும். நீங்கள் இந்த மிகப்பெரிய சத்தியத்தை ஒரு தடவை கண்டு விட்டால், அதன்பிறகு, அது உங்களை எல்லாவித பொறாமையிலிருந்தும், போட்டியிலிருந்தும், இளைப்பாறுதலின்மையிலிருந்தும் முழுவதுமாக விடுதலையாக்கிவிடும்.