WFTW Body: 

“கர்த்தருடைய ஆவியானவர் கிதியோன் மேல் ஓர் ஆடையைப்போல போர்த்தப்பட்டார்” என நியாயாதிபதிகள் 6:34 -ல் வாசிக்கிறோம். பரிசுத்த ஆவியானவர், கிதியோனின் மேல், அவன் உடை உடுத்துவதைப் போல இறங்கினார். அதன் பிறகு கிதியோன் வல்லமையைப் பெற்று, எக்காளம் ஊதி, யுத்தத்திற்குப் புறப்பட்டார். அவருடன் 32,000 பேர் யுத்தத்திற்குக் கிளம்பினர். ஆனால் கர்த்தரோ மிகுதியான ஜனங்கள் இருப்பதாகக் கூறிவிட்டார் (நியாயாதிபதிகள் 7:2). அவர்கள் அனைவருமே முழு இருதயங்கொண்டவர்களாய் இராதபடியினால், அவர்கள் போரிடுவதைத் தேவன் விரும்பவில்லை. எனவே பயப்படுகிறவர்களெல்லாரையும் வீட்டிற்குத் திரும்பிப் போய்விடும்படி கிதியோன் சொன்னார்.

அதையேதான் ஆண்டவரும் இன்று நம்மிடம் சொல்லுகிறார்: “நீ பிசாசைக் கண்டு அஞ்சுகிறவனா? வீட்டிற்குச் சென்றுவிடு. மற்றவர்கள் உன்னை ‘பெயல்செபூல்’ என்றும், ‘வேதபுரட்டன்’ என்றும், ‘கள்ளத் தீர்க்கதரிசி’ என்றும் சொல்லுகிறார்கள் என்று நீ பயப்படுகிறவனா? அப்படியானால் வீட்டிற்குப் போய்விடு. கர்த்தருக்கு ஊழியம் செய்கிறேன் என்று நேரத்தை வீணடிக்க வேண்டாம்.”

அந்நாளிலே 22000 பேர் வீட்டிற்குத் திரும்பிவிட்டனர். 10000 பேர் மீதியிருந்தனர் (நியாயாதிபதிகள் 7:3). இன்னும் ஜனங்கள் மிகுதியாய் இருக்கிறார்கள் என்று தேவன் சொன்னார். அவர்கள் முழு இருதயங்கொண்டவர்களல்ல. அவர்கள் தங்களுக்கானதைத் தேடுகிறவர்களாகையால், அவர்கள் நீக்கப்பட வேண்டியவர்கள். “அவர்களைத் தண்ணீரண்டைக்கு இறங்கிப் போகப்பண்ணு; அங்கே அவர்களைப் பரீட்சித்துக் காட்டுவேன்” என்று கர்த்தர் கூறினார் (நியாயாதிபதிகள் 7:4). அவர்கள் தண்ணீரண்டைக்கு வந்தவுடன், அவர்களில் அநேகர் எதிரியைப் பற்றியெல்லாம் மறந்து, தங்கள் தலைகளைத் தண்ணீருக்குள் புதைத்து, குடிக்க ஆரம்பித்துவிட்டார்கள். அநேகக் கிறிஸ்தவர்களும் அப்படித்தான் உள்ளனர். அவர்கள் இவ்வுலகத்தின் கவர்ச்சிகளைக் காணும்போது, ஆண்டவரையும், அவருடைய யுத்தங்கள் பற்றிய காரியங்களையெல்லாம் காற்றிலே பறக்க விட்டுவிட்டு, செல்வத்தைப் பின்தொடரும் இச்சையிலே தங்கள் தலைகளைப் புதைத்துக் கொள்கின்றார்கள். அன்றைய தினம், கிதியோனின் ராணுவத்திலே, 9700 பேர் தகுதி நீக்கம் செய்யப்பட்டனர்.

வெறும் 300 பேர் மாத்திரமே மிஞ்சினர். இந்த மனிதர்கள் அனைவரும், எச்சரிக்கையுடன் எதிரியின் நடமாட்டத்தை நோட்டமிட்டவர்களாய், அப்போதைய தாகத்தை மட்டும் தணித்துக் கொள்வதற்காகத் தண்ணீரைத் தங்களுடைய கைகளில் அள்ளிப் பருகினர். பணத்தையும், உலகப் பொருட்களையும் பயன்படுத்துகிறவர்களாகவும், அவை தங்களை முழுவதுமாய் ஆட்கொள்ளுவதற்கு இடங்கொடாதவர்களாயும் இருக்கிற இன்றைய விசுவாசிகளுக்கு அவர்கள் ஒப்பாக உள்ளனர். அப்படிப்பட்ட விசுவாசிகள் தங்களுடைய ஜீவனத்திற்காக உண்மையாய் உழைத்துச் சம்பாதித்து, மீதியான நேரத்தை ஆண்டவருக்கென்று ஏதேனும் செய்கிறவர்களாய் இருக்கிறார்கள். “இவர்கள்தான் எனக்குத் தேவை” என்று தேவன் சொல்லுகின்றார். 32000 பேரில் 1 சதவீதத்திற்கு குறைவான எண்ணிக்கை கொண்ட 300 பேர் மாத்திரமே அன்று ராணுவத்தில் இருக்கத் தகுதி பெற்றிருந்தனர். ஜீவனுக்குப் போகும் வழி குறுகலாகவும், அதைக் கண்டுபிடிப்பவர்கள் சிலராகவும் இருப்பதால், சதவீதமானது எப்போதுமே குறைவாகத்தான் இருக்கும். 600,000 பேருக்கு 2 நபர் என்ற விகிதத்திலேதான், யோசுவாவும், காலேபும் வாக்குத்தத்த பூமியை அடைந்தனர். ஆனால் அந்த கொஞ்சம் பேரில் ஆண்டவர் சந்தோஷமாய் இருந்தார்.

கிதியோன் தன்னுடைய ராணுவத்தை, படைக்கு 100 பேர் வீதம் மூன்று படைகளாகப் பிரித்தார் என்று 7:16 -ல் வாசிக்கிறோம். ஒவ்வொருவனும் ஒரு எக்காளத்தையும், வெறும் பானையையும், அந்த பானைக்குள் வைக்கும் தீவட்டியையும் எடுத்துச் சென்றனர். தீவட்டி வெளிச்சம் வெளியே தெரியும்படிக்கு, அவர்கள் பானையை உடைத்து, எக்காளத்தை ஊதினர். நம்முடைய ஜீவியமும், ஊழியமும் எவ்வாறு இருக்க வேண்டும் என்று சித்தரித்துக் காட்டுகிற படமாக இது விளங்குகின்றது. நாமனைவரும் மண்பானைகளாக இருக்கிறோம். ஆனால், ”நாமோ தேவனுடைய மகிமை என்னும் பொக்கிஷத்தை இந்த மண்பாண்டங்களில் பெற்றிருக்கிறோம்” (2கொரி 4:6,7). மற்றவர்கள் நம்மிடத்தில் வெளிச்சத்தைக் காணும் முன்பாக, இந்த மண்பாண்டமானது, “இயேசுவின் மரணத்துக்கொத்த” பலவிதமான பாடுகளினால் உடைக்கப்பட வேண்டியதாக உள்ளது (2கொரி 4:7-11). இல்லையெனில், வெளிச்சமானது என்றென்றும் நமக்குள்ளேதான் புதைந்து கிடக்கும். இதை எழுதும்போது, கிதியோனின் ராணுவமானது மண்பானைகளுக்குள் தீவட்டியை ஏந்திச் சென்றதையும், அவை உடைக்கப்பட்ட போதுதான் உள்ளிருந்த வெளிச்சத்தை மற்றவர்களால் காண முடிந்தது என்பதையும் பவுல் நினைத்துக் கொண்டிருந்தார். நமக்குள்ளிருக்கும் கிறிஸ்துவின் ஜீவனின் ஒளியானது, வெளியிலே பிரகாசிக்க வேண்டுமென்பதற்காகத்தான், தேவன் நம்மைப் பலவிதமான சூழ்நிலைகளின் மூலமாக உடைக்க விரும்புகிறார். எக்காளம் ஊதுதல் என்பது, கர்த்தரின் மகிமையையும், அவரது வார்த்தையையும் வெட்கமின்றி அறிவிப்பதைக் குறிக்கும் படமாகும். இத்தகைய புருஷரையும், ஸ்திரீகளையும் கர்த்தர் இன்று தேடிக் கொண்டிருக்கிறார்.

முன்னதாக, கிதியோன் யுத்தத்திற்குச் செல்லும் முன், “போகப் பயப்பட்டாயானால், முதலில் நீயும் உன் வேலைக்காரனாகிய பூராவும் சேனையினிடத்திற்குப் போய், அங்கே என்ன பேசுகிறார்கள் என்று கேள்” என்று கிதியோனிடம் சொல்லியிருந்தார் (நியாயாதிபதிகள் 7:10,11). கிதியோன் அங்கே சென்ற போது, அவர்கள் யாவரும் தன்னைக் குறித்தும், தன்னுடைய கூட்டாத்தரைக் குறித்தும் பயந்திருப்பதாகப் பேசிக் கொண்டதைக் கேட்டார். நீங்களும் இன்று பிசாசின் பாளையத்திற்குச் சென்று கவனித்துக் கேட்பீர்களானால், அங்கே இயேசுவையும், அவரைப் பின்பற்றுகிறவர்களையும் கண்டு அவர்கள் (பிசாசு) மிரண்டு கிடப்பதைக் கேட்க முடியும். சாத்தானுக்கு எதிராக யுத்தம் செய்ய நமக்கு உத்வேகத்தை அது கொடுக்க வேண்டும். பிசாசானவன் இயேசு கிறிஸ்துவைக் கண்டு அஞ்சுகிறான். நாம் அவருடைய மெய்யான சீஷர்களாய் இருப்போமானால், நம்மைக் கண்டும் அஞ்சுவான். ஆகவே அவன் நம்மைப் பயமுறுத்தும் போதெல்லாம், அவன் வெறும் வெட்டி வீராப்புப் பேசுகிறான் என்று சொல்வோமாக.