WFTW Body: 

நீதிமொழிகள் 4:12(பொழிப்புரை), தேவன் ஒவ்வொரு நாளும் படிப்படியாக உங்களுக்கு முன்பாக வழியைத் திறப்பார், என்று கூறுகிறது. நீங்கள் உங்களுக்கு முன்னதாக இரு படிகளைத் தாண்டி அங்கே என்ன உள்ளது என்று அறிந்து கொள்ள வேண்டிய அவசியமில்லை. இப்புதிய ஆண்டிலே, ஒவ்வொரு நிலையிலும், உங்களுடைய கண்களுக்குத் தெரியும் அடியிலே காலெடுத்து வையுங்கள். அதன் பிறகு அடுத்த அடி எதுவென்று உங்களுக்குத் தெரிந்து விடும். தேவன் இப்படித்தான் உங்களை நடத்துவார். உங்களுக்கு முன்பாக எல்லாக் கதவுகளும் மூடப்பட்டது போலத் தோன்றலாம். ஆனால் நீங்கள் அவற்றை நெருங்க, நெருங்க அவைத் தானாகவே திறந்து கொள்ளும். ஆனால் நீங்கள் அவற்றிற்குக் கிட்ட நெருங்கும் வரை அவைத் திறக்காது. அப்படித் தான் தேவன் உங்களை நடத்திச் செல்வார். ஆகவே உங்களுக்கு முன்பாகப் பூட்டப்பட்ட கதவை நீங்கள் காணும் போது, அதினிமித்தம் நீங்கள் தயக்கமோ, பயமோ கொள்ள வேண்டாம். தேவன் உங்களுக்குக் காட்டும் அடியின் மேல் கால் வைத்து முன்னேறுங்கள். "இதோ, ஒருவனும் பூட்டாத திறந்த வாசலை உனக்கு முன்னதாக வைத்து இருக்கிறேன்" (வெளி 3:8) என்று கர்த்தர் உரைக்கிறார்.

தேவன் உங்களுடைய பாதையைப் பிரகாசத்திற்கு மேல் பிரகாசமாக்குவார் என்று நீதிமொழிகள் 4:18-ல் எழுதப்பட்டுள்ளது. இங்கு மறுபிறப்பு என்பது சூரியோதயமாகவும், கிறிஸ்துவின் வருகையானது நண்பகல் சூரியனாகவும் ஒப்பிட்டு உருவகப்படுத்தப்படுகின்றது. உங்களுடைய வாழ்க்கையில் நீங்கள் மறுபிறப்பு அடைந்தது முதற்கொண்டு, கிறிஸ்து மறுபடியும் வரும்வரைக்கும், நாளொரு மேனியும், பொழுதொரு வண்ணமுமாய் நீங்கள் கிறிஸ்துவைப் போல மாறிக்கொண்டே இருக்க வேண்டும் என்பதுதான் தேவசித்தமாக உள்ளது. இதுதான் நீதிமான்களின் பாதையாகும். இப்பாதையிலே நீங்கள் தேவனுடைய வார்த்தையிலிருந்து அதிகமதிகமாய் வெளிப்பாடுகளைப் பெறுவீர்கள்; உங்களுடைய சுய வாழ்க்கையின் அவலத்தைக் குறித்த வெளிச்சத்தைப் பெறுவீர்கள்; நீங்கள் சந்திக்கும் நடைமுறைச் சூழ்நிலைகளுக்கு வேண்டிய ஞானத்தை அதிகதிகமாகப் பெற்றுக் கொள்ளுவீர்கள். நீங்கள் இந்தப் பாதையில் பயணிப்பீர்களானால், ஆகாயத்தில் முன்னோக்கி நகரும் சூரியன் எப்படிப் பின்னோக்கி ஒரு போதும் நகருவதில்லையோ, அது போலவே நீங்களும் ஒரு போதும் பின் மாற்றம் அடையமாட்டீர்கள்.

நீங்கள் முதலாவதாக தொழுது கொள்ளுகிறவர்களாய் இருபதற்காகத்தான் தேவன் உங்களை அழைத்திருக்கிறார். நீங்கள் தேவனிடம் மட்டுமே வாஞ்சையுடையவர்களாய் இருக்க வேண்டும் என்பதுதான் அதற்கு அர்த்தமாகும். அப்படி இருந்தால் ஏசாயா எப்படி தேவ மகிமையைக் கண்டு, உடனடியாகத் தன்னைப் பற்றிய பாவ உணர்வைப் பெற்றானோ, அதைப் போலவே நீங்களும் பெறுவீர்கள் (ஏசாயா 6:1-5). உங்கள் வாழ்க்கையில் கிறிஸ்துவைப் போலல்லாத பகுதிகளையெல்லாம் தேவன் உங்களுக்கு வெளிப்படுத்தும் போது, அவற்றிலிருந்து உங்களைச் சுத்திகரித்துக் கொண்டு, ஒரு தொழுகைக்காரனாக மாறுங்கள். அப்பொழுது தேவன் இவ்வருடத்தின் ஒவ்வொரு நாளிலும், அவருடைய சுபாவத்திலே பங்கடையச் செய்வார். இப்பொழுது தேவனுடைய வார்த்தையில் இயேசுவின் மகிமையை நாம் காணும்பொழுது, பரிசுத்த ஆவியானவர் நம்மை மகிமையின்மேல் மகிமையடைய மறுரூபப்படுத்தி, ஒவ்வொரு நாளும் இயேசுவின் மகிமையை நம்மிலே அதிகரிக்கச் செய்கிறார் (2கொரிந்தியர் 3:18). வேறுவிதமாகக் கூறினால், நாம் முழுமையாக ஆவியானவருக்கு நம்மை அர்ப்பணித்திருந்தால், ஒரு சில ஆண்டுகளுக்கு முன்பாக நம்முடைய வாழ்வில் அபிஷேகம் இருந்ததைவிட இன்று அதிகமாக இருக்கும், 30 ஆண்டுகளுக்கு முன்பாக இருந்ததைவிட இன்று மிகவும் அதிகமாக இருக்கும்.

நாம் ஒவ்வொரு நாளும் தேவ சித்தம் செய்பவர்களாக இருந்தால், அனுதினமும் தேவனைக் கவனித்துக் கேட்கும் வழக்கத்தை வளர்த்துக் கொள்ள வேண்டும். இயேசு மரியாளைப் பற்றிச் சொன்னதைப் போல (லூக்கா 10:42), அவருடைய வார்த்தையைக் கேட்பதுதான், எல்லாவற்றைக் காட்டிலும் தேவையான ஒன்றாகும். தேவன் தினந்தோறும் தம்முடைய வார்த்தையைப் பேசினார் என்றும், அதன் விளைவாக பூமியானது தினந்தோறும் கொஞ்சம் கொஞ்சமாக மறுரூபம் அடைந்து வந்ததாகவும் வேதத்தின் முதல் அதிகாரத்திலேயே வாசிக்கிறோம். இந்த ஆண்டிலே நாம் கிறிஸ்துவின் சாயலிலே மறுரூபப்பட வேண்டுமென விரும்பினால், தேவனிடத்தில் கவனித்துக் கேட்பதும், அவருக்குக் கீழ்ப்படிவதும்தான் நமக்கு தேவைப்படும் முக்கியமான காரியமாகும். எல்லாவற்றிற்கும் மேலாகக் கர்த்தரோடு ஒரு நெருங்கிய உறவை வைத்துக்கொள்ளுவதுதான் வேதத்தைப் புரிந்து கொள்ளுவதற்கான இரகசியமாகும். தேவனுடைய வார்த்தை பரிசுத்த ஆவியானவரால் அருளப்பட்டிருக்கிறபடியால், அவரே அதன் அர்த்தத்தை நன்றாக விளக்கிக் காட்ட முடியும். எனவே, ஆதி சீஷர்கள் இயேசுவோடு நடந்தது போலவே நீங்களும் அவருடன் நடந்து, அவர் பேசுவதைக் கேட்க ஏக்கங்கொள்ளுங்கள். அப்பொழுது அவர்களைப் போலவே உங்களுடைய கண்களும் திறக்கப்படும்; உங்களுடைய இருதயமும் அவர்களுடையதைப் போலவே கொழுந்துவிட்டு எரியும்.

நாம் அனுதினமும் அதிகமாய்ப் பயன்படுத்தும் நம்முடைய சரீரத்தின் ஒரு அவயம் நம்முடைய நாவாகும். இயேசு மற்றவர்களை உற்சாகப்படுத்துவதற்காகத் தமது நாவைப் பயன்படுத்தினார். இப்படியாக அவர் அதை ஜீவன் தரும் கருவியாக தேவனுடைய கரங்களில் கொடுத்தார். இளைப்படைந்து, ஆவியிலே கனத்துப் போயிருந்தவர்களிடத்திலே அவர் ஆற்றித் தேற்றும் வார்த்தைகளைப் பேசி, அவர்களைத் தூக்கிவிட்டார். இயேசு நாள்தோறும் பிதாவின் சத்தத்தைக் கவனித்துக் கேட்டபடியால்தான், தமது பாதையில் குறுக்கிட்ட ஒவ்வொரு இளைப்படைந்த ஆத்துமாக்களுக்கு சொல்ல சமயத்துக்கேற்ற வார்த்தையைப் பெற்றிருந்தார் என ஏசாயா 50:4-ல் வாசிக்கிறோம். இந்தப் புத்தாண்டின் ஒவ்வொரு நாளிலும், நாமும் நம்மைச் சுற்றி களைப்படைந்த ஆத்துமாக்களுக்கு உதவிடும் இத்தகைய பாக்கியமான ஊழியத்தைப் பெற்றிட முடியும். ஆனால் நாம் தினந்தோறும் அவரைக் கவனித்துக் கேட்கும் பழக்கத்தை வளர்த்துக் கொண்டால் மாத்திரமே இது சாத்தியமாகும். நாம் நம்முடைய அன்றாட உரையாடல்களில் வெளிப்படும் தீழ்ப்பானவற்றையெல்லாம் பிரித்தெடுத்து, விலையேறப்பெற்றவைகளை மட்டுமே பேசுவோமானால், தேவன் அவருடைய வார்த்தைகளை நமக்குத் தந்து, எரேமியாவை போலவே நம்மையும் அவருடைய வாயாக்குவார் (எரேமியா 15:19).