பூரணத்தை நோக்கிக் கடந்து போவதைப் பற்றி, எபிரேயர் நிருபத்தை ஆக்கியோன் குறிப்பிடும் காரியங்களை 6:1-3 வசனங்களில் நாம் காண்கிறோம். 5-ஆம் அதிகாரத்தில், பால் உண்பதையும், மாமிசம் புசிப்பதையும் அவர் உதாரணங்களாக உபயோகிக்கிறார். அதைத் தொடர்ந்து அவர் இன்னும் இரண்டு உதாரணங்களைப் பயன்படுத்தியும் விளக்குகிறார். மூல உபதேசம் மற்றும் தேறின உபதேசம் பற்றிய உதாரணத்தையும், ஒரு கட்டடத்தின் அஸ்திபாரம் மற்றும் மேற்கட்டுமானம் பற்றிய உதாரணத்தையும் குறிப்பிட்டு விளக்குகிறார். இந்த உவமானங்கள் எல்லாம் குழந்தைகளுக்கும், தேறினவர்களுக்கும் இடையே உள்ள வேறுபாட்டைக் காண்பிக்கவே எழுதப்பட்டவையாகும். சோதனை நேரங்களிலே இவை இரண்டிற்கும் உள்ள வித்தியாசம் நமக்கு நன்கு புலனாகின்றது. சோதனை வேளையில், ஒரு முதிர்ந்த பரிசுத்தவான் கிறிஸ்துவைப் போல நடந்துகொள்ளுவான்; ஆனால் குழந்தையாக இருப்பவர்கள் மனுஷீகமாக நடந்து கொள்ளுவார்கள்.
பெருவாரியான விசுவாசிகள் தெய்வீகமான முறையில் நடந்து கொள்ளாமல், மனுஷீகமாகவே நடந்து கொள்ளுகிறார்கள். இந்த விஷயத்தில் நம்மைநாமே ஆராய்ந்து பார்ப்போமாக. எடுத்துக்காட்டாக, நீங்கள் மற்றவரோடு அமர்ந்திருக்கும்போது, நீங்கள் யாரோ ஒருவரைக் குறித்து சொல்லும் ஜோக்கானது, அவரை தர்மசங்கடத்திற்குள்ளாக்குகின்றது என வைத்துக் கொள்ளுங்கள். அது போன்ற சமயங்களில், இயேசு இதுபோன்ற ஜோக்குகளை சொல்லி இருப்பாரா என்று உங்களை நீங்களே கேட்டுப் பார்த்தது உண்டா? இப்படியெல்லாம் நீங்கள் உங்களைக் கேட்டுப் பார்க்காதவராயிருந்தால், நீங்கள் மனுஷீகமாய் நடப்பதிலிருந்து விடுபடுவதற்கான வாய்ப்பே இல்லை. நீங்கள் காலமெல்லாம் ஒரு குழந்தைக் கிறிஸ்தவராகவே இருப்பீர்கள். ஒவ்வொரு நாளும் நாம் சந்திக்கும் பல்வேறு சூழ்நிலைகளிலும், நம்முடைய செயல்களும், எதிர்ச்செயல்களும் கிறிஸ்து செய்வதைப் போன்றே உள்ளதா என்று நம்மை நாமே பரிசோதித்துக் கொள்ளுவது நல்லது. இப்படியெல்லாம் நீங்கள் உங்களைச் சோதித்துப் பார்க்கவில்லையானால், உங்களால் ஒருபோதும் வளரவே முடியாது. நீங்கள் கட்டடத்தின் மேற்கட்டுமானத்தைக் கட்டாதவர்களாய், என்றென்றும் அஸ்திபாரத்திலேயே இருந்துவிடுவீர்கள். நீங்கள் என்றென்றுமாக வெறும் பாலை மாத்திரம் குடித்துக்கொண்டு, மழலையர் பள்ளியிலேயே இருப்பீர்கள். ஆனால் நீங்கள் பரிசுத்த ஆவிக்குச் செவிசாய்த்து, ஆவிக்குரிய கல்வியிலே தேறின நிலைக்கு முன்னேற வேண்டும் எனச் சிரத்தையுடன் செயல்பட்டால், வெகு சீக்கிரமே தேறினவர்களாய் மாறிவிடுவீர்கள்.
நாம் இதை ஒரு உவமையின் மூலமாகப் பார்க்கலாம். பூரணத்தை நோக்கிக் கடந்து போவதை நீங்கள் 10000 மீட்டர் உயரமுள்ள ஒரு மலையின் மீது ஏறுவதாக வைத்துக் கொள்வோம். இயேசு ஏற்கனவே அம்மலை உச்சியின் மீது ஏறிவிட்டார். ஆகவே நம்முடைய இலக்கானது இயேசுவைப் பின்தொடர்ந்து, பூரணத்தை அடைய எவ்வளவு காலமானாலும், அதை நோக்கி கடந்து போவதாகவே இருக்க வேண்டும். அப்படி இருக்கும் பட்சத்தில், நாம் வெறும் 100 மீட்டர் மாத்திரமே ஏறி இருந்தாலும், நம்முடைய இளைய சகோதர, சகோதிரிகளைப் பார்த்து, "நான் கிறிஸ்துவைப் பின்பற்றுவதைப் போல நீங்கள் என்னைப் பின்பற்றுகிறவர்களாய் இருங்கள்" (1 கொரி 11:1) என்று சொல்லலாம்.
அஸ்திபாரம் என்றால் என்ன? பால் என்றால் என்ன? பாலர் பள்ளியில் நாம் கற்றுக் கொள்ளுவது என்ன? முதலாவது மனந்திரும்புதலாகும் (எபி 6:1). பாவத்தை விட்டுத் திரும்புவது மட்டுமில்லாமல், செத்த கிரியைகளையும் விட்டுத் திரும்புவது என்பதே அதன் அர்த்தமாகும். பழைய உடன்படிக்கையின் கீழாக இருந்த மக்களுக்கு நல்ல கிரியைகள், கெட்ட கிரியைகள் என்ற இரண்டு கிரியைகள் மாத்திரமே இருந்தன. ஆனால் புதிய உடன்படிக்கையின் கீழ் வாழும் நமக்கு நல்ல கிரியைகள், கெட்ட கிரியைகள் மற்றும் செத்த கிரியைகள் என மூன்று கிரியைகள் உள்ளன. செத்த கிரியைகள் என்பது நல்ல கிரியைகளை கெட்ட நோக்கத்துடன் செய்வதாகும். எடுத்துக்காட்டாக, தேவனுடைய வார்த்தையைப் பிரசங்கிப்பது ஒரு நல்ல கிரியைதான். ஆனால் அதை ஒருவர் பணத்துக்காகவோ, கனத்துக்காகவோ செய்தால், அது செத்தக் கிரியையாக மாறிவிடுகின்றது. நாம் தேவனுடைய வேலைக்காகப் பணத்தைக் கொடுக்கும் போதோ அல்லது அதுபோன்ற வேறு ஏதாவது கிரியையைச் செய்யும் போதோ, சந்தோஷமில்லாமல் செய்தால், அது செத்த கிரியையாகி விடுகின்றது. இப்படி பல உதாரணங்களைச் சொல்லலாம். நீங்கள் விசுவாசமும், சந்தோஷமும் இல்லாமல் செய்யும் எதுவுமே செத்த கிரியைதான். ஒருவேளை அது பிறருக்கு நன்மை பயக்கின்ற காரியமானாலும், அது செத்த கிரியைதான். இப்படிப்பட்ட செத்த கிரியைகளிலிருந்து நாம் மனந்திரும்ப வேண்டியது அவசியமாகும். நம்முடைய சுயநலமான நோக்கங்களிலிருந்து நாம் மனந்திரும்ப வேண்டியது அவசியமாகும்.
இயேசுவின் மீது வைக்கும் விசுவாசம், தண்ணீர் ஞானஸ்நானம், பரிசுத்த ஆவியின் ஞானஸ்நானத்தைப் பெறுதல், ஆவிக்குரிய வரங்களைப் பெறுதல் (கைகளை வைக்குதல்), கிறிஸ்துவின் வருகையில் மரித்தோர் உயிருடன் எழுதலின் மீது விசுவாசம் வைத்தல், கடைசி நியாயத்தீர்ப்பிற்கு ஆயத்தப்படுதல் ஆகியனவெல்லாம் அஸ்திபாரத்தின் பிற பகுதிகளாகும் (2 கொரி 5:10). இவையாவும் மழலையர் பள்ளிப் பாடங்களாகும். இந்தக் காரியங்களையே இறுகப் பற்றிக் கொண்டிருக்கும் கிறிஸ்தவர்கள் எல்லாம் இன்னும் மழலையர் பள்ளியிலேதான் இருக்கின்றனர். அவர்களுடைய வீடு அஸ்திபார மட்டத்தில்தான் உள்ளது. நாம் இதிலிருந்து முதிர்ச்சியையும், பூரணத்தையும் நோக்கிக் கடந்து போக வேண்டும். நாம் நம்முடைய வாழ்க்கையின் எல்லாப் பகுதிகளிலும் அதிகதிகமாக இயேசுவைப் போலாக வேண்டும்.
பாலை மட்டுமே உண்ணுவதைத் தாண்டி திட உணவை உண்பது, அஸ்திபாரத்தைத் தாண்டி மேற்கட்டுமானத்தைக் கட்டுவது, பாலர் பள்ளியைத் தாண்டி உயர் வகுப்புக்களை அடைவது ஆகிய நிலைகளை நோக்கிக் கிறிஸ்தவர்கள் கடந்து போக வேண்டும் என்பதுதான் எபிரேயர் நிருபத்தை ஆக்கியோனின் பாரமாகும். நம்முடைய பூமிக்குரிய வாழ்க்கையை எடுத்துக் கொண்டால், நம்மில் ஒருவர்கூட என்றென்றும் ஒரு குழந்தையாகவே இருந்துவிட விரும்புவதில்லை. மழலையர் பள்ளிக் கல்வியுடனேயே படிப்பை நிறுத்திவிட எவரும் விரும்புவதில்லை. அஸ்திபார மட்டத்திலேயே கட்டடத்தை நிறுத்திவிட எவரும் விரும்புவதில்லை. இருப்பினும் அநேக விசுவாசிகள் இந்த நிலையிலேயே திருப்தி அடைந்துவிட்டதாகவே தோன்றுகிறது. அநேக பிரசங்கிகளும், பாஸ்டர்களும் கூட குழந்தைகளாகவே உள்ளனர். அதன் விளைவாக அவர்களுடைய சபைகளெல்லாம் குழந்தைகளால் நிரம்பி உள்ளன.
"பூரணராகும்படி கடந்து போவோமாக" என்று எபிரேயர் 6:2-ல் சொல்லப்படுகின்றது. நாம் மூல உபதேசங்களை மாத்திரமே இறுகப் பிடித்துக் கொண்டிருப்போமானால், நம்முடைய பிரசங்கங்களின் மூலமாக வெறும் குழந்தைகளை மட்டுமே நாம் உற்பத்தி செய்வோம். ஜனங்களின் பாவங்கள் மன்னிக்கப்படுதல் என்பது புதிய உடன்படிக்கையின் பிரதான செய்தியல்ல. காரியம் அப்படியாய் இருந்திருந்தால், வார்த்தையானது, "நாம் இன்னும் அதிகமான குழந்தைகளை உற்பத்தி செய்வோம்" என்று சொல்லியிருக்கும். ஆனால் நாமோ பூரணராகும்படி கடந்து போக வேண்டுமென அறிவுறுத்தப் படுகிறோம். ஒவ்வொரு குழந்தையும் முதிர்ச்சியை நோக்கி வளர வேண்டும்.
சபைகளெல்லாம் குழந்தைகளால் நிறைந்திருப்பதினால்தான், அங்கே பலவிதமான சண்டை சச்சரவுகளும், நீதிமன்ற வழக்குகளும், தலைவர்கள்கூட விபச்சாரத்தில் வீழ்வதும், பணத்தின் பின்னாக ஓடுவதும், ஒருவருக்கொருவர் சண்டை பண்ணுவதுமான காரியங்கள் காணப்படுகின்றன. குழந்தைகள் எப்பொழுதுமே சண்டையிட்டுக் கொள்வர். நாம் முதிர்ச்சிக்கு நேராக வளரும்போது, சண்டையிட மாட்டோம்; சபையிலே பதவியையோ, கனத்தையோ இச்சிக்க மாட்டோம். நீங்கள் சபையிலே பதவிக்காக அல்லது கனத்திற்காக சண்டை பண்ணினாலோ, அல்லது அவற்றை இச்சித்தாலோ, நீங்கள் இன்னமும் குழந்தையாகத்தான் இருக்கிறீர்கள். துரதிர்ஷடம் என்னவெனில், இன்றைய கிறிஸ்தவ வட்டாரத்தில் உள்ள பல தலைவர்கள் இன்னும் குழந்தைகளாகவே உள்ளனர். குழந்தைகளைக் கொண்டு சபையைக் கட்டுவதென்பது, ஒரு கட்டடத்தைக் கட்டும் போது வெறும் அஸ்திபாரத்தை மாத்திரம் போட்டுவிட்டு, கூரையையும், சுவர்களையும் கட்டாமல் விட்டுவிடுவதற்குச் சமமாகும்.