WFTW Body: 

உங்களுக்கேற்ற மிகச் சிறந்த வாழ்க்கைத் துணையைத் தேர்ந்தெடுக்கும்படிக்கு உங்களை வழிநடத்துவதற்குத் தேவனால் மாத்திரமே முடியும். உண்மை என்னவென்றால், நீங்கள் விரும்பினால் உங்களை நடத்துவதற்கு அவர் மிகுந்த ஆவல் கொண்டுள்ளார். அவருடைய பிள்ளைகள் ஒவ்வொருவரைக் குறித்தும் அவர் ஒரு திட்டம் வைத்துள்ளதாக வேதம் நமக்குப் போதிக்கின்றது (எபே 2:10). அதை உண்மையென்று நீங்கள் விசுவாசிக்கும் பட்சத்தில், நீங்கள் திருமணம் செய்து கொள்ள வேண்டுமா, வேண்டாமா என்பதும் ஏற்கனவே தீர்மானிக்கப்பட்டுவிட்டது என்பதையும் நீங்கள் விசுவாசிக்க வேண்டும். நீங்கள் திருமணம் முடிக்க வேண்டுமென அவர் தீர்மானித்திருந்தால், அந்த நபர் யாராயிருக்க வேண்டுமெனவும் அவர் திட்டம் வைத்திருப்பார் என்பதிலும் சிறிதளவும் ஐயமில்லை. காரியங்கள் எல்லாம் இப்படி இருந்தாலும், தேவன் யாரையுமே தனக்குக் கீழ்ப்படிந்துதான் ஆக வேண்டும் என்று கட்டாயப்படுத்துவது இல்லை. இக் காரணத்தால், ஒருவர் வெகு எளிதாக தேவ திட்டத்தை நிராகரிக்கவோ, புறக்கணிக்கவோ செய்து, அதன் விளைவாக தேவ சித்தத்திற்கு அப்பாற்பட்டு திருமணம் செய்து கொள்ள முடியும்.

யாரை வாழ்க்கைத் துணையாய்த் தேர்ந்தெடுக்க வேண்டுமென்னும் காரியமானது, உங்களுடைய ஆத்தும இரட்சிப்புக்கு அடுத்தபடியாக எடுக்க வேண்டிய இன்றியமையாத தீர்மானமாக அமைந்துள்ளது. இதில் தவறேதும் நடக்க இடம் தந்துவிடவே கூடாது. ஏனெனில் நீங்கள் எடுக்கும் இத்தீர்மானம் மட்டுந்தான் உங்கள் வாழ்நாள் முழுவதிலும் ஒருபோதும் மாற்ற இயலாத தீர்மானமாகும். நீங்கள் ஒரு தொழிலைத் தேர்ந்தெடுப்பதிலே ஏதேனும் தவறிழைத்துவிட்டால், அதை உங்களால் சரிசெய்துவிட முடியும்; அது போலவே வாழ்க்கையில் நீங்கள் செய்யும் வேறுபல தீர்மானங்களையும் உங்களால் மாற்றிக் கொள்ள முடியும். ஆனால் நீங்கள் திருமண விஷயத்திலே தேவசித்தத்திற்கு மாறாக ஒருவரைத் தேர்ந்தெடுத்து விட்டால், அத்தவறை ஒருபோதும் சரி செய்யவே முடியாது; ஒருவேளை உங்களுடைய சீரிய முயற்சியின் மூலமாக தவறான தெரிவிலிருந்து மிகச் சிறந்ததைப் பெற்றுக் கொள்ள முடியும். திருமணத்திலே தேவசித்தத்தைத் தவறவிடுவது நிச்சயமாகவே ஒரு சோக நிகழ்வுதான். தேவனுடைய நேரத்திற்காகக் காத்திராமல், அவருடைய சித்தத்தைத் தேடாமல், அவசரகதியில் திருமணத்தில் இணைந்தவர்களெல்லாம் இன்று சாவகாசமாக மனந்திரும்பிக்கொண்டிருக்கிறார்கள். இவர்களெல்லாம் இந்தப் பகுதிக்குள் கவனத்துடன் காலடி எடுத்து வைத்துக் கொண்டிருக்கிற இளம்பருவத்தினருக்கு, ஓர் எச்சரிக்கையூட்டும் மாதிரிகளாகவே உள்ளனர்.

தேவசித்தத்திற்கு மாறாக திருமணம் செய்வதைவிட தனியாளாய் இருப்பதே நலம். திருமணத்தில் தேவனுடைய பூரண சித்தத்தைத் தவறவிட்டுவிட்டு, பிற்காலத்தில் அந்தத் தவறுக்காக மனந்திரும்புகிறவர்கள்மீது அவர் ஒருவேளை இரக்கம் காட்டலாம். ஆனாலும் தேவனுடைய பூரண சித்தத்திலே நிலைகொண்டிருக்கும் போதுதான் மெய்யான சந்தோஷமும், பாக்கியமும் கிட்டும்.

தேவ மகிமைக்காகவும், நம்முடைய மிகப்பெரிய நன்மைக்காகவும் தேவன் தெரிந்தெடுத்து வைத்துள்ள நபரைக் கண்டுபிடித்து அவனை/அவளை மணப்பது மிக இன்றியமையாத ஒன்றாகும். தேவன் ஆதாமுக்கு ஒரு துணையை ஏற்பாடு செய்த போது, அவனுக்கு முன்பாக பத்துப் பெண்களை நிறுத்தி, அவர்களில் அவனுக்கு மிகவும் பிடித்த ஒருத்தியைத் தெரிந்துகொள்ளச் சொல்லவில்லை. ஒரே ஒருத்தியை உண்டுபண்ணி, அவளை அவனிடம் கொடுத்தார். இந்த விஷயத்தில் ஆதாமுக்குத் தெரிவு செய்வதற்கான வாய்ப்பு வழங்கப்படவில்லை. அதே தேவன் இன்றும் அவருக்குக் கீழ்ப்படியும் ஒவ்வொரு பிள்ளைக்கும் ஒரேயொரு நபரைத்தான் திட்டம் பண்ணி வைத்துள்ளார். இந்த போதனையைப் புரிந்துகொள்ளுவது சிரமமாக இருக்கலாம். இந்த உபதேசமானது நாம் புரிந்து கொள்ளுவதற்குக் கடினமாய் உள்ள தேவனுடைய ராஜரீகத்தையும் (sovereignty), மனுஷனுடைய தெரிந்துகொள்ளும் சுயாதீனத்தையும் (free will) பற்றிய உபதேசத்தைப் போலவே கடினமானதாகும். எப்படியாயினும் இவையெல்லாம் வேதத்திலுள்ள உபதேசங்களாகும். தேவத்திட்டத்தை நாம் ஏற்றுக் கொண்டால், தேவனால் நமக்கென்று தெரிந்தெடுக்கப்பட்ட நபர்தான் நமக்கு மிகப் பொருத்தமானவர் என்பதைக் கண்டுகொள்ளுவோம். ஆதாமுக்கு ஏவாள் இருந்தது போலவே, அந்த நபர் நம்முடைய குறைவை நிறைவாக்குபவராக இருப்பதைக் காணலாம்.

ஈசாக்கிற்கு மணப்பெண் தேடப் போன ஆபிரகாமின் வேலைக்காரனுக்கு இவ்வுண்மை தெரிந்திருந்தது. ஆதலால் அவன், "கர்த்தாவே, ஈசாக்கிற்கு ஏற்ற ஒரு வரனைத் தேர்ந்தெடுக்கும்படிக்கு ஒரு சில ஸ்திரீகளிடத்திற்கு என்னை நடத்திச் செல்லும்" என்று ஜெபிக்கவில்லை. அதற்குப் பதிலாக அவன், "கர்த்தாவே, நீர் ஈசாக்குகென்று நியமித்து, தெரிந்து கொண்ட பெண்ணிற்கு நேராக என்னை நடத்தியருளும்" (ஆதி 24:14,44) என்றே ஜெபித்தான். தேவன் அவனுக்குப் பதிலளித்த போது, அவனால் உண்மையாகவே, "தேவன்தான் என்னை அழைத்துக் கொண்டுவந்தார்" (ஆதி24:27) என்று சொல்ல முடிந்தது. இந்நாட்களில் சிலர் அர்த்தமில்லாமல் இவ்வார்த்தைகளைப் பிதற்றுவதைப் போல அவன் சொல்லவில்லை. அது அவனைப் பொறுத்தவரை நூறு சதவீதம் உண்மையாயிருந்தது. நமது நாட்களில் நடைபெறும் எத்தனை திருமணங்களில் கர்த்தர்தான், கர்த்தரேதான் இம்மணமக்களை திருமணத்தில் இணைத்து வைத்தார் என்று சொல்ல முடியும்?

தேவன் உங்களுக்கென்று நியமித்து வைத்துள்ள நபரிடத்திற்கு அவர் உங்களை நேரடியாகவோ, மறைமுகமாகவோ, உங்களது பெற்றோர் அல்லது நண்பர்கள் மூலமாக நடத்துவார். வேதத்தில், திருமண விஷயத்தில் தேவனே வழிநடத்தின ஒரு சம்பவமாக, மேற்குறிப்பிட்ட ஈசாக்கு. ரெபேக்காள் திருமணந்தான் இடம் பெற்றுள்ளது. அத்திருமணம் வெறுமனே பெற்றோரால் நியமிக்கப்பட்டதல்ல. ஏனெனில், ஆபிரகாமோ அல்லது அவனுடைய வேலைக்காரனோ அதற்கு முன்னதாக ரெபேக்காளைப் பார்த்ததும் இல்லை; அவளைப் பற்றி எதுவும் அறிந்திருக்கவும் இல்லை. அதே போல பையனும், பெண்ணுமாகச் சேர்ந்து தாங்களாகவே அதை நியமித்துக் கொள்ளவுமுல்லை. ஏனெனில் ஈசாக்கும் ரெபேக்காளும் அதற்கு முன்னர் ஒருவரையொருவர் சந்தித்தது கிடையாது. அது தேவனாலேயே நியமிக்கப்பட்டது.

இதிலிருந்து நாம் கற்றுக் கொள்ளுவது யாதெனில், தேவன் அவருடைய பிள்ளைகளில் இருவரை ஒன்றாய் இணைப்பதற்கு என்ன முறையைப் பயன்படுத்துகிறார் என்பது முக்கியமல்ல. ஆனால் ஒருவரிடத்தில் ஒருவரை நடத்தியது யார் என்பதுதான் முக்கியமான காரியமாகும். நாம் ஒரு நபரிடத்திற்குப் பெற்றோர் மூலமாக நடத்தப்படுகிறோமா அல்லது நண்பர்கள் மூலமாக நடத்தப்படுகிறோமா அல்லது நம்மூலமாகவே நடத்தப்படுகிறோமா என்பதெல்லாம் ஒரு விஷயமல்ல. அந்த நபர்தான் நமக்கென்று தேவனால் நியமிக்கப்பட்டவர் என்று கண்டுகொள்ளுவதுதான் மிக முக்கியமானதாகும்.