எழுதியவர் :   சகரியா பூணன் வகைகள் :   சீஷர்கள்
WFTW Body: 

இயேசு தம்மை முழுவதுமாக மனுஷரோடு மனுஷனாய் அடையாளப்படுத்திக் கொண்டார். அவர் மனுஷனாய் இருப்பதைக் குறித்து வெட்கப்பட்டதில்லை. நம்மை அவருடைய சகோதரர் என்று சொல்லிக் கொள்ளவும் வெட்கப்படவில்லை என வேதம் விளம்புகிறது. சில நேரங்களில் நாம் நம்மை மற்றவர்களைவிட உயர்ந்தவர்கள் என்று எண்ணி விடுவதுண்டு. நாம் படித்தவர்கள் என்றோ, அல்லது சமுதாயத்தில் உயர்வர்க்கத்தினர் என்றெல்லாம்கூட எண்ணிவிடுகிறோம். ஆதாம் பாவம் செய்த நாளிலிருந்து அவன் மூலமாக நமக்குள் பாய்ச்சப்பட்ட பெருமைதான் இவை எல்லாவற்றிற்கும் மூல காரணமாகும். மனுஷர் அனைவரும் சமம் என்றும், அவர்கள் மத்தியில் குலம், கோத்திரம், கல்வி, புத்திக்கூர்மை, கலாச்சாரம், அந்தஸ்து இன்னும் இது போன்ற எந்தக் காரியத்தின் அடிப்படையிலும் எவ்வித வேறுபாடும் இருத்தலாகாது என்றும் செய்து காட்டவே இயேசு வந்தார். அவர் இங்கு வந்து, இஸ்ரவேல் சமுதாயத்தில் கடைநிலையில் வாழ்ந்து வந்த தாழ்ந்த மனிதனோடும் ஒன்றாக மாறினார். எல்லாருக்கும் கீழாய் இருப்பதுதான், எல்லாருக்கும் வேலைக்காரனாக இருப்பதற்கான வழி என அவர் அறிந்திருந்தார். பிறருக்குக் கீழாக உங்களைத் தாழ்த்தாத பட்சத்தில், நீங்களும் மற்றவருக்குப் பணிவிடை செய்ய முடியாது. நீங்கள் ஒருவரைத் தூக்கிவிட வேண்டுமானால், முதலாவது நீங்கள் அவருக்குக் கீழாகப் போயாக வேண்டும். இப்படித்தான் இயேசு வந்தார்.

இப்பொழுது பரிசுத்த ஆவியானவர் வந்து, நமக்குக் கிறிஸ்துவின் சிந்தையைத் தர விரும்புகிறார். இதை வேறு வார்த்தைகளில் சொன்னால், அவர் நம்மை இயேசுவைப் போலவே சிந்திக்க வைக்க விரும்புகிறார். நீங்கள் தனித்திருக்கையிலே என்ன விதமான எண்ண ஓட்டங்கள் உங்களுடைய சிந்தையை வருடிச் செல்கின்றன? நீங்கள் உங்களை அழகானவரென்றோ, அறிவாளி என்றோ, பணக்காரக் குடும்பத்தைச் சேர்ந்தவன் என்றோ எண்ணி மகிழ்வதுண்டா? இப்படி உங்களது எண்ணங்களையெல்லாம் எடை போட்டுப் பார்த்தால், நீங்கள் சுமந்து கொண்டிருப்பது கிறிஸ்துவின் சிந்தனைதானா அல்லது பிசாசின் சிந்தனையா என்று கண்டுபிடித்து விடலாம். நீங்கள் உங்களைப் பிறருடன் ஒப்பிட்டுப் பார்த்து, அவர்களைவிட நீங்கள் மேலானவர்கள் என்று எண்ணுவீர்களானால், லூசிபரை பிசாசாக மாற்றும்படிக்கு அவனது மனதையும் இது போன்ற சிந்தனைகள்தான் தொட்டுச் சென்றன என்பதை அறிந்து கொள்ளுவீர்கள். நாம் நம்மைவிட மற்றவர்களையே மேலானவர்களாய் எண்ண வேண்டுமென்றும், இந்த விஷயத்தில் இயேசுதான் நமக்கு முன்மாதிரியாக இருக்கிறார் என்றும் பிலிப்பியர் 2:3-ல் பவுல் சொல்லுவதை நாம் வாசிக்கிறோம். பரிசுத்தவான்கள் எல்லாரிலும் தான் சிறியவன் என்று பவுல் ஒரு முறை எபேசியர் 3:8-ல் சொன்னார். பவுல் கிறிஸ்துவின் தாழ்மையினால் மிகவும் பிடிக்கப்பட்டபடியால், எல்லா விசுவாசிகளிலும் தானே முற்றிலும் கீழானவன் என்பதைக் கண்டுபிடித்துவிட்டார்.

உங்களிலும் மற்றவரை மேன்மையானவர்களாய் எண்ணுங்கள் என்று பிலிப்பியர் 2:3-ல் பவுல் புத்தி சொல்லுவதாக வாசிக்கிறோம். இயேசு எப்பொழுதுமே மற்றவர்கள்தான் தன்னைவிட முக்கியமானவர்கள் என்று எண்ணினார். அதனால்தான் இராவிருந்தின் போது இயேசு ஒரு பாத்திரத்தில் தண்ணீரை எடுத்துக் கொண்டு, சீஷர்களின் கால்களைக் கழுவினதாகப் பார்க்கிறோம். அந்நாட்களில் வேலைக்காரர்கள்தான் இது போன்ற வேலைகளையெல்லாம் செய்தார்கள் என்பது உங்களுக்குத் தெரியும். ஒரு வீட்டின் எஜமான் செல்வந்தனாய் இருந்தால், அவனிடத்தில் அடிமைகள் இருந்தார்கள். அவர்கள் அனைவரும் விலைக்கு வாங்கப்பட்டவர்கள். அவர்கள் செய்த வேலைக்கு எவ்விதக் கூலியும் வழங்கப்படவில்லை. அவர்கள் வேலைக்காரரிலும் கீழானவர்களாய் மதிக்கப்பட்டவர்கள். ஒரு வீட்டிற்கு விருந்தினர் எவரேனும் வந்தால், அந்த வீட்டிலுள்ள அடிமை ஒரு பாத்திரத்தில் தண்ணீரை எடுத்துப் போய், அவருடைய செருப்பை கழற்றிவிட்டு, அவருடைய கால்களைக் கழுவிவிட வேண்டும். ஆகவே ஒரு வீட்டில் ஏதாவது விருந்தோ அல்லது வேறு ஏதாவது விசேஷமோ நடக்கும் போது, அந்த வீட்டின் கதவருகே ஒரு பாத்திரத்தில் தண்ணீர் வைக்கப்பட்டிருக்கும்.

இப்படியாக இயேசுவும் அவரது சீஷரும் இராப் போஜனத்தை ஆசரிக்கும்படிக்கு ஒரு வீட்டை வந்தடைந்த போது, அங்கே விருந்துபசரிப்பவர் யாரும் இல்லாமல் அது காலியாக இருந்தது. ஆனால் தண்ணீருடன் ஒரு பாத்திரம் அங்கிருந்தது. எல்லாருடைய கால்களையும் யார் கழுவிவிடுவது என்ற கேள்வி அங்கே எழுந்தது. ஒவ்வொரு சீஷனும், "இந்த வேலையை நான் செய்யப்போவதில்லை" என்றுதான் நினைத்திருப்பான். "இயேசுவுக்குப் பிறகு நான் தான் தலைமைப் பொறுப்பை எடுத்துக் கொள்ளப்போகிறேன்; ஆகவே நானாவது இந்த வேலையைச் செய்வதாவது?" என்று பேதுரு எண்ணியிருந்திருப்பான். "நான் நன்றாகப் படித்த கணக்காளர்; நான் எப்படி இந்த வேலையை எல்லாம் செய்வது?" என்று மத்தேயு நினைத்திருந்திருப்பான். இப்படி ஒவ்வொருவரும் மற்றவரைவிட தாங்கள் எவ்விதத்தில் மேலானவர்கள் என்று யோசித்தவர்களாக, ஓர் அடிமையின் வேலையைச் செய்வதற்கு முன் வரவில்லை. சரி, இந்த வேலை செய்யப்படாமலேயே இருந்துவிட்டு போகட்டும் என்ற நினைப்பு அவர்களுக்குள் வந்திருந்திருக்கும்.

இறுதியில், இயேசுவே பாத்திரத்தைக் கையில் எடுத்துக் கொண்டு சீஷரின் கால்களைக் கழுவ ஆரம்பித்துவிட்டார். ஏனெனில், "நீங்கள் எல்லாரும் என்னைவிட முக்கியமானவர்கள்" என்று அவர் சொன்னார். அவர்களெல்லாரும் அவரைவிட ஆவிக்குரியவர்கள் என்று அவர் நினைக்கவில்லை. ஆனால் தன்னைவிட முக்கியமானவர்களாகவே அவர் அவர்களை நடத்தினார். அவர் தம்மைத் தாழ்மையானவராகக் காட்டும்படி இதையெல்லாம் செய்யவில்லை. இன்று அநேகர் இப்படியெல்லாம் செய்து தங்களை வேலைக்காரராகவும், தாழ்மையுள்ளவர்களாகவும் காட்ட முனைகின்றனர். இப்படிச் செய்வதற்கு மாய்மாலம் என்னும் பெயர் சூட்டலாம். தேவன் இதை வெறுக்கிறார். இயேசுவோ பரலோகப் பிதாவிற்கு முன்பாகத் தம்மை ஒன்றுமில்லாதவராகவே வைத்திருந்தார்.

"கர்த்தாவே, நான் ஒன்றுமில்லை. நான் இவ்வாறு இருப்பது உம்மால் உண்டானதாகும்" என்றே நாம் நம்மைப் பற்றி நினைக்க வேண்டும். உங்களை அறிவாளியாகப் படைத்தது யார்? தேவன்தான். இவ்வுலகிலே குறைபாடுகளுடன் அநேகக் குழந்தைகள் பிறக்கின்றனர். நீங்களும் அப்படிப் பிறந்திருக்கக்கூடும். நீங்கள் மூளைரீதியாகவோ, உடல் ரீதியாகவோ ஊனமுடன் பிறந்திருந்தாலோ அல்லது போலியோ அல்லது பிறப்பிலிருந்தே ஏதோ வியாதியுடன் இருந்தாலோ என்ன செய்வீர்கள்? இதை எல்லாம் நீங்கள் நன்றாகச் சிந்தித்துப் பார்த்தால், "ஆண்டவரே, நான் பெற்றுக் கொள்ளாதது என்ன?" என்றுதான் சொல்லுவீர்கள். மதியீனமான மனுஷன்தான் பெருமையாயிருப்பான்.

இயேசு நாசரேத்திற்கு வந்து தன் பெற்றோராகிய மரியாளுக்கும், யோசேப்பிற்கும் 30 ஆண்டுகள் கீழ்ப்படிந்திருந்ததாக லூக்கா 2:51-ல் வாசிக்கிறோம். அவர்கள் இருவரும் பூரணமற்றவர்கள்தான். இன்றுள்ள எந்த தம்பதியரைப் போலவேதான் அவர்களும் இருந்தனர். ஒரு சராசரி கிறிஸ்தவக் குடும்பத்திலே கணவனும் மனைவியும் அவ்வப்போது சண்டையிட்டுக் கொள்வதைச் சற்றுக் கற்பனை செய்து பாருங்கள். யோசேப்பும், மரியாளும் அப்படித்தான் இருந்தனர். அவர்கள் இருவரும் பூரணமற்றவர்களும், பாவிகளாயும் இருந்தனர். ஆனால் அதே வீட்டில் இருந்த இயேசுவோ பூரணராயும், பாவமற்றவராயும் இருந்தார். அப்படியானால், யாருக்கு யார் கீழ்ப்படிய வேண்டும்? நாம் எவ்விதத் தயக்கமுமின்றி, பூரணமில்லாத யோசேப்பும், மரியாளும்தான் பூரணராயிருந்த இயேசுவுக்குக் கீழ்ப்படிய வேண்டுமென்று பட்டென்று சொல்லிவிடலாம். ஆனால் இங்கோ கதை தலை கீழாக உள்ளது. இயேசுதான் தன்னுடைய வளர்ப்புப் பெற்றோருக்குக் கீழ்ப்படிந்திருந்தார்.

நம்மைவிட கீழானவர்களுக்கு அடங்கிப் போவது எவ்வளவு கடினம் என்பது நமக்குத் தெரியும். நீங்கள் உண்மையிலேயே தாழ்மையுள்ளவராய் இருந்தால், உங்களைவிடக் கீழானவர்களுக்குக் கீழ்ப்படிவதில் எவ்விதப் பிரச்சனையும் இருக்காது. ஏனென்றால் நீங்கள் உங்களை ஒரு பொருட்டாக எண்ணுவதில்லை. நாம் தாழ்மையாய் இருக்கும் போது, நமக்கு யாருடனும் பிரச்சனை இருக்காது. இயேசுவுக்கு தச்சனாயிருப்பதில் எந்தப் பிரச்சனையுமே இல்லை. அவர் ஊழியத்தில் பிரவேசித்த போதும் எந்தப் பட்டத்தையும் சூட்டிக் கொள்ளவில்லை. அவர் தன்னை மரியாதைக்குரிய குரு என்றோ அல்லது வேறெந்தப் பட்டத்தையோ விரும்பவில்லை. தாம் பணிவிடை செய்ய வந்த பாமர மக்களிடமிருந்து தன்னைப் பிரித்துக் காட்டும் எந்தப் பட்டத்தையும் அவர் நிராகரித்து விட்டார். மாறாக அவர் எல்லாவிதத்திலும் தன்னுடைய சகோதரருக்கு ஒப்பானார். தன்னை ராஜாவாக்க வந்தபோது, அங்கிருந்து ஓடி விட்டார். அவர் கனத்தைத் தேடி எதையும் செய்யவில்லை. வியாதியஸ்தனைக் குணப்படுத்திவிட்டு ஒருவரிடமும் சொல்ல வேண்டாம் என்று சொன்னார். மகிமை அனைத்தும் பிதாவைச் சென்றடைய வேண்டும் என்று விரும்பினார். தனது குணமாக்கும் வரத்தை விளம்பரப்படுத்தி, எல்லாருடைய கவனத்தையும் தன் பக்கமாகத் திருப்ப வேண்டுமென விரும்பவில்லை. ஒரு மனுஷன் எப்படி வாழ வேண்டுமென்பதற்கு எவ்வளவு பெரிய உதாரணமாகத் திகழ்கிறார்!