மாபெரும் கட்டளையின் முதல் பாதியை நிறைவேற்றும் பல கிறிஸ்தவர்கள், இரண்டாம் பாதியை நிறைவேற்றுவது எவ்வளவு முக்கியம் என்பதை உணராமல் இருப்பது இன்றைய கிறிஸ்தவத்தில் காணப்படும் பெரிய பரிதாபம். அதைவிட மோசமான காரியம் என்னவென்றால், முதல் பகுதியை நிறைவேற்றுகிற அநேகர், இரண்டாவது பகுதியை நிறைவேற்ற விரும்புகிறவர்களை அற்பமாய் எண்ணுவது தான். நாம் மனத்தாழ்மையோடு இருந்தால், கிறிஸ்துவின் சரீரத்தில் நாம் உடன் வேலையாட்களாக இருப்பதையும், அதில் ஒரு செயல் மற்றொன்றைப் போலவே முக்கியமானது என்பதையும் உணருவோம். சுவிசேஷம் அறிவிக்கப்பட்டிராத இடங்களுக்குச் சென்று ‘கிறிஸ்து உங்கள் பாவங்களுக்காக மரித்தார்’ என்று எடுத்துச் சொல்லுகிற நற்செய்தி எவ்வளவு முக்கியமானதோ, அதேபோல அவர்களை சீஷராக்கி, இயேசு கட்டளையிட்ட எல்லாவற்றையும் செய்ய அவர்களுக்குக் கற்றுக் கொடுத்து, அந்த மாபெரும் கட்டளையை நிறைவு செய்வதும் அவ்வளவு முக்கியத்துவம் வாய்ந்ததாகும்.
மாபெரும் கட்டளையின் முதல் பகுதியை நிறைவேற்றுவது மிகவும் உற்சாகமான காரியமாய் இருக்கிறது. ஏனென்றால், அநேக உண்மையான சம்பவங்களை நாம் இங்கே கூற முடியும். மிஷனரி ஊழியத்திலும், சுவிசேஷ ஊழியத்திலும் நடக்கும் உண்மை சம்பவங்கள் எப்பொழுதுமே பரவசமூட்டுகிறதாய் இருக்கிறது. பிசாசின் பிடியிலிருந்தும், விக்கிரக ஆராதனையிலிருந்தும் விடுதலை அடைந்தவர்களின் உண்மையான சாட்சிகளும் அடங்கிய அநேகக் காரியங்களை நாம் கூறலாம். சுவிசேஷ ஊழியர்கள் கிறிஸ்துவுக்குள் இத்தனை பேரைக் கொண்டு வந்தோம் என்ற எண்ணிக்கையைச் சொல்ல முடியும். ஆனால், அப்படிப்பட்ட மறுபடியும் பிறந்த ஒரு சகோதரனை இயேசுவின் சீஷனாய் மாற்றுகிற வேலையைச் செய்யும் மற்றொரு கிறிஸ்தவ ஊழியரைப் பற்றிய காரியம் என்ன? அவரிடம் இது போன்று பெருமை பேசுவதற்கு எந்தப் புள்ளிவிவரங்களும் இருக்காது. ஆனால் இயேசு கிறிஸ்து திரும்பி வரும்போது, அந்த கிறிஸ்தவ ஊழியரே பூமியில் சீஷர்களை உருவாக்குவதற்கு, எந்த கனத்தையும் பெறாமல், மிகவும் உண்மையுள்ளராய் அவருடைய வேலையை செய்திருப்பதை நாம் கண்டறியலாம். பொதுவாக, கிறிஸ்தவர்கள் தாங்கள் அறிக்கையிடக்கூடிய ஊழியங்களைச் செய்யத்தான் விரும்புகிறார்கள், அதன்மூலம் அவர்கள் எண்ணிக்கையை மேற்கோள் காட்ட முடியும். ஆகவேதான் மாபெரும் கட்டளையின் ஒரு பகுதியான மாற்கு 16:15 வசனமானது, அதன் அடுத்தப் பகுதியான மத்தேயு 28:19-20 வசனத்தை விட மிகவும் பிரபலமாக இருக்கிறது. அதனால்தான், நாம் அந்த இரண்டாம் பாதியில் அதிகக் கவனம் செலுத்துகிறோம். மேலும், இயேசு கட்டளையிட்ட அனைத்தையும் செய்ய சீஷர்களுக்கு கற்பிக்கிறோம்.
நீங்கள் ஒரு 25 வருடங்கள் உலகின் பல்வேறு பகுதிகளுக்குச் சென்று, சுவிசேஷத்தைப் பிரசங்கித்து, சுவிசேஷப் பணியை செய்திருக்கிறீர்கள் என்று வைத்துக்கொள்வோம். நீங்கள் ஒரு சுவிசேஷகராக இருந்தால், உங்கள் மூலமாய் கிறிஸ்துவைக் ஏற்று கொண்டு வந்த நூற்றுக்கணக்கான அல்லது ஆயிரக்கணக்கான நபர்களின் புள்ளிவிவரங்களைக் குறித்து அறிக்கை அனுப்ப உங்களுக்கு வாய்ப்பு இருக்கிறது. ஆனால், அதே 25 வருடங்களை இன்னும் சீஷராகாத மறுபடியும் பிறந்தவர்களுக்கு இயேசு கட்டளையிட்ட எல்லாவற்றையும் கைக்கொள்ளக் கற்றுக்கொடுக்கிறீர்கள் என்றால் புள்ளிவிவரங்களின் அடிப்படையில் அதைப்பற்றி அதிகமாய் கூறமுடியாது. ஆனால் கிறிஸ்துவின் சாயலுக்கொத்த மனிதர்களை கிறிஸ்துவுக்கென்று மிகச் சிறந்த சாட்சியாய் பூமியிலே உண்டு பண்ணியிருப்பீர்கள். ஆதாமின் சுபாவத்திலிருந்து மீட்கப்பட்ட, கிறிஸ்துவின் இயல்பை வெளிப்படுத்தக் கூடிய இப்படிப்பட்ட ஜனங்களை தேவன் சாத்தானிடம் சாட்சியாகக் காண்பிக்க முடியும். அந்த ஊழியம் நாம் வாழும் இந்த பூமியில் அல்லாமல், பரலோகத்தில் மகிமையைக் கொண்டு வருகிறதாய் இருக்கிறது.
நீங்கள் மனிதர்களிடத்தில் (சக கிறிஸ்தவர்களிடமிருந்தும் கூட!) கனத்தைத் தேடும் ஒரு கிறிஸ்தவராக இருந்தால், மாபெரும் கட்டளையின் இரண்டாம் பகுதியைப் பற்றி நீங்கள் அதிகம் கவலைப்படமாட்டீர்கள். ஏனென்றால் அதைக்குறித்து உங்களுக்கு அதிகம் வெளியில் காண்பிக்க ஒன்றும் இல்லாதிருக்கலாம். புள்ளிவிவரங்களிளும், எண்ணிக்கையிலும் மனுஷ கனத்திலும் உங்கள் மனம் ஆர்வமுடன் இருந்தால், முதல் பகுதியில் மட்டுமே நீங்கள் ஆர்வமாக இருப்பீர்கள். இஸ்ரவேல் தேசத்தில் வாழ்ந்த பழைய உடன்படிக்கை தீர்க்கதரிசிகள் ஒரு போதும் பிரபலமாக இருந்தது இல்லை; கள்ளத் தீர்க்கதரிசிகளே பிரபலமாய் இருந்தார்கள். இரண்டு பேருக்கும் உள்ள வித்தியாசம் என்ன? ஒரு வித்தியாசம் என்னவென்றால், கள்ளத் தீர்க்கதரிசிகள் ஜனங்கள் கேட்க விரும்புவதைக் கூறினார்கள், அதே நேரத்தில் மெய்யான தீர்க்கதரிசிகள் தேவனிடமிருந்து அவர்கள் கேட்க வேண்டியதை ஜனங்களுக்குச் கூறினார்கள். அது பெரும்பாலும், அவர்கள் பாவத்தைக் குறித்தும், விக்கிரக ஆராதனையைக் குறித்தும், விபச்சாரத்தைக் குறித்தும், தேவனிடத்திலிருந்து வழி விலகிப் போகிற காரியத்திற்கான கடிந்துகொள்ளுதலாகவும், அதனுடன் மனந்திரும்புதலுக்கான (தேவனிடமாய் திரும்புதல்) அழைப்பும் சேர்ந்து இருக்கும்.
தீர்க்கதரிசன ஊழியம் பழைய ஏற்பாட்டிலும் புதிய ஏற்பாட்டிலும் பிரபலமாக இருந்ததில்லை. புதிய ஏற்பாட்டு தீர்க்கதரிசன ஊழியமும் அதே போலவே, தேவ ஜனங்களை அவருக்கும் அவருடைய வார்த்தைக்கும் நேராய்த் திருப்பவும், வேத வசனங்களுக்குக் கீழ்ப்படிவதற்கும், இயேசு கற்பித்த அனைத்திற்கும் கீழ்ப்படிவதற்கும் அழைக்கிறதாய் இருக்கிறது. இது சுவிசேஷ ஊழியத்திலிருந்து முற்றிலும் வித்தியாசமாயிருக்கிறது. கிறிஸ்துவின் சரீரத்தை தீர்க்கதரிசிகளால் மாத்திரமோ அல்லது சுவிசேஷகர்களால் மாத்திரமோ கட்ட முடியாது.
ஓர் உவமையாகக் கூறினால், மாபெரும் கட்டளையின் முதல் பாதியை (மாற்கு 16:15) சுவிசேஷப் பணியின் (evangelism) மூலம் நிறைவேற்றுவது என்பதை, ஒரு தட்டிலிருந்து உணவை எடுத்து நம் வாயில் வைப்பதற்கு ஒப்பிடலாம். சுவிசேஷப் பணி அனைத்தின் நோக்கமும் என்னவாயிருக்கிறது? கிறிஸ்துவின் சரீரத்தில் இல்லாத ஒருவரை கிறிஸ்துவின் சரீரத்தில் ஒருவராய் கொண்டு வருவதேயாகும். அடிப்படையில் அதுவே சுவிசேஷப்பணியாகும். சுவிசேஷப் பணி என்பது ஓர் அவிசுவாசியை, விக்கிரக ஆராதனை செய்பவரை அல்லது தேவனை அறியாத நபரை கிறிஸ்துவின் சரீரத்தில் உள்ள ஒரு பகுதியாக மாற்றுவதாகும். தட்டிலிருக்கும் உணவானது இப்போது என் சரீரத்தின் ஒரு பகுதி அல்ல. என் கை உணவைத் தட்டிலிருந்து எடுத்து, என் சரீரத்தில் சேர்க்கிறது. அப்படித்தான் கிறிஸ்துவை அறியாத ஒரு நபரை சுவிசேஷப்பணியானது கிறிஸ்துவின் சரீரத்தின் ஒரு பங்காய் கொண்டு வருகிறது.
உணவு எப்படி முழுமையாக உடலின் ஓர் அங்கமாக மாறுகிறது? முதலில், நான் உணவைப் பார்த்து, அதை என் கையால் எடுத்து, என் வாயில் வைக்கிறேன். அதுபோல சுவிசேஷப் பணியும் அவிசுவாசியை அழைத்து கிறிஸ்துவுக்குள் கொண்டுவருகிறது. ஆனால் இந்த உணவை என் வாயில் வைத்திருக்கும் வரை அது என் உடலின் ஒரு பகுதியாக மாறாது. அதை வாயிலேயே வைத்திருந்தால் கெட்டுவிடும். உடனே அதைத் துப்பிவிடுவேன். கைகளை உயர்த்தி, தீர்மான அட்டைகளில் கையெழுத்திட்டு, கிறிஸ்துவிடம் வந்துவிட்டதாகச் சொல்லும் அநேக ஜனங்கள் அப்படித் தான் வாயில் வைத்த உணவைப் போல இருக்கிறார்கள். நீங்கள் அங்கு சென்று, தீர்மான அட்டைகளில் கையொப்பமிட்ட இந்த 500 பேரைப் பார்த்தால், அவர்களில் ஒருவர் மட்டுமே உண்மையான சீஷராக மாறியிருப்பதைக் காண முடியும். மற்ற 499 பேர் அப்படியே பின்மாற்றமடைந்திருப்பார்கள். இது எப்பொழுதுமே நடக்கிறது. உணவை வெறுமனே வாயில் வைத்தால் மட்டும் போதாது. பற்கள் உணவை மெல்ல வேண்டும், பின்னர் அது தொண்டைக்குக் கீழே சென்று வயிற்றுக்குள் செல்கிறது, அங்கு அதை நொறுக்க அனைத்து வகையான அமிலங்களும் சுரக்கிறது. இந்தக் கட்டத்தில், அது இனி உருளைக்கிழங்காகவோ, சப்பாத்தியாகவோ அல்லது சாதமாகவோ இருக்காது. அது இன்னும் பிற வடிவங்களாக மாற்றப்பட்டு, செரிமானம் மற்றும் உடலுக்குள் நடக்கும் பல விஷயங்களுக்குப் பிறகு, இறுதியாக அந்த உணவு முழுமையாக உடலின் ஒரு பகுதியாக மாறும். ஆரம்பத்தில் உணவை எடுத்து வாயில் வைப்பது, சுவிசேஷப் பணியாகும். இது மிகவும் மென்மையான ஓர் ஊழியமாயிருக்கிறது. ஆனால் அதற்குப் பிறகு, அந்த உணவை உடலின் மற்ற பாகங்கள் எடுத்துக் கொள்கின்றன. அந்த உறுப்புகள் ‘கை’யினால் செய்ய முடியாத காரியங்களைச் செய்து விடுகின்றன. அதுபோலவே, மற்ற பணியாட்கள் தீர்க்கதரிசன ஊழியம், போதிக்கும் ஊழியம், மந்தையை மேய்க்கும் ஊழியம் மற்றும் அப்போஸ்தலர் ஊழியம் போன்ற சுவிசேஷகர்களால் ஒருபோதும் செய்ய முடியாத செயல்பாடுகளைச் செய்கிறார்கள். இந்த ஊழியங்கள் அனைத்தும் அந்த நபரை கிறிஸ்துவின் சரீரத்தில் உயிருள்ளதும், செயல்படுகிறதும், பயனுள்ளதும் சக்திவாய்ந்ததுமான ஓர் அங்கமாக மாற்றுகின்றன.
எனவே எந்தப் பணி மிகவும் தேவைப்படுகிறது? தீர்க்கதரிசிகளா, சுவிசேஷ ஊழியரா, மேய்ப்பனா அல்லது போதிக்கிறவரா? இது, “கை மிகவும் முக்கியமா, பற்களா, அல்லது வயிறா?” என்று கேட்பது போல இருக்கிறது. உடலின் அவயவங்களை ஒப்பிட்டுப் பார்க்கவே முடியாது. ஏனென்றால், கையால் உணவை எடுத்து உள்ளே வைக்கவில்லை என்றால், பற்களுக்கும் வயிற்றுக்கும் ஒன்றும் செய்ய முடியாது; உணவை வாயில் வைக்கும் வேலையை கை செய்தாலும், பற்களும் வயிறும் எதுவும் செய்யவில்லை என்றால், அதுவும் வீணாகிவிடும். ஆகவே, தீர்க்கதரிசியை விட சுவிசேஷகர் முக்கியமானவர் என்றோ அல்லது சுவிசேஷகரை விட தீர்க்கதரிசி முக்கியம் என்றோ நினைப்பதில் எந்தப் பயனும் இல்லை. ஒன்று மற்றொன்றை விட மிக முக்கியமான செயல்பாட்டை நிறைவேற்றுவதாகத் தோன்றலாம், ஆனால் இரண்டும் உடலில் சமமாக அவசியம். உடலின் ஒவ்வொரு பாகமும் ஆரோக்கியத்துடனும் கட்டுறுதியுடனும் இருந்து அதன் செயல்பாட்டை நிறைவேற்ற பயனுள்ளதாக இருக்க வேண்டும் என்று தேவன் தீர்மானித்திருக்கிறார்.