WFTW Body: 

நாம் நம்முடைய சுயத்தின் முழுவதுமான முடிவுக்கு வரும்போதுதான், நாம் தேவனிடம் வரத் தயாராகிறோம். "வருத்தப்பட்டுப் பாரஞ்சுமக்கிறவர்களே! நீங்கள் எல்லாரும் என்னிடத்தில் வாருங்கள்" (மத்தேயு 11:28) என்று இயேசு ஜனங்களை அழைத்தார். இயேசு அனைவரையும் தம்மிடம் வரும்படி அழைப்பதில்லை. இங்கே அவர், பாவத்தினால் தோற்கடிக்கப்பட்ட தங்களது வாழ்க்கையைக்குறித்து நொந்து சலித்துப்போனவர்களை மட்டுமே அழைக்கிறதை நாம் காணலாம். ஊதாரி மகன் "எல்லாவற்றையும் செலவழித்த" பின், "ஒருவரும் அவனுக்கு எதையும் கொடுக்கவில்லை" என்றபோதுதான் தனது தகப்பனிடம் திரும்பி வந்தான். அப்போதுதான் "அவனுக்கு புத்தி தெளிந்தது" (லூக்கா 15:16-18). நம் வாழ்வில் மனுஷருடைய கனத்தைப் பற்றிக் கவலைப்படாமல், மனிதர்கள் மற்றும் சூழ்நிலைகளைப் பற்றி குறைசொல்வதை நிறுத்திவிட்டு - தோல்வியுற்ற நம் சொந்த வாழ்க்கையைக்குறித்து மட்டுமே நொந்து சலிப்படையும்போது தான் நாம் ஆவிக்குரிய ரீதியில் வளர முடியும். அதுவே உண்மையான மனந்திரும்புதல்.

இல்லையெனில், நாம் தொடர்ந்து இன்குபேட்டருக்குள் (அடைகாக்கும் கருவிக்குள்) வைத்திருக்கப்பட வேண்டிய, (தொடர்ந்து மற்றவர்களால் இதமாக்கி உற்சாகப்படுத்தப்பட வேண்டிய) குறைமாதக் குழந்தைகளைப் போல இருப்போம். நாம் சபையிலே கூட நம்முடைய பாதுகாப்பைத் தேடக்கூடாது, கர்த்தரிடத்தில் மட்டுமே நம் பாதுகாப்பைக் கண்டடைய வேண்டும். எசேக்கியேல் 36:25-30, புதிய உடன்படிக்கையின் கீழ் இயேசு நமக்குத் தரும் பரிபூரண ஜீவனைப் பற்றிய தீர்க்கதரிசனத்தை உரைக்கிறது. இவ்வாறு கூறிக்கொண்டே வரும்போது வசனம் 31 -ல், நாம் இந்த வாழ்க்கைக்குள் வரும்போது "நம்முடைய முந்தைய நாட்களில் நாம் செய்த எல்லா அக்கிரமங்களினிமித்தமும் நம்மையே நாம் அரோசிப்போம்" என்று கூறுகிறது. தேவ மனிதனின் முதன்மையான அடையாளங்களில் ஒன்று, எப்போதும் தனக்குள்ளேயே, "ஓ எவ்வளவு நிர்ப்பந்தமான மனிதன் நான்? எல்லாப் பாவங்களிலிருந்தும் நான் எவ்வாறு முழுமையாக விடுவிக்கப்படுவேன்?” (ரோமர் 7:24 - பொழிப்புரை) என்ற கதறுதலைக் கொண்டிருப்பதுதான். எல்லா அசுத்தங்களிலிருந்தும், மாம்சத்தில் உள்ள பாவத்தின் வாசனையிலிருந்தும் கூட விடுபட அவன் தொடர்ந்து வாஞ்சிக்கிறான்.

ஆபத்து நாட்களில் நீங்கள் பெலனுள்ளவர்களாக இருக்க வேண்டும் என்று தேவன் விரும்புகிறார் (நீதிமொழிகள் 24:10). ஆனால், அந்த ஆபத்து நாட்களில் நீங்கள் வலுவாக இருக்க விரும்பினால், இந்த சமாதானமான நேரத்திலேயே தேவனைப் பற்றிய அறிவை நீங்கள் வளர்த்துக்கொள்ள வேண்டும்.

தேவனுடைய வழிகள் நம்முடைய வழிகள் அல்ல. பல ஏமாற்றங்களின் மூலமும் தோல்விகளின் மூலமும் அவர் முதலில் உங்களை உடைக்க வேண்டும். ஆகையால் அவர் உங்களுக்கென திட்டமிட்டிருக்கும் ஆவிக்குரிய கல்வியைப் பெறக்கூடிய சூழ்நிலைகளுக்குள் உங்களை அனுப்புவார்.

இஸ்ரவேலின் தலைசிறந்த தலைவனாகும்படி தயார் செய்வதற்காக மோசேயை, 40 வருடங்களாக வனாந்தரத்திற்கு அனுப்பி ஆடுகளை மேய்ப்பதற்கும், அந்த 40 வருடங்களும் அவனுடைய மாமனாருடன் தங்கி அவருக்குக் கீழ் வேலை செய்ய வேண்டிய அவமானத்தை எதிர்கொள்வதற்கும் அனுப்புவதை நாம் யாரும் நினைத்துக்கூடப் பார்த்திருக்க மாட்டோம். ஆனால் அதுவே தேவனுடைய வழி. யாக்கோபை தேவனுடைய ஓர் இளவரசனாக (இஸ்ரவேலாக) மாற்றுவதற்கு முன்பு தேவன் அதேபோன்ற ஒன்றை அவனிடம் செய்தார். ஒரு மனிதனை உடைப்பதே தேவனுக்கு மிகவும் கடினமான பணியாயிருக்கிறது. ஆனால் தேவன் அதைச் செய்வதில் வெற்றி பெற்றால், அத்தகைய மனிதனின் மூலம் வெளிப்படும் வல்லமையானது அணுவை உடைக்கும் போது வெளிப்படுவதை விட அதிகமாக இருக்கும்!

பவுல் தனது அனுபவத்தைப் பற்றி கூறும்போது, "நாங்கள் கீழே தள்ளப்பட்டோம், ஆனால் எழுந்து தொடர்ந்து முன்னேறிச் செல்கிறோம்" (2கொரிந்தியர் 4:9 – லிவிங் மொழிபெயர்ப்பு) என்று கூறுகிறார். இப்பொழுதும் அப்பொழுதுமாக நாம் கீழே தள்ளப்படும்படி தேவன் அனுமதிக்கிறார். ஆனால், மற்றவர்களைப் போல நாம் வீழ்ந்தே கிடப்பதில்லை. நாம் எழுந்து தொடர்ந்து முன்னேறிச் செல்கிறோம். அதுவே சாத்தானை மேலும் கோபப்படுத்துகிறது. நாம் கீழே தள்ளப்படுவதானது நம்முடைய மிகச் சிறந்ததாக மாறும்படிக்கு, நாம் கீழே தள்ளப்படுவதன் மூலமாக பரிசுத்தமாக்குதலுக்கான படிப்பினையையும் தேவன் நமக்குத் தருகிறார். ஆகவே, (அன்று முதல்) நான் செல்லும் இடமெல்லாம் இயேசுவின் ஜெயத்தையும் சாத்தானின் தோல்வியையும் இன்னும் அதிகமாக அறிவிக்கிறேன். அல்லேலூயா!!