"என் சகோதரரே நான் காவலில் அடைபட்டிருப்பதைக் குறித்துச் சோர்ந்து போக வேண்டாம். ஏனெனில், என் கட்டுகள் சுவிசேஷம் பிரபலமாகும்படிக்கு ஏதுவாயிற்று" (பிலி 1:12) என்று பவுல் ரோம் நகரிலிருந்த ஒரு சிறைச்சாலையிலிருந்து எழுதினார். "அன்றியும் அவருடைய தீர்மானத்தின்படி அழைக்கப்பட்டவர்களாய்த் தேவனிடத்தில் அன்புகூருகிறவர்களுக்குச் சகலமும் நன்மைக்கு ஏதுவாக நடக்கின்றது" (ரோமர் 8:28) என்பதை பவுல் விசுவாசித்தார்.
பவுலின் சிறையிருப்பானது எவ்வாறு நன்மைக்கு ஏதுவாக நடந்தது? பவுலின் சிறைவாசமானது எவ்வாறு நம்முடைய நன்மைக்கு ஏதுவாக நடந்தது என்பதைப் பற்றி நாம் இங்கு காணலாம்: பவுல் என்னும் மனிதன் எப்போதும் முன்னோக்கிச் செல்பவராகவே இருந்தார். வயது முதிர்ந்த காலத்திலும் அவர் பயணித்துக் கொண்டே இருந்தார். இப்பூமியை விட்டுக் கிளம்புவதற்கு முன்பாக, எத்தனை இடங்களுக்குச் சுவிசேஷத்தைச் சுமந்து செல்ல முடியுமோ, அத்தனை இடங்களுக்கும் சென்றுவிட வேண்டும் என்று அவர் விரும்பினார். அவர் ஆவிக்குரிய விதத்தில் மாபெரும் செல்வந்தனாக மாறுவதற்காக, தேவனோடு நெருங்கி நடப்பவராகவும், அநேகச் சோதனைகளைக் கடந்து செல்பவராகவும் இருந்தார். ஆனால் அவர் கர்த்தரிடமிருந்து கற்றுக் கொண்ட யாவற்றையும் எழுதி வைக்கவில்லை. ஆனால் தேவனோ, இந்த மனிதனின் ஆவிக்குரிய பொக்கிஷமானது அவரோடு கல்லறைக்குச் சென்றுவிடாமல், அது பாதுகாக்கப்பட்டு, வரப் போகும் தலைமுறைகளுக்கு ஆசீர்வாதமாக இருக்கும்படி அவற்றைக் கொண்டு செல்ல வேண்டுமெனத் தீர்மானித்தார். ஆனால் தேவனால் எப்படி பவுலின் வேகத்தைக் குறைத்து, அவரை ஓரிடத்தில் உட்கார வைத்து எல்லாவற்றையும் எழுத வைக்க முடியும்? அவர் அவனைச் சிறையில் அடைக்கப்படும்படி அனுமதித்தார்!!
பவுல் சிறையிலிருந்த போது, அவரால் பயணம் செய்ய முடியவில்லை. ஆகவே தன்னுடைய நேரத்தைப் பயனுள்ள வழியில் செலவழிக்கத் தீர்மானித்தவராய், சில சபைகளுக்குக் கடிதங்களை எழுதினார். இப்படியாகத்தான், அவர் பிலிப்பியர், எபேசியர் மற்றும் கொலோசேயர் ஆகிய நிருபங்களை எழுதினார். அதனால் ஏற்பட்ட விளைவு என்ன? அந்த எழுத்துக்கள் 2000 ஆண்டுகளாக மில்லியன் கணக்கான மக்களுக்கு ஆசீர்வாதமாக மாறிவிட்டன. இப்படியாக பவுலின் கட்டுகள் நன்மையாக உருவெடுத்து விட்டன.
1980-களின் நடுவிலே, ஒரு குறுகிய காலம் நான் மருத்தவமனையிலே அனுமதிக்கப்பட்டேன். அவருக்கென்று எங்காவது ஓரிடத்தில் முனைப்புடன் ஊழியம் செய்து கொண்டிருக்க வேண்டிய என்னை ஏன் மருத்துவமனையில் இருக்கும்படி செய்தார் என்று நான் ஆண்டவரிடம் வினவினேன். நான் சில நாட்களுக்குப் படுத்திருந்து அவர் எனக்கு என்ன சொல்கிறார் என்பதைக் கவனித்துக் கேட்க வேண்டுமென அவர் விரும்புவதாக என்னிடம் சொன்னார். ஆண்டவருடன் பேசுவதற்குக்கூட நேரமில்லாதவாறு, நான் அவருடைய ஊழியத்தில் மிகவும் மூழ்கிப் போயிருந்தேன். நான் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டதற்கான காரணம் இதுதான் என்று தெரியவந்த பின்பு, நான் மிகவும் மகிழ்ச்சியுற்றேன். ஆண்டவர் பேசுவதைக் கேட்பதில் நான் அதிக ஆர்வமுடையவனாய் இருந்ததால், அவர் விரும்பும் கால அளவிற்கு நான் அங்கேயே படுத்திருப்பதில் சந்தோஷப்பட்டேன். மருத்தவனைப் படுக்கையில் படுத்திருப்பதில் உள்ள ஒரு சாதகமான அம்சம் என்னவென்றால், உங்களால் எப்போதும் மேல் நோக்கியவாறு பார்த்துக் கொண்டுதான் படுத்திருக்க முடியும். நான் அங்கு படுத்திருந்த போது, அவர் என்னுடன் நாளுக்கு நாள் பேச ஆரம்பித்தார். அவர் அவ்வாறு பேசிய போது, நான் அவற்றையெல்லாம் எழுதி வைத்தேன். நான் எழுதிய எல்லாவற்றிலும், அந்த ஒரேயொரு கட்டுரை மாத்திரந்தான், ஏறத்தாழ ஒவ்வொரு சிந்தனையுமே, ஆண்டவர் பேசப் பேச எழுதியதாகும். அது "தேவன் விரும்பும் மனிதர்" என்னும் தலைப்பின் கீழ் (புது ரசம் புது துருத்தி என்னும் புத்தகத்தில் இரண்டாம் அத்தியாயம்) ஒரு கட்டுரையாக வெளியிடப்பட்டு, பின்பு "தேவபக்தியுள்ள மனிதரின் 50 அடையாளங்கள்" என்னும் கையேடாக வெளிவந்தது. தேவன் அந்தக் கட்டுரையையும், கையேட்டையும் உலகின் பல்வேறு நாடுகளிலும் பயன்படுத்தியிருக்கிறார். அதை என்னுடைய எழுத்துப்பணிகளிலேயே அதிக முக்கியத்துவம் வாய்ந்ததாகவே எண்ணுகிறேன். ஆனால் அவர் என்னை மருத்தவமனைப் படுக்கையில் கிடத்தாதிருந்திருந்தால், என்னால் அதை எழுதியிருந்திருக்க முடியாது!
தேவன் சில சமயங்களில் நமக்கு வியாதியைக் கொடுத்தோ, காவலில் அடைத்தோ, நம்மை நிறுத்தி, அவருக்கென்று சிலவற்றைச் செய்ய வைக்கிறார். அப்படி இல்லாதபட்சத்தில், நம்மால் ஒருக்காலும் அதைச் செய்திருக்க முடியாது. தேவன் எப்பொழுதெல்லாம், நம்முடைய பாதையில் குறுக்கிட்டு நம்மை நிறுத்துகிறாரோ, அப்பொழுதெல்லாம் நாம் அவருக்கு நன்றி சொல்ல வேண்டும். அவர் அதில் ஒரு நோக்கம் வைத்துள்ளார். ஏனெனில், "நல்ல மனுஷனுடைய நடைகள் (STEPS ) கர்த்தரால் உறுதிப்படும், அவனுடைய வழியின் மேல் அவர் பிரியமாயிருக்கிறார்" (சங் 37:23).
பவுலின் சிறை வாழ்க்கையால் இரண்டாவது நன்மையும் நடந்தது. அவர், “அரமனையெங்கு முள்ளவர்களுக்கும், மற்ற யாவருக்கும் என் கட்டுகள் கிறிஸ்துவுக்குள்ளான கட்டுகளென்று வெளியரங்கமாயிற்று” (பிலி 1:13) என்கிறார். பிறகு, “இங்குள்ள கிறிஸ்தவர்கள் அனைவரும், விசேஷமாக இராயனுடைய அரண்மனையில் பணிபுரிபவர்களும் உங்களுக்கு நினைவூட்டப்பட வேண்டுமென விரும்புகின்றனர்” (பிலி 4:22 – living) என்று சொல்கின்றார். இராயனுடைய அரண்மனையில் இருந்தவர்கள் எப்படி மனந்திரும்பினார்கள்? பவுல் தன்னோடு சங்கிலியால் பிணைக்கப்பட்டிருந்த சிறைக்காவலர்களுக்குச் சுவிசேஷத்தைப் பிரசங்கித்தபடியால் இது நடந்தது. அந்நாட்களில், கைதிகள் தப்பிச் சென்றுவிடாதவாறு, ஒரு சிறைக் காவலனுடன் சங்கிலியால் பிணைக்கப்படுவது வழக்கமாயிருந்தது. 8 மணி நேரம் தன்னுடன் சங்கிலியால் பிணைக்கப்பட்டிருக்கும் ரோமப் போர்ச்சேவகனுக்கு பவுல் சுவிசேஷத்தைப் பிரசங்கிப்பார். அந்தக் காவலனால் அங்கிருந்து போகவே முடியாது. பவுல் சொல்லுவதைக் கவனித்தே ஆக வேண்டும். 8 மணி நேரம் இவனுடைய வேலை முடிந்து, அடுத்த 8 மணி நேரத்திற்கு அடுத்த காவலன் வந்தவுடன், அவனுக்கும் பவுல் சுவிசேஷத்தை பிரசங்கிப்பார். இப்படியாக அநேகக் காவலர்கள் மனந்திரும்பினர். வெகு விரைவிலேயே, இராயனுடைய அரண்மனையில் ஒரு சிறு சபை கூடுகை உருவானது.
வேதவாக்கியங்கள் எழுதப்படுவதும், ஒரு கூட்டத்திற்குக்கூட வந்திராத மக்கள் மனந்திரும்புதலைப் பெற்றுக் கொள்வதும் பவுலின் கட்டுகளின் விளைவாக நடந்தன.
ஆனால் இது இத்துடன் முடியவில்லை. பவுலின் சிறைவாசத்தால் மூன்றாம் ஆசீர்வாதமும் உண்டானது. பவுலின் கட்டுகளைக் குறித்துக் கேள்விப்பட்ட, பயந்த சுபாவமுள்ள அநேக விசுவாசிகள் திடன்கொண்டு, சுவிசேஷத்தைப் பிரசங்கித்தனர் (பிலி 1:14). அவர்கள் சுவிசேஷத்தைப் பிரசங்கிப்பதைக் குறித்தப் பயத்தை உதறித் தள்ளிவிட்டு, துணிவுடன் கிறிஸ்துவை அறிவித்தனர். இப்படியாக பவுலின் சிறைவாசமானது, "சுவிசேஷம் பிரபலமாகும்படிக்கு ஏதுவாயிற்று."
தீமையை நன்மையாக மாற்றுகிற தேவன் நம் தேவன்! அவரையே துதிப்போமாக!!