WFTW Body: 

இரண்டு குருடர்கள் இயேசுவினிடத்தில் வந்த சம்பவத்தைக் கவனியுங்கள். மத்தேயு 9:27-ல், இரண்டு குருடர்கள் இயேசுவைப் பின்தொடர்ந்து வந்து, “எங்களுக்கு இரங்கும்” என்று கேட்டதாகவும், இயேசு அவர்களிடம், “நான் உங்களுக்கு என்ன செய்ய வேண்டும் என்று விரும்புகிறீர்கள்?” என்று கேட்டதாகவும் வாசிக்கிறோம் (மற்றொரு சுவிசேஷத்தில் இதற்கு இணையாக உள்ள பகுதி இதைத் தெளிவாக்குகிறது.) அவர்கள், “எங்கள் கண்கள் திறக்கப்பட வேண்டும் என்று நாங்கள் விரும்புகிறோம்!” என்று கூறினார்கள். பின்னர் இயேசுவானவர் மத்தேயு 9:28-ல் அவர்களிடம், “இதைச் செய்ய எனக்கு வல்லமை உண்டென்று விசுவாசிக்கிறீர்களா?” என்று ஒரு கேள்வியைக் கேட்கிறார்.

அது ஒரு மிக முக்கியமான கேள்வியாகும். தேவன் வாக்குத்தத்தம் பண்ணியிருக்கிற ஏதேனும் ஒரு காரியத்தைக் குறித்து நீங்கள் அவரிடத்தில் வேண்டுதல் செய்யும்போது, அவர் கேட்கும் ஒரு முக்கியமான கேள்வி இதுவாகும். “ஆண்டவரே, என் குருட்டுக் கண்கள் திறக்கப்பட வேண்டும்,” அல்லது, “நான் ஒரு நோயிலிருந்து குணமடைய வேண்டும்,” அல்லது, “ஒரு குறிப்பிட்ட பாவப் பழக்கத்திலிருந்து நான் விடுதலையாக்கப்பட வேண்டும்,” அல்லது, “ஆண்டவரே, எனக்கு ஒரு வேலை கிடைக்க வேண்டும்,” அல்லது, “நான் வசிப்பதற்கு ஓர் இடம் வேண்டும்” என்று அநேகக் காரியங்களை நாம் தேவனிடத்தில் கேட்க முடியும். தேவன் நமது ஆவிக்குரிய மற்றும் சரீரப் பிரகாரமான அனைத்து தேவைகளைக் குறித்தும் அக்கறை உடையவராகவே இருக்கிறார். ஆனால் நாம் தேவனிடத்தில் ஒரு குறிப்பிட்ட காரியத்திற்காக வேண்டுதல் செய்த பிறகு அவர் நம்மிடம் கேட்கும் கேள்வி இதுதான்: “நான் உங்களுக்காக இதைச் செய்ய எனக்கு வல்லமை உண்டென்று விசுவாசிக்கிறீர்களா?” இயேசுவே இந்தக் கேள்வியைக் கேட்கிறார்.

தேவன் தம்முடைய வல்லமையின்படி காரியங்களை நம் வாழ்வில் நடப்பிக்காமல், நம்முடைய விசுவாசத்தின்படியே நமக்கு நடப்பிக்கிறார் என்பது உங்களுக்குத் தெரியுமா? உங்களுக்கு ஏதாவது ஒரு காரியத்தில் விசுவாசம் இல்லையென்றால், நீங்கள் வேண்டிக்கொள்வதைக் காட்டிலும் அதிகமாகச் செய்ய தேவன் வல்லவராக இருந்தாலும், அவர் உங்கள் வாழ்வில் செய்ய விரும்புகிற எல்லாவற்றையும் நீங்கள் அனுபவிக்க மாட்டீர்கள். உங்கள் விசுவாசத்தின் அளவைப் பொருத்து மட்டுமே நீங்கள் விடுதலையை அனுபவிப்பீர்கள்.

முதல் குருடன் இயேசுவிடம் வந்து, “நல்லது ஆண்டவரே, நீர் ஒரு கண்ணை மட்டும் திறக்க முடிந்தால் கூட அதுவே எனக்குப் போதுமானது, நான் மிக்க மகிழ்ச்சியடைவேன். ஒரு கண் தெரிந்தாலே நான் இந்த பூமியில் உயிர்வாழ முடியும்; அதை நீர் செய்ய முடியும் என்று நான் விசுவாசிக்கிறேன்” என்று கூறுவதாகக் கற்பனை செய்து கொள்ளுங்கள். மத்தேயு 9:29-இல் இயேசு கூறுவது போல, “உன் விசுவாசத்தின்படியே உனக்கு ஆகக்கடவது” என்றே அவனிடம் கூறியிருப்பார். “என் வல்லமையின்படி அல்ல, உன் விசுவாசத்தின்படியே” என்றே ஆண்டவர் கூறுகிறார். இந்த மனிதன் அந்த இடத்திலிருந்து வெளியே செல்லும்போது ஒரு கண் திறக்கப்பட்டவனாகவும், ஆனால் மற்றொரு கண் குருடாகவுமே வெளியே செல்வான். இப்போது இதுவே மிகவும் நல்லதுதான்; ஒரு குருடனுக்கு ஒரு கண் திறக்கப்பட்டதே மிகவும் அற்புதமான காரியம்தான்.

பின்னர் இன்னொரு குருடன் வருகிறான் என்று கற்பனை செய்து கொள்ளுங்கள். ஆண்டவர் அவனிடமும் அதே கேள்வியைக் கேட்கிறார்: “இதைச் செய்ய எனக்கு வல்லமை உண்டென்று விசுவாசிக்கிறாயா?” என்று கேட்கிறார். அவன், “ஆம் ஆண்டவரே! என் இரண்டு கண்களையும் திறக்க உம்மால் கூடும் என்று நான் விசுவாசிக்கிறேன்! உம்மால் கூடாதது என்ன? எல்லாம் கூடும்” என்று கூறுகிறான். உடனே இவனுடைய இரண்டு கண்களும் திறக்கப்படுகின்றன. (ஒரு கண் மட்டுமே திறந்திருந்த) மற்றொரு குருடனை இவன் சந்திக்க நேர்ந்தால், அந்த மனிதன், “உனக்கு எப்படி இரண்டு கண்களும் திறக்கப்பட்டன?! இது ஏதோ ஒரு தவறான போதனையாக இருக்க வேண்டும்” என்று கூறுகிறான்! இது தவறான போதனை அல்ல; மாறாக, இரண்டாவது குருடனுக்கு முதலாம் குருடனை விட அதிகமான விசுவாசம் இருந்தது, அவ்வளவுதான்.

இந்த இரண்டு கண்களையும், நம் பாவங்களிலிருந்து மன்னிக்கப்படுதல், நம் பாவங்களிலிருந்து இரட்சிக்கப்படுதல் என்ற இவ்விரண்டிற்கும் நாம் ஒப்புமைப் படுத்தலாம். ஒருவருக்கு இரண்டுமே கிடைக்கிறது; மற்றொருவருக்கு முதல் ஒன்று மட்டுமே கிடைக்கிறது. அது ஏன்? தேவன் அந்த நபரிடம் பட்சபாதம் காட்டியதினாலா? அந்த நபர் இவரைக் காட்டிலும் ஒரு சிறந்த மனிதர் என்பதினாலா? இல்லை. கிறிஸ்து தனக்குச் செய்வதாக வாக்குத்தத்தம் பண்ணின எல்லாவற்றைக் குறித்தும் அவருக்கு தேவன்பேரில் விசுவாசம் இருந்தது. ஒருவருக்கு கிறிஸ்து தனது பாவத்தை மட்டுமே மன்னிக்க முடியும் என்ற விசுவாசம் மட்டுமே இருந்தது, அதனால் அவர் அதை மட்டுமே பெற்றார். வேறொருவருக்கு கிறிஸ்து தனது பாவத்தை மன்னிக்க முடியும் என்ற விசுவாசம் கூட இல்லை, எனவே அவருக்கு மன்னிப்பு கூட கிடைக்காது.

உலகில் அப்படிப்பட்டவர்கள் அநேகர் இருக்கிறார்கள். ஒருவருக்கு கிறிஸ்து தனது பாவத்தை மன்னிப்பார் என்ற விசுவாசம் மட்டும் இருக்கிறது, எனவே அவருக்கு மன்னிப்பு மட்டுமே கிடைக்கும். மற்றொருவருக்கு, கிறிஸ்து என்னை மன்னிப்பது மட்டுமல்லாமல், அந்தப் பாவப் பழக்கத்திலிருந்து என்னை விடுதலையாக்கவும் முடியும் – “இரண்டு கண்களையும் திறக்க முடியும்” – என்ற விசுவாசம் இருக்கிறது. எனவே, அவருக்கு இரண்டுமே கிடைக்கிறது. இந்த இரண்டையும் பெற்ற ஒருவர், கிறிஸ்து நம்மை மன்னிப்பது மட்டுமல்ல, நம்மை விடுவிக்கவும் முடியும் என்று போதிக்கும்போது, ​​மன்னிப்பை மட்டுமே அனுபவித்தவர்கள் அந்த மேலான விடுதலையை ஒரு தவறான போதனை என்று அழைப்பார்கள். அவர்கள் அதை அனுபவிக்காத படியால், அது சாத்தியமற்றது என்று கூறுகிறார்கள். எந்த மனிதனும் பாவத்திலிருந்து விடுதலை பெறுவது சாத்தியமற்றது என்றே அவர்கள் கூறுகிறார்கள். ஆனால் மனிதர்களுக்கு அது சாத்தியமற்றதா என்பதல்ல, அது தேவனுக்கு சாத்தியமற்றதா என்பதே கேள்வி.

தேவனால் கூடாத காரியம் ஒன்றுமில்லை என்றே இயேசு கூறினார். மனிதனுக்கு பல காரியங்கள் சாத்தியமற்றவையே. தேவனுடைய வல்லமை இல்லாமல் ஒரு மனிதனால் பாவ மன்னிப்பு பெறுவது கூட சாத்தியமற்றது தான். ஆனால் தேவனால் கூடாத காரியம் ஒன்றுமில்லை. வேறொருவர் அனுபவிக்கும் விடுதலையை நீங்கள் அனுபவிக்கவில்லை என்றால், அது ஏதோ தவறான போதனை என்பதினால் அல்ல; மாறாக, அவர் விசுவாசிக்கும் அளவிற்கு நீங்கள் விசுவாசியாததே காரணமாக இருக்கக்கூடும் என்பதை நினைவில் கொள்ளுங்கள்.

இன்னொரு உதாரணத்தைக் கூறவேண்டுமெனில், தண்ணீர் பற்றாக்குறை உள்ள ஓர் ஊரில் எல்லோருடைய வீட்டிற்கு வெளியேயும் மழை சமமாகப் பெய்கிறது என்று கற்பனை செய்து கொள்ளுங்கள். ஆகவே, மக்கள் மழைநீரை சேகரிக்க வெளியே பாத்திரங்களை வைக்கிறார்கள். அவர்களில் ஒருவர் தனது வீட்டிற்கு வெளியே ஒரு சிறிய கிண்ணத்தை வைத்தால், அவருக்கு எவ்வளவு மழைத்தண்ணீர் கிடைக்கும்? அந்த சிறிய கிண்ணம் நிறைய மட்டுமே கிடைக்கும். மற்றொருவர் தனது வீட்டிற்கு வெளியே ஒரு பெரிய தொட்டியை வைத்தால், அவருக்கு எவ்வளவு தண்ணீர் கிடைக்கும்? அந்தத் தொட்டி நிறைய கிடைக்கும்! ஒரு தொட்டி நிரம்பியிருப்பதற்கும் ஒரு கிண்ணம் நிரம்பியிருப்பதற்கும் வித்தியாசம் இருக்கிறதா? ஆம், நிச்சயமாக வித்தியாசம் இருக்கிறது! ஒரு முழு கிண்ணம் நிறைய மழைநீர் வைத்திருப்பவர், தொட்டி நிறைய மழைநீர் வைத்திருப்பவரைப் பார்த்து, “உங்களுக்கு எப்படி தொட்டி நிறைய மழை நீர் கிடைத்தது? தேவன் உங்களுக்கு பட்சபாதமுள்ளவராக இருந்திருக்கிறார், உங்கள் வீட்டின் முன் மட்டும் அதிக மழையை அனுப்பியிருக்கிறார்!” என்று கூறினால், தொட்டியை வைத்திருப்பவர், “அப்படியல்ல சகோதரரே; உங்கள் வீட்டிற்கு வெளியேயும் அதே அளவு மழைதான் பெய்தது, ஆனால் உங்கள் வீட்டிற்கு வெளியே ஒரு சிறிய கிண்ணம் மட்டுமே இருந்தது! அதுதான் உங்கள் விசுவாசத்தின் அளவு, எனவேதான் நீங்கள் பெற்றிருப்பதும் அவ்வளவு சிறிய அளவாய் இருக்கிறது” என்றே பதிலளிப்பார்.

ஆம், நமது விசுவாச அளவின் விகிதத்திற்கு ஏற்பவே நாம் தேவனிடத்திலிருந்து பெற்றுக்கொள்கிறோம். தேவனுடைய ஆசீர்வாதம் அளவில்லாதது. அவர் “கிறிஸ்துவுக்குள் உன்னதங்களிலே ஆவிக்குரிய சகல ஆசீர்வாதத்தினாலும் நம்மை ஆசீர்வதித்திருக்கிறார்,” என்று எபேசியர் 1:3 கூறுகிறது. பரிசுத்த ஆவியினால் உண்டாகும் ஒவ்வொரு ஆசீர்வாதமும், நமது முற்பிதாவான ஆதாமிடமிருந்து நாம் பெற்ற ஒவ்வொரு அவலமான பாவப் பழக்கத்திலிருந்தும் நம்மை விடுதலையாக்கும்படிக்கே அருளப்பட்டிருக்கிறது. ஆனால் இன்று தேவன் நம்மிடம் கேட்கும் கேள்வி இதுதான்: “நான் உனக்காக இதைச் செய்ய எனக்கு வல்லமை உண்டென்று விசுவாசிக்கிறாயா?”