எழுதியவர் :   சகரியா பூணன் வகைகள் :   திருச்சபை தலைவர்
WFTW Body: 

ஓர் ஆவிக்குரிய தலைவன், முதலும் பிரதானமுமாக தேவனிடமிருந்து ஓர் அழைப்பைப் பெற்றிருப்பான்! அவன் செய்யும் ஊழியப் பணியானது அவனுடைய தொழிலாயிராமல், அவனுடைய அழைப்பாகவே இருக்கும்!

எந்த ஒரு மனிதனும் தன்னைத்தானே ஓர் ஆவிக்குரிய தலைவனாய் நியமித்துக் கொள்ள முடியாது. “இந்தக் கனமான ஊழியத்திற்கு ஒருவன் தேவனால் அழைக்கப்பட்டிருக்க வேண்டும்!'' (எபிரெயர் 5:4 – லிவிங் மொழிபெயர்ப்பு). கர்த்தருடைய ஊழியத்தைக் குறித்த இந்தக் கோட்பாட்டை நாம் ஒருக்காலும் மாற்றிடவே முடியாது! இதற்கு அடுத்த வசனம் “கிறிஸ்துவும்கூட தன்னைத்தானே நமது பிரதான ஆசாரியனாக நியமித்துக் கொள்ளவில்லை” எனக் கூறுவதை நாம் காண்கிறோமே! ஆம், பிதா தாமே அவரை நியமனம் செய்தார்! காரியம் இவ்வாறிருக்க, நம்மைக்குறித்து இது எவ்வளவு அதிகம் மெய்யாயிருக்க வேண்டும் என்பதை எண்ணிப் பாருங்கள்.

ஆனால், இன்றைய துயரம் யாதெனில் இந்தியாவில் உள்ள அதிகபட்சமான ஊழியர்கள், தங்கள் பிழைப்பிற்காகவே ஊழியம் செய்கிறார்கள். கிறிஸ்தவ ஊழியம் அவர்களுக்கு "ஒரு தொழிலாக” இருக்கிறதேயல்லாமல், அவர்கள் தேவனால் அழைக்கப்படவேயில்லை.

தொழில்” என்பதற்கும் “அழைப்பு” என்பதற்கும் இடையில் ஏராளமான வித்தியாசங்கள் உண்டு. இதை நீங்கள் தெளிவாய் அறிந்து கொள்ளும்படி சற்று விளக்கிக்கூற விரும்புகிறேன். உதாரணமாய், மருத்துவமனையில் சுகவீனமாய் இருக்கும் ஒரு குழந்தையை ஒரு நர்ஸ்(nurse) தன்னுடைய “பணிநேர முறைமையின்படி (shift duty)" 8-மணி நேரம் கவனித்துப் பராமரிப்பாள். பின்பு அந்த நர்ஸ் தன் வீட்டிற்குச் சென்றவுடன், அந்தக் குழந்தையை முற்றிலும் மறந்துவிடுவாள். அவள் அந்தக் குழந்தையின்மீது காட்டிய கரிசனையெல்லாம் 8-மணி நேரங்கள் மாத்திரமே! இப்பொழுது அவள் சினிமா பார்க்கச் செல்லவோ, டெலிவிஷன் முன் அமரவோ அல்லது வேறு ஏதாவது காரியங்களைச் செய்யவோ முற்படுவாள். ஆம், அடுத்தநாள் மருத்துவமனை செல்லும் வரை அந்தக் குழந்தையைப் பற்றி அந்த நர்ஸ் யாதொன்றும் சிந்திக்கத் தேவையே இல்லை. ஆனால், அந்தக் குழந்தையின் தாய், 8-மணி நேரக் கடமை முறையில் பணியாற்றுவாளோ? தன் குழந்தை வியாதிப்படுக்கையில் இருக்கும்போது அவள் எப்படி சினிமா பார்க்கச் செல்லுவாள்? இதுவே தொழிலுக்கும் அழைப்புக்கும் உள்ள வித்தியாசமாகும்.

மேற்கண்ட உதாரணத்தைக் கொண்டு, உங்கள் சபையில் உள்ள விசுவாசிகள் மீது நீங்கள் எவ்வித கரிசனை கொண்டிருக்கிறீர்கள் என்பதை ஒப்பிட்டுப் பார்த்தால், நீங்கள் ஒரு நர்ஸா, அல்லது ஒரு தாயா என்பதை நீங்களே கண்டுபிடித்துவிடுவீர்கள்!

இதை பவுல் தன்னுடைய ஊழியத்திற்கு ஒப்பிட்டுக் கூறும் போது, “உங்களிடத்தில் பட்சமாய் நடந்துகொண்டோம்; பால் கொடுக்கிற தாயானவள் தன் பிள்ளைகளைக் காப்பாற்றுவது போல, நாங்கள் உங்கள் மேல் வாஞ்சையாய் இருந்து, தேவனுடைய சுவிசேஷத்தை உங்களுக்குக் கொடுத்ததுமல்லாமல், நீங்கள் எங்களுக்குப் பிரியமானவர்களானபடியினாலே, எங்கள் ஜீவனையும் உங்களுக்குக் கொடுக்க மனதாயிருந்தோம்” என்றே கூறினார் (1தெசலோனிக்கேயர் 2:7,8).

பார்த்தீர்களா, பவுல் தெசலோனிக்கேய கிறிஸ்தவர்களுக்கு சுவிசேஷத்தை கொடுத்ததுமல்லாமல் தன் ஜீவனையும் கொடுத்ததாகக் கூறுகிறாரே! இதே உன்னத வழியில் செய்யப்படாத எந்த ஊழியமும், ஒரு மெய்யான கிறிஸ்தவ ஊழியம் அல்லவே அல்ல! இம்மாசற்ற வழியில் சென்று பவுல் தேவனுக்கு ஊழியம் செய்ய முடிந்ததற்கு காரணம், அந்த ஊழியத்திற்காக அவர் பெற்ற அழைப்பேயாகும். ஆம், ஊழியம் ஒன்றும் அவருக்கு ஒரு தொழிலாய் இருக்கவில்லை!

கர்த்தருக்கு ஊழியம் செய்வது அற்புதமானது. இந்த உலகத்தின் எந்தப் பணியைக் காட்டிலும் இதுவே மாபெரும் பணியாகும்! இந்த பூமியில், இந்தப் பணிக்கு ஒப்பிட்டு எதையும் கூறிவிட முடியாது! ஆனால், நீங்கள் அழைக்கப்பட்டிருக்க வேண்டும்! அது ஒருக்காலும் ஒரு தொழிலாய் மாறிடவே கூடாது!

நான் இந்திய கப்பற்படையில் ஓர் அதிகாரியாய் பணியாற்றிய சமயம், தேவன் என்னை அவருக்கு முழு நேரமாய் ஊழியம் செய்யும்படி 1964-ம் வருடம் மே 6-ந் தேதி அழைத்தார்! நான் உடனே என்னுடைய இராஜினாமா கடிதத்தை கப்பற்படை தலைமைக்கு அனுப்பினேன். ஆனால் என்னுடைய விண்ணப்பம், மோசே பார்வோனிடத்தில் சென்று, இஸ்ரவேலர்களைப் போகவிடும்படி கேட்டுக் கொண்ட விண்ணப்பத்தைப் போலிருந்தது! ஆம், இந்திய கப்பற்படை என்னைப் பணியிலிருந்து விடுவிக்க மறுத்து விட்டது. நான் திரும்பத்திரும்ப விண்ணப்பித்து முடிவில் இரண்டு வருடங்களுக்குப் பிறகுதான் தேவனுடைய சம்பூரணமான நேரத்தில் ஆச்சரியப்படத்தக்க வகையில் பணியிலிருந்து விடுவிக்கப்பட்டேன்.

இவ்வாறு தேவனால் அழைக்கப்பட்டது எத்தனை பெரிய வித்தியாசத்தை என் வாழ்க்கையில் கொண்டுவந்துவிட்டது!

முதலாவதாக, என்னையோ அல்லது என்னுடைய ஊழியத்தைக் குறித்தோ, ஜனங்கள் என்ன எண்ணுகிறார்கள் என்பது ஒரு பொருட்டாய் எனக்கு இப்போது தோன்றவில்லை! ஏனெனில் இப்போது என்னுடைய எஜமான் வேறொருவர். நான் அவருக்குமாத்திரமே இப்போது பதில் சொல்ல வேண்டும்!

இரண்டாவதாக, என்னுடைய ஊழியத்தில் நான் எப்போதெல்லாம் உபத்திரவங்களை அல்லது எதிர்ப்புகளை சந்திக்கிறேனோ (இன்றும் இதுபோன்ற துன்பங்கள் அடிக்கடி எனக்கு சம்பவித்துக் கொண்டுதான் இருக்கின்றன) அப்போதெல்லாம் தேவன் என் பட்சத்திலிருந்து தம்முடைய கிருபையை எனக்கு நிச்சயம் தருவார் என, இப்போது நான் தேவனை நம்பியிருக்க முடியும்!

மூன்றாவதாக, இனி எனக்கு பணம் வருகிறதோ வரவில்லையோ அல்லது புசிப்பதற்கு சாப்பாடு கிடைக்கிறதோ அல்லது கிடைக்கவில்லையோ என்பதைக் குறித்து எந்தக் கவலையும் எனக்கு இல்லை! எனக்கு உணவும், பணமும் கிடைத்தால் நல்லதுதான். எந்த உணவும் அல்லது பணமும் கிடைக்காவிட்டாலும் எனக்கு நல்லதுதான்! இவ்வாறு பணமோ அல்லது உணவோ கிடைக்காததினிமித்தம், நான் ஆண்டவருக்கு ஊழியம் செய்வதை என்னால் நிறுத்திவிட முடியாது. ஏனெனில், தேவன் என்னை அழைத்திருக்கிறாரே!

என் அழைப்பை, நான் விட்டுவிட முடியாது! நான் மாத சம்பளம் வாங்கும் ஊழியனாக இருந்தால், எனக்குரிய சம்பளம் வராதபோதோ அல்லது தேவையான சாப்பாடு கிடைக்காத போதோ அந்த வேலையை நான் விட்டுவிட முடியும்! ஆனால் இப்போது நான் பெற்ற ஊழியமோ, ஒரு தாய்க்கும் அவளுடைய பிள்ளைக்குமுரிய உறவைப்போல் ஆகும். ஒரு மாதத்தில் தன்னுடைய சம்பளம் வராததினிமித்தம், ஒரு நர்ஸ் தன் பணியிலிருந்து நின்றுவிட முடியும். ஆனால், ஒரு தாய் ஒருபோதும் தன் பணியை அவ்வாறு நிறுத்திவிட முடியாதே! ஒரு தாயினுடைய பணிக்கு யாரும் சம்பளம் தருவதேயில்லை. அவ்வாறு உணவோ அல்லது பணமோ தனக்கு கிடைக்காதிருந்தும், அந்தத் தாய் தன் பிள்ளையைப் பேணிப் பராமரிப்பாள்!

இவ்வாறு தேவனால் அழைக்கப்படுவதுதான் எத்தனை மகிமையான காரியமாயிருக்கிறது!