ஆம்! இன்று அவருக்குத் தேவைப்படும் மனிதர்கள்.....
இவ்வாறு, தேவனை மாத்திரமே முற்றிலுமாய் பற்றிக்கொண்டு வாழும்..... அல்லது, அவரது பிரசன்னத்தை, விட்டு விலகாத புருஷர்களையே, தேவன் தனக்கென தேடுகிறார்!
இன்னும் தொடர்ந்து......
தங்களுக்கு முன் சென்ற அப்போஸ்தலர்கள், தீர்க்கதரிசிகள் போன்று, முழுக்க முழுக்க ஒத்த வேஷம் தரியாத புருஷர்களே
ஆ! அந்த மனிதர்களே தேவனுக்கு தேவை!!
இன்று உலகில், இப்பேர்பட்ட மனிதர்கள் மிக மிக கொஞ்சம் பேர்களே இருக்கிறபடியால், தேவனுடைய தூய பணி பாதிக்கப்பட்டுள்ளது!
பாவமும் வேசித்தனமும் நிறைந்த இன்றைய சந்ததி நடுவில், ஒத்த வேஷத்தில் மூழ்கித்திளைக்கும் இன்றைய கிறிஸ்தவத்தின் மத்தியில், தேவனுக்கென்று நீங்களே இப்படிப்பட்ட மனிதராய் இருப்பதற்கு உங்கள் முழு இருதயத்தோடும் தீர்மானம் எடுங்கள். தேவனிடத்தில் பட்சபாதம் இல்லையே! ஆகவே, நீங்கள் மாத்திரம் இப்படிப்பட்ட மனிதராய் இருப்பதற்கு உங்கள் முழு இருதயமாய் வாஞ்சை கொண்டு விட்டால், இப்போது நீங்களும் இப்பேர்பட்ட மனிதராய் மாறிவிடுவீர்கள் என்பது உறுதி!! தேவன் எதிர்நோக்கும் பூரண ஒப்புக்கொடுத்தலும், கீழ்ப்படிதலும், நீங்கள் “உணர்ந்து செயல்படுகிற” உங்கள் வாழ்க்கையின் எல்லை மாத்திரமே! இந்த குறுகிய எல்லையிலிருந்து பூரணத்தை நோக்கி நீங்கள் கடந்துச் செல்லும்போது, உங்கள் எல்லை கொஞ்சம் கொஞ்சமாய் விசாலமடைந்து விடும்! இவ்வாறிருக்க, நீங்கள்..... ஆம், நீங்களே அந்த மனிதராய் ஏன் மாற முடியாது என்பதற்கு எந்தவித சாக்குப் போக்கிற்கும் இடமேயில்லை!! நம் மாம்சத்தில் நன்மை ஒன்றும் வாசமாயில்லையே! எனவே மேற்கண்ட குணாதிசயங்கள் நம்மில் காணப்படுவதற்கு தேவனிடத்திலிருந்து கிருபையை வாஞ்சித்துத் தேடுவோமாக!! முடிவடையப் போகும் இந்த காலத்தில், நீங்களும் இப்படிப்பட்ட புருஷராய் மாறுவதற்கு அவர் தன் கிருபையைத் தரும்படி, அனுதினமும் தேவனிடம் ஜெபியுங்கள்!
கேட்பதற்கு காதுள்ளவன் எவனோ, அவன் கேட்கக்கடவன்!
ஆதியில் தேவன் படைத்த ஒரே ஸ்திரீயாகிய ஏவாள் மூலம் வெளிப்படுத்தும்படி மனதிற்கொண்டாரே“அந்த தெய்வமகிமையை" தங்களின் பக்தியான ஜீவியத்தின் மூலம் பிரகாசிக்கச்செய்திடும் ஸ்திரீகளே இன்று தேவனுக்குத் தேவை!
மனிதனின் ஏற்ற துணையாய் இருப்பதன்றோ அவளின் மகிமை!
ஸ்திரீயானவள் மனிதனுக்கு ஏற்ற துணையாய் அல்லது“உதவுகின்றவளாய்” (HELPER) இருக்க வேண்டுமென்றே தேவன் ஏவாளை சிருஷ்டித்தார் (ஆதி.2:18). இந்த ஊழியத்தின் மகிமைதான் எத்தனை பெரியது! ஏன் தெரியுமா? இயேசுவானவர் பரிசுத்தாவியானவரைக் குறிப்பிடும் போதெல்லாம் 'அவரையும்' தேற்றுதல் செய்து “உதவுபவர்”(HELPER) என்றே குறிப்பிட்டார்!! (யோ.14:16).
பரிசுத்தாவியானவர் எவ்வாறு ஒரு விசுவாசிக்கு மறைந்து நின்று, மௌனமாய் ஆனால் அதே சமயம் வல்லமையாய் உதவி செய்கிறாரோ, “அதைப்போலவே” ஸ்திரீயானவளும் மனிதனுக்கு உதவும்படி படைக்கப்பட்டாள். “காட்சிக்குப் பின்னாக மறைந்து” ஊழியம் செய்வது பரிசுத்தாவியானவரின் தனிச்சிறப்பு! ஆ அதுவே ஸ்திரீக்கும் உரித்தாகும்!!
இயேசுவின் வாழ்க்கையே ஸ்திரீகளுக்கும் மாதிரியாய் அமைகின்றது. எப்படியென்றால், புருஷன் எவ்வாறு ஸ்திரீக்கு தலையாய் இருக்கிறானோ, அதைப்போலவே பிதாவாகிய தேவன் கிறிஸ்துவுக்குத் தலையாய் இருக்கிறார் என வேதம் விளம்புகின்றது (1கொரி.1:13). இயேசுவானவர் எப்போதுமே தன் பிதாவுக்கு அடங்கி கீழ்ப்படிந்தே ஜீவியம் செய்தார். கர்த்தருக்குப் பயந்த ஓர் சகோதரியும் இதைப் போலவே தன் கணவனுக்கு அடங்கியிருப்பாள். ஆனால் அந்தோ! ஏவாள் தீர்மானம் எடுக்கும் முன்பு, தன் புருஷனை கலந்தாலோசிக்கத் தவறி, ஏதேன் தோட்டத்தில் பெரும்பிழையைச் செய்தவளாய் நின்றாள்..... இப்படித்தான் அவள் சாத்தனால் வஞ்சிக்கப்பட்டாள் (1தீமோ.2:14). ஏவாள் எங்கு தோற்று வீழ்ந்தாளோ, அதே இடத்தில் இப்போது தங்கள் புருஷர்களுக்கு “அடங்கி ஜீவிக்கும் மகிமையை” ஜொலித்திடச் செய்யும்படி, கிறிஸ்தவ மனைவியர்களை அழைக்கிறார்!! ஆம், இயேசு தன் பிதாவுக்கு, அடங்கியிருந்ததற்கு ஒப்பான அதே மகிமை!! (எபேசியர்.5:24).
பாவமானது முரட்டாட்டமான லூசிபரினால் இவ்வையகம் பிரவேசித்தது! இரட்சிப்போ அடங்கி கீழ்ப்படிந்த கிறிஸ்து மூலமாய் மலர்ந்து விரிந்தது!! தேவன் நியமித்த அதிகாரத்திற்கு தாழ்த்தி கீழ்ப்படிந்திருக்கும் ஆவியே, இம்மண்ணுலகில் காணும் சகல வல்லமையிலும் மேலான வலிமை நிறைந்தது. ஏன் தெரியுமா? ஏனெனில் அதுவே கிறிஸ்துவின் ஆவி! இந்த ஆவியே முரட்டாட்ட ஆவிகளின் மொத்த ரூபத்தைச் சிலுவையின்மேல் வெற்றி சிறந்து கெம்பீரித்தது.
ஓர் மனைவி தன் புருஷனுக்கு அடங்கி கீழ்ப்படியும்போது அவள் செய்வதெல்லாம், அவ்வாறு கீழ்ப்படியும்படி கட்டளையிடும் தேவ வார்த்தையின் அதிகாரத்திற்கே கீழ்ப்படிந்தவளாகின்றாள்! இப்போது நடப்பது என்ன? கேளுங்கள்! அவள் இப்பாருலக வல்லமைகளுக்கெல்லாம் மேலான வல்லமையால் நிறைந்தவளாகின்றாள்!! இந்த வல்லமையால் அவள் தன் மனந்திரும்பாத புருஷனையும் ஆதாயம் செய்து விடுகின்றாள் (1பேதுரு.3:1,2). இவ்வாறு தன் ஜீவியகாலமெல்லாம் கீழ்ப்படிதலின் ஆவியில் ஜீவிப்பாளென்றால், அவள் இயேசுவோடு நித்திய காலமாய் ஆளுகைசெய்யும் பாக்கியத்தையும் பெற்று விளங்குவாள்!! (வெளி.3:21).
சத்துருவாகிய சாத்தான், எவ்வாறு தூதர்களை வழிதப்பிச் சீரழிய நடத்தினானோ அதைப்போலவே 'முரட்டாட்ட ஆவியின் மூலமாக' ஸ்திரீகளையும் நடத்தி அவளை வஞ்சிக்கிறான். முரட்டாட்டமான மனைவி தன் இனிய இல்லத்தைப் பாழான பாலைவனத்திற்கும் கேடான வனாந்தரமாய் மாற்றி விடுகின்றாள்.... இப்படித்தான் நீதி.21:19 விவரிக்கின்றது. இதற்கு நேர்மாறாக, குணசாலியான கீழ்படிந்து ஜீவிக்கும் மனைவியோ, தன் புருஷன் மாமன்னனாயிருக்கும்படி முடிசூட்டி (நீதி.12:4) தன் இல்லத்தை ராஜ அரண்மனை ஆக்கிவிடுகிறாள்!! ஆவிக்குரிய வர்ணிப்பின்படி, சகோதரியே! உங்கள் இல்லம் ராஜ அரண்மனையாகவோ அல்லது பாலைவன வனாந்தரமாகவோ மாறிவிட முடியும். அதெல்லாம், நீங்கள் எந்த ரக மனைவியாய் இருப்பீர்களோ அதைப் பொருத்தே உள்ளது. காரியம் இப்படியாயிருக்கும் போது, தேவனுடைய பார்வையில் சாந்தமும் அமைதலுமுள்ள ஆவியே விலையேறப் பெற்றதாய் இருப்பதில் ஆச்சரியம் ஒன்றுமில்லையே! (1 பேதுரு.3:4).
குணசாலியான ஸ்திரீயைப்பற்றிய சில குணாதிசயங்களை நீதி.31:10-31 வசனங்கள் மிக அழகாய் சித்தரிக்கின்றன. அவளின் இருதயம், அவளின் கரங்கள், அவளின் நாக்கு மிக அருமையானது என கூறப்பட்டுள்ளது. ஆனால், அவளின் சரீர அழகைப் பற்றியோ, ஸ்திரீகளுக்குரிய கவர்ச்சியைப்பற்றியோ... ஒன்றுகூட சொல்லப்படவில்லை! ஏனென்றால், அவைகளெல்லாம் வஞ்சனையும் வீணானதுமே என வசனம் 30 - பகிரங்கப் படுத்திவிட்டதே!! இந்த உண்மையை எல்லா ஸ்திரீகளும், வாலிபப் பெண்களும், குறிப்பாக.... திருமணம் செய்ய காத்திருக்கும் வாலிபர்களும் தீர்க்கமாய் உணர்ந்து விட்டால், காரியம் மிக அருமையாய் மாறிவிடும்!
போற்றி விளக்கப்பட்டிருக்கும் இந்த குணசாலியான ஸ்திரீ, கர்த்தருக்குப் பயந்திடும் ஓர் இருதயம் கொண்டவள்! இதுவன்றோ அவளின் முழு ஜீவியத்திற்கும் அரண்போன்ற அஸ்திவாரம்!! அவள் தன் கரங்களால் உற்சாகத்தோடு வேலை செய்கிறாள்; உடுப்புகளைப் பின்னித் தைக்கிறாள்; தன் வீட்டாருக்கு ஆகாரம் செய்ய சமைக்கிறாள்;
மரங்களை நடுகின்றாள்; ஏழைகளுக்கு உதவிக்கரம் நீட்டுகின்றாள் (வச.13,20); தன் நாவை ஞானமும் தயையும் விளங்கவே எப்போதும் உபயோகிக்கின்றாள் (வச. 26). பார்த்தீர்களா இவளை! இவளுக்கு ஒருவேளை அழகில்லாவிட்டாலும், இவளோ கர்த்தருக்குப் பயந்தவள், கடினமாய் உழைக்கும் அன்பு நிறைந்தவள்!! தேவனின் மகிமையை ஜொலித்திடச் செய்வதெல்லாம் இவளின் சுத்த இருதயமே, இவளின் சொரசொரப்பான கரங்களே, இவ்வாறு அவரின் மகிமையைப் பிரகாசிக்கச் செய்யும் ஸ்திரீகளைக் காண்பதற்கே தேவன் தவித்து நோக்குகின்றார்!! ஆனால் லௌகீகமான ஸ்திரீகளோ, அருவருக்கும் இருதயம் உடையவர்களாயும், முரட்டு நாவுடையவர்களாயும், ஆனால் கரங்களோ... பூப் போன்ற மென்மை உடையவர்களாயும் இருக்கின்றனர்! இது பரிதாபம்!!
iii) தன் புருஷனின் அழைப்பு, சம்பாத்தியத்திற்கேற்ப இணங்கி' செல்லுவாள்!
மனைவியின் ஸ்தானத்தில், தன் கணவனுக்கு உதவும்படி அவனுக்கு உறுதுணையாய் நின்றிடுவாள். எப்போதோ தனக்கு இஷ்டமான நேரத்தில் அல்ல, அவள் உயிரோடிருக்கும் நாளெல்லாம் எக்காலமும் தன் புருஷனுக்கு நன்மையையே செய்கின்றாள் (வச.12). சரியாய் சொல்ல வேண்டுமென்றால், இவள் தன் புருஷனிடம் கொண்ட ஆதி அன்பை ஒருபோதும் இழக்காத பெண்மணி. இவள் தன் புருஷனின் சம்பாத்தியத்திற்கும், அழைப்பிற்கும் ஏற்ப “இணங்கிச் செல்லுவாள். தன் வீட்டில் அமைதலாய் உழைக்கும் உழைப்பையும், ஒரு காசு கூட வீணாகாமல் ஜாக்கிரதையாய் செலவு செய்யும் அவள் சிக்கனத்தையும் “கூடுதல்படியாக” (BONUS) தன் புருஷனின் சம்பாத்தியத்தோடு கூட்டி வழங்குவாள்! தேசத்தில் கர்த்தர் தன் புருஷனுக்கு நியமித்த ஊழியத்தை நிறைவேற்றும் பொருட்டு, அவனை வீட்டுவேலை பொறுப்புகளிலிருந்து விடுதலை செய்கிறாள் (வச.23:27). இப்பேர்பட்ட குணசாலியான ஸ்திரீயை, இவ்வுலகத்தில் உள்ள எல்லா ஸ்திரீகளிலும், அது.... பெண் பிரதம மந்திரிகளோ, பிரசங்கிக்கும் ஸ்திரீகளோ ஆனாலும், “அவர்களைக் காட்டிலும் நீயே மேற்பட்டவள்!” என அவள் புருஷன் புகழ்வதில் ஆச்சரியம் ஒன்றுமில்லை (வச.29). தான் ஸ்திரீயாக அழைக்கப்பட்டதின் மகிமையை உணர்ந்து வாழ்ந்த இவளே குணசீலியான மனைவி!
நம் வீட்டில் “பரிசுத்தவான்களுக்குச் செய்யும் பணிவிடை” குறித்து புதிய ஏற்பாடு அதிக முக்கியத்துவம் தருகிறது. “உணவோ அல்லது இரவு தங்குவதற்கு இடமோ, தேவையானவர்களுக்கு பகிர்ந்தளிக்கும்படி உங்கள் இல்லத்தை மகிழ்வுடன் திறந்திடுங்கள்... விருந்தாளிகளை விருந்துண்ண அழைக்கும் நற்பழக்கத்தை நாடுங்கள்” என 1பேதுரு.4:9, ரோமர்.12:3 வசனங்கள் கூறுகின்றன (LIVING BIBLE மொழிபெயர்ப்பு). வீட்டில், விருந்தோம்பலின் பொறுப்பு மனைவிக்கே பிரதானமானது. ஒரு ஸ்திரீ தீர்க்கதரிசியாய் இல்லாமலே, ஒரு தீர்க்கதரிசியைத் தன் வீட்டிற்கு வரும்படி வரவேற்றதினிமித்தம் தீர்க்கதரிசிக்கேற்ற பலனை அடைந்திட முடியும் (மத்.10:41). எளிய இயேசுவின் சீஷனுக்கு அவள் செய்த பணிவிடையினிமித்தமும், தன் பலனை அடைவாள்! (மத்.10:42).
நம் வீட்டில் ஓர் அப்போஸ்தலனை மனமுவந்து ஏற்றுக்கொள்வது இயேசுவையே ஏற்றுக்கொள்வதற்கு ஒப்பாகும் (மத்.10:40). அதுபோலவே இயேசுவின் நாமத்தில் ஓர் சிறு பிள்ளையை ஏற்றுக்கொள்வதும் இயேசுவை ஏற்றுக்கொண்டதற்கு இணையாகும் (மத்.18:5), உபசரிக்கும் விருந்தோம்பலின் மூலம் சகோதரிகளுக்குத்தான் எத்தனை அருமையான வாய்ப்புகள் வழங்கப்பட்டிருக்கின்றன!
‘ஆதிக்கிறிஸ்தவர்கள்' கிட்டத்தட்ட அனைவருமே மிக ஏழைகள்! ஆனால் இவர்களுக்குத்தான் பவுலும், பேதுருவும் விருந்தோம்பலைக் குறித்து நிருபங்கள் எழுதினர். எளிய உணவேயானாலும், படுத்துறங்க வெறும் தரையே ஆனாலும் அதைத்தான்' மனமுவந்து பரிசுத்தவான்களுக்கு அளிக்கும்படி கேட்டுக் கொள்ளப்பட்டனர். மனுஷீகப் புகழ்ச்சியை நாடும் விசுவாசிகள் மட்டுமே கொழுத்த உணவும், ஆடம்பர தங்கும் வசதியும் இருந்தால்தான் உபசரிக்க முடியும் என எண்ணிக்கொள்ளுகிறார்கள். ஆனால் 1தீமோத்தேயு.5:10-ம் வசனம் கூறும் உண்மையைக் கேளுங்கள்: முதலாம் நூற்றாண்டில் காணப்பட்ட ஏழை விதவைகள்கூட தங்கள் வீட்டில் பரிசுத்தவான்களுக்குப் பணிவிடை செய்திருக்கின்றார்கள்!!
ஆம், தான் ஒரு வீட்டை உருவாக்குபவள் என்ற தன் அழைப்பைக் கண்டுகொண்ட ஓர் ஸ்திரீயிடம் மாத்திரமே இவ்விதமான தேவனின் மகிமையைக் காண முடியும்!
ஆதாம் தன் மனைவியை “ஏவாள்” என அழைத்தான். அதற்கு காரணம், அவள் ஒரு தாயாக இருந்ததேயாகும். ஏதேன் தோட்டத்தில், தேவ பிரசன்னத்தின் அத்தூய ஒளியில், அவன் தன் மனைவியின் ஊழியம் இன்னது என அவ்வளவு துல்லியமாக அறிந்துணர்ந்தான்!! ஏவாளும் அதை அறிந்திருந்தாள். ஆனால் இன்றோ, பாவமும் சாத்தானால் வழங்கப்பட்ட மனுஷீகப் பாரம்பரியங்களும், ஸ்திரீயானவள் ஓர் தாயாக இருக்கும் அவளின் மகிமையைக் காணக்கூடாதபடி அவளின் மனக்கண்களை மந்தாரமடையச் செய்துவிட்டது. தேவன், பிள்ளைகளை “சுதந்திரம்” (சங்.127:4) என அழைக்கும் போது, இன்று பிள்ளைகள் சாத்தானுக்குரிய முத்திரையான “விபரீதங்கள்” என்றல்லவா அழைக்கப்படுகின்றனர்! மேலும், தேவன் அவர்களை “ஆசீர்வாதமாகக்” கருதும் போது (சங்.127:5;128:4) இன்று அவர்கள், “தொந்தரவு பிடித்ததுகள்" என்றல்லவா கருதப்படுகின்றனர். இவையெல்லாம், இன்று எவ்வாறு கிறிஸ்தவர்கள் எனச் சொல்லி கொள்பவர்கள்கூட எத்தனை வெகுதூரம் தேவனைவிட்டு வழிவிலகி சாத்தானுக்குரிய சிந்தைகளால் வீணராய் வீழ்ந்திருக்கிறார்கள் என்பதற்கு ஓர் எடுத்துக்காட்டாகும்!
தரித்திருந்து ஆண்டவருக்கும் சபைக்கும் அதிகமானதைச் செய்து சாதித்து காட்டினாள்!
தீமோத்தேயுவின் தாயாகிய ஐனிக்கேயாளோ முற்றிலும் வேறுப்பட்ட பெண்மணி! ஆம், அவள் தன் அழைப்பைத் தெளிவாகக் கண்டிருந்தாள். தன் கணவன் அவிசுவாசியாய் இருந்தபோதும் (அப்.16:1) அது அவளின் விசுவாசத்தை மங்கச் செய்து விடவில்லை. அவள் தேவனுடைய வார்த்தையை நன்கு அறிந்த “உத்தம விசுவாசம்” (2தீமோ.1:4) நிறைந்த குணவதி! அவள் தீமோத்தேயுவுக்கு, சிறுவயது முதல் தேவனுடைய வார்த்தைகளைக் கற்றுக்கொடுத்திருந்தாள் (2தீமோ.3:14,15).
இதற்கெல்லாம் மேலாக, அவள் தன் உத்தம விசுவாசத்தையே அவனுக்குள் பொதித்து வைத்து விட்டாள்! அவிசுவாசத்தின் நச்சுப் புகை சூழ்ந்த ஓர் உலகில், தன் மகன் சுத்தமான 'விசுவாசக்' காற்றை சுவாசிக்கச் செய்திட்ட சிறந்த தாயை உடைய ஓர் இனிய இல்லமாயிருந்தது தீமோத்தேயுவின் வீடு! தன் தாய் இடைவிடமால் ஜெபிப்பதை
அவன் கண்டிருக்கக்கூடும். தன் தாய் ‘எப்போதும்' ஆண்டவரை ஸ்தோத்தரிப்பதைப் பார்த்திருப்பான்! கஷ்டம் நிறைந்த சூழ்நிலைகளில் தன் தாய் தேவனையே சார்ந்து நம்பியிருந்ததைக் கவனித்திருப்பான்! சண்டையிடுவது, குறைசொல்லி முறுமுறுப்பது ஆகிய ஜீவியம் சிறிதும் இல்லாதிருந்ததையும் கண்டிருப்பான்! ஆம், இவைகளெல்லாம்
“உத்தம விசுவாச” குணாதிசயங்களில் ஒரு சிலவாகும். எனவேதான் தீமோத்தேயு ஓர் அப்போஸ்தலனாக உருவெடுத்ததும், அப்போஸ்தலனாகிய பவுலின் நெருங்கிய உடன் வேலையாளாய் இருந்ததும், ஆச்சரியம் தருவதாகவே இல்லை. பார்த்தீர்களா! அவன் தாயின் பிரயாசங்கள் முடிவில் கனி கொடுத்துக் குலுங்கிவிட்டதே!!
இதுவே, இன்றைய 20-ம் நூற்றாண்டின் எல்லாத் தாய்மார்களுக்கும் ஓர் சவாலாய் மாறட்டும்! தீமோத்தேயுவின் தாய் ஐனிக் கேயாள் 100-வருடம் இந்த உலகம் முழுவதும் சுற்றிய ஓர் பிரசங்கியாய் இருந்து சாதிப்பதைக் காட்டிலும், தன் வீட்டில் 16-முதல் 20-வருடங்கள் முதல் தரமான தாயாகத் தரித்திருந்து ஆண்டவருக்கும் சபைக்கும் அதிகமானதைச் செய்து சாதித்துக் காட்டினாள்!! சமீப காலங்களில், 15-குழந்தைகளுக்குத் தாயாக இருந்த சூசன்னாள் வெஸ்லி என்ற குணசாலியைப் பற்றியும் கேட்டிருக்கிறோமே! அவள் இல்லத்தில் தரித்திரம் தாண்டவமாடி, அதனிமித்தம் அவளின் சில குழந்தைகள் குழந்தைப் பருவத்திலேயே மரித்துப்போயின. ஆனால் மீதியாயிருந்த 15- பிள்ளைகளையோ, அவர்கள் ஒவ்வொருவருக்காகவும் தனிப்பட்ட விதத்தில் ஜெபித்து, போதித்து தெய்வபயத்தில் வளர்த்தார்கள்.
இவ்வுத்தமியின் புத்திரர்களுள் ஒருவரான ஜான்வெஸ்லி தேவனுடைய கரத்தின் வலிமையான ஆயுதமாக உருவெடுத்து வளர்ந்து நின்றார். இந்த மகனின் ஊழிய உழைப்பாலும், எழுத்தினாலும் கடந்த இரண்டு நூற்றாண்டுகளில் இவ்வையகமெங்குமுள்ள கோடிக்கணக்கானோர் ஆசீர்வதிக்கப்பட்டனர். ஒருவேளை, சூசன்னாள் வெஸ்லி தன் இல்லத்தை உதாசீனம் செய்து பணம் அதிகம் சம்பாதிக்க வேலைக்குச் சென்றிருந்தாலோ அல்லது வேதபோதகியாய் அல்லது சுவிசேஷகியாய் இவ்வுலகம் முழுவதும் சுற்றி வந்திருந்தாலோ, தன் புத்திரன் சாதித்த கிரியைகளில் ஓர் இம்மி அளவுகூட அவளால் செய்திருக்கவே முடியாது!
வேலைக்குச் சென்ற பெண்கள், பிற்காலத்தில் தங்கள் பிள்ளைகள் ஏதேனும் ஓர்
தீமையில் வீழ்ந்து அல்லலுறுவதையே காண்கிறார்கள்!
புருஷர்களுக்கும்-ஸ்திரீகளுக்கும் உரிய ஊழியங்கள் குறித்து பவுல் தீமோத்தேயுக்கு எழுதும்போது, ஸ்திரீகளுக்கு போதக ஊழியத்திலும், மூப்பரின் ஊழியத்திலும் அனுமதியில்லாவிட்டாலும் “தாய்மையின்” ஊழியத்தில் தனக்கு உரிய பங்கைப் பெறுகின்றாள் என எழுதினார் (1தீமோ.2:12,15). இந்த நிருபத்தின் வாயிலாக, தாய்மையை ஓர் சபை ஊழியமாகவே பவுல் சிறப்பித்துக் கூறியது தெளிவாய் விளங்குகிறது. ஸ்திரீகள், தங்கள் பிள்ளைகளுக்கு கர்த்தருக்குப் பயந்த ஓர் தாயாக இருக்கும்படி தேவன் அழைத்ததே அவர்கள் ஊழியத்தின் இரண்டாவது ஸ்தானமாகும். தீமோத்தேயு தன் இளம்பிராயத்தில், தன் வீட்டில் பிரவாகித்த இம்மகிமையைக் கண்டிருந்தான். இப்போது அதைக் குறித்து எபேசில் உள்ள மற்றவர்களுக்கும் போதிக்கிறவனாய் பேறு பெற்றான்!
வாழ்வின் அநேக பகுதிகளில், ஸ்திரீகளைக் காட்டிலும் புருஷர் களே மேம்பட்டு நிற்கின்றனர். இருப்பினும், ஸ்திரீகள் தங்களுக்குரிய தனி சிறப்பு பெற்று விளங்கும் ஒரே இடம் “தாய்” என்ற ஸ்தானமே! இதுவே, ஸ்திரீயைத் தேவன் ஏன் படைத்தார் என்பதை தெளிவுபட சுட்டிக்காட்டுகிறது. ஆரம்ப காலத்தில் தன் பிள்ளைகளை அலட்சியம் செய்து, சுகபோக வாழ்விற்காக பணம் சம்பாதிக்க வேலைக்குச் சென்ற பெண்களோ அல்லது பெண் பிரசங்கிகளோ ஆனாலும், பிற்காலத்தில் தங்கள் பிள்ளைகள் ஏதேனும் ஓர் தீமையில் வீழ்ந்து அல்லலுறுவதைக் காணும் அபாக்கிய அனுபவத்தையே அடைந்திருக்கிறார்கள். இப்போது அப்பிள்ளைகளுக்காய் இந்த ஸ்திரீகள் மனம் நொந்து இருப்பதைத் தவிர அவர்களால் வேறு ஒன்றும் செய்திட முடியாது. இதுவே இன்றைய இளைய தாய்மார்களின் சந்ததிக்கும் ஓர் எச்சரிக்கையாய் மாறட்டும்!
ஒரு தாய், தன் குடும்பத்தின் வயிற்றுப் பிழைப்பிற்காக வேலைக்கு சென்றால், அக்குடும்பத்திற்குத் தேவன் ‘தன் கிருபையை' அபரிதமாக நிச்சயம் தருவார். ஆனால், ஆடம்பரத்தையும் உயர்ரக வாழ்க்கையையும் தன்னுடைய நோக்கமாய் கொள்ளும் ஸ்திரீ, ஓர் கறைப்பட்ட அறுவடையின் பலனைத்தான் எதிர்நோக்க முடியும்! ஆம், தேவன் தம்மைப் பரியாசம் பண்ணவொட்டார் (கலா.6:7,8).
ஆ! தங்கள் அழைப்பின் மகிமையைக் காணும் பொருட்டு இன்றைய எல்லா தாய்மார்களின் மனக்கண்களும் திறக்கப்பட்டால் எத்தனை நலமாயிருக்கும்!
கிறிஸ்துவுக்கு சாட்சியாக நின்று மிளிரும் அவளின் மகிமை!
நாம் மேற்கண்டது போல், மனுஷனுக்கு ஏற்ற துணையாய் இருப்பதும், தன் பிள்ளைகளுக்கு சிறந்த தாயாக இருப்பதுமே பெண்கள் பிரதானமாய் கிறிஸ்துவுக்குள் சாட்சியாக விளங்க வேண்டிய இடமாகும்! இருப்பினும், அவர்கள் தங்கள் வாய் மூலமாக ஓர் சாட்சியாக திகழ்வதற்கும் தேவன் அழைத்திருக்கிறார்.
புதிய ஏற்பாட்டின் இந்த காலத்தில், தேவன் ஒரு ஸ்திரீயை அப்போஸ்தலராகவோ, தீர்க்கதரிசியாகவோ, சுவிசேஷகியாகவோ, மேய்ப்பனாகவோ, போதகியாகவோ இருக்கும்படி அழைக்கவே இல்லை! பழைய உடன்படிக்கையின் கீழ் மாத்திரமே பெண் தீர்க்கதரிசிகள் இருந்தார்கள். அவர்களின் வரிசையில் அன்னாள்' கடைசியாக முற்றுப்பெறுகிறாள். பெந்தெகொஸ்தே நாளுக்குப் பிறகு புதிய ஏற்பாட்டில் குறிப்பிடப்படும் ஒரே ஒரு பெண் தீர்க்கதரிசி, யேசபேல் என்னும் கள்ளதீர்க்கதரிசி! (வெளி. 2:20), காரியம் இப்படியாய் இருக்கும்போது, இன்று தங்களை ஓர் தீர்க்கதரிசி அல்லது பிரசங்கி என கூறிக் கொள்ளும் எந்த ஸ்திரீயும் யேசபேலின் அடிச்சுவட்டைப்பின் தொடர்ந்து செல்பவர்களே! சிறிதும் பிழையற்ற இவ்வுண்மையை யாவரும் அறிந்திடுங்கள்!!
இப்படிப்பட்ட 'யேசபேல்களை' வல்ல தேவனின் “எலியாக்கள்” (1இராஜ.21:20-23) கடுமையாய் எதிர்த்து நின்று, அவர்களின் மூடு திரையைக் கிழித்து வெளியரங்கப்படுத்த வேண்டும்! புதிய ஏற்பாட்டின் ஸ்திரீகள், பிலிப்புவின் குமாரத்திகளைப் போல அவ்வப்போது தீர்க்கதரிசனம் சொல்லலாம். ஆனால் அந்த சகோதரிகள் தீர்க்கதரிசிகளாய் இல்லை என்பது தெள்ளத் தெளிவாக உள்ளது. எப்படியெனில், தேவன் அப்போஸ்தலனாகிய பவுலுக்கு ஓர் செய்தியைக் கொடுக்க விரும்பிய போது, பிலிப்புவின்வீட்டில் பவுல் இருந்தார். பிலிப்புவிற்கு 4-குமாரத்திகள் இருந்தபோதும், அவர்கள் ஒருவரையும் தேவன் உபயோகிக்கவில்லை. மாறாக, அகபு என்னும் தீர்க்கதரிசியை தேவன் 50-மைல்கள் அப்பாலிருந்து கொண்டு வந்தார் (அப். 21:8-11). அதற்கு காரணம், ஸ்திரீயானவள் புருஷன்மேல் எக்காலமும் அதிகாரஞ்செலுத்தக் கூடாது (1தீமோ.2:12) என்ற அவரின் நியமனமே! இதுபோன்ற ஊழியங்களில் ஸ்திரீகளுக்கு வாய்ப்பு இல்லாது போனாலும், அவள் வேறு பல வழிகளில் கிறிஸ்துவுக்கு சாட்சியாய் நின்று மிளிருவது சாத்தியமாயிருக்கிறது!!
1) மகதலேனா மரியாள் போன்று, தான் கண்டு அனுபவித்ததை ஆவியில் நிறைந்த
ஒவ்வொரு சகோதரியும், தாங்கள் தொடர்பு கொண்டோர்களுக்கு சுவிசேஷத்தை
வழங்குவதில் உத்தம சாட்சிகளாய் திகழவேண்டும்!
உயிர்த்தெழுந்த கிறிஸ்துவுக்கு முதல் சாட்சியாய் விளங்கியது மகதலேனா மரியாளே! அவள் ஓர் சுவிசேஷகி அல்ல, ஆனால் “தான் கண்டு னுபவித்ததை” சாட்சி பகர்ந்த உத்தம சாட்சியாவாள்!! இவ்வாறு கிறிஸ்துவின் உத்தம சாட்சிகளாய் விளங்குவதற்கு, ஒவ்வொரு ஸ்திரீயும் “பெந்தெகொஸ்தே நாளில்" பங்கு பெற்ற மரியாளையும் மற்ற ஸ்திரீகளையும்போல 'பரிசுத்தாவியினாலும் அக்கினியினாலும்' அவர்களும் அபிஷேகம் பெற்றிட வேண்டும் (அப்.1:8,14). புருஷர்களின் வாயின் மூலமாக ஸ்திரீகள் சுவிசேஷத்தைக் கேட்பதற்குத் தடை செய்யும் இந்திய கலாச்சாரத்தின் மத்தியில், அவர்களைச் சந்தித்து சுவிசேஷப் பணியை நிறைவேற்றிட ஆவியில் நிறைந்த ஸ்திரீகளால் மாத்திரமே முடியும். எனவே, தேவனுக்குப் பயந்த ஒவ்வொரு சகோதரியும் இம்மேன்மையான பங்கைத் தங்களின் தலையான பொறுப்பாக எடுத்துக்கொண்டு, தாங்கள் தொடர்பு கொண்டுள்ள உறவினர்கள்; அண்டை வீட்டார்கள்; பெண் வேலையாட்கள் போன்றோருக்கு சுவிசேஷத்தைத் தீவிரமாய் வழங்க வேண்டும்!
சபையில் ஸ்திரீகள் தங்கள் தலையை முக்காடிட்டுக் கொண்டு ஜெபிக்கவும், தீர்க்கதரிசனம் சொல்லவும் கூடும் என புதிய ஏற்பாடு போதிக்கின்றது (1கொரி.11:5), ஸ்திரீகள் ஈடுபடும் ஊழியங்களில், பிரதானமானவைகளில் ஜெபமும் ஒன்றாகும். ஆம், எல்லா சகோதரிகளுமே சபை கட்டப்படுவதற்காய் பாரத்தோடு ஜெபித்திட முடியும். இவ்வாறு, தன் தூய பணி நிறைவேறுவதற்காக அந்தரங்கத்தில் ஜெபிக்கும் ஸ்திரீகளை தேவன் வாஞ்சித்து நோக்கி கொண்டிருக்கிறார்.
அப்போஸ்தலர். 2:17,18-ம் வசனம், பரிசுத்த ஆவியானவர் ஊற்றப்படும்போது புருஷர்களும், ஸ்திரீகளும் தீர்க்கதரிசனம் சொல்லுவார்கள் எனத் தெளிவாகக் கூறுகின்றது. புதிய ஏற்பாடு ஸ்திரீகளுக்கு வழங்கும் பாக்கியத்தில் இதுவும் ஒன்றாகும். அதாவது, கீழ்ப்படிந்த ஆவியோடு, அவள் போதகம் செய்வதற்கு முயலாதிருக்கும் பட்சத்தில் (1தீமோ.2:12) தேவனுடைய வார்த்தைகளைச் சபைக் கூட்டங்களில் பகிர்ந்து கொள்ள முடியும்!!
இருப்பினும் முதிர்வயதுள்ள ஸ்திரீகள் பாலிய சகோதரிகளுக்கு, அவர்கள் தங்கள் வீட்டின் தொடர்பான காரியங்களில் எவ்வாறு நடந்துகொள்ள வேண்டுமென அவர்களுக்குப் போதிக்கவேண்டுமென்று புத்தி சொல்லப்பட்டிருக்கிறார்கள் (தீத்து2:4,5). மேலும், சபையில் தேவன் நியமித்த வரங்களில், “உதவியாளர்கள்” என்பதும் ஒன்றாகும் (1கொரி.12:28). சபைக்குரிய நடைமுறை அலுவல்களில், “சபைக்கு உதவி" செய்யும் பொருட்டு எல்லா சகோதரிகளுமே இவ்வரத்தை நாட வேண்டும். ஆதி சபைகளில் இது போன்று உதவி செய்த பக்தியுள்ள பெண்கள் அநேகர் காணப்பட்டனர். ரோமர்.16:1,2, “பெபேயாள் அநேகருக்கு உதவியாயிருந்தாள்” எனக் குறிப்பிடுகின்றது. மேலும் 3,6,12, வசனங்களை வாசித்துப் பாருங்கள். இன்றும் இது போலவே சபைகளில் அநேக ஸ்திரீகள் காணப்பட தேவன் வாஞ்சிக்கிறார்.
iii) ஸ்திரீயானவள் தலையை முக்காடிட்டுக் கொள்வது. கிறிஸ்துவுக்கு உத்தம
சாட்சியாய் விளங்குவதில் ஒன்றாகும்!
ஸ்திரீயானவள் தலையை முக்காடிட்டுக் கொள்வதை 1கொரிந்தியர்.11:1-16 வசனங்கள், மூன்று காரியங்களைப் பொருள் படுத்தி சாட்சியளிக்கின்றது.
1)சபையில் மனுஷனின் மகிமையானது மூடப்படவேண்டும் (வச.7),
2)சபையில் ஸ்திரீயின் மகிமையும் மூடப்பட வேண்டும் (வச.15). ஏனென்றால் ஸ்திரீயானவளின் நீளமான தலைமயிர் அவளுக்கு மகிமையாயிருக்கிறது. இதை எல்லா ஸ்திரீகளும் நன்றாய் அறிந்திருக்கிறார்கள். எனவேதான், தங்கள் தலையை மூடிக்கொள்ளும் அநேக ஸ்திரீகள், மிக 'ஸ்டைலாகப் பாதித்தலையை மூடிக்கொள்ளுகிறார்கள்!!
3) ஸ்திரீயானவள் மனுஷனின் அதிகாரத்திற்கு கீழ்ப்படிந்தவள் (வச.10). மனுஷன் என்பது அவள் கணவன் அல்லது தகப்பன் அல்லது மூப்பர்கள் ஆவார்கள்.
16-ம் வசனத்தின்படி உண்மையான தேவனுடைய சபையாய் இருக்கும் ஒவ்வொரு சபையும், ஸ்திரீகள் முக்காடிட்டுக்கொள்வதை வலியுறுத்திப் போதிக்க வேண்டும்!
ஜாக்கட், சாயம் பூசிய உதடுகள், வர்ணமிட்ட நகங்கள், ஆபரண மினுக்குகள், ஆண்களின் ஆடை அணிதல் போன்ற ஒழுங்கீனத்தின் மத்தியில், தங்கள் உத்தம
ஜீவியத்தின் மூலம் ஸ்திரீகளுக்குரிய உண்மையான மகிமையைப் பிரவாகிக்கச்
செய்யும் ஸ்திரீகளே இன்று தேவனுக்குத் தேவை!
தான் உடுத்துகின்ற ஆடை மூலமாகவும் ஒரு ஸ்திரீ, கிறிஸ்துவுக்கு உண்மையுள்ள சாட்சியாக விளங்கவேண்டும். எல்லா கிறிஸ்தவ ஸ்திரீகளுக்கும் பரிசுத்தாவியானவர் மூன்று காரியங்களை மிகக் கண்டிப்பாக தடை செய்கின்றார்: 1) அவளின் நாகரீக கூந்தல் அலங்காரம். 2) விலையுயர்ந்த ஆடைகள். 3) ஆபரணங்கள். இது குறித்து 1தீமோ. 2:9; 1பேதுரு.3:3 ஆகிய இரண்டு இடங்களில் வலியுறுத்திக்கூறப்பட்டுள்ளது. தேவனுடைய வார்த்தைகளுக்கு நடுங்கும் தெய்வ பயமுள்ள ஒவ்வொரு ஸ்திரீயும் இந்த மூன்று கட்டளைகளுக்கும்..... அதில் ஏதேனும் மிகச்சிறியதே ஆயினும், இம்மியும் பிழையில்லாமல் அப்படியே கீழ்ப்படிந்திடுவாள்! (மத்.5:19).
ஸ்திரீகள் ஆடை உடுத்துவதில் முன்மாதிரியாகவும், கண்ணிய மாகவும், காணப்படவேண்டும் (1தீமோ.2:10). வஸ்திரங்கள் ஸ்திரீயின் உடலை மறைப்பதற்கேயல்லாமல் ‘நிர்வாணகோல' அலங்கரிப்புக்கு அல்ல! கர்த்தருக்குப் பயந்த எந்த ஸ்திரீயும் தன் ஆடையை ஒரு டெய்லர் இவ்வுலக ஸ்திரீகளின் நாகரீகத்திற்கு ஏற்ப வெட்டி அழகுப்படுத்த ஒருக்காலும் அனுமதிக்கவே மாட்டாள்! மிக இறக்கமாய் சொருகிய சேலை, தொட்டி போல தாழ்வாக வெட்டிய ஜாக்கட், சாயம்பூசிய உதடுகள், வர்ணம் தீட்டிய நகங்கள் போன்ற இவைகளெல்லாம் யேசபேலைப் பின்பற்றுவோரின் அடையாளங்கள்!! (2இரா. 9:30). இவர்கள் இயேசுவின் சீஷர்கள் அல்லவே அல்ல! ஏசாயா.3:16-24 வசனங்களை கவனமாய் வாசியுங்கள். லௌகீகமான சீயோன் குமாரத்திகளின் ஒய்யார ஆடையலங்காரத்தையும், ஆபரண மினுக்குகளையும் தேவன் எவ்வளவு கடுமையாய் சாடுகின்றார் என்பதைப் பாருங்கள்!!
ஆண்-பெண் பாலகரை வேறுபடுத்த, தேவன் நியமித்த நியமனத்தை அழிப்பதற்கு சாத்தான் எவ்வளவு ஆர்வம் கொண்டுள்ளான் தெரியுமா? 20-ம் நூற்றாண்டு பெண்கள் தங்கள் முடியை ஆண்களைப் போலவே வெட்டிக்கொள்ளும்படி சாத்தான் செய்துவிட்டான்! பெண்கள், ஆண்கள் அணியும் “ஜீன்ஸ்” மற்றும் “கால்சட்டைகளை” அணியும் படியும் வைத்துவிட்டான்!! இவையெல்லாம் தனக்கு அருவருப்பானவைகள் என தேவன் உபாகமம்.25:5-ல் எச்சரித்துள்ளார். மாத்திரமல்ல, இந்த இலட்சணத்தில் உள்ளவர்களைப் பிரசங்கிகளாயும் உருவாக்கி விட்டான்! குட்டை முடி, அடக்கியாளும் மனைவியர், பெண் பிரசங்கிகள் ஆகியோரெல்லாம்..... இன்று தேவனை விட்டு தூர விலகிச்சென்று மாயும் எண்ணற்ற கிறிஸ்தவப் பெண்களின் கூட்டத்தவராய் இருக்கிறார்கள்!!
இவைகளுக்கு மத்தியில்தான், தேவன் தன் வார்த்தைகளில் நியமித்த எல்லைக்குள் தங்கிநின்று தங்கள் உத்தம ஜீவியத்தின் மூலம் ஸ்திரீகளுக்குரிய உண்மையான மகிமையைப் பிரவாகிக்கச் செய்யும் ஸ்திரீகளைத் தேவன் தேடுகின்றார். ஆ! இந்த ஸ்திரீகளே தேவனுக்குத் தேவை!! பாவமும், வேசித்தனமும் நிறைந்த சந்ததி நடுவில், ஒத்த வேஷத்தில் மூழ்கித்திளைக்கும் கிறிஸ்தவத்தின் மத்தியில், ஸ்திரீயாகிய நீங்களே அந்த உத்தம நபராய் ஏன் இருக்கக்கூடாது? இன்றே, தேவனுடைய இருதயத்திற்கு ஏற்றவளாய் இருப்பதற்கு உங்கள் முழு இருதயத்தோடும் தீர்மானம் எடுங்கள்!
நீங்கள் மாத்திரம் இப்படிப்பட்டவளாய் மாறுவதற்கு முழு இருதயமாய் வாஞ்சை கொண்டுவிடுங்கள்..... அது போதும்! தேவன் நிச்சயம் அப்படியே உங்களுக்கு ஆகும்படி தன் கிருபையைப் பொழிந்திடுவார்! அது நிச்சயம்!!
கேட்பதற்கு காதுள்ளவள் எவளோ அவள் கேட்கக்கடவள்!