இதுவே மெய்யான சத்தியம் (சிற்றேடு)

எழுதியவர் :   சகரியா பூணன் வகைகள் :   வாலிபர்
    Download Formats:

அதிகாரம் 1
தீமையைப்பற்றிய மெய்யான சத்தியம்

சகல ஞானத்தினாலும் நன்மையினாலும் நிறைந்த தேவன் சிருஷ்டித்த இவ்வுலகில், எவ்வாறு தீமை தோன்றியது? ஒரு இடம்கூட பாக்கி இல்லாமல் எங்கு பார்த்தாலும் வியாதியும், தரித்திரமும், வருத்தமும், துன்பமும் நிறைந்திருப்பதற்கு காரணமென்ன? இந்நிலையில் உள்ள நமக்கு உதவி செய்ய தேவன் ஆர்வமற்று இருக்கிறாரா? இக்கேள்விகளுக்கெல்லாம் நிச்சயமாய் ஓர் பதில் தேவையாயிருக்கிறது.

பரிசுத்த வேதாகமம் இந்த பதிலை நமக்குத்தருகிறது! இந்த பதிலை நாம் காண்பதற்கு முன்பாக, தேவனைப்பற்றிய சில உண்மைகளில் நாம் தெளிவடைவது நல்லது. பரிசுத்த வேதாகமத்தின் முதல் வசனமே, "ஆதியிலே தேவன்..." என்றே துவங்குகிறது (ஆதி.1:1) தேவனுடைய வார்த்தையாகிய வேதாகமத்தில் உள்ள 66 புத்தகங்களில் ஆதியாகமமே முதல் புத்தகம்! நீங்கள் வாசிக்கும் இச்சிறிய புத்தகத்தில், அடைப்புக் குறியில் கொடுக்கப்பட்டிருக்கும் குறிப்புகள் வேதப்புத்தகத்தின் ஒரு பகுதியைச் சுட்டிக்காட்டும் குறிப்புகளே ஆகும்.

பரிசுத்த வேதாகமம் தேவனைக் குறித்த உண்மையை, அவர் எப்படி நித்திய காலத்திற்கு முன்பாகவே இருக்கிறார் என்பதை விளக்கிக்கூற முற்படாமல், அதை 'அப்படியே ஏற்றுக்கொள்ளும்' உண்மையாகவே மிக எளிதாய் நமக்குச் சொல்லுகிறது.

மானிடராகிய நம்மிடம் தனிப்பட்ட விதத்தில் உறவு கொள்ள விரும்பும் ஒருவராகவே வேதாகமம் தேவனை நமக்கு வெளிப்படுத்தியிருக்கிறது. மனுஷீக ஆள்த்துவங்களைப் போலவே தேவனும் ஓர் மானிடனைப் போல் இருப்பார் என நாம் ஒருக்காலும் எண்ணக்கூடாது. அவர் ஆவியாயிருக்கிறார்; எல்லா விதத்திலும் அவர் முடிவற்ற தன்மை கொண்டவர்; குணாதிசயத்தில் எக்காலத்தும் மாறாதவர்! அவர், சர்வ வல்லமை கொண்டவர்; சர்வமும் அறிந்தவர்; அளவிற்கடங்கா ஞானம் நிறைந்தவர்; எல்லையில்லா அன்பு நிறைந்தவர்; எல்லையில்லா தூய்மை நிறைந்தவர்!!

தேவனின் எல்லையில்லா அன்பில் சுயநலம் என்பது முற்றிலுமாய் இல்லவே இல்லை. ஆகவேதான் அவர் தன்னுடைய மகிழ்ச்சியையும் சந்தோஷத்தையும் பிறருக்கு பகிர்ந்து கொடுத்திட விரும்புகிறார். இதற்காகவே அவர் ஜீவராசிகளை சிருஷ்டித்தார். அந்த சிருஷ்டிப்பில் எல்லாவற்றிற்கும் முதலாக, அவர் இலட்சக்கணக்கான தூதர்களை சிருஷ்டித்து, தன்னுடைய சந்தோஷத்தையும் அவர்களுக்குப் பகிர்ந்து கொடுத்தார்.

இவ்வாறு தோன்றிய தூதர்கள் கூட்டத்திற்குத் தலைவனாக இருக்கும்படி தேவன் ஒரு தூதனை சிருஷ்டித்தார். அவனுடைய பெயர் லூசிபர்!

தேவன் சிருஷ்டித்த வான மண்டல கிரகங்கள் அல்லது மரங்களைப் போல் அல்லாமல், லூசிபருக்கும் மற்ற தூதர்களுக்கும் "சுயாதீன- சித்தத்தைக்" கொடுத்து தேவன் சிருஷ்டித்தார். இந்த சுயாதீனத்தைப் பெற்ற தூதர்கள் அதைக்கொண்டு தேவனுக்குக் கீழ்ப்படியவோ அல்லது கீழ்ப்படியாமல் இருப்பதற்கோ தாங்களாகவே தெரிந்துகொள்ள முடியும்.

ஒருவன் 'குணாதிசயம்' கொண்டவனாக இருப்பதற்கு "சுயாதீன சித்தம்" என்ற தன்மை முதலாவது அடிப்படைத் தேவையாகும். கிரகங்களோ அல்லது மரங்களோ நன்மைசெய்யவும் முடியாது, தீமைசெய்யவும் முடியாது. ஏனென்றால் அவைகளுக்குத் தாங்களாகவே தெரிந்துக்கொள்ளும் சுயாதீனம் இல்லாமல் சிருஷ்டிக்கப்பட்டபடியால், இவைகள் தேவனுடைய பிரமாணங்களுக்கு அப்படியே கீழ்படிந்துவிடுகின்றன. இதன் நிமித்தமே இவைகள் தேவனுடைய புத்திரர்களாகவும் இருந்திட முடியாது.

மனிதனையோ தேவன் தன்னுடைய சாயலில் சிருஷ்டித்தார். இதுவே நாம் அவருடைய பிள்ளைகளாய் மாறுவதற்குரிய சாத்தியத்தை நமக்கு வழிவகுக்கிறது. நாம் குணாதிசயம் கொண்டவர்கள் என்பதை நமக்குள் இருக்கும் மனசாட்சியின் சத்தம் நமக்கு நினைவூட்டுகிறது. மேலும் நாம் தேவனுடைய பிரமாணங்களை மீறும் பொழுதெல்லாம், இம்மனசாட்சியின் சத்தம் நம்மை உணர்த்துவிக்கிறதாயிருக்கிறது.

"சுயாதீன சித்தம்" "மனசாட்சி" ஆகிய இந்த இரண்டையும் உடையவர்களாகவே தூதர்களும் சிருஷ்டிக்கப்பட்டார்கள்.

இவ்வொப்பற்ற தன்மை கொண்ட தூதர்களுக்குத்தான் லூசிபர் தலைவனாயிருந்தான். ஆனால் இவன் வெகு சீக்கிரத்தில் நல்லதற்ற இலட்சியங்களையும் கொண்டிடத் துவங்கினான். இவ்வாறு இங்கிருந்து தான் இவ்வையகத்தில் தீமை முதலாவதாகத் தோன்றியது!

லூசிபரின் சிந்தைகள் நல்லதற்றதாக மாத்திரமல்லாமல், அவைகள் பெருமையின் சிந்தைகளாகவும், முரட்டாட்டத்தின் சிந்தைகளாகவும், அதிருப்தி கொண்ட சிந்தைகளாகவும் இருந்தது.

தீமை முதலாவதாக இருதயத்தில் தோன்றியது என்பதை நாம் நினைவிற்கொள்ளக் கடவோம். ஆரம்ப நிலையில் வெளித்தோற்றமான எவ்வித செயலும் நடைப்பெறவில்லை. அவ்விதமே இன்றும் தீமையானது இருதயத்தில் இருந்தே முளைத்தெழும்புகிறது. இவ்வுலகத்திற்கு தீமையைக் கொண்டுவந்த முதல் பாவம் "பெருமை" என்பதையும் நாம் நினைவிற்கொள்வோமாக!

இந்நிலையில் லூசிபரை தன் உடனடி சமூகத்தை விட்டு கீழே தேவன் தள்ளினார். அக்கணமே இந்த லூசிபர் "சாத்தான்" என அழைக்கப்பட்டான்!

லூசிபரையும் அவனோடு சேர்ந்து முரட்டாட்டம் செய்த தூதர்களையும் தேவன் கீழே தள்ளினார். வீழ்ச்சியடைந்த இந்த தூதர்களே "பொல்லாத ஆவிகள்" அல்லது "பிசாசுகள்" ஆவார்கள். இப்பொல்லாத ஆவிகளே இன்று ஜனங்களை அலைக்கழித்து துன்புறுத்துகின்றன!

ஒருவேளை இப்புத்தகத்தை வாசிக்கும் நீங்கள் கூட பொல்லாத ஆவிகளினால் பாதிக்கப்பட்டிருக்கலாம். அல்லது வேறு யாராவது உங்கள் மீது மாந்திரீகமான செய்வினை ஏவுதல் செய்திருக்கலாம். அவ்வாறு இருந்தால், உங்களுக்கென பரிசுத்த வேதாகமம் ஓர் நற்செய்தியை வைத்திருக்கிறது. இப்பொல்லாத ஆவிகளின் தொந்தரவிலிருந்து சம்பூரணமான விடுதலையை நீங்கள் நிரந்தரமாய்ப் பெற்றுக்கொள்ள முடியும். நீங்கள் இப்புத்தகத்தை கவனமாய் வாசியுங்கள். இவ்வாறு இப்புத்தகத்தை நீங்கள் வாசித்து முடிக்கும் வேளையில், தேவன் உங்களுக்குச் செய்யும் அற்புதத்தை நீங்கள் நிச்சயமாய் காண்பீர்கள்.

இத்தருணத்தில் சிலர், "இவ்வுலகத்தின் எல்லா தீமைகளுக்கும் சாத்தான்தான் காரணமென்றால், சாத்தானையும் எல்லா அசுத்த ஆவிகளையும் தேவன் ஏன் அழிக்காமல் வைத்திருக்கிறார்?" எனற கேள்வியை கேட்கக்கூடும்.

தேவன் விரும்பினால் சாத்தானை ஒரு நொடிப்பொழுதில் நிச்சயமாய் அழித்துவிட முடியும். ஆனால் அவர் அப்படிச் செய்யவில்லை! சாத்தானையும் அவனோடிருக்கும் பிசாசுகளையும் அனுமதித்து இருக்க வைத்திருப்பதில் ஓர் தெளிவான நோக்கத்தைத் தேவன் வைத்திருக்கிறார். அவ்வித அவருடைய நோக்கத்தின் ஒரு பகுதியாதெனில், இப்பூமிக்குரிய வாழ்க்கையை மனிதனுக்கு கடினமானதாகவும்; பாதுகாப்பற்றதாகவும்; அபாயம் நிறைந்ததாகவும் செய்வதற்கு சாத்தானையே தேவன் உபயோகப்படுத்துகிறார்.

அது ஏனென்றால் "இதன் மூலமாய்" ஜனங்கள் இப்பூமிக்குரிய சொகுசான வாழ்க்கையினால் ஈர்க்கப்பட்டுவிடாமல், தேவனிடத்தில் திரும்பவும், நித்திய வாழ்க்கையில் அக்கறை கொள்ளவும் செய்கிறார்!

காரியம் இவ்வாறு இருப்பதால், இவ்வுலகத்தில் நமக்கு ஏற்படும் துன்பங்கள், தேவன் நம்மீது கொண்ட அன்பின் சின்னமாகவே இருக்கிறது. இதுவே பரிசுத்த வேதாகமம் நமக்கு வழங்கும் செய்தியாகும்!

இதுபோன்ற உலகத்தில் காணும் தீமைகளைத் தேவன் உபயோகித்து அதன்மூலம் ஜனங்களை அவர்களின் பாவங்களிலிருந்து திரும்பும்படிச் செய்கிறார். இவ்வாறாகவே ஜனங்கள் பரலோகத்தில் உள்ள தங்கள் நித்திய வீட்டைக் கண்டுகொள்ளும்படி தேவன் நடத்துகிறார்!

ஆகவேதான், தேவன் இவ்வுலகத்தில் உள்ள எல்லா தீமைகளையும் மிக எளிதில் அகற்றிவிடக் கூடுமென்றாலும், அவர் அவ்விதமாய் செய்யவில்லை! ஏனென்றால் இத்தீமைகளின் மூலமாகவே தேவன் தம்முடைய மகிமையான நோக்கத்தை நிறைவேற்றி முடிக்கிறார்!!

அதிகாரம் 2
பாவத்தைப் பற்றிய மெய்யான சத்தியம்

ஒரு மிருகம் எவைகளைக் குறித்து ஆர்வமாய் இருக்கும்? உணவு, உறக்கம், காமதிருப்தி.... அவ்வளவுதான்! இவைகளில் மாத்திரமே ஒரு மானிடனும் ஆர்வம் கொண்டிருந்தால், அவனும் மிருகங்களின் தரத்திற்கு இறங்கி வந்துவிட்டான் என்றே நாம் சொல்லலாம். ஆனால், மனிதன் மிருகங்களைப்போல் இருப்பதற்காக தேவன் அவனை சிருஷ்டிக்கவில்லை. நாம் அவரைப்போல் சீரிய பண்புகளும், நேர்மையுள்ளமும், நற்குணங்களும், சுயகட்டுப்பாடும் கொண்டவர்களும் இருப்பதற்கு நம்மை சிருஷ்டித்தாரே அல்லாமல்.... மிருக உணர்வுகளுக்கு அடிமையாக இருப்பதற்கு அல்ல!!

நாம் மிருகங்களைவிட அறிவுக்கூர்மையும் கல்வி கற்றவர்களாயும் இருப்பதினிமித்தம் மிருகங்களைக் காட்டிலும் நம்மை மேலானவர்களாகக் கருதிவிட முடியாது! ஏனெனில் புத்திக்கூர்மையான கல்வி கற்ற மனிதர்கள், இன்னமும் பேராசைக்கும், சுயநலத்திற்கும், காம இச்சைக்கும், கோபத்திற்கும் அடிமையாகத்தான் இருக்கின்றார்கள்!!

நம் மனதைக் காட்டிலும் ஆழமான ஒரு பகுதி நமக்குள் அடங்கி இருக்கிறது. அது நமக்குள் இருக்கும் ஆவி! நம்முடைய 'ஆவியே' தேவனைக் குறித்த உணர்வை நமக்குத் தருகிறது. இந்த உணர்வு எந்த ஒரு மிருகத்திற்கும் இல்லை.

சுயாதீனமாய் தெரிந்துக்கொள்ளும் சுதந்திரத்தினிமித்தம் ஏற்படும் அபாயம் யாதெனில், இந்த சுதந்திரத்தை வைத்து நம்மை நாமே பிரியப்படுத்துவதற்கும், தேவனுடைய பிரமாணங்களுக்கு கீழ்ப்படியாமல் இருப்பதற்கும் பயன்படுத்திவிட முடியும். இவ்வாறு இருந்த போதும் தேவன் இந்த விபரீதத்தைச் சந்திக்கத் தயாராயிருந்தார். ஏனென்றால், தேவனாகிய தன்னை சுயாதீனமாய் தெரிந்துகொள்ளும் பிள்ளைகளையே அவர் விரும்புகின்றார்!!

தேவன் சிருஷ்டித்த முதல் மனுஷனும் மனுஷியும் ஆதாம் என்றும் ஏவாள் என்று அழைக்கப்பட்டார்கள். அவர்கள் சிருஷ்டிக்கப்பட்டபோது "களங்கம் அற்றவர்களாகவே" இருந்தார்கள். ஆனால் அவர்கள் பரிசுத்தமாய் இருப்பதற்கோ, அதை அவர்கள் தாங்களாகவே தெரிந்துக்கொள்ள வேண்டும்! இந்தத் தெரிந்துகொள்ளுதல் ஏற்படுவதற்காகத்தான் அவர்கள் சோதிக்கப்பட வேண்டியிருந்தது. ஏனெனில் அப்போது மாத்திரமே அவர்கள் 'தீமையை மறுத்து' தேவனைத் தெரிந்துகொள்ள முடியும். இதற்காகவே சாத்தான் அவர்களிடம் வந்து, அவர்களைச் சோதிப்பதற்கு தேவன் அனுமதித்தார்! இந்த நிகழ்ச்சியை வேதாகமத்தின் முதலாவது புத்தகமாகிய ஆதியாகமம் 2,3 அதிகாரங்களில் வாசிக்கிறோம்.

முதல் மனுஷனையும் மனுஷியையும் தேவன் சிருஷ்டித்தபோது, அவர்களை அவர் ஒரு தோட்டத்தில் வைத்து, ஒரே ஒரு மரத்தின் கனியைத் தவிர எல்லா மரத்தின் கனிகளையும் புசிக்கலாம் என தேவன் கூறினார். இதுவே அவர்களுக்குத் தரப்பட்ட தெரிந்துகொள்ளுதலின் பரீட்சையாக இருந்தது! இவ்வளவு மிக எளிய கீழ்ப்படிதலின் பரீட்சையில் ஆதாமும், ஏவாளும் தோல்வி அடைந்தார்கள்! எப்படியெனில், சாத்தான் அவர்கள் தோட்டத்திற்குள் பிரவேசித்து ஆதாமையும் ஏவாளையும் பார்த்து, "நீங்கள் இவ்விலக்கப்பட்ட கனியைப் புசிக்கும் நாளில் தேவனைப்போல் ஆகிவிடலாம்" எனக் கூறி சோதித்தான். அவ்வேளையில் ஆதாமும் ஏவாளும் சந்தித்த சோதனை, "ஏதோ ஒரு மரத்தின் கனியை புசிப்பதுதானே!" என்ற மிக எளிய சாதாரண விஷயமாய் இருக்காமல், "அவர்கள் விரும்பினால் தேவனைப்போல் மாறிவிடலாம்" என்பதான விபரீதமாய் இருந்தது!

ஒரு காலத்தில் 'சாத்தான்' இதுபோன்ற விருப்பத்தையே கொண்டிருந்தான். அந்த விருப்பத்தைத்தான் அவன் ஆதாமுக்கும் ஏவாளுக்கும் விஷம் பாய்ச்சிவிட்டான். இவர்கள் தேவனுக்குக் கீழ்ப்படியாமல் போனதால், அன்று சாத்தான் அடைந்த அதே கதியை அடைந்தார்கள். ஆம், இவர்களும் தேவனுடைய சமூகத்தை விட்டு துரத்தப்பட்டார்கள்!
மேற்சொல்லப்பட்ட எல்லா நிகழ்ச்சிகளையும் பரிசுத்த வேதாகமத்தின் முதல் புத்தகமாகிய ஆதியாகமம் 3-ம் அதிகாரத்தில் நாம் தெளிவாக வாசித்தறியலாம்.

மனுவர்க்கத்திற்குள் எவ்வாறு பாவம் தோன்றியது என்பதை இப்போது நாம் தெளிவாக வாசித்தறியலாம்.

தேவனுக்கு மேலாக, நமக்கானவைகளையும் சிருஷ்டிக்கப்பட்டவைகளையும் தெரிந்துகொள்வதே எல்லாப் பாவத்திற்கும் வேராய் இருக்கிறது. அதாவது, தேவனுடைய வழிக்குப் பதிலாக நம் சொந்த வழியைத் தெரிந்துகொள்வதும், தேவனைப் பிரியப்படுத்துவதற்குப் பதிலாக நம்மை நாமே பிரியப்படுத்துவதுமாகும்!

விபச்சாரம் அல்லது கொலை அல்லது திருடுதல் போன்றவைகளைச் செய்வது மாத்திரம் பாவமாகாது. ஆம், பாவத்தின் சரியான விளக்கம் "நாம் நம்முடைய சொந்த வழியை விரும்புவதேயாகும்." பாவம் துவங்குவதை ஒரு சிறு பிள்ளையின் முரட்டாட்டத்திலிருந்து நாம் காண்கிறோம். அந்தப் பிள்ளை வளரும்போது தன் சொந்த வழியில் செல்லவே தீர்மானித்து... தான் விரும்பியதையெல்லாம் மற்ற பிள்ளைகளிடமிருந்து பறிக்கவும் சண்டையிடவும் செய்கிறது!!

பாவம் நம் ஒவ்வொரு நாடி நரம்புகளிலும் ஊடுறுவப் பாய்ந்திருக்கிறது. இப்பாவத்தை மார்க்க அனுசாரங்களைப் போன்ற உபவாசம் மற்றும் ஜெபங்களின் மூலமோ அல்லது புனிதயாத்திரையின் மூலமோ அல்லது சுயக்கட்டுப்பாட்டின் மூலமோ போக்கிவிட ஒருக்காலமும் முடியாது! தேவன் ஒருவரே நம்மை பாவத்திலிருந்து இரட்சிக்க முடியும்!!

ஆனால், "பாவம் இத்தனை தீமையானது" என நாம் உணரும்வரை தேவன் காத்திருக்க வேண்டியதாயிருக்கிறது. யாரெல்லாம் தங்களை நீதிமான்களாகக் கருதுகிறார்களோ அவர்களைத் தான் இரட்சிக்க முடியாது என்ற உண்மையை இயேசு தெளிவுபடுத்தினார். தாங்கள் நோயாளிகள் என்பதை அறிந்தவர்கள் மாத்திரமே ஒரு மருத்துவரிடம் செல்லுவார்கள். இதற்கொப்பாக "நாம் பாவிகள்" என்பதைத் தெளிவாக அறிந்து கொள்வதே நம்முடைய முதல் தேவையாயும் இருக்கிறது.

நாம் எந்த மதத்தைச் சேர்ந்தவர்களாய் இருந்தாலும், நாம் அனைவருமே பாவிகள்தான். நாம் ஒவ்வொருவரும் தேவனுடைய பரிசுத்த பிரமாணங்களை நம்முடைய சிந்தையிலும், வார்த்தையிலும், செயலிலும், மனநோக்கங்களிலும் மீறி பாவம் செய்திருக்கிறோம். ஆம், நாம் தேவனுடைய பரிசுத்த தரத்திலிருந்து வீழ்ச்சி அடைந்துவிட்டோம்.

எய்ட்ஸ் நோயைக் காட்டிலும் பாவம் கொடியதாகும். ஒரே ஒரு வித்தியாசமாக இருப்பதெல்லாம் பாவம் நம்முடைய "ஆத்துமாவிற்கு" அழிவைத் தருகிறபடியால் அந்த அழிவை வெளிப்படையாய் காணமுடிவதில்லை, அவ்வளவுதான்! பாவத்தினால் ஏற்படும் விளைவுகள் எய்ட்ஸ் நோயின் விளைவுகளைக் காட்டிலும் மோசமானதாகும். அது நம் ஜீவியத்தை நாசம் செய்து இப்பூமியில் நம்மை மகிழ்ச்சியற்றவர்களாகச் செய்கிறது. இக்கொடிய பாவத்திலிருந்து நாம் இரட்சிக்கப்படாத பட்சத்தில் பாவம் நம்மை முடிவில் நித்தியத்திலும் அழித்துவிடுகிறது!

அதிகாரம் 3
மனசாட்சியைப் பற்றிய மெய்யான சத்தியம்

நாம் யாவரும் ஓர் மனசாட்சியுடன் சிருஷ்டிக்கப்பட்டிருக்கிறோம். நாம் குணாதிசயம் படைத்தவர்கள் என்பதை இந்த மனசாட்சிதான் நம்மை எப்போதும் நினைவுறுத்துவதாய் இருக்கிறது. இந்த மனசாட்சி நமக்குள் தேவனுடைய சத்தமாய் இருந்து, "நம் ஒவ்வொரு செயலுக்கும் நாமே பொறுப்பாளிகள்" எனப் பேசுகிறது. ஆகவே, நாம் வாழ்ந்த முழு ஜீவியத்தைக் குறித்தும் ஒருநாளில் நாம் தேவனுக்கு கணக்கு ஒப்புவித்தே தீர வேண்டும்!

மனசாட்சி ஏதுமில்லாத மிருகங்களைப் போல் நாம் இல்லை. அவைகள் குணாதிசயம் கொண்டவைகளாய் இராதபடியால் யாதொன்றைக்குறித்தும் தேவனுக்கு கணக்கு ஒப்புவிக்க வேண்டிய நிர்ப்பந்தம் அவைகளுக்கு எல்லாமுமாய் இருக்கிறது. அவைகள் மரித்தவுடன் மரணமே அவைகளுக்கு முற்றுப் புள்ளியாய் முடிகிறது. ஆனால் நமக்கோ இதுப்போன்ற நிலை இல்லை. மனிதன் தேவனுடைய சாயலில் சிருஷ்டிக்கப்பட்டு ஓர் நித்தியவாசியாய் இருக்கிறான்.

நமக்கு கடைசிநாளின் நியாயந்தீர்ப்பு என ஒன்று இருக்கிறது. அச்சமயம் நம் வாழ்வில் நாம் செய்த பேசிய, சிந்தித்த யாவும் நம் நினைவிற்கு மீண்டுமாய் கொண்டுவரப்படும். அன்று நம் முழு ஜீவியமும் தேவனால் கணக்கு பார்க்கப்படும். பின்பு அவர் வேதாகமத்தில் சொல்லப்பட்ட தம்முடைய பரிசுத்த பிரமாணங்களின் தரத்தின்படி நம்மை நியாயந்தீர்ப்பார் அவ்வேளையில் நம் ஒவ்வொரு சிந்தை, வார்த்தை மற்றும் செயலுக்காகவும் தேவனிடம் பதில் சொல்லியாகவேண்டும்!

"ஒரே தரம் மரிப்பதும், பின்பு நியாயத்தீர்ப்பு அடைவதும், மனுஷனுக்கு நியமிக்கப்பட்டிருக்கிறது" என வேதாகமம் கூறுகிறது (எபி 9:27).

'மனசாட்சி' தேவன் மனிதனுக்கு வழங்கிய ஒரு ஒப்பற்ற வரமாகும். இந்த வரம் நம்முடைய சரீரத்தில் நாம் பெற்றிருக்கும் "வலி" என்ற வரத்திற்கு ஒப்பாகும். நம் சரீரத்தில் நோய் உண்டாவதை அறிவிக்கும் "முதல் சிக்னலாய்" வலி இருக்கிறது!

குஷ்டரோகிகளிடம் உள்ள பிரச்சனைகளில் முக்கியமானதொன்று என்னவெனில் அவர்களுக்கு வலி இல்லாது இருப்பதுதான். குஷ்டரோகம் நரம்புகளைக் கொன்றுவலிக்குரிய எல்லா உணர்ச்சிகளையும் அழித்துவிடுகிறது. ஒரு குஷ்டரோகியின் பாதத்தில் ஒரு ஆணி குத்தினால்கூட அதை அவன் பல நாட்கள் அறியாதிருப்பான். ஆனால் அவனுடைய பாதமோ சீழ் பிடித்துவிடும். "வலி என்ற ஆசிர்வாதம்" அவனிடம் இல்லாததே காரணமாகும்.

இந்த வலிக்கொப்பாகவே மனசாட்சி இருக்கிறது. நாம் தேவனுடைய பிரமாணங்களை மீறும் போதும், பாவசிந்தனை கொள்ளும்போதும், அல்லது பாவத்தை செய்த பின்பும் இந்த மனசாட்சி நம்மை எச்சரிக்கிறது. இந்த எச்சரிப்புகளை நாம் அலட்சியம் செய்யவோ அல்லது அதை மீறியோ நடந்தால், நாம் கொஞ்சம் கொஞ்சமாய் நமக்குள் இருக்கும் பாவ உணர்வை கொன்றுவிடுவோம். இதுபோன்ற வாழ்க்கையின் முடிவு, நித்திய நித்திய காலமாய் தேவனால் தண்டிக்கப்படுவதே ஆகும்.

இயேசு இந்த மனசாட்சியை "கண்ணிற்கு" ஒப்பிட்டார் (லூக்கா 11:34-39). நம் கண்ணில் ஒரு சிறிய தூசி விழுந்தாலும், கண் உறுத்தல் உண்டாகி அத்தூசியை நம் கண்ணிலிருந்து நாம் அகற்றும்வரை நம்முடைய எல்லா வேலைகளையும் நிறுத்திவிடுகிறது. இக்கண்ணிற்கு ஒப்பாகவே நம் மனசாட்சியை எப்போதும் சுத்தமுள்ளதாய் நாம் காத்துக் கொள்ள வேண்டும்.

நம்முடைய பாவங்கள் தேவனால் மாத்திரமே மன்னிக்கப்பட்டு கழுவப்பட முடியும். நாம் ஏற்கனவே நம் மனசாட்சியில் சுமந்து கொண்டிருக்கும் குற்ற உணர்வை அகற்றுவதற்கு அது ஒன்றே வழியாகும்.

ஆனால், இந்தப் பாவமன்னிப்பு இன்று அநேகர் எண்ணுவதுபோல் மலிவானதொன்றல்ல!

அதிகாரம் 4
மன்னிப்பைப் பற்றிய மெய்யான சத்தியம்

நம்முடைய பாவங்களை தேவன் எவ்வாறு மன்னித்திட முடியும்?

தேவன் நீதிபரராயிருக்கிறபடியால், ஒரு மனிதனை மன்னிப்பதற்கு அவனுடைய பாவங்களைக் கண்டும் காணாததுபோல் இருந்துவிட அவரால் முடியாது! பாவம் எவ்வகையிலும் தண்டிக்கப்பட்டே ஆக வேண்டும். ஆனால் அவர் அன்புள்ள தேவனாயும் இருக்கின்றபடியால் நம்முடைய பாவங்கள் மன்னிக்கப்படுவதற்கென ஓர் வழியை உண்டுபண்ணி வைத்திருக்கிறார்!!

எல்லா மதங்களுமே நாம் நல்லவர்களாயும், அன்புள்ளவர்களாயும், உண்மையுள்ளவர்களாயும் இருக்கும் படி போதிக்கின்றன. ஆனால் "அவை அனைத்தும்" நம்முடைய பாவங்களுக்குரிய மன்னிப்பைப் பெற்ற பிறகு நாம் வாழும் வாழ்க்கையே ஆகும்.

தேவன் நம்முடைய பாவங்களை மன்னிக்கவேண்டுமென்றால், அதற்கென அவர் ஏதாகிலும் செய்யவேண்டியதாய் இருந்தது. உலகத்தை சிருஷ்டிக்கும்போது தேவன் ஒரே ஒரு வார்த்தை மாத்திரம் பேசினார், உடனே உலகம் தோன்றியது! ஆனால் ஒரே ஒரு வார்த்தை மாத்திரம் பேசி நம்முடைய பாவங்களை மன்னித்திட அவரால் முடியவில்லை!!

ஆம், தேவன் நம்மைப் போன்ற மனிதனாக வேண்டியதிருந்தது. நாம் மானிடர்களாய் சந்திக்கும் சோதனைகளுக்கும் பாடுகளுக்கும் ஊடாய்ச் சென்று அவர் வாழ வேண்டியதிருந்தது. மேலும், நம்முடைய பாவங்களுக்கான தண்டனையை தன் மீது சுமந்து நம்முடைய இடத்தில் ஓர் பலியாக அவர் மரிக்க வேண்டியதிருந்தது!!

நம்முடைய பாவங்களுக்கான தண்டனை, துன்பமோ அல்லது வியாதியோ அல்லது வறுமையோ அல்லது இவ்வுலகத்தில் வந்து தாழ்ந்த சமுதாயத்தில் பிறப்பதோ அல்லது இதுபோன்ற வேறெதுவுமோ இல்லை! நித்திய மரணமே அத்தண்டனை ஆகும்!! இந்த மரணம் தேவனை விட்டு நிரந்தரமாய் பிரிந்திருப்பதற்கு ஒப்பாகும். சரீர மரணத்தின் மூலம் நம் சரீரத்தைவிட்டு நாம் பிரிவதைப் போலவே, ஆவிகுரிய மரணத்தின் மூலம் சர்வ ஜீவனுக்கும் ஊற்றாகிய தேவனைவிட்டு பிரிவதாயிருக்கிறது!

இனிவரும் எதிர்காலத்தில் நீங்கள் செய்திடப்போகும் நற்கிரியைகள், கடந்த காலத்தில் நீங்கள் செய்த தீமைகளை ஒருபோதும் நிவர்த்தி செய்யவே முடியாது! நாம் எப்படியாவது தேவனுடைய சமூகத்தை அடைவதற்கு ஒரு வழிகூட இல்லை. ஆம், நாம் ஓர் நம்பிக்கையற்ற இழப்பையே அடைந்துவிட்டோம்!

ஆனால் தேவன் தம்முடைய மிகுந்த அன்பினிமித்தம் நம்முடைய பாவங்கள் மன்னிக்கப்படுவதற்கு ஓர் வழியை உண்டுபண்ணி வைத்திருக்கிறார்.

பாவத்திற்காய் நித்திய தண்டனை அடைவதிலிருந்து மனுவர்க்கத்தை இரட்சிப்பதற்காக பிதாவாகிய தேவன், இயற்கைக்கு அப்பாற்பட்ட பரிசுத்தாவியின் வல்லமையினால், ஒரு கன்னியின் மூலமாய் தன்னுடைய குமாரன் ஒரு பாலகனாய் பிறக்கும்படி, சுமார் 2000 வருடங்களுக்கு முன்பு இவ்வுலகிற்கு அனுப்பினார். அவருக்கு இயேசுகிறிஸ்து எனப் பெயர் தரப்பட்டது. இவர் மானிடர்களுக்கு ஏற்படும் ஒவ்வொரு சோதனையினாலும் சோதிக்கப்பட்டு, தன் பிள்ளைப் பருவத்திலிருந்து புருஷ பருவத்திலிருந்து வளர்ச்சியடைந்தார். அவர் சந்தித்த எல்லா சோதனைகளிலும் வெற்றி சிறந்தார்! ஆம், அவர் ஒரு போதும் பாவம் செய்யவே இல்லை!!

தன் குமாரனகிய இயேசுகிறிஸ்து 33-வயதாய் இருக்கையில் பொல்லாத மனிதர்களால் பிடிக்கப்பட்டு ஒரு சிலுவையில் அறையப்படுவதற்கு பிதாவாகிய தேவன் அனுமதித்தார். அந்த சிலுவையின்மேல் அவர் நமக்காக சாபமாகி, மானிடர்களின் பாவ தண்டனையைத் தன்மீது ஏற்றுக்கொண்டார். இங்குதான் தேவனுடைய ஒப்பற்ற அன்பை நாம் காண்கிறோம்!

இயேசுகிறிஸ்து தம்முடைய இரத்ததை சிந்தி சிலுவையில் மரித்தபோது, நம்முடைய பாவங்களுக்கான நீதியின் தண்டனைத்தொகை முழுவதுமாய் செலுத்தப்பட்டுவிட்டது. ஆம், நீதியின் தேவை சரிக்கட்டப்பட்டு விட்டது!

சிலுவையில் இயேசுகிறிஸ்து புரிந்த தியாகம் ஏற்றுக்கொள்ளப்பட்டது என்பதை இவ்வுலகிற்கு நிரூபிப்பதற்காக அவர் அடக்கம் செய்யப்பட்ட மூன்றாம் நாளில் தேவன் அவரை மரித்தோரிலிருந்து எழுப்பினார்.

ஒரே ஒரு தேவன்தான் இருக்கிறார் என்பதும், இந்தப் பூமியில் தேவனுடைய ஒரே ஒரு மானிட அவதாரம் ஆண்டவராகிய இயேசுகிறிஸ்துதான் என்பதும் இரண்டு உண்மைகளால் நிரூபணமாகிறது.
1.உலகத்தின் பாவங்களுக்காக மரித்த ஒரே ஒருவர் ஆண்டவராகிய இயேசுகிறிஸ்து மாத்திரமே!
2.மரணத்திற்கு பின்பு மீண்டும் உயிருடன் எழுந்து இனி ஒரு போதும் மரிக்காதவராய் இருக்கும் ஒரே ஒருவர், ஆண்டவராகிய இயேசுகிறிஸ்து மாத்திரமே! இதன் மூலமாய், அவர் மனிதனின் மிகப்பெரிய எதிரியாகிய மரணத்தை ஜெயித்துவிட்டார் என்பதை நிரூபித்தார்!!

உயிர்த்தெழுந்து, இப்பூமியில் 40 நாட்களுக்குப்பிறகு, இன்று அவர் இருக்கும் பரலோகத்திற்கு இயேசு திரும்பச் சென்றார். அவ்வாறு திரும்பிச்செல்லும்போது, இவ்வுலகத்தை நியாயம் தீர்த்து அதை நீதியாலும் சமாதானத்தாலும் ஆளுகை செய்வதற்கு ஒருநாளில் மீண்டும் திரும்ப வருவேன் எனவும் வாக்குரைத்தார்.

அவர் இந்த பூமிக்கு வருவதற்கு முன்பாக, தேவன் இயேசு கிறிஸ்துவுக்குள்ளாய் வழங்கும் பாவமன்னிப்பை நீங்கள் பெற்றுக்கொள்ள வேண்டியது எத்தனை அவசியமாய் இருக்கிறது!!

அதிகாரம் 5
மனந்திரும்புதலைப் பற்றிய மெய்யான சத்தியம்

நமக்கு வரவேண்டிய பாவதண்டனையை அவர் தன்மீது ஏற்றுக்கொண்டார். ஆனால் நாம் தேவனிடமிருந்து இந்தப் பாவமன்னிப்பைப் பெற்றுக்கொள்ளாதவரை நம் பாவங்கள் மன்னிக்கப்பட்டு அதன் தண்டனையிலிருந்து விடுதலையாக முடியாது!

இவ்வாறு கிறிஸ்துவின் மரணத்தின் மூலமாய் தேவன் உங்களுக்காக சம்பாதித்ததை நீங்கள் பெறவேண்டுமென்றால், நீங்கள் முதலாவது உங்கள் பாவங்களை விட்டு மனந்திரும்ப வேண்டும். இதன் உண்மையான பொருள் யாதெனில், நீங்கள் அறிந்திருக்கிற ஒவ்வொரு பாவத்தையும் விட்டுத் திரும்புவதற்கு மெய்யான விருப்பம் கொள்வதேயாகும்.

உங்கள் தீய பழக்கங்களை விட்டுவிடுவதற்குரிய பெலன் உங்களிடம் இல்லாமல் இருக்கலாம். இந்த இடத்திலும் தேவன் உங்கள் பெலவீனத்தை நன்கு அறிந்திருக்கிறார். அதற்குரிய பெலன் உங்களுக்கு இருக்கும் என அவர் எதிர்பார்ப்பதில்லை. அவர் உங்களிடம் எதிர்பார்ப்பதில்லை. அவர் உங்களிடம் எதிர்பார்த்து கேட்பதெல்லாம், "இப்பழக்கங்களையெல்லாம் விட்டுவிடுவதற்கு உனக்கு மனதுண்டோ?" என்ற கேள்வி மாத்திரமே. நீங்கள் மெய்யாகவே ஒவ்வொரு பாவ வழிகளையும் விட்டுவிடுவதற்கு விரும்புவதை தேவன் காணும்போது, நீங்கள் எவ்வளவுதான் எண்ணற்ற தீய பழக்கங்களால் இன்றுவரை தோல்வி அடைந்தவர்களாய் இருந்தாலும், நீங்கள் இருக்கிற வண்ணமாகவே உங்களை அவர் ஏற்றுக்கொள்வார்!!

இது எத்தனை ஆச்சரியமான நற்செய்தி என்பதை எண்ணிப்பாருங்கள்!

நீங்கள் மெய்யாகவே உங்கள் பாவ வழிகளை விட்டுவிடுவதற்கு ஆயத்தமாய் இருக்கிறீர்களா என்பதற்கு, நீங்கள் கடந்த காலத்தில் செய்த தவறுகளை ஒப்புரவாகி சரிசெய்திட விரும்பும் "விருப்பமே" தெளிவான நிரூபணமாகும்.

உதாரணமாய், யாரிடமிருந்தாவது நீங்கள் பணத்தைத் திருடியிருந்தால், அப்பணத்திற்குரிய தொகையை நீங்கள் சேர்த்தவுடன் அதை உடனே திரும்பச் செலுத்துவதற்கு விருப்பம் கொண்டவர்களாய் இருக்க வேண்டும்! நீங்கள் யாரையாவது உங்கள் வார்த்தையினால் மனம் புண்படச்செய்து, அது இப்போது உங்கள் "நினைவிற்கு வந்தால்" நீங்கள் பேசிய வார்த்தைக்காக அவரிடம் நேரடியாகச் சென்றோ அல்லது கடிதம் எழுதியோ மன்னிப்பு கேட்பதற்கு விருப்பம் கொண்டவர்களாய் இருக்க வேண்டும்! இதுப்போன்ற செயல்களின் மூலமாகவே தேவன் நம்முடைய உண்மையையும், தாழ்மையையும் சோதித்து அறிகிறார்.

உண்மையான மனந்திரும்புதலை, "விக்கிரகங்களை விட்டு தேவனிடத்திற்கு மனந்திரும்புதல் எனப்பரிசுத்த வேதாகமம் அழைக்கிறது (1தெச.1:1-9).

சிருஷ்டிக்கப்பட்ட ஒன்றை சிருஷ்டிகருக்கு மேலாய் உயர்த்துவதே விக்கிரக ஆராதனையாகும். அது பணமோ அல்லது அழகான ஸ்திரீயோ அல்லது நம்முடைய பேர் புகழோ ஆகிய எதுவாகவும் இருக்கலாம்.

மரத்தினாலோ அல்லது கல்லினாலோ அல்லது உலோகத்தினாலோ செய்யப்பட்டவைகளும் விக்கிரகங்களே ஆகும். இவ்வாறு மனிதன் சிருஷ்டித்த ஒன்று, அவர்கள் ஆராதிக்கும் தேவனாய் மாறுகிறது! அண்டசராசரத்தையும் சிருஷ்டித்த சிருஷ்டிகரை ஒரு தொலை நோக்கு சாயலாகக்கூட எந்த மனிதனும் தன் கரங்களால் வடிவமைத்திட முடியாது!

எனவே மனந்திரும்புதல், எத்தகைய விக்கிரக ஆராதனையிலிருந்தும் திரும்புவதை உள்ளடக்கியதாய் இருக்கிறது. உண்மையான மனந்திரும்புதல், சிருஷ்டிக்கப்பட்ட எல்லாவற்றையும் விட்டு விட்டு தேவனிடத்தில் திரும்பி, "சர்வ வல்லமையுள்ள தேவனே! நீர் ஒருவரே தொழுகைக்கும் ஆராதனைக்கும் பாத்திரர். இந்நாள்வரை, சிருஷ்டிக்கப்பட்டவைகளை நான் தொழுது கொண்டதற்காக மிகவும் வருத்தம் அடைகிறேன்.

இன்றிலிருந்து என் வாழ்வில் நீர் மாத்திரமே எனக்கு எல்லாவற்றிலும் மேலானவர்" என நாம் கூறுவதாய் இருக்கவேண்டும்!

மனந்திரும்ப வேண்டும் என்பதற்காக, நம்முடைய வேலைகளை அல்லது குடும்பத்தை விட்டு ஏதாகிலும் காடு அல்லது மலைக்குச் சென்று சந்நியாசியாக மாறவேண்டும் என்பது பொருளாகாது. அப்படி இல்லவே இல்லை! நாம் யாவரும் நம்முடைய பிழைப்பிற்காக சம்பாதிக்கவும், குடும்பங்களை உடையவர்களாய் இருக்கவுமே தேவன் விரும்புகிறார்! பணம் சம்பாதிப்பது ஒரு பாவமல்ல. ஆனால் தேவனைக் காட்டிலும் பணத்தை அதிகமாய் நேசிப்பதே பாவமாகும்!

திருமண கட்டுக்கோப்பிற்குப் புறம்பே கொள்ளும் எவ்வித பாலிய உறவுகளும் பாவமே ஆகும். ஆகவே, நம்முடைய எல்லா பாலியத்தின் பாவங்களுக்காக மனந்திரும்பவும், அதைவிட்டு விட்டு தேவனிடம் உண்மையான மனதோடு ஒப்புரவாக வேண்டியதும் மிக அவசியமாக இருக்கிறது!

நாம் மனந்திரும்பி விட்டுவிட வேண்டிய மற்றொரு பாவம்யாதெனில், பிறரை மன்னிக்க முடியாத சுபாவமே ஆகும். தேவன் உங்களுடைய எல்லா பாவங்களையும் மன்னிப்பதற்கு நீங்கள் விரும்பினால், உங்களுக்கு ஏதாகிலும் ஒரு வகையில் தீங்கு செய்த யாராயிருந்தாலும் அவர்களை நீங்களும் மன்னிப்பதற்கு விருப்பம் உள்ளவர்களாய் இருக்க வேண்டும். தேவன் உங்களுக்கு எவைகளைச் செய்தாரோ அவைகளை நீங்களும் மற்றவர்களுக்குச் செய்யவேண்டும். இவ்வாறு செய்வதற்கு உங்களுக்கு விருப்பம் இல்லையென்றால் தேவனும் உங்களை மன்னித்திட மாட்டார்!

ஆண்டவராகிய இயேசு கூறுகையில், "மனுஷருடைய தப்பிதங்களை நீங்கள் அவர்களுக்கு மன்னியாதிருந்தால், உங்கள் பிதா உங்கள் தப்பிதங்களையும் மன்னியாதிருப்பார்" (மத்தேயு 6:15) என உறுதியாகக் கூறினார்.

எவ்வளவு பெரிய அல்லது கொடிய பாவமாயிருந்தாலும் எல்லாப் பாவங்களையும் தேவன் மன்னித்திடமுடியும். ஆனால் நாம் மாத்திரம் அவைகளிலிருந்து மனந்திரும்பியிருக்க வேண்டும்!

அதிகாரம் 6
விசுவாசத்தைப் பற்றிய மெய்யான சத்தியம்

"கிருபையினாலே விசுவாசத்தைக் கொண்டு இரட்சிக்கப்பட்டீர்கள்" என வேதாகமம் கூறுகிறது (எபேசியர் 2:8)

நமக்கு உதவியையும் ஆசீர்வாதங்களையும் தரும்படி நம்மை நோக்கி நீட்டும் தேவகரமே கிருபையாகும். தேவனுடைய கரத்தில் இருக்கும் உதவியையும் ஆசீர்வாதங்களையும் பெற்றுக்கொள்ளும்படி நம்முடைய கரத்தை உயர்த்துவதே விசுவாசமாகும்!

தேவன் நல்லவர் என்றும் அவர் உங்களை அளவுக்கடங்காது அன்பு கூறுகிறாரென்றும் நீங்கள் விசுவாசிக்கிறீர்களா? தேவன் தன்னுடைய குமாரனாகிய ஆண்டவர் இயேசுகிறிஸ்துவை நம்முடைய பாவங்களுக்காக சிலுவையில் மரிப்பதற்கு அனுப்பினார் என்றும், மரித்து மூன்று நாட்களுக்குப் பின் தேவன் அவரை உயிரோடே எழுப்பினார் என்றும், அவர் பரலோகத்தில் இன்றும் ஜீவிக்கிறார் என்றும் நீங்கள் விசுவாசிக்கிறீர்களா? இங்ஙனம் நீங்கள் விசுவாசித்தால் தேவன் உங்களுக்கு வழங்கும் பாவமன்னிப்பை இப்போதே நீங்கள் பெற்றுக்கொள்ள முடியும். ஆம், நீங்கள் காத்திருக்க வேண்டிய அவசியமே இல்லை!

நீங்கள் இப்போதே முழங்கால் படியிட்டு உங்கள் கண்களை மூடி கீழ்கண்ட வாக்கியங்களை தேவனிடத்தில் கூறுங்கள்:

"ஆண்டவராகிய இயேசுகிறிஸ்துவே, நான் ஒரு பாவி. நான் மெய்யாகவே என்னுடைய எல்லா பாவங்களிலிருந்தும் திரும்ப விரும்புகிறேன். நீர் என்னுடைய எல்லா பாவங்களுக்காகவும் மரித்து மரணத்திலிருந்து உயிரோடு எழும்பி இன்றும் உயிரோடு இருக்கிறீர் என்பதை நான் விசுவாசிக்கிறேன். தயவுசெய்து என்னுடைய இருதயத்திற்குள்ளும் ஜீவியத்திற்குள்ளும் தயவாய் வந்து, என் முழு வாழ்க்கைக்கும் இன்றிலிருந்து நீரே ஆண்டவராய் இருந்தருளும். வேறு எல்லா தேவர்களையும் நான் விட்டு விட்டு இப்போதிருந்து உம்மை மாத்திரமே நான் தொழுதுகொள்ள விரும்புகிறேன், ஆமென்."

ஆண்டவராகிய இயேசுகிறிஸ்து கூறுகையில், "என்னிடத்தில் வருகிறவனை நான் புறம்பே தள்ளுவதில்லை" என்றார் (யோவான் 6;37).

சற்று முன்பு ஜெபித்த ஜெபத்தை ஆண்டவராகிய இயேசுகிறிஸ்துவிடம் உண்மையாய் ஜெபித்தீர்களா?

அப்படியானால் நீங்கள் மெய்யாகவே அவரிடத்தில் வந்துவிட்டீர்கள். இவ்வேளையில், அவர் உங்களைப் புறம்பே தள்ளவில்லை என்ற நிச்சயத்தை நீங்கள் அடைந்திட முடியும். ஆம், அவர் உங்களை ஏற்றுக்கொண்டார்! அவரிடத்தில் கிட்டிச்சேரும் உங்கள் பகுதியை நீங்கள் செய்து முடிக்கும்போது, உங்களை ஏற்றுக்கொள்ளும் தம்முடைய பகுதியை தேவன் செய்துவிட்டார் என்ற நிச்சயத்தை நீங்கள் பெற்றுக்கொள்ளலாம்!!

நீங்கள் தேவனால் ஏற்றுக்கொள்ளப்பட்டீர்களா அல்லது இல்லையா எனபதை அறிவதற்கு உங்கள் உணர்வுகளைச் சார்ந்து கொள்ளவேண்டிய அவசியம் இல்லை. உணர்ச்சிகள் நம் சரீரத்திற்கடுத்த காரியங்களுக்கு உரியதாகும். ஆனால் ஆவிக்குரிய விஷயங்களுக்கு உணர்ச்சிகள் அதிக வஞ்சகம் நிறைந்ததாகும். நாம் உணர்ச்சிகளை நம்புவதென்பது, ஒரு வீட்டின் அஸ்திவாரத்தை மணலின்மீது போடுவதற்கொப்பாகும். நாமோ நம்முடைய நம்பிக்கையை அல்லது விசுவாசத்தை தேவனுடைய வார்த்தையில் காணப்படும் அவருடைய வாக்குத்தத்தங்கள் மீதே வைத்திட வேண்டும். இதுவே ஒரு கன்மலையின்மேல் கட்டுவதற்கொப்பாகும்!

நீங்கள் தேவனுடைய பிள்ளையாய் மாறிவிட்டீர்கள் என்ற நிச்சயத்தைப் பெற்றவுடன், இந்த மாற்றத்தை மற்றவர்களுக்கும் நீங்கள் அறிக்கை செய்யவேண்டும். இருதயத்தில் நீங்கள் விசுவாசிக்கிறவைகளை நாவினால் அறிக்கை செய்யவேண்டும் என வேதம் கூறுகிறது. உங்கள் நண்பரிடத்திலும், உறவினரிடத்திலும், "கிறிஸ்து என்னுடைய பாவங்களை மன்னித்துவிட்டார்! இப்போது என்னுடைய வாழ்க்கைக்கு அவர் ஒருவரே ஆண்டவர்!!" எனக் கூற வேண்டும்.

இதற்குப் பின்பு, கிறிஸ்துவோடு கொண்டுள்ள உறவை "ஞானஸ்நானத்தின்" மூலமாகவும் அறிக்கை செய்யவேண்டும். நீங்கள் கிறிஸ்துவிடம் உங்கள் இருதயத்தையும், ஜீவியத்தையும் அர்ப்பணித்திட தீர்மானித்த பின்பு துரிதமாய் நீங்கள் ஞானஸ்நானம் பெறவேண்டும். ஞானஸ்நானம் ஒரு மார்க்க சடங்காச்சாரம் அல்ல! அது தேவனுக்கும் மனுஷர்களுக்கும் தூதர்களுக்கும் சாத்தானுக்கும் முன்பாக, "நான் இப்போது இயேசுகிறிஸ்துவுக்கு மாத்திரமே சொந்தம்!" என பகிரங்கமாய் சாட்சி கொடுப்பதாகும்.

ஞானஸ்நானத்தில், இன்னொரு கிறிஸ்தவர், உங்களை முழுவதுமாய் தண்ணீருக்குள் (ஒரு ஆறு அல்லது ஒரு நீர்த்தொட்டியில்) பிதா, குமாரன், பரிசுத்தாவியின் நாமத்தினாலே மூழ்கவைத்து, உங்களை மீண்டும் தண்ணீரிலிருந்து தூக்கிவிடுவார். இந்த மிகச் சாதாரண செயலின் மூலமாக, பழைய மனிதனாய் வாழ்ந்த நீங்கள் மரித்துவிட்டீர்கள், என்ற உண்மையை சாட்சி பகருகின்றீர்கள்! இந்த பழைய மனிதனை, நீங்கள் ஒரு அடையாளமாக தண்ணீருக்குள் மூழ்க வைத்ததன் மூலமாய் "அடக்கம்" செய்துவிட்டீர்கள். தண்ணீரிலிருந்து மீண்டும் வெளியே வந்த நீங்கள், "இன்றிலிருந்து நான் ஓர் புதிய மனிதன் (அதாவது, ஆவிக்குரிய கூற்றின்படி மரித்து மீண்டும் எழுந்தவன்!). புதிய மனிதனாகிவிட்ட நான் இனி தேவனை மாத்திரமே பிரியப்படுத்தி வாழ விரும்புகிறேன்" என உங்கள் நிலையை ஒப்புதல் செய்கிறீர்கள்.

ஆம், நீங்கள் ஒரு பரலோக பிரஜையாகவும், ஒர் தேவப்பிள்ளையாகவும் மாறிவிட்டீர்கள்!!

அதிகாரம் 7
இரட்சிப்பைப் பற்றிய மெய்யான சத்தியம்

"இயேசு" என்ற நாமத்திற்கு "இரட்சகர்" என அர்த்தமாம். அவர் ஜனங்களின் பாவங்களிலிருந்து அவர்களை மீட்டு இரட்சிக்கும்படியாக இந்த பூமிக்கு வந்தபடியால்தான், இந்த நாமத்தை உடையவராய் இருந்தார்.

இரட்சிப்பு மன்னிப்பைக் காட்டிலும் மேலானதாகும்!

இந்த வித்தியாசத்தை தெளிவாக அறிந்து கொள்வதற்கு ஒரு உதாரணத்தைக் கவனியுங்கள். என்னுடைய வீட்டிற்கு வெளியே உள்ள சாலை பழுது பார்க்கப்பட்டு ஒரு ஆழமான குழியை அங்கே வெட்டி இருக்கிறார்கள் என வைத்துக் கொள்ளுங்கள். நான் என்னுடைய சிறு பையனைப் பார்த்து,"சாலையில் உள்ள குழியின் அருகே நீ போகக்கூடாது. ஏனென்றால் நீ அதில் தவறி விழுந்து விடக்கூடும்" என எச்சரித்துக் கூறுகிறேன். ஆனால் அவனோ என்னுடைய கட்டளைக்கு கீழ்ப்படியாமல் குழியின் அருகே சென்று அதை எட்டிப் பார்க்கிறான்! இப்போது அவன் கால் சறுக்கி குழிக்குள் விழுந்துவிட்டான்!! பத்து அடி ஆழமுள்ள அக்குழியிலிருந்து உதவிக்காக என்னை நோக்கி கூக்குரலிட்டுக் கூப்பிடுகிறான். உதவி செய்வதற்காக நான் குழியின் அருகே வந்தவுடன் அவன் என்னைப் பார்த்து, "அப்பா, உங்கள் கட்டளைக்கு கீழ்ப்படியாததற்காக உண்மையாகவே நான் வருத்தப்படுகிறேன், தயவுசெய்து என்னை மன்னித்துவிடுங்கள்!" எனக் கூறுகிறான். நான் அவனைப் பார்த்து, "பரவாயில்லை மகனே, நான் உன்னை மன்னித்துவிட்டேன், குட்பை!" எனக் கூறிவிட்டு திரும்பச் சென்றுவிட்டால் நான் அவனுக்கு என்ன செய்திருக்கிறேன்? ஆம், நான் அவனை மன்னித்துவிட்டேன், அவ்வளவுதான். ஆனால் நானோ அவனைக் காப்பாற்றவில்லை! இரட்சிப்பில், மன்னிப்பைக் காட்டிலும் மேலானவை அடங்கியிருக்கிறது. நான் என் மகனை அவன் விழுந்த குழியிலிருந்து தூக்கி எடுப்பதும் இந்த இரட்சிப்பிற்குள் அடங்கியிருக்கிறது!!

நமக்கும் இவ்வாறு செய்வதற்காகவே இயேசு வந்தார். அவர் நம்முடைய பாவங்களை மன்னித்தால் மட்டும் போதாது! நம்முடைய பாவங்களிலிருந்து நம்மை அவர் இரட்சிக்கவும் வேண்டும்!!

இரட்சிப்பை நாம் "கடந்த காலம்; நிகழ்காலம்; எதிர்காலம்" என முக்கால அனுபவமாய் அனுபவித்திட வேண்டும். முதலாவதாக, நாம் பாவத்தின் தண்டனையிலிருந்து இரட்சிக்கப்பட வேண்டும். அதற்கடுத்து பாவத்தின் வலிமையிலிருந்து இரட்சிக்கப்பட வேண்டும். அதன் பின்பு முடிவாக, நாம் பரலோகம் செல்லும் போது பாவ சமூகத்தைவிட்டே இரட்சிக்கப்பட்டுவிடுவோம்!

இரட்சிப்பின் முதல் பகுதி பாவங்களிலிருந்து மன்னிக்கப்படும் கிரியைச் செய்கிறது. இதன் மூலம் நம் கடந்தகால குற்றங்கள் நம்மை விட்டு நீங்கிவிடுகின்றன.

ஆனால் இது மாத்திரம் போதாது. இனிவரும் காலத்திலிருந்து ஓர் உத்தமமான வாழ்க்கை வாழ்வதற்கு தேவனிடத்திலிருந்து இன்னமும் உதவி தேவையாயிருக்கிறது. இதற்காகவே தேவன் தம்முடைய "வல்லமையை" நமக்குத் தருகிறார்!!

தேவ பெலனுக்காக நமக்கு அளிக்கப்பட்டிருக்கும் முதல் மூலதனமாயிருப்பது, "தேவனுடைய வார்த்தையே" ஆகும். நாம் சோதனைகளை ஜெயிப்பதற்கு வேதப்புத்தகம் ஓர் வலிமையான ஆயுதமாய் நமக்கு உதவுகிறது. இதனிமித்தமே நாம் ஒவ்வொரு நாளும் தேவனுடைய வசனத்தை வாசிக்கும் பழக்கத்தை உடையவர்களாய் இருக்க வேண்டும். அதனிமித்தம் தேவன் நம்மோடு தம் வார்த்தையின் மூலமாய் பேசி, அன்றாட நம் ஜீவியத்தின் போராட்டங்களைச் சந்திப்பதற்கு நம்மைப் பெலப்படுத்துகிறார்.

தேவ பெலனுக்கென நமக்கு அளிக்கப்பட்டிருக்கும் இரண்டாவது மூலதனமாயிருப்பது, நமக்குள் வந்து வாசமாயிருக்கும் "பரிசுத்தாவியாகிய தேவனே" ஆவார். நம்முடன் தினமும் பேசவும், வாழ்க்கைப் போராட்டங்களுக்குரிய பெலனைத் தரவும், கிறிஸ்துவின் அடிச்சுவடிகளைப் பின்பற்றும் சீஷர்களாய் வாழ்வதற்கு உதவி செய்யவும், பரிசுத்தாவியானவர் நமக்குள் நிரந்தரமாய் வாழ விரும்புகிறார். எனவேதான், பரிசுத்தாவி நம்மைத் தொடர்ச்சியாய் நிரப்பும்படி நாம் தேவனிடம் கேட்க வேண்டும்!!

ஆண்டவராகிய இயேசு இதைகுறித்து கூறுகையில் "பொல்லாதவர்களாகிய நீங்கள் உங்கள் பிள்ளைகளுக்கு நல்ல ஈவுகளைக் கொடுக்க அறிந்திருக்கும்போது பரமபிதாவானவர் தம்மிடத்தில் வேண்டிக் கொள்ளுபவர்களுக்குப் பரிசுத்த ஆவியைக் கொடுப்பது அதிக நிச்சயம் அல்லவா" என்றார் (லூக்கா 11:13).

தேவ பெலனுக்காக நமக்கு அளிக்கப்பட்டிருக்கும் மூன்றாவது மூலதனமாய் இருப்பது, "ஏக சிந்தை கொண்ட கிறிஸ்தவர்களோடு கொண்டிடும் ஐக்கியமாகும்."

இருப்பினும் இந்த இடத்தில் நாம் சற்று கவனமாயிருக்க வேண்டியதிருக்கிறது. ஏனென்றால் தங்களைக் "கிறிஸ்தவர்கள்" என அழைத்துக்கொள்ளும் எல்லோரும் உண்மைக்கிறிஸ்துவர்களாய் இருப்பதில்லை. இவ்வாறு பெயரளவில் மாத்திரம் கிறிஸ்துவர்களாய் இருப்பவர்களை நாம் தவிர்த்துவிடல் வேண்டும்! நாமோ, அனுபவபூர்வமான கிறிஸ்துவர்களாய் மாறி, இயேசுகிறிஸ்துவைத் தங்கள் அனுதின வாழ்வில் பின்பற்ற வாஞ்சிப்பவர்களோடு மாத்திரமே ஐக்கியம் கொள்ள நாடவேண்டும்!

கிறிஸ்துவை நம்முடைய இரட்சகராகவும், ஆண்டவராகவும் ஏற்றுக்கொள்ளும்போது நாம் தேவனுடைய பிள்ளைகளாய் மாறுகிறபடியால், " பரத்திலிருந்து பிறந்தவர்கள்" என வேதாகமம் நம்மை கூறுகிறது. இப்போது தேவன் நம்முடைய தகப்பனாய் இருக்கிறார்! எந்த உலகத் தகப்பனைப் போலவே , இப்பூமியில் நமது ஆவிக்குரியதும் சரீரத்திற்குரியதுமான எல்லாத் தேவைகளையும் நமக்குத் தருவதற்கு தேவனும் ஆர்வம் கொண்டவராய் இருக்கிறார்.

சர்வ வல்லமையுள்ள தேவனிடம் நாம் பேசுவதும், நம்முடைய ஆவியில் தேவன் பேசுவதுமாகிய "ஜெபிக்கும் சிலாக்கியம்" ஒவ்வொரு தேவனுடைய பிள்ளைக்கும் கையளிக்கப்பட்ட ஆச்சரியமான சிலாக்கியங்களில் ஒன்றாகும்.

இன்று அநேக ஜனங்கள் தனிமையில் மெளனமாய் துன்பப்படுகிறார்கள். ஏனென்றால் இவர்களுக்கு தங்கள் வருத்தங்களைப் பகிர்ந்து கொள்வதற்கு யாருமே இல்லை! ஆனால் தேவனுடைய பிள்ளைக்கோ, பரலோகத்தில் ஒரு தகப்பன் இருக்கிறபடியால், அவரிடத்தில் தனக்குரிய யாவற்றையும் பகிர்ந்துகொள்ள முடியும். பரலோகத் தகப்பன், இப்பூமியில் நமக்குத் தேவையான யாவற்றையும் தருவார் என நாம் நம்பியிருக்க முடியும்!

இவ்வுலகில் அநேக ஜனங்கள், பிறர் செய்த பில்லி சூனியத்தினாலோ அல்லது செய்வினையினாலோ துன்பம் அனுபவிக்கிறார்கள். நீங்கள் உங்கள் இருதயத்தையும் வாழ்க்கையையும் கிறிஸ்துவுக்கு அர்ப்பணித்திருப்பீர்கள் என்றால், இதுப்போன்ற சாத்தானுக்குரிய கிரியைகள் உங்களைத் துன்புறுத்த இனிமேலும் முடியாது! உங்களை இரட்சிக்கும்படி ஆண்டவராகிய இயேசுகிறிஸ்துவின் நாமத்தை நீங்கள் கூப்பிடும்போது, உங்கள் மீதுள்ள எவ்வித பில்லி சூனியத்தின் வல்லமையும் "நொடிப்பொழுதில்" "இப்போதே" விரட்டி எறியப்படமுடியும்!

'தேவனுக்குக் கீழ்படிந்திருங்கள்; பிசாசிற்கு எதிர்த்து நில்லுங்கள், அப்பொழுது அவன் உங்களைவிட்டு ஓடிப்போவான்' (யாக்கோபு 4:7) என்றே வேதம் கூறுகிறது!

தன்னுடைய பிள்ளைகளின் இப்பூமிக்குரிய வாழ்க்கையில் பாடுகளும் பிரச்சனைகளும் இருக்காது என தேவன் வாக்குத் தரவேயில்லை! எந்த மானிடனையும் போலவே பாடுகளையும் பிரச்சனைகளையும் சந்திக்க தேவன் நம்மை அனுமதிக்கிறார்! ஆனால் நாமோ இவ்வித பாடுகளின் மூலமாய் தேவனை மென்மேலும் நெருங்கி அறிந்து கொள்கிறோம். பாடுகளின் ஒவ்வொரு சூழ்நிலையிலும், தேவனுடைய அற்புதமான உதவியை நாம் ருசிக்கிறபடியால், அவரை அறிந்துகொள்ளுகிற அறிவு நம்மில் வளருகிறது!

அதிகாரம் 8
நித்தியத்தைப் பற்றிய மெய்யான சத்தியம்

தேவனுடைய பிள்ளையாகிவிட்ட ஒருவனுக்கு இக்காலத்திற்குரியவைகளைக் காட்டிலும் நித்தியத்திற்குரியவைகள் அதிக மேன்மையுள்ளதாய் இருக்கும்!

2000 வருடங்களுக்கு முன்பு, ஆண்டவராகிய இயேசு மரித்தோரிலிருந்து உயிர்த்தெழுந்து பரத்திற்கு ஏறிச் சென்றபோது, தான் மீண்டும் இப்பூமிக்குத் திரும்ப வருவதாக வாக்குரைத்தார். இதைதான் "கிறிஸ்துவின் இரண்டாம் வருகை" என வேதம் அழைக்கிறது. இந்நிகழ்ச்சியே இவ்வுலக சரித்திரத்தில் இனி நடைபெறப் போகும் மாபெரும் நிகழ்ச்சியாகும்! கிறிஸ்து இப்பூமிக்குத் திரும்ப வரும்போது, நம் முழு ஜீவியத்திற்குரிய கணக்கை தேவனுக்கு ஒப்புவிக்க வேண்டுமென்பதை ஒவ்வொரு தேவனுடைய பிள்ளையும் உணர்ந்திருக்கவேண்டும்!!

"இவ்வுலகமும் அதிலுண்டான யாவும் கடந்து போகும் என வேதாகமத்தில் மிகவும் தெளிவாக தேவன் நமக்கு கூறியிருக்கிறார். எனவே இப்பூமிக்குரிய தற்காலிகமானவைகளுக்காக நாம் ஜீவிக்காமல், பரலோக ஞானமுள்ளவர்கள் நித்திய மதிப்புடையவைகளுக்காகவே ஜீவிப்பார்கள்! நித்திய மதிப்புடையவைகள் நம்முடைய குணாதிசயங்களாகிய பரிசுத்தம், அன்பு, நற்குணம், மன்னிக்கும் தன்மை, தாழ்மை போன்றவைகளாகும்! நாம் இந்தப் பூமியை விட்டு கடந்து போகையில் இதுபோன்ற மேலான குணாதிசயங்களை மாத்திரமே நம்மோடு எடுத்துச்செல்ல முடியும்.

"ஒரேதரம் மரிப்பதும் பின்பு நியாயத்தீர்ப்பு அடைவதும் மனுஷருக்கு நியமிக்கப்பட்டிருக்கிறது"(எபிரெயர் 9:27).

எதிர்காலத்தில், சீக்கிரத்தில் ஒருநாள், இப்பூமியில் வாழ்ந்த ஒவ்வொரு மனிதனும் தன் வாழ்க்கைக்குரிய கணக்கை தேவனுக்கு ஒப்புவிக்கும்படி, மரித்தோரிலிருந்து எழுப்பப்படுவார்கள். என்பதே உயிர்த்தெழுதல் ஆகும்! இருப்பினும், இரண்டு வகையான உயிர்த்தெழுதல் இருக்கும் என வேதாகமம் கூறுகிறது.

முதல் உயிர்த்தெழுதல், தாங்கள் இப்பூமியில் இருக்கும்போது கிறிஸ்துவினிடத்தில் திரும்பி, தங்கள் பாவங்கள் மன்னிக்கப்பட்டு தேவனுடைய பிள்ளைகளாய் மாறிய நீதிமான்களுக்காக நடைபெறும் உயிர்த்தெழுதல் ஆகும்!

இரண்டாம் உயிர்த்தெழுதல், கிறிஸ்துவை தங்கள் இரட்சகராகவும் ஆண்டவராகவும் ஏற்றுக் கொள்ளாமல் தங்கள் பாவங்கள் மன்னிக்கப்படாமலே மரித்தவர்களுக்காக நடைபெறும் உயிர்த்தெழுதல் ஆகும்!!

ஒரு மனிதன் தன் பாவங்களிலிருந்து மனந்திரும்பாமலும் தன்னுடைய பாவமன்னிப்பிற்காக கிறிஸ்துவை விசுவாசிக்காமலும் மரித்தால், ஒரு நாளில் கிறிஸ்துவின் நியாயாசனத்திற்கு முன்பாக அவன் நியாயம் தீர்க்கப்படுவான்! பின்பு அவன் நித்திய நித்திய காலமாய் ஓர் அக்கினிக் கடலில் தள்ளப்படுவான். அந்த இடம் அவனுக்கு ஓர் முடிவே இல்லாத தண்டனையாய் இருக்கும். இதுவே கிறிஸ்துவை ஏற்றுக்கொள்ள மறுப்போருக்கு நித்திய காலமாய் நிகழப்போகும் பயங்கர எதிர்காலமாகும்!

இதற்கு மாறாக, தங்களைத் தாழ்த்தி, தங்கள் பாவங்களை ஒத்துக்கொண்டு, அவைகளை அறிக்கை செய்து விட்டுவிட்டு, கிறிஸ்துவின் சிலுவை மரணத்தின் மூலமாய் தேவன் வழங்கும் மன்னிப்பை ஏற்றுக்கொண்டவர்கள், பரலோகத்தின் மகிழ்ச்சிக்குள் பிரவேசிப்பார்கள்! அங்கே அவர்கள் தேவனோடும், இயேசுகிறிஸ்துவோடும் நித்திய காலமாய் வாசம் செய்வார்கள்!!

நாம் இந்த உலகத்தை விட்டு எப்போது மரிப்போம் என நம்மில் ஒருவரும் கூறிவிட முடியாது. நாம் வாழும் இந்த நாட்களில் ஒருநாள் இப்பூமியில் நம்முடைய கடைசிநாளாய் இருக்கப்போகிறது! அந்த நாள் வருவதற்கு முன்பாக..... உங்கள் பாவங்கள் மன்னிக்கப்பட்டுவிட்டன என்ற நிச்சயத்தையும், தேவனை சந்திப்பதற்கு ஆயத்தமாயிருக்கிறீர்கள் என்ற உறுதியையும் நீங்கள் பெற்றுக்கொள்ளுங்கள்!!