கர்த்தருக்கு ஊழியம் செய்திட உத்தம வழிகள்

எழுதியவர் :   சகரியா பூணன்
    Download Formats:

அதிகாரம் 1
கர்த்தருக்கு ஊழியம் செய்திட, நியதிகள் உண்டு . .

வெளிப்படுத்தின விசேஷப்புத்தகத்தின் 1-ம் அதிகாரத்தில் ஆண்டவர் தன்னைப்பற்றிய வெளிப்பாட்டையே அப்போஸ்தலனாகிய யோவானுக்கு முதலாவதாகத் தந்தார். அதற்குப்பின்பு 2,3-ம் அதிகாரத்தில் உலகத்தின் பல பகுதிகளிலிருந்த சபைகளின் ஆவிக்குரிய உண்மை நிலைமையை யோவானுக்கு காண்பித்தார். இந்த அதிகாரங்களில் நாம் அறிந்திருக்கிறபடி, அநேக சபைகளின் நிலை பின்மாற்ற நிலையில்தான் இருந்தது. இவ்வாறு சபைகளின் சோக நிலையை காண்பித்த பிறகு, ஆண்டவர் 4-ம் அதிகாரம் 1-ம் வசனத்தில் ஓர் இனிமையான அழைப்பை யோவானுக்குத் தந்தார்..... “இங்கே ஏறி வா” என ஆண்டவர் கூறியதே அந்த இனிய அழைப்பாகும்!

 

இவ்வாறு, நம்மைச் சுற்றியுள்ள மோசமான நிலையை நாம் கண்டு, ஏராளமான பிரச்சனைகளில் ஈடுபட்டு, அதற்கு விடை காண முடியாமல் தவிக்கும்போது, “இங்கே, மேலே ஏறி வா” என்ற ஆண்டவரின் அழைப்பைக் கேட்பது ஆறுதலாகவே இருக்கிறது. “நீ மேலே ஏறிவந்து என்னுடைய ஸ்தானத்தில் நின்று நடப்பவைகளைப் பார்! நீ பூமிக்குரிய மட்டத்தில் நின்றுகொண்டு பிரச்சனைகளைப் பார்த்துக் கொண்டிருப்பதை நிறுத்திவிடு!” என்றே அழைக்கிறார்.

 

நாம் வாழும் இக்காலத்தில், “மேலே ஏறி வா” என்ற இனிய அழைப்பை நம் ஆண்டவரிடமிருந்து தொடர்ச்சியாய் கேட்க வேண்டியது மிகவும் அவசியமாயிருக்கிறது. 

 

இதைப் பவுல் குறிப்பிடும்போது “ஒன்று செய்கிறேன், பின்னானவைகளை மறந்து, முன்னானவைகளை நாடி, கிறிஸ்து இயேசுவுக்குள் தேவன் அழைத்த பரம அழைப்பின் (The upward call, மேல் நோக்கிய அழைப்பின்) பந்தயப் பொருளுக்காக இலக்கை நோக்கித் தொடருகிறேன்” என்றார் (பிலி.3:13,14), இவ்வாறு மேலே ஏறிவரும்படியான அழைப்பை பவுல் கேட்டிருந்தார்! ஆகவே, எவ்வளவுதான் மேலே ஏறி உயர்ந்த ஸ்தானத்திற்குப் பவுல் சென்றிருந்தாலும், அதில் திருப்தி கண்டு விடாமல் இன்னமும் ஆசையாய் தொடர்ந்து சென்று கொண்டே இருந்தார்!

 

கிறிஸ்தவ ஊழியத்தில் தலைமைப் பொறுப்பில் உள்ள நமக்கு இருக்கும் அபாயம் யாதெனில், “நாம் அதிகமாய் ஜனங்களுக்கு முன்பாக நின்று கொண்டிருக்கிறோம்” என்பதுதான். நாம் ஜனங்களால் புகழப்படுகிறோம்! இப்போது பொது ஜன சார்பில் நம்மைப் பேட்டியும்' காண்கிறார்கள்! நம் பெயருக்கு முன்பாய் நம்மை கனப்படுத்தும் தலைப்பும், நம் பெயருக்கு பின்பாய் நாம் பெற்ற பட்டமும் மிகுந்த ஜொலிப்புடன் இருக்கிறது! இவ்வளவும் நமக்கு இருக்கிறதே, இனி வேறென்ன வேண்டியிருக்கிறது? ஊழியனே, உனக்கு மிக முக்கிய தேவை ஒன்று இருக்கிறது: ஆம், “நாம் தேவனுடைய இருதயத்தை நெருங்கிக் கிட்டிச் சேரும்படி மேலே ஏறிச்செல்வதே இப்போது தேவை!!”

 

தனக்கு ஒரு வேலைக்காரன் (Servant) வேண்டுமென்பதற்காக தேவன் ஆதாமை சிருஷ்டிக்கவில்லை! அல்லது தனக்கு ஒரு “வேத அறிவு பெற்ற பண்டிதன்” (BIBLE SCHOLAR) வேண்டுமென்பதற்காகவும் தேவன் ஆதாமை சிருஷ்டிக்கவில்லை!! 'இப்போதும்கூட உங்களையும் என்னையும் அவ்விதமே வேலைக்காரன் (ஊழியன்) தனக்குத் தேவை என்றோ, அல்லது ஒரு வேத பண்டிதன் தனக்குத் தேவை என்றோ ஆண்டவர் சிருஷ்டிக்கவில்லை.

 

அவருக்கு ஏற்கனவே அவரைச் சேவிக்கும்படியாகக் கோடிக்கணக்கான தேவதாதர்கள் போதுமான அளவு இருக்கிறார்கள். ஆம் ஆதாமைத் தேவன் சிருஷ்டித்ததின் பிரதான நோக்கம்: ஆதாம் தன்னோடு ஐக்கியம் கொள்ள வேண்டும் என்பதேயாகும்!

 

ஆதியில் தேவன், ஆதாமுக்கு “ஆறு நாட்கள் வேலை செய்து, ஏழாம் நாளில் ஓய்ந்திரு” என்ற பிரமாணத்தை அவனுக்குத் தரவில்லை! இவ்வித பிரமாணம் மோசேயின் நியாயப்பிரமாணத்தின் போதுதான் ஏற்பட்டது. எப்படியெனில், ஆதாம் ஆறாம் நாளில்தான் சிருஷ்டிக்கப்பட்டான். ஆகவே, தேவனுக்கு ஏழாம் நாளாயிருந்த அந்த நாள், ஆதாமுக்கோ முதல் நாளாயிருந்தது. அதாவது, ஆதாம் தன் சிருஷ்டிகரோடு இளைப்பாறி, அவரோடு ஐக்கியம் கொள்ளும் நாளாகவே ஆதாமுக்கு அந்த முதல் நாள் இருந்தது! அந்த முதல் நாளில் ஆதாம் தேவனோடு ஐக்கியம் கொண்ட பிறகுதான், அவன் வெளியே தோட்டத்திற்குச் சென்று ஆறு நாட்களும் தேவனுக்கு ஊழியம் செய்திடும் நிலையிலிருந்தான்!!

 

இவ்வாறு தேவன் நமக்கென ஏற்படுத்தியிருக்கும் ஒழுங்கு வரிசையை மறந்துவிட்டால், முதலாவது தேவனோடு ஐக்கியம் கொள்ளத் தவறி, 'அந்த இடத்தை' அவருடைய திராட்சத் தோட்டத்திற்குச் சென்று அவருக்கு ஊழியம் செய்யும் நிர்ப்பந்தம் நம்மைப் பற்றிக் கொள்ளும் என்பது உறுதி! இப்படி நமக்குச் சம்பவித்து விட்டால், நாம் படைக்கப்பட்டதின் பிரதான நோக்கத்தையும், நம்முடைய மீட்பின் பிரதான நோக்கத்தையும் இழந்து விட்டோம் என்றே கூறவேண்டும்!

 

குறிப்பாய், இந்தியா போன்ற ஒரு தேசத்தில், நம்மைச் சுற்றியுள்ள “தேவையினால் ஆட்கொள்ளப்பட்டு” தேவனிடம் ஐக்கியம் கொள்ளுவதற்கோ நேரம் இல்லாதுபோகும் பரிதாபம் ஏற்பட வாய்ப்பு இருக்கிறது. ஏராளமான தேவைகள் நம்மைச் சுற்றியிருக்க, தேவனோடு ஐக்கியப்பட காத்திருக்கும் நேரம் வீணான நேரமாகக்கூட நமக்குத் தோன்றலாம்! ஆனால் “தேவை ஏராளம்” என்ற பின்னணியில் நாம் செய்த ஊழியத்தின் பலன் என்ன? ஒருவேளை ஏராளமான ஊழியங்கள் செய்திருக்கலாம் ...... ஆனால், அதன் தரமோ நிச்சயம் மோசமானதாகவே இருக்கும்! கணக்கு காட்டும் புள்ளி விபரங்கள் (Statistics) எப்போதும் வஞ்சகம் நிறைந்ததாகும். இவ்வுலகத்தில் மூன்றுவிதமான பொய்கள் உள்ளன. 1) கறுப்பு பொய்கள் 2) வெள்ளை பொய்கள் 3)வளர்ச்சியை காட்டும் புள்ளி விபரங்கள்!ஆம், இன்று ஜனங்கள் 'வளர்ச்சி' எனக் கூறும் புள்ளி விபர கணக்குகளும் பொய்யாகவே இருக்கிறது. எனவேதான் உங்கள் வளர்ச்சி புள்ளி விபரங்களில் இயேசு ஒருநாளும் ஆர்வம் கொள்வதேயில்லை!

 

என் வாழ்க்கையில் சில குறிப்பிட்ட கேள்விக்குறிகளை சந்தித்திருக்கிறேன். அதில் ஒன்று, என் ஆரம்ப ஜீவியத்தில் நான் சந்தித்த கேள்விக் குறியாகும். அதாவது, நான் கர்த்தருக்கு ஊழியம் செய்ய ஆரம்பித்த போது 'புள்ளி விபர கணக்கின்படி' எனக்கு வசனங்கள் நன்றாய் தெரிந்திருந்தாலும்..... 'தேவனுடைய தரத்தின்படியான வாழ்க்கைக்கு' என்னிடத்திலோ வல்லமை (Power) இல்லாதிருந்ததைக் கண்டேன்! ஆகவே, உன்னதத்தின் வல்லமையால் நான் தரிப்பிக்கப்படும்படி பரிசுத்த ஆவியின் அபிஷேகத்திற்காய் நான் தேவனைத் தேடினேன்.

 

இன்று பரிசுத்த ஆவியின் அபிஷேகத்தைக் குறித்து பல்வேறு கருத்துக்கள் இருப்பது எனக்குத் தெரியும். ஆகவே இந்த இடத்தில் நான் யாருடைய கருத்துக்களையும் மாற்ற முயற்சித்து இவைகளை எழுதுவதாகத் தயவுசெய்து எண்ண வேண்டாம். என் வாழ்வில் நான் சந்தித்த கேள்விக் குறியைத்தான் இப்போது நான் உங்களிடம் பகிர்ந்து கொள்ளுகிறேன். ஆம், நான் மறுபடியும் பிறந்திருந்தேன், தண்ணீர் ஞானஸ்நானமும் பெற்றிருந்தேன்..... ஆனால், என் வாழ்க்கையில் “உள்ளத்திலிருந்து ஜீவத்தண்ணீருள்ள நதிகள்" புரண்டோடவில்லை! இருப்பினும் தன்னை விசுவாசிக்கும் ஒவ்வொருவருடைய ஜீவியத்திலிருந்தும் ஜீவத்தண்ணீருள்ள நதிகள் புரண்டோடும் என்றும், அவர்களிடம் ஒருபோதும் 'வறட்சி காணப்படாது' என்றும் இயேசு வாக்குதத்தம் செய்திருக்கும் சத்தியம் எனக்கு நன்றாகவே தெரியும். ஆனால் நானோ அநேக சமயங்களில் வறட்சியாக இருந்ததையே கண்டேன். நான் வசனங்களை அறிந்திருந்தாலும்கூட, நான் தொடர்ந்து பிரசங்கங்களை செய்து கொண்டிருந்தாலுமேகூட வறட்சியாகத்தான் இருந்தேன்! அநேக சமயங்களில் நான் கர்த்தருக்குச் செய்யும் ஊழியம் கையினால் இயங்கும் “அடி-பைப்” போலவே இருந்தது. பல தடவை நாம் கையினால் அடித்த பின்பே, குழாயில் இலேசாகத் தண்ணீர் வரும் இவ்விதநிலை, நிச்சயமாய் நதிக்கு ஒப்பானது அல்ல! ஆனால், இயேசுவின் வார்த்தை மிகத்தெளிவாக “என்னிடத்தில் விசுவாசமாயிருக்கிறவன் எவனோ, அவன் உள்ளத்திலிருந்து ஜீவத்தண்ணீருள்ள நதிகள் ஓடும்” எனக் கூறுவதைக் காண்கிறேன். கடைசியாய் நான் இங்கு சுருக்கமாய் சொல்ல விரும்புவதெல்லாம், “என்னுடைய வறட்சியான நிலையிலிருந்து நான் கர்த்தரைத் தேடினேன்.... அவர் என்னைச் சந்தித்தார்!” என்பதுதான்.

 

இவ்வாறு தேவன் தம்முடைய அபிஷேகத்தினால் என்னைச் சந்தித்த நிகழ்ச்சி என் ஜீவியத்தின் முழுதிசையையும் மாற்றிவிட்டது!!

 

என்னிடத்தில் ஏற்பட்ட மாற்றம், நான் ஒரு பெந்தெகொஸ்தே சபையில் சேர்ந்ததால் ஏற்படவில்லை! இன்றும்கூட என்னை நான் ஒரு “பெந்தெகொஸ்தேகாரனாகவோ” அல்லது “கரிஸ்மேட்டிக்” (CHARISMATIC) நபராகவோ எண்ணுவது இல்லை, ஆனால், தேவன் என்னைச் சந்தித்து, தம்முடைய பரிசுத்த ஆவியினால் என்னை நிரப்பினார்!"

 

அடுத்ததாக, சில வருடங்களுக்குப்பின்பு என் வாழ்வில் நான் மற்றொரு கேள்விக்குறியைச் சந்தித்தேன். அந்தக் கேள்விக்குறி என் வாழ்க்கையின் “உண்மை நிலையைப்” (Reality) பற்றியதாகும். அதாவது, நான் பிரசங்கிக்கும் யாவும் என் உள்ளான வாழ்க்கையின்படி உண்மையானவைகள் தானா? நான் ஜனங்களிடத்தில் பேசும்போது பாரம் கொண்டதுபோல் பேசியவைகள், உண்மையிலேயே என் இருதயத்தில் பாரமுள்ளதாய் இருக்கிறதா? என்ற கேள்விக்குறியேயாகும்.

 

சுமார் 40-வருடங்களுக்கு முன்பாக தியாலாலியில் (DIOLALAI) நடந்த அகில இந்திய சுவிசேஷ முதல் மாநாட்டில், என்னுடைய செய்திக் கட்டுரையை சமர்ப்பித்தேன். அப்போது நான் 30 வயது நிரம்பிய இளைஞன்! நாம் இளைஞராயிருக்கும்போது எப்படியிருப்போம் என்பது உங்களுக்கே தெரியும். ஆம், நானும்கூட ஒவ்வொருவரையும் கவர்ச்சிக்கவே விரும்பினேன். நான் பல மணி நேரங்கள் பிரயாசப்பட்டு அந்தக் கட்டுரையை எழுதியபடியால், அந்தச் செய்திகள் அனைத்தும் மிகவும் கவர்ச்சிகரமாகவே இருந்தது. இவ்வாறு கவர்ச்சிக்கும் அடிப்படையிலேயே, என்னுடைய ஊழியத்தில் தொடர்ந்து ஆஸ்திரேலியா, சிங்கப்பூர் போன்ற அநேக நாடுகளுக்குப் பிரயாணமாய் சென்று ஆழ்ந்த ஜீவியக் கருத்தரங்குகளில் பேசினேன்! நான் எங்கு சென்றாலும், என்னுடைய ஒரே நோக்கம் ஜனங்களைக் கவர்ச்சிக்க வேண்டும் என்பதாகவே இருந்தது!!

 

பின்பு ஆண்டவர் என்னிடத்தில் பேசி, “நீ ஜனங்களை கவர்ச்சிக்க (IMPRESS) விரும்புகிறாயா? அல்லது, அவர்களுக்கு உதவிட (HELP) விரும்புகிறாயா?” எனக் கேட்டார். உடனே நான், “ஆண்டவரே ஜனங்களுக்கு உதவிடவே நான் மெய்யாய் விரும்புகிறேன்” என்றேன் அதற்கு ஆண்டவர், “அப்படியானால் ஜனங்களைக் கவர்ச்சிக்கும் முயற்சியை நிறுத்து!” எனக்கூறினார். இப்போது, “ஆண்டவரே நான்

 

என்ன பிரசங்கிக்கிறேனோ அதற்கு ஏற்றாற்போல் என் உள்ளான ஜீவியம் இல்லையே” எனக் கதறிடும் இடத்திற்கு நான் வந்துவிட்டேன். வெளிப்புறமாய், எனக்கு நல்ல சாட்சியிருந்தது. ஆனால் என் சிந்தை வாழ்க்கையும், பணம் மற்றும் உலகப்பொருட்களின்மீது கொண்ட மனப்பான்மைகளும் கிறிஸ்துவுக்கு ஒப்பாய் இருக்கவில்லை! என் வாயினால் நான் கிறிஸ்துவை அறிவித்தேன், ஆனால் என் சிந்தைகளிலோ கிறிஸ்துவின் ஆவி ஆட்கொண்டிருக்கவில்லை. இவ்வாறு என் நிலையைக்குறித்து நான் தேவனிடம் நேர்மையாய் அறிக்கை செய்தேன்.

 

ஆம், தேவனைக் கிட்டிச்சேர்வதற்கு “நேர்மையாய் நடந்து கொள்வதே ”முதல் படி என்பதை நான் ஆழமாய் விசுவாசிக்கிறேன்.

 

என் வாலிபநாட்களிலேயே நான் அநேகரால் அறியப்பட்டிருந்தேன், நான் புத்தகங்களும் எழுதியிருந்தேன், அப்புத்தகங்கள் யாவும் பரந்த அளவில் பயன்படுத்தப்பட்டன. வாரந்தோறும் என்னுடைய “வானொலி நிகழ்ச்சியும்" ஒலிபரப்பானது. இங்கும் அங்குமாய் பல இடங்களில் பிரசங்கிப்பதற்கும் அழைக்கப்பட்டேன். இந்த நிலையில் ஒருநாள் ஆண்டவர் என்னிடம், “உன்னைப் பெருமளவு மதித்து, இங்கு கூடிவந்திருக்கும் ஜனக்கூட்டத்திற்கு முன்பு ‘நான் ஒரு நேர்மையாளன் அல்ல' நடைமுறையில் என்னிடத்தில் உண்மையில்லை எனக் கூறிடம் ஆயத்தமா?" எனக்கேட்டார். அதற்கு நான், “அப்படியே செய்வேன் கர்த்தாவே, ஜனங்கள் என்னை என்ன எண்ணிக்கொள்வார்கள் என்பதைக் குறித்து எனக்கு அக்கறையில்லை. எப்படியாயினும் நீர் எனக்கு உதவிசெய்து, என் பிரசங்கத்திற்கு ஒப்பாகவே என் உள்ளான ஜீவியமும் இருக்கும்படி என்னை மாற்றும். அது ஒன்றே இப்போது நான் உம்மிடம் மன்றாடும் ஒரே ஜெபம்” எனக்கூறினேன்.

 

இவ்வாறாகவே நான் 33-ஆண்டுகளுக்கு முன்பாக தேவனிடம் விண்ணப்பம் செய்தேன். என் ஜெபத்தைக் கேட்டு, தேவன் என்னைச் சந்தித்தார். “தன்னை ஊக்கமாய் தேடுகிறவர்களுக்கு அவர் பலனளிக்கிறார்” என்ற வசனம் எத்தனை உண்மையாய் இருக்கிறது! இந்த சமயத்தில் தான் மேலே ஏறிவா!' என ஆண்டவர் என்னை பட்சமாய் அழைத்தார்.

 

என் கடந்த 33 ஆண்டுகளில் தேவனோடு நான் ஐக்கியம் கொள்வது என் வாழ்வின் மிக அருமையானதாய் மாறிவிட்டது! அவரோடு நான் கொண்ட ஐக்கியம், என் முழு ஜீவியத்தையும் மாற்றி, என் ஜீவியத்திலிருந்த எல்லா அதைரியத்தையும் மனச்சோர்வையும் அகற்றிவிட்டது.

 

தேவனோடு இசைந்து நடக்கும் இரகசியத்தை நான் கண்டுபிடித்துவிட்டேன். அந்த இனிய ஐக்கியம், நான் கர்த்தருக்குச் செய்திடும் ஊழியத்தை மகிழ்ச்சியானதாய் மாற்றிவிட்டது! இனி, என் ஊழியத்தில் வறட்சிக்கு இடமே இல்லை!

 

ஆகவே, உங்கள் முழு ஊழியமும், நீங்கள் எவ்வாறு தேவனோடு தனிப்பட்ட விதத்தில் இசைந்து நடக்கப் போகிறீர்கள்? என்பதைச் சார்ந்தே இருக்கிறது. இயேசு ஒரு சமயம், மார்த்தாள் - மரியாள் வீட்டில் இருந்த நிகழ்ச்சி உங்கள் மனதில் இருக்கும் என நம்புகிறேன். அவர் மார்த்தாளைப் பார்த்து: “நீ அநேக காரியங்களைக்குறித்து கவலைப்பட்டு கலங்குகிறாய்” எனக் கூறினார். அவ்வாறு மார்த்தாள் எவைகளைக் குறித்து கவலைப்பட்டு கலங்கினாள்? அங்கே ஒரே ஒரு தேவைதான் அப்போது இருந்தது. ஆம், அவள் தனக்காக அல்ல தன் ஆண்டவருக்கும் அவர் சீஷர்களுக்கும் சமையல்கட்டில் மிகுந்த தியாகத்துடன் சுயநலமில்லாமல் வியர்வைசிந்த ஊழியப்பணி செய்து கொண்டிருந்தாள். அவ்வேளையில், அவள் செய்திடக்கூடிய இதைவிட மேலான ஊழியம் வேறு என்ன வேண்டும்? அவளுடைய ஊழியம் மெய்யாகவே சுயநலம் அற்றது!

 

இன்று அநேக கிறிஸ்தவ ஊழியர்கள் செய்வதுபோல், அவள் தன் ஆண்டவருக்குச் செய்த ஊழியத்தைப் பணத்திற்காகவோ அல்லது சம்பளத்திற்காகவோ செய்யவேயில்லை!

 

அவ்வாறு இருந்தும்கூட ஆண்டவர் அவளைப் பார்த்து “நீ அநேக காரியங்களைக் குறித்து கவலைப்படுகிறாய்” எனக்கூறி விட்டாரே? அவ்வேளையில் மார்த்தாளின் சிந்தையில் இருந்த எண்ணம், “மரியாள் சுயநலமாய் ஒரு வேலையும் செய்யாமல் ஆண்டவரின் பாதத்தில் அமர்ந்து அவரை கவனித்துக் கேட்டுக் கொண்டிருக்கிறாளே!” என்பது தான். இங்குதான் இயேசு மிக ஆணித்தரமாய் குறிப்பிட்டு, “மரியாள் செய்து கொண்டிருக்கும் இந்த செயலே மிக முக்கியமானதாகும். இது ஒன்றே இப்போது மிகவும் தேவை!" எனக்கூறிவிட்டார்.

 

1கொரி.4:2-ல் காணப்படும் வசனம் LIVING BIBLE - மொழி பெயர்ப்பில் “ஒரு உத்தம ஊழியனுக்குரிய முக்கியமான காரியம்: தன் எஜமான் அவனுக்கு என்ன சொல்லுகிறாரோ அதை அவன் அப்படியே செய்வதுதான்!” என மிக அருமையாய் கூறப்பட்டுள்ளது. இந்த வசனம் என் இருதயத்திற்கு சொல்லிமுடியா இளைப்பாறுதலைக் கொடுத்திருக்கிறது. தேவை நிறைந்த உலகத்தை நான் காணும்போது, நான் இப்போது என்ன செய்திட வேண்டும்? காணும் தேவைகளுக்கு ஒப்பாய் நான் செயல்படத் துவங்க வேண்டுமா? இவ்வாறு என்னில் கிரியையை முடுக்கிவிட இன்று கிறிஸ்தவ உலகில் ஏராளமான திறமை ஊழியர்கள் இருக்கிறார்கள்! ஆனால் நானோ, ஆண்டவரிடம் திரும்பி, “நீர் என்ன சொல்ல விரும்புகிறீர்?” என்றே கேட்கிறேன். இன்று எண்ணற்ற மார்த்தாள்கள் என்னைக் குறைகூறி “பாவத்தில் மாய்ந்து கொண்டிருக்கும் தேவை மிகுந்த இந்த உலகத்தில்.... உம் பாதத்தில் அமர்ந்து, நேரத்தை வீணடிக்க வேண்டாம் என்று இவருக்குச் சொல்லும்” என்றே கூறுகிறார்கள்.


இந்த உலகத்தின் தேவைகளை நாம் நிச்சயமாய் பார்க்க வேண்டும் தான்! இயேசுவும்கூட “அறுவடை மிகுதி! உங்கள் கண்களை ஏறெடுத்துப் பாருங்கள்!” என சொல்லத்தான் செய்தார். நாம் தேவையைக் காண்பது மாத்திரமல்லாமல், மற்றவர்களுக்கும் தேவையை சுட்டிக்காட்டத்தான் வேண்டும். ஆனால், “ஊழிய அழைப்பு” மனுஷனிடமிருந்து அல்ல.... “தேவனிடமிருந்தே” வரவேண்டும்!!

அதிகாரம் 2
ஊழிய அழைப்பு' கர்த்தரின் பாதம் அமர்ந்தவர்க்கே உண்டு!

“ஒரு இரட்சகர் இல்லாமல்” இந்த உலகம் தேவையில்' மரித்துக் கொண்டிருக்க இயேசுவோ 4000 ஆண்டுகளாய் பரலோகத்தில் அமர்ந்து கொண்டிருந்தார்! பிதா நியமித்த காலத்திற்கு முன்பாக, பரலோகத்தைவிட்டு வரும்படி அவரை ஒருவர் கூட நிர்ப்பந்தம் செய்திட முடியவில்லை. ஆனால் “காலம் நிறைவேறியவுடன்” அவர் வந்தார்! அவ்வாறு அவர் உலகத்திற்கு வந்தபிறகும்கூட, உலகம் பாவத்தில் மரித்துக் கொண்டிருக்கையில் அவரோ 30 ஆண்டுகளாய் உட்கார்ந்து ஸ்டூலும், பெஞ்சும் செய்து கொண்டிருந்தார்!! ஆம், தேவையை மாத்திரமே கருதி அவர் செயல்படவேயில்லை. ஆனால் ஏற்றவேளை வந்தவுடன் பிதா அவரைப் “போ” என்றதும் உடனே புறப்பட்டுச் சென்றார்! மற்றவர்கள் 3000 ஆண்டுகள் செய்ததைக் காட்டிலும் 3% வருடங்களில் ஏராளமாய் செய்துமுடித்தார்!! ஒரு ஊழியனைக் குறித்த மிக முக்கியமான காரியம், தேவனுக்காக இதையும் அதையும் செய்யும்படி ஓடித்திரிவதல்ல...... மாறாக, அவரை கவனித்துக் கேட்பதுதான்! அவ்வாறு, அமர்ந்து கவனித்துக் கேட்பதுதான் இன்று மிகக் கடினமானதாய் இருக்கிறது!

 

என்னுடைய வாலிப நாட்களில் நான் இருந்த சபையில் மிகுந்த கிரமமாய் வேதாகமத்தைக் கற்று, உபவாசித்து ஜெபித்து வந்தோம். ஒவ்வொருநாள் காலையும் “தியான நேரம்” கைக்கொள்ளவும் போதிக்கப்பட்டோம். இவ்வாறு, காலையில் “தியான நேரம்” கைக்கொள்வது உண்மையிலேயே ஒரு நல்ல பழக்கம், இருப்பினும், இவ்வாறு என்னதான் ஜனங்கள் நேரத்தை தியான நேரத்தில் செலவழித்திருந்தாலும்..... ஜனங்களோ கசப்பும், குறைகூறுதலும், சந்தேகமனப்பான்மை கொண்டவர்களாகவே இருந்தார்கள்! ஆகவே, இவர்களில் 'ஏதோ தவறு இருப்பதையே' கண்டேன்! ஏனெனில், ஒரு தேவ மனிதனோடு சுமார் 15 நிமிடங்கள் மாத்திரமே செலவழித்து, அதிகமாய் ஆசீர்வதிக்கப்பட்டு என் உள்ளம் “சவாலினால்” நிரம்பிய நேரங்களை அறிந்திருக்கிறேன். அவ்வாறிருக்க, 15 நிமிடங்கள் நான் தேவனோடு செலவழித்திருந்தால், அது எத்தனை அதிகம் என்னில்

 

மாறுதலைக் கொண்டுவந்திருக்கும்?! அப்படியிருக்க, நாமோ இன்னமும் மாறுதலடையாதிருப்பது எங்ஙனம்? இப்போது ஆண்டவர் என்னிடம் ஒரு உண்மையைக் காட்டினார்.... ஆம், என் தியான நேரத்தில் நான் அவரோடு நேரத்தை செலவழிக்கவில்லை! அவ்வளவுதான். எனக்கு நானே நேரத்தை எடுத்து, ஒரு புத்தகத்தைப் படித்துக் கொண்டேயிருந்திருக்கிறேன். அந்தப் புத்தகம் வேதாகமோ அல்லது ரசாயணப் புத்தகமோ, எல்லாம் ஒன்றுதான்!

 

நான் “தேவனோடு” நேரம் செலவழித்து “அவரை” கவனித்துக் கேட்காமல், ஒரு புத்தகத்தை வாசித்து நேரத்தை செலவழித்தேன்!

 

மரியாளை இயேசு குறிப்பிடும்போது, “தேவையான ஒன்று...... அமர்ந்து கேட்டதே" என்றார். இந்த ஒன்றிலிருந்துதான் சகலமும் ஊற்றாக புறப்பட்டுச் செல்கிறது. நாம் தேவனுக்கு ஊழியம் செய்திட இதுவே வலிமையான வழியாகும். ஏனென்றால், இவ்வழி மூலமாகவே நாம் என்ன செய்திட தேவன் விரும்புகிறார்? என்பதை அவர் நம்மிடம் கூறிட முடியும்! இயேசு என்ன செய்ய வேண்டும்? என்பதை பிதாதான் அவரிடம் கூறினார். ஒரு சமயம் இயேசு ஆவியானவரால் தூண்டப்பட்டு, கலிலேயாவிலிருந்து இஸ்ரவேல் எல்லைக்கு அப்பாலிருந்த சீதோன் பட்டணத்திற்கு சுமார் 50 மைல்கள் நடந்து சென்றார். அவர் நடந்து, அந்த இடத்தை அடைந்திட கிட்டத்தட்ட ஒருநாள் கூட ஆகியிருக்கும். அங்கே தன் மகள் பிசாசினால் பிடிக்கப்பட்டிருந்த கானானிய ஸ்திரீயை சந்தித்தார். அந்தப் பிசாசை அவர் துரத்திய சமயத்தில், பிள்ளைகளின் மேஜையிலிருந்து விழும் அப்பத்தின் துணிக்கைகளை அந்தஸ்திரீ கேட்டதை பெரிய விசுவாசம்” என தன் சீஷர்களுக்கு இயேசு சுட்டிக்காட்டினார். பிறகு அவர் மீண்டும் கலிலேயாவுக்கு திரும்பிச் சென்றார் என்றும் வாசிக்கிறோம். இயேசுவின் ஊழியம் அப்படித்தான் இருந்தது!

 

“ஒரு ஆத்துமாவைச் சந்திப்பதற்காக அத்தனை மைல்கள் நடந்து சென்றார்! இவ்வித ஊழியம் புள்ளி விபரங்களில் நாட்டம் கொண்டவர்களுக்கு கவர்ச்சியாய் தோன்றாது!! ஆனால், இவ்விதமான ஊழியமே தேவனுடைய சித்தமாகும்!

 

ஆம், இயேசு இவ்வாறாகவே 31 ஆண்டுகள் தேவனுக்கு ஊழியம் செய்தார். ஊழியத்தின் முடிவில், “பிதாவே, நான் செய்யும்படி நீர் எனக்கு நியமித்த கிரியையைச் செய்து முடித்தேன்” (யோவான் 17:4) என மனநிறைவுடன் கூறினார். அப்படியென்ன மனநிறைவு? இந்தியா, ஆப்பிரிக்கா போன்ற உலகத்திலுள்ள எல்லா தேசத்து தேவைகளையும் அவர் சந்தித்து விட்டாரா? அப்படியில்லை..... இல்லவே இல்லை! ஆனால், அவர் செய்யும்படி பிதா தந்த எல்லா ஊழியங்களையும் செய்து முடித்து விட்டார்!! இனி அவர் இந்த பூமியில் ஒரு நாள் கூட அதிகமாய் தங்கிட விருப்பம் கொண்டிருக்கவில்லை. இவ்விதமே அப்போஸ்தலனாகிய பவுலும் "என் ஓட்டத்தை ஓடி முடித்தேன்” என தன் ஜீவியத்தின் இறுதியில் கூற முடிந்தது!!

 

கிறிஸ்துவின் சரீரத்தில் நீங்கள் வித்தியாசமான ஊழியத்தையும், நான் வேறொரு வித்தியாசமான ஊழியத்தையும் பெற்றிருக்கிறோம். ஆனால், நாம் என்ன செய்யவேண்டுமென்று தேவன் விரும்புகிறார்? என்பதை நாம் தெளிவாய் அறிந்திருக்க வேண்டும். இன்று நாம் தேவனுடைய சத்தத்தைக் கேட்கமுடியாதுபோன பரிதாபத்திற்குரிய முக்கிய காரணங்களில் ஒன்று, நம் ஜீவியத்தில் காணும் நேர்மையற்ற தன்மையும், பாசாங்கு (Dishonesty and Prelence) செய்வதுமேயாகும்.

 

இந்த “பாசாங்கான ஜீவியமே” இயேசு என்ன சொல்கிறார்? என கேட்கமுடியாத பரிதாபத்திற்குப் பரிசேயர்களைக் கொண்டு சென்றது. தாங்கள் தேவபக்தியுள்ளவர்கள் போல மற்றவர்களுக்குத் தோற்றமளித்தார்கள். ஆம், அவர்கள் ஜனங்களுக்கு முன்பாக, அக்காலத்திற்குரிய தலைவர்களைப் போலவும், பண்டிதர்களைப் போலவும் நின்றார்கள்! பேதுருவும் யோவானும் இயேசுவைச் சந்திப்பதற்கு முன்பாக, நீங்கள் அவர்களைச் சந்தித்து “அன்பார்ந்த பேதுருவே, யோவானே! நீங்கள் நன்கு அறிந்திருக்கிற பக்தியுள்ள சில மனிதர்களின் பெயர்களை எங்களுக்குக் கூறமுடியுமா?” எனக் கேட்டிருந்தால் அவர்களின் ஸ்தல ஆலயத்தில் மூப்பராய் இருக்கும் சில பரிசேயர்களின் பெயரையே நிச்சயமாய் கூறியிருப்பார்கள். ஏனென்றால் யார் வேதாகமத்தைக் கற்றுத்தேர்ந்து, உபவாசித்து, ஜெபித்து.... பரிசுத்தமும் பக்தியுமாய் தோற்றமளித்தார்களோ, அவர்களே உண்மையான பக்தர்கள் என்பதே அவர்களுடைய எண்ணமாய் அன்று இருந்தது. இவ்வித நிலையில், இயேசு எழுந்து நின்று, ஆலயத்திலிருந்த அந்த மூப்பர்களை' மாய்மாலக்காரர்களும் நரகத்திற்குப் பாத்திரர்கள் என்றும் சாடியதைக் கேட்டு, அவர்கள் எவ்வளவாய் அதிர்ச்சியடைந்திருப்பார்கள் என்பதைச் சற்று எண்ணிப்பாருங்கள்!!

 

இயேசு தன் சீஷர்களைத் தேர்ந்தெடுத்தபோது, அவர்களில் ஒருவரைக்கூட எந்த “பைபிள் -ஸ்கூலிலிருந்தும்” தேர்ந்தெடுக்கவில்லை!

 

அன்று எருசலேமில் “கமாலியேல்” நடத்திய ஒரு பைபிள்-ஸ்கூல் இருக்கத்தான் செய்தது. ஆனால் இயேசுவோ, தன் சீஷர்களைத் தேர்ந்தெடுக்க அங்கு செல்லவேயில்லை! அவரோ தன் சீஷர்களைக் கலிலேயா கரையோரத்திலிருந்த “கல்வியறிவில்லாதவர்களையேத்" தேர்ந்தெடுத்து அவர்களைத் தனது அப்போஸ்தலர்களாய் மாற்றினார். கல்வியறிவில்லாத இவர்களே புத்தகங்கள் எழுதினார்கள்! இன்று அந்தப் புத்தகங்களை, வேத-கலாசாலைகள் தங்கள் மாணாக்கர்களுக்குப் படிக்கக் கொடுத்து, அவர்களை “வேதாகம டாக்டர்களாகப்" பட்டம் பெறச் செய்கிறார்கள்!? இது நம் கண்களுக்கு விந்தையான காட்சியாய் இருக்கிறதல்லவா? இன்றைய வேத-கலாசாலை ஒன்றிற்கு “பேதுரு” சென்று கற்றால், அவர் “பாஸ்” பண்ணி பட்டம் பெற்றிட முடியாது என்றே நான் எண்ணுகிறேன்! ஒருவேளை, அந்த 12- இயேசுவின் சீஷர்களில் திறமையும், கெட்டிக்காரனுமாயிருந்த 'யூதாஸ்காரியோத்து மாத்திரமே' இதுபோன்ற வேதகலாச்சாலை பட்டம் பெற்றிடக் கூடுமோ என்றும் வியக்கிறேன்!!?

 

இயேசு ஏன் இதுபோன்ற ஜனங்களைத் தேர்ந்தெடுத்தார்? ஏனெனில், இவர்களே எளிய - இருதயமும், இயேசு கூறுவதை கவனித்துக் கேட்க விருப்பம் கொண்டவர்களாயுமிருந்தனர்! இந்தச் சாதாரண மனிதர்கள் ஆலயங்களுக்குச் சென்று பிரசங்கித்தபோதுதான்...... ஆ. எத்தனையாய் எழுப்புதலை ஏற்படுத்திவிட்டனர்! அவர்கள் சென்ற இடங்களில், ஜனங்கள் வழக்கமாய் கேட்டுவந்த செய்திகளைப் பிரசங்கிக்கவில்லை. ஆம், அவர்கள் தீர்க்கதரிசிகளாய் நின்றார்கள்!! ஆனால், ஜனங்களோ தீர்க்கதரிசிகளை ஒருபோதும் விரும்பியதேயில்லை. இஸ்ரவேல் தேசத்தின் கடந்த 1500 வருட சரித்திரத்தில், ஸ்தேவான் கூறியதுபோல் “தீர்க்கதரிசிகளில் யாரை நீங்கள் துன்புறுத்தாதிருந்தீர்கள்?” என்பதே தொன்றுதொட்டு நிலைத்திருக்கிறது.

 

அந்த அப்போஸ்தலர்கள் ஒன்றும், மக்களைத் தட்டிக்கொடுத்துப் பேசும் தந்திரப் பிரசங்கிகள் அல்ல! அவர்களோ தீர்க்கதரிசிகளாய் இருந்தார்கள்.

 

இன்று நம் தேசத்திற்கும், இவ்வாறு சில தீர்க்கதரிசிகள் இருந்தால், தேவன் இன்று என்ன பேசுகிறார் என்பதைக் கேட்டிட முடியுமே என வாஞ்சிக்கிறேன்!

 

ஆம், இன்று மனுஷர் கண்களுக்கு முன்பாய் பெரிதும் மேன்மையுமாய் இருப்பவைகளைக் குறித்து தேவன் ஒரு பொருட்டாய் எண்ணுவதேயில்லை. இந்தச் செய்திகளைப் பேசிக்கொண்டிருக்கும் இதுபோன்ற  நூற்றுக்கணக்கில் கூடியிருக்கும் “கிறிஸ்தவத் தலைவர்கள் முகாமிற்கு” நான் ஒன்றும் விரோதியல்ல! ஆனால், நானோ கடந்த 30 ஆண்டுகளுக்கு மேலாய் இதுபோன்ற கூட்டங்களுக்குச் செல்வதை நிறுத்திவிட்டே எனக்கு வரும் அழைப்புகளை நான் ஏற்றுக்கொள்வதும் இல்லை. இத்தகைய கூட்டங்களில் வந்து நிற்பது, உங்களுக்குப் புகழ் சேர்க்கும் என்பதை நான் அறிவேன். கேஸட் மூலமாகவும், வீடியோ-கேஸட் மூலமாகவும் நீங்கள் பிரபல்யமும் ஆகலாம்! ஆனால், நம் தேசத்தின் கிராமப்பகுதிகளில் 3 நான் பிரயாணமாய் சென் மறு (இப்போது என் ஊழியத்தின் பெரும்பகுதி இவ்வித கிராம பகுதிகளேயாகும்!) கண்டறிந்தது என்னவென்றால், “உண்மையான ஊழியத்தைச் செய்பவர்கள்” இப்போது நான் பேசிக்கொண்டிருக்கும் இதுபோன்ற “தலைவர்கள் முகாமில்” இல்லை! என்பது தான். அந்த உத்தம ஊழியர்கள், அறியப்படாதவர்களாயும், எங்கோ கிராமத்தின் மூலை முடுக்குகளிலுமே இருக்கிறார்கள். அவர்களால் “ஆங்கிலம்” பேசத் தெரியாது..... நிச்சயமாய், நீங்கள் செய்வது போல் “ஆய்வுக் கட்டுரைகள்” சமர்ப்பிப்பதும் என்னவென்றே அவர்களுக்குத் தெரியாது!! ஆனால் அவர்களோ பரிசுத்த ஆவியில் நிறைந்திருக்கிறார்கள்! ஆண்டவரை முழு இருதயமாய் நேசிக்கிறார்கள்! அழியும் ஆத்துமாக்களைத் தேடிச் சென்று கிறிஸ்துவிடம் சேர்க்கிறார்கள்! இதுபோன்ற உத்தம ஊழியர்களுக்காய் தேவனுக்கு ஸ்தோத்திரம்!! மற்றவர்களோ, “மிஷன் ஸ்தாபனத்தை” ஸ்தாபித்து, அதற்கு “மிஷன் தலைவர்களாய்” மாறி, கனத்தை வாரிக் கொள்கிறார்கள்! ஆனால்..... இன்று முதலாவதாக இருக்கும் இவ்வித அநேகர், இயேசு வரும் நாளில் பிந்தினோராய் மாறுவார்கள்! ஆகவே, நாம் தாழ்மையாய் இருப்பதே நமக்கு நல்லது. நம்மைக்குறித்து எப்போதும் “சிறிய எண்ணம்" கொண்டிருப்பதே நமக்கு நல்லது. பட்டங்களும், ஸ்தானங்களும் ஒருவேளை மனிதர்களைக் கவர்ச்சிக்கலாம். ஆனால் நிச்சயமாய் தேவனைக் கவர்ச்சிப்பதேயில்லை! இன்னும் சொல்லப்போனால், இவைகள் பிசாசைக்கூட கவர்ச்சிப்பதில்லை!? ஓர் பரிசுத்த மனிதனுக்கும், போலியாய் இல்லாமல் 'அசலாய்' இருப்பவனுக்கும், வெளியரங்க ஜீவியத்திற்கொப்பாகவே உள்ளான ஜீவியத்தில் இருப்பவனுக்கும், தான் அப்பியாசப்படுத்தாத எதையும் பிரசங்கிக்கத் துணியாதவனுக்குமே சாத்தான் அஞ்சுகிறான்!

 

ஜனங்கள் என்னிடம் “சகோதரர் சகரியாபூணனே, நீங்கள் ஏன் வட இந்தியாவிற்கு ஊழியம் செய்ய ஜனங்கள் செல்லும்படி ஊக்குவிக்க கூடாது?” என கேட்டிருக்கிறார்கள். அவர்களுக்கு நான் “இயேசு செய்யவும் உபதேசிக்கவும் தொடங்கினார்” என்ற அப்போஸ்தலர்.1:2-ம் வசனத்தையே பதிலாகக் கூறியுள்ளேன்:

 

ஆம், நான் வட இந்தியாவிற்கு சென்று ஜீவித்ததில்லை, ஆகவே அதை மற்றவர்கள் செய்யும்படியும் என்னால் கூறிட இயலாது!

 

வடஇந்திய ஊழியத்தைக் குறித்தே பேசக்கூடாது என நான் கூறவில்லை. நான் சொல்வதெல்லாம், “நான் அதைச் செய்யவில்லை, ஆகவே நான் அதைப் பிரசங்கிக்கவும் முடியாது!” என்பதுதான்.

 

நானே கிறிஸ்துவின் முழு சரீரமும் அல்ல! நான் அந்தச் சரீரத்தில் ஒரு அங்கம் மாத்திரமே!! ஆம், கிறிஸ்துவின் சரீரத்தில் நான் ஒரு "சமநிலையற்ற அங்கமாகவே” இருக்கிறேன். என் ஜீவகாலமெல்லாம் இவ்விதம் நான் சமநிலையற்றவனாகவேதான் இருப்பேன். இப்பூமியில் சமநிலை மனிதனாக (Balanced Man) நடந்த ஒரே புருஷன் இயேசுகிறிஸ்து மாத்திரமேயாவார். நீங்கள் சமநிலையற்றவர், நானும் அப்படியே! நம்மில் ஒருவராகிலும், “நான் சரீரத்தில் ஒரு அங்கம்” என்பதைவிட அதிகமாய் எண்ணாதிருக்கக்கடவோம். சரீரத்திற்கு ஒவ்வொரு அங்கமும் தேவையாயிருக்கிறது. ஜனங்கள் கிறிஸ்துவின் சரீரத்தில் அங்கங்களாய் மாறி, சரீரம் கட்டப்பட வேண்டுமென்றால்..... சுவிசேஷகன், போதகன், மேய்ப்பன் தீர்க்கதரிசி, அப்போஸ்தலன் ஆகிய அனைத்து அங்கங்களுமே தேவையாய் இருக்கிறார்கள்.


இன்று நம்முடைய அழைப்பு என்ன? கிறிஸ்துவின் சரீரத்தில் அங்கமாய் இல்லாத ஒருவரை, அந்த சரீரத்தின் அங்கமாய் மாற்றுவதே நம் யாவருக்குமுள்ள பொதுவான அழைப்பாகும். இந்த உண்மையை நாம் யாவரும் ஒத்துக்கொள்வோம் என்றே நான் எண்ணுகிறேன்.

அதிகாரம் 3
நான் என்ன செய்திட விரும்புகிறார்? என்பதே ஊழிய சவால்! .

பரிசுத்தாவியானவர் “சரீரம்” என்ற வார்த்தையை வேதாகமத்தில் உபயோகித்திருக்கிறபடியால், நம் சரீரத்தை வைத்தே ஓர் உதாரணம் கூற விரும்புகிறேன். ஒரு தட்டில் ஒரு உருளைகிழங்கு இருப்பதாக வைத்துக் கொள்வோம். இந்த உருளைகிழங்கு “ஒரு அவிசுவாசிக்கு” ஒப்பாய் இருக்கிறது. இப்போது இந்த உருளைகிழங்கு (அவிசுவாசி) என் சரீரத்தில் ஒரு அங்கமாய் மாற வேண்டும். அது எப்படி நடக்கும்? அது முதலாவதாய் சுவிசேஷ ஊழியத்தின் மூலமாகவே துவங்குகிறது..... அதாவது, உருளைகிழங்கை நோக்கி என் கை சென்று, அதைத் தன் கையில் எடுத்துக்கொள்கிறது!

 

இவ்வாறு சுவிசேஷ ஊழியமே இப்பணியில் எப்போதும் முதலிடம் வகிக்கிறபடியால், நான் ஒருபோதும் சுவிசேஷ ஊழியத்தைக் குறைவாய் மதிப்பிடுவதேயில்லை. அந்த ஊழியத்தை நான் அதிகமாய் மதிக்கிறேன். குறிப்பாக, வட இந்தியாவின் உஷ்ணத்திலும், தூசியிலும் ஊழியம் செய்பவர்களை நான் பெரிதளவாய் மதிக்கிறேன்! இவ்வித வட இந்திய ஊழியங்களைப்பற்றிய பல பத்திரிக்கைகளை நான் பெற்று, அங்கே பாடுபடும் என் அருமையான சகோதரர்களின் ஊழியங்களை ஆர்வமுடன் வாசித்து அறிகிறேன். அவ்வப்போது அங்குள்ள சிலரைச் சந்திப்பதற்கும் நான் சென்றிருக்கிறேன்!

 

சரி, தட்டிலுள்ள உருளைக்கிழங்கை இப்போது என் கை எடுத்து விட்டது! ஆனால், என் கை (சுவிசேஷகன்) இந்த உருளைக் கிழங்கை நோக்கிச் சென்று, அதை எடுத்து என் வாயில் போட்டால் ஒழிய (சுவிசேஷ ஊழியம் செய்தாலொழிய) அந்த உருளைக்கிழங்கு என் சரீரத்தின் ஒரு அங்கமாய் ஒருபோதும் மாறிடவே முடியாது!

 

ஆனால், இந்த கை செய்த சுவிசேஷ ஊழியமே “எல்லாம்" செய்ததாகுமா? அந்த உருளைக்கிழங்கை நான் வெறுமனே என் வாயில் வைத்துக் கொண்டேயிருந்தால், அது என் சரீரத்தின் ஒரு அங்கமாகிட முடியுமா? ஒருக்காலும் அவ்விதம் மாறிடாது! ஏனென்றால், வாயிலேயே இருக்கும் உருளைக்கிழங்கு அழுகி நாற்றமெடுக்கும், அதை நானும் வெளியே துப்பிவிடுவேன்!

 

இவ்விதமே நம்மிடமுள்ள சில சபைகளில், மனந்திரும்பி வந்தவர்கள் அழுகி நாற்றமெடுத்துக் கொண்டிருக்கிறார்கள். அவர்கள், வாயில் கொண்டு செல்லப்பட்டது உண்மைதான் .... ஆனால், வாயிலேயேதான் இன்னமும் இருந்து கொண்டிருக்கிறார்கள்!

 

ஆம், இந்த உருளைக்கிழங்கிற்கு இன்னும் அதிகமான கிரியைகள் சம்பவிக்க வேண்டும். அது, என் பற்களால் நசுக்கப்பட்டு சுவைக்கப்பட வேண்டும்! இப்போது, இந்த உருளைக்கிழங்கு என் வயிற்றுக்குச் செல்லுகிறது! அங்கே அந்த உருளைக்கிழங்கின்மீது “அமிலம்” சற்றும் இரக்கமில்லாமல் ஊற்றப்படுகிறது!! இது சபையிலுள்ள தீர்க்கதரிசன ஊழியத்தையே சுட்டிக்காட்டுகிறது. நம்மீது அமிலம் ஊற்றப்படுவது ஒன்றும் நம்மில் ஒருவருக்கும் சுமுகமாய் இருப்பதேயில்லை. தட்டிலிருந்த உருளைக் கிழங்கை, கை எடுத்து வந்த ஊழியம்தான் எத்தனை மென்மையாய் இருக்கிறது. ஆனால், நம்மீது “அமிலம்” ஊற்றப்படுவதோ ஓர் இனிய அனுபவமாய் இருப்பதில்லை! “இப்போது” உருளைக்கிழங்கு முழுவதுமாய் நொறுங்குண்டு, இனியும் அதைப் பார்ப்பதற்கு “உருளைக் கிழங்கு போல்” இருப்பதேயில்லை. ஆனால் சில வாரங்கள் கழித்து, இதோ! இங்கே பாருங்கள்...... அந்த உருளைக் கிழங்கு இரத்தமும், மாமிசமும், எலும்புமாய் மாறி, என் சரீரத்தின் ஒரு அங்கமாகிவிட்டதே!!

 

இப்போது நடந்தேறிய பணியில், யாருடைய வேலை அதிக முக்கியத்துவம் வாய்ந்தது? அல்லது, நம்மில் ஒவ்வொருவரும் வைத்திருக்கும் ஊழியத்தில், நாம் பெற்றுக்கொள்ளாதது எது?

 

நாம் தாழ்மையுள்ளவர்களாயிருந்தால், “நாம் சமநிலையற்றவர்கள்” என்பதை இப்போது அறிக்கை செய்திட முடியும். ஆம், கையானது என் வயிற்றைவிட அதிக முக்கியத்துவம் எனக் கூறிட முடியாது! ஒவ்வொரு அவயவமும் ஒன்றையொன்று சார்ந்தேயுள்ளது!

 

ஆனால், துரதிருஷ்டவசமாய் இன்றைய கிறிஸ்தவ உலகில் ஒவ்வொரு அவயத்திற்குமிடையே தொடர்ச்சியான போட்டி இருப்பதைத்தானே நாம் காண்கிறோம்? கை தனது சொந்த ராஜ்ஜியத்தைக் கட்டிக் கொண்டிருக்கிறது! வயிறு தன் சொந்த ராஜ்ஜியத்தைக் கட்டிக் கொண்டிருக்கிறது! வாய், தன் சொந்த ராஜ்ஜியத்தைக் கட்டிக் கொண்டிருக்கிறது!! ஆக, இப்போது நாம் எதைப் பெற்றிருக்கிறோம்? சரீரமல்ல... “உடற்கூறு சோதனைக்கூடத்தையே” நாம் பெற்றிருக்கிறோம்! அந்தக்கூடத்தில் ஒருபக்கம் 'வாய்' மறுபக்கம் 'வயிறு', அங்கொரு 'கை' இங்கொரு ‘கால்.... இது என்ன? இது நிச்சயமாய் ஒரு சரீரமேயல்ல!!

 

இப்போது நம் அனைவருக்கும் தேவையாயிருப்பது என்ன? சரியான “செய்முறை விளக்கம்” நமக்கு அவசியம் என்பது உண்மை தான். ஆனால், எதைக்காட்டிலும் நம் யாவருக்கும் “தாழ்மையே” அதிக மதிகமாய் தேவைப்படுகிறது. ஆம், கிறிஸ்துவின் சரீரத்தில் அவயவமாய் இருக்கும் நாம் ஒவ்வொருவரும் சமமான முக்கியத்துவம் கொண்டவர்கள் என்பதை உணர்ந்திடக்கடவோம்! இவ்வாறு உணரும் தாழ்மையே, இப்போது நம் தேவையாயிருக்கிறது!

 

இனியும், ஆங்கிலம் சரளமாய் பேசும் “மிஷன் தலைவர்”, ஒழுங்காக ஆங்கிலம் பேசத் தெரியாத..... ஆனால், கிறிஸ்துவண்டை ஆத்துமாக்களைக் கொண்டுவரும் ஒரு ஏழை சகோதரனைக் காட்டிலும் எவ்விதத்திலும் விலையேறப் பெற்றவர் அல்ல! என அறியுங்கள்!

 

இவர்கள் யாவரும் ஒரே சரீரத்திலுள்ள அவயவங்களாகவே இருக்கின்றனர்!!

 

ஆம், “மேலே ஏறிவா” என்பதும் “நான் காணும் விதமாய் நீயும் காரியங்களைப் பார்” என்பதுமே நம் ஆண்டவருடைய அழைப்பாய் இருக்கிறது. தேவன் பார்க்கும் விதமாய் நாம் காரியங்களை கண்ணோக்கும் போது, அவையாவும் பூமிக்குரிய கண்ணோட்டத்திலிருந்து முற்றிலும் வித்தியாசமாகவே இருக்கிறது! இன்றைய அநேக கிறிஸ்தவ ஊழியர்கள் தங்களைக் குறித்து உயர்ந்த அபிப்பிராயங்கள் கொண்டிருப்பதற்கு என்ன காரணம்? இதற்கு ஊழியர்களாகிய நீங்கள் நேர்மையாய் பதில் சொல்லுங்கள்! நீங்கள் தனிமையாய் இருக்கும் போது உங்களைக்குறித்து எவ்விதமாய் சிந்தித்துக் கொண்டிருக்கிறீர்கள்? அந்த சிந்தைகள் தாழ்மையின் சிந்தைகளாய், உங்கள் வெறுமையை உணரும் சிந்தைகளாயிருக்கிறதா?

 

சில சமயங்களில் நான் திறந்தவெளியில் அமர்ந்து வானத்திலுள்ள நட்சத்திரங்களை அண்ணாந்து பார்ப்பதுண்டு. வானத்தில் கோடிக்கணக்கான நட்சத்திரங்கள் இருப்பதையும், இந்த அண்டசராசரத்தில் இந்த பூமி ஒரு சிறு துரும்பைப் போல் இருப்பதையும் நான் அறிவேன்! இந்த ஆச்சரியத்தில் நான் மூழ்கி, “ஓ தேவனே, நீர் எவ்வளவு பெரியவர்! இந்த அண்டசராசரமும், எத்தனை மகத்துவமும் பெரியதுமாயிருக்கிறது! இந்த அண்டசராசரத்தில் பூமி என்று அழைக்கப்படும் இந்தச் சிறிய துரும்பில் ‘நானோ' இன்னும் மிக மிகச் சிறிய ஓர் தூசியாகவே இருக்கிறேன்! அப்படியிருந்தும், இந்தப் பூமியில் உம் ஸ்தானாதிபதியாய் இருந்துகொண்டு உம்முடைய மகத்துவங்களைப் பிரசங்கிக்கும் பொறுப்புள்ள இடத்தில் இருக்கின்றேன். ஆகவே ஆண்டவரே, என்னைக் குறித்து நான் தாழ்மையான தெளிந்த எண்ணங்கொண்டிருக்க எனக்குத் தயவாய் உதவி செய்வீராக” என்றே ஜெபிக்கிறேன். இதே ஜெபத்தை நீங்களும்கூட ஜெபிக்கும்படி அன்புடன் ஆலோசனை கூறுகிறேன்.

 

ஆம், தாழ்மையுள்ளவருக்கே தேவன் கிருபையைத் தருகிறார்! யார் வேண்டுமானாலும் அறிவைப் பெற்றுக்கொள்ள முடியும்! ஆனால் தாழ்மையுள்ளவர்கள் மாத்திரமே கிருபையைப் பெற்றிட முடியும். நமக்கு அறிவு தேவையாய் இருப்பதைவிட, தெய்வ கிருபையே அதிகமாய் தேவைப்படுகிறது!!!

 

தங்கள் வாலிப நாட்களில் ஆண்டவரை ஏற்றுக்கொண்டதினிமித்தம், அவர்களுடைய விசுவாசத்திற்காக சொந்தக் குடும்பத்தினரால் சித்திரவதையடைந்தவர்களைக் குறித்து நான் சிந்தித்துப் பார்த்திருக்கிறேன். இதுபோன்ற வைராக்கியம் நிறைந்த வாலிபன் நம் சபைகளுக்கு வந்தால், அவன் எதைக் காண்பான்? அங்கே, இயேசு கிறிஸ்துவின் தாழ்மையிலே நொறுங்குண்ட ஆவியை அவன் காண்பானா? ஆனால் இன்றோ, நம்மைச் சூழ இருப்பவர்கள் கண்டவைகள், கிறிஸ்தவத்தைக் குறித்து தவறான அபிப்பிராயம் கொள்ளும்படியே அவர்களை நடத்தியிருக்கிறது! ஆ. இது துயரம்.

 

கர்த்தருடைய அழைப்பின்படி நீங்கள் பெற்ற ஊழியம், வலிமை கொண்டதாய் இருப்பதற்கு ஓர் பிரதான நியதியை எபிரெயர்.2:17 - கூறுகிறது: “அவர் எவ்விதத்திலும் (in all things) தம்முடைய சகோதரருக்கு ஒப்பாக வேண்டியிருந்தது.” இவ்வாறு இயேசுவைக் குறித்துக் கூறப்பட்ட இந்தப் பகுதியை என் ஊழியத்தின் வலிமைக்கு பிரதான நியதியாய் நான் எடுத்துக் கொண்டேன். “எல்லாவிதத்திலும் தன் சகோதரர்களுக்கு ஒப்பானார்” என்ற வசனம் என் தியானத்தில் நிறைவாய் தங்கியிருக்கும் மேன்மையான வசனமாகும்!

 

நான் பிறருக்கு எவ்வாறு ஊழியம் செய்யவேண்டும்? நான் அவர்களுக்கு ஒப்பாக “எல்லாவற்றிலும்” மாறவேண்டும். அதாவது, நான் அவர்களுடைய ஸ்தானத்திற்கு இறங்கிவர வேண்டும். தரையில் ஊர்ந்து சென்று கொண்டிருக்கும் எறும்போடு நான் ஏன் தொடர்பு கொள்ள முடிவதில்லை? ஏனென்றால், நான் அவ்வளவு பெரியவனாயிருக்கிறேன்! நான் என் மானிட ரூபத்தோடு அதனருகில் சென்றால், அவை அஞ்சி விலகியோடிவிடும். நான் அந்த எறும்போடு தொடர்புகொள்ள ஒரேவழி, நான் முதலாவது அந்த எறும்பைப்போல் மாற வேண்டும். அதேபோல், தேவனும் நம்மோடு தொடர்பு கொண்டிட ஒரேவழி, அவர் நம்மைப்போலவே மாறுவதுதான்! இந்த உண்மையை நாம் யாவரும் புரிந்த கொள்வது மிக எளிது. இப்போது, நாம் பிறருக்குச் செய்யும் ஊழியத்திலும்கூட (ஸ்தல சபையோ அல்லது சந்திக்கப்படாத இடமோ), நமக்கு முன்னிருக்கும் முதல் நியதி (Principle) “எல்லாவற்றிலும் அவர்களுக்கு ஒப்பாய் மாறுவதுதான்!" என்பதை மறந்துவிடவே கூடாது! அதாவது, எசேக்கியேல் தீர்க்கதரிசி 3:15-ல் கூறுவதுபோல், “அவர்கள் உட்காருகிற (தாபரிக்கிற) ஸ்தலத்திலே நாமும் உட்கார்ந்து” என்பதே அதன் பொருளாகும்!!

 

உதாரணமாய், நாம் மற்றவர்களைக்காட்டிலும் எந்தவிதத்திலும் நம்மை உயர்த்த விருப்பமற்றிருப்பதே அதன் பொருளாகும். இதனிமித்தமே, இயேசு தன் சீஷர்களுக்குக் கூறும்போது, “ரபீ” அல்லது “பிதா” (Fr- தந்தை) அல்லது இதுபோன்ற வேறு எந்தப் பட்டங்களையும் அவர்கள் ஒருக்காலும் ஏற்றுக்கொள்ளவே வேண்டாம் எனக் கூறினார். ஏனென்றால், நீங்கள் ஊழியம் செய்திடும் ஜனங்களை காட்டிலும் மேலாக உயர்ந்திருக்கும்படி, நீங்கள் வைத்திருக்கும் பட்டம் செய்து விடும்! ஆம், அவர்களுக்கு ஒப்பாய் நீங்கள் மாறுவதற்கு பதிலாய், உங்கள் பட்டத்தினிமித்தம், அவர்களைக் காட்டிலும் உயர்ந்த ஸ்தானத்தில் அல்லவா நீங்கள் இப்போது நின்று கொண்டிருக்கிறீர்கள்!!

 

இவ்வாறெல்லாம் வேதத்தில் புத்தி சொல்லப்பட்டிருந்தும், இன்று ஏராளமான ஊழியர்கள் தங்களுக்கென “பட்டங்களை” (Titles) வைத்துக் கொள்ள விரும்புவதையே நாம் காண்கிறோம்! இவ்வுலகத்தின் வழிமுறைகளைப் பின்பற்றி, தேவனுக்கு வலிமையாய் ஊழியம் செய்து விடலாம் என்றும் எண்ணிக் கொள்கிறார்கள். ஆனால், அது உண்மை அல்ல!!

 

பழைய ஏற்பாட்டில் ஒரு சமயம் பெலிஸ்தியர்கள் தேவனுடைய உடன்படிக்கைப் பெட்டியைக் கைப்பற்றினார்கள். ஆனால் அதனிமித்தம் பிரச்சனை ஏற்பட்டவுடன், உடன்படிக்கைப் பெட்டியை எருது பூட்டிய வண்டியில் வைத்து அனுப்பி விட்டார்கள். பல வருடங்கள் கழித்து, உடன்படிக்கை பெட்டியை வேறு இடத்திற்குக் கொண்டு செல்ல தாவீது முன்வந்தபோது, “லேவியர்கள் உடன்படிக்கை பெட்டியை தங்கள் தோளில் சுமந்து செல்ல வேண்டும் என நியாயப்பிரமாணம் போதிப்பது சரிதான். இருப்பினும், அதெல்லாம் குறைவான தூரத்திற்குத்தான் பொருத்தமானது. ஆனால், தூர இடத்திற்குச் செல்ல, முன்பு பெலிஸ்தியர் கையாண்ட முறையே சரியானது!” என எண்ணினான், எனவே, அவனும் பெலிஸ்தியர் செய்ததுபோலவே உடன்படிக்கை பெட்டியை எருது பூட்டிய வண்டியில் வைத்தான். பின் என்ன நடந்தது என்பது உங்களுக்குத் தெரியும்! எருது தடுமாறிய போது, பெட்டி கீழேவிழாமல் அதைத் தாங்கிப்பிடிக்க ஊசா தன் கையை நீட்டினான்! அவன் லேவியனாய் இல்லாதபடியால், தேவன் கோபம் கொண்டு ஊசாவை அடித்தார். அந்த இடத்திலேயே செத்துப் போனான்! ஆம், தேவன் தன் வழிமுறைகளை எக்காலமும் மாற்றுவதேயில்லை. ஆனால், இந்த சம்பவத்தின் துவக்கம் எப்படி வந்தது? ஆம், தாவீது பெலிஸ்தியர்களின் வழிமுறையைப் பின்பற்ற எத்தனித்ததேயாகும்..... ஆகவே, அங்கு மரணமும் சம்பவித்தது!!

 

இவ்வுலக வழிமுறையைப் பின்பற்றி செய்திடும் ஊழியத்தில் எவ்வாறு 'மரணம்' சம்பவிக்கிறது என்ற சத்தியத்தைத் தெளிவாகக் கண்டீர்களா? ஆம், கிறிஸ்தவ சபைகளை நடத்த இன்றைய வியாபார ஸ்தாபனங்களின் வழிமுறையைப் பின்பற்றத் துணிந்து, கிறிஸ்தவ ஊழியத்தின் முதல் ஆதாரமே “பணம்தான்” என மாறும்போது.... அங்கு நிச்சயமாய் மரணம் சம்பவித்துவிடும்!

 

ஆகவே, ஒரு கேள்வியை நமக்கு நாமே கேட்டுப்பார்ப்பது மிகவும் நல்லது. அதாவது, நமக்கு வரும் எல்லாப் பணமும் ஒருநாள் நின்றுவிட்டால், நாம் நடத்தும் சபை அல்லது ஒரு கிறிஸ்தவ ஸ்தாபனம் இன்னமும் பிழைத்திருக்குமா?

 

கேளுங்கள்: ஓர் மெய்யான தேவ ஊழியம் “பணத்தை” உபயோகப்படுத்துமேயல்லாமல், ஒருக்காலும் பணத்தைச் சார்ந்திருப்பதேயில்லை! ஆம், அந்த ஊழியம் “பரிசுத்த ஆவியை” மாத்திரமே எப்போதும் சார்ந்திருக்கும்!!




“நம்மில் வாசமாயிருக்கிற ஆவியானவர் நம்மிடத்தில் வைராக்கிய வாஞ்சையாயிருக்கிறாரென்று” வேதம் சொல்லுகிறது (யாக்கோபு 4:5). குறிப்பாய், சபையில் ஆவிக்குரிய ஸ்தானத்தை 'ஏதோ ஒன்று' அல்லது 'யாரோ ஒருவர்' ஆக்கிரமித்துக் கொண்டால் அதனிமித்தம் “வைராக்கிய கோபம்" அடைகிறார். ஒருவேளை “வாத்தியகருவிகளுடன் கூடிய இன்னிசை” பரிசுத்தாவியின் ஸ்தானத்தை ஆக்கிரமிக்கக்கூடும். நான் ஒன்றும் “இன்னிசைக்கு” விரோதி அல்ல! இவ்வுலக வழிமுறையைப் பின்பற்றாமல், முடிந்த அளவு சிறப்புடன் இன்னிசை இசைத்திட நாடவேண்டும் என்பதை நான் விசுவாசிக்கிறேன். ஆனால் அதேசமயம், நாமோ “இன்னிசையை” ஒருபோதும் சார்ந்துகொள்ளவே கூடாது!

 

உதாரணமாய், ஒரு கூட்டத்தின் முடிவில், ஓர் மெல்லிய பியானோ இசையினால் ஜனங்களின் உணர்வுகளைத் தூண்டி ஒரு தீர்மானம் எடுக்கும்படி செய்துவிட்டால்..... அது என்ன? இவையெல்லாம் “மனோதத்துவ வசிகமே” அன்றி, பரிசுத்தாவியின் வல்லமை அல்லவே அல்ல!

 

இயேசு பிரசங்கித்ததுபோல், பேதுரு பிரசங்கித்ததுபோல், தேவனுடைய வார்த்தை ஆவியின் வல்லமையோடு பிரசங்கிக்கப்பட்டால், கூட்டத்தின் முடிவில் நீங்கள் “பியானோவை” மெல்லியதாய் இசைத்திடத் தேவையேயில்லை! நீங்கள் விரும்பினால் அவ்வாறு இசைத்துவிட்டுப் போங்கள்....... ஆனால், அது எந்தவிதத்திலும் ஆன்மீக உதவியைச் செய்திடவே முடியாது!! உங்களிடம் பரிசுத்தாவியின் வல்லமை இல்லையென்றால்...... ஆ, அது துயரம்! இப்போது நீங்கள் “பியானோ” இசைத்து மனோ-தத்துவ முறையில் அவர்களை வசிகம் செய்து 'தீர்மானம்' எடுத்திட தூண்டத்தான் வேண்டியிருக்கும்! ஆனால் காலப்போக்கில், இவ்வித முறையில் எடுக்கப்பட்ட எல்லாத் தீர்மானங்களும், வெறும் உணர்ச்சிப் பிரவாகமும், மேலோட்டமானதுமே என்பதை நீங்களே கண்டுகொள்வீர்கள்.

 

பரிசுத்தாவியானவர், சபையில் தான் இருந்திட வேண்டிய ஸ்தானத்தைக் குறித்து எப்போதுமே வைராக்கிய வாஞ்சை கொண்டவராகவேயிருக்கிறார்.

 

அவர் இருக்கவேண்டிய இடத்தில் “வேத சாஸ்திரத்தைக்” கொண்டு வந்திட ஒருபோதும் முடியாது! அவருடைய இடத்தில் “இன்னிசையை” கொண்டு வைத்திடவும் முடியாது! அவருடைய இடத்தில் “பணத்தைக்" கொண்டு வைத்திடவும் முடியாது!

 

ஒருக்காலும் முடியாது! இவை யாவற்றிற்காகவும் தேவனுக்கு நன்றி! ஆகவே அவைகளைப் பயன்படுத்துங்கள். இயேசுவும் “கீர்த்தனை” பாடினார்! பிதாவின் நாமத்தைத் துதிக்கும் துதி-ஸ்தோத்திரத்தை இயேசுவே சபையின் முன்னின்று நடத்துகிறார் என்றும் எபிரெயர் 2:12 கூறுவதைப் பாருங்கள். ஆகவே நாம் தேவனைத் துதிக்கும்போது, துதியை நடத்தும் நம் “தலைவரைத்தான்” நாம் பின்பற்றுகிறோம்! இவ்வாறெல்லாம் சத்தியம் இருக்கும்போது, நாம் எவ்வாறு “இன்னிசைக்கு விரோதமாய் இருந்திட முடியும்? ஆம், அவைகளுக்கு நாம் ஒருபோதும் விரோதிகள் அல்லவே அல்ல.... ஆனால், நாம் எவைகளைச் சார்ந்திருக்கிறோம் என்பதே நம்மை அண்டிவரும் கேள்வியாய் இருக்கிறது!!

 

எடுப்பான தோற்றத்தையும், புகழ்பெற்ற பிரசங்கிகளையும் நாம் சார்ந்திருக்கிறோமா? இவைகளையெல்லாம், பரிசுத்தாவியானவர் ஒருபோதும் ஏற்றுக்கொள்ளவே மாட்டார். ஆம், அவர் “வைராக்கிய வாஞ்சை” நிறைந்தவர்!

 

இயேசுவோ ஒரு சாதாரண வேலைக்காரனாகவே மாறினார். எல்லா கிறிஸ்தவத் தலைவர்களுமே, ஒரு ஊழியக்காரனின் ஜீவியம் எப்படி இருக்கவேண்டுமென்று பிரசங்கிக்கத்தான் செய்கிறார்கள். அதைப்பற்றி புத்தகங்களும் எழுதியிருக்கிறார்கள். ஆனால் நடைமுறையில் ஒரு “வேலைக்காரனாய்” (ஊழியக்காரனாய்) இருப்பதின் அர்த்தம் என்ன? நடைமுறைக்கு ஒப்பிட்டு நான் உங்களிடம் சில கேள்விகள் கேட்க விரும்புகிறேன்: கிறிஸ்தவத் தலைவர்களே, உங்கள் சக ஊழியனை நீங்கள் எவ்வாறு நடத்துகிறீர்கள்? உங்கள் குழுவோடு நேற்றுத்தான் சேர்ந்த ஒரு இளைய ஊழியனை நீங்கள் எவ்வாறு நடத்துகிறீர்கள்? அந்த ஊழியன் மெய்யாகவே உங்களுக்கு ஒரு சகோதரனாய் இருக்கிறாரா? அல்லது அந்த சகோதரன் உங்களுக்கு அஞ்சி ஜீவிக்கிறாரா? காரியம் அப்படியாய் இருக்கும்போது, “ஊழியனின் தகுதி” குறித்து நீங்கள் காலமெல்லாம் பிரசங்கித்துக் கொண்டிருந்தாலும், நீங்களோ அதைப்பற்றி சிறிதும் விளங்கிக் கொள்ளவில்லை என்றே உங்களுக்கு நான் கூற விரும்புகிறேன். ஆம், உங்கள் கண்கள் இன்னமும் காணவில்லை!

 

இயேசுவோ அத்தனை எளிமையாய் இருந்தார். அவர் ஒருபோதும் ஜனங்களுக்கு மேலாய் தன்னை உயர்த்தவேயில்லை! அவர் தன்னை “மனுஷ குமாரன்” என்றே கூறினார். அதற்கு அர்த்தம், “தான் ஒரு சாதாரண மனிதன்” என்பதேயாகும்.

 

அவர் அத்தனை பரிசுத்தராய் தன் பிதாவோடு நித்தியகாலமும் “தேவ குமாரனாய்” ஜீவித்திருந்தார். ஆனால் அவரோ, கீழே இறங்கி வந்து, இந்த பூமியில் ஒரு சாதாரண மனிதனாகவே வாழ்ந்தார்! ஆம், எல்லாவிதத்திலும் அவர் தன் சகோதரர்களுக்கு ஒப்பாய் மாறினார்.

 

எல்லாவிதத்திலும் நம் சகோதரர்களுக்கு ஒப்பாய் நாமும் மாற வேண்டுமென்றால், நம்மிலுள்ள “ஏதோ ஒன்று" சாக வேண்டும்! இயேசுவைப்பற்றி இவ்வாறாகவே கூறப்பட்டுள்ளது, “அவர் தன்னைத் தானே மரணபரியந்தம் தாழ்த்தினார்” இவ்வாறுதான், நாம் நம்முடைய தாழ்மையை நிரூபித்திட முடியும்!

 

கோதுமை மணியானது நிலத்தில் விழுந்து “சாகும்போதுதான்” மிகுந்த கனிகளைத் தரமுடியும் என இயேசு கூறினார். இந்த சத்தியத்தையே நான் 22-ஆண்டுகளுக்கு முன்பாக, மெய்யான நடைமுறை கிறிஸ்தவ வாழ்க்கைக்குப் போராடிய நேரத்தில் கண்டுபிடித்தேன். நான் இந்தியாவில் ஆண்டவருக்காகச் செய்திடும் வலிமையான ஊழியம் “நிலத்தில் விழுந்து சாகுவதுதான்” என்பதை அப்போது நான் கண்டு கொண்டேன். ஆம், என் சுய-சித்தத்திற்கு சாவு! ஜனங்கள் என்னைக்குறித்து என்ன எண்ணுகிறார்கள்? என்ற அபிப்பிராயங்களுக்கு சாவு! என் இலட்சியங்களுக்கு சாவு! சுயமாய் தோற்றுவித்த இலக்குகளுக்கு' (Goals) சாவு! என் பண ஆசைக்கு சாவு!

 

இவ்வாறு ஒவ்வொன்றாய் தொகையிட்டு, மொத்தத்தில் “என் சுயத்திற்கு செத்திடும்” வாழ்க்கையை மேற்கொண்டேன்!

 

இந்த வாழ்க்கையை மேற்கொண்ட பிறகுதான், எனக்கு இயேசுவே எல்லாமுமாய் மாறினார். இப்போது நான் ஒவ்வொருநாளும் இயேசுவை நோக்கிப்பார்த்து, சங்கீதக்காரனைப்போல நேர்மை கொண்ட நெஞ்சத்தோடு.... “பரலோகத்தில் உம்மையல்லாமல் எனக்கு யார் உண்டு? பூலோகத்தில் உம்மைத்தவிர எனக்கு வேறே விருப்பம் இல்லை" (சங்கீதம் 73:25) என, என் மனதார கூறிட முடிந்தது!!

 

நான் படுக்கையில் படுத்திருக்கும் சமயங்களில், “ஆண்டவரே, என் ஊழியம் எனக்கு 'தேவன்' அல்ல! நீர் ஒருவரே என் தேவன்! உம்முடைய ஸ்தானத்தை ஒருவரும் என்னிடமிருந்து பறித்துக்கொள்ள முடியாது. நீரே எனக்கு எல்லாமுமாய் இருக்கிறீர். என்னுடைய சத்தத்தை நீர் என்னிடமிருந்து எடுத்துக் கொள்ளலாம் அல்லது என் சரீரத்திற்கு 'வாதம்' வர அனுமதிக்கலாம் அல்லது நீர் விரும்பிய எதையும் எனக்கு நீர் செய்யலாம்! ஆகிலும் நானோ, உம்மை என் முழு இருதயத்தாலும் தொடர்ந்து நேசிப்பேன்” என அடிக்கடி கூறுவதுண்டு.

 

ஆம், என் சந்தோஷத்தை யாரும் பறித்துக் கொள்ளவே முடியாது .... ஏனென்றால், தேவனுடைய சமூகத்தில்தான் “நித்திய பேரின்பம்" உள்ளதே! இந்த ஒரே ஊற்றுக்கண்ணிலிருந்து மாத்திரமே, ஜீவநதிகள் நம் மூலமாய் புரண்டோடிட முடியும்!!

அதிகாரம் 4
தியாகம் இல்லாமல், ஊழியம் இல்லை!

நான் உங்களோடு பகிர்ந்து கொள்ள விரும்பும் மற்றொரு முக்கியமான பகுதி யாதெனில்: பல ஆண்டுகளுக்கு முன்பாக, நான் ஒரு கிறிஸ்தவ வாலிபனாய் இருந்த சமயம், ஆண்டவர் என்னோடு 2சாமுவேல்.24:24 மூலமாய் பேசினார். அந்த வசனத்தில் “நான் இலவசமாய் வாங்கி, என் தேவனாகிய கர்த்தருக்குச் செலுத்தாமல்.... விலைக்கிரயமாய் வாங்குவேன்” என தாவீது ராஜா கூறியது, எனக்கு சவாலாய் இருந்தது!

 

அந்த நாளில் இந்த வசனத்தை வைத்து, ஆண்டவர் என்னோடு பேசியது என்னவென்றால், இயேசு இந்த பூமிக்கு வந்தபோது, தனக்குண்டான அனைத்தையும் விலைக்கிரயமாய் செலுத்தினார்! இப்போது நான் கர்த்தருக்கு ஊழியம் செய்யவேண்டுமென்றால், இயேசுவின் இதே ஆவியோடுதான் சேவித்திட வேண்டும்! என்னுடைய எந்த ஊழியமும், விலைக்கிரயமுடையதாய் இருக்க வேண்டும், என தீர்மானித்தேன்.

 

 நீங்கள் கர்த்தருக்கு ஊழியம் செய்வது எப்படிப்பட்டதாய் இருக்கிறது? அதில் விலைக்கிரயம் காணப்படுகிறதா? இன்று இந்திய கிறிஸ்தவ ஊழியங்களில் உள்ள அநேகர், தாங்கள் உலக அலுவலில் சம்பாதித்ததைக் காட்டிலும் ஐந்து அல்லது பத்து மடங்கு அதிகம் சம்பாதிக்கிறார்கள்!

 

இதில் எங்கே தியாகம் (விலைக்கிரயம்) இருக்கிறது? 45 -ஆண்டுகளுக்கு முன்பு நான் இந்திய கப்பற்படை வேலையை ஊழியத்தினிமித்தம் ராஜினாமா செய்தபோது, “நான் உலக வேலையில் ஒரு மாதத்தில் வாங்கிய வருமானத்தைக் காட்டிலும், அதிக வருமானம் தரும் எந்தப் பணத்தையும் நான் பெற்றுக்கொள்ளமாட்டேன்” என தீர்மானம் எடுத்துக்கொண்டேன். அந்தத் தீர்மானமே இந்த ஆண்டுகளாய் என்னை காத்துவருகிறது!!

 

நாம் யாரையும் நியாயந்தீர்த்திடக் கூடாது. நானும் உங்களை நியாயந்தீர்த்திட மாட்டேன். ஊழியர்களாகிய உங்களைப் பற்றிய விபரங்கள் எனக்கு எதுவும் தெரியாததால், உங்களைப் பார்த்து இவ்வாறு கேட்பது எனக்கு எளிதாய் இருக்கிறது: “நான் இன்று உலக அலுவலலில் இருந்தால், எவ்வளவு சம்பாதிப்பேன்?” என்ற கேள்வியை உங்களுக்கு நீங்களே கேட்டுப் பாருங்கள்.

 

ஜான் வெஸ்லி தன் உடன் ஊழியர்களிடம், “நீங்கள் சுவிசேஷத்தைப் பிரசங்கித்து ஐசுவரியவான்களாய் மாறி விட்டீர்கள் என உங்களைப்பற்றி ஒருபோதும் சொல்லப்படாதிருப்பதாக” என அடிக்கடி கூறுவது வழக்கம். இன்று கிறிஸ்தவ ஊழியத்தில் ஏற்பட்டிருக்கும் பெருமளவு பாதிப்பு எங்கிருந்து துவங்கியது என்பதை நீங்கள் அறிந்திருக்கிறீர்களா? “நீங்கள் தேவனுக்கும் - பணத்துக்கும் ஊழியம் செய்திட முடியாது” என்ற இந்த பகுதிதான்! நாம் தீவிரமாய் சீர்ப்படுத்த வேண்டிய முதல் பகுதியே இதுதான்!! சூரியனுக்கு கீழ், நாம் எத்தனையோ விஷயங்களை மையமாய் கொண்டு பேசிக்கொண்டேயிருக்கலாம்..... ஆனால், இந்த “பண ஆசை” என்ற பிரச்சனையை சீர்ப்படுத்த தீவிரம் கொள்ளவில்லையென்றால், நம் எல்லா ஊழியமும் வீணானதுதான்!!

 

இன்று ஜனங்கள் தாங்கள் வசிக்குமிடத்தை ஒரு இடத்திலிருந்து இன்னொரு இடத்திற்கு மாற்றுகிறார்கள். அதில் ஒன்றும் தவறு இல்லை தான். இயேசுவும்கூட தன் இருப்பிடத்தை பரலோகத்திலிருந்து இந்த பூமிக்கு மாற்றத்தான் செய்தார். ஆனால், அவர் அவ்வாறு மாற்றியது, கீழே இறங்குவதாகவே இருந்தது! அது ஏனென்றால், பூமியிலுள்ள ஜனங்கள் மீது அவர் அவ்வளவாய் உண்மையான கரிசனை கொண்டிருந்தார்.

 

சரி, நீங்கள் ஏன் உங்கள் இருப்பிடத்தை மாற்றினீர்கள்?

 

இவ்வாறு உங்களைக் கேட்கிறேனேயல்லாமல், நான் உங்களை நியாயம் தீர்க்கவில்லை. இவ்வாறு இருப்பிடத்தை மாற்றியதால் “அந்த புதிய இடத்தில்” கர்த்தருடைய ஊழியத்தை வலிமையாய் நிறைவேற்றிவிடலாம் என எண்ணினீர்களோ? “இந்த ஸ்தலத்தின் பாரம் என்னை அழுத்துகிறது” என நீங்கள் குறிப்பிடும் பாரம், மெய்யான பாரம்தானா?

 

அப்படியானால், தென்னிந்தியாவில் சுகபோகமாய் வாழ்ந்து கொண்டு, வடஇந்திய கிராமங்களுக்காக பாரம் கொள்வது சாத்தியம் தானா? ஒருவேளை அது உங்களால் கூடும்! ஆனால் என்னைப் பொறுத்தவரையில் அது சாத்தியமாகாது என்றே எண்ணுகிறேன்!

 

நீங்கள் அமெரிக்காவில் வாழ்ந்து கொண்டு, இந்தியாவுக்காக பாரம் கொண்டிட முடியுமா? அவ்வித பாரத்தை உங்கள் அறிக்கை மலர்' பத்திரிக்கையில் வேண்டுமானால் காட்டலாம்! பத்திரிக்கையில் அல்லது கடிதத்தில் நீங்கள் எதற்கு வேண்டுமானாலும் பாரம் கொண்டிட முடியும்!

 

ஆம், பிசாசு ஒரு மாபெரும் வஞ்சகன்! முற்றிலுமாய் நம்மை அவன் வஞ்சித்துவிடுகிறான்! நமக்கு எதையோ குறித்து பெரிய பாரம் இருப்பதாக எண்ண வைக்கிறான்....... ஆனால், உண்மை பூர்வமாய் அங்கு பாரம் அல்ல, “வெறும் சூடான காற்று மண்டலம்தான்” அங்கு உள்ளது!!

 

உங்களைக் குறித்து நீங்கள் “நேர்மையாய்” இருக்கவேண்டுமென்று விரும்பியே இவைகளை நான் உங்களுக்குக் கூறுகிறேன்.

 

உங்கள் முன் நான் வெறும் அறிக்கை சமர்ப்பிக்கவில்லை! என் இருதயத்தில் உள்ளவைகளையே உங்களோடு பகிர்ந்து கொள்ளுகிறேன்.

 

தேவனுடைய இருதயமும், நான் கொண்ட பாரத்திற்கு ஒப்பாய் இருக்குமென்றே நான் நம்புகிறேன்!

 

அன்பார்ந்த சகோதர சகோதரிகளே, உங்களில் ஒருவரையாகிலும் நான் நியாயம் தீர்க்கவில்லை! பல வருடங்களுக்கு முன்பாகவே, “நீ பிறரை நியாயம்தீர்த்தால், உன்னை நீயே அழித்துக்கொள்வாய்” என தேவன் என்னை எச்சரித்திருக்கிறார்.

 

நான் தேவனுக்கு சாட்சியாய், அவர் முன்பாக நின்று “நான் ஒருவரையும் நியாயம் தீர்க்கவில்லை” என இப்போதும் என்னால் கூறிட முடியும்! ஆம், நான் என்னையே எப்போதும் நியாயம் தீர்க்கிறேன்..... மனந்திரும்புகிறேன்! இவ்வாறு என் வாழ்வின் பல பகுதிகளில் கிறிஸ்துவைப்போல் அல்லாத தன்மையைக் காண்கிறபடியால், என் வாழ்க்கை “தினசரி மனந்திரும்பும்” வாழ்க்கையாய் இருக்கிறது. “ஆண்டவரே, அந்த சகோதரனிடம் நான் அன்பாய் பேசவில்லை. நான் இச்சூழ்நிலையில் எவ்வாறு அன்பாய் பேசவேண்டும்? என்பதை எனக்கு கற்றுத்தாரும்” என இவ்வாறு எத்தனையோ வாழ்வின் பகுதிகளில், தினசரி மனந்திரும்பி வாழ்ந்து வருகிறேன்.

 

தன் நாவை அடக்குவதற்குக் கற்றுக்கொள்ளாதவனின் கிறிஸ்தவ பக்தி 'வீணானது' என்றல்லவா தேவன் கூறிவிட்டார்! (யாக்கோபு 1:26), இந்த வசனத்தை என் கண்களுக்கு முன்பாக எப்போதும் நிறுத்தி வைத்து, மனந்திரும்பி வாழ்ந்திடவே நான் விரும்புகிறேன்.

 

பவுல் ஒருசமயம் தன் உடன் ஊழியர்களைப்பற்றி குறிப்பிட்டார். பிலிப்பு பட்டண ஊழியத்திற்கு யாரையாகிலும் அனுப்பவேண்டும் என பவுல் தீர்மானித்தபோது, தீமோத்தேயு மாத்திரமே அதற்கு தகுதியுள்ளவனாய் கண்டு, தன்னோடிருந்த மற்ற அனைவருமோ தனக்குரியவைகளைத் தேடுகிறவர்களாய் இருக்கிறார்கள் எனக் குறிப்பிட்டார்! (பிலி 2:19-21), இங்கு பவுல் “தனக்குரியவைகளைத் தேடியவர்கள்” என அஞ்ஞானிகளைக் குறிப்பிடாமல், தன் உடன் - ஊழியர்களையே அவ்வாறு குறிப்பிட்டார் என்பதைப் பார்த்தீர்களா? பவுலின் ஊழிய குழுவில் ஒருவன் இணைந்திருப்பதே ஒரு கனத்திற்குரிய ஒன்றாகும். ஏனென்றால், ஒருசமயம் ஊழியத்தில் மாற்கு முழு வைராக்கியம் காட்டாதபடியால், அவனைத் தன் குழுவிலிருந்தே நீக்கிவிட்டார்! அப்படியிருந்தும், இன்னமும் தன் குழுவிலிருக்கும் அநேக உடன் ஊழியர்கள் தனக்குரியவைகளைத் தேடிக் கொண்டிருப்பதாகவே பவுல் உணர்ந்தார்!!

 

இன்று அநேகர், ஏதோ ஆத்துமாக்களுக்காக மிகுந்த பாரம் கொண்டவர்களைப் போல தங்களைக் காண்பித்து, சுவிசேஷத்தைப் பிரசங்கிக்கிறார்கள். ஆனால் உண்மையில் அவர்களோ, தங்கள் சொந்த லாபத்தையும், சொகுசையுமே நாடுகிறார்கள்! தங்கள் சொந்த நலனைப் பெருக்குவதிலேயே அக்கறை கொண்டிருக்கிறார்கள்!!

 

மேலும், இவர்கள் ஓய்வு பெறும் சமயத்தில் தங்கள் ஊழியப் பொறுப்புகளைத் தங்கள் பிள்ளைகளுக்கோ அல்லது தங்கள் குடும்பத்திலுள்ளவர்களுக்கோ தரும்படியே அவர்களை உயர்த்த முயற்சிக்கிறார்கள். இதுபோலவேதான் சவுலும் தன் மகன் யோனத்தானை உயர்த்த முயற்சித்தான். ஆனால் தேவனோ, “யோனத்தானல்ல, தாவீதே அடுத்த ராஜாவாய் சிங்காசனம் ஏறுவான்” எனக் கூறிவிட்டார். இவ்வாறு தேவன் கூறியது சவுலுக்கு மிகுந்த எரிச்சலை உண்டாக்கி, எப்படியாகிலும் தன் சொந்த மகனை உயர்த்தும் பொருட்டு தாவீதைக் கொலை செய்யும்படி வதைதேடினான்!

 

இதுபோன்ற சம்பவங்கள் இன்றைய கிறிஸ்தவ உலகில் சம்பவிக்கவில்லை என்று எண்ணுகிறீர்களா? இதுபோன்ற சம்பவங்கள் ஏராளமாய் நடப்பதை நாம் கண்டு வருகிறோம்!

 

நாம் கர்த்தருக்கே ஊழியம் செய்து, சத்தியத்தை சத்தியமாய் பிரசங்கித்தால், நாம் ஒருக்காலும் பிரபல்யம் அடைந்திட மாட்டோம். ஆனால் அதேசமயம், நாம் மனுஷரைப் பிரியப்படுத்தி பிரபல்ய ஊழியம் செய்ய நாடினால், நாம் கிறிஸ்துவின் ஊழியக்காரனாய் ஒருக்காலும் இருந்திடவே முடியாது!

 

இருப்பினும், கடினமான சூழ்நிலைகளின் மத்தியில், கர்த்தருக்காய்

ஊழியம் செய்து கொண்டிருக்கும் ஒவ்வொரு சகோதர, சகோதரி

களுக்காகவும் நான் தேவனுக்கு மிகுந்த நன்றி சொல்லுகிறேன். இவர்கள்

செய்திடும் ஏராளமான தியாகங்களை, இயேசு திரும்பவரும் நாள்வரை

நாம் அறியப்போவதில்லை! இதுபோன்ற தியாக ஊழியர்கள் இன்றைய

கிறிஸ்தவ உலகின் கண்களுக்குப் புலப்படுவதுமில்லை! அவர்கள் பெயர்

எக்காளம் ஊதி கூறப்பட்டதுமில்லை! இவர்களுக்கு எவ்வித விளம்பர

ஏதுகரமும் இல்லை! ஆனால் இவர்களோ.... தெய்வபயத்துடன், மிகுந்த

தாழ்மையுடன், தியாகங்கள் பல செய்து நம் தேசத்தில் இயேசு கிறிஸ்துவின்

சுவிசேஷம் தழைத்தோங்க ஊழியம் செய்து கொண்டிருக்கிறார்கள்!

 

“அவர்களுக்கு” என் வீர வணக்கங்கள்!

 

“அதுபோன்றவர்களுக்காய்” என் மனதார தேவனை ஸ்தோத்தரிக்கிறேன்!

 

"அவ்வித தியாக ஊழியங்களை ஒப்பிடும்போது நான் எம்மாத்திரம்!

 

அதுபோன்றவர்கள், இன்றும் நம் சபைகளில், உழைத்துக்கொண்டுதான் இருக்கிறார்கள்!

 

“அவர்களின் அடிச்சுவட்டையே”நாம் பின்பற்றி செல்லக்கடவோம்!! ஆமென்.

 

கேட்பதற்கு காதுள்ளவன் கேட்கக்கடவன்!

அதிகாரம் 5
ஜீவியத்திலும் ஊழியத்திலும் நான் கற்ற 16- முக்கிய சத்தியங்கள்! . . . . .

ஐம்பது ஆண்டுகள், ஒரு கிறிஸ்தவனாயும் கிறிஸ்துவின் ஊழியனாயும் வாழ்ந்து வரும் நான் சில முக்கியமான சத்தியங்களைக் கற்றுக் கொண்டேன். அவைகள் என்னை உற்சாகப்படுத்தியது மாத்திரமல்லாமல், என் வாழ்விற்கு திசை காட்டுவதாகவும் “'வாழ்வின் நோக்கத்தைப் புலப்படுத்துவதாகவும் அமைந்தது. என்னைப்போலவே நீங்களும் இந்த பலனைக் கண்டுகொள்ளவேண்டும் என்பதற்காகவே இவைகளை உங்களோடு பகிர்ந்து கொள்ளுகிறேன்.

 

1) இயேசுவை நேசித்ததுபோலவே தேவன் நம்மையும் நேசிக்கிறார்:

 

“பிதாவே நீர் என்னில் அன்பாயிருக்கிறதுபோல அவர்களிலும் அன்பாயிருக்கிறீர்” (யோவான் 17:23) என இயேசு கூறினார்.

 

நான் வேதாகமத்தில் கண்டுபிடித்த சத்தியங்களில் இந்த சத்தியமே அதிக மேன்மையானது என நான் கூறிட முடியும். ஓர் ‘பாதுகாப்பற்ற' ‘மனமடிந்த' விசுவாசியாயிருந்த என்னை இந்த சத்தியம், தேவனிடத்தில் முழுபாதுகாப்பைக் கண்டடையவும், கர்த்தருக்குள் எப்போதும் சந்தோஷமாயிருக்கவும் என்னை மாற்றிவிட்டது! வேதாகமத்தில், “தேவன் நம்மை நேசிக்கிறார்” என எடுத்துக்கூற அநேக வசனங்கள் உள்ளன. ஆனாலும் அந்த அன்பின் உச்சக்கட்டத்தை “இயேசுவை நேசித்ததைப்போலவே தேவன் நம்மையும் நேசிக்கிறார்” என எடுத்துரைப்பது இந்த ஒரே ஒரு வசனம் மாத்திரமே!!

 

நம் பரலோகப் பிதா, தன்னுடைய குமாரர்களை நேசிப்பதில் யாதொருவருக்கும் பாரபட்சம் காட்டுவதே இல்லை. ஆகவே தன் முதற்பேறான குமாரன் இயேசுவிற்கு செய்தது போலவே, நமக்கும் நிச்சயமாய் எல்லா நன்மைகளையும் தவறாமல் செய்வார். ஆம், இயேசுவிற்கு உதவி செய்ததைப்போலவே நமக்கும் உதவி செய்வார்! இயேசுவைப் பராமரித்து பாதுகாத்ததைப்போலவே, நம்மையும் பராமரித்து பாதுகாப்பார்! இயேசுவின் ஜீவியத்தில் ஒவ்வொரு நாளும் நடைபெற வேண்டிய நிகழ்ச்சிகளைத் திட்டம் தீட்டுவதற்கு பிதா ஆர்வம் கொண்டதைப் போலவே, நம்முடைய வாழ்க்கையிலும் அவ்விதமே ஆர்வம் கொண்டிருக்கிறார்! தேவனை அதிர்ச்சிக்குள்ளாக்கும்படியான 'திடீரென்று' யாதொரு சம்பவமும் நமக்கு நடைபெறுவது இல்லை. ஏனென்றால், ஒவ்வொரு சம்பவங்களையும் அவர் ஏற்கெனவே திட்டம் தீட்டி வைத்துள்ளார்!! ஆகவே, இனியும் நாம் பாதுகாப்பற்றவர்களாய் வாழ்ந்திட அவசியமே இல்லை. ஓர் திட்டமான நோக்கத்தோடு இயேசு இப்பூமிக்கு வந்ததைப்போலவே நாமும் இப்பூமிக்கு அனுப்பப்பட்டிருக்கிறோம்.

 

இந்த சத்தியங்கள் யாவும் உங்களுக்கும் நிஜமானதுதான்! ஆனால், நீங்கள் விசுவாசித்தால் மாத்திரமே அப்படியாகும்! ஒருவன் தேவனுடைய வார்த்தையை விசுவாசிக்காவிட்டால் அவனிடத்தில் தேவன் எந்த கிரியையும் நடப்பிக்கவே மாட்டார்!!

 

2) நேர்மையான ஜனங்களிடம் தேவன் பிரியமாயிருக்கிறார்:

 

“அவர் ஒளியிலிருக்கிறதுபோல நாமும் ஒளியிலே நடந்தால் ஒருவரோடொருவர் ஐக்கியப்பட்டிருப்போம்” (யோவான் 1:7).

 

ஒளியில் நடப்பதற்கு முதலாவதாய் இருக்கவேண்டியது, நாம் ஒன்றையும் தேவனிடத்தில் மறைக்காமல் இருக்க வேண்டும். அதாவது, அவரிடத்தில் உள்ளதை உள்ளபடியே எல்லாவற்றையும் சொல்வதாகும்! தேவனை நோக்கிச் செல்வதற்குரிய முதல்படியே நேர்மைதான் என்பதை நான் ஆணித்தரமாய் கண்டிருக்கிறேன். புரட்டிப் பேசும் உண்மையற்றவர்களை தேவன் அருவருக்கிறார். வேறு எவரையும் கடிந்து கொள்ளாத அளவிற்கு மாய்மாலக்காரர்களையே இயேசு அதிகமாய் கடிந்து கொண்டார் என்பதை நாம் அறிய வேண்டும்.

 

நாம் பரிசுத்தமாகவோ அல்லது பூரணமாகவோ இருக்கும்படி முதலாவதாக தேவன் கேட்கவேயில்லை! ஆனால், முதலாவதாக நேர்மையாய் இருக்கும்படியே நம்மிடம் கேட்கிறார்.

 

இதுவே உண்மையான பரிசுத்தத்தின் ஆரம்பமாகும். இந்த ஊற்றுக்கண்ணிலிருந்துதான் மற்ற அனைத்தும் புரண்டுவர முடியும். நாமனைவருமே மிக எளிதாய் செய்யக்கூடிய ஒன்று இருக்குமென்றால், அது நேர்மையாக இருப்பதுதான்!

 

ஆகவே ' எந்தப் பாவத்தையும்' உடனடியாக தேவனிடம் அறிக்கை செய்துவிடுங்கள். பாவமான சிந்தனைகளுக்கு மழுப்பலான, நாகரீகமான வார்த்தைகளைச் சூட்டாதிருங்கள். நீங்கள் உண்மையில் உங்கள் கண்களினால் விபச்சார மயக்க இச்சை கொண்டுவிட்டு, “நான் தேவனுடைய சிருஷ்டிப்பின் அழகை மாத்திரமே ரசித்தேன்” என்று கூறாதிருங்கள். அதேபோல் கோபத்தை “நியாயமான கோபம்” என்றும் அழைக்காதிருங்கள்! இவ்வாறு நேர்மையற்றவர்களாயிருந்தால், நீங்கள் ஒருக்காலும் பாவத்திலிருந்து ஜெயம் பெறவே மாட்டீர்கள். ஆகவே, ஒருபோதும் பாவத்தை “தவறு" என்று அழைக்காதிருங்கள். ஏனென்றால் இயேசுவின் இரத்தம் உங்களுடைய எல்லா பாவங்களை மாத்திரம் கழுவ முடியுமே அல்லாமல், உங்கள் தவறுகளை அவருடைய இரத்தம் கழுவாது! ஆம், நேர்மையற்ற ஜனங்களை அவர் ஒருக்காலும் கழுவி சுத்திகரிப்பதேயில்லை. “தன் பாவங்களை மறைக்கிறவன் வாழ்வடைய மாட்டான்” (நீதி.28:13). ஆம், நேர்மையுள்ள ஜனங்களுக்கு மாத்திரமே சுவிசேஷத்தில் நம்பிக்கை காத்திருக்கிறது!

 

மார்க்கத்தலைவர்களான பரிசேயர்களைக் காட்டிலும் வேசிகளும், கள்வர்களும் தேவனுடைய ராஜ்யத்திற்குள் பிரவேசிப்பார்கள் என இயேசு “அவர்கள் மீது” அதிக நம்பிக்கையுடன் ஏன் கூறினார்? (மத் 21:31}, ஏனென்றால் வேசிகளும், கள்வர்களும் தாங்கள் பரிசுத்தர் போல ஒருக்காலும் பாவனை செய்யமாட்டார்கள் என்பதுதான்!

 

இன்று அநேக வாலிபர்கள் ஏன் சபையைவிட்டு நழுவிச் செல்கிறார்கள்? ஏனென்றால் சபையிலுள்ள மற்றவர்கள், தங்களுக்குப் பாவத்தைக் குறித்த போரட்டமே இல்லாததுபோல்.... அந்த வாலிபர்களுக்குக் காட்டியதேயாகும்! ஆகவே அந்த வாலிபர்களுக்கு “இந்த பரிசுத்த தூயவான்கள் தங்களுடைய பிரச்சனைகளை ஒருநாளும் புரிந்துகொள்ள மாட்டார்கள்” என்ற விரக்தி ஏற்பட்டுவிட்டது. நம்முடைய நிலை இப்படி இருக்குமென்றால், தன்னிடத்தில் பாவிகளை ஈர்த்துக்கொண்ட கிறிஸ்துவைப்போல் நாம் இல்லை என்பதே உண்மையாகும்!

 

3)மிகுந்த மகிழ்ச்சியுடன் கொடுக்கிறவனிடத்தில் தேவன் பிரியமாயிருக்கிறார்:

 

“உற்சாகமாய் மிகுந்த மகிழ்ச்சியுடன் கொடுக்கிறவனிடத்தில் தேவன் பிரியமாயிருக்கிறார்” (2கொரிந்தியர் 9:7).

 

இதனிமித்தமே தேவன் மனிதனுக்கு அவனுடைய மனந்திரும்புதலுக்கு முன்பாகவும், மனந்திரும்பிய பின்பும்...... ஏன் பரிசுத்த ஆவியின் நிறைவைப் பெற்ற பின்பும்கூட அவனுக்கு முழு சுயாதீனம் அளித்திருக்கிறார். இவ்வாறு தேவனைப்போலவே நாம் இருப்பவர்களாயிருந்தால், நாமும் மற்றவர்களை ஆளுகை செய்வதற்கோ அல்லது பலவந்தமாய் நிர்ப்பந்தம் செய்வதற்கோ முயற்சிக்காமல்... நம்மைவிட அவர்கள் வித்தியாசமாயிருப்பதற்கும், நம்மைவிட வித்தியாசமான கருத்துக்கள் கொள்வதற்கும் அவரவர் ஓட்டத்தின் விகிதப்படி ஆவிக்குரிய வளர்ச்சியடைவதற்கும், சுயாதீனம் கொடுத்திருப்போம்!

 

எந்தக் கட்டாயத் திணிப்பும் பிசாசிற்குரியதேயாகும். பரிசுத்த ஆவியானவர் ஜனங்களை “நிரப்புகிறார்". ஆனால் பிசாசுகளோ ஜனங்களைப் “பிடித்துக்கொள்ளுகிறது”. இங்கே வித்தியாசம் என்னவென்றால், பரிசுத்த ஆவியானவர் ஒருவனை நிரப்பும்போது, அவன் இன்னமும் தான் விரும்பியதைச் செய்வதற்கு முழு சுதந்திரத்தைத் தந்து விடுகிறார். ஆனால் பிசாசுகள் ஜனங்களைப் பிடித்துக் கொண்டால், அவைகள் அவர்களுடைய சுதந்திரத்தை முழுமையாய் பறித்துக்கொண்டு அவர்களை ஆளுகையும் செய்கின்றன!

 

நாம் தேவனுக்குச் செய்திடும் எந்த ஊழியமாயிருந்தாலும், அவைகள் உற்சாகத்தோடும், மகிழ்ச்சியோடும், சுயாதீனமாய், தானாகவே மனமுவந்து செய்யப்படாவிட்டால் அவையாவும் செத்த கிரியைகள் என்பதை நாம் எப்போதும் நினைவில் கொள்ள வேண்டும். அதேபோல், ஏதோ ஒரு பிரதிபலனைக் கருதியோ அல்லது சம்பளத்தின் அடிப்படையிலோ செய்யப்படும் எவ்வித தேவனுடைய ஊழியமும் செத்த கிரியைகளேயாகும்! மற்றவர்களின் நிர்ப்பந்தத்திற்கு ஆளாகி, தேவனுக்குக் கொடுக்கும் எந்தப் பணத்திற்கும், தேவனைப் பொறுத்தமட்டில் அவைகளுக்கு எந்த மதிப்பும் இல்லவே இல்லை.

 

கட்டாயத்தின் பேரிலோ அல்லது மனசாட்சியின் உறுத்துதலிலிருந்து தப்பிப்பதற்காகவோ செய்யப்படும் ஏராளமான கிரியைகளைக் காட்டிலும், மிகுந்த மகிழ்ச்சியுடன் அவருக்குச் செய்திடும் கிரியை அற்பமானதாயிருந்தாலும் அதற்கே தேவன் அதிக மதிப்பு தருகிறார்.

 

4) இயேசுவை நோக்கிப் பார்ப்பதின் மூலமே பரிசுத்தம் கிட்டுகிறது:

 

“இயேசுவை நோக்கிப்பார்த்து (Looking unto Jesus) நமக்கு நியமித்திருக்கிற ஓட்டத்தில் ஓடக்கடவோம்” என்றே எபிரெயர் 12:1 கூறுகிறது.

 

தேவபக்தியின் இரகசியம், மாம்சத்தில் வெளிப்பட்ட கிறிஸ்து என்ற நபரில்தான் இருக்கிறதேயல்லாமல், “கிறிஸ்து நம்முடைய மாம்சத்தில் வெளிப்பட்டார்” என்ற உபதேசத்தில் இல்லவே இல்லை, இதை 1தீமோத்தேயு 3:16 மிகத் தெளிவாய் சுட்டிக்காட்டுகிறது. எனவே “அவர்” என்ற தனிநபரின் மூலமேயல்லாமல், அவருடைய மாம்சத்தை ஆராய்ந்து கண்டறியும் உபதேசத்தினால் நாம் பரிசுத்தமாவதில்லை!

 

நாமாக எடுத்துக்கொள்ளும் எந்த சுய-முயற்சியும் (Self-effort) நம்முடைய பாவ இருதயத்தை ஒருக்காலும் பரிசுத்தமாக்கிட முடியாது. அந்த அற்புத மாற்றம் நிகழ்வதற்கு தேவன்தான் நமக்குள் கிரியை நடப்பிக்க வேண்டும். பரிசுத்தம் (நித்திய -ஜீவன்) தேவனால் உண்டாகும் ஈவு, அதை கிரியையினால் ஒருக்காலும் அடைந்திட முடியாது (ரோமர் 6:23), தேவன் மாத்திரமே நம்மை முற்றிலும் பரிசுத்தமாக்க முடியுமென 1தெச 5:23 மிகத் தெளிவாகக் கூறுகிறது. இந்த வசனத்தை நம்மில் ஒருவரும் தவறு என்று சொல்லிட முடியாதே! இருப்பினும் இன்று எண்ணற்ற விசுவாசிகள் தாங்கள் பரிசுத்தமாகும் பொருட்டு, தங்களைத் தாங்களே வெறுப்பதற்குப் போராடிக் கொண்டிருப்பதைத் தான் நாம் பார்க்கிறோம். அந்தோ, இவர்கள் பரிசுத்தத்தை அடைவதற்குப் பதிலாய் “பரிசேயர்களாகவே” மாறிவிடுகிறார்கள்.

 

எபேசியர் 4:24 குறிப்பிடும் மெய்யான பரிசுத்தம் இயேசுமீது கொண்ட விசுவாசத்தினால்.... அதாவது, “இயேசுவை நோக்கிப் பார்ப்பதினால்" மாத்திரமே அடைந்திட முடியும். ஆம், நாம் உபதேசத்தை மாத்திரமே நோக்குபவர்களாயிருந்தால், முடிவில் பரிசேயர்களாகவே முற்றுப் பெறுவோம். இந்நிலையில் நீங்கள் எவ்வளவு தெள்ளத் தெளிவாய் உபதேசங்களைக் கற்றுக் கொண்டீர்களோ, அந்த அளவிற்கு மிகப்பெரிய பரிசேயர்களாகவே மாறிவிடுவீர்கள். இந்த உலகில் நான் சந்தித்த பரிசேயர்களில் மிகப்பெரிய பரிசேயர்கள் யாரென்றால், “தங்கள் சுய-முயற்சி மூலமாய் மகா உன்னத பரிசுத்த தரத்தைப் பிரசங்கித்தவர்களேயாவர்”. இவ்வித கதியை நாமும் அடைந்துவிடாதபடி கவனமாயிருக்கக்கடவோம்!

 

இயேசுவை நோக்கிப்பார்ப்பதின் பொருள் என்ன என்பதை எபிரெயர் 12:2 மிகத்தெளிவாக நமக்கு எடுத்துரைக்கிறது. முதலாவதாக, நாம் அவரை நோக்கிப்பார்த்து “இந்த பூமியில் ஒவ்வொருநாளும் சிலுவையை சகித்து வாழ்ந்தவராகவும் நம்மைப்போல எல்லாவிதத்திலும் சோதிக்கப்பட்டும் பாவமில்லாதவராகவும்” காண்பதுதான் (எபி.4:15). இவ்வாறு அவர் நமக்கு முன்னோடியாய் இருக்கிறபடியால் (எபி.6:20) இப்போது அவரது அடிச்சுவடுகளைப் பின்பற்றி நாமும் தொடர்ந்து ஓட முடியும். இரண்டாவதாக, “பிதாவின் வலதுபாரிசத்தில் வீற்றிருக்கிறவராகவும்” நாம் அவரைக் காணவேண்டும். இவ்வாறு, பிதாவின் அருகிலிருந்து நமக்காக வேண்டுதல் செய்யவும், நம்முடைய சோதனைகளிலும் உபத்திரவங்களிலும் நமக்கு உதவி செய்யவும் அவர் ஆயத்தத்துடன் இருக்கிறார்.

 

5)நாம் பரிசுத்த ஆவியினால் இடைவிடாது நிரப்பப்பட்டிருக்க வேண்டும்:

 

“ஆவியினால் தொடர்ச்சியாய்’ நிரப்பப்பட்டு நிறைந்திருங்கள்” என்பதே எபேசியர் 5:18-ன் சரியான மொழிபெயர்ப்பாகும்.

 

தேவன் விரும்பும்படியான கிறிஸ்தவ ஜீவியம் செய்வதற்கு, நாம் தொடர்ச்சியாய் பரிசுத்த ஆவியினால் நிரப்பப்பட்டாலொழிய சாத்தியமாகாது! அதேபோல, நாம் தேவனுக்கு ஊழியம் செய்ய வேண்டிய பிரகாரமாய் ஊழியம் செய்திட ஆவியின் அபிஷேகம் இல்லாமலும், ஆவியின் வரங்களைப் பெறாமலும் சாத்தியமாகாது!! இயேசுவேகூட ஆவியின் அபிஷேகத்தைப் பெறவேண்டியது அவசியமாயிருந்தது. இதை 2கொரிந்தியர்.3:18 குறிப்பிடும்போது, பரிசுத்த ஆவியானவர் நம்மை, நம்முடைய ஜீவியத்திலும் நம்முடைய ஊழியத்திலும் அவருடைய சாயலுக்கொப்பாய் மறுரூபப்படுத்தும்

படிக்கே வந்தார் எனக் கூறுவதைப் பார்க்கிறோம்.

 

இவ்வாறு தேவன் நம்மை ஆவியினால் நிறைத்து, கிறிஸ்துவின் சாயலான அவருடைய சுபாவத்தில் நம்மை மறுரூபப்படுத்தவும், இயேசுவைப் போலவே ஊழியம் செய்வதற்கு நம்மை ஆயத்தப்படுத்தவும் செய்கிறார். இயேசு பெற்ற அதே ஊழியம் நமக்கு இல்லை. ஆகவே அவர் தன்னுடைய ஊழியத்தில் செய்தவைகளை நாமும் செய்திட முடியாது. ஆனால் நாம் இயேசுவைப்போலவே அபிஷேகத்தில் நிறைந்து முழு ஆயத்தத்துடன் “நாம் பெற்ற ஊழியத்தை” நிறைவேற்றிட முடியும். இங்கு நம் பட்சத்தில் தேவையாயிருப்பதெல்லாம்.... தேவன் எதிர்பார்க்கும் போதுமான தாகமும், விசுவாசமும் இருக்க வேண்டும். அப்போது நம் மூலமாயும் ஜீவதண்ணீர் கொண்ட நதிகள் புரண்டோடிவிடும் (யோவான்.7:37-39).

 

பரிசுத்த ஆவியின் வரங்கள் இல்லாத ஒரு சபை, உயிருள்ள ஒரு மனிதன் செவிடும், குருடும், ஊமையும், நொண்டியுமாய் இருப்பதைப்போல் உபயோகமற்றதாகவே இருக்கும்!

 

6) சிலுவையின் வழியே ஜீவனைக் கண்டடையும் வழி:

 

“நாம் அவரோடேகூட மரித்தோமானால் அவரோடே கூட பிழைத்துமிருப்போம்” (2தீமோத்தேயு 2:11).

 

நம்முடைய சரீரத்தில் இயேசுவின் வாழ்க்கை (ஜீவன்) வெளிப்பட வேண்டுமென்றால், தேவன் ஏற்படுத்தும் எல்லா வாழ்வின் சூழ்நிலைகள் மூலமாய் நம் சொந்த ஜீவனில் (சுய-வாழ்க்கையில்) மரணத்தை ஏற்றுக் கொண்டால் மாத்திரமே சாத்தியமாகும் (2கொரி 4:10,11). நாம் ஜீவன் பெற இதைத்தவிர வேறு வழி இல்லவே இல்லை. ஆகவே, நாம் பாவத்தை ஜெயித்து வாழவேண்டுமென்றால், எல்லா சூழ்நிலைகளிலும் “நம்மை பாவத்திற்கு மரித்தவர்களாகவே” கருத வேண்டும் (ரோமர் 6:11), நாம் பரத்தின் உயிரினால் வாழ்ந்திருப்பதற்கு “நாம் ஆவியினாலே சரீரத்தின் செய்கைகளை அழித்திட வேண்டும்” (ரோ 8:13), ஆகவேதான் நம்முடைய ஒவ்வொருநாள் ஜீவியத்திலும் பரிசுத்த ஆவியானவர் நம்மை எப்போதும் சிலுவையண்டை நடத்திச் செல்கிறார்.

 

இவ்வாறு எல்லா சூழ்நிலைகளுக்குள்ளும் நாம் தேவனால் அனுப்பப்பட்டு, அங்கே நாம் “எந்நேரமும் (ஒவ்வொரு நாளும்) கொல்லப்படுகிறோம்” (ரோமர் 8:36), அதாவது “இயேசுவினிமித்தம் மரணத்திற்கு ஒப்புக்கொடுக்கப்படுகிறோம்” (2கொரி 4:11). இதுபோன்று ஒவ்வொரு சூழ்நிலைகளிலும் நாம் “இயேசுவின் மரணத்தை" (2கொரிந்தியர் 4:10) மனப்பூர்வமாய் சுமந்தே இயேசுவின் ஜீவனை (வாழ்க்கையை) நம்முடைய சரீரத்தில் விளங்கப்பண்ண வேண்டும்!

 

7) மனுஷருடைய அபிப்பிராயங்கள், வெறும் குப்பையே!:

 

“நாசியிலே சுவாசமுள்ள மனுஷனை நம்புவதை விட்டுவிடுங்கள்; (உயர்வாய்) எண்ணப்படுவதற்கு அவன் எம்மாத்திரம்?" (ஏசாயா 2:22).

 

மனுஷனுடைய சுவாசம் அவனுடைய நாசியிலிருந்து எடுபட்டுப்போனால், நாம் கால் மிதித்து நடக்கும் தூசியைவிட அவன் மேலானவன் அல்ல! ஆகவே மனுஷனுடைய அபிப்பிராயங்களுக்கு நாம் ஏன் மதிப்பு தரவேண்டும்? உங்களைச் சுற்றியுள்ள எல்லா மனுஷருடைய அபிப்பிராயங்களையும் ஒன்று திரட்டினாலும் அவைகள் குப்பைத் தொட்டியில் எறியப்படுவதற்கே பாத்திரமானது என்ற சத்தியத்தில் நாம் வேர்கொண்டு நிலைநிற்கவில்லையென்றால்,நாம் ஆண்டவருக்கு ஒருக்காலும் வலிமையாய் ஊழியம் செய்திடவே முடியாது, நாம் “ஒரே ஒரு மனுஷனைக்கூட” பிரியப்படுத்துகிறவர்களாய் இருந்தாலும், நாம் கிறிஸ்துவின் ஊழியக்காரர்களாய் ஒருக்காலும் இருந்திடவே முடியாது (கலாத்தியர் 1:10),

 

தேவனுடைய அபிப்பிராயங்களோடு ஒப்பிடும்போது எந்த மனுஷனுடைய அபிப்பிராயங்களும் ஒன்றுமில்லாத குப்பையேயாகும். இந்த உண்மையைத் தன் இருதயத்தில் ஆழமாய் பதித்துக் கொண்டவன் தன் ஜீவியத்திலும், ஊழியத்திலும் தேவனுடைய அங்கீகாரம் ஒன்றை மாத்திரமே எப்போதும் தேடுவான். அவன் யாரையும் கவர்ச்சிக்க ஒருபோதும் நாடமாட்டான்! அல்லது ஜனங்களுக்கு முன்பாய் தன்னை நியாயப்படுத்துவதையும் ஒருபோதும் விரும்பிடவே மாட்டான்!

 

8) இந்த உலகத்தின் மேன்மையானவைகளை, தேவன் அருவருக்கிறார்:

 

“மனுஷருக்குள்ளே மேன்மையாக எண்ணப்படுகிறது தேவனுக்கு முன்பாக அருவருப்பாயிருக்கிறது” (லூக்கா.16:15) என வாசிக்கிறோம்.

 

இந்த உலகத்தில் மகா மேன்மையாய் எண்ணப்படுபவைகளுக்கு தேவனுடைய பார்வையில் எந்த மதிப்பும் இல்லையென்பது மாத்திரமல்ல.... அவைகளை அவர் அருவருக்கவும் செய்கிறார். இவ்வாறு உலகத்திலுள்ள எல்லா மதிப்பும் புகழும் தேவனுக்கு அருவருப்பாயிருக்கிறபடியால், அவைகள் நமக்கும் அருவருப்பாகவே இருக்கவேண்டும்.

 

இப்பூமியிலுள்ள ஒவ்வொருவரும் பணத்தை அதிக மதிப்புடையதாய் கருதுகிறார்கள். ஆனால் பணத்தை நேசித்து, ஐசுவரியவான்களாக விரும்புகிறவர்கள் வெகு சீக்கிரத்திலோ அல்லது சற்று தாமதமாகவோ கீழ்காணும் எட்டு விளைவுகளினால் வேதனை அடைவார்கள் என தேவன் கூறினார் (1தீமோ.6:9,10).

 

1) அவர்கள் சோதனையில் விழுவார்கள்,

 

2) அவர்கள் கண்ணியில் சிக்குவார்கள்,

 

3) அவர்கள் மதிகேடான இச்சையில் விழுவார்கள்,

 

4) அவர்கள் சேதம் விளைவிக்கும் இச்சையில் விழுவார்கள்,

 

5) அவர்கள் கேடானவைகளில் அமிழ்ந்து போவார்கள்,

 

6) அவர்கள் அழிவில் அமிழ்ந்துபோவார்கள்,

 

7) அவர்கள் விசுவாசத்தைவிட்டு வழுவிப்போவார்கள்,

 

8) அவர்கள் அநேக வேதனைகளினால் தங்களை உருவ குத்திக்

கொள்வார்கள்.

 

மேற்கண்ட இந்த எட்டு அவலங்களும் நான் சென்ற ஒவ்வொரு இடங்களிலும் ஏராளமான விசுவாசிகளுக்குத் திரும்பத் திரும்ப சம்பவித்ததை என் கண்களால் கண்டிருக்கிறேன்.

 

இன்று நம் தேசத்தில் கர்த்தரிடத்திலிருந்து புறப்பட்டு வரும் தீர்க்கதரிசன வார்த்தைகளுக்குப் பஞ்சம் உண்டாயிருப்பதற்கான ஓர் முக்கிய காரணம், ஏராளமான பிரசங்கிகள் பண ஆசை கொண்டவர்களாய் மாறியதுதான்!

 

பண விஷயத்தில் உண்மையில்லாதவர்களிடத்தில், தேவன் மெய்யான ஐசுவரியத்தைத் (தீர்க்கதரிசன வார்த்தையைப் பெறுவதும் இந்த ஐசுவரியங்களில் ஒன்று) தரவேமாட்டார் என இயேசு கூறினார் (லூக்கா 16:11). இதினிமித்தமே இன்று சபைக்கூட்டங்களில் ஏராளமான போரடிக்கும் பிரசங்கங்களையும், ஏராளமான போரடிக்கும் சாட்சிகளையும் கேட்கிறோம்!

 

9) நமக்கு நாமே தவிர வேறு ஒருவரும் நமக்குத் தீங்கு செய்திட முடியாது:

 

“நீங்கள் நன்மையைப் பின்பற்றுகிறவர்களானால், உங்களுக்குத் தீமை செய்கிறவன் யார்?” (1பேதுரு 3:13).

 

தேவனிடத்தில் அன்புகூர்ந்து அவருடைய தீர்மானத்தின்படி அழைக்கப்பட்டவர்களுக்கு (அதாவது, தங்கள் ஜீவியத்தில் தேவனுடைய சித்தத்திற்குப் புறம்பாக இப்பூமியில் எந்த இலட்சியமும் இல்லாதவர்களுக்கு) சகலமும் நன்மைக்கு ஏதுவாகவே நடக்கும்படி கிரியை செய்திட, தேவன் சொல்லி முடியா வல்லமையைப் பெற்றிருக்கிறார் (ரோமர் 8:28). இந்த அற்புதமான வாக்குதத்தத்தை தங்களுக்கென சுயநல நோக்கம் கொண்டவர்கள் ஒருக்காலும் உரிமை பாராட்டவே முடியாது. ஆனால் நம் ஜீவியத்தில் தேவனுடைய சித்தத்தை சம்பூர்ணமாய் ஏற்றுக்கொண்டவர்களாயிருந்தால், இப்பூமியில் ஜீவியத்தின் ஒவ்வொரு நிமிஷமும் இந்த வாக்குதத்தத்தை உரிமை கொண்டாடமுடியும்! ஆம், ஒன்றும் நமக்குத் தீங்கிழைக்கவே முடியாது!

 

நமக்கு மற்றவர்கள் தற்செயலாகவோ அல்லது வேண்டுமென்றோ செய்திடும் எந்த நன்மையானலும், எந்த தீமையானாலும், இந்த ரோமர்.8:28-ஆம் வசன வடிகட்டி (FILTER) வழியாய் கடந்துவந்து, நமக்கு மிகவும் அருமையாகவே முடிவில் வந்துசேரும்!

 

இவ்வாறு தேவன் நமக்கென்று திட்டம் தீட்டியுள்ள அதிக நன்மையானவைகளில் ஒன்று என்னவென்றால், ஒவ்வொரு சமயமும் கிறிஸ்துவின் சாயலுக்கொப்பாய் நாம் மாறுவதுதான் (ரோமர் 8:29), இந்த அருமையான வசனத்தில் சொல்லப்பட்ட நிபந்தனைகளை நிறைவேற்றிடும் யாவருக்கும் “இந்த வடிகட்டி" (Filter) ஒவ்வொரு சமயமும் நேர்த்தியாய் கிரியை நடப்பித்துக் கொண்டேயிருக்கும்!!

 

இதைக்காட்டிலும் சற்று மேலாக 1பேதுரு 3:13, “நாம் நன்மை செய்கிறவர்களாய் இருந்தால்” ஒரு மனிதனும் நமக்கு தீங்கு செய்திட முடியாது என மிக நேர்த்தியாய் கூறுகிறது. துரதிருஷ்டவசமாய் இன்று ரோமர்.8:28.அறியப்பட்டிருப்பதுபோல், இந்த அருமையான வசனத்தை அநேகர் அறியாதிருக்கிறார்கள். இனிவரும் நாட்களிளாவது இந்த வசனத்தின் மேன்மையை நாம் உயர்த்திக்காட்டிடக்கடவோம். இருப்பினும் இந்த வாக்குதத்தமோ, தங்கள் இருதயங்களை எல்லா ஜனங்களிடத்திலும் நன்மை நிறைந்ததாய் காத்துக் கொண்டவர்களுக்கு மாத்திரமே சொந்தமானதாகும். இதுபோன்ற ஒரு விசுவாசிக்கு எந்த பிசாசோ அல்லது எந்த மனுஷனோ தீமை செய்வதென்பது ஒருக்காலும் கூடாத காரியம்!

 

ஆகவே, “மற்றவர்கள் எனக்குத் தீங்கு செய்துவிட்டார்கள்” என எந்த ஒரு கிறிஸ்தவன் குறைகூறுகிறானோ, அப்போதெல்லாம் அவன் மறைமுகமாய் ஒத்துக்கொள்வது யாதெனில் “நான் தேவனில் அன்பு கூரவில்லை! நான் தேவனுடைய தீர்மானத்தின்படி அழைக்கப்படவில்லை! நான் நன்மை செய்ய தீவிரம் கொண்டவனல்ல!” என்ற அறிக்கையேயாகும். இப்படியில்லாதிருந்தால், அவனுக்கு மற்றவர்கள் எதைச் செய்திருந்தாலும் அவனுடைய நன்மைக்காகவன்றோ கிரியை நடந்திருக்கும்! அவ்வாறு சகலமும் நன்மையாய் நடந்திருந்தால், அவனிடத்தில் யாதொரு குறைசொல்லும் உண்டாயிருக்காதல்லவா!!

 

உண்மையில் உங்களுக்குத் தீமை செய்யக்கூடிய ஒரே நபர் நீங்கள் மாத்திரமே! நீங்கள் மற்றவர்களிடத்தில் உண்மையற்றவர்களாய் நடந்து கொண்டதும், மற்றவர்கள்மீது தவறான மனப்பான்மை கொண்டதுமே உங்களுக்கு நீங்களே செய்துகொண்ட தீமையாகும்!

 

79 - வயது நிரம்பிய நான் நேர்மையாய் சொல்லும் சாட்சி என்னவெனில், “என் முழு ஜீவியத்திலும், ஒருவர்கூட எனக்குத் தீமை செய்வதில் ஜெயம் பெறமுடியவில்லை," என்பதுதான். அநேகர் முயற்சித்தார்கள் என்பது உண்மை...... ஆனால், அவைகள் அனைத்தும் என்னுடைய நன் க்காகவும், என் ஊழிய நன்மைக்காகவும் மாத்திரமே கிரியை நடப்பித்தன! ஆகவே, நான் அதுபோன்ற ஜனங்களுக்காகவும் தேவனை ஸ்தோத்தரிக்க என்னால் முடிகிறது. எனக்கு எதிர்ப்பாய் தீமை செய்யும்படி முயற்சித்தவர்களில் பெரும்பாலானோர் தேவனுடைய வழிகளை அறியாத “விசுவாசிகள்” என பெயர் கொண்டவர்கள்தான்! இந்த என் சாட்சியை நான் சொல்வதற்கு காரணம், உங்களை உற்சாகப்படுத்தி, நான் பெற்ற சாட்சி, உங்களுடையதாகவும் எப்போதும் இருக்கமுடியும்! என்பதை நீங்கள் விசுவாசிக்கும்படிக்கேயாகும்!!

 

10)நம் ஜீவியத்திற்கென, நிறைவான திட்டத்தை தேவன் வைத்திருக்கிறார்:

 

“நற்கிரியைகளைச் செய்கிறதற்கு நாம் கிறிஸ்து இயேசுவுக்குள் (முன்கூட்டியே) சிருஷ்டிக்கப்பட்டு தேவனுடைய செய்கையாயிருக்கிறோம்; அவைகளில் நாம் நடக்கும்படி அவர் முன்னதாகவே அவைகளை ஆயத்தம் பண்ணியிருக்கிறார்” (எபே2:10) என வாசிக்கிறோம்.

 

பலவருடங்களுக்கு முன்பாகவே நம்மை கிறிஸ்துவுக்குள் தேவன் தெரிந்து கொண்டபோது, இப்பூமிக்குரிய வாழ்க்கையில் நாம் என்ன செய்ய வேண்டுமென்பதை வரையறை செய்து வைத்துவிட்டார். இப்போது நம்முடைய கடமை என்னவென்றால், அந்த தேவனுடைய திட்டத்தை ஒவ்வொருநாளும் கண்டுபிடித்து அதன்படி பின்பற்றி நடப்பதுதான்! தேவனுடைய திட்டத்தைக்காட்டிலும் மேலான திட்டத்தை நாம் நமக்கென்று ஒருக்காலும் வரையறுக்கவே முடியாது!!

 

தேவன் தன்னுடைய ஒவ்வொரு பிள்ளைகளுக்கும் வித்தியாசமான திட்டங்களை வைத்திருக்கிறபடியால், மற்றவர்கள் செய்வதைப் போலவே நாமும் அப்படியே செய்வதற்கு முயலவே கூடாது!

 

உதாரணமாய், யோசேப்பைக் குறித்து தேவன் கொண்டிருந்த திட்டம், “அவன் எகிப்தின் அரண்மனையில் தங்கியிருந்து, தன்னுடைய ஜீவியத்தின் பின்பகுதியான 80ஆண்டுகள் மிகுந்த வசதியுடன் வாழவேண்டும் என்பதாயிருந்தது!” இப்படியிருக்க, யோசேப்பின் மாதிரியை மோசே பின்பற்றி வசதியையும், ஆடம்பரத்தையும் விரும்பியிருந்தால்..... அவனுடைய சொந்த வாழ்க்கைக்குரிய தேவனுடைய சித்தத்தை நிச்சயமாய் இழந்திருப்பான்!

 

இன்றும் அதைப்போலவே, ஒரு சகோதரன் தன் ஜீவியகாலமெல்லாம் அமெரிக்க தேசத்தில் வசதியுடன் வாழ தேவன் விரும்பியிருக்கக்கூடும். ஆனால் இன்னொரு சகோதரனையோ தன் ஜீவகாலமெல்லாம் வடஇந்தியாவின் உஷ்ணத்திலும், தூசியிலும் உழன்று வாழும்படி அவர் வைத்திருக்கக்கூடும்! இந்த இருவருமே தேவன் தங்களுடைய வாழ்க்கையில் கொண்டிருக்கும் திட்டத்தை அறிந்தவர்களாய் திருப்தியுடன் இருக்க வேண்டுமேயல்லாமல், ஒருவரையொருவர் ஒப்பிட்டுப் பார்த்து பொறாமைப்படவோ அல்லது குறை கூறவோ கூடாது! இந்திய தேசத்தில் நான் ஊழியம் செய்யும்படி தேவன் என்னை அழைத்திருக்கிறார் என்பதை நன்கு அறிவேன். ஆனால் என்னைப் போன்ற அழைப்பை, மற்றவர்களும் பெற்றிருக்க வேண்டுமென நான் ஒருவரையும் வற்புறுத்தியதே இல்லை!

 

இருப்பினும், நாம் நம்முடைய சுய கனத்தைத் தேடினாலோ அல்லது பணத்தை நேசித்தாலோ அல்லது சொகுசு வாழ்க்கையை விரும்பினாலோ அல்லது மனுஷருடைய அங்கீகாரத்தை நாடினாலோ, தேவன் நமக்கென்று வைத்திருக்கும் அவரது திட்டத்தைக் கண்டு பிடிக்கவே முடியாது!

 

11)தேவனை நெருங்கி அறிந்திருப்பதே, ஆழ்ந்த ஜீவியத்தின் இரகசியம்:

 

“தங்கள் தேவனை அறிந்திருக்கிற ஜனங்கள் திடங்கொண்டிருப்பார்கள்” (தானியேல் 11:32) என வாசிக்கிறோம்.

 

இரண்டாந்தரமாய் கைமாறுவது போல் (Second Hland) பிறர் மூலமாய் நாம் தேவனை அறிந்துகொள்வதை தேவன் விரும்புவதேயில்லை. ஒரு புதிய விசுவாசிகூட, தன்னைத் தனிப்பட்ட முறையில் அறிந்து கொள்ளும்படியே, தேவன் அவனை அழைக்கிறார் (எபி.8:11). தேவனையும், இயேசுகிறிஸ்துவையும் தனிப்பட்ட விதத்தில் ஒருவன் அறிந்துகொள்வதே நித்திய ஜீவன் என்று இயேசு விளக்கினார். இதுவே பவுலின் வாழ்க்கையிலும் தீராத ஏக்கமாயிருந்தது! அது போலவே,

நமக்கும் தேவனை அறிகிற அறிவு தீராத ஏக்கமாய், நமக்குள்

எப்போதும் இருந்திடவேண்டும் (பிலி.3:10).

 

தேவனை தீர்க்கமாய் அறிந்திட வாஞ்சை கொண்டவன், அவர் சொல்வதைக் கவனிக்க எப்போதும் தீவிரம் கொண்டவனாயிருக்க வேண்டும். ஒரு மனிதன் தன்னை ஆவிக்குரிய ஜீவனோடு காத்துக்கொள்வதற்கு ஒரே வழி “தேவனுடைய வாயிலிருந்து புறப்படும்” ஒவ்வொரு வார்த்தையையும் கவனித்துக் கேட்பதுதான்! நம் கிறிஸ்தவ வாழ்க்கையில் அவருடைய பாதத்தில் அமர்ந்து அவர் கூறுவதைக் கவனித்துக் கேட்பதே மிக முக்கியமானதென்று, இயேசு லூக்கா 10:42-ல் கூறினார்.

 

இயேசு ஒவ்வொரு நாள் காலையிலும் தன் பிதா சொல்வதை கவனித்துக்கேட்கும் பழக்கம் வைத்திருப்பதைப் போலவே, நாமும் அந்தப் பழக்கத்தை வளர்த்துக்கொள்ள வேண்டும்! (ஏசாயா 50:4), காலையில் மாத்திரம் அல்லாமல்.... அந்த பகல் முழுவதும்..... நாம் தூங்கும் இரவு நேரங்களிலும் அவ்விதமே இருப்போமென்றால், ஆண்டவர் இரவிலும் நம்மை அதேபோல் கவனிக்கும் மனதுடையவர்களாகச் செய்வார். நாம் எழும்பினாலும், “கர்த்தாவே சொல்லும், உமது அடியேன் கேட்கிறேன்” என கூறிட முடியும் (1சாமுவேல்.3:10).

 

நாம் தேவனை நெருக்கமாய் அறிந்திருப்பதுதான், நம்மை எல்லாச் சூழ்நிலைகளிலும் ஜெயம் பெற்றவர்களாய் மாற்றிவிடும்! ஏனென்றால், நாம் சந்திக்கும் ஒவ்வொரு பிரச்சனைகளுக்கும் தேவனிடத்தில் மாத்திரமே விடை உண்டு! நாம் அவரைக் கவனித்துக் கேட்டால் அந்த விடையை அவர் நமக்கு நிச்சயமாய் சொல்லுவார்!!

 

12) புதிய உடன்படிக்கையே, மேன்மை நிறைந்ததாகும்:

 

“இயேசுவோ விசேஷித்த உடன்படிக்கைக்கு மத்தியஸ்தராயிருக்கிறார்" (எபிரெயர்.8:6) என வாசிக்கிறோம்.

 

இன்று அநேக கிறிஸ்தவர்கள், பழைய உடன்படிக்கைக்கும் புதிய உடன்படிக்கைக்கும் அடிப்படை பூர்வமாய் வித்தியாசம் இருப்பதைக் கூட இன்னமும் அறிந்து கொள்ளவில்லை (எபி.8:8-12). மோசேயைக் காட்டிலும் எவ்வாறு இயேசு மேலானவரோ, அதைப்போலவே பழைய உடன்படிக்கையைக் காட்டிலும் புதிய உடன்படிக்கை மேலானதாகும்! (2கொரி.3; எபிரெயர்.3), பழைய உடன்படிக்கையானது, தன்னுடைய நியாயத்தீர்ப்பின் பயத்தின் மூலமாகவோ அல்லது வாக்குதத்தத்தின் ஆசீர்வாதத்தின் மூலமாகவோ ஒருவனுடைய வெளியரங்க வாழ்க்கையை மாத்திரமே சுத்திகரிக்க முடிந்தது. ஆனால் புதிய உடன்படிக்கையோ, நம்முடைய உள்ளான அந்தரங்க ஜீவியம் முழுவதையும்

 

மாற்றுவதாயிருக்கிறது. இந்த மாற்றம் அச்சுறுத்தல் மூலமோ அல்லது ஆசீர்வாத வாக்குதத்தங்கள் மூலமோ நடைபெறாமல், பரிசுத்த ஆவியின் மூலமாகவே நடைபெறுகிறது. இந்த மாற்றம், பூரண தூய்மையும் அன்பும் நிறைந்த கிறிஸ்துவின் சுபாவத்தையே நமக்குத் தருகிறது!! ஒரு பன்றியை சங்கிலியில் கட்டி (நியாயப்பிரமாணத்தின் தண்டனை என்ற பயத்தினால் கட்டி அதைப்பிடித்து இழுத்து… தூய்மையாய் காப்பதற்கும், ஒரு பூனை தன்னுடைய உள்ளான சுபாவத்தினிமித்தம் தன்னைத்தானே தூய்மையாய் காத்துக் கொள்வதற்கும் ஏராளமான வித்தியாசங்கள் உண்டு. இந்த உதாரணத்தைப்போலவே, பழைய புதிய உடன்படிக்கையின் வித்தியாசம் இருக்கிறது!

 

13) மனுஷரால் புறக்கணிக்கப்படும் துன்பம், நம் ஊழியத்தின் பங்கு:

 

"கிறிஸ்து இயேசுவுக்குள் தேவபக்தியாய் நடக்க மனதாயிருக்கிறயாவரும் துன்பப்படுவார்கள்” (2தீமோ 3:12) என வாசிக்கிறோம்.

 

இயேசு தன்னுடைய சீஷர்களிடத்தில் கூறும்போது, இந்த உலகத்தில் அவர்கள் துன்பத்தை சந்திக்க வேண்டுமென்பதை திட்டமாய் கூறினார் (யோவான் 16:33), எனவேதான் அவர் பிதாவினிடத்தில் தன் சீஷர்களுக்காக ஜெபிக்கும்போது, “நீர் அவர்களை உலகத்திலிருந்து எடுத்துக் கொள்ளும்படி நான் வேண்டிக்கொள்ளவில்லை” என்றே ஜெபித்தார் (யோவான் 17:15). மேலும் அப்போஸ்தலர்கள் தங்களுடைய விசுவாசிகளுக்குப் போதிக்கும்பொழுது, “அநேக உபத்திரவங்களின் வழியாய்தான், அவர்கள் தேவனுடைய ராஜ்யத்திற்குள் பிரவேசிக்க முடியும்” எனக்கூறினார்கள் (அப்.14:22).

 

மேலும் இயேசு கூறும்போது, “வீட்டு எஜமானையே பெயெல் செபூல் எனக் கூறியிருந்தால், அவன் வீட்டாரை அப்படிச் சொல்வது அதிக நிச்சயமல்லவா?” எனக் கூறினார் (மத்தேயு.10:25). பார்த்தீர்களா, இந்த அடையாளங்களை (நிந்தைகளை) வைத்துதான் நாம் அவருடைய உண்மையுள்ள வீட்டாராய் இருக்கிறோமா அல்லது இல்லையா? என்பதை அறிந்துகொள்ள முடியும். என்னுடைய ஜீவிய காலத்தில் எத்தனையோ விசுவாசிகள் என்னைப் “பிசாசு" "பிசாசின் மகன்" “அசுத்தாவி பிடித்தவன்” “அந்திக்கிறிஸ்து” “வஞ்சிப்பவன்” “பயங்கரவாதி” “கொலைபாதகன்” “தியோத்திரேப்பு” என்றெல்லாம் கூறி அழைத்திருக்கிறார்கள். 'இவ்வாறு நாம்' இயேசுவின் வீட்டாராய் இனம் கண்டு சுட்டிக்காட்டப்படுவது நமக்குக் கிடைத்த மிகப்பெரும் பாக்கியமேயாகும்! இன்று யாரெல்லாம் ஆண்டவருக்கு உத்தமமாய் ஊழியம் செய்கிறார்களோ, அவர்கள் யாவருக்குமே இந்த நிந்தை அனுபவம் நிச்சயம் கிட்டியிருக்கும்!!

 

ஒரு மெய்யான தீர்க்கதரிசி, தன் “இனத்தாரால்” ஒருபோதும் கனம் அடையமாட்டான் என்று இயேசு கூறினார் (மாற்கு.6:4). எந்தவொரு மெய்யான தீர்க்கதரிசியும் அவனுடைய சொந்த இனத்தாரால் புறக்கணிக்கப்பட்டு கனவீனமுமடைவான்! இதைப்போலவே ஒரு மெய்யான அப்போஸ்தலனும் “தூஷிக்கப்பட்டு...... உலகத்தின் குப்பையைப் போலவும் எல்லாரும் துடைத்துப்போடுகிற அழுக்கைப் போலவும்..... கருதப்படுவார்கள்” என பவுல் கூறினார் (1கொரி.4:13),

 

துன்புறுத்தப்படுவதும், புறக்கணிக்கப்படுவதும், எத்தனையோ வல்லமையான தேவனுடைய ஊழியர்களுக்கு, அது தேவன் தியமித்த பங்காகவே இருந்திருக்கிறது!

 

இன்று, “சபையானது மகா உபத்திரவ காலத்திற்கு முன்பாக எடுத்துக்கொள்ளப்படும்” என்ற போதனை மிகப்பிரபல்யமாய் காணப்படுகிறது. இவ்வித போதனை ஏராளமான விசுவாசிகளின் மாம்சத்திற்கு ஆறுதலாய் இருக்கிறபடியால், இப்போதனையை மனமுவந்து ஏற்றுக்கொள்கிறார்கள். ஆனால் இயேசுவோ, மிகத்தெளிவாக மத்தேயு 24:29-31 வசனங்களில், மகா உபத்திரவம் முடிந்த பின்புதான், தன்னால் தெரிந்து கொள்ளப்பட்டவர்களை எடுத்துக் கொள்ளும்படி இயேசு திரும்ப வருவார் எனக்கூறினார். இந்த இயேசுவின் வசனங்களை ஒரு சிறுபிள்ளைகூட நன்றாய் விளங்கிக்கொள்ள முடியுமே!

 

புதிய ஏற்பாட்டின் முழுபகுதியிலும், ஒரு வசனம்கூட சபையானது “மகா உபத்திரவத்திற்குத் தப்பித்து எடுத்துக் கொள்ளப்படும்” என போதிக்கவே இல்லை! ஆனால் வேத வசனத்திற்கு வேற்றுமையான இந்தப் போதகம், சுமார் 1800- ஆம் ஆண்டில் இங்கிலாந்து தேசத்தில் சில மனிதர்களால் ஏற்படுத்தப்பட்டதேயாகும்.

 

நாமோ நம் தேசத்திலுள்ள சபையை, வரப்போகும் உபத்திரவத்திற்கு இப்போதே ஆயத்தம் செய்கிறவர்களாய் இருக்க வேண்டும்!

 

14) தேவன் ஏற்றுக்கொண்டயாவரையும், நாமும் ஏற்றுக்கொள்ள வேண்டும்:

 

“தேவன் தமது சித்தத்தின்படி அவயவங்கள் ஒவ்வொன்றையும் சரீரத்திலே வைத்தார்...... சரீரத்திலே பிரிவினை உண்டாயிராதபடிக்கு இவ்வாறு அமைத்திருக்கிறார்" 1 கொரி.12:18,25).

 

வெவ்வேறான நாடுகளில் வெவ்வேறான காலத்தில் “தனக்கென தூய்மையுள்ள சாட்சியை எழுப்பும்படி” தேவன் மனுஷர்களைத் தெரிந்து கொண்டிருக்கிறார். ஆனால் இந்த தேவ மனிதர்கள் மரித்த பின்போ, அவர்களைப் பின்பற்றி வந்தவர்கள், தங்கள் குழுவை மார்க்கக் கண்மூடித்தனம் (Cultistic) கொண்டதாயும், விசேஷித்த தனிக்குழுவாயும் மாற்றிவிட்டார்கள்!

 

ஆனால் கிறிஸ்துவின் சரீரமோ எந்த ஒரு குழுவைக் காட்டிலும், விசாலம் கொண்டதாகும்! இதை நாம் ஒருபோதும் மறக்கவே கூடாது, ஆகவே 'கிறிஸ்துவின் மணவாட்டி இன்று நாம் காணும் எத்தனையோ பல குழுக்களிலும் படர்ந்து காணப்பட முடியும்!

 

எனவேதான், ஆண்டவரால் ஏற்றுக்கொள்ளப்பட்டவர்கள் என நாம் அறியும் யாவரிடமும் நாம் ஐக்கியம் கொள்ள நாடவேண்டும். இவர்களில் அநேகர், சில வேதவசனங்களுக்கு மாறுபாடான வியாக்கியானம் கொண்டிருக்கிறபடியால், அவர்களோடு சேர்ந்து நாம் ஊழியம் செய்திட முடியாதவர்களாய் இருக்கக்கூடும். இருப்பினும் ஆண்டவர் அவர்களை ஏற்றுக்கொண்டிருப்பதை நாம் அறிவதினிமித்தமாய், அவர்களோடு ஐக்கியம் கொள்ள நாடவேண்டும்!

 

15) எந்த மனிதனையும் கனத்தோடு நடத்தவேண்டும்:

 

“நம் நாவினாலே தேவனுடைய சாயலின்படி உண்டாக்கப்பட்ட மனுஷனை சபிக்கிறோம்.... என் சகோதரரே இப்படியிருக்கலாகாது” என வாசிக்கிறோம் (யாக்கோபு 3:9,10),

 

ஒரு மனிதனிடத்தில் நாம் பேசும் வார்த்தையோ அல்லது செயலோ அவனுடைய மதிப்பைக் குறைப்பதாயிருந்தால், அந்த வார்த்தையும், செய்கையும் தேவனிடத்திலிருந்து உண்டானதல்ல! பிறரை அற்பமாய் எண்ணி தரம் குறையச் செய்வதை, சாத்தானே எப்போதும் நாடுகிறான்!! ஆனால் நாமோ “யாவருக்கும் சாந்தத்தோடும் வணக்கத்தோடும்” பேசும்படியே கட்டளையிடப்பட்டிருக்கிறோம்(பேதுரு 3:15). அவர்கள் நம்முடைய மனைவியாகவோ அல்லது நம்முடைய பிள்ளைகளாகவோ அல்லது வயது குறைந்தவர்களாகவோ அல்லது பிச்சைக்காரர்களாகவோ அல்லது சத்துருக்களாகவோ.... இருந்தாலும், நாம் சாந்தத்தோடும் வணக்கத்தோடும் அவர்களிடம் பேச கற்றுக்கொள்ள வேண்டும்!

 

இவ்வாறாக எல்லா மனுஷரையும் நாம் மிகுந்த கனத்துடன் நடத்த வேண்டும். உதாரணமாய், ஒரு ஏழை சகோதரனுக்கு ஏதாகிலும் அன்பளிப்புக் கொடுத்தால், அதைக் கொடுக்கும்போது, ஒரு மனிதனாயிருக்கும் அவனுடைய கனத்தைப் பறித்துக்கொள்ளாமல் கொடுத்திட வேண்டும். அந்த ஏழை சகோதரனுக்கு நாம் கொடுப்பது ஒரு “தர்ம பிரபு” கொடுப்பதைப்போல் கொடுக்காமல், அவனுடைய சகோதரனாய் நம்மைப் பாவித்தே கொடுத்திட வேண்டும்!

 

16) நம்முடைய தேவைகளை, தேவனிடமே தெரியப்படுத்த வேண்டும்:

 

“தேவன் தம்முடைய ஐசுவரியத்தின்படி நம் குறைவையெல்லாம் கிறிஸ்து இயேசுவுக்குள் மகிமையிலே நிறைவாக்குவார்” (பிலிப்பியர் 4:19).

 

முழுநேர கிறிஸ்தவ ஊழியர்கள் தங்கள் எல்லா பொருளாதாரத் தேவைகளுக்கும் தேவனையே நம்பியிருக்க வேண்டும். மேலும் அவ்விதத் தேவைகளை தேவனாகிய கர்த்தர் ஒருவருக்கு மாத்திரமே தெரியப்படுத்த வேண்டும்! காரியம் இவ்வாறு செம்மையாய் நடந்துவிட்டால், அவர்களுடைய தேவையை சந்திக்கும்படி யாராவது தம்முடைய பிள்ளைகளை ஏவிவிடுவார். இதற்கு மாறாக, முழுநேர ஊழியர்கள் “தேவனிடத்தில் விசுவாசமாயிருந்து, மற்ற விசுவாசிகளிடத்திலும் அறிக்கை சமர்ப்பித்து” ஒருக்காலும் பிழைத்து வாழக்கூடாது. துரதிருஷ்டவசமாய் இந்த அவலநிலையில்தான் எண்ணற்ற முழுநேர ஊழியர்கள் வாழ்ந்துகொண்டிருக்கிறார்கள்.

 

“சுவிசேஷத்தை அறிவிக்கிறவர்களுக்கு சுவிசேஷத்தினாலே பிழைப்புண்டாகுமென்று கர்த்தரும் கட்டளையிட்டிருக்கிறார்” (1 கொரி.9:14). ஆகவே, ஆண்டவருக்கு முழுநேர ஊழியம் செய்பவர்கள் மற்ற விசுவாசிகளிடமிருந்து அன்பளிப்புகள் பெறுவதற்கு அனுமதிக்கப்பட்டிருக்கிறார்கள். ஆனால், முழுநேர கிறிஸ்தவ ஊழியர்கள் ஒருபோதும் சம்பளம் வாங்கவே கூடாது! அன்பளிப்பிற்கும், சம்பளத்திற்கும் ஏராளமான வித்தியாசங்கள் உண்டு! அன்பளிப்புகளை உரிமையோடு எதிர்பார்த்திட முடியாது..... ஆனால் சம்பளத்தை உரிமையுடன் எதிர்பார்த்திட முடியும்!! இன்று ஏராளமான கிறிஸ்தவ ஸ்தாபனங்களும், அதன் கலாச்சாலைகளும் பின்மாற்ற நிலைக்குள் இருப்பதற்கு “இந்த சம்பள அடிப்படையே” காரணமாகும்!

 

முழுநேர ஊழியர்கள் அன்பளிப்புகள் வாங்கலாம் என்றிருந்தாலும், அவர்கள் தங்கள் தனிப்பட்ட அல்லது குடும்ப உபயோகத்திற்காகத் தங்களைக் காட்டிலும் ஏழ்மையான ஜனங்களிடமிருந்து ஒருக்காலும் அன்பளிப்புகள் பெறக்கூடாது. அப்படியே அவர்கள் நமக்குக் கொடுத்துவிட்டாலும், அவர்களைக் காட்டிலும் ஏழையான ஜனங்களுக்கு அந்தப் பணத்தைக் கொடுத்துவிடவோ அல்லது ஆண்டவருடைய ஊழியத்திற்கென அந்தப் பணத்தை காணிக்கைப் பெட்டியில் போட்டுவிடவோ வேண்டும்!

 

பணவிஷயத்தைக் குறித்த கீழ்காணும் “பத்துக் கட்டளைகளை” எல்லா முழுநேர கிறிஸ்தவ ஊழியர்களும் கவனத்துடன் பின்பற்றி விட்டால், ஆண்டவருடைய நாமம் எப்போதும் அவர்கள் மூலமாய் மகிமைப்படுவதாயிருக்கும்:

 

  1. உங்கள் பொருளாதார தேவைகளை தேவன் ஒருவருக்கு மாத்திரமே அல்லாமல், எந்த மனிதனுக்கும் ஒருபோதும் தெரியப்படுத்தாதீர்கள்! (பிலி.4:19).

 

  1. ஒருபோதும், அவிசுவாசிகளின் பணத்தை ஏற்றுக்கொள்ளாதீர்கள்! (3யோவான்.7),

 

  1. ஒருபோதும், எவ்வித அன்பளிப்பையும், எந்த மனிதனிடத்திலும் எதிர்பார்க்காதீர்கள்: (சங்கீதம்.62:5),

 

  1. ஒருபோதும், பிறருடைய பணம் 'உங்களைக் கட்டுப்படுத்தி' அல்லது உங்கள் ஊழியத்தைப் பாதிக்கும்படி அனுமதிக்காதீர்கள்!

 

  1. ஒருபோதும், உங்கள் ஊழியத்தை அங்கீகரிக்காதவர்களிடத்தில் பணத்தை ஏற்றுக்கொள்ளாதீர்கள்!

 

  1. ஒருபோதும். உங்களைவிட ஏழ்மையானவர்களிடமிருந்து, உங்கள் சொந்த அல்லது குடும்பத் தேவைகளுக்காக பணத்தை ஏற்றுக்கொள்ளாதீர்கள்!

 

  1. ஒருபோதும், உங்கள் பொருளாதார தேவைகளுக்காக, எந்த மனிதனையும் 'நம்பி சார்ந்து கொள்ள' அனுமதிக்காதீர்கள்!

 

  1. ஒருபோதும், நீங்கள் தேவனுடைய பணத்தைக் கையாளும் விதம், பிறர் உங்களை சந்தேகப்பட்டு குற்றப்படுத்துவதற்கு ஏதுவுண்டாக இடம் தராதீர்கள்!

(2கொரி.8:20,21).

 

  1. ஒருபோதும், நீங்கள் அன்பளிப்பாய் பணம் பெற்றவுடன் பரவசமடையாதீர்கள்!

 

  1. ஒருபோதும், நீங்கள் பணத்தை இழக்கும் நேரத்தில் சோர்வு அடையாதீர்கள்!

 

நான் மேற்கூறிய 16-சத்தியங்கள் உங்களை உற்சாகப்படுத்துவது மாத்திரமல்லாமல், ஒரு மாபெரும் விடுதலையை உங்களுக்குத் தந்திருக்கும் என்றே நான் நம்புகிறேன். நீங்கள் ஆண்டவரோடு இசைந்து நடப்பவராயிருந்து, “உங்கள் ஊழியத்திலும் உத்தமத்தோடு' இருப்பவராயிருந்தால், தயவுசெய்து இந்த சத்தியங்கள் யாவையும் உங்கள் அனுதின வாழ்க்கையில் மிகவும் கவனமாய் கைக்கொண்டு வாழ்ந்து விடுங்கள்!