தேவ மனிதர்கள் எங்கே?

எழுதியவர் :   சகரியா பூணன் வகைகள் :   ஆடவர்
    Download Formats:

அதிகாரம் 1
ஆவிக்குரிய திறன்கொண்ட புருஷர்கள்

கடந்த நூற்றாண்டுகளில், இருளின் வல்லமைகளைக் கவிழ்த்துப் போட எத்தனை புருஷர்களையும், ஸ்திரீகளையும் கொண்டு தேவன் செயல்பட்டார்? புறஜாதியார் மத்தியில் தன் நாமத்தினிமித்தம் ஓர் ஸ்திரமான மனமாற்றத்தை உருவாக்கிடவும், தன் மகிமைக்கு தூய சாட்சியை நிலைப்படுத்திடவும் எத்தனை புருஷர்களையும், ஸ்திரீகளையும் கொண்டு தேவன் செயலாற்றினார்? ஆம்...... இதுபோன்ற புருஷர்களும் ஸ்திரீகளும், காலச்சக்கரத்தில் அன்றும் இன்றும் மிகமிக கொஞ்சம் பேர்களாகவே இருந்தனர்! தேவனுடைய ஆசீர்வாதங்களைத் திரளானோர் பெற்றிருந்தபோதும், தேவனோடு உடன் ஊழியர்களாய் பாடுபட்டவர்களோ “மீதியாயிருந்த ஓர் சிறு குழுவினர்” மாத்திரமே ஆகும்!! கிதியோனின் 32,000 பேர்களைக் கொண்ட சேனையில், 300 பேர்களை மாத்திரமே தேவனால் பயன்படுத்த முடிந்தது. இதே விகிதாச்சாரத்தையே அன்று போலவே, இன்றும் சபைகளில் நாம் காண்கிறோம்! “அந்த மீதியாயிருக்கும்” சிறுகூட்டத்தில் பங்குபெறும் பொருட்டு, விலைக்கிரயம் செலுத்திட ஆயத்தமாயிருப்பவர்களும்

இன்று வெகு சொற்பமேயாகும்!!

 

இத்தகைய “ஆவிக்குரிய திறன் கொண்ட ”புருஷர்களைக் கண்டுபிடிக்கும்படியே, தேவனுடைய கண்கள் இந்த பூமியெங்கும் உலாவி தேடிக்கொண்டி ருக்கிறது என்பதை நான் உறுதியாய் விசுவாசிக்கிறேன்! இப்படிப்பட்டவர்களைப் பயன்படுத்தியே, இக்காலத்தில் தம் மகத்துவ நாமத்திற்கு ஏற்பட்டிருக்கும் இழிவை அகற்றி அதை மகிமைப் படுத்திட தேவனால் முடியும்!!

 

இன்றையநிலை போலவே சுமார் 2500 வருடங்களுக்கு முன்பு இஸ்ரவேலில் எகோவாவின் நாமத்திற்கு நிந்தை ஏற்பட்டபோது, தம் ஜனத்திற்கு தேவன் ஓர் செய்தியை அனுப்பினார் : “புறஜாதிகளின் கண்களுக்கு முன்பாக நான் உங்களுக்குள் பரிசுத்தம் பண்ணப்படுகையில், நான் கர்த்தர் என்பதை அவர்கள் அறிந்து கொள்வார்கள்!” (எசேக்கியேல் 36:23) என்பதே அந்த செய்தியாகும்! இந்த செய்தியில் “ஓர் வாக்குத்தத்தம்” இழையோடிச் சென்றபோதும்.... அந்த வாக்குத்தத்தமோ ஓர் நிபந்தனைக்கு உட்பட்டிருப்பதையும் நாம் காண்கிறோம். அதாவது, தன் சொந்த ஜனங்களுடைய ஜீவியத்தில் தேவனுடைய பரிசுத்தம் வெளிப்பட்டால் மாத்திரமே, புறஜாதி ஜனங்கள் எகோவா தேவனை “மெய் தேவன்” என அறிந்துகொள்வார்கள்!!

 

இன்றும், தங்கள் இருதயங்களில் பரிசுத்தமாகிடும் செயலை கர்த்தர் கிரியை செய்திட முழு இருதயமாய் தங்கள் இருதயத்தை திறந்து கொடுக்கும் புருஷர்களையும், ஸ்திரீகளையுமே தேவன் நோக்கிக் கொண்டிருக்கிறார்! இந்த பரிசுத்தமாகிடும் செயலை ஜனங்கள் காணும்போதுதான் அவருடைய நாமத்திற்கு கனமும் புகழ்ச்சியும் உண்டாயிட முடியும்.

 

கிறிஸ்துவுக்கு முன் ஒன்பதாவது நூற்றாண்டில் வாழ்ந்த ஓர் தேவ மனிதனின் சீர் உயர்ந்த ஆவிக்குரிய வாழ்க்கையை வேதப்புத்தகத்தில் நாம் காண்கிறோம். அந்த தேவமனிதனின் வாழ்க்கையை கவனிக்கும் போது, இன்றைய இருபத்தோராம் நூற்றாண்டில் வாழும் கர்த்தருடைய ஊழியர்களுக்குத் தேவையான பிரதானமான மூன்று குணாதிசயங்களை நாம் காணமுடியும்.


ஆம், தீர்க்கதரிசி எலிசாவே, இந்த சீரிய குணாதிசயங்களைக் கொண்ட மனுஷனாவான்! இந்த எலிசா நம்மைப் போலவே பாடுள்ள மனுஷனாயிருந்தும், தன்னுடைய சந்ததியில் தேவனுக்கென அத்தனை மகத்துவங்களை வெளிப்படுத்தினான். வேதவாக்கியங்கள் வழங்கியிருக்கும் அவனுடைய ஜீவியக் குறிப்பில், மூன்று நிகழ்ச்சிகள் மூலமாய் ஜனங்களின் உள்ளத்தை அவன் கவர்ந்து விட்டான்! அவன் வாழ்க்கைப் பின்னணியில் நிகழ்ந்த அந்த சம்பவங்களையே நாம் இப்புத்தகத்தில் தியானிக்க விரும்புகிறோம்!!

அதிகாரம் 2
பரிசுத்தம் நிறைந்த தேவமனிதன்

"பின்பு ஒருநாள் எலிசா சூனேமுக்குப் போயிருக்கும்போது, அங்கேயிருந்த கனம் பொருந்திய ஒரு ஸ்திரீ அவனை போஜனம்பண்ண வருந்திக் கேட்டுக்கொண்டாள்; அப்படியே அவன் பயணப்பட்டு வருகிறபோதெல்லாம் போஜனம் பண்ணும்படி அங்கே வந்து தங்குவான். அவள் தன் புருஷனை நோக்கி: இதோ, நம்மிடத்தில் எப்போதும் வந்துபோகிற தேவனுடைய மனுஷனாகிய இவர் பரிசுத்தவான் என்று காண்கிறேன் என்றாள்” (2 இராஜாக்கள் 4:8,9),

 

இவ்வாறு கர்த்தருடைய ஊழியனைக் குறித்து ஓர் மதிப்புள்ள விமர்சனம் செய்த இந்த ஸ்திரீ “ஐசுவரியம் கொண்ட செல்வாக்கு நிறைந்த ஓர் ஸ்திரீ” என்றே நாம் காண்கிறோம். ஆகவே வெறும் வெளித் தோற்றத்தை வைத்து ஏமாந்துபோகும் ஓர் பேதையான ஸ்திரீ அல்ல இவள்! எலிசா இவளுடைய வீட்டிற்கு அடிக்கடி சென்றிருக்கிறான்! இன்று, புறஜாதி ஜனங்கள் நம்மை உற்று நோக்குவதைப் போலவே இந்த தேவமனிதன் எலிசாவை தன் வீட்டிற்கு வந்த ஒவ்வொருநாளும் உற்று கவனித்தாள். இவ்வாறு பல நாட்களாய் கவனித்த பிறகு தான் “இவர் பரிசுத்தவான்” என்ற நிச்சயமான முடிவுக்கு வந்தாள்!!

 

அன்பார்ந்தவர்களே, இன்று நம்மை கவனித்துப் பார்ப்பவர்களும் இதேபோன்ற அறிக்கையை நம்மைக்குறித்து கூறமுடியாதிருந்தால், நாம் என்னதான் பேசினாலும் அல்லது நாம் என்னதான் செய்து சாதித்திருந்தாலும் ஒன்றும் பிரயோஜனமில்லை! இதனிமித்தம், நம்மை ஓரளவே அறிந்திருக்கும் மக்களை நாம் கவர்ச்சிக்க முயல வேண்டும் என நாம் கூறவில்லை.

 

ஆனால், நம்மை அடிக்கடி சந்திப்பவர்கள், நம்மோடு சேர்ந்து வாழும் ஜனங்கள், இன்னும் நம்மை நெருக்கமாய் அறிந்திருப்பவர்கள் ஆகிய இவர்கள் நம்மைக்குறித்து கூறும் அறிக்கை மிக முக்கியமானதேயாகும்.

 

மற்றவர்களிடத்தில் நம்மைக்குறித்து நாம் கொடுத்திருக்கும் பிரதிபலிப்புகள் என்ன? அவர்கள் நம்மை “சுறுசுறுப்பானவன்! கலகலப்பானவன்! பேச்சுத்திறன் கொண்டவன்! நல்ல வாட்ட சாட்டம் கொண்டவன்!” என்று மாத்திரமே எண்ணியிருக்கிறார்களா? இது போன்ற திறமைகள் “ஒரு மார்கெட் விற்பனையாளருக்கு” மிகவும் அவசியமேயாகும். ஆனால் நாமோ “ஓர் சேல்ஸ்மேன்” (SALESMAN) ஆக அழைக்கப்படவில்லையே!! ஆம், பரிசுத்தவானாக, பரிசுத்த வாட்டியாக தேவனுக்கென்று வாழ்வதற்கே நாம் பிரதானமாய் அழைக்கப்பட்டிருக்கிறோம்!

 

நம்முடைய சபைகளிலும், கிறிஸ்தவ ஸ்தாபனங்களிலும் நமக்கு ஏராளமான பிரசங்கிகளும், பாடகர்களும், வேதபண்டிதர்களும், நிர்வாகத் திறமையாளர்களும் இருக்கிறார்கள். இவர்கள் ஒவ்வொரு வருக்காகவும் தேவனுக்கு நன்றி! ஆனாலும். . . நம்மிடத்தில் பரிசுத்தம் நிறைந்த தேவமனிதர்கள் இருக்கிறார்களா? இது ஒன்றே நமக்கு இப்போது முக்கிய கேள்வியாயிருக்கிறது. ஆம், பரிசுத்தம் நிறைந்த புருஷர்களும், பரிசுத்தம் நிறைந்த ஸ்திரீகளும் நம்மிடத்தில் இருந்தால் மாத்திரமே, மெய்யான எழுப்புதல் தோன்றிட முடியும்!

 

நம் இருதயத்தில், 'நாம் எவ்வித ஜனமாயிருக்க மெய்யாகவே வாஞ்சிக்கிறோமோ அவ்வித ஜனமாகவே நாம் மாறிவிடுவோம்' என்ற பழமொழி மிகவும் உண்மையானதாகும். அவ்வாறு நாம் அனைவருமே தேவனுடைய பரிசுத்தவானாகவும், பரிசுத்த ஸ்திரீயாகவும் மாறுவதற்கு தீராத ஏக்கம் கொண்டுவிட்டால். ... அந்த, ஏக்கத்தை காணும் தேவன் “நாம் விரும்பிய வண்ணமாகவே மாறும்படி” நமக்கு பதில் தருவார் என்பது அதிக நிச்சயமாகும். ஆகவே இன்று நான் பரிசுத்தவானாக இல்லையென்றால் அதற்கு ஒரே காரணம், நம் இருதயத்தின் ஏக்கம் வேறு ஏதோ ஒன்றின்மேல் இருக்கிறது என்பதே அர்த்தமாகும்! ஒருவேளை, நம்முடைய சுறுசுறுப்பில், நமது நிர்வாக திறமையில் சுய-திருப்தி கண்டவர்களாகக்கூட நாம் இருந்திருக்க முடியும். “எதைக்காட்டிலும் பரிசுத்தம் ஒன்றே எனது விருப்பம்” என சொல்லுவது மிக எளிது. ஏனெனில், அப்படி சொல்லுவதுதான் மற்றவர்கள் கேட்பதற்கு நன்றாயிருக்கிறது என நாம் அறிந்திருக்கிறோம்!! ஆனால், ஏசாயா மற்றும் எசேக்கியேல் தீர்க்கதரிசிகளின் நாட்களில் வாழ்ந்த தேவ ஜனங்களைப் போலவே நம்முடைய இருதய விருப்பமும், நம் உதட்டின் அறிக்கையும் ஒன்றுக்கொன்று கிழக்கிற்கும் மேற்கிற்கும் உள்ள தூரம் போல் அல்லவா இருக்கிறது! (ஏசாயா 29:13; எசேக்கியேல் 33:31).

 

நாம் ஒரு ஆசீர்வாதத்தையோ அல்லது பல ஆசீர்வாதங்களையோ பிரசங்கிக்கலாம் அல்லது சற்று கூடுதலாக கடந்தகால அனுபவங்களின் சாட்சியையும், வல்லமையான ஏட்டின் வடிவில் பரிசுத்தத்தையும் பிரசங்கிக்கலாம்! ஆனால், இவை அனைத்தும் “மெய்யாகவே வாழும் பரிசுத்தத்திற்கு” ஒருக்காலும் இணையாகாது! அதுவே, மாயமற்ற “மெய்யான பரிசுத்தம்” என எபேசியர் 4:24 கூறுகிறது.

 

நம் இந்திய தேசத்தில், கிறிஸ்தவர் அல்லாத நண்பர்களிடத்தில்கூட கற்பு ஒழுக்கத்தின் தரம் சிறந்ததாய் இருப்பதை நாம் அறிந்திருக்கிறோம். அவ்வாறிருக்க, அவர்களுடைய மதம் போதிக்கும் பரிசுத்தத்தின் தரத்தைவிட கீழான தரத்தை நம்மிடத்தில் அவர்கள் கண்டால், அவர்கள் எப்படி ஆண்டவராகிய இயேசுகிறிஸ்துவிடம் ஈர்க்கப்பட முடியும்? இன்றும்கூட, அநேகம் கிறிஸ்தவர்களைக் காட்டிலும் கிறிஸ்தவர் அல்லாத பக்தர்கள் அதிகளவு உண்மையும், நேர்மையும் உள்ளவர்களாய் இருப்பதை நாம் காண்பது மிகுந்த வருத்தத்தையே தருகிறது! இந்நிலை குறித்து நாம் வெட்கம் அடைந்து, நம் தேவனுக்கு முன்பாக நம்மைத் தாழ்த்தி, முகுங்குப்புற விழுந்து அவருடைய இரக்கத்திற்கு கெஞ்சுவோமாக!

 

பரிசுத்தம் நிறைந்த புருஷர்களும், ஸ்திரீகளும் நம் சபைகளில்.... குறிப்பாக நம் கிறிஸ்தவ தலைவர்களின் மத்தியில் காணப்பட மிகுந்த தேவையாயிருக்கிறது! இந்த தேவை பூர்த்தி செய்யப்படாமல், நம் தேசத்தை கிறிஸ்துவுக்காய் ஆதாயம் செய்திட நாம் எடுக்கும் அனைத்து முயற்சிகளும் வீணான முயற்சிகளேயாகும்!!

 

“தேவனுடைய ஆவியினால் நாங்கள் நிரப்பப்பட்டவர்கள்” என நம்மில் அநேகர் கூறிக்கொள்கிறோம். ஆனால், நம்மை நிரப்பியிருக்கும் அந்த ஆவியானவருக்குப் பெயர் “பரிசுத்தாவி" என்பதையும், அவருடைய மிகப்பிரதான ஊழியம் நமக்கு வரங்களைத் தருவதல்ல... நம்மை பரிசுத்தமாக்குதலே அவருடைய பிரதான ஊழியம் என்பதையும் அநேகர் மறந்துவிட்டார்கள்!

 

தேவ சிங்காசனத்தின் தரிசனத்தை ஏசாயா கண்ட மாத்திரத்தில், சிங்காசனத்தை சூழ்ந்திருந்த சேராபீன்கள் “சர்வவல்லவர், சர்வவல்லவர், சர்வவல்லவர்” என்றோ “இரக்கம் மிகுந்தவர், இரக்கம் மிகுந்தவர்” என்றோ கூறவில்லையே! மாறாக, தேவனாகிய கர்த்தர் “பரிசுத்தர், பரிசுத்தர், பரிசுத்தர்” என்றே வான் எதிரொலிக்க முழங்கினார்கள்! இந்த மகா தரிசனத்தைக் கண்ட யாதொருவனும், இத்தனை மகா பரிசுத்தம் கொண்ட தேவனுக்கு ஊழியனாய் சேவிப்பது எளிதான காரியமல்ல என்பதை ஆழமாய் உணர்ந்து கொள்ளுவான்!

 

மகா உன்னதரும், மகத்துவம் கொண்டவரும் “பரிசுத்தர்” என்ற பெயருடைய வருமானவருக்கு பிரதிநிதியாய் நின்றிட அழைக்கப்பட்ட ஒருவனுக்கு அவனுடைய வாழ்க்கையில் "பரிசுத்தம்” என்பது உடனடித் தேவையாகும்!

 

நம்முடைய தேவன் அளவிற்கடங்கா மகா பரிசுத்தர் என்ற உண்மை, நம் ஜீவியத்தில் பரிசுத்தமாய் வாழ்வதற்கு நம்மை அதிகளவு ஊக்குவிப்பதாக இருக்க வேண்டும். நம்மை தேவன் பயன்படுத்த வேண்டும் என்ற காரணத்திற்காக மாத்திரமே நாம் பரிசுத்தத்தை நாடினால், நம் நோக்கம் சுயநலம் கொண்டதேயாகும். அவர் நம்மை உபயோகித்தாலும் அல்லது உபயோகிக்காவிட்டாலும் ஒரு பொருட்டல்ல, நாமோ நம்முடைய தேவன் பரிசுத்தராயிருப்ப தினிமித்தமே நாமும் அவரைப்போல் பரிசுத்தமாயிருப்பதற்கு விரும்ப வேண்டும்!

 

இந்த எலிசா எங்கெல்லாம் சென்று யாரிடமெல்லாம் தொடர்பு கொண்டாரோ, அவர்கள் எல்லாரிடத்திலும் “இவர் ஒரு பரிசுத்தவான்” என்ற உணர்வை ஏற்படுத்திவிட்டார். ஜனங்கள் அவருடைய செய்திகளை மறந்திருக்கலாம்! அவர் முக்கியப்படுத்தி விளக்கிய “மூன்று குறிப்பு” பிரசங்கங்களையும் மறந்திருக்கலாம். . ஆனால், அவருடைய ஜீவிய சாட்சியை அவர்களால் மறக்க முடியவில்லை! இது நமக்கு எவ்வளவு பெரிய சவாலாக இருக்கிறது!

 

நயமாய் பிரசங்கிப்பதைக் காட்டிலும், நேர்த்தியாய் வேதாகமத்தை விளக்குவதைக் காட்டிலும், ஊழிய நிர்வாகத்தில் திறமையுள்ளவர்களாய் இருப்பதைக் காட்டிலும்...... நாம் “தேவனுடைய பரிசுத்த வானாய்” இருப்பதையே அதிக அதிகமாய் விரும்ப வேண்டும்!

 

இதுபேன்ற பரிசுத்தவான்கள் பதித்துச் சென்ற வாழ்க்கையை ஜனங்கள் தங்கள் ஞாபகத்திலிருந்து அவ்வளவு எளிதில் அழித்துவிட முடியாது!

 

நம்முடைய தேசத்தின் பல இடங்களுக்கும் நான் சென்றிருக்கிறேன். அற்புதமான வரங்களும், திறமைகளும் கொண்ட கிறிஸ்தவ தலைவர்களையும், மிஷனரிகளையும் நான் சந்தித்திருக்கிறேன்! தலைசிறந்த மேடைப் பேச்சாளர்களையும், கூட்டத்தை தன்பால் கவர்ந்திழுக்கும் பிரசங்கிகளையும் கண்டிருக்கிறேன்! ஆனால், “இவர் மெய்யாகவே தேவனுடைய பரிசுத்தவான்!” என நான் வியந்து கண்ட மனிதர்களோ வெகு சொற்பமானவர்களேயாவர்!! இவ்வாறு நான் கணக்கிட்டது தவறாக இருக்குமென்றே நம்புகிறேன். ஆனால் நான் கண்ட இக்கணக்கீடு சரியாக இருக்குமோ என்றே அஞ்சுகிறேன்!!

 

ஒரு மனிதனை தேவன் தன்னுடைய ஊழியத்தில் வல்லமையாய் பயன்படுத்துவதைக் கண்டு. .. அந்த மனுஷன் பரிசுத்தவான் என்பதற்கும் அவனுடைய வாழ்க்கை தேவனுக்குப் பிரியமாய் இருக்கிறது என்பதற்கும் “ஓர் அடையாளமாய்” நாம் ஒருபோதும் எடுத்துக்கொள்ள முடியாது! ஒரு சமயம் தன்னுடைய செய்தியைக் கொடுப்பதற்கு “ஒரு கழுதையை” தேவன் பயன்படுத்தினார்! அந்த கழுதையின் எஜமானாய் இருந்த “பிலேயாம் தீர்க்கதரிசி” கறைபட்டவனாயிருந்தும் கூட தேவன் அவனையும் பயன்படுத்தினார்!! இது போன்றவர்கள் ஊழியம் செய்யும் மக்கள் மீது தேவன் இரக்கமும், அன்பும் கொண்டவராயிருப்பதினிமித்தமே இவர்களை அவர் பயன்படுத்தினா ரேயல்லாமல், அந்த மனுஷருடைய ஜீவியத்தினிமித்தம் தேவன் மகிழ்ச்சி கொண்டிருந்தார் என நாம் அர்த்தம் கொள்ள வேண்டிய அவசியமில்லை!!

 

ஆகவே, கர்த்தருடைய வார்த்தையை கவர்ச்சியுடன் பிரசங்கிப்பதற்கு நாம் நிச்சயமாய் பரிசுத்தவானாகத்தான் இருந்திட வேண்டும் என்ற நிர்ப்பந்தம் இல்லை என நாம் அறிகிறோம்! ஆனால், திரைமறைவில் நடைபெறும் தேவனுடைய யுத்தத்தில் உடன் ஊழியராகவும், அவர் கட்டிக்கொண்டு இருக்கும் அசைத்திட முடியாத அல்லது அக்கினியில் எரிந்துபோகாத நித்தியத்திற்கும் நிலைத்திருக்கும் கிரியை நடப்பிக்கவும் நாம் “பரிசுத்தவான்களாய்தான்” இருந்திட வேண்டும்!!

 

நம்முடைய சபைகளில் வெகு குறைந்த பரிசுத்தவான்களும், பரிசுத்த ஸ்திரீகளும் இருப்பதற்குரிய காரணத்தை எனக்கு நானே கேட்டுப் பார்த்திருக்கிறேன். அதற்குரிய விடையை மூன்று காரணங்களில் கண்டேன். ஒருவேளை இதைவிட அதிகமான காரணங்களும் இருக்கக்கூடும்! ஆகிலும் நான் கண்ட இந்த மூன்று காரணங்களையே இங்கு விவரித்திட விரும்புகிறேன்.

 

1.கபடு :

 

இன்று எங்கும் ஏராளமாய் படர்ந்துவிட்ட நேர்மையற்ற "கபடான வாழ்க்கையே” ஒருவன் பரிசுத்தவனாக மாற முடியாததற்கு முதல் தடை என நான் நிச்சயித்திருக்கிறேன்! ஆகவே, நடைமுறையான பரிசுத்த ஜீவியத்திற்கு முதல்படியாய் இருப்பது சகல கபடு கொண்ட வாவிலிருந்தும், மாய்மாலத்திலிருந்தும் நாம் விடுதலை பெறுவதேயாகும். இவ்வாறு, தன் முழு இருதயத்தோடும் கபடு தன் ஜீவியத்தை விட்டு முற்றிலும் அகற்றுவதற்கு பிரயாசப்படாத ஒருவன் தேவனுடைய பரிசுத்தவானாய் மாறவே முடியா வெளிப்படுத்தின விசேஷம் 14:1-15 வசனங்களில் கூறப்பட்ட மீதியானவர்களிடம் “யாதொரு கபடும் காணப்படவில்லை.” என்றல்லவா கூறப்பட்டுள்ளது! நாம் எண்ணுவதை விட ஏராளமான கபடு நமக்குள் இருப்பதையே நாம் காண்கிறோம்! நாம் நேர்மையுள்ளவர்களாய் இருப்போமென்றால், நம்முடைய உண்மையான நிலையைவிட 'நம்மைக் குறித்த மிகச்சிறந்த அபிப்பிராயத்தையே மற்றவர்களுடைய மனதில் பதித்திட நாம் நாடுகிறோம்” என்ற அறிக்கையை நாம் எல்லோருமே கூறிட முடியும்! இக்கொடிய பழக்கத்தை நம்மை விட்டுத் துரத்தி அகற்றிட வேண்டியது அவசியமாயிருக்கிறது. மெய்யாகவே “பரிசுத்தவானாய்" மாறிட நாம் விருப்பம்

கொண்டிருந்தால், இக்கேடான பழக்கத்திற்கு விரோதமாய் ஓர் தொடர்ச்சியான யுத்தம் செய்து அப்பழக்கத்தை மரணத்திற்கு கொண்டு வர நாம் பேராவல் கொண்டிருப்போம்!!




நாம் உண்மையில் எவ்விதம் இருக்கிறோமோ அவ்விதமே பளிங்கின் தெள்ள தெளிவாய் காணப்பட நாம் பிரயாசப்பட வேண்டும். இவ்வாறு வாழ்வது அவ்வளவு எளிதான காரியமல்ல! “சகல கபடிலிருந்தும்” நாம் விடுதலையாக வேண்டுமென்றால், இந்த யுத்தத்தை நம் ஜீவகாலமெல்லாம் செய்திட வேண்டியதும் அவசியமாயிருக்கிறது. அப்படியிருந்தும், எழுப்புதலுக்கு இதுவே முதல் படியாகும்.

 

கபடிலிருந்து விடுதலையாகமல், எந்த ஸ்தலத்திலும் யாதொரு எழுப்புதலும் உண்டாகாது!

 

“எழுப்புதலுக்காக ஜெபிக்கும் நம் ஜெபங்களுக்கு தேவன் பதிலளிப்பார்” என கூறிக்கொண்டு, நம் ஜீவியத்திலிருந்து கபடை அகற்றிட யாதொரு உறுதியான தீர்மானம் கொண்ட முயற்சியும் நாம் எடுக்காதவர்களாக இருந்தால்... அது, நம்மை நாமே ஏமாற்றிக்கொள்வதாகும்!! 

 

ஓர் மெய்யான கிறிஸ்தவ ஐக்கியத்தின் வளர்ச்சிக்குத் தடையாக வருவது இந்தக் கபடேயாகும்! கிறிஸ்தவத் தலைவர்களுடைய, மிஷனரிகளுடைய இருதயங்களில் மனக்கசப்பும், மன்னித்திட முடியாத ஆவியும் மறைவாய் குடி கொண்டிருக்கிறதே! வெளித்தோற்றத்தில் வசந்தமான தோற்றமளிக்கும் இவர்களின் ஆவிக்குரிய தன்மைக்கு கீழாக பாதாளத்திற்குரிய இந்த தீமைகள் ஒளிந்து கிடக்கின்றன!! நாம் தேவனுடைய பரிசுத்தவான்களாய் மாறவேண்டுமென்றால், ஒளிந்துகிடக்கும் இந்த கபடுகள் வெளியரங்கமாக்கப்பட்டு, அவைகள் முற்றிலும் வெறுக்கப்பட வேண்டும்!!

 

கபடு, மாய்மாலம் ஆகிய பாவங்களையே வேறு எந்த பாவங்களைக் காட்டிலும் மிகக் கடுமையாக இயேசு கண்டித்துப் பேசினார். “பரிசேயர்களுடைய மாயமான புளித்தமாவைக் குறித்து எச்சரிக்கையாயிருங்கள்” என தன் சீஷர்களை இயேசு எச்சரித்தார். இந்தப் பாவம் ஆதி சபைகளில் தோன்றியபோது, தேவன் அதை கடுமையான விதத்தில் கண்டித்தார். இந்தப் பாவத்திற்கு காரணமாயிருந்த “தம்பதிகளான கொஞ்சம் புளித்தமாவு” எல்லா மாவையும் புளிக்க செய்துவிடாதபடி அவர்கள் உடனே மரித்து விழும்படி தேவன் செய்தார் (அப்போஸ்தலர் 5).

 

இதற்கு மாறாக, நாத்தான் வேலை சுட்டிக்காட்டி, “இதோ, கபடற்ற உத்தம இஸ்ரவேலன்” எனக் கூறிய இயேசுவின் சாட்சியை நான் பலமுறை மகிழ்வுடன் வாசித்து தியானித்திருக்கிறேன். இந்த பூமியில் நாம் விரும்பக்கூடியவைகளில் “இந்தப் புகழ்ச்சியைக் காட்டிலும்” மேலான புகழ்ச்சி வேறு உண்டோ என நான் வியப்படைகிறேன்! நம்மைக் குறித்தும் தேவன் இவ்வாறே புகழ்ந்துரைக்க முடியுமா? என்ற கேள்வியை நாம் கேட்டுப் பார்ப்போமாக! அநேகரைக் குறித்து தேவன் இந்த புகழ்ந்துரையை கூறமுடியாது என்றே எண்ணுகிறேன். அதற்கு காரணம், நம்முடைய சக மனிதர்களின் கண்களுக்கு மறைவாய் ‘மிக கவனத்துடன் நாம் மறைத்து வைக்கும் பாவங்களை' அவர் காண்கிறார் என்பதேயாகும்!!

 

ஆம், தன்னில் கபடில்லாத மனுஷன் எவனோ, அவன் மெய்யாகவே பாக்கியவான்!

 

2.கட்டுப்படுத்தும் ஒழுங்கு இல்லாமை :

 

இன்று நம் நாட்களில் பரிசுத்தம்குன்றியிருப்பதற்குரிய இரண்டாவது காரணம், நம்மை நாமே கட்டுப்படுத்தாத ஒழுங்கின்மையே ஆகும்! நம் சரீர உறுப்புகளில் பிரதானமாக காது, கண் மற்றும் நாக்கு ஆசிய இந்த சரீர உறுப்புகளில் கட்டுப்பாடு செய்வதற்கு புதிய ஏற்பாடு வலியுறுத்தி முக்கியப்படுத்தியிருக்கிறது. நாம் ஆவியினாலே சரீரத்தின் செய்கைகளை அழிக்காவிட்டால் ஒருபோதும் “ஆவிக்குரிய ஜீவனை” அனுபவித்திட முடியாது என ரோமர் 8:13-ம் வசனத்தில் பவுல் திட்டமாய் கூறினார். இந்த பவுல் தன் சரீரத்தை எவ்வளவாய் ஒடுக்கி கீழ்ப்படுத்தினார் என 1 கொரிந்தியர் 9:27-ல் நாம் வாசிக்கிறோம். பரிசுத்தமாகுதலின் அனுபவத்தில் எவ்வளவுதான் நாம் கடந்து வந்தாலும், நாம் தொடர்ந்து பரிசுத்தமாக இருக்க வேண்டுமென்றால், பவுலைப் போலவே நம் ஜீவியத்தின் கடைசி நாள் வரை நம் சரீரத்தை ஒடுக்கி கீழ்ப்படுத்த வேண்டியது அவசியமாயிருக்கிறது!!

 

எவ்வித சம்பாஷணைகளை கேட்க வேண்டுமென்பதில் நம் காதுகளை கட்டுப்படுத்த நாம் அறிந்தவர்களாயிருக்க வேண்டும்! வீண் பேச்சுக்களையும், புறங்கூறுதலையும் கேட்பதற்கு நம் நேரத்தை செலவழித்து விட்டு.... தேவனுடைய குரலையும் நம் காதுகள் கேட்டு விடும் என நாம் எதிர்பார்ப்பது சுத்த அபத்தமாகும்!

 

அதேபோல், நாம் எதைக் காண்கிறோம், எதை வாசிக்க வேண்டும் என நம் கண்களுக்கு கட்டுப்பாடு செய்வதும் நாம் வாழும் இந்நாட்களில் மிக மிக அவசியமாயிருக்கிறது. எண்ணற்ற மிஷனரிகளும், கர்த்தருடைய ஊழியர்களும் தங்கள் கண்களில் கட்டுப்பாடு இல்லாத பழக்கத்தினிமித்தம் விபச்சாரத்தில் வீழ்ச்சியடைந்திருக்கிறார்களே! இந்த பகுதியில் கட்டுப்பாடு இல்லாததினிமித்தம் ஏராளமானோர் தங்கள் சிந்தை வாழ்க்கையில் இன்று வரை தொடர்ச்சியாய் வீழ்ச்சியடைந்து கொண்டேதான் இருக்கிறார்கள். சங்கீதக்காரனைப் போலவே “மாயையைப் பாராதபடி நீர் என் கண்களை விலக்கி, உமது வழிகளில் என்னை உயிர்ப்பியும்” (சங்கீதம் 119:37) என்ற ஜெபம் நம்முடைய ஜெபமாயும் என்றென்றும் இருப்பதாக!

 

அதேபோல், நம்முடைய நாவும் பரிசுத்தாவியின் கட்டுப்பாட்டிற்குள் அடங்கியிருப்பதாயிருக்க வேண்டும். இன்று கிறிஸ்தவ சபைகளில் “ஆவிக்குரிய மரணத்தை” மிக வேகமாக பரவச் செய்வது “மனுஷனின் நாக்கு" என்றே நாம் கூறலாம்! ஏசாயா, தேவனுடைய பரிசுத்தத்தைத் தன் கண்களால் கண்ட மாத்திரத்தில் தன் நாவை பயன்படுத்திய விதத்தைக் குறித்து வெகுவாய் துக்கித்தான்! எரேமியா தீர்க்கதரிசிக்கு தேவன் கூறும்போது “நீ தீழ்ப்பானதினின்று விலையேறப்பெற்றதை பிரித்தெடுத்தால், என் வாய் போலிருப்பாய்” என அவன் தன் நாவை உபயோகிக்கும் விதத்தை எச்சரித்து புத்தி கூறினார் (எரேமியா 15:19).

 

இந்த தீர்க்கதரிசிகள் யாவரும் தங்கள் நாவை கவனயீனமாய் உபயோகப்படுத்திடவே முடியாது! ஏனென்றால் தங்கள் நாவில் கவனயீனமாய் இருந்துவிட்டால், “தேவனுடைய வாயாய் இருக்கும்" அந்த பொற்பாக்கியத்தை அவர்கள் இழந்துபோவார்களே! உபயோக மற்ற சம்பாஷணைகள், வீணான பரியாசங்கள், தூற்றுதல், புறங்கூறுதல்,குற்றம் தேடுதல் போன்றவைகளை அவர்கள் 'எளிதாய்' பேசிவிட்டு, எழுந்து சென்றுவிட முடியாது! ஏனெனில், இதினிமித்தம் தங்கள் அழைப்பையே இழந்துவிடுவோம் என்பது அவர்களுக்குத் தெரியும்! “இன்று நம் நாட்களில் யாதொரு தீர்க்கதரிசியும் இல்லையோ?” எனக் கூறும் நிலைக்கு இதுவே பிரதான காரணமாய் இருக்கக்கூடும்!

 

வாட்ச்மேன் நீ என்ற பரிசுத்தவான் 'உத்தம கிறிஸ்தவ ஊழியன்' என்ற புத்தகத்தில் கூறும்போது “ஒரு கிறிஸ்தவ ஊழியன் விழிப்புள்ள ஜீவியம் இல்லாமல், தன் நாவினால் இழிகாரியங்களை பேசுகிறவனாயிருந்தால், கர்த்தருடைய வார்த்தையைப் பேசுவதற்கும் தேவன் தன்னை உபயோகிப்பார் என எப்படி அவன் எதிர்பார்த்திட முடியும்? நம்முடைய உதடுகளில் என்றைக்காவது தம்முடைய வார்த்தையை தேவன் வைத்திருந்தால், அந்த உதடுகளை அவருடைய ஊழியத்திற்காக மாத்திரமே பயன்படும்படி விழிப்புடன் காத்துக்கொள்ள வேண்டியது அவன்மேல் விழுந்த கடமையல்லவா? நம் சரீரத்தின் ஓர் அவயவத்தை அவருக்கென ஒருநாளில்' பயன்படுத்திவிட்டு, அதே அவயவத்தை ‘நம் சொந்த இச்சைக்காக' பயன்படுத்துவது ஒருக்காலும் முடியாது! தேவனுக்கு முன்பாக ஒருமுறை ஒப்புக்கொடுக்கப்பட்டது அவருக்கே நித்திய காலமும் சொந்தமாகும்!!" எனக் கூறினார்.

 

ஒரு டாக்டர் நம் நாக்கைப் பார்த்தே நம் உடல்நலத்தை நிதானித்துவிடுவார்! அதைப்போலவே, ஆவிக்குரிய உலகத்திலும் நம்முடைய நாக்கை உபயோகிக்கும் விதத்தைப் பொறுத்து நம் ஆவிக்குரிய தன்மையை கண்டறிய முடியும் என யாக்கோபு கூறினார் (யாக், 1:26), இவ்வாறு “தன் நாவில் தவறு செய்யாதவனே பூரண புருஷன்!” (யாக்கோபு 3:2) என்ற அறிக்கையையும் தைரியமாகக் கூறினார்.

 

3.தேவனுக்கு காத்திருக்க நேரமில்லாமை :

 

இன்று நம் நாட்களில் பரிசுத்தம் குன்றியிருப்பதற்குரிய மூன்றாவது காரணம், நாம் தேவனோடு ஐக்கியப்படுவதற்கு நம் தனிமை நேரத்தைப் போதுமான அளவு செலவு செய்யவில்லை என்பதேயாகும். தன் வாழ்க்கையில் “தேவனோடு மகா பரிசுத்த ஸ்தலத்தில் அமர்ந்திருக்கும் நேரமே” மிக முக்கியமானதென ஒருவன் உறுதியான தீர்மானம் எடுக்காத பட்சத்தில், அவன் பரிசுத்தவானாய் மாறுவதும் சாத்தியமில்லை. இதுவே நம் ஜீவியத்தில் மேலோங்கிய முக்கியத்துவம் நிறைந்ததாகும்!

 

மலையின் மேல் தேவனோடு நாற்பது நாட்கள் தனிமையில் இருந்ததினாலேயே மோசேயின் முகம் பிரகாசித்தது! இவ்வாறு தன் தேவனை முகமுகமாய் அறிந்ததினிமித்தமே மோசே "பரிசுத்தவானாய்” திகழ்ந்தான். இவ்வாறே எலிசாவும் வாழ்ந்து வந்தான்! அவன் எப்போதெல்லாம் பேசுகிறனோ அப்போதெல்லாம் “யெகோவாவாகிய கர்த்தருக்கு முன் நிற்கிற நான். ..” என்றே தன்னை குறிப்பிட்டான் (2 இராஜாக்கள் 3:14; 5:16), தேவனை முகமுகமாய் காண்பதின் பொருள் என்னவென்று இந்த எலிசாவுக்குத் தெரியும்! இவ்வித அனுபவமே அவனை பரிசுத்தவானாய் உருவாக்கியது!!

 

நாம் வாழும் இக்கொடிய நாட்களில், அங்குமிங்கும் ஓடியாடிச் செய்யும் வேலைகள் ஏராளமாய் பெருகியதினிமித்தம் “இந்த அவசர கோலத்தில் நாமும் சிக்கி” தேவனோடு தனிமையில் இருப்பதற்கு நேரமே இல்லாத நிலைக்கு ஆளாகிட முடியும். இந்த தந்திரத்தின் மூலமாகவே “நம்முடைய ஆவிக்குரிய பசுமையை” பிசாசானவன் உறிஞ்சி விடுகிறான்! இவ்வாறு பற்பல கிரியைகளிலும், கமிட்டி-கூட்டங்களிலும் முன்னுரிமை தரும்படி செய்துவிட்டு “மகா பரிசுத்த ஸ்தலத்தை” நாம் புறக்கணித்திட சாத்தான் கிரியை செய்கிறான்!

 

'இயேசு எப்போதெல்லாம் மனுஷர்களை விட்டு விலகி பிதாவோடு தனித்திருக்கச் சென்றார்' என்பதை நான் பலமுறை தியானித்து அந்த தியானத்தினால் நான் சவாலடைந்திருக்கிறேன். ஒருசமயம், இடைவிடாத பிரசங்கக் கூட்டத்தின் முடிவிலும், அதேசமயத்தில் பல்லாயிரக்கணக்கான ஜனங்களின் போஜன தேவைகளை பூர்த்தி செய்த சுறுசுறுப்பான சமயத்திலும், “இயேசுவோ தன் பிதாவோடு தனித்திருக்கும்படி” ஒரு மலையின்மீது ஏறினார்! (மத்தேயு 14:23) மற்றொரு சமயம் சூரியன் அஸ்தமனமாகி, இரவு முழுவதும் வியாதியஸ்தர்களை சொஸ்தமாக்கும் ஊழியத்தில் ஈடுபட்டுவிட்டு... அதிகாலையில், இருட்டோடே எழுந்து ஜெபம் செய்வற்கென வனாந்தரமான தனி இடத்திற்கு சென்று விட்டார்! (மாற்கு 1:38). நம் யாரைக் காட்டிலும் அதிகமாய் ஓடி-ஆடி ஊழியம் செய்த தேவகுமாரனின் மாதிரி இதுதான்! அவருடைய இந்த மாதிரியின் வெளிச்சத்தில் “தேவனுக்குக் காத்திருந்து அவரோடு தனிமையில் நேரம் செலவழிக்காமல் இருந்துகொண்டே என்னால் எந்த ஊழியத்தையும் செய்திட முடியும்?" என நம்மில் யார் கூறிட முடியும்?

 

இவ்வாறு தன் தேவனுக்கு முன்பாக நிற்பதை இன்னதென்று எலிசா அறிந்து வைத்திருந்தபடியால், பாவத்தை எவ்வாறு அச்சமின்றி கடிந்து கொள்ள வேண்டுமென்பதையும் அறிந்திருந்தான்! இஸ்ரவேலின் ராஜாவைக் குறித்து தேவன் என்ன எண்ணியிருக்கிறார் என்பதை சிறிதேனும் மாற்றாமல், ராஜாவிடம் எலிசா அச்சமின்றி தெரிவித்தார்! தன்னுடைய உடன் ஊழியன் கேயாசி “பொருளாசைக்கு” இரையானதை முக முகமாய் கண்டித்துப் பேசினான்! இவை அனைத்தையும் செயலாற்றுகையில் எவ்வித மாயத்தை அல்லது உபாயத்தைக் கைக்கொண்டோ அல்லது அடிக்க வேண்டிய இடத்தில் அடிக்காமல் வெறும் புதரைச் சுற்றி அடித்துக் கொண்டோ செயலாற்றவிவ்லை!

 

பட்டும் படாமல் பேசுவதற்கும், சாதுரியமான விழிப்போடு பேசுவதற்கும் உரிய இடம் இருக்கத்தான் செய்கிறது. அவ்வித சமயங்களில் அவ்வாறு பேசுவது தவறில்லை! ஆனால் அதே சமயத்தில், உண்மையுள்ளவர்களாயிருந்து அச்சமின்றி பாவத்தைக் கடிந்துகொள்ள வேண்டியதும், இன்றைய மிகப்பெரிய தேவையாய் இருக்கிறது! இன்று இவ்வித உண்மையுள்ளவர்கள் மிகக் குறைந்து, பாவத்திற்கும், உலகத்திற்கும் ஒத்தவேஷம் தரிப்பது மிகப் பெரிய அளவில் கிறிஸ்தவ உலகில் பரவியிருக்கக் காரணம் என்ன? மனுஷர் புகழ்ச்சியை விரும்பி, அதனிமித்தம் யாரையும் மனம் நோகச் செய்துவிடக்கூடாது என்பதே காரணமாயிருக்கக்கூடும் என்றே நான் அஞ்சுகிறேன்! இதுபோன்ற 'மனுஷர் புகழ்ச்சி தேடும் விருப்பங்கள் ' தேவனுடைய சமூகத்தில் நேரம் செலவழித்து அவரிடமிருந்து தெய்வ பயத்தை கற்றுக்கொள்ளாத வேரிலிருந்தே தோன்றியது எனக் கூறலாம்!

 

நாம் தேவனுடைய தீர்க்கதரிசியாய் விளங்க வேண்டுமென்றால், தேவன் தன்னுடைய வார்த்தையில் நிலைநிறுத்திய தரத்தைக் குறைக்கும் சகல ஒத்தவேஷ கிரியைகளையும் மனஉறுதியுடன் எதிர்த்து நிற்க வேண்டியது அவசியமாயிருக்கிறது! இவ்வாறு, தேவன் எதற்கெல்லாம் எதிர்த்து நிற்கிறாரோ, அவைகளுக்கு நாமும் எதிர்த்து நின்றிடும் உறுதியான இடத்திற்கு நிச்சயமாய் வந்துவிட முடியும். இந்த உறுதியான நிலைக்கு நாம் தனிநபர்களாய் மாத்திரமல்ல, விசுவாசிகளைக் கொண்ட ஓர் சரீரமான சபையாயும் அந்த நிலைக்கு வந்துவிட முடியும்!!

 

சுவிக்ஷே ஊழியத்தில் நிற்கும் நாம் அனைவரும், இந்திய தேசத்தில் உள்ள நம் சபைகளுக்கு தீர்க்கதரிசன சத்தத்தை தொனிக்கத் தவறினால். . . தேவனுக்கு முன்பான நமது பொறுப்பிலிருந்து மாபெரும் வீழ்ச்சி அடைந்துவிட்டோம் என்பதே உண்மையாகும்!!

 

இவ்வாறு தேவனுடைய சபையில் அவர் எதிர்பார்க்கும் தரத்திற்கு குறைவுண்டாக்கும் பகுதிகளை 'தீர்க்கதரிசன வார்த்தைகளால்' நாம் வைராக்கியத்துடன் எதிர்த்து நின்று பேசும்போது சபையின் எண்ணிக்கை ஒருவேளை குறைந்திடக்கூடும்! ஆனால், தேவனோ எண்ணிக்கையை விட தரத்தில்தான் எப்போதும் ஆர்வம் கொண்டவராய் இருக்கிறார். தேவன் ஏற்படுத்திய இடுக்கமான பாதையை, நாம் ஒருக்காலும் விரிவாக்கிட முயற்சி செய்யவே கூடாது!

 

கடந்த காலங்களில், இதுபோன்றய மெய்யான தீர்க்கதரிசிகள் ‘தங்கள் நாட்களில்' தவறாய் புரிந்துகொள்ளப்பட்டு, ஜனங்களால் புறக்கணிக்கப்பட்டுமிருக்கிறார்கள்! இன்றும், யாரெல்லாம் தீர்க்கதரிசிகளாய் நிற்கிறார்களோ அவர்களுக்கும் இதே கதிதான் காத்திருக்கிறது!! இச்சமயத்தில் “கிறிஸ்தவ மிஷனரி ஐக்கியத்தை” ஸ்தாபித்த A.B.சிம்சன் என்ற தேவமனிதன் கூறிய ஞானமுள்ள வார்த்தைகள் நமக்கு மிகுந்த தைரியமூட்டுவதாய் இருக்கிறது. அவர் கூறினார் : “ஒரு மனுஷனின் மதிப்பைக் குறித்த உண்மையான அளவுகோல் எப்போதுமே அவனுடைய நண்பர்களின் எண்ணிக்கையை வைத்தே இருப்பதில்லை.... அவனுடைய எதிரிகளின் எண்ணிக்கையை வைத்தும் கணக்கிடப்படுகிறது! தன் காலத்தில் தேவனுக்கென முன்னோக்கிச் செல்லும் ஒவ்வொருவனும் தவறாய் புரிந்து கொள்ளப்பட்டு, திரளான உபத்திரவங்களும் அடைவது அதிக நிச்சயமாகும். ஆகவே, நம் பிரபல்யத்தை இழப்பதையும், தனியே கைவிடப்படுவதையும், சில சமயங்களில் உயிருக்கே ஆபத்து ஏற்படும் சூழ்நிலைகளையும், வெறுக்கப்பட்டு பொய்யாய் குற்றம் சாட்டி மார்க்க உலகத்திலிருந்தே ‘பாளையத்துக்குப் புறம்பாய்' தள்ளப்படுவதையும். - - நாம் எதிர்பார்த்தே இருக்க வேண்டும்” என கெம்பீரித்தார்!

 

இன்று தேவன் வெறும் பிரசங்கிகளை அல்ல, தேவனுடைய வார்த்தையை பழைய ஏற்பாட்டு தீர்க்கதரிசிகளைப் போலவே உத்தம இருதயத்தோடு பேசும் தீர்க்கதரிசிகளையே ஏக்கத்துடன் காண விரும்புகிறார்! அன்று வாழ்ந்த எலிசாவைக் குறித்து “கர்த்தருடைய வார்த்தை அவனிடத்தில் இருக்கிறது” (2 இராஜாக்கள் 3:12) எனக் கூறப்பட்ட அதே சாட்சியை உடையவர்களே இன்றும் தேவை!!

 

ஆனால், இதுபோன்ற ஊழியத்திற்கு யாதொரு குறுக்கு வழியும் இல்லை. தீர்க்கதரிசிகள், இன்றுள்ள “உடனடி-காபியைப்போல்” (Instant-Coffee) உருவாகுவதில்லை! இவர்களை வேதாகமக் கல்லூரி பயிற்சியினால் உருவாக்கிடவும் முடியாது! ஆம், மணிக்கணக்கில் தேவனுடைய சமூகத்திற்கு முன்பாக காத்திருப்பது என்ன என்பதை இவர்கள் நடைமுறையில் அறிந்திருக்க வேண்டும். அந்த இனிய சமயங்களில், தேவனுடைய மகிமையைக் கண்டு, அவருடைய சத்தத்தைக் கேட்டு, அவருடைய சாயலுக்கொப்பாகமாறுவதை அறிந்தவர்களே அந்த தீர்க்கதரிசிகள்!!

 

இருப்பினும், நாம் தீர்க்கதரிசிகளாய் தெரிந்துகொள்ளப்படுவதற்கு முன்பாக “ஓர் பரிசுத்தவானாய்” மாறுவதே நம்வாழ்வில் முதலாவது சம்பவித்திருக்க வேண்டும்.

 

எழுப்புதலுக்காக ஜெபித்தல் :

 

நாம் எல்லோருமே எழுப்புதலுக்காக ஜெபிக்கிறோம்! அது நல்லதுதான், ஆனால், நீங்கள் தொடர்ந்து எழுப்புதலுக்காக ஜெபிப்பதற்கு முன்பாக நீங்கள் தேவனுடைய பரிசுத்தவானாகவும், தேவனுடைய பரிசுத்தவாட்டியாகவும் மாறுவதற்குரிய விலைக்கிரயத்தை செலுத்த ஆயத்தமாயிருக்கிறீர்களா? என்ற கேள்வியை உங்களுக்குள் கேட்டுப் பாருங்கள்!

 

நாம் ஜெபிக்கும்பொழுது “உன் ஜெபத்தை நிறுத்து!” என நம்மைப் பார்த்து தேவன் சொல்லுவாரோ என நான் அஞ்சுவதுண்டு, உண்மைதான், தன் பிள்ளைகள் ஜெபிப்பதை தேவன் விரும்பாத நேரங்களும் இருக்கத்தான் செய்கிறது. ஒரு சமயம் யோசுவாவைப் பார்த்து “யோசுவா, நீ ஜெபிக்க வேண்டாம்! நீ ஜெபிப்பது வீணான நேரமேயாகும்!” என தேவன் கூறினார். யோசுவா, ஆகானின் பாவத்தை வெளிப்படுத்தி இஸ்ரவேல் ஜனத்தின் பாளையத்தை சுத்திகரிக்கும் வரை, அவன் ஜெபங்களைக் கேட்டிட தேவன் மறுத்துவிட்டார் (யோசுவா 7:10-13).

 

நாம் கிருபாசனத்தண்டையில் கிட்டிச் சேரும்போது, தேவன் நம் ஜெபத்தை இவ்வேளையில் கேட்கிறாரா? என்ற கேள்வியை நமக்குள் கேட்டுப்பார்க்க வேண்டியது மிகவும் அவசியம். ஏனெனில் அநேக சமயங்களில், ஜனங்களின் ஜெபங்களை தேவன் கேட்பதற்குகூட விரும்புவதில்லை. ஆம், நம் சகோதரனோடு முறிவடைந்த ஐக்கியத்தை நாம் இன்னும் ஒப்புரவாகவில்லை! சபையில் உள்ள ஐசுவரியவான்களுக்கும், செல்வாக்குடையவர்களுக்கும் நாம் தொடர்ந்து பாரபட்சமாகவே நடந்து, அவர்களுடைய பாவங்களை சுட்டிக்காட்டுவதற்கும் மறுக்கிறோம்! நம் ஜீவியத்தில் உள்ள மாய்மாலத்தையும், போலியான பாவனைகளையும் நம்மைத் தாழ்த்தி இன்னமும் அறிக்கை செய்திடவில்லை! நம்முடைய நாவுகளோ இன்னமும் கட்டுப்பாட்டை இழந்ததாகவேயிருக்கிறது! சொல்லப்போனால், மகா பரிசுத்த ஸ்தலத்தையே நாம் இன்னமும் கண்டடையவில்லை! "என்ன விலைக்கிரயம் செலுத்தியாகிலும் தேவனுடைய பரிசுத்தவானாய் அல்லது தேவனுடைய பரிசுத்தவாட்டியாய் நான் எப்படியும் மாறிட வேண்டும்!” என்ற ஏக்கத்திற்கு நம்முடைய இருதயங்கள் இன்னமும் வரவில்லை. காரியம் இவ்வாறிருக்க, நம்முடைய ஜெபங்களினால் என்ன பயன்? ஆகவே, நம்மிடம் முதலாவது காணப்பட வேண்டியதெல்லாம் “பரிசுத்தவானிடத்திலிருந்து புறப்படும் ஜெபமேயாகும்!” அந்த ஜெபம் மாத்திரமே மிகவும் பெலனுள்ளதாய் இருக்கிறது!! (யாக்கோபு 5:16),

 

ஆண்டவர் தாமே நம் இருதயங்களை ஆராய்ந்து அறிவாராக!

அதிகாரம் 3
அடிமையின் ரூபமான தேவமனிதன்...

ஒருசமயம், யூதாவின் ராஜாவாகிய யோசபாத் “நாம் கர்த்தரிடத்தில் விசாரிக்கும்படி கர்த்தருடைய தீர்க்கதரிசி ஒருவரும் இங்கே இல்லையா?” என்று கேட்டதற்கு, எலியாவின் கைகளுக்குத் தண்ணீர்வார்த்த சாப்பாத்தின்

குமாரனாகிய எலிசா இங்கே இருக்கிறான்! என்று இஸ்ரவேல் ராஜாவின் ஊழியக்காரரில் ஒருவன் மறுமொழியாகக் கூறினான்(2இரா 3:11). இங்கே “தீர்க்கதரிசி எலிசா” எவ்வாறு குறிப்பிடப்பட்டான் பார்த்தீர்களா? “எலியா தன் கைகளைக் கழுவுவதற்காக தண்ணீர் வார்த்தவன்” அல்லது ஒரு வேலைக்காரனின் கடமைகளைச் செவ்வையாய் செய்தவன் என்றே குறிப்பிடப்பட்டான். இன்றைய 20-ம் நூற்றாண்டு தரத்தின்படி ஒரு கர்த்தருடைய தீர்க்கதரிசியை இவ்வாறு அறிமுகப்படுத்துவது நிச்சயமாய் கௌரவமான முறை அல்ல என்பதையே நாம் அறிந்திருக்கிறோம். இன்றைய கூட்டத்தின் மேடைகளில், *மேற்கண்டவாறு” ஒரு ஊழியன் அறிமுகப்படுத்தப்பட்டால், நம்மிடையே காணப்படும் பெரும்பாலான பிரசங்கிகள் நிச்சயமாய் மனம்புண்பட்டுப் போவார்கள்!!

 

ஜனங்கள் தங்கள் கைகளைக் கழுவிக்கொள்ளும்படி தண்ணீர் வார்த்ததை மாத்திரம்தான் எலிசா செய்தானா? இதே எலிசா “யோர்தான் நதியை இரண்டாகப் பிளந்தான்!" "எரிகோவின் தண்ணீரினால் ஏற்பட்ட கொள்ளைநோயைத் தடுத்து நிறுத்தினான்!” இதுபோன்ற செயல்கள் யாவும் குறிப்பிடத்தக்க அபூர்வ செயல்கள் அல்லவா? ஆகிலும் அவனோ, “ஒரு வேலைக்காரனாகவே” இங்கு அறிமுகப்படுத்தப்பட்டான்!!

 

தனக்கு தரப்பட்ட “வேலைக்காரன்” என்ற பட்டத்தைக் குறித்து எலிசா எந்த சலனமும் அற்றவனாகவே காணப்பட்டான்.

 

அவனுடைய ஊழியத்தில் “எலியாவின் வேலைக்காரன்” என்பதையே ஜனங்கள் வெளிப்படையாகக் கண்டிருந்தபடியால், "அவன் ஒரு வேலைக்காரன்!" என்ற எண்ணம் ஜனங்கள் மனதில் அவ்வளவாய் பதிந்துவிட்டது!! ஆகவேதான், ராஜாவின் வேலைக்காரன்கூட எலிசாவைத் “தண்ணீர் வார்ப்பவன்!” என குறிப்பிட்டான்.

 

இன்று நாமும்கூட “பிறருக்கு வேலைக்காரர்களாய்” இருப்பதற்கே அழைக்கப்பட்டிருக்கிறோம். நம் குருநாதர் இயேசுவேகூட “தன் சீஷர்களின் கால்களைக் கழுவ தண்ணீர் ஈர்த்தவராகவே" காணப்பட்டார். இதை இயேசுவே குறிப்பிட்டுக் கூறும்போது, “நான் என கூறினார் (மத்தேயு 20:28). இந்த பூமியில் "ஓர் தலைமை ஊழியங்கொள்ளும்படி வராமல், ஊழியஞ்செய்யும்படிக்கே வந்தேன்!” ஸ்தானத்தை" விரும்பியவர்களைப் ராஜ்ஜியமோ, இந்த க பூமியிலுள்ள ராஜ்ஜியங்களின் மனோபாவத்திற்கு முற்றிலும் மாறுபட்டது ராஜ்ஜியத்தில் “தலைமையை” விரும்புகிறவர்கள், இந்த பூமியில் மற்றவர்களுக்கு வேலைக்காரர்களாகவே நிச்சயமாய் இருக்க வேண்டும் என ஆணித்தரமாகக் கூறிவிட்டார்!!

 

ஆகவே, கர்த்தருடைய ஒவ்வொரு ஊழியக்காரனும் எல்லா மனுஷர்களுக்கும் ஓர் வேலைக்காரனாகவே இருக்க வேண்டும். அவ்வாறு இல்லாத பட்சத்தில், “தேவனுடைய ஊழியக்காரன்!” என்ற கனத்தை அவன் நிச்சயமாய் இழந்துபோவான்!! ஒரு வேலைக்காரனுடைய சுபாவக்கிறது. எல்லாராலும் அறியப்பட்டு புகழடைய விரும்பும் நோக்கம். 2) மற்றவர்களை ஆளுகை செய்திடும் “தலைவா " வின் மனப்பான்மை (A bossy Attitute). ஆனால், இயேசுவிடமோ “இந்த இரண்டு” மனப்பான்மைகளுக்கும் முற்றிலும் நம் ஆண்டவர் எதிரிடையான மனப்பான்மை இருந்ததையே நாம் காண்கிறோம். ஆம், 1) அவர் தம்மைத்தாமே வெறுமையாக்கினார். 2) ஓர் அடிமையின் ரூபமெடுத்தார் (பிலிப்பியர் 2:7). இந்த இரண்டு திவ்ய குணாதிசயங்களை நாம் யாவருமே உற்று நோக்குவது நலம்!!

 

1.அங்கீகாரம் நாடும் விருப்பம் :

 

நாம் ஒருவேளை இவ்வுலகத்தில் பெரியவர்களாயும், பிரபல்யமானவர்களாயும் மாறும் விருப்பத்தைக் களைந்தவர்களாய் இருக்கக்கூடும். ஆனால் சுவிசேஷ - ஊழிய வட்டாரத்தில் எல்லோராலும் அறியப்பட்டவர்களாயும், அங்கீகரிக்கப்பட்டவர்களாயும் மாறும் விருப்பத்தையோ நாம் 'இரகசியமாய் நாடுகிறவர்களாய் இருக்கமுடியும்!! "இவர் ஒரு மாபெரும் எழுப்புதல் பிரசங்கி” அல்லது “பிரபல்ய வேதபண்டிதர்” அல்லது “ஒரு சிறந்த ஸ்தாபனத்தின் அல்லது

மிஷனரி இயக்கத்தின் கண்காணிப்பாளர்” இன்னும் இதுபோன்ற எந்த விருப்பமாயிருந்தாலும் அவைகளனைத்தும், இயேசுவின் ஆவிக்கு முற்றிலும் முரணானதேயாகும். இதுபோன்ற மாம்ஷீகமான விருப்பங்கள் நம் இருதயங்களில் மறைந்து கிடப்பதினாலேயே தேவன் “தன் பரிபூரணத்தின் நிறைவை” நம்மிடத்தில் பாய்ந்தோடச் செய்து மற்றவர்களுக்கும் அது பாய்ந்தோடச் செய்திட அவரால் முடியவில்லை!!

 

இன்றைய கிறிஸ்தவ வட்டாரங்களில், “எப்படியாவது பிரபல்யம் ஆகவேண்டும்” என்ற ஓர் ஆரோக்கியமற்ற வெறித்தன்மை காணப்படுவது ஓர் வேதனையான உண்மையாகும்.

 

இந்த கேடான விருப்பமே, நாம் பெற்றிருக்கும் கொஞ்சமான ஆவிக்குரிய தன்மைக்கும் “மரண - அடியை” கொடுத்துவிடுகிறது. இக்கொடிய நோய் எங்கும் பரவியிருக்கிறபடியால், நாம் தொடர்ச்சியான விழிப்போடு இந்த நோய்க்கு எதிராய் போராட வேண்டும். அப்படியில்லையென்றால், நாமே அறியாதவிதமாய் இக்கொடிய நோய் நம்மையும் தாக்கிவிடும்!

 

நம் நாட்களில் காணப்படும் கிறிஸ்தவத் தலைவர்களும், பிரசங்கிகளும் “பவுலுக்கு ஒப்பாய் இருப்பதை” என்றைக்கோ விட்டுவிட்டார்கள்! ஆம், பவுல் தன்னை இவ்வுலகத்தின் குப்பையைப் போலவும், எல்லாரும் துடைத்துப்போடுகிற அழுக்கைப்போலவுமே” எப்போதும் எண்ணியிருந்தார் (1 கொரிந்தியர் 4:13). ஆனால், இன்றைய கிறிஸ்தவ தலைவர்களோ “சினிமா நட்சத்திரங்களையும், மாண்புமிகு அமைச்சர்களையும் போலவே" சமமாய் காணப்படுகிறார்கள்! அவர்களைப் பற்றிய அறிமுக புகழாரம், புகைப்படங்கள், வீடியோ காட்சிகள்… ஆகிய அனைத்தும் அவர்களை வானத்தில் பறக்க வைத்து மகிமையின்மேல் மகிமை அடையும்படிச் செய்திருக்கிறது!? இதில் வெட்க்ககேடு யாதெனில் ‘இந்த தேவமனுஷர்கள்’  இந்த மகிமைகள் அனைத்தயும் பெறுவதற்கு மகா விருப்பம் கொண்டிருயிருக்கிறார்கள் என்பதுதான்!! கிறிஸ்துவ உலகில் தாங்களும் தலைவனாய் அங்கீகரிக்கப்படுவதற்கு தவியாய் தவிக்கிறார்கள்!! நம்மைக் குறித்தோ, நம்  ஊழியங்களைக் குறித்தோ “மற்றவர்கள்” பிரசித்தம் செய்வதை நாம் தடுக்க முடியாது என்பது உண்மைதான். பிரசித்தமாகிட நாமே விரும்பும் “ரகசிய விருப்பம்” இருக்கிறதே, அதுவே அவ்வித பிரபல்ய விருப்பத்திலிருந்து விடுதலையாக்குவராக!! பிறருக்குத் தண்ணீர் வார்த்திடும் “வேலைக்காரன்” என்ற விருப்பத்தைத் தவிர வேறு எந்த விருப்பத்திலிருந்தும் நாம் விடுதலை பெற்றிருக்க வேண்டும்.

 

இப்பூமியில் தன் பிரபல்யத்திற்கு இயேசு எப்போதும் விலகி ஓடினார். ஜனங்கள் அவரை ராஜாவாக்கப் பிடித்துக்கொண்டு போக மனதாயிருந்தபோது, இயேசுவோ அவர்களுக்கு விலகி ஓடி தன் பிதாவின் சமூகத்தில் தனிமையில் இருக்கும்படி சென்றுவிட்டார்! மனுஷர்களின் புகழார “கரகோஷத்தை” அவர் ஒருபோதும் விரும்பவே இல்லை!! இந்த பூமியில் தான் ஒரு V.I.P.ஆக மாறிட அவர் துளிகூட விரும்பியதில்லை!! (யோவான் 6:15), தன் பிதாவின் மகிமையை இப்பூமியில் பூரணமாய் வெளிப்படுத்திய இயேசுவேகூட “தன்னை மறைத்து” இப்பூமிக்குரிய புகழுக்கும், கனத்திற்கும் விலகி ஓடினார். அப்படியிருக்க “சாவுக்கீனமான” மானிடர்களாகிய நாம் எத்தனை அதிகமாய் விலகி ஓடவேண்டும்!! ஆகவே, கர்த்தருடைய ஊழியன் ஒருவன் உண்டென்றால், அவன் தன் எஜமானின் அடிச்சுவடுகளை நிச்சயமாய் பின்பற்றி நடந்திடுவான்!!

 

இவ்வித பிரபல்யமாகத் துடிக்கும் மதிகேட்டைப்போலவே, “எண்ணிக்கையை காட்டத் துடிக்கும்” இச்சையும் இன்றைய கிறிஸ்தவ உலகில் மலிந்து கிடக்கிறது!

 

பண்டைய நாட்களிலுள்ள “தலை - வெட்டி” காட்டுமிராண்டிகள் தலை வெட்டப்பட்டவர்களின் எண்ணிக்கையை “தலைமுடியோடு சேர்த்த அவர்களின் தோல்களை” எண்ணி அடுக்கி வைத்திருப்பார்கள்! அதுபோலவே, இன்றைய சுவிசேஷகர்களும் தலைகளையும், உயர்த்திய கைகளையும், தீர்மான அட்டைகளையும்...” எண்ணிப் பார்த்து அந்தத் தொகையில் மார்தட்டி இறுமாந்து போகிறார்கள். இவர்களின் விருப்பத்தைக் காணும் பிசாசானவன் அவர்களின் எண்ணிக்கை விளையாட்டை நன்றாய் விளையாட அனுமதித்து... தூர வழி விலகச் செய்து நடத்தி விடுகிறான்!!

 

இதை நீங்கள் நன்கு அறிந்துகொள்ள நான் கண்ட ஒரு உதாரணம் போதும் என்றே எண்ணுகிறேன். நம் இந்திய தேசத்தின் ஒரு பகுதியில், ஒருசமயம் சுவிசேஷ கூட்டங்கள் நடத்தப்பட்டு, அக்கூட்டங்களுக்கு பிரசித்தி பெற்ற சுவிசேஷகர்களும் அழைக்கப்பட்டார்கள் அக்கூட்டங்களில், திரளான ஜனங்கள் கரங்களை உயர்த்தினார்கள், தீர்மான அட்டைகளில் கையெழுத்திட்டார்கள்! இந்த 'கணக்கெடுப்பு உலகமெங்கும் உள்ள நாடுகளுக்கு பிரபல்யப்படுத்தப்பட்டு, அனைத்து தேசமக்களும் இங்கு வெடித்தெழும்பிய “எழுப்புதலுக்காக” தேவனைத் துதித்தார்கள்! சுமார் ஒரு வருடம் கழிந்த பிறகு, அந்த ஸ்தலத்தில் "தொடர் ஊழிய பொறுப்பிலிருந்த" சகோதரனை நான் சந்திக்க நேர்ந்தது. அப்போது, அங்குள்ள நிலைமையைக் குறித்து நான் விசாரித்தேன். அதற்கு அவர் "சகோதரனே, இங்குள்ள சபைகளின்

நிலைமை அப்படியேதான் குளிர்ந்து இருக்கிறது. தீர்மான அட்டைகளை வைத்து நான் சந்தித்த எல்லா மக்களுமே கிட்டத்தட்ட அதே தங்கள் பழைய நிலையில்தான் இருக்கிறார்கள்'' என்றார். அக்கூட்டங்களில் “உணர்ச்சிபூர்வமான பரவசம்" இருந்தது உண்மை தான். . ஆனால், நிரந்தர மாற்றம் ஏதும் ஏற்படவில்லை! சிலர், பல மைல்கள் பிரயாணமாய் வந்த பிரசங்கியை "ஏனடா ஏமாந்து போகச்செய்ய வேண்டும்?” என தங்கள் கரங்களை உயர்த்தினார்கள்! சிலர், “உங்கள் கூட்டத்தில்தான் நான் இரட்சிக்கப்பட்டேன்” என தெரிவித்து அந்த அயல்நாட்டு பிரசங்கியிடம் தங்களுக்கு ஏதாவது தொடர்பு ஏற்பட வாய்ப்பு உண்டாகுமோ என ஏங்கி தங்கள் கரங்களை உயர்த்தினார்கள்! சிலர், தாங்கள் இரட்சிக்கப்பட்டதாக மேடைக்கு வந்து, அந்த பிரபல்ய சுவிசேஷகனை “நெருக்கமாய் தரிசிக்க” தங்கள் கரங்களை உயர்த்தினார்கள்! - இதுபோன்ற லட்சணங்கள்தான் அந்த மாபெரும் எழுப்புதலின் கதையாய் இருக்கிறது!! இது நான் நேரில் கண்ட உண்மை, வெறும் கற்பனை அல்ல!!

 

மேற்கண்டநிலைதான் இவர்களின் 'தொகையெடுப்பு' ஊழிய வெற்றி! இதை வைத்து பிசாசானவன் ஏராளமானவர்களை மதியீனர்களாக்கிவிட்டான்! ஒரு சிலர்கூட இரட்சிக்கப்படவில்லை! ஒருவர்கூட பரிசுத்த வாழ்க்கைக்குள் பிரவேசிக்கவில்லை! இருப்பினும்.... சுவிசேஷகர்களும், கூட்ட - அமைப்பாளர்களும் அந்த ஊரில் ஏற்பட்ட "அற்புத எழுப்புதலுக்காக” அகமகிழ்ந்து கொண்டாடுகிறார்கள்! 

 

ஒருவேளை, அந்த கூட்டங்களில் தொடர்ச்சியாக ஒருவர்கூட கரம் உயர்த்தாதிருந்தால், ஒருவர்கூட தீர்மான அட்டை கையெழுத்திடாதிருந்தால் .... அந்த பிரசங்கியும், கூட்ட - அமைப்பாளர்களும் மிகவும் தாழ்த்தப்பட்டு தேவனுடைய முகத்தை உபவாசத்தோடு கூடிய ஜெபத்தில் தேடியிருப்பார்கள். அப்படி நடந்திருந்தால், உண்மையான ஆவிக்குரிய பலன் கிடைப்பதற்கு தேவன்  வழி உண்டாக்கியிருப்பார்!

 

ஆனால், இந்த நற்பலனை அவர்கள் பெறுவதைத் தவிர்ப்பதற்காகவே “ஊழிய வெற்றியில்” அவர்களை அகமகிழ்ந்திட சாத்தான் செய்து விட்டான். உண்மையில் ஒருவர்கூட பிசாசின் பிடியிலிருந்து விடுதலை பெறாதிருந்தும், ஏதோ பல்லாயிரக்கணக்கானோர் விடுதலை பெற்றது போன்ற கற்பனை - கனவில் அவர்களை மூழ்கச் செய்துவிட்டான்!!



இதுபோன்ற 'எழுப்புதல்' ஏமாற்று வேலையை பொது மக்கள் மத்தியில் மாத்திரமல்லாமல், விசுவாசிகள் மத்தியிலும் இன்று பிசாசு திறமையாய் சாதித்துக் கொண்டிருக்கிறான். தங்கள் சுய-சித்தத்தை உடைவதற்கு ஒப்புக்கொடாமல், தங்கள் ஜீவியத்தை மெய்யாகவே தேவனுக்கு அர்ப்பணிக்காமல்... இந்த விசுவாசிகள் பிரசங்கபீடத்திற்கு வந்து கண்ணீர்விட்டு அழுதுவிடுகிறார்கள்! இன்னும் சில விசுவாசிகள் பிரசங்கியிடம் வந்து “உங்கள் செய்திகள் அத்தனையும் எனக்கு மிகுந்த ஆசீர்வாதமாக இருந்தது!” என குழைகிறார்கள்! இதைக் கேட்ட பிரசங்கி "ஆஹா, நானும்கூட ஜான்வெஸ்லியைப்போல, சார்லஸ் பின்னியைப்போல மாபெரும் எழுப்புதல் வீரனாய் மாறிவிட்டேனே!!” என உள்ளூர ரகசியமாய் அகமகிழ்ந்து தன் ஊருக்குத் திரும்பிச் செல்கிறார். அதுமாத்திரமா? தன் ஊருக்குச் சென்று தன் ஊழிய -எழுப்புதல் அறிக்கையை மற்றவர்களிடம் பகிர்ந்து அதற்காக “கர்த்தரை ஸ்தோத்தரியுங்கள்!” என்ற தலைப்பில் “என்னை தேவன் எப்படியெல்லாம் பயன்படுத்தினார் பார்த்தீர்களா?” என மற்றவர்களுக்குத் தன்னை காட்ட விரும்பிய விருப்பத்தை ஆர்வத்துடன் நிறைவேற்றிக் கொண்டார்!!

 

இந்தப் பிரசங்கி ஓர் தனிமையான இடத்தைத்தேடி “ஓ தேவனே, நான் பிரசங்கித்த இந்த ஜனங்களை மெய்யாகவே விடுவியும்” என ஜெபித்தாரா? இல்லவே இல்லை!

 

அவர்கள் ஏற்கனவே விடுதலையாகி விட்டார்கள் என்றே எண்ணிக்கொண்டார். ஆகவேதான், கூட்டம் முடிந்ததும் அவர்களுக்காக ஜெபிப்பதை அசட்டை செய்துவிட்டார்! அவரோ, “தன்னுடைய எழுப்புதல் கூட்டங்களைப் பற்றிய” விளம்பர வேலையில் இப்போது சுறுசுறுப்பாய் ஈடுபாடு கொண்டிருக்கிறார்!!

 

இன்று இப்படித்தான் எண்ணற்ற கிறிஸ்தவ ஊழியர்கள் சத்துருவினால் முட்டாளாக்கப்படுகிறார்கள். அவர்கள் “உபதேசத்தில் உறுதி இல்லாமல், தாராள மனப்பான்மைக்குள்” சென்றதால் அல்ல, அவர்கள் விளம்பரத்திலும், தொகையீட்டிலும் ஆர்வம் கொண்டதினிமித்தமே” சத்துரு அவர்களை முட்டாளாக்கிவிட்டான்! இந்த சுவிசேஷகர்கள் தங்களை மற்றவர்களுக்கு முன்பாக ஆத்தும ஆதாய வீரர்கள்” என காட்டத் துடிக்கும் இச்சையை இந்தப் பிசாசு அறிந்து வைத்திருக்கிறான்! கமிட்டி - மெம்பர்களோ, தங்களை மற்றவர்கள் “கடும் பிரயாசத்தில் பலன் கண்டவர்கள்!” என மெச்சிக் கொள்ள வேண்டும் பேரார்வம் கொண்டிருப்பதையும் பிசாசு அறிந்திருக்கிறான். ஆகவேதான், தன் பேய்த்தனமான பலன்களை அவர்களில் அவன் சாதித்துவிடுகிறான்!! இவ்வாறு “தொகையீட்டில்” மேன்மை பாராட்டும் மிஷனரி இயக்கங்களிலும், ஸ்தாபன சபைகளிலும் இன்று பிசாசின் கை ஓங்கியே நிற்கிறது.

 

ஒருசமயம் தாவீது “இலக்கத்தை எண்ணிப்பார்த்து அதில் அகமகிழ்ந்தது” போன்ற நம் மாம்ஷீக சிந்தையைக் குறித்து நாம் இப்போது உணர்வடைந்து சீர்ப்படுவோமா? (2 சாமுவேல் 24). இவை அனைத்தும் “மேலோட்டமான - பொக்குகள்" என்பதைக் காண தேவன்தாமே நம் யாவருக்கும் மனப்பிரகாசத்தைத் தருவாராக! தேவனுடைய நற்பணியைப் பாதிக்கும் “இந்த உலகத்தின் விளம்பர ஆவியிலிருந்து” தேவன் நம்மை விடுவிப்பாராக! இக்கேடான மாம்ஷீக இச்சைகளிலிருந்து நாம் விடுதலையாகவில்லையென்றால், பிசாசானவன் நம்மை ஏதாகிலும் ஒரு வகையில் வஞ்சிக்கும் கொடுமையை நாம் விரைவில் சந்திக்க நேரிடும்!!

 

“பொது இடத்தில் சாட்சி சொல்வது” என் ஜீவியத்தில் நான் கண்ட மிகக் கஷ்டமான ஓர் பணியாகும். ஒரு பிரசங்கம் செய்வதைவிட, “சாட்சி சொல்வதற்கு நான் அதிகமாய் கஷ்டப்பட்டிருக்கிறேன்.” ஏனென்றால், நம் ஜீவிய சாட்சியோ அல்லது நம் ஊழிய சாட்சியோ கூறுகையில், அதில் நமக்கென சிறிதளவு மகிமையாவது எடுத்துக் கொள்ளாமல் பேசுவது மிகக்கடினம்!

 

நம்மில் ஒருவராகிலும், “தேவனுடைய மகிமையில்” முழுவதுமோ' அல்லது அதிக பட்சமோ' நமக்கென எடுத்துக் கொள்ள துணியமாட்டோம் என்றே நான் நம்புகிறேன். ஆனால் அதில் 5% அல்லது 10% மகிமையைத்தானே நமக்கென எடுத்துக் கொள்கிறோம்! “இத்தனை அரும்பாடுபட்ட எனக்கு இந்த குறைந்த அளவு கமிஷன்கூட வேண்டாமா?” என்றே நம் உணர்வுகள் நம்மை சமாதானப்படுத்த முயல்கிறது. காரியம் இவ்வாறாய் இருக்க, இன்றைய பெரும்பாலான சபைகளில் “இக்கபோத்" (தேவனுடைய மகிமை விலகிற்று!) என தேவன் எழுதிவிட்டது நம்மை ஆச்சரியப்பட வைத்திட அவசியமேயில்லை! ஆம், “தேவனுடைய மகிமையைத்” தொடுவதற்கு நாம் யாவரும் அச்சம் கொண்டிருக்க வேண்டும். நம் தேவன் "வைராக்கியம்” நிறைந்த தேவன், அவர் தன் மகிமையை குறைந்த சதவீதத்தில்கூட வேறொருவனுக்குத் தரமாட்டார்! (ஏசாயா 42:8).

 

இவ்வாறு நான் கூறுவதினிமித்தம், “நாம் ஒருபோதும் சாட்சி சொல்லவே கூடாது” என வலியுறுத்துவதாக நீங்கள் எண்ணிவிடக் கூடாது. நம் ஜீவியத்தின் மூலமாகவும், நம் ஊழிய பிரயாசங்களின் மூலமாகவும் தேவன் செய்தருளிய மகத்துவங்களை “ஏற்ற நேரத்தில்" பிறருக்கு கூறுவது மிகவும் சரியானதே ஆகும்! ஆனால், நாமோ தேவனுடைய நேரத்திற்கு அடங்கியிருக்க கற்றுக்கொண்டு, அவருடைய நேரம் வரும்போது மாத்திரமே அவருடைய கிரியைகளைப் பேசி. . . உடனே நம்மை மறைத்துக்கொள்ளவும், நம்மையே முழுவதும் மறந்துபோகிறவர்களாயும் இருக்க வேண்டும்!

 

பவுல் ஒருசமயம் மூன்றாம் வானத்திற்கே எடுத்துக் கொள்ளப்பட்டும், அந்த சம்பவத்தை 14-வருடங்களாய் யாரிடமும் சொல்லவில்லை. ஆனால், தன்னுடைய “அப்போஸ்தல அழைப்பை" நிரூபிக்க வேண்டிய தருணத்தில் மாத்திரமே அந்த சம்பவத்தைக் குறிப்பிட்டார். இருப்பினும், அதைக் குறித்த முழு விபரங்களையும் கூற மறுத்துவிட்டார் (2 கொரிந்தியர் 12:2).

 

தேவனுடைய மகிமையைக் கண்ட யாராயிருந்தாலும், அவர்கள் யாவருமே தங்கள் முகத்தை மூடிக்கொண்டார்கள் என்றே காண்கிறோம். தேவ அக்கினியில் பற்றி எரிந்த முட்செடிப் புதர் முன் நின்ற மோசேயும் தன் முகத்தை மூடினான். - - தேவனுடைய சிங்காசனத்தில் மகிமையைக் கண்ட சேராபீன்களும் தங்கள் முகத்தை மூடிக்கொண்டார்கள்! (யாத்திராகமம் 3:6; ஏசாயா 6:2). இவர்கள், மனுஷர்களால் தாங்கள் காணப்படவோ அல்லது அறியப்படவோ விரும்பவேயில்லை! ஆம், ஒருவன் தேவனுடைய சம்பூர்ண மகிமையைக் கண்டவனாயிருந்தால், அதை அவன் தன் விரல் நீட்டித் தொடுவதற்குகூட அஞ்சுவான்! தன் முகத்தைத் தானே மூடி மறைத்துக் கொள்வான்!! முற்றிலும் அவசியமான தருணத்தைத் தவிர, தன்னைப் பற்றியோ, தன் ஊழியத்தைப் பற்றியோ அவன் பேசவே மாட்டான்! அப்படியே பேசினாலும், எந்த ஆதாயமும் தனக்கென வந்துவிடாதபடி மிகுந்த தாழ்மையான அடக்கத்தோடுதான் பேசுவான். மாம்வீக விருப்பத்திற்குரிய “தேவனுக்கு தான் செய்த அர்ப்பணத்தைக் குறித்தோ" அல்லது “அற்புதமான தன் அனுபவங்களைக் குறித்தோ” அல்லது “அபூர்வமான தன் தியாகங்களைக் குறித்தோ” (சாட்சி கூறுவது போன்ற போர்வையில்!) கூட்டத்தில் பேசுவதற்கோ அல்லது ஒரு கிறிஸ்தவ பத்திரிக்கையில் பிரசுரிப்பதற்கோ அஞ்சி விலகி நிற்பான்!

 

இன்று கிறிஸ்தவ உலகில் நாம் காணும் மற்றுமோர் கொடிய நோய் யாதெனில், தலைமை ஊழிய ஸ்தானத்தை நாடும் ஓர் ஆரோக்கியமற்ற இச்சையே ஆகும்

 

நான் கப்பற்படையில் (NAVY) பணியாற்றியபோது, அங்குள்ள சிலர், தாங்கள் மேலான பதவியைப் பெறுவதற்கு “யாருடைய தோளின் மீது ஏறினாலும் அல்லது யாரைத் தங்கள் காலின் கீழ் போட்டு மிதித்தாலும்” அதையெல்லாம் குறித்து கடுகளவுகூட அக்கறையற்றிருப்பார்கள். “சே, இந்த காட்சிகள் போதுமடா!” என கப்பற்படையை விட்டு வெளிவந்த எனக்கு, இந்த கிறிஸ்தவ சுவிசேஷ ஊழிய உலகத்திலும் இவர்களைப்போலவே ஸ்தானத்தை இச்சித்து அதைப் பற்றிக்கொள்ள நாடுகிறவர்களை நான் கண்டு ஆச்சரியமும், வேதனையும் அடைந்தேன்! இக்கேடான கிறிஸ்தவர்கள் தாங்கள் சூப்பரிண்டெண்ட் ஆவதற்கும், மூப்பர் ஆவதற்கும், பொக்கிஷதாரர் ஆவதற்கும், கமிட்டி செயலாளராய் மாறுவதற்கும், திட்டங்கள் வகுத்து, தனக்கு ஆதரவாக மெஜாரிட்டி ஆட்களைத் திரட்டி... தவியாய் தவிக்கிறார்கள்!!

 

இவை அனைத்தும் இயேசுவின் ஆவிக்கு முற்றிலும் விரோதமானவைகளேயாகும்! தேவனுடைய மகிமையைக் கண்ட எவனும், இந்த உலகத்தின் புகழையோ அல்லது சுவிசேஷ - ஊழிய உலகத்திலுள்ள புகழையோ அடைவதற்கு ஓடும் அருவருப்பான சுண்டெலி - ஓட்டப் பந்தயத்தில் ஒருபோதும் தன்னை சேர்த்துக்கொள்ளவே மாட்டான்!! அவனோ, தான் கிறிஸ்து இயேசுவுக்குள் தேவன் அழைத்த பந்தயப் பொருளுக்காக (பரிசுக்காக!) இலக்கை நோக்கித் தொடர்வதிலேயே பேரார்வமும், சுறுசுறுப்பும் கொண்டவனாய் இருப்பான். இதைத் தவிர, பிறருக்கு தண்ணீர் வார்ப்பதற்கும், தரையைத் துடைப்பதற்கும் மாத்திரமே விருப்பம் கொண்டு... இந்த பூமியில் தன் தேவனை மகிமைப் படுத்துவதையே தன் பிரதான நோக்கமாய் கொண்டிருப்பான்!!

 

மனுஷருடைய கண்களுக்கு முன்பாய் மேன்மையாய் கருதப்படுபவைகள் அனைத்தும் தேவனுடைய கண்களுக்கு முன்பாய் மேன்மையாய் கருதப்படவில்லை என்ற உண்மையை நாம் மறந்துவிடவே கூடாது! இதைக் குறித்து A.W.டோசர் ஒருமுறை கூறியபோது, “இந்த கிறிஸ்தவ உலகை நான் 30 வருடங்களாய் கவனித்த பிறகு, புனிதம் கொண்ட பரிசுத்தமும், சபை - தலைமை ஸ்தானமும் ஒரே அர்த்தம் கொண்டதல்ல என்ற முடிவைச் சொல்வதற்கே நான் உந்தப்படுகிறேன்!” என்றார். இது அவருடைய நாட்டில் மட்டுமல்ல, நம் இந்திய தேசத்திற்கும் வெகுவாய் பொருந்தும்!! ஆம், நம் தேசத்தில் இன்று மாபெரும் கூட்டங்களின் பிரசங்க பீடங்களில் நிற்பவர்களும், கிறிஸ்தவ உலகில் உயர்ந்த பதவிகளில் உள்ளவர்களும்.... அனேகமாய், தேவனுடைய சிறந்த பரிசுத்தவான்களாய் இல்லவே இல்லை!

 

தேவனுடைய விலையேறப்பெற்ற சம்பத்துக்களாயிருப்பவர்கள்... அனேகமாய், எளிய மக்கள் மத்தியிலும் நம் சபைகளில் அறியப்படாத ஜனங்களுமாய் இருக்கிறவர்கள் மத்தியிலுமே காணப்படுகிறார்கள்!!

 

யோவான் ஸ்நானகனைப்போலவே “கர்த்தருக்கு முன்பாக பெரியவனாயிருக்கும்” விருப்பத்தையே தேவன் நம் இருதயத்தில் அருளிச் செய்வாராக! (லூக்கா 1:15). தேவனுடைய கண்களுக்கு முன்பாக யோவான் ஸ்நானகன் எப்படி பெரியவனாய் காணப்பட்டார் என்பதற்கு ஓர் காரணம் உண்டு. அதை அவனே வெளிப்படுத்தியதின் படி, அவனுடைய வாழ்வின் தீராத வாஞ்சையாய் இருந்ததெல்லாம் அவர் பெருகவும் நான் சிறுகவும் வேண்டும்!” (யோவான் 3:30) என்பதேயாகும்! ஆம், கிறிஸ்துவே எப்போதும் பிரதானமாய் இருக்கும்படி அவனோ தொடர்ச்சியாகப் பின்திரைக்குச் சென்று மங்கி மறைவதற்கே நாடினான்!!

 

“கிறிஸ்துவே எல்லாவற்றிலும் முதல்வராயிருக்கும்படி" தேவனே தன் இருதயத்தில் தீர்மானித்துவிட்டார் என கொலோசெயர் 1:18-ல் வாசிக்கிறோம். நம்முடைய இருதயமும் இந்த ஒரே நோக்கமாகிய “நான் பின் திரையில் மறைந்து, கிறிஸ்து மாத்திரமே உயர்த்தப்பட வேண்டும்!” என்பதில் தீர்மானம் கொண்டுவிட்டால், நாம் தொடர்ச்சியாக தேவனுடைய வல்லமையையும் அவர் அதிகாரத்தையும் பெற்றுக்கொண்டே இருப்போம் என்பதில் ஒரு துளியும் சந்தேகமேயில்லை!!

 

யாருக்கும் தெரியாமல் சுய நல நோக்கங்களையும், சிந்தைகளையும் ஊழியர்களாய் இருப்பவர்கள் தங்களுக்குள் வைத்திருப் பதைத் தேவன் அறிந்திருக்கிறபடியால். ... தன் நாமத்தின் மீது கொண்ட தன் மிகுந்த உத்தமத்தினிமித்தம், தன் வல்லமையை அவர்களுக்கு ஒப்புக்கொடுத்திட அவரால் ஒருக்காலும் முடியாது!!

 

யாரெல்லாம் யோவான் ஸ்நானகனுடைய ஆவியை (சுய நோக்கமற்ற ஆவியை) உடையவர்களாய் இருக்கிறார்களோ, அவர்களைக் கொண்டே தேவன் தன் மெய்யான சபையைக் கட்ட முடியும்! ஆம், மெய்யான சபையென்றும், பொய்யான சபையென்றும் இருக்கத்தான் செய்கிறது!! வெளிப்படுத்தின விசேஷ புத்தகம் திட்டமும் தெளிவுமாய் பகிரங்கப்படுத்துகிறபடி 1. 'எருசலேமாகிய' மெய் சபையும் 2 'பாபிலோனாகிய' பொய் சபையும் இருக்கிறது. தங்களை முற்றிலுமாய் மறைத்துக் கொண்டு ஓர் வேலைக்காரனின் ஆவியைக் கொண்டவர்கள் மாத்திரமே எருசலேமைக் கட்டிட முடியும்! ஆனால், 'பாபிலோனையோ' யார் வேண்டுமானாலும் கட்டலாம்!! இந்த எருசலேமோ சதா நித்தியத்திற்கும் நிலைத்து நிற்கும்... ஆனால், பாபிலோனோ வெகு சீக்கிரத்தில் தேவனால் அழிக்கப்பட்டுவிடும்!! (வெளி. 18:21).

 

27

 

'பாபேல் கோபுரம்' (பாபிலோனின் துவக்கம்) எவ்வாறு தோன்றியது என்பதை நீங்கள் நினைவில் வைத்திருப்பீர்கள். அங்கே ஜனங்கள் ஒன்று கூடி “நமக்குப் பேர் உண்டாகப்பண்ணுவோம்!” என்று கூறியே கட்டத் துவங்கினார்கள் (ஆதியாகமம் 11:4), பல வருடங்களுக்குப் பின்பு வந்த ராஜாவாகிய நேபுகாத்நேச்சாரும் இதே தொனியில் “இது என் வல்லமையின் பராக்கிரமத்தினால், என் மகிமைப் பிரஸ்தாபத்துக்கென்று, நான் கட்டின மகா பாபிலோன் அல்லவா” என்றே கூறினான் (தானியேல் 4:30),

 

இவ்வாறு தனக்குப் பெயர் உண்டாக, மனுஷர் முன்பாகத் தன்னை உயர்த்திக்கொள்ள' விருப்பம் கொண்ட யாவரும் இந்த பாபிலோன் ஆவியையே பெற்றிருக்கிறார்கள். இவர்கள் தங்கள் பிரயாசத் தினால் கட்டும் யாதொன்றும் ஒருக்காலும் நித்தியமாய் நிலை நிற்பதில்லை!! ஆனால் சகோதரர்களே, இக்கொடிய ஆவி இன்றைய சுவிசேஷ முன்னணி ஊழியத்தில் உள்ளவர்களையும் தாக்கியிருப்பது எத்தனை பரிதாபம்!

 

இதே ஆவியைத்தான் லூசிபரும் பெற்றிருந்தான்! தேவன் அவனுக்கென்று வழங்கியிருந்த ஸ்தானத்தில் அவன் திருப்தி அற்றவனாய் இருந்தான். அவனோ, இன்னமும் மேலாய் ஏறிட விரும்பி, தன் அபிஷேகத்தை அதனிமித்தம் இழந்து போனான்!! ஆம், ஒருநாளில் அவன் 'அபிஷேகிக்கப்பட்ட சேராபீனாய்' திகழ்ந்தவன், இப்போது 'பிசாசாய்' முடிவடைந்தான்! இவன் மாத்திரமா?... அப்பப்பா, எண்ணற்றோர் இதே வழியில் சென்று தங்கள் அபிஷேகத்தை இழந்து விட்டார்களே!!

 

ஆனால், கிறிஸ்துவின் ஆவியோ இந்த கேடான ஆவிக்கு முற்றிலும் வித்தியாசமானதாகும்! அவர் தேவனாயிருந்த போதும், நம் நிமித்தமாய் தம்மைத்தாமே தாழ்த்தி, . , தம்மைத்தாமே வெறுமையாக்கினார்! இப்போது, “....இதே சிந்தையே உங்களிலும் இருக்கக்கடவது!" (பிலிப்பியர் 2:5-8) என்றே வேதம் கூறுகிறது.

 

இவ்வாறு, மனுஷர்களால் அறியப்பட்டு மனுஷர்களால் ஏற்றுக்கொள்ளப்பட வேண்டும் என்ற விருப்பம் கொண்ட சகல இச்சைகளும் நம் இருதயத்திலிருந்து தேவன் வேரோடு பிடுங்கி அழிப்பாராக! பிறரிடம் உள்ள நம் செல்வாக்கை விஸ்தாரப்படுத்தவும், சுவிசேஷ - ஊழிய வட்டாரத்தில் இன்னமும் அதிகமாய் அறியப்படுவதற்காய் அங்கும் இங்கும் ஓடி “தொடர்புகள் ஏற்படுத்த” முயலாமலும் இருப்போமாக!! புறஜாதி நாடாகிய இந்தியாவின் வியத்தகு ஆவிக்குரிய வரம் பெற்றோனே! எங்கள் நாட்டிற்கு வருகை தாருங்கள்” என அயல்நாட்டின் அழைப்பைப் பெறுவதற்காகப் படாதபாடு படாதீர்கள்!

 

நாம் இயேசுவைப் போலவே மாறுகிறவர்களாயிருந்தால், இயேசு செய்ததைப் போலவே சாதாரண மனுஷர்களும் மனுஷிகளும் உள்ள எளிய மந்தையான ஜனங்களிடமே நம் நேரத்தை செலவு செய்திட விருப்பம் கொண்டவர்களாய் நாம் இருந்திட வேண்டும்! அதற்கு பதிலாய், அங்கும் இங்கும் ஓடி சுவிசேஷ - ஊழிய தலைவர்களிடமே நம் சிநேகத்தை வளர்த்துக்கொள்ள நாடுகிறவர்களாய் நாம் இருந்திடக்கூடாது!!! இதை ரோமர் 12:16-ன் விரிவாக்க மொழிபெயர்ப்பு “பெரியவர்களாய் மாற முயற்சிக்காதீர்கள்!" சில பிரபல்யமான ஜனங்களின் ‘நல் தயவைப் பெற்றிடவும் முயற்சிக்காதீர்கள்! மாறாக, எளிமையான தாழ்மை ஜனங்களின் ஐக்கியத்திலே களிகூர்ந்திடுங்கள்! என நேர்த்தியாய் கூறுகிறது.

 

தேவன் நம்மை எப்போதும் தாழ்மையிலேயே வைத்திருப்பாராக! ஆம், நம்முடைய மிக பத்திரமான இடம், சிலுவையின் அடிவாரத்தில் வந்து அமருவதேயாகும்!

 

  1. 'தலைவா!" மனப்பான்மையை நாடும் விருப்பம் :

 

நம்முடைய ஆண்டவரோ, ஓர் வேலைக்காரனாகவே இருந்தார்!

ஆனால் அந்தோ... இன்றைய கிறிஸ்தவ தலைவர்களும் மிஷனரிகளும்

கூட ‘தலைவா!'க்களும் 'எஜமான பிரபுக்களாகவுமே' பெரும்பாலும்

இருக்கிறார்கள்! மற்றவர்கள் நம்மை உயர்ந்த மரியாதையோடு

அழைப்பதை நாம் தவிர்க்க முடியாததாய் இருக்கலாம்! ஆனால்... நம்

இருதயத்தில் 'அந்த விருப்பம்' கொண்டவர்களாய் இருக்கிறோமா?

என்பதே கேள்விக்குறியாய் உள்ளது!

 

இன்று நாம், இயேசு தன் சீஷர்களுக்கு மிகுந்த பொறுமையுடன் கற்றுக்கொடுக்க விரும்பிய பாடத்தையே நாம் மீண்டும் மீண்டும் கற்றுக்கொள்ள வேண்டிய நிர்ப்பந்தத்தில் இருக்கிறோம்! சீஷர்களின் பாதங்களை இயேசு கழுவிய பிறகு, “இந்த உலகின் ராஜாக்களும் பிரபுக்களும் தங்களைச் சுற்றியுள்ள வேலைக்காரர்களுக்கு கட்டளை இடுகிறார்கள்! ஆனால், உங்களுக்குள்ளோ யார் மிக நேர்த்தியாய் பணிவிடை செய்கிறார்களோ, அவர்களே உண்மையான உங்கள் தலைவன்! இவ்வுலகத்தில் பந்தியில் அமர்ந்திருக்கும் எஜமான் தன் வேலைக்காரர்களிடமிருந்து பணிவிடையைப் பெற்றுக் கொள்ளுகிறான். ஆனால் இங்கோ.. அப்படியில்லை! ஏனெனில் நான் உங்கள் பணிவிடைக்காரனாகவே இருக்கிறேன்!” (லூக்கா 22:25-27 - LIVING மொழிபெயர்ப்பு) என நிதானமாய் போதித்தார். ஆ, இயேசுவின் இந்த போதனை வார்த்தைகள் “நமக்கு கீழாயிருப்பவர்களிடம் நாம் கொண்டிருக்கும் “தலைவா மனப்பான்மையை” எவ்வளவாய் உணர்த்தி உறுத்த வேண்டும்! நம் ஆண்டவரின் மாதிரி நம்மை எவ்வளவாய் தாழ்மைப்படுத்தியிருக்க வேண்டும்!

 

நாம் இன்னமும் வைத்திருக்கிற இவ்வுலகத்தின் சகல பொய்யான சுய - கௌரவங்களையும், அந்தஸ்துகளையும், உயர்குலத்து மேன்மைகளையும் தேவன் நம்மை விட்டு நீக்கி அவைகளை அழிப்பாராக! அதற்குப் பதிலாய், தேவனுடைய ராஜ்ஜியத்தின் மேன்மைக்கு மெய்யான முத்திரை, இயேசுவைப் போலவே “ஒரு வேலைக்காரனாய் இருப்பதும்” “ஓர் தண்ணீர் வாப்பவனுமாய்” இருப்பதே என்ற பாடத்தை தேவன் நமக்கு “ஓர் புதிய பாடத்தைப்போல்” என்றென்றும் போதிப்பாராக!

 

"ஓர் தாழ்ந்த இடத்தையே” இன்று மாத்திரமல்ல. ... நம் ஜீவ காலம் முடியும் மட்டும் நாடிட தேவன் நமக்கு அருள்புரிவாராக!

 

கர்த்தருடைய வயல்வெளியில் “மூத்த ஊழியர்களாய்” நாம் இருந்தாலுமேகூட, நம் சக-சகோதரர்களிடமிருந்து கனத்தையோ, மரியாதையையோ... ஏன், கீழ்ப்படிதலையோகூட நாம் ஒருக்காலும் நாடவே கூடாது! மற்றவர்களைக் குறித்த மனப்பான்மையில் “மற்றவர்களே எஜமான்கள்! நாங்களோ வேலைக்காரர்கள் !!” என்ற உணர்வே நாம் எப்போதும் கொண்டிருக்க வேண்டும்!! ஒருவேளை சபையின் அலுவலக ஸ்தானத்தில் மற்றவர்களைவிட நாம் உயர் இடத்தில் இருந்தாலும் அல்லது வயதில் நாம் மூத்தவர்களாய் இருந்தாலும் அல்லது அனுபவத்தில் மூத்தவர்களாயிருந்தாலும் “அதே தாழ்மையின் உணர்வைத்தான்” நாம் கொண்டிருக்க வேண்டும்!! உண்மையில், நாம் எவ்வளவு உயர்வுக்குச் செல்கிறோமோ அவ்வளவு அதிகமாய் நாம் பிறருக்குப் பணிவிடை செய்திட பொறுப்புடையவர்களாய் மாறுகிறோம்!

 

இந்த செய்திக்கு சவாலாக 2 கொரிந்தியர் 4:5-ல் பவுல் கூறிய வார்த்தைகளைப் பாருங்கள் : “நாங்கள் இரண்டு காரியங்களைப் பிரசங்கிக்கிறோம் :1. இயேசுவே கர்த்தர் என்றும் 2. இயேசுவின் நிமித்தமாய் எங்கள் ஜீவியத்தின் மூலம் நாங்கள் உங்கள் வேலைக்காரர்கள்! என்றும் பிரசங்கிக்கிறோம்” (விரிவாக்கம் செய்யப்பட்ட வசனம்).

 

ஆம், இதுவே தேவன் நமக்குத் தந்த “இரு பக்கம்” கொண்ட செய்தியாகும். இவ்வாறு தேவன் இணைத்து வைத்ததை மனிதன் பிரிக்காதிருக்கக்கடவன்! இதுவே பூரண சுவிசேஷம்!! தேவன் வழங்கும் செய்தியில் “பாதியை மாத்திரமே பிரசங்கித்திடும்” குற்றத்திற்கு நாம் ஆளாகாதிருப்போமாக, ஏனெனில், தேவனுடைய செய்தி பூரணமாய் பிரசங்கிக்கப்பட்டால் மாத்திரமே, கிறிஸ்து நமக்குள் மகிமையடைந்திருப்பதை புறஜாதி ஜனங்கள் காணமுடியும்! ஆனால், இன்று அப்படி இல்லாதிருப்பதால், நம் தேசத்தில் கர்த்தருடைய ஊழியத்திற்கு பெரும் பாதிப்பு ஏற்பட்டுள்ளது!!

 

நாம் வேலைக்காரர்களாய் இருக்க வேண்டுமென்றால், நாமோ மெய்யான தாழ்மை உடையவர்களாய் இருக்க வேண்டியதும் அவசியம். வெளித்தோற்றமான பாவனையை” தாழ்மையென நாம் தவறாய் கணித்துவிடக்கூடாது. தாழ்மையை வெளித்தோற்றத்தில் பாவனை செய்வது எளிது! முழுக்க முழுக்க சுயநலம் கொண்ட அரசியல்வாதியும் அப்படியேதான் பாவனை செய்கிறான்! நம் இருதயத்தில் நம்மைக்குறித்த உயர்வான எண்ணத்தை வைத்துக் கொண்டு “தாழ்மையான ஜனங்களோடு நானும் ஐக்கியம் வைத்திருக்கிறேன்” என பாவனை செய்து, அவ்வித வெளிப்புற பாவனையை தாழ்மையென நாம் தவறாய் எண்ணி, நம்மைக் குறித்து பெருமையும் கொண்டிருக்க முடியும். இவையெல்லாம் ஒருக்காலும் தாழ்மையில்லை!!

 

எனக்கும் மற்றொருவருக்குமிடையில் யாதொரு வித்தியாசமும் தேவனுடைய பார்வையில் இல்லை என நான் தீர்க்கமாய் உணர்ந்திருப்பதே மெய்யான தாழ்மையாகும்! இப்போது காணப்படும் வித்தியாசங்களோ, ஒன்று சூழ்நிலையினிமித்தமோ அல்லது சமுதாயத்தின் சில வேறு பாட்டினிமித்தமோ ஏற்பட்டவைகள்தான்!! ஆனால், இதுபோன்ற வேற்றுமைகள் அனைத்தும் இப்போது சிலுவையில் அழிக்கப்பட்டுப்போயின!! ஆம், இயேசுவின் சிலுவை நம் அனைவரையும் பூஜ்ஜிய நிலைக்கே கொண்டு வருகிறது! இந்த சிலுவையின் சம்பவம் என் வாழ்வில் நடைபெற்றிருக்காவிட்டால், பிலிப்பியர் 2:3 நமக்கு கட்டளையிடுகிறபடி, நாம் பிறரை “என்னைக் காட்டிலும் மேன்மையாக கருதிட” ஆரம்பிக்கவில்லை என்பதையே நான் கண்டு கொள்ள முடியும்.

 

நாம் குறைந்து பூஜ்ஜிய நிலைக்கு வந்துவிட்டால், “தாழ்ந்த இடத்தை' மனப்பூர்வமாயும் மகிழ்ச்சியோடும் நான் தெரிந்து கொள்வது மிக இலகுவானதேயாகும்.

 

அது மாத்திரமல்லாமல், தேவனும் தன்னுடைய முழு நோக்கத்தை நம் மூலமாய் நிறைவேற்றுவதும் அவருக்கு எளிதாகிவிடும்!

 

மோசே தனது 40-வது வயதில், தேவனுடைய ஜனத்திற்கு தான் தலைவனாக இருக்கமுடியும் என்று எண்ணியதினிமித்தம், தேவன் அவனை உபயோகிக்க முடியவில்லை! (அப்போஸ்தலர் 7:25), தேவனோ, அவனை மீண்டும் 40-வருடங்கள் வனாந்திரத்திற்கு கொண்டு சென்று உடைக்க வேண்டியதாயிருந்தது. முடிவாக, மோசே தேவனைப் பார்த்து “கர்த்தாவே, இவ்வளவு பெரிய பணிக்கு நான் ஏற்ற மனிதனல்ல. நான் தகுதியற்றவன், என்னால் பேசக்கூட முடியாது!” எனக் கூறும் இடத்திற்கு வந்துவிட்டான். பூரண அர்த்தத்தோடுதான் மோசே இவ்வாசகங்களைத் தேவனிடம் கூறினான். இன்றும் அதே வார்த்தைகளை பொய்யான தாழ்மையோடு அநேகர் கூறுவதை நாம் காண்கிறோமே! மோசேயிடம் இருந்ததோ இந்த பொய்யான தாழ்மை அல்லவேயல்ல!! தன்னைக் குறித்த வெறுமையின் முடிவிற்கு மோசே வந்த பிறகுதான் தேவன் அவனைப் பயன்படுத்த முடிந்தது.

 

தன் 40-வயதில் தன் சொந்த பெலனைக் கொண்டு மோசே செய்ய முடிந்ததெல்லாம் “ஒரு எகிப்தியனைக் கொன்று மணலில் புதைத்ததுதான்! ஆனால், தேவன் அவனை உடைத்த பின்போ எகிப்திய முழு சேனையையும் செங்கடலில் புதைத்துப் போட்டான்! நாம் நொறுங்குவதன் மேன்மை இத்தனை மகத்துவமானதாகும்!!

 

ஐந்து அப்பங்களை எடுத்து ஆண்டவர் ஆசீர்வதித்தது போதுமானதல்ல! அவைகள் திரளான ஜனங்களைப் போஷிப்பதற்கு முன்பதாக “அந்த அப்பங்கள் நொறுங்க வேண்டும்!” இந்த கிரியைதான் நமது ஜீவியத்தில் திரும்பத் திரும்ப நடைபெற வேண்டும். தேவன் நம்மை எடுத்து! ஆசீர்வதித்து! உடைத்து! - ... பயன்படுத்துகிறார்!! இப்போது, நாம் அநேகரை போஷிப்பதற்கு பயன்பட்டபடியால், நம்மை உயர்வாய் எண்ணும் அபாயத்திற்கு வந்துவிடுகிறோம்! ஆகவே, அவர் நம்மை மீண்டும் எடுக்கவும். . . மறுபடியும் உடைக்கவும் வேண்டியிருக்கிறது!! இவ்வாறு, “இந்த கிரியை” நம் ஜீவகாலமெல்லாம் நடைபெற வேண்டியதாயிருக்கிறது.

 

இந்த “நொறுங்குதலை" நாம் எவ்வளவாய் நாடிட அவசியமாய் இருக்கிறது. ஒரு சிறிய அணு சிதைந்ததினிமித்தம் சொல்லொண்ணா வல்லமை வெளிப்படுகிறதே! ஆகவே, நம் சபைகளில் உள்ள தலைவர்களும், சபை விசுவாசிகளும் தேவனால் நொறுங்கப்பட்டுவிட்டால், நம் தேசத்தில் சொல்லொண்ணா தெய்வ வல்லமை வெளிப்பட்டுவிடுமே!!

 

தாழ்மையுள்ள ஊழியனை இனம் காணும் முத்திரை!

 

பொய்யெல்லாம் மெய்போல தோன்றும் போலியான இந் நாட்களில், பிழையில்லாமல் தாழ்மையுள்ள ஊழியக்காரனை வேறுபடுத்திக் காண்பதற்கு என்ன அடையாளம் உண்டு? என்ற கேள்வியை நான் பலமுறை எனக்கு நானே கேட்டிருக்கிறேன்.

 

அது, அற்புதங்களைச் செய்யும் வல்லமையா? அல்லவே! அப்படியானால் பிசாசுகளும் அற்புதம் செய்திட முடியுமே. அது, அந்நிய பாஷைகளை பேசும் வல்லமையா? அல்லவே! இதையும் பிசாசுகள் 'காப்பி அடித்திட' முடியுமே, இவைகள் எதுவும் பிரதானமான அடையாளங்கள் அல்லவே அல்ல.

 

ஆம், இயேசுவைப் பின்தொடரும் மெய் தாசர்களைச் சுட்டிக்காட்டும் தெளிவான அடையாளம் “சிலுவையின் ஆவிதான்!” என்ற விடையே நான் முடிவாகக் கண்டேன். தன் ஜீவியத்தில் “சிலுவையை” ஏற்றுக்கொண்டவனே மெய்யான கர்த்தருடைய ஊழியன்!

 

அந்த சிலுவை அவனுடைய ம-மேன்மையை கொன்றுவிட்டது

அந்த சிலுவை அவனுடைய -நம்பிக்கையைக் கொன்றுவிட்டது

அந்த சிலுவை அவனுடைய அமத்தின் தன்லை-லையத்தை கொன்றுவிட்டது...-

இவ்வாறு சிலுவை அவனைக் குறைத்து குறைத்து. - . இப்போது

“ஒன்றுமில்லாமைக்குள்” அவன் வந்துவிட்டன!

 

ஆம், ஒருவன் மெய்யாகவே கர்த்தருக்குத்தான் ஊழியம் செய்கிறானா? அல்லது தனக்குத்தானே ஊழியம் செய்கிறானா என்பதை வேறுபடுத்திக் காண்பிக்கும் தெளிவான முத்திரை இது ஒன்று மாத்திரமே!! இதைத் தவிர வேறு எந்த அத்தாட்சியும் வஞ்சகமேயாகும்!!

 

நம்மைப்போலவே உருவாக்கும் சந்ததி :

 

இன்று நம் சபைகளில் காணப்படும் பிரச்சனைகளுக்குரிய ஜனங்களை கண்டு நாம் சஞ்சலமடைகிறோம் அல்லவா? ஐசுவரியவான்களுக்கு பாரபட்சம் காட்டும் மூப்பர்களையும், ‘தலைவா' மனப்பான்மை கொண்ட ஊழியர்களையும் கண்டு மன சஞ்சலம் அடைகிறோம் அல்லவா? இந்த துயரமான விளைவிற்கு இவர்களுக்கு முன் சென்றவர்கள் விதைத்ததின் அறுவடைகள் “இவைகள்” என்பதை நாம் உணர வேண்டாமா? தங்களைப்போலவே தங்கள் சந்ததியினரையும் உருவாக்கிவிட்ட கொடுமை அல்லவா!? செல்வந்தர்களுக்கு பாரபட்சத்தையும், கேடான அகந்தையையும் நம் இருதயங்களில் வைத்திருந்தது இப்போது வெளிப்படையாய் நம் ஆவிக்குரிய அடுத்த சந்ததியின் ஜீவியத்தில் 'பளீர்' என பிரதிபலித்து வெளிப்படையாகி விட்டதே!! அவர்களில் வெளிப்பட்ட தீமைகளைக் கண்டு ஆச்சரியப்படுவதில் என்ன பயன்?

 

ஆகவே, "ஆண்டவரே எழுப்புதல் அனுப்பும்!" என்ற நம்முடைய கூக்குரல் ஜெபத்திற்கு ஆண்டவர் தரும் பதில் “என் நாமம் தரிக்கப்பட்ட என் ஜனங்கள் தங்களைத் தாழ்த்தி ஜெபம்பண்ணினால்,... அப்பொழுது பரலோகத்திலிருக்கிற நான் கேட்டு, அவர்கள் தேசத்திற்கு ஷேமத்தை கொடுப்பேன்” (2 நாளாகமம் 7:14) என்றே பதில் உரைப்பார்.

 

இன்றும் நம் இந்திய தேசத்திற்கு ஷேமம் வேண்டுமே! “எழுப்புதலை தேவன் தாமதிக்கிறார்” என இனியும் நாம் சொல்லாதிருக்கக் கடவோம்! ஆம், எழுப்புதலின் தாமதத்திற்குரிய தடை என்னிடத்திலும் உங்களிடத்திலும் தான் உண்டு!!

 

நம் பாரத தேசத்தில் வேலைக்காரர்களாக மாத்திரமே இருக்க விரும்பி “தண்ணீர் வார்த்திடும்” பணியை நாடும் அநேகரை தேவன் எழுப்புவாராக!!

அதிகாரம் 4
அபிஷேகம் நிறைந்த தேவமனிதன்.

பின்பு அவன் எலியாவின் மேலிருந்து கீழே விழுந்த சால்வையை எடுத்துத் திரும்பிப்போய், யோர்தானின் கரையிலே நின்று, எலியாவின் மேலிருந்து கிழே விழுந்த சால்வையைப் பிடித்து : எலியாவின் தேவனாகிய கர்த்தர் எங்கே என்று சொல்லித் தண்ணீரை அடித்தான்; தண்ணீரை அடித்தவுடனே அது இருபக்கமாகப் பிரிந்ததினால் எலிசா இக்கரைப்பட்டான். எரிகோவில் பார்த்துக்

கொண்டு நின்ற தீர்க்கதரிசிகளின் புத்திரர் அவனைக் கண்டவுடனே, எலியாவின் ஆவி எலிசாவின் மேல் இறங்கியிருக்கிறது என்று சொன்னார்கள்” (2இரா2:13-15). இவ்வாறு "எலியாவின் ஆவி எலிசாவின்மேல் இருக்கிறது'' என சாட்சி பகர்ந்த தீர்க்கதரிசிகளின் புத்திரர்கள் ஒன்றும் மாயம் செய்கிறவர்கள் அல்ல. இவர்கள் வேதவாக்க பாக்கியங்களைக் கற்று வந்த நல்ல சீடர்கள்! ஆகவே, வேதாகமத்தை நன்கு அறிந்திருந்த இவர்கள் “ஆவியினால் நிறைந்த மனுஷனுக்குரிய” அர்த்தத்தை இன்னதென்று நன்கு அறிந்தவர்கள். அவ்வாறு வேதபூர்வமாக கற்ற உண்மையின்படியே கர்த்தருடைய ஆவி இறங்கி வாசம் புரிந்த எலிசாவை ஆவியில் நிறைந்தவனாக” விளங்கிக்கொண்டார்கள்.

 

இவ்வாறு அவர்கள் விளங்கிக்கொண்டது “ஏதோ உணர்ச்சி வசப்படுத்தும் பிரசங்கத்தை எலிசா பிரசங்கித்ததைக் கேட்டதாலோ அல்லது கவர்ச்சியான

தனது அனுபவ சாட்சியை அவன் கூறியதாலோ” அல்லவேயல்ல! மெய்யாகவே வல்லமை அவன் வாழ்க்கையில் தங்கியிருந்ததை கண்கூடாய் கண்டதினாலும், எலியாவைப் போலவே அவன் யோர்தான் நதியைப் பிளந்ததை பார்த்ததினாலும். . . இந்த எலிசா மெய்யாகவே “ஆவியில் நிறைந்த மனிதன்” என்ற முடிவுக்கு வந்தார்கள்!

 

நாம் கர்த்தருக்குச் செய்திடும் ஊழியத்தில், தேவனுடைய பரிபூரண சித்தத்தையும் நாம் நிறைவேற்றி முடிக்க வேண்டுமென்றால், பரிசுத்தாவியின் அபிஷேகம் மிகமிக முக்கியமாகும். கர்த்தருடைய ஆவி நம்மில் வாசம் செய்தால் மாத்திரம் போதுமானதல்ல! அவர் நம்மில் வந்து தங்கியிருக்கும்போது பெற்றுக்கொள்ளும் “வல்லமையை” நாம் அறிந்தவர்களாயும் இருக்க வேண்டும்!! இப்பூமியில் தன் ஊழியத்தை நிறைவேற்றி முடிப்பதற்கு இயேசுவுங்கூட அபிஷேகிக்கப்பட வேண்டியது அவசியமாய் இருந்தது (மத்தேயு 3:16; அப்போஸ்தலர் 10:38),

 

ஏதோ ஒரு அமெரிக்க ஸ்தாபனத்துடன் தொடர்பு கொண்டு, அந்த தொடர்பை நிரந்தரமாக்கிக் கொண்டபடியால், போதுமான அளவு பணத்தை வைத்துக்கொண்டு நீங்கள் செய்யும் ஊழியங்கள் அனைத்தும் வீணான ஊழியங்களேயாகும்! உங்கள் வாழ்வின் நேரத்தை வீணாக்கிவிட்டீர்கள்!! பூமிக்குரிய யாதொரு ஆதரவினிமித்தம் செய்கின்ற கிறிஸ்தவ ஊழியங்களை மூடிவிட்டு, ஏதாகிலும் உலக அலுவலில் நாம் சேர்ந்துவிடுவதே நல்லது. ஏனெனில், இதுபோன்ற “வருமான அடிப்படையில்” பிரயாசப்படும் நம்முடைய எந்தப் பிரயாசங்களைக் கொண்டும், தேவனுடைய இராஜ்ஜியத்திற்குரிய கிரியைகளில் யாதொன்றையும் நாம் சாதித்துவிட முடியாது. நம் ஆண்டவருக்கு தொடர்ச்சியாய் ஊழியம் செய்வதற்குரிய காரணம், பரிசுத்தாவியின் வல்லமையன்றி வேறு யாதொரு விளக்கமும் நம் ஜீவியத்தில் இருந்துவிடவே கூடாது! இவ்வித தரம் கொண்ட ஊழியம் மாத்திரமே தேவன் அங்கீகரிக்கும் ஊழியமாகும்!!

 

பரிசுத்தாவியின் அபிஷேகத்திற்கு உண்மையான அடையாளம் என்ன? என்பதைக் கண்டறிவதில் விசுவாசிகள் மத்தியில் ஏராளமான குழப்பங்கள் நிலவுகின்றன!

 

ஆனால், நாம் இங்கு கண்ட எலிசாவின் ஜீவிய நிகழ்ச்சியிலிருந்து பரிசுத்தாவியின் அபிஷேகத்திற்கு உள்ள பிழையற்ற அடையாளம் "வல்லமையே” ஆகும்! வேறு எந்த அடையாளங்களும் நம்மை தவறான பாதையில் நடத்திவிடும். . . ஆனால் இந்த 'வல்லமையின்' அடையாளம் ஒருபோதும் நம்மை தவறான திசைக்கு கொண்டு சென்றுவிட முடியாது!!

 

நயமான பேச்சுத் திறமை, உணர்ச்சிவசப்படுத்தும் நிகழ்ச்சிகள், பொங்கும் பரவசங்கள் அல்லது உரத்த சத்தங்கள் ஆகிய யாதொன்றையும் பரிசுத்தாவியின் அபிஷேகத்தின் அடையாளமாய் நாம் தவறாய் எடுத்துக்கொள்ளவே கூடாது. ஆம், “வல்லமை ஒன்று மாத்திரமே” பரிசுத்தாவியின் அபிஷேகத்தின் அடையாளமாகும். இயேசு அபிஷேகம் பெற்றபோது அவரும் இந்த வல்லமையைத்தான் பெற்றுக் கொண்டார் (அப்போஸ்தலர் 10:38). சீஷர்களிடம் இயேசு பேசும்போது, “பரிசுத்தாவி உங்களிடத்தில் வரும்போது நீங்கள் பெலனடைவீர்கள்!” என்றுதான் சொன்னார் (அப்போஸ்தலர் 1:8). இதைவிடத் தெளிவான விடை வேறுயாதொன்றும் இருந்திட முடியாது! ஆம், அந்நியபாஷையோ அல்லது யாதொரு பரவச எழுச்சியோ அல்ல. .. வல்லமை மாத்திரமே அடையாளமாகும்.

 

“அந்நியபாஷை பேசுவதை” பரிசுத்தாவி அபிஷேகத்திற்கு அடையாளம் என எண்ணியிருந்த கொரிந்திய கிறிஸ்தவர்களுக்கு பவுல் கடிதம் எழுதிய போது “நான் உங்களிடத்தில் வரும்போது உங்களுடைய அற்புத சாட்சிகளையும் அல்லது உணர்ச்சி பொங்கும் செய்திகளையும் (அறிந்த பாஷைகளோ அல்லது அறியாத பாஷைகளோ) கேட்பதற்கு நான் வராமல், உங்கள் ஜீவியத்தில் யாதொரு உண்மையான வல்லமை உண்டோ என அறிவதற்கே வர விரும்புகிறேன். ஏனெனில், தேவனுடைய அதிகாரம் (பரிசுத்தாவியின் நிறைவு) வெறும் வார்த்தைகளில் அல்ல பெலத்திலேயே வெளிப்படுகிறது” என்றார் (1 கொரிந்தியர் 4:19,20 - விரிவாக்கம் செய்யப்பட்ட வசனங்கள்).

 

ஆகவே, நாம் நன்றாகப் பேசமுடிவதினிமித்தமோ அல்லது பரவசமான சாட்சிகளை நம் செய்திக்கு தொடர்புபடுத்தும் திறமையினிமித்தமோ நாம் அபிஷேகம் பெற்றவர்கள் என ஒருபோதும் திருப்தி அடைந்திடவே கூடாது! நம்மைப் பார்த்து கேட்க வேண்டிய ஒரே கேள்வியெல்லாம் நாம் ஆவிக்குரிய வல்லமை பெற்றிருக்கிறோமா? இல்லையா? என்ற கேள்வி மாத்திரமேயாகும். நன்றாய் ஆயத்தம் செய்து பிரசங்கிக்கும் பிரசங்கங்களோ, நம் எடுப்பான தோற்றங்களோ அல்லது உணர்ச்சி வசப்படுத்தும் சாட்சிகளோ ஆகிய யாதொன்றையும் ஆவிக்குரிய வல்லமைக்கு மாற்றாக நாம் வைத்துவிட முடியாது!

 

இன்று வளர்ந்து வரும் விஞ்ஞான முன்னேற்றத்தில் பரிசுத்தாவியை முழுமையாய் சார்ந்து கொள்வதற்குப் பதிலாக எலக்ட்ரானிக் சாதனங்களையும் ஒளி - ஒலி நவீன இயந்திரங்களையும் மிக எளிதில் நாம் சார்ந்துகொள்ள முடியும்!! சுவிசேஷத்தின் பிரபல்யத்திற்காக எங்கெல்லாம் நாம் விஞ்ஞான நவீனங்களை பயன்படுத்த முடியுமோ அங்கெல்லாம் நாம் பயன்படுத்த வேண்டும்!!

 

இருப்பினும், நம்மையும் அறியாமலே கொஞ்சம் கொஞ்சமாய் பரிசுத்தாவியை விட்டு விலகி, இந்த விஞ்ஞான சாதனங்களை நாம் சார்ந்துகொள்ள முடியும்!

 

ஆகவே இவ்விஷயத்தில் நாம் மிகுந்த கவனமாய் இருக்க வேண்டும்.

 

நாம் எதை சார்ந்து கொண்டிருக்கிறோம் என்ற நம் உண்மை நிலையை நாம் கண்டுபிடிப்பது மிக எளிதேயாகும். நாம் சார்ந்து கொண்டிருப்பது மெய்யாகவே பரிசுத்தாவியாயிருந்தால் “அவராலேயன்றி என்னால் எதுவும் இயலாது” என அறிக்கை செய்து, திரும்பத் திரும்ப பரிசுத்தாவியை தேவனிடத்தில் வேண்டி ஜெபிப்பதற்கு நாம் வந்து விடுவோம்! அவ்வாறு நாம் செய்கிறோமா? நம் மனசாட்சியை இலகுவாக்குவதற்காக நாம் செய்திடும் வழக்கமான சடங்காச்சார ஜெபத்தை இங்கு நான் குறிப்பிடவில்லை. ஜெபம் என நான் இங்கு குறிப்பிடுவது, நம்மையே முழுவதுமாய் தேவனிடத்தில் சரணடைந்து அவருடைய முகத்தை வாஞ்சையோடு தேடுவதேயாகும். இன்னும் தேவைப்பட்டால் உபவாசத்தோடே அவரது முகத்தைத் தேடி “நம்மை அழைத்த ஊழியத்திற்குத் தேவையான வல்லமையோடு பரிசுத்தாவியானவர் நம்மில் தங்கியிருக்கிறார்” என்ற நிச்சயத்தைப் பெற்றுக்கொள்ளும்வரை தேடவேண்டும். இவ்வாறு அவருடைய வல்லமையை நாம் நாடும் செயல் ஏதோ ஒரேநாளில் பெற்றுவிடும் மொத்த அனுபவம் அல்ல... ஆம், ஒவ்வொருநாளும் நாம் இவ்வாறாகத் தேட வேண்டும்!!

 

நாம் சார்ந்துகொள்வது எலெக்ட்ரானிக் சாதனங்களாயில்லா விட்டாலும், பணத்தை நாம் சார்ந்து கொள்ள முடியும்! ஒருசமயம் நம் தேசத்தில் உள்ள ஒரு பிரபல்ய ஊழியக்குழுவின் ஊழியக்காரர்கள் மத்தியில் போட்டி ஒன்றை ஏற்படுத்தினார்கள்! “யார் தங்கள் ஸ்தாபனத்திற்கு அதிக பணம் சேர்க்கிறார்கள்?” என்பதே அந்த போட்டியாகும்! இதிலிருந்து இன்று எந்த அளவிற்கு கிறிஸ்தவ ஸ்தாபனங்கள் தேய்ந்து பின் தங்கியிருக்கிறது என்பதையும், தங்கள் ஊழியத்திற்கு எது மிகுந்த அவசியம் என்பதை இவர்கள் கருதுகிறார்கள்? என்பதையும் நாம் தெளிவாகவே காணமுடிகிறது. ஆம், இவர்கள் எதை சார்ந்து கொண்டிருக்கிறார்கள் என்பதை இவர்களின் லௌகீக கிரியைகளே வெட்ட வெளிச்சமாக்குகிறது. இவர்களுக்குப் பணம் ஒன்றே மிக முக்கியமானதொன்றாய் இருக்கிறபடியால், அதை பொது-சுவிசேஷக் கூட்டங்களில்கூட ஜனங்களிடம் மிக வருந்தி, இரந்து கேட்கிறார்கள்! அதுவும் சுவிசேஷ பொது கூட்டங்களில், சுவிசேஷத்தை ஜனங்களுக்குப் பிரசங்கிப்பதற்கு முன்பாகவே இவ்வாறு ஜனங்களிடம் இரந்து கேட்கிறார்கள்!! இவை அனைத்தும் வெட்கத்திற்குரிய செயல் அல்லவா? இயேசு இவ்வாறாக ஊழியம் செய்திருப்பாரா? என நம்மால் கற்பனையால்கூட எண்ணிப் பார்க்க முடியாதே! ஆனால், இவர்களோ தங்களை இயேசுவின் ஸ்தானாதிபதிகள் என தைரியமாய் கூறிக்கொள்கிறார்களே?!

 

இவ்வாறு ஜனங்களிடம் பணத்தை யாசிக்கும் பாதி நேரத்தை “பரிசுத்தாவியின் வல்லமைக்காக” கதறுவதற்கு இவர்கள் செலவழித்திருந்தால், தங்கள் ஊழியத்தில் மிகப்பெரும் பலனைக் கண்டடைந்திருப்பார்கள்!

 

நாம் பணத்தை சார்ந்திருக்கிறோமோ? அல்லது நாம் பரிசுத்தாவியின் அபிஷேகத்தை சார்ந்திருக்கிறோமா? என்பதை சோதித்துப் பார்க்க 'ஒரு கேள்வியை' உங்களுக்கு நீங்களே கேட்டுப் பாருங்கள் : உங்களை பொருளாதார ரீதியில் தங்குபவர்கள் திடீரென அந்த ஆதரவவை நிறுத்திவிட்டால் நீங்கள் அடைந்திடும் துயரத்திற்கு சமமாகவே, தேவன் உங்களுக்குத் தந்த அபிஷேகத்தை அகற்றிவிட்டால் “அதே துயரத்தை” அடைவீர்களா? அந்தோ! இன்றைய ஊழியர்களில் அநேகர் “தேவனுடைய அபிஷேகம் தங்களிடத்தில் தங்கியிருக்கிறதா இல்லையா? என சோதித்தறிவதைக் காட்டிலும் தங்களுக்கு வரவேண்டிய பொருளாதார உதவி முழுவதும் இந்த மாதம் வந்துவிட்டதா?" என கண்டுகொள்வதிலேயே அதிக அக்கறை கொண்டிருக்கிறார்கள்!

 

ஏன் இந்த இழிநிலை? ஏனென்றால், கர்த்தருடைய ஊழியத்தை “அபிஷேகம் இல்லாமல் நடத்திவிடலாம்.” ஆனால், கர்த்தருடைய ஊழியத்தை பணம் இல்லாமல் நடத்த முடியாது என்று நாம் எண்ணுகின்ற நமது கேடான எண்ணமே அதற்கு காரணமாகும்!!

 

இவ்வாறு நாம் வார்த்தையின்படி சொல்லாவிட்டாலும், நம் செய்கைகள் நமக்குள் மறைந்திருக்கும் இந்த எண்ணத்தை - வெளிப்படையாய் காட்டிக்கொடுக்கிறதே! ஆதி சபையோடு நம்மை ஒப்பிட்டுப் பார்க்கும் போது நாம் கண்டறிவது என்ன? சுவிசேஷத்தை பிரசங்கிக்க அவர்களுக்கு யாதொரு எலெக்ட்ரானிக் சாதனங்களும் இருந்ததில்லை! பொருளாதரா ஆதரவு தரும் பணக்கார வியாபாரிகளும் ஒருவர்கூட இருந்ததில்லை! அவர்கள் வாழ்ந்த சூழ்நிலையில் இருந்த சமுதாயமும் அவர்களை ஏற்றுக்கொள்ளவில்லை! இருப்பினும் அவர்களோ தேவனுக்கென பெரிய காரியங்களை செய்து முடித்தார்கள்!! அதற்கெல்லாம் காரணம், கர்த்தருடைய ஊழியத்திற்கு மிக முக்கியமான தேவையாயிருந்ததை அவர்கள் பெற்றிருந்தார்கள். அது இல்லாமல் மற்ற அனைத்தும் மதிப்பில்லாதது என்பதையும் அவர்கள் அறிந்திருந்தார்கள். ஆம், அவர்கள் “பரிசுத்தாவியின் அபிஷேகத்தை” நிறைவாய் பெற்றிருந்தார்கள். எனவேதான் இன்று ஊழியத்தில் நாம் காணும் தோல்வியான பலன்களைப் போல அல்லாமல், அவர்களோ நிறைவான ஜெயம் பெற்றிருந்தார்கள்!!

 

இன்றைய கிறிஸ்தவ சபைகளுக்கும், கிறிஸ்தவ ஊழியர்களுக்கும் மிகப் பெரிய தேவையாயிருப்பது “பரிசுத்தாவியின் அபிஷேகமே” ஆகும். வல்லமையை வெளிப்படுத்தும் மெய்யான அபிஷேகத்தையே இங்கு நான் குறிப்பிடுகிறேன். ... அல்லாமல், இன்று அநேகர் மேன்மைபாராட்டி திருப்தி கொண்டிருக்கும் போலியான 'மலிவு' அபிஷேக அனுபவங்களை இங்கு நான் குறிப்பிடவில்லை!

 

இன்றும் கர்த்தருடைய மெய்யான ஊழியம் ஆதிநாட்களைப் போலவே, எலெக்ட்ரானிக் சாதன பெலத்தினாலும் அல்ல பொருளாதார பராக்கிரமத்தினாலுமல்ல... பரிசுத்தாவியின் வல்லமையைக் கொண்டு தொடர்ந்து நடந்துகொண்டுதான் இருக்கிறது!

 

ஆவிக்குரிய பகுத்தறியும் கூர்மை :

 

இன்றைய கிறிஸ்தவ ஊழியர்களை சாத்தான் எப்படியெல்லாம் தந்திரமாய் வஞ்சனை செய்கிறான் என்பதை ஏற்கனவே நாம் கண்டறிந்தோம். கர்த்தருடைய வருகை சமீபமாயிருக்கும் இந்நாட்களில், அவனுடைய வஞ்சனை இன்னமும் அதிகமாய் பெருகி வருவதையே நாம் காண்கிறோம். இக்கொடிய நாட்களில், குறிப்பாக தலைமைப் பொறுப்பில் இருக்கும் நாம் “ஆவிக்குரிய பகுத்தறியும் வரத்தை” பெற்றிருக்க வேண்டியது மிகவும் அவசியமாகும். அவ்வாறு பெற்றிருந்தால் மாத்திரமே 'எது மெய்யாகவே தேவனுக்குரியது? எது தேவனுக்குரியவைகள் அல்ல?' என்பதையும், போலியிலிருந்து உண்மையானதை கண்டறிவதற்கும், அவருடைய சபையில் தேவன் தன்னுடைய மேலான நோக்கமாய் எதை வைத்திருக்கிறார்? என்பதையும் நாம் வேறுபடுத்தி அறிந்துகொள்ள முடியும்.

 

இவ்வாறு நேர்த்தியாய் பகுத்தறியும் தன்மையும், ஆவிக்குரிய தொலைநோக்கும், பரிசுத்தாவியின் அபிஷேகத்தின் மூலமாக மாத்திரமே நாம் பெற்றிட முடியும்! மனுஷீக சாதுரியத்தினாலோ அல்லது புத்திக் கூர்மையினாலோ அல்லது வேதாகமப் பயிற்சியினாலோகூட இந்த பகுத்தறியும் கூர்மையை நாம் பெற்றுவிட ஒருக்காலும் முடியாது. இது போன்ற ஆவிக்குரிய மேன்மைகளை கல்விமான்களுக்கும் ஞானிகளுக்கும் மறைத்து பாலகர்களுக்கு மாத்திரமே வெளிப்படுத்துவது பிதாவுக்கு பிரியமாயிருக்கிறது! யாதொரு ஆதரவற்ற நிலையில் பிதாவாகிய தேவனை முழுவதுமாக சார்ந்துகொள்பவர்களே இந்த பாலகர்கள்! இவர்களே, “ஆண்டவரே, நாங்கள் பலவிஷயத்தில் புத்திக்கூர்மை உடையவர்களாய் இருந்தபோதும், ஆவிக்குரிய விஷயங்கள் என வரும்போது நாங்களோ புத்தியீனர்கள்!” என தங்கள் நிர்ப்பந்தத்தில் ஜெபிக்கிறவர்களாய் இருப்பார்கள்.

 

யூதேயாவில் ஓசியா ராஜா ஆண்ட காலத்தில் ஏற்பட்ட 'மேலோட்டமான எழுப்புதலை' எரேமியா தீர்க்கதரிசி பகுத்தறியும் கூர்மையில் கண்டறிந்து “தேவன் தன் ஜனத்தை பாபிலோனுக்கு துரத்திவிடுவார்” என்றே நேர்மாறாக தீர்க்கதரிசனமாய் கூறினான். தன் ஜனத்தை பாபிலோனின் சிறையிருப்பிற்கு தேவன் துரத்தியதற்குரிய மெய்யான காரணத்தை எசேக்கியேல் தீர்க்கதரிசியும் தன் பகுத்தறியும் கூர்மையினால் கண்டறிந்தான். அந்நாட்களில் இருந்த பிரபல்ய பிரசங்கிகள் காணமுடியாததை இந்த தேவமனிதர்களால் காண முடிந்ததற்கு காரணம் : எரேமியாவும் எசேக்கியேலும் தங்கள்மீது பெற்றிருந்த அபிஷேகமேயாகும்

 

அபூர்வமாய் சில சபைகளே தவிர, இன்றைய திரளான சபைகள், அன்றிருந்த தேவஜனம் பாபிலோனின் சிறையிருப்பிற்குள்ளான “அதே நிலைமையில்தான்” இன்றும் காணப்படுகிறது. இதுபோன்ற அந்தகார சூழ்நிலையில் ஆவிக்குரிய தரிசனம் கொண்ட தேவமனிதர்களே தேவைப்படுகிறார்கள்! இவ்வித இக்கட்டு நேரங்களில், தேவஜனத்திற்கு தலைமையாய் இருப்பவர்களிடம் இந்த ஆவிக்குரிய தரிசனம் மங்கும் பட்சத்தில், நிச்சயமாய் ஜனங்கள் சீர்கெட்டுப் போவார்கள்! (நீதிமொழிகள் 29:18).

 

நாம் வாழும் இக்கொடிய நாட்களில் பரிசுத்தாவியின் அபிஷேகம் நமது நிர்ப்பந்தமான தேவையாயிருக்கிறது! அதேபோல், கர்த்தருடைய வயல்வெளியில் நிற்கும் எந்த உத்தம ஊழியர்களுக்கும் பரிசுத்தாவியின் அபிஷேகம் மிகப்பிரதான தேவையாயிருக்கிறது!!

 

இயேசுவின் நாமம் :

 

எலியாவின் சால்வையைக்கொண்டு யோர்தான் நதியின் தண்ணீரை எலிசா அடித்தான் என நாம் வாசிக்கிறோம். எலியாவை பரத்திற்கு சென்ற கிறிஸ்துவுக்கும், இந்த எலிசாவை பூமியில் கிறிஸ்துவின் ஊழியத்தை தொடர்ந்து செய்வதற்கு வைக்கப்பட்ட சபைக்கும் ஒப்பிட்டு நாம் காணமுடியுமென்றால். எலியா விட்டுச்சென்ற சால்வை, இயேசு தன் சபைக்கு ஒப்புவித்த “கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவின் நாமத்திற்கு” நாம் ஒப்பிட முடியும். யோர்தான் நதியின் ஊடாய் வழி உண்டாக்குவதற்கு எலிசா சால்வையை உபயோகித்ததைப் போலவே, நம் ஜீவியப்பாதையில் தோன்றும் இடையூறுகளை அகற்றுவதற்கு இயேசு தன் நாமத்தை உபயோகிப்பதற்குரிய அதிகாரத்தை நமக்குத் தந்திருக்கிறார்!

 

ஆகிலும், மந்திர பாஷையைப்போல் இயேசுவின் நாமத்தைத் திரும்பத் திரும்ப உச்சரிப்பதில் எந்த பிரயோஜனமும் இல்லை! அவ்வாறு செய்தவர்கள் ஜீவியத்தில் எந்த வல்லமையும் வெளிப்பட்டதில்லை! அவர்கள் ஜீவியத்திற்கு தடையாய் வந்த மலைகளைப் பெயர்த்திடவுமில்லை!!

 

ஒருசமயம், எலிசா கூறியபடி கேயாசி எழுந்து வந்து எலிசாவின் கோலை எடுத்து அதை மரித்த பிள்ளையின் மீது போட்டான். அவ்வேளையில் இந்த கேயாசி மிகுந்த அதிகாரத்தோடு “ஆபிரகாமின் தேவன், ஈசாக்கின் தேவன், யாக்கோபின் தேவனுடைய நாமத்தில் மரணத்தினின்று நீ எழுந்து நட” என உரத்த சத்தமாய்க் கூறியிருந்திருப்பான். ஆனால் ஒன்றும் நடக்கவில்லை!

 

எனவே ஒரு மனுஷன் பேசுகின்ற வார்த்தையை மாத்திரம் தேவன் பார்ப்பதில்லை! அவனுடைய இருதயத்தையே அவர் பார்க்கிறார். வார்த்தைகளை உபயோகிக்கும் மனுஷன் எப்படிப்பட்டவன் என்பதைப் பொறுத்தே அவனுடைய வார்த்தைக்கு வல்லமையும் இருக்கிறது!

 

கேயாசின் இருதயம் தேவனுடைய மகிமையில் நிலை கொண்டிராமல் இவ்வுலகத்தின் மகிமையிலும், தன் சுய ஆதாயத்திலும் நிலைகொண்டிருந்ததை தேவன் நன்கு அறிந்திருந்தார்!!

 

எலிசாவின் இருதயமோ அப்படிப்பட்டதல்ல! அவனோ, தேவனுடைய மகிமை ஒன்றையே நாடினான். ஆகவேதான் தேவன் தனது அதிகாரத்தை அவனுக்கு ஒப்புவிக்க முடிந்தது. அதனிமித்தமே, எலிசா ஜெபித்தவுடன், மரித்த பிள்ளை உடனடியாக உயிர் பெற்று எழுந்தது! யோர்தான் நதியை தன் சால்வையினால் அடித்தவுடன் இரண்டாய் பிளந்தது!!

 

“இயேசுவின் நாமத்தை” திரும்பத் திரும்ப உச்சரித்து, பின்பு உரத்த சத்தமாய் உச்சரித்து ஜெபிக்கிறவர்களை நான் கண்டிருக்கிறேன். ஆனால், அவர்களின் ஜெபத்திற்கு எதுவும் நடப்பதில்லை! இவர்கள் கர்மேல் மலையின்மேல் கூச்சலிட்டு ஆர்ப்பரித்த பாகாலின் தீர்க்கதரிசிகளையே எனக்கு நினைவூட்டுகிறார்கள்! தேவனுடைய ராஜ்ஜியமோ உரத்த சத்தத்தில் வெளிப்படுவதில்லை, அதிகார தொனியிலும் வெளிப்படுவதில்லை! மாறாக “வல்லமையில்” மாத்திரமே வெளிப்படுகிறது!! இந்த எலிசா “அபிஷேகம் பெற்றிராத மனிதனாக” இருந்திருந்தால், அவன் தன் சால்வையைக் கொண்டு யோர்தான் தண்ணீரை ‘பலமுறை' அடித்திருப்பான்! அப்படியிருந்தும் ஒன்றும்

சம்பவித்திருக்காது! இவ்வாறு அவனுடைய சக்தி முழுவதும் வீணாக விரயமாயிருக்கும்!! ஆகவே நாம் இயேசுவின் நாமத்தை மெய்யான வல்லமையோடு பயன்படுத்த வேண்டுமென்றால், அதற்கு “பரிசுத்தாவியின் அபிஷேகம்” மிக மிக அவசியமாகும்.

 

அப்போஸ்தலர் 3-ம் அதிகாரத்தில் “இயேசுவின் நாமத்தை” பேதுரு உபயோகித்தான் .. தேவனுடைய வல்லமையும் வெளிப்பட்டது! அந்த சப்பாணி குதித்து எழுந்து நடந்தான்! இந்த அற்புதம் பகிரங்க வெளிப்படையாய் நடந்தபடியால், அவன் சுகமாகிவிட்டான் என்பதை ஜனங்களிடம் நிரூபிப்பதற்கு “மருத்துவ சான்று” எதுவும் தேவையில்லாதிருந்தது. இத்தனை கண்கூடான அற்புதத்தில் 'அது நடந்ததோ நடக்கவில்லையோ' என்ற சந்தேகத்திற்குரிய கேள்வி எதுவும் எழவில்லை! ஆனால், இன்றைய சுகமளிக்கும் ஊழியர்கள் கூறிக்கொள்ளும்அற்புதங்களில் இவ்வித சந்தேகம் எழுந்து... அதை நிரூபிக்க மருத்துவ சான்றுகளைத் தேடியும் ஓடுகிறார்கள்!!

 

அப்போஸ்தல நடபடிகளின் புத்தகம் “இயேசுவின் நாமத்திற்கு" உள்ள வல்லமையை எவ்வளவாய் வெளிப்படுகிறது! தேவனுடைய நோக்கத்தை நிறைவேற்றுவதற்கு இடையூராக வந்த ஒவ்வொரு தடைகளையும் “இயேசுவின் நாமத்தை” சீஷர்கள் உபயோகித்து அந்த எல்லாத் தடைகளையும் மேற்கொண்டார்கள்! ஆம், மெய்யாகவே, “அபிஷேகத்தை" அவர்கள் அறிந்திருந்தார்கள்!! னவே தான் அப்போஸ்தல நடபடிகள் புத்தகத்தின் கடைசி வார்த்தை, “அவர்கள் தைரியத்துடனே தடையில்லாமல் பிரசங்கித்தார்கள்” என எழுதப்பட்டிருப்பதை நாம் காண்கிறோம்!! (அப்போஸ்தலர் 28:31),

 

உயிர்த்தெழும் வல்லமை :

 

எலிசா யோர்தான் நதியை பிளந்த செயல், ஆவிக்குரிய மரணத்தை மேற்கொண்டு ஜெயம் பெறும் “ஜீவனுக்கேதுவான ஊழியத்திற்கு” (MNISTRY OF LIFE) அடையாளமாக இருக்கிறது. வேதாகமத்தில் *யோர்தானின் தண்ணீர்' மரணத்தை குறிப்பிடுவதாகவே இருக்கிறது. ஆகவே, யோர்தானின் நதி பிளந்தது, மரணம் ஜெயிக்கப்பட்டதற்கு அடையாளமாகவே இருக்கிறது!

 

எலிசாவின் ஊழியத்தின் இந்த முதல் பகுதி தொடங்கி, தொடர்ச்சியாக, .. “மரணத்திலிருந்து ஜீவனைக் கொண்டுவரும் ஊழியத்தையே” அவன் செய்தான்! எரிகோவில், தரிசு நிலத்தில் ஜீவனைக்கொண்டு வந்தான்! சூனேம் ஊரிலிருந்த மலட்டு ஸ்திரீ ஜீவன் உற்பவிக்க அற்புதம் செய்தான்! மரித்த பிள்ளை மீண்டும் ஜீவன் பெறவும் செய்தான்! மரணத்தை தந்த உணவு பாத்திரத்தை நல்ல ஜீவனுள்ளதாய் மாற்றினான்! குஷ்டரோகத்தினால் மரித்துக் கொண்டிருந்த நாகமானின் சரீரம் மீண்டும் ஜீவன் பெறச் செய்தான்!!

 

இந்த எலிசாவின் வல்லமை என்றென்றும் மங்கிப்போகாமலே இருந்தது! அவன் மரித்து அடக்கம் பண்ணப்பட்டு அவன் சரீரம் மக்கிய பிறகுகூட, அவன் கல்லறையில் போடப்பட்ட ஓர் மரித்த மனுஷன் மீண்டும் உயிர் பெற்று எழுந்தான்!! இவ்வாறு, அவன் சென்ற இடமெல்லாம் மரணத்திலிருந்து ஜீவனைக் கொண்டுவந்ததே எலிசாவின் ஊழியமாய் இருந்தது. இந்த ஊழியம், அவன் பெற்ற அபிஷேகத்தின் நேரடி விளைவாகவே இருந்தது.

 

இவ்வாறு பரிசுத்தாவி அபிஷேகத்தின் வல்லமை “மரணத்திலிருந்து ஜீவனைக் கொண்டுவரும் வல்லமையாகவும்”,“உயிர்த்தெழும் வல்லமையாகவும்” இருப்பதையே நாம் காண்கிறோம். ஒருவன் அபிஷேகம் பெற்றதற்கு இதுவே மாறாத அடையாளமாய் இருப்பதை நாம் மிகத்தெளிவாய் காணமுடிகிறது! இந்த வல்லமையின் பிரவாகத்தையே புதிய ஏற்பாட்டில் நாம் திரும்பத் திரும்ப காண்கிறோம். “இந்த வல்லமையை எபேசு கிறிஸ்தவர்கள் அறிய வேண்டும்” என்பதே தன்னுடைய ஜெபமாய் இருக்கிறது என பவுல் அவர்களுக்கு எழுதினார்.

 

அந்த நிருபத்தை அவர் தொடர்ந்து எழுதும்போது, தேவனுடைய பலத்த வல்லமை சிருஷ்டிப்பிலோ அல்லது வேதாகமத்தில் குறிப்பிடப்பட்ட அற்புதங்களிலோ அல்ல... கிறிஸ்துவை மரணத்திலிருந்து எழுப்பியதில்தான் தேவனுடைய மகா வல்லமை வெளிப்பட்டது என எழுதினார் (எபே.1:19-22).

 

பிலிப்பிய கிறிஸ்தவர்களுக்கு எழுதிய நிருபத்திலும் “இந்த உயிர்த்தெழுதலின் வல்லமையை இன்னமும் அதிகமாய் தான் அறிந்துகொள்ள வேண்டும் என்பதே தன்னுடைய தீராத வாஞ்சை!” எனக் குறிப்பிட்டார் (பிலிப்பியர் 3:10).

 

“இந்த வல்லமையே" பரிசுத்தாவி சீஷர்கள் மீது வரும்போது அவர்கள் பெறப்போகும் வல்லமை என்பதை இயேசு குறிப்பிட்டார் (அப்போஸ்தலர் 1:8), அந்த வல்லமை, ஆவிக்குரிய மரணத்திலிருந்து ஜீவனைக் கொண்டுவரும் உயிர்த்தெழும் வல்லமையாயிருக்கிறது! இவ்வாறு, நாம் அனைவரும் தேவனுடைய ஜீவனில் தொடர்பு கொள்ளவே ஆண்டவர் விரும்புகிறார். ஆம் சகோதரனே, நீங்கள் அபிஷேகம் பெற்றதற்கு இதுவே அடையாளம்! சகோதரியே, நீங்கள் அபிஷேகம் பெற்றதற்கு இதுவே அடையாளம்!! நாம் எங்கு

சென்றாலும் மரணத்திலிருந்து ஆவிக்குரிய ஜீவனைக் கொண்டு வருவதற்கே வல்லமை பெற்றவர்களாய் இருக்கவேண்டும். இதைத் தவிர ஏதோ சில அனுபவங்கள் அல்லது பாஷை பேசுதல்... அபிஷேக வல்லமைக்கு அடையாளம் அல்லவே அல்ல!!

 

இந்த ஜீவன் தரும் ஊழியத்தைத்தான் நாம் நிறைவேற்றிக் கொண்டிருக்கிறோமா? “இதுவே திராவக பரிசோதனையாய், நாம் அபிஷேகம் பெற்றதையும் அறிந்துகொள்ள” வகை செய்கிறது!! இன்றைய திரளான கிறிஸ்தவர்கள் ஜீவனைத் தரும் ஊழியத்திற்கு பதிலாய் மரணத்தைத் தரும் ஊழியத்தைத்தான் செய்கிறார்கள். மறுபடியும் பிறந்த கிறிஸ்தவர்கள் என சொல்லிக்கொண்டு சண்டையிடுவதையும், நேர்மையற்றிருப்பதையும், கிறிஸ்துவைப்போல் அல்லாத பழக்கங்களை கொண்டிருப்பதுமாகிய இவர்களுடைய ஜீவியத்தைக் கண்ட புறஜாதிகள், ஆண்டவரிடம் ஈர்க்கப்படுவதற்குப் பதிலாக ஆண்டவரை விட்டு தூர விலகியே செல்கிறார்கள்! இவ்வாறு, நம் நடத்தையின் மூலமாய் ஆண்டவரின் நாமத்திற்கு நிந்தை கொண்டு வந்த நமது ஜீவியத்திற்காக, தரைமட்டும் தாழ்த்தி தேவனிடத்தில் மன்னிப்பு கேட்போமாக!

 

“சுவிசேஷ ஊழியம்” பெற்றிருப்பதற்காக மாத்திரமே நாம் மேன்மை பாராட்டாது இருக்கக்கடவோம். நம் யாராயிருந்தாலும், விழிப்புள்ள ஜீவியம் செய்யவில்லையென்றால், சர்தை சபையின் துயர நிலைக்கே வந்துவிடுவோம்! அவர்கள் உயிர் உள்ளவர்கள் என்ற பெயர் பெற்றிருந்தும் “செத்தவர்களாய்” இருந்ததே அந்த கொடிய நிலையாகும்!! (வெளி. 3:1). 

 

நம் விசுவாச அறிக்கையும், வேதபூர்வமான உபதேசங்களுக்கு ஒப்புதல் தரும் நம் கையெழுத்தும் சரியாய் இருப்பது போதுமானதல்ல! இவ்வித உபதேச ஒப்புதல் கையெழுத்துக்களை பிசாசுகூட தாராளமாய் போட்டுவிடுவான்! ஏனென்றால், வேதத்தை அவன் நன்கு அறிந்திருக்கிறபடியால் இன்றைய தாறுமாறான “நவீனத்தை” அவன் சார்ந்து கொள்வதில்லை. ஆம், உபதேச ரீதியில் அவன் முழுவதுமாய் சரியாய் இருக்கிறான்!! ஆகவே, நான் உபதேச ரீதியில் சரியானவன் என கூறிக்கொள்வதில் எந்த பிரயோஜனமும் இல்ைைல!! உபதேசங்கள் முக்கியமானது தான். உபதேசங்களின் தரத்தை குறைப்பதை தேவனும் அருவருக்கிறார். இருப்பினும், உபதேசத்திற்கு மேலாக தேவன் கணக்கிடுவதெல்லாம் "ஆவிக்குரிய ஜீவனை தரும் ஊழியத்தை நாம் செய்கிறோமா? இல்லையா?” என்பதுதான்.

 

அப்போஸ்தலனாகிய பவுல் கூறும் பொழுது “தேவனுடைய கிருபையினால் புதிய உடன்படிக்கையின் ஊழியக்காரர்களாக இருக்கும் நாங்கள் ஆவிக்குரிய ஜீவனைத் தந்து ஊழியம் செய்கிறோம்” என மகிழ்ச்சியுடன் அவரால் கூறமுடிந்தது (2 கொரிந்தியர் 3:5,6), தன்னை ஒரு “உபதேச ரீதியில் செம்மையானவன்” எனக் கூறிக்கொள்வதில் அவர் மேன்மை பாராட்டவில்லை. மேலும், தமஸ்கு வீதியின் தரிசன அனுபவங்களையோ அல்லது வேறு பல அனுபவங்களையோ பேசிக்கொண்டிருப்பதற்கும் அவர் நேரத்தை எடுத்துக் கொள்ளவில்லை! அதற்கு மாறாக உபதேசத்தின் மூலமாய் தான் பெற்ற விசுவாசத்தையும், தன் ஆவிக்குரிய அனுபவத்தையும் வெளிப்படுத்தி, ஆவிக்குரிய மரண சூழ்நிலை கொண்ட இடங்களிளெல்லாம் தொடர்ச்சியாக “ஜீவனைத் தந்து” ஊழியம் செய்ததிலே அவர் மகிழ்ச்சி கொண்டார்!!

 

பவுலின் ஊழியத்திலோ அல்லது எலிசாவின் ஜீவியத்திலோ வல்லமை மங்கியதேயில்லை! இன்றுள்ள அநேக தேவ ஊழியர்களைப் போல் “போன வருடங்களில் இருந்த அபிஷேகத்தைவிட இப்போது உள்ள அபிஷேகம் குறைந்திருக்கிறது” என்ற நிலை இவர்களிடம் இருந்ததேயில்லை! அதேபோல், பவுலும் எலிசாவும் இப்போது பேச முடிவதெல்லாம் “கடந்த வருடங்களில் தேவன் எங்களுக்கு என்ன செய்தார்!" என 'கடந்த காலத்தில் மேன்மை பாராட்டும் கேடான நிலையுமில்லை!

 

மாறாக, “இன்று அவர்கள் பெற்ற அபிஷேக மகிழ்ச்சியும், தேவ வல்லமையும் அவர்கள் வாழ்வில் என்றென்றுமாய் தங்கியிருந்தது! உருகி, உருகுலைந்ததாயிராமல் ஆவிக்குரிய பெலனில் வளர்ந்து வளர்ச்சி கண்டார்கள் அவர்கள் நாட்கள் எவ்வளவோ, அவ்வளவாய் இருந்தது அவர்களுடைய பெலன்!”

 

நண்பகலின் சிகரமான வெளிச்சத்தைக் காணும் வெளிச்சத்தின் மேல் வெளிச்சமாய் பிரகாசித்து முன்னேறினார்கள். நாம் ஜீவிப்பதற்கு இதுவன்றோ பாக்கியமான வழி! தன் பிள்ளைகள் அனைவரும் இந்த ஒளியின் வளர்ச்சி பாதையில் நடந்து செல்வதற்கே தேவன் விரும்புகிறார் (நீதிமொழிகள் 4:18).

 

எலிசா தேவனோடு தொடர்பு கொண்ட வாழ்க்கையை தொடர்ச்சியாக வாழ்ந்தபடியால், அவன் சென்ற இடமெல்லாம் “மரணத்திலிருந்து ஜீவனை கொண்டுவர” அவனால் முடிந்தது. ஆகவேதான், பிரச்சனைகளும், தேவைகளும் நிறைந்த ஜனங்கள் அவனைத் தேடி வந்தார்கள். இதற்கு மாறாக, தனக்கொரு ஊழியம் தேடி அவன் சென்றதில்லை! தன் பெயரை தெரிவித்து ஊழியத்திற்கு அழைக்கும்படி “கூட்ட- ஒழுங்கு அமைப்பாளர்களிடமும்” அவன் சென்றதில்லை! இது போன்ற யாதொரு மனுஷீக பிரயாசமும் இல்லாமல், ஊழிய சந்தர்ப்பங்கள் ஏராளமாய் அவனைத் தேடிவந்தன!!

 

இதே உன்னத நிலையில்தான் யோவான் ஸ்நானகனும் திகழ்ந்தார். இந்த யோவான்ஸ்நானகன் தன்னைப்பற்றி ஒருபோதும் விளம்பரம் செய்ததில்லை! யாதொரு அற்புதமும் நிகழ்த்தியதில்லை! ஆனால், எருசலேமிலிருந்ததும், யூதேயாவின் எல்லாப் பகுதிகளிலிருந்தும், யோர்தானைச் சுற்றியிருந்த பட்டணங்களிலிருந்தும் நீண்ட பயணங்கள் மேற்கொண்டு “அவன் பேசுவதைக் கேட்க” ஜனங்கள் வந்தார்கள்!

 

யார் இந்த தேவமனிதர்கள்? அபிஷேகிக்கப்பட்டவர்கள். . . அந்த அபிஷேகத்தில் தொடர்ச்சியாய் வாழ்ந்தவர்கள்! இது ஒன்றே அதன் ரகசியம்! ஆவியின் அபிஷேகம் இத்தனை முக்கியம் நிறைந்ததாய் இருக்கும் பட்சத்தில், இந்த அபிஷேகத்தை, தன்னுடைய பிள்ளைகள் எல்லோருக்கும் தேவன் ஏன் தரவில்லை? அதற்கு ஒரே காரணம், இவர்களில் வெகுசிலர் மாத்திரமே “எந்த கிரயத்தையும் செலுத்திட மனதுடையவர்களாய் இருக்கிறார்கள்” என்பதுதான்.

 

எலிசா ஏன் அபிஷேகிக்கப்பட்டான் என்ற கேள்விக்கு குறைந்த

பட்சம் மூன்று காரணங்கள் உண்டு.

 

  1. அவனுடைய தாகம் :

 

எலிசா “அபிஷேகத்தின்மீது தாகம் கொண்டிருந்தான்” என்ற உண்மையை ஒருவராலும் சந்தேகித்திட முடியாது! இவ்வுலகத்தில் இருக்கும் எதைக்காட்டிலும் ' அபிஷேகத்தின்மீது' சொல்லி முடியாத தாகத்தை எலிசா பெற்றிருந்தான்.

 

இவனுக்கு இருந்த தாகத்தை எலியா சோதித்துப் பார்த்த நிகழ்ச்சியை 2 இராஜாக்கள் 2:1-10 வசனங்களில் நாம் வாசிக்கிறோம். முதலாவதாக, தான் மாத்திரம் முன்நோக்கிச் சென்று கொண்டிருக்க எலிசாவை கில்காலில் தங்கிவிடும்படி கூறினான். ஆனால், எலிசாவோ எலியாவை விட்டுப் பிரிந்து செல்ல மறுத்துவிட்டான்! இதன் பின்பு எலியா அவனை பெத்தேலுக்கு மேற்குத் திசையில் 15 மைல் தூரத்திற்கு நடத்தி சென்றான். .. பின்பு, மீண்டும் எரிகோவிற்கு 12 மைல் திரும்பி வரச்செய்தான். .. பின்பு, யோர்தானுக்கு கிழக்கே 5 மைல் தூரம் நடத்தினான்! இவ்வாறு எலிசாவின் வைராக்கியத்தையும், வாஞ்சையையும் ஒவ்வொரு ஸ்தலத்திலும் எலியா சோதித்துப் பார்த்தான். கடைசியாக “நான் பூமியிலிருந்து எடுக்கப்படும் பொழுது நீ விரும்பும் ஒரேயொரு விண்ணப்பம் மாத்திரமே அருளப்படும்” என எலிசாவிடம் எலியா கூறினான். அதற்கு எலிசா சற்றும் தயங்காமல் “நான் விரும்புவதெல்லாம் ஒன்றேயொன்றுதான்! அதற்காகவே இவ்வளவு தூரம் நான் உம்மை பின்பற்றி வந்திருக்கிறேன். ஆகவேதான் நீர் என்னை உதறிவிட முயற்சித்த போதெல்லாம் விடாப்பிடியாய் உம்மைப் பின்பற்றினேன்! எனக்கு உம்முடைய ஆவியில் இரட்டிப்பான பங்கு வேண்டும்!!" எனக் கூறினான்.

 

ஆம், இந்த எலிசா அபிஷேகத்தை எத்தனை முழு இருதயமாய் நாடினான்! தான் விரும்பிய பங்கில் சிறிது குறைந்தாலும் திருப்தி காண மறுத்துவிட்டான்! இவ்வாறு, அவன் எதை வாஞ்சித்துக் கேட்டானோ அதை அவன் பெற்றுவிட்டான்!!

 

எலியா இந்த எலிசாவை நடத்தியது போலவே நம்மையும் தேவன் நடத்தி “பரிசுத்தாவியின் பூரண அபிஷேகத்திற்கு குறைவாய் வேறுயாதொன்றின்மீதும் நாம் திருப்தியடைகிறோமா?”என்பதை சோதித்துப் பார்க்கிறார். வேறு யாதொன்றின்மீதும் நமக்குத் திருப்தி ஏற்பட்டால் அதை மாத்திரமே பெற்றுக்கொள்ள தேவன் அனுமதித்து விடுவார்! தன் வீர-தீர, அழகு-சௌந்தரியத்தைக் கொண்டு எதையும் சாதித்துவிடலாம் என எண்ணிடும் விசுவாசிகளுக்கு “தன் அபிஷேகத்தை” தரவே மாட்டார்!

 

வேறு எதைக் காட்டிலும் நமக்கு மிகுந்த தேவையாயிருப்பது “இது ஒன்றுதான்” என நாம் உணர்ந்திருக்கிறோமா? எலிசாவைப் போல் இந்த ஒன்றைப் பெற்றுக்கொள்ளும் வரை ஆண்டவரை விடாப்பிடியாய் தொடர்ந்திட நம்மால் கூடுமா? அன்று பெனியேலில் யாக்கோபு கூறியதைப் போல் ஆண்டவரே, நீர் என்னை இந்த ஆசீர்வாதத்தினால் ஆசீர்வதித்தாலொழிய உம்மை நான் போகவிடேன்!” என நாம் மெய்யாகவே கூறிட முடியுமா? பரிசுத்தாவியின் வல்லமையையும், உயிர்தெழும் வல்லமையையும் இவ்வாறு தீராத வாஞ்சையோடு தேடுவீர்களானால், நாம் நிச்சயமாய் அதைப் பெற்றுக்கொள்வோம்! அப்போது நாமும், “இஸ்ரவேல்” என அழைக்கப்பட்டு தேவனிடத்திலும் மனுஷரிடத்திலும் மெய்யான வல்லமை பெற்றிருப்போம்!!

 

நம் ஜீவியத்தில் தோல்வியும் மனச்சோர்வும் வருவதற்கு தேவன் அவ்வப்போது அனுமதிக்கத்தான் செய்கிறார்! அது ஏனென்றால் “நமக்கு எவ்வளவாய் இந்த அபிஷேகம் தேவையாயிருக்கிறது!” என்ற அவசியத்தை நாம் உணர்ந்துகொள்ளும்படிக்கேயாகும். நாம் எவ்வளவுதான் உபதேச நிறைவு பெற்றிருந்தாலும், பல்லாண்டுகளாய் பரிசுத்தாவியானவர் நம்மிடத்தில் தங்கியிருந்தாலும்.. இன்னமும் தேவ ஆவியானவர் நம்மீது வல்லமையாய் தொடர்ந்து தங்க வேண்டும் என நாம் உணர்வடைந்திடவே தேவன் விரும்புகிறார்.

 

அபிஷேகம் பெறுவதொன்றும் அவ்வளவு எளிதான காரியம் அல்ல! தன்மீது இருந்த அபிஷேகத்தை எலிசா விரும்பியதை எலியா கேட்டவுடன், “ஓ, இவ்வளவுதானா? இங்கே முழங்கால்படியிடு, நான் உன் தலைமீது என் கையை வைத்தவுடன் நீ அதை பெற்றுவிடுவாய்!' எனக் கூறவில்லை. அதற்கு மாறாக எலிசாவிடம் “மிகக் கடினமான ஒன்றை நீ கேட்டுவிட்டாய்” என்றே எலியா கூறினார். ஆம், அபிஷேகம் பெறுவது கடினமான காரியம்தான்! அதற்கு ஓர் விலைக்கிரயம் செலுத்தப்பட வேண்டும். அதைப் பெறுவதற்காக இவ்வுலகத்தில் உள்ள யாதொன்றையும் வெறுத்துவிட நாம் ஆயத்தமாய் இருக்க வேண்டும்!

 

அபிஷேகத்தைப் பெறுவதற்கு இவ்வுலகில் உள்ள பணம், வசதி, சொகுசு, புகழ், பிரபல்யம் மற்றும் கிறிஸ்தவ ஊழியத்தில் பெற்றிடும் சாதனைகளையும் விட “அபிஷேகத்தை” நாம் அதிகமாய் வாஞ்சிக்க வேண்டும்! இதுவே மெய்யான தாகத்திற்கு அர்த்தமாகும். இந்த மெய்யான தாகநிலைக்கு நாம் வந்துவிட்டால், நாம் உடனே இயேசுவிடம் சென்று பரிசுத்தாவியைப் பருகிவிடலாம்! வேதம் வாக்குரைத்தபடி ஜீவநதிகள் நம் உள்ளத்திலிருந்து பாய்ந்து சென்று, மரணத்திலிருந்து ஜீவனை நாம் செல்லும் இடமெல்லாம் கொடுத்துவிடும்! (யோ 7:37-39; எசே.47:8,9).

 

நாம் அபிஷேகத்தைப் பெற்றுவிட்டால், அதை எக்காரணம் கொண்டும் இழந்துவிடாதிருக்க மிகுந்த கவனம் கொண்டிருக்க வேண்டும்!

 

அவ்வாறு கவனமாய் இல்லையென்றால், நாம் எப்படிப் பெற்றோமோ அதேபோல் இழந்துவிடவும் முடியும்! ஆகவே, அன்பற்ற குற்றச்சாட்டுகள் அல்லது பொருளற்ற சம்பாஷணைகள் அல்லது அசுத்தமான கற்பனைகள் அல்லது பெருமையான எண்ணங்கள் அல்லது இருதயத்தின் கசப்புகள் ஆகிய யாதொன்றிலும் ஈடுபடாதிருக்க நாம் மிகுந்த கவனம் கொண்டிருக்க வேண்டும். அவ்வித கவனம் இல்லையென்றால், அபிஷேகம் நம்மைவிட்டுப் போய்விடும்!!

 

அப்போஸ்தலனாகிய பவுல் 1 கொரிந்தியர் 9:27-ல் கூறும்போது, “மற்றவர்களுக்குப் பிரசங்கிக்கிற நான் தானே ஆகாதவனாய்ப் போகாதபடிக்கு என் சரீர அவயவங்களை ஒடுக்கிக் கீழ்ப்படுத்துகிறேன்” எனக்கூறினார். பல சபைகளை ஸ்தாபித்து அநேக அற்புதங்களைச் செய்து தேவனால் வல்லமையாய் உபயோகிக்கப்பட்ட இந்த மாபெரும் அப்போஸ்தலன்கூட “தன் சரீர அவயவங்களில் கவனமாயிராவிட்டால்” தேவனால் புறக்கணிக்கப்படும் அபாயத்தில் இருக்கும் நிலையை நான் சிந்தித்து சொல்லொண்ணா ஆச்சரியமடைகிறேன்! இந்த அப்போஸ்தலனுக்கே இவ்வித நிலையென்றால், நாம் எத்தனை கவனமாய் நின்றிட வேண்டும்! ஆகவே, “ஆண்டவரே, என் ஜீவியத்தில் நான் எதை இழந்தாலும், உமது அபிஷேகத்தை நான் ஒருபோதும் இழந்துவிடக் கூடாது!” என்ற ஜெபமே நம்முடைய ஜெபமாய் இருக்கக்கடவது!!

 

  1. அவன் மனநோக்கத்தில் தூய்மை :

 

எலிசா ஏன் அபிஷேகிக்கப்பட்டான்? என்ற கேள்விக்கு இரண்டாவது காரணம், “அவனுடைய மனநோக்கங்கள் தூய்மையாயிருந்தது” என்பதுதான். தேவனுடைய மகிமை ஒன்றே அவனுடைய நிரந்தர அக்கறையாய் காணப்பட்டது. அவனுடைய மனநோக்கத்தைக் குறித்து எந்த இடத்திலும் விவரித்துக் கூறப்படவில்லை. ஆனால், அவன் ஜீவிய நிகழ்ச்சிகளை நாம் வாசிக்கும்போது அவன் மனதில் குடிகொண்டிருந்தது என்ன என்பதை பகிரங்கமாய் காணமுடிகிறது! தேவ ஜனத்திற்கு இருந்த தேவையைக் கண்டு அவன் நெஞ்சம் பாரம் கொண்டது! தனக்கு முன் சென்ற எலியாவைப் போலவே, தேவனுடைய நாமத்திற்கு ஏற்பட்ட நிந்தை அவன் மனதை வெகுவாய் பாதித்தது! இவ்வாறு தன் தேசத்தின் மீதிருந்த தேவையை, தேவனுடைய ஊழியத்தின் மூலமாய் பூர்த்தி செய்வதற்கும், மகிமையுள்ள கர்த்தருடைய நாமத்திற்கு உண்டான நிந்தையை அகற்றுவதற்கும் “அபிஷேகத்தை" தீராத ஏக்கத்தோடு நாடினான்!!

 

இன்று ஏராளமான தேவனுடைய பிள்ளைகள் அபிஷேகம் பெறாமல் இருப்பதற்கு காரணம், அவர்களிடம் இருக்கும் தூய்மையற்றதும், சுயநலமுமான மனநோக்கங்களேயாகும்! இன்றைய திரளான கிறிஸ்தவர்கள், தங்கள் வெளிப்புறத்தில் சரியாய் இருந்தால் திருப்தியான மகிழ்ச்சியடைந்துவிடுகிறார்கள். ஆனால், தேவனோ அவர்களுடைய அந்தகரணத்தில் உண்மையாயிருக்கவே நாடுகிறார்! அவருடைய மகிமைக்காக நாம் கரிசனை கொண்டிருக்கிறோமா? அல்லது நம் சொந்த மகிமைக்காக நாம் கரிசனை கொண்டிருக்கிறோமா? அவருடைய நாமத்திற்கு ஏற்பட்ட நிந்தையைக் குறித்து நாம் மனவேதனை அடைகிறோமா? என்பதையும் காண்கிறார்!

 

இன்று நம் தேசத்தில் தேவனுடைய நாமம் நிந்திக்கப்படுவதை கண்டு நம் இருதயம் பாரமடையாமலும், வேதனையடையாமலும் இருந்தால் "நம்மை எவ்வாறு தேவன் அபிஷேகிக்க முடியும்?” என்றே நான் வியப்படைகிறேன்! எசேக்கியேல் 9:1-6 வசனங்களில், சில குறிப்பிட்ட ஜனங்களை “தனக்குரிய சொந்த ஜனமாய்” தேவன் அடையாளம் இட்டதை நாம் வாசிக்கிறோம். தேவஜனத்திடம் இருந்த அருவருப்பான பாவங்களினிமித்தம் பெருமூச்சு விட்டு அழுதவர்களையே தேவன் அடையாளம் இட்டார்! ஏனெனில், அவர்களுடைய இருதயங்கள் கர்த்தருடைய நாமத்தின்மேல் அக்கறை கொண்டு, அவரை மாத்திரமே மகிமைப்படுத்துவதற்கு மிகுந்த வாஞ்சை கொண்டதாய் இருந்தது!!

 

  1. அவனிடம் உலக சிநேகம் இல்லை :

 

எலிசா அபிஷேகிக்கப்பட்டதற்கு மூன்றாவது காரணம் "அவனிடம் உலக சிநேகம் சிறிதேனும் இல்லை!” என்பதுதான். எலிசா நாகமானோடு ஈடுபட்ட செயலிலிருந்து இதை நாம் வெளிப்படையாய் அறிய முடிகிறயது. தான் பெற்ற சுகத்திற்காக அவன் பணத்தை வாரித் தந்த போது, தான் செய்த ஊழியத்திற்கு எந்த சம்பளத்தையும் பெற அவன் மறுத்துவிட்டான். இந்த உலகத்தின் மீதோ அல்லது பணத்தின் மீதோ எலிசாவிடம் துளியளவு விருப்பமும் காணப்படவில்லை. கர்த்தருடைய ஊழியத்திற்கு “சுய-ஆதாயத்தை” அவன் ஒருபோதும் நாடவில்லை.

 

ஆனால் இதற்கு நேர்மாறான குணாதிசயத்தை கேயாசி நமக்கு வெளிப்படுத்தியிருக்கிறான். இந்த கேயாசி, எலியாவிற்கு எப்படி எலிசா உதவிக்காரனாக இருந்தானோ அதுபோலவே எலிசாவிற்கு இவன் உதவிக்காரனாய் இருந்தான்! எலியாவினுடைய ஆவியின் இரட்டிப்பான பங்கை எலிசா பெற்று, எலியாவின் ஊழியத்தை தொடர்ந்து செய்திடக் கூடுமானால்... அதேபோல், எலிசாவின் ஆவியை கேயாசி பெற்று, எலிசாவின் ஊழியத்தை தொடர்ந்து செய்திருக்க நிச்சயமாய் கூடும்! ஆனால், அவனோ அபிஷேகத்தைப் பெறாமல், அதற்கு பதிலாய், குஷ்டரோகத்தைப் பெற்றான்! ஏன்? ஏனெனில், தேவன் அவனுடைய இருதயத்தைக் கண்டார்!! வெளித்தோற்றத்தில் ஆவிக்குரியவனைப் போல் எவ்வளவுதான் தோற்றம் அளித்தாலும் கேயாசியின் இருதயத்தின் ஆழத்தில் “சுய-ஆதாயத்தின் விருப்பமே” தேங்கிக் கிடந்தது. ஆரம்ப கட்டத்தில் கர்த்தருடைய ஊழியத்தை மிகுந்த உத்தமத்தோடுதான் செய்தான். ஆனால் வெகு சீக்கிரத்தில் அதே ஊழியத்தை “பொருளாதார லாபத்தைப் பெறும் அடிப்படையில்" ஊழியம் செய்திட தொடங்கிவிட்டான். பொருளாதார ஆஸ்திகளையும், அதோடு சேர்த்து அபிஷேகத்தையும் தான் பெற்றுகொள்ள முடியும் என்றே அவன் எண்ணிவிட்டான்!! ஆனால், அவனோ பெரும்பிழை செய்தவனாய் நின்றான்! ஆ இது பரிதாபம்!!

 

நம் ஸ்தானத்தையோ அல்லது ஊழியத்தையோ கொண்டு யாதொரு சபையில் அல்லது யாதொரு கிறிஸ்தவ ஸ்தாபனங்களில், ஆதாயம் தேட முயற்சிக்கும் கேட்டிலிருந்து ஆண்டவர் நம்மை விடுவிப்பாராக!

 

ஒருசமயம் ஒரு அவிசுவாசியான நண்பர் என்னிடம் வந்து “பரவாயில்லையே! இன்றைய நாட்களில் கிறிஸ்தவ ஊழியம் செய்வது உண்மையிலேயே லாபகரமான தொழிலாகத்தான் தோன்றுகிறது!” என கூறினார். மேலும், ஒரு சில பிரபல்ய ஊழியர்களை குறிப்பிட்டுக் கூறி, “இவர்கள் உலக அலுவலில் இருந்தபோது பெற்ற சம்பளத்தைப் பார்க்கிலும், பல மடங்கு இன்று சம்பாதிக்கிறார்கள்! அமெரிக்காவிலிருந்து இவர்களுக்கு ஏராளமான பணம் வருகிறது! ஓர் பெரிய பங்களாவை தங்கள் ஆடம்பர ஜீவியத்திற்கென கட்டியிருக்கிறார்கள்! தங்களை சுவிசேஷ ஊழியர்களாக அழைத்துக் கொள்ளும் இவர்களுக்கு, 'பரலோகத்திலும் பங்களா' இருப்பதாகக் கூறுகிறார்கள்!!'' என வியப்புடனும், பல்வேறு கேள்விக்குறியோடும் என்னிடம் கூறினார். இதுபோன்றவர்கள், தேவனை மெய்யாகவே சேவிக்கிறார்கள் என உங்களால் கூறமுடியுமா? இல்லை, ஒருக்காலும் இல்லை!!

 

நாம் என்ன சொல்லுவோம்? நாம் செய்திடும் கிறிஸ்தவ ஊழியம் நமக்குப் பொருளாதார லாபத்தை ஈட்டித் தருவதாக இருந்தால்.… சகோதரரே, நம் ஜீவியத்தை மீண்டுமாய் ஆராய்ந்து பார்த்து “நான் மெய்யாகவே இயேசுவைப் பின்பற்றிதான் வாழ்கிறேனா?” என்பதைக் காணவேண்டியது மிகவும் அவசியமாகும்! நாம் முழுமனதுடன் இவ்வாறு ஆராய்ந்து பார்த்தால் “நம்மில் அனேகர் இயேசுவைப் பின்பற்றி ஜீவிக்கவில்லை!” என்ற உண்மையே புலப்படும்!!

 

ஒருசமயம் வாட்ச்மேன் நீ கூறும்போது “நாம் தேவனுடைய பணிக்கென சென்ற  திசையில் விலைக்கிரயம் ஏதும் இல்லையென்றால், தியாகம் ஏதும் இல்லையென்றால்... நாம் ஊழியத்திற்கென அழைக்கப்பட்ட நமது அழைப்பு மெய்யாகவே தேவனிடத்திலிருந்து தான் வந்ததா? என்ற தீர்க்கமான கேள்வியை நமக்குள் கேட்டுப் பார்க்க வேண்டியது மிகவும் அவசியம்!” எனக் கூறினார். நாம் யாவருமே கீழ்காணும் கேள்விகளை நமக்குள் கேட்டுப் பார்ப்போம் : “இந்த உலகத்தை நேசிக்கும் நேசம் ஏதும் என்னிடத்தில் உண்டா? இவ்வுலக இன்பங்களையும், ஐசுவரியங்களையும் நேசித்திடும் எண்ணம் உடையவனாய் நான் இருக்கிறேனா?” இக்கேள்வியின்படி, நம்மில் யாதேனும் உலக சினேகம் இருக்குமென்றால் “தேவனால் நம்மை நிச்சயமாய் அபிஷேகித்திட முடியாது” என்ற உண்மையை நாம் யாவரும் அறிந்து கொள்வோமாக!!

 

ஜெயம் பெற்ற மீதியானவர்கள் :

 

இன்றும் “பரிசுத்தாவியின் அபிஷேகத்தைப் பெறுவதற்கும், பெற்றுக்கொண்ட அந்த வல்லமையை என்றும் தங்களில் பாதுகாத்துக் கொள்வதற்கும் எந்த விலைக்கிரயத்தையும் செலுத்திட ஆயத்தமாயிருக்கும்”புருஷர்களையும் ஸ்திரீகளையும் நம் தேசத்தில் காண்பதற்கே தேவன் தவிப்புடன் இருக்கிறார்.

 

“யோர்தான் நதியின் பெருவெள்ளம்”- இன்று நம் தேசத்தில் இருளின் சத்துவங்கள் கிரியை நடப்பித்து ஆட்கொண்டிருக்கும் ஆவிக்குரிய மரணத்தை” சுட்டிக்காட்டுவதாகவே இருக்கிறது. இந்த அந்தகார இருளைக் கிழித்து, மரணத்திலிருந்து ஜீவனைக்கொண்டு வரும் “ஜெயம் பெறும் மீதியானவர்களையே” தன் ஜனத்தின் மத்தியில் தேவன் தேடிக் கொண்டிருக்கிறார்! “ஆண்டவராகிய இயேசு கிறிஸ்துவின் நாமத்தை” மிகுந்த தைரியத்துடன் பிரயோகித்து, சத்துருவின் சத்துவங்களைச் சிதறடித்து விரட்டும் ஜனத்தையே தேவன் எதிர்நோக்கிக் கொண்டிருக்கிறார்! எந்த இடையூறானாலும் அதனிமித்தம் சற்றேனும் பாதிக்கப்படாத ஜனத்தையே அவர் காண விரும்புகிறார்! இவ்வாறு, எதிர்கொள்ளும் எந்த யோர்தானின் இருளையும் கிழித்து “கர்த்தருக்கு வழியை” ஆயத்தம் செய்திடும் நெஞ்சுறுதி கொண்ட ஜனத்தைக் காணவே தேவன் விரும்புகிறார்!! அவ்வாறு, தேவனுடைய கண்கள் தான் ஏங்கித் தேடிய ஜனங்களைக் கண்டு விட்டால், நீண்ட காலமாய் வாஞ்சித்துக் கொண்டிருக்கும் எழுப்புதல் நம் சபைகளில் ஏற்பட்டுவிடும்!

 

ஆம், அபிஷேகத்தினால் மாத்திரமே நம் தேசத்தில் காரிருளைப் படரச் செய்யும் சத்துருவின் பிடரியை முறித்துவிட முடியும்! (ஏசாயா 10:27).


இயேசுவின் நாமம் நமக்கே கையளிக்கப்பட்டுவிட்டது! ஆனால், அந்த நாமத்தை தாங்கிச் சென்றிட வகை செய்திடும் அபிஷேகம்" நம்மிடத்தில் உண்டா? நம் ஜீவியத்திலும், நம் ஊழியத்திலும் இந்த பரிசுத்தாவியின் வல்லமைக்காக நாம் தீராத தாகம் கொள்வோமாக! அப்போது மாத்திரமே, இப்பூமியில் நாம் தேவனை மகிமைப்படுத்தவும், அவருடைய சித்தத்தை நிறைவேற்றவும், அவரது ராஜ்ஜியத்தைக் கொண்டுவரவும் முடியும்!! இவ்வாறு பரிசுத்தமாயும், தாழ்மையாயும், ஆவியில் நிறைந்தும் வாழ்வதற்கு “எந்த விலைக்கிரயத்தையும்” செலுத்திட தம் உள்ள புருஷர்களையும், ஸ்திரீக நம் மத்தியில் தேவன் கண்டு கொள்வாராக! ஆமென்.

அதிகாரம் 5
ஓர் ஏக்கம் மிகுந்த ஜெபம்!--

நாம் வாழும் இந்நாட்களில் “மெய்யான தேவ மனிதர்கள் இல்லையே?” என்ற அங்கலாய்ப்பிற்கு, கடந்த 20-ம் நூற்றாண்டின் தீர்க்கதரிசிகளில் ஒருவராக வாழ்ந்த பரிசுத்தவான் A.W.டோசர் அவர்களின் ஜெபத்தை என்னோடுகூட நீங்களும் ஜெபித்திடும்படி அன்பாய் வேண்டுகிறேன்.

 

இந்த ஜெபத்தின் தலைப்பு: "ஓர் சிறிய தீர்க்கதரிசியின் ஏக்கமான ஜெயம்"

 

ஓ என் கர்த்தாவே, உம் அழைப்பின் குரல் கேட்ட நான் அஞ்சி நடுங்குகின்றேன்! அழிவு நிறைந்த இந்நாட்களில் மாபெரும் பொறுப்பிற்கு என்னை அழைத்துவிட்டீர். நாங்கள் வாழும் இக்காலம் "அனைத்து தேசங்களையும், இந்த பூமியையும், வானங்களையும் நீர் அசைத்து. அந்த அசைப்பில் நிலைகுலையாதவைகள் மாத்திரமே நிலைத்து நிற்கும்” என நீர் உரைத்த காலத்திற்குள் வந்துவிட்டோம், ஓ எங்கள் தேவனாகிய கர்த்தாவே, நீர் தாழ குனிந்து என்னையும் உம்முடைய ஊழியனாய் கனப்படுத்திவிட்டீர்! ஆரோனைப் போல் ஒருவன் தேவனால் அழைக்கப்பட்டாலொழிய இந்த மகிமையான கனத்தை ஒருவன் தானாகவே தனக்கு எடுத்துக்கொள்ள முடியாதே! என்னையும் உம் தூதுவனாய் நியமனம் செய்து. முரட்டாட்ட இருதயமும், செவித்தினவும் கொண்ட ஜனங்கள் மத்தியில் என்னை அனுப்பியிருக்கிறீர். இந்த ஜனங்கள் தங்கள் சொந்த எஜமானாகிய உம்மையே புறக்கணித்து விட்டார்கள்.... அப்படியிருக்க, உமது வேலைக்காரனாகிய என்னை ஏற்றுக் கொள்வார்கள் என என்னால் எதிர்பார்க்க முடியவில்லை!

 

என் தேவனே. என் பெலஹீனத்தை நான் புலம்பி அல்லது உம் பணிக்கு தகுதியற்ற என் நிலைக்கு சோர்வுற்று என் நேரத்தை வீணடிக்க நான் விரும்பவில்லை! ஆம். பொறுப்பு என்னுடையதல்ல. அது உம்முடையதாகும். நீரோ என்னைப் பார்த்து “உன்னை நான் அறிந்திருக்கிறேன்! என்றும், உன்னை நான் ஏற்படுத்தியிருக்கிறேன்! என்றும், உன்னை நான் பரிசுத்தப்படுத்தியிருக்கிறேன்!” என்றும் சொல்லிவிட்டீர்!! மேலும் நீர் என்னைப் பார்த்து "நான் உன்னை அனுப்பும் இடங்களுக்கெல்லாம் நீ சென்று, உனக்கு நான் கட்டளையிடும் யாவையும் பேசுவாயாக!" என்றும் கூறிவிட்டீர்!! உமக்கு எதிர்வாதம் செய்திட நான் எம்மாத்திரம்? அல்லது உம் திவ்விய ஆளுகையில் நீர் என்னை தெரிந்துகொண்டதை கேள்வி கேட்பதற்கும் நான் எம்மாத்திரம்? எதையும் தீர்மானிப்பது நான் அல்ல. நீரே அனைத்தையும் தீர்மானிக்கிறீர்! அது, அப்படியே ஆகக்கடவது....... என் சித்தம் அல்ல, உம் சித்தமே செய்யப்படக்கடவது!!

 

தீர்க்கதரிசிகளின். அப்போஸ்தலர்களின் தேவனாகிய என் கர்த்தாவே, உம்மை நான் கனப்படுத்தி ஜீவிக்குமட்டும் நீரும் என்னை கனப்படுத்துவீர் என்பதை நான் உறுதிபட அறிந்திருக்கிறேன்! "என் ஜீவகாலமெல்லாம், என் அனைத்து ஊழிய காலமெல்லாம் நான் உம்மை என்றென்றும் கனம் பண்ணுவேன்” என்ற தூய்மையான உறுதி மொழியை இன்று நான் எடுத்திட எனக்கு அனுக்கிரகம் செய்தருளும்! உயர்வானாலும் தாழ்வானாலும், வாழ்வானாலும் சாவானாலும், நான் உயிர் வாழும் காலம் வரை இந்த உறுதி மொழியை நான் சிதைத்து விடாதபடி வாழவும் எனக்கு அனுக்கிரகம் செய்தருளும்!

 

என் தேவனே. இதுவே நீர் கிரியை செய்திட வேண்டிய காலம்! ஏனெனில், சத்துருவானவன் மேய்ச்சல் பள்ளத்தாக்கில் நுழைந்து ஆடுகளைப் பீறி சிதறடித்துக் கொண்டிருக்கிறான்! ஆனால், கள்ள மனம் கொண்ட மேய்ப்பர்களோ இந்நாட்களில் பெருகிப்போய், “உம் மந்தையை சூழ்ந்துள்ள அபாயத்தையும், அழிவையும் உதாசீனம் செய்து கலகலப்புடன் நின்று கொண்டிருக்கிறார்கள்!” ஆனால், உம்முடைய ஆடுகளோ இந்தக் கூலிக்காரர்களால்' வஞ்சிக்கப்பட்டு, இப்படிப்பட்ட இவர்களைப்போய் சொல்லொண்ணா உத்தமத்தோடு பின்பற்றிக் கொண்டிருக்கிறார்கள்! அந்தோ, ஓநாய்களோ இவர்களைக் கொல்வதற்கும், அழிப்பதற்கும் நெருங்கி வந்துவிட்டனர்! கர்த்தாவே, “சத்துரு நுழைவதை கண்டறியும் கூர்மையான கண்களை எனக்குத் தந்தருள உம்மைக் கெஞ்சுகிறேன். மெய்யான சிநேகிதர்களுக்கும், போலியான சிநேகிதர்களுக்கும் உள்ள வித்தியாசத்தைக்

கண்டறியும் தெளிந்த புத்தியையும் நீர் எனக்குத் தந்தருள வேண்டுகிறேன். உமக்குரியவைகளைக் காணும் "துரதிருஷ்டப் பார்வையை எனக்குத் தந்தருளி, “நான் கண்டதை” மிகுந்த உத்தமத்தோடு தைரியமாய் அறிவித்திட எனக்கு கிருபை செய்தருளும்! என்னுடைய குரல் உம்முடைய குரலைப் போலவே இருக்கும்படி செய்து, மந்தையில் உள்ள ‘ஒரு நோயுற்ற ஆடு கூட' அந்தக் குரலை அறிந்து உம்மைப் பின்பற்றிடச் செய்தருளும்!

 

ஆண்டவராகிய இயேசுவே, என்னை ஆவிக்குரிய ஆயத்தம் செய்து கொள்ளவே

உம்மண்டை இப்போது வருகிறேன். உமது கரத்தை என் மீது வைத்தருளும்! புதிய ஏற்பாட்டு தீர்க்கதரிசியின் தைலத்தினால் என்னை அபிஷேகித்தருளும்! நான் ஒரு மார்க்க வேதபண்டிதனாய் மாறி “என் தீர்க்கதரிசன” அழைப்பை இழந்துபோகாதிருக்க அருள் புரிந்தருளும்! நவீன போதகத்திற்குப் பின்னால் மறைந்திருக்கும் இருளின் சாபத்திற்கும், ஒத்தவேஷம் புரியும் சாபத்திற்கும். அசலான ஒன்றை நகல்படுத்தும் (imitate) சாபத்திற்கும், ‘பிரசித்தி பெற்ற பிரசங்கி' என பெயர் பெற விரும்பும் சாபத்திற்கும் என்னை நீங்கலாக்கி இரட்சித்தருளும். ஒரு சபையை அதன் ஜனக்கூட்டத்தை வைத்து, அதன் பிரபல்யத்தை வைத்து, அல்லது அதன் வருடாந்தர செழிப்பான காணிக்கைகளை வைத்து நிதானித்துவிடும் பெரும் பிழைக்கு, என்னைத் தப்புவித்தருளும்! நான் ஒரு தீர்க்கதரிசி என்பதையே எப்போதும் நினைவுகூற எனக்கு உதவி செய்தருளும்! நான் ஒரு வளர்ச்சிப் பணியாளன் அல்ல! மார்க்க சபைகளுக்கு உயர் அதிகாரியும் அல்ல.... நானோ. ஒரு தீர்க்கதரிசி! இந்த உணர்வே என்னில் நிலைத்திருக்கச் செய்தருளும். "திரள் கூட்டத்திற்கு நான் அடிமையாகாதிருக்க' அருள்புரியும். மாம்சீக லட்சியங்களிலிருந்தும், புகழ் பெற விரும்பும் இச்சையிலிருந்தும் என் ஆத்துமாவை மீட்டு குணமாக்கியருளும். யாதொரு பொருட்கள் மீதும் அடிமையாவதிலிருந்தும் என்னை இரட்சியும். என் மனம் வீட்டைச் சுற்றியே வலம் வந்து என் நாட்களை நான் வீணாக்காமல் இருக்க அனுக்கிரகம் செய்தருளும். உம்மைக் குறித்த பயங்கரத்தினால் என்னை எப்போதும் ஆட்கொண்டருளும்.... அதனிமித்தம் இப்போது, அந்தகார லோகாதிபதிகளின் வல்மைகளுக்கும், அதிகாரங்களுக்கும் எதிர்த்து நின்று போராடி ஜெயிக்கும்படி என்னை உந்தி நடத்தியருளும்! பெருந்திண்டிக்கும், மந்தமான தூக்கத்திற்கும் என்னை விடுவித்தருளும், இயேசுகிறிஸ்துவின் நல்ல போர்ச் சேவகனாய் நான் இருக்கும்படி “சுய-கட்டுப்பாட்டை" எனக்குப் போதித்தருளும்!

 

எவ்வித கடின வேலையையும், இப்பூமியின் வாழ்க்கையில் குறைந்த பலனையும்

நான் ஏற்றுக்கொள்கிறேன்! கஷ்டமில்லாத இடத்தையும் நான் கேட்கவில்லை. என்

வாழ்க்கையை இலகுவாக்கும் சிறுசிறு உபாயமான வழிகளுக்கு நான் குருடனாய்

இருப்பதற்கே முயற்சிப்பேன். மற்றவர்கள் இலகுவான பாதையைத் தேடினால், நானோ

அவர்களை கடினமாய் நியாயம் தீர்த்துவிடாமல் தொடர்ந்து கடினமான பாதையை

தெரிந்துகொள்ளவே முயற்சிப்பேன். எதிர்ப்பு உண்டாவதை நான் எதிர்பார்த்திருப்பேன்,

அவைகள் வரும்போது சாந்தமுடன் ஏற்றுக் கொள்ள முயற்சிப்பேன்! அல்லது, சில சமயங்களில் உமது ஊழியக்காரர்களுக்கு சம்பவிக்கும் வீழ்ச்சியைப்போல், எனக்கு அன்புள்ள ஜனங்கள் நன்றியோடு தந்திடும் வெகுமதிகளை நான் பெறும் போது.... தயவாய் நீர் என் அருகிலிருந்து அந்த வெகுமதிகளால் ஏற்படும் வீழ்ச்சியிலிருந்து என்னைக் காத்தருளும் நீர் எனக்குத் தந்த யாதொன்றையும் நான் பயன்படுத்தும்போது, அது என் ஆத்துமாவை சேதப்படுத்தாமலும், என் ஆவிக்குரிய வல்லமையை குறைத்துவிடாமலும் பயன்படுத்த எனக்கு கற்றுத்தாரும்! நீர் அனுமதித்து, சபையிலிருந்து எனக்கு கனம் வரும்படி செய்தால், “உமது இரக்கங்களுக்கு நான் தகுதியில்லாதவன்” என்ற உண்மையை நான் மறவாதிருக்கச் செய்தருளும். மேலும், என்னைக் குறித்து நான் அறிந்திருப்பதைப் போலவே, என்னை மற்றவர்களும் அறிந்துகொண்டு, தாங்கள் அளிக்க வந்த கனத்தை தராமல் இருந்துவிட்டாலும் அல்லது அதிக தகுதியுள்ள மற்றவர்களுக்கு அதைக் கொடுத்துவிடவோ செய்தாலும்...... இன்னமும் “நீர் அருளிய உமது குறைவான இரக்கங்களுக்குக்கூட நான் தகுதியற்றவன்” என்பதையே நான் மறவாதிருக்கச் செய்தருளும்!!

 

வானத்திற்கும் பூமிக்கும் தேவனாகிய கர்த்தாவே. மீதமுள்ள என்னுடைய ஆயுசு நாட்கள் அதிகமோ அல்லது குறைவோ உம் சித்தம் எதுவானாலும் என்னை முற்றிலும் உமக்கே அர்ப்பணம் செய்கிறேன்! நான் மகா கனம்பொருந்திய ஜனங்களுக்கு முன்பாக ஊழியம் செய்வதோ அல்லது எளிமையும் தரித்திரமுமான ஜனங்களுக்கு முன்பாக ஊழியம் செய்வதோ ஆகிய யாதொன்றும் “என்னுடைய தெரிந்துகொள்ளுதலாய்" இல்லாதிருக்கக்கடவது! எந்த ரகமான ஜனங்களுக்கு ஊழியம் செய்ய வேண்டும் என்ற என் சுய விருப்பத்தை நிலைநிறுத்துவதற்கு என்னால் முடியும் பட்சத்தில், நான் அப்படி செய்யாதிருக்கச் செய்தருளும்! நானோ உம் சித்தம் செய்திட வந்த உமது அடிமை! எந்த ஸ்தானத்தையும் விட அல்லது எந்த ஐசுவரியங்களையும் விட அல்லது புகழைவிட ஏன், இந்த பூமிக்கும் வானத்திற்கும் மேலான யாதொன் றையும் விட உமது சித்தமே என் இன்பமும், என் வாழ்வின் தெரிந்துகொள்ளுதலுமாய் இருக்கிறது!

 

உம்மால் தெரிந்துகொள்ளப்பட்டும், மகா உன்னத கனம் பொருந்திய பரம அழைப்பினால் நான் அழைக்கப்பட்டும் இருந்தாலும், நானோ புழுதியும் சாம்பலான மனிதன் என்பதையும், மனுஷர்களுக்கே உரிய சுபாவமான தவறுகள் அனைத்தையும் உடையவன் என்பதையும், மனுக்குலத்தை பீடித்திருக்கும் இச்சைகள் எனக்குள்ளும் இருக்கிறதென்பதையும் நான் என்றென்றும் மறவாதிருக்க கிருபை செய்தருளும்! ஆகவே என் ஆண்டவரும் மீட்பருமாகிய கர்த்தாவே, என்னை என் சுயத்திலிருந்தும் பிறருக்கு ஆசீர்வாதமாய் இருக்க நான் முயற்சிக்கும் சமயங்களில் எனக்கு நானே ஏற்படுத்திக்கொள்ளும் பல்வேறு காயங்களிலிருந்தும் என்னைக் காத்தருளும்! என்னை உமது பரிசுத்தாவியின் வல்லமையினால் நிறைத்தருளும்! அப்போது, உமது பெலத்தில் நான் தீவிரமாய் சென்று உமது நீதியையும், உம்மையும் மாத்திரமே நான் அறிவிப்பேன்! உமது வல்லமை என்மேல் நிலைத்திருக்குமட்டும், என் முழு பெலனோடு “அன்பின் மீட்பு செய்தியை” திக்கெட்டும் நான் பரப்புவேன்!

 

பின்பு...... என் அன்புள்ள ஆண்டவரே, நான் எங்கும் செல்வதற்கு முடியாமல் வயதாகி, பெலன் குன்றி, ஓய்ந்து போகையில், தயவாய் பரத்தில் எனக்கொரு இடத்தை ஆயத்தம் செய்து.... நித்திய மகிமையில் வாசம் செய்யும் உம்முடைய பரிசுத்தவான்களோடு என்னையும் ஒருவனாய் சேர்த்துக்கொள்ளும்!

 

ஆமென், ஆமென்!

 

இந்த ஜெபமே உங்கள் இருதயத்தின் ஜெபமாயும், என்னுடைய இருதயத்தின் ஜெபமாயும் இருக்கக்கடவது!!