சுபமங்கள தெய்வீக இல்லம்!

எழுதியவர் :   சகரியா பூணன்
  Download Formats:

அதிகாரம் 1
பரலோக சாயலில் தெய்வீக இல்லம்!

புதுமணத் தம்பதிகளுக்கும் சில வருடங்களுக்கு முன்பு திருமணமான தம்பதியினருக்கும் ஏற்றதோர் வார்த்தை உபாகமம் 11:18-21 வசனங்களில் நேர்த்தியாய் கூறப்பட்டிருக்கிறது “என் வார்த்தைகளை உங்கள் இருதயத்தில் பதித்து வைத்துக்கொண்டால், உங்கள் நாட்கள் பூமியின் மேல் வானம் (பரலோகம்) இருக்கும் நாட்களைப் போல நிச்சயமாய் இருக்கும்.” (KIV மொழி பெயர்ப்பு) என்பதே வாக்குத்தத்தமுள்ள மகிழ்ச்சியான வசனமாகும்!

 

தம்பதியரே “பரலோகத்தின் நாட்கள்” எப்படி இருக்கும் என்பதை சற்று யோசித்துப் பாருங்கள். அங்கு, சண்டையோ அல்லது முரண்பாடுகளோ இருப்பதில்லை.... சமாதானமும் மகிழ்ச்சியும் மாத்திரமே இருக்கும்! எல்லாவற்றிற்கும் மேலாக, பரலோகத்தின் எத்திசைக்கு ஓடினாலும் அங்கெல்லாம் அன்பு மாத்திரமே நிலைத்திருக்கும்! நீங்களும் அதுபோன்ற ஒரு குடும்பத்தை இவ்வுலகத்தில் பெற்றுக்கொள்ள முடியும். உங்கள் இல்லத்தின் ஒவ்வொரு நாளும், பூமியில் வானம் வந்து இறங்கிய நாளாகவேயிருக்கும். ஆம், ஒவ்வொரு இல்லமும் அவ்வித பரலோக சாயலின் இல்லமாய் இருக்கும் படியே தேவன் விரும்புகிறார்!

 

வேதாகமம், ஆதாம்-ஏவாள் திருமணத்தில் ஆரம்பித்து..... கிறிஸ்துவும் - அவருடைய ஜனமாகிய சபையின் திருமணத்தில் முடிவடைகிறது. ஆதாம்-ஏவாளின் முதல் திருமணத்தை தேவன் நடத்தியபோது அவர்களுடைய நாட்கள் “பூமியில் பரலோகம் வந்திறங்கிய” நாட்களாய் இருந்திடவே விரும்பினார். அந்த முதல் இல்லம் பரதேசியில் இருந்த ஏதேன் தோட்டத்தில் அமைக்கப்பட்டது. ஆனால் சாத்தானோ, அவர்களின் இல்லத்திற்குள் பிரவேசித்து அதை நரகமாக்கி விட்டான். இன்று முழு உலகத்தில் உள்ள இல்லங்களும் நரகத்தைப் போலவே இருக்கிறது!

 

இருப்பினும் இந்த இழிநிலையே, முடிவுரையல்ல.... அதற்காக நாம் தேவனை ஸ்தோத்தரிக்ககடவோம். ஆதாம் பாவம் செய்து, அதன் மூலம் சாத்தான் உருவாக்கிவிட்ட பிரச்சனைகளைத் தீர்க்கும்படி தன்னுடைய குமாரனை அனுப்புவதாகவே அவ்வேளையில் தேவன் வாக்குரைத்தார். இங்குதான் ஒரு மிகப்பெரிய சத்தியமாகிய “பிசாசுக்கு எதிராக, தேவன் எப்போதுமே நம் பட்சத்தில் இருக்கிறார்!” என்ற சத்தியம் புலப்படுகிறது. ஆதாமுடைய பாவத்திற்காக இந்த பூமியை தேவன் சபிப்பதற்கு முன்பாக “ஸ்திரீயின் மூலமாய் உண்டாகும் வித்திலிருந்து வருபவர் சாத்தானின் தலையை நசுக்குவார்!” என ஆதாமுக்கும் ஏவாளுக்கும் கூறினார். இவ்வாறு கூறிய பிறகுதான் “அவர்களுக்குரிய தண்டனையை” எடுத்துரைத்தார்!

 

சாத்தான் வந்து சகலத்தையும் துவம்சம் செய்துவிட்ட போதிலும் "தேவன் சாத்தானுக்கு எதிராக, தங்கள் பக்கமாய் நிற்பதை” ஆதாம் ஏவாள் அறியும்படி தேவன் விரும்பினார். உங்களின் யாதொருவர் வீட்டில் சாத்தான் எவ்வளவு பிரச்சனைகளை உருவாக்கியிருந்தாலும், உங்களின் அனைத்து இல்லங்களையும் மீட்கும் பணியில் தேவன் ஆர்வமுடன் நின்று கொண்டிருக்கிறார். தம்முடைய ஆதித்திட்டத்தின்படியே உங்கள் இல்லத்தை மீட்டுவந்து, அந்த இல்லத்தை “இந்த பூமியில் வானம் இறங்கியதைப்போல்” மாற்றிடவே விரும்புகிறார். ஏனென்றால், கிறிஸ்து இந்த பூமிக்கு வந் முடைய மீட்பின் பணியை நிறைவேற்றி விட்டபடியால், நம் ஒவ்வொருவருக்கும் “பரலோக சாயலின் குடும்பம்!” சாத்தியமாகவே இருக்கிறது.உருவாக்கினவர் வழங்கும் வழிமுறைகள்

 

சமீபத்தில் உற்பத்தியில் வெளிவந்த “டிஜிட்டல் கேமராவை” வாங்கிய ஒருவர், எப்போதும் உள்ள ரோல் கேமராவைப் போல் அதை பயன்படுத்தி சில படங்கள் பிடித்தார். பிறகு, தான் எடுத்தபடங்களைப் பார்த்தார். அவை அனைத்தும், தெளிவில்லாமல் மோசமாயிருந்தது! இவ்வளவு பணம் செலவழித்து வாங்கிய டிஜிட்டல் கேமராவில் எடுத்த படங்கள் அனைத்தையும் குப்பைத்தொட்டியில் போட்டுவிட்டார். இதைப் போலவே இன்றும் அநேக திருமணங்களுக்கு சம்பவிக்கிறது!

 

இந்த அவலநிலைக்கு காரணம் என்ன? அந்த நபர், டிஜிட்டல் கேமராவின் “உருவாக்கினவர் வழங்கிய வழிமுறைகளை” வாசிக்கவில்லை, அவ்வளவுதான்! விலையுயர்ந்த எந்த சாதனங்களுக்கும் “உருவாக்கினவர் வழங்கும் வழிமுறைகள்” புத்தகம் தரப்படுவதுண்டு. அவ்வாறு இருக்க, திருமணத்தை உருவாக்கிய தேவன் நமக்கு எந்த வழிமுறைகளும் கூறாமல் இருப்பது சாத்தியமா? அப்படி இல்லை, நல்ல வழிமுறைகளையே அவர் சொல்லி வைத்திருக்கிறார்! இந்த டிஜிட்டல் கேமராவை உருவாக்கியவர் வழங்கிய வழிமுறைகளைப் படிக்காமலே பயன்படுத்திய அந்த நபரைப் போலவே, திருமண வாழ்விற்கு தேவன் தந்த வழிமுறைகளை கற்றுக் கொள்ளாமலே வாழ்ந்த அநேக குடும்ப ஜீவியம், படம் சரியில்லாமல் குப்பைத் தொட்டியில் எறியப்பட்ட அந்த கேமராவின் படத்திற்கே ஒப்பாய் இருக்கிறது!!

 

இந்த டிஜிட்டல் கேமராவை வாங்கியவர் இப்போதுதான் “உருவாக்கியவர் வழங்கிய வழிமுறைகளை”கவனமாய் படித்தார். உருவாக்கியவரைவிட தனக்கு அதிகமாய் தெரியும் என்ற அகங்கார சிந்தையை தள்ளிவைத்து விட்டார். ஆனால் இன்றோ, இவ்வித மதியீனத்திற்கே அநேகர் தொடர்ந்து பலியாகி, திருமண வாழ்விற்கு “உருவாக்கியவரின் ஆலோசனைகளை" அலட்சியப்படுத்துகிறார்கள் தாங்களாகவே சிறந்த திருமண வாழ்வை வாழ்ந்து விடலாம் என்ற துணிவில், மனோதத்துவக் கலையையும் மனுஷருடைய பாரம்பரியங்களையும் “தேவனைக்காட்டிலும் மேலாக வைத்து” வழி தவறிப் போகிறார்கள்!

 

திருமண வாழ்விற்கு மிகத்தெளிவான ஆலோசனை வழிமுறைகளைத் தேவனே தந்திருக்கிறார்! அந்த சகோதரன், டிஜிட்டல் கேமராவின் வழிமுறைகளை இப்போது கவனமாய் படித்து, அதன்பின்பு எடுத்த படங்கள் அனைத்தும் மிகத்தெளிவாகவும் அழகாகவும் இருந்தது! அதுபோலவே புதிய தம்பதிகளாகிய கணவனும் மனைவியும், உருவாக்கியவரின் ஆலோசனைகளைப் பில் நடந்துவிட்டால் டிஜிட்டல் கேமராவின் அந்த அழகான படத்தைப்போலவே அவர்களுடைய திருமண வாழ்வும் சீரிய வனப்புடையதாய் மாறிவிடும்!!

 

இந்த முழு உலகத்திலும், “திருமணத்தை உருவாக்கியவரின் ஆலோசனைகள்” கொண்ட ஒரே புத்தகம் “வேதாகமம்” மாத்திரமேயாகும். நான் திருமணமாவதற்கு முன்பாகவே, பல வருடங்களாய் இந்த வேத புத்தகத்தை வாசித்து வந்திருக்கிறேன். திருமணமான பின்பு நானும் என் மனைவியும் சேர்ந்து இந்த வேதப்புத்தகத்தை வாசித்து கற்றுக் கொண்டிருக்கிறோம். எங்களின் 38 வருட திருமண வாழ்வில், "இந்த பூமியில் பரலோகம் இறங்கிய” நாட்களின் அனுபவங்களை சற்றேருசித்திருக்கிறோம். சுவிசேஷத்தின் செய்தி என்னவெனில், “நாம் இரண்டு பரலோகங்களைப்” பெற்றிட முடியும். என்பதுதான் முதல் பரலோகத்தின் சாயல், இந்த பூமியில் உள்ள நாட்கள் பரலோகத்தின் நாட்களைப்போல் மாறுவதுதான்! இரண்டாவது பரலோகம், கிறிஸ்து திரும்ப வருகையில் நாம் கண்கூடாக காணும் பரலோகமாகும். இதற்கிணையான மற்றொரு ஒப்பனையானது “இரண்டு நரகங்கள்” இருக்கிறது என்பதேயாகும். ஒன்று, இந்த பூமியிலேயே அனேகர்வாழும் பரிதபிக்கும் நரக வாழ்க்கை! மற்றொன்று, தங்கள் கண்கூடாக நித்தியத்தில் அவர்கள் அனுபவிக்கப் போகும் நரக வாழ்க்கை! ஆண்டவராகிய இயேசு கிறிஸ்துவோ இந்த இரண்டுவித நரகத்திலிருந்தும் நம்மை இரட்சிக்கும்படியே வந்தார்!

 

திருமணவாழ்வின் அஸ்திவாரம்

 

புதுமணத் தம்பதியரே, நீங்கள் வாழப்போகும் வீடு 2-மாடி கட்டிடம்! உங்கள் திருமண வாழ்விற்கு இந்த 2 - மாடி கட்டிடத்தையே மாதிரியாக வைத்துக் கொள்ளுங்கள். அந்த வீட்டிற்கு முதலாவது அஸ்திவாரம் வேண்டும்! அதன்மேல்தான், முதலாவது மாடியும் இரண்டாவது மாடியும் கட்டப்பட முடியும். ஆம், எந்த வீட்டிற்கும் மிக முக்கியமானது அஸ்திவாரமேயாகும். அதுபோலவே ஒவ்வொரு திருமணத்திற்கு முக்கியமானதும் "ஓர் நல்ல அஸ்திவாரமே” ஆகும். நல்லதோர் திருமணவாழ்விற்கு “தேவன் நம்மீது கொண்ட நிபந்தனையற்ற பரிபூரண அன்பே” அஸ்திவாரமாய் இருக்கிறது. முழு வேதாகமத்திலும் “தேவன் நம்மீது வைத்த நிபந்தனையற்ற அன்பே” எந்த சத்தியத்தைக் காட்டிலும் மேலோங்கிய சத்தியமாய் விளங்குகிறது. நாம் எவ்வளவுதான் தவறிழைத்து, நம் ஜீவியத்தை குழப்பிவிட்டவர்களாய் இருந்தாலும்..... தேவன் நம்மீது வைத்த அன்பு ஒருபோதும் மாறுவதில்லை!

 

நம்மீதுவைத்த அன்பை நமக்கு தேவன் விளக்கிக் காட்ட விரும்புகையில், “புதிதாய் பிறந்த தன் குழந்தையிடம் ஓர் தாய் வைத்திருக்கும் அன்பிற்கே” ஒப்பிட்டுக் கூறினார். ஒரு தாய், தன் குழந்தையிடம் இருந்து யாதொரு பிரதிஉபகாரமும் எதிர்பார்த்திட மாட்டாள். இன்று T.V. யிலும் சினிமாவிலும் சித்தரிக்கப்படும் அன்பு “சுயநல அன்பாகவே” இருக்கிறது! ஒரு வாலிபன், தான் ஒரு பெண்ணை காதலிப்பதாக” கூறலாம். ஆனால் அவனோ, அவளிடமிருந்து “தன் சுய இன்பத்திற்காக” ஒன்றைப்பெற விரும்புகிறான். அவளும், அவனிடமிருந்து தனக்கென்று ஒன்றை எதிர்பார்க்கிறாள்! ஆனால் தேவனுடைய அன்போ, முற்றிலும் வித்தியாசமானது. அந்த அன்பு, தனக்கு புதிதாய் பிறந்த குழந்தையிடம் அன்புகூர்ந்திடும் தாயின் அன்பிற்கு ஒப்பாகவே இருக்கிறது! இந்த தாய் தன் குழந்தையிடமிருந்து யாதொன்றும் ஒரு துளிகூட எதிர்பார்ப்பதில்லை. உண்மையில், அந்த சிறு குழந்தையும் ‘தன் தாய்க்கு யாதொன்றும் கொடுத்திட இயலாது' இந்த பூமியில் “ஒரு தாயின் அன்பே” சுய நலமற்ற அன்பாய் இருக்கிறது. இந்த உதாரணத்தையே ஏசாயா 49:15ம் வசனத்தில் தேவன் கையாண்டார். இந்த வசனத்தில் கூறப்பட்ட தாயைப்போலவே, நம்மிடத்தில் யாதொன்றும் எதிர்பாராமல், துளியேனும் சுயநலமில்லாமல் தேவன் நம்மை அன்புகூருகிறார். ஒரு தாயைப் போலவே, தேவன் நமக்கு உதவிகள் செய்து, தன் பிள்ளைகளுக்காய் துன்பங்களைத் தானே ஏற்றுக்கொள்கிறார். வியாதிப்பட்ட ஒரு பிள்ளையை ஒரு தாய் எத்தனை கரிசனையாய் பராமரிக்கிறாள் என்பதை நாம் அறிந்திருக்கிறோம். அதுபோலவேதான் தேவனும் நம்மை அன்பு கூருகிறார்! 

 

தம்பதியரே, உங்கள் இருவரையும் இந்த ஒப்பற்ற பூரண அன்பினால் தேவன் நேசிக்கிறார் என்பதை நீங்கள் அறிந்து கொள்வதே, உங்கள் புதிய இல்லத்திற்கு நீங்கள் போடவேண்டிய அஸ்திவாரமாய் இருக்கிறது. இந்த அஸ்திவாரத்திற்கு மேலேதான் அடுத்த இரண்டு மாடி கட்டிடத்தை நீங்கள் கட்டிட முடியும். தேவனுடைய இந்த பூரண அன்பில் நீங்கள் இருவரும் "தனித்தனியாக” பாதுகாப்பைக் கண்டடையவில்லையென்றால், பிற்காலங்களில் உங்களுக்கு ஏராளமான பிரச்சனைகள் தோன்றிவிடும். நமக்கு வரும் அநேகமான பிரச்சனைகள் “நம்மைக் குறித்த பாதுகாப்பற்ற" நிலையிலிருந்தே தோன்றுகிறது!! ஆம், பரலோகப் பிதாவின் நிபந்தனையற்ற அன்பில் நாம் இன்னமும் பாதுகாப்பு அடையவில்லை. நம் பரலோகப் பிதாவின் அன்பில் நாம் பாதுகாப்பை கண்டடையாத பட்சத்தில், நாம் பிறரை எவ்விதமாய் அன்புகூர்ந்திட வேண்டுமோ அவ்விதமாய் அன்பு கூர்ந்திடவும் இயலாது. இந்நிலையில், நம் உறவுகளில் பொறாமையும், ஓர் போட்டி மனப்பான்மையும்...... இன்னும் பல பிரச்சனைகளும் எழும்! ஆனால், தேவனுடைய அன்பில் நாம் பாதுகாப்பைக் கண்டடைந்து விட்டால், நாம் முற்றிலும் விடுதலைபெற்றவர்களாய், நம் இல்லத்தை கட்டத்துவங்கிவிடலாம்!

 

நம் திருமண வாழ்வின் முதல்மாடி

 

சிலர் இயேசுவிடம் வந்து “எது பிரதான கட்டளை?” எனக் கேட்டபோது, இயேசு அதற்கு பதில் கொடுத்து “ஒரு கட்டளையல்ல, இரண்டு கட்டளைகள் பிரதான கட்டளைகள்!" எனக் கூறினார். அதில் முதலாவது கட்டளை, தேவனாகிய கர்த்தரை முழு இருதயத்தோடும், முழு ஆத்துமாவோடும் முழு பெலத்தோடும் அன்புகூர்வதேயாகும். இரண்டாவது கட்டளை, அவர் நம்மிடத்தில் அன்பு கூர்ந்ததுபோல நாம் பிறரை அன்புகூர்வதாகும்! உங்கள் குடும்ப இல்லத்திற்கு இந்த கட்டளைகளே இரண்டு மாடி கட்டிடங்களாகும். முதல் மாடியை நீங்கள் கட்டாமல், இரண்டாவது மாடியை நீங்கள் கட்டிடமுடியாது. இங்குதான், ஏராளமான ஜனங்கள் தவறு செய்கிறார்கள்! தங்கள் முழு இருதயமாய் தேவனை முதலாவது அன்புகூராமலே, பிறரை அன்புகூர்ந்திட முயற்சிக்கிறார்கள். இதுபோன்றவர்கள் “உருவாக்கியவரின் ஆலோசனைகளை” கவனித்து வாசிக்கவில்லை..... ஆகவேதான், சில காலங்களுக்குள்ளாகவே ஒருவரையொருவர் நேசிக்கும் அவர்களின் அன்பு வாடி வதங்கிவிடுகிறது! பிறரை நாம் எவ்வளவு அன்புகூரவேண்டுமோ, அவ்வாறாகவே அன்பு கூருவதற்கு முன்பாக, “தேவனையே முதலாவதாக' அன்பு கூர்ந்திட வேண்டும்.

 

தேவன் ஆதாமையும் ஏவாளையும் சிருஷ்டித்தபோது அவர்களை ஒரே நேரத்தில் சிருஷ்டிக்கவில்லை. அப்படி அவர் விரும்பி இருந்தால், மிக எளிதில் அதை செய்திருக்க முடியும். ஒரு களிமண் குவியலுக்குப் பதிலாக, இரண்டு களிமண் குவியலை எடுத்து ஒரே நேரத்தில் ஆண், பெண் இருவரையும் செய்து முடித்து, அந்த இருவரிடத்திலும் தன் சுவாசத்தை ஊதியிருக்க முடியும்! ஆனால் ஆதாமை அவர் ஏன் தனியாக உருவாக்கினார்? அது ஏனென்றால், ஆதாம் தன்னுடைய கண்களைத் திறந்து பார்க்கும்போது அவன் பார்க்கப்போகும் முதல் நபர் தேவனாக இருக்கவேண்டும்..... ஏவாளாக இருக்கக்கூடாது என்பதற்காகவேயாகும். அதன் பின்பு, தேவன் ஆதாமை நித்திரையடையச் செய்தார்! ஏன்? அவனுடைய விலாவில் இருந்து ஓர் எலும்பை எடுக்க வேண்டும் என்பதற்காக மாத்திரமல்ல.... மாறாக, தேவன் ஏவாளை அந்த தோட்டத்தின் ஒரு இடத்தில் தனியாக சிருஷ்டித்தபோது, அவளும் தன் கண் திறந்து பார்க்கும்பொழுது தேவனையே முதல் நபராகக் காணவேண்டும்..... அது ஆதாமாய் இருக்க கூடாது என்பதுதான்!! உண்மையில், ஆதாம் என்ற ஒருவன் இருப்பதாகக்கூட அவளுக்குத் தெரியாது! தேவனையே அவள் முதலாவதாகப் பார்த்தாள்!!

 

'இந்த முதல்பாடத்தையே' ஆதாமுக்கும் ஏவாளுக்கும் போதித்திட தேவன் விரும்பினார். அதாவது “தேவனாகிய கர்த்தராகிய நானே, உங்கள் ஜீவியத்தில் எப்போதும் முதலிடம் பெற்றிருக்க வேண்டும்” என்ற பாடமேயாகும். தொழிற்சாலையில், மரங்களை ஓட்டுவதற்கு பயன்படுத்தும் “பெவிகால்" என்ற பசையைக் குறித்து நாம் எல்லோருமே கேள்விப்பட்டிருக்கிறோம். இந்த பசையைக் குறித்த ஒரு விளம்பரத்தில் “இந்த பசையை வைத்து ஒட்டப்பட்ட இரண்டு மரத்துண்டுகளை, இரண்டு யானைகள் அங்கொன்றும் இங்கொன்றுமாக நின்றுகொண்டு மரத்துண்டுகளை பசையின் பிடியிலிருந்து பிரிப்பதற்கு முயற்சிப்பதாகவே” அந்த விளம்பரம் இருந்தது. எவ்வளவு கடுமையாக முயற்சித்தும், அந்த இரண்டு மரத்துண்டுகளை பிரித்திட அந்த யானைகளால் முடியவில்லை. ஒரு மெய்கிறிஸ்தவ திருமண வாழ்க்கை இது போலவேதான் மாறவேண்டும்! கணவனுக்கும் மனைவிக்கும் நடுவே கிறிஸ்து மையமாய் இடம்பெற்று, அவர்கள் இருவரையும் இணைத்திருக்க வேண்டும்! அதுபோன்ற ஒரு கணவனையும் மனைவியையும் இந்த பூமியிலோ அல்லது பரலோகத்திலோ யாதொரு சத்துவமும் அவர்களைப் பிரித்திட இயலாது! ஆனால், கணவனையும் மனைவியையும் ஒன்றாகக் கட்டும் பெலனாக கிறிஸ்து அவர்களுக்கு முதலிடமாய் இல்லை என்றால், அவர்களின் திருமண வாழ்க்கை யாதொரு பசையும் இல்லாமலே சேர்த்து வைத்த இரண்டு மரத்துண்டுகளைப்போலவே இருப்பார்கள்! யாரும் இழுக்காமலே இவர்களின் மரத்துண்டுகள் பிரிந்துவிடும்!! ஆகவேதான், இன்றைய உலகில் ஏராளமான விவாகரத்தைக் காண்பதில் எந்த ஆச்சரியமுமில்லை. இந்த தம்பதிகள், தாங்கள் திருமணமான அன்று, ஒருவரையொருவர் ஆழமாக அன்புகூர்ந்ததாக கற்பனை செய்து கொண்டார்கள். ஆனால் அவர்கள் அறியாதது என்னவெனில், அவர்களின் அந்த அன்பு “சுயநல” அன்பேயாகும்! ஏனென்றால், அவர்களின் ஜீவியத்தில் கிறிஸ்து அவர்களை ஆளும் ஆண்டவராய் இருக்கவில்லை. சில தம்பதிகள் சில மாதங்களுக்குள்ளாகவே, ஒருவருக்கொருவர் விரிசல் காணத் துவங்குகிறார்கள்.

 

“ஒருவரையொருவர் அன்பு கூருங்கள்!” என்ற வசனம் மிகுந்த உணர்ச்சிவசத்தோடு அனேகரால் பயன்படுத்தப்படுகிறது. ஆனால், நீங்கள் தேவனை முதன்மை ஸ்தானத்தில் வைத்து அன்பு கூரவில்லையென்றால் “ஒருவரையொருவர் அன்பு கூர்வது” எக்காலத்தும் சாத்தியமாகாது! ஆம், உங்கள் தனிப்பட்ட ஜீவியத்தில் கிறிஸ்து ஆண்டவராய் இல்லையென்றால், உங்கள் வாழ்க்கைத் துணையை முடிவுபரியந்தம் அன்புகூர்வது ஒருக்காலும் முடியாது!! 

 

நீங்கள் முதல் மாடியை, அதாவது “தேவனை முழு இருதயமாய் அன்புகூர்வதை” கட்டிவிட்டீர்கள் என்றால், இரண்டாவது மாடியாகிய "ஒருவரையொருவர் அன்புகூர்வதை” கட்டிவிட முடியும்!!

 

நம் திருமண வாழ்வின் இரண்டாவது மாடி

 

ஒருவரையொருவர் நேசித்திட 3-பகுதிகளை நாம் அறிந்திருக்க வேண்டும்:

 

 1. நேசம் மனப்பூர்வமாய் மெச்சிக்கொள்ள அறிந்திருக்கும்!

 

திருமணத்தின் தூய அன்பை குறிப்பிட்டு ஓர் புத்தகத்தையே வேதாகமத்தில் தேவன் வைத்திருக்கிறார். அந்த புத்தகத்தின் பெயர் தான் “சாலமோனின் உன்னதப்பாட்டு,”திருமணம் ஆன எல்லாத் தம்பதியினரும், மேஜையில் அமர்ந்து ருக்கொருவர் இந்த புத்தகத்தை கண்டிப்பாக வாசித்திட வேண்டும்! ஓர் கணவனும், மனைவியும் ஒருவருக்கொருவர் இவ்விதமாய் பேசிக் கொள்ளவே சர்வ வல்ல தேவன் விரும்புகிறார் என்பதை காண்பது, நமக்கு மிகுந்த வியப்பளிப்பதாய் இருக்கிறது! வேதாகமத்தில் உள்ள எல்லா புத்தகத்தைப் போலவே இந்த புத்தகமும் தேவனுடைய ஆவியினால் அருளப்பட்டதாகவே இருக்கிறது.

 

இந்த புத்தகத்திலிருந்து சில குறிப்புகளை மட்டும் இங்கு நான் எடுத்துக் கூறுகின்றேன். அதன் மூலமாய், கணவன் மனைவிகளாய் இருக்கிற யாவரும் “ஒருவரையொருவர் புகழ்ந்து மெச்சிக்கொள்வது” இன்னது என்பதை கற்றுக்கொள்ள முடியும். ஏனோ தெரியவில்லை, புகழ்ந்து மெச்சிக் கொள்வதில் நாம் அனைவருமே கஞ்சத்தனம் உள்ளவர்களாய் இருக்கிறோம்! துரிதமாய் குற்றம் சாட்டுகிறோம்.... ஆனால் மெச்சிக் கொள்வதில் நத்தை நடைபோடுகின்றோம். ஜனங்களைப் பார்த்து, அவர்களுக்குள் இருக்கும் ஏராளமான தவறுகளையே கண்டுபிடிக்கிறோம்.... இதுதான், மானிட ஜென்மத்தின் சுபாவமாய் இருக்கிறது. இந்த வழியை சாதகப்படுத்தி, “குற்றம் சாட்டும் பிசாசு" நமக்குள் எளிதாய் பிரவேசித்து விடுகின்றான். இதற்கு நேர் மாறாக, நாம் ஜனங்களைப் பார்த்து அவர்களுக்குள் இருக்கும் சிலவற்றையாவது கண்டு மெச்சிக் கொள்வதற்கு வாஞ்சையுள்ளவர்களாயிருந்தால், தேவன் நமக்குள் பிரவேசித்து விடுவார்!

 

இப்போது பாருங்கள்! இந்த உன்னதப்பாட்டில் கணவன் தன் மனைவியிடம் பேசிடும் முதல் பகுதியை “Message Bible" மொழிப் பெயர்ப்பின்படி கவனித்து கேளுங்கள்:

 

“என் நேசத்துக்குரிய அன்பே, நீ உச்சந் தலையில் இருந்து உள்ளங்கால் வரை ஒப்பீட முடியாத அழகுள்ளவளாய் இருக்கின்றாய்! அந்த அழகில் மாசு மருவு எதுவும் இல்லை. என் உள்ளம் கவரும் பரலோக தரிசனத்திற்கு ஏற்ற மனம் கவர்ந்தவள் நீ! உன் குரல் மனஆறுதலையும் உன் முகம் என் உள்ளம் கவருவதாயும் இருக்கிறது! உள்ளும் புறமும் ஆன உன் தூய அழுகு அத்தனை சம்பூரணமாய் இருக்கிறது! என் பிரியமுள்ள சிநேகிதியே, நீயே என் பரலோகம்!”

 

(இந்த அற்புத வார்த்தைகள் அனைத்தும் உங்கள் வேதாகமத்தில்தான் உள்ளது. நான் கண்டுபிடித்து உருவாக்கியது அல்ல!)இன்னமும் கேளுங்கள்:

 

“என் உள்ளத்தை நீ கொள்ளை கொண்டுவிட்டாய்! என்னை நீ பார்க்கும் போதெல்லாம் உன் நேசத்தால் பீடிக்கப்படுகின்றேன். உன் மீது கொண்ட நேசத்தால் தான் நிலை தடுமாறியிருப்பதை நீயே அறிந்திருக்கிறாய்! என் இதயம் முழுவதையும் நீ பீடித்துக் கொண்டாய். உன்னைக் காணும் போதெல்லாம் எனக்குள் எழும்பும் ஆசை உணர்வுகளை நான் என்னவென்று சொல்வேன்! இவ்வித திவ்ய உணர்வுகள் அனைத்தும் “உன்னை தவிர” வேறு யாதொரு நபரின் மீது படும் என்றால், அந்தோ நான் அழிந்து போய்விடுவேன்!”

 

(இந்த வார்த்தைகள் அனைத்தும் ஒவ்வொரு கணவன் உள்ளத்திலும் இருக்க வேண்டும் என்பதே தேவனின் தீராத விருப்பம்!)

 

“இந்த பூமியில் உன்னைப்போல் ஒருவரும் இல்லை! முன்பும் இருந்தது இல்லை… இனியும் இருக்கப் போவதில்லை! அந்த அளவிற்கு ஒப்பிட முடியா பெண்மணி நீ!”

 

(ஓர் கவிதை நயத்திற்கு தேவன் தந்துள்ள அனுமதியை சற்று எண்ணிப் பாருங்கள்! விஞ்ஞான பூர்வமான உண்மையின் சாத்தியகூறுக்கு இங்கு இடமில்லை.... ஆம், ஒரு கணவனுடைய உணர்வுகள் எப்படி இருக்கிறது என்பதே காரியமாகும்!)

 

அன்புள்ள கணவனுக்கு அந்த மனைவி அளித்த பதிலை சற்று கவனியுங்கள்:

 

என் நேசரே, நீர் மகா அழகுள்ளவர்! ஆயிரம் பதினாயிரங்களில் நீர் ஒருவரே சிறந்தவர்! உம்மைப்போல் ஒருவரும் இல்லை! நீர் பொன்னைப் போன்றவர்! பர்வதம் போன்ற கட்டு மஸ்தானவர்! உமது வார்த்தைகள் ஆறுதலும், நம்பிக்கையும் கொண்டவைகள்! உம்முடைய சொற்கள் முத்தங்களுக்கு ஒப்பாய் இருக்கிறது... உம்முடைய அனைத்து சொற்களும் உமது முத்தங்களாகவே இருக்கிறது! உம்மைக்குறித்த எண்ணங்கள் என் உள்ளத்தை மகிழச்செய்கிறது! என்னை முற்றிலும் பரவசத்தோடு அன்பு கொண்டீர்! உம்மையே வாஞ்சித்து என்னுள்ளம் நாடித் தேடுகிறது! நீர் இல்லையென்றால், அதுவே என் வேதனையாயிருக்கும்! உம்மைக் காணும் போதெல்லாம் என் கரங்களால் உம்மை தழுவிக் கொள்கிறேன்! நீர் என்னை விட்டு சென்றிட அனுமதியேன்! நான் உமக்கே சொந்தம், நீரே எனக்குரிய ஒரே நேசர், எனக்குரிய ஒரே புருஷனும் நீரே!"

 

இதுபோன்ற வாசகங்களையெல்லாம் வேதவாக்கியங்களில் இடம் பெற தேவன் ஏன் அனுமதித்தார்? ஏனெனில், அவரே சிநேகமான காதலுக்குரியவராக இருக்கிறார்! அதுபோலவே, திருமணமேடையில் முதன் முதலாக சேர்ந்து அமர்ந்திருக்கும் தம்பதியரும் காதலுக்குரியவர்களாகவே இருக்க தேவன் விரும்புகிறார்! மேற்கண்டது போலவே, தம்பதியினர் ஒருவரையொருவர் புகழ்ந்து மெச்சிக்கொள்ள கற்றுக்கொண்டால், அவர்களுடைய ஜீவியநாட்கள் “பூமியிலே பரலோகத்தை பெற்றது போலவே” இருந்திடும்.

 

இந்த பகுதியில், இயேசுவே நம் எல்லோருக்கும் மிகச் சிறந்த மாதிரியாக இருக்கிறார். அவர் எவ்வளவு தாரளமாய் ஜனங்களை புகழ்ந்து மெச்சிக் கொண்டார் என்பதை வேதத்தில் கண்டறியுங்கள்!!

 

 1. மெய்யான அன்பு, ஒருவரையொருவர் மன்னித்திட துரிதம் கொள்ளும்!

 

மெய் அன்பு, குற்றப்படுத்த தயங்கி, மன்னிப்பதற்கோ தீவிரமாய் இருக்கும்! ஒவ்வொருவருடைய திருமண வாழ்விலும், கணவனுக்கும் மனைவிக்கும் இடையே பிரச்சனைகள் மிக சகஜமாய் வரும். ஆனால், அந்த பிரச்சனைகளை உங்களுக்குள் ஒளித்து வைத்துக் கொண்டால், அந்த பிரச்சனை உங்களுக்குள் கண்டிப்பாய் பற்றி எரியத் தொடங்கும். எனவே வெகு துரிதமாய் மன்னித்து, வெகு துரிதமாய் மன்னிப்பும் கேட்டுவிடுங்கள். அவ்வாறு செய்திட “மாலையில் ஒப்புரவாகலாம்” எனக்கூடநேரத்தை தள்ளிப் போடாதீர்கள். உங்கள் காலில் ஒரு முள் காலை நேரத்தில் குத்திவிட்டால், அதை நீங்கள் உடனே எடுத்து விடுவீர்கள். மாலையில் பார்த்துக்கொள்ளலாம் என தள்ளிப் போட மாட்டீர்கள். அதுபோலவே, உங்கள் வாழ்க்கைத் துணையானவர் ஏதாகிலும் மனம் புண்பட நேர்ந்தால், அது அவர்களை ஓர் முள் குத்தியதற்கு ஒப்பானதேயாகும்! அந்த முள்ளை உடனே எடுத்து விடுங்கள்! உடனே மன்னிப்பு கேளுங்கள்! உடனே

மன்னித்து விடுங்கள்!

 

 1. மெய் அன்பு, எதையும் சேர்ந்து செய்திடவே வாஞ்சை கொண்டிருக்கும்!

 

ஆம், தனித்தல்ல! ஏதேன் தோட்டத்தில் ஏவாளை சோதிக்க பிசாசு வந்த போது “நான் தீர்மானம் எடுப்பதற்கு முன்பாக என் கணவரை ஆலோசித்து வருகின்றேன்” என ஏவாள் கூறியிருந்தால் 'மனுஷனின் சரித்திரமே' முற்றிலும் மாறுப்பட்டதாய் இருந்திருக்கும்! அவனுடைய வாழ்வுதான் எத்தனை ஆச்சரியமாய் மாறியிருக்கும்!!

 

ஆகவே இந்த முழு உலகத்தின் எல்லா பிரச்சனைகளும் ஆரம்பித்த முதல் இடமே “ஒரு ஸ்திரீ, தானாகவே முடிவு செய்ததால்” என்பதிலிருந்து தோன்றியது என்பதை மறந்து விடாதீர்கள். அந்த முடிவை அவள் எடுப்பதற்கு முன்பாகவே, தேவன் தனக்கென தந்த வாழ்க்கைத் துணையோடு அவள் ஆலோசனை செய்திருக்க வேண்டும். மெய்யான அன்பு எப்போதும் சேர்ந்தே செயல்படும். தனித்து நிற்கும் ஒருவரைவிட இருவராய் இருப்பதே நலம்!

 

கடைசியாக சாலமோனின் உன்னதப்பாட்டில் உள்ள தேவ வசனத்தை மீண்டுமாய் நினைவூட்டுகிறேன்: “நேசத்தின் தழல் தனக்கு முன்பாக உள்ள அனைத்தையும் வாரிக்கொள்ளும், திரளான வெள்ளங்களும் அந்த நேசத்தின் தழலை அவிழ்த்திட இயலாது! மெய்யான அன்பை எந்த ஆஸ்தி கொடுத்தும் வாங்கிட இயலாது! அது வியாபார சந்தைவெளியில் ஒருபோதும் காணப்படுவதில்லை!”

 

தெய்வ அன்பு மாத்திரமே இவ்வித குணாதிசயம் கொண்டதாய் இருக்கிறது. ஆகவேதான், இந்த அன்பு “கர்த்தருடைய ஜுவாலை” என அழைக்கப்படுகிறது (வசனம்). ஆம், இவ்வளவு சிறப்பான அன்பை தேவன் மாத்திரமே நமக்குத் தர முடியும்.

 

மணமேடையில் அமர்ந்திருக்கும் புதுமணத்தம்பதியரே! ஒருவருக்கொருவர் நீங்கள் காண்பிக்க வேண்டிய இத்தனை சிறப்பான அன்பை தேவன் உங்களுக்குத் தரும்படி மன்றாடி கேளுங்கள்!

 

தேவன் உங்களை ஆசீர்வதிப்பாராக! ஆமென்.

அதிகாரம் 2
முத்தான மூன்று தீர்மானங்கள்

தேவன் நமக்கு ஒரே ஒரு புத்தகத்தை மாத்திரமே தந்திருக்கிறார். அந்த புத்தகத்தை மெய்யாகவே நாம் விசுவாசித்துவிட்டால், நம் ஜீவியத்திற்குரிய அனைத்து குறிப்புகளும் அந்த புத்தகத்தில் இருப்பதை நாம் கண்டு கொள்ள முடியும். இந்த வேதபுத்தகத்தில் மனுஷனுக்கு “திருமணத்தை தேவனே நியமித்தார்” என்பதை வாசித்து அறிந்திட முடியும். திருமணத்தைக் குறித்து முதலாவது சிந்தித்ததே அவர்தான்! மனுஷனும், மனுஷியும் சேர்ந்து வாழும் விருப்பத்தோடு சிருஷ்டித்ததும் அவர்தான்! அவர் தன் புத்தகத்தில், புதுமணதம்பதிகள் எப்படி வாழ வேண்டும்? என்பதற்குரிய எச்சரிப்புகளையும் நல்ல போதகங்களையும் தந்திருக்கிறார்.

 

ஆதியாகமம் 3-ம் அதிகாரத்தில் ஆதாம் ஏவாளின் திருமணத்தை நாம் வாசிக்கிறோம். அவர்கள் திருமணத்தில் ஒன்றாக இணைந்தவுடன், அவர்களை ஓர் அழகிய தோட்டத்திற்குள் அனுப்பினார். அந்த தோட்டத்தில் மூன்று காரியங்கள் சம்பவித்தன! இங்கு அமர்ந்திருக்கும் புதுமணத்தம்பதிகள் தேவன் அவர்களுக்கென திட்டம் வகுத்திருக்கும் மகிழ்ச்சியான திருமண வாழ்க்கையை பெற்றிட “மூன்று தெரிந்து கொள்ளுதலை” தேர்வு செய்திட வேண்டும். இன்று மகிழ்ச்சியான திருமணங்களை காண்பதே அரிதாகி விட்டது! ஏனெனில் அநேக ஜனங்கள் வேத வாக்கியங்களை வாசிப்பதில்லை! அப்படியே வாசித்தாலும், அதை தியானித்து, திருமண தம்பதிகள் எப்படி வாழ தேவன் விரும்புகிறார் என கண்டறிவதும் இல்லை!

 

ஆதாமையும் ஏவாளையும் இந்த தோட்டத்திற்குள் தேவன் அனுப்பி அங்கு ஏராளமான சுதந்திரத்தை தந்திருந்தாலும் கூட, ஒரே ஒரு தடையை மாத்திரம் விதித்திருந்தார். ஆம், ஓர் மரத்தின் கனியை புசிக்கக்கூடாது என்பதே அந்த தடை அதற்கு ஒரு காரணமும் இருந்தது. தானாக தெரிந்து கொள்ளும் தேர்வு செய்யாமல் ஒருவரும் தேவனுடைய குமாரனாய் மாறிட முடியாது. தனிப்பட்ட வாழ்விலும் ஒருவன் இவ்வித தேர்வு செய்யாமல், பரிசுத்தவனாய் வாழ்ந்திடவும் இயலாது. எனவே ஆதாமை தேவன் தோட்டத்திற்குள் அனுப்பிய போது, இந்த தெரிந்து கொள்ளும் வாய்ப்பை அவனுக்கு தேவன் தந்திருக்காவிடில், அவன் ஓர் குமாரனாய் மாற வேண்டுமென்ற தேவனுடைய விருப்பம் ஒரு போதும் நிறைவேறியிருக்காது. இந்த பூமிக்குரிய நம் வாழ்க்கைக்கும், இனிவரும் நித்திய வாழ்க்கைக்கும், நாம் தெரிந்து கொள்ள வேண்டிய தேர்வுகள் எவ்வளவு முக்கியமானது என்பதை நம்மில் அநேகர் இன்னமும் அறியமலேதான் இருக்கிறோம். 

 

தேவன் நம் யாவருக்கும் அளித்த மிகப்பெரிய வரங்களில் ஒன்று “தெரிந்து கொள்ளும் வல்லமையே” ஆகும். இந்த வல்லமையை நம் ஒருவரிடமிருந்தும் ஒருக்காலும் தேவன் எடுத்துக்கொள்ள மாட்டார். தேவனுடைய குமாரனாய் மாறுவதற்கு நீங்களே தேர்வு செய்யலாம்! அல்லது உங்களுக்காய் வாழ்ந்து கொள்வதற்கும் நீங்களே தேர்வு செய்யலாம்!! நீங்கள் எதை தெரிந்து கொண்டாலும், உங்கள் ஜீவியத்தில் நீங்கள் தெரிந்துகொண்டதற்கு ஏற்ப பலனை அறுப்பீர்கள்!!

 

“மனுஷன் எதை விதைக்கிறானோ அதையே அறுப்பான்” என வேதாகமம் கூறுகிறது. மேலும் “ஒரே தரம் மரிப்பதும் பின்பு நியாயத்தீர்ப்பு அடைவதும் மனுஷனுக்கு நியமிக்கப்பட்டிருக்கிறது” எனவும் வேதம் கூறுகிறது. இருப்பினும் அந்த கடைசிநாளில், தேவன் தன் இஷ்டப்படி யாரையும் நியாயம் தீர்த்திடமாட்டார். அவருடைய நியாயத்தீர்ப்பு மனுஷன் எதைத் தெரிந்துகொண்டானோ அதை அடிப்படையாகக் கொண்டே இருக்கும்! இதே தாற்பரியமே திருமண வாழ்விற்கும் உள்ளது. உங்களுக்கு மகிழ்ச்சியான திருமணவாழ்க்கையா? அல்லது துயரமான திருமண வாழ்க்கையா? இவற்றில் எதை விரும்புகிறீர்கள் என்பதை நீங்களேதான் தேர்வு செய்திட வேண்டும். இவ்வித தேர்வு செய்யும் நிலையில்தான் ஆதாம் இருந்தான். தன் ஜீவியத்தை பிசாசுக்கு ஒப்புக்கொடுப்பதா? அல்லது தேவனுக்கு ஒப்புக்கொடுப்பதா? என்பதை அவனேதான் தீர்மானிக்க வேண்டும்.

 

ஆகவே, புதுமணத்தம்பதியரே! உங்கள் திருமண வாழ்வில் நீங்கள் தேர்வு செய்ய வேண்டிய “மூன்று தேர்வுகளை அல்லது தெரிந்து கொள்ளுதலை” உங்கள் முன் வைக்கின்றேன்:

 

 1. உங்களையல்ல, தேவனையே மையமாய் வைத்து வாழுங்கள்!

 

எல்லாவற்றிற்கும் முதலாக, உங்கள் ஜீவியத்தின் அனைத்து பகுதிகளிலும் தேவனை மையமாய் வைப்பதற்கே தெரிந்து கொள்ளுங்கள். ஏதேன் தோட்டத்தில் இருந்த இரண்டு வகையான மரங்கள், ஜீவியத்தின் இரண்டு வகையான வாழ்க்கைப் பாதையை குறிப்பிடுகிறது. “ஜீவவிருட்சத்தின் மரம்” தேவனை மையமாகக் கொண்ட வாழ்க்கையைக் குறிக்கிறது! அங்கு, மனுஷன் எடுக்கும் ஒவ்வொரு தீர்மானத்திற்கும் தேவனே மையம் கொண்டிருப்பார்!! மற்றொன்று “நன்மை தீமை அறியத்தக்க விருட்சம்”. இது சுயத்தை மையமாகக் கொண்டதோர் வாழ்க்கையைக் குறிக்கிறது. இங்கு மனுஷன் தேவனிடம் ஆலோசிக்காமல் தானாகவே' எது நன்மை? ‘தானாகவே' எது தீமை? என தீர்மானித்து வாழ்கிறான். ஆதாமையும் ஏவாளையும் இந்த தோட்டத்திற்குள் தேவன் அனுப்பிய போது, அவர்களுக்கு கூறியது “எந்த வழியில் நீங்கள் வாழ விரும்புகிறீர்கள் என்பதை நீங்களே இப்போது தீர்மானித்து கொள்ளுங்கள்!" என கூறுவதாகவே இருந்தது. அன்று ஆதாம் எதை தேர்வு செய்தான் என்பது நம் எல்லோருக்கும் தெரியும். “அவன் தன்னை மையமாய் வைத்து” வாழும் வாழ்க்கையை தெரிந்து கொண்டான்!

 

இன்று நம்மைச் சூழ்ந்திருக்கும் உலகத்தில் காணப்படும் அனைத்து துன்பங்களுக்கும், துயரங்களுக்கும், கொலை மற்றும் இழிவான செயல்களுக்கும் ஒரே காரணம், மனுஷன் தானாகவே எது நன்மை? எது தீமை? என தேர்வு செய்யும் வாழ்க்கையை தீர்மானித்துக் கொண்டதே ஆகும். தேவன் அவனுக்கு சொல்லுவதைக் கேட்க அவன் விரும்பவில்லை. இதுவே, கிறிஸ்தவர்கள் உட்பட அனைத்து மகிழ்ச்சியற்ற திருமண வாழ்விற்கும் காரணமாய் இருக்கிறது. திரளான கிறிஸ்தவர்கள் தங்கள் சுயத்தையே வாழ்வின் மையமாக வைத்து ஜீவிக்கிறபடியால், தாங்கள் விதைத்ததை தாங்கள் அறுக்கிறார்கள்!

 

ஆதாமை தேவன் சிருஷ்டித்தபோது, அவன் பூமியை ஆள வேண்டும் என விரும்பியே சிருஷ்டித்தார். இந்த ஆதாமுக்கு அருகில் ஏவாள் ஓர் ராணியாய் இருக்கும்படியே தேவன் விரும்பினார். ஆனால், இன்று நாம் காண்பது என்ன? புருஷரும், ஸ்திரீகளும் அடிமைகளாகவே இருக்கிறார்கள். தங்கள் இச்சைகளுக்கு அடிமை! கரைப்பட்ட இம்மண்ணுக்குரியவைகளுக்கும் அடிமை!

 

தேவன் பூமியை சிருஷ்டித்தபோது, சகலத்தையும் அழகுள்ளதாகவே சிருஷ்டித்தார். தடைசெய்யப்பட்ட அந்த மரமும் அழகுடையதாகவே இருந்தது. இந்த மரத்திற்கு முன்பாக ஆதாமும் ஏவாளும் நின்றபோது “ஒன்றை” அவர்கள் தெரிந்து கொள்ள வேண்டியதாயிருந்தது. தேவன் சிருஷ்டித்த அழகுள்ளவைகளை தெரிந்து கொள்வார்களா? அல்லது தேவனையே தெரிந்து கொள்வார்களா? என்பதுதான்.

 

இது போன்ற தெரிந்து கொள்ளுதலைத்தான், நாமும் ஒவ்வொரு நாளும் தேர்வு செய்ய வேண்டியதாயிருக்கிறது. நம் ஜீவியம், நம்மை மையமாகக் கொண்டிருந்தால், தேவன் சிருஷ்டித்தவைகளாகிய அவருடைய வரங்களைத்தான் தேர்ந்து கொள்ளுவோமே அல்லாமல், தேவனையே தேர்ந்து கொள்ள மாட்டோம்! நம் வீடுகளில் தோன்றும் அதிகபட்சமான வாக்குவாதங்கள், பூமிக்குரியவைகளை சார்ந்ததாகவே இருக்கிறது. கணவனும் மனைவியும் தேவனையே தெரிந்து கொள்ளாமல், சிருஷ்டிக்கப்பட்டவைகளை தெரிந்து கொண்டபடியால் இவ்வித வாக்குவாதங்கள் சம்பவிக்கிறது. தங்கள் தெரிந்து கொள்ளுதலுக்கு ஏற்ற விளைவுகளையும் சந்திக்கிறார்கள்! மாம்சத்தின்படி விதைத்த அவர்கள் அழிவுக்குரியதையே அறுக்கிறார்கள். சிருஷ்டிகரை தெரிந்து கொள்ளாமல் சிருஷ்டிக்கப்பட்டவைகளை தெரிந்து கொள்கிறபடியால் மனுஷன் ஓர் அடிமையாய் மாறிவிடுகிறான்!

 

இந்த அடிமைத்தனத்திலிருந்து நம்மை விடுவிக்கவே இயேசு வந்தார். இன்று மனுஷன் பணத்தின் வலிமைக்கு அடிமையாய் இருக்கிறான்! சுபாவத்திற்கு முரணான பாலிய இன்பங்களுக்கு அடிமையாய் இருக்கிறான்! பிறருடைய அபிப்பிராயங்களுக்கு அடிமையாய் இருக்கிறான்! இவ்வாறு, எண்ணற்ற இவ்வுலக காரியங்களின் அடிமையாய் இருக்கிறான். ஆம், ஓர் சுயதீனனாக அவன் இல்லை! வானங்களுக்கு மேலாய் சிறகடித்து பறந்திடும் ஓர் கழுகைப் போல் இருந்திடவே தேவன் மனுஷனை சிருஷ்டித்தார்! ஆனால், எங்கு பார்த்தாலும் மனுஷன் சங்கிலிக்குள் கட்டப்பட்டு இருக்கின்றான். அதன் விளைவாய், தன்னுடைய நிதானத்தை ஜெயித்திட அவனால் முடியவில்லை! தன் நாவை அடக்கி ஆள முடியவில்லை! தன் இச்சையான கண்களை அடக்கி வைத்திருக்கவும் முடியவில்லை! நம் பாவங்களுக்காய் மரிப்பதற்கு மாத்திரம் இயேசு வரவில்லை.... மாறாக, மேற்கண்ட அடிமைத்தனத்திலிருந்து நம்மை விடுவிப்பதற்காகவுமே இயேசு வந்தார்!!

 

இளம் தம்பதியரே! நீங்கள் ஆதாம் தெரிந்து கொண்ட தேர்வை மறுத்து விட்டு, தேவனிடம் திரும்பி:

 

“கர்த்தாவே, எங்கள் ஜீவியத்தில் இனி சுயத்தை ஒருபோதும் மையமாய் வைத்திட மாட்டோம். நீர் மாத்திரமே எங்கள் வாழ்வின் மையமாய் வீற்றிருக்க வேண்டும். எங்கள் ஜீவியத்தின் ஒவ்வொன்றும் உம்மிலேதான் மையம் கொண்டிருக்கும்!” என நீங்கள் கூற முடியுமென்றால், உங்கள் திருமண வாழ்க்கை அளவில்லாத மகிழ்ச்சி கொண்டதாகவே இருக்கும்!

 

தேவன் ஒளியாகவும்! தேவன் அன்பாகவும்! இருக்கிறார் என்றே வேதாகமம் கூறுகிறது. தேவனுடைய அன்புதான், அவருக்கு ஒளியாகவும் இருக்கிறது. ஓர் இருட்டான அறையில், வெளிச்சத்தின் வலிமை இருளின் அந்தகாரத்தை விரட்டியடிக்கும். தேவனுடைய வல்லமை அப்படிப்பட்டதாகும்! தேவனுடைய வல்லமையில்லாத ஜீவியம், அவருடைய அன்பில்லாத ஜீவியம்.... அது, ஒரு காரிருளான ஜீவியமேயாகும்!!

 

இந்த பூமியில் வாழும் நமது முழு ஜீவியகாலமும் ஓர் பரிசோதனையின் காலமாயும், பயிற்சியின் காலமாயும் இருக்கிறது. அதனிமித்தம், சகலமும் அன்பின் பிரமாணத்தினால் ஆளுகை செய்யப்படும் நித்திய இராஜ்ஜியத்திற்கே நாம் ஆயத்தப்படுத்தப்படுகிறோம். ஆகவே தேவன் நம்மை நடத்திச்செல்லும் ஒவ்வொரு சம்பவமும் சூழ்நிலைகளும் தேவனால் திட்டமிடப்பட்டு, இவ்வித முக்கிய பகுதியாகிய "அன்பின் பிரமாணத்தின்படி” நாம் ஜீவிக்கிறோமா? அல்லது இல்லையா? என்பதையே சோதித்தறிவதாயிருக்கிறது. இதனிமித்தமே ஏராளமான உபத்திரவங்களும் கஷ்டங்களும் நம் ஜீவியத்தில் வருவதற்கு தேவன் அனுமதிக்கிறார். தேவன் சர்வவல்லவராயிருக்கிறார்.... ஆகவே, இந்த பூமியில் நமக்கு எந்த உபத்திரவங்களும் நேரிடாதபடி வைத்திருக்க அவரால் முடியும்! ஆனால், உபத்திரவங்களை தேவனே தன் மிகுந்த ஞானத்தைக் கொண்டு ஏற்படுத்தியிருக்கிறார்.... அதன் மூலமாய் மாத்திரமே, நாம் அன்பை கற்றுக்கொள்ள முடியும். நாமோ, நமது சுயநலத்தை மேற்கொண்டு, நம் ஜீவியத்தை அன்பு ஒன்றே ஆண்டு நடத்தும்படி தீர்மானித்து வாழ்ந்துவிட்டால், வர இருக்கும் அவரது இராஜ்ஜியத்தில் ஆளுகை செய்கிறவர்களாய் நம்மை தேவன் ஆயத்தம் செய்திட முடியும்! இவ்வித பயிற்சிக்குரிய வாழ்க்கையை நாம் இப்போதே தீர்மானம் எடுக்கக்கடவோம் அவ்வாறு எடுக்கவில்லையென்றால், இந்த பூமியில் தேவன் நமக்களித்த சந்தர்ப்பங்களை நாம் இழந்து, நாம் கற்றுக்கொள்ள வேண்டியவைகளை கற்றுக்கொள்ளாமலே மாய்ந்திடுவோம்!

 

ஆகவே உங்கள் திருமண வாழ்வில் நீங்கள் தெரிந்து கொள்ள வேண்டிய தீர்மானம் “நீங்கள் அன்பின் பிரமாணத்தின்படி ஜீவிப்பீர்களா? அல்லது சுயநல பிரமாணத்தின்படி ஜீவிப்பீர்களா?” ஆகிய இரண்டில் ஒன்றே ஆகும். தேவன் உங்கள் வாழ்வில் மையமாய் இருந்தால், நீங்கள் பேசுகின்ற மற்றும் செய்கின்ற ஒவ்வொரு சிறிய காரியத்தையும் அவரது அன்பு ஒன்றே உங்களை நேர்த்தியாய் நடத்தும்!

 

2.ஒருவரையொருவர் ஏற்றுக்கொண்டு, மாய்மாலம் அகற்றுங்கள்!

 

தம்பதியரே! நான் உங்களுக்கு கூறிட விரும்புவது யாதெனில்: ஒருவரையொருவர் ஏற்றுக்கொள்ளுங்கள்! யாதொரு முகத்திரையும் அணியாதிருங்கள். பாவம் வருவதற்கு முன்பாக “ஆதாமும் ஏவாளும் வெளியரங்கமாய், அதாவது நிர்வாணமாய் இருந்தபோதும் வெட்கமடையவில்லை” ஒருவருக்கொருவர் அவ்வளவாய் திறந்த மனதோடு நேர்மையாய் இருந்தபடியால், மறைப்பதற்கென யாதொன்றும் இருக்கவில்லை! ஆனால், அவர்கள் பாவம் செய்தவுடன் காரியங்கள் முற்றிலும் மாறிவிட்டது. அத்தி இலைகளைக் கொண்டு தங்களை மூடிக் கொண்டார்கள். அப்படி அவர்கள் ஏன் செய்ய வேண்டும்? அந்த தோட்டத்தில் “குறுகுறுப்புடன் எட்டிப்பார்ப்பவர்கள்” ஒருவரும் இல்லை! அங்குள்ள மிருகங்களுக்காக வெட்கித்து தங்களை மூடிக் கொள்ளவும் அவசியம் இல்லை! பின் ஏன் அவர்கள் தங்களை அத்தி இலைகளினால் மூடிக்கொண்டார்கள்? ஆம், அவர்கள் ஒருவருக்கொருவர் மறைத்தே தங்களை மூடிக் கொண்டார்கள்!

 

பாவத்தின் விளைவுகளில் ஒன்றுதான், ஒருவருக்கொருவர் மூடிக்கொள்ளும் அவலமாகும்! எல்லா ஜனங்களுமே தங்கள் உறுப்புகளில் ஒன்று, காண்பதற்கு நன்றாயில்லாதது போல் எண்ணினால், அதை மறைத்துக் கொள்வார்கள். அவர்களைக் குறித்த விபரங்களை மற்றவர்கள் அறிந்து கொள்வதினிமித்தம் மனக்கிலேசமும் அடைவார்கள். இதற்காகவே 'மூடுதிரை' அணிகிறார்கள். முன்தோற்றத்தில் மிகுந்த இளைப்பாறுதலோடும், சாந்தமாயும், மகிழ்ச்சியாயும் இருப்பதைப்போல காட்டுவார்கள்! ஆனால் மறைந்திருக்கும் அடிப்பகுதியில் சஞ்சலமும், தோல்வியும் நிறைந்தவராய் இருப்பார்கள்! நீங்களோ உங்கள் திருமண வாழ்க்கையில்" இருப்பதைப் போல் இருப்பதற்கே” தீர்மானித்து, யாதொரு மூடு திரையும் மூடாதிருங்கள். உங்கள் ஜீவியத்தில் எவ்வித பாசாங்கும் வேண்டாம்! யாதொரு அத்தி இலையும் வேண்டாம்!!

 

ஒவ்வொருவருக்குள்ளேயும், “யாராகிலும் சிலர், தங்களை நேசிக்க வேண்டும்” என்ற விருப்பம் உடையவர்களாய் இருக்கிறார்கள். ஆகிலும், அவர்களை முழுமையாய் அறிந்து கொண்டவர்களோ, அவர்களை அவ்வளவாய் நேசிப்பதில்லை! எனவேதான், மற்றவர்களோடு கொண்ட இவ்வித தீதான அனுபவங்கள் அவர்களை மூடுதிரை' அணிய வைக்கிறது!

 

தங்களைக் குறித்த எல்லாமே ஜனங்களுக்குத் தெரிந்து விட்டால், அவர்கள் தங்களை ஏற்றுக்கொள்ள மாட்டார்கள் என இவர்கள் அறிந்திருக்கிறார்கள். ஆகவேதான், அவர்கள் தங்களை மற்றவர் ஏற்றுக்கொள்ளும்படி ஓர் முன் தோற்றத்தை ஏற்படுத்துகிறார்கள். இதுவே, கிறிஸ்தவர்களுக்கும் கூட உண்மையாய் இருக்கிறது!

 

இயேசு இந்த பூமியில் இருந்தபோது, அநேக மதவாத ஜனங்கள் மூடுதிரை அணிந்திருப்பதைக் கண்டார். ஆகவேதான் அவர்களுக்கு உதவி செய்ய அவரால் கூடாமல் போயிற்று!

 

ஆகவே தம்பதியரே, இன்றிலிருந்தே நீங்கள் இருவரும் “நான் ஒருபோதும் மூடுதிரை அணிந்திட மாட்டேன்! ஒருவரையொருவர், இருக்கிறவண்ணமாகவே ஏற்றுக்கொள்வேன்!” என தீர்மானம் எடுங்கள். அதாவது, மணமகன் மணமகளிடம் ஏதாவது குறை கண்ட பிறகும் அவளை அப்படியே ஏற்றுக்கொள்ள வேண்டும்! அதுபோலவே மணமகள் மணமகனிடம் ஏதாவது குறை கண்ட பிறகும் அவரை அப்படியே ஏற்றுக்கொள்ள வேண்டும்!!

 

தேவனைக் குறித்த ஓர் ஆச்சரியமான காரியம் என்னவெனில், நம் எல்லோரையும் நாம் இருக்கிறவண்ணமாகவே ஏற்றுக்கொள்கிறார் என்பதே ஆகும்! இதற்கு மாறாக, தேவன் நம்மை ஏற்றுக்கொள்வதற்கு முன்பாக, நம்மை சரி செய்து கொள்ள வேண்டும் என போதிக்கும் எந்த மார்க்கமும் போலியான மார்க்கமே ஆகும். இதுபோன்ற போலி மார்க்கத்தோடு இயேசு வரவில்லை! “நாம் இருக்கிறவண்ணமாகவே தேவன் நம்மை நேசிக்கிறார்” என்ற செய்தியோடுதான் அவர் வந்தார். நாமாகவே நம்மை மாற்றிக் கொள்ள இயலாது என்பதை தேவனே அறிந்திருக்கிறார். ஆகவேதான் புதுமணத் தம்பதியராகிய இருவருக்கும் “கிறிஸ்து உங்களை ஏற்றுக் கொண்டது போலவே ஒருவரையொருவர் ஏற்றுக்கொள்ளுங்கள்” என வேதாகமம் நமக்கு போதிக்கிறது.

 

சமீபத்தில் ஒரு கிறிஸ்தவ வெளியீட்டில் வந்த ஒரு செய்தியை இங்கே குறிப்பிடுவது நல்லதென்று கருதுகிறேன்: “நாம் அனைவருமே நம் ஜீவியத்தில் ஒளிந்து விளையாடும் பகுதியை கையாளுகிறோம். ஏனெனில், நம்மைக் குறித்தே நாம் வெட்கப்படுகிறபடியால், ஒருவருக்கொருவர் மறைந்து கொள்கிறோம். நமக்குள் வாழும் உள்ளான நிஜமனிதனை மற்றவர்கள் காணக்கூடாதபடி நாம் மூடு திரை அணிகிறோம். இவ்வித மூடுதிரை மூலமாகவே ஒருவரையொருவர் கண்டு 'அதையே' ஐக்கியம் எனக் கூறிக்கொள்கிறோம். எவ்வித சஞ்சலமும் இல்லாமல், நாம் பாதுகாப்பாய் இருப்பதைப் போன்ற தோற்றத்தை மக்களுக்குத் தருகிறோம்..... ஆனால், அது அனைத்தும் மூடுதிரையே ஆகும். அந்த மூடுதிரையின் மறைவிலிருக்கும் ‘நிஜமான நாமோ' குழப்பமும், பயமும், தனிமையும் கொண்டவர்களாய் வாழ்கிறோம்! இந்நிலையை மற்றவர்கள் கண்டுவிடுவார்களோ என்றும் அஞ்சுகிறோம். ஒருவேளை, தன் உண்மையான உள்ளான மனிதனின் நிலையை மற்றவர்கள் கண்டுவிட்டால், தன்னைப் புறக்கணித்து நகைப்பார்களோ என எண்ணி, "அந்த பரிகாச நகைப்பு” தங்களைக் கொன்றுவிடும் என்றே எண்ணுகிறார்கள்! ஆகவேதான் நாம், ஒளிந்து பாவனை செய்து தோற்றத்தில் திடநம்பிக்கையும், திடநிச்சயமும் கொண்டவர்களைப் போல் நடிக்கிறோம். ஆனால் உண்மைபூர்வமாய் தங்கள் உள்ளான நிலையில் ஒரு சிறு பிள்ளையைப்போல் நடுங்கிக் கொண்டு இருக்கிறோம்! நம் முழு ஜீவியமும் “முன் தோற்றம்” கொண்டதாகவே மாறிவிடுகிறது. நாம் பிறரிடம் நன்றாக பேசி, நம்மைப் பற்றிய முக்கியம் இல்லாத பகுதிகளையெல்லாம் கூறி

நகைச்சுவை ஏற்படுத்துகிறோம்! ஆனால், நமக்குள் உண்மையில் அழுது கொண்டிருக்கும் யாதொன்றையும் கூறுவதில்லை!” என எழுதப்பட்டிருந்தது!

 

நாம் பிறரால் ஏற்றுக்கொள்ளப்பட்டும், புரிந்து கொள்ளப்பட்டும், அன்புகூரப்படவே ஏங்கி நிற்கிறோம்! ஆனால் அனுபவபூர்வமாய் நாம் காண்பது யாதெனில், எப்போதெல்லாம் நம்முடைய உண்மை நிலையை பிறருக்கு வெளிப்படுத்துகிறோமா, அப்போதே அவர்கள் நம்மை புறக்கணித்துவிடுகிறார்கள்! என்பதுதான். நம்மைக் குறித்த எல்லாவற்றையும் அறிந்திருந்தாலும்... அந்த நிலையிலும், நம்மை ஏற்றுக்கொள்ளும் சிலரையே நம் உள்ளம் தேடுகிறது! துயரம் யாதெனில், அதுபோன்ற ஒரு நபர் கூட இருப்பதில்லை! அன்பைக் குறித்து பேசும் மறுபடியும் பிறந்த கிறிஸ்தவர்களை நாம் கேட்கும் போது, ஒருவேளை இவர்கள் நம்மை ஏற்றுக் கொள்வார்கள் என்ற நம்பிக்கை நம் உள்ளத்தில் எழுகிறது. ஆனால், அவர்களிடம் சென்ற போதோ, அவர்களும் மூடுதிரை அணிந்திருப்பதையே கண்டு திகைக்கிறோம்! அவர்களும், நம்முடைய குறைகளை சுட்டிக்காட்டி பேசத் தொடங்குகிறார்கள்!இதற்கெல்லாம் விடை எங்கே இருக்கிறது? நாம் எந்த நிலையில் இருக்கிறோமோ, அந்த நிலையிலேயே தேவனால் ஏற்றுக் கொள்ளப்பட்டு அன்பு செலுத்தப்பட்டிருக்கிறோம்! என நம்மைக் குறித்து நாம் காண வேண்டியதே இந்த விடைக்கு அவசியமாயிருக்கிறது.

 

தேவன் அன்பாகவே இருக்கிறார்! அந்த தெய்வ அன்பை அனுபவ பூர்வமாய் ருசிப்பதே நம்மை தைரியம் கொள்ளச் செய்கிறது. இனியும் நாம் பாசாங்கு செய்திட அவசியமில்லை! தேவனிடத்திலும், மனுஷரிடத்திலும் நாம் நாமாகவே இனி இருந்திடக்கடவோம்! யாதொன்றையும் செய்வதற்கு தெய்வ அன்பு நம்மை கட்டாயப்படுத்துவதில்லை. பூரணமற்ற நமது அனைத்து காரியங்களையும் தேவன் அறிந்திருந்தாலும், நம்மை ஆக்கினைக்குள் தீர்க்காமல், இன்னமும் நம்மை ஏற்றுக் கொள்ளத்தான் செய்கிறார். இதற்கு மாறாக, நம்மைப் பூரணப்படுத்தவே விரும்புகிறார். நமக்குள் இருக்கும் யாவையும் தேவன் கண்ட பின்பும், நம்மைப் பற்றி முழுதும் அறிந்த பின்பும் கூட இன்னமும் தேவனால் ஏற்றுக்கொள்ளப்பட்டு இருக்கிறோம் என நாம் அறிவது, ஓர் மகிழ்ச்சி நிறைந்த கிறிஸ்தவ ஜீவியத்திற்கு வேராய் அமைகிறது. இந்த பரிபூரண ஜீவனையே நமக்குத் தரும்படி இயேசு வந்தார்!

 

"தெய்வ அன்பை அறிவது ஒன்றே” நாம் மனுஷரால் ஏற்றுக்கொள்ளப்பட நாடும் நாட்டத்திற்கு நிரந்தரமான முற்றுப்புள்ளி வைக்கிறது! நம் குற்ற உணர்வும் போய் விடுகிறது! நம் பயங்கள் யாவும் விரட்டி அடிக்கப்படுகிறது! சில சமயங்களில் நாம் தனியாக இருந்தாலும், ஒருபோதும் தனித்துவிடப்படுவதில்லை! ஏனெனில், “நம்மைவிட்டு விலகுவதுமில்லை அல்லது கைவிடுவதும் இல்லை” என அந்த அன்புள்ள தேவனே வாக்குரைத்திருக்கிறார்!!".

 

உங்கள் வாழ்க்கைத் துணையிடம் ஏதோ ஒரு கூக்குரல்' தொனிப்பதை உங்களால் கேட்க முடிகிறதா? “தான் ஏற்றுக் கொள்ளப்பட வேண்டும் என்ற ஏக்கமே!” அந்த கூக்குரலாகும். ஆகவே தம்பதியருக்கு, உன்னிப்பாய் கேட்கும் காது இருக்க வேண்டியது மிகவும் முக்கியமாகும். உங்கள் வாழ்க்கைத் துணையினர் பேசிடும் வார்த்தைகள் மாத்திரமல்லாமல், பேசப்படாமலும் வார்த்தைகள் அவர்களுக்குள் உறைந்திருக்கிறது. “இருதயத்தின் மௌன வார்த்தைகளை” கேட்பதற்கே உன்னிப்பான காது வேண்டும்!

 

மாபெரும் துயரம் யாதெனில், நாம் இருக்கும் விதமாகவே தேவன் ஏற்றுக்கொள்வார் என்பதை நாமே கூட நாம் விசுவாசிக்காமல் இருப்பது தான்! ஆகவேதான், தேவனிடமிருந்துகூட நம்மை மறைத்துக்கொள்கிறோம்!! இதைத்தான் ஆதாமும் ஏவாளும் செய்தார்கள். ஒரு மரத்திற்குப் பின்னாகச் சென்று தங்களை தேவனிடமிருந்து ஒளித்துக்கொண்டார்கள்.

 

இன்று எண்ணற்ற கணவரும் மனைவியரும் ஒருவரையொருவர் அன்பு செலுத்த முடியாததற்கு காரணம், தாங்கள் தேவனால் ஏற்றுக்கொள்ளப்படும் மகிழ்ச்சியை அவர்கள் இன்னமும் அறியாததினாலேயே ஆகும். அவர்களிடம் கிறிஸ்தவ மார்க்கம் உண்டு, ஆனால் கிறிஸ்து இல்லை! பிசாசின் மிகப்பெரிய தந்திரங்களில் ஒன்றுதான்: “ஜனங்களிடம் கிறிஸ்து இல்லாத கிறிஸ்தவ மார்க்கத்தின் வெற்று கூட்டைத் தந்து விட்டு, அவர்களை பரிதபிக்க வைப்பதே!” அந்த அவனுடைய தந்திரமாகும். இந்நிலை வந்த எண்ணற்ற ஜனங்கள் பின்மாறிப் போனார்கள்! உத்தம கிறிஸ்தவமோ கிறிஸ்துவையே மையமாகக் கொண்டது ஆகும்.

 

எந்த இல்லத்தில் இயேசு கிறிஸ்து மையமாய் வீற்றிருக்கிறாரோ, அந்த இல்லமே சமாதானம் நிறைந்த வீடாய் இருக்கும். அந்த இல்லத்தில் மாத்திரமே கணவனும் மனைவியும் ஒருவரை ஒருவர் புரிந்து வாழ்வார்கள், ஒருவரையொருவர் ஏற்றுக்கொண்டும் வாழ்வார்கள்! ஏனென்றால், அவர்கள் இருவரையும் தேவன் ஏற்றுக் கொண்டிருக்கிறார் என்ற உண்மையையும், பூரண பாதுகாப்பையும், திடநம்பிக்கையையும் இவர்கள் பெற்றிருக்கிறார்கள்! இது போன்ற ஓர் இல்லத்தை கட்டுவதற்கே தம்பதிகள் துவங்க வேண்டும்!!

 

நாம் இயேசுவை மகிழ்ந்திருக்கச் செய்தவேளையில் அல்ல.... நாம் சீரழிந்து தீமை கொண்டவர்களாய், அவருடைய மனதிற்கு துன்பம் கொண்டுவந்த வேளையில்தான், நம்மை அவர் அன்புகூர்ந்தார்!

 

"இதைப்போலவே” உங்கள் வாழ்க்கைத் துணையை மனதார அன்புகூர தேவன் உங்களை அழைக்கிறார்! அந்த அன்பு, உங்கள் வாழ்க்கைத் துணையிடம் எந்த ஆதாரமும் இல்லாதபோதும் நேசித்திடும் அன்பு!

 

தம்பதியர் இருவரும் சேர்ந்து வாழத் துவங்கியவுடன், இப்போது நீங்கள் காண முடியாத அநேக தவறுகளை வெகு சீக்கிரத்தில் காண்பீர்கள்! இவ்வேளையில், நீங்கள் தொடர்ந்து ஒருவரையொருவர் அன்புகூர்ந்திட அனுகூலமாய் இருக்கப்போவது யாதெனில், உங்களிடத்தில் உள்ள குறைபாடுகள் அனைத்தையும் தேவன் கண்ட பின்பும் உங்களை ஏற்றுக்கொண்டிருக்கிறார் என்ற நிச்சயமே ஆகும்! இன்றும் கூட உங்களால் காண முடியாத குறைகளை தேவன் கண்டு கொண்டுதான் இருக்கிறார்..... ஆகிலும் இன்னமும் கூட, உங்களை அவர் ஏற்றுக்கொண்டிருக்கிறார்!

 

இவ்வித சத்திய அடிப்படையில் ஒருவரையொருவர் நீங்கள் நேசித்தால், நீங்கள் ஒவ்வொருவரும் ஒளிந்து வாழ்ந்த சிறைச் சுவர்களை நீங்களே தகர்த்து எறிந்து விடுவீர்கள். ஆம், அந்த சிறைச்சுவர்களைவிட உங்களுக்குள் வாசம் செய்யும் தெய்வ அன்பு வலிமை கொண்டதானபடியால், அந்த அன்பே முழு சுவர்களையும் மிக இலகுவாய் உடைத்து அகற்றிவிடும்! அப்போது, நீங்கள் இருவரும் மெய்யாகவே ஒன்றாகிவிடுவீர்கள்!!

 

முன் பக்கத்தில் நான் குறிப்பிட்ட அந்த பத்திரிக்கை செய்தியின் முடிவுரையை இங்கு குறிப்பிட விரும்புகிறேன்: “இந்த சாந்தமும், தயவுள்ள அன்பும், உங்கள் வாழ்க்கைத்துணையின் உணர்வுகளை புரிந்து கொள்ள நீங்கள் எடுக்கும் அக்கறையும்... உங்கள் வாழ்க்கைத் துணைக்கு இறக்கைகள் முளைக்கச் செய்யும்! துவக்கத்தில் இது பெலஹீனமான சிறிய இறக்கைகள், ஆகிலும் இறக்கைகள்! தொடர்ந்து நீங்கள் பிரயாசப்பட்டால் அந்த இறக்கைகள் வளரும்..... ஓர் நாளில், கழுகுகளைப்போல் ஆகாயத்தில் தேவன் உங்களுக்கென்று வகுத்த பாதையில் நீங்கள் பறந்து செல்வீர்கள்!"

 

 1. இணைந்து செயல்படுங்கள், அப்போது சாத்தானை ஜெயிப்பீர்கள்!

 

நீங்கள் தெரிந்து கொள்ள வேண்டிய மூன்றாவது முக்கியமான பகுதி நீங்கள் இணைந்து செயல்பட வேண்டும் என்பதாகும். ஆதாமும் ஏவாளும் ஏதேன் தோட்டத்திற்குள் சென்றபோது, தேவன் அவர்களை இணைந்தே செல்லும்படிச் செய்தார். ஆனால் சாத்தான் ஊடே வந்து, ஏவாளை பிரித்து அவளிடம் தனியே பேசினான். அங்கே ஆதாம் நின்று கொண்டிருந்த போதும், மரணத்திற்கேதுவான ஓர் முடிவை தன் மனைவியே தெரிந்து கொள்ள அனுமதித்து விட்டான். மாறாக, ஆதாம் ஏவாளைப் பார்த்து “சற்று பொறு என் அன்பே! தேவன் நமக்கு சொன்னது உனக்கு ஞாபகம் இருக்கிறதா? நாம் இந்த மரத்தின் கனியை புசிக்கலாகாது!” எனக் கூறியிருக்கலாம். அப்படி அவன் கூறியிருந்தால் சரித்திரமே இன்று தழைகீழாய் இருந்திருக்கும்!!

 

இன்றும் கணவனும் மனைவியும் தனித்தனியே சுயாதீனமாய் செயல்படுகிறபடியால்தான், அநேக பிரச்சனைகள் எழும்புகின்றன! நீங்கள் தனியாக சாத்தானை துரத்திட இயலாது! உங்கள் ஜீவியத்திலும், உங்கள் குடும்ப ஜீவியத்திலும், குழப்பத்தைக் கொண்டு வரும் தருணங்களை சாத்தான் எதிர்பார்த்து காத்திருக்கிறான். சாத்தான் முதலாவது ஓர் குடும்பத்தையே தாக்கினான்! இன்றும் அவன் குடும்பங்களையே முதலாவது தாக்குகிறான். ஆனால் தம்பதியராகிய நீங்கள் இணைந்து நின்றால், சாத்தானை நீங்கள் ஜெயித்திட முடியும்.

 

பிரசங்கி 4:9-12 வசனங்களில் “ஒண்டியாய் இருப்பதிலும் இருவர் கூடி இருப்பது நலம். ஒருவன் விழுந்தால் அவன் உடனாளி அவனை தூக்கிவிடுவான். ஒண்டியாய் இருந்து விழுகிறவனுக்கு தோல்வியே! இருவராய் இணைந்து நின்றால் ஜெயம் பெறலாம்! இன்னமும் மேலாய் முப்புரி நூலாய் இருந்தால், அது அவ்வளவு சீக்கிரமாய் அறாது!!” என வாசிக்கிறோம். இந்த வசனங்கள் இயேசு வாக்களித்த மத்தேயு.18:18-20 வசனங்களோடு நெருக்கமான தொடர்புடையதாய் இருக்கிறது. இந்த வசனங்கள் கூறும் வாக்குதத்தத்தை திரளான கணவன்மார்களும் மனைவியரும் இன்னமும் சுதந்தரிக்க முடியாமல் இருக்கிறார்கள். அது ஏனென்றால் இந்த வாக்குதத்தத்தை சுதந்தரிக்க, அவர்கள் இருவரும் ஒன்றாக இணைந்து கட்டப்பட வேண்டும். இந்த வாக்குதத்தம் புதுமணத் தம்பதியராகிய உங்களுக்குப் பலிக்கக்கடவதாக! திருமண வாழ்வில் 50 - ஆண்டுகள் கடந்து சென்ற என் வாழ்க்கையில், நானும் என் மனைவியும் இணைந்து ஜெபித்த ஜெபங்களுக்கு ஆச்சரியமான பதில்களை தேவன் வழங்கியிருக்கிறார்!

 

இந்த வசனம் கூறியபடி, இருவராய் இருக்கும் நீங்கள் இணைந்து ஆவியில் ஒருமனப்பட்டு ஜெபத்தில் எதைக்கேட்டாலும், பரலோகத்திலிருக்கும் உங்கள் பிதா உங்கள் விண்ணப்பங்களுக்கு பதில் தருவார் (வசனம் 19). அது ஏனென்றால், ஆண்டவராகிய இயேசுவே உங்கள் நடுவில் இருப்பதுதான்! (வசனம் 20), நீங்கள் இருவரும் மூன்றாவது நபராகிய இயேசுவை மையமாக வைத்து சேர்ந்து ஜெபித்தால், சாத்தானுடைய சகல கிரியைகளும் கட்டப்பட்டு விடும்! (வசனம்.18). இயேசுவோடு சேர்ந்து நீங்கள் மூவரும் அறுந்து போகாத முப்புரி நூலாய் விளங்குவீர்கள்!

 

உங்கள் வாழ்க்கையின் ஒவ்வொரு பிரச்சனையையும் தேவனால் தீர்த்திட முடியும்! மனுஷனால் தீர்த்திட முடியாத ஏராளமான பிரச்சனைகளை நீங்கள் சந்திப்பீர்கள். ஆனால் தேவனால் தீர்க்க முடியாத பிரச்சனை யாதொன்றும் இல்லை! இருப்பினும், உங்கள் பிரச்சனைகள் தேவனால் தீர்க்கப்பட வேண்டுமென்றால், நீங்கள் இருவரும் ஒன்றாய் இணைந்திருக்க வேண்டும்! ஆகவே, நீங்கள் எதைச் செய்தாலும் இணைந்தே செயல்படுங்கள்!!

 

உங்கள் வாழ்க்கைத் துணைக்கு உங்களால் ஏதேனும் பாதிப்பு ஏற்படுவதை உணர்ந்தால், உடனே ஒருவரையொருவர் மன்னியுங்கள். மன்னிப்பதற்கு காலதாமதம் செய்யாமல், உடனடியாக மன்னிப்பு கேளுங்கள். இந்தப் பூமியில் எதை இழக்க நேர்ந்தாலும், எந்த விலைக்கிரயத்தையும் செலுத்தி உங்களின் ஐக்கியத்தை பாதுகாத்து கொள்ளுங்கள். அவ்வாறு ஐக்கியத்தை பாதுகாத்துக் கொண்டால், நீங்கள் ஜெபிக்கும்போது தேவனிடமிருந்து துரிதமாய் பதில் பெறுவீர்கள். இது போன்ற உங்கள் இல்லத்தில் சாத்தான் பிரவேசித்திட ஒருபோதும் இயலாது! ஏனெனில், இது தேவனுடைய வாக்குத்தத்தம்!!

 

முடிவாக, ஓர் முக்கியமான சத்தியத்தை அறிந்து கொள்ளுங்கள். தம்பதியராகிய உங்கள் திருமண வாழ்வில், அன்பிலே செய்யப்படாத எந்த சிந்தையும், வார்த்தையும், செயலும் ஓர் நாளில் முற்றிலும் அழிந்து போகும்!

 

எவ்வித கஷ்டத்தையும் ஜெயித்திட தெய்வ அன்பு ஒன்றே வகை செய்திடும்! அதுவே மூடிய கதவுகளைத் திறக்கும்! சிறைச்சுவர்களை தகர்க்கும்!

 

இந்த தெய்வீக அன்பை நீங்கள் நாடிப் பின்தொடர்ந்தால், தம்பதியராகிய உங்கள் திருமண வாழ்க்கை இந்த முழு உலகத்திலும் மிகுந்த மகிழ்ச்சி நிறைந்த வாழ்க்கையாய் இருக்கும்!

 

சரியான துணையை தெரிந்து கொண்டால் மாத்திரமே போதாது. அதை நீங்கள் இப்போது செய்துவிட்டீர்கள்! ஆனால், உங்கள் முழு திருமண ஜீவியத்திலும் உங்களின் தெரிந்து கொள்ளுதல் எப்போதும் சரியனதாகவே இருக்க வேண்டும்.

 

இன்று முதற்கொண்டு, மேற்கண்ட அன்பின் தாற்பரியத்தை நீங்கள் கைக்கொண்டு வாழ்ந்தால், அதுவே மிக நேர்த்தியான துவக்கம் ஆகும்! இதே பாதையில் நீங்கள் ஒவ்வொருநாளும் சென்றுவிட்டால், அவபக்தி நிறைந்த இந்த சந்ததியில் “தெய்வ அன்பே சகலத்தையும் வெல்லும்! அது ஒருக்காலும் ஒழியாது!!” என்பதை நிரூபித்துக் காண்பிப்பீர்கள். உங்கள் ஜீவியத்தில் தேவனும் அதிகமாய் மகிமைப்படுவார்.

 

தம்பதியரே! உங்கள் இல்லம் ஆண்டவருக்கு மிகச் சிறந்த சாட்சியாய் விளங்க தேவன் கிருபை செய்வராக! இப்போது நீங்கள் வாசித்த இந்த செய்திகள் வெறும் வார்த்தைகளாய் இல்லாமல், அவை உங்கள் ஜீவியத்தில் மாம்சமாக மாறி, அதன்மூலம் உங்கள் இல்லம் எண்ணற்றோருக்கு சுடர் ஒளியாய் விளங்குவதாக!!

 

மிகுந்த தேவையுள்ள ஜனங்களால் இந்த உலகம் நிரம்பியிருக்கிறது! உங்கள் திருமண ஜீவியத்தில் தேவன் கிரியை செய்து, உங்கள் மூலமாய் தமது அன்பை விளங்கச் செய்துவிட்டால், உங்களை வல்லமையாய் பயன்படுத்துவார்! ஆம், உங்களை சூழ்ந்திருக்கும் உலகத்தில் உள்ள தேவை நிறைந்த ஏராளமான இல்லங்களுக்கு உதவிக்கரம் நீட்டிட உங்களை வல்லமையாய் பயன்படுத்துவார்! என்பதை மீண்டும் உங்களுக்கு வலியுறுத்தி நினைவூட்டுகிறேன்!

 

தம்பதியராகிய உங்களை தேவன் ஆசீர்வதிப்பாராக! ஆமென்.

 

அதிகாரம் 3
இல்லம் ஓர் இனிய தோட்டம்!

திருமணம் ஓர் வசந்தசோலை! முதல் திருமணத்தை ஓர் தோட்டத்தில் வைத்து, தேவனே முன் நின்று நடத்தினார்! பொதுவாக, ஓர் திருமண வைபவத்தில் அநேகம் பூச்செடிகளை கொண்டுவந்து வைப்பது உண்டு. அந்த சூழ்நிலை, ஏதேன் தோட்டத்தையே நமக்கு நினைவூட்டுகிறது. நாமாக ஜோடிக்கும் இந்த தோட்டத்தைவிட ஏதேன் தோட்டம் மிக அழகுள்ளது ஆகும். இவ்வாறு, திருமணவைபவம் “ஏதேன் தோட்டத்தை நமக்கு மீண்டும் நினைவூட்டுகிறபடியால்” அந்த வைபவத்திற்காக தேவனுக்கு நன்றி கூறுவோமாக!

 

இவ்வேளையில், புதுமணத்தம்பதியரே! ஏசாயா58:11-ம் வசனம் உங்களுக்குச் சொந்தமான ஒரு வாக்குத்தத்தமாய் இருப்பதாக: “நீ நீர் பாய்ச்சலான தோட்டத்தைப் போல் இருப்பாய்" என்பதே அந்த வாக்குத்தத்தம்!

 

இதைத் தம்பதியருக்கு நேரிடையாக சொல்ல வேண்டுமனால் “உங்கள் திருமண வாழ்க்கை நீர் பாய்ச்சலான ஓர் தோட்டத்தை போலிருக்கும்!” என்றே கூறலாம்.

 

ஆதியாகமம் 2-ம் அதிகாரத்தில் “தேவனாகிய கர்த்தர் ஓர் தோட்டத்தை ஏற்படுத்தி, அதில் பயிர் செய்யும்படி மனுஷனையும், மனுஷியையும் வைத்தார்!" எனக்கூறுகிறது. இருப்பினும், ஆதாமுக்கும் ஏவாளுக்கும் என பிரத்தியேகமாய் “பயிர் செய்து வளர்த்திட வேறொரு தோட்டத்தை” தேவன் வழங்கியிருந்தார். ஆம், அவர்களின், ஒருவருக்கொருவர் கொண்ட உறவை வளர்ப்பதே அந்த தோட்டம் ஆகும்! ஆனால் துரதிருஷ்டவசமாய், அந்த தோட்டத்தை அவர்கள் பயிர்செய்து வளர்க்கத் தவறி விட்டார்கள்! நடந்தது என்னவென்றால், தங்கள் இருவருக்கும் நடுவே பிசாசு நுழைந்திடவே, அனுமதித்து விட்டார்கள்!!

 

ஆம், புதுமணத் தம்பதியரே! நீங்கள் பயிர் செய்யும்படிக்கே ஓர் தோட்டத்தை உங்களுக்கு இன்று ஆண்டவர் தந்திருக்கிறார்! சிறிதேனும் கூட அலட்சியம் காட்டினாலும், இந்த தோட்டம் வெகுவிரைவில் ஓர் வனாந்தரமாய் மாறிவிடும். நீதிமொழிகள்.24:30-34 வசனங்களில், ஓர் சோம்பேறியான மனுஷனின் தோட்டம், எவ்வாறு ஓர் வறண்டவனாந்தரமாய் மாறியது என்பதைக் குறித்து கூறுகிறது. இன்றும்கூட, எண்ணற்றோரின் திருமணவாழ்க்கையில் இப்படியே சம்பவித்திருக் கிறது. ஆகிலும் தம்பதியரே! இந்த நிலை உங்களுக்கு ஏற்படக்கூடாது! எந்த நிலையிலும், உங்களுக்குத் தேவன் தந்த வாக்குத்தத்தமாகிய “உங்கள் திருமண வாழ்க்கை நீர் பாய்ச்சலான ஓர் தோட்டத்தை போல் இருக்கும்” என்பதை மறவாதிருங்கள்.

 

வேத வாக்கியங்களில் காணப்படும் மூன்று தோட்டங்களை தம்பதியர்கள் இங்கு கவனிக்க வேண்டும்:

 

 1. ஏதேன் தோட்டம்

 

2.கெத்சமனே - கல்வாரி தோட்டம்

 

 1. சாலமோனின் உன்னதப்பாட்டில் வரும் நேசரின் தோட்டம்,

 

பாவம் ஓர் தோட்டத்தில்தான் தோன்றியது! இரட்சிப்பும் கூட ஓர் தோட்டத்தில்தான் தோன்றியது, தம்பதியரே, உங்கள் திருமண வாழ்க்கை கிறிஸ்துவை மகிமைப்படுத்தும் ஓர் தோட்டமாக என்றென்றும் விளங்குவதாக!!

 

ஏதேனின் தோட்டம்

 

இந்த தோட்டத்திற்குள் எப்படி பாவம் பிரவேசித்தது? அதற்கு அடிப்படை காரணமாய் இருப்பது, ஆதாம் ஏவாளிடம் காணப்பட்ட இரண்டு தவறான மனப்பான்மையே ஆகும்.

 

முதல் தவறான மனப்பான்மை, பெருமை! தேவனைவிட தங்களுக்கு அதிகம் தெரியும் என இவர்கள் எண்ணிவிட்டார்கள். தேவனுக்கு கீழ்ப்படியாமல் இருந்துவிட்டு, அப்படியே சும்மா இருந்து விடலாம் எனவும் எண்ணி விட்டார்கள். அதுபோலவே, இன்றும் அநேக ஜனங்கள் இந்த உலகத்தில் எண்ணிக் கொண்டிருக்கிறார்கள்.

 

இரண்டாவது தவறான மனப்பான்மை சுயநலம்! அந்தக் கனியைப் புசித்தால், அதன்மூலம் தங்களுக்கு என்ன கிடைக்கும்? என ஏவாள் சிந்திக்கத் துவங்கி விட்டாள். இதை வேதாகமம் குறிப்பிட்டு, ஸ்திரீயானவள் "அந்த விருட்சத்தைப் பார்வைக்கு இன்பமும், புத்தியை தெளிவிக்கிறதற்கு இச்சிக்கப்படத்தக்க விருட்சமாய் இருக்கிறது! என்று கண்டாள்” எனக் கூறுகிறது.

 

ஆதியில் பெருமையும் சுயநலமுமே பாவத்திற்கு மூல காரணமாய் இருந்தது. இன்றும் கூட, மானிட வர்க்கத்தில் இந்த இரண்டும் எல்லா பாவங்களுக்கும் மூல காரணமாய் விளங்குகின்றது. இதனால் ஏற்படும் விளைவுகள் எண்ணற்ற விதத்தில் வெளிப்படுகின்றன!

 

அடிப்படை பூர்வமாய் கூறவேண்டுமென்றால், மனுஷன் தன்னையே மையமாகக் கொண்டு, தேவனை சார்ந்து கொள்ளாத வாழ்க்கையையே எப்போதும் வாழவிரும்புகிறான்! இவ்வாறாகவே பாவம் பிரவேசித்தது! 

 

கெத்சமனே - கல்வாரித் தோட்டம்!

 

ஓர் தோட்டத்தில் இருந்தே பாவம் வந்தது! அதேபோல், ஒரு தோட்டத்தில் இருந்துதான் இயேசு இரட்சிப்பு கொண்டு வந்தார்!!

 

இன்று அநேகருக்கு கெத்சமனே தோட்டம் இருப்பது தெரியும். ஆனால், இயேசு சிலுவையில் அறையப்பட்டதும் ஓர் தோட்டத்தில் தான் எனவும்! அவர் அடக்கம் செய்யப்பட்டதும் ஓர் தோட்டத்தில் இருந்த, ஒருக்காலும் ஒருவனும் வைக்கப்பட்டிராத ஓர் புதிய கல்லறையில் தான் எனவும்!! அநேகர் அறிந்திருக்கவில்லை (யோவான் 19:14).

 

மேலும், ஒரு தோட்டத்தில் வைத்தே இயேசு காட்டிக் கொடுக்கப்பட்டார்! ஒரு தோட்டத்தில்தான் இயேசு சிலுவையில் அறையப்பட்டார்! ஒரு தோட்டத்தில் அடக்கம் செய்யப்பட்டார்! ஒரு தோட்டத்திலிருந்தே மரித்தோரிலிருந்து உயிரோடு எழுந்தார்! தம்பதியரே, உங்கள் இருவருக்கும் இந்த தோட்டத்திலிருந்துதான் இரட்சிப்பு வந்தது. அந்த தோட்டத்தில், இயேசுவின் மூலமாய் விளைந்த அனைத்து பலன்களும் இன்று உங்களுக்கு சொந்தம்!!

 

இந்த பூமியில் வாழ்ந்த இயேசுவின் ஜீவியத்தை நாம் உற்று நோக்கும்போது, ஆதாயின் வம்சத்தில் நாம் காணும் பெருமைக்கும் சுயநலத்துக்கும் முற்றிலும் எதிர்மறையான ஜீவியத்தையே அவரில் நாம் காண்கிறோம்!

 

கிறிஸ்துவின் ஜீவியத்தில், பிதா எதைச் செய்ய விரும்பினாரோ, “அது சிலுவையில் சென்று மரிப்பதாயிருந்தாலும்” அதை அப்படியே நிறைவேற்றிட விரும்பிய ஓர் தாழ்மையை நாம் இயேசுவிடம் காண்கிறோம். யாதொன்றும் மறுசிந்தனை கொள்ளமாலே பிதாவின் வழியே உடனடியாக தெரிந்து கொண்டார்! எவ்வித சுயநலமும் இல்லாமல், பிறருடைய தேவைகளையே எப்போதும் தன் சிந்தையில் வைத்திருந்தாரே அல்லாமல், தனக்கானதை அவர் தேடவே இல்லை! பிறருக்கு உதவி செய்யும்படி, தன்னை தியாகமாய் தந்திடவே எப்போதும் விருப்பமுடையவராய் இருந்தார். தம்பதியராகிய நீங்கள் இருவரும், இதே சிந்தையுடையவர்களாய் இருக்கவே அவர் விரும்புகிறார்.

 

நேசரின் தோட்டம்!

 

இந்த மூன்றாவது தோட்டம், இன்றுள்ள அநேக கிறிஸ்தவர்களுக்கு தெரியவே தெரியாது. இந்த தோட்டம் சாலமோன் எழுதிய உன்னதப்பாட்டில் குறிப்பிடப்பட்டிருக்கிறது. உன்னதப்பாட்டின் புத்தகம் ஒரு மணவாளனுக்கும் மணவாட்டிக்கும் இடையிலான உறவை... அல்லது, ஒரு கணவனுக்கும் மனைவிக்கும் இடையிலான உறவை.... விவரித்திடும் ஓர் கவிதைப் பெட்டகம் ஆகும்.

 

உன்னதப்பாட்டில் 4:12-ம் வசனத்தில் மணவாளன் கூறும்போது “என் மணவாளியே! நீ அடைக்கப்பட்ட எனக்காகவே உள்ள தோட்டம்!!" எனக் கூறுவார். இங்கு உருவகமாய் உரைக்கப்பட்ட மணவாளன் கிறிஸ்துவே ஆவார். இங்கு குறிப்பிடப்பட்ட அவருடைய மணவாளி “அவருக்காகவே உள்ள தோட்டம்” என உருவகப்படுத்தப்பட்டுள்ளாள்..... இங்குதான் நீங்கள் எல்லாவற்றிற்கும் முதன்மையாக அறிந்து கொள்ள வேண்டிய பகுதியுள்ளது. அது என்னவெனில், உங்கள் திருமண வாழ்வில், நீங்கள் இருவருமாய் சேர்ந்துதான் ஓர் தோட்டத்தை நாட்ட வேண்டும். ஆனால், அந்த தோட்டம் பிரதானமாய் உங்களுடைய நன்மைக்காக அல்ல! அல்லது, பிறருடைய நன்மைக்காகவும் அல்ல.... அது உங்கள் ஆண்டவருக்காகவே இருந்திட வேண்டும். இதை உங்கள் மனதில் எப்போதும் பசுமையாய் வைத்திருங்கள். இந்த அவருடைய தோட்டத்தில் நன்மையே நிறைவாக இருந்தது. இவ்வித நிறைவின் மூலமாகவே மற்றவர்களும் ஆசீர்வதிக்கப்பட முடியும்!

 

இதைத்தான் இயேசு போதித்தார்! சிலர் அவரிடம் வந்து கற்பனைகளில் பிரதனமானது என்ன? என்ற கேள்வியை கேட்டார்கள். அதற்கு இயேசு “உன் தேவனாகிய கர்த்தரிடத்தில் முழு இருதயத்தோடு அன்பு கூருவாயாக! இதுவே பிரதான கற்பனை.... இதற்கு பிறகுதான், உன்னிடத்தில் நீ அன்பு கூருவதுபோல பிறனிடத்திலும் அன்பு கூர்ந்திட வேண்டும்!!” (மத்தேயு 22:37-40) எனக் கூறினார்.

 

நம்முடைய ஜீவியம் எப்போதுமே “தேவனை முதலாவதாக வைத்தே” துவங்க வேண்டும். இந்த காரணத்தினிமித்தமே, தேவன் ஆதாமையும் ஏவாளையும் சேர்த்து சிருஷ்டிக்காமல், தனித்தனியே சிருஷ்டித்தார்!

 

அதனிமித்தமாய், ஆதாம் தன் கண்களைத் திறந்தவுடன் அவன் காண வேண்டிய முதல் நபர் தேவனாகவே இருக்க வேண்டும், ஏவாள் அல்ல! பின்பு ஏவாள் சிருஷ்டிக்கப்பட்டபோது தன் கண்களைத் திறந்தவுடன் அவள் காண வேண்டிய முதல் நபரும் தேவனாகவே இருந்தார், ஆதாம் அல்ல!

 

தம்பதியரே, உங்கள் ஜீவியத்திலும் இவ்வாறாகவே எப்போதும் இருந்தால் உங்கள் திருமண வாழ்க்கை நீரூற்றான செழித்த தோட்டமாய் இருக்கும்!

 

ஒவ்வொரு தோட்டத்திற்கும் ‘மழை' தேவை! புதிய உடன்படிக்கையில் நாம்

பரிசுத்த ஆவியினால் நிரப்பப்படும் பாக்கியத்தை பெற்றிருக்கிறோம்,

அதுவே பரலோகத்தின் மழை ஆகும்! இவ்வாறு பரிசுத்தாவியை

30

 

தம்பதியராகிய நீங்கள் முழு இருதயத்தோடும் தேவனிடம் கேட்டுத் தேட வேண்டும். ஆகவே, பரிசுத்தாவியில் நிறைந்திருப்பதின் அர்த்தம், உங்கள் ஜீவியத்தின் ஒவ்வொரு பகுதியும் பரிசுத்தாவியின் முழு ஆளுகைக்குள் வருவதேயாகும். எனவே உங்கள் ஜீவியத்தின் ஒவ்வொருநாளும், இந்த பரலோகத்தின் மழைக்காக உங்கள் முழு தோட்டத்தையும் திறந்து வையுங்கள்!

 

கீழை நாட்டு கலாச்சாரத்திற்கும் மேலைநாட்டு கலாச்சாரத்திற்கும் இடையில் ஏராளமான வித்தியாசங்கள் உள்ளன. ஆனால், இந்த இரண்டு கலாச்சாரத்திலும் 'பெருமை' சமமாகவே உள்ளது. இந்திய திருமணமாகிய கீழைநாட்டு கலாச்சாரத்தில் “இதோ மணவாளி வந்துதித்தாள்! என பாடாமல், இதோ மணவாளன் வந்துதித்தார்!" என்றே பாடுவார்கள். இன்னும் சில இந்திய திருமணங்களில், மணவாளன் ஒரு குதிரையில் சவாரி செய்து வருவார்... ஏனெனில், கிழக்கத்திய திருமணங்களில் மணமகன்தான் மிக முக்கியமானவர். அந்த மணமகளோ, அந்த குதிரைக்குப் பின்னால் நடந்து வந்து கொண்டிருப்பாள்! ஏனெனில், கீழைநாட்டு கலாச்சாரப்படி மணமகனைவிட மணமகளை சற்று தாழ்வாகவே கருதுவார்கள்!!

 

ஆனால், மேலை நாட்டு கலாச்சாரத்தில் இதற்கு நேர் மாறாய் உள்ளது! மணமகள் திருமண மஹாலுக்குள் வரும்போது அங்குள்ள ஒவ்வொருவரும் எழுந்து நிற்பார்கள்! ஆனால், மணமகனுக்கோ ஒருவரும் எழுந்து நிற்பதில்லை! அது ஏனென்றால், மேலை நாட்டவருக்கு மணமகளே முக்கியமாய் இருக்கிறபடியால் “இதோ மணவாளி வந்துதித்தாள்!” என பரவசப்படுகின்றனர்.

 

ஆனால், கிறிஸ்தவ கலாச்சாரத்தில் “இதோ, ஆண்டவர் இங்கே வந்துதித்தார்” என்பதாகவே இருக்க வேண்டும்! கீழை நாட்டு கலாச்சாரம், மேற்கத்திய கலாச்சாரம் ஆகிய இரண்டுமே பாவத்தினால் கறைப்பட்டு போனது. ஒன்றில் 'புருஷன்' பிரதானமானவன்! மற்றொன்றில் “ஸ்திரீ ' பிரதானமானவள்! ஆனால் ஆண்டவருக்கு முதலிடம் தரப்பட்டுவிட்டால், தம்பதியர் இருவருமே “இதோ ஆண்டவர் வந்துதித்தார்” எனக் கூறிட முடியும்.

 

கீழைநாட்டு கலாச்சாரத்தில் புருஷனானவன் “நான் ஒன்றும் அவளிடம் சென்று பெண் கேட்கவில்லை. அவளுடைய தந்தைதான் எங்களிடம் வந்து 'மாப்பிள்ளை' கேட்டார்” எனக்கூறி மேன்மை பாரட்டுவது உண்டு. இவர்களின் பெருமையை உங்களால் காண முடிகிறதா? மேலை நாட்டு கலாச்சாரத்திலோ, ஸ்திரீயானவள் “நான் ஒன்றும் அவர்களிடம் சென்று மாப்பிள்ளை கேட்கவில்லை. மாப்பிள்ளைதான் என்னைச் சுற்றிசுற்றி வந்து என்னை கைபிடித்தார்!" என்று சொல்வாள். இங்கேயும் பெருமை தாண்டவமாடுவதைக் கண்டீர்களா?

 

ஆனால், கிறிஸ்தவ கலாச்சாரத்தில், நாம் தாழ்மையாய் கூறுவதெல்லாம் “ஆண்டவர் தான் எங்களை ஒன்றாக இணைத்தார்! ஆண்டவரை நாங்கள் நேசிக்கிறோம், அவருடைய பார்வையில் நாங்கள் இருவருமே சமமானவர்கள்!”ஆகவே தம்பதியர் இருவரும் அவரவருக்குள்ள கலாச்சாரத்தின் பெருமைக்கு அப்பாற்பட்டவர்களாய் “ஒர் கிறிஸ்தவனாய்” இருப்பதற்கே கவனம் கொள்ள வேண்டும். காலைதோறும் உங்களின் கீதம் “இதோ, கர்த்தர் வந்துதித்தார்!” என்றே இருப்பதாக! இவ்வாறாகவே தம்பதியராகிய நீங்கள் இருவரும் ஆண்டவரின் தாழ்மையான அடிமைகளாக இருப்பீர்களாக! 'அப்போது உங்கள் திருமணம், நீரூற்றான தோட்டத்தைப் போலவே இருக்கும்!!

 

இந்த பெருமையோடு சேர்த்து “சுயநலமும்” எல்லா கலாச்சாரத்திற்கும் சமமாகவே உள்ளது. ஒரு வாலிபன், தான் திருமணம் செய்வதற்கு ஒரு பெண்ணைக் காணும்போது, சுயநலமாய் அழகைத் தேடி “ஓர் வசீகரமான பெண்ணையே” நாடுகிறான். அது போலவே ஒரு வாலிப ஸ்திரீ, தான் திருமணம் செய்வதற்கு ஒரு ஆணை காணும்போது, சுயநலமாய் பணத்தைத் தேடி “ஓர் பணக்கார மனுஷனையே" நாடுகிறாள். உலகம் முழுவதும், இதுவே உண்மையாய் இருக்கிறது!

 

ஆனால் ஒரு கிறிஸ்தவ கலாச்சாரத்தில், நீங்களோ, பிரதானமாய் அந்த நபர் ஆண்டவரை நேசித்து அவரை கனம்பண்ணுகிறபடியால் அந்த நபரையே தெரிந்து கொண்டீர்கள். ஆம், தம்பதியராகிய நீங்கள், இவ்வித மனுவர்க்கத்தின் சுயநலத்திற்கு மேலாக எப்போதும் உயர்ந்திருக்க வேண்டும்!

  

தம்பதியராகிய நீங்கள் இருவரும் வெவ்வேறு கலாச்சாரத்திலிருந்து வருகிறபடியால், நீங்கள் இருவருமே “எந்த கலாச்சாரமும் ஒன்றுக்கொன்று மேன்மையானது அல்ல” என்ற உண்மையை நன்கு அறிந்தவர்களாகவே இருக்க வேண்டும். கீழை நாட்டார் மேலை நாட்டாரை விட உயர்ந்தவர் என்றும்! மேலை நாட்டார் கீழை நாட்டாரை விட உயர்ந்தவர் என்றும்! எண்ணிக்கொள்கிறார்கள். ஆனால், இவர்கள் இருவருமே தவறு. "கிறிஸ்தவ கலாச்சாரமே” மிக உன்னத உயர்ந்ததாகும்! இந்த கலாச்சாரத்தை நீங்கள் பின்பற்றி வரும்படியே தேவன் விரும்புகிறார்.

 

ஓர் நல்ல தோட்டத்தை நாட்டுவது பற்றி கணினியில் 'Google' தேடலை நாடி, அதிலிருந்த 5 நல்ல குறிப்புகளை கண்டுபிடித்தேன்.

 

1.நோய்க்கு, எதிர்ப்பு சக்தி நிறைந்த விதைகளையே பயன்படுத்துங்கள்!

 

நோய் கட்டுப்பாடான வாழ்க்கைக்கு திறவுகோல், நோய் வராமல் காப்பதேயாகும். நம்முடைய நாவினாலேயே விதைகளை விதைக்கிறோம். ஆகவே தம்பதியர் ஒருவருக்கொருவர் பேசிக்கொள்ளும்போது உங்கள் வார்த்தைகளினால் நோயைப்பரப்பாமல், நோயை எதிர்க்கக்கூடிய வார்த்தைகளையே பயன்படுத்துங்கள். சில நோய்களுக்கு, கிருமிநாசினி தெளித்தால்தான் செடிகளைப் பாதுகாக்க முடியும். உங்கள் தோட்டத்தில் களைகளைத்தடுக்க நீங்கள் விரும்பினால், உங்கள் நாவின் பயன்பாட்டில்

 

இந்த கிருமி நாசினிக்கு ஒப்பாகவே கட்டுப்பாடான நடவடிக்கை எடுக்க வேண்டும். ஆம், உங்கள் தோட்டத்தில் களைகள் வளர ஒருபோதும் அனுமதிக்காதீர்கள்!

 

 1. உரங்கள் இட்டு மண் வளத்தை கூட்டுங்கள்!

 

உங்கள் திருமண வாழ்க்கை மகிழ்ச்சியாய் இருக்க வேண்டு மென்றால், ஒருவரையொருவர் ஊக்கமடையச் செய்து ஒருவரையொருவர் மனதார மெச்சிக் கொள்ளுங்கள்! உங்கள் மண்வளத்தில் இவ்வாறு உரங்கள் இட்டால், மெய்யாகவே நல்ல அறுவடையை காண்பீர்கள்!!

 

 1. வியாதியை கட்டுப்படுத்த முடியாத செடியை அழித்திடுங்கள்!

 

கட்டுப்படுத்த முடியாத, அடிமைப்படுத்தும் எல்லாவித பழக்கங்களையே இது குறிக்கிறது. குறிப்பாய், கட்டுப்பாடு இல்லாமல் டெலிவிஷன் பார்க்கும் பழக்கம்! அதை அழித்துவிடுங்கள்..... அந்த T.V.செட்டை அல்ல, மாறாக.... அதற்கு முன் அமர்ந்து வீணாய் போகும் நேரத்தையே இங்கு குறிப்பிடுகின்றேன். இதுபோன்ற பழக்கங்களுக்கு கண்டிப்பான கட்டுப்பாடுடன் இருங்கள். இவ்வித விழிப்புள்ள கட்டுப்பாடு, சுகம் தரஇயலாத கேடான பழக்கங்களுக்கு உங்களை விலக்கி காக்கும். ஆம், இது போன்ற பழக்கங்களை உங்கள் கட்டுபாட்டிற்குள் வைத்திருக்க வேண்டியது மிக மிக முக்கியமாகும்!

 

 1. நோய் பீடித்த இலைகளை உடனே பிடுங்கி எறியுங்கள்!

 

உங்கள் வாழ்க்கை துணைக்கு ஏதோ ஒரு வகையில் நீங்கள் மன வேதனை தந்ததாக உணர்ந்தால் “அதுவே நோய் பீடித்த இலை” ஆகும். இந்த இலையை உடனே வெட்டி எறியுங்கள். அதாவது, உடனடியாக மன்னிப்பு கேளுங்கள்! உடனடியாக மன்னியுங்கள்! இப்படிச் செய்தால் அந்த இலை துண்டிக்கப்பட்டுவிடும். அப்படி இல்லாத பட்சத்தில், இவ்வித பிரச்சனைகள் மிகுந்த பாதிப்பை கொண்டு வருவதாய் மாறி விடும். இங்கு ஒரு முக்கிய குறிப்பு என்னவென்றால், “அந்த வியாதி பீடித்த இலையை தூக்கி எறிந்து விட்டு” அவ்வாறு எறிந்த கடந்ததை மீண்டும் நினைவு கூராதிருங்கள்!

 

 1. பராமரிக்க இயலாதபடி அதிக செடிகளை நடாதீர்கள்!

 

செடிகளை நெருக்கமான கூட்டத்தில் வைத்திருக்கக் கூடாது. அவ்வித நெருக்கம், நல்ல காற்று சூழ்நிலைகளையும் போதுமான சூரிய வெளிச்சத்தையும் தடுக்கும். அதாவது, ஒரு நாளின் 24 மணி நேரத்தில் அநேக காரியங்களைச் செய்திட முயற்சிக்காதீர்கள். இதனிமித்தமாய், உங்கள் திருமண வாழ்வின் தோட்டம் உதாசீனப்படுத்தப்பட்டு, உங்கள் குடும்பம் கடைநிலைக்குரியதாய் மாறிவிடும். உங்கள் குடும்பமாகிய தோட்டமே முதலாவது முக்கியத்துவத்திற்குரியதாய் இருக்க வேண்டும். 'அதிகமான செடிகள்' போதுமான வெளிச்சத்தை (தேவனுடைய ஒளியை தடுக்கும்! மேலும், தம்பதியராகிய உங்களின் நல்ல ஐக்கியத்திற்குரிய 'காற்றோட்டமான சூழ்நிலையையும் தடுக்கும்!

 

இந்த தாவர பிரமாணங்களை, உலகத்தில் உள்ள எல்லாத் தோட்டங்களுக்கும் உரியதாகவே தேவன் வைத்திருக்கிறார். ஆகவே உங்கள் குடும்பத்திற்கே முதல் முக்கியத்துவம் கொடுங்கள். மேலும் உன்னதப்பாட்டு 4:16-ல் “வாடையே! எழும்பு; தென்றலே! வா; கந்தகப்பிசின்கள் வடிய என் தோட்டத்தில் வீசு; என் நேசர் நம்முடைய தோட்டத்திற்கு வந்து, தமது அருமையான கனிகளைப் புசிப்பாராக” என வாசிக்கிறோம். அனைவருடைய திருமண வாழ்விலும் வடக்கிலிருந்து வீசும் குளிரால் நடுங்க வைக்கும் 'வாடைக் காற்றாகிய துன்பங்களை சந்திக்கத்தான் வேண்டும்! அதற்கு நேர்மாறாக தெற்கிலிருந்து வீசும் தென்றலோ “இன்பத்திற்கு” உரியதாய் நமக்கு வீசும்!!

 

இயேசுவே நம் ஜீவியத்திற்கு தலையாய் இருந்து நம்மை ஆளுகை செய்திட வைத்திருப்போமென்றால், நாம் சந்திக்கும் துன்பமோ அல்லது இன்பமோ உபத்திரவமோ அல்லது ஆறுதலோ ஆகிய எவ்வித மாறுபாடான காற்றாயிருந்தாலும், நம் மூலமாய் கிறிஸ்துவின் நற்கந்தத்தையே எங்கும் வீசிடச் செய்திடும்!

 

இந்த உலகத்திலோ, இது போன்ற நற்கந்தத்தை அவர்கள் கொண்டு

வரமுடிவதில்லை. இவர்களோ ஒவ்வொன்றைக் குறித்தும் குறை

சொல்லுகிறவர்களாய் இருக்கிறார்கள். துன்ப நேரங்களில் இவர்கள்

தேவனைகூட குறை சொல்லிவிடுகிறார்கள். இவ்வுலகில் உள்ள

அனைவருமே தெற்கின் 'இன்பமான' தென்றலை தாரளமாய்

கையாண்டு..... வடக்கின் 'துன்பமான' வாடை காற்றை கையாளவோ

அறிந்திருக்க மாட்டார்கள். ஆனால், கிறிஸ்துவின் மணவாட்டியோ

துன்பத்தையும் இன்பத்தையும் ஜெயமாய் கையாண்டுவிடுவாள்!

தம்பதியரே, இவ்வாறாகவே உங்கள் இருவருக்கும் இருந்திட வேண்டும்!

ஆம், திருமணம் ஆன அனைவருக்கும் இருந்திட வேண்டும்!!

 

கடைசியாக, இந்த வசனத்தில் நாம் வாசித்தப்படி என் நேசர் நம்முடைய தோட்டத்திற்கு வந்து, தமது அருமையான கனிகளைப் புசிப்பாராக” என்பதாய் இருக்க வேண்டும். ஆம், துன்ப நேரங்களில் நீங்கள் பெற்ற ஜெயம், ஆண்டவர் மாத்திரமே காணும்படி இருக்க வேண்டும்! மற்றவர்கள் காணாதிருக்கும் வேளையில்தான், அந்தரங்கத்தில் உங்கள் ஜீவியத்தை ஆண்டவர் காண்கிறார்! எப்போதெல்லாம் ஆண்டவர் உங்கள் தோட்டத்திற்குள் வருகிறாரோ அப்போதெல்லாம் அவர் புசிப்பதற்கென ஏதாகிலும் கண்டு, அது அவரது இருதயத்தை மகிழச்செய்வதாய் இருக்க வேண்டும்!

 

தம்பதியரே, உங்களை அவ்விதமே தேவன் ஆசீர்வதிப்பாராக!

அதிகாரம் 4
நமது இல்லம், தேவனுடைய வாசஸ்தலம்!

இந்த முழு உலகத்தையும், தேவன் தன்னுடைய வார்த்தையினால் சிருஷ்டித்தபடியால், நம் ஜீவியத்திற்கும் நம் இல்லத்திற்கும் மற்றும் ஒவ்வொரு காரியத்திற்கும் தேவனுடைய வார்த்தையே அஸ்திவாரமாய் இருக்கிறது! ஆகவே, தேவனுடைய வார்த்தையை மாத்திரமே நம்முடைய அஸ்திவாரமாக நாம் கைக்கொண்டால், யாதொன்றும் தவறாய் போகாது.

 

முதன் முறையாக, யாத்திராகமம் 25-ம் அதிகாரத்தில் தான், தேவன் மனுஷரோடு வாசம் செய்திட விரும்பும் தன் விருப்பத்தை வெளிப்படுத்தினார். ஆகவே தான் “அவர்கள் நடுவிலே வாசம்பண்ண, எனக்கு ஓர் பரிசுத்த ஸ்தலத்தை உண்டாக்குவாயாக” (யாத், 25:8) எனக் கூறினார்.

 

இந்த ஸ்தலம் “தேவனுடைய அக்கினி வந்திறங்கிய கூடாரத்தையே” குறிப்பிடுகிறது. இந்த “தேவனுடைய மகிமையே” இஸ்ரேல் ஜனங்களை உலகத்தில் உள்ள மற்ற ஜனங்களிடமிருந்து வேறு பிரித்து அடையாளம் காட்டுகிறது!

 

இங்கு யாத்திராகமத்தில் குறிப்பிடப்பட்ட “ஒரு கூடாரத்தை” உருவாக்குவது மிக எளிதே ஆகும். ஏனென்றால் அதை உருவாக்குவதற்குரிய முழு அளவின் விபரங்களும் அங்கு தெளிவாய் குறிப்பிடப்பட்டுள்ளது. இவ்வாறாக, கூடாரத்தை நாம் அப்படியே ரூபப்படுத்தி, அதைப்போல் கூடாரத்தை போட்டுவிடலாம்.... ஆனால், அதில் உள்ள ஒன்றை, நம்மால் ஒருபோதும் ரூபப்படுத்தி போட்டிட இயலாது! ஆம், அந்த கூடாரத்தின் மேல் வந்து தங்கிய மகிமையை நம்மால் ரூபகப்படுத்தவே முடியாது!! தேவனுடைய வாசஸ்தலத்தில் வந்து தங்கிய “தேவனுடைய மகிமையே” மிக மிக முக்கியமாகும். “தேவனுடைய சமூகம்” அவருடைய ஜனங்களின் மத்தியில் தங்குவதையே இது குறிக்கிறது.

 

புதுமணத் தம்பதியரே, திருமணமாகிவிட்ட நீங்கள் செய்திட வேண்டிய மிக முக்கியமானது என்னவென்றால் “உங்கள் வீட்டை தேவன் தங்கும் வாசஸ்தலமாய்” மாற்ற வேண்டும் என்பதுதான்!

 

நீங்கள் ஒருவருக்கொருவர் பிரியமாய் வாழ்ந்திட முயற்சிப்பது அவசியமாயிருந்தாலும், உங்கள் இல்லமோ ஒருவரையொருவர் பிரியப்படுத்தும் இல்லமாய் இருந்திடக்கூடாது!

 

உங்கள் இல்லம் பிறரை ஆசீர்வதிக்கும் இல்லமாய் இருப்பது அவசியமென்றாலும், பிறரை ஆசீர்வதிப்பதற்காகவே உள்ள ஸ்தலமாயும் இருந்திடக்கூடாது! ஆம், உங்கள் ஸ்தலம் தேவன் தன்னுடைய பிரசன்னத்தை வெளிப்படுத்தி 'தன் வீட்டைப் போலவே' கருதி இயேசு வாழ்ந்திடும் இல்லமாகவே இருந்திட வேண்டும். இதை வலியுறுத்தியே தேவன் கூறினார். “நான் வாசம் செய்து வாழ்ந்திட, எனக்கு ஓர் பரிசுத்த ஸ்தலத்தை உண்டாக்குவாயாக” என்றார்.

 

தம்பதியரே, உங்களை அண்டிவரும் புத்திமதியாதெனில் “தேவன் வந்து வாழும்படியான ஒரு இல்லத்தை அவருக்கு கட்டும்படியே உங்களுக்கு கட்டளையிடுகிறார்!” என்பதே ஆகும்.

 

சில வீடுகளுக்கு நாம் செல்லும்போது “அந்த வீட்டில் இருப்பதைப் போன்ற” உணர்வு நமக்கு இல்லாதிருப்பதை நாம் யாவருமே அனுபவித்திருக்கிறோம். ஆனால் சில இல்லங்களில் நாம் நுழைந்த மாத்திரத்தில் “சொந்த வீட்டில் இருப்பதைப் போன்ற” உணர்வு நம்மை ஆட்கொள்கிறது. இந்த உணர்வுகளை விளக்கிச் சொல்வது நமக்கு கடினமாயிருந்தாலும், அதை நாம் யாவருமே அறிந்திருக்கிறோம். ஒரு கிறிஸ்தவ இல்லமானது, இயேசு வாசம் செய்திட விரும்பும் இல்லமாகவே எப்போதும் இருந்திட வேண்டும். அதன் அர்த்தம் யாதெனில், வீட்டில் உள்ள யாதொன்றை காண்பதற்கும் அவர் மகிழ்ச்சியாக இருக்க வேண்டும். நீங்கள் வாசிக்கும் புத்தகங்களை குறித்து மகிழ்ச்சியாயிருக்க வேண்டும்! கணவன் மனைவிக்கு இடையேயுள்ள சம்பாஷணை குறித்தும், டெலிவிஷனில் நீங்கள் காணும் நிகழ்ச்சிகளைக் குறித்தும், மற்றும் ஒவ்வொன்றையும் குறித்தும் அவர் மகிழ்ச்சியாயிருக்க வேண்டும்! அநேக கிறிஸ்தவ வீடுகளில், வேத வாக்கியங்களை தங்கள் சுவர்களில் தொங்க விட்டிருக்கிறார்கள். ஆகிலும், அந்த வீடுகளில் தங்குவதற்கோ இயேசுவுக்கு மனப்பூர்வமான விருப்பம் இருப்பதில்லை!

 

எவ்வளவு பெரிய எதிர்பார்ப்போடு ஆதாமையும் ஏவாளையும் தேவன் திருமணத்தில் ஒன்றாக இணைத்தார் என்பதை சற்று சிந்தித்துப்பாருங்கள். அவர்களுக்குப் பிதாவாக இருந்த அவர், எத்தனை அருமையான திட்டங்களை வைத்திருக்கக் கூடும். இவ்வுலகத்தில் உள்ள ஒரு தகப்பன் கூட, தன் மகன் திருமணம் ஆகின்ற நாளில் அதிகம் எதிர்பார்ப்பு உடையவனாய் இருப்பான். இவ்வாறு ஒரு தகப்பனின் எதிர்பார்ப்பானது, ஆதாமையும் ஏவாளையும் தேவன் இணைத்த போது அவர்களினிமித்தம் கொண்டிருந்த தேவனின் எதிர்பார்ப்பை விட மிகவும் குறைவுள்ளதே ஆகும்.

 

“ஒரு ஆச்சரியமான இல்லத்தை அவர்கள் கட்டி" அந்த இல்லத்தில் தேவனாகிய கர்த்தரே எப்போதும் முதலாவதாய் இருப்பார் என்றே தேவன் எதிர்பார்த்து நம்பியிருந்தார்!

 

ஆனால் அந்த எதிர்பார்ப்பு, வெகு விரைவில் ஏமாற்றத்தையே கொண்டு வந்தது, அதனிமித்தம் தேவன் அவர்கள் மீது கோபமாயிருக்கவில்லை. ஆனால் விசனமடைந்தார்! இன்றும், அநேக கிறிஸ்தவ இல்லங்களில் சமாதானம் இல்லாமல் வாக்குவாதமும் சண்டையும் நிறைந்திருப்பதைக் கண்டு தேவனுடைய இருதயத்தில் ஏராளமான துக்கம் உண்டாயிருக்கிறது என்றே நாம் கூற வேண்டும். தங்களுக்கு ஏதாகிலும் கஷ்டம் இருந்தால் மாத்திரமே, தேவனிடத்திற்கு ஜனங்கள் செல்லுகிறார்கள். இந்த உலக ஜனங்கள் கூட சில பிரச்சனைகள் ஏற்படும்போதுதான், தங்கள் தேவர்களை நாடுகிறார்கள். இதற்கு, உண்மையான கிறிஸ்தவர்களாகிய நாம் வேறுபட்டு இருக்க வேண்டும்.

 

கஷ்டங்கள் ஏற்படும் போதெல்லாம் நாம் அழைப்பதற்கு, தேவன் ஓர் “அவசர நம்பர்” அல்ல! அவ்வாறாக இல்லாமல், நம் ஜீவியத்தில் தேவனே எப்போதும் மையமாய் வீற்றிருக்க வேண்டும்!

 

ஓர் எலக்ட்ரானிக் சாதனம் வாங்கும்போது நமக்குத் தரப்படும் “உற்பத்தியாளரின் விதிமுறைகள்” போலவே, “தேவனுடைய வார்த்தை” நமக்கு அருளப்பட்டிருக்கிறது. நாம் அனைவருமே, ஒரு எலக்ட்ரானிக் சாதனம் வாங்கிய பின்பு “உற்பத்தியாளர் விதிகளை ” கவனமாய் பின்பற்றுகிறோம். உங்கள் சாதனத்திற்கு ஏதாகிலும் பிரச்சனை ஏற்பட்டு, அதை உற்பத்தியாளரிடம் கொண்டுசென்றால், அவர் உங்களிடம் கேட்கும் முதல் கேள்வி "உற்பத்தியாளரின் விதிமுறைகளை” அந்த புத்தகத்தில் இருப்பதைப்போலவே கவனமாய் பின்பற்றினீர்களா? என்றே கேட்பார். அவர்கள் வழங்கிய உத்திரவாத அட்டையில், விதிமுறைகளை பின்பற்றமால் உபயோகித்தால், இந்த உத்தரவாத அட்டைக்கு தகுதியில்லை என்றே தெளிவாய் அச்சடித்திருப்பார்கள்!

 

ஆனால் தேவனைக் குறித்த ஆச்சரியமான காரியம் என்னவென்றால், பாழாகிப்போன நமது ஜீவியத்தை அவரிடம் எப்போது எடுத்துச் சென்றாலும், அதை சரி செய்வதற்கே இன்னமும் விருப்பமுள்ளவராயிருக்கிறார்! அவர் ஒரு வருட உத்திரவாதி அல்ல... ஜீவகாலமெல்லாம் நின்றிடும் உத்திரவாதி!! உடைந்து போன வாழ்க்கையோடு நீங்கள் அவரிடத்தில் வந்தால், அதை அவர் சரி செய்திடுவார்! தேவனுடைய இந்த செயல் ஆச்சரியமானது அல்லவா? மெய்யாகவே அவர் ஓர் அன்புள்ள தகப்பன்! உங்கள் இல்லத்தில் தனக்கென ஓர் வாசஸ்தலத்தை உண்டாக்கும்படி தம்பதியராகிய உங்களை கேட்டுக் கொண்ட அவர், ஓர் அன்புள்ள தகப்பனேயாவர். உங்கள் இல்லற வாழ்வின் முதல் நாள் தொடங்கி, உங்கள் முழு ஜீவியத்திலும் அதிக ஆர்வம் கொண்டவர்! இயேசு திரும்ப வரும் நாள் மட்டும், நீங்கள் மகிழ்ச்சியாய் இருந்திடவே அவர் விரும்புகிறார்!!

 

இல்லற வாழ்வில் தேவனோடு கொண்ட அந்த உறவின் மகிழ்ச்சியை நானும் என் மனைவியும் கடந்த சுமார் 50 - வருடங்களாய் அனுபவித்து வருகிறோம். ஓர் உயர்ந்த மகிழ்ச்சியான வாழ்வு என ஒன்று உண்டென்றால், அது இயேசுவை உங்கள் இல்லற வாழ்வில் மையமாய் வைத்து ஜீவித்திடும் வாழ்க்கையே என திட்டவட்டமாய் கூறுகிறேன்... அவ்வித வாழ்க்கையில், நீங்கள் எதைச் செய்ய தீர்மானித்தாலும், அது இயேசுவுக்குப் பிரியமாய் இருக்குமா? இருக்காதா? என்பதை அடிப்படையாகக் கொண்டே இருக்கும்!

 

நீங்கள் நேரத்தை செலவழிக்கும் விதம்! பணத்தை செலவழிக்கும் விதம்! இவ்வாறு நீங்கள் எதைச் செய்தாலும், அது இயேசுவுக்கு மகிழ்ச்சியைத் தருமா? என்பதை அடிப்படையாகக் கொண்டே இருக்கும்.

 

இவ்வாறு நீங்கள் ஜீவித்து விட்டால், உங்கள் ஜீவியத்தின் முடிவை நீங்கள் அடையும் போது அல்லது அதற்கு முன்பாக கிறிஸ்துவின் வருகை சம்பவித்து, நீங்கள் அவருக்கு முன் நிற்கும் வேளையில் “மிகவும் நன்றாக செய்தாய்” என்றே கூறுவார். ஆம், உங்களைக் குறித்து மற்றவர்கள் என்ன எண்ணுகிறார்கள் என்பது அன்று ஒரு பொருட்டாக இருக்காது!

 

மனுஷனுடைய பொதுவான குணாதிசயம் என்னவெனில், வெளித்தோற்றத்தை வைத்தே அவன் நியாயம் தீர்த்து விடுவான். நானும் பிரமாணத்திற்குரியவனாய் வாழ்ந்த அநேக வருடங்களில் இந்த தவற்றை செய்திருக்கிறேன்! ஆனால், இப்போது நான் தெளிவாய் காண்பது என்னவென்றால், “உங்கள் இருதயமே” எப்போதும் பரிசுத்தம் நிறைந்ததாய் இருக்க வேண்டும்! உங்கள் வீடு, அரண்மனையோ அல்லது குடிசையோ அது முக்கியமல்ல! எந்த வெளித்தோற்றமும் இரண்டாவதற்குரியதே ஆகும். உங்கள் இருதயத்தையே தேவன் பார்க்கிறார். ஆகவே, உங்கள் இருதயங்கள் இணைந்து, தேவன் தங்கும் ஓர் பரிசுத்தம் வாசஸ்தலமாய் இருக்கிறதா? என்பதை உறுதிப்படுத்தி கொள்ளுங்கள்.

 

சமாதானமான இல்லத்தில் வாசம் செய்கிறார் தேவன்!

 

தேவன் எங்கு வாசம் செய்வார்? எல்லாவற்றிற்கும் முதலாய், எந்த இல்லத்தில் சமாதானம் இருக்கிறதோ அங்கு தான் வாசம் செய்வார், தன் சீஷர்களை பல்வேறு இடங்களுக்குச் பிரசங்கிக்க இயேசு அனுப்பிய போது, லூக்கா.10:5-7 வசனங்களை குறிப்பிட்டு, சமாதானம் தங்கியிருக்கும் ஓர் இல்லத்தில் மாத்திரமே தங்கும்படி கூறினார். இவ்வாறு இயேசு ஏன் சொன்னார்? ஏனெனில், எண்ணற்ற இல்லங்களில், சமாதானத்தை சீஷர்கள் காணமுடியாது என்பதை இயேசு அறிந்திருந்தார்!

 

சண்டை இல்லாத வீட்டில்தான் தேவன் வாசம் செய்திடுவார். கணவன் மனைவிக்கு இடையே உள்ள சண்டைக்கு, ஏதாகிலும் பொருளாதார சம்பந்தப்பட்ட பூமிக்குரியவைகளே காரணமாய் இருக்கும்!

 

இந்த உலகில், ஏதாகிலும் ஒன்று தவறுதலாய் சம்பவிப்பது, சகஜம்தான்! ஆனால், இவ்வாறு தவறுகள் சம்பவிக்கும் வேளையில், மிக அபாயகரமான ஒன்றே ஒன்று “பாவம்” என்பதையே தம்பதியர்கள் மனதில் கொள்ள வேண்டும்!

 

'அதைத்தவிர' மற்றவை அனைத்தும் முக்கியமற்றவைகளே ஆகும். மீண்டும் இங்கே வலியுறுத்துகிறேன்: “தம்பதியரே! மிக பயங்கரமான ஒன்றே ஒன்று பாவம் மாத்திரமே!” என்பதை நீங்கள் தெள்ளத் தெளிவாய் அறிந்திருக்க வேண்டும். ஏதோ ஒரு பூமிக்குரிய பிரச்சனைக்காக உங்கள் இருதயத்தில் கசப்பு ஏற்பட்டு ஒருவருக்கொருவர் பேசாதிருந்தால் “அதுவே” தேவனுடைய இருதயத்திற்கு மனஸ்தாபத்தைக் கொண்டுவரும்! குடும்ப வாழ்விற்கு முக்கியமான “ஒரு ஞானத்தை" தம்பதியராகிய உங்களிடம் நான் பகிர்ந்து கொள்ள விரும்புகிறேன்: “பாவத்தை வெறுத்து வாழுங்கள்! ஏனெனில், அது மாத்திரமே உங்கள் குடும்ப ஜீவியத்தை சீரழித்துப் போடும்!!"

 

உங்கள் இல்லம் தேவன் தங்கும் வாசஸ்தலமாகவே எப்போதும் இருக்கவேண்டும் என்பதை மனதில் கொள்ளுங்கள். உங்கள் இல்லத்தில் உள்ள 'சமாதானத்தை' குலைத்திடும்படி யாதொன்று சம்பவித்துவிட்டால், இனி உங்கள் இல்லம் தேவனுடைய வாசஸ்தலமாய் இருந்திடமுடியாது! இதனிமித்தமாய் தேவன் உங்கள் மீது கடுங்கோபம் கொண்டிருப்பார் அல்லது அவர் உங்களை சபித்து விடுவார் என்றோ குறிப்பிடவில்லை.

 

தம்பதியரே, உங்கள் குடும்ப வாழ்வில் தேவன் உங்களை ஒருபோதும் சபித்திடமாட்டார்! கோபம் கொள்ளவும் மாட்டார்! உங்கள் நிமித்தம் மனஸ்தாபப்படுவார், அவ்வளவுதான்!!

 

உங்கள் திருமணவாழ்வின் முதல் நாள் துவங்கி, உங்கள் இல்லற வாழ்வின் கடைசிமட்டும், இயேசு எப்போதும் மகிழ்ச்சியாய் இருக்க வேண்டும் என்பதே உங்கள் விருப்பமாயும் இருக்கும் என நிச்சயித்திருக்கிறேன்.

 

நீங்கள் யாதொன்றைச் செய்திட எத்தனிக்கும் வேளையில், கீழ்கண்டவாறு ஆண்டவரிடம் நீங்கள் சொல்லவேண்டும் என்று உங்களை வேண்டி கேட்டுக் கொள்கிறேன்: “ஆண்டவரே, இவ்வேளையில் மனுஷர் எங்கள் நிமித்தம் மகிழ்ச்சியாயிருக்கிறார்களா இல்லையா என்பதைக் குறித்து எங்களுக்கு அக்கறை இல்லை! ஆனால், நீர் மகிழ்ச்சியாயிருக்கிறீரா?

 

எங்கள் ஜீவியத்தில், யாதொரு சம்பவத்தினிமித்தம் ஒருவருக்கொருவர் நாங்கள் கொண்டுள்ள எங்கள் சிந்தையோ அல்லது மனப்பான்மையோ உமக்கு துக்கம் கொண்டு வந்திருக்கிறதோ? எங்கள் இல்லத்தில் நீர் எப்போதும் மகிழ்ச்சியாயிருக்கவே நாங்கள் விரும்புகிறோம்! எங்கள் குடும்ப ஜீவியத்தில் ஒவ்வொன்றையும் “இது ஆண்டவருக்கு பிரியமாய் இருக்குமா?" என்ற கேள்வியை வைத்தே எதையும் மதிப்பிட விரும்புகிறோம்!” எனக்கூறி, நீங்கள் வாழ்ந்தால் உங்கள் இல்லம் எந்த நிலையில் இருக்கும் என்பதை சற்றே சிந்தித்துப் பாருங்கள்! ஆம், அவருடைய கூடாரத்தின் மீது பிரகாசித்த தேவனுடைய மகிமைக்கு ஒப்பாகவே உங்கள் இல்லமும் இருக்கும்! உங்கள் இல்லத்தின் மூலமாய், ஜீவனுள்ள தேவனிடத்திற்கு ஜனங்களும் ஈர்க்கப்படுவார்கள்.

 

தங்கள் இல்லத்தின் சமாதானத்திற்காக, தங்கள் உரிமைகளை மனப்பூர்வமாய் இழப்பதற்கும் ஆயத்தம் உள்ள கணவன் மனைவியரிடத்திலேதான், தேவன் வாசம் செய்கிறார்!

 

ஒரு இளம் தம்பதியினர் தங்களின் பயணத்திற்குரிய ரயில் ஏறுவதற்கு முன்பாக என்னிடம் வந்து, “சகோதரரே, இரண்டு நிமிடங்களில் எங்களுக்குத் தேவையான ஒரு புத்திமதியை தரக்கூடுமா?" எனக் கேட்டார். அதற்கு நான், உடனடியாக பதில் தந்து “ஒருவருக்கொருவர் துரிதமாய் *உடனடியாக' மன்னிப்பு கேட்டுவிடுங்கள்! ஒருவருக்கொருவர் துரிதமாய் ‘உடனடியாக' மன்னித்திடவும் ஆயத்தமாயிருங்கள்!” என்றே கூறினேன்.

 

இவ்வாறாக, “நீங்கள் ஏதாகிலும் தவறு செய்யும்போது உடனடியாக மன்னிப்பு கேட்டிட ஆயத்தமாயிருந்தால்! அடுத்த நபர் உங்களிடம் மன்னிப்பு கேட்கும்போது, உடனடியாக அவர்களை மன்னித்திட நீங்கள் ஆயத்தமாயிருந்தால்!” உங்கள் இல்லம் ஒவ்வொருநாளும் “சமாதானத்தின் இல்லமாய்” இருந்திடும் என்பதற்கு நானே உத்திரவாதம் எழுதித் தருகிறேன்!

 

உங்கள் இல்லம் அவ்வாறாகவே என்றும் இருக்கும்! இருப்பினும், இந்த விஷயத்தில் நீங்கள் மிகுந்த உணர்வுள்ளவர்களாய் இருக்க வேண்டும். உங்கள் பாதத்தில் ஓர் முள் குத்திவிட்டால், அதை எடுத்துப் போட ஒரு வினாடி கூட நீங்கள் தாமதிக்கமாட்டீர்கள். அதுபோலவே, உங்கள் இருதயத்தில் ஏதாகிலும் ஒன்றினிமித்தம் சஞ்சலம் ஏற்படுவதை உணர்ந்தால், அதையும் உடனடியாக அகற்றிவிடுங்கள். ஆம், அது முள்! அது உங்களை சீரழித்துவிடும்!!!

 

ஒருமுள் உங்கள் பாதத்தை புரை ஏறச்செய்வதைக் காட்டிலும் 'ஒரு கசப்பு' உங்கள் இருதயத்தை அதிகமாய் புரை ஏறச் செய்திடும்!

 

என்ன கிரயம் செலுத்தியாகிலும், சமாதானத்தை நாடுங்கள். இதனிமித்தம் பணத்தையோ அல்லது வேறு எவைகளையோ இழக்க வேண்டியதினிமித்தம் சிறிதேனும் கூட சஞ்சலப்படாதீர்கள்! அவைகள் அனைத்தும் “சமாதானத்திற்கு" இணையான முக்கியத்துவம் கொண்டதல்ல! தராசின் ஒரு பக்கம் சமாதானத்தையும் மறுபக்கம் பணத்தையும் வைத்துப் பார்த்தால், பணத்தைவிட சமாதானமே அதிகதிறன் கொண்டது என்பதை தம்பதியராகிய நீங்கள் அறிந்திருக்க வேண்டும்... இதை, மறந்திடக் கூடாது!!

 

உங்கள் இல்லத்தில், ஓர் நாளில் ஏதோ ஒரு தவறு சம்பவித்து விட்டதா? ஒருவேளை உணவை அதிக நேரம் அடுப்பில் வைத்து, அது கருகிப்போயிருக்கலாம். அதினால் என்ன, பரவாயில்லை! உணவு தீய்ந்து போனபடியால், ஒருவேளை உணவை நீங்கள் இழந்தது ஒன்றும் ஒரு பொருட்டே அல்ல! இன்னமும் சொல்லப்போனால், அதனிமித்தம் நீங்கள் இன்னமும் ஆரோக்கியமாய், முன்பைவிட அதிக ஆவிக்குரியவர்களாயும் நிலை நின்றிட முடியும்! ஆனால், ஒரு தவறினிமித்தம் நீங்கள் மனமடிந்து போனால், அவ்வேளையில் பிசாசானவனே ஜெயத்தை பெற்றிடுவான்!!

 

தேவனே ஸ்தாபித்த முதல் இல்லத்தில் சம்பவித்ததை எப்போதும் நினைவில் கொள்ளுங்கள். ஆதாமுக்கும் ஏவாளுக்கும் நடுவே பிரவேசிப்பதற்கு சாத்தான் எப்போதுமே முயற்சித்து காத்துக் கொண்டிருந்தான். அங்கு அவன் ஜெயித்து விட்டான்! ஈசாக்குக்கும் ரெபெக்காளுக்கும் ஊடாக வந்தும், அவன் ஜெயித்து விட்டான்! தம்பதியரே, உங்கள் நடுவிலும் சாத்தான் இவ்வாறு பிரவேசிப்பது தேவனுடைய சித்தம் அல்லவே அல்ல! ஆகவே, இந்த சம்பவம் உங்களிடத்தில் ஒருபோதும் சம்பவிக்காதிருப்பதாக. உங்கள் இல்லத்தில் தேவன் எப்போதும் சந்தோஷமாயிருந்து, எக்காலத்தும் உங்களுக்கு சமாதானத்தை அருளுவாராக!

 

ஆவியில்நொறுங்குண்ட தம்பதியரிடமே தேவன்வாசம் செய்கிறார்!

 

இரண்டாவதாக “உன்னதத்தின் பரிசுத்த ஸ்தலத்தில் வாசம் பண்ணுகிற கர்த்தர், நொறுங்குண்டு பணிந்த ஆவி உள்ளவர்களிடத்தில் நான் வாசம்பண்ணுகிறேன்” என ஏசாயா 57:15-ம்வசனம் தெரிவிக்கிறது. நொறுங்குண்ட ஓர் நபர், மற்ற எவருடைய தோல்வியைக் காட்டிலும், தன்னுடைய குறையையும் தோல்வியையும் குறித்தே எப்போதும் உணர்வுள்ளவராய் இருப்பார். மற்றவர்களின் தோல்விகளையே மனதில் கொண்டிருக்கும் ஜனங்களால் இந்த உலகம் நிறைந்திருக்கிறது. இன்றுள்ள குடும்பங்களில் பொதுவாக காணப்படும் சம்பாஷணைகள் பிறருடைய, மற்றும் அவர்களின் குடும்ப உறவினருடைய தோல்விகளைக் குறித்தே பெரும்பாலும் சம்பாஷிக்கிறார்கள்! மற்றவர்களின் தோல்விகளைக் கண்டுபிடிப்பதில் நாம் துரிதமாய் இருக்கிறோம். இதுபோன்ற குற்றத்திற்கு நாம் எல்லோருமே உரியவர்கள்தான். கடந்த காலங்களில் நானும் இந்த குற்றத்திற்குரியவனாய் இருந்திருக்கிறேன். ஆனால், இந்த தீமையைக் குறித்து தேவன் எனக்கு வெளிச்சம் தந்திருக்கிறபடியால் நான் மனந்திரும்பி இருக்கிறேன்!

 

நாமோ பாவிகளாய் இருந்து தேவனுடைய கிருபையால் இரட்சிக்கப்பட்டிருக்கிறபடியால், ஒருவர் மீதும் கல்லெறிய நமக்கு உரிமை இல்லை. இரட்சிக்கப்பட்ட நாம், ஒரே பாவத்தை திரும்ப திரும்ப செய்திட விரும்புவதில்லை.

 

குறிப்பாக, பிறருடைய தவறுகளைக் “குறித்துப் பேசும் பாவத்தை திரும்பத் திரும்ப நாம்செய்திடக்கூடாது.

 

குளியலறையில் உள்ள கண்ணாடிக்கும், ஒரு காரில் உள்ள கண்ணாடிக்கும் உள்ள வித்தியாசத்தை நாம் யாவரும் அறிந்திருக்கிறோம், காரில் உள்ள கண்ணாடியில், யாரோ சிலருடைய முகத்தை காண்கிறோம்! ஆனால் குளியலறை கண்ணாடியில் நம் சொந்த முகத்தை மட்டுமே காண்கிறோம்! தேவனுடைய வார்த்தையும் ஓர் கண்ணாடி போலவே இருக்கிறது என யாக்கோபு 1:23-25 வசனங்கள் கூறுகின்றது. ஆனால் அந்தக் கண்ணாடி உங்களுக்கு குளியலறை கண்ணாடியாயிருக்கிறதா? அல்லது காரில் உள்ள கண்ணாடியாயிருக்கிறதா? ஒரு வசனத்தை யாரோ ஒருவருக்கு பிரசங்கிக்கும்படியாய் அந்த வசனத்தை நீங்கள் காண்கிறீர்களா? அல்லது அந்த வசனத்தின்படி நீங்கள் கீழ்படியாதவர்களாய் இருப்பதை காண்கிறீர்களா? எபிரெயர் 10:7 “புத்தகச் சுருளில், என்னைக் குறித்தே எழுதியிருக்கிறது” என வாசிக்கிறோம்.

 

என் ஜீவியத்தின் அதிக வருடங்களை மதியீனமாய் வீணாக்கி, தேவ வசனத்தைப் பிறருக்குப் பிரசங்கிக்கும்படியான ஓர் கார் கண்ணாடியைப் போலவே வாழ்ந்துவிட்டேன். அந்த வருடங்களில் ஓர் பரிதவிக்ககூடிய வாழ்க்கையை வாழ்ந்து கொண்டு, பிறரையும் கட்டுகளுக்குள் உட்படுத்தினேன்! ஆனால், இப்போதோ எல்லா கட்டுகளிலிருந்தும் விடுதலை அடைந்துவிட்டேன். 'எனக்கென்று உணர்த்துதல்கள்' உண்டு, அந்த, எனக்கென்று உள்ள உணர்த்துதல்களை இப்போதும் என்னிடம் வைத்திருக்கிறேன். ஆனால், அவைகளை பிறரிடம் ஒருபோதும் நான் திணிப்பதில்லை! என் உணர்த்துதல்களை பிறரிடம் நான் பகிர்ந்து கொள்வதும் உண்டு, ஆகிலும் அவரிடத்தில் அதை திணிப்பதில்லை! நான் பெற்ற உணர்த்துதலை பிறருக்குத் தருவது, என்னுடைய காரியம் அல்ல..... நானோ, தேவனுடைய பார்வைக்கு முன்பாக மாத்திரமே ஜீவித்திட வேண்டும்!

 

ஆகவே “தேவன் எனக்குத் தந்த வெளிச்சத்திற்கு இணையாக மற்றொருவர் அதே அளவு வெளிச்சத்தை பெற்றிருக்கமாட்டார்” என்ற ஆச்சரியமான இந்த சத்தியத்தை இப்போது நான் அறிந்திருக்கிறேன். கடந்த 30 - ஆண்டுகளுக்கு மேலாக, இந்த சத்தியம் எனக்குப் பெரிதும் உதவியிருக்கிறது. ஆனால் இதற்கு முன்பாக, என்னைச் சுற்றி உள்ள ஒவ்வொருவரும், நான் பாவத்தைக் குறித்து உணர்வடைந்த அதே வெளிச்சத்தைப் பெற்றிருக்க வேண்டும் என்றே நான் எதிர்பார்த்தேன்!

 

ஆனால் ஒவ்வொரு நபரும், தாங்கள் உணர்த்தப்பட்டதின்படி ஓரளவு வெளிச்சத்தைதான் பெற்றிருக்கிறார்கள் என்பதை கடந்த ஆண்டுகளில் நான் கண்டறிந்திருக்கிறேன். சர்வ வல்ல தேவன்கூட, ஒவ்வொருநபரும் தான் பெற்ற வெளிச்சத்தின்படி ஜீவித்திடவே எதிர்பார்க்கிறார் அல்லாமல், மற்றொருவர் பெற்ற வெளிச்சத்தின்படி ஜீவிப்பதற்கு அல்ல! தேவன் நமக்கு எவ்வளவு வெளிச்சத்தை கொடுத்திருக்கிறார் என்பதை நாம் அறிந்திருக்கிறோம். ஆனால் மற்றொரு நபருக்கு எவ்வளவு வெளிச்சத்தை கொடுத்திருக்கிறார் என்பது நமக்குத் தெரியாது. ஆகவேதான், நாம் இரக்கம் உள்ளவர்களாய் இருப்பது நமக்கு அவசியமாயிருக்கிறது! ஓர் திருமண வைபவத்தில் திடீரென்று மின்சாரம் தடைபடுவதை நாம் அறிந்திருக்கிறோம். அவ்வித நிகழ்ச்சி இந்த சத்தியத்திற்கு ஒரு உவமானமாய் இருக்கிறது. ஆம், பிரகாசமான வெளிச்சத்தில் சிலர் காரியங்களை தெளிவாய் காண்கிறார்கள். ஆனால், வேறு சிலரோ குறைந்த வெளிச்சத்தில் காண்கிறார்கள்!

 

அன்பார்ந்த மணமகனே! உங்கள் வாழ்வின் சில பகுதிகளில் நீங்கள் பெற்றிருக்கும் வெளிச்சத்தை, உங்களுக்கு வாழ்க்கைத் துணையாக வந்திருக்கும் மணமகள் பெற்றிருக்கமாட்டாள் என்பதை புரிந்து கொள்ளுங்கள்!!

 

அன்பார்ந்த மணமகளே! உங்கள் வாழ்வின் சில பகுதிகளில் நீங்கள் பெற்றிருக்கும் வெளிச்சத்தை, உங்களுக்கு வாழ்க்கைத் துணையாக வந்திருக்கும் மணமகன் பெற்றிருக்கமாட்டார் என்பதை புரிந்து கொள்ளுங்கள்!!

 

நீங்கள் எந்த அளவு வெளிச்சத்தை பெற்றிருக்கிறீர்களோ, அந்த அளவின்படியே ஜீவித்துக்கொண்டு, மற்றவர்கள் எந்த அளவு வெளிச்சத்தைப் பெற்றிருக்கிறார்களோ அந்த அளவின்படியே ஜீவிப்பதற்கு அவர்களை விட்டுவிடுங்கள்!

 

ஆறாவது வகுப்பு படிக்கும் மாணவன், இரண்டாவது வகுப்பு படிப்பவனைவிட அதிகமாய் அறிந்திருப்பான். ஆனால், இந்த ஆறாவது படிக்கும் மாணவன், தான் அறிந்திருப்பதைப் போலவே இரண்டாவது வகுப்பு மாணவனும் அறிந்திருக்க வேண்டும் என எதிர்பார்த்தால், அது மதியீனமே ஆகும். 70 வயது நிரம்பிய நான், 30- வயது நிரம்பிய என் மகனும் என் போன்ற வெளிச்சத்தைப் பெற்று, நான் அறிந்திருப்பது போலவே அவனும் தேவனுடைய வழிகளை அறிந்திருக்க வேண்டும் என நான் எதிர்பார்த்தால் நானும் மதியீனனாகவே இருப்பேன். நான் ஒரு மதியீனன் அல்ல... ஆகிலும், நான் ஒரு மதியீனனாய் இருந்திருக்கிறேன்!

 

அநேக கிறிஸ்தவர்கள் மதியீனர்களாகவே இருக்கிறார்கள். தங்கள் 30- ஆண்டுகளில் பெற்ற ஞானத்தை, மற்றவர்களும் அப்படியே பெற்றிருக்க எதிர்பார்க்கிறார்கள்! தம்பதியராகிய நீங்கள் எவ்வளவு ஞானத்தைப் பெற்றிருக்கிறீர்கள் என்பதை எதிர்பார்க்கலாம்? தங்களின் இளம் 30- வயதுக்குள் உள்ள ஞானத்தை மாத்திரமே உங்களிடம் மற்றவர்கள் எதிர்பார்த்திட முடியும்!

 

புதுமணத் தம்பதியர்களே! உங்களின் இந்த வயதில், நாங்கள் செய்த  மதியீனங்களைவிட 10-மடங்கு குறைவாகவே நீங்கள் செய்வீர்கள் என உற்சாகப்படுத்தும் நற்செய்தியை உங்களுக்கு கூறிக்கொள்கிறேன்! இருப்பினும் அவ்வளவு மோசமான தவறுகளை செய்த எங்களிடம் கூட தேவன் இரக்கமாயிருந்து, எங்களை உற்சாகப்படுத்தியிருக்கிறார்.

 

தம்பதியர்களாகிய உங்கள் தகப்பன்மார்கள் இந்நாளில் ஓர் நல்ல தீர்மானம் செய்தால் நலமாகவே இருக்கும் என்றே நான் கருதுகிறேன். உங்களின் மருமகன் அல்லது மருமகளுக்கு நீங்கள் ‘மாமனராக (Father-in-law) இருக்கவேண்டாம். ஆம், இப்போது நியாயப்பிரமாணத்தின் (Law) கீழ் அல்ல... கிருபையின் (Grace) கீழ் இருக்கிறோம். எனவே இனியும் நமக்கு மருமகன், மருமகள் அதாவது, Son-in-law அல்ல! Daughter-in-law அல்ல! இனி அவர்கள் ‘மகன்' என்றும் ‘மகள்' என்றுமே இருக்க வேண்டும்.

 

இந்த திருமண வைபவத்திற்கு பிறகு, உங்கள் மருமகளைப் பார்த்து “இன்று முதல் நான் உன்னை மருமகளாய் அல்ல “மகளாகவே" நடத்துவேன்!” என மனதாரக் கூறுங்கள்.

 

மேலும் “அவ்வாறு என்றாவது நான் நடத்த தவறினால் 'திருமண முதல் நாளில் என்னை மகளாக நடத்துவேன்' எனக் கூறினீர்களே! என, நான் வாக்குரைத்ததை தயவுடன் எனக்கு நினைவுபடுத்துங்கள், நான் உடனே என்னை திருத்திக் கொள்வேன்” என்றும் கூறுங்கள். ஆ. அதுவே நலமுள்ள குடும்பம்!

 

மேலும் அவர்களிடம் “உங்கள் இருவருக்கும் தகப்பனாகிய நான் பெற்றுள்ள வெளிச்சத்தையோ, அல்லது ஞானத்தையோ உங்களிடம் ஒருபோதும் எதிர்பார்க்கமாட்டேன். இன்று நான் 65 வயதில் பெற்றிருக்கும் ஞானத்தை, நீங்கள் 50 வயதிலேயே பெற்றுவிடுவீர்கள் என்றே நம்புகிறேன்! இதைக் கடந்து, என்னுடைய வயதிற்கு நீங்கள் வரும்போது, என்னைவிட அதிகமான ஞானத்தையும் பெற்று விடுவீர்கள்!” என்றே கூறுங்கள்.

 

ஆகவே தம்பதியரே! யாராகிலும் சிலரை நீங்கள் சந்திக்க நேர்ந்து, தாங்கள் 40 வயதில் பெற்ற ஞானத்தை இப்போது நீங்கள் பெற்றிருக்க வேண்டுமென எதிர்பார்த்தால், அதை 'கண்டு' கொள்ளாதீர்கள். கர்த்தருடைய உத்தம ஊழியன் 'குருடனாகவும்' 'செவிடனாகவும்' இருப்பான்! என்றே ஏசாயா 42: 19 நேர்த்தியாகக் கூறுகின்றது. ஆகவே, உங்களைச் சுற்றியுள்ள ஜனங்களின் அபிப்பிராயங்களுக்கு குருடராயும் செவிடராயும் இருந்து விடுங்கள்! இந்த வசனம் எனக்கு அதிகமாய் உதவியதைப் போலவே, உங்களுக்கும் அதிகமாய் உதவிடும். உங்களைச் சுற்றியுள்ள ஜனங்களின் அபிப்பிராயங்களுக்கு நீங்கள் குருடராயும், செவிடராயும் இருந்தால் மாத்திரமே, கர்த்தருடைய ஊழியர்களாய் நீங்கள் தேவனுடைய முகத்திற்கு நேராய் ஜீவித்திட முடியும்!

 

மேலும், உங்களுடைய தவறு என்ன என்பதை அறிந்திட நீங்கள் ஆர்வம் கொண்டிருக்க வேண்டுமே அல்லாமல், மற்றவர்களைப் பற்றிய குறைசொல்லுதலில் ஆர்வம் காட்டாதிருங்கள்.

 

மற்றவர்கள் உங்களை குறைசொல்லி, அவர்கள் தங்களை அழித்துக்கொள்ள விரும்பினால், அப்படியே அவர்கள் செய்யட்டும்! இவ்வித, என்னையே அழித்துக் கொள்ளும் செயலை நான் செய்யப்போவதில்லை என, பல வருடங்களுக்கு முன்பாகவே நான் தீர்மானித்து விட்டேன்.

 

என் இளமை நாட்களில் மதியீனமான அநேக செயல்களைச் செய்திருக்கிறேன். ஆனால் இப்போதோ ஞானத்தில் வளர்ச்சியடைந்து வருகிறேன். இதை பவுல் குறிப்பிட்டு “நான் குழந்தையாயிருந்தபோது குழந்தையைப்போல் பேசினேன், குழந்தையை போலச் சிந்தித்தேன், குழந்தையைப்போல யோசித்தேன்; நான் புருஷனானபோதோ, குழந்தைகளுக்கேற்றவைகளை ஒழித்துவிட்டேன்” (1கொரி.13: 11) எனக்கூறினார். நீங்கள் இருவரும் ஞானத்தில் துரிதமாய் வளரும்படியே உற்சாகப்படுத்துகிறேன்!

 

பரிசுத்தமுள்ள தம்பதியரிடத்தில், தேவன் வாசம் செய்கிறார்!

 

ஒவ்வொருநாளும் பரிசுத்தத்தில் நடக்கும் கணவன் மனைவியரைக்கொண்ட இல்லத்திலேயே தேவன் வாசம் செய்கிறார்! எசேக்கியேல் 43:12 கூறுகையில், ஆலயத்தினுடைய பிரமாணம் என்னவென்றால்.... அதின் எல்லையெங்கும் மிகவும் பரிசுத்தமாய் இருத்தல் வேண்டும்” என நேர்த்தியாய் கூறுகின்றது. தேவனுடைய கூடாரத்தில் மூன்று பகுதிகள் உள்ளன: 1)வெளிப் பிரகாரம் 2 பரிசுத்த ஸ்தலம் 3)மகா பரிசுத்த ஸ்தலம். இந்த மூன்று பகுதிகளில், மிகச் சிறிய பகுதி மகா பரிசுத்த ஸ்தலமே ஆகும். ஆனால், புதிய உடன்படிக்கையில் வெளிப்பிரகாரமோ அல்லது பரிசுத்த ஸ்தலமோ இருப்பதில்லை! முழுப்பகுதியும் “மகா பரிசுத்த ஸ்தலமே ஆகும்!” இதன் பொருள் யாதெனில், புதிய உடன்படிக்கையின் கீழ் தேவனுடைய மகிமையானது கூடாரத்தின் ஏதோ ஓர் மூலையில் அல்ல, முழு ஸ்தலத்தையும் வியாபித்திருக்கும் என்பதேயாகும்!

 

தம்பதியரே! உங்கள் ஜீவியத்தில் இதை நடைமுறையில் அனுபவிக்க வேண்டுமென்றால், நீங்கள் ஞாயிற்றுக்கிழமைகளில் மாத்திரம் பரிசுத்தமாய் வாழ நாடாமல், ஒவ்வொருநாளும் எந்நேரமும் பரிசுத்தமாய் வாழ்ந்திட தீர்மானியுங்கள்! நீங்கள், வேதம் வாசிக்கும் போது பரிசுத்தமாய் இருக்கிறீர்கள் என்பதல்ல.... நீங்கள் எதைச் செய்தாலும் பரிசுத்தமாய் வாழ்ந்திட வேண்டும்! ஆம், உங்கள் ஜீவியத்தின் அல்லது உங்கள் வீட்டின் ஒவ்வொரு மூலை, முடுக்குகளும்கூட பரிசுத்தமாய் மாறிடவேண்டும். பரிசுத்தம் என்பது சில குறிப்பிட்ட மார்க்க அனுசாரங்களை அனுசரிப்பது அல்ல. மாறாக, நீங்கள் பெற்றிருக்கும் வெளிச்சத்தின் அளவின்படி தேவனுக்குப் பிரியமில்லாத ஒவ்வொன்றையும் புறக்கணிப்பதே பரிசுத்த வாழ்க்கை ஆகும். உங்கள் இருவர் ஜீவியத்திலும் இந்த பரிசுத்த வாழ்க்கை மெய்யாகவே கைகூடுவதாக!

 

தேவன் ஆதாமுக்கு என்ன செய்தாரோ, அதையே மணமகனாகிய உங்களுக்கும் செய்திருக்கிறார். சுமார் 30 ஆண்டுகளுக்கு முன்பு நீங்கள் பிறந்தபோது, உங்கள் பெற்றோர்கள் மிகுந்த மகிழ்ச்சி அடைந்திருப்பார்கள். ஆனால் தேவனோ, அந்த நாளுக்கு முன்பே உங்கள் பிறப்பை அறிந்திருக்கிறார். இன்னமும் சொல்ல வேண்டுமென்றால், உங்கள் பெற்றோருக்கு திருமணம் ஆவதற்கு முன்பே, உங்கள் பெயரை “ஜீவ புஸ்தகத்தில்” தேவன் எழுதி வைத்திருக்கிறார்.

 

மற்றொரு ஆச்சரியமான உண்மை யாதெனில், தம்பதியராகிய நீங்கள் பிறப்பதற்கு முன்பே, உங்கள் திருமணத்தைக்கூட தேவன் முன்கூட்டியே திட்டம் வகுத்திருந்தார் என்பதுதான்!

 

எப்படியெனில், மணமகனாகிய நீங்கள் பிறந்து ஒரு சில வருடங்கள் ஆனபின்பு, இந்தியாவின் எங்கே ஓர் பகுதியில் ஓர் பெண் குழந்தையை பிறக்கச்செய்து, அதை நீங்கள் இருவருமே அறியாதிருக்க திட்டம் வகுத்திருந்தார்! இங்குதான், தேவன் உங்களுக்கு ஓர் ஆச்சரியமான “வாழ்வின்

இணைப்பாளராக” (Matchmaker) செயலாற்றியிருக்கிறார். ஆம், இந்த பெண் குழந்தை வளர்ந்து வளரும் வேளையில், அவளின் நிமித்தமாய் ‘மணமகனாகிய உங்களையே தேவன் மனதில் வைத்திருந்தார். பின்பு, அந்த நாள் வந்தபோது ஆதாமையும் ஏவாளையும் தேவன் ஒன்றாக இணைத்தது போலவே, உங்கள் இருவரையும் ஒன்றாக இணைத்துள்ளார்! தம்பதியரே, உங்கள் மீது தேவன் எவ்வளவு நல்லவராய் இருந்திருக்கிறார்!!

 

ஆகவே தம்பதியராகிய உங்கள் ஜீவியத்தின் நிமித்தம், தேவன் மெய்யாகவே மகிழ்ச்சி அடையவும்! உங்கள் இல்லம் தேவன் தங்கும் வாசஸ்தலமாய் கட்டப்படவும்! வேண்டி, எங்கள் ஜெபம் உங்களுக்கு உரித்தாகுக!!

 

தேவ ஆசீர்வாதம் உங்கள் மீது என்றென்றும் தாக! ஆமென்.