இப்பூமியில் மனுஷனுக்குக் கிடைத்த மிகப்பெரிய சிலாக்கியமும், மேன்மையும், மிகுந்த கௌரவமுமான வாழ்க்கை “அவன் தேவனுடைய சித்தத்தை செய்வதுதான்!” இந்த வாழ்க்கையைத்தான் ஆண்டவராகிய இயேசு தன் சீஷர்களுக்கு கற்றுக்கொடுத்தார். அதன் முக்கியத்துவத்தை இயேசு குறிப்பிடுகையில் “என் பிதாவின் சித்தத்தின்படி செய்கிறவனே பரலோக ராஜ்ஜியத்தில் பிரவேசிப்பான்” என்றார் (மத்தேயு.7:21). மேலும் அதை வலியுறுத்தி “பரலோகத்திலிருக்கிற என் பிதாவின் சித்தத்தின்படி செய்கிறவனே என்னுடைய உண்மையான சகோதரனும், சகோதரியுமாய் இருக்கிறார்கள்” எனவும் குறிப்பிட்டார்!! (மத்தேயு.12:50).
இந்த மேன்மையான வலியுறுத்தலையே பிற்காலத்தில் அப்போஸ்தலர்களும் தொடர்ந்து மேற்கொண்டனர். பாவங்களிலிருந்து மனுஷர்களாகிய நம்மை தேவன் ஏன் விடுவித்தார்? என்ற கேள்விக்கு விடையாக “விடுதலை பெற்றவர்கள் தேவனுடைய சித்தத்தை செய்திட வேண்டும் என்பதற்காகவே!" என பேதுரு தேவனுடைய நோக்கத்தைப் பிரகடனம் செய்தார் (1பேதுரு.4:1,2). பவுல் அப்போஸ்தலன் கூறுகையில், “விசுவாசிகளாகிய நாம் கிறிஸ்து இயேசுவுக்குள் புதுசிருஷ்டியாக சிருஷ்டிக்கப்பட்டதின் காரணம், அவர்களுக்கென தேவன் ஏற்கெனவே திட்டம் வகுத்த பாதையில் அவர்கள் நடந்து வர வேண்டும், என்பதற்கே!” எனக் கூறினார்.
ஆகவே, அவர் எபேசு கிறிஸ்தவர்களுக்கு புத்தி கூறும் போது “நீங்கள் இன்னமும் மதியற்றவர்களாயிராமல் கர்த்தருடைய சித்தம் இன்னதென்று உணர்ந்து வாழுங்கள்” எனக்கூறினார் (எபேசியர்.2:10; 5:17), கொலோசெய கிறிஸ்தவர்களுக்காக அவர் ஜெபித்தபொழுது, அவர்கள் தேவ சித்தத்தை அறிகிற அறிவினால் நிரப்பப்பட வேண்டும் என்றே ஜெபித்தார். அவரைப் போலவே, அவர் உடன் ஊழியனாகிய எப்பாப்பிராவும், அந்த கொலோசெய கிறிஸ்தவர்கள் தேவனுடைய பரிபூரண சித்தத்தையும் நிறைவேற்ற வேண்டும் என்றே அவர்களுக்காக ஜெபித்தார் (கொலோ.1:9;4:12). அதேபோல், அப்போஸ்தலனாகிய யோவானும், "தேவனுடைய சித்தத்தின்படி செய்கிறவன் எவனோ, அவன் மாத்திரமே என்றென்றைக்கும் நிலைத்திருப்பான்” என கற்றுக் கொடுத்தார் (1யோவான். 2:17).
துரதிருஷ்டவசமாய், மேற்கண்ட விதமாய் வலியுறுத்தப்பட்ட ஜீவியம் 'இன்றோ' நம் சந்ததியில் மிக அரிதாய் போய்விட்டது. ஆகவேதான் இன்றுள்ள திரளான கிறிஸ்தவர்கள் வெறுமையுள்ளவர்களாயும், சத்துவமற்றவர்களாயும் ஜீவிக்கிறார்கள். இன்று, பாவமன்னிப்பைப் பெறுவதற்கு மாத்திரமே இயேசுவினிடத்திற்கு வரும்படி ஜனங்களை வரவேற்கிறார்கள்! ஆனால் அப்போஸ்தலர்களின் நாட்களிலோ “ஒருவன் தன் முழு ஜீவியத்தையும் தேவனுக்கென்று அர்ப்பணித்து, தன் வாழ்வில் தேவ சித்தத்தை பூரணமாய் நிறைவேற்றுவதற்கே பாவ மன்னிப்பு அவன் வாழ்வில் ஓர் முதல் ஆரம்பமாய் இருக்கிறது” என்று வலியுறுத்தியே போதிக்கப்பட்டது.
“தாவீதை என் இருதயத்திற்கு ஏற்றவனாகக் கண்டேன்” என அப்போஸ்தலர்.13:22-ம் வசனம் குறிப்பிடுவதற்கு ஓர் உறுதியான காரணம் உண்டு! அது என்னவெனில், அவன் தேவ சித்தம் ஒன்றையே தன் மிகப்பெரிய விருப்பமாய் வைத்து அதை நிறைவேற்றிட வாஞ்சித்தான்! என்ற காரணமேயாகும். இதை தாவீதே தன் சங்கீதத்தில் குறிப்பிட்டு “என் தேவனே, உமக்குப் பிரியமானதைச் செய்ய விரும்புகிறேன்” (சங்கீதம். 40:8) எனக் கூறினார். தாவீது ஒன்றும் பூரணமான மனுஷனல்ல! அவன் அநேகம் பாவங்கள் செய்திருக்கிறான். அவைகளில் ஒரு சில பாவங்கள் மிகக்கேடாக இருந்தபடியால் தேவன் அவனை வெகுவாய் தண்டிக்க வேண்டியதாயும் இருந்தது! அப்படியெல்லாம் இருந்தும், தேவனோ அவனை முழுவதுமாய் மன்னித்துவிட்டார்! அவன்மீது பிரியமும் வைத்தார்!! அது ஏனென்றால், “தன் வாழ்வில் தேவனுடைய சித்தம் முழுவதையும் நிறைவேற்றிவிட அவன் கொண்டிருந்த வாஞ்சையேயாகும்”. ஆகவே, நம்மிடம் எவ்வளவுதான் குறைவான ஜீவியம் காணப்பட்டாலும், நாமும்கூட தேவனுடைய இருதயத்திற்கேற்ற புருஷர்களாயும், ஸ்திரீகளாயும் மாறிவிட முடியும்!
அதற்கு நாம் என்ன செய்ய வேண்டும்? தாவீதைப்போலவே, ஆண்டவருடைய சித்தம் செய்வதற்கே நம் முழு இருதயமும் 'திசைமாற்றம் கண்டிருக்க வேண்டும்!!
இயேசுவின் மாதிரியைப் பின்பற்றி, அவர் நடந்தது போலவே விசுவாசிகளாகிய நாமும் நடந்திட வேண்டுமென்றே புதிய ஏற்பாடு வலியுறுத்துகிறது (1யோ.2:6). இயேசு கிறிஸ்துவின் முழு ஜீவியத்திற்கும் ஓர் வழி நடத்தும் ஆதாரமாயிருந்த கோட்பாடு “தன் பிதாவின் சித்தத்தை மாத்திரமே செய்திட வேண்டும்” என்பதாக மாத்திரமே இருந்தது. தன் பிதா தனக்கு யாதொன்றைச் சொல்லும் வரை எந்த இடத்திற்கும் அவர் சென்றிட மாட்டார்! ஆனால், தன் பிதாவின் சித்தத்தை நிறைவேற்றும்படி சென்றுவிட்டால், எதிரிகளுடைய அச்சுறுத்தலோ அல்லது நண்பர்களுடைய பரிவான கெஞ்சுதலோ அவரை ஒருக்காலும் நிறுத்தி வைக்க முடியவில்லை! ஆம், தன் பிதாவின் சித்தத்தை நிறைவேற்றுவதே அவருடைய அன்றாட போஜனமாயிருந்தது (யோவான்.4:34). ஒரு மனிதன் தன் சரீரத்தை போஷித்திட உணவுக்காக ஏங்குவதைப்போலவே, தன்னை அனுப்பினவருடைய சித்தத்தை நிறைவேற்றி முடிப்பதற்கு இயேசு ஏங்கி நின்றார்!
தேவனுடைய முழு சித்தத்தையும் நம் வாழ்வில் நிறைவேற்றி முடிப்பதற்கு இயேசு கொண்ட 'அதே பசி' விசுவாசிகளாகிய நம் ஒவ்வொருவருக்கும் இருந்திட வேண்டும்! மிக எளிதாய் “உம்முடைய சித்தம் பரலோகத்தில் செய்யப்படுவது போலவே பூமியிலும் செய்யப்படுவதாக” என ஜெபித்துவிட்டு, அதன் பின்பு அன்றாட நம் ஜீவியத்திலோ மிக சாதாரணமாய் தேவனுடைய வழிநடத்தும் ஆலோசனைகள் யாதொன்றையும் கேளாமல், நாம் விரும்புகிறவைகளையே செய்து விடுகிறோம்! இதுவே இன்றைய பெரும்பாலான கிறிஸ்தவ ஜனங்களின் சகஜமான போக்காய் இருக்கிறது!!
தேவன் வகுத்த திட்டமே என்றென்றைக்கும் சிறந்தது :
தேவனுடைய வழி நடத்தும் ஆலோசனைகளைத் தேடாத ஜீவியம் மதியீனத்தின் உச்சகட்டம் என்றே கூறவேண்டும்! காரிருள் சூழ்ந்த ஓர் அடர்ந்த காட்டில், எந்த வழி செல்ல வேண்டும்? என திகைத்து நீங்கள் தனிமையாயிருந்தால், அது எவ்வளவு பெரிய கஷ்டமான சூழ்நிலை! அவ்வேளையில், அந்த அடர்த்தியான காட்டின் ஒவ்வொரு அங்குலத்தையும் நன்றாய் அறிந்த ஒருவர் உங்களோடிருந்தால், அது எத்தனை மகிழ்ச்சியுள்ளதாய் இருக்கும்!! அவர் எங்கு உங்களை நடத்திச் சென்றாலும், யாதொரு கேள்வியும் கேட்காமல் மிகுந்த மகிழ்ச்சியோடும், நம்பிக்கையோடும் அவரைப் பின் தொடர்ந்து நீங்கள் சென்று விடுவீர்கள்!
இந்தப் பொன்னான சமயத்தில், அவருடைய ஆலோசனையை கேட்க மறுப்பதும், ஏராளமான மறைவான ஆபத்துக்கள் நிறைந்த அந்தக் காரிருள் வனத்தில் நீங்களாகவே நீங்கள் விரும்பிய திசையில்செல்ல முயற்சிப்பதும் பெருத்த மதியீனமேயாகும்! இருப்பினும், இதுபோன்ற மதியீனத்தைத்தான் இன்றைய திரளான விசுவாசிகள் செய்து கொண்டிருக்கிறார்கள்!!
இனிவரும் எதிர்காலத்தில், இந்த பூமியில் இதுவரையில் நாம் கண்டிராத காரிருளே நம் கண்முன் இருக்கிறது! அடுத்து என்ன நடக்கும் என்பதை நம்மால் காண முடியவில்லை! இருப்பினும் நாமோ, ஒவ்வொருநாளும் அடியெடுத்து முன் செல்ல வேண்டிய தாயும் இருக்கிறது!!
சில சமயங்களில் நான்கு அல்லது ஐந்து சாலைகளின் சந்திப்பில் வந்து நிற்கும் திகைப்பிற்கு நாம் ஆளாகியிருக்கிறோம்! அவ்வேளையில் சரியான முடிவை நாம் எடுக்கவில்லையென்றால், அது மிகக் கேடான விளைவுகளை நமக்கு ஏற்படுத்திவிடும். குறிப்பாய், நம் வேலையைத் தெரிந்து கொள்வதோ அல்லது நம் வாழ்க்கைத் துணையைத் தெரிந்துகொள்வதோ ஆகிய தீர்மானங்கள் நம் முழு எதிர்காலத்தையும் பாதிக்கச் செய்துவிடும்!! இதுபோன்ற சமயத்தில் நாம் எப்படித் தீர்மானம் எடுத்திடவேண்டும்? பாதையில் இருக்கும் அபாயங்கள், சாலைகளில் இருக்கும் ஆபத்தான குண்டு குழிகள் யாதொன்றும் நமக்குத் தெரிவதில்லை. நம்மை சிக்க வைப்பதற்கென்று சாத்தான் விரித்த கண்ணி வலைகள் எதுவுமே நம் கண்களுக்குத் தெரிவதில்லை. இவ்வளவு கேடான சூழ்நிலையில், நாமோ வாழ்வின் பாதையைத் தீர்மானம் செய்திட வேண்டிய நிர்ப்பந்தத்தில் இருக்கிறோம்!
இந்த இக்கட்டான வேளையில் நமக்கு முன் இருக்கும் எதிர்காலத்தை முழுவதுமாய் அறிந்த ஒருவர் நம்மோடிருப்பது எத்தனை நல்லதென்பது மாத்திரமல்ல..... அது, நிர்ப்பந்தமான அவசியமாயும் இருக்கிறது!
அவ்வாறு நம்மோடிருப்பவர் நம் முழு நம்பிக்கைக்குப் பாத்திரராயும் இருக்க வேண்டும்! இத்தகைய முழு நம்பிக்கைக்குரிய நபரை ஆண்டவராகிய இயேசு கிறிஸ்துவினிடத்தில் மாத்திரமே நாம் காண முடிகிறது! நம்மைப் பாதுகாப்பான சிறந்த பாதையில் நடத்திச் செல்வதற்கு மாத்திரமல்ல, அவ்வாறு செய்திட சொல்லொண்ணா ஆர்வமுடையவராயும் அவர் இருக்கிறார்!!
நம் ஒவ்வொருவருடைய ஜீவியத்திற்கும் ஓர் விசேஷித்த திட்டத்தை தேவன் வகுத்து வைத்திருக்கிறார் என்றே வேதம் நமக்குப் போதிக்கிறது (எபேசியர். 2:10). ஒரு வேலையை நமக்காகத் திட்டம் செய்து வைத்திருக்கிறார்! ஒரு வாழ்க்கைத் துணையை நமக்காகத் தெரிந்து வைத்திருக்கிறார்! நாம் எங்கே வாழவேண்டும் என்பதையும் திட்டம் செய்திருக்கிறார்! ஒவ்வொரு நாளும் நாம் என்ன செய்திட வேண்டும் என்பதைக்கூட திட்டம் வகுத்திருக்கிறார்! இவ்வித ஒவ்வொரு சமயத்திலும் அவருடைய தெரிந்து கொள்ளுதலே மிகச் சிறந்ததாய் இருந்திட முடியும்..... ஏனெனில், நம்மை அவரே அதிகமாய் அறிந்திருக்கிறவராயும், நமக்குரிய ஒவ்வொரு பகுதியையும் மிகக் கரிசனையாய் ஆராய்ந்து வழி வகுக்கிறவராயும் இருக்கிறார்! ஆகவே, காரியம் மிகப்பெரியதோ அல்லது மிகச்சிறியதோ, அது எதுவாக இருந்தாலும் அவருடையச் சித்தத்தை நாம் தேடி அறிவதே மிகுந்த ஞானமுள்ளதாய் இருக்கிறது!!
காரியம் இவ்வாறாயிருக்க, நம்முடைய குறுகிய மூளை அறிவின்
காரணங்களையும் அல்லது நம் உணர்ச்சிகளால் உந்தப்படும் நடத்து
தலையும் மாத்திரமே சார்ந்து பின் செல்லும் ஜீவியம் ஆபத்தானது
மாத்திரமல்லாமல் மதியீனம் கொண்டதுமாகும்! இவ்வித நம் இழி
நிலையில், தேவன் நமக்காக வைத்த திட்டம் மாத்திரமே மிகச் சிறந்ததென
நாம் திடமான உறுதி கொண்டிருக்காவிட்டால், அவருடைய சித்தத்தை
மிகுந்த வாஞ்சையாய் தேடுவதென்பது நமக்கு ஒருபோதும் சாத்தியப்படாது.
தங்கள் வாலிப நாட்கள் தொடங்கி, தங்கள் வாழ்கையில் தேவ சித்தத்தை தேடாமல் இருந்துவிட்ட எண்ணற்றவர்களுடைய வாழ்கை “சேதமடைந்த கப்பலின்”பயணமாகவே தத்தளிக்கிறது!
"இளம் பிராயத்தில் நுகத்தை சுமக்கிறது மனுஷனுக்கு நல்லது” என்றே புலம்பல். 3: 27 கூறுகிறது. இயேசுவும் தன்னுடைய நுகத்தை சுமக்கும்படியே மத்தேயு.11:28-30 வசனங்களில் நாம் யாவரையும் வருந்தி அழைக்கிறார். 'நம்மீது நுகத்தை சுமப்பதின் அர்த்தம் என்ன? ஒரு வயல் நிலத்தை இரண்டு காளை மாடுகள் உழும்போது, அந்தக் காளைகளின் கழுத்தில் ஒரு நீண்ட தடியாகிய நுகம் பூட்டப்படுவதுண்டு. ஒரு புதிய காளையை உழுவதற்குப் பயிற்சியளிக்க வேண்டுமென்றால், அந்தக் காளை மாட்டை ஒரு அனுபவமுள்ள காளை மாட்டோடு சேர்த்து நுகம் பூட்டுவார்கள். அந்த அனுபவமுள்ளகாளை செல்லும் திசையிலும், வேகத்திலும் இந்த புதிய காளையும் செல்லும்படி ஓர் கட்டாயப் பயிற்சி அப்போது ஏற்பட்டு விடும்!!
இதுவே இயேசுவின் நுகத்தை நம்மீது சுமப்பதின் அர்த்தமாகும். இயேசு விரும்பி நடத்தும் பாதையில்தான் நாமும் அவரோடு நடந்து செல்ல வேண்டும்! அவர் நடத்தாமல் நாமாக எதையும் செய்திட வேகமாய் முன் சென்றிடமுடியாது! அதுபோலவே அவர் நடத்தும் சில கீழ்ப்படிதலின் பாதைகளில் நாமாக பின்தங்கிவிடவும் முடியாது. இவ்விதமாய் இந்த நுகத்தடியின் அர்த்தத்தை விளங்கிக்கொண்டவர்கள் மிகவும் கொஞ்ச பேர்களே இருக்கிறார்கள். இயேசு வழங்கும் நுகத்தடியை மனப்பூர்வமாய் ஏற்றுக்கொள்ள இன்றும் 'வெகு சிலரே' இருக்கிறார்கள். பொதுவாய், நுகத்தடியை கழுத்தில் ஏற்றுக்கொள்ளும்படி நிலச்சுவான்தார்கள் தங்கள் காளை மாட்டை கட்டாயப்படுத்துவது வழக்கம். ஆனால் இயேசுவோ நம்மை எவ்விதத்திலும் கட்டாயப்படுத்தாமல், வருந்தியே அழைக்கிறார்! இன்றும், அவருடைய இந்த அழைப்பைப் புறக்கணிப்பது பெருத்த மதியீனமல்லவா!
இவர்களோ, தங்கள் சுய-சித்தமாகிய பாரமுள்ள நுகத்தை சுமந்து, அதன் விளைவாய் மன உளைச்சலையும், தோல்வியையும் அடைந்திட விரும்புகிறார்களேயல்லாமல் ...."இலகுவான இயேசுவின் நுகத்தை” சுமந்து, அது வழங்கும் மெய்யான விடுதலையையும், ஆழமான இளைப்பாறுதலையும் பெற்றுக்கொள்ள ஆயத்தமாய் இல்லை!
“பாரம் மிகுந்த நுகத்திற்கு கீழாய் பிரயாசப்படுகிறவர்களே, நீங்கள் யாவரும் என்னிடத்தில் வாருங்கள், நான் உங்களுக்கு இளைப்பாறுதல் தருவேன். என் நுகத்தை உங்கள் மீது ஏற்றுக்கொள்ளுங்கள், அப்போது (அந்த முதிர்ச்சி கொண்ட காளை சற்றும் அனுபவமில்லாத காளைக்கு கற்றுக் கொடுப்பது போலவே) நான் உங்களுக்கு கற்றுக்கொடுத்து உங்கள் ஆத்துமாக்கள் இளைப்பாறுதல் பெற்றிடச் செய்வேன். ஏனெனில், நான் வழங்கும் நுகத்தடியின் சுமை மிக இலகுவானதேயாகும்” (மத்தேயு.11:28-30) என்றே Living Bible ஆங்கில வேதாகமம் மிக நேர்த்தியாய் கூறுகிறது.
"ஏனோக்கு தேவனோடே சஞ்சரித்துக் கொண்டிருந்தான்” அல்லது நடந்து சென்றான் என் ஆதியாகமம். 5:22 கூறுகிறது. அதாவது, அவனாகவே துரிதமாய் முன் செல்லவோ அல்லது அவனாகவே பின் தங்கிவிடவோ இராமல், தேவன் நியமனம் செய்த பாதையில் “நுகம் ஏற்றுக்கொண்ட மனிதனாக” 300 வருடங்கள் தேவனோடு இசைவாய் நடந்து சென்றான்! அதன் விளைவாய் அவன் “தேவனுக்கு பிரியமானவன்” என்ற நற்சாட்சியின் முத்திரையை தேவன் அவனுக்கு வழங்கினார். நாமும் அவருக்குப் பிரியமாய் இருந்திட வேண்டுமென்றால், அவருடைய நுகத்திற்கு கீழாய் பூட்டப்பட்டு அவருடைய பூரண சித்தத்தின்படி இசைந்து...... வாழும் வழியேயல்லாமல் வேறுவழி ஏதுமில்லை. இவ்வித வாழ்க்கையைக் கொண்டவர்கள் மாத்திரமே கர்த்தருடைய வருகையில் “யாதொரு இழப்பு மற்றவர்களாய்” அவருக்கு முன் மகிழ்ச்சியுடன் நின்றிட முடியும்!
தேவனுடைய திட்டத்தை இழந்திடும் துர்பாக்கியம் :
விசுவாசிகளாகிய நம் ஜீவியத்தில், தேவனுடைய பூரண சித்தத்தை இழந்திடும் அபாயம் நம் யாவருக்குமே இருக்கிறது. இஸ்ரவேல் தேசத்திற்கு ராஜாவாய் இருக்கும்படி தேவனால் தெரிந்து கொள்ளப்பட்டவன்தான் சவுல்! ஆனால், காலாவட்டத்தில், அவனுடைய பொறுமையின்மையினிமித்தமும், அவனுடைய கீழ்ப்படியாமையினிமித்தமும் தேவன் அவனைப் புறக்கணிக்கும் நிலை ஏற்பட்டு விட்டது. அவர் புறக்கணித்தப்பிறகும் கூட, சிலவருடங்கள் சவுல் சிங்காசனத்தில் அமர்ந்திருக்கத்தான் செய்தான்...... ஆயினும் அவனோ, தேவன்
அவனுடைய வாழ்க்கையில் கொண்டிருந்த அவருடைய சித்தத்தை இழந்து போனான்! சாலொமோனைக்கூட மற்றொரு மாதிரியாய் நாம் கூறிட முடியும். தன்னுடைய ஆரம்ப வருடங்களில் தேவனைப் பிரியப்படுத்திய சாலொமோன் தன் பிற்கால ஜீவியத்தில், புறஜாதிய ஸ்திரீகளைத் திருமணம் செய்து வீழ்ச்சியுற்றான்!
வனாந்தரத்தில் அழிந்த இஸ்ரவேலர்களின் மாதிரியை வைத்து நமக்கு எச்சரிப்புகளை புதிய ஏற்பாடு இரண்டுமுறை எடுத்துரைத்திருக்கிறது. “கானான் தேசத்திற்குள் பிரவேசிப்பதே” இஸ்ரவேலர்களைக் குறித்த தேவனுடைய பரிபூரண சித்தமாயிருந்தது. இருப்பினும் அவர்களில் இரண்டு பேரைத் தவிர மற்றவர்கள் அனைவரும் “தேவனுடைய மிகச் சிறந்த வாக்குதத்தத்தை தங்கள் அவிசுவாசத்தினிமித்தமும், தங்கள் கீழ்ப்படியாமையினிமித்தமும் இழந்து போனார்கள்” (1கொரி.10:1-12; எபி.3:7-14). இன்றும் இவர்களைப் போலவே திரளான விசுவாசிகள் தேவன் தங்கள் வாழ்விற்காக கொண்டிருந்த பூரண திட்டத்தை தங்கள் கீழ்ப்படியாமையினிமித்தமும்....... தங்கள் திருமணம் அல்லது தங்கள் வேலையைத் தெரிந்து கொள்வதில் கைக்கொண்ட ஒத்த வேஷத்தினிமித்தமும் இழந்து போனார்கள்!
“தேவனுடைய பூரண சித்தம்” என்ற புத்தகத்தை எழுதிய G.கிறிஸ்டியன் வெய்ஸ் கீழ்கண்டவாறு அப்புத்தகத்தில் விவரித்திருக்கிறார். ஒரு வேதாகமப் பள்ளி ஆசிரியர் தன்னுடைய மாணாக்கர்களுக்கு ஒரு சமயம் கூறும்போது “மாணவர்களே, என் ஜீவியத்தில் தேவன் எனக்குத் தந்த முதல் பங்கை இழந்து, அதற்குப் பதிலாக அவர் தந்த இரண்டாவது பங்கில்தான் என் பெரும்பாலான வாழ்க்கையை வாழ்ந்திருக்கிறேன்! தேவன் என்னை ஒரு மிஷனெரியாக இருக்கும் படியே வாலிப நாட்களில் என்னை அழைத்தார். ஆனால் நானோ, என்
திருமணத்தினிமித்தம் அவர் அழைப்பிற்கு புறமுதுகு காட்டினேன். என் சுயநலத்தினிமித்தம் ஒரு வங்கியில் வேலைக்குச் சேர்ந்து பணம் சம்பாதித்தேன்! இருப்பினும், தேவனோ என்னிடம் இடைவிடாது பல வருடங்கள் தொடர்ந்து பேசினார். நானும் தொடர்ந்து அவர் அழைப்பிற்கு இணங்க மறுத்துவிட்டேன்! இச்சமயத்தில் என் சிறு குழந்தை ஒரு நாற்காலியிலிருந்து தவறி விழுந்து மரித்துப் போனது! இச்சம்பவம் என்னை வெகுவாக பாதித்து தேவனுக்கு முன்பாக முழங்காலிடச் செய்தது. அன்று இராமுழுவதும் தேவனுக்கு முன்பாக கண்ணீரோடு ஜெபத்தில் தரித்திருந்தேன். அந்த இராத்திரியில்தான் என் ஜீவியத்தை தேவனுடைய கரத்தில் முழுமையாக ஒப்புவித்தேன்! ஆனால் இப்போதோ நான் ஆப்பிரிக்கா தேசத்திற்குச் சென்று ஊழியம் செய்யும் காலம் கடந்துவிட்டது! ஆம், ஊழியத்தின் வாசல் அடைபட்டுப்போனது!!
இவ்வாறு தேவன் எனக்கென்று தந்த முதல் பங்கை நான் இழந்து போனேன். ஆண்டவரே, நீர் என்னுடைய மீதியான ஜீவியத்தை ஏதாகிலும் ஊழியத்திற்குப் பயன்படுத்தும்! என மாத்திரமே நான் ஜெபிக்க முடிந்தது. அதன் விளைவாய் இப்போது நான் ஒரு வேதாகமப்பள்ளியின் ஆசிரியராகப் பணியாற்றுகிறேன். இருப்பினும், இந்தப்பணி தேவன் எனக்குத் தந்த இரண்டாவது பங்குதான் என்பதை என்னால் மறக்கவே முடியவில்லை!” என வருத்தத்துடன் கூறினார்
.
அந்த புத்தகத்தில் வெய்ஸ் சகோதரன் மேலும் கூறுகையில் “மேலே கூறப்பட்ட வேதாகமப் பாடசாலையின் ஆசிரியர்களைப் போலவே சாட்சி உடையவர்கள் ஏராளமானபேரை நான் சந்தித்திருக்கிறேன். அவர்கள் கூறிய சாட்சிகள் கண்ணீரில் எழுதப்பட்டதாகவே இருக்கிறது!!” எனவும் எழுதினார். இவ்வாறு தேவனுடைய பரிபூரண சித்தத்தின் வழியில் பிரவேசிக்காமல், தங்கள் சுய சித்தத்தில் தடம் புரண்டவர்களுக்கு வேறுவழியைத் தேவன் திறந்துவிட்டார் என்பது உண்மைதான். அதற்காக நாம் தேவனுக்கு நன்றியும் கூற கடமைப்பட்டிருக்கிறோம். அப்படியிருந்தும், இப்போது அவர்கள் சென்று கொண்டிருக்கும் வழி, தேவன் அவர்களுக்கென தெரிந்து கொண்ட அவருடைய பூரண சித்தத்தின்படியான முன்குறித்த வழி அல்லவே அல்ல! இவ்வாறு, ஒருவன் தன் ஜீவியத்தில் தேவனுடைய பூரண சித்தத்தை தன் வாழ்வில் இழப்பது பெருந்துயரமேயாகும்!
அன்பார்ந்த கிறிஸ்தவர்களே, இப்போது நீங்கள் வாசித்த வாசகங்களையும் அதன் சாட்சிகளையும் உங்கள் மனதில் நன்றாய் பதித்து வையுங்கள்...... அப்போதுதான், நீங்களும் தேவன் உங்கள் வாழ்விற்கென தெரிந்து கொண்ட அந்த ஆரம்ப முதல் பங்கை இழந்து போகாமல் கவனமாய் வாழ்ந்திட முடியும்! தேவனுடைய கரத்தில் தங்களை முழுமையாய் ஒப்புக்கொடுத்த யாதொருவனுடைய ஜீவியத்தையும் தேவன் எப்படியாவது பயன்படச் செய்வார் என்பதில் சந்தேகமேயில்லை! இருப்பினும், நாமோ அவருடைய சித்தத்தை தீவிரமாய் தேடி அதற்கு நம்மை முழுமையாய் ஒப்புக்கொடுக்கிறவர்களாய் இருந்திடவே நாடக்கடவோம்!! அப்போது மாத்திரமே, நம் ஜீவிய பயணத்தை வேதனை நிறைந்த வெட்கத்திற்கு நம்மை விலக்கி காத்துக்கொள்ள முடியும்.
நம் சுய சித்தத்தின்படி நாமே ஒரு இடத்தைத் தெரிந்து கொண்டு ஜீவித்திடும் வாழ்க்கை ஒருபோதும் வெற்றியுள்ள ஜீவியத்தை நமக்குத் தராது! ஆண்டவருக்கென முழுமையாக பயன்படும் ஊழியத்தைப் பெற்றிடவும் முடியாது! அல்லது யாதொருவருக்கும் ஆசீர்வாதமாக இருந்திடவும் முடியாது! இன்று அநேகருடைய எண்ணமோ, தங்கள் வேலையையும், தாங்கள் வசிக்கும் இடத்தையும் தாங்களே தெரிந்து கொண்டு, அதிலே தங்கியிருந்து ஆண்டவருக்கு சாட்சியாக வாழ்வதற்கே முயற்சிக்கிறார்கள். தேவனும் தம்முடைய மிகுந்த இரக்கத்தின்படி, இதுபோன்ற விசுவாசிகளை மிகக்குறைந்த அளவு பயன்படுத்திடவும்கூடும்! ஆனால் தேவனுடைய திராட்சத் தோட்டத்தில் அவர்களின் பங்கோ வெகு குறைவாகவே இருக்கும்!!
இவர்கள் மாத்திரம் தங்கள் ஆரம்ப ஜீவியத்திலேயே தேவனுடைய திட்டத்தை முழு இருதயமாய் நாடி அவருடைய பூரண சித்தத்தின் மையத்தில் நிலைத்திருந்திருப்பார்களேயாகில் “வாழ்வின் முழு பங்கையும்” அவர்கள் ஜெயமாய் நிறைவேற்றியிருந்திருக்கமுடியும். இவ்வாறெல்லாம் நிலை கொண்டிருக்கும் தேவனுடைய பிரமாணங்களை இவர்கள் கவனயீனமாய் அலட்சியப்படுத்தியதின் விளைவாய், இன்றோ அவர்களுடைய ஆவிக்குரிய வளர்ச்சி கூனிக் குறுகியதாயும், சொற்ப கனியுடையதாகவும் தேங்கிவிட்டது!
இப்போதும் என்ன? தேவனுடைய சித்தம் செய்வதில் நீங்கள் எந்த விஷயத்திலாவது அவருக்கு கீழ்ப்படியாதிருந்தால், இன்னும் காலம் விரயமாவதற்கு முன்பாக அவரிடத்தில் மனந்திரும்பி கிட்டிச் சேருங்கள். ஆம், உங்களில் அநேகர் யோனாவிற்குச் சம்பவித்தது போலவே, தேவன் உங்களுக்காக வைத்திருக்கும் பிரதான பாதைக்குள் 'மீண்டும்' திரும்பி வந்துவிடமுடியும்!
நாம் யாராயிருந்தாலும் நம் ஒவ்வொருவருக்கும் ஒரே ஒரு வாழ்க்கைதான் இருக்கிறது! இந்த ஒரே வாழ்க்கையின் முடிவில், பவுலைப்போலவே “தேவன் எனக்கென நியமித்த ஓட்டத்தை நிறைவாய் ஓடி முடித்தேன்”(2தீமோத்தேயு 4:7) என கூற முடிந்தவர்கள் மெய்யாகவே பாக்கியவான்கள்!!
இந்த உலகமும் அதிலுள்ள இச்சையான யாவும் ஒரு நாள் ஒழிந்து மறைந்து போகும்! ஆனால், தேவனுடைய சித்தத்தை கவனமாய் பின்பற்றி வாழ்கிறவனெவனோ, அவனே என்றென்றைக்கும் ஒழிந்து போகாத நிரந்தரமான பங்கைப் பெற்று வாழ்வாங்கு வாழ்ந்திடுவான். (1யோவான்.2:17 JPB ஆங்கில வேதாகமம்) எனக்கூறும் அற்புத வசனத்தை நாம் மனதில் கொள்ளக்கடவோம்.
“நீங்கள் வாழ்வின் அர்த்தத்தையும் அதன் நோக்கத்தையும் அறியாத மனுஷர்களைப்போல் இராமல், இந்த ஜீவியத்தை மிகுந்த பொறுப்புள்ள உணர்வோடு கடைப்பிடித்து வாழுங்கள். இந்த நாட்களின் பல்வேறு கஷ்டங்களையும் ஒரு பொருட்டாக எண்ணாமல், உங்கள் காலத்தை செம்மையாய் பயன்படுத்திக் கொள்ளுங்கள். ஏனோ-தானோ என்று இராமல் தேவனுடைய சித்தம் இன்னதென்றறிருந்து அதை உறுதியாகப் பற்றிக் கொண்டு வாழுங்கள்” (எபேசியர்.5:15-17 JPB ஆங்கில வேதாகமம்) என எச்சரிக்கும் வார்த்தைகளுக்குச் செவிகொடுங்கள்.
செய்தியின் சாராம்சங்கள் :
1) ஒரு மனிதனுடைய மிகப்பெரிய பாக்கியமும் சிலாக்கியமுமான வாழ்க்கை "அவன் தேனுடைய சித்தத்தை செய்து முடிப்பதேயாகும்” என்றே ஆண்டவராகிய இயேசுவும், அவருடைய அப்போஸ்தலர்களும் போதித்திருக்கிறார்கள்.
2) தேவன் நம்மை நடத்துவதற்கென காத்திருக்கும் சமயத்தில், நாமாகவே தெரிந்து கொண்டு எதிர்காலத்திற்குள் பிரவேசிக்கும் செயல் மதியீனமேயாகும். அவர் வகுத்த திட்டமே நமக்கு மிகச் சிறந்ததாகும்! ஆகவே, அவரிடத்தில் நம்மை இணங்கி ஒப்புக்கொடுத்துவிட்டால், சாத்தானின் எண்ணற்ற கண்ணியிலிருந்து அவரே நம்மை இரட்சித்துக் காத்திட முடியும்!
3) நம் வாழ்விற்கென தேவன் கொண்டிருக்கும் பூரண சித்தத்தை, கவனயீனமாகவோ அல்லது கீழ்ப்படியாமையினிமித்தமோ நாம் இழந்திட முடியும்!
"தனிப்பட்ட விதத்தில் நமக்கு தேவனோடு நெருங்கிய தொடர்பில்லாத பட்சத்தில்” திவ்விய நடத்துதல் என்ற மேன்மை ஒருபோதும் தானாக ஏற்பட்டுவிடாது. இன்றும்கூட, வரங்கள் வேண்டுமென விரும்புவோர் ஏராளம் இருக்கிறார்கள். ஆனால் வரம் கொடுப்பவரை விரும்பி நாடுவோர் வெகு சொற்பமானவர்களே இருக்கிறார்கள்! இன்று நாமும் தேவனுடைய நடத்துதலை வாஞ்சித்துக் கொண்டு, தேவன் மீது கொண்ட வாஞ்சையான தாகம் இல்லையென்றால் நாம் தேடும் அவரின் நடத்துதல் ஒருபோதும் நமக்குக் கிட்டாது!!
ஆம், நம் ஜீவியத்தில் அவருடைய நடத்துதலை அனுபவித்து வாழ்ந்திட நாம் தேவனோடு நெருங்கிய ஐக்கியமாய் இருக்க வேண்டியது மிகமிக அவசியமாயிருக்கிறது. இதற்கு முதலாவதாக, நம்முடைய ஆரம்ப “புதிதான மறுபிறப்பின்” நாளிலிருந்தே கிறிஸ்துவோடு வலிமையான தொடர்பை துவங்கியிருக்க வேண்டும். இருப்பினும் அந்த ஆரம்பத் தொடர்பு மாத்திரமே நமக்குப் போதாது! ஏனெனில், தேவனுடைய நடத்துதலை நாம் அறிந்து கொள்வதற்கு “சில முக்கியமான நிபந்தனைகளையும்” நாம் நிறைவேற்ற வேண்டியது அவசியமாயிருக்கிறது. அந்த நிபந்தனைகளைப் பிரதானமாய் வேதாகமத்தின் இரண்டு பகுதிகளிலிருந்து நாம் காண்கிறோம். ஒன்று, பழைய ஏற்பாடு நீதிமொழிகள்.3:5,6 வசனங்களிலும்; மற்றொன்று, புதிய ஏற்பாடு ரோமர்.12:1,2 வசனங்களிலும் நாம் காண்கிறோம்.
விசுவாசம் :
“உன் சுயபுத்தியின் மேல் சாயாமல், உன் முழு இருதயத்தோடும் கர்த்தரில் நம்பிக்கையாயிருந்து, உன் வழிகளிலெல்லாம் அவரை நினைத்துக்கொள். அப்பொழுது அவர் உன் பாதைகளைச் செவ்வைப்படுத்துவார்” என்றே நீதிமொழிகள்.3:5,6 வசனங்கள் எடுத்துரைக்கிறது. இன்று அநேகர் தேவ சித்தத்தை அறிந்திடும் பாக்கியத்தை ஒரு சமயங்கூட அனுபவிக்காததற்குக் காரணம் என்ன? “தேவன் தங்களை நடத்துவார்” என்ற விசுவாசம் அவர்களிடத்தில் இல்லை, ஆம் அவ்வளவுதான்! தேவனுடைய நடத்துதலைத் தேடும் நமக்கு விசுவாசமே முதல் பிரதான அவசியமாயிருக்கிறது. சத்தியத்தை மனதளவில் மாத்திரம் ஏற்றுக்கொள்வதையே 'விசுவாசம்' என பொருள்படுத்திவிடக்கூடாது! அதற்கு மாறாக, தனிப்பட்ட விதத்தில் அவரை நெருக்கமாய் அறிகின்ற அறிவின் மூலம் உருவாகும் “தேவன் மீது கொண்ட உறுதியான நம்பிக்கையே” மெய்யான விசுவாசமாகும்.
ஞானமென்பது, அந்தந்த சூழ்நிலையில் தேவனுடைய சிந்தை இன்னதென்பதை அறிந்து கொள்வதேயாகும். ஆகவே, ஞானத்தைத் தேடி அதைத் தேவனிடம் கேட்கும்படியே வேதம் நம்மை அழைக்கிறது. அவ்வாறு தேடுகிறவர்களுக்கு ஞானம் சம்பூரணமாய் வழங்கப்படும் என்றும் வாக்குதத்தம் செய்யப்பட்டிருக்கிறது. இவ்வாறு ஞானத்தைக் கேட்டுப் பெற்றுக் கொள்வதற்கு ஒரே ஒரு நிபந்தனை, அதை நாம் “விசுவாசத்தோடு கேட்கவேண்டும்!” இதற்கு மாறாக விசுவாசமில்லாமல் கேட்கிற ஒருவன் யாதொன்றையும் பெற்றுக் கொள்ளமாட்டான்! என்றே வேதம் எச்சரிக்கிறது (யாக்.1:5,7).
இன்றுள்ள இளம் விசுவாசிகள் தவறாய் எண்ணுவது யாதெனில் “திவ்விய நடத்துதல் என்பது, ஆண்டவரை அறிகிற அறிவில் பல வருடங்களாய் வளர்ந்த முதிர்ச்சி கொண்டவர்களுக்கே கிடைத்திடும்” என்று கருதுவதேயாகும். நாம் எவ்வளவு அதிகம் தேவனோடு இசைந்து நடக்கிறோமோ, அவ்வளவு அதிகம் அவருடைய மனதை நாம் விளங்கிக்கொள்ளலாம் என்பது எந்த சந்தேகத்திற்கும் இடமில்லாத உண்மையேயாகும். அதே சமயம், தேவன் தன்னுடைய பிள்ளைகள் அனைவரையுமே தன் சித்தத்தில் நடத்த விரும்புகிறார் என்பதும் உண்மையேயாகும்! அன்று பவுலுக்கு அனனியா மூலம் ஆண்டவர் கூறியவைகள், இன்றும் நம் யாவருக்குமே உரியதாயிருக்கிறது...... “நம்முடைய முன்னோர்களின் தேவனுடைய திருவுள்ளத்தை நீ அறியவும், நீதிபரரை தரிசிக்கவும், அவரது திருவாய்மொழியைக் கேட்கவும், அவர் உன்னை முன்னமே தெரிந்து கொண்டார்” (அப்.22:14) என்ற அற்புதமான இந்த வசனத்தை கவனியுங்கள். ஒரு தகப்பன் தன் பிள்ளைகளிடம், அவர்கள் மீது தான் கொண்டிருக்கும் விருப்பத்தையும், திட்டத்தையும் கூறுவதற்கு எப்போதுமே மிகுந்த மகிழ்ச்சியுள்ளவராய் இருப்பார். தன் மூத்த பிள்ளையிடத்தில் மாத்திரமல்ல, தன் கடைசிப்பிள்ளையிடத்திலும் அவ்வாறே மகிழ்ச்சியுடன் கூறுவார். அதுபோலவே நம்முடைய பரம தகப்பனும் இருக்கிறார்! இந்த புதிய உடன்படிக்கையின் நாட்களில், தன் பிள்ளைகள் யாவரும் “சிறியவன் முதற்கொண்டு பெரியவன் வரைக்கும் என்னை தனிப்பட்ட விதத்தில் அறிந்து கொள்வார்கள்” என்றே வேதம் நமக்குக் கூறுகிறது (எபி. 8:10,11).
ஆகவே தான், நாம் ஒவ்வொருவரும் அவரிடத்தில் “விசுவாசத்தின் முழு நிச்சயத்தோடு" கிட்டிச் சேர்ந்திட முடியும்! அவரோ, தன்னை தேடிவந்த பிள்ளைகளுக்கு தன் சித்தத்தை வெளிப்படுத்துவதற்கு பேரார்வம் கொண்டவராயிருக்கிறார்!!
“விசுவாசமில்லாமல் நாம் தேவனுக்குப் பிரியமாயிருப்பது கூடாத காரியம்” என்றே எபிரெயர்.11:6-ம் வசனம் கூறுகிறது. இந்த வசனம் தொடர்ந்து கூறுகையில் “தேவனிடத்தில் சேருகிறவன், அவர் தம்மைத் தேடுகிறவர்களுக்குப் பலனளிக்கிறவர் என்றும் விசுவாசிக்க வேண்டும்” என ஆணித்தரமாய் கூறுவதைப் பாருங்கள். ஒருவனுடைய விசுவாசத்தை, அவனுடைய இடைவிடா ஜெபத்தை வைத்தே கண்டு கொள்ளும் அடையாளமாக லூக்கா.18:1-8 வசனங்கள் கூறுகிறது. 'சந்தேகப்படுகிறவன்' வெகு சீக்கிரத்தில் தன் ஜெபத்தை நிறுத்திவிடுவான்! ஆனால் விசுவாசிக்கிறவனோ, தனக்குப் பதில் கிடைக்கும்வரை தேவனை இறுகவிடாதுப் பற்றிக் கொண்டிருப்பான். சோர்ந்து போகாத வாஞ்சையை தேவன் எப்போதுமே கனப்படுத்துகிறவராய் இருக்கிறார்! ஏனெனில், அந்த சோர்வில்லாத வாஞ்சை உறுதியான விசுவாசத்தில் விளைந்த பலனேயாகும். ஆகவே இந்த தீவிரமான வாஞ்சை நமக்கு “முதலாவதாக” இல்லாவிட்டால், நாம் தேவனிடத்திலிருந்து யாதொரு மேன்மையையும் பெற்றுக் கொள்ளவே முடியாது!! ஏனெனில், “கர்த்தர் தவனமுள்ள (வாஞ்சையுள்ள) ஆத்துமாவையே திருப்தியாக்குகிறார்” என்றே சங்கீதம்.107:8 நமக்கு கூறுகிறது. அதைத்தொடர்ந்து வலியுறுத்தும்படி, தேவன் கூறுகையில் “உங்கள் முழு இருதயத்தோடும் என்னைத் தேடுவீர்களானால், என்னைத் தேடுகையில் கண்டுபிடிப்பீர்கள்” என்றார் (எரே.29:13). நாம் தேவனுடைய நடத்துதலைத் தேடின காலங்களில் முழு இருதயத்தோடு அல்ல, அரை-குறையான இருதயத்தோடுதான் தேடினோம் என்ற உண்மையை நம்மில் அநேகர் கூறிட முடியும். கெத்சமெனே தோட்டத்தில் தன் பிதாவின் சித்தத்தை வாஞ்சித்துத் தேடிய ஆண்டவராகிய இயேசு “பலத்த சத்தத்தோடும் கண்ணீரோடும் விடாப்பிடியாய் திரும்பத் திரும்ப ஜெபித்தார்” என்றே வேதம் கூறுகிறது (எபிரெயர். 5:7-JPB ஆங்கில வேதாகமம்). இயேசுவின் ஜெபத்தோடு நம் ஜெபத்தை ஒப்பிட்டுப் பார்த்தால், அது எவ்வளவு சாதாரணமாக இருக்கிறது! நாமோ தொலைந்து போய்விட்ட ஒரு 50பைசா நாணயத்தை தேடும் வாஞ்சையை விட வெகு குறைவாகவே தேவனுடைய சித்தத்தை வாஞ்சித்துத் தேடுகிறோம்! இது போன்ற இலட்சணத்தில், நாம் தேவனுடைய சித்தத்தை கண்டு கொள்ளவில்லை என்பதில் எந்த ஆச்சரியமுமில்லை.
நாம் தேவனுடைய சித்தத்தை, இந்தப் பூமியிலுள்ள விலையேறப்பெற்ற சொத்தாக மதிப்பிட்டிருந்தால், நம் முழு இருதயத்தோடும் அதைத் தேடியிருப்போம். “தம்மை தீவிரமாய் தேடுகிறவர்களுக்கு அவர் பலனளிப்பவரென்பதை நாம் மெய்யாகவே விசுவாசித்திருக்கிறோமா?" அப்படியானால், நம்முடைய வாஞ்சை நிறைந்த “தீவிரமான ஜெபத்தில்" அந்த விசுவாசம் வெளிப்பட்டு ஜொலித்திருக்கும்! நம் ஜீவியத்தின் ஒவ்வொரு பகுதியிலும் அவருடைய சித்தத்தை எப்படியாகிலும் நிறைவேற்றியே தீரவேண்டும் என்ற தீராத வாஞ்சையினால் நாம் ஆட்கொள்ளப்பட்டிருந்தால், யாதொரு சந்தேகத்துக்கும் இடமில்லாமல் தேவன் தன்னுடைய மனதை நமக்கு வெளிப்படுத்தியிருப்பார்! பதில் கிடைக்கும் வரை தேவனை இறுக பிடித்துக் கொண்டிருப்பவர்களின் விசுவாசத்தை தேவன் ஒருக்காலும் கனப்படுத்தாமல் இருந்ததே இல்லை!!
வேதாகமம் குறிப்பிடும் விசுவாசத்தோடு, 'பொறுமையும்' சேர்ந்தே எப்போதும் வருகிறது. நாம் தேவனுடைய வாக்குதத்தத்தை சுதந்தரிக்க வேண்டுமாகில் விசுவாசம், பொறுமை ஆகிய இந்த இரண்டும் மிகுந்த அவசியமாயிருக்கிறது (எபி. 6:12,5). தன் அனுபவத்தின் மூலமாய் யாதொரு சந்தேகத்திற்கும் இடமில்லாமல், நம் யாவருக்கும் தாவீது கூறிய புத்திமதி யாதெனில், “உன் வழியை கர்த்தருக்கு ஒப்புவித்து, அவர் மேல் நம்பிக்கையாயிரு. அவரே காரியத்தை வாய்க்கப்பண்ணுவார் என்றும், அவரை நோக்கி அமர்ந்து அவருக்காக காத்திருக்கிறவர்களை அவர் ஒருபோதும் வெட்கமடையச் செய்வதில்லை" என்றும் சங்கீதம்.37:5, 7 வசனம் மூலமாய் தாவீது நமக்குப் புத்தி கூறியுள்ளார்.
நாம் தேவனுடைய நடத்துதலை எதிர்பார்த்திருக்கும் வேளையில் ஏற்படும் கேடான சோதனை யாதெனில் “மனச்சோர்வுற்று, பின்பு பொறுமை இழப்பவர்களாய்” மாறுவதேயாகும்! ஆனால், ஒரு மெய்யான விசுவாசியின் இருதயமோ பூரண இளைப்பாறுதல் பெற்றதாயிருக்கும்.
சில தீர்மானங்களுக்கு, ஆண்டவரின் மனதில் இருப்பதை தெளிவாய் அறிந்து கொள்ள, நாம் காத்திருக்க வேண்டுமென்ற அவசியமில்லை. உதாரணமாய், உங்கள் வெளியூர் பயணத்தை 15-ம் தேதி துவங்குவதா? அல்லது 16-ம் தேதி துவங்குவதா? என ஆண்டவரிடமிருந்து வார்த்தை வரும் வரை, காலவரையறையில்லாமல் நாம் ஒருபோதும் காத்திருப்பதேயில்லை!
ஆனால், சில தீர்மானங்களில் தேவனுடைய சித்தத்தை நாம் தெளிவாக அறிந்து கொள்ளும்வரை நாம் காத்திருக்கத்தான் வேண்டும்! உதாரணமாக, நம் திருமண விஷயத்தில் “உறுதியற்ற நிலையில்” நாம் யாதொன்றும் செய்து விடக்கூடாது. தீர்மானம் எடுப்பதற்கு முன்பாக, “அந்தத் தீர்மானம் தேவனுடைய பரிபூரண சித்தந்தான்” என்பதில் உறுதியான நிச்சயத்தைப் பெற்றிருக்க வேண்டும்! இவ்வித கவனம், மிகவும் முக்கியமானதென வெளிப்படையாகவே நம் யாவருக்கும் தெரியும். ஏனென்றால், இதுபோன்ற விஷயத்தில் ஏற்படும் விளைவு மகா கேடு நிறைந்ததாய் இருக்கும். ஒரு தீர்மானம் எவ்வளவு முக்கியத்துவம் கொண்டதாக இருக்கிறதோ அந்த அளவிற்கு அதிக நாட்கள் நாம் காத்திருந்து “ இது தேவனுடைய சித்தந்தானா? என்பதை நிச்சயத்துக்கொள்ள” ஜாக்கிரதை கொண்டவர்களாயிருக்க வேண்டும்!!
நாம் ஆண்டவரை உறுதியாக நம்பி விசுவாசிக்கிறவர்களாயிருந்தால், அவருடைய சித்தத்தை அறியும்படி காத்திருப்பதற்கு நாம் மனக்கிலேசம் கொண்டிட மாட்டோம். “இவ்வாறெல்லாம் காத்திருந்து, எங்கே நமக்குச் சிறந்ததை இழந்துவிடுவோமே?” என்ற அச்சத்துடன் தேவனுடைய நேரத்தை முந்திக்கொண்டு ஒன்றை நாமாக பற்றிக்கொள்ள முயற்சித்திடவும் மாட்டோம்! “சிறந்ததை” நமக்காகப் பாதுகாத்து வைப்பதற்கு தேவன் சர்வ வல்லவராயிருக்கிறார். ஆனால் பொறுமை இழந்து நாமாகப் பற்றிக் கொள்ள துணிந்தால், நிச்சயமாய் “தேவனுடைய சிறந்ததை” இழந்துவிடுவோம்!! இதை வேதம் "விசுவாசிக்கிறவன் பதறான்” (ஏசா.28:16) என நேர்த்தியாகக் கூறுகிறது.
வழிநடத்துதலின் சங்கீதமென பெயர்பெற்ற 25ம் அதிகார சங்கீதத்தில் “நாம் கர்த்தருக்கு காத்திருக்க வேண்டும்" என தாவீது திரும்பத் திரும்பக் கூறியிருக்கிறார் (வச.3,5,21). இவ்வாறு கர்த்தருடைய நேரத்துக்காக காத்திருக்கிறவர்களில் ஒருவர்கூட, “தேவையில்லாமல் அதிகநேரம் காத்திருந்துவிட்டோமே” என ஒருபோதும் வருந்தியதில்லை! ஏனென்றால், “தனக்காக வாஞ்சையுடன் காத்திருப்பவர்களுக்கென்றே தேவன் கிரியைச் செய்து, தன்னை அவர்களுக்கு வெளிப்படுத்துகிறார்” என ஏசாயா.64:4, ஏசாயா.49:23 வசனங்களின் விரிவாக்கம் நமக்குப் போதிக்கிறது.
நாம் கர்த்தருக்காக காத்திருந்தால் மாத்திரமே, அவருடைய மனதில் என்ன எண்ணுகிறார் என்பதை நமக்குத் தேவன் வெளிப்படுத்த முடியும். ஜேம்ஸ் மேகோங்கி என்ற பக்தன் “தன்னுடைய நடத்துதல்” என்ற புத்தகத்தில், கீழ்கண்டவாறு விவரித்து எழுதியுள்ளார்: “சேறும் சகதியும் கொண்ட தண்ணீரை ஒரு பெரிய கப்பில் எடுத்து அதை உங்கள் மேஜையின் மீது வைத்துவிடுங்கள். கொஞ்சங் கொஞ்சமாய் சேறு கீழே படிந்து, அந்தக் கப்பின் அடிமட்டத்தில் தங்கிவிடும். இன்னும் கொஞ்ச நேரத்தில் அந்தத் தண்ணீரிலிருந்த கலங்கல் நிறங்கூட மாறி தெளிவடைந்துவிடும்! ஒரு குறிப்பிட்ட கால அளவில் அது மிகவும் தெளிவாகி அந்த கண்ணாடி கப்பிற்கு பின்னாக இருக்கும் பொருட்களைக்கூட நீங்கள் பார்த்திட முடியும்! இது எப்படி சாத்தியமானது? நீங்கள் காத்திருந்தீர்கள், அவ்வளவுதான்! தேவ நடத்துதலின் பகுதியிலும் இதே பிரமாணம்தான் கிரியைச் செய்கிறது. இங்கே தேவனுடைய வழிநடத்துதலைத் தேடுகிறவன் காத்திருக்கிறான்! அவ்வாறு அவன் காத்திருந்தபடியால் அங்குமிங்கும் மிதந்து கொண்டிருந்த சிறுசிறு சேறான பகுதிகள் கொஞ்சங் கொஞ்சமாய் அடங்கி, அதற்குரிய தாழ்வான கீழ்மட்டத்திற்கு வந்து தங்கிவிட்டது! அனைத்திற்கும் விடை, இந்த காத்திருத்தல் மூலமே கிடைத்துவிட்டது. நமக்கு ஏற்பட்ட எத்தனையோ குளறுபடிகள், இந்த காத்திருத்தலை அசட்டை செய்ததால் ஏற்பட்ட குளறுபடிகளேயாகும்!!
தேவனால் நடத்தப்படவேண்டுமென்ற முக்கியத்தை விட, “அவசரம்" என்ற முக்கியமே மேலானதாகத் தோன்றும்படி செய்து, சிக்கிக்கொள்ளும்படியான கண்ணியை சாத்தான் தாராளமாய் நமக்கு முன் விரித்து வைக்கிறான்!
சில சமயங்களில், நம் மனக்குழப்பமே அதிகமாய் இருக்கிறபடியால் இனி “தேவ நடத்துதலை பெற இயலாது” என்பது போலவே நமக்குத் தோன்றுகிறது! அதுபோன்ற நேரங்களில்தான் சங்கீதக்காரன் கூறும் “காத்திருக்கும் ஜாமக்காரனின்” செய்தி நமக்கு மிகுந்த உற்சாகத்தை அளிக்கிறது. அந்த செய்தியில் “எப்பொழுது விடியும் என்று விடியற்காலத்துக்குக் காத்திருக்கும் ஜாமக்காரரைப் பார்க்கிலும் அதிகமாய் என் ஆத்துமா ஆண்டவருக்குக் காத்திருக்கிறது” (சங்கீதம்.130:6) என விவரித்தார். இராச்ஜாமத்தில், விடியற்காலத்திற்கு காத்திருப்பவர்கள் எவ்வாறு காத்திருக்கிறார்கள்? அதற்கான விடை நாலு பங்காய் இருக்கிறது. 1) ஜாமத்தில் காத்திருக்கிறார்கள். 2) கொஞ்சம் கொஞ்சமாய் மெதுவாக வரப்போகும் ஒன்றிற்காக காத்திருக்கிறார்கள். 3) நிச்சயமாய் வரப்போகும் ஒன்றிற்காக காத்திருக்கிறார்கள். 4) முழுப்பகல் வெளிச்சத்தையும் கொண்டுவரும் அந்த விடியலுக்காகவே காத்திருக்கிறார்கள்.
இவ்வாறாகவே நடத்துதலுக்காக காத்திருக்கும் நமக்கு சம்பவிக்கிறது. முதலாவது ஆரம்பம் அதிக மனக்குழப்பமாய் இருக்கிறபடியால், ‘காரிருளில் அமிழ்ந்திருப்பதைப் போலவே' நமக்குத் தோன்றுகிறது. ஆனால், இவ்வாறு தொடர்ந்து பொறுமையோடு காத்திருக்கும் வேளையில், விடியலின் முதல் ஒளி கொஞ்சம் மங்கலாய் நமக்கு மெதுவாகத் தோன்றுகிறது! முடிவில், விடியலை சந்திக்காத காரிருள் ஜாமம் என இல்லாததைப் போலவே, நம்முடைய இராக்கால சூழ்நிலையும் தேவனுடைய வழி நடத்துதலாகிய விடியலின் வெளிச்சத்தை நிச்சயமாய் சந்தித்தே தீரும்! அவ்வாறு படிப்படியாய் அந்த விடியல் வந்தவுடன், வெளிச்சமும் ஆசீர்வாதமும் அளவிற்கடங்காத விதத்தில் நம்மை வந்தடைந்துவிடும். அதுபோலவே தேவன் தந்தருளிய நடத்துதல் நம்மைக் கிட்டிச்சேர்ந்தவுடன், காத்திருந்த நம் ஆத்துமாவை சொல்லொன்னா பெரும் மகிழ்ச்சிக்குள்ளாக்கி விடுகிறது!!! இருளைப் பிரகாசிப்பித்துவிட்ட அந்த மாபெரும் வெளிச்சம், இரா ஜாமத்தில் நீண்ட நாட்கள் காத்திருந்தவருத்தங்களை எல்லாம் மறந்து போகவும் செய்துவிடுகிறது!" என்றே மேகோங்கி தன் புத்தகத்தில் நேர்த்தியாய் குறிப்பிட்டுள்ளார்.
ஆகவே, அவசரப்படுவதைக் குறித்து நாம் எச்சரிக்கையாய் இருக்கக்கடவோம். பொறுமையின்மை அவிசுவாசத்தின் வேரிலிருந்தே முளைத்து வருகிறது. வனாந்தரத்தில் இருந்த இஸ்ரவேலர்கள் "கர்த்தருடைய ஆலோசனைக்கு காத்திருக்கவில்லை” என சங்கீதம் 106:13 வருத்தத்துடன் கூறுகிறது. அதன் விளைவாய் தேவனுடைய மிகச் சிறந்தபங்கை அவர்கள் இழந்து போனார்கள்! இதுபோன்ற துயரம் நம் ஒருவருக்காவது ஏற்படாவண்ணம் ஜாக்கிரதையாயிருக்கக்கடவோம்!!
சுயபெலன்மீது நம்பிக்கை வைக்காதிருக்கக்கடவோம் :
"உன் சுயபுத்தியின் மேல் சாயாமல், உன் முழு இருதயத்தோடும், கர்த்தரில் நம்பிக்கையாயிருந்தால்.... அப்பொழுது அவர் உன் பாதைகளைச் செவ்வைப்படுத்துவார்” என்றே நீதிமொழிகள்.3:5, 6 வசனங்களில் காண்கிறோம். தன் ஜீவியத்தில் ஆவிக்குரிய விஷயங்கள் என்று வரும்போது, தன்னிடமுள்ள சொந்த ஞானத்தை சார்ந்து அதன்மீது தன் நம்பிக்கையைவைக்காதிருக்க கற்றுக் கொள்ளாதவன், கிறிஸ்தவ ஜீவியத்தின் அடிப்படையான ஒரு முக்கியப் பாடத்தை இன்னமும் கற்றுக் கொள்ளவில்லை என்றே நாம் கூறவேண்டும்! ஆம், ஒருவனின் புத்திக்கூர்மை மிக அற்பமானதாய் இருந்தாலும்கூட, அவன் தேவன் மீது நம்பிக்கை வைத்து சார்ந்து கொண்டால், அவன் நிச்சயமாய் தேவனுடையச் சித்தத்தை அறிந்து நடந்திட முடியும் என்பதில் யாதொரு சந்தேகமுமில்லை. ஆனால், தன் சொந்த புத்திக்கூர்மை மீது நம்பிக்கை கொண்டு, தன் சொந்த திட்டத்தின்படி வாழ்பவனோ, தேவ சித்தத்தை தன் வாழ்வில் ஒருக்காலும் அறிந்து நடந்திட இயலாது! இதைக் குறித்து பிலிப்பியர்.3:3ல் பவுல் கூறும்போது, ஓர் தேவ பக்தியுள்ள விசுவாசி “தன் சொந்த மாம்சத்தின்மீது நம்பிக்கை வைக்காதிருக்க வேண்டும்” என்றே வலியுறுத்திக் கூறினார்.
பவுல் அந்நாட்களில் அதிக புத்திக்கூர்மை கொண்டவராயிருந்தார்! ஆகிலும் தன் சொந்த பெலனில் யாதொரு நம்பிக்கையும் வைக்காதிருந்ததினிமித்தமே அவர் தேவனை சார்ந்து கொள்ள முடிந்தது. இதைக் குறித்து தன் சொந்த அனுபவமாக பவுல் கொரிந்தியர்களுக்கு எழுதியபோது “ஒருவன் இவ்வுலகத்தில் மிகச் சிறந்த புத்திக்கூர்மையுள்ளவனாய் தன்னைக் கருதினால், தன் புத்திக்கூர்மையை உதறித் தள்ளக்கடவன்! அப்போது மாத்திரமே, மெய்யான ஞானத்தை அவன் கற்றுக்கொள்ள முடியும்!! ஏனெனில் இவ்வுலகத்தின் புத்திக்கூர்மை தேவனுடைய பார்வையில் மதியீனமாகவே எண்ணப்படுகிறது” (1கொரி.3:18,19 JBP ஆங்கில வேதாகமம்) என எடுத்துரைத்தார். ஆம், இவ்வுலகத்தின் ஞானம் “தேவனுடைய சித்தத்தை” அறிந்து கொள்வதற்கு பெரும் தடையாயிருப்பதால், உலக ஞானத்தை புறக்கணித்துத் தள்ள வேண்டியது நமது நிர்ப்பந்தமான தேவையாயிருக்கிறது!
இவ்வாறு “ உலக ஞானம் புறக்கணிக்கப்படவேண்டும்” என்றசத்தியத்தை நாம் தவறாய் புரிந்து கொள்ளாதிருக்கவும் சில விளக்கங்கள் அவசியமாய் இருக்கிறது. உலக ஞானத்தைப் புறக்கணிப்பதின் அர்த்தம், நமது ‘அறிவாற்றலை’ உபயோகிக்க முடியாது எனப் பொருளாகாது! ஏனெனில், இந்த சத்தியத்தைக் கூறிய பவுலும் தன்னுடைய அறிவுத்திறனை உபயோகித்திருக்கிறார். அப்படியிருக்க, மற்றவர்கள் தங்கள் அறிவுத்திறனை உபயோகிக்கக் கூடாதென அவர் கூறிட ஒருக்காலும் எத்தனிக்கவில்லை. கல்வி கற்பதும், கற்றுத்தேறுவதும் புறக்கணிக்கப் படவேண்டிய ஒன்றல்ல! அவ்வித நிலை கற்றுத்தேர்ந்த பவுலுக்கோ அல்லது அவர் நிருபம் எழுதிய கல்வி அறிவில்லாத கொரிந்தியர்களுக்கோ ஒரு போதும் நிர்ப்பந்தப்படுத்தப்படவில்லை! அதற்கு மாறாக, நம் சுய புத்திக்கூர்மையின் மீது வைத்திடும் நம்பிக்கையின் அழிவையே பவுல் குறிப்பிட்டார். இவ்விஷயத்தில் நாம் கற்ற கல்வி கொஞ்சமா அல்லது அதிகமாவென்பது ஒரு பொருட்டல்ல.
ஆம், கற்றவனுக்கும் கல்லாதவனுக்கும் “தன் சுயபுத்தியில் நம்பிக்கை வைப்பது"ஓர் பெரும் வியாதியாகவேயிருக்கிறது!!
விசுவாசிகளை ஆடுகளுக்கு ஒப்பிட்டே வேதம் கூறுகிறது. ஒரு செம்மறி ஆடு முற்றிலும் பேதமை கொண்டதாயும், தானாகவேதன் வழியை அறியக்கூடாததுமாயும், தூரப்பார்வையை காணக்கூடாததுமாயிருக்கிறது. ஆகிலும், அந்த ஆடு ஒரு மேய்ப்பன் செல்லுமிடமெல்லாம் சென்றுவிட்டால் அதுவே அந்த ஆட்டிற்கு நிறைவான பாதுகாப்பாகும்! இந்த ஸ்தானத்தைத் தழுவிக் கொள்வதற்கே சுய நம்பிக்கைக் கொண்டவனுக்கு பெருத்த அவமானமாய் தோன்றுகிறது!! ஆவிக்குரிய விஷயங்களுக்கு அவனுடைய புத்திக்கூர்மை மதியீனமாகக் கருதப்பட வேண்டும் எனக்கூறப்படும் இந்த சத்தியத்திற்கு, முரட்டாட்டம் செய்யும்படியே அவனுடைய பெருமை அவனைத் தூண்டுகிறது. இருப்பினும் இவ்வாறு தன் சுயபெலன் மீது கொண்ட நம்பிக்கையை இழக்க வேண்டியது, தேவனுடைய நடத்துதலை நம் வாழ்வில் அறிந்த கொள்வதற்கு தவிர்க்க முடியாத நிபந்தனையாயிருக்கிறது. இருப்பினும், தாவீதோ தன் ஆண்டவருக்கு முன்பாக இந்த செம்மறியாட்டின் ஸ்தானத்தையே ஆர்வமுடன் பற்றிக் கொண்டார்! அதன் விளைவாய், அவர் தேவனுடைய திவ்விய நடத்துதலை அனுபவித்து மகிழ்ந்தார்!! 23-ம் சங்கீதத்தில் இந்த பாக்கியத்தை அவர் விவரித்தபோது “கர்த்தர் என் மேய்ப்பராய் இருக்கிறார்.... அவர் என்னை நடத்துகிறார்” (சங். 23:1-3) என்றே சாட்சியாகக் கூறி அகமகிழ்ந்தார்!!
ஆகவே, ஒரு மனிதன் தன்னைத்தானே தாழ்த்தி மேற்கண்டபடியான தாழ்மையான இடத்தை தெரிந்துகொள்ளாவிடில், அவனால் ஒருபோதும் தேவனுடைய வழிகளை அறிந்து கொள்ளவே முடியாது! இதைத் தாவீது சங்கீதம்.25:9ல் கூறும்போது “தங்களைத் தாழ்த்தி அவரிடம் திரும்புவோர்க்கு செம்மையும் மேன்மையுமான வழிகளை தேவன் அவர்களுக்குப் போதிப்பார்” (LIVING BIBLE) என உறுதிபட கூறினார். இவ்வுலக மனிதனுக்கு வேண்டுமானால் “சுய நம்பிக்கை” ஏற்றதாய் இருக்கலாம்! ஆனால் தேவனுடைய பிள்ளைகளுக்கோ அது நிச்சயமாய் ஏற்புடையதல்ல! இன்று எண்ணற்ற விசுவாசிகள் தங்கள் வாழ்வில் தேவனுடைய திட்டத்தை இழப்பதற்கு இந்தப் பகுதியே முக்கிய காரணமாயிருக்கிறது.
ஆம், இவர்கள் தங்கள் சொந்த திறமையில் நம்பிக்கை கொண்டிருக்கிறபடியால், தேவனுடைய சித்தத்தை வாஞ்சையுடன் தேடுவதேயில்லை. அதற்குப் பதிலாக தங்கள் சொந்த புத்திக் கூர்மையைச் சார்ந்து கொண்டு வழி தவறிச் சென்று விடுகிறார்கள்!!!
நம் ஜீவியத்தில் எவ்வளவோ தோல்விகளையும் குழப்பங்களையும் தேவன் அடிக்கடி அனுமதிப்பதை நாம் கண்டிருக்கிறோம். அதன் மூலமாய் நம் இருதயத்தின் கேடுபாடுகளையும், நம்பகத்திற்கு குந்தம் விளைவிக்கும் நம் பிழையான புத்திக்கூர்மையையும் நாம் காணும்படிக்கே அவ்வாறு செய்கிறார். அதன் விளைவாய் தேவனை மாத்திரமே நெருக்கமாய் பற்றிக்கொள்ள வேண்டிய அவசியத்தை நமக்கு கற்றுத்தருகிறார். ஆண்டவருடைய ஒத்தாசையின்றி சீஷர்கள் யாதொன்றும் செய்திட முடியாது என்ற முக்கிய பாடத்தை தன் சீஷர்களுக்குப் போதிப்பதற்கு ஆண்டவர் இயேசு மிகுந்த சிரத்தை எடுத்தார் (யோ.15:5). அந்தப்பாடத்தை சீஷர்கள் வெகு மந்த நிலையிலேயே கற்றுக்கொண்டார்கள்! அவர்களைப் போலவே இன்று நாமும் இருக்கிறோம்!!
தன் இயலாமையை உணர்ந்து, தேவன் மீது முழுமையாக சாய்ந்து கொள்ளும் தாழ்மையுள்ள மனிதன் “திவ்விய சித்தத்தை” மிக எளிதில் விளங்கிக் கொள்வான். ஆனால், தன் வேதாகமக் கல்லூரியின் பயிற்சியை சார்ந்து வாழும் வேதகலைப் பண்டிதர்களோ, இருளில் கைவிடப்படுவார்கள்!
முழுமையான கீழ்ப்படிதல் தேவை :
“உன் வழிகளிலெல்லாம் அவரை நினைத்துக்கொள்; அப்பொழுது அவர் உன் பாதையை செவ்வைப்படுத்துவார்” என நீதிமொழிகள்.3:6 கூறுவதைப் பாருங்கள். ஏனெனில், நம் வாழ்வின் ‘சில பகுதிகளில்' தேவனுடைய நடத்துதலை அறிந்திட வாஞ்சையாய் இருக்கும் நாம், ஜீவியத்தின் ‘மற்ற பகுதிகளில்' அதே வாஞ்சை கொண்டவர்களாய் இருப்பதில்லை! உதாரணமாக, திருமணத்திற்காக தேவனுடைய சித்தத்தை வாஞ்சையோடு தேடிய அநேகர், ஒரு வேலையைத் தேடுவதற்கு தேவனுடைய சித்தத்தை அறிய “அதே வாஞ்சைக் கொண்டு" நாடுவதில்லை! அல்லது, வேலையில் தேவசித்தத்தை தேடியவர்கள், திருமண விஷயத்தில் தேவ சித்தத்தை அறிய அக்கறையற்றுப் போய் விடுகிறார்கள்! அல்லது, வருடாந்திர ஒருமாத லீவை எங்கு? எவ்வாறு? செலவழிக்க வேண்டும் என தேவனுடைய நடத்துதலை வாஞ்சித்தவர்களில் பெரும்பாலோர், “அந்தப் பணத்தை எவ்வாறு செலவழிக்க வேண்டும்?” என தேவனிடத்தில் கேட்பதே இல்லை!!
இவ்வாறு நமக்குச் சாதகமான பகுதிகளில் மாத்திரமே தேவ நடத்துதலை அறிந்திட நாம் நாடுகிறோம்!
இது சமயங்களில், நாமே அறியாமல் சுய-நல நோக்கங்கள் நம் இருதயத்திற்குள் தங்கிவிடுகிறது. எந்தெந்த விஷயங்களில் தவறு நடந்தால் அதனிமித்தம் துன்பமும், இழப்பும் வரும் என நாம் அறிந்திருக்கிறோமோ, அந்தந்த விஷயங்களில் மாத்திரமே நாம் தேவனுடைய சித்தத்தை நாடுகிறோம். இவ்வாறு, நம் மன நோக்கம் “தேவனைப் பிரியப்படுத்த வேண்டுமே!” என இல்லாமல், சொகுசான வாழ்க்கை வாழ வேண்டுமென்பதாகவே இருக்கிறது. இந்த காரணத்தினிமித்தமே நாம் தேவனுடைய நடத்துதலை இழந்து போகிறோம்! ஏனென்றால், “தங்கள் எல்லா வழிகளிலும் அவரைத் தேடுகிறவர்களுக்கு மாத்திரமே! அதேபோல், அவருடைய எல்லா நடத்துதல் பாதைகளையும் மகிழ்வுடன் ஏற்றுக் கொள்பவர்களுக்கு மாத்திரமே!! தன் மேன்மையான வழி நடத்துதலைத் தேவன் தந்தருளுவார்!” என நீதிமொழிகள்.3: 6 நமக்குத் தெளிவாய் போதிக்கிறது.
வாழ்வின் பகுதிகளுக்கு தேவனுடைய சித்தம் அல்லது அவர் என்ன விரும்புகிறார்? என்ற அவரது விருப்பம் வேத வாக்கியங்களில் ஏற்கெனவே வெளிப்படுத்தப்பட்டிருக்கிறது. உதாரணமாக, நாம் பரிசுத்தராயிருக்கவும், நன்றியுள்ளவர்களாயிருக்கவும் தேவன் விரும்புகிறார் என வேத வாக்கியங்களில் தெளிவாய் நமக்குச் சொல்லப்பட்டிருக்கிறது.
“நீங்கள் பரிசுத்தமுள்ளவர்களாக வேண்டுமென்பதே தேவனுடைய சித்தமாயிருக்கிறது..... உங்களில் அவனவன் தன் தன் சரீர பாண்டத்தை பரிசுத்தமாயும் கவனமாயும் ஆண்டுகொள்ளும்படி அறிய வேண்டும்”
“எல்லாவற்றிலேயும் ஸ்தோத்திரம் (THANKS) செய்யுங்கள். அப்படிச் செய்வதே கிறிஸ்து இயேசுவுக்குள் உங்களைக் குறித்து தேனுடைய சித்தமாயிருக்கிறது” (1தெசலோனிக்கேயர்.4:3-5, 5:18).
மேலும், “தேவன் நம்மிடத்தில் அன்புகூருவது போல பிறரிடத்திலும் அன்புகூர்ந்திட" நம்மிடம் எதிர்ப்பார்க்கிறார்! (ரோமர்.13: 9). நாம் தேவனிடமிருந்து மன்னிப்பையும் இரட்சிப்பையும் பெற்றிருந்தால், நாம் பெற்ற இந்த நல்ல பங்கை நம் அயலகத்தாரும் பெற்றிட வேண்டும் என்ற விருப்பம் நம் உள்ளத்தை ஆட்கொள்ள வேண்டும். “நாம் அவர்களுக்கு சாட்சிகளாயிருக்க வேண்டும்!" (அப்.1:8) என்ற தேவனுடைய தீராத விருப்பம், புதிய ஏற்பாட்டில் நம் கண்களுக்கு முன்பாகத் தெளிவாகவே வெளிப்படுத்தப்பட்டிருக்கிறது!
நம் அருகில் உள்ள அயலானை நேசிப்பதின் பிரதான நோக்கம் அவர்களுடைய ஆவிக்குரிய தேவைகளை அறிந்து செயல்படுவது தான்! அதற்காக, அவர்களின் மற்ற தேவைகளை நாம் கண்டு கொள்ளத் தேவையில்லையென்பது பொருளல்ல. இதைக் குறிப்பிட்டு ஆண்டவர் கூறும்போது “பசியுள்ளவனுக்கு உன் ஆகாரத்தைப் பகிர்ந்து கொடுக்கிறதும்.... வஸ்திரமில்லாதவனைக் கண்டால் அவனுக்கு வஸ்திரம் கொடுக்கிறதும்.... ஆகிய இவைகளை நீ செய்தால், கர்த்தர் தம்முடைய மகிமையான ஒளியை உதிக்கச்செய்வார்.... நீ கூப்பிடுவாய் கர்த்தர் மறு உத்தரவு கொடுப்பார்! இதோ நான் இருக்கிறேன்! என்று சொல்வார்!! நீயோ பெலவீனர்களை நசுக்காமலும், குற்றம் சாட்டும் நிபச்சொல் பேசாமலுமிருந்து பசியுள்ளவனுக்கு உன் ஆகாரத்தைக் கொடு! சிறுமைப்பட்டவர்களுக்கு உதவி செய்! அவ்வாறு நீ செய்தால், உன் வெளிச்சம் இருளிலிருந்து உதித்து, உன் அந்தகாரம் மத்தியானத்தைப் போலாகும்!! முடிவில், கர்த்தர் நித்தமும் உன்னை கரம் பிடித்து நடத்துவார்!!” (ஏசாயா.58:7-11 Living Bible) என தன்னுடைய நடத்துதலை நிபந்தனையோடு தேவன் கூறியிருப்பதைப் பாருங்கள்.
இவ்வாறு சுயநலமற்றவர்களாயும், பிறருடைய தேவையைக் குறித்து கரிசனையுள்ளவர்களாயும் இருப்பவர்களுக்கே தேவன் தன்னுடைய மனதை வெளிப்படுத்துவதற்கு விருப்பம் உள்ளவராயிருக்கிறார்!
இவ்வாறு ஏற்கெனவே தன்னுடைய சித்தத்தை “வேதவாக்கியங்கள் மூலம்” வெளிப்படுத்தின பகுதிகளுக்கு நாம் கீழ்படிய மறுத்து விட்டால், 'மற்ற பகுதிகளில்' தேவன் நம்மை நடத்திச் செல்வார் என ஒருக்காலும் எதிர்பார்த்திட முடியாது! தேவனுடைய நடத்துதலுக்கு இது ஒரு நிரந்திர கோட்பாடாகும்!! அதாவது, அவர் ஏற்கெனவே நமக்குத் தந்த வெளிச்சத்தை நாம் அசட்டை செய்தால், ஒருபோதும் நமக்கு அவர் இன்னும் அதிகமான வெளிச்சத்தை தரவேமாட்டார்! எனவே அவர் காட்டின முதல் அடிக்கு நாம் அடியெடுத்து வைக்காவிட்டால், நிச்சயமாய் நம்மை அவர் இரண்டாவது அடிக்கு நடத்திச் செல்லவே மாட்டார்! நீதிமொழிகள். 4:12-ம் வசனத்தின் விரிவாக்கம் “நீ ஒவ்வொரு அடியாய் நடந்து முன் சென்றால் அடுத்தடுத்து செல்ல வேண்டிய வழியை உனக்கு நான் காட்டுவேன்” எனக் கூறுவதைப் பாருங்கள். ஆம், நாம் எடுத்துவைக்கும் ஒவ்வொரு அடியிலும் தேவன் மிகுந்த ஆர்வம் கொண்டவராயிருக்கிறார். எனவேதான் “நல்ல மனுஷனுடைய நடைகள் கர்த்தரால் உறுதிப்படும், அவனுடைய வழியின் மேல் அவர் பிரியமாயிருக்கிறார்” என சங்கீதம்.37:23 கூறுகிறது.
கீழ்ப்படிதலுள்ளவர்களுக்கு வழங்கப்படும் “தேவ நடத்துதலின்" மற்றொரு வாக்குதத்தத்தையும் கவனியுங்கள்: “நான் உனக்குப் போதித்து, நீ நடக்கவேண்டிய வழியை உனக்கு காட்டுவேன். உனக்கு ஆலோசனை கூறி, அதில் உன் கீழ்ப்படிதலைக் கவனிப்பேன்! ஆனால் நீயோ புத்தியில்லாத குதிரையைப்போலவோ அல்லது கோவேறுக்கழுதையைப் போலவோ இருக்காமலிருக்க கவனம் கொள்” (சங்.32:8,9 Living Bible). குதிரை ஒரு பொறுமையற்ற விலங்கு! எப்போதுமே முந்திக் கொண்டு ஓட எத்தனிக்கும்! கோவேறு கழுதை ஓர் பிடிவாத விலங்கு! எப்போதுமே முன்னோக்கிச் செல்ல மறுத்து நிற்கும்! நாமோ, கேடான இந்த இரு மன நிலைகளையும் உதறித் தள்ளுவோமாக!!
நாம் கீழ்ப்படியாமலிருக்கும்போது நம் மனசாட்சியின் மூலமாய் தேவன் பேசுவார்! ஆகவேதான், நம் மனசாட்சியின் குரலைக் கேட்பதற்கு நாம் மிகுந்த கவனமுள்ளவர்களாயிருக்க வேண்டும். இதை இயேசு குறிப்பிடும்போது “கண்ணானது சரீரத்தின் விளக்காயிருக்கிறது. உன் கண் தெளிவாயிருந்தால் உன் சரீரம் முழுவதும் வெளிச்சமாயிருக்கும்” (லூக்கா.11:34) எனக் கூறினார். இங்கே இயேசு 'கண்' என எதைக் குறிப்பிடுகிறார்? மத்தேயு.5:8ல் இயேசு கூறிய இருதயத்தில் சுத்தமுள்ளவர்கள் ‘காண்பார்கள்' எனக்கூறிய ‘ஆவிக்குரிய பார்வையையே' இயேசு குறிப்பிட்டார். ஆகவே மனசாட்சியானது கண்ணாகக் குறிப்பிடப்பட்டு, நாம் தொடர்ச்சியாகக் கீழ்ப்படியும் பட்சத்தில் இருதயத்தின்
பரிசுத்தத்திற்கு நடத்தி, அங்கு நாம் தேவனைக் காணும்படிச் செய்கிறது!
மனசாட்சிதான் தேவனுடைய குரலென நாம் எண்ணிவிடக் கூடாது. ஏனெனில் மனசாட்சியானது ஒரு மனிதன் வாழும் கோட்பாட்டின்படிதான், அல்லது முறைமையின்படிதான் பயிற்றுவிக்கப்படுகிறது. ஆகவே நம் மனசாட்சி பரிசுத்த வேதாகம போதனைக்குதொடர்ச்சியாக கீழ்ப்படியும்படி நடத்தப்பட்டால், “தேவனுடைய தரம் நம் மனசாட்சியில் நாளுக்கு நாள் அதிக அதிகமாய் பிரதிபலித்து விடும்”.
ஆகவே நம்முடைய மனசாட்சியை கண்ணைப் போல் தெளிவாக வைத்திருந்தால் நம் முழு ஜீவியத்திலும் தேவனுடைய வெளிச்சம் பிரவாகித்து, அந்த வெளிச்சத்தில் அவருடைய சித்தத்தை நாம் தெளிவாய் அறிந்து வாழ முடியும் என்றே லூக்கா.11:34 நமக்கு வாக்குரைத்திருக்கிறது!
ஆகவே, நம் அன்றாட ஜீவியத்தில் மனசாட்சியின் குரலுக்கு நாம் செவிகொடுக்கத் தவறினால், தேவநடத்துதலை நாம் தேடும் சமயத்தில் ஆவியானவருடைய சத்தத்தையும் நாம் கேட்கத் தவறிவிடுவோம்! எனவே, நாம் தேவசித்தத்தில் நடத்தப்படுவதற்கு, அவர் நம்மிடம் பேசும் பொழுதெல்லாம் உடனடியாக தேவனுக்கு கீழ்ப்படிவதே இரகசியமாயிருக்கிறது!
சில வருடங்களுக்கு முன்பாக, பிறவியிலிருந்தே குருடாயிருந்த பதினைந்து வயது இளம் வாலிபன், ஒரு விமானத்தை ஓட்டிச் சென்று, சேரவேண்டிய இடத்தில் அந்த விமானத்தைப் பத்திரமாய் தரை இறக்கினான் என்ற செய்தியை நம்மில் அநேகர் கேள்விப்பட்டிருக்கக் கூடும். அதை எவ்வாறு இந்த இளம் வாலிபன் சாத்தியப்படுத்தினான்? “விமான ஓட்டி ஆலோசகர்” தந்த ஒவ்வொரு கட்டளைகளையும் அவன் உடனடியாக கீழ்ப்படிந்து செயல்படுத்தினதாலேயே, இந்த வியத்தகு செயலை நிறைவேற்ற அவனால் முடிந்தது! நாமும் கூட வாழ்க்கையின் பல்வேறு பிரச்சனைகளைச் சந்திக்கும் போது, குருடர்களைப் போலவே ஒரு விமானத்தை கண்ணுக்குப் புலப்படாத ஒரு தளத்தில் இறக்குவதற்கு முயற்சி செய்கிறவர்களாயிருக்கிறோம்! இருப்பினும், தேவனுடைய கட்டளைகளுக்கு உடனடியாகக் கீழ்படியும் நல்ல பழக்கத்தை நாம் படிப்படியாய் வளர்த்துக் கொண்டவர்களாயிருந்தால், நிச்சயமாய் நம்முடைய வாழ்க்கை விமானம் சேர வேண்டிய இடத்தில் பத்திரமாய் தரை இறக்கிவிட முடியும்!!
நிபந்தனை ஏதுமின்றி ஒப்புக்கொடுத்தல் :
“உங்கள் சரீரங்களை பரிசுத்தமும் தேவனுக்குப் பிரியமுமான ஜீவபலியாக ஒப்புக்கொடுக்க வேண்டு மென்று தேவனுடைய இரக்கங்களை முன்னிட்டு உங்களை வேண்டிக்கொள்கிறேன். இதுவே நீங்கள் செய்யத்தக்க புத்தியுள்ள ஆராதனை. நீங்கள் இந்த பிரபஞ்சத்திற்கு ஒத்த வேஷந்தரியாமல் தேவனுடைய நன்மையும் பிரியமும் பரிபூரணமான சித்தம் இன்னதென்று பகுத்தறியத்தக்கதாக உங்கள் மனம் புதிதாகிறதினாலே மறுரூபமாகுங்கள்” (ரோமர்.12:1,2) என கூறுவதைக் காண்கிறோம்.
நாம் ஆண்டவருடைய அடிமைகளாய் மாற வேண்டுமென்றே புதிய ஏற்பாடு நமக்கு புத்தி சொல்கிறது. தன்னை இயேசு கிறிஸ்துவின் மனப்பூர்வமான ஓர் அடிமையென்றே பவுல் கூறினார். பழைய ஏற்பாட்டில் இரண்டு வகையான ஊழியர்கள் உண்டு 1) அடிமை 2)கூலிக்குரிய வேலையாள். ஒரு வேலைக்காரனுக்கு சம்பளமுண்டு! ஆனால் அடிமைக்கோ ஒருபோதும் சம்பளம் தரப்படுவதில்லை! ஓர் அடிமையை விலைக்கிரயம் கொடுத்தே அவனுடைய எஜமான் வாங்கியிருப்பார். ஆகவே அவனும், அவனுக்குரிய அனைத்தும் அந்த எஜமானுக்கே சொந்தமாகி விடும். இந்த ஸ்தானத்தையே ஒவ்வொரு விசுவாசியும் தழுவிக்கொள்ள வேண்டும்! நம் நேரம், பணம், திறமைகள், குடும்பங்கள், ஆஸ்திகள், நம் மனது, நம் சரீரம்.... ஆக, அனைத்தும் எஜமானாகிய நம் ஆண்டவருக்கே சொந்தம்! ஏனெனில், ஆண்டவர் சிலுவையில் நம்மை விலைகொடுத்து வாங்கினபடியால், நமக்குரிய அனைத்தும் அவருக்கே உரிமையுள்ளதாய் மாறிவிட்டது!! (1கொரி.6:19,20).
ஆகவேதான், பழைய ஏற்பாட்டிலுள்ள “தகனபலியைப் போலவே" இப்போது நாமும் நம் சரீரங்களை ஜீவபலியாக ஒப்புக் கொடுத்திட புத்தி சொல்லப்பட்டிருக்கிறோம். தகனபலியானது “பாவ பலியைப்” போன்றது அல்லவே அல்ல! ஆம், தகனபலியானது “முழுவதும்" தேவனுக்கு தரப்படவேண்டும்! இவ்வாறு பழைய ஏற்பாட்டில் வரும் தகனபலி, நம் ஆண்டவருக்கு நாம் செய்திட வேண்டிய முழு அர்ப்பணத்தையே சுட்டிக்காட்டுகிறது. ஏனெனில் ஒரு மனிதன் தகனபலி செலுத்தும்போது, பலிபீடத்திலிருந்து யாதொன்றையும் அவன் திரும்பப் பெறவே முடியாது! அது போலவே, நம்மைப் படைத்த அர்ப்பணத்தைக் கொண்டு தேவன் என்ன செய்ய விரும்புகிறாரோ அதை அவர் செய்வார்! கல்வாரி சிலுவையும் இந்த அர்த்தத்தையே நமக்குத் தெரிவிக்கிறது. அந்தச் சிலுவையில் நம் ஆண்டவராகிய இயேசு தன் முழுமையையும் ஒப்புக்கொடுத்துவிட்டு “பிதாவே என் சித்தமல்ல, உம் சித்தமே ஆகக்கடவது” என கூறி நின்றார். இதுவே நம் சரீரங்களை தேவனுக்கு ஜீவபலியாக ஒப்புக்கொடுப்பதின் அர்த்தம்! ஆம், நம் சுய சித்தத்திற்கும் நம் தெரிந்து கொள்ளுதலுக்கும் நாம் மரித்து, எங்கு நம் சரீரத்தை தேவன் பயன்படுத்தப்பட விரும்புகிறாரோ அதற்கே நாம் இணங்கி விடுகிறோம். இவ்வாறாகவே நம்வாழ்வில் தேவனுடைய சித்தத்தை அறிந்திட முடியும்!
இவ்வித நிபந்தனையற்ற ஒப்புக்கொடுத்தல் அநேகரிடம் காணப்படாததாலேயே, அவர்களால் தேவனுடைய சித்தத்தை ஒருக்காலும் அறிந்து கொள்ள முடிவதில்லை! இன்று தங்களை தேவனுக்கு ஒப்புக்கொடுக்கிற அநேகர் “தங்களுக்கென ஏதாகிலும் பதுக்கி வைத்தே' ஒப்புக்கொடுக்கிறார்கள். இதனிமித்தமே “தேவன் அவர்களுக்குத் தர விரும்பியவைகளை” அவர்களால் மனப்பூர்வமாய் ஏற்றுக்கொள்ளவும் முடிவதில்லை!! ஒரு சமயம் நான் சந்தித்த ஒரு சகோதரன் என்னைப்பார்த்து “சகோதரரே, நான் விசுவாசியாயிருந்து கொண்டு எந்த வேலையும் செய்ய ஆயத்தமாயிருக்கிறேன்...... ஆனால், முழு நேர கிறிஸ்தவ ஊழியம் மாத்திரம் எனக்கு வேண்டவே வேண்டாம்!” எனக்கூறினார். அதற்கு நான் அவரிடம் “உங்களிடம் காணும் இந்த முழுமையான அர்ப்பணமற்ற தன்மையே, உங்கள் வாழ்வில் தேவன் கொண்டிருக்கும் பூரணமானதிட்டத்தை தெளிவாய் காணமுடியாதபடி தடை செய்கிறது” எனக் கூறினேன். இந்த என் அறிவுரையைக் கேட்ட அவர், உடனே தன்னை முழுமையாய் ஆண்டவருக்கு அர்ப்பணித்து ஒப்புக்கொடுத்து விட்டார். அதனிமித்தம், உடனடியாகவே தன் வாழ்வில் தேவ சித்தத்தைக் குறித்த நிச்சயத்தைப் பெற்றுவிட்டார். தேவன் அந்த சகோதரனை முழுநேர கிறிஸ்தவ ஊழியத்திற்கு அழைக்கவில்லை....... ஆனால், அவ்வாறு அழைத்தால், அதற்கு அவருக்கு மனம் இருக்கிறதா? என்பதையே தேவன் காண விரும்பினார்!
“நானும் தேவ சித்தத்தை அறிய விரும்புகிறேன்” என தேவனிடத்தில் இன்று வரும் அநேகர், தாங்கள் ஏற்கனவே தெரிந்து கொண்ட வாழ்வின் பாதைக்கு தேவனுடைய அங்கீகாரத்தைப் பெற விரும்பியே வந்திருக்கிறார்கள். ஆகவேதான், அவர்கள் தேவனிடமிருந்து எந்த பதிலையும் பெறுவதில்லை!
நாம் மாத்திரம், யாதொரு பதுக்கி வைக்கும் மறைவான விருப்பமில்லாமல், முழுமையாய் நம்மை அர்ப்பணித்து விட்டால் “தேவன் நம்மை நடத்துவதற்குரிய" தடை உடனடியாக நீங்கிவிடும்!!
இந்நிலைக்கு வந்தவர்கள் ஆண்டவரைப் பார்த்து “ஆண்டவரே நீர் யாதொன்றைக் குறித்து இதுதான் உம்முடைய சித்தம் என, எனக்கு நீர் உறுதியான நிச்சயத்தைத் தந்து விட்டால், அந்த யாதொன்றையும் நான் மனப்பூர்வமாய் ஏற்றுக்கொள்வேன். என்னுடைய பங்கை நீரே தெரிந்து கொள்வீராக! இந்த விஷயத்தில் எனக்கென்று சொந்தமாய் எந்த தெரிந்து கொள்ளுதலுமில்லை!!” என்றே எப்போதும் ஜெபிப்பார்கள். ஆபிரகாம் தன் ஜீவியத்தில் தேவனுக்காக எந்த இடத்திற்கும் செல்ல ஆயத்தமாயிருந்தார்! என்ன வேலையும் செய்வதற்கு ஆயத்தமாயிருந்தார்! 'எந்த சமயத்திலும்' ஆயத்தமாயிருந்தார்! ஆகவேதான் இந்த ஆபிரகாம் “தேவனுடைய சிநேகிதன்” என எண்ணப்பட்டார்!
இங்கிலாந்து தேசத்தைச் சேர்ந்த ஜார்ஜ் முல்லர் ஓர் விசுவாச வீரன்! ஆகவேதான் தேவ சித்தத்தை தன் வாழ்வில் மிகத் துல்லியமாய் காணக் கூடியவருமாயிருந்தார். இதைக் குறித்து அவர் கூறும்போது “ஒரு விஷயத்தில் எனக்கென்று யாதொரு விருப்பமும் என் இருதயத்தில் இல்லை என்பதையே நான் முதலாவதாக உறுதி செய்கிறேன். இந்த இடத்தைக் கண்டடைவதற்குத்தான் இன்றுள்ள பத்தில் ஒன்பதுபங்கு கிறிஸ்தவர்களால் முடிவதில்லை! ஆனால், தேவனுடைய சித்தம் எதுவாயிருந்தாலும் அதை நிறைவேற்ற ஆயத்தமாயிருப்பவர்களுக்கோபத்தில் ஒன்பது பங்கு பிரச்சனைகள் எளிதில் ஜெயிக்கப்பட்டுவிடும். இந்த ஆசீர்வதிக்கப்பட்ட ஸ்தானத்திற்குள் வந்தவர்களுக்கு, தேவனுடைய சித்தம் இன்னதென்பதை அறிந்து கொள்ளும் தூரம் மிக சமீபமாய் அவர்களுக்கு வந்துவிடும்!” எனக்கூறினார்.
இன்று அநேகர் தேவனுடைய சித்தம் என்ன என்பதை முதலாவதாக அறிந்து கொண்டு, பின்பு அதற்கு கீழ்படியலாமா? வேண்டாமா? எனத் தீர்மானித்திடவே விருப்பம் கொண்டிருக்கிறார்கள். ஆனால் தேவனோ இது போன்ற ஜனங்களுக்கு தன் சித்தத்தை ஒருக்காலும் வெளிப்படுத்துவதே இல்லை! இதைக்குறித்து இயேசு கூறும்போது, “அவருடைய சித்தத்தின்படி செய்ய மனதுள்ளவனெவனோ...... அவனே அறிந்துகொள்வான்” (யோவான்.7:17) என ஆணியறைந்தாற்போல் கூறிவிட்டார். தேவன் கட்டளையிடுவது எதுவாயிருந்தாலும் அதைச் செய்வதற்கு மனதுள்ளவர்கள் மாத்திரமே “தேவனுடைய பரிபூரண சித்தத்தை அறிவதற்கு” தகுதி பெற்றவர்கள்! அது போன்ற தேவ சித்தம் சிறிய விஷயமோ அல்லது பெரியவிஷயமோ என்பது ஒரு பொருட்டே அல்ல!
மனம் புதிதாக மாற வேண்டும் :
“நீங்கள் இப்பிரபஞ்சத்திற்கு ஒத்தவேஷந்தரியாமல், தேவனுடைய நன்மையும், பிரியமும், பரிபூரணமுமான சித்தம் இன்னதென்று (நீங்களே) பகுத்தறியத்தக்கதாக உங்கள் மனம் (முழுவதுமாக) புதிதாகிறதினாலே மறுரூபமாகுங்கள்”(ரோ.12:2) எனக் கூறுவதைப் பாருங்கள். லௌகீக மயக்கமே, நம் ஆவிக்குரிய செவிகளால் தேவனுடைய சத்தத்தைக் கேட்கக் கூடாதபடி அடைத்துப் போடுகிறது. இவ்வுலகத்தில் வாழும் ஒவ்வொருவரும் “இந்த லௌகீக ஆவியினால்” பாதிக்கப்பட்டிருக்கிறார்கள். இந்த ஆவியின் ஆளுகைக்கு ஒருவர்கூட தப்பியதில்லை எனலாம்! சிறுபிராயம் துவங்கி இந்த உலகத்தின் ஆவியை நாளொருமேனியும் பொழுதொரு வண்ணமுமாய் நாம் கேட்கிற, காண்கிற, வாசிக்கிறவைகளின் மூலமாய் பருகி வருகிறோம்!! குறிப்பாக, நம் மனதையும் அதன் யோசனைகளையும் இந்த ஆவி பாதித்து விடுகிறது. அதனிமித்தமாய் நாம் எடுக்கும் எந்தத் தீர்மானமும் லௌகீகத்தின் கறைபடிந்ததாகவேயிருக்கிறது.
நாம் “மறுபடியும் பிறந்தவுடன்” நமக்குள் வசித்திடும் தேவ ஆவியானவர், இந்த லௌகீக ஆவியை எதிர்த்து நிற்கிறபடியால், நம் மனதின் யோசனைகளை முற்றிலுமாய் புதுப்பித்திடவே விரும்புகிறார். முடிவாக, நாம் அவருடைய குமாரனின் சாயலுக்கு ஒப்பாக மாற வேண்டுமென்பதே தேவன் நம்மைக் குறித்து கொண்ட நோக்கமாயிருக்கிறது. இதுவே நம் யாவருக்காகவும் தேவன் வைத்திருக்கும் அவருடைய பிரதான சித்தமாயிருக்கிறது! இதைத் தவிர, நாம் யாரைத் திருமணம் செய்ய வேண்டும்? எங்கு வசிக்க வேண்டும்? என்ன வேலை செய்ய வேண்டும்? ஆகிய அனைத்தும் அவருடைய சித்தத்தின் இரண்டாவது பங்கேயாகும். தேவன் நம்மோடு இடைபடும் அனைத்து கிரியைகளும் “நாம் இயேசுவைப் போல் மாறவேண்டும்” என்ற இலக்கை முன்வைத்தேயிருக்கிறது (ரோமர். 8:28, 29 வசனங்களை வாசித்துப் பாருங்கள்). இருப்பினும், பரிசுத்த ஆவியானவர் நம் மனதை நாள் தோறும் புதுப்பித்திட அனுமதித்தால் மாத்திரமே நாம் 'இயேசுவைப் போல மாறவேண்டும்' என்ற அவரது நோக்கம் நம்மில் நிறைவேறிட முடியும். எந்த அளவிற்கு அதிகமாய் நம்முடைய மனது புதுப்பிக்கப்படுகிறதோ அந்த அளவின்படியே தேவ சித்தத்தை நம் வாழ்வின் குறுக்குப் பாதைகளில் நாம் கண்டறிந்திட முடியும்!
லௌகீகம் என்பது அடிப்படை பூர்வமாய் வெளியரங்கமானவைகளில் அல்ல! அதாவது சினிமா பார்ப்பது, குடிப்பது, புகைப்பது, விலையுயர்ந்த நாகரீக ஆடைகளை உடுத்துவது, நகைகள் அணிவது அல்லது சொகுசான வாழ்க்கை வாழ்வது ஆகியவைகளை வைத்து மாத்திரமே லௌகீகத்தை கணக்கிட முடியாது. இதுபோன்ற நபர்கள் லௌகீகத்திற்குரியவர்கள் என்பதை சுட்டிக்காட்ட முடியும். ஆனால், இவைகள்யாவும் உலக சிந்தையின் 'வெளிப்பிரகாரமான' தோற்றங்களேயாகும்!
“உலகத்தோடு ஒத்து வாழ்வது” பிரதானமாய் ஒருவரின் மனதிலேயே குடி கொண்டிருக்கிறது. அந்த லௌகீக மனதானது பல்வேறு வழிகளில் வெளிப்பட்டாலும், குறிப்பாக அவர் எடுக்கும் தீர்மானங்களிலேயே அந்த நபரின் லௌகீகம் பகிரங்கமாய் வெளிப்படும்!
உதாரணமாய், ஒரு வேலையை அல்லது ஒரு தொழிலை துவங்க எண்ணுகையில் ஓர் லௌகீகமான மனிதனுக்கு, தன் சம்பளம், வேலை உயர்வு, வசதி, வயதான காலத்திற்குரிய நன்மைகள் போன்ற பகுதிகளே அவன் மனதை நிறைத்து ஆட்கொண்டிருக்கும். அதுபோலவே, தன் திருமணத்தை எதிர்நோக்கும் வேளையில், குடும்ப அந்தஸ்து, ஜாதி, வரதட்சணை போன்ற பண பரிமாற்றங்கள், பதவி, சரீர அழகு மற்றும் ஆஸ்தி போன்ற எண்ணங்களால் அவன் ஆளப்பட்டிருப்பான்!
ஆனால், ஒரு முதல்தரமான விசுவாசியின் தீர்மானங்களோ மேற் கண்ட லௌகீக மனுஷனுக்கு நேர்மாறாக ஆவிக்குரிய விஷயங்களே அவன் மனதைப் பிரதானமாய் ஆளுகைச் செய்யும்! இருப்பினும் உலகத்திற்கடுத்த சில காரியங்களை நாம் அலட்சியப்படுத்துவதும் கூடாது. தேவனுடைய நாமத்தின் மகிமையும், அவருடைய ராஜ்யத்தின் விரிவுமே நம்முடைய முதல் கரிசனையாய் இருக்க வேண்டும். இதனிமித்தமே ஆண்டவரும் “உமது நாமம் மகிமைப்படுவதாக. உமது இராஜ்யம் வருவதாக” என்றே முதலாவது ஜெபித்து, அதன்பிறகு தான் “உம் சித்தம் செய்யப்படுவதாக” என்று ஜெபிக்கும்படி நமக்கு கற்றுக் கொடுத்தார்!
நாம் தேவனுடைய சித்தத்தை அறிய வேண்டுமென தீராத வாஞ்சை கொண்டவர்களாக இருந்தால், லௌகீக நோக்கங்களை சரியாகப் பகுத்தறிந்து அவைகளை விட்டு விலக வேண்டியது கிறிஸ்தவ வாழ்வில் ஓர் மிகப்பெரிய பங்காய் இருக்கிறது.
நம்முடைய நோக்கங்கள் சுய நலமாய் இருந்து கொண்டு “தேவன் என்னை நடத்தினார்” எனக்கூறுவது தேவ தூஷணம் என்றே நாம் கூற வேண்டும்!
இதுபோன்ற சமயங்களில் நாம் நேர்மையுள்ளவர்களாய் நடந்து “இது நானாக எடுத்த சொந்த தீர்மானம்” எனக் கூறுவதே நல்லது. அதுவல்லாமல் தேவனுடைய நாமத்தை வீணில் வழங்கி, நம் லௌகீக விருப்பங்களுக்கு ஆவிக்குரிய போர்வை போர்த்துதல் கொடிய தவறாகும்! நம்மைத் திருப்திபடுத்துவதற்காகவோ அல்லது பிறரைதிருப்திபடுத்துவதற்காகவோ “நாங்கள் தேவ சித்தம் செய்கிறோம்” எனக் கூறுவதால் நமக்கு யாதொரு லாபமுமில்லை. இவ்வித நேர்மையற்ற வாய்மொழிகளைக் கேட்டு, தேவன் ஒருக்காலும் ஏமாறுவதே இல்லை! வேதம் எச்சரிக்கிறபடி “நம்முடைய வழிகள் சரியானதென ஆணித்தரமாய் நிரூபித்துக் கூறலாம், ஆனால் கர்த்தர் அதை அங்கீகரித்தாரோ?....... நம் ஒவ்வொரு செயல்களையும் நியாயப்படுத்திவிடலாம், ஆனால், நம் இருதயங்களையும் அதன் நோக்கங்களையும் நிறுத்துப்பார்க்கிறவர் கர்த்தர் அன்றோ?” (நீதி.16:2; 21:2 - Living Bible) என்றே வாசிக்கிறோம்.
நம் மனம் புதிதாகுவதால் ஏற்படும் விளைவானது, ஆண்டவர் சிந்திக்கிறபடியே நாமும் சிந்திக்கத் துவங்குவோம்! அதுபோலவே, சூழ்நிலைகளையும் ஜனங்களையும் தேவன் காண்கிறபடியே நாமும் காணத்துவங்குவோம். “கிறிஸ்துவின் சிந்தை” தனக்கு உண்டாயிருக்கிறது எனக் கூறுமளவிற்கு பவுலின் மனது புதிதாக்கப்பட்டதாயிருந்தது. அதாவது, மனுஷர் காணும் விதமாய் ஜனங்களை இப்போது அவர் காண்பதில்லை!! (1கொரி.2:16; 2கொரி. 5:16). கொலோசெய கிறிஸ்தவர்களும் தன்னைப்போலவே இந்த மறுரூபத்திற்கு வரவேண்டு மென்பதே பவுலின் ஜெபமாய் இருந்தது: “தேவன் உங்களுக்கு ஆவிக்குரிய தீர்க்கமான பார்வையும், ஞானத்தையும் தந்தருளி, அதன் மூலமாய் நீங்கள் ஒவ்வொன்றையும் தேவன் காணும்விதமாய் காண வேண்டும் என்றே உங்களுக்காக நாங்கள் ஜெபம் செய்கிறோம்" (கொலோசெயர்.1:9 JBP) என ஜெபித்தார்.
இவ்விதமான நமது மனதின் மறுரூபமே, எது தேவனுக்கு பிரியமானது? எது அவருக்குப் பிரியமில்லாதது? என்பதை நாம் அறிந்திட வகை செய்கிறது!
இதன் மூலமாய் நாம் சந்திக்கும் வெவ்வேறு சூழ்நிலைகளில் தேவசித்தம் என்ன என்பதை மிக எளிதில் நாம் அறிந்து கொள்ளமுடியும்! புதிய உடன்படிக்கையின் இந்நாட்களில் நமக்குத் தேவன் தந்திருக்கும் வாக்குதத்தம் என்னவென்றால்: “இதுவே நான் செய்யும் புதிய உடன்படிக்கை..... என் பிரமாணங்களை அவர்கள் மனதில் நான் எழுதுகிறபடியால், நாம் எதுவும் கூறாமலே நான் எதைச் செய்ய விரும்புகிறேன் என்பதை அவர்களே அறிந்து கொள்வார்கள்.... என் பிரமாணங்களை அவர்கள் மனதில் எழுதுகிறபடியால், என் சித்தம் இன்னதென்பதை எப்போதும் அறிந்திருப்பார்கள்” (எபி8:10; 10:16 - Living Bible) என காண்பது எத்தனை பரவசமாய் இருக்கிறது.
இந்த நேர்த்தியான புதிதாக்கப்படும் மறுரூபம் தேவனுடைய சித்தத்தை அறிந்து கொள்ளும் அறிவை மாத்திரமல்ல, அவர் செயல்படும் வழிமுறைகள் மற்றும் அவரின் நோக்கங்களையும் நாம் அறிந்து கொள்ள வகை செய்கிறது. நாம் என்ன செய்ய தேவன் விரும்புகிறார்? என்பதை மாத்திரமல்ல, அதை நாம் எவ்வாறு செய்ய விரும்புகிறார்? எதற்காக செய்ய விரும்புகிறார்? என்பதையும் நாம் அறிந்து கொள்வோம்! நாம் தேவனுடைய நோக்கத்தை 'விலையேறப்பெற்றதாய்' எண்ணி மெச்சிக்கொள்ள முடியவில்லையென்றால், தேவசித்தம் செய்வதென்பது ஓர் பாரமாகவே நமக்குத் தோன்றும். ஆனால், தேவசித்தத்தின் ‘ஒப்பற்ற வியப்பு' நம்மை ஆட்கொண்டுவிட்டால், “தேவசித்தம் செய்வது இயேசுவுக்கு எப்படிப் பிரியமாயிருந்ததோ” அவ்வாறே நமக்கும் பிரியமுள்ளதாய் மாறிவிடும்!!
தேவனுடைய இனிய சுபாவத்தைக் குறித்து நமது அறியாமையினாலேயே, அவருடைய சித்தத்தைக் குறித்த தேவையில்லாமல் அஞ்சுகிறோம்! மாறாக, நாம் அவரை அதிகமாய் அறிய அறிய, அவருடைய சித்தத்தின் கட்டளையை மகிழ்ச்சியாய் நிறைவேற்றி விடுவோம்!!
நம்முடைய மனம் எவ்வாறு புதுப்பிக்கப்பட முடியும்? தன் கணவனின் நெருங்கிய ஐக்கியத்தில் வாழும் ஒரு மனைவி, வருடங்கள் செல்லச் செல்ல தன் கணவருடைய மனதையும் அவருடைய ஒவ்வொரு வழிகளையும் இன்னும் அதிகமாய் அறிந்து கொள்வாள். இந்தத் தாற்பரியமே ஒரு விசுவாசிக்கும் அவனுடைய தேவனுக்கும் பொருந்தும்! மறுபிறப்பு என்பது ஆண்டவராகிய இயேசுவோடு திருமணம் செய்வதற்கு ஒப்பாகவே இருக்கிறது! ஆகவே அந்நாள் தொடங்கி நம் ஆண்டவரோடு நெருங்கிய ஐக்கியம் கொண்டவர்களாய், அவரோடு நாள்தோறும் சம்பாஷிக்கிறவர்களாய் நாம் வளர்ந்து முன்னேறிட வேண்டும்!
மேலும், தேவன் நம்மோடு அவருடைய வார்த்தையின் மூலமாயும், நம் ஜீவியத்தில் அவர் அனுமதிக்கும் உபத்திரவத்தின் சிட்சையின் மூலமாயும், ஒவ்வொருநாளும் நம் இருதயத்தில் பேசுவதற்கு மனம் திறந்தவர்களாய் இருக்கவேண்டும். இவ்வாறு வாழ்ந்துவிட்டால், நம் ஆண்டவரின் சாயலுக்கு ஒப்பாய் நாம் வளர்ச்சியடைவதை நாமே நம் கண்களால் கண்டு கொள்ளமுடியும் (2 கொரிந்தியர்.3:18), ஒவ்வொரு நாளும் தேவனுடைய வார்த்தையை தியானிப்பதையும், அவரோடு ஜெபத்தில் நாம் ஐக்கியமாய் இருப்பதையும் அசட்டை செய்து விட்டால், தேவனுடைய மனதை அறிந்து கொள்வதென்பது அதிக கடினமானதொன்றாய் நமக்கு மாறிவிடும். தேவனுடைய வார்த்தையின் மீது கொண்ட தியானம், நம்முடைய குறுகிய கோணலான சிந்திக்கும் திறனை ஆவிக்குரிய மனது கொண்டதாய் மாற்றி, தேவனுடைய சப்தத்தை கேட்குமளவிற்கு உணர்வு கொள்ளச் செய்துவிடும்!
ஆண்டவருடைய சத்தத்தை தொடர்ச்சியாய் கேட்டு பழகினால் மாத்திரமே, அவருடைய சத்தத்தை நாம் நன்கு அறிந்து கொள்ள முடியும்! புதிதாக மனந்திரும்பிய ஒருவர், முதிர்ச்சி பெற்ற ஒரு தேவ ஊழியரிடம் “ஆண்டவர் இயேசு கூறுகையில் 'என் ஆடுகள் என் சத்தத்திற்கு செவிகொடுக்கும்' எனக்கூறினாரே! அப்படியிருந்தும் நான் ஏன் ஆண்டவருடைய சத்தத்தைக் கேட்கமுடியவில்லை!'' எனக் கேட்டார். அதற்கு அந்த தேவ ஊழியர், “ஆம், அவருடைய ஆடுகள் நிச்சயமாய் அவருடைய சத்தத்தைக் கேட்கும்! ஆனால், ஆட்டுக் குட்டிகள் அவருடைய சத்தத்தைக் கேட்டு அறிந்திட முதலாவது பழகிக் கொள்ள வேண்டும்!” என நேர்த்தியாய் கூறினார்.
ஒரு மகன் தன் தகப்பனின் குரலை திரும்பத் திரும்ப கேட்ட பிறகு தான், சத்தம் எங்கிருந்து கேட்டாலும் “அது தகப்பனுடைய குரல்” என்பதை எளிதில் விளங்கிக் கொள்வான். அது போலவே நாம் தொடர்ச்சியாக ஆண்டவருடைய சத்தத்தை கவனித்துக் கேட்டால் மாத்திரமே, நம் மனதில் தொனிக்கும் வெவ்வேறு சத்தங்களிலிருந்து "ஆண்டவருடைய சத்தத்தை வேறுபடுத்தி” அறிந்து தேவ சித்தம் செய்திட முடியும்! இவ்வாறு ஆண்டவருடைய சத்தத்தை கவனித்துக் கேட்டு பழகிவிட்டால், சில இக்கட்டான சூழ்நிலைகளில் “நீங்கள் வலது புறமாய் சாயும் போதும், இடது புறமாய் சாயும் போதும், வழி இதுவே! இதிலே நடவுங்கள்! என்று உங்களுக்குப் பின்னாலே சொல்லும் வார்த்தையை உங்கள் காதுகள் கேட்கும்!” (ஏசா.30:21).
இவ்வாறு நாம் தேவனுடைய குரலை நாள்தோறும் கேட்டு பழகாத பட்சத்தில், இக்கட்டான சூழ்நிலைகளில் நாம் ஆண்டவரிடத்தில் முறையிட்டாலும் அவருடைய குரலை கேட்கக் கூடாத நிலையாக மாறிவிடும்! இன்றும், தேவனுடைய பிள்ளைகளில் சிலர் மிகுந்த அலுவல்களில் ஈடுபட்டிருக்கிறபடியால், தங்கள் ஜீவியத்தில் ஒவ்வொருநாளும் தங்கள் ஆண்டவரின் குரலை கவனித்துக் கேட்பதற்கு நேரமில்லாதவர்களாய் போய்விட்டார்கள்! அப்படியிருந்தும், நெருக்கடியான சூழ்நிலைகள் இவர்களுக்கு உண்டாகும் போது “அவ்வேளையில் உடனடியாக தேவனுடைய சித்தத்தை அறிய வேண்டும்” என்றே நப்பாசை கொள்கிறார்கள்!! இது போன்ற விசுவாசிகளைக் குறிப்பிட்டு G.கிறிஸ்டியன் வெய்ஸ் கூறும் போது, இவர்களது அவசர ஜெபம் “ஆண்டவராகிய இயேசுவே, நான் அதிக சுறுசுறுப்பான வேலைகளில் ஈடுபட்டபடியால் உம்மோடு பேசுவதற்கு எனக்கு நேரமில்லாமல் போய்விட்டது. அதற்காக என்னை மன்னியும். ஆகிலும் ஆண்டவரே, இப்போது நான் இக்கட்டான நிலையில் இருக்கிறேன். இந்த முக்கியமான நேரத்தில் நாளை காலை 10.00 மணிக்குள் நான் உம்முடைய சித்தத்தை அறிந்தாக வேண்டும்! ஆகவே ஆண்டவரே, நீர் துரிதமாய் செயல்பட்டு உம் சித்தத்தை எனக்கு வெளிப்படுத்தும்! ஆமென்” என்றே ஜெபம் செய்கிறார்கள். தேவ சித்தமோ இதுபோன்ற நபர்களுக்கு வெளிப்படுத்தப்படுவதில்லை!! நம் ஜீவியத்தில் தேவனுடைய நடத்துதலை நாடுகிறவர்களாயிருந்தால், நாம் அனுதினமும் தியானத்திலும், ஜெபத்திலும் தேவனோடு ஐக்கியம் கொள்ள வேண்டியது மிக முக்கியமாகும்!
செய்தியின் சாராம்சம்கள் :
நாம் தேவனுடைய சித்தத்தை அறிய விரும்பினால், அதற்கு முதலாவதாக கீழ்காணும் நிபந்தனைகளை நாம் நிறைவேற்றிட வேண்டும்:
1) தம்முடைய சித்தத்தை தேவன் நமக்கு வெளிப்படுத்துவார் என்பதை விசுவாசிக்க வேண்டும். இதுபோன்ற விசுவாசத்தில், தேவனுடைய நேரத்திற்கு ‘காத்திருக்க' மனதுடையவர்களாய் இருக்க வேண்டும்.
2) நம்முடைய சொந்த புத்திக்கூர்மையின் நம்பகத்திலிருந்து விலகி, தாழ்மையுடன் தேவனையே சார்ந்து கொள்ளவேண்டும். இதனிமித்தமாய் “நம் அறிவாற்றலின் திறனை” நாம் புறக்கணிக்கத் தேவையில்லை! இருப்பினும் நம் முழு நம்பிக்கையோ தேவனிடம் மாத்திரமே இருக்க வேண்டுமேயல்லாமல் நம்மைச் சார்ந்து ஒருபோதும் இருந்திடக் கூடாது.
3) நம் வாழ்வின் ஒவ்வொரு பகுதியிலும் தேவ சித்தம் செய்திட நாம் வாஞ்சிக்க வேண்டும். தேவன் நமக்கு ஏற்கனவே தந்த வெளிச்சத்திற்கு கீழ்படிந்தவர்களாய் இருக்க வேண்டும்! நம் மன சாட்சியை எப்போதும் சுத்தமுள்ளதாய் காத்துக் கொள்ளவும் வேண்டும்!!
4) தேவனிடத்தில் யாதொன்றையும் ‘பதுக்காமல்' முழுமையாய் நம்மை ஒப்புக்கொடுத்து, அவர் தெரிந்தெடுத்துக் கொடுத்திடும் “எதையும்” ஏற்றுக்கொள்ள மனதுடையவர்களாயிருக்க வேண்டும்!
5) ஒவ்வொரு நாளும் தேவனோடு நடந்து, அவர் நம்மிடம் பேச விரும்புகிறவைகளைக் கவனித்து கேட்க வேண்டும்! அதன் மூலமாய் நம் மனதை தேவன் புதுப்பிப்பதற்கு அவருக்கு விட்டுகொடுத்து, லௌகீக சிந்தைகளின் பிடிகளிலிருந்து அவர் நம்மை விடுவிக்க நாட வேண்டும்!!
தேவன் நம்மை நடத்தும் வழிமுறைகளைக் கற்றறிவதற்கு “வேதாகம கோட்பாடுகளே” மிக முக்கியமானதாகும். பக்தியுள்ள தேவ மனிதர்களுடைய அல்லது பக்தியுள்ள ஸ்திரீகளுடைய அனுபவங்களைக் காட்டிலும், வேதாகமம் வகுத்த கோட்பாடுகளே மிக முக்கியம் என்பதை நாம் நன்கு மனதில் கொள்ள வேண்டும். ஏனெனில் நாம் கண்ட அனுபவத்தின் குறிப்பிட்ட வரையறைக்குள் மாத்திரமே தேவன் கிரியை செய்பவரல்ல! அவரோ தம் சர்வ வல்ல ஆளுகையின்படி, சில சமயங்களில் இயற்கைக்கு அப்பாற்பட்ட அற்புதமான வழி முறைகளைக் கொண்டும் நம்மை நடத்துவதற்கு தெரிந்து கொள்ள முடியும்! அல்லது சாதாரண ஏதுகரங்களைக் கொண்டும் நம்மை நடத்த முடியும்! இஸ்ரவேல் ஜனத்தை மேகஸ்தம்பத்தின் மூலமாயும், அக்கினிஸ்தம்பத்தின் மூலமாயும் வனாந்தரத்தில் நடத்தினார். ஆனால், அவர்கள் கானான் தேசத்திற்குள் பிரவேசித்தப் பிறகு, அதே வழி முறைகளைக் கொண்டு நடத்திட தேவன் பயன்படுத்தவில்லை!
அப்போஸ்தலர் நடபடிகளின் சில இடங்களில் இயற்கைக்கு அப்பாற்பட்ட விதத்தில் தேவன் நடத்தியிருக்கிறார். ஒரு தூதன் பிலிப்புவினிடத்தில் பேசி, சமாரியாவை விட்டு வனாந்தரவெளிக்கு நடத்தினார்!(8:26), அனனியாவினிடத்தில் ஆண்டவர் ஒரு தரிசனத்தின் மூலமாய் பேசி, சவுலை சந்திக்கும்படி கூறினார்! (9:10-16). பேதுரு ஒரு தரிசனத்தைக் கண்டு, அந்த தரிசனத்தின் மூலமாய் அவன் சுவிசேஷத்தை புறஜாதியாரிடத்திற்கு கொண்டு செல்லவேண்டுமென்பதை தேவன் வெளிப்படுத்தினார்! (10:9-16). மக்கெதொனியாவிற்கு பவுலை தேவன் நடத்தி, அங்கு ஓர் தரிசனத்தை காணச்செய்தார்! (16:9). மேலும் எருசலேமில் பவுலுக்கு தரிசனமாகி, அவர் செல்ல வேண்டிய வழியை தேவன் காட்டியதாக பவுல் குறிப்பிட்டார்!(22:17-21). ஆனால், இவையாவும் 'அபூர்வமான சில' வழிநடத்துதலேயல்லாமல் வழி நடத்துதலின் கோட்பாட்டிற்குள் அடங்கியவைகள் அல்ல. இதேபோன்று தேவன் தன்னுடைய பிள்ளைகளை இன்றும் நடத்த முடியுமென்பதை நாம் மறுத்துவிட முடியாது! ஆகிலும் அப்போஸ்தலர் நடபடிகளில் இதுபோன்ற நிகழ்ச்சிகள் அங்கொன்றும் இங்கொன்றுமாய் அபூர்வமாகவே குறிப்பிடப்பட்டுள்ளன என்பதை நாம் மனதில் கொள்ள வேண்டும்.
நாமோ, இந்தப் புத்தகத்தில் தேவன் நம்மை நடத்தும் நடை முறையான வழிமுறைகளை மாத்திரமே தியானிக்க விரும்புகிறோம்.
பழைய ஏற்பாட்டில், தேவ சித்தத்தை அறிந்து கொள்வது ஓர் எளிதான செயலாகவே காணப்பட்டது. மோசேயின் பிரமாணங்களும் “ஒவ்வொரு” குறிப்பிட்ட காரியங்களுக்கும் ஜனங்களைப் போதித்து மிகத் தெளிவாய் நடத்தியது.
வனாந்தரத்திலிருந்த இஸ்ரவேலர்கள் பகலில் மேகஸ்தம்பத்தையும் இரவில் அக்கினிஸ்தம்பத்தையும் பின்பற்றினால், அதுவே அவர்களுக்குப் போதுமானதாய் இருந்தது. எங்கே? எப்பொழுது? போகவேண்டுமென அறிவதற்கு அவர்கள் ஆவிக்குரியவர்களாயிருக்க வேண்டுமென்ற அவசியமில்லாதிருந்தது!
கண்கள் மாத்திரம் நல்ல தெளிவாய் இருந்துவிட்டால், அது அவர்களுக்குப் போதும்! பிரதான ஆசாரியர்கள் தேவனுடைய சித்தத்தை அறிய விரும்பிய நேரத்தில், தேவனுடைய பிரசன்னத்திற்கு முன்பாக "ஊரீம் தும்மீமை” விரித்துவைத்து அதன்மூலம் ‘சரி' அல்லது 'இல்லை' என்ற பதிலை எளிதில் பெற்றுவிடுவார்கள். இவையாவும் வெளியரங்கமானதாய், மனுஷர்களுடைய சரீர உணர்வுகளுக்கு உட்பட்டதாயிருந்தபடியால், தேவ சித்தம் கண்டறிவது அவர்களுக்கு எளிதாகவே இருந்தது!!
பரிசுத்தாவியை சார்ந்து நடத்தல்:
பழைய ஏற்பாட்டிற்கு நேர்மாறாக, நாம் வாழும் இக்காலத்தில் தேவசித்தம் அறிவதென்பது கடினமானதாகவே தோன்றுகிறது. அது ஏனென்றால் “தேவனுடைய பரிபூரணமான சித்தத்தை இன்னதென்று நாமே பகுத்தறிய வேண்டும்” என, தேவன் நம்மிடம் எதிர்பார்க்கும் அவரது விருப்பமேயாகும் (ரோமர்.12:2). ஒரு விசுவாசியை நடத்துவதெற்கென பரிசுத்தாவியானவர் அவனுக்குள் தங்கி வசிக்கிறபடியால், பழைய ஏற்பாட்டில் காணப்படும் வெளியரங்கமான எல்லா நடத்துதல்களின் வழியையும் தேவன் மாற்றிவிட்டார்! முதிர்ச்சியடையாதவர்களுக்கென்றே, வெளிப்பிரகாரமான நடத்துதலை தேவன் வைத்திருக்கிறார். முதிர்ச்சியடைந்தவர்களுக்கோ உள்ளான நடத்துதலை தேவன் வைத்திருக்கிறார்! இன்று, தன் பிள்ளைகள் யாவரையும் உள்ளான நடத்துதல் மூலமாய் நடத்துவதற்கே தேவன் விரும்புகிறார்!! நாம் தேவனுடைய சித்தத்தை தேடும்போது, “நம் ஆவியில் பரிசுத்தாவியானவர் என்ன பேசுகிறார்?” என்பதை கேட்பதற்கு நாம் கவனமாய் இருக்க வேண்டியது அவசியம். எனவேதான் நாம் பரிசுத்தாவியினால் நிரப்பப்படும்படி நாட வேண்டியதும் மிகவும் அவசியமாயிருக்கிறது.
இதை வேதாகமம் நமக்கு புத்தி சொல்லுகையில், “நீங்கள் மதியற்றவர்களாயிராமல், கர்த்தருடைய சித்தம் இன்னதென்று உணர்ந்து கொள்ளும்படி.... ஆவியினால் நிறைந்திருங்கள்” (எபேசியர் 5:17,18) எனக்கூறுகிறது. லூக்கா.4:1-ம் வசனத்தில் “இயேசு பரிசுத்தாவியானவராலே நிறைந்தவராய்..... ஆவியானவராலே வனாந்தரத்திற்கு கொண்டு போகப்பட்டார்” என நாம் காண்பதும் முக்கியத்துவம் வாய்ந்ததாகும். இயேசு இப்பூமியில் வாழ்ந்த வாழ்க்கை முழுவதும் பரிசுத்தாவியின் உள்ளான சாட்சியால் மாத்திரமே ஆளப்பட்டு, நடத்தப்பட்டார்! அதுவல்லாமல், மனுஷனுடைய புத்தியாலோ அல்லது ஆலோசனையினாலோ அல்லது பாசமுள்ள பரிவான வேண்டுதலாலோகூட அவர் ஒருபோதும் நடத்தப்படவே இல்லை!!
ஆவியானவருடைய சத்தத்திற்கு உணர்வுள்ளவர்களாய் வாழ வேண்டிய இந்த ஜீவியமானது ஆதி கிறிஸ்தவர்களிடம் நிறைவாய் காணப்பட்டது. எத்தியோப்பிய மந்திரியின் இரதத்தோடு சேர்ந்து கொள்ளும்படி பரிசுத்தாவியானவர் பிலிப்புவை உணர்வூட்டித் தூண்டினார்! (அப்.8:29), கொர்நேலியு வீட்டிற்கு பேதுரு செல்லும்படி உணர்த்திய ஆவியானவரின் குரலுக்கு பேதுரு உடனே கீழ்ப்படிந்தார்! (அப்.10:19, 20). வெளிதேசத்திற்கு சவுலையும் பர்னபாவையும் அனுப்பும்படியான அவர்களின் மிஷனெரி அழைப்பை, அந்தியோகியா சபையிலுள்ள மூப்பர்கள் தங்கள் ஆவியில் பரிசுத்தாவியானவர் சாட்சி கொடுத்ததை நன்கு அறிந்து செயல்பட்டார்கள்! (அப்.13:2). இன்றும் அதே ஆவியானவர் நம் ஒவ்வொருவரையும் “நாம் எடுக்க வேண்டிய ஒவ்வொரு தீர்மானத்திலும்” நடத்திட விரும்புகிறார்!!
ஆவியானவரின் சத்தத்தை அறிந்து கொள்ளுதல் :
வெளியே கேட்கும் ஒரு சத்தமான குரலைவிட, நம்முடைய ஆவியில் ஓர் உள்ளான அழுத்தத்தைக் கொடுத்தே பரிசுத்தாவியானவர் நம்மோடு பேசுகிறார்! ஒரு காரியத்தை நாம் செயல்படுத்த வேண்டுமா? அல்லது செயல்படுத்த வேண்டாமா? என்பதை ஓர் உள்ளான தூண்டுதல் மூலமாகவே நம்மை இயங்கச் செய்கிறார். ஒரு குறிப்பிட்ட காரியத்தை செயல்படுத்துவதால் விளையும் நன்மைகளையும், தீமைகளையும் நிறுத்துப்பார்த்து, அதிகநேரம் நாம் ஜெபத்தில் தரித்திருந்தால் மாத்திரமே, ஆவியானவர் நமக்குத் தூண்டுதல் செய்ய முற்படுவார். இருப்பினும் சில சமயங்களில், உடனடியாக ஒரு இடத்திற்குப் போவதற்கோ அல்லது ஒன்றை செய்வதற்கோ பரிசுத்தாவியானவர் நமக்குத் தூண்டுதல் தரவும் முடியும்! ஆனால், மதிப்பற்றதும் இழிவானது மான ஒன்றை நாம் திடீரென செய்வதற்கு தூண்டப்பட்டால், அது பிசாசிடமிருந்தோ அல்லது நம் சுயசித்தத்திலிருந்தோ தோன்றியதாய் இருக்கக்கூடும்! எனவே இவ்விஷயத்தில் நாம் கவனமாய் இருக்கவேண்டும்.
எப்படியிருந்தாலும், பரிசுத்தாவியானவர், வேதாகமத்தின் போதனைக்கு முரண்பாடாகநம்மை ஒருபோதும் நடத்திட மாட்டார்!
ஒரு குறிப்பிட்ட விஷயத்திற்காக நாம் ஜெபித்துக் கொண்டிருக்கும் போது, பரிசுத்தாவியின் சத்தம் நம்முடைய ஆவியில் அதிக அதிகமான அழுத்தத்தை தருவதையும், அதே அளவிற்கு நம்முடைய மனதில் அவர் சமாதானம் பெருகிடச் செய்வதையும் நாம் எளிதில் கண்டுபிடித்து விடலாம்! ஏனெனில் “ஆவியின் சிந்தையோ ஜீவனும் சமாதானமுமாகும்” என்றே ரோமர்.8:6 கூறுகிறது. சாத்தானுடைய குரலோ, அந்தக்குரலுக்கு நாம் உடனடியாக கீழ்ப்படியாவிட்டால், மனக்கிலேசத்தையும் நம்மை ஆக்கினைக்குள்ளாக்கும் அச்சுறுத்தலையும் கொடுப்பதற்கே செயல்படுவான். ஆனால் தேவனோ, தம்முடைய சித்தத்தை நாம் உறுதி செய்வதற்குப் போதுமான அளவு நேரத்தை தாராளமாய் நமக்குத் தருகிறார்!!
சில நிகழ்ச்சிகளில், நம்முடைய மனம் முழுவதுமாய் விளங்கிக் கொள்ள முடியாத ஒன்றைச் செய்யும்படியும் ஆவியானவர் நம்மை நடத்துவார். ஒரு சமயம் ஸ்டீபன் கிரலெட் என்ற ஒரு அமெரிக்க பிரசங்கி ஆவியானவரால் ஒரு குறிப்பிட்ட பயணிகளின் விடுதிக் கூடாரத்திற்குச் செல்லும்படி நடத்தப்பட்டார். ஆனால், அந்த விடுதிக் கூடாரமோ ஒருவரும் இல்லாமல் வெறிச்சோடிக் கிடந்தது! இருப்பினும் தன்னுடைய நடத்துதலைக் குறித்து அவர் அத்தனை உறுதியாய் இருந்தபடியால், அங்குள்ள வெறிச்சோடிக் கிடந்த உணவு சாலையில் தன்னந்தனியாய் நின்று பிரசங்கம் செய்தார்! அநேக வருடங்களுக்குப் பின்பு, சகோதரன் கிரலெட்டை ஒரு மனிதன் லண்டன் நகரத்தில் சந்தித்தார். அவர் “இந்த நிகழ்ச்சியைக்” குறிப்பிட்டு, அந்த தங்கும் விடுதி உணவு சாலையில் “அன்று” தான் மாத்திரம் இருந்ததாகக் கூறினார். பின்புற ஜன்னலுக்குப் பின்பாக ஒளிந்து கொண்டு சகோதரன் கிரலெட்டின் பிரசங்கத்தை ஆர்வமுடன் கவனித்துக் கேட்டதாகவும் கூறினார். அன்றே அவர்
மனந்திரும்பி, சில காலங்களுக்குப் பின்பு ஆண்டவருடைய ஊழியத்திற்கு வந்துவிட்டதாகவும் மகிழ்ச்சியுடன் கூறினார்! ஆம், இது போன்ற நடத்துதல் எப்போதாவது அபூர்வமாய் ஏற்படுவதாகும்.
அநேக சமயங்களில் நம் இருதயத்தின் சத்தத்தையும், ஆவியானவரின் சத்தத்தையும் வேறுபடுத்திக் காண்பது நமக்கு அவ்வளவு எளிதாய் இருப்பதில்லை. ஆம், நம் இருதயம் அத்தனை வஞ்சனை நிறைந்ததாகும்! உதாரணமாக, நமக்குப் பிடித்தமான ஒரு வாழ்க்கைத் துணையை மனதிற்கொண்டு ஜெபிக்கும்போது, நமக்குள் தோன்றும் மன எழுச்சியையும், நம்மில் பொங்கிவரும் மகிழ்ச்சியின் உணர்வுகளையும்..... அதுவே பரிசுத்தாவியினுடைய அங்கீகாரமென நாம் தவறாய் எடுத்துக் கொள்ள முடியும்! ஆனால் நாமோ நம் நோக்கங்களையும், தேவனுடைய மகிமை ஒன்றையே தேடவேண்டிய விருப்பத்தையும் சோதித்தறிந்து, ஆண்டவர் நமக்கென தெரிந்தெடுக்கிற எதையும் ஏற்றுக்கொள்ள ஆயத்தமுள்ளவர்களாயிருந்தால், மேற்கண்ட வஞ்சகம் நமக்கு ஏற்படுவதிலிருந்து தப்பித்துக் கொள்ள முடியும்.
பூரண அர்ப்பணமில்லாத வாழ்வும் அல்லது சுயநல நோக்கங்களும் எங்கு காணப்படுகிறதோ, அங்குதான் நாம் வழிதவறி சென்று விடுகிறோம்!
சில சமயங்களில், தேவசித்தமானது நாம் விரும்புகிறபடியே இருந்திடமுடியும்! அதுபோலவே, நாம் விரும்பாதபடியும் தேவ சித்தம் இருந்திட முடியும்! தேவ சித்தத்தை செயல்படுத்துவது நமக்கு முன்னால் இருக்கும் “ஒரு கடினமான பணியாக” நாம் எண்ணிவிடக் கூடாது. அதே சமயம் தேவ சித்தம் செய்வது மிக எளிதானதெனவும் நாம் எண்ணிவிடக் கூடாது!! ஒரு கடினமான சூழ்நிலையில் அல்லது ஒரு கஷ்டமான வேலையில் நாம் இருக்கும்போது, அந்த இடத்தை விட்டே ஓடிவிடலாமா என்றுகூட நாம் சோதிக்கப்பட முடியும். இத்தருணத்தில், சூழ்நிலையை விட்டு ஓடும்படி ஆவியானவரே நடத்துகிறார் என, மிக எளிதில் நாம் தவறு செய்திட முடியும்! இதுபோன்ற சமயங்களில் நம் மனதில் சந்தேகம் எழுந்தால், நாம் இருக்கும் அந்த வேலையிலேயே தங்கியிருந்து, தேவனை நம்பி, அந்த சூழ்நிலையிலும் “கிறிஸ்துவுக்கு ஜெயம்” உண்டாகிட ஏற்ற கிருபையைத் தருவார் என காத்திருக்க வேண்டும்!
ஒன்றை செயல்படுத்த தீர்மானிக்கும் போது, நடைமுறைக்கு ஏதுவான “முயற்சி ஒன்றை” நாம் செய்வது நல்லது. உதாரணமாக ஒரு பேப்பரை எடுத்து அதின் நடுவில் கோடுபோட்டு “சூழ்நிலையின் சமநிலை" காண முயற்சித்துப் பாருங்கள். கோடு போட்ட ஒரு பக்கத்தில் நீங்கள் மனதில் கொண்ட செயலை நீங்கள் ஏன் செய்ய விரும்புகிறீர்கள் என்பதையும், கோட்டின் அடுத்த எதிர்புறத்தில் அந்த செயலுக்கு எதிராக நீங்கள் கொண்ட காரணங்களையும் எழுதுங்கள்! ஒவ்வொரு நாளும் இந்த இருபக்கத்தின் காரணங்களையும் முன் வைத்து ஜெபியுங்கள். நீங்கள் எழுதி வைத்த காரணங்களை மீண்டும் மறுபரிசீலனை செய்ய விரும்பினால் அப்படியே செய்யுங்கள். இரண்டு வித்தியாசமான தீர்மானங்களில் எதுவானாலும் அதை ஏற்றுக்கொள்ள உண்மையான திறந்த மனதுடன் இருங்கள்! இவ்வாறு நீங்கள் தொடர்ந்து ஜெபிக்கையில், நீங்கள் என்ன செய்யவேண்டு மென்பதைக் குறித்து பரிசுத்தாவியானவர் உங்கள் ஆவியில் சாட்சி கொடுப்பார்! ஒரு குறிப்பிட்ட செயலுக்காக உங்கள் ஆவியில் சமாதானம் பெருகிக்கொண்டே சென்றால், நீங்கள் அந்த செயலை தேவன் செய்ய விரும்புகிறார் என்பதற்கு ஓர் தெளிவான அடையாளமாய் நீங்கள் ஏற்றுக்கொள்ளலாம்! இதைக் குறித்து வேதாகமம் கூறும்போது, “தேவ சமாதானம் உங்கள் இருதயங்களில் ஆளக்கடவது.... அதுவே உங்கள் மனதில் எழும் கேள்விகள் அனைத்திற்கும் உறுதியான தீர்மானத்தை வழங்கக்கடவது” என கூறுகிறது (கொலோசெயர்.3:15 - விரிவாக்கம்).
இருதயத்தில் ஆளும் சமாதானமே, ஒரு கால்பந்து பந்தயத்திலுள்ள நடுவரைப்போல்' நமக்கு செயல்பட வேண்டும்! ஒரு கால்பந்து பந்தயத்தில் தவறு நடக்கும்போது, அங்குள்ள நடுவர் 'விசில் ஊதுவார்!' உடனே விளையாட்டு முழுவதும் நின்றுவிடும்.
அதுபோலவே சமாதானமில்லாத 'விசில்' நம் இருதயத்தில் ஊதியவுடன், உடனடியாக நம்மை நாமே சோதித்துப் பார்க்க வேண்டும். நம்முடைய ஆவியில் மீண்டும் பூரண சமாதானத்தை அடைந்த பிறகு தான், நம் ஜீவியத்தின் அடுத்த பகுதிக்கு முன்னேறிச் செல்ல வேண்டும்!
ஆவியானவரின் முக்கியத்துவத்தை அறிந்திருக்க வேண்டும் :
இந்த அதிகாரத்தில் கூறப்பட்ட ‘பரிசுத்தாவியின் உள்ளான சாட்சிக்கு' நாம் முக்கியத்துவம் கொடுக்க அறிந்திருப்பது மிகவும் அவசியமானதாகும். ஏனெனில் தேவனுடைய பிள்ளைகளை நடத்துவதற்கு இதுவே தேவனுக்குரிய “பிரதான வழியாய்” இருக்கிறது. ஆவியானவர் தரும் உள்ளான தூண்டுதலையும், ஆவியானவர் வழங்கும் உள்ளான சோதித்தறிதலையும் கவனமாய் ஏற்று கீழ்ப்படிந்திட வேண்டும்.
எது சரி? அல்லது எது தவறு? என்ற அடிப்படையில் ஒரு விசுவாசி நடத்தப்படுவது போதுமானதல்ல! அது பழைய உடன்படிக்கையின் தரமாகும். நாமோ, ஓர் உயர்ந்த தரத்திற்கு தேவனுடைய புதிய உடன்படிக்கையின்படி வாழ “தேவனுடைய ஜீவனையே” பகிர்ந்து கொள்ள அழைக்கப்பட்டிருக்கிறோம். இந்த இரண்டு தரமும் ஏதேன் தோட்டத்தில் காணப்பட்ட இரண்டு மரங்களுக்கு ஒப்பாய் இருக்கிறது. 1) நன்மை தீமை அறியத்தக்க மரம் 2) ஜீவ விருட்சம். ஒழுக்கத்தின் அடிப்படையில் எது நன்மையானது? அல்லது எது தீமையானது? என அறிந்து அந்த தரத்தின்படி வாழ்வது நல்லதுதான். ஆகிலும் இந்த தரமானது “நியாயப்பிரமாணத்திற்கு கீழ்ப்பட்ட" வாழ்வின் தரத்திற்கே நம்மை மீண்டும் இழுத்துச் சென்று விடும். ஆனால், “கிறிஸ்தவ தரமோ” மகா மேன்மையானதாகும் (மத். 5:17-48).
“நடத்தப்படுவதற்கு இரண்டு கோட்பாடுகள்” என்ற புத்தகத்தை எழுதிய வாட்ச்மென்நீ கூறும்போது “புதிய உடன்படிக்கையில் தேவன் தந்த மறுபிறப்பில் சட்டதிட்ட கற்பனைகள் ஏதுமில்லை. அப்படியிருந்தும் இன்றைய திரளான கிறிஸ்தவர்களின் இலக்கானது ‘வெளிப்புற தகுதியை' நாடுவதாகவே இருக்கிறது. இன்று தேவன் நம்மை மற்றொரு சீனாய் மலைக்கு கொண்டுவரவில்லை! 'இதைச் செய்வாயாக' அல்லது ‘இதை செய்யாதிருப்பாயாக' போன்ற புதிய அமைப்பின் பிரமாணங்களை தேவன் நமக்குத் தரவில்லை. மெய்யான கிறிஸ்தவர்களாய் இருக்கும் நாம் கிறிஸ்துவின் ஜீவனையே பெற்றிருக்கிறோம். அவருடைய ஜீவனிலிருந்து பிரதிபலிக்கும் எண்ணங்களையே நாம் இப்போது கவனிக்கிறோம். எங்காவது நாம் செல்ல வேண்டிய இடத்திற்காக மனது வைக்கும்போது, நாம் முன்னேறிச் செல்வதற்கு 'கிறிஸ்துவின் ஜீவன்' நமக்குள்ளிருந்து உந்துவதைக் காணலாம்! அதுவே உள்ளான அந்த ஜீவன் நமக்குத் தரும் அங்கீகாரமாயிருக்கிறது. ஆகவே நமக்குள் இருக்கும் அந்த அபிஷேகம் ஒரு குறிப்பிட்ட செயலை மிகுந்த நம்பிக்கையோடு பின் தொடர்ந்து செயலாற்ற ஊக்குவிக்கிறது (1யோவான். 2:20,27). இதற்கு மாறாக, நமக்குள் இருக்கும் 'உள்ளான ஜீவன்' விருப்பமில்லாமல் தயங்குவதைக் கண்டால், நீங்கள் செயலாற்ற எண்ணிய பகுதியிலிருந்து பின் வாங்குவதே நல்லது! அது எத்தனை லாபகரமாயிருந்தாலும், ஒரு பொருட்டல்ல!! மேலும் அவர் தொடர்ந்து......
கிறிஸ்தவரல்லாதவர்களே, எது சரி? எது தவறு? என்ற அடிப்படையில் நடத்தப்படுகிறார்கள் என்பதை நாம் மனதில் கொள்ள வேண்டும். கிறிஸ்தவர்களையும் இதே கோட்பாடு ஆளுகை செய்யுமென்றால், கிறிஸ்தவரல்லாதவர்களுக்கும் நமக்கும் வித்தியாசமேதுமில்லையே? ஆனால், மெய்யான கிறிஸ்தவர்கள், கிறிஸ்துவின்ஜீவனின் ஆளுகையில் நடத்தப்படுகிறார்களேயன்றி, வெளிப்புறமான பிரமாணத்தின்படி நடத்தப்படுவதேயில்லை என தேவனுடைய வார்த்தை தெளிவாகவே நமக்கு கூறுகிறது!
ஒரு கிறிஸ்தவனுக்குள்ளிருக்கும் 'ஜீவன்' தேவனுக்குரியவைகளுக்கு இணங்குவதையும், தேவனுக்குப் பிரியமில்லாதவைகளுக்கு அந்த ஜீவன் எதிர்த்து நிற்பதையும் மிக நன்றாக உணரமுடியும்! ஆகவே நமக்குள்ளிருந்து வெளிப்படும் அந்த ஜீவனின் பிரதிபலிப்பையே நாம் கவனித்து நோக்க வேண்டும். மாறாக, வெளிப்புறமானவைகளாலோ அல்லது அறிவுபூர்வமான காரணங்களாலோ.... அது நமது சொந்தமாகவோ அல்லது வேறு ஜனங்கள் மூலமாகவோ உட்புகுந்து ஆளுகை செய்திட நாம் அனுமதிக்கவே கூடாது. ஒரு குறிப்பிட்ட காரியத்தை மற்றவர்கள் அங்கீகரிக்கக்கூடும். நாமும்கூட அதன் லாப நஷ்டத்தைக் கணக்கிட்டு அது சரியென்றே கூறலாம்! ஆனால், நமக்குள்ளிருக்கும் 'ஜீவன்' இதைக் குறித்து என்ன சொல்கிறது? என்பதே முக்கியமாகும்.
இவ்வாறு கிறிஸ்தவ வாழ்வின் நடத்துதல் ‘ஜீவனின் அடிப்படையில் தான்' என்பதை நாம் உணர்ந்து கொண்டால் தீமையாயிருப்பவைகளை மாத்திரமல்ல, வெளிப்பிரகாரமாய் நன்மையாய் தோன்றுபவைகளையும் நாம் தவிர்க்க வேண்டியதின் அவசியத்தை உணர்ந்துகொள்ள முடியும்! கிறிஸ்தவ ஜீவியத்திற்கு கிறிஸ்தவ நடத்துதலே' தேவையாகும். ஆகவே 'ஜீவனிலிருந்து' புறப்பட்டு வராத எந்த செயலையும் நாம் ஏற்றுக்கொள்வதில்லை!
ஏனெனில், மனுஷீகத் தரத்தின்படி அநேக காரியங்கள் சரியாய் இருக்கலாம்...... ஆனால், திவ்விய தரமோ அவைகளைத் தவறு என்றே தள்ளிவிடுகிறது! ஏனெனில் அவைகளின் மீது திவ்வியமான ஜீவனில்லை! வெளியிலுள்ள அடையாளங்களைக் கொண்டு, நமக்கென தேவன் வகுத்த வழிகளை அறிந்து கொள்ளமுடியாது. உள்ளான உணர்த்துதலின்படியே தேவனுடைய வழியை நாம் அறிகிறோம்!! “ஆவியில் பரிமளிக்கும்' சமாதானமும், மகிழ்ச்சியுமே ஒரு கிறிஸ்தவனின் பாதையை சுட்டிக்காட்டும் அடையாளமாயிருக்கிறது. ஆண்டவராகிய இயேசுகிறிஸ்து விசுவாசிகளாகிய நமக்குள் தங்கியிருந்து, தன்னையே நமக்குத் தொடர்ச்சியாக வெளிப்படுத்துகிறபடியால், அவருடைய அந்த ஜீவனுக்கே உணர்வுள்ளவர்களாய் நாம் வாழ்ந்து, அவரின் ஜீவன் சொல்லுவதையே கவனித்தறிய கற்றுக் கொள்ளக்கடவோம்!!” என்றே வாட்ச்மென்றி அந்தப் புத்தகத்தில் கூறியுள்ளார். அவர் குறிப்பிட்ட இந்தப் பாடத்தை நாமும் கற்றுக்கொள்ள தேவன் நமக்கு உதவி செய்வாராக!
செய்தியின் சாராம்சம்கள் :
1) வெளிப்பிரகாரமான அற்புதத்தின் மூலமாய் இன்று தேவன் நடத்துவது அபூர்வமானதேயாகும். இந்த புதிய ஏற்பாட்டின் காலத்தில் பரிசுத்தாவியின் மூலமாகவே தேவன் நடத்துகிறார். ஆகவே தான், நாம் பரிசுத்தாவியினால் ஒவ்வொருநாளும் நிறைந்து வாழ அவசியமாயிருக்கிறது.
2) நம் சொந்த ஆவியில் ஓர் உள்ளான அழுத்தத்தின் மூலமாகவே பரிசுத்தாவியானவர் நம்மோடு பேசுகிறார். நாம் ஜெபத்தில் தேவனுக்கு காத்திருக்கும்போது, இந்த அழுத்தம் நமக்குள் பெருகி ஓர் உள்ளான சமாதானத்தோடு நமக்கு புலப்படும்!
3) மற்ற சத்தங்களிலிருந்து ஆவியானவரின் சத்தத்தை தெளிவுபட அறிந்திட, நம்முடைய நோக்கங்கள் தூய்மையாய் இருக்கிறதா? என்பதை நாம் எப்போதும் சோதித்துப் பார்க்க வேண்டும்.
4) ஒரு குறிப்பிட்ட செயலை செய்வதில் தோன்றும் நன்மைகளையும், தீமைகளையும் தனித்தனியே எழுதி “ஒரு சமநிலைக் கண்ணோட்டத்தோடு” அவைகளை ஆராய்ந்து காண்பது தேவ சித்தத்தை திட்டமாய் அறிந்து கொள்ள நமக்கு உதவும்.
5) பரிசுத்தாவி வழங்கும் 'உள்ளான சாட்சிக்கே' நாம் அதிக மதிப்புத் தரவேண்டும்! ஏனெனில், நம் நாட்களில் இவ்வித நடத்துதலையே தேவன் நமக்குப் பிரதானமாய் தந்திருக்கிறார். இந்த ஆளுகையின் கீழாய் நம் அன்றாட ஜீவியம் நடத்தப்படுவதற்கே தேவன் ஆர்வமுடன் எதிர்பார்க்கிறார். இதுவல்லாமல், இவ்வுலகத்தாரைப் போல பொதுவான நன்மை தீமை அறிந்திடும் அறிவின்படி நாம் நடத்தப்படுவதற்கு தேவன் விரும்பவில்லை!
தேவனுடைய நடத்துதலை வாஞ்சிக்கிற நமக்கு, பரிசுத்தாவியானவர் வெளிப்புறமான ஏதுக்கள் மூலமாயும் நம் ஆவியில் பேசுகிறார்:
1) வேதாகம போதனைகள்
2) சூழ்நிலை வழங்கும் சாட்சிகள்
3) விசுவாசிகளின் ஆலோசனைகள்
நம்முடைய ஆவியில் பரிசுத்தாவியானவரின் சாட்சியத்தோடு இந்த மூன்று வெளிப்புறமான ஏதுக்களும் இணைந்திருப்பதைக் கண்டு தேவ சித்தத்தை நாம் துல்லியமாக அறிந்து கொள்ள முடியும்.
1. வேதாகம போதனைகள் :
நாம் சரியான உபதேசத்தில் போதிக்கப்படும்படிக்கும், நீதியின் பாதையில் நடக்கும்படிக்குமே வேதாகமம் நமக்கு அருளப்பட்டிருக்கிறது (2தீமோ.3:16,17), எத்தனையோ விஷயங்களில் “தேவனுடைய சித்தம்” வேதாகமத்தில் ஏற்கெனவே தெளிவாக நமக்கு வெளிப்படுத்தப்பட்டிருக்கிறது. உதாரணமாக, திருமண விஷயத்தில் ஒரு அவிசுவாசியான நபரை (பெயர் கிறிஸ்தவர்களாய், ஒழுங்காக சபைக்குச் செல்லுபவர்களும் அவிசுவாசிகளே!) திருமணம் செய்ய யோசிக்கும் போது, அதைக் குறித்து தேவனுடைய வார்த்தை மிகத் தெளிவாகவே “அந்நிய நுகத்திலே அவிசுவாசிகளுடன் பிணைக்கப்படாதிருப்பீர்களாக” என பகிரங்கமாய் வெளிப்படுத்தப்பட்டிருக்கிறது (2கொரி.6:14).
அது போலவே, பொருளாதாரத் தேவையோடு உள்ள ஒரு சகோதரனை நாம் கண்டால், அந்த சகோதரனுக்கு நாம் உதவி செய்ய வேண்டுமென தெளிவாகவே யாக்கோபு.2:15,16; 1யோவான்.3:17 வசனங்களில் காண்கிறோம். உங்கள் சக விசுவாசியோடு வழக்கு உண்டாகி, நியாயத்திற்காக வழக்குமன்றம் செல்ல வேண்டுமா? அல்லது வேண்டாமா? என நீங்கள் அறிய விரும்பும்போது, அதற்கு வேதாகமம் திட்டவட்டமாக “இல்லை” என்றே பதில் உரைக்கிறது (1கொரி.6:1-8), மேலும் பொய் சொல்லுவதும், திருடுவதும் எப்போதுமே தவறு எனவும் வேதாகமம் போதிக்கிறது (எபே.4:25, 28). உங்களுக்கும் மற்றொரு விசுவாசிக்கும் இடையில் மனக்கசப்பு ஏற்படும் வகையில், அதனிமித்தமாய் நீங்கள் அவருக்கு ஏதோ ஒரு விதத்தில் தீங்கு செய்திருந்தால், அப்பொழுது நீங்கள் என்ன செய்ய வேண்டுமெனவும் வேதாகமம் தெளிவாகக் கூறுகிறது. ஆம், அவரிடம் சென்று ஒப்புரவாகும்படி நீங்கள்தான் முதலாவதாக முயற்சிக்க வேண்டுமென வேதம் திட்டமாய் கூறுகிறது (மத்தேயு.5:21-24).
ஒரு கம்பெனிக்கோ அல்லது ஒரு கல்வி சாலைக்கோ வேலையில் சேரும்படியான “ஒப்பந்த பத்திரம்” எழுதி நாம் கையெழுத்திட்டிருந்தால், இதைவிட நல்ல இடத்தை எங்கோ கண்டதினிமித்தம் அந்த ஒப்பந்தத்தை முறிக்கலாமா? அல்லது அந்த கால வரையறையை தாண்டலாமா? என்பதெல்லாம் அறியும்படி தேவ சித்தத்தை நாட அவசியமே இல்லை. தேவனோடு வாசமாயிருக்கும் ஒருவன் “ஆணையிட்டதில் தனக்கு நஷ்டம் வந்தாலும் அதில் தவறாதிருக்கிறான்” என சங்கீதம்.15:4-லும், “உடன்படிக்கையை மீறாதவனை தேவன் நேசிக்கிறார் என்றும், மீறுகிறவனை தேவன் வெறுக்கிறாரென்றும்” நீதிமொழிகள்.12:22-ம் வசனத்திலும் தெளிவாகவே காண்கிறோம். ஒரு விசுவாசி தன்னுடைய வாக்கை காத்து நடவாவிட்டால், அது அவனுக்கு பெருத்த அவமானமும் அபகீர்த்தியுமேயாகும்.
மேலும், நாம் ஒருவருக்கும் “கடன்படக்கூடாது” (ரோமர்.13:8) எனவும் வேதாகமம் தெளிவாகக் கூறுகிறது.
இவ்வாறு வேதாகமம் 'குறிப்பாக' கட்டளை கொடுத்திருக்கிறது போலவே, 'பொதுவாக' நம்மை வழிநடத்தும் கோட்பாடுகளையும் நமக்கு வரையறை செய்து தந்திருக்கிறது. உதாரணமாக, திருமணத்தை ஒழுங்கு செய்கிற வேளையில் மணமகனாக வேண்டிய இளைஞன், தானும் சமுதாயத்திலுள்ள மற்றவர்களைப்போலவே “வரதட்சணை” கேட்கலாமா என்றே தடுமாறுகிறான்! அதற்கு தேவனுடைய வார்த்தை “பொருளாசையைக் குறித்தும், பணஆசையைக் குறித்தும் ஜாக்கிரதையாயிருங்கள்” எனத் தெளிவாகவே எச்சரிக்கை விடுக்கிறது. இன்னும் அதிகமாய் வேதாகம போதனை, “வாங்குவதைப் பார்க்கிலும் கொடுப்பதே பாக்கியம்” என வலியுறுத்திக் கூறுகிறது (அப்.20:33-35).
இதிலிருந்து, வரதட்சணையை கேட்பவர்கள் மீதோ அல்லது அதை எதிர்பார்ப்பவர்கள் மீதோ தேவன் ஒருபோதும் தன் அங்கீகாரத்தைத் தரவே மாட்டார்!! என்பது வெளிப்படையான சத்தியமாகவே இருக்கிறது.
சூதான விளையாட்டுகள் மூலம் அல்லது லாட்டரி டிக்கெட் மூலம் ஆஸ்திகளைச் சேர்ப்பது குறித்து என்ன? அதற்கு வேதாகமம் “வன்கண்ணன் செல்வனாகிறதற்குப் பதறுகிறான். வறுமை தனக்கு வருமென்று அறியாதிருக்கிறான்” என தெளிவாக எச்சரிக்கிறது (நீதி13:11;28:20; 1தீமோ.6:9-11). இந்த வசனங்கள் போதிப்பது என்ன? ஒரு விசுவாசி லாட்டரியிலோ அல்லது பந்தயத்திலோ அல்லது சூதாட்டத்திலோ பங்குபெற்றிருந்தால் தேவன் அவனை அங்கீகரித்திடமாட்டார்!
தேவனுடைய வசனம் “நம் கால்களுக்குத் தீபமும், பாதைக்கு வெளிச்சமுமாயிருக்கிறது” என கூறும் வாசகங்கள் எத்தனை ஆச்சரியமாயிருக்கிறது! (சங்.119:105).
சில அபூர்வமான சூழ்நிலைகளில் தனது வழிநடத்துதலை நம்முடைய அனுதின வேத வாசிப்பு பகுதியின் மூலமாயும், நமக்குத் தந்திட முடியும். ஆனால், வேத வாசிப்பின் உண்மையான கருத்தை அறிந்திட முயற்சிக்காமல் நமக்கு ஏற்றாற்போல் எண்ணி வாசிக்கும் அபாயத்திற்குள் நாம் சென்றுவிடாதிருக்கவும் கவனம் கொண்டிருக்க வேண்டும். நம் சூழ்நிலையைக் குறித்த யாதொரு உணர்வு மேயில்லாமல், நாம் வாசித்த வசனம் நம் கவனத்திற்கு கொண்டுவரப்படுவது மாத்திரமே சரியானதாயிருக்கும்.
அதுவல்லாமல் நம் அன்றாட வேத வாசிப்பில் நமக்கு ஏற்றவிதமாய் வசனங்களைத் தேடுவது ஞானமற்ற செயலாகும்!
“தியான நேரத்தின்” நோக்கம் அது அல்லவே அல்ல! அவ்வாறு செய்துவிட்டால், நாம் மிக எளிதில் வழிதவறி சென்றுவிடுவோம்.
வாலிபனான ஒரு விசுவாசி அமெரிக்க தேசத்திற்குச் செல்லுவதற்கே தன் முழு கவனத்தையும் செலுத்தியிருந்தான். ஆனால், தேவனோ அவன் இந்திய தேசத்தில் இருப்பதற்கே விருப்பம் கொண்டிருந்தார். மேற்கத்திய நாட்டின் பொருளாதார செழிப்பு அவனை ஈர்த்து கவர்ந்து கொண்டபடியால், ஏசாயா.11:14-ஆம் வசனத்தில் “அவர்கள், மேற்கே இருக்கிற........ எல்லைகளின் மேல் பாய்ந்து சென்று (Fly-பறந்து சென்று)” என்ற வசனத்தைக் கண்டவுடன், தான் அமெரிக்காவுக்குச் செல்ல தேவன் உற்சாகப்படுத்துகிறார் என்ற வஞ்சகமான முடிவிற்கே வந்துவிட்டான்!? பாருங்கள், நம் இருதயம் அத்தனை வஞ்சனையுள்ளது... நம்முடைய எதிரியாகிய சாத்தானும் ஓர் தந்திரசாலியான சத்துரு! இந்த இரண்டு எதிரிகளைக் குறித்தும் கவனம் கொண்டு, நம்மையே நாம் காத்துக்கொள்ள வேண்டியது மிகவும் அவசியம்!!
தேவன் தம்முடைய அனந்த ஞானத்தின்படி, ஓர் வசனத்தை அந்த அதிகாரத்திற்கு பொருந்தாமலே “நமக்காக எடுத்துத் தந்து” நம்மைநடத்த முடியும்! ஆனால் அப்படி அபூர்வமாய் செய்தேயல்லாமல், தொடர்ந்து செய்திடமாட்டார்!! அப்படி அவர், ஒரு அதிகாரத்தின் பொருளுக்கு அப்பாற்பட்டு அபூர்வமாய் ஒரு வசனத்தைத் தந்தாலும், ஏற்கெனவே அவர் நமக்குத் தந்த ‘நடத்துதலை' உறுதி செய்வதற்கே அவ்வாறு செய்வார். ஆகவே முக்கியமான விஷயங்களில், சில வசனங்களை “நம்முடைய நடத்துதலுக்கென” சுயமாய் உபயோகப்படுத்தவே கூடாது.
2. சூழ்நிலை வழங்கும் சாட்சிகள் :
சகலத்திற்கும் ஊற்றுக்கண்ணாய் இருப்பவரே தேவன். ஆகவே, நம் முழு சூழ்நிலைகளையும் தேவனே ஆண்டு கொண்டு, தம்முடைய சித்தத்தை நமக்கு காண்பித்திட முடியும். சில நிகழ்ச்சிகள் நமக்கு நடைபெறும்படி அனுமதித்து அதன்மூலமாய் ஆவியானவர் தந்த சாட்சியின்படி நாம் நடத்தப்படுவதை உறுதி செய்வார்! அல்லது, தவறான பாதைக்கு நாம் சென்று விடாதிருக்கவும் அப்படிச்செய்வார். இதைக்குறித்து ஜார்ஜ்முல்லர், சங்கீதம். 37: 23-ம் வசனத்தை கீழ்கண்டவாறு விவரித்து “நல்ல மனுஷனுடைய நடைகளை கர்த்தர் உறுதிபடுத்துவார்! அல்லது, அவனுடைய நடைகளை “நிறுத்தவும்” செய்கிறார்” என அனுபவபூர்வமாகக் கூறினார்.
ஒரு குறிப்பிட்ட அளவிற்கு, சாத்தான்கூட சூழ்நிலைகளை உருவாக்கி அதற்குள் நம்மை நடத்தி வழிதப்பிப்போகச் செய்திட முடியும் என்ற உண்மையையும் நாம் மனதில் கொள்வோமாக! இன்று அநேகர் தங்கள் வாழ்க்கைத் துணையை தேர்ந்தெடுக்கும் விஷயத்தில், சாத்தான் உருவாக்கிய சூழ்நிலைகளுக்குள் நடத்தப்பட்டு, அதில் சிக்கி வஞ்சிக்கப்பட்டு போனார்கள்! இந்த வஞ்சகத்திலிருந்து நாம் தப்பிப்பதற்கு, இரண்டாம் அதிகாரத்தில் குறிப்பிடப்பட்ட “நடத்தப்படுதலின் நிபந்தனைகளை” கவனிப்பது நல்லது.
ஆகவே தேவனால் உருவாக்கித் தரப்பட்ட சூழ்நிலைகளுக்கே நாம் அடங்கி அதை ஏற்றுக்கொள்ளவேண்டும். ஆனால், சாத்தான் உருவாக்கிய சூழ்நிலைகளுக்கோ நாம் எதிர்த்து நிற்க வேண்டும்!
இவ்விஷயத்தில் நமக்குத் தெளிவில்லாதிருந்தால், நாம் உடனே ஆண்டவரிடத்தில் திரும்பி “ஆண்டவரே, இந்த சூழ்நிலை உம்மிடத்திலிருந்து உருவானதோ, அல்லது சாத்தானிடத்திலிருந்து உருவானதோ என்பது எனக்குத் தெரியவில்லை. ஆகிலும், நானோ என்ன விலைக்கிரயம் செலுத்தியாகிலும் உம்முடைய பூரண சித்தத்தையே செய்ய விரும்புகிறேன். ஆகவே “உம்முடைய அருமையானதை” நான் இழந்து வஞ்சிக்கப்பட்டுப் போகாதபடிக்கு என்னை இரட்சித்தருளும். இது உம்மிடத்திலிருந்து உருவான சூழ்நிலையாயிருந்தால், அதை மகிழ்வுடன் ஏற்றுக்கொள்கிறேன்! சாத்தானிடமிருந்து உருவான சூழ்நிலையாயிருந்தால், உம்முடைய நாமத்தினாலே அவனைக் கடிந்து கட்டுகிறேன்!” என்றே ஜெபம் ஏறெடுங்கள். நாம் மாத்திரம் அவருக்கு முன்பாக உண்மையாயிருந்து அவருடைய கற்பனைகளைக் கைக்கொண்டு வாழ்ந்தால் “நாம் செல்லும் பாதையைக் காப்பாற்றி” சகலமும் நமக்கு நன்மைக்கேதுவாக நடக்கும்படியே செய்வார் (நீதிமொழிகள்.2:8; ரோமர்.8:28). பவுல் தெசலோனிக்கேயாவிற்கு செல்லாதிருக்க சாத்தான் தடை செய்தான். ஆனால், அவருக்குப் பதிலாய் தீமோத்தேயு அங்கு சென்று தேவனுடைய நோக்கத்தை நிறைவேற்றினார் (1தெசலோனிக்கேயர்.2:18; 3:1,2).
சூழ்நிலைகளின்படியான வழி நடத்துலை அப்போஸ்தலர் நடபடிகளின் புத்தகத்தில் பல இடங்களில் நாம் காண்கிறோம். உபத்திரவங்கள் மூலமாய், எருசலேம் சபையானது நாலாதிசையும் சிதறி சுவிசேஷம் பரவுவதற்கு தேவன் வகை செய்தார் (அப்.8:1). ஒவ்வொரு இடத்திலும் உபத்திரவங்கள் பெருகினதினிமித்தம் பவுலும், பர்னபாவும் பல இடங்களுக்குச் சென்றனர். ஒரே இடத்தில் அவர்களால் இருக்க முடியவில்லை (அப்.13: 50,51;14:5,6,19,20). இவை அனைத்தும் நம் ஆண்டவருடைய மாதிரிக்கு ஒப்பாகவேயிருக்கிறது (மத். யோவான்.7:1). தேசத்தில் வந்த “பஞ்சத்தின் மூலமாய்” சவுலும் பர்னபாவும் எருசலேமுக்குச் செல்லும்படி தேவன் நடத்தினார் (அப்.11:28-30), அங்குதான் இவர்கள் “இடைவிடா ஜெபத்தின்” வல்லமையை கற்றுக் கொண்டார்கள் (அப்.12:5), இவர்கள் அந்தியோகியாவிற்கு திரும்பி வந்தவுடன், தாங்கள் பெற்ற “ஜெப ஆவியை” அங்குள்ள தங்கள் உடன் ஊழியர்களுக்கும் பகிர்ந்து கொண்டதினிமித்தம், தூரதேசங்களுக்கும் கர்த்தருடைய ஊழியம் பரவிச் சென்றது (அப்.12:25;13:3).
பிலிப்பு நாட்டில் ஏற்பட்ட “எதிர்ப்பான சூழ்நிலைகளை” தேவன் பயன்படுத்தி, தேவையோடு இருந்த ஒரு சிறைச்சாலை அதிகாரிக்கு பவுலும் சீலாவும் சுவிசேஷத்தைப் பிரசங்கிப்பதற்கு தேவன் நடத்தினார் (அப்போஸ்தலர்.16:19,34). அப்போஸ்தலர் நடபடிகளின் கடைசி எட்டு அதிகாரங்கள், தேவன் எவ்வாறெல்லாம் ‘சூழ்நிலைகளைப் பயன்படுத்தி' பவுல் ஒருபோதும் சந்தித்திராத ஏராளமான ஜனங்களுக்கு சுவிசேஷத்தைப் பிரசங்கிக்கும்படி செய்தார் என காண்கிறோம் (பிலிப்பியர்.1:12).
உலகத்தில் தலைசிறந்த மிஷனெரிகளாய் திகழ்ந்தவர்களில் சிலர், சூழ்நிலைகளின் மூலமாகவே தங்கள் மிஷனெரி ஸ்தலங்களுக்கு
நடத்தப்பட்டார்கள். மிஷனெரி டேவிட் லிவிங்ஸ்டன் முதலாவதாக சீன தேசத்திற்குச் செல்லும்படியே நடத்தப்பட்டு, அந்த ஊழியத்திற்கெனமருத்துவப் பயிற்சியும் எடுத்துக் கொண்டார். ஆனால் சீன தேசத்திற்குஅவர் செல்ல ஆயத்தமானபோது, சீனாவில் ஏற்பட்ட “அபின் யுத்தத்தால்” சீனாவின் வாசல் அடைபட்டுப்போனது! இச்சமயத்தில் லண்டன் மிஷனெரி சங்கம் அவரை ‘வெஸ்ட் இண்டீஸ்’ போகும்படி ஆலோசனை கூறியது. ஆனால், அங்கு ஏற்கனவே அநேக மருத்துவர்கள் இருக்கிறார்கள் எனக்கூறி அந்த ஆலோசனையை மறுத்து விட்டார்! இறுதியாக ராபர்ட் மோபெட் என்ற மிஷனெரியின் தொடர்பு மூலமாய், லிவிங்ஸ்டன் ஆப்பிரிக்காவிற்குச் சென்றார்!!
அதோனிராம் ஜட்சன் இந்தியாவிற்கு மிஷனெரி ஊழியம் செய்யவே வைராக்கியம் பெற்றிருந்தார். அந்த தீர்மானத்தோடுதான் அமெரிக்காவிலிருந்து கப்பல் மார்க்கமாய் புறப்பட்டு வந்தார். ஆனால் இந்தியாவிற்கு வந்தவுடன் அதிகாரிகள் அவருக்கு அனுமதிதர மறுத்து விட்டார்கள்! சென்னையிலிருந்த அவர், ஒரு குறிப்பிட்ட தேதிக்குள் தேசத்திலிருந்து வெளியேறவேண்டும் என்ற கட்டளையையும் பெற்றார். அந்த குறிப்பிட்ட தேதிக்கு முன்பாகவே சென்னையிலிருந்து புறப்பட்ட ஒரே ஒரு படகில் அவர் பயணம் மேற்கொள்ள வேண்டிய கட்டாயம் ஏற்பட்டுவிட்டது. அந்த படகோ பர்மாவுக்கு சென்றபடியால், ஜட்சன் தன் எஞ்சிய வாழ்வு முழுவதையும் பர்மா ஊழியத்திற்கே அர்ப்பணம் செய்தார்!!
ஆப்பிரிக்காவிலும், பர்மாவிலும் மிஷனெரி பணியை ஜெயமாய் நிறைவேற்றிய இந்த இருதாசர்களும் 'தேவன் உருவாக்கிய சூழ்நிலைகளுக்குள்' திட்டமாய் நடத்தப்பட்டார்கள் என்பதற்கு நிரூபணமாயிருக்கிறது!
தேவன் தெரிந்து கொள்ளாத பாதையில் நாம் பிரவேசிப்பதை தடுப்பதற்காக, நம்மை வியாதிப்படுக்கையில் கிடத்தியோ அல்லது ரெயில் வண்டியைத் தவறவிட்டோ அல்லது நேர்முகத்தேர்வில் கலந்து கொள்ளாதிருக்கும்படி செய்தோ, நம்மைத் தடுத்துவிடுகிறார்! நாம் மாத்திரம் ஆண்டவரின் ஆளுகையில் ஜீவிப்பவர்களாயிருந்தால் “ஏமாற்றங்கள் கூட"அவர் ஏற்படுத்திய நியமனங்களாகவே நமக்கு மாறிவிடும்!
நாம் அதிக வாஞ்சையோடு நாடிய அல்லது ஜெபத்தோடு கேட்ட யாதொன்றை நாம் பெறவில்லையென்றால், “அதைவிட மேலான ஒன்றை” தேவன் நமக்கென வைத்திருக்கிறார் என்பதில் முழு நிச்சயம் கொண்டிட முடியும்!
ரெயில் வண்டியை தவற விட்டதாலும், ஏற்றிச் செல்லவேண்டிய படகு தாமதித்ததாலும், நான் தேவையுள்ள ஆத்துமாக்களுடன் பேசும் வாய்ப்பை பெற்று, அந்த நாளிலேயே அவர்களும் தங்கள் இருதயத்தை ஆண்டவருக்கு ஒப்புக்கொடுக்கும் அபூர்வம் சம்பவிக்கிறது. இன்னொரு சமயம், நான் விரும்பாத மற்றொரு கப்பலுக்கு மாற்றம் செய்யப்பட்டபோது, அங்கிருந்த வாலிப கப்பலோட்டிக்கு சுவிசேஷம் கூற வழிதிறந்து, அவரும் தன் ஜீவியத்தை ஆண்டவருக்கு ஒப்புக்கொடுத்து ஞானஸ்நானமும் பெற்றுவிட்டார்! ஆம், தேவன் ஒருபோதும் தவறு செய்வதே இல்லை. நம் தேவன் முக்காலத்திற்குமுரிய பாதுகாப்பின் தேவன்! நம் சூழ்நிலைகளை அவருடைய மகிமைக்கும், நம்முடைய நன்மைக்கும் ஏதுவாகவே கட்டளையிடுவார் என, நாம் அவர்மீது பூரண நம்பிக்கை வைத்து விடலாம்!
நம் ஜீவியப்பாதையில் இடையூறு ஏற்படும் போது, அந்த சூழ்நிலையை மாற்றி “தம்முடைய சித்தத்தை” நமக்கு வெளிப்படுத்தும்படி நாம் தேவனிடம் ஜெபிப்பது தவறாகாது! இந்திய கடற்படையில், 1964-ம் ஆண்டு மே மாதம் லெப்டினென்ட் அதிகாரியாயிருந்த என் பதவியை ராஜினாமா செய்யும்படி ஆண்டவர் அழைத்தார். நானும் என் ராஜினாமாவை சமர்ப்பித்தேன். ஆனால் என்னுடைய ராஜினாமாவை கப்பற்படை தலைமையகம் மறுத்துவிட்டது! என் இருதயத்தில் நான் உணர்ந்திருந்த பரிசுத்தாவியின் உள்ளான சாட்சிக்கு எதிராகவே சூழ்நிலைகள் அமைந்தன!
நானோ ஆண்டவரை நோக்கி “கர்த்தாவே இந்த சூழ்நிலைகளை மாற்றி, கப்பற்படையிலிருந்து என்னை விடுவித்து, உம்முடைய அழைப்பை அதன் மூலமாய் உறுதிப்படுத்துவீராக!” என ஜெபித்தேன். நான் தொடர்ந்து என் பதவி ராஜினாமாவை மூன்று முறை விண்ணப்பித்தேன். கடைசியாக, இரு வருடங்கள் கழித்துதான் நான் விடுவிக்கப்பட்டேன்! இந்த இரண்டு வருட இடையூறு சாத்தானால் தூண்டப்பட்டது என்பதை பின்புதான் தெளிவாகக் கண்டேன். இருப்பினும் எல்லா சூழ்நிலைகளையும் தேவன் ஆண்டுகொண்டு அரசாங்கத்தின் மீதும், பூமிக்குரிய வல்லமையின்மீதும் தேவனுக்கிருந்த முழு அதிகாரத்தை நான் விசுவாசித்திடவே என்னை பெலப்படுத்தினார்! அவருடைய வழிகளை நான் அதிகமாய் கற்றுக் கொள்ளும்படியும் செய்தார்!!
மெய்யாகவே, அவரே எந்த கதவுகளுக்கும் உரிய திறவுகோலை உடையவருமாயிருக்கிறார். ஒரு கதவை அவர் திறந்தால், ஒருவனும் அதைப் பூட்டமுடியாது! ஒரு தடவை அவர் பூட்டினால் ஒருவனும் அதைத் திறந்திடவும் முடியாது!! (வெளி.3:7). ஒரு ராஜாவின் இருதயத்தையும், தான் விரும்பும் திசைக்குத் திருப்ப நம் தேவனால் முடியும்! (நீதிமொழிகள். 21:1; எஸ்றா.6:22),
சூழ்நிலைகளை எதிர்த்து நிற்பதற்கும் தேவன் நம்மை வழிநடத்தக் கூடும்! எருசலேமில் முதலாவது உபத்திரவ அலை வீசியபோது, அதைக்கண்டு அப்போஸ்தலர்கள் ஓடிவிடாமல் “மனதைரியத்திற்காகவே” ஜெபம்செய்தார்கள். தேவனும் அவர்களைத் தம்முடைய ஆவியினால் நிரப்பி தன் வல்லமையை வெளியரங்கப்படுத்தி, எருசலேமை நடுங்கும்படி செய்துவிட்டார்! ஏனெனில் சீஷர்கள் சிதறுண்டு போக வேண்டிய நேரம் இன்னமும் வரவில்லை! (அப்போஸ்தலர்.4:29-33; 5:11-14).
சமாரியாவில் தங்கியிருந்து வல்லமையாய் உபயோகப்படுத்தப்பட்ட பிலிப்பு, அந்த சூழ்நிலைக்கு நேர்மாறாக சமாரியாவை விட்டு வனாந்தரத்திற்குப் போகும்படியே கட்டளை பெற்றான்! (அப்.8:26).
ஆகவே சூழ்நிலைகள் ‘எப்போதுமே' தேவ சித்தத்தைக் காட்டும் அடையாளமாக இருப்பதில்லை! நம்முடைய ஆவியில் பரிசுத்தாவியானவர் தரும் சாட்சியோடும், வேதாகமத்தில் தேவன் தரும் சாட்சியோடும் சூழ்நிலைகள் இசைவாய் இணைந்திருந்தால் மாத்திரமே அதை தேவசித்தமாக கருதமுடியும்.
ஆம், தன்னுடைய பிள்ளைகள் சூழ் நிலைகளால் அங்குமிங்கும் அலைக்கழிக்கப்பட தேவன் விரும்புவதே இல்லை! சகல சூழ்நிலைகளுக்கும் தேவன் ஆண்டவராய் இருக்கிறார். ஆளுகை செய்யும் அவரது எஜமானத்துவத்தில் தன்னுடைய பிள்ளைகளும் பங்குபெறவே தேவன் விரும்புகிறார்!
தேவனுடைய சித்தத்தை “ஒரு அடையாளத்தின் மூலம்” சுட்டிக் காட்டும்படி நாம் தேவனிடத்தில் கேட்பது சரிதானா? என்ற கேள்வியும் இன்று அநேகரிடத்தில் உள்ளது. பழைய ஏற்பாட்டின் நிகழ்ச்சிகளில் சில மனிதர்கள், அவருடைய சித்தத்தை சுட்டிக்காட்டும் ஒரு அறிகுறியை தேவனிடத்தில் கேட்டிருக்கிறார்கள். ஆபிரகாமின் வேலைக்காரன் அவ்வாறு ஒரு அறிகுறியை' கேட்டுத்தான் தேவன் தெரிந்துகொண்ட மணமகளை கண்டுபிடித்தான்! (ஆதியாகமம். 24:10-27). அதேபோல் 'ஒரு அடையாளத்தின் மூலம் அவருடைய சித்தத்தை உறுதி செய்வதற்கு கிதியோன் தேவனிடத்தில் கேட்டான். அடுத்த நாள் இராத்திரியில் 'அதே அடையாளத்தை மாற்றி' காண்பிக்கும்படியும் கிதியோன் தேவனிடத்தில் கேட்டான்! இந்த நிகழ்ச்சிகளுக்கும் தேவன் பதில் தந்து தம்முடைய சித்தத்தை உறுதிப்படுத்தினார் (நியா.6:36-40). “புயலுக்கு காரணம் யார்?” என அறிய கப்பலிலிருந்தவர்கள் சீட்டு போட்டார்கள்! அதற்கு தேவனும் பதில் தந்து விட்டார் (யோனா.1:7). வேறு சில நிகழ்ச்சிகளிலும் “சீட்டுப்போடும்” வழக்கம் இருந்ததை நாம் வேதத்தில் பார்க்கிறோம் (யோசுவா.7:14; 1சாமு.10:20; 14:41-44; நீதி.16:33), புதிய ஏற்பாட்டில் ஒரே ஒரு சந்தர்ப்பத்தில் மாத்திரமே “தேவனுடைய சித்தத்தை” சுட்டிக்காட்டுவதற்கு ஒரு அடையாளத்தை தேவனிடம் கேட்டார்கள்.... இருப்பினும், இந்த செயல் பெந்தெகொஸ்தே நாளுக்கு முன்பு நடந்த செயலேயாகும் (அப்.1:23-26).
ஆனால் பரிசுத்தாவியானவர் ஊற்றப்பட்டவுடன், புதிய ஏற்பாட்டில் உள்ள விசுவாசிகள் “அடையாளத்தின் மூலம் தேவனுடைய சித்தம் அறிந்துகொள்ள நாடியதாக” ஒரு நிகழ்ச்சி கூட குறிப்பிடப்படவில்லை!!
இதிலிருந்து பழைய ஏற்பாட்டின் பொதுவான நடத்துதலின்படி இப்போது தேவன் நடத்துவதில்லை என்பதை நாம் விளங்கிக்கொள்கிறோம். ஆம், 'அறிகுறியை நாடிய' வழிமுறைகள் பழைய ஏற்பாட்டின் காலத்தில் பயன்படுத்தப்பட்டது!.... ஏனெனில், பரிசுத்தாவியானவர் மனிதனுக்குள் அன்று வாசம் செய்திடவில்லை!!
இருப்பினும், நம்முடைய தொய்ந்துபோன ஆவியை உற்சாகப்படுத்துவதற்காக அவ்வப்போது' சில அடையாளங்களால் தேவன் தம் சித்தத்தை உறுதிப்படுத்த கிரியைச் செய்கிறார். எந்த வழியிலும் தேவனுடைய சித்தத்தை வெளிப்படையாகக் காணமுடியாத சமயத்தில் மாத்திரமே 'ஒரு அடையாளத்தை' நாம் தேவனிடம் கேட்கத் துணியவேண்டும். ஆகிலும், நம் சொந்த வழியில் செல்வதற்கு அனுகூலமான ஒரு அடையாளத்தைக் கேட்பதும் தவறாகும்!
தேவன் நம்மை திட்டமாய் நடத்த விரும்புகிறார் என அறிந்த பிறகு, அதைத் தவிர்ப்பதற்காக "ஓர் அற்புதத்தை அடையாளமாகக் கேட்பது எவ்விதத்திலும் சரியல்ல!
உதாரணமாக, வழக்கமாய் வரும் புகைவண்டி “ஐந்து மணி நேரம்" தாமதமாய் வந்ததை, தேவனுடைய சித்தமென நாம் எடுத்துக்கொள்வது முறைதானா? அதுபோலவே, நாம் தெரிந்து கொண்டவழியில் செல்ல வேண்டுமென்ற துடிப்பில் 'வழக்கமான ஒன்றை' அடையாளமாகக் கேட்பதும் சரியல்ல! உதாரணமாக, பருவ மழைகாலத்தில், இன்று காலையில் மழை பெய்தால், நான் செல்ல விரும்பும் வழி தேவ சித்தமென அறிவேன் என கூறுவதும் முறைதானா?
இவ்வாறெல்லாம் அடையாளம் தேடுவது, தங்கள் சுய சித்தத்தை நிறைவேற்ற வேண்டும் என்ற இவர்களது இச்சையே அல்லாமல், தேவசித்தம் செய்யவேண்டும் என்ற பேரார்வம் அல்லவே அல்ல!!
சில கிறிஸ்தவர்கள், ஒரு வசனத்தைத் தங்களுக்கு அடையாளமாகக் காட்டும்படி கண்களை மூடிக்கொண்டு, வேதாகமத்தை திறந்து தங்கள் விரலை வைத்து, பின்பு கண் திறந்து விரல் வைத்த வசனத்தை வாசிப்பார்கள்! இதுபோன்ற வழிமுறைகள் நம்மை வழிதவறிப் போகச்செய்வது மாத்திரமல்லாமல்.... அது, மடைமையான செயலுமாகும்! வேதாகமம் ஓர் மந்திர புத்தகமல்ல! ஒருபோதும் வேதாகமத்தை மந்திரப் புத்தகமாகக் கையாளத் துணிவு கொள்ளாதிருப்போமாக!! அடையாளத்தை மாத்திரமே பிரதான நடத்துதலாய் கொள்வது முற்றிலும் வேத வசனத்திற்குப் புறம்பானதாகும். எப்போதுமே அடையாளத்தைத் தேடுகிறவர்கள், ஆவிக்குரிய வளர்ச்சியற்றவர்கள் என்றே தங்களை வெளிப்படுத்திக் காண்பிக்கிறார்கள்!
3. விசுவாசிகளின் ஆலோசனைகள் :
விசுவாசிகள் ஒரே சரீரத்தின் அவயவங்களாக இணைந்து செயல்பட வேண்டியதின் அவசியத்தை புதிய ஏற்பாடு அதிக முக்கியத்துவம் கொடுத்து வலியுறுத்துகிறது. எந்த ஒரு அவயவமும் தனித்து இயங்க இயலாது! நாம் நிலைத்திருந்து உயிர்வாழ்வதற்கு ஒவ்வொரு அவயவமும் மற்ற அவயவத்தை சார்ந்தே இருக்க வேண்டும். நாம் நடத்தப்படும் விஷயத்திலும் “விசுவாசிகளின் ஐக்கியத்திற்கு" தேவன் நிச்சயமாய் அதிக மதிப்புத் தருகிறார். இந்த ஏதுகரத்தை நமக்குத் தந்தருளி, தேவனுடைய பூரண சித்தத்தை நாம் இழப்பதிலிருந்து தேவன் நம்மை பாதுகாக்கிறார்.
ஒரு குறிப்பிட்ட முயற்சியில் எல்லா நன்மைகளையும், தீமைகளையும் நாமே முழுவதும் கண்டுணர முடியாது! நாம் எடுக்க வேண்டிய தீர்மானத்தில், வேறொரு கோணத்தில் கண்டு அதற்கு பக்தியுள்ள தேவ மனிதர்கள் கூறும் ஆலோசனை மிக மதிப்புள்ளதாய் இருந்து நமக்கு உதவி செய்திட முடியும். குறிப்பாக, சில “முக்கியமான தீர்மானங்களில்” பக்தியுள்ள மனிதர்களின் ஆலோசனையை நாடுவது நமக்கு நல்லது! ஆனால், பெருமை நிறைந்த சுய திருப்தியில், தேவன் நியமனம் செய்த இவ்வித ஆலோசனை முறைகளை நாம் அலட்சியப்படுத்தினால் நமக்குத்தான் நஷ்டம் ஏற்படும்!
இதைக் குறித்து வேதம் கூறும்போது “அநேக ஆலோசனைக்காரர்களால் மிகுந்த பாதுகாப்புண்டு.... பிறருடைய ஆலோசனையை கேட்காமல் உங்கள் சொந்தத் திட்டத்தில் முன்னேற வேண்டாம்... ஒரு ஞானியின் ஆலோசனை கன்மலையிலிருந்து புறப்படும் ஜீவ ஊற்றுக்கு சமம். அதைப் பெற்றவர்கள் தங்கள் முன் நிற்கும் பள்ளங்களின் வீழ்ச்சிக்கு விலகி இருப்பார்கள்... தங்களுக்கு ஆலோசனை தேவையில்லை என மூடன் எண்ணுகிறான், ஆனால் ஞானமுள்ளவனோ பிறருடைய ஆலோசனையை கவனித்துக் கேட்கிறான்.... நல்ல மனுஷன் தன் நண்பர்களிடம் ஆலோசனையை கேட்பான்! துன்மார்க்கனோ பாய்ந்து சென்று வீழ்ச்சியடைவான்!!'" (நீதி.24:6, 20:18, 13:14, 12:15,26 - Living Bible) என ஆலோசனையின் மேன்மையை இந்த வசனங்கள்
நேர்த்தியாகக் கூறுகிறது.
இருப்பினும், இந்தப் பகுதியிலும் இரண்டு அபாயங்கள் உண்டு. தேவ மனிதர்களின் ஆலோசனையை முழுவதுமாய் அசட்டை செய்து 'சுயாதீனமாய் செயல்படும்' அபாயம்! மற்றொன்று, இது தேவனுடைய பரிபூரண சித்தம்தானா? என்ற கேள்விக்கே இடந்தராமல், அவ்வளவாய் முற்றிலும் பிறருடைய ஆலோசனையை சார்ந்து 'அப்படியே ஏற்றுக்கொள்ளும்' அபாயம்!! இந்த இரண்டு அபாயங்களில் யாதொன்றை நாம் பற்றியிருந்தாலும், ஒன்று நாம் வழி தவறி சென்றுவிடுவோம்! அல்லது நம் ஜீவ காலமெல்லாம் ஆவிக்குரிய வளர்ச்சியற்றவர்களாய் தேய்ந்து நிற்போம்!
நம் சக விசுவாசிகளிடம் ஆலோசனையைக் கேட்பதை தேவன் எவ்வளவு விரும்புகிறாரோ, அதே அளவிற்கு அவர்களுடைய ஆலோசனைக்கு நாம் அடிமையாகாதிருக்கவும் எதிர்பார்க்கிறார்... அவர்கள் எத்தனை அதிகமான பரிசுத்தவான்களாய் இருந்தாலும் ஒரு பொருட்டல்ல!!
வேதாகமம் சத்தியத்தை எப்போதும் சமநிலைப்படுத்தியே கூறும். துரதிருஷ்டவசமாய், மனுஷனோ ஒரு கோடிக்கு இழுத்துச் செல்லப்படக் கூடியவனாயிருக்கிறான். இதனிமித்தமே இன்றைய கிறிஸ்தவ உலகில் ஏராளமான துர்உபதேசங்கள் தலைவிரித்தாடுகின்றன!!
பழைய ஏற்பாட்டில் இந்த சமநிலை 1இராஜாக்கள்.12,13 அதிகாரங்களில் தெளிவாகக் கூறப்பட்டுள்ளது. 12-ம் அதிகாரத்தில், வாலிப அரசனாயிருந்த ரெகொபெயாம் மூத்த அறிஞர்களின் ஆலோசனையைக் கேட்காமல், தன்னை ஒத்த வாலிபனின் ஆலோசனையைக் கேட்டு, அதன் விளைவாய் அவனுடைய இராஜ்யத்தில் பிரிவினை ஏற்பட்டது! 13-ம் அதிகாரத்தில் ஒரு இளம் தீர்க்கதரிசி ஒரு வயதான தீர்க்கதரிசியிடம் ஆலோசனை கேட்டிருந்திருக்கக்கூடாது! ஏனெனில் “பெரியோர்களெல்லாம் ஞானிகளல்ல.....” என்றே யோபு.32:9 கூறுகிறது! அவ்வாறு அவன் கேட்டபடியால், அந்த வாலிப தீர்க்கதரிசி தன் ஜீவனையே இழந்தான்!!
புதிய ஏற்பாட்டிலும் இந்த சமநிலையை அப்போஸ்தலனாகிய பவுலின் ஜீவியத்தில் நாம் காண்கிறோம். அப்போஸ்தலர்13:1-3 வசனங்களில் தேவன் பவுலை பிற தேசத்திற்கு மிஷனெரியாக ஊழியத்திற்கு அழைத்தார். அதே வேளையில், பவுலைக் குறித்ததான தன் சித்தத்தை அவனுடைய உடன்வேலையாளுக்கும் தேவன் தெரியப்படுத்தினார். இவ்வாறு தேவன் பவுலிடம் அந்தரங்கத்தில் பேசியது மற்றவர்களின் மூலமாய் அவனுக்கு அது உறுதி செய்யப்பட்டது! இதற்கு நேர்மாறாக, அப்போஸ்தலர்.21:1-15 வசனங்களில், இதே பவுல் தன் உடன் விசுவாசிகளின் ஒவ்வொரு ஆலோசனையையும் புறக்கணித்தான்!! பின்பு, தான் உணர்த்தப்பட்ட தேவ சித்தத்தின் திசையிலேயே உறுதியுடன் முன்னோக்கி நடந்தான். இவ்வாறு பவுல் எருசலேமை முன்னோக்கிச் சென்றது சரியான செயல்தானென தேவன் பிற்காலத்தில் பவுலுக்கு உறுதிப்படுத்தினார்!! (அப்போஸ்தலர்.23:11).
இன்னொரு சந்தர்ப்பத்தில், தன் ஆரம்ப கிறிஸ்தவ வாழ்க்கையில் பவுல் யாருடைய ஆலோசனையையும் கேட்காமல், தானே தேவ சித்தத்தை அறிந்து அரபியாவிற்குச் சென்றான் என வேதம் கூறுகிறது (கலா.1:5-17).
வேத வசனத்தின் ஆதாரத்தில் மேற்கண்ட உதாரணங்கள் நமக்கு கற்றுத் தருவது யாதெனில் : சில சந்தர்ப்பங்களில் தேவ பக்தியுள்ளவர்களின் ஆலோசனையை நாம் கவனித்து கேட்கவேண்டும்! வேறு சில சந்தர்ப்பங்களில் அதே தேவ மனிதர்களின் ஆலோசனையை புறக்கணித்துவிட்டும் நாம் செல்ல வேண்டியது வரலாம்! இன்னும் சில சந்தர்ப்பங்களில் யாரையுமே நாம் ஆலோசனை கேட்கத் தேவையில்லாத நிலையும் வரலாம்! ஆலோசனையை ஏற்றுக்கொள்வதோ அல்லது புறக்கணிப்பதோ அல்லது ஆலோசனையைத் தேட அவசியமில்லா திருப்பதோ ஆகிய எந்த சந்தர்ப்பமானாலும், கடைசி முடிவானது “நாமாக எடுக்கும் சொந்த முடிவாகவே எப்போதும் இருக்கவேண்டும்!"
ஏனென்றால், நம் ஒவ்வொரு தீர்மானங்களுக்கும் நாமே தனிப்பட்ட விதத்தில் தேவனுக்கு கணக்கு ஒப்புவிக்க வேண்டும்!! ஒரு தேவ மனிதனின் ஆலோசனை மதிப்புள்ளதுதான்... ஆனால், பிழையேயில்லாதது என கூறிவிட இயலாது!!!
மைக்கேல் ஹார்ப்பர் தான் எழுதிய “தீர்க்கதரிசனம் - கிறிஸ்துவின் சரீரத்திற்கு ஓர் ஒப்பற்ற வரம்” என்ற புத்தகத்தில் கீழ்கண்டவாறு கூறியுள்ளார்; “ஜனங்களைப் பார்த்து 'நீங்கள் இதை செய்யக்கடவீர்கள்' என கட்டளையிடும் தீர்க்கதரிசனங்களை சந்தேகத்துக்குரியதாகவே காணவேண்டியிருக்கிறது. தீர்க்கதரிசனம் ‘நடத்தப்படுதலுக்குரிய' உபகரணமாய் புதிய ஏற்பாட்டில் சுட்டிக்காட்டப்படவில்லை! பவுல் எருசலேமுக்குச் சென்றால் அவருக்கு என்ன நடக்கும் என சொல்லப்பட்டது உண்மைதான். ஆனால் அவர் எருசலேமுக்கு போகவேண்டுமா? போகக்கூடாதா? என்ற ‘நடத்துதல்' சொல்லப்படவில்லை! அவருடைய நண்பர்கள் அதைக் குறித்த ஆலோசனைகளை கூறினார்கள். ஆனால் தீர்க்கதரிசனத்தின் மூலமாய் ‘நடத்துதல்' வழங்கப்படவில்லை!!
பஞ்சம் உண்டாகுமென அகபு தீர்க்கதரிசி முன்னறிவித்தான். ஆனால், அந்த பஞ்சத்தின் நிமித்தம் என்ன செய்யப்படவேண்டும் என்பதற்கு யாதொரு விளக்கமும் அவருடைய தீர்க்கதரிசனத்தில் கூறப்படவில்லை! உண்மை என்னவென்றால் :
புதிய ஏற்பாட்டில் ‘ஒரு தனி நபருக்கு நேரடியாகவே நடத்துதல் தரப்பட்டது! ஆம், பழைய ஏற்பாட்டைப் போல வேறொரு நபர் மூலமாய் நடத்துதல் தரப்படுவதில்லை!
பேதுருவை அழைத்து வரும்படி கொர்நேலியுக்கு ஒரு தூதன் கூறியிருந்தாலும் (அப்போஸ்தலர்.10:5), அவரோடு செல்லும்படியான தகவலை பேதுருவும் தனக்கென்று வந்த செய்தியின் மூலமாய் பெற்றிருந்தார்” (அப்போஸ்தலர்.10:20).
மேலும், ஜேம்ஸ் மெக்காங்கி எழுதிய “நடத்துதல்” புத்தகத்தில் கீழ்கண்டவாறு கூறியுள்ளார் : மாம்சமும் இரத்தமும் யோனாவின் குமாரனாகிய சீமோனுக்கு “கிறிஸ்துவை” வெளிப்படுத்தவில்லை (மத்.16:17). நமக்கும் கூட கிறிஸ்துவினுடையவைகளை மாம்சமும் இரத்தமும் வெளிப்படுத்த இயலாது! நம் சொந்த மாம்சமும் இரத்தமுமல்லாமல், மாம்சமும் இரத்தமுமுடைய பிறரும் கிறிஸ்துவை நமக்கு வெளிப்படுத்த இயலாது!! ஏனெனில் பிறருடைய மாம்சமும் இரத்தமும் நம்மைப் போலவே பெலஹீனம் நிறைந்ததும், குறைகள் உள்ளவைகளுமாயிருக்கிறது. மேலும், தன்னுடைய நடத்துதலுக்காக தான் மதிக்கும் சிநேகிதர்களையே சார்ந்து கொள்ளும் ஒரு மனிதன், அவர்கள் தரும் ஏராளமான ஆலோசனைகள் அவனுடைய மனக்குழப்பத்தை அதிகரிப்பதையே காண்பான். ஆம், உங்கள் வாழ்வில் தேவன் வைத்திருக்கும் திட்டத்தை வேறொரு மனிதனுக்கு வெளிப்படுத்தவே மாட்டார் என்பது ஓர் திவ்விய சட்டமாகும்!
இயேசுவைப் பார்த்து “யோவானைக் குறித்து உமது சித்தமென்ன?" என அறிய விரும்பிய பேதுருவை இயேசு கடிந்து கொண்ட நிகழ்ச்சி இதற்கு ஒரு தெளிவான நிரூபணமாகும் (யோவான். 21:22), நடைபயிலும் சிறு பிள்ளைக்கு நீங்கள் ஆரம்ப காலத்தில் உதவி செய்யலாம். ஆனால் அந்தப் பிள்ளை தானாக நடக்க வேண்டுமென்றால், உங்கள் விரலை முழுமையாக விலக்கிக்கொண்டு, நடப்பதற்கு உங்களையே சார்ந்து கொள்ளாதிருக்க முற்றுப்புள்ளி வைக்கவேண்டும்! “இதே பாடத்தையே” தேவனோடு நடப்பதற்கு கற்றுக்கொள்ளும் 'ஒரு விசுவாசியும்' கற்றுக்கொள்ள வேண்டும்.
சில தடுமாற்றங்களுக்குப் பிறகு ஒரு பிள்ளை கற்றுக்கொள்வது போலவே, சில தவறுகளுக்குப் பிறகு ஒரு கிறிஸ்தவனும் கற்றுக்கொள்ள வேண்டும். கற்றுக்கொள்ளாமலே இருப்பதைவிட, தவறிழைத்து கற்றுத்தேறுவது மிகவும் நல்லது! தேவனோடு சேர்ந்து தனிமையாக நடந்து செல்லும் பொக்கிஷத்தை ஒப்பிடும்போது, சில தவறுகள் இழைக்கும் கிரயம் ஒன்றும் பெரிதானதல்ல! அவன் இப்போது தன் சொந்த தேவனின் வழி நடத்தலைப் பெற்று விட்டான்!! ஆக, இந்த வழி நடத்தும் விஷயத்தில் உங்கள் கிறிஸ்தவ நண்பர்களுக்கு யாதொரு பங்கையும் தேவன் வைத்திடவில்லையா? நிச்சயமாய் வைத்திருக்கிறார்! அவர்களிடமிருந்து எல்லா உதவியும் பெற்றுக் கொள்ளுங்கள்! தேவ வசனத்திலுள்ள சகல வெளிச்சத்தையும் பெற்றுக் கொள்ளுங்கள்! உங்களால் முடிந்த அளவிற்கு அவர்களின் எல்லா அனுபவங்களையும் ஏற்றுக் கொள்ளுங்கள்! இவ்வாறு அவர்களிடமிருந்து எல்லா உண்மைகளையும் பெற்றுக் கொள்ளலாம். ஆகிலும், நீங்கள்தான் உங்கள் தீர்மானங்களை முடிவு செய்ய வேண்டும்!! தீர்மானம் என்ற இடத்தை அடைவதற்கு, தனிமையில், தேவனுக்காக மாத்திரமே காத்திருந்து “அவருடைய நடத்துதல்” என்ற விலையேறப்பெற்ற பாடத்தைப் பெறாமல், நீங்களாக தீர்மானம் எடுப்பது ஒருபோதும் நல்லது அல்ல!!
இருப்பினும், நீங்கள் எப்போதெல்லாம் முதிர்ச்சி பெற்ற விசுவாசிகளின் ஆலோசனைக்கு மாறாக தீர்மானம் எடுக்க வேண்டியதிருக்கிறதோ, அப்போதெல்லாம் திரும்ப திரும்ப உங்கள் நடத்துதலை சோதித்துப் பார்த்து “தேவன்தான் இந்தப் பாதையில் நடத்துகிறார்" என்பதை உறுதிப்படுத்திக் கொள்ள வேண்டியது அவசியமாகும். குறிப்பாக “முக்கியமான தீர்மானங்களில்” நாம் அதிக ஜாக்கிரதையுடன் நடந்திட வேண்டும்!!
ஆண்டவரின் சத்தம் :
மறுரூப மலையில், மோசேக்கும் எலியாவுக்கும் “சமமாக” ஆண்டவர் இயேசுவை வைப்பதற்கு தூண்டப்பட்ட பேதுருவை தேவன் கடிந்து கொண்டார்! பழைய ஏற்பாட்டு நாட்களில் இந்த இருமனிதர்களும் உத்தமமான தேவ மனிதர்கள்தான்! ஆனால் இப்போதோ ஓர் புதிய யுகம் உதிப்பதை பேதுரு கண்டு கொள்ள வேண்டியதாயிருந்தது. இந்தப் புதிய யுகத்தின் தேவ மனிதனோ, “ஒரே ஒருவராய்” மட்டுமே இருந்தார். ஆகவேதான் “இவரே என்னுடைய ஒரேபேறான நேசகுமாரன்! இவர் ஒருவரையே தொடர்ச்சியாய் கவனித்து கீழ்படியுங்கள்” (மாற்கு. 9:7) என்ற சத்தம் உண்டாயிற்று.
வாட்ச்மென்நீ எழுதிய “இந்த மாமனிதன் என்ன செய்வார்?” என்ற புத்தகத்தில், மெய் கிறிஸ்தவம் எப்போதுமே தேவ ஆவியின் மூலமாய் 'தனிப்பட்ட விதத்தில் தேவனை அறிந்து கொள்வதை உள்ளடக்கியே' என குறிப்பிட்டார். இதுவேயன்றி ஒரு மனிதனின் மூலமாகவோ அல்லது ஒரு புத்தகத்தின் மூலமாகவோ 'தேவனுடைய சித்தத்தை மாத்திரமே' அறிந்து கொள்வது அல்ல! இதை நடைமுறையாக நாம் சொல்ல வேண்டுமென்றால், நமக்கு மோசே எழுதித்தந்த ஆகமங்கள் (புத்தகங்கள்) இருக்கிறது! மரணத்தையே ருசி பாராமல் இன்றும் ஜீவிக்கின்ற செய்தியாளராக (மனிதனாக) எலியாவும் நமக்கிருக்கிறார்! விசுவாசிகளாகிய நம் ஒவ்வொருவருக்கும் தேவன் அருளிய இந்த இரண்டு பரிசுகளும் நம் கிறிஸ்தவ ஜீவியத்தை செழிப்படையச் செய்வதாகவே இருக்கிறது. அதாவது, நம்மை நேர்த்தியாய் போதித்து நடத்தும் தேவனுடைய புத்தகம்! மற்றொன்று, ஆண்டவரோடு நெருங்கி வாழ்ந்து அதனிமித்தம் அவர்களுக்கு ஆண்டவர் எதைக் காட்டினாரோ, அதை நாமும் அறியும்படிச் செய்திடும் அவரது பரிசுத்த நண்பர்கள்! பரிசுத்த புத்தகம் எப்போதுமே சரியாய் இருக்கிறது! கிட்டத்தட்ட நண்பனின் ஆலோசனையும் அப்படியே சரியாய் இருக்கிறது! ஆகவே நமக்கு தேவனுடைய புத்தகமும் வேண்டும். தேவனுடைய தீர்க்கதரிசிகளும் வேண்டும்!! இந்த இரண்டில் யாதொன்றையும் தள்ளிவிட தேவன் விரும்புவதே இல்லை.
இருப்பினும் மறுரூபமலை நிகழ்ச்சி நமக்கு கற்றுத்தரும் பாடம் என்னவென்றால், மேற்கண்ட தேவன் அருளிய இரண்டுமே, தேவன் நம் இருதயங்களில் தொனிக்கும் ஜீவ சத்தத்திற்கு இணையானது அல்ல என்பதுதான்!!
நாம் தேவனுடைய தூதர்களை அற்பமாய் எண்ணிவிடக்கூடாது. மெய்யான தீர்க்கதரிசிகளின் சவாலிடும் செய்திகள் நமக்குத் திரும்பத் திரும்ப அவசியமாயிருக்கிறது. அவர்களின் ஆவிக்குரிய முதிர்ச்சி நிறைந்த போதனைகள் நம் ஆத்துமாவை அமரச்செய்ய வலிமை கொண்டதேயாகும். இவையாவும் எத்தனைதான் மேன்மை நிறைந்ததாய் இருந்தாலும், தேவனுடைய பரிசுத்தவான்கள் மூலமாய் வெளிப்படும் வெளிப்பாடுகளுக்கு 'நூற்றுக்கு நூறு' அடங்கி, அதுவே போதுமென ஏற்றுக்கொண்டிடக்கூடாது.
நாமோ, கர்த்தருடைய குரலை கவனித்துக் கேட்டு அவரைப் பின்பற்றுவதற்கே நிரந்தரமாய் அழைக்கப்பட்டு, அதற்கென்றே நெஞ்சார கடமைப்பட்டுள்ளோம்!
இதைப்போலவே, தேவனுடைய எழுதப்பட்ட வார்த்தையை அலட்சியப்படுத்துவதற்கும் நாம் துணிந்துவிடக் கூடாது. அபிஷேகிக்கப்பட்ட சத்திய வேதங்கள் நம் ஜீவியத்திற்கும் வளர்ச்சிக்கும் மிகுந்த வலிமை கொண்டதாயிருக்கிறபடியால் வேதவாக்கியங்களை ஒதுக்கி வைத்துவிட நாம் ஒருக்காலத்தும் துணிவு கொள்ளக் கூடாது. ஆகிலும், நம்மிலுள்ள சிலர் இயேசுகிறிஸ்துவையே தங்களுக்கு கிடைத்த கடைசி அதிகாரமாய் வைப்பதற்குப் பதிலாக, வேத வாக்கியத்தின் “எழுத்துக்களை” அதிக வலிமை கொண்டதாய் உற்று நோக்கிடும் அபாயத்திற்குள் சென்றுவிட முடியும். வேதாகமம், நாம் எதை கைக்கொள்ளும்படி சொல்லுகிறதோ அதற்கு மிகத்துல்லியமாய் கீழ்ப்படிவதால், அதனிமித்தம் தேவன் நம்மை நிச்சயமாய் கனப்படுத்துவார். ஆகிலும், இவ்வாறு நாம் செய்கையில், இன்னும் ஒருபடி மேலாகச் சென்று வேதாகமத்திற்கு நாம் வைத்திடும் ஸ்தானம் கிறிஸ்துவின் கர்த்தர் துவத்தையே மிஞ்சுவதாக இருந்தால், நாம் தேவனுடைய தொடர்பிலிருந்தே துண்டிக்கப்படும் துயரத்திற்கு வந்துவிடமுடியும்.....
“மெய்கிறிஸ்துவம் ஒருவன் தனிப்பட்ட விதத்தில் தேவனிடத்தில் சென்று, நேரடியாக அவருடைய சித்தத்தை அறியும் வாழ்விற்கே நம்மை எப்போதும் தூண்டுகிறது. ஆகிலும், தேவன் அருளிய மேற்கண்ட அந்த இரண்டு ஏதுகரங்களையும் நாம் தழுவிக்கொள்ளத்தான் வேண்டும். ஆனால், அந்த ஏதுகரங்களே நம்முடைய முடிவாய் இருந்துவிடக் கூடாது, அவ்வளவுதான்!!” என்றே வாட்ச்மென் நீ நேர்த்தியாய் அந்த புத்தகத்தில் குறிப்பிட்டிருக்கிறார். ஆம், ஆண்டவருடைய குரலைக் கேட்பதில்தான் “நடத்துதலின்" முழு இரகசியமும் அடங்கி இருக்கிறது!
செய்தியின் சாராம்சங்கள் :
1) நாம் தேவனுடைய நடத்துதலைத் தேடும்போது, “வேதாகம போதனைகள்” மூலமாய் பரிசுத்த ஆவியானவர் நம்மை நடத்துகிறார்:
i) வாழ்வில் அநேக பகுதிகளுக்குரிய தேவ சித்தம் 'ஏற்கனவே' வேதாகமத்தில் வெளிப்படுத்தப்பட்டிருக்கிறது.
iii) நம் அனுதின வேத வாசிப்பின் மூலம் தம்முடைய நடத்துதலை தேவன் உறுதிப்படுத்த முடியும். இதனிமித்தம், எல்லா விஷயங்களுக்கு முரிய நடத்துதலுக்கும் “அன்றாட வேத வாசிப்பையே” ஆதாரமாக நாம் வைத்துவிடக் கூடாது.
2) சூழ்நிலைகளின் சாட்சி மூலமாகவும் பரிசுத்த ஆவியானவர் நம்மோடு பேசுகிறார் :
i) நம்மை நடத்தும் பாதையை உறுதிப்படுத்துவதற்காக சூழ்நிலைகளை தேவன் பயன்படுத்தமுடியும்! அல்லது ஒரு தவறான பாதையில் நாம் செல்வதை தடுத்து நிறுத்தவும் சூழ்நிலைகளை தேவன் பயன்படுத்த முடியும்.
ii) சாத்தான்கூட ஓர் குறிப்பிட்ட அளவிற்கு, நம்முடைய சூழ்நிலைகளை அவனே உருவாக்கித் தர முடியும். ஆகவே சூழ்நிலைகள்தான் தேவ சித்தத்தின் ஓர் அடையாளமாக நாம் 'எப்போதும்' எடுத்து விடவும் கூடாது!
iii) சில சமயங்களில் சூழ்நிலைகளுக்கு நேர்மாறாகவும் தேவன் நம்மை நடத்தமுடியும். அதுபோன்ற சமயத்தில், சூழ்நிலைகளை மாற்றி, தேவன் தம்முடைய சித்தத்தை நமக்கு வெளிப்படுத்தும்படி நாம் ஜெபித்திட முடியும்.
iv) எப்போதாவது சில சமயங்களில் “ஒரு அடையாளத்தின் மூலம்” தம்முடைய நடத்துதலை தேவன் உறுதிப்படுத்தக்கூடும். இருப்பினும் எப்போதுமே ஒரு அடையாளத்தை நாம் தேடுவது நம் ஆவிக்குரிய வளர்ச்சியற்ற தன்மையை சுட்டிக் காட்டும் அறிகுறியாகவே நாம் கருத முடியும்.
3) மற்ற விசுவாசிகளின் ஆலோசனைகள் மூலமாகவும் பரிசுத்தாவியானவர் நம்மோடு பேசமுடியும் :
i) நாம் தேவ சித்தத்தை இழந்துவிடாதிருக்கும் ஓர் பாது காப்பாகவே இந்த ஏதுகரத்தை தேவன் ஏற்படுத்தியிருக்கிறார்.
iii) ஒரு குறிப்பிட்ட விஷயத்தில் நாம் கவனிக்கத் தவறிய பகுதிகளை, தேவ பக்தியுள்ள மனிதர்களின் ஆலோசனைகள் 'அந்தப் பகுதிகளை' நாம் காணும்படி செய்திடமுடியும்!
ii) சில சந்தர்ப்பங்களில் தேவ மனிதர்களின் ஆலோசனைக்கு நாம் முற்றிலுமாய் கவனம் செலுத்த வேண்டும்! சில சமயங்களில், அவர்களுடைய ஆலோசனைக்கு மாறாக, நாம் முன்னேறும்படியான நிலையும் ஏற்படலாம்!!
நாங்கள் எந்த வேலையை தேவன் செய்ய விரும்புகிறார்? வேலை செய்திட எந்த இடத்திற்குச் செல்ல வேண்டும்? என்பதை அறிவதே இன்றைய வாலிபர்களுக்கு “நடத்துதல் விஷயத்தில்” ஏற்படும் பெரிய பிரச்சனையாயிருக்கிறது.
முழு நேர ஊழியத்திற்குப்போக ஆயத்தமாய் உள்ளவர்களுக்கு மாத்திரமல்லாமல், 'ஒவ்வொரு விசுவாசியும்' தங்கள் வேலை விஷயத்தில் தேவனுடைய பரிபூரண சித்தத்தை தேடவேண்டியது அவசியமாயிருக்கிறது. அவரவர்களுக்கென ஒரு வேலையைத் தேவன்திட்டம் செய்து வைத்திருக்கிறார் என முதலாம் அதிகாரத்திலே தியானித்தோம். இப்போது, அந்த வேலை என்ன? என்பதை அறிய வேண்டியதும் நம் ஒவ்வொருவருக்கும் அவசியமாயிருக்கிறது. ஓர் பள்ளியில் ஆசிரியராக இருக்கும்படி தேவன் உங்களை அழைத்திருக்கும் போது நீங்களோ ஓர் பாஸ்டராக மாறினால், தேவனுக்கு முன்பாக அது கீழ்ப்படியாமையேயாகும்! நீங்கள் ஒரு மருத்துவராய்
இருப்பதற்கு தேவன் விரும்பியிருந்தால், ஒரு சுவிசேஷகனாய் மாற நீங்கள் எத்தனிக்கக்கூடாது! அதுபோலவே, தேவன் உங்களைத் தனக்கென கிறிஸ்தவ ஊழியத்திற்கு விரும்பியிருக்கும் போது, நீங்களோ ஒரு உலக அலுவலை தெரிந்து கொள்ளக் கூடாது!
தேவனால் தெரிந்து கொள்ளப்படும் வேலை :
ஒரு விசுவாசி முழு நேர கிறிஸ்தவ ஊழியத்தில் இல்லாவிட்டாலும், ஒவ்வொரு விசுவாசியும் ஆண்டவராகிய இயேசு கிறிஸ்துவுக்கு ஒரு முழு நேர சாட்சியாயிருக்க வேண்டும்! ஒரு கிறிஸ்தவ மருத்துவரிடம் அவருடைய தொழிலைப் பற்றி விசாரித்த போது :
“என்னுடைய தொழில் ஆண்டவராகிய இயேசுகிறிஸ்துவுக்கு சாட்சியாக இருந்து ஆத்துமாக்களை அவரிடத்திற்கு கொண்டு வருவதுதான்! அந்த ஊழியத்திற்குரிய செலவுகளுக்காகவே ஒரு மருத்துவராக நான் பணியாற்றுகிறேன்” என்றார்.
ஆம், மெய்யாகவே அவர் சரியான இலக்கைப் பற்றியிருந்தார்!
இந்த கண்ணோட்டத்தின்படியாக ஒரு வேலையை நாம் கருதினால் “தேவனுடைய சித்தத்தை தவற விட்டுவிடுவோமோ?” என்ற அச்சம் நமக்கு வரவேண்டிய அவசியமே இருக்காது! ஒரு வேலையை தெரிந்து கொள்வதில் சுய நல முன்னேற்றமும், சுய கௌரவமும், நிச்சயமாய் நம்முடைய தெரிந்து கொள்ளுதலைப் பாதித்து நம்மை வழி தப்பிச் செல்ல செய்துவிடும்.
இவ்வித சூழ்நிலையில் ஒரு வாலிபன் தேவ சித்தத்தை அறிந்து கொள்வது எப்படி? எந்த வேலையை தெரிந்து கொள்ள வேண்டும் என்ற வாய்ப்பு நமக்கு முன் காத்திருக்கும்போது, ஒருவன் தன் அறிவுக்கூர்மையின் அளவின்படி, தனக்குத் தகுந்த வேலைக்குரிய படிப்பை நன்குபடித்திட வேண்டும்! படிப்பிற்குப் பிறகு, ஒரு வேலையை மிகுந்த ஜெபத்தோடு தேடிட வேண்டும்! ஜெபத்திற்கு பின்பு, தன்னுடைய ஆவியில் யாதொரு தடையுமில்லை என்பதை அவன் கண்டவுடன், அவனுக்கு ஏற்றதாயிருக்கும் அந்த வேலையை சுதந்தரித்துக் கொள்ள வேண்டும்! அப்படி இல்லாமல், யாரோ ஒருவரால் தெரிந்து கொள்ளப்பட்ட வேலைக்குச் செல்லும்படி, நிர்ப்பந்திக்கப்பட அவன்
அனுமதிக்கவே கூடாது!!
ஒரு கல்லூரி பல்கலைக்கழகம் பாடத்தில் படித்து கொண்டிருக்கும் வாலிபனுக்கு, ஒரு வேலையைத் தெரிந்து கொள்ளும் கண்ணோட்டம் மிகக் குறுகலானதேயாகும். ஆகவே, தேவ சித்தம் செய்திட தாங்கள் தவறி விட்டோமோ என்ற அச்சம் அவர்களுக்குத் தேவையில்லை. 'தேவனுடைய வழிகளைக் குறித்த அறியாமையில்' நாம் இருந்தபோது, தேவனே தம்முடைய சர்வ வல்லமையுள்ள அதிகாரத்தின்படி நம் வாழ்க்கையை ஆண்டு நடத்தியிருக்கிறார்! நமக்கே தெரியாமல், தம்முடைய கரத்தை நம்மீது வைத்து நம் வாழ்வின் திசையை அவரே திருப்பி நடத்தியிருக்கிறார்!! இவ்வாறு ஒரு முழுமையான அர்ப்பணத்தின் ஸ்தானத்திற்கு நாம் வரும்வரை, தேவனே தம் ஆளுகையில் நம்மை நடத்துகிறார்! நாம் தனிப்பட்ட விதத்தில் தேவன் பேசுவதை என்று கேட்டோமோ, அப்போதிருந்து மாத்திரமே நாம் பொறுப்புள்ளவர்களாய் நடந்திட தேவன் எதிர்பார்க்கிறார்!
தேவன் தெரிந்து கொள்ளும் ஓர் ஸ்தலம் :
ஒரு மாணாக்கனாக இருக்கும் காலம் முழுவதும், ஒரு விசுவாசியான அந்த வாலிபன் தனக்குரிய வேலை வாய்ப்புகளைக் குறித்த சரியான தகவலை தேவன் தனக்குத் தரும்படியும், தன் படிப்பு முடிந்தவுடன் தேவன் தெரிந்து கொண்ட வேலை ஸ்தலத்திற்கு தன்னை தேவன் நடத்திச் செல்லும்படியும், அந்த வாலிபன் அதிகமான ஜெபத்தில் தரித்திருக்க வேண்டும். இருப்பினும், அவனுடைய மனதிலோ மத்தேயு.9:37-ம் வசனம் கூறும் “அறுப்பு மிகுதி வேலையாட்களோ கொஞ்சம்” என்ற தொனி அவனுக்குள் நிலை கொண்டிருக்க வேண்டும். யோவான். 4:35-ல் ஆண்டவர் தந்த கட்டளைக்கு கீழ்ப்படிந்து, தேசத்திலும், உலகத்தின் பல பகுதிகளிலும் கர்த்தருடைய ஊழியம் எவ்வாறெல்லாம் நடக்கிறது என்பதைக் குறித்த விபரங்களையெல்லாம் பெற்றுக் கொள்ளவும் அதிகமாய் நாடவேண்டும். எந்த இடத்திற்கு தேவன் அனுப்புகிறாரோ, அந்த இடத்திற்கு ஒரு ஆசிரியராகவோ, ஒரு நர்ஸாகவே அல்லது ஒரு இன்ஜினியராகவோ அல்லது தனக்குரிய எந்த வேலையின்படியோ "அந்த இடத்திற்குச் சென்றிட" ஆயத்த முடையவர்களாயிருக்க வேண்டும்!! ஆனால் இன்று சுவிசேஷத்தைப் பரப்புவதற்கோ அல்லது ஆத்துமாவை இரட்சிப்பதற்கோ அக்கறையற்று, தங்கள் சொந்த சொகுசான வாழ்க்கையை மாத்திரமே தேடும் எண்ணற்ற விசுவாசிகளைக் காண்பது வெட்கத்துக்குரியதேயாகும்!
இவ்வாறு தேவன் அனுப்பும் ஸ்தலத்தை வாஞ்சிக்கும் வேளையில், தங்கள் சொந்த ஸ்தலத்திலோ அல்லது வேரிடத்திலோ, முதிர்ச்சிபெற்ற விசுவாசிகளின் ஆலோசனைகளையும் அவர்களின் ஜெப ஐக்கியத்தையும் அந்த வாலிபன் நாடவேண்டும். தான் வேலை தேடும் ஸ்தலத்தைக்குறித்த சூழ்நிலையை நன்கு தெரிந்தவர்களும், தன்மீது அக்கறை கொண்டவர்களுமாகிய நபர்களின் ஆலோசனைகளுக்கும் செவி கொடுக்க வேண்டும்! தன்னுடைய சூழ்நிலைகளில் தேவன் தன்னிடம் என்ன பேசுகிறார் என்பதை அறிந்து கொள்ள எப்போதும் கவனமுடன் இருக்க வேண்டும்!
இதுபோன்ற எல்லா தகவல்களையும் பெற்ற அவன், தீர்மானம் எடுக்கவேண்டிய நேரம் நெருங்குகையில், பரிசுத்தாவியானவர் அவனுடைய சொந்த ஆவியில் என்ன பேசுகிறார் என்பதை நிதானிக்க கருத்துடன் தேட வேண்டும்!
முடிவாக, தனக்குள் பரிசுத்தாவியானவர் அருளிய சாட்சியின் அடிப்படையில் தன் தீர்மானத்தை தேவனை நம்பி எடுத்திட வேண்டும்! ஒருவேளை, தான் எடுத்த தீர்மானம் தவறாய் இருக்குமென்றால் தேவன் இடைப்பட்டு அதை மாற்றிவிடுவார் எனவும் அவர்மீது நம்பிக்கை கொண்டவனாய் இருக்கவேண்டும்!!
முழு நேர கிறிஸ்தவ ஊழியம் :
முழு நேரக் கிறிஸ்தவ ஊழியத்தைக் குறித்து சில உண்மைகளை நாம் அறிந்து கொள்ளவேண்டியதும் மிக அவசியமாகும்! முழு நேர கிறிஸ்தவ ஊழியம் என்பது, வார்த்தையைப் பிரசங்கிப்பதற்கோ, ஒரு மிஷனெரியாகவோ, ஒரு சுவிசேஷகனாகவோ, ஒரு வேத போதகனாகவோ அல்லது ஒரு மேய்ப்பனாகவோ “அதற்கென்றே பிரத்தியேகமாய்" அழைக்கப்படுவதேயாகும்.
இஸ்ரவேலின் பன்னிரண்டு கோத்திரத்தில் ஒரு கோத்திரத்தைக்கொண்டு மாத்திரமே ஆலயப்பணிக்கென தேவன் அழைத்ததைப் போல், குறைந்த அளவு விசுவாசிகளையே இதுபோன்ற பிரத்தியேக முழு நேர ஊழியத்திற்கு தேவன் அழைக்கிறார். இருப்பினும் “அவர் அழைத்தால்” அதற்கு மனப்பூர்வமாய் இணங்க தம்முடைய பிள்ளைகள் யாவரும் ஆர்வமுள்ளவர்களாயிருக்க வேண்டுமென்றே தேவன் எதிர்பார்க்கிறார்! ஆகவே, ஒவ்வொரு விசுவாசியும் இந்த அழைப்பைக்குறித்து கரிசனை கொண்டு, தேவன் தன்னை இந்த முழு நேர ஊழியத்திற்கு விரும்புகிறாரா? அல்லது இல்லையா? என்பதை முழு இருதயத்தோடு வாஞ்சித்து தேடவேண்டும்!
இவ்வாறாக, முழு நேர கிறிஸ்தவ ஊழியத்திற்குள் பிரவேசிக்கும் ஒருவன், தேவன்தான் தன்னை இந்த ஊழியத்திற்கு அழைத்தார் என்பதில் “பூரண நிச்சயம்” உடையவனாய் இருக்க வேண்டும்! அதுபோலவே “உலக வேலையில்” உள்ள ஒவ்வொருவரும் தேவன்தான் தன்னை அவ்வாறிருக்கும்படி அழைத்திருக்கிறார் என்பதிலும் பூரண நிச்சயத்தைப் பெற்றிருக்க வேண்டும்!!
ஒரு சுவிசேஷகனாகவோ அல்லது ஒரு மிஷனெரியாகவோ அழைக்கப்படுவதென்பது..... ஒரு என்ஜினியராகவோ அல்லது ஒரு குமாஸ்தாவாகவோ அழைக்கப்படும் தக் காட்டிலும் அதிக ஆவிக்குரிய தன்மை வாய்ந்தது என நாம் எண்ணிவிடக்கூடாது. இதில் முக்கியமாக கருதப்பட வேண்டியதெல்லாம் “தேவன் உங்களை என்னவாக இருக்க விரும்புகிறார்?” என்பது மாத்திரமேயாகும்.
முழு நேர கிறிஸ்தவ ஊழியத்திற்குள் பிரவேசித்திட எடுக்கும் தீர்மானம் அதிக நிதானத்தோடு எடுக்க வேண்டிய தீர்மானமாகும்! அதுவல்லாமல், ஓர் உணர்ச்சி பொங்கும் கூட்டத்தின் சூழ்நிலையிலோ அல்லது எந்த மனுஷனுடைய உந்துதலிலோ இந்தத் தீர்மானத்தை எடுக்கவே கூடாது! அவசரமாய் தீர்மானம் எடுப்பவர்கள், பின்பு அதிக வருத்தத்திற்குள்ளாவார்கள்!! நாம் தீர்மானிப்பதற்கு முன்பாக அவருடைய சித்தத்தை நிச்சயப்படுத்திக்கொள்ள போதுமான அவகாசத்தை எப்போதும் தேவன் நமக்குத் தருவார்!!
முழு நேர கிறிஸ்தவ ஊழியத்திற்கு அழைத்திடும் அழைப்பை நாம் எளிதில் விவரித்துக் கூறிட முடியாது. மற்ற நடத்துதல்களைப் போலவே 'வெவ்வேறான ஜனங்களுக்கு வெவ்வேறான ரூபத்தில்' இந்த அழைப்பு வருகிறது. சில அரிதான சூழ்நிலைகளில் இந்த அழைப்பு ஒரு தரிசனத்தின் மூலமாகவோ அல்லது காதில் தொனிக்கும் வெளிப்படையான சத்தத்தின் மூலமாகவோ வருவதுண்டு! சுமார் நூறு ஆண்டுகளுக்கு முன்பாக சீன நாட்டு மிஷனெரியாகிய எஸ்தர் பட்லரை தேவன் அழைத்தபோது “ஓர் ஜன சந்தடி நிறைந்த சீனத்து தெருவை” தரிசனமாகக் கண்டார். பின்னர் அவர் மிஷனெரியாக சீனாவின் நான்கிங் என்ற இடத்தை அடைந்தபோது, அங்குள்ளவர்களின் முகத்தையும், அந்த தெருக்களையும் தரிசனத்தில் கண்டதைப் போலவே தெளிவாகக் கண்டார்!
இன்னும் சிலருக்கு, அவர்கள் மாத்திரமே அறிந்திருக்கக்கூடிய “உள்ளான தூண்டுதல் மூலமாய்” இந்த அழைப்பு ஏற்படுவதுண்டு. மிஷனெரி ஜான்.G.பேட்டன் ஸ்காட்லாந்து தேசத்திலிருந்து பசிபிக் தீவுகளுக்குச் சென்றார். அதற்கு அவர் கூறிய காரணம், “ஸ்காட்லாந்து தேசத்து ஜனங்களைக் காட்டிலும் தென் பசிபிக் தீவின் ஜனங்களுக்கு சுவிசேஷத்தைக் கேட்கும் வாய்ப்பு குறைவாயிருக்கிறது என்பதை நான் உணர்ந்தேன்” எனக் கூறினார். ஜான் கில்மோர் மங்கோலியா நாட்டிற்கு மிஷனெரியாகச் சென்றார்! அதற்கு அவர் கூறிய காரணம், “என் சொந்த தேசத்திலேயே நான் தங்கியிருப்பதற்கு நான் அழைப்பை பெறவில்லை” என்றார். இவர்கள் மிஷனெரிகளாகச் சென்ற அந்தந்த இடங்களில் தேவனுக்காக சாதித்த கிரியைகள் “இவர்கள் தங்கள் ஜீவியத்தில் தேவனுடைய பூரணசித்தத்தை நிறைவேற்றியிருக்கிறார்கள்” என்பதை தெளிவாய் காட்டுவதாக இருக்கிறது!
எந்த ரூபத்தில் அழைப்பு வருகிறது என்பது ஒரு பொருட்டல்ல! ஆனால் முழு நேர கிறிஸ்தவ ஊழியத்திற்காக செல்கிறவன், தன் அழைப்பைக் குறித்து உறுதியற்றவனாய் ‘நிலைத்திருப்பது' ஒருக்காலும் முடியாது!
ஒருவன் தன்னைத்தானே ஊழியத்தில் நியமனம் செய்து கொள்ள நிச்சயமாய் முடியாது! அல்லது, மற்றொருவன் அவனை நியமனம் செய்யவும் முடியாது! “ அந்த முழு உரிமையும் தேவனுடைய கரத்தில் மாத்திரமே என்றென்றுமுள்ளது”.
அநேக சமயங்களில், முழு நேர கிறிஸ்தவ ஊழியத்திற்கு அழைக்கப்படும் ஒருவர், அந்த அழைப்பை சில சூழ்நிலைகள் மூலமாகவும், ஆவியில் நிறைந்த விசுவாசிகள் மூலமாகவும் உறுதி செய்துகொள்ள முடியும். இந்த வரையறைக்கு அப்பாற்பட்டதாகவும் “அழைப்பு" இருந்திட முடியும். அவ்வாறு இருக்கவும் செய்திருக்கிறது! ஆம், ஒரு குறிப்பிட்ட வரையறையின்படிதான் தேவன் அழைத்திட வேண்டும் என்ற நிர்ப்பந்தம் அவருக்கு இல்லை!! எனினும் இவ்விஷயத்தில் தேவன் செயலாற்றும் ஓர் மாறாத அணுகுமுறையை நாம் காண்பது நல்லது.... அது என்னவெனில், தன் உலக அலுவல்களில் மிகுந்த சுறுசுறுப்பாய் இருப்பவர்களையே தேவன் அழைக்கிறார்! அன்றாட தங்கள் சூழ்நிலைகளில் தேவனுக்கு சாட்சியாய் வாழ்வதற்கு வாஞ்சை கொண்டவர்களிடத்தில் மாத்திரமே தேவன் பேசுகிறார்! ஆம், தன்னை தேடுகிறவர்களுக்கே அவர் பலன் அளிக்கிறவராயிருக்கிறார்!
தேவனுடைய அழைப்பு “சமநிலை கொண்டதல்ல” என்பதையும் நாம் நினைவில் கொள்ள வேண்டும். ஒருமுறை உங்களை முழு நேர கிறிஸ்தவ ஊழியனாய் அழைத்துவிட்டு, சில காலங்கள் கழித்து மறு முறையாக ஓர் உலக அலுவலில் அவருக்கு சாட்சியாயிருக்கவும் நடத்திட கூடும்! ஆகவே, தேவன் சூழ்நிலைகளை மாற்றும்போது நாம் அவரோடு இணைந்து செல்ல ஆயத்தமுள்ளவர்களாய் எப்போதும் இருக்க வேண்டும். அதற்கு மாறாக, பாரம்பரியத்திலும், மனுஷருடைய அபிப்பிராயங்களிலும் தேங்கி நின்று ஓர் அடிமையாய் கட்டப்பட்டு விடக்கூடாது!
ஒரு உலக வேலையிலிருக்கிறோமா அல்லது முழு நேர கிறிஸ்தவ ஊழியத்தில் இருக்கிறோமா என்பது ஒரு பொருட்டல்ல! இந்த இருவருக்கும் உள்ள சமமான அழைப்பு, இந்த இருவருமே “தேவனுடைய ஊழியர்களாய் இருக்கவேண்டுமென்பதுதான்!! நம்முடைய வேலையின் தன்மையும், அதன் சூழ்நிலையும் வெவ்வேறாக இருக்கலாம்..... ஆனால், நாம் அனைவருமே மற்றவர்களுக்கு நம் ஆண்டவரைத் தகுதியான விதத்தில் அவர்களுக்கு காட்ட வேண்டும்..... பின்பு, தேவனை அறிந்திடும் இரட்சிப்புக்குள் அவர்களை நடத்த வேண்டும். தேவனுடைய ஊழியத்திற்கு 'அவருடைய திராட்சைத் தோட்டம்' மகா விஸ்தாரம் கொண்டதாகும்! அந்த விஸ்தாரமான பரந்த இடத்தில் "உங்களுக்கென்று ஒரு குறிப்பிட்ட இடத்தை” தேவன் வைத்திருக்கிறார்!! ஒரு பாமாலை வாசகம் “இயேசுவுக்காக செய்திட வேண்டிய வேலை ஒன்றுண்டு! அந்த குறிப்பிட்ட வேலையை வேறொருவர் செய்திட இயலாது! நீ மாத்திரமே செய்திடமுடியும்!" என நேர்த்தியாய் கூறுகிறது. “அந்த வேலை" என்னவென்பதை கண்டுபிடிப்பதுதான் உங்கள் பொறுப்பு! கண்டுபிடித்த பின்பு, அதை நிறைவேற்றி முடிப்பதும் உங்கள் பொறுப்பு!! இவ்வாறு “நீ கர்த்தர் மூலமாய் ஒரு வேலையில் நியமனம் செய்யப்பட்டிருக்கிறாய். அந்த வேலையை நிறைவேற்றுவதற்கு கவனமாயிருப்பாயாக!" (கொலோ.4:17 JBP) என்ற வேத வசனம் நம் மனதில் உறைந்திருப்பதாக.
செய்தியின் சாராம்சங்கள் :
1) உங்களுக்கென்று தேவன் ஒரு குறிப்பிட்ட வேலை வைத்திருக்கிறார். அதை நிறைவேற்றவேண்டியது உங்கள் கடமை.
2) எந்த வேலையாயிருந்தாலும், ஒவ்வொரு விசுவாசியும் ஆண்டவராகிய இயேசுவுக்கு முழு நேர சாட்சியாயிருப்பதற்கு அழைக்கப்பட்டிருக்கிறார்கள்.
3) தன் வேலைக்காகத் தேவனுடைய நடத்துதலைத் தேடும் ஒரு வாலிப சகோதரன், தன் படிப்பின் தகுதிக்கும் பொருத்தமாய் தோன்றும் வேலைக்கே தன்னை ஆயத்தம் செய்து கொள்ள நாட வேண்டும்.
4) ஒரு வேலையைத் தேடும் போது, பல்வேறு இடங்களில் ஆண்டவருடைய ஊழியத்திற்குரிய தேவைகளின் விபரங்களையும் ஒருவன் கண்டறிய வேண்டும். முதிர்ச்சி பெற்ற விசுவாசிகளை ஆலோசித்தப் பிறகு, தன் சூழ்நிலைகளை ஆராய்ந்த பிறகு, அதிக ஜெபத்தோடு இறுதியாக “தனக்குள் பரிசுத்தாவியானவர் தரும் உள்ளான சாட்சியை வைத்தே" அந்த குறிப்பிட்ட வேலைக்கு நடத்தப்பட வேண்டும்.
5) தேவனிடமிருந்து ஓர் தெளிவான அழைப்பில்லாமல் ஒரு மனுஷனும் முழு நேர கிறிஸ்தவ ஊழியத்திற்குச் சென்றுவிடக்கூடாது.
6) தேவனுடைய அழைப்பு என்பது மகா சத்துவம் நிறைந்தது! ஆகவே, 'எந்த' புதிய சூழ்நிலையான ஊழியத்திற்குள் அவர் நடத்தினாலும், அந்த அழைப்பை கேட்ட மாத்திரத்தில், அவரோடு நாம் முன்னேறிச் சென்றிட முழு விருப்பம் கொண்டவர்களாய் இருக்க அதிக கவனம் வேண்டும்!!
இந்த புத்தகத்தின் ஆரம்பத்திலிருந்து நீங்கள் கருத்தாய் வாசித்திருந்தால், “பிழையற்ற வழிநடத்துதலுக்கென” யாதொரு பூரணமான விதிமுறைகளும் இல்லை என்பதை விளங்கியிருப்பீர்கள். அநேக சமயங்களில், தேவ சித்தம் அறிந்திட நாம் முயன்றபோதெல்லாம் ஒருவித மனக்கலக்கத்தையே நாம் எதிர்கொண்டிருக்கிறோம்! அவ்வாறிருப்பதற்கு தேவனே அனுமதிக்கிறார்!! ஏனெனில், அப்போது மாத்திரமே நாம் தேவனை நெருங்கி கிட்டிச் சேர்ந்து அவருடைய மனதை அதிகமாய் அறியவும், அவருடைய ஜீவனை ‘இன்னும் அதிகமாய்' பெறவும் செய்வோம்!
நம்முடைய நோக்கங்களைப் புடைத்து சீர்ப்படுத்துவதற்கென்றே உறுதியற்ற குழப்பமான நேரங்களைத் தேவன் அனுமதிக்கிறார். எப்போதெல்லாம் தேவனுடைய சித்தத்தைக்குறித்த நிச்சயமற்ற நிலை ஏற்படுகிறதோ, அப்போதெல்லாம் இரண்டாம் அதிகாரத்தில் குறிப்பிடப்பட்டுள்ள “நடத்துதலுக்குரிய நிபந்தனைகளை” நாம் நிறைவேற்றியிருக்கிறோமா என நம்மை நாமே சோதித்தறிவது நல்லது.
நம்முடைய விசுவாசத்தை அப்பியாசித்து பெலப்படுத்துவதற்கென்றே நமக்கு ஏற்படும் மனக்குழப்பங்களை தேவன் பயன்படுத்துகிறார். “உங்களில் எவன் கர்த்தருக்குப் பயந்து, அவருடைய தாசனின் (ஆண்டவர் இயேசுவின்) சொல்லைக் கேட்டு, தனக்கு 'தெளிவான வெளிச்சம்' இல்லாததினால் இருட்டில் தடுமாறுகிறானோ, அவன் கர்த்தருடைய நாமத்தை நம்பி தன் தேவனை சார்ந்து கொள்ளக்கடவன்" (ஏசா.50:10) எனக்கூறும் தேவனுடைய வார்த்தையைக் கவனித்தீர்களா! ஆகவே காரிருள் போன்ற மனக்கலக்கங்களை நாம் சந்திக்கும்போது, அதனிமித்தம் நாம் ஆச்சரியப்படவோ அல்லது சோர்வடையவோ கூடாது. அப்போஸ்தலனாகிய பவுலும் கலக்கமடைந்த வாழ்விற்குள் பிரவேசித்திருக்கிறார்... ஆனால், அவருடைய உத்தம சாட்சியோ “நாங்கள் மனமுறிவடைகிறதில்லை” என்பதுதான்! (2 கொரி.4:8).
சில சமயங்களில், ஒரு தீர்மானத்தை எடுப்பதற்குரிய கடைசிநேரத்தில்தான் தேவன் தம்முடைய சித்தத்தை நமக்கு காட்டுவார்! இதன் மூலமாய், தேவ சித்தத்தை அறிவதற்கென நீண்ட நேரம் நம்மை காத்திருக்கச்செய்ய கற்றுத் தருகிறார்!!
எந்த சூழ்நிலையிலும், அந்தந்த தேவைக்கேற்ப “அடுத்த அடியை" மாத்திரமே நமக்கு காண்பிப்பார்! இவ்வாறு நம்மை ஒவ்வொரு அடியாக நடத்துவதற்கு காரணம், நாம் அவரை ஒவ்வொருநாளும் சார்ந்து கொண்டு.... தரிசித்து நடவாமல், நாம் விசுவாசித்து நடக்கும்படியே அப்படிச் செய்கிறார்! ஒரு சூழ்நிலையில் நமக்கு ஒரு அடியை மாத்திரமே காண்பித்தால், நாம் நிச்சயமாய் தேவனையே சார்ந்து கொள்ள நெருக்கப்படுவோம்! இதற்குப் பதிலாக, முழு எதிர் காலத்தையும் நமக்கு அவர் காண்பித்துவிட்டால், நாம் தேவனுக்கு முழுவதும் கீழ்ப்படிய விருப்பமில்லாத நிலைக்கு தள்ளப்பட்டுவிட முடியும். ஆகவே, நம் ஜீவியத்தில் தேவசித்தத்தை அறிவதற்கு அவர் நமக்கு காட்டுகின்ற அடுத்த அடிக்கு நாம் எட்டு வைத்தால், அதுவே போதுமானதாகும்! அவ்வாறு ஒரு அடி எடுத்து வைப்பதற்கு விசுவாசம் இருந்துவிட்டால், நம்மைக் குறித்த தேவனுடைய திட்டம் “முழுவதும்” படிப்படியாய் மலர்ந்து விரிந்துவிடும்!!
ஒரு பழமையான சீனத்து பழமொழி “ஆயிரம் மைலுக்கு செல்ல வேண்டிய பயணம், ஒரே ஒரு அடிச்சுவட்டில்தான் துவங்குகிறது” என நேர்த்தியாய் கூறுகிறது. தான்போகும் தேசம் இன்னதென்று தெரியாமலே, ஆபிரகாம் தன் சொந்த ஊரைவிட்டு புறப்பட்டுச் சென்றான் (எபிரெயர்.11:8). அவ்வாறு தேவனுக்கு கீழ்படிந்து சென்ற ஒவ்வொரு அடியிலும் தேவன் துணை நின்று, ஆபிரகாமை வெட்கம் அடையச் செய்திடவில்லை! இவ்வாறு ஆபிரகாம் செய்தது போலவே, முழு இருதயமாய் தேவனைப் பின்பற்றும் யாராயிருந்தாலும், “வெட்கம் அடைந்திடுவோமோ?" என்ற அச்சம் கொள்ளத் தேவையேயில்லை!
தீர்மானம் எடுத்திட தயங்குவதிலிருந்து விடுதலை :
அநேக சமயங்களில் “தேவனுடைய சித்தம் இன்னும் பூரணமான நிச்சயமில்லாமல்" இருக்கும் போதே, நாமாகவே முன்னோக்கிச் சென்றிட ‘முதல் அடி' எடுத்துவைத்திட அவசியமாயிருக்கிறது! இதுவும் கூட, நாம் விசுவாசித்து நடப்பதற்குரிய ஓர் ஒழுங்காகவே இருக்கிறது. ஏனென்றால், ‘நிச்சயமாய் தெரிந்த பிறகுதான்' நான் முன்னேறிச் செல்ல முடியுமென்றால், அது தரிசித்து நடப்பதற்கு சமமானதேயாகும். நாம் மனம் சோர்ந்துவிடாதபடி “தெளிவான நிச்சயத்தை தந்து" நம்மை சில சமயங்களில் தேவன் உற்சாகப்படுத்துவதுண்டு! ஆனால் அநேக சமயங்களில், அவருடைய அங்கீகாரத்தின் தெளிவான சாட்சியம் இல்லாமலே நாம் முன்னேறிச் செல்லவும் தேவன் எதிர்பார்க்கிறார். நம்மால்கூடிய முழுமனதோடு “பரிசுத்தாவியின் சிந்தையை” அறிந்த பிறகு, இனியும் காலவரமின்றி காத்திருக்காமல் நாம் முன்னேறிச் செல்வதே நல்லது. இதைக்குறித்து வேதாகமம் கூறும்போது “ தேவன் நம்முடைய நடைகளை உறுதிப்படுத்துவார் என்ற நிச்சயத்தோடு, நாமே முன்னோக்கிச் செல்லும் திட்டங்களை யோசித்திட வேண்டும்” (நீதி.16:9 - Living Bible).
இவ்வாறு ஓர் மங்கலான பார்வையில் துணிந்து எடுத்த தீர்மானத்தை, பின்னாகத் திரும்பிப் பார்க்கும்போது, தேவன் நம்மை வழிதவறிப்போகச் செய்திடவில்லை என்றே நாம் காண முடியும்!
ஆம், நம்முடைய நம்பிக்கையின் முன்னோக்கில் தெளிவற்ற நிலை காணப்பட்டாலும், கடந்து வந்த பாதையை திரும்பிப் பார்க்கும் போது அது, மிகுந்த மகிழ்ச்சியே நமக்குத் தருகிறது!
"மங்கலான பார்வையிலே நான்
மகிழ்ச்சி நிறைந்த பாதுகாப்பு கண்டேன்.
ஏனெனில், பனி மூட்டமான பாதையில்
பரமனின் கரத்தை தடவியே உணர்ந்தேன்!
பரிவுடன் பரமனும் “என் உதவி நிச்சயம்” என
பாங்குடன் தொனித்தார் என் செவியில்!''
J.ஆஸ்வால்ட் சாண்டர்ஸ் எழுதிய “ஆவிக்குரிய தலைமைத்துவம்” என்ற புத்தகத்தில் “தலைமைத்துவத்தின் ஸ்தானத்தில் இல்லாதவர்கள் தவறாய் எண்ணுவதெல்லாம், அதிக அனுபவமும் தேவனோடு நீடிய காலம் இணைந்து நடந்த ஜீவியமும் கொண்டவர்கள் மாத்திரமே, ‘குழப்பமான சூழ்நிலையில்' தேவ சித்தத்தை மிக எளிதில் அறிந்துகொள்வார்கள் என நினைக்கிறார்கள். ஆனால் உண்மை நிலையோ இதற்கு நேர்மாறானதாகும்! அந்த முதிர்ச்சி கொண்ட தலைவனை ஒரு வளர்ந்த புருஷனாக தேவன் காண்கிறபடியால், அவனே ஆவிக்குரிய பகுத்தறிவு கொண்டு தேவனுடைய பாதையை அறிந்து முன்னேற விட்டு விடுகிறார்! ஆரம்ப வருடங்களைப்போல் இல்லாமல் அவ்வப்போது மாத்திரமே தன் நடத்துதலின் சாட்சியங்களை அவனுக்குத் தருகிறார்” என கூறியுள்ளார்.
சீன உள்நாட்டு மிஷன் ஸ்தாபகரான ஹட்சன் டெய்லர் ஒரு முறை 'நடத்துதலை' குறிப்பிட்டுக் கூறும்போது “என்னுடைய வாலிப ஆரம்ப நாட்களில், நான் என்ன செய்ய வேண்டுமென்பது மிகத் தெளிவாகவும், மிகத் துரிதமாகவும் எனக்கு கிடைத்துவிடும். ஆனால், இப்போது நான் தேவனோடு பல மைல்கள் கடந்து, தேவனும் என்னை அதிகமாய் பயன்படுத்திய நிலையில், என் நிலை எப்படி இருக்கிறது தெரியுமா? அடர்த்தியான பனி மூட்டத்திற்குள் நிற்கும் மனிதனைப் போலவே நான் நிற்கிறேன். என்ன செய்திட வேண்டும்? என்ற திகைப்பும் என்னை ஆட்கொள்கிறது!” என்றார். இவ்வித தடுமாற்ற நிலையிலும் ஹட்சன் டெய்லர் எப்போதெல்லாம் ஒரு தீர்மானத்தை எடுத்தாரோ. தேவன் அவருடைய விசுவாசத்தை இடைவிடாது கனப்படுத்திக் கொண்டே இருந்தார்!!
இவ்வித நிச்சயமற்ற சூழ்நிலையில் நாம் எடுத்துவைத்த அடி தவறி, அதனிமித்தம் தேவனுடைய பூரண சித்தத்தின் பாதையை நாம் விட்டுவிட்டால்.... அச்சூழ்நிலைகளில் தேவன் நம்மை விடுவித்து நடத்துவார் எனவும், நாம் அவர்மீது பூரண நம்பிக்கை வைத்திட முடியும்!
இதற்குரிய வாக்குதத்தத்தை ஏசாயா. 30:21 (Living Bible) நேர்த்தியாக நமக்கு கூறுகிறது. “நீங்கள் தேவனுடைய பாதையை தவறவிட்டு விலகும் போதும், உங்களுக்குப் பின்னாக இருந்து ஒரு சத்தம் தொனித்து ‘இந்த பாதையல்ல! இதோ அந்தப் பாதையில் நடப்பாயாக' என உங்களைப் போதித்து நடத்தும்”. இவ்வாறு பாதையைத் தவறவிடும் போதும், சில சூழ்நிலைகளை தேவன் அனுமதித்து அந்தப் பாதையை சரியான பாதைக்கு மாற்றிவிட அவரால் முடியும்! ஆனால் நாமோ பகிரங்கமான நடத்துதல் வரும்வரை செயலற்று தேங்கி நின்றுவிடக்கூடாது. ஓடுபாதையில் ஓடும் ஒரு கப்பலை மிக எளிதில் வேறு பாதைக்கு திருப்பி விடலாம்! ஆனால் ஓடாமலே நின்று கொண்டிருக்கும் கப்பலை எந்த திசைக்கும் திருப்பி விட இயலாது! இந்த கப்பலைப் போலவே நாமும் இருக்கிறோம்!!
அப்போஸ்தலர்.16:6-10 வசனங்களில் பவுலும் சீலாவும் ஆசியாவுக்குச் செல்ல முயற்சித்தது ஆண்டவருடைய தெளிவான நடத்துதலின்படியல்ல... மாறாக, அவருடைய சித்தத்தை செய்திட வேண்டுமென்ற விருப்பமே அவ்வேளையில் மூலகாரணமாயிருந்தது! அந்தப் பாதையில் அவர்களுக்கு இடையூறு ஏற்பட்டது. அது ஒருவேளை தேவனே உருவாக்கிய சூழ்நிலையாய் இருந்திருக்கலாம். அதை அடுத்து, அவர்கள் பித்தினியா நாட்டிற்குள் செல்ல முயற்சித்தார்கள். மறுபடியுமாக அந்த வழியிலும் அவர்களுக்கு தடை ஏற்பட்டது! உடனே அவர்கள் சோர்ந்து போய் யாதொன்றும் செய்யாமல் தேவனுடைய நடத்துதலுக்காக காத்திருப்போமென ‘சும்மாயிராதபடி ' மிகுந்த சுறுசுறுப்போடு தேவனுடைய சித்தத்தை தேடினார்கள். அதனிமித்தம், தேவன் அவர்களை, தான் தெரிந்து கொண்ட ஸ்தலமாகிய மக்கெதொனியாவிற்கு முடிவில் நடத்தினார்!!
அன்றாட ஜீவியத்தின் சிறுசிறு விஷயங்களுக்கெல்லாம் நடத்து தலை எதிர்பார்ப்பது அவசியமில்லை. காரியம் என்னவென்றால், நாம் ஆவியில் நடக்க வேண்டும்! அதாவது, நாம் ஆண்டவரோடு கொண்ட “சரியான உறவு” சரியான செயலுக்குள் நம்மை நடத்திவிடும். சின்னச் சின்ன காரியங்களிலெல்லாம் தேவநடத்துதலை உணர வேண்டுமென்பதில்லை. இன்னும் சொல்லப்போனால், அவருடைய நடத்துதலைக் குறித்த உணர்வே இல்லாமல்கூட நாம் இருக்கலாம். ஆம், ஆண்டவரோடு கொண்ட உறவுதான் இங்கே அதிக முக்கியத்துவம் வாய்ந்ததாக இருக்கிறது. ஏனெனில், நடத்துதல் என்பது ஆவிக்குரிய விஷயமேயல்லாமல், ஒரு இயந்திர சுழற்சிக்குரிய விதிமுறை அல்ல!!
செய்திடத் தவறிய வருத்தத்திலிருந்து விடுதலை :
கடந்தகால தோல்விகள் நம்மில் அநேகருடைய மனதை வேதனைப்படுத்தக்கூடும். சில விஷயங்களில் நாம் தேவனுடைய சித்தத்தை இழந்து, அதை சரி செய்ய முடியாத நிலையில் இருக்கலாம். எப்படி இருந்தாலும், கடந்தகால தோல்வியின் மனவருத்தம் நமக்கு யாதொரு பயனும் ஈட்டித் தராது! அந்த வருத்தம், நம் ஆவிக்குரிய ஜீவ நாடியை மென்றுவிடுவது மாத்திரமல்லாமல், தேவனுடைய யாதொரு ஊழியத்திற்கும் நம்மை தகுதியற்றவர்களாய் மாற்றிவிடும். நம்முடைய தோல்விகளை தேவனிடத்தில் அறிக்கை செய்துவிட்டால், அவை அனைத்தையும் நமக்கு மன்னித்து நம்மை சுத்திகரிப்பதற்கு, அவர் உண்மையுள்ளவராயிருக்கிறார் (1யோவான்.1:7,9). அவ்வாறு அறிக்கை செய்த கடந்த பாவங்களை “இனி ஒருபோதும் நினைத்திட மாட்டேன்” எனவும் வாக்குரைத்திருக்கிறார் (எபி. 8:12). இவ்வாறு நம் கடந்த காலத்தை தேவனே காணாதவராய் இருக்கும்போது, நாம் அதைக்குறித்து மனவேதனை கொள்வது அவசியமேயில்லை! ஆகவே, அந்த தோல்வியின் பள்ளத்தாக்கிற்கு நாம் நிரந்தரமாய் புறமுதுகு காட்டி திரும்பி வரவேண்டும்!
இழைக்கப்பட்ட தவறுகளை நம்மால் சரிசெய்யக் கூடாமல் இருக்கலாம் ..... ஆனால், நம் எஞ்சிய வாழ்வை அவருடைய மகிமைக்காகவே பயன்படுத்தும்படி, ஆண்டவரிடம் நாம் கேட்டிட முடியுமே!
தாவீது மகா கேடான வீழ்ச்சியில் பத்சேபாளோடு பாவம் செய்தது மாத்திரமல்லாமல், அவளின் கணவர் உரியாவையும் கொலை செய்தான்! ஆகிலும் தன் எஞ்சிய காலத்தை மனவேதனையில் அவன் கழிக்காமல், அவனோ மிகுந்த நொறுங்குதலோடும் மனந்திரும்புதலோடும் தேவனிடம் திரும்பி வந்தான்! இவ்வாறு தேவனிடமிருந்து மன்னிப்பைப் பெற்றுக்கொண்ட அவன், அன்றிலிருந்து தேவனுடைய மகிமைக்காகவே வாழ்ந்தான்! இதை பரிசுத்த ஆவியானவரே சாட்சி கொடுத்து “தாவீது, உரியாவின் சங்கதி ஒன்று தவிர... அவர் பார்வைக்கு செம்மையானதைச் செய்து வந்தான்” என்றே 1இராஜா.15:5 கூறுகிறது. வீழ்ச்சியின் துயரம் தாவீதின் மனதில் நோய் கொண்டிட அவன் அனுமதித்திருந்தால், அவன் இன்னமும் அதிகமாகவே ஆண்டவருடைய மனதை துக்கப்படுத்தியிருப்பான். ஆம், தங்கள் வீழ்ச்சியின் மனதுயரத்தில் தொடர்ச்சியாய் வாழ்பவர்கள் இன்னமும் தோல்வியின் மேல் தோல்வியைத்தான் அடைவார்கள். பின்னான நமது தோல்விகளை மறந்து, தேவசித்தமாகிய முன்னானதை நிறைவேற்றும்படியே நாம் தொடர்ந்து ஓடவேண்டும் (பிலிப்பியர்.3:13,14). பச்சைப்புழுக்களால் பட்சிக்கப்பட்ட வருஷங்களின் விளைவை, உங்களுக்குத் திரும்ப அளிப்பேன்! என்றே தேவன் வாக்கு கொடுத்திருக்கிறார் (யோவேல் 2:25).
கடந்த நாட்களில் தேவனுடைய சித்தம் என்று உணர்ந்தவைகள், இப்போது “அது தேவனுடைய சித்தமாய் இருந்திருக்க முடியாது” என்ற சந்தேகம், நமக்கு மனசஞ்சலத்தை தரக்கூடிய ஓர் சோதனையாகவே இருக்கிறது! ஏனெனில், முன்பு அன்று எடுத்த தீர்மானம் இப்போது குழப்பத்திற்குள் நம்மை நடத்தியிருக்கக்கூடும் அல்லது “இந்த உண்மையை நான் முன்பே அறிந்திருந்தால் நான் வேறுவிதமான தீர்மானத்தை எடுத்திருப்பேன்!” என்ற எண்ணத்தாலும் நாம் சோதிக்கப்பட முடியும். இதுபோன்ற தடுமாற்றங்கள் வரும்போது ஒரே ஒரு கோட்பாட்டை நாம் மனதில் கொள்ள வேண்டும் :
அது என்னவெனில், “தேவன் வெளிச்சத்தில் காண்பித்ததை ஒருக்காலும் இருளில் வைத்து சந்தேகிக்காதீர்கள்” என்பதேயாகும். நாம் மிகுந்த உண்மையோடு தேவனுடைய சித்தத்தை நாடி அப்போது கிடைத்த வெளிச்சத்தின்படி ஒன்றை தீர்மானித்திருந்தால், இப்போது அதை திரும்பிப் பார்த்து நான் வருந்த வேண்டியது அவசியமேயில்லை.
‘நம்மை முட்டாளாக்கி' மகிழ்ச்சியடைய விரும்புவதற்கு தேவன் ஒரு கொடூரமான ஆளுகைக்குரியவர் அல்ல. அவர் ஒரு அன்புள்ள தகப்பன்! நாம் அப்பம் கேட்கும்போது, ஒருபோதும் நமக்கு கல்லை தர மாட்டார். நாம் மிகுந்த உத்தமத்தோடு தேவனுடைய சித்தத்தை தேடியிருந்தால், செம்மையாய் நம்மை ஆண்டு நடத்தும் ஆண்டவர் “சரியானதை தீர்மானிக்கவே” நம்மை நடத்தியிருக்கிறார் என்பதில் முழு நிச்சயம் கொள்ளலாம். ஆம், அன்று நமக்குத் தெரியாதிருந்த விவரங்களை “ஒரு நோக்கத்திற்காகவே” தேவன் மறைத்து வைத்திருப்பார்!
துரோவா பட்டணத்திலிருக்கையில், பவுலும் சீலாவும் மக்கெதொனியாவிற்கு செல்லும்படியான தெளிவான வழிநடத்துதலைத்தான் தேவன் தந்திருந்தார். அவர்களும் உடனே புறப்பட்டுச் சென்றார்கள். ஆனால் அவர்கள் அங்கு போய் சேர்ந்தவுடன் சிறையில் அடைக்கப்பட்டு, அவர்களுடைய கால்கள் தொழுமரத்தில் கட்டப்பட்டது. இவ்வேளையில், “தாங்கள் நடத்தப்பட்டது தவறாய் இருக்குமோ!” என அவர்கள் பேதலித்திருக்கக்கூடும். இவ்வாறு நடக்கும் என்பதை முன்கூட்டியே அவர்கள் அறிந்திருந்தால், துரோவா பட்டணத்தை விட்டு வந்திருக்கவே மாட்டார்கள். ஆனால் தேவனோ, எந்த எச்சரிப்பையும் அவர்களுக்குத் தரவில்லை! ஆம், சிறையில் அடைபட்ட போதிலும் பவுலும் சீலாவும் தேவன்மீது நம்பிக்கை வைத்திருந்தார்கள்!
தேவன் தங்களுக்கு வெளிச்சத்தில் காட்டியதை இருளில் வைத்து சந்தேகித்திட அவர்கள் மறுத்து, தேவனை இடைவிடாமல் துதித்தார்கள் (அப்.16; 8-26).
இதற்குப் பிறகு நடந்த நிகழ்ச்சிகள்தான் அவர்கள் பூரணமான தேவ சித்தத்திற்குள் இருந்தார்கள் என்பதை உறுதிப்படுத்துவதாக இருந்தது! ‘பிரச்சனைகள் வருவதால்' நாம் தேவனுடைய சித்தத்திற்கு புறம்பாக இருக்கிறோம் என தவறாய் எண்ணிவிடக்கூடாது. நாம் உறுதியுடன் தேவனை விசுவாசிக்கிறவர்களாயிருந்தால்.... “ கடுமையான காரிருளிலும்” எந்த மனசஞ்சலமுமில்லாமல் நாம் தேவனை துதித்துக்கொண்டே இருக்க முடியும்!
பயத்திலிருந்து விடுதலை :
மனுஷர் மூலமாகவோ அல்லது சூழ்நிலைகள் மூலமாகவோ ஏற்படும் பயம், நாம் தேவசித்தத்தையே இழக்கும்படி செய்துவிடும்! இன்று தேவனின் நடத்துதலை நாடும் அநேக விசுவாசிகள் “தங்கள் பாதுகாப்பிற்கு உத்தரவாதத்தை” எதிர்பார்த்தே செயல்படுகிறார்கள். ஏனெனில் சில ஸ்தலங்களைக் குறித்தும் சில வேலைகளைக்குறித்தும் ஓர் பாதுகாப்பற்ற அச்சம் அவர்கள் மனதை ஆளுகை செய்கிறபடியால், அப்படிப்பட்ட ஒரு இடத்தையோ, ஒரு வேலையையோ தவிர்த்து விடவே நாடுகிறார்கள். ஆனால், இந்த உலகில் எந்த அபாயமும் இல்லாத ஒரு ஸ்தலம் அல்லது ஒரு வேலை என்பது இல்லவே இல்லை!
உண்மை என்னவெனில், அண்டசராசரத்திலும் நிரந்தர பாதுகாப்புள்ள ஒரே இடம் “தேவனுடைய பரிபூரண சித்தத்தின் மையமேயாகும்!"
நாம் ‘என்று' தேவனுடைய திட்டத்தை விட்டு விலகுகிறோமோ “அப்போதுதான் நமது காலடிகள் அபாய எல்லைக்குள் அடியெடுத்து வைக்கும்! தேவனுடைய நடத்துதலைத் தேடாமல், தாங்களாகவே தீர்மானங்கள் எடுப்பவர்களே "ஓர் பாதுகாப்பற்ற, சாத்தானின் கொடிய தாக்குதலுக்கு ஆளாகிறார்கள்!! ஆனால் “உன்னதமானவரால் நியமனம் செய்யப்பட்ட ஸ்தலத்தில் ஜீவித்து, அங்கு வேலை செய்கிறவர்கள்....... நிச்சயமாய் சர்வவல்லவரின் நிழலில் பாதுகாக்கப்பட்டிருப்பார்கள்” (சங். 91:1-மருவிய வசனம்) என்றே தேவனுடைய வார்த்தை அருமையாய் கூறுகிறது.
“எங்கே தவறு செய்துவிடுவோமோ” என்ற பயத்திலிருந்தும் நாம் விடுதலையாக வேண்டும்! யாதொரு தவறும் செய்திடாத மனிதர்கள் யார் தெரியுமா? யாதொரு வேலையையும் எந்த சமயத்திலும் செய்யாதவர்கள் மாத்திரமே, யாதொரு தவறும் செய்திருக்க மாட்டார்கள்!! ஆனால் நாமோ தேவனுடைய பாடசாலையில் மாணாக்கர்களாய் இருக்கிறபடியால், எவ்வித சந்தேகத்திற்கும் இடமில்லாமல் நாம் அவ்வப்போது தவறு செய்வது தவிர்க்க முடியாததேயாகும்!
இருப்பினும், நமக்கு கற்றுத்தரும் ஆண்டவர் அருகேயிருக்கிறபடியால், எந்த விஷயத்தையும் சரியானபடி சீர்ப்படுத்தி நிலைநிறுத்த அவரால் முடியும்!
ஆண்டவராகிய இயேசு ஒருவர் தவிர, யாதொரு தவறும் செய்யாமல் “தேவனுடைய பூரண சித்தத்தில் நடந்துவர” ஒரு மனிதனாலும் கூடாது! இன்று தேவனுடைய சித்தத்தின்படி நடந்துவர கற்றுக்கொண்ட மிகப் பெரிய பரிசுத்தவான்களும் “நடை பயிலும் ஒரு பிள்ளையைப் போலவே, அநேக வீழ்ச்சிக்குப் பிறகுதான்” தேவனுடைய சித்தத்தில் நடந்துவர கற்றுக்கொண்டார்கள்! எங்கே கீழே விழுந்து விடுமோ? என அஞ்சும் ஒரு பிள்ளை, வாழ்நாளெல்லாம் நடப்பதற்கு கற்றுக் கொள்ளாமலே தேங்கி நின்றுவிட முடியும். ஆகவேதான் நாம் முன்னேறிச் செல்வதற்கு, இது போன்ற பயம் நம்மைத் தாக்குவதற்கு இடம் தரவே கூடாது.
ஒருவன் தேவனுடைய சித்தத்தில் நடந்து வருவது சற்று கடினமான ஜீவியம் போல் தோன்றலாம்...... ஆனால் இந்த வாழ்க்கை ஆண்டவரோடு கொண்ட மகா மேன்மையான தீரம் நிறைந்த வாழ்க்கையேயாகும்! அப்படியே இவர்கள் கால் வழுக்கினாலும் அவர்களை வழுவாதபடி காத்துக் கொள்வேன் என்றே தேவன் வாக்குரைத்திருக்கிறார். இதைக் குறித்து சங்கீதம்.37:23,24 கூறும்போது, “நல்ல மனுஷனுடைய நடைகள் கர்த்தரால் உறுதிப்படும்..... அவர்கள் விழுந்தாலும் தள்ளுண்டு போவதில்லை...... கர்த்தர் தம் கரத்தினால் அவனைத் தாங்குகிறார்!!” என்றே நேர்த்தியாய் கூறுகிறது.
முடிவாக, நடத்துதல் என்பது ஒரு தனிமனிதனுக்கும், தேவனுக்கும் இடையிலான விஷயம் என்பதை நாம் மனதில் கொள்ளவேண்டும்! வேறொருவரை தேவன் நடத்திச் சென்ற விதத்தை வைத்து நம்மையும் நடத்துவார் என நாம் ஒருக்காலும் கூறிட முடியாது. எல்லா விசுவாசிகளுக்கும் ஒரேவிதமான பரந்த கோட்பாடு இருந்த போதிலும்.... தேவனோ நம் ஒவ்வொருவரையும் தனித்தனியாய் நடத்தும் விதமானது ஒருவருக்கொருவர் வித்தியாசமாகவே இருக்கிறது! ஆகவே, தன் சாட்சியில் ஒருவர் கூறியதைக் கேட்ட நீங்கள், அவரைப் போலவே அதே விதமாய் நடத்தப்படுவதை நீங்கள் வாஞ்சித்தால், குழப்பமே உங்களுக்கு எஞ்சி நிற்கும்! ஆகவே உங்களை தேவன் எவ்வாறு நடத்த வேண்டும் என்ற பொறுப்பை தேவனுக்கே ஒப்புக்கொடுத்து விடுங்கள்! உங்களுக்கு இருக்க வேண்டிய கருத்தான அக்கறை யெல்லாம் “தேவன் அழைக்கும் போதெல்லாம், எப்போதும் ஆயத்தமாயிருக்க வேண்டும்! அவருடைய எந்த விருப்பத்தையும் நிறைவேற்ற வேண்டும்!” என்பதாகவே எப்போதும் இருந்திட வேண்டும். உங்களுடைய விருப்பத்தைக் காணும் தேவனும், நீங்கள் தேவனுடைய சித்தத்தைக் குறித்து விழிப்போடு இருக்கும்படிச் செய்து, அதை நிறைவேற்றும் படியான பெலனை உங்களுக்குத் தருவதை "தன்மீது விழுந்த கடமையாக” தேவன் பொறுப்பெடுத்துக் கொள்வார்!!
செய்தியின் சாராம்சங்கள் :
1) 'நாம் தேவனை அதிகம் அறிய வேண்டும்' என்பதற்காகவே
நமது பாதையில் தடுமாற்றம் ஏற்பட தேவன் அனுமதிக்கிறார். அதன்
மூலமாய் நம் நோக்கங்களை அவர் புடைத்து, நம் விசுவாசத்தையோ
பெலப்படுத்திவிடுகிறார்!
2) தேவனுடைய சித்தத்தைக் குறித்த தெளிவற்ற அநேக சமயங்
களில், நம்மால் முயன்றளவிற்கு ஆவியானவரின் மனதை அறிந்தவர்
களாய் “துணிந்து முன் செல்ல” அடியெடுத்து வைத்துவிட வேண்டும்!
3) நம் கடந்த கால தோல்விகளைக் குறித்தோ அல்லது கடந்த கால
தீர்மானங்களைக் குறித்தோ மனச்சோர்வடைந்து, அதை ஒருபோதும்
பின்னிட்டு நாம் பார்க்கவே கூடாது!
4) அபாயம் ஏற்படுமென்ற பயமோ அல்லது தவறு செய்து
விடுவோமோ என்ற பயமோ நம்மை ஆட்கொள்வதற்கு நாம் அனும
திக்கவே கூடாது. அப்படியில்லையென்றால், இதுபோன்ற பயங்கள்
நம்மை செயலிழக்கச் செய்யும் இடத்திற்கு கொண்டுசென்று விடும்!
5) நம்மை தேவன் எவ்வாறு நடத்த வேண்டும் என்ற பொறுப்பை
முற்றிலுமாய் அவருக்கே நாம் ஒப்புக்கொடுத்திட வேண்டும்!!