அதிகாரம் 0
தேவ மனிதரின் "50" அடையாளங்கள்
ஆம்! இன்று அவருக்குத் தேவைப்படும் மனிதர்கள்......
1. அனுதினமும் அவர் முகத்திற்கு முன்நின்று, அவர் குரல் கேட்பவர்களாகயிருக்க வேண்டும்.
2. தேவனேயன்றி தங்கள் இருதயத்தில் வேறு எவர் மீதும் அல்லது வேறு எந்தப் பொருளின் மேலும் விருப்பம் அற்றவர்களாயிருக்க வேண்டும்.
3. கர்த்தருக்குப் பயப்படுகிற பயத்தினால் ஆட்கொள்ளப்பட்டு, ‘பாவம்’ அது எந்த ரூபமாயிருந்தாலும் அதைக் கடுமையாய் வெறுத்து, தங்கள் வழிகளிலெல்லாம் நீதியையும் சத்தியத்தையும் சினேகிப்பவர்களாய் இருக்க வேண்டும்.
4. கோபத்தையும், பாவமான காமசிந்தைகளையும் ஜெயித்து, சாகத் துணிவார்களேயல்லாமல் அவைகளால் தங்கள் சிந்தையிலும் பாவம் செய்யாதவர்களாய் இருக்க வேண்டும்.
5. சிலுவை சுமந்து வருவது அவர்களது தினசரி வாழ்க்கைக் கோலமாயிருந்து, பயத்தோடும் நடுக்கத்தோடும் தங்கள் இரட்சிப்பு நிறைவேற ‘தொடர்ச்சியாக’ பிரயாசப்பட்டு பூரணத்தை நோக்கி கடந்து செல்பவர்களாய் இருக்க வேண்டும்.
6. என்னதான் கோபமூட்டும் சூழ்நிலை உருவானாலும், இன்னொரு மனிதரிடம் அன்பற்ற சுபாவம் கொள்ளும்படி சிறிதும் அசைக்கப்படாமல் ‘பரிசுத்தாவியினால் நிறைந்து’ அன்பில் வேரூன்றி நிலைத்திருப்பவர்களாய் இருக்க வேண்டும்.
7. மனுஷீகப் புகழ்மாலையோ, ஆவிக்குரிய வளர்ச்சியோ, தேவனால் தரப்பட்ட ஊழியமோ, அல்லது வேறெதுவாக இருந்தாலும் அவைகள் அவர்களைத் ‘தாங்கள் பரிசுத்தவான்கள் எல்லோரிலும் மிகச்சிறியவன்’ என்ற விழிப்புணர்வை இழக்கச்செய்யாமல், தாழ்மையில் வேரூன்றி நிலைதிருப்பவர்களாய் இருக்கவேண்டும்.
8. தேவனுடைய சுபாவத்தையும், நோக்கத்தையும் அவரது வார்த்தையின் மூலமாய் அறிந்து, அது எவ்வளவு சிறிய கற்பனையானாலும் அதற்கு கீழ்படியாமல் போகாதபடிக்கு அல்லது மற்றவர்களுக்கு அதைப் போதிப்பதற்கு அலட்சியமாயிராதபடிக்கு அவ்வார்த்தைகளுக்கு நடுங்குபவர்களாய் இருக்க வேண்டும்.
9. தேவனுடைய முழு ஆலோசனைகளையும் பறைசாற்றி, வேசிமார்க்கத்தையும்; வசனத்திற்கு புறம்பான மனுஷீகப் பாரம்பரியத்தையும் அப்பட்டமாய் உரித்து வெளியரங்கமாக்குகிறவர்களாய் இருக்கவேண்டும்.
10. தேவபக்தியின் இரகசியமான, ‘கிறிஸ்து மாம்சத்தில் வெளிப்பட்டதை’ குறித்தும்; அந்த மாம்சத்தினூடே திறந்த வைத்த புதிதும் ஜீவனுமான மார்க்கத்தைக் குறித்தும் பரிசுத்தாவியின் வெளிபாடு நிறைந்தவர்களாய் இருக்கவேண்டும்.
11. ஜாக்கிரதை உள்ளவர்களாயும்- கடினவேலை செய்பவர்களாயுமிருந்து ஆனால், அதேசமயத்தில் நகைசுவை உணர்வுள்ளவர்களாயும்; இளைப்பாறியிருக்க அறிந்தவர்களாயும்; தன் பிள்ளைகளோடு மகிழ்ந்து விளையாட அறிந்தவர்களாயும்; தேவனுடைய இயற்கை வரங்களின் ரம்மியத்தை ரசிப்பவர்களாயுமிருக்க வேண்டும்.
12. துறவறம் அற்றவர்களாய் ஆனால், அதேசமயத்தில் கட்டுப்பாடான வாழ்க்கை வாழ்பவர்களாயும், எந்தக் கஷ்டத்திற்கும் அஞ்சாதவர்களாயும் இருக்கவேண்டும்.
13. விலையுயர்ந்த ஆடைகளுக்கும், புதுப்புது இடங்களை காண்பதற்கும் சிறிதும் ஆர்வம் அற்றவர்களாயும்; பிரயோஜனமற்ற கிரியைகளால் தங்கள் நேரத்தை வீணடிக்காதவர்களாயும்; தங்கள் பணத்தை கண்ட கண்ட பொருட்களை வாங்கி சீரழிக்காதவர்களாயும் இருக்க வேண்டும்.
14. கவர்ச்சியான நாவூற செய்யும் உணவின்மேல் உள்ள விருப்பத்தைத் தங்களுக்குக் கீழ்படுத்தியவர்களாயும்; இசை-விளையாட்டு அல்லது தங்களுக்கென்று விருப்பமான விசேஷித்த வேறு எந்த ஆசாபாசங்களுக்கு அடிமையாகாதவர்களாய் இருக்கவேண்டும்.
15. அக்கினி போன்ற உபத்திரவங்கள், வசை மொழிகள், பாடுகள், பொய்யாகக் குற்றஞ்சாட்டப்படுதல், சரீர சுகவீனங்கள், பொருளாதார நெருக்கடிகள், உறவினர்கள் மற்றும் மார்க்கத்தலைவர்களிடமிருந்து எழும்பும் எதிர்ப்புகள் ஆகியவை மூலம் தேவனால் வெற்றிகரமாய்த் தேர்ச்சியளிக்கப்பட்டவர்களாய் இருக்க வேண்டும்.
16. எவ்வளவு இழிவான பாவியானாலும், எவ்வளவு மோசமான விசுவாசியே ஆனாலும் அவர்களுக்காய் பரிதபித்து, "தாங்கள் பாவிகளிலும் பிரதான பாவி" என்ற உண்மையை அறிந்துகொண்டபடியால், இப்போது அவர்களுடைய மீட்பில் நம்பிக்கை கொண்டு, இரக்கத்தால் நிறைந்தவர்களாய் இருக்கவேண்டும்.
17. தங்கள் பரோலகத்தகப்பனின் அன்பின் பாதுகாப்பில் ஆழமாய் வேரூன்றி நிலைத்திருக்கிறபடியால் ஒன்றையும் குறித்து ஒருபோதும் மனக்கிலேசம் அடையாதவர்களாயும், சாத்தானுக்கோ; பொல்லாத மனிதர்களுக்கோ; நெருக்கடியான சூழ்நிலைகளுக்கோ அல்லது மற்றகாரியங்களுக்கேயானலும் கொஞ்சம்கூட அஞ்சாதவர்களாய் இருக்க வேண்டும்.
18. ஆளுகை செய்யும் சர்வவல்லவர் தங்கள் வாழ்வின் ஒவ்வொரு பகுதியிலும் இடைப்பட்டு சகலத்தையும் தங்கள் நன்மைக்கென்றே கிரியை செய்கிறார் என்பதை விசுவாசிப்பதினிமித்தம், எல்லா மனிதர்களுக்காகவும், எல்லா சூழ்நிலைகளிலும் எப்போதும் ஸ்தோத்தரித்து தேவனுடைய இளைப்பாறுதலில் பிரவேசித்தவர்களாய் இருக்க வேண்டும்.
19. ‘மனசு சரியில்லாமற்’ போகச்செய்யும் எல்லாவற்றையும் ஜெயித்து, கர்த்தரில் மாத்திரமே தங்கள் மகிழ்ச்சியை கண்டுகொண்டு, கர்த்தரின் மகிழ்ச்சியால் எப்போதும் நிரம்பி வழிபவர்களாய் இருக்கவேண்டும்.
20. தங்கள் மீதோ, சுபாவமான தங்கள் திறமை மீதோ சிறிதும் நம்பிக்கை வைக்காமல், தேவனே தங்கள் எல்லா சூழ்நிலைகளிலும் கொஞ்சமும் கைவிடாமல் உதவிசெய்பவர் என்று அவர்மீதே தங்கள் முழுநம்பிக்கையையும் வைக்கும் ‘உயிருள்ள விசுவாசம்’ பெற்றவர்களாய் இருக்கவேண்டும்.
21. தங்கள் சுய அறிவு உந்துகிறபடி ஜீவிக்காமல், பரிசுத்தாவியின்வழி நடத்துதலின்படி ஜீவிப்பவர்களாய் இருக்க வேண்டும்.
22. உணர்ச்சித் தூண்டுதலால் பெற்ற போலி அதிர்ச்சி அனுபவம் அல்ல; அல்லது வேத அறிவு வாக்குவாதத்தால் அனுமானித்துக் கொள்ளும் அனுபவமும் அல்ல; மாறாக, கிறிஸ்துவால் நிஜமாகவே பரிசுத்தாவியாலும், அக்கினியாலும் அபிஷேகிக்கப்பட்டவர்களாய் இருக்க வேண்டும்.
23. தேவனால் அருளப்பட்ட உன்னத வரங்களை பெற்று, ‘தொடர்ச்சியான’ ஆவியின் அபிஷேகத்தில் ஜீவிக்கிறவர்களாய் இருக்க வேண்டும்.
24. சபையானது, கிறிஸ்துவின் சரீரம் என்கின்ற (ஓர் கூட்டமோ அல்ல அல்லது ஓர் ஸ்தாபனமோ அல்ல) வெளிப்பாட்டைப் பெற்று, தங்கள் முழுபெலத்தையும், ஆஸ்தியையும், ஆவிக்குரிய வரங்களையும் அச்சபை கட்டப்படுவதற்கே அர்ப்பணிக்கிறவர்களாய் இருக்க வேண்டும்.
25. பரிசுத்தாவியின் உதவியால், தங்கள் நாவை அடக்குவதற்கு கற்றுக் கொண்டவர்களாயும், இப்பொழுதோ அவர்களின் நாவு பரத்திற்குரிய வார்த்தைகளால் கொழுந்திட்டுப் பற்றி எரிவதாயும் இருக்க வேண்டும்.
26. எல்லாவற்றையும் வெறுத்து விட்டுவிட்டு, பணத்தின் மீதோ அல்லது உலகப்பொருட்களின் மீதோ கொஞ்சமும் பிடிப்பு இல்லாதவர்களாயும்; பிறரிடத்தில் இருந்து ஏதேனும் அன்பளிப்பாய்ப் பெற ஒருபோதும் விருப்பம் அற்றவர்களாயும் இருக்க வேண்டும்.
27. இப்பூமிக்குரிய எல்லா தேவைகளுக்கும் ‘தேவனையே’ நம்புகிறவர்களாயும், தங்கள் தேவையைக் குறித்து பேச்சுவாக்கில் நாசூக்காக தெரியப்படுத்தாதவர்களாயும், தங்கள் உரையாடலின் போதோ அல்லது கடிதம் மூலமாகவோ அல்லது ரிப்போர்ட் அறிக்கை மூலமாகவோ தங்கள் ஊழியத்தை விளம்பரமாக்கி ஜம்பம் செய்யாதவர்களாயும் இருக்க வேண்டும்.
28. பிடிவாத குணம் இல்லாமல், மென்மையானவர்களாயும், குறைசொல்லப்படுவதற்கு மனம் திறந்தவர்களாயும், தங்களின் விவேகமுள்ள மூத்த சகோதரர்களால் திருத்தப்படுவதற்கு ஆர்வம் உள்ளவர்களாயும் இருக்க வேண்டும்.
29. மற்றவர்களை ஆளுகை செய்யவோ அல்லது புத்தி சொல்லவோ ஆர்வம் அற்றவர்களாய் (ஆலோசனை கேட்கும்போது புத்தி சொல்வது தவறில்லை). சாதாரண சகோதரர்களாயும், மற்றெல்லாருக்கும் கீழாய் சென்று சேவிக்கும் வேலையாளாய் இருப்பதற்கு மாத்திரமே விருப்பம் கொண்டு, மூத்த சகோதரர் அல்லது லீடர் என எண்ணப்படுவதற்கு ஏக்கம் இல்லாதவர்களாயும் இருக்க வேண்டும்.
30. இசைந்து போவதற்கு இலகுவானவர்களாயும், பிறரால் அசௌகரியமாக்கப்படுவதற்கும், தங்களில் ஆதாயம் அடையும்படிக்குத் தங்களை விட்டுத்தருபவர்களாயும் இருக்க வேண்டும்.
31. கோடீஸ்வரனோ, பிச்சைகாரனோ, வெள்ளைத்தோலுடையவனோ, கருப்புத்தோலுடையவனோ புத்திமானோ, புத்தியீனனோ, நாகரீகமுள்ளவனோ, மற்றவனோ இவர்களுக்குள் எந்த வேற்றுமை பாகுப்பாடும் காட்டாமல் எல்லோரையும் சமமாய் நடத்துகிறவனாய் இருக்க வேண்டும்.
32.கிறிஸ்துவின் பிரமாணங்களுக்கு கீழ்படிவதற்கு அல்லது கிறிஸ்துவைப் பற்றும் தியானத்திலிருந்து பின்ன (இம்மி அளவு) அளவாகிலும் குளிர்ந்து விடுவதற்கு தங்கள் மனைவியாலோ, பிள்ளைகளாலோ, உறவினர்களாலோ, நண்பர்களாலோ அல்லது வேறு விசுவாசிகளாலோ சிறிதும் வசப்படுத்தப்பட முடியாதவர்களாய் இருக்க வேண்டும்.
33.சாத்தான் வழங்கும் புகழாலோ அல்லது பணத்தாலோ அல்லது வேறெதுவாலோ ஒருபோதும் ஒத்தவேஷம் தரிப்பதற்கு ‘லஞ்சம்’ தரப்பட முடியாதவர்களாக இருக்க வேண்டும்.
34.கிறிஸ்துவுக்காய் அஞ்சாநெஞ்சுடைய சாட்சிகளாய் விளங்கி, மார்க்கத்தலைவர்களுக்கோ, அரசாட்சி தலைவர்களுக்கோ கொஞ்மும் அச்சமற்றவர்களாய் இருக்கவேண்டும்.
35.இந்த பூமியில் எந்த மனிதரையும் பிரியப்படுத்த விருப்பம் அற்றவர்களாய், தேவனை மாத்திரமே பிரியப்படுத்துவதற்கு ஒருவேளை எல்லா மனிதரையுமே இடறச் செய்வதற்கும் ஆயத்தமுள்ளவர்களாய் இருக்கவேண்டும்.
36.வாழ்க்கையின் தேவை, சொந்த வசதி என்ற எல்லையைக் கடந்து நின்று, தேவ சித்தத்தையும், தேவனுடைய இராஜ்ஜியத்தையுமே எக்காலமும் தலையானதாக கொள்ளும் மனிதர்களாய் இருக்கவேண்டும்.
37.தேவனுக்கு ‘செத்தகிரியைகளை’ செய்யும் கதியை அடையும்படி மற்றவர்களாலோ அல்லது தங்கள் சுயபுத்தியாலோ கட்டாயம் செய்யப்பட முடியாதவர்களாய், ஆனால் தங்கள் வாழ்க்கையில் தங்களுக்கு வெளிப்படுத்தப்பட்ட தேவசித்தத்தை நிறைவேற்றுவதற்கோ ஆர்வமும், அதில் மனநிறைவும் காண்பவர்களாய் இருக்கவேண்டும்.
38.கிறிஸ்தவ ஊழியங்களில் மனுஷீகத்திற்கும், ஆவிக்குரியவற்றிற்கும் உள்ள வேறுபாட்டை சுட்டிக்காட்டும்படி ஆவியைப் பகுத்தறியக் கூடியவர்களாய் இருக்கவேண்டும்.
39.உலகப் பொருட்களை பூமிக்குரிய கண்ணோக்கின்படி அல்லாமல், பரலோக கண்ணோட்டத்தின்படி காண்பவர்களாய் இருக்கவேண்டும்.
40.தேவனுக்கு செய்யும் ஊழியத்திற்காக வழங்கப்படும் எவ்விதமான உலகப்புகழ்ச்சியையும், எந்தப் பட்டங்களையும் உதறித்தள்ளி அவைகளை ஏற்றுக்கொள்ள மறுத்து நிற்பவர்களாய் இருக்கவேண்டும்.
41.இடைவிடாமல் எவ்விதம் ஜெபிப்பது என அறிந்தவர்களாயும், தேவைப்படும்போதெல்லாம் இன்னபடி உபவாசித்து ஜெபிக்க வேண்டும் எனவும் அறிந்தவர்களாய் இருக்கவேண்டும்.
42.தாராளமாயும், மனப்பூர்வமாயும், அந்தரங்கமாயும், ஞானத்தோடும் கொடுப்பதற்கு கற்றுக் கொண்டவர்களாய் இருக்கவேண்டும்.
43.எப்படியாகிலும் சிலரை இரட்சிப்பதற்கு எல்லா மனுஷருக்கும் எல்லாமுமாய் மாறுவதற்கு இணக்கம் உள்ளவர்களாய் இருக்கவேண்டும்.
44.பிறர் இரட்சிக்கப்படுவது மாத்திரமல்லாமல் அவர்கள் சீஷர்களாக்கப்பட்டு, சத்தியத்தை அறிகிற அறிவுக்கும்; தேவனுடைய பிரமாணங்கள் எல்லாவற்றிற்கும் கீழ்படியும் ஸ்தானத்தை அடைவதையும் காணும்பொருட்டு, வாஞ்சித்துத் தவிப்பவர்களாய் இருக்கவேண்டும்.
45.இப்பூமியின் எல்லை எங்கும், தேவனுக்கென்று ‘தூய்மையான சாட்சிகள்’ நிலைநிறுத்தப்படுவதைக் காண்பதற்கு ஏக்கம் நிறைந்தவர்களாய் இருக்கவேண்டும்.
46.சபையில் கிறிஸ்து மகிமைப்படுவதைக் காண்பதற்கு பட்சிக்கும் பக்தி வைராக்கியம் நிறைந்தவர்களாய் இருக்கவேண்டும்.
47.எந்த விஷயமாயிருந்தாலும் அதில் தனக்கானதை நாடாதவர்களாய் இருக்கவேண்டும்.
48.ஆவிக்குரிய அதிகாரமும், ஆவிக்குரிய அந்தஸ்தும் நிறைந்தவர்களாய் இருக்கவேண்டும்.
49.அவசியமேயானால், இப்பூவுலகில் தேவனுக்கென்று தனித்து நிற்கவும் துணிவுள்ளவர்களாய் இருக்கவேண்டும்.
50.தங்களுக்கு முன்சென்ற அப்போஸ்தலர்கள், தீர்க்கதரிசிகள் போன்று, முழுக்க முழுக்க ஒத்தவேஷம் தரியாத புருஷர்களே, ஆ! அந்த மனிதர்களே தேவனுக்குத் தேவை!
இன்று உலகில், இப்பேர்ப்பட்ட மனிதர்கள் மிகவும் கொஞ்சம் பேர்களே இருக்கிறபடியால், தேவனுடைய தூயப்பணி துயரத்திற்குள்ளாய் வீழ்ந்துக் கிடக்கிறது.
பாவமும் வேசித்தனமும் நிறைந்த சந்ததி நடுவில், ஒத்த வேஷத்தில் மூழ்கித் திளைக்கும் கிறிஸ்தவத்தின் மத்தியில், தேவனுக்கென்று ‘நீங்களே’ இப்படிப்பட்ட மனிதனாய் இருப்பதற்கு உங்கள் முழு இருதயத்தோடு தீர்மானம் எடுங்கள். தேவனிடத்தில் பட்சபாதம் இல்லையே! நீங்கள் மாத்திரம் இப்படிப்பட்ட மனிதராய் இருப்பதற்கு முழு இருதயமாய் வாஞ்சை கொண்டுவிடுங்கள். இப்போது நீங்களும் இப்படிப்பட்ட மனிதராகிவிடுவதற்குரிய உறுதி உங்களுக்கு கையளிக்கப்பட்டுவிடும்! தேவன் எதிர்நோக்கும் பூரண ஒப்புக்கொடுத்தலும், கீழ்படிதலும், நீங்கள் அறிந்திருக்கிற உஙகள் வாழ்க்கையின் எல்லை மாத்திரம்தானே (அது ஒருவேளை மிகக்குறுகிய எல்லையாகவும் இருக்கக்கூடும்) எனவே, இந்த அறிந்துணர்ந்த எல்லைக்குள் நீங்கள் இப்படிப்பட்ட மனிதராய் மாறிவிடுவது அதிநிச்சயமே! உங்களின் இந்தக்குறுகிய எல்லைப்பகுதியானது, நீங்கள் வெளிச்சத்தில் நடந்து பூரணத்தை நோக்கிக் கடந்து செல்லும்போது, கொஞ்சம் கொஞ்சமாய் விசாலமடைந்துவிடும்.... இவ்வாறிருக்க, நீங்கள் ஆம் நீங்களே அந்தமனிதனாய் ஏன் மாறமுடியாது என்பதற்கு எந்தவித சாக்குபோக்கிற்கும் இடமேயில்லை!!
நம் மாமிசத்தில் நன்மை ஒன்றும் வாசமாயில்லையே. எனவே, மேற்கண்ட குணாதிசயங்கள் நம்மில் காணப்படுவதற்கு தேவனிடத்திலிருந்து கிருபையை அதிகமாக வாஞ்சித்துத் தேடுவோமாக!!!
ஆம், முடிவடையப்போகும் இக்காலத்தில் நீங்களும் இப்படிப்பட்ட மனிதராய் மாறுவதற்கு அவர் தன் கிருபையை தரும்படி, அனுதினமும் தேவனை நோக்கிப் பலத்த சத்தமிட்டுக் கூப்பிடுங்கள்! மன்றாடி ஜெபியுங்கள்!
கேட்பதற்கு காதுள்ளவன் எவனோ அவன் கேட்கக்கடவன்!