நல்லதோர் அஸ்திபாரம்

எழுதியவர் :   சகரியா பூணன்
    Download Formats:

அதிகாரம் 1
மனந்திரும்புதல்

ஒருவன் இயேசுவின் ஆட்டுத்தொழுவத்திற்குள் (பரலோக ராஜ்யத்திற்குள்) பிரவேசிப்பதற்கு வாசல் வழியாய் பிரவேசிப்பதே சரியான வழி என இயேசு கூறினார். ஆனால், சுவற்றில் ஏறி வேறு வழியாய் உள்ளே பிரவேசிப்பதற்கும் சிலர் முயற்சிப்பார்கள் என்று இயேசு எச்சரித்தார் (யோவான் 10:1).


மனந்திரும்புதலும், ஆண்டவராகிய இயேசுகிறிஸ்துவின் மேல் வைத்திடும் விசுவாசமுமே, மனிதன் இரட்சிக்கப்படுவதற்கு தேவன் வகுத்துத்தந்த வழியாகும். ஆம், அதுவே இரட்சிப்பிற்கு....... ஒரே வழியாகும்! இதை அல்லாமல் வேறு எந்த வழியிலாகிலும் ஏறிவர முயற்சிக்கும் ஓர் மனிதனை தேவன் ஒருக்காலும் ஏற்றுக்கொள்ளவே மாட்டார்!!


கர்த்தருக்கு வழியை ஆயத்தம் செய்யவந்த யோவான்ஸ்நானகன் மனந்திரும்புதலையே பிரசங்கித்தான். ஏனென்றால், இஸ்ரேல் தேசம் இயேசுகிறிஸ்துவைத் தங்கள் சொந்த இரட்சகராக ஏற்றுக்கொள்ளும்படி அவர்களை ஆயத்தம் செய்வதற்கு அது ஒன்றே வழியாக இருந்தது. அவர்களைப் போலவே நமக்கும் இரட்சிக்கப்படுவதற்கு இந்த வழியைத் தவிர வேறுவழியே கிடையாது!


மனந்திரும்புதலும் விசுவாசமும் :


ஆதிக்கிறிஸ்தவர்களிடம் காணப்பட்ட ஆழ்ந்த தன்மையும், அர்ப்பணமும், வல்லமையும் இன்றுள்ள அநேகமான விசுவாசிகளிடம் காணப்படவில்லை. இதற்கு என்ன காரணம் என்பதை நீங்கள் அறிந்திருக்கிறீர்களா? ஆம், இவர்கள் சரியானவிதமாய் மனந்திரும்பவில்லை என்பதே பிரதான காரணமாகும். இவர்கள் கிறிஸ்துவை விசுவாசித்தார்கள் என்பது உண்மைதான். ஆனால் இவர்களோ 'முதலாவது' மனந்திரும்பாமலேயே விசுவாசித்தவர்கள்! எனவேதான் இவர்களின் கிறிஸ்தவ ஜீவியம் ஆழமற்ற “பொக்குத்தன்மை” கொண்டதாய் உள்ளது.


உதாரணமாய், இன்று அநேகருக்குப் பழக்கமான ஓர் கீர்த்தனைப் பாடலின் வாசகத்தைக் கவனித்துப் பாருங்கள்:


“மா கொடிய துரோகியானாலும்

மனதார விசுவாசித்தால் போதுமே;

அக்கணமே அக்கொடியோன்

இயேசுவின் மன்னிப்பைப் பெற்றிடலாகுமே!"


இவ்வாறு, ஓர் கொடிய துராகிதன் ‘வெறுமனே' விசுவாசித்து விட்டால் இயேசுவின் மன்னிப்பை உண்மையாகவே பெற்றிட முடியுமா? அவன் முதலாவது' மனந்திரும்பவேண்டியது அவசியமில்லையா?


இக்கேள்விக்கு நீங்கள், “உண்மையான விசுவாசம் மனந்திரும்புதலோடு இணைந்தே வருகின்றது” என பதிலுரைக்கலாம். ஆனால் நீங்கள் எண்ணிக்கொள்ளும் இந்த விளக்கத்தை அக்கொடிய துராகிதன் அறியாதிருப்பானென்றால், தான் விசுவாசித்ததினிமித்தம் ‘மறுபடியும் பிறந்துவிட்டதாக' அல்லவா தன்னைத் தவறாக முடிவு செய்திருப்பான்? இதினிமித்தம் தன் ஜீவிய காலமெல்லாம் கொடிய ஏமாற்று வஞ்சகத்தில் அம்மனிதன் சிக்கிக்கொள்வானே!


இயேசுகிறிஸ்து பிரசங்கித்த முதல் செய்தி யாதெனில், “மனந்திரும்பி, சுவிசேஷத்தை விசுவாசியுங்கள்” (மாற்கு.1:15) என்பதுதான். இதே செய்தியைத்தான் அவருடைய அப்போஸ்தலர்களும் பிரசங்கிக்கும்படி இயேசு கட்டளைக்கொடுத்தார் (லூக்கா.24:47). அதை அப்படியே அப்போஸ்தலர்களும் கொஞ்சமும் பிசகாமல் பிரசங்கித்தார்கள் (அப்.20:21). ஆம், தேவனுடைய வார்த்தை இதைக்குறித்து மிகவும் தெளிவாகவே இருக்கிறது! நீங்கள் யாராயிருந்தாலும், உங்களுக்கு காரியம் நன்றாய் நடந்து

நீங்கள் உண்மையாகவே குணப்பட வேண்டுமென்றால்... மனந்திரும்பு தலையும் விசுவாசத்தையும் ஒருக்காலும் பிரித்து விடாதீர்கள்!! இந்த இரண்டையும் தேவனே ஒன்றாக இணைத்துள்ளார். எனவே தேவன் இணைத்ததை மனிதன் ஒருக்காலும் பிரிக்கலாகாது!


மனந்திரும்புதலும் விசுவாசமுமாகிய இந்த முதல் இரண்டு மூலப் பொருட்கள்தான் கிறிஸ்தவ ஜீவியத்தின் அஸ்திவாரத்திற்கு இடப்படுகிறது என எபிரெயர்.6:1 மீண்டுமாய் வலியுறுத்திக் கூறுகிறது. எனவே, நீங்கள் சரியான விதத்தில் மனந்திரும்பவில்லையென்றால் உங்கள் அஸ்திவாரம் பிழையானதொன்றாகவே காணப்படும். இவ்வித தவறான அஸ்திவாரத்தில் கட்டப்பட்ட உங்கள் கிறிஸ்தவ ஜீவியம் முழுவதும் உறுதியில்லாமல் ஆட்டங்கொள்ளும் என்பதில் சந்தேகமே இல்லை!


“கர்த்தருக்குப் பயப்படுதலே ஞானத்தின் ஆரம்பம் (அதுவே ABC - பாடமாகும்)” என சத்திய வேதம் விளம்புகிறது (நீதி. 9:10). “பாவத்தை விட்டு விலகி” ஜீவிப்பதே நாம் உண்மையாகவே கர்த்தருக்குப் பயப்படுதலாகும் என நீதி.3:7 கோடிட்டுக் காட்டுகிறது. எனவே, மனந்திரும்பி பாவத்தைவிட்டு விலகாத யாராயிருந்தாலும் கிறிஸ்தவ ஜீவியத்தின் ஆரம்ப ABC-பாடத்தைக் கூட கல்லாதவர்கள்தான்!போலியான மனந்திரும்புதலும் உண்மையான மனந்திரும்புதலும்:


நீங்கள் மனந்திரும்பியிருக்கிறீர்களா? அப்படியானால், உங்கள் மனந்திரும்புதல் மனந்திரும்புதல் உண்மையானதுதானா என்பதையும் நீங்கள் உறுதி செய்ய வேண்டியது மிகவும் அவசியமாகும். ஏனென்றால், இன்று சாத்தான் போலியான மனந்திரும்புதலின் மூலமாய் “எண்ணற்ற ஜனங்களை” ஏமாற்றி வஞ்சித்திருக்கிறான்!


“நீ ஒருவராலும் பிடிபடமாட்டாய்!" என்ற தைரியத்தின் அடிப்படையில் இன்று அநேக ஜனங்கள் ஜீவித்துக் கொண்டிருப்பதை சாத்தான் நன்கு அறிந்திருக்கிறான். ஆகவே, ஒருவராலும் பிடிக்கப்படாமல் எவ்விதம் பாவம் செய்ய முடியும் (!?) என்ற தந்திர உபாயங்களையெல்லாம் அவர்களுக்கு சாத்தான் இன்று போதித்து வருகிறான்.


'ஓர் திருடன்கூட தான் பிடிபட்டுவிட்டால் மிகவும் மனம் வருந்துவான்! ஆனால், அது உண்மையான மனந்திரும்புதல் இல்லவே இல்லை!!


இவ்வாறு போலியாய் மனந்திரும்பிய சில உதாரணங்களை வேதாகமத்திலும் நாம் பார்க்கிறோம். சவுல் ராஜா தேவனுக்குக் கீழ்படியாமற்போனதும், தான் பாவம் செய்ததாக சாமுவேல் தீர்க்கதரிசியிடம் ஒத்துக்கொண்டான். ஆனால் தன்னுடைய மீறுதலை ஜனங்கள் அறிந்து கொள்ளுவதற்கோ அவன் விரும்பவேயில்லை. அக்கொடிய நேரத்திலும், அவன் மானிடரின் மதிப்பைத் தேடினான்! ஆம், உண்மையான மனந்திரும்புதலை அவன் அடையவே இல்லை! தான் கையும் மெய்யுமாய் பிடிக்கப்பட்டதினிமித்தமே சவுல் துக்கமடைந்திருந்தான் (1சாமு.15:24-30). ஆனால், தாவீது ராஜாவோ இந்த சவுலுக்கு முற்றிலும் மாறுபட்டுக் காணப்பட்டான். தாவீது ராஜா பாவத்தில் வீழ்ச்சியடைந்தபோது, அவைகளைப் 'பகிரங்கமாய்' அறிக்கை செய்தே மனந்திரும்பினான்! (சங்கீதம் 51).


சவுலைப் போலவே ஆகாப் என்ற ராஜாவும் இருந்தான். தேவன் ஆகாப் ராஜாவை நியாயந்தீர்க்கப்போகிறார் என்ற எச்சரிப்பை எலியா தீர்க்கதரிசியின் மூலம் கேட்ட மாத்திரத்தில், அவன் அதற்காக துக்கித்தான். அவன் இன்னும் ஒருபடி கடந்துவந்து, தன் பாவங்களுக்காக இரட்டுடுத்தித்துயரங்கொள்ளவும் செய்தான் (1ராஜா. 21:27-29). ஆனால் அவனோ “உண்மையாய்” மனந்திரும்பவில்லை. அவன் தேவனுடைய நியாயத்தீர்ப்பிற்காக அஞ்சினான் .... அவ்வளவுதான்!


போலியான மனந்திரும்புதலுக்கு யூதாஸ்காரியோத்தும் ஓர் மாதிரியாகவே காணப்படுகிறான். இயேசுகிறிஸ்துவுக்கு மரண தண்டனை அளிக்கப்பட்டதைக் கண்டவுடன், மிகுந்த மனஸ்தாபப்பட்டு, “நான் பாவஞ் செய்தேன்” எனக் கூறினான் (மத்.27:3-5). ஆனால், அந்தோ..... இன்று அநேகர் செய்வதைப்போலவே இவன் தன் பாவ அறிக்கையை ஆசாரியர் களிடம் (பாதிரிகளிடம் - Priests) செய்தான்! தான் செய்த செயலுக்காக துக்கமடைந்தாலும் அவனோ மனந்திரும்பவில்லை!! அவன் உண்மையாகவே மனந்திரும்பியிருப்பானென்றால், தன் ஆண்டவரிடம் உள்ளம் உடைந்து சென்று மன்னிப்பு கேட்டிருப்பான். ஆனால் அவனோ அப்படிச் செய்யவில்லை!!


மேற்கூறிய உதாரணங்களிலிருந்து - எவைகள் உண்மையான மனந்திரும்புதல் இல்லை! என்பதை நாம் கற்றுக்கொள்ள முடிகிறது.


“விக்கிரகங்களைவிட்டுதேவனிடத்திற்குத் திரும்புவதே” உண்மையான மனந்திரும்புதல் என 1தெசலோனிக்கேயர்.1:9 கூறுகின்றது. மரத்தினாலும் கல்லினாலும் செய்யப்பட்டு புறஜாதியாரின் கோவில்களில் வைக்கப்பட்டிருப்பவைகள் மாத்திரமே விக்கிரகங்கள் என்பது பொருளாகாது! இவ்வித விக்கிரகங்களுக்குச் சமமான அபாயம் நிறைந்த அநேக விக்கிரகங்களை இன்று ஜனங்கள் ஆராதிக்கிறார்கள்! அவைகள் ஒரு வேளை, பார்ப்பதற்கு அவலட்சணமாய் இல்லாது காணப்படலாம். சுகபோகம், சொகுசான வாழ்க்கை, பணம், மனுஷரின் புகழ்தேடுதல், தன் சொந்த வழியிலேயே செல்ல விரும்புதல்.... ஆகியன போன்ற அநேக விக்கிரகங்கள் உள்ளன. நாம் எல்லோருமே இதுபோன்ற விக்கிரகங்களை பல ஆண்டுகாலமாய் வழிபட்டு வந்திருக்கிறோம். இவ்வித விக்கிரகங்களை ஆராதிப்பதை நிறுத்தி, அவைகளை விட்டுத் தேவனிடம் திரும்புவதே உண்மையான மனந்திரும்புதலாகும்!!


உண்மையான மனந்திரும்புதல் 1)நம் மனம் (Mind) 2)நம் உணர்ச்சி வசமாகுதல் (Emotions) 3) சுயசித்தம் (Will) ஆகிய நம் முழு ஆள்த்துவத்தையும் பாதிக்கும்!


இவைகளில் முதலாவது, பாவத்தைக்குறித்தும் உலகத்தைக் குறித்தும் நம் மனதில் ஏற்படும் மாற்றமேயாகும். இந்த மனமாற்றத்தில், பாவம் தன்னை தேவனிடமிருந்து பிரித்துவிட்டதை தன் மனதில் ஆழ்ந்து உணர்ந்திருப்பான்! மேலும் இம்முழு உலகத்தின் வாழ்க்கைச் சக்கரமும் தேவனுக்கு விரோதமாகவே சுழன்று கொண்டிருப்பதையும் கண்டிருப்பான்! இவ்விதம், தேவனுக்கு அபகீர்த்தியைக் கொண்டுவரும் இந்த வாழ்க்கைச் சூழலிருந்துவிடுபட்டுத் திரும்புவதற்கு இப்போது மனப்பூர்வமாய் வாஞ்சிப்பான்!!


இரண்டாவதாக, மனந்திரும்புதல் நம் உணர்ச்சிவசமாகுதலையும் (Emotions) பாதிக்கிறது. நாம் வாழ்ந்த பாவ வாழ்க்கை நமக்கு மிகுந்த துக்கத்தைக் கொண்டுவருகிறது (2 கொரி.7:10). நம் பொல்லாத கிரியைகளை நினைத்து நம்மை நாமே வெறுக்கவும் செய்கிறோம்! மேலும், எவரும் நம்மிடத்தில் கண்டிட முடியாத கொடிய அருவருப்பான தீமைகளை இப்போது நாம் காண்கிறபடியால் அதற்காக வெட்கமடைகிறோம்! (எசே.36:31,32). இவ்வாறு நாம் வாழ்ந்த பாவ வாழ்க்கையின் மூலம் தேவனைத்

துக்கப்படுத்தியதற்காக அழுது புலம்புகிறோம். வேதாகமத்தில் நாம் காணும் குறிப்பிடத்தக்க தேவ மனிதர்கள் யாவரும் தங்கள் பாவத்தைக்குறித்த உணர்வடைந்தவுடன் இவ்விதமே தங்கள் வாழ்க்கையில் பிரதிபலித்திருக்கிறார்கள். தாவீது (சங்கீதம் 51); யோபு (யோபு 42:5); பேதுரு (மத்.26:75) மனந்திரும்புதல் ஆகிய பரிசுத்தவான்கள் தங்களின் பாவங்களுக்காக மனந்திரும்பிய போது மனங்கசந்து அழுதார்கள் என வேதம் சுட்டிக்காட்டுகிறது. இவ்வாறு நம்முடைய பாவங்களுக்காகத் துயருற்று அழுவதை இயேசுவும் அப்போஸ்தலர்களும் ஊக்குவித்திருப்பதை வேதாகமத்தில் நாம் காண்கிறோம் (மத். 5:5; யாக். 4:9). ஆம், நாம் தேவனிடம் திரும்பிச் சேருவதற்கு இதுவே சரியான வழியாகும்!!


கடைசியாக, மனந்திரும்புதல் நம் சித்தத்தைப் (Will) பாதிக்கிறது. நாம் நம்முடைய சொந்தவழி செல்ல விரும்பும்' முரட்டாட்டமான சுயசித்தத்தை வளைத்து சிருஷ்டி கர்த்தரிடம் சரணடையச் செய்வதே நம் சித்தம் (சுய விருப்பம்) பாதிக்கப்படும் செயலாகும்! இதன் பின்பே இயேசுவை நம் ஜீவியத்தின் முழுமைக்கும் ஆண்டவராக இருக்கச் செய்திட வேண்டும்! அதன் பொருள் யாதெனில், இப்போதிருந்து நாம் செய்யும்படி தேவன் என்னென்ன விரும்புகிறாரோ அவைகளை மாத்திரமே செய்து முடித்திட ஆயத்தமுள்ளவர்களாயிருக்க வேண்டும். ஆம், என்ன விலைக்கிரயம் ஆனாலும், எவ்வளவு இழிவான பாதையானாலும் அவைகளை மனப்பூர்வமாய் ஏற்றுக்கொண்டு தேவன் விரும்பியதைச் செய்துமுடித்திட நாம் பேராவல் கொண்டிருக்க வேண்டும்!!


இவ்விதமே கெட்டகுமாரன் தன் தகப்பன் வீட்டிற்கு மனந்திரும்பி வந்தபோது உள்ளம் உடைந்தவனாய், தன் தகப்பன் கட்டளையிடும் எதையும் செய்வதற்கு ஆயத்தம் கொண்டவனாய்..... தன்னை முற்றிலுமாய் ஒப்புவித்து வந்தான் (லூக்கா.15:11-25). இதுவே உண்மையான மனந்திரும்புதல்.


நாம் இதுவரை செய்த “ஒவ்வொரு” பாவத்தையும் தேவனிடம் கண்டிப்பாய் அறிக்கை செய்ய வேண்டும் என்பது கிடையாது. ஏனெனில் நாம் செய்த எல்லாப் பாவங்களையும் நினைவிற்கொள்வது ஒருக்காலும் முடியாது, அவ்விதமே கெட்டகுமாரனும் தான் செய்த ஒவ்வொரு பாவத்தையும் தன் தகப்பனிடம் அறிக்கை செய்து கொண்டிருக்கவில்லை! அவன் மனந்திரும்பி, “தகப்பனே, உமக்கு விரோதமாகப் பாவஞ்செய்தேன்!” என மாத்திரமே அறிக்கை செய்தான். அவ்விதமே நாமும் செய்திடல் வேண்டும். ஆனால் யூதாஸ்காரியோத்தும், “நான் பாவம் செய்தேன்” எனக் கூறியதை எண்ணிப்பாருங்கள். அவ்வாறு அவன் கூறினாலும், அவனுடைய அறிக்கைக்கும் கெட்டகுமாரனுடைய அறிக்கைக்கும் மேற்குக்கும் கிழக்கிற்கும் எவ்வளவு தூரமோ அவ்வளவு தூரம் வித்தியாசம் இருப்பதை நம்மால் காணமுடிகின்றது. ஆம், நம் வார்த்தைகளை மாத்திரம் தேவன் கவனித்துக் கேட்பதில்லை! அவர் நம் வார்த்தைகளுக்குப் பின்பாக மறைந்திருக்கும் ‘ஆவியையும்' அறிந்தே அதற்கேற்றவிதமாய் கிரியை செய்கிறார்!!மனந்திரும்புதலுக்கேற்ற கனியைத் தருதல்:


யோவான்ஸ்நானகன் பரிசேயர்களைப் பார்த்து, “மனந்திரும்புதலுக்கேற்ற கனிகளைக் கொடுங்கள்” என அழைப்பு விடுத்தார் (மத்தேயு.3:8). நாம் உண்மையாகவே மனந்திரும்பியிருப்போமென்றால், அவ்வித மனந்திரும்புதல் நம் முழு ஜீவியத்தையும் மாற்றிவிடும்!


நாம் மனந்திரும்பியவுடன் செய்யவேண்டிய முதலாவது காரியம்யாதெனில், நம் கடந்த ஜீவியத்தில் செய்த தவறுகளினிமித்தம் ஏற்பட்ட நஷ்டங்களைத் திரும்பச் செலுத்துவதேயாகும் (Restitution). சகேயுவைக் குறித்து லூக்கா சுவிசேஷத்தில் வாசிக்கிறோம். இயேசு அவனுடைய வீட்டிற்குள் பிரவேசித்தவுடன், அவன் தன் பாவங்களை உணர்ந்தான் (லூக்.19:1-10). அந்த சகேயு பணத்தை சிநேகித்த மனிதனாயிருந்தான்! இருப்பினும், மனந்திரும்புதல் இன்னதென்பதை அவன் நன்கு அறிந்திருந்தான்!! தான் இயேசுவின் சீஷனாய் மாறவேண்டுமென்றால் தன் ஜீவியத்தில் இழைத்த எல்லாத் தவறுகளையும் சரிசெய்திட வேண்டும் என்பதையும் நன்கு அறிந்திருந்தான். அவ்வாறு அவன் செயல்பட்டால், அதிகமான பண நஷ்டம் தனக்கு ஏற்படும் என்பதையும் அறிந்திருந்தான்! ஏனெனில் அவன் அநேகரின் பணத்தை ஏமாற்றி அபகரித்தவன்!! இருப்பினும், அவனோ தன் மனந்திரும்புதலில் முழு இருதயமாய் இருந்துவிட தீர்மானங்கொண்டான். எனவேதான், தன் ஆஸ்தியில் பாதியை ஏழைகளுக்கும், தான் அநியாயமாய் அபகரித்தவர்களிடம் நாலத் தனையாகவும் திரும்பச் செலுத்துவேன் என ஆண்டவரிடம் கூறினான்.


இவ்வாறு சகேயு “திரும்பச் செலுத்துவேன்” எனக் கூறியதால் மாத்திரமே, “இந்த வீட்டுக்கு இரட்சிப்பு வந்தது” என இயேசு அறிவித்தார்! “நான் திரும்பச் செலுத்துவேன்” என்ற ஆயத்தமான விருப்பமே உண்மையான இரட்சிப்பின் அடையாளங்களில் ஒன்றாகும் (லூக்கா.19:1-10).


இயேசு கூறிய ஓர் உவமையில், புத்தியுள்ளவன் ஆழமாய் தோண்டி, மணலிற்கு கீழாய் இருந்த கற்பாறையின்மேல் அஸ்திவாரம் போட்டான்

(லூக். 6:48), புத்தியற்ற மனுஷனும் தன் வீட்டை அதே பகுதியில்தான் கட்டினான். ஆனால் அவனோ போதுமான அளவு 'ஆழமாய்' தோண்டவில்லை! அவன் தன் அஸ்திவாரத்தை மேலோட்டமாக மணலின்மீது போட்டான். இந்த உவமானமே உண்மையான மனந்திரும்பு தலுக்கும் போலியான மனந்திரும்புதலுக்கும் உள்ள வித்தியாசத்தைச் சுட்டிக்காட்ட ஏதுவாயிருக்கிறது. நம் ஜீவியத்தில் நாம் மனப்பூர்வமாய் திரும்பச் செலுத்துவதற்குப் பிரயாசம் எடுக்கும் போது மாத்திரமே ஆழமாய் தோண்டி அஸ்திவாரம் இடும் புத்தியுள்ளவனுக்கு ஒப்பாயிருப்போம்.


நாம் கிறிஸ்துவண்டை வரும்பொழுது, ஆரம்பத்திலேயே அதிக நேரமும் பிரயாசமும் எடுத்து நம் குணப்படாத ஜீவியத்தில் விளைவித்த எல்லாக் காரியங்களையும் சரிசெய்வதே மிகமிக நல்லது! இவ்விஷயத்தில் நாம் மேலோட்டமாகவோ அல்லது சில காரியங்களைச் சாதுரியமான விளக்கம்தந்து மறைத்தாலோ நம் அஸ்திவாரம் பெலஹீனமாகவே இருக்கும். பின்பு ஓர் நாளில் நம் வீடு அசைவுற்று, அழிந்து விழுவதை நம் கண்கூடாகவே காண்போம்! ஆ. இது துயரம்.


நாம் எவை எவைகளை திரும்பச்செலுத்த வேண்டும்? :

நீங்கள் அரசாங்கத்தின் வரிப்பணம் முதலானவைகளை ஏமாற்றியிருந்தால் அவ்வரிப்பணங்களைத் திரும்பத் தரவேண்டும். சில சமயங்களில் நாம் பணத்தை அந்தந்த துறைக்குத் (Department) திரும்பச்செலுத்துவதற்கு நியாயமான வழி இல்லாமலிருக்கலாம். ஆனால், உண்மையாகவே தேவனுக்குக் கீழ்படிய உங்களுக்கு மனம் இருந்தால்...... அங்கே மார்க்கமும் உண்டு! ஆம், நீங்கள் அரசாங்கத்திற்குச் செலுத்தவேண்டிய தொகையளவிற்கு தபால்தலைகளையோ அல்லது ரயில்வே டிக்கெட்டுகளையோ வாங்கி

அவைகளைக் கிழித்துப் போட்டிடக்கூடுமே! இவ்வாறு, நீங்கள் செலுத்த வேண்டிய பணம் அரசாங்கத்திடம் போய் சேருகிறது என்பதை நீங்கள் உறுதிபடுத்திக் கொள்ளலாம்!!


யாரோ சில ஜனங்களை நீங்கள் ஏமாற்றியிருந்தால், அவர்களிடம் பணத்தைத் திருப்பிக்கொடுக்கும் போது, நீங்கள் செய்த தவற்றிற்காக மன்னிப்பும் கேட்கவேண்டும். இந்த சந்தர்ப்பத்தில், உங்கள் ஜீவியத்தில் எவ்விதம் இந்த மாற்றம் நிகழ்ந்தது என்பதையும் அவர்களிடம் கூறுங்கள்! நீங்களாகவே இதைச் செய்வதற்கு உங்களுக்கு தைரியமில்லாதிருந்தால், ஒரு சகோதரனை உங்களோடு கூட அழைத்துச்சென்று திரும்பச்செலுத்தி ஒப்புரவாகுங்கள்.


உங்களால் எல்லாப் பணத்தையும் உடனடியாகத் திருப்பிச் செலுத்த முடியவில்லையா? பரவாயில்லை! அவைகளைத் தவணை முறையில் திரும்பச் செலுத்துங்கள். ஆனால் குறைந்தது ஐந்து ரூபாயாவது திரும்பச் செலுத்தி உங்கள் தவணையைத் துவக்குங்கள். சகேயு எல்லாப் பணத்தையும் திரும்பச் செலுத்திய பின்பு அல்ல.... ‘திரும்பச் செலுத்துவேன் என அவன் என்று தீர்மானித்தானோ' அன்றே தேவன் அவனை ஏற்றுக் கொண்டார்!


நீங்கள் ஏமாற்றிய நபர் எங்கு வசிக்கிறார் என உங்களால் அறிய முடியாதிருந்தால், அந்தப் பணத்தை, எல்லா ஆஸ்திக்கும் உரிமையாளரான தேவனிடமே திரும்பச் செலுத்துங்கள். இவ்வித பிரமாணத்தையே தேவன் இஸ்ரவேலர்களுக்கும் கொடுத்திருந்தார் (எண். 5:6-8).


எப்படியிருப்பினும், நியாயத்திற்குப் புறம்பாக ஈட்டிய எந்தப் பணமும் நம்மிடத்தில் இருக்கவேகூடாது. அவ்விதப் பணத்தை தேவன் ஒருக்காலும் ஆசீர்வதிக்கவும் முடியாது!


இவ்வித பண விஷயமல்லாமல், யாரையேனும் துன்புறுத்தி மனம் நோகச்செய்திருப்போமென்றால் நாம் அவரிடம் சென்று, மனம் வருந்தி அவருடைய மன்னிப்பைக் கோரவேண்டும்!


சில சகோதரர்களின் செயல்களை நான் கண்டிருக்கிறேன். இந்த சகோதரர்கள், தாங்கள் அரசாங்கத்தை ஏமாற்றிய வரிப்பணத்தையும் சுங்கவரியையும் திரும்பச் செலுத்துவதற்காகப் பல மாதங்களாக வங்கியில் சேமித்து வைத்த தங்கள் முழுசேமிப்பையுமே இழந்திருக்கிறார்கள்! இவ்வுலக வங்கியில் ஓர் பெருந்தொகை இருப்பதைக் காட்டிலும், தேவனுடைய மேலான ஆசீர்வாதம் இச்சகோதரர்களுக்கு கிடைத்து விட்டதே, ஆ அதுவே பாக்கியம்!


இதைப்போலவே, தாங்கள் டிக்கெட் வாங்காமல் பஸ்ஸிலும், புகைவண்டியிலும் பயணம் செய்த நேரங்களைக் கவனமாய் கணக்குப் பார்த்து அதற்குரிய பணத்தைத் திரும்பச் செலுத்திய சகோதரர்களையும் நான் அறிவேன். இவ்விதம், கொஞ்சத்தில் உண்மையாயிருந்த சகோதரர்கள் தான் தேவனுக்கென பெரிய காரியங்களைச் செய்து முடிப்பார்கள்!


இன்னும் சில அருமையானவர்களை நான் அறிவேன்! இவர்கள் தங்கள் பட்டபடிப்பு சான்றிதழோடு பல்கலைக்கழக அதிகாரிகளிடம் சென்று, தங்கள் பட்டப்படிப்பு இறுதித் தேர்வில் ஏமாற்றி மதிப்பெண்கள் பெற்றதை அறிக்கை செய்திருக்கிறார்கள்.


ஓர் தெளிந்த சுத்த மனசாட்சியைச் சுதந்தரிப்பதற்காக தேவையானால் தாங்கள் படித்த பட்டத்தையும் (Degree) இழந்துவிட இச்சகோதரர்கள் ஆயத்தமாய் இருந்தார்கள்.


அநேக சந்தர்ப்பங்களில், தேவன் இவர்களுக்காக உயர் அதிகாரிகளின் கண்களில் தயவு கிடைக்கச் செய்து அவர்களைத் தண்டிக்காமல் மன்னிக்கும்படி செய்திருக்கிறார்!! ஆனால் இப்படியே எப்போதும் சாதகமாக சம்பவிக்கும் என எண்ணிவிடாதீர்கள். உங்களைப் பொருத்தமட்டில், பல்கலைக்கழகம் உங்கள் சான்றிதழ்களை வாபஸ் பெறும்படியாக தேவன்

அனுமதிக்கக்கூடும்! அப்படியிருக்குமாயின், அதுவே தேவன் உங்களைக் குறித்து வைத்துள்ள பரிபூரண சித்தமாக இருக்கக்கூடும்!!


ஓர் சிறிய தபால்தலை திருடியதற்காகப் பல வருடங்கள் கழித்து, யாரிடம் திருடினாரோ அந்த நபருக்கு மன்னிப்புக் கடிதம் எழுதிய சகோதரனையும் நான் அறிந்திருக்கிறேன்! திருடிய பொருளின் மதிப்பு சிறியதாயினும் திருட்டு.... திருட்டுதான்! இவ்விதமான சிறு சிறு விஷயங்களில்தான் நம்முடைய உண்மை அதிகமாக சோதிக்கப்படுகிறது!!


இவைகளையெல்லாம் வாசித்தவுடன், உங்கள் தலைமயிரை நீங்கள் பிய்த்துக்கொண்டு, கடந்த காலத்தில் என்னென்ன சிறிய தவறுகள் செய்தீர்களென உங்கள் ஞாபகத்தைக் கிளறி ஆராய வேண்டுமென நான் கூறவில்லை.... நிச்சயமாய் இல்லை! அப்படி ஒருபோதும் செய்து விடாதீர்கள். நீங்கள் எவைகளையெல்லாம் சரிசெய்ய வேண்டும் என்பதை தேவனே உங்களுக்கு நினைப்பூட்டுவார். அவ்விதம், தேவன் உங்களுக்கு நினைப்பூட்டியவைகளை மாத்திரம் நீங்கள் சரிசெய்தால் .... அது போதும்!


சில விஷயங்களில் நீங்கள் எதுவுமே சரிசெய்ய முடியாதபடி காரியங்கள் மிகவும் சிக்கலாக இருக்கலாம். அப்படிப்பட்ட சம்பவங்களுக்காக உங்கள் மன துயரத்தை நீங்கள் தேவனுக்குத் தெரியப்படுத்தி அவரின் இரக்கத்தைப் பெற்றுக்கொள்ளலாம், அது போதும்!


எப்படியிருந்தாலும், சில விஷயங்களை நீங்கள் சரிசெய்யாத தினிமித்தம் சாத்தான் உங்களைக் குற்றப்படுத்தி உங்களைக் குற்றஉணர்விலேயே சதாவைத்திருக்க நீங்கள் ஒருக்காலும் அனுமதிக்கவே கூடாது! தேவன் நம்மை ஒருபோதும் சித்திரவதை செய்ய வேமாட்டார். நம் சூழ்நிலைகள் யாவும் நன்கு அறிந்து வைத்திருக்கும் நல்ல ஆண்டவர் அவர்! திரும்பச்செலுத்தி ஒப்புரவாக உங்களுக்கு மன விருப்பமிருந்தால் அதையே முதலாவதாக உங்களிடம் தேவன் எதிர்பார்க்கிறார்! அது தேவனுக்குப் போதும். இப்போது உங்களால் எவ்வளவு செலுத்த முடிந்ததோ அதை தேவன் ஏற்றுக்கொள்வார்! ஒருவேளை, ஒன்றுமே உங்களால் செலுத்த முடியாவிட்டாலும் அதையும் இந்த நல்ல ஆண்டவர் ஏற்று அரவணைத்துக் கொள்ளுவார்! மகா இரக்கம் பொருந்திய இந்த நல்ல ஆண்டவருக்கே துதி உண்டாகட்டும்!!!


தன்னை கனம் பண்ணுகிறவர்களை தேவன் நிச்சயமாய் கனம் பண்ணுவார் (1சாமு.2:30). நீங்கள் சிறு சிறு விஷயங்களில் உண்மையாயிருப்பதும், அவரை கனம் பண்ணுவதற்குரிய வழிகளில் ஒன்றாகும் என்பதை இன்று அறிந்துகொள்ளுங்கள்!


இவ்விதமாய் நாம் திரும்பச்செலுத்தி ஒப்புரவாகவில்லையென்றால், நம் ஜீவியகாலம் முழுவதும் நம்மோடுகூட ஓர் பெரிய சங்கிலியை இழுத்துக் கொண்டே.... இழுத்துக்கொண்டேதான் சென்று கொண்டிருப்போம்! நம்முடைய பணம், அந்தஸ்து, பட்டம், ஏன்?.... உயர்ந்த உத்தியோகமே யானாலும் அவைகளைக்காட்டிலும் ஓர் சுத்த மனசாட்சிக்கு நாம் அதிகம் மதிப்புக் கொடுக்கிறோமா இல்லையா என்பதையே தேவன் சோதிக்கிறார்! ஆனால்..... அந்தோ, அநேகர் இந்தப் பரீட்சையில் தோற்று விடுகிறார்கள்!! இருப்பினும், ஒவ்வொரு சந்ததியிலும் இவ்வுலகத்திலுள்ள எதைக்காட்டிலும் தேவனையே அதிகமாய் நேசிக்கும் மீதியானவர்கள் “கொஞ்சம் பேர்” இருக்கத்தான் செய்கிறார்கள்! அவர்களில் நாமும் ஒருவராக இருந்திட முடியுமே..... தேவனுக்கே துதி உண்டாகக்கடவது!!பிறரை மன்னித்தல்:


நமக்குத் தீமை செய்தவர்களை மன்னிப்பதும் மனந்திரும்புதலில் ஒரு பகுதியாகும். “மனுஷருடைய தப்பிதங்களை நீங்கள் அவர்களுக்கு மன்னியாதிருந்தால், உங்கள் பிதா உங்கள் தப்பிதங்களையும் மன்னியாதிருப்பார்" (மத். 6:15) என இயேசு கூறினார். இதை இயேசு மேலும் வலியுறுத்திக் கூறும்பொழுது நாம் பிறரை மேலோட்டமாக அல்ல “மனப்பூர்வமாய்" மன்னிக்க வேண்டும் என்றும் கூறினார் (மத்.18:35). நாம் பிறரை ‘முழுவதுமாய்' ‘மனப்பூர்வமாய்' மன்னிக்காவிட்டால், நாம் தேவனால் மன்னிக்கப்படுவதும் ஒருக்காலும் கைகூடாது! பிறர் செய்த செயலை நாம் ஒருவேளை மறக்கமுடியாமல் இருக்கலாம். ஆனால் எப்பொழுதெல்லாம் பிறர் செய்த தீமையை நினைவுகூரும்படி நாம் சோதிக்கப்படுகிறோமோ, அப்பொழுதெல்லாம் அத்தீமைகளை நினைப்பதற்கு மறுத்துவிட நம்மால் நிச்சயம் முடியும்!


சில சமயங்களில் உங்களுக்குச் சொல்லொண்ணா தீமை விளைவித்த ஒருவரை மனப்பூர்வமாய் மன்னிக்க முடியாதபடி நீங்கள் கஷ்டப்படலாம். அச்சமயங்களில், அவரை மன்னிப்பதற்கு உதவும்படி தேவனிடம் முறையிட்டு ஜெபியுங்கள். அப்போது எந்த மனிதரையும் மன்னிப்பதற்குரிய விருப்பத்தையும் அதை நிறைவேற்றுவதற்குரிய பெலனையும் தேவன் உங்களுக்குத் தருவதை நீங்களே கண்டு ருசிப்பீர்கள்!


நம்முடைய கோடிக்கணக்கான பாவங்களைத் தேவன் இலவசமாய் மன்னித்திருப்பதை நீங்கள் சற்றே தியானித்தால், அதே போல பிறரை மன்னிப்பது உங்களுக்கு இப்போது கஷ்டமாயிராது. நாம் யாரையேனும் மன்னியாதிருக்கும்போதுதான் சாத்தான் நம்மைத் தன் வல்லமையால் பிடித்துக்கொள்ளுகிறான்! எனவேதான், “சாத்தானாலே மோசம் போகாதபடிக்கு பிறரை மன்னியுங்கள்!” என பவுல் புத்தி கூறினார் (2 கொரி. 2:10, 11).சாத்தானுடைய தொடர்பை முற்றிலுமாய் துண்டித்தல்:


நாம் சரிசெய்து சீர்ப்படுத்தவேண்டிய விஷயங்களில் இன்னும் ஓர் முக்கியமான பகுதி உள்ளது. அது யாதெனில், சாத்தானோடும் பொல்லாத ஆவிகளோடும் நாம் கொண்டிருந்த உறவேயாகும். நீங்கள் வானசாஸ்திர அஞ்சனத்திலும், விக்கிரக வழிபாட்டிலும், கைரேகை பார்ப்பதிலும், மை வைத்து மேஜிக் செய்வதுமானவைகளில் ஈடுபட்டிருந்தால் அல்லது 'ராக்-மியூஸிக்', தீமையான போதை மருந்துகளில் ஈடுபாடு கொண்டிருந்தால், இவைகளின் மூலம் நீங்கள் சாத்தானோடு கொண்டிருந்த உறவை இப்போது முற்றிலுமாய்த் துண்டித்துக் கொள்ளவேண்டும்! இதுபோன்ற காரியங்களில் நீங்கள் ஒருவேளை உங்களையும் அறியாமலே தொடர்பு வைத்திருந்தாலும் அவைகளையும் நீங்கள் கண்டிப்பாகத் துண்டித்துக் கொள்ள வேண்டும்!!


இதற்கு நீங்கள் முதலாவது செய்யவேண்டிய காரியம் யாதெனில், நீங்கள் வைத்திருக்கும் எல்லா விக்கிரகங்களையும், மாயஜால புஸ்தகங்களையும், அசுத்த ஆவிகளின் பாதுகாப்பைத் தேடும் தாயத்து போன்ற வஸ்துக்களையும் நீங்கள் முற்றிலுமாய் உடைத்தெறிந்து அழிக்கவேண்டும்! (அவைகளில் எதையும் விலையுயர்ந்ததென விற்காமல், அழித்துவிட வேண்டும்! அப்.19:19-ஐ வாசித்துப்பாருங்கள்). பின்பு நீங்கள் இயேசுவை நோக்கி, “ஆண்டவரே, நான் அறிந்தோ அல்லது அறியாமலோ சாத்தானோடு வைத்திருந்த எல்லாத் தொடர்பையும் துண்டித்துவிட்டேன்” என அறிக்கைச்செய்து ஜெபியுங்கள். இவ்வாறு ஜெபித்த பின்பு நீங்கள் நேருக்கு நேராய் சாத்தானுக்கு முன்பாகத் திரும்பிநின்று, “சாத்தானே, என் ஆண்டவரும் இரட்சகருமாகிய இயேசுகிறிஸ்துவின் நாமத்தினால் உன்னை நான் கடிந்துகொள்ளுகிறேன். நான் இப்பொழுது ஆண்டவராகிய இயேசு கிறிஸ்துவுக்குச் சொந்தமானவன். இனிமேல் நீ என்னை ஒருக்காலும் தொடவே முடியாது!” என தைரியமாய் கூவி முழங்குங்கள். ஏனெனில் யாக்கோபு 4:7 “தேவனுக்குக் கீழ்ப்படிந்திருங்கள்; பிசாசுக்கு எதிர்த்து நில்லுங்கள், அப்பொழுது அவன் உங்களை விட்டு ஓடிப்போவான்!” என தெளிவாய் வாக்குரைத்துக் கூறுகின்றது. ஆகவே சாத்தானுடைய பிடி இனிமேல் உங்கள் மீது இருக்கவே இருக்காது!


இவ்வாறு நாம் தேவனோடு இசைந்து நடப்பதற்குத் தொடர்ச்சியாய் உண்மையுள்ளவர்களாயிருந்தால், நம் ஜீவியத்தின் பல்வேறு பகுதிகளிலும் அதிகமதிகமாய் வெளிச்சத்தைக் கொடுப்பார். நாம் லௌகீகமாய் உடுத்தும் உடையைக் குறித்தோ அல்லது நம் சம்பாஷணையைக் குறித்தோ அல்லது நம் பேச்சிலுள்ள கடுமையான தொனியைக் குறித்தோ அல்லது நம்மைத் தீட்டுப்படுத்தும்படியான சில புத்தகங்களை வாசிப்பது குறித்தோ நாம் அதிகமதிகமாய் வெளிச்சம்பெற தேவன் துணை செய்வார்! இவ்விதமாய் நாம் மனந்திரும்பி கழுவப்படத் தேவையாயிருக்கும் ஒவ்வொரு புதிய பகுதிகளையும் நம் வாழ்க்கையில் கண்டுபிடிக்க ஆரம்பித்து விடுவோம்!


ஆ, இது எத்தனை மகத்துவம்! நம் ஜீவிய காலமெல்லாம் தொடர்ச்சியாக மனந்திரும்பி வாழும் இப்புனித மார்க்கத்தில் நாம் யாவரும் ஒருமித்து நடந்து செல்லுவோமாக!!

அதிகாரம் 2
விசுவாசம்

கிறிஸ்தவ ஜீவியத்தின் ஆரம்ப அஸ்திவாரத்தின் முதல் பகுதி மனந்திரும்புதலே ஆகும். விசுவாசம், இதன் இரண்டாவது பகுதியாகும்!


தேவன்மேல் விசுவாசம் வைப்பது என்பதற்குப் பொருள் யாதெனில், அவரையே முழுமையாகச் சார்ந்து கொண்டு ..... அவர்தம் வார்த்தையில் கூறிய எல்லாவற்றையும் அப்படியே ஏற்றுக்கொள்வதேயாகும்! அதாவது, நம் உணர்வுகள் என்னதான் கூறினாலும் அல்லது வேறு யாரோ என்னதான் மறுத்தாலும் அவைகளை ஒரு பொருட்டாய் எண்ணாமல் தேவனுடைய வார்த்தையை அப்படியே ஏற்றுக்கொண்டு விசுவாசிப்பது ஆகும். இது அவ்வளவாய் மிக எளியதேயாகும்!


தேவன்மீது விசுவாசம் வைக்கும் பொருட்டு, அவரைக்குறித்த குணாதிசயத்தில் மூன்று தன்மைகளைக் காண்கிறோம். 1) அவர் நம்மை சொல்லொண்ணா சிநேகத்தால் அன்புகூருகிறார். 2) அவரே சம்பூர்ண ஞானமுள்ளவர். 3) அவரே சர்வவல்லமையுள்ளவர்! இவ்வாறு அவரைக் குறித்த இந்த மூன்று உண்மைகளை நாம் விசுவாசிப்பது கஷ்டமான காரியமா? இல்லவே இல்லை!


ஏதேன் தோட்டத்தில் என்று ஏவாள் சாத்தானின் குரலிற்கு செவிகொடுத்தாளோ, அன்றே விசுவாச வீழ்ச்சி ஏற்படத்துவங்கியது. தன்னுடைய நன்மைக்காகவே தேவன் கற்பனைகளைக் கொடுத்திருக்கிறார் என்பதை விசுவாசிக்க அன்று ஏவாள் தவறிவிட்டாள். இவ்விதம் தேவன் அவள்மீது வைத்திருந்த பூரணஅன்பில் ஏவாளுக்கு விசுவாசமில்லாதபடியால், அவள் தேவனுக்குக் கீழ்படியாமற்போனாள்!விசுவாசத்தின் மூலம் தேவனுடைய ஈவுகளைப் பெற்றிட முடியும்:


நமக்கு கொடுப்பதற்கென தேவனிடம் அநேக ஈவுகள் உள்ளன! அவரளிக்கும் ஈவுகள் யாவும், கிருபையின் ஈவுகளே ஆகும்! இப்பரம ஈவுகளைப் பெறுவதற்கோ விசுவாசம் நமக்கு மிகவும் அவசியமாயிருக்கிறது. “கிருபையினாலே விசுவாசத்தைக்கொண்டு இரட்சிக்கப்பட்டோம்” (எபேசி.2:8) என்றே சத்திய வேதம் கூறுகிறது. உன்னதத்தின் திரளான ஆசீர்வாதங்களை ஏந்திக்கொண்டு நம்மை நோக்கி ஏகிவரும் தேவனுடைய கரமே கிருபையாகும்! தேவனுடைய கரத்தில் பொதிந்திருக்கும் ஆசீர்வாதங்களைப் பெற்றுக்கொள்ளும்படி மேல் நோக்கி உயர்த்திடும் நம் கரமே விசுவாசமாகும்!


எல்லாவற்றிற்கும் முதல் ஆரம்பமாக நமக்குப் பாவமன்னிப்பின் புண்ணியத்தையே தேவன் வழங்குகிறார். அதைப்பெற்றிட நாம் உண்மையாக மனந்திரும்பியிருந்தால் அது போதும்! இருப்பினும், தேவன் இலவசமாக நமக்கு நல்கும் பாவமன்னிப்பையே நம் கரங்களை உயர்த்தி, அவரிடமிருந்து பெற்றுக்கொண்டோம். இதைப் பெறுவதற்காக நாம் பிரயாசப்படவோ, அதற்கென கிரயம் செலுத்தவோ அவசியமேயில்லை. இதற்கான கிரயம் ஏற்கனவே கல்வாரியில் செலுத்தப்பட்டுவிட்டது! இப்போது நாம் செய்ய வேண்டியதெல்லாம், “பிதாவே, உமக்கு நன்றி” எனக் கூறி அவைகளைப் பெற்றுக்கொள்வதுதான்! இதுவே விசுவாசம்!!


தேவன் ஒன்றை வழங்குவதற்கு நம்மை நோக்கிக் கரம் நீட்டும் போது, அவைகளை நம் விசுவாச கரம் கொண்டு பெற்றுக்கொள்ளாவிட்டால், நாம்

உண்மையில் தேவனைப் பரியாசம் செய்கிறவர்களாகவே காணப்படுவோம்! இன்று சிலர், ஏதாகிலும் பரிசுப் பொருட்களை தங்கள் குழந்தைகளுக்கு காட்டுவார்கள். குழந்தைகள் அப்பரிசுப் பொருட்களைப் பெறுவதற்கு ஆர்வத்தோடு கரம் நீட்டும் போது, இவர்கள் தங்கள் கைகளை 'சடாரென்று' பின்னுக்கு இழுத்துக் கொண்டு தங்கள் குழந்தைகளை கேலிக்கூத்தாக்கி ஏமாற்றுவது உண்டு. இவ்விதமே தேவனும் தங்களை கேலிக்கூத்தாக்குவார்” என்றே சிலர் சந்தேகிக்கிறார்கள். அப்படி இல்லவே இல்லை! மேற்கண்ட ஜனங்களைப்போல் தேவன் கருமியோ அல்லது பொல்லாதவரோ அல்ல. நேசத்தால் நிறைந்த அன்புள்ள தகப்பனவர்!! நல்ல ஈவுகளை நமக்குக் கொடுத்து விடும்படி அவர் சதா வாஞ்சிக்கிறார்!!


நாம் எத்தனை சாதனை புரிந்தாலும், “விசுவாசமில்லாமல் தேவனுக்குப் பிரியமாயிருப்பது கூடாத காரியம்” (எபி.11:6) என சத்திய வேதம் ஆணித்தரமாகக் கூறுகிறது. நாம் தேவனை முழுமையாக நம்பி சார்ந்து கொண்டால், அவர் நம்முடைய பாவங்களை மன்னிப்பது மாத்திரமல்லாமல் பாவத்தின் வலிமையிலிருந்தும் நம்மை விடுதலையாக்கி விடுவார்!


நாம் விசுவாசத்தை எங்ஙனம் பெற்றிடமுடியும்? அதற்கு ஒரே ஒரு வழி மாத்திரமே உண்டு. “விசுவாசம் கேள்வியினாலே வரும், கேள்வி தேவனுடைய வசனத்தினாலே வரும்” (ரோமர் 10:17) என சத்திய வேதம் பதிலுரைக்கின்றது. தேவன் தன் வார்த்தைகள் மூலமாய் நம்மோடு பேசுவதற்கு அனுமதிக்கும் போதுதான் நாம் விசுவாசத்தைப் பெறுவோம். நம் விசுவாசம் வளர்ச்சியடைவதற்கும் இதுவே வழியாகும்.


கிறிஸ்து நம் பாவங்களுக்காக மரித்து மறுபடியும் உயிர்த்தெழுந்தார் என்றும், நாம் மனந்திரும்பி அவரை விசுவாசித்தால் நம் பாவங்கள் மன்னிக்கப்பட்டதின் நிச்சயத்தை உடனடியாக பெற்றிட முடியும் என்பதையும் தேவனுடைய வார்த்தையின் மூலமாகவே அறிகிறோம். “இது உண்மைதான்” என பரிசுத்தாவியானவரும் நம் இருதயத்தில் சாட்சி கொடுக்கின்றார். இவ்வாறு 1) தேவனுடைய வார்த்தை 2) பரிசுத்த ஆவி ஆகிய இரண்டு சாட்சியின் மூலமாய் தேவன் நம்மை மன்னித்திருக்கிறார் எனவும், நாம் அவருடைய சொந்தப் பிள்ளைகள் எனவும் உறுதியாகக் கூறமுடிகிறதே! அது எத்தனை பாக்கியம்!!விசுவாசத்தில் அசைக்கமுடியா உறுதி கொண்டிருத்தல்:


“நாம் அவருடைய பிள்ளைகள்” என நம் இருதயத்தில் சம்பூரணமான உறுதிகொண்டிருக்கவே தேவன் விரும்புகிறார். இந்த உண்மையைக் குறித்து நாம் சந்தேகத்திற்குள் பிரவேசிக்க தேவன் ஒருபோதும் விரும்புவதே இல்லை. நம்மைச் சந்தேகத்திற்குள் தள்ளும்படி, சாத்தானே சதா முயற்சித்துக் கொண்டிருக்கிறான். நாமோ சந்தேகத்திற்குள் பிரவேசிக்கத் தேவையேயில்லை! ஏனெனில் நமக்கு உறுதி செய்யும்படி அநேக வாக்குதத்தங்களை தேவன் தன் வார்த்தையில் தந்தருளியுள்ளார்!


அவ்வித வாக்குதத்தங்களில் ஒருசிலவற்றை சற்றே நோக்குங்கள்:


1) "என்னிடத்தில் வருகிறவனை நான் (ஒருக்காலும்) புறம்பே தள்ளுவதில்லை. என்னிடத்தில் விசுவாசமாயிருக்கிறவனுக்கு நித்திய ஜீவன் உண்டென்று மெய்யாகவே உங்களுக்குச் சொல்கிறேன்" (யோவான். 6:37, 47) என இயேசுவே கூறினார்.


2) “அவரை (ஆண்டவராகிய இயேசுகிறிஸ்துவை) ஏற்றுக் கொண்டவர்கள் எத்தனை பேர்களோ, அத்தனை பேர்களும் தேவனுடைய பிள்ளைகளாகும்படி, அவர்களுக்கு அதிகாரங்கொடுத்தார்” (யோவான் 1:12).


3) மேலும், “நான் அவர்கள் அநியாயங்களைக் கிருபையாய் மன்னித்து, அவர்கள் பாவங்களையும் அக்கிரமங்களையும் இனி நினையாமலிருப்பேன்” என்றும் ஆண்டவர் கூறினார் (எபி. 8:12).


தேவனுடைய வாக்குதத்தங்களில் விசுவாசம் வைப்பதென்பது ஓர் நதியைக் கடப்பதற்காக கட்டப்பட்ட வலுவான பாலத்தின்மீது நடக்கும்படி நம் கால்களை வைப்பதற்கே ஒப்பாகும்! நம்முடைய கால்கள் பெலஹீனமானதாயிருக்கலாம்! அதினாலென்ன? .... பாலம் உறுதியான தாயிருந்தால், அது போதுமே!! இப்போது எது உறுதியான விசுவாசம் என்பதற்கு நீங்களே பதில் கூறுங்கள்: ஆம், “ஓர் வலுவான தேவனையும் அவர் அளித்த வாக்குதத்தங்களையும் முழுவதுமாய் நம்பிச் சார்ந்து கொள்ளுவதே” உறுதியான விசுவாசம் ஆகும்!!!


அநேக சமயங்களில் நம்முடைய 'உணர்ச்சிகள்' (Feelings) நம்மை வஞ்சிக்கக் கூடியவைகளாகவே இருக்கிறது. ஆகவே இவ்வித உணர்ச்சிகளை நாம் ஒருபோதும் சார்ந்து நம்பிவிடவே கூடாது! உண்மை (Fact); விசுவாசம் (Faith); உணர்ச்சி (Feeling) ஆகியவைகளை மூன்று மனிதர்களாக சுட்டிக்காட்டி கூறிடும் உவமை ஒன்றுண்டு. இந்த மூன்று மனிதர்களும் ஓர் ஒடுக்கமான

சுவற்றின்மேல் ஒருவர் பின் ஒருவராக நடந்து சென்று கொண்டிருந்தனர். 'உண்மை' முதலாவதாக முன்னோக்கி நடந்து கொண்டிருந்தது. அதைத் தொடர்ந்து 'விசுவாசம்' நடந்து சென்று கொண்டிருந்தது. கடைசியாக 'உணர்ச்சி' விசுவாசத்தைப் பின்தொடர்ந்து வந்து கொண்டிருந்தது. விசுவாசம் தன் கண்களை முன் சென்று கொண்டிருந்த உண்மையின் மீது பதித்திருந்தது வரை சகலமும் சுமுகமாய் நடந்தேறியது! அதேபோல், விசுவாசத்தை உணர்ச்சியானது விடாப் பிடியாகப் பின்தொடர்ந்து சென்றது!! ஆனால் தன்னைப் பின்தொடர்ந்து வரும் உணர்ச்சியைக் காண்பதற்கு விசுவாசம் திரும்பிப் பார்த்தவுடன் நிலை தடுமாறி கீழே விழுந்து.... மரணத்தைத் தழுவியது! அதோடு சேர்ந்து உணர்ச்சியும் செத்து அழிந்தது!! ஆனால்

உண்மையோ, தனக்குப் பின்னால் நடந்த எந்த நிகழ்ச்சியையும் சிறிதுகூட பொருட்படுத்தாமல் சுவற்றின் மீது கெம்பீரமாய் நடைபோட்டு சென்றது!


இந்த உவமை நமக்கு கற்றுத்தரும் பாடம் மிகத்தெளிவாய் இருக்கிறது. தேவனுடைய வார்தையே, என்றென்றும் மாறாத உண்மை நிறைந்ததாகும். நம்முடைய விசுவாசம் தேவனுடைய வார்த்தையை மாத்திரமே உற்று நோக்கிக்கொண்டிருந்தால் ஒருக்காலும் இடறிவிழும் அபாயத்திற்குள் பிரவேசித்திட மாட்டோம்.விசுவாசத்தை அறிக்கையிடுதல்:


நாம் விசுவாசிப்பது எதுவோ, அவைகளை அறிக்கை செய்ய வேண்டுமென சத்தியவேதம் போதிக்கிறது. “கர்த்தராகிய இயேசுவை உன் வாயினாலே அறிக்கையிட்டு, தேவன் அவரை மரித்தோரிலிருந்து எழுப்பினாரென்று உன் இருதயத்திலே விசுவாசித்தால் இரட்சிக்கப்படுவாய். நீதியுண்டாக இருதயத்திலே விசுவாசிக்கப்படும்; இரட்சிப்புண்டாக வாயினாலே அறிக்கைப்பண்ணப்படும்” என ரோமர் 10:9,10 வலியுறுத்திக் கூறுவதைப் பாருங்கள்! ஆம், நம் வாயின் அறிக்கை அத்தனையாய் முக்கியமானதாகும். தேவனுடைய வார்த்தையை அறிக்கை செய்வதென்பது, தேவன் சொன்னதை அப்படியே திரும்பச் சொல்லுவதாகும்! இவ்வாறு சொல்லுவது நம்மில் யாருக்கும் கஷ்டமாக இருக்குமோ?! ஆம், நாம் தேவனுடைய வாக்குதத்தங்களுக்கு “ஆமென்” (அப்படியே ஆகக்கடவது!) எனக்கூறுவது மாத்திரமே தேவையாயிருக்கிறது.


வேதவாக்கியங்களில் "விசுவாசித்தான்” என்ற பதம் முதன் முதலாக ஆதியாகமம் 15-ம் அதிகாரத்தில்தான் உபயோகிக்கப்பட்டுள்ளது. அந்த அதிகாரத்தில், பிள்ளை இல்லாமலிருந்த ஆபிராமை நோக்கி தேவன், “வானத்து நட்சத்திரங்களைப்போல உனக்குச் சந்ததி உண்டாயிருக்கும்" எனக் கூறினார். அதற்கு “ஆபிராம் கர்த்தரை விசுவாசித்தான்” என ஆதி.15:6 பதிலுரைக்கிறது. “விசுவாசித்தான்” என்று இங்கு கூறப்பட்டிருக்கும் வார்த்தைக்கு எபிரெய பாஷையில் 'ஆமென்' என்ற பதமே குறிப்பிடப்பட்டுள்ளது. “ஆமென்” என்பதற்கு "அப்படியே ஆகக்கடவது” என்பதே பொருளாகும். இங்ஙனம், தேவனிடம் "ஆமென்!" எனக்கூறுவதே உண்மையான விசுவாசமாகும்!!


ஆபிராம், இதற்குப் பிறகு “திரளான ஜாதிகளுக்குத் தகப்பன்” என அர்த்தங்கொண்ட “ஆபிரகாம்” என்ற புதிய பெயரை தேவனிடமிருந்து இப்போது பெற்றுவிட்டான்! அது முதற்கொண்டு ஆபிராமும் தன் பெயரை “ஆபிரகாம்” என்றே தன்னைத்தான் அழைத்துக் கொண்டான்!! இருப்பினும் அவனுடைய மனைவியாகிய சாராளோ இன்னமும் பிள்ளையற்றவளாகவே இருந்தாள். ஆபிரகாமோ இதினிமித்தம் சிறிதுகூட கிலேசம் கொள்ளவேயில்லை. அவன் இன்னமும் தன்னை "திரளான ஜாதிகளுக்குத் தகப்பன்”என்றே அழைத்துக் கொண்டான். ஏன் தெரியுமா? தேவன் அவனுக்கு அப்படிச் சொல்லியிருந்தார்! அதை ஆபிரகாம் அப்படியே விசுவாசித்தான்!!


இதைத்தான் நாமும் செய்யும்படி தேவன் கூறுகிறார்.... அவர் தன் வார்த்தையில் கூறியதை அப்படியே மறுபடியும் அறிக்கைச் செய்து கூற வேண்டும்! அவ்வளவுதான்!! இவ்வாறு நாம் தேவன்மீது வைத்திருக்கும் விசுவாசத்தை அவருடைய வாக்குதத்தங்களை அறிக்கைச் செய்து வெளிப்படுத்துகிறோம்..... இத்தக்க தருணத்தில் தான் தேவன் நம் பட்சத்தில் வல்லமையாய் கிரியை செய்யத்துவங்குகிறார்!! “நம் சாட்சியின் வசனத்தினாலேயே” சாத்தானை நாம் ஜெயிக்கிறோம்! (வெளி.12:11). குற்றஞ்சாட்டுகிறவனாகிய சாத்தான், நம்முடைய இரட்சிப்பின் நிச்சயத்தையும், நாம் தேவனுக்கு முன்பாய் தைரியமாய் கிட்டிச்சேரும் சிலாக்கியத்தையும் நம்மிடமிருந்து திருடிக்கொள்வதற்கே சதாமுயற்சித்துக் கொண்டிருக்கிறான். 'இச்சமயங்களில்' நாம் சாத்தானை ஜெயிக்க வேண்டுமென்றால், தேவனுடைய வாக்குதத்தங்களை சாத்தானின் முகத்திற்கு நேருக்கு நேராய் நின்றே நாம் கூவி முழங்கிட வேண்டும்! இயேசுகிறிஸ்துவும் இங்ஙனமே, “இப்படி எழுதி யிருக்கிறது ..... இப்படி எழுதியிருக்கிறது .....” (மத்.4:1-11) என எழுதப்பட்ட வேத வாக்கியங்களையே சாத்தானுக்கு சுட்டிக்காட்டி அவனை ஜெயித்தார்!


நாம் தேவனுடைய வார்த்தையை சந்தேகித்தால், தேவனையே நாம் பொய்யராக்கிவிடுகிறோம்! ஆனால் நாம் தேவனுடைய வார்த்தையை சாத்தானுக்கு முன்பாக அறிக்கை செய்யும் போது, சாத்தானுக்கும் அவனுடைய பொய்களுக்கும் மறுப்புகூறி தேவனோடும் அவருடைய வார்த்தையின் பட்சமாயும் நாம் சேர்ந்து கொண்டு நிற்கிறவர்களாய் காணப்படுவோம். இதன் மூலம் நாம் சாத்தானுக்கு மேலும் கூறுவது யாதெனில், “என்னதான் என் சூழ்நிலைகளும் என் உணர்ச்சிகளும் கூறினாலும், என் தேவன் உரைத்தவைகள்தான் மெய்யானதாகும்!" என்றே கெம்பீரிக்கிறோம்.


இதுவே விசுவாசத்தின் உண்மையான அறிக்கையாகும்.


அதிகாரம் 3
தெரிந்துகொள்ளப்படுதல்! நீதிமானாக்கப்படுதல்!

தேவன் தன் பிள்ளைகளைத் தெரிந்துகொள்ளுதலும், அவர்களை அவர் நீதிமானாக்குதலுமாகிய இரண்டு மகிமையான சத்தியங்களை புதிய ஏற்பாடு நமக்குப் போதிக்கிறது!


தெரிந்துகொள்ளப்படுதல்:


தேவன் தன் முன்னறிவின்படியே நம்மை அவருடைய பிள்ளைகளாயிருக்கும்படிக்குத் தெரிந்து கொண்டார் என வேதம் கூறுகிறது (1பேதுரு 1:1,2), இதன் பொருள் யாதெனில், நித்தியத்தின் பூர்வீகத்திற்கு முன்பே யார் யாரெல்லாம் தன்னுடைய பிள்ளைகளாயிருப்பார்கள் என்பதை தேவன் அறிந்திருந்தார் என்பதேயாகும்!


மேலும், தேவன் நம்மை “உலகத் தோற்றத்திற்கு முன்பாகவே" கிறிஸ்துவுக்குள் நம்மைத் தெரிந்துகொண்டார் எனவும் வேதம் உரைக்கிறது (எபேசி.1:4). ஆதாம் சிருஷ்டிக்கப்படுவதற்கு முன்பாகவே தேவன் நம் ஒவ்வொருவரையும் அவருடைய பிள்ளைகளாகப் 'பெயர் சொல்லி' அறிந்திருக்கிறார் எனவும், அந்த நம்முடைய பெயர்கள் “ஜீவ புஸ்தகத்தில்" எழுதப்பட்டிருந்தன என்றும் வாசிக்கிறோம்!! (வெளி.13:8).


இங்கே நாம் காணும் உண்மைகள் நமக்கு ஓர் மகத்தான பாதுகாப்பைத் தருகிறதல்லவா!


நாம் நின்றுகொண்டிருக்கும் தேவனுடைய உறுதியான அஸ்திவாரம் “இரு முத்திரைகளைக்” கொண்டிருப்பதாகவே வேதம் கூறுகிறது. தேவனைச் சார்ந்திருக்கும் முத்திரையில், “கர்த்தர் தம்முடையவர்களை அறிவார்” என பொறிக்கப்பட்டிருக்கிறது. மனுஷனைச் சார்ந்திருக்கும் முத்திரையில், “கிறிஸ்துவின் நாமத்தைச் சொல்லுகிற எவனும் அநியாயத்தை விட்டு விலகக்கடவன்” என்ற வாசகம் பொறிக்கப்பட்டுள்ளது (2 தீமோ. 2:19).


தேவனோ தம்முடைய பிள்ளைகளை உலகத்தோற்றத்திற்கு முன்பாகவே அறிந்திருக்கிறார். ஆனால், நாமோ மனந்திரும்பி அவரிடத்தில் திரும்பும் போதுதான் “நாம் அவருடைய பிள்ளைகள்!” என்பதை அறிந்து கொள்ளுகிறோம். தேவன் தன் பிள்ளைகளை எவ்வாறு தெரிந்து கொள்ளுகிறார் என்பதையும் அதே சமயம் அவரைத் தெரிந்து கொள்ளுவதற்கும் அல்லது அவரை உதாசினம் செய்வதற்கும் மனுஷனுக்கு அவர் தந்திருக்கும் சுயாதீனத்தையும் கண்டு வியக்கிறது! ஒன்றை ஒன்று சந்திக்க முடியாத இரண்டு இணைகோடுகளைப்போல மேற்கண்ட இந்த முக்கியமான இரு சத்தியங்களும் நம் சிந்தைக்கு எட்டவேயில்லை!! ஆனால் கணித சாஸ்திர விளக்கத்தின்படி இரு இணைகோடுகள் கண்காணாத எல்லையில்லாதூரத்தில் ஒன்றையொன்று சந்திக்கிறது! ஆம் உண்மைதான், இந்த இரு இணை கோடுகள் போல இருக்கும் இந்த அருமையான சத்தியம் எல்லைக்கடங்கா தேவனுடைய மனதிலேயே முடிவடைகிறது!


யாரோ ஒருவர் கீழ்காணும் விதமாய் இச்சத்தியத்தை சற்றுத் தெளிவாக விளக்கியுள்ளார்: “வாழ்க்கைப் பயணமாகிய ரஸ்தாவில் நீங்கள் நடந்து சென்று கொண்டிருக்கும் போது ஓர் நாளில், திறந்திருக்கும் ஓர் கதவைக் காணுகிறீர்கள்! அக்கதவின்மேல் 'மனந்திரும்பி கிறிஸ்துவை விசுவாசிக்கும் யாராயிருந்தாலும் இக்கதவிற்குள் பிரவேசித்து நித்திய ஜீவனைப் பெற்றுக் கொள்ளலாம்!' என்ற வாசகம் எழுதப்பட்டிருந்தது. இதைக் கண்ட நீங்கள் உள்ளே பிரவேசிக்கிறீர்கள்! உள்ளே பிரவேசித்தவுடன் நீங்கள் திரும்பிப்பார்த்து, எந்தக் கதவின் வழியாய் பிரவேசித்தீர்களோ அந்தக் கதவின் பின்புறத்தில் 'உலகத் தோற்றத்திற்கு முன்பே நீங்கள் கிறிஸ்து இயேசுவுக்குள் தேவனால் தெரிந்துகொள்ளப்பட்டீர்கள்!' என்ற வாசகம் எழுதப்பட்டிருப்பதைக் கண்டு சொல்லொண்ணா வியப்பிலாழ்கிறீர்கள்!''நீதிமானாக்கப்படுதல்:

நம் கடந்தகால ஜீவியத்தின் குற்றங்களை “பாவ மன்னிப்பு” அகற்றிவிடுகிறது. ஆனால் அதுமாத்திரம் நம்மை பரிசுத்தராய் மாற்ற முடிவதில்லை. ஆகவே பூரண பரிசுத்தம் நிறைந்த தேவனுக்கு முன்பாக நாம் நிற்பதற்கு இன்னமும் தகுதி பெறவில்லை! எனவேதான் தேவன் நமக்காக மேலானதொன்றைச் செய்ய வேண்டியதாயிருந்தது.


அவர் நம்மை நீதிமானாக்குவதே (Justify) அச்செயலாகும்!


நீதிமானாக்கப்படுதல் என்பதின் பொருள் யாதெனில், “பரிபூரணம் நிறைந்த கிறிஸ்துவின் நீதியை தேவன் நம் கணக்கில் வரவு வைக்கிறார்" என்பதே சரியான பொருளாகும். இதன் விளைவாய் கிறிஸ்து எங்ஙனம் தேவனுக்கு முன்பாக பூரணராய் நின்றிட முடியுமோ அதற்கொப்பாகவே நாமும் தேவனுக்கு முன்பாக நின்றிட முடியும்! இந்த சத்தியம் நம்மை மகா ஆச்சரியத்திலாழ்த்துகிறது....ஆனால், அது உண்மை!! ஓர் பிச்சைக்காரனின் வங்கிக் கணக்கில், அவனுடைய பெயரில் பலகோடி ரூபாய்கள் வரவு செய்வது எவ்வளவு ஆச்சரியமோ அதற்கொப்பாகவே மேற்காணும் சத்தியம் நம்மை ஆச்சரியத்தில் ஆழ்த்துகிறது!! இவ்வளவு பெரிய தொகையை இந்த ஏழைப் பிச்சைக்காரன் சம்பாதிக்கவோ அல்லது அதற்கு தகுதியுள்ளவனோ

அல்ல. இருப்பினும் அப்பெருந்தொகை ஓர் இலவச அன்பளிப்பாகவே அவனுக்குத் தரப்பட்டது!!ஆகவே, நீதிமானாக்கப்படுதல் என்பது: “நம் கடந்த ஜீவியகாலம் முழுவதும் நாம் இதுவரை ஒரு தடவைகூட பாவஞ்செய்யாதவர்களைப் போல தேவன் நம்மை ஏற்றுக்கொள்ளுவதாகும்! மேலும் இன்று வாழும் ஜீவியத்தில் நாம் பூரண நீதியுள்ளவர்களைப்போல காணப்படுவதுமாகும்!!"


“இவ்விதமாக, நாம் விசுவாசத்தினாலே நீதிமான்களாக்கப்பட்டிருக்கிறபடியால்.... இயேசுகிறிஸ்து மூலமாய் நாம் இந்த கிருபையில் பிரவேசிக்கும் சிலாக்கியத்தை விசுவாசத்தினால் பெற்று நிலைகொண்டிருக்கிறோம்” (ரோமர்.5:1,2) என தேவனுடைய வசனம் கூறுவதைப் பாருங்கள். எனவே, நாம் இப்போது எல்லா சமயங்களிலும் தேவனுடைய சமூகத்திற்கு முன்பாக எவ்வித தயக்கமும் பயமுமின்றி தைரியமாகப் பிரவேசித்திட முடியும்! ஏனெனில் இவ்விதம் தைரியமாய் கிட்டிச் சேருவதற்கான வழியை தேவனே நமக்காகத் திறந்திருக்கிறார்!!


ஏதேன் தோட்டத்தில் ஆதாமும் ஏவாளும் பாவம் செய்தவுடன் குற்றவுணர்விற்குள்ளாகி, வெட்கத்தால் நிறைந்து, தங்களை அத்தி இலை களால் மூடிக்கொண்டார்கள். இப்பரிதாபமான சமயத்தில் தேவன் விரைந்து வந்து அத்தியிலைகளை எடுத்துப் போட்டு, ஓர் மிருகத்தைக் கொன்று அம்மிருகத்தின் தோலினால் அவர்களை உடுத்துவித்தார். இந்த அத்தி இலைகள் நம் சுய நற்கிரியைகளுக்கே மாதிரியாய் உள்ளது. இந்த அத்தியிலைகளைப் போலவே, நம்முடைய சொந்த நற்கிரியைகள் நம் நிர்வாணத்தை தேவனுக்கு முன்பாக ஒருக்காலும் மூடிட முடியாது! ஏனெனில் நம்முடைய சிறந்த நீதியுள்ள கிரியைகளும் தேவனுடைய பார்வையில் அழுக்கான கந்தை போலவே இருக்கிறது என்ற உண்மையை வேதம் எடுத்துரைக்கின்றது (ஏசா.64:6). இவ்விதமாய் அடிக்கப்பட்ட மிருகம், கிறிஸ்து நம்முடைய பாவங்களுக்காக மரித்ததைச் சித்தரிக்கின்றது. அம்மிருகத்தின் தோல், நம்மை மூடுவதற்காக தேவனால் நமக்களிக்கப்பட்ட கிறிஸ்துவின் பூரண நீதியை சித்தரிக்கின்றது (ஆதி.3:7-21).


பார்த்தீர்களா, நீதிமானாக்கப்படுதல், தேவன் நமக்குத் தந்த இலவசமான அன்பளிப்பாகும். எந்த மனிதனும் தன் சொந்த கிரியையின் அடிப்படையில் தன்னை தேவனுக்கு முன்பாக நீதிமானாய் காண்பித்திட ஒருக்காலும் முடியாது. எனவே மதியீனத்தின் ஓர் உச்சக்கட்டமான பிழையாதெனில், "நான் தேவனால் நீதிமானாக்கப்படுவதற்கு, ஓர் நல்ல நீதியுள்ள வாழ்க்கை

வாழ்வேன்!” என ஒருவன் கூறுவதுதான்.


ஆகிலும் இம்மதியீனமான பிழைக்கு எதிர்புறத்தில் வேறொரு உச்சக்கட்டமான பிழையும் இருக்கத்தான் செய்கிறது. அது யாதெனில், “நாம்தான் தேவனால் தெரிந்து கொள்ளப்பட்டு நீதியாக்கப்பட்டிருக்கிறோமே.... அப்படியிருக்க, இப்போது நாம் பாவம் செய்தாலும் அது ஓர் பொருட்டல்ல” என மதியீனமாய் ஒருவன் கூறுவதேயாகும். இவ்வாறு தேவன்தான் தங்களைத் தெரிந்து கொண்டு நீதிமானாக்கியதினிமித்தம் பாவத்தை லேசாக எடுத்துக்கொள்பவர்கள் யாராயிருந்தாலும்.... அப்படிப்பட்டவர்கள் இதன் மூலமாகவே தாங்கள் தேவனால் தெரிந்து கொள்ளப்பட்ட குழுவைச் சார்ந்தவர்களல்ல என்பதையும் நிரூபிக்கிறார்கள்! (ரோமர் 4:5-ஐ; யாக். 2:24-லோடு ஒப்பிட்டுப் பாருங்கள்).


நாம் தேவனால் தெரிந்து கொள்ளப்பட்டு நீதிமானாக்கப்பட்டிருக்கிறோம் என்ற சத்தியம் நமக்கு நிச்சயமானதாகிவிட்டால், இனி சாத்தான் நம் மீது தொடுக்கும் குற்றச்சாட்டுகள் பெலஹீனமடைந்து முறியடிக்கப்பட்டுவிடும். ஆம், “தேவன் நம்முடைய பட்சத்திலிருந்தால் நமக்கு விரோதமாயிருப்பவன் யார்?” என இப்போது நாம் கூவி முழங்கலாம் (ரோமர்.8:31). இனியும் நம் ஜீவியத்தின் 'ஒரு சமயத்தில்கூட' நாம் தேவனால் ஆக்கினைக் குள்ளாக்கப்பட்டவர்களாகவோ அல்லது அவரால் புறக்கணிக்கப்பட்டவர்களாகவோ நாம் ஒருக்காலும் சிந்திக்கவேண்டிய அவசியமே இல்லை!


மிகுந்த ஆச்சரியத்துடன், “தேவன் தெரிந்துகொண்டவர்கள் மேல் குற்றஞ்சாட்டுகிறவன் யார்? தேவனே அவர்களை நீதிமான்களாக்குகிறவர்!” (ரோமர்.8:33) என பறைசாற்றிடும் வசனத்தைப் பாருங்கள். அல்லேலூயா!!!


சுவிசேஷத்தின் நற்செய்தி எத்தனை அருமையாயிருக்கிறது பார்த்தீர்களா! காரியம் இப்படியாயிருப்பதால் “தாங்கள் தேவனால் தெரிந்து கொள்ளப்பட்டு நீதிமான்களாக்கப்பட்டிருக்கிறோம்" என்ற இப்பொன்னான சத்தியத்தை இன்று அநேக விசுவாசிகள் அறியாமலிருக்கும்படி சாத்தான் செய்திருக்கிறான் என்பதைக் காண்பது, நமக்கு சிறிதும் ஆச்சரியமூட்டுவதாய் இல்லை!!

அதிகாரம் 4
சீஷத்துவம்

இயேசுவானவர் தன் அப்போஸ்தலர்களைப் பார்த்து, “நீங்கள் புறப்பட்டுப்போய், சகல ஜாதிகளையும் சீஷராக்குங்கள்......” எனக் கூறிய போது, அவர் எதைப் பொருள்படுத்தி கூறினார் என்பதில் சீஷர்களுக்கு எள்ளளவும் சந்தேகம் இருக்கவில்லை (மத். 28:19). ஏனென்றால், அவருக்கு சீஷனாய் இருப்பது எங்ஙனம்?' என்பதை இயேசுவானவர் ஏற்கெனவே தன் சீஷர்களுக்கு விளக்கிப் போதித்திருந்தார்!


புதிய ஏற்பாட்டில், லூக்கா 14:25-35 வசனங்களில் சீஷத்துவத்தைப் பற்றி நாம் தெளிவாகக் காண்கிறோம். ஒருவன் இயேசுவின் சீஷனாய் மாறுவதற்கு மூன்று நிபந்தனைகளை இவ்வசனங்கள் வலியுறுத்திக் கூறுகின்றன. இவ்வசனங்களில், “ஒரு மனிதன் ஓர் கோபுரம் கட்டுவதற்காக அஸ்திவாரம் போட்டு, பின்பு அதைக் கட்டுவதற்குரிய பொருளாதாரம் இல்லாதபடியால் அதை அவன் கட்டி முடிக்கவில்லை என இயேசு கூறினார் (28-30 வசனங்கள்),


எனவே, ஒருவன் இயேசுவின் சீஷனாவதற்கு ஓர் கிரயம் தேவையாயிருக்கிறது என்பதையே இவ்வசனங்களின்மூலமாய் நாம் அறிந்து கொள்ளுகிறோம். ஆகவேதான், அதைக் கட்டுவதற்கு முன்பாக ஒருவன் உட்கார்ந்து, செல்லுஞ் செலவை' கணக்குப் பார்க்க வேண்டுமென்று இயேசு விழிப்பூட்டிப் பேசினார்.


நம்முடைய பாவங்கள் மன்னிக்கப்பட்ட பிறகு, சீஷத்துவத்தின் உண்மைகளை அறிந்துகொள்ள பல வருடங்கள் காத்திருக்க வேண்டும் என்பது தேவனுடைய சித்தம் அல்லவே அல்ல! இயேசுவினிடத்தில் ஜனங்கள் வந்ததும் அவர்களுக்கு உடனடியாகவே, சீஷத்துவத்தின் கிரயத்தை இயேசு போதித்தார். மேலும் அவர் கூறும்போது, சீஷனாவதற்கு மன விருப்பமில்லாத ஓர் விசுவாசி

சாரமற்ற உப்பைப்போல தேவனுக்கு எந்த பிரயோஜனமும் அற்றவனாயிருப்பான், என்றும் குறிப்பிட்டார்!! (லூக் 14:35).நம் இனஜனபந்துக்களை வெறுத்தல்' :


நம்முடைய உறவினர்களோடு நாம் வைத்திருக்கும் சுபாவமாய் கொண்ட அசாதாரண அன்பைத் துண்டித்துக்கொள்ள வேண்டும் என்பதே சீஷத்துவத்தின் முதல் நிபந்தனையாகும். “யாதொருவன் என்னிடத்தில் வந்து தன் தகப்பனையும் தாயையும் மனைவியையும் பிள்ளைகளையும் சகோதரரையும் சகோதரிகளையும், தன் ஜீவனையும் வெறுக்காவிட்டால் எனக்குச் சீஷனாயிருக்க மாட்டான்” (லூக். 14:26) என சீஷத்துவத்தின் முதல் நிபந்தனையை இயேசு பிரகடனம் செய்தார்.


சீஷத்துவத்தின் முதல் நிபந்தனையின் வார்த்தைகளே மிகவும் ஆணித்தரமாய் உள்ளது! 'வெறுக்க வேண்டும்' என்பதன் உண்மையான பொருளை அறிவீர்களா? ‘கொல்ல வேண்டும்' என்பதே வெறுக்க வேண்டும் என்பதற்குச் சமமான அர்த்தமாகும் (1யோ.3:15). ஆம், நம்முடைய இனபந்துக்களிடம் நாம் கொண்டுள்ள சுபாவமான சிநேகிதத்தை மரணத்திற்கு உட்படுத்திக் கொலைசெய்ய வேண்டும்!!


அப்படியானால், நாம் அவர்களை நேசிக்கக்கூடாது என்பதா பொருள்? இல்லை! நிச்சயமாய் இல்லை!! நம்முடைய மனுஷீக அன்பை நாம் இழக்கும் போது, அந்த இடத்தை தேவன் தன்னுடைய தெய்வீக அன்பினால் நிறைத்துவிடுவார்! இங்குதான் நம்முடைய உறவினர்களை நாம் நேசிக்கும் அன்பு தூய்மையடைகிறது. ஆம், நம்முடைய நேசத்திற்கு எப்பொழுதும் தேவனே முதலிடம் வகித்திட வேண்டும்.... மாறாக, உறவினர்கள் அல்ல!


இந்த முதல் நிபந்தனைக்கே இன்று அநேகர் தேவனுக்குக் கீழ்படியவில்லை! ஏனெனில், இப்படிப்பட்டவர்கள் தங்கள் தகப்பன் தாய் அல்லது மனைவி முதலானவர்களை மனம் நோகச்செய்திட அஞ்சுகிறார்கள்! ஆனால் ஆண்டவரோ, நம் ஜீவியத்தில் நாம் அவருக்கு முதலிடம் தரும்படியே கட்டளையிடுகிறார். அவ்விதமாய் நாம் அவருக்கே முதலிடம் தராவிட்டால், அவருடைய சீஷர்களாய் ஒருக்காலும் இருந்திடவே முடியாது!!


இதற்கு, இயேசுவையே மாதிரியாக நோக்கிப்பாருங்கள்.


அவர், தன் விதவையான தாய்மீது கடைசிவரைக்கும் பொறுப்புள்ள அக்கறை கொண்டிருந்தார். அவ்வாறிருந்தும், தான் பிதாவின் பரிபூரண சித்தம் செய்து முடிப்பதற்குத் தடையாக, சிறு விஷயத்தில் கூட தன் தாய் தன்னை இடைமறித்திட அவர் ஒருபோதும் அனுமதிக்கவே இல்லை!


இதற்கு கானா ஊர் கலியாணம் ஓர் முன் உதாரணமாக இருக்கிறது. அக்கலியாணத்தில், தன் தாயின் தூண்டுதலின்படி ஒன்றைச் செய்திட இயேசு மறுத்துவிட்டார்! (யோவான் 2:4).


சீஷத்துவ வழியில் நம் சகோதரர்களை எங்ஙனம் 'வெறுப்பது?' என்பதையும் இயேசு நமக்கு கற்றுத்தந்துள்ளார். கல்வாரி சிலுவைக்கு இயேசு செல்வதைத் தவிர்க்கும்படி பேதுரு முயற்சித்தபோது, அவர் பேதுருவைப் பார்த்து, “எனக்குப் பின்னாகப்போ, சாத்தானே! நீ எனக்கு இடறலாயிருக்கிறாய்” (மத்.16:23) என மிகக்கடுமையாய் கடிந்து கொண்டார். ஓர் மிகுந்த மனுஷீக அன்பினால் நிறைந்துதான், “இயேசு சிலுவைக்குச் செல்லக்கூடாது” என்ற ஆலோசனையை பேதுரு இயேசுவுக்கு வழங்கினான். ஆனால் அவனுடைய ஆலோசனை பிதாவின் சித்தத்திற்கு முரணாய் இருந்தபடியால் இயேசு அவனை கடுஞ்சொற்களால் கடிந்து கொண்டார்!!


இயேசுவின் சிநேகத்திற்கு, பிதாவானவரே எப்போதும் முதலிடம் பெற்றிருந்தார். அவரைப்போன்ற மனோபாவத்தையே நாமும் பெற்றிருக்க இயேசு வாஞ்சிக்கிறார். இயேசு உயிர்த்தெழுந்தபின்பு பேதுருவைப் பார்த்து, “பேதுருவே, இவ்வுலகத்திலுள்ள எதைக் காட்டிலும் நீ என்னை அதிகமாய் நேசிக்கிறாயா?” (யோவான்.21:15-17) என உருக்கமாய் கேட்டார்!


ஆம், இன்றும் தங்கள் ஆண்டவரைப் பிரதானமாய் நேசிப்பவர்களுக்கு மாத்திரமே, அவருடைய சபையில் பொறுப்புகள் ஒப்புக்கொடுக்கப்படுகிறது!!


இதனிமித்தமே, எபேசு சபையை நடத்திய தூதுவன், ஆண்டவர் மீது அவன் வைத்திருந்த ஆதி அன்பின் தியானத்தை இழந்தபடியால், சபையின் பொறுப்பிலிருந்து தேவனால் நிராகரிக்கப்படும் அபாயத்தில் இருந்தான்! (வெளி.2:1-5)..


சங்கீதக்காரன் கூறியதைப் போலவே, “பரலோகத்தில் உம்மையல்லாமல் எனக்கு யார் உண்டு? பூலோகத்தில் உம்மைத்தவிர எனக்கு வேறே விருப்பமில்லை” (சங்கீதம்.73:25) என நாமும் நம்முடைய மனதாரக் கூறிட முடியுமா? அங்ஙனமே நாம் கூறிவிட்டால், நாம் உண்மையாகவே சீஷத்துவத்தின் முதல் நிபந்தனையை மகிழ்வுடன் நிறைவேற்றியவர்களாயிருப்போம்!!


நம்மிடத்தில் இயேசு எதிர்பார்க்கும் அன்பு, ஏதோ பக்தியான தியானப் பாடல்களை அவருக்காக மனதுருகப்பாடி வெளிப்படுத்தும் “மனுஷீகமான உணர்ச்சி வசப்படும்” அன்பு அல்ல! நிச்சயமாய் அல்ல!! நாம் அவரை மெய்யாகவே அன்புகூருகிறவர்களாய் இருந்தால், நாம் செய்யும்படி அவர் கட்டளையிட்டயாவற்றிற்கும் மகிழ்வுடன் கீழ்ப்படிந்திருப்போம்!! (யோ. 14:21).நம் சொந்த ஜீவனையும் வெறுத்தல்:


நம்முடைய சொந்த சுய - வாழ்க்கையை நாம் வெறுக்க வேண்டுமென்பதே சீஷத்துவத்தின் இரண்டாவது நிபந்தனையாகும். “யாதொருவன் என்னிடத்தில் வந்து தன் ஜீவனை வெறுக்காவிட்டால் எனக்குச் சீஷனாயிருக்கமாட்டான்” என இயேசு அறிவித்தார் (லூக்கா.14:26) . இதைச் சற்று விரிவாக விளக்கி, “தன் சிலுவையைச் சுமந்து கொண்டு எனக்குப் பின்செல்லாதவன் எனக்குச் சீஷனாயிருக்கமாட்டான்” (லூக்கா 14:27) எனவும் இயேசு கூறினார்.


இயேசுவின் எல்லா உபதேசங்களிலும், இந்த சிலுவையின் உபதேசத்தை மிக.... மிக கொஞ்சம்பேர்களே சரியாகப் புரிந்து கொண்டிருக்கிறார்கள்.


இயேசுவின் சீஷனாயிருக்க விரும்பும் ஒருவன், “தன்னைத்தான் வெறுத்து, தன் சிலுவையை அனுதினமும் (Daily) எடுத்துக்கொண்டு, என்னைப் பின்பற்றக்கடவன்” (லூக். 9: 23) என்றே இயேசு வலியுறுத்திக் கூறினார். ஆம், நாம் தினசரி வேதம் வாசித்து ஜெபிப்பதைக்காட்டிலும் நம்மை நாமே வெறுத்து நம் சிலுவையை அனுதினமும் எடுப்பதே அதிக முக்கியமாகும். நம் சுயத்தை வெறுப்பதென்பதும், நம் சொந்த ஜீவனை வெறுப்பதென்பதும் ஒன்றுதான்! நாம் தொன்று தொட்டு ஆதாமிலிருந்து சுதந்தரித்துக் கொண்டதே நமக்கிருக்கும் “ சொந்த ஜீவன்” ஆகும்! இந்த சொந்த ஜீவனையே நாம் வெறுக்கும்படி அழைக்கப்படுகிறோம். சுயத்தின்-வாழ்க்கையை அழிப்பதற்கு முன்பாக, முதலாவது அதை நாம் வெறுத்திட வேண்டும்!


கிறிஸ்துவின்-ஜீவனுக்கு (Life of Christ) நம் சுய-வாழ்க்கையே பிரதானமான எதிரியாகும். இந்த சுய-வாழ்க்கையை “மாம்சம்” (The Flesh) என வேதம் போதிக்கின்றது. நமக்குள் குடிகொண்டிருக்கும் சகலவிதமான பொல்லாத இச்சைகளின் பண்டகசாலையே இந்த மாம்சமாகும்! இக்கேடான இச்சைகளின் நிமித்தமே நம்முடைய சுய - ஆதாயத்தைத் தேடும்படியும், நமக்கு இஷ்டமான சொந்த - வழியில் செல்லும்படியும் நாம் சோதிக்கப்படுகிறோம்.


நீங்கள் நேர்மையுள்ளவர்களாயிருந்தால், உங்களுடைய நல்ல கிரியைகள் கூட தீய நோக்கத்தினால் கறைபட்டிருக்கிறது என்பதை ஒத்துக்கொள்ளு வீர்கள்! கறைபுரையோடியே நம் இச்சைகளிலிருந்தே கறைப்பட்ட தீய நோக்கங்கள் எழும்பி வருகிறது!! எனவே நாம் இந்த மாம்சத்தை வெறுத்தாலொழிய நாம் ஒருக்காலும் ஆண்டவரைப் பின்பற்றிச் சென்றிட முடியாது!!


இதனிமித்தமே, நம் சொந்த ஜீவனை வெறுப்பதைக் (அல்லது இழப்பதைக்) குறித்து இயேசு திரும்பத் திரும்ப வலியுறுத்திக்கூறினார். இவ்வாறு, நம் சுய-ஜீவியத்தை வெறுப்பதைக் குறிப்பிட்டு சுவிசேஷங்களில் 6 தடவை திரும்பத் திரும்ப கூறப்பட்டிருப்பதைக் காண்கிறோம் (மத்.10:39; 16:25; மாற்கு 8:35; லூக்கா 9:24; 14:26; யோ.12:25). இயேசு பிரசங்கித்த இந்தச் செய்திதான் சுவிசேஷங்களில் அடிக்கடி கூறப்பட்டுள்ளது. ஆனால்..... அந்தோ, இன்று இந்தச் செய்திதான் எப்போதோ அபூர்வமாய் பிரசங்கிக்கப்பட்டும்.... மிகக் குறைந்த அளவில் புரிந்துகொள்ளப்பட்டும் உள்ளது!


உங்கள் சொந்த ஜீவனை நீங்கள் வெறுக்க வேண்டுமென்றால், உங்கள் சுய உரிமைகளையும்; சுய லாபங்களையும்; சுய மதிப்பையும்; சுய வழிகளையும்; சுய இலட்சியங்களையும் அதன் அபிலாஷைகளையும் தேடாமல் அவைகளுக்கு முற்றுப்புள்ளி வைத்திட வேண்டும்! இவ்வழி செல்வதற்கு நீங்கள் ஆயத்தமா? அப்போது மாத்திரமே நீங்கள் இயேசுவின் சீஷனாய் திகழ்ந்திட முடியும்!!நம் சொந்த உடைமைகள் யாவற்றையும் வெறுத்தல்:


நமக்கு உண்டான எல்லா உடைமைகளையும் வெறுக்க வேண்டும் என்பதே சீஷத்துவத்தின் மூன்றாவது நிபந்தனையாகும். “உங்களில் எவனாகிலும் தனக்கு உண்டானவைகளையெல்லாம் வெறுத்து விடாவிட்டால் அவன் எனக்குச் சீஷனாயிருக்கமாட்டான்” என இயேசு அறிவித்தார் (லூக்கா 14:33).


நமக்குச் சொந்தமாக நாம் வைத்திருப்பவைகளே நம் உடைமைகள்! நமக்கு உண்டானவைகள் யாதொன்றையும் இனிமேலிருந்து நமக்குச் சொந்தமாக பாவிக்காமலிருப்பதே, நமக்குரிய யாவற்றையும் வெறுத்துவிடுதலாகும்!!!


ஆபிரகாமின் வாழ்க்கை இதைக் குறித்த விளக்கத்தை நமக்குச் சித்தரிக்கின்றது. ஆபிரகாமின் சொந்தமகன், ஈசாக்கு - அவனுடைய உடைமை! ஒருநாள், அவனுடைய உடைமை ஈசாக்கைப் பலியாக படைக்கும்படி ஆபிரகாமிடம் தேவன் கூறினார். அதன்படியே ஆபிரகாம் ஈசாக்கைப் பலிபீடத்தில் கிடத்தி அவனை வெட்டுவதற்கும் ஆயத்தமாகி விட்டான்! இத்தருணத்தில் தேவன் துரிதமாய் இடைப்பட்டு “பிள்ளை யாண்டான் மேல் உன் கையைப் போடாதே......” எனத் தடுத்து விட்டார். ஆபிரகாம் தேவனுக்குக் கீழ்ப்படிய ஆயத்தமாயிருந்தான் என்பதை தேவன் கண்டபடியால் அவ்விதம் இடைப்பட்டுத் தடுத்தார் (ஆதி.22). அதன் பின்பு, ஆபிரகாம் ஈசாக்கைத் தன் வீட்டில் தன்னோடு வைத்துக்கொண்டாலும், அவனைத் தனக்குச் சொந்தமாக வைத்திருக்கவில்லை என்பதை ஆபிரகாம் ஆழமாய் உணர்ந்திருந்தான்! ஆம், இந்த ஈசாக்கு இப்போது தேவனுக்கே சொந்தம்!!


நமக்குரிய எல்லா உடைமைகளையும் வெறுத்துவிட வேண்டும் என்பதற்கு இதுவே பொருளாகும். நமக்கு உண்டான உடைமைகள் யாவும் பலிபீடத்தில் வைக்கப்பட்டு அவைகளைத் தேவனுக்கே அர்ப்பணித்திட வேண்டும். இவ்வாறு நாம் அர்ப்பணித்து விட்டவைகளில் சிலவற்றை உபயோகிக்கும்படி தேவன் அனுமதிக்கக் கூடும்! ஆனால் அவ்விதமான பொருட்களை நாம் இனியும் நமக்குச் சொந்தமானது என எண்ணிட முடியாதே! நம்முடைய சொந்த வீட்டில் நாம் வசித்தால்கூட, அந்த வீடு தேவனுக்கே சொந்தம் என்று மனதார நினைத்திட வேண்டும். இந்த நல்ல தேவன், அவ்வீட்டில் நாம் வாடகையில்லாமல் இருக்கச் செய்திருக்கிறார் என்றே நன்றியோடு நினைவுகூர வேண்டும்!! இதுவே உண்மையான சீஷத்துவமாகும்.


இங்ஙனம் உங்கள் எல்லா உடைமைகளையும் அர்ப்பணம் செய்து விட்டீர்களா? நம் எல்லா உடைமைகளில், நம்முடைய வங்கி சேமிப்புக் கணக்கு, சொத்துக்கள், உத்தியோகம், தகுதிகள், தாலந்துகளும் வரங்களும், மனைவி பிள்ளைகளும் ஆகியன போன்ற இப்பூமியில் நாம் மதிப்பிடும் ஒவ்வொன்றும் அடங்கும்! நாம் இயேசுவுக்கு உண்மையான சீஷனாக இருக்கவேண்டுமென்றால் இவைகள் அத்தனையையும் நாம் பலிபீடத்தில் கிடத்திட வேண்டும்!


ஆண்டவரை நம் முழு இருதயத்தோடும் நாம் அன்புகூர வேண்டுமென்றே தேவன் விரும்புகிறார். இப்படிப்பட்டவர்களையே “இருதயத்தில் சுத்தமுள்ளவர்கள்” என இயேசு குறிப்பிட்டுக் கூறினார் (மத்தேயு 5:8). ஓர் சுத்த மனசாட்சி மாத்திரம் நமக்கு இருந்தால் போதாது! ஏனென்றால், ஓர் சுத்த மனசாட்சியைப் பெறுவதற்கு நாம் பாவத்தை விட்டு விட்டால் அது போதும்! ஆனால், 'ஓர் சுத்த இருதயத்தை' பெறுவதற்கோ ஒருவன் எல்லாவற்றையும் வெறுத்திடவேண்டும்!!


ஆகவே,


1) நம் நேசத்திற்குரியவர்களிடத்திலும், நம் உறவினர்களிடத்திலும்,


2) நம் சுய-வாழ்க்கையின் மீது கொண்டுள்ள பற்றிலும்,


3) நம் உடைமைகள் எல்லாவற்றின் மீதும்,


நாம் கொண்டுள்ள மனோபாவத்தில் ஏற்படும் ஓர் ஆணித்தரமான மாற்றமே உண்மையான சீஷத்துவமாகும்!


சீஷத்துவத்தைக் குறித்து இயேசு குறிப்பிட்ட இம் மூன்று விஷயங்களில், நம்முடைய கிறிஸ்தவ ஜீவியத்தின் ஆரம்பத்திலேயே கீழ்படிவதற்கு நேர்மையாய் நடந்து கொள்ளவில்லையென்றால், 'நல்லதோர் அஸ்திவாரத்தை' நாம் போடுவது ஒருக்காலும் சாத்தியமாகாது!!

அதிகாரம் 5
தண்ணீர் ஞானஸ்நானம்

இயேசு பரத்திற்கு ஏறிச் செல்வதற்கு முன்பாக, கட்டளையிட்டவைகளில் கடைசி மூன்று கட்டளைகளாவன:


1.நீங்கள் புறப்பட்டுப்போய் சகல ஜாதிகளையும் சீஷராக்குங்கள்.


2.அவர்களுக்குப் பிதா குமாரன் பரிசுத்த ஆவியின் நாமத்திலே ஞானஸ்நானங்கொடுங்கள்.


3.நான் உங்களுக்குக் கட்டளையிட்ட யாவையும் அவர்கள் கைக்கொள்ளும்படி அவர்களுக்கு உபதேசம் பண்ணுங்கள், என்பதே ஆகும்.


இக்கட்டளைகளை இயேசு வரிசைப்படுத்தி கூறியது மிகவும் முக்கியமானதாகும். இவ்வரிசைப்படி, யாரெல்லாம் சீஷர்களாவதற்கு விருப்பங்கொண்டிருக்கிறார்களோ அவர்கள் மாத்திரமே ஞானஸ்நானம் பெற்றிட முடியும்! இத்தகுதி தவிர, வேறு எவரும் ஞானஸ்நானம் பெற்றிட முடியாது!!


இயேசுவினிடத்தில் ஜனங்கள் சிறு குழந்தைகளைக் கொண்டு வந்த போது, அக்குழந்தைகளின் தலையின் மீது அவர் தமது கரங் வைத்து ஆசீர்வதித்தார் (மாற்கு 10:13-16). ஆனால், மனந்திரும்பிய வயதிற்கு வந்தவர்கள் (adults) இயேசுவினிடத்தில் வந்தபோது, அவர்களுக்கு அவர் தன் சீஷர்கள் மூலமாக ஞானஸ்நானம் கொடுத்தார்! (யோவான்.4:1,2).


ஆனால் இன்று நாம் அநேக 'சபைகளில்' காண்பது யாது? இச்சத்தியத்திற்கு முரணாக “எதிரும் புதிருமாகவே” நடக்கிறது! குழந்தைகளுக்கு ஞானஸ்நானம் கொடுக்கிறார்கள்....! வயது வந்தவர்களின் தலைகளின் மீதோ தங்கள் கரங்களை வைத்து “உறுதி பூசுகிறார்கள்” (Confirmation)....!! இவ்வாறு கிறிஸ்துவின் உபதேசத்திற்கும் அவர் செய்ததற்கும் நேர்மாறாக செயல்படுகிறவர்கள் யாராயிருந்தாலும், அவர்கள் தங்களைத் தாங்களே அந்திக்கிறிஸ்துவின் ஆவியோடு இணைத்துக் கொள்ளும் அபாயத்திலிருக்கிறார்கள்!!


பெந்தெகொஸ்தேயின் நாளில், அநேகர் தங்கள் பாவங்களினிமித்தம் உணர்வடைந்தபோது, பேதுரு அவர்களை நோக்கி, “நீங்கள் மனந்திரும்பி ஞானஸ்நானம் பெறுங்கள்” எனக்கூறினார். இக்குறிப்பு இதோடு நின்று விடாமல், ".....அவனுடைய வார்த்தையைச் சந்தோஷமாய் ஏற்றுக் கொண்டவர்கள் ஞானஸ்நானம் பெற்றார்கள்” (அப்.2:38,41) எனக்கூறி நிற்பதைக் கவனியுங்கள். எனவே யாரெல்லாம் மனந்திரும்பி தேவனுடைய வார்த்தைகளை முழு இருதயமாய் ஏற்றுக்கொள்ளுவதற்கு ஆயத்தமாயிருந்தார்களோ அவர்கள் மாத்திரமே ஞானஸ்நானம் பெற்றார்கள் என்பது தெள்ளத்தெளிவாக உள்ளது.


இதே அடிப்படையில்தான் அப்போஸ்தலர் நடபடிகளில் குறிப்பிடப்பட்டுள்ள ஒவ்வொரு நிகழ்ச்சியும் நிகழ்ந்துள்ளது.ஞானஸ்நானத்தின் பொருள் யாது? :


ரோமர் 6:1-7 வசனங்கள் ஞானஸ்நானத்தின் பொருளை மிகத் தெளிவாக விளக்குகிறது. அவ்வசனங்களில், நம்முடைய பழைய மனுஷன் அவரோடே கூட சிலுவையில் அறையப்பட்டதென்றும்; ஞானஸ் நானத்தினாலே கிறிஸ்துவுடனேகூட அடக்கம்பண்ணப்பட்டோம் என்றும் வாசிக்கிறோம். நாம் மனந்திரும்பாத நாட்களில், நம்மோடுகூட நாம் வைத்திருந்த ‘பாவம் செய்ய விரும்பும்' ஓர் மனமே பழைய மனுஷனாகும்! இப்போது இந்த பழைய மனிதன் கிறிஸ்துவுடனேகூட சிலுவையிலறையப்பட்டுவிட்டான்! (ரோமர் 6:6).


இந்த சத்தியத்தை நாம் நடைமுறையில் ஜீவிப்பதற்கு முன்பாக, இச்சத்தியத்தை முதலாவது, கண்டிப்பாக புரிந்துகொள்ள வேண்டும் என்ற நிர்ப்பந்தம் இல்லை. தேவன் சொன்னதை நாம் அப்படியே விசுவாசித்தால் போதும்! கிறிஸ்து நமக்காக கல்வாரி சிலுவையில் அறையப்பட்டார் என தேவ வார்த்தை கூறியதை நாம் அதி நிச்சயமாய் விசுவாசித்திருக்கிறோம். இதைப்போலவே, நம் பழைய மனுஷனும் கிறிஸ்துவோடுகூட சிலுவையில் அறையப்பட்டது எனக்கூறும் தேவனுடைய வார்த்தையையும் நாம் அப்படியே விசுவாசித்திட வேண்டும்! இந்த இரு சத்தியங்களையும் விசுவாசத்தினாலேயே ஏற்றுக்கொள்ள முடியும்!!


பழைய மனுஷனும்; மாம்சமும்; ஒன்று அல்ல. சகல பொல்லாத இச்சைகளையும் தனக்குள் வைத்திருக்கும் பண்டகசாலையே (Store House) மாம்சமாகும்! இப்படிப்பட்ட மாம்சம் தேவசித்தத்தை சதா எதிர்த்தே நிற்கிறது. இருப்பினும், இக்கேடான மாம்சத்தை நம்முடைய மரணநாள் வரை நம்மோடுகூட நாம் சுமந்தே வரவேண்டியுள்ளது!!


நம் வீட்டிற்குள் நுழைய முயலும் ஓர் திருடர்களின் கும்பலுக்கே நம் மாம்சத்தை ஒப்பிடலாம்! நம் வீட்டிற்குள் இருக்கும் பழைய மனுஷனை ஓர் உண்மையற்ற வேலைக்காரனுக்கு ஒப்பிடலாம்! இந்த உண்மையற்ற வேலைக்காரன் (பழைய மனுஷன்) இது நாள் வரை நமக்குச் செய்ததெல்லாம், “திருடர்கள் உள்ளே நுழைவதற்குத் தொடர்ச்சியாக கதவுகளைத் திறந்துவிட்டான்!" என்ற கேடான செயலே ஆகும். ஆனால் இப்போது, ஓர் விந்தையின் நற்செய்தி கேளீர்!! இத்தீமையான உண்மையற்ற வேலைக்காரன் இப்பொழுது கொல்லப்பட்டு விட்டான். திருடர்கள்......? அவர்கள் இன்னமும் திடகாத்திரமாகவே நம்மைச்சுற்றி வந்து கொண்டே தான் இருக்கிறார்கள்! ஆனால் ‘புதிய மனுஷன்' என அழைக்கப்படும் ஓர் புது வேலைக்காரனை இப்போது நாம் பெற்றிருக்கிறோம். இப்புதிய வேலைக்காரன் உண்மையுள்ளவன்! உள்ளே நுழைய விரும்பும் திருடர்களுக்கு எதிராக கதவைப்

பூட்டுவதற்கே இப்புதிய மனுஷன் வாஞ்சையோடு நிற்கிறான்!!


நம் ஞானஸ்நானத்தின் மூலமாக, பாவம் செய்ய விரும்பும் பழைய மனுஷனின் மரணத்தையும் அவனுடைய அடக்கத்தையும் சாட்சி பகர்ந்து, இப்போது கிறிஸ்துவோடு கூட உயிர்த்தெழுந்து “புதிதான ஜீவனுள்ளவர்களாய் நடந்துகொள்ளுவோம்!” என்றே கெம்பீரிக்கிறோம் (ரோமர்.6:4).


நோவாவின் நாட்களில் ஏற்பட்ட ஜலப்பிரளயம், ஞானஸ்நானத்தின் ஓர் மாதிரி எனக் கூறப்பட்டுள்ளது (1பேதுரு 3:20,21). அந்த ஜலப்பிரளயத்தின் மூலமாய் தேவன் முழு உலகத்தையும் அழித்தார். ஓர் பேழையின் மூலமாக நோவா இந்த ஜலப்பிரளயத்தைக் கடந்து அதிலிருந்து ஓர் புதிய உலகத்திற்குள் பிரவேசித்தான்! முன்பிருந்த பழைய உலகமும் அதிலிருந்த யாவும் ஜலப்பிரளயத்தினால் புதையுண்டு போயின!! இதைத்தான் நாமும் ஞானஸ்நானத்தின் மூலம் சாட்சி பகருகிறோம். இந்த உலகத்தோடும், உலக நாகரீகங்களோடும், உலக நண்பர்களோடும் ..... நாம் கொண்டிருந்த உறவுயாவும் இப்போது துண்டிக்கப்பட்டு, தண்ணீரினூடாய் கடந்து ஓர் புதிய உலகத்திற்குள் பிரவேசிக்கிறோம் என்பதே அந்த சாட்சி!!ஞானஸ்நானம் எடுக்கவேண்டிய முறை:


இப்போது நமக்கு, “நாம் எப்படி ஞானஸ்நானம் எடுக்க வேண்டும்?" என்ற கேள்வி எழக்கூடும்.


"BAPTISM" (ஞானஸ்நானம்) என்ற வார்த்தை ஓர் ஆங்கில வார்த்தை அல்ல. புதிய ஏற்பாடு முதன்முதலாக கிரேக்க மொழியில்தான் எழுதப்பட்டது. கிரேக்க மொழியான “BAPTO” என்ற வார்தையைத் தழுவித்தான் “BAPTISM” (ஞானஸ்நானம்) என்ற ஆங்கில வார்த்தை உருவானது. BAPTO என்ற கிரேக்க வார்த்தையின் பொருள் யாதெனில் 'ஓர் திரவத்தால் முழுவதும் மூடுவது' அல்லது மூழ்க வைப்பது' என்ற பொருளேயாகும்! ஞானஸ்நானத்திற்குரிய சரியான பொருளை ஆதி அப்போஸ்தலர்கள், “தண்ணீரில் மூழ்கவைப்பது” என தெளிவாக அறிந்திருந்தார்கள். இதற்கு மாறாக, ஒருவருடைய தலையில் ‘தண்ணீரைத் தெளிப்பது’ ஞானஸ்நானம் அல்லவே அல்ல!!


எத்தியோப்பிய ராஜஸ்திரீயின் மந்திரிக்கு பிலிப்பு ஞானஸ்நானம் கொடுத்ததை, “இருவரும் தண்ணீரில் இறங்கினார்கள்.... பின்பு அவர்கள் தண்ணீரிலிருந்து கரையேறினார்கள்” (அப்.8:38, 39) என தேவ வசனம் குறிப்பிடுகிறது! இயேசுவின் ஞானஸ்நானத்திலும் இதைப் போலவே, “அவர் ஜலத்திலிருந்து கரையேறினார்....'' என்ற அதே வசனம் குறிப்பிடப்பட்டுள்ளது!! (மாற்கு.1:10).


தண்ணீரில் மூழ்க வைத்தே புதிய ஏற்பாட்டில் எப்போதும் ஞானஸ்நானம் தரப்பட்டது. ஓர் அடக்கத்தை (Burial) சுட்டிக் காட்டுவதற்காகவே ஞானஸ்நானம் இருப்பதால், 'தண்ணீரில் மூழ்க வைப்பதே' அதை நிரூபிக்கும் சரியான செயல்முறையாகும். எப்படியெனில், மரித்த ஒருவன் மீது கொஞ்சம் மண்ணை அவன் தலையில் தூவி நாம் அடக்கம் செய்வதில்லையே! மரித்த மனுஷனை ஆழமான பூமிக்குள் கிடத்தியே நாம் புதைக்கிறோம்!!


ஆகவே, இனியும் பாவஞ்செய்ய விரும்பாமல் -- யாரெல்லாம் தங்கள் பழைய மனிதனுக்கு செத்திருக்கிறார்களோ அவர்கள் மாத்திரமே ஞானஸ்நானத்திற்குத் தகுதியுள்ளவர்கள் என்பது நமக்குத் தெளிவாகிறது. ஆம், மரித்தவர்கள் மாத்திரமே அடக்கம் பண்ணப்பட வேண்டும்! இன்னமும் சாகாத ஒரு மனிதனைப் புதைப்பதோ ஓர் 'கிரிமினல் குற்றமாகும்!!திரித்துவ நாமத்தினால் ஞானஸ்நானம் பெறுதல்:


மத்தேயு 28:20-ம் வசனத்தில், “பிதா குமாரன் பரிசுத்த ஆவியின் நாமத்தினாலே" ஞானஸ்நானங் கொடுக்கவேண்டும் என இயேசு நமக்கு கட்டளையிட்டிருக்கிறார். இங்கே சொல்லப்பட்ட நாமம் 'ஒருமையில் தான்' (Singular) கூறப்பட்டுள்ளது. ஏனெனில் தேவன் ஒருவரே! இவ்வாறு தேவன் ஒருவராக இருந்தாலும், அவர் ஒருவருக்கொருவர் மாறுபட்ட மூன்று ஆள்த்துவத்தில் இருக்கிறார் என்பதையே இயேசு இவ்வசனத்தின் மூலம் வெளிப்படுத்தினார்.


நம்முடைய பாவங்களுக்காக பிதா மரிக்கவில்லை! பரிசுத்தாவியானவரும் மரிக்கவில்லை!! குமாரனே மரித்தார்!! இயேசு பரத்திற்கு ஏறிச்சென்றபோது பரிசுத்தாவியின் வலதுபாரிசத்தில் அல்ல ..... பிதாவின் வலதுபாரிசத்திலேயே அமர்ந்தார். இதைப்போல தன் சீஷர்களுக்கு உதவிபுரியும் தேற்றரவாளனாக பிதாவை அல்ல.... பரிசுத்த ஆவியானவரையே ஆண்டவர் இயேசு அனுப்பினார்! இவ்வித விளக்கம் மிகச் சாதாரணமாகத் தென்படலாம். ஆனால் தேவத்துவத்தில் (God Head) உள்ள மூன்று ஆள்த்துவத்தையும், அவர்கள் நம் மீட்பிற்காக செயல்படும் வித்தியாசமான ஊழியங்களையும் குறித்து குழப்பமடையாமலிருப்பதற்கு, தேவனைக் குறித்த மேற்குறிப்பிட்ட ஓர் ஆரம்ப விளக்கம் மிகமிக அவசியமே ஆகும்!


அப்போஸ்தலர் நடபடிகளில், ஜனங்களுக்கு அப்போஸ்தலர்கள் 'இயேசுகிறிஸ்துவின் நாமத்தினால்' ஞானஸ்நானங்கொடுத்தார்கள் என திரும்பத் திரும்ப வாசிக்கிறோம் (அப். 2:38....) இவர்களின் செயல் மத்தேயு.28: 20-ல் இயேசு கொடுத்த கட்டளைக்கு எங்ஙனம் பொருந்தும்?


வெளிப்படையாகவே ஒன்றுக்கொன்று முரணான இரண்டு குறிப்புகளை நாம் வேதவாக்கியங்களில் கண்டால், அவைகளை ஆழ்ந்து ஆராயும் போது முரண்பாடாகத் தோன்றிய இரு குறிப்புகளும் “ஒரே உண்மைதான்” என்பதைக் கண்டுகொள்ள முடிகிறது!


இப்போது கவனியுங்கள், “பிதா குமாரன் பரிசுத்தாவியின் நாமம்" புறஜாதியாருக்கு ஒத்த ஓர் திரித்துவமல்ல என்பதைத் தெளிவுபடுத்துவதற்காகவே அப்போஸ்தலர்கள், குமாரனை இயேசுகிறிஸ்து என சுட்டிக் காட்டினார்கள். இதனிமித்தமே அவர்கள் ஜனங்களுக்கு “பிதா, குமாரனாகிய கர்த்தராகிய இயேசுகிறிஸ்து, பரிசுத்த ஆவியின்” நாமத்தினால் ஞானஸ்நானம் கொடுத்தார்கள். இதைத்தான் “இயேசு கிறிஸ்துவின் நாமத்தில் (குமாரன்) ஞானஸ்நானம்” என சுட்டிக்காட்டி கூறப்பட்டுள்ளது!விசுவாசத்திற்கு கீழ்படிதல்:


ஓர் சீஷனுடைய வாழ்க்கையில் ஞானஸ்நானமே கீழ்ப்படிதலின் முதல்படியாய் இருக்கிறது. இக்கீழ்படிதலில் ஆரம்பிக்கும் இந்த சீஷனே..... தொடர்ந்து தன் ஜீவிய காலமெல்லாம் கீழ்ப்படியும் வாழ்விற்குள் பிரவேசிக்கிறான். மேலும் இவ்வித கீழ்ப்படிதல் காரண யுக்திக்கு (reason) உட்பட்டதாயில்லாமல் விசுவாசத்திற்குட்பட்டு “விசுவாசத்திற்கு கீழ்படிதலாகவே இருக்க” வேண்டும்!


இயேசு தன் காரண யுக்தியை சார்ந்திருப்பாரென்றால், தான் ஞானஸ்நானம் எடுக்கும் பொருட்டு யோவான்ஸ்நானகனிடம் ஒருபோதும் சென்றிருக்கமாட்டார். ஏனெனில் அவர் ஏன் ஞானஸ்நானம் எடுக்கத் தேவையில்லை என்பதற்கான வாதங்களை, குறிப்பாக “அவர் ஒருபோதும் பாவம் செய்யாதிருந்ததை” காரண யுக்தி ஒன்றன்பின் ஒன்றாய் இயேசுவுக்கு எடுத்துக்காட்டியிருக்கக் கூடும்! இயேசுவே ஞானஸ்நானம் எடுக்க வேண்டிய அவசியமென்ன? என்பதை யோவான்ஸ்நானகனால்கூட புரிந்து கொள்ள முடியவில்லை. ஆனால் இயேசுவோ தன் காரண யுக்தியின் வாதங்களையெல்லாம் புறம்பே தள்ளிவிட்டு, பரிசுத்தாவியின் சத்தத்திற்கே கீழ்ப்படிந்து விட தீவிரம் கொண்டார் (மத்.3:15).


“உன் சுயபுத்தியின்மேல் சாயாமல், உன் முழு இருதயத்தோடும் கர்த்தரில் நம்பிக்கையாயிரு” என நீதி.3:5 எடுத்துரைக்கிறது. ஆம், நம்முடைய சுய புத்தியின் காரணங்களே விசுவாசத்திற்கு முதல் எதிரியாகும்! ஏனென்றால் “மனுஷீக காரணங்கள்” ஒருக்காலும் ஆவிக்குரிய சத்தியங் களைப் புரிந்து கொள்ளாது!!


நாம் ஞானஸ்நானம் எடுக்கும் பொழுது தண்ணீருக்குள் அமிழ்த்தப்பட வேண்டிய நம் சரீரத்தின் கடைசி உறுப்பு யாதெனில், தலையே ஆகும்! இந்த உண்மை நமக்கு ஓர் செய்தியை நினைவுறுத்துகிறதல்லவா? ஆம், நம் காரணயுக்தியை ஆட்டிப்படைக்கும் தலைமையாகிய ‘தலையை' மரணத்திற்குள்ளாக்குவதே மிகவும் கடினமாய் இருக்கிறது. ஆதாமின் பிள்ளைகள், தங்கள் சுய புத்தியின் காரணங்கள் என்ன சொல்லுகிறதோ அதைக் கேட்டு ஜீவிக்கிறார்கள்! இவ்விதம் நம் சுய புத்தியின்மேல் சார்ந்து வாழும் ஜீவியத்தின் பாதைக்கு மரித்துவிட்டோம் என்பதை, ஞானஸ்நானத்தின் மூலமாகவே நாம் சாட்சி கொடுக்கிறோம். இப்போதோ நாம் தேவனுடைய வாயிலிருந்து புறப்படும் ஒவ்வொரு வார்த்தையின் மீதும் கொள்ளும் விசுவாசத்தினால் பிழைக்கிறோம்! என்பதையும் ஞானஸ்நானத்தின் மூலம் பிரகடனம் செய்கிறோம் (மத்தேயு 4:4; ரோமர் 1:17).


ஞானஸ்நானமா....? அதெல்லாம் அற்பமான காரியம்! என கிறிஸ்தவர்களில் ஒரு கூட்டத்தார் எண்ணுகிறார்கள். “இதைப் போலவே" நாகமானும் முதலில் எலியாவின் கட்டளையை அற்பமாக எண்ணினான்! தன்னுடைய குஷ்டரோகம் சுகமாவதற்கு யோர்தான் நதியில் ஏழுதரம் மூழ்கும்படி கூறிய எலியாவின் கட்டளையை நாகமான் உதாசினம் செய்ய முற்பட்டான். ஆனால், பின்பு அவன் அக்கட்டளைக்கு அப்படியே கீழ்படிந்தவுடன் ஆச்சரியமான சுகம் பெற்றான்! (2ராஜா.5:10-14). இதுபோன்ற சின்னச் சின்ன காரியங்களில்தான் தேவன் நம்முடைய கீழ்படிதலை சோதித்தறிகிறார்.


தேவனுக்குக் கீழ்படிவதற்கு நாம் ஒருபோதும் தாமதம் செய்யவே கூடாது. உங்களுடைய பழைய மனிதன் உண்மையாகவே மரித்து விட்டானென்றால், அப்பழைய மனிதன் உடனடியாக அடக்கம் செய்யப்பட வேண்டும். மரித்த மனிதனை அடக்கம் செய்யாதிருப்பது ஓர் குற்றமல்லவா! இப்போது உங்களை நோக்கி தீவிரித்து வரும் தேவ வார்த்தைக்கு சற்றே செவிகொடுங்கள், “இப்பொழுது நீ தாமதிக்கிறதென்ன? நீ எழுந்து ஞானஸ்நானம் பெற்றுக்கொள்!" (அப்.22:16).

அதிகாரம் 6
பரிசுத்தாவியின் அபிஷேகம்

விசுவாசிகளாகிய நமக்கு அடிப்படைப் பூர்வமாக இரண்டு தேவைகள் உள்ளன. முதல் தேவை, நம் கடந்த காலத்திற்குரியதாகும். அதாவது, நம்முடைய பாவங்களைக் குறித்த குற்றவுணர்வு நம்மை விட்டு நீங்குவதேயாகும். இரண்டாவது தேவை, நம் எதிர்காலத்திற்குரியதாகும். அதாவது, இனி வாழும் வாழ்க்கையில் தேவனைப் பிரியப்படுத்தி ஜீவிப்பதேயாகும்! நம்முடைய முதல் தேவை கிறிஸ்துவின் மரணத்தின் மூலமாய் பூர்த்தி செய்யப்பட்டுவிட்டது. இப்போது நம்முடைய இரண்டாவது தேவையை பூர்த்தி செய்யவே தேவன் நமக்கு பரிசுத்தாவியின் வல்லமையை அருளுகின்றார்!!ஜீவியமானாலும் ஊழியமானாலும் வல்லமை அவசியம்:


நம்முடைய முதல் தேவையை நாம் ஒருக்காலும் நாமாகவே பூர்த்தி செய்து விட முடியாது. அதை தேவன்தான் நிறைவேற்ற வேண்டும். இதைப் போலவேதான் இரண்டாவது தேவையும்! நாம் தேவனைப் பிரியப்படுத்தி ஜீவிப்பதும் அல்லது தேவ சித்தம் அத்தனையையும் நிறைவேற்றுவதுமாகிய ஓர் இனிய வாழ்க்கையை நாம் சொந்த பெலத்தினால் ஜீவித்திட முடியாது! 'தங்களால் முடியாது' என்பதை ஒருசிலர்தான் தங்கள் கிறிஸ்தவ ஜீவியத்தின் ஆரம்பத்திலேயே ஞானமாய் ஒத்துக்கொண்டு தேவனுடைய வல்லமையை தேடத் துவங்குகிறார்கள். ஆனால் வேறுபலர், தாங்களாகவே முயற்சிப்பதும்.... தோல்வி அடைவதுமாகப்.... பல வருடங்களான தங்கள் கரடுமுரடான ஜீவியத்திற்குப் பிறகுதான், வல்லமையைப் பெறுவதற்கு தேவனிடம் திரும்புகிறார்கள். துரதிருஷ்டவசமாக இன்னும் சிலர் திரும்பத் திரும்ப தாங்களாகவே முயன்று.... தோல்வியுற்றப் பிறகு.... முடிவில், ஜெய வாழ்க்கைக்கு ‘ராஜினாமா' கொடுத்துவிட்டு தோல்வியின் ஜீவியத்திற்குள் பிரவேசித்துவிடுகிறார்கள்!! இவர்கள், “ஜெய ஜீவியமா? அது இப்பூலோக வாழ்க்கையில் சாத்திய மில்லை!” எனவும் அவிசுவாச வார்த்தைகளைக் கூறி பின்மாறி விடுகிறார்கள்.


இதைப்போலவே நாம் கர்த்தருக்கு ஊழியஞ்செய்வதற்கும், அவருக்கென வல்ல சாட்சியாய் விளங்குவதற்கும் பரிசுத்தாவியின் அபிஷேகம் மிகவும் அவசியமாயிருக்கிறது. இன்று அநேக விசுவாசிகள், மனந்திரும்பியவுடன், ஆண்டவருக்கென சாட்சிபகர வேண்டுமென்பதை உணருகிறார்கள். ஆனால் பெரும்பாலோர் இச்சமயத்தில் தங்கள் நாவு கட்டப்பட்டு சாட்சி பகருவதற்கு வல்லமையற்று இருப்பதையும் காண்கிறார்கள். இவ்வாறிருப்பதை சிலர், “தங்களின் துரதிருஷ்டமான குணாதிசயம்” என எண்ணிக் கொண்டு இனியும் தாங்கள் கிறிஸ்துவுக்கு வல்லமையுள்ள சாட்சியாய் விளங்க முடியுமா? என எல்லா நம்பிக்கையையும் இழந்துவிடுகிறார்கள்! இவர்களைத் தவிர, மிகவும் கொஞ்சமான வாஞ்சையுள்ள கூட்டத்தார், தேவன் தங்களுக்கு பரிசுத்தாவியின் வல்லமையைத் தருவதாக வாக்களித்திருக்கிறார் என்பதைக் கண்டறிகிறார்கள். இவர்கள்தான், முழு மூச்சாய் தேவனைத் தேடி இந்த வல்லமையை அவரிடமிருந்து பெற்றுக்கொள்ளுகிறார்கள்! இப்போது இவர்கள் மிகுந்த “தைரியத்தினால்" நிரம்பிவிடுகிறார்கள்!! மேலும் கிறிஸ்துவுக்கென வெட்கமின்றி அனல் கொண்ட வல்ல சாட்சிகளாயிருப்பதற்கு, இயற்கைக்கு அப்பாற்பட்ட தெய்வீக வரங்களையும் தேவனிடம் கேட்டு பெற்றுக் கொள்ளுகிறார்கள்.


நாம் ஆவியினால் பிறப்பதென்பது வேறு! அப்படித்தான் நாம் தேவனுடைய பிள்ளைகளாய் மாறினோம். ஆனால், நாம் பரிசுத்த ஆவிக்குள் மூழ்கி அபிஷேகம் பெறுவதென்பது முற்றிலும் வேறு!! இவ்விதமாகவே, நாம் எப்படி வாழ தேவன் விரும்புகிறாரோ அதற்குரிய வல்லமையையும், நாம் என்ன ஊழியம் செய்ய தேவன் விரும்புகிறாரோ அதற்குரிய வல்லமையையும், தரித்துக் கொள்ளுகிறோம்!!பரிசுத்தாவியின் அபிஷேகம் புதிய உடன்படிக்கையில் நம் சுவீகாரம்!


பழைய உடன்படிக்கையில், தேவனுடைய குறிப்பிட்ட சில பணிகளை நிறைவேற்றும்படி ஒரு சிலர் மீது தான் பரிசுத்தாவி வந்திறங்கியது! ஆனால் புதிய உடன்படிக்கையிலோ, எல்லோரும் பரிசுத்தாவியைப் பெற்றுக்கொள்ள முடியும்!! இயேசுவின் மகிமையை நமக்குக் காட்டி அவருடைய சாயலுக்கொப்பாய் நம்மை மறுரூபப்படுத்தும்படியே பரிசுத்தாவியானவர் இப்போது தந்தருளப்பட்டிருக்கிறார்! இயேசு நிறைவேற்றப்போகும் இரண்டு ஊழியங்களை யோவான்ஸ்நானகன் சுட்டிக்காட்டினார். 1) பாவத்தை சுமந்து தீர்ப்பதும் 2)தம் ஜனங்களைப் பரிசுத்தாவியினால் அபிஷேகிப்பதுமே அவ்விரு ஊழியங்களாகும் (யோவான்.1:29,33). நாம் இவ்விரு ஊழியங்களையுமே நம் ஜீவியத்தில் அனுபவமாக்கியிருக்க வேண்டும்!


புதிய ஏற்பாட்டின் முதல் வாக்குத்தத்தம் யாதெனில், “அவர் தமது ஜனங்களின் பாவங்களை நீக்கி அவர்களை இரட்சிப்பார்” (மத்தேயு.1:21) என்பதுதான்! புதிய ஏற்பாட்டின் இரண்டாவது வாக்குத்தத்தம் யாதெனில், “அவர் பரிசுத்த ஆவியினால் உங்களுக்கு ஞானஸ்நானம் கொடுப்பார்" (மத்தேயு.3:11) என்பதுதான்!! புதிய ஏற்பாடு இந்த இரு வாக்குத்தத்தங்களோடு துவங்கியிருப்பது விசேஷமானதாகும்! இவைகள் “ஓர் புதிய பொலிவூட்டும் காலத்திற்கு” நல்ல துவக்கமாகும். ஆம், தேவன் மனிதனோடு ஈடுபாடு கொள்ளும் - புதிய உடன்படிக்கை! தேவனுடைய பிள்ளைகளாயிருக்கும் நமக்கு 1) நம் பாவங்களிலிருந்து இரட்சிக்கப்படுவதும் 2) பரிசுத்தாவியினால் அபிஷேகம் பெறுவதும், தேவன் நமக்களித்த இரண்டு சுவீகார சுதந்திரமாகும்! இந்த நம்முடைய சுவீகார சுதந்திரத்தைப் பாதி மாத்திரமல்ல முழுமையாகவே நமக்குத் தந்திட தேவன் வாஞ்சிக்கிறார்!


புதிய ஏற்பாட்டின் முதல் ஐந்து புத்தகங்கள், பரிசுத்தாவியின் அபிஷேகத்தின் வாக்குதத்தத்தோடு துவங்கியிருப்பதைப் பாருங்கள் (மத்.3:11; மாற்கு 1:8; லூக்.3:16; யோவான்.1:33; அப்.1:5). இவ்வாறெல்லாமிருந்தும் இப்பொன்னான வாக்குத்தத்தத்தை இன்று அநேகக் கிறிஸ்தவர்கள் தங்களுக்கென சுதந்தரிக்காமல் 'உதாசினம்' செய்திருப்பது துயரமே ஆகும்!ஜீவத்தண்ணீர் பாய்ந்தோடும் நதிகள்:


தேவனுடைய சிங்காசனத்திலிருந்து பூமியை நோக்கிப் பாய்ந்து வரும் ஓர் நதியாகவே புதிய ஏற்பாட்டின் பரிசுத்தாவியானவர் சித்தரிக்கப்பட்டுள்ளார் (வெளி. 22:1; அப். 2:33). நாம் பரிசுத்தாவியினால் அபிஷேகம் பெறுவதென்பது, இம்மாபெரும் நீர்வீழ்ச்சியின் கீழ்வந்து மூழ்கி நனைந்திடும் அனுபவமேயாகும்! தாகமாயிருக்கிற யாவரும் தன்னிடத்தில் வந்து பரிசுத்தாவியைப் பெற்றுக்கொள்ளும்படி இயேசு கூறினார். அப்போது, அவனுடைய உள்ளத்திலிருந்து ஜீவத்தண்ணீருள்ள நதிகள் ஓடும் என்றே இயேசு கூறினார் (யோவான்.7:37,38).


ஓர் சராசரியான வாழ்க்கை வாழும் விசுவாசிகளின் அனுபவம் “அடி-குழாய்” (hand-pump) அனுபவத்திற்கொப்பாகவே இருக்கிறது. அதாவது, ஓர் கடு போராட்டமான வாழ்க்கையை வாழ்ந்து. அடி-குழாயைப்போல அடித்து.... அடித்து ஆழமான தங்கள் வறண்ட இருதயத்திலிருந்து ஒரு சில துளி ஆசீர்வாதங்களையே பெறுகிறார்கள். இதுபோன்ற நிலையில் நாம் தேங்கி இருக்கவேண்டிய அவசியமில்லையே! நம்முடைய வறட்சி, தேவனை நோக்கி உந்தித் தள்ளி இருக்குமென்றால், நம் ஜீவியத்தில் காரியம் நன்றாய் நடந்திருக்குமே!! நம்மோடு தொடர்பு கொள்ளும் யாவருக்கும், நம்மிலிருந்து ஊற்றெடுத்துப் பாயும் “ஆசீர்வாத நதிகள்” பாய்ந்தோட வேண்டும் என்பதே நம் வாழ்க்கையைக் குறித்த தேவனுடைய சித்தமாகும்.


இதை அடைவதற்கான முதல்படி நம்முடைய தேவையை நாம் உணருவதேயாகும். எனவே நாம் தேவனைக் கிட்டிச் சேர்ந்து, “தேவா! என்னில் ஆசீர்வாத நதிகள் பொங்கி ஓடவில்லையே!!” என நேர்மை உள்ளத்தோடு நம் தேவையை அறிக்கைச் செய்வதே சாலச் சிறந்ததாகும். 'தேவையை' உணர்வதாகிய இந்த முதல் படியில் நீங்கள் அடியெடுத்து வைத்துவிட்டால், நீங்கள் கேட்பது எதுவோ அதைத் தேவன் உங்களுக்குத் தந்திடுவார் என்பதை நூற்றுக்கு நூறு நிச்சயித்து விடலாம்!! எனவே, நாம் பரிசுத்தாவியினால் அபிஷேகிக்கப்படுவதற்கு தேவையாயிருப்பதெல்லாம் 1) ஓர் தவிக்கும் தாகமும் 2) விசுவாசமுமே ஆகும். அதாவது, நம் ஜீவியத்தில் தேவனை மகிமைப்படுத்த

வேண்டுமே என்ற தீராத வாஞ்சையும், தான் வாக்குத்தத்தம் செய்ததை தேவன்

நமக்கு நிச்சயமாய்த் தந்துவிடுவார் என்ற திட நம்பிக்கையுமே (விசுவாசம்)

ஆகும்! இனி நீங்கள் என்ன செய்யப் போகிறீர்கள்? இவ்வித தவிக்கும்

தாகத்தோடும் விசுவாசத்தோடும் தேவனைக் கிட்டிச் சேர்ந்து அவரின்

ஒப்பில்லா வல்லமையை வேண்டிக் கேளுங்கள்! இந்த நல்ல தேவன் நம்

வேண்டுதலை ஒருக்காலும் புறக்கணிக்கவே மாட்டார்!!வல்லமையினால் உடுத்துவிக்கப்படுதல்:


ஆதி அப்போஸ்தலர்கள், தங்களுக்குரிய எல்லாவற்றையும் விட்டு விட்டுத்தான் இயேசுவைப் பின்பற்றினார்கள். இருப்பினும் அவர்கள் புறப்பட்டுப்போய், தேவன் அவர்களுக்கு நியமித்திருந்த ஊழியத்தை நிறைவேற்றுவதற்கு முன்பாகப் பரிசுத்த ஆவியினால் நிரப்பப்படும் வரை காத்திருக்க வேண்டியதாயிருந்தது. இயேசுவேகூட, ஜனங்களுக்கு ஊழியம் செய்ய ஆரம்பிப்பதற்கு முன்பாகப் பரிசுத்தாவியினாலும் வல்லமையினாலும் அபிஷேகிக்கப்பட வேண்டியது அவசியமாயிருந்தது! (அப்.10:38). இந்த அபிஷேகம் அவருக்கே 'தேவையாயிருந்தால்' நமக்கு எவ்வளவு தேவையாயிருக்க வேண்டும்!!


இயேசு தன் அப்போஸ்தலரை நோக்கி, “நீங்கள் உன்னதத்திலிருந்து வரும் பெலனால் தரிப்பிக்கப்படும்வரை (உடுத்துவிக்கப்படும் வரை) எருசலேம் நகரில் காத்திருங்கள்” எனக் கட்டளையிட்டார் (லூக்கா. 24:49), அதேபோல் அவர் பரத்திற்கு ஏறிச் செல்லுவதற்கு முன்பாகவும், “பரிசுத்த ஆவி உங்களிடத்தில் வரும் போது நீங்கள் பெலனடைவீர்கள்” என மீண்டுமாய் அவர்களுக்கு வலியுறுத்திக்கூறினார் (அப்.1:8). வாக்குதத்தத்தின்படியே, பெந்தெகொஸ்தே என்னும் நாளில், அவர்கள் மீது பரிசுத்த ஆவி ஊற்றப்பட்டது! அங்கு குழுமியிருந்த 'கோழையான' புருஷர்கள் உடனடியாகத் 'தைரியத்தைப் பெற்று' ஆண்டவருக்கென அக்கினிப்பிழம்பான சாட்சிகளாய் மறுரூபமடைந்தார்கள்! (அப்.2:1-4). ஆம், அவர்கள் பெறுவார்கள் என எந்த வல்லமையைக் குறிப்பிட்டுக் கூறினாரோ, அதே வல்லமையை அன்று அவர்கள் பெற்றுவிட்டார்கள்!!


இன்று நாம் ஓர் மாசற்ற கிறிஸ்தவ வாழ்க்கை வாழ்வதற்குத் தேவையாயிருப்பதெல்லாம் வெறும் உபதேசங்கள் மாத்திரமல்ல... நம் ஜீவியத்தில் தேவ வல்லமையே தேவையாயிருக்கிறது! பரிசுத்தாவியின் அபிஷேகம் நாம் தேவ பக்தியான வாழ்க்கை வாழ்வதற்கான வல்லமையையும், அவருடைய ஊழியத்தைச் செய்வதற்கான வல்லமையையும் நமக்குச் சேர்த்தே வழங்குகிறது!பரிசுத்த ஆவியின் வெவ்வேறான கிரியைகள்:


வேத வாக்கியங்களில் பரிசுத்த ஆவி “காற்றுக்கு” (The wind) ஒப்பிடப்பட்டே கூறப்பட்டுள்ளது. காற்றானது வெவ்வேறான நேரங்களில் வெவ்வேறான திசைகளில் வீசுகிறது. “ஆவியினால் பிறந்தவனும் அப்படியே இருக்கிறான்” என இயேசு குறிப்பிட்டார் (யோவான்.3:8). ஆகவே, பரிசுத்த ஆவியினால் அபிஷேகிக்கப்படும் விசுவாசிகளின் வெளிப்புறமான அனுபவம் ஒருவருக்கொருவர் நிச்சயம் வேறுபட்டிருக்கும், இருப்பினும் உட்புறத்தில் வல்லமையினால் நிறைந்து உடுத்துவிக்கப்படுவதே பரிசுத்தாவி அபிஷேகத்தின் மாறாத பிரதானமான சத்தியமாகும்! நாம் கிறிஸ்துவின் சரீரமான சபையை வல்லமையாய் கட்டி தேவனுக்கு ஊழியம் செய்யும் பொருட்டே, பரிசுத்த ஆவியின் மூலம் தேவன் நமக்கு “வல்லமையான வரங்களைத்” தந்திருக்கிறார். நாம் ஒவ்வொருவரும் எந்தெந்த வரங்களைப் பெறவேண்டுமென்பதை அவர்தான் தீர்மானித்து முடிவு செய்கிறார்! அதேபோல “அந்நியபாஷை பேசும் வரத்தையும் தேவன் அளிக்கிறார். நம் சொந்த மனம், நம் தாய்மொழி ஆகிய வரையறைக்குட்படாமல், தேவனிடம் முழுமனதாய் ஜெபிப்பதற்கும், அவரைத் துதிப்பதற்கும் அந்நியபாஷை வரம் வகைசெய்கிறது.!


நீங்கள் இதுநாள்வரை பரிசுத்தாவி அபிஷேகத்தைப் பெறவில்லையா? அப்படியானால் தேவனிடம் விரைந்து கிட்டிச்சேருங்கள்! உங்கள் “பிறப்புரிமையை” உரிமையோடு அவரிடம் கேளுங்கள்!! “பொல்லாதவர்களாகிய நீங்கள் உங்கள் பிள்ளைகளுக்கு நல்ல ஈவுகளைக் கொடுக்க அறிந்திருக்கும்போது, பரம பிதாவானவர் தம்மிடத்தில் வேண்டிக்கொள்ளுகிறவர்களுக்குப் பரிசுத்த ஆவியைக் கொடுப்பது அதிக நிச்சயமல்லவா.... நீங்கள் விண்ணப்பம் பண்ணாமல் இருக்கிறதினாலே, உங்களுக்குச் சித்திக்கிறதுமில்லை (கிடைப்பதுமில்லை)!” (லூக்.11;13; யாக்.4:2) என்றே வேதம் கூறுகிறது.


காரியம் இப்படியாயிருப்பதால், நம் முழு இருதயத்தோடும் தேவனை நோக்கிக் கதறுவோமாக! ஆம், அன்று யாக்கோபு பெனியேலில் தேவனிடம் முறையிட்டது போல, “நீர் என்னை ஆசீர்வதித்தாலொழிய உம்மைப் போகவிடேன்” (ஆதி.32:26) என்ற உறுதியுடன் ஜெபிப்போமாக! தேவனிடம் ஒரு துளியும் பட்சபாதம் என்பது கிடையவே கிடையாது. மற்ற அநேகருக்கு அவர் எதைச் செய்தாரோ அதை இந்த நல்ல ஆண்டவர் உங்களுக்கும் செய்வார்! இன்றும் அவர் “தம்மைத் தேடுகிறவர்களுக்குப் பலனளிக்காமல்" இருப்பதேயில்லை!! (எபிரெயர்.11:6). யாரெல்லாம் தங்கள் ஜீவியத்தில் தேவனை மகிமைப்படுத்த வாஞ்சை கொண்டிருக்கிறார்களோ, அவர்களைத் தன் பரிசுத்தாவியின் சம்பூரணத்தினால் நிறைத்து விடுவதற்கு அவர் பேராவல் கொண்டிருக்கிறார்!!


அதிகாரம் 7
பரிசுத்தமாகுதல்

ஒரு பக்கங்களையுடைய சுவிசேஷ செய்தியின் சாரம், பாவத்தில் பிடிபட்ட ஸ்திரீயிடம் இயேசு கூறிய வார்த்தைகளில் அடங்கியிருக்கிறது: 1)நான் உன்னை ஆக்கினைக்குள்ளாகத்தீர்க்கிறதில்லை 2) இனிப் பாவஞ் செய்யாதே (யோவான் 8:11).


நம் கிறிஸ்தவ ஓட்டத்திற்கு நீதிமானாக்கப்படுதலே (Justification) ஓட்டத்தைத் துவக்கும் இடமாகும். ஆனால், பரிசுத்தமாக்கப்படுதல் (Sanctification) என்ற ஓட்டப்பாதையில்தான் (Track) நாம் இந்த ஓட்டத்தை ஓடி முடிக்கவேண்டும்!! “பரிசுத்தமாகுதல்” என்ற வார்த்தையின் பொருள் யாதெனில் “பிரித்தெடுக்கப்படுதல்” (Set apart) என்பதாகும். நாம் நாளுக்கு நாள் பாவத்திலிருந்தும், உலகத்திலிருந்தும், நம் சுய-ஜீவியத்திலிருந்தும், பிரித்தெடுக்கப்படும் கிரியையே பரிசுத்தமாகுதலாகும். ஓர் ஓட்டப்பந்தய வீரன், ஓட்டப்பந்தயத்தின் துவக்கும் எல்லைக்கு வந்து நிற்பதின் நோக்கம் யாதெனில், பந்தயப் பாதையில் ஓடி பங்கு பெறுவதற்காகத்தான். இதைப்போலவே, நாம் கிறிஸ்துவை அண்டிக்கொண்டதன் முழு நோக்கமுமே “நாம் பரிசுத்தமாக வேண்டும்” என்பது தான்! பந்தயப்பாதையில் “ஓடும் நோக்கமில்லாமல்” ஓர் பந்தய வீரன் ஓட்டப் பந்தயத்தின் துவக்கும் எல்லையில் மற்றவர்களோடு சேர்ந்து நிற்பானென்றால் - அது மதியீனமாகும்!நம்மைக்குறித்து தேவனுடைய நோக்கம்:


நம்மில் அநேகர் முதலாவது கிறிஸ்துவண்டை சேரும் போது, நமக்கென ஏதேனும் நன்மைகளைப் பெறலாம் என்ற சுயநலமான நோக்கத்தோடுதான் கிட்டிச் சேர்ந்திருக்கிறோம். அந்த நன்மை ஒருவேளை தெய்வீக சுகமாகவோ அல்லது நரக அக்கினியிலிருந்து காக்கப்பட வேண்டும் என்பதாகவோகூட இருக்கலாம். இவ்வாறெல்லாம் நாம் சுயநலமான நோக்கங்களைக் கொண்டிருந்தாலும், தேவன் நம்மை ஏற்றுக் கொள்ளத்தான் செய்தார்! கெட்டகுமாரன் தன் வயிற்றுப்பசியை போக்கத் தான் வீடு திரும்பி வந்தான். அவ்வாறிருந்தும் அவனுடைய தகப்பன் அவனை அளவுகடந்து நேசித்த நேசத்தினிமித்தம், அம்மகனைத் திரும்பவும் மகிழ்வோடு வரவேற்று ஏற்றுக்கொண்டார். ஆம், அவ்வளவாய் நல்லவர் நம் தேவன்!


ஆனால் நாம் பரலோகம் போகவேண்டும் என்ற நோக்கத்தோடு மாத்திரமே நம் கிறிஸ்தவ ஜீவியத்தைத் தொடர்ந்து ஜீவித்துக் கொண்டிருப்போமென்றால், அது உண்மையிலேயே துக்ககரமானதாகும். நம் ஜீவியத்திற்கான தேவனுடைய நோக்கத்தை நாம் அறியத் துவங்கியவுடன், அவைகளை நம் வாழ்க்கையில் முற்றிலும் நிறைவேற்றி முடிப்பதற்கு வாஞ்சை கொண்டவர்களாகவே நாம் இருக்கவேண்டும். எபேசுக் கிறிஸ்தவர்களின் மனக்கண்கள் பிரகாசமாக்கப்பட்டு அவர்கள் “ தேவனுடைய அழைப்பின் நம்பிக்கையைக்” (The hope of His calling) காண வேண்டுமென்றே அவர்களுக்காக பவுல் ஜெபித்தார் (எபேசியர்.1:18).


தேவனுடைய அழைப்பின் நம்பிக்கை யாது? என்பதை ரோமர் 8:29,30 நமக்கு எடுத்தியம்புகிறது. அவ்வசனங்களில் தேவனுடைய அழைப்பைக் கேளுங்கள்: “தம்முடைய குமாரன் அநேக சகோதரருக்குள்ளே முதற்பேறானவராயிருக்கும் பொருட்டு, தேவன் எவர்களை முன்னறிந்தாரோ அவர்களைத் தமது குமாரனுடைய சாயலுக்கொப்பாயிருப்பதற்கு முன் குறித்திருக்கிறார்." இவ்வாறு நாம் இயேசுவின் சாயலுக்கொப்பாய் மறுரூபமாகி, நாம் அவருடைய இளைய சகோதரர்களாய் மாறவேண்டுமென்பதே தேவனுடைய நோக்கமாயிருக்கிறது. இதை நாம் தெளிவாகவே இவ்வசனத்தில் வாசிக்கிறோம். இவ்வாறு நாம் தொடர்ச்சியாக இயேசுவைப்போல் மாறிடும் வளர்ச்சிதான் பரிசுத்தமாகுதலின் முழு நோக்கமுமாகும். ஆம், இது ஓர் கிறிஸ்தவ ஓட்டப்பந்தயமாகும்! நம் எல்லோருக்கும் முன்பாக இந்த ஓட்டப்பந்தயத்தை இயேசு கிறிஸ்துவே முதலாவதாய் ஓடி முடித்தார். இப்போது நம் கண்களை நமக்கு முன்னோடியாய் ஓடிய இயேசுவின்மீது பதித்து நாமும் அதே ஓட்டத்தை ஓடும்படி புத்திசொல்லப்பட்டிருக்கிறோம்! (எபி.12:1-2).பாவத்திற்கு முற்றுப்புள்ளி வைத்தல்:


நாம் அறிந்து பாவம் செய்வதை நிறுத்திவிடுவதே இவ்ஓட்டத்தின் முதல்படியாகும். நியாயப்பிரமாணத்தின் கீழ் “பாவம் செய்வதை நிறுத்தும்படி” (Stop Siming!) எவ்விதப் புத்திமதியும் சொல்லப்படவில்லை. ஆனால் புதிய உடன்படிக்கையிலோ, இரு பக்கங்களையுடைய சுவிசேஷ செய்தியாக 1) ஆக்கினைத்தீர்ப்பிலிருந்து விடுதலை! 2) பாவத்தை விட்டு ஓய்ந்திருத்தல்!! என்ற இயேசுவின் செய்தியை எல்லா அப்போஸ்தலர்களும் அங்கீகரித்தார்கள்.


பவுல் கூறுகையில், “நீங்கள் பாவஞ்செய்யாதீர்கள்” (1 கொரி.15:34) எனவும், யோவான் கூறுகையில், “என் பிள்ளைகளே நீங்கள் பாவஞ் செய்யாதபடிக்கு இவைகளை உங்களுக்கு எழுதுகிறேன்” (1யோவான்.2:1) எனவும், பேதுரு கூறுகையில், “பாவங்களை விட்டு ஓய்ந்திருங்கள்" (1பேதுரு.4:2) எனவும் ஒரே தொனியில் கூறினார்கள்!


பவுல், ரோமர் 5-ம் அதிகாரத்தில் விசுவாசத்தினால் நீதிமானாக்கப்படுதலை விவரித்துக் கூறிய பின்பு, ரோமர் 6-ம் அதிகாரத்தில், “ஆகையால் என்ன சொல்லுவோம்? கிருபை பெருகும்படிக்கு பாவத்திலே நிலை நிற்கலாம் என்று சொல்லுவோமா?” என்று கேள்விக்கணையைத் தொடுக்கின்றார். மீண்டும் 15-ம் வசனத்தில், “இதினாலென்ன? நாம் கிருபைக்குக் கீழ்பட்டிருக்கிறபடியால்

ஒரு தடவைகூட பாவஞ்செய்வது முறையாகுமா?" (ரோமர். 6:15 - எழுத்தின்படியான மூல மொழிபெயர்ப்பு) என மிகவும் அழுத்தமாக வினவுகிறார். மேற்கண்ட இரு வசனங்களின் கேள்விகளுக்கும் “கூடாதே!” என பவுல் ஆணித்தரமாக பதில் உரைத்தார்.


ஆம், இனியும் நாம் அறிந்து ஒரு தடவைகூட பாவம் செய்யவே கூடாது!


இப்போது நீங்கள் கேட்கும் செய்தி ஓர் பாரமான செய்தியாக உங்கள் செவிகளில் தொனிக்கிறதா? தொடாந்து பாவம் செய்ய விரும்புபவர்களுக்கு மாத்திரமே இச்செய்தியோ பாரமானதாகத்தென்படும்! ஆனால் பாவத்தின் அடிமைத்தனத்தில் சிக்கி உழன்று தவிப்பவர்களுக்கு இச்செய்தி மகிழ்வூட்டும் விடுதலையின் செய்தியாகும்!! ஓர் சிறைக்கூண்டில் அடைபட்டிருப்பவன் “நீ விடுதலையாகப் போகிறாய்!" என்ற செய்தியைக் கேட்டு எங்ஙனம் பரவசமடையாமல் இருக்கக்கூடும்? நீங்களே சொல்லுங்கள், சிறையில் கட்டுண்டிருந்த அம்மனிதனுக்கு இச்செய்தி பாரமானதாயிருக்குமா? இல்லை.... அப்படி ஒருக்காலும் இருக்கவே இருக்காது!


“(பாவத்தினால்) சிறைப்பட்டவர்களை விடுதலை செய்யவும்; (சாத்தானால்) நொறுங்கி நசுக்கப்பட்டவர்களை விடுதலையாக்கவுமே” இயேசு அபிஷேகத்தைப் பெற்றார்! என வாசிக்கிறோமே (லூக்கா.4:18). புதிய உடன்படிக்கையின் மகிமையான வாக்குதத்தத்தைக் கேளுங்கள், “நீங்கள் நியாயப்பிரமாணத்திற்கு (பழைய உடன்படிக்கைக்கு) கீழ்ப்பட்டிராமல் கிருபைக்குக் (இயேசு ஸ்தாபித்த புதிய உடன்படிக்கைக்கு ) கீழ்ப்பட்டிருக்கிறபடியால், பாவம் உங்களை மேற்கொள்ளமாட்டாது!” (ரோமர் 6:14), இதுபோன்ற மகிமையான வாழ்க்கையை வாழமுடியும் என நீங்கள் விசுவாசிப்பதே வெற்றியின் ஜீவியத்திற்கு முதல்படியாகும்!!


சோதனையும் பாவமும்:


நாம் சோதிக்கப்படுவதற்கும், பாவஞ்செய்வதற்கும் இடையில் பெருத்த வித்தியாசம் உண்டு.


யாக்கோபு 1:14,15 இவ்வித்தியாசத்தைத் தெளிவாக எடுத்துக் காட்டுகிறது. அவ்வசனம் கூறுவது யாதெனில், "அவனவன் தன் தன்

இச்சையினாலே இழுக்கப்பட்டு, சிக்குண்டு சோதிக்கப்படுகிறான். பின்பு இச்சையானது கர்ப்பந்தரித்து, பாவத்தைப் பிறப்பிக்கும்.” நம் மாம்சத்திலிருக்கும் இச்சையானது கர்ப்பந்தரிக்க அனுமதிக்கப்படுமட்டும், நம் இருதயத்தில் ஒரு போதும் பாவம் பிறந்திட முடியாது! நம் மனதைத் பரிசுத்தமாகுதல் தூண்டும்படி இச்சை மேலே பொங்கிவரும் போது நாம் சோதிக்கப்படுகிறோம். அவ்வேளையில், அச்சோதனைக்கு நாம் நம்முடைய மனதை சம்மதிக்கச் செய்து விட்டால் அச்சமயத்தில்தான் கருத்தரித்தல் ஏற்பட்டு பாவமும் பிறந்துவிடுகிறது!


நாம் சோதிக்கப்படுவது, நம்மை எவ்விதத்திலும் தீமையாக்கிட முடியாது. நம்மைப்போலவேதான் இயேசுவும் சோதிக்கப்பட்டார். ஆனால் அவர் எவ்விதத்திலும் ஒருதடவைகூட பாவம் செய்யவே இல்லை! இதனிமித்தமே அவர் முற்றிலும் பரிசுத்தமுள்ளவராய் இருந்தார்.


"அவர் எவ்விதத்திலும் தம்முடைய சகோதரருக்கு ஒப்பாக வேண்டிய தாயிருந்தது” என்றும்; “எல்லாவிதத்திலும் அவர் நம்மைப் போலவே சோதிக்கப்பட்டார்” என்றும் வேதம் இயேசுவை சுட்டிக்காட்டி போதிக்கிறது (எபி.2:17; 4:15). இவ்வாறு மிகத்துல்லியமாக இயேசு நம்மைப்போல அப்படியே சோதிக்கப்பட்டார். இருப்பினும், அவரோ ஒருபோதும் பாவம் செய்யவே இல்லை!


இச்சத்தியங்களைக் கேட்பதற்கு, நம்மில் ஒரு சிலருக்கு ரம்மியமாக இல்லாதிருக்கலாம். அதற்கு காரணம் யாதெனில், நாம் இயேசுவை தேவன் என்றும், அவர் பாவத்தை மிக எளிதில் ஜெயங்கொண்டார் என்றும் .... இது காறும் எண்ணியதேயாகும். ஆனால் இயேசு இப்பூமிக்கு வந்தபொழுது, தான் தேவனோடு சமமாயிருந்த உரிமைகளை இழந்து “தம்மைத்தாமே வெறுமை யாக்கினார்” (He emptied Himsell) என வேதம் தெளிவுறக் கூறுவதை சற்று சிந்தித்துப் பாருங்கள் (பிலி.2:6-7). அவர் தேவனாயிருந்தும், இப்பூமியில் அவர் வாழ்ந்த காலம் முழுவதும் ஓர் மனிதனாகவே ஜீவித்தார்! இன்று ஆண்டவர் நமக்களித்திருக்கும் பரிசுத்தாவியின் வல்லமை மாத்திரமே அன்று அவருக்கும் கிட்டியது!


எனவேதான் நம்முடைய கண்களை இயேசுவின்மீது பதித்து இந்த ஓட்டத்தை நாம் ஓடக்கடவோம்! என புத்தி சொல்லப்பட்டிருக்கிறோம். இன்று, “இரத்தம் சிந்தப்படத்தக்கதாக பாவத்திற்கு விரோதமாய் போராடும்படி" அழைக்கப்பட்ட நாம், இயேசுவை மாதிரியாக நோக்கிப் பார்த்து மிகுந்த தைரியம் பெற்றிட முடியும்! (எபி.12:2,4). அது ஏனெனில், இன்று நாம் சந்திக்கும் ஒவ்வொரு சோதனைகளையும் அவர் தாமே நம்மைப் போலவே ஓர் மனிதனாய் இருந்து சந்தித்தார். இவ்வாறாகத்தான் நாம் எல்லோரும் அவரைப் பின்பற்றும்படியான “ஓர் முன்னோடியாகவும்” “ஓர் மாதிரியாகவும்” இயேசு நமக்கு மாறினார் (எபி.6:20),


அன்றியும், “தேவ பக்திக்குரிய இரகசியமானது.... கிறிஸ்து மாம்சத்திலே வெளிப்பட்டார்.... ஆவியிலே நீதியுள்ளவரென்று விளங்கப்பட்டார்" (1தீமோ.3:16). ஆம், அவர் நம்முடைய மாம்சத்தை உடையவராயிருந்தும், தன் ஜீவியகாலம் முழுவதும் தன் ஆவியை அவர் தூய்மையுள்ளதாய் காத்துக் கொண்டார்!


அவர் ஜெயம் பெற்றதுபோலவே நாமும் ஜெயம் பெறமுடியும் என்ற நம்பிக்கையின் இரகசியம் இங்குதான் அடங்கியுள்ளது!


ஏனென்றால், “இயேசுவானவர் தமது மாம்சமாகிய திரையின் வழியாய் புதிதும் ஜீவனுமான மார்க்கத்தை நமக்காக உண்டுபண்ணிவிட்டார்". ஆகவே இப்போது, இம்மார்க்கத்தின் வழியாய் நாம் அவரைப் பின் சென்றிட முடியும் (எபி.10:19, 20). இதுவே பரிசுத்தமாகுவதற்குரிய ஒரே வழியாகும்!பழைய மனிதனும் புதிய மனிதனும்:


நாம் ஏற்கெனவே பழைய மனிதன் எங்கனம் ஓர் 'உண்மையற்ற ஊழியக்காரனாய்' செயல்பட்டு கள்வர்களை வீட்டிற்குள் நுழைந்திட அனுமதித்தான் என்பதைக் கண்டோம். ஆனால் இப்போதோ அப்பழைய மனிதன் சிலுவையிலறையப்பட்டு... நம்மை விட்டு களையப்பட்டு… அடக்கம் செய்யப்பட்டுவிட்டான்! இப்போது நமக்குள் ஓர் புதிய மனிதனே வாசம் கொண்டுள்ளான். அப்புதிய மனிதனின் வாஞ்சையெல்லாம், “தேவனே, உம்முடைய சித்தத்தின்படி செய்ய, இதோ வருகிறேன்!'' (எபி. 10:7) என்பதுதான்.


இருப்பினும், ஓர் இயேசுவின் சீஷன்கூட பாவம் செய்யக்கூடிய சாத்தியம் உண்டு என்பதையும் நாம் அறிந்திருக்கிறோம். ஆனால், ஓர் விசுவாசி பாவம் செய்வதற்கும்; ஓர் அவிசுவாசி பாவம் செய்வதற்கும் பெருத்த வித்தியாசம் உண்டு! அதெப்படியெனில், ஒரு பூனை தவறி சகதிக்குள் விழுவதற்கும்; ஒரு பன்றி மன விருப்பத்தோடு அதே சகதிக்குள் பாய்ந்து விழுவதற்கும் உள்ள வித்தியாசத்தைப் போலவேயாகும்! பூனை சகதியான சாக்கடையை வெறுக்கிறது. இருப்பினும் அப்பூனை அச்சகதிக்குள் தவறி விழ முடியும். ஆனால் பன்றியோ சகதிக்குள் விழுவதை விரும்பித் தெரிந்து கொள்ளுகிறது. இதற்கெல்லாம் சுபாவமே அடிப்படைக் காரணமாகும். இப்படித்தான் இயேசுவின் சீஷன் ஓர் புதிய சுபாவத்தைப் பெற்று, தூய்மையை நேசித்து; பாவத்தை வெறுக்கிறான்!


பழைய மனிதன் பாவம் செய்ய விரும்புகிறான். புதிய மனிதனோ பாவம் செய்ய ஒருபோதும் விரும்பவே மாட்டான்.


ஆனால் புதிய மனிதன் பெலசாலியாய் இல்லாவிட்டால், மாம்சத்தின் இச்சைகள் நுழைந்திடாதபடி தன் இருதயத்தின் கதவை இழுத்து மூடுவதற்கு அவனால் முடியாமற்போகலாம்!


அதற்கு காரணம் அவன் இச்சைகளை விரும்புகிறான் என்பது அல்ல. அப்படி அல்லவேயல்ல! அதற்கு ஒரே காரணம் யாதெனில் அப்புதிய மனிதன் இச்சைகளை எதிர்த்து நிற்பதற்குப் போதிய பெலனற்று இருக்கிறான்.... அவ்வளவுதான்! அதற்கு காரணம், ஒருவேளை அவன் தன்னைப் போதுமான அளவு வேதவசனத்தினால் போஷிக்காமல் இருந்திருக்கலாம் அல்லது அவன் ஜெபத்தின் மூலமாய் பெலனடையா மலிருந்திருக்கலாம்....!


இப்போது, பாவம் செய்வதற்கும் (Committing Sin) பாவத்தில் விழுவதற்கும் (Falling into Sin) உள்ள வித்தியாசத்தைத் தெளிவாக அறிந்து கொண்டீர்களா? ஆம், இந்த வித்தியாசத்தை நாம் அறிய வேண்டியது மிகவும் முக்கியமாகும். அப்போதுதான் எண்ணற்ற தேவையில்லாத குற்றவுணர்வுகள் நம் இருதயத்தைத் தாக்குவதிலிருந்து நம்மை நாம் தவிர்த்துக்கொள்ள முடியும்.


யோவான் அப்போஸ்தலர் தன் முதல் நிருபத்தில் இந்த வித்தியாசத்தை மிகத் தெளிவாக எடுத்துரைக்கின்றார். 1) “பாவஞ் செய்கிறவன்” (அறிந்து பகிரங்கமாய் பாவம் செய்கிறவன்) பிசாசினாலுண்டாயிருக்கிறான் (1யோவான்.3:8) என யோவான் எழுதினாலும், விசுவாசிகளுக்கு எழுதும் போது, 2) “உங்களிலொருவன் பாவஞ் செய்வானானால் (அதாவது தவறி பாவத்தில் விழுவானானால்), நீதிபரராயிருக்கிற இயேசுகிறிஸ்து நமக்காகப் பிதாவினிடத்தில் பரிந்து பேசுகிறவராயிருக்கிறார்” (1யோவான்.2:1) என்றே தைரியப்படுத்தி எழுதினார்!!அறிந்த பாவமும் அறியாத பாவமும்:


மேலும், பாவத்தில் விழுவதற்கும் (Falling), பாவம் கொண்டிருத்தலுக்கும் (Having) ஓர் வித்தியாசம் உண்டு. நம் ஆள்த்துவத்தில் “அறியாத பாவங்கள்” இருப்பதே நம்மில் பாவம் கொண்டிருத்தலாகும். நம்மைக் காட்டிலும் முதிர்ச்சியடைந்தவர்கள் அப்பாவங்களை நம்மில் காணக்கூடும்! ஆனால் நாமோ அப்பாவங்களை அறியாதவர்களாய் இருந்திட முடியும். ஆகவே இவ்வித அறியாத பாவங்கள் நம்மைக் குற்றமுள்ளவர்களாக உணரச் செய்யத் தேவையேயில்லை. ஏனெனில், “நியாயப்பிரமாணமில்லாதிருந்தால் பாவம் எண்ணப்படமாட்டாது” (ரோமர்.5:13) என தேவ வார்த்தை தெளிவாகக் கூறுகிறது. அதாவது நம்முடைய அறிந்திருக்கும் மனது (conscious mind) ஏதேனும் பாவத்தை அறியாதிருக்கும் பட்சத்தில் தேவனும் அவைகளைப் பாவமாகக் கருதமாட்டார்.


ஆம், நாம் சாகும் நாள்வரை, நமக்குள் அறியாத பாவங்களை நாம் கொண்டிருப்போம்! இருப்பினும், நாம் ஒளியில் நடந்தால் இந்த அறியாத பாவங்கள் கொஞ்சம் கொஞ்சமாய் குறைந்து கொண்டே சென்றுவிடும்! நம்மில் இருக்கும் அறியாத பாவங்களைக் குறிப்பிட்டுத்தான் யோவான் அப்போஸ்தலர் எழுதும்போது, “நமக்குப் பாவமில்லையென்போமானால் (Have no Sins) நம்மை நாமே வஞ்சிக்கிறவர்களாயிருப்போம், சத்தியம் நமக்குள் இராது” (1யோ. 1:8) எனக் கூறினார். தன்னில் பாவம் இல்லையென கூறும் ஒருவன், தான் ஏற்கெனவே கிறிஸ்துவைப்போல் பூரணமாகி விட்டதாகவே மார்தட்டிக் கொள்ளுகிறான்! ஆனால் உண்மையில் "நாம் அவரைப் போலிருப்பது” கிறிஸ்து நம்மை எடுத்துக் கொள்ளும்படி திரும்பும் பொழுது மாத்திரமே சாத்தியம் என வேதம் தெளிவுபட கூறுகின்றது .... அதற்கு முன்பாக, அவ்விதம் மாறுவது நமக்கு சாத்தியமில்லை! (1 யோவான்.3:2). ஆகவே தாங்கள் முற்றிலும் பரிசுத்தமடைந்து விட்டதாகவும், பூரணமடைந்து விட்டதாகவும் மார்தட்டிக் கொள்ளும் யாவரும் தங்களைத் தாங்களே வஞ்சித்துக் கொள்ளுகிறார்கள்!!


இருப்பினும் அறியாத பாவங்களும் (Unconscious Sins) கழுவப்பட வேண்டியது அவசியமாகவே இருக்கிறது. அது எங்ஙனம் சாத்தியமாகும்? ஆம், நாம் தொடர்ந்து தேவனுடைய ஒளியில் நடப்பவர்களாயிருந்தால், “இயேசுகிறிஸ்துவின் இரத்தம் சகல பாவங்களையும் (அறியாத பாவங்களையும்) நீக்கி நம்மைச் சுத்திகரிக்கும்!” (1 யோவான். 1:7).


இவ்வித சிலாக்கியத்தை நாம் பெற்றதினிமித்தம், இப்போது நாம் எவ்வித பயமுமில்லாமல், சொல்லிமுடியா பரிசுத்தம் நிறைந்த தேவனுடைய சந்நிதிக்கு முன்பாகத் தைரியமாக நாம் நின்றிட முடியும். அந்த அளவிற்கு நம்மை நீதிமானாக்கும் வல்லமை இயேசுவின் இரத்தத்தில் உள்ளது! அல்லேலூயா!!இரக்கமும் கிருபையும்:


எபிரெயர் 4:16-ல், “நாம் இரக்கத்தைப் (Mercy) பெறவும் ஏற்ற சமயத்தில் சகாயஞ்செய்யும் கிருபையை (Grace) அடையவும் தைரியமாய் கிருபாசனத்தண்டையிலே சேரக்கடவோம்” என அழைக்கப்பட்டிருக்கின்றோம். இரக்கமும் கிருபையும் ஒன்றல்ல! நம் பாவங்கள் மன்னிக்கப்படுவதையே இரக்கம் குறிக்கிறது. அதாவது இரக்கம் நம் கடந்த காலத்திற்குரியதாகும்! ஆனால் நம் எதிர்காலத்தில், தேவையான ஏற்ற சமயத்திற்கெல்லாம் நமக்கு கிருபையும் மிகுந்த அவசியமாயிருக்கிறது!!


நாம் சோதிக்கப்படும் நேரமே நம்முடைய தேவையான ஏற்ற வேளையாகும். கலிலேயாக் கடலில் பேதுரு மூழ்கிவிடும் அபாயத்தில் இருந்ததற்கொப்பாகவே நாமும் தவறிவிழப்போகும் நேரமே நாம் உதவி பெறத் தேவையான நேரமாகும் (மத்.14:30). அவ்வேளையில் பேதுருவைப் போலவே நாமும் கிருபைக்காக கூக்குரலிட வேண்டும். எங்ஙனம் பேதுரு கூப்பிட்ட வேளையில் உடனடியாக இயேசு தன் கையை நீட்டி அவனை மூழ்க விடாமல் தூக்கி எடுத்தாரோ, அதைப்போலவே நாமும் கிருபையைப் பெற்று கீழே விழாமல் உறுதியாக நின்றிட முடியும்!


நாம் வழுகி கீழே விழுவதிலிருந்து தேவன் நம்மைக் காப்பார் என்ற நிச்சயத்தை அளிக்கும் அற்புதமான வாக்குதத்தங்கள் தேவனுடைய வார்த்தையில் உள்ளன. அவைகளில் சில வசனங்களை இங்கே பாருங்கள்:


எல்லாவற்றிற்கும் முதலாக, நம்மை மேற்கொள்ளும்படியான எவ்வித வலிமையான சோதனையும் நம்மைச் சோதித்திட தேவன் ஒருபோதும் அனுமதிக்க மாட்டார் என இந்த நல்ல தேவன் வாக்குரைத்திருக்கிறார். அந்த அருமையான வாக்குதத்தத்தைக் கேளுங்கள்: "தேவன் உண்மையுள்ளவராயிருக்கிறார்! உங்கள் திராணிக்கு மேலாக நீங்கள் சோதிக்கப்படுகிறதற்கு அவர் இடங்கொடாமல், சோதனையைத் தாங்கத்தக்கதாக சோதனையோடு கூட அதற்குத் தப்பிக் கொள்ளும்படியான போக்கையும் உண்டாக்குவார்” (1கொரி.10:13).இன்னும் தேவனுடைய வார்த்தை சொல்வதைக் கேளுங்கள்: “வழுவாதபடி உங்களைக் காக்கவும், தமது மகிமையுள்ள சந்நிதானத்திலே உங்களை மாசற்றவர்களாய் நிறுத்தவும் வல்லமை உள்ளவர்” என்றும் வாசிக்கிறோம் (யூதா 24) .


இதுபோன்ற அருமையான வாக்குதத்தங்களும், இன்னும் அதிகமான வாக்குதத்தங்களும் தேவனுடைய வார்த்தையில் அடங்கியிருக்கும் போது இனியும் நாம் பாவம் செய்ய வேண்டியது ஒரு போதும் அவசியமே கிடையாது! இனிமேல் 1 பேதுரு 4:2-ம் வசனம் கூறுகிறபடி, தேவனுடைய சித்தம் மாத்திரமே செய்து நாம் பிழைத்து வாழ முடியும்!பரிசுத்தமாகுதலின் வளர்ச்சி:


“தான் கட்டளையிட்ட யாவையும் அவர்கள் கைக்கொள்ளும்படி (TO OBEY) அவர்களுக்கு உபதேசம் பண்ணுங்கள்” என இயேசு தன் அப்போஸ்தலர்களுக்குப் பணித்தார் (மத்தேயு 28:20). தன் ஆண்டவரை அதிகமாய் நேசிக்கும் ஒருவன், இயேசுவின் கட்டளைகள் யாவை? என முதலாவது தன் முழு இருதயத்தோடும் அவர் இட்ட கட்டளைகளை வாஞ்சித்துத் தேடுவான். பின்பு அக்கட்டளைகளுக்கு அவன் கீழ்ப்படிந்திடவும் தீவிரங் கொள்ளுவான்! (யோவான் 14:21).


நியாயப்பிரமாணத்தின் கீழ் தேவன் மனிதனுக்கு கற்பனைகளைக் கொடுத்திருந்தார். ஆனால் அவைகளுக்குக் கீழ்ப்படியும்படியான வல்லமையோ அப்போது அருளப்படவில்லை. இவ்வாறிருக்க தேவன் ஏன் நியாயப்பிரமாணத்தைக் கொடுத்தார்? மனிதன் 'தானாகவே' தேவனுடைய தரத்திற்கு உயர்ந்திட முடியாது என்பதை அவன் கண்டுகொள்ளு வதற்காகவே தேவன் நியாயப்பிரமாணத்தை வழங்கினார். இந்த நிர்ப்பந்தமான நிலையில்தான், தனக்கு ஓர் இரட்சகரும்; உதவிசெய்யும் சகாயரும்; தேவை என்பதை மனிதன் உணருகிறான். இவ்வாறாக, “நியாயப் பிரமாணம் நம்மைக் கிறிஸ்துவினிடத்தில் வழிநடத்துகிற உபாத்தியாராய் இருக்கிறது” என்றே கலாத்தியர் 3:24 கூறுகின்றது.


ஆனால் இப்போதோ தேவன் மனிதனோடு ஓர் புதிய உடன்படிக்கையை ஏற்படுத்திவிட்டார்! ஆகவே அவர் இப்போது நமக்கு கற்பனைகளை மாத்திரமல்லாமல், நம் ஆண்டவராகிய இயேசு கிறிஸ்துவின் ஆள்த் துவத்தின் மூலமாய் ஓர் மாதிரியையும் அளித்திருக்கின்றார்!! இப்பூமியில் அவர் வாழ்ந்த தன் ஜீவியத்தின் மூலம், தேவனுடைய எல்லாக் கற்பனைகளுக்கும் கீழ்ப்படிய முடியும் என்பதை இயேசு நிரூபித்துக் காட்டினார்.


புதிய உடன்படிக்கையில், தேவன் தன்னுடைய பிரமாணங்களை நம்முடைய மனதிலே வைத்து, நம்முடைய இருதயங்களில் அவைகளை எழுதுவேன் என்றும் வாக்குரைத்திருக்கின்றார் (எபி. 8:10). நமக்குள் வாசமாயிருக்கும் பரிசுத்தாவியின் மூலமாகவே இந்த ஒப்பற்ற கிரியையை தேவன் செய்து முடிக்கிறார். பரிசுத்த ஆவி நமக்கு உதவி செய்யும்படி அனுப்பப்பட்ட நல்ல உதவியாளர்! அவர், தேவனுடைய சித்தம் இன்னது என காண்பிப்பது மாத்திரமல்லாமல் அச்சித்தத்தை செய்வதற்குரிய விருப்பத்தையும் (Desire), அவையெல்லாவற்றிற்கும் கீழ்ப்படியக்கூடிய (To Obey) கிருபையையும் நமக்கு வழங்குகிறார்.


தேவன்தான் நம்மை முற்றிலும் பரிசுத்தமாக்குகிறவர்! (1தெச.5:23), இச்சீரிய கிரியையை நாமாகவே நிறைவேற்றிட முடியாது. நாம் அவரையே முழுவதுமாய் சார்ந்துகொள்ள வேண்டும். ஏனெனில் நாம் அவருடைய சித்தத்தைச் செய்வதற்குரிய விருப்பத்தையும் அவைகளை நிறைவேற்றி முடிப்பதற்குரிய செய்கையின் திறனையும் நமக்குத் தரும்படி அவரே நமக்குள் கிரியை செய்கிறார்! இருப்பினும் நாம்தான், “பயத்தோடும் நடுக்கத்தோடும் நம்முடைய இரட்சிப்பு நிறைவேறப் பிரயாசப்பட வேண்டும்” (பிலி.2:12, 13), பார்த்தீர்களா, தேவன் நமக்குள் கிரியை செய்வதை (Works IN) நாம்தான் செயல்படுத்தி (Work OUT) நிறைவேற்றுகிறோம். ஆம், இந்த நல்ல தேவன் நம்மை வெறும் “ரோபோட்ஸ்” (Robots - இயந்திர மனிதன்) ஆக மாற்றிட விருப்பங்கொள்ளவே இல்லை!


அதேபோல், நம் பாவத்தின் குற்றங்களையும் தேவன்தான் கழுவுகிறார். இருப்பினும், “நம் மாம்சத்திலும் ஆவியிலும் உண்டான எல்லா அசுசியும் நீங்க, நம்மைநாமே சுத்திகரித்துக் கொண்டு, பரிசுத்தமாகுதலைத் தேவ பயத்தோடே பூரணப்படுத்தக்கடவோம்” (2 கொரி.7:1) என்றும் நாம் கட்டளையிடப்பட்டிருக்கிறோம்! எப்போதெல்லாம் நாம் நமக்குள்ளிருக்கும்

அசுசியை வெளிச்சத்தில் காண்கிறோமோ அப்போதெல்லாம் நாம்தான் அவைகளைவிட்டு சுத்திகரிக்கும் கிரியையில் ஈடுபட வேண்டும்!


இவ்வாறாகத்தான் நாம், “ஆவியினாலே சரீரத்தின் செய்கைகளை அழிக்கிறோம்” (ரோமர் 8:13). இக்கிரியை தொடர்ந்து நமக்குள் நடந்தால் நம் ஜீவியத்தில் ஆவியின் கனியாகிய - அன்பு, சந்தோஷம், சமாதானம், நீடிய பொறுமை, தயவு, நற்குணம், விசுவாசம், சாந்தம், இச்சையடக்கம் ஆகிய திவ்விய சுபாவங்கள் அதிகமதிகமாய் நம்மில் நிச்சயமாய் வெளிப்பட்டு மிளிர்ந்துவிடும். இதுவே, நாம் கிறிஸ்துவின் சாயலாய் மறுரூபமடைவதின் பொருளாகும்!


இங்ஙனமே, நம்முடைய பாதை அதிகமதிகமாய் பிரகாசிக்கிற சூரியப் பிரகாசத்தைப்போல் மாறுகிறது (நீதி.4:18). இவ்வாறு தேவன் நமக்காக உண்டுபண்ணிய பரிசுத்தமாகுதலின் மகிமையான பாதைக்கு நாம் யாவரும் செவிமடுப்போமாக!

அதிகாரம் 8
தேவ வசனமும் ஜெபமும்

இவ்வுலகில் ஓர் குழந்தை பிறந்தவுடன் அக்குழந்தைக்கு உணவும்; காற்றுமாகிய இவ்விரண்டும் மிகவும் தேவையாயிருக்கிறது. இதற்கொப்பாகவே ஓர் ஆவிக்குரிய பிறப்பின் அனுபவமும் இருக்கின்றது. ஓர் புதிதாய் பிறந்த தேவனுடைய குழந்தை புசிக்கவும்; சுவாசிக்கவும் வேண்டும். அக்குழந்தைக்கு தேவனுடைய வசனமே உணவாகவும்; ஜெபமே ஜீவசுவாசமாகவும் மாறுகிறது!தேவனுடைய வசனம் – நம்முடைய ஆவிக்குரிய உணவாகும்:


ஓர் குழந்தை வளர்வதற்கு, ஆரம்பத்தில்தான் பால் உணவு தேவையாயிருக்கின்றது. ஆனால் அக்குழந்தை வளர்ச்சியடையும் போதோ பலமான ஆகாரம் (Salid food) தேவையாயிருக்கின்றது. “கிறிஸ்துவைப் பற்றிச் சொல்லிய மூல உபதேசங்களே” பால் உணவாகும் (எபி.6:1), “நீதியின் வசனமோ” (The word of Righteousness) (எபி. 5:13) பலமான ஆகாரமா யிருக்கிறது. தேவன் நமக்குத் தரும் வெளிச்சத்திற்கு எவ்வளவு துரிதமாய் நாம் கீழ்ப்படிகிறாமோ அதைப்பொறுத்துத்தான் நாம் எவ்வளவு சீக்கிரத்தில் பலமான ஆகாரத்தைப் புசித்திட ஆரம்பிப்போம் என்ற கால அளவு நிர்ணயிக்கப்படுகின்றது.


நம்முடைய ஆவிக்குரிய வளர்ச்சி விசுவாசத்தையும் (FAITH) + கீழ்ப்படிதலையும் (OBEDIENCE) சார்ந்திருக்கிறது. நாம் தேவனையே விசுவாசித்து சார்ந்து கொள்ளும்படி, தேவன் தன்னுடைய வார்த்தையில் நமக்கு வாக்குதத்தங்களைத் தந்திருக்கின்றார். அதேபோல நாம் கீழ்ப்படிவதற்காகவே தேவன் நமக்கு அவருடைய வார்த்தையில் கட்டளைகளையும் தந்திருக்கின்றார். நாம் ஒழுங்காக (Regularly) தேவனுடைய வார்த்தையைத் தியானித்து அவரை விசுவாசித்து சார்ந்துகொண்டு, தேவனுக்குக் கீழ்ப்படிவோ மென்றால், நாம் தேவனுக்குள் ஆழமாய் வேர்விட்டு ஓர் இலையுதிரா திருக்கும் கனிதரும் மரம் போல் செழித்தோங்கி நிற்பதை நம்மில் நாம் கண்டுகொள்ள முடியும். மேலும், நாம் செய்வதெல்லாம் வாய்க்கும் படியாகவும் இந்த நல்ல ஆண்டவர் நம்மை ஆசீர்வதித்திடுவார்! (சங். 1:2,3).


நம் அறிவுத்திறனை மாத்திரம் உபயோகித்து நாம் தேவனுடைய வார்த்தையை ஒருக்காலும் பூரணமாய் அறிந்திடமுடியாது! ஆம், நமக்கு பரிசுத்தாவியின் மூலம் உண்டாகும் வெளிப்பாடு தேவையாயிருக்கின்றது. ஆவிக்குரிய சத்தியங்கள் ஞானிகளுக்கும் கல்விமான்களுக்கும் மறைத்து பாலகர்களுக்கே வெளிப்படுத்தப்படுகிறது என இயேசு குறிப்பிட்டார் (மத்தேயு 11:25). கல்விமான்களிடத்திலும் ஞானிகளிடத்திலும் காணப்படாத விசேஷம் இந்தப் பாலகர்களிடம் அப்படியென்ன இருக்கிறது? ஆம், ஓர் சுத்த இருதயம்!! அவர்களிடம் இருக்கிறது. நம் தேவன் தலையை அல்ல, நம் இருதயத்தையே உற்று நோக்குகிறார். தாழ்மையுள்ளவர்களுக்கும், தன் வசனத்திற்கு நடுங்கி ஜீவிப்பவர்களுக்குமே ஆண்டவர் வெளிப்பாட்டைத் தருகிறார் (ஏசாயா.66:2). மேலும் தேவசித்தத்தைச் செய்ய மனதுள்ளவர்களாயிருப்பவர்கள் மாத்திரமே தேவனுடைய வார்த்தையை அறிந்து கொள்ள முடியும் என்றும் இயேசு குறிப்பிட்டார் (யோவான்.7:17).தேவனுடைய வார்த்தை – ஆவியின் பட்டயமாகும்:


சாத்தானுக்கு எதிராக நாம் புரியும் யுத்தத்தில் தேவனுடைய வார்த்தை ஓர் ஆயுதமாகவும் நமக்குப் பயன்படுகிறது. இந்த ஆயுதம் “ஆவியின் பட்டயம்” (The Sword of the Spirit) என எபே.6:17-ல் அழைக்கப்படுகிறது. வனாந்திரத்தில் இயேசுவுக்கு நிகழ்ந்த மூன்று சோதனைகளில் இப்பட்டயத்தையே இயேசு மிக வலிமையாக உபயோகித்தார். சாத்தானின் சோதனையை எதிர்த்துத் தோற்கடிக்கும் ஒவ்வொரு சமயத்திலும் “இப்படி எழுதியிருக்கிறதே...” (மத்.4:4,7,10) என தேவனுடைய வார்த்தையாகிய பட்டயத்தை உபயோகித்தார். ஆம், அவர் அப்படித்தான் சாத்தானை ஜெயித்தார்! அவ்விதமாகவே தான் நாமும் சாத்தானை ஜெயித்திட முடியும்!!


சாத்தான் ஓர் குற்றஞ்சாட்டுகிறவன்! சாத்தானின் குற்றஞ் சாட்டுதலுக்கும்; பரிசுத்தாவியின் உணர்த்துதலுக்கும் உள்ள வித்தியாசத்தை நாம் வேறு பிரிக்கத் தெரிந்தவர்களாயிருக்க வேண்டும். தன்னுடைய குற்றஞ்சாட்டுதல்களின் மூலமாய் நாம் ஆக்கினை உணர்வடைந்து மனமடிந்து போகவே சாத்தான் சதா முயற்சி செய்து கொண்டிருக்கிறான். இதற்கு மாறாக பரிசுத்தாவியின் உணர்த்துதலோ மென்மையும், முழு நம்பிக்கையையுமே எப்போதும் தருவதாய் இருக்கும்!


இக்குற்றஞ்சாட்டும் சாத்தானை நாம், “ஆட்டுக்குட்டியின் இரத்தத்தினாலும், நம் சாட்சியின் வசனத்தினாலும்” மாத்திரமே ஜெயித்திட முடியும் (வெளி.12:11). நம் கடந்தகால பாவங்களைக் குறித்த அவனுடைய குற்றஞ் சாட்டுதல்களை, வேதத்தின்படியான நம்முடைய சாட்சியை அவனுடைய முகத்திற்கு நேராக கூறும்போது மாத்திரமே நாம் ஜெயித்திட முடியும்: “என் எல்லாப் பாவங்களையும் இயேசுகிறிஸ்துவின் இரத்தம் கழுவிவிட்டது! நான் அத்தூய இரத்தத்தினால் முற்றிலும் நீதிமானாக்கப் பட்டுவிட்டேன்” என்பதே அந்த சாட்சியாகும்! இவ்வாறு நாமும் “இப்படி எழுதியிருக்கிறதே...” என இயேசு உபயோகித்த அதே ஆயுதத்தை சாத்தானுக்கு எதிராக நாம் உபயோகித்திட வேண்டும்!!


இவ்வாறு சாத்தானுடைய குற்றச்சாட்டுதல்களை மாத்திரமல்லாமல், அவன் பல்வேறு சோதனைகளால் நம் மனதைத்தாக்கி நமக்குக் கொண்டுவரும் அதைரியத்தையும் பதட்டத்தையும் கவலையையும் ஜெயிப்பதற்கு இவ்விதமே தேவனுடைய வார்த்தையை சாத்தானுக்கு முன்பாக நாம் தைரியமாய் அறிக்கை செய்திட வேண்டும்! இதனிமித்தமே நாம் தேவனுடைய வார்த்தையை நன்கு அறிந்து வைத்திருப்பது மிகவும் முக்கியமாகும். அப்போதுதான், நம்முடைய ஏற்றசமயத்தில் பரிசுத்தாவியானவர் சரியான வேத வசனங்களை நம் மனதில் கொண்டுவந்து நிறுத்த முடியும்!


ஆகவே, ஒவ்வொரு நாளும் ஓர் குறிப்பிட்ட நேரத்தை ஒதுக்கி “தேவனே என்னோடு பேசும்!” என அவரிடம் ஜெபித்து, தேவ வார்த்தையைத் தியானிப்பது மிகவும் நல்லதாகும். இவ்விதமாய் நாம் தேவனுடைய வார்த்தையை நம்முடைய இருதயத்தில் வைத்து வைத்தால், அவ்வசனங்கள் நாம் தேவனுக்கு விரோதாய் பாவஞ்செய்யாதபடிக்கு நம்மை காத்துக் கொள்ளும் விந்தையை ருசித்திடவும் முடியும்!! (சங்.119:11).நம் ஜீவியத்தில் தேவனுடைய திட்டங்கள் நிறைவேறுதல்:


தேவன் நம் ஒவ்வொருவருடைய ஜீவியத்திற்கும் ஓர் சம்பூரணமான திட்டம் வரைந்துள்ளார். இத்திட்டத்தை நாம் நிறைவேற்றும்படி நம்மை நடத்துவதற்கே தேவன் விரும்புகிறார்! இவ்விதமாய், தேவன் நமக்கு வகுத்ததிட்டத்தை நம் வாழ்வில் நிறைவேற்றுவதற்கொப்பான ஓர் இனிய ஆசீர்வதிக்கப்பட்ட வாழ்க்கை இவ்வுலகில் வேறெதுவுமே இல்லை! ஓர் உத்தியோகத்தைத் தெரிந்து கொள்ளும் போதோ அல்லது திருமண சமயத்திலோ.... நான் பிரவேசித்து கடந்து செல்லும்படி தேவன் ஏற்கெனவே எனக்காக ஒரு திட்டத்தை வரைந்துள்ளார் என நாம் அறிந்திருப்பது எத்தனை பரவசமூட்டுவதாய் இருக்கிறது! நாம் மாத்திரம் அவர் நமக்கென்று வகுத்த வழியைத் தெரிந்துகொண்டால், நாம் இடறிவிழும்படி சாத்தான் நமக்கென ஆர்வத்தோடு வகுத்திருக்கும் அநேக குண்டு - குழிகளிலிருந்து காக்கப் படுவோமே!! இந்த ஒப்பற்ற பாதுகாப்பிற்குப் பிரதானமானது, தேவனுடைய வார்த்தையேயாகும். தேவன் தன்னுடைய வார்த்தையின் மூலமாகவே நம்மை அவருடைய திட்டத்திற்குள்ளாக நடத்துகிறார்!!


தேவனுடைய சித்தத்தை அறிதல் எப்படி? என்ற பாடம் மிகவும் விஸ்தாரமானதாகும். இதைக் குறித்து “தேவ சித்தத்தை அறிதல்” (Finding God's Will) என்ற நான் எழுதிய புத்தகத்தில் விரிவாகவும் விளக்கமாகவும் எழுதப்பட்டுள்ளது.ஜெபம் - தேவனோடு பேசும் இனிய நேரமாகும்:


நாம் தேவனோடு கொள்ளும் உறவு இருவழி சந்திப்பை உடையதாகும். முதலாவது தேவன் நம்மோடு அவருடைய வார்த்தையின் மூலமாய் பேசுவதைக் கேட்கிறோம்! பின்பு நாம் அவரோடு பேசுகிறோம்!! வெறும் விண்ணப்பங்களைத் தேவனிடத்தில் ஏறெடுப்பது மாத்திரம் ஜெபமாகாது. நம் ஜெபத்தின் முக்கிய பங்கு யாதெனில், நாம் தேவனோடு கொள்ளும் அந்நியோந்நிய ஐக்கியமே! ஆம், ஓர் மணவாட்டி அவளின் மணவாளனோடு உறவாடும் நெருங்கிய ஐக்கியத்திற்கொப்பானதே ஜெபமாகும்!


ஓர் மணவாட்டி எவ்விதம் தன் மணவாளனோடு பேசி உறவாட வேண்டும் என்பதற்கு எவ்வித சட்டவிதிமுறைகளும் கிடையாது! இருப்பினும், நம்முடைய ஜெபத்தில் ஓர் ஒழுங்கைக் கடைப்பிடிப்பது நலமானது தான். அதன்படி, நம் ஜெபத்தில் கீழ்காணும் ஏழுவிதமான உறவாடும் விண்ணப்பங்கள் இருக்கிறதா? என்பதை ஆராய்ந்து அறிவோமாக:


1) நம் பிதாவை அவர் இருக்கிற வண்ணமாகவே அவரைப் போற்றித் துதித்தல்.

2) நம் பாவங்களையும் நம் தோல்விகளையும் அறிக்கை செய்தல்.

3) தேவனுடைய ராஜ்யத்துக்குரியவைகளுக்காய் விண்ணப்பித்தல்,

4) நம் சொந்தத் தேவைகளுக்காய் விண்ணப்பித்தல்,

5) பிறருடைய தேவைகளுக்காய் வேண்டுதல்,

6) தேவன் நமக்காக செய்து முடித்தவைகளுக்காய் அவருக்கு நன்றி செலுத்துதல்,

7) தேவன் நமக்காக இனிமேல் செய்யப்போகிறவைகளுக்காய் நன்றி செலுத்துதல்.


“எப்பொழுதும் ஜெபம் பண்ணவேண்டும்" என்றே இயேசு நமக்கு சொல்லியிருக்கிறார் (லூக்.18:1). நம் அன்றாட ஜீவியத்தில் ஒவ்வொரு சிறிய விஷயங்களையும் தேவனுக்குத் தெரியப்படுத்தி அவரோடு உறவாடி சம்பாஷிக்க நாம் கற்றுக்கொள்ளுவது மிகமிக நல்ல பழக்கமாகும்! இந்த அனுபவம் நம்முடைய தினசரி பழக்கத்திற்கு வந்துவிட்டால், நாம் அந்நாள் முழுவதும் ஓர் ஜெப ஆவியால் நிறைந்தவர்களாயிருப்போம்! இவ்விதமாய் நாம் தேனோடு பேசி உறவாடும் நேரம் ஓர் மகிழ்ச்சியின் நேரமாகவே நமக்கு மாறிவிடும். நமக்கு ஜெபம் ஒருக்காலும் சடங்காச்சாரமாய் இருக்கவே இருக்காது. மேலும் நாம் ஆச்சரியப்படத்தக்க வகையில், தேவன் நம்முடைய இருதயத்தில் நம்மோடு பேசுவதையும் அந்த ஜெபவேளையில் கண்டு கொள்ளுவோம்!!


இவையெல்லாம் என்ன? ஜெபம் என்ற பள்ளிக்கூடத்தில் இவைகள் யாவும் ஆரம்பநிலை நர்சரிப் பாடங்களேயாகும். நாம் உண்மையுள்ளவர்களாயிருந்தால் இன்னும் ஆழமாய் நம் ஜெப ஜீவியத்தில் வளர்ச்சியுறுவோம்.


எப்படியிருந்தாலும் ஜெபம் உங்களுக்கு ஓர் உலர்ந்துபோன வெற்றுச் சடங்காச்சாரமாக மாறிவிட ஒருக்காலும் அனுமதித்து விடாதீர்கள்! ஆம், ஜெபம் நமக்கு சுவாசத்தைப் போன்றதேயாகும்! நாம் சுவாசிப்பதற்கு கஷ்டப்பட வேண்டியிருந்தால், ஏதோ கோளாறு நம் சுவாச உறுப்புகளில் ஏற்பட்டிருக்கிறது என்பதை நாம் அறிந்திருக்கிறோமே! அதுபோலவே, நமக்குள் கோளாறுகள் இருப்பதைத் தவிர, கஷ்டம் நிறைந்த பணியாய் இருக்கும்படி தேவன் நமக்கு ஜெபத்தை நியமிக்கவேயில்லை!!


அதே சமயம், நாம் ஜெப ஜீவியத்தில் வளர்ச்சியடையும்போது ஜெபம் நமக்கு ஓர் கடினப்பணியாக இருப்பதையும் காண்போம்! அதாவது, தேவன் நம் இருதயத்தில் வழங்கும் சிறுசிறு பாரங்களுக்காக உண்மையுள்ளவர்களாயிருந்து ஜெபித்தால், இந்த தேவன் நமக்கு அதிக அதிகமான பாரங்களை நம் இருதயத்தில் தருவதையும் காணமுடியும்! இவ்விதமாய் பிறரை தேவன் ஆசீர்வதிக்கும் பணியில் நாமும் அவரோடு இணைந்து “தேவனுக்கு உடன் - வேலையாட்களாய்” (Co-workers with God) மாறி விடுகிறோம்!!


இயேசு 'பலத்த சத்தத்தோடும் கண்ணீரோடும்' ஜெபித்திருக்கிறார் (எபி.5:7). ஒருசமயம் அவர் கெத்செமனேயில் ஜெபித்தபொழுது, அவருடைய வியர்வை இரத்தத்தின் பெருந்துளிகளாய் புரண்டு விழுந்தது! (லூக்கா.22:44). ஆம், அவர் அவ்வளவாய் ஜெபத்தில் தீவிரங் கொண்டிருந்தார். ஒரு சமயம், அவர் ஓர் இராமுழுவதும் ஜெபத்தில் தரித்திருந்தார்! (லூக்கா 6:12). மேலும் அவர் அடிக்கடி தனியே வனாந்தரத்திற்கு சென்று ஜெபிக்கும் பழக்கத்தை உடையவராகவும் இருந்தார்! (லூக்கா 5:16). “உல்லாசப் பயணிகள் ஓர் புதிய ஸ்தலத்திற்கு வந்தவுடன் நல்ல காட்சிகளைக் காண்பதற்கு கண்களைத் துழாவுதைப் போலவே, இயேசுவும் அவர் சென்ற இடமெல்லாம், தான் தனியே ஜெபிக்கும்படி ஓர் அமைதியான இடத்தைக் காண அவருடைய

கண்கள் துழாவியது!" என ஒரு பரிசுத்தவான் குறிப்பிட்டது முற்றிலும் உண்மையானதாகும்!!


ஜெபம் எவ்வளவு முக்கியமானது என்பதை இயேசுவின் முன்மாதிரி நமக்குத் தெளிவாகக் காண்பிக்கிறது. அவரே இவ்வளவு அதிகம் ஜெபிக்க வேண்டியிருந்தால் நீங்களும் நானும் எவ்வளவு அதிகம் ஜெபிக்க வேண்டும்! ஆகவே, சோம்பலுக்கெதிராக கடும் யுத்தம் செய்து “என்ன விலைக்கிரயமானாலும்” ஓர் ஜெபிக்கும் மனிதனாக அல்லது மனுஷியாக நீங்கள் மாறிவிடுவதற்கு தீர்மானமாய் உறுதி பூண்டுவிடுங்கள்!!


அதிகாரம் 9
ஐக்கியமும் சபையும்

தேவன் நம்மை கிறிஸ்துவின் சாயலாய் மாற்றுவதற்கே விரும்புகிறார் என்பதை நாம் ஏற்கனவே கண்டோம். ஆனால் இவ்வித மறுரூபம் (Transformation) இயேசுவின் பிற சீஷர்களைத் தள்ளிவைத்து விட்டு நமக்கு மாத்திரம் 'தனியாக' ஏற்படாது! அவர்களோடு இணைந்திருக்கும் ஐக்கியத்தில்தான் நாமும் சேர்ந்து மறுரூபமடைய முடியும்!!


நாம் அவரைச் சார்ந்து ஜீவிப்பது மாத்திரமல்லாமல், ஒருவரோ டொருவர் ஐக்கியம் கொண்டு வாழ்ந்திடவும் தேவன் விரும்புகிறார். பழைய ஏற்பாட்டின் காலத்தில் மோசே; எலியா; யோவான்ஸ்நானகன்.... போன்ற தனி மனிதர்களின் மூலமாய் தேவன் கிரியை செய்தார். ஆனால் புதிய உடன்படிக்கையிலோ, கிறிஸ்துவின் தலைமையின்கீழ் ஒன்றாக இணைந்திருக்கும் சீஷர்கள் அடங்கிய ஓர் சரீரத்தையே தேவன் விரும்புகிறார்! இவ்விதமான கிறிஸ்துவின் சரீரமே - "சபையாகும்” (The Church) எபேசியர்.1:22,23; 2:14-16.


கிறிஸ்துவின் சரீரமே - சபையாகும்:


சபை என்பது ஒரு கட்டிடமல்ல! ஓர் ஸ்தாபனமும் (denomination) அல்ல!! புதிய ஏற்பாட்டில் “சர்ச்" (Church) என்ற ஆங்கில வார்த்தை 'எக்ளீஸியா' (ekklesia) என்ற கிரேக்கப் பதத்தின் மொழிபெயர்ப்பே ஆகும். 'எக்ளீஸியா' என்பதற்கு “அழைக்கப்பட்ட ஜனத்திரள்” என்பதே பொருளாகும். அதாவது, தேவனுடைய சொந்த ஜனமாய் மாறும்படி உலகத்திலிருந்து பிரித்து அழைக்கப்படுவதேயாகும்.


இவ்வாறு உலகமெங்கும் உள்ள ஜனங்களில் யாரெல்லாம் தேவனுடைய அழைப்பிற்கிணங்கி பாவத்தைவிட்டும் உலகத்தை விட்டும் வேறுபிரிந்து வருகிறார்களோ அவர்களே சபையாக உருப்பெருகிறார்கள்! அவர்களையே கிறிஸ்துவின் சரீரமென வேதம் சுட்டிக் காட்டுகிறது. ஒவ்வொரு ஸ்தலத்திலிருக்கும் கிறிஸ்துவின் சரீரத்தில் அடங்கிய நபர்களும் ஒன்றாய் செயல்பட்டு கிறிஸ்துவின் சரீரத்தைத் தங்கள் ஸ்தலத்தில் பிரதிபலிக்கிறவர்களாயிருக்க வேண்டும்.


இயேசு ஓர் மானிட சரீரத்தில் இப்பூமிக்கு வந்ததே “முதல் கிறிஸ்துவின் சரீரமாகும்.” அச்சரீரத்தின் மூலமாகவே தேவன் தன்னை உலகிற்குக் காண்பித்தார். சிறிதும் அப்பழுக்கில்லாமல், இயேசு தன்னைத்தானே பிதாவுக்கு ஒப்புக்கொடுத்து வாழ்ந்தபடியால், தன் ஜீவியத்தின் இறுதியில், “என்னைக் கண்டவன் பிதாவைக் கண்டான்" என இயேசுவால் ஆணித் தரமாகக் கூறமுடிந்தது! (யோவான்.14:9).


இன்று நம்மைச் சுற்றியிருக்கும் உலகத்திற்கு நாம் யாவரும் சபையாக இணைந்து இயேசுவைக் காண்பிப்பதே நம்முடைய அழைப்பாகும்! நம்மில் ஒருவரும் தன்னில்தானே இயேசுவை நிறைவாக வெளிப்படுத்திக் காண்பித்திட முடியாது. இதற்காகவே நாம் ஒருவருக்கொருவர் தேவையாயிருக்கிறோம். நம்மில் 'தேர்ந்த' ஒருவர்கூட இன்னமும் சமநிலையை அடையாதவர்தான்! நம்மில் வலிமையான பல பகுதிகள் இருக்கலாம். இருப்பினும் நம்மில் பெலஹீனமான பகுதிகளும் இருக்கத்தான் செய்கின்றன!! ஒரு குறிப்பிட்ட பகுதியில் நாம் கிறிஸ்துவை ஆழமாய் வெளிப்படுத்துகிறவர்களாய் இருக்கலாம். ஆனால் வேறு சில பகுதிகளில் கிறிஸ்துவை நாம் வெளிப்படுத்துவதோ சொற்பமானதாகவே இருக்கும்!!


ஆனால், நாம் ஒன்றாய் இணைந்துவரும்போது, தன் ஜீவியத்தில் வலிமையான பகுதியைப் பெற்றிருக்கும் ஒருவர் பெலஹீனமான பகுதியைப் பெற்றிருக்கும் மற்றவரின் குறையை சமநிலைப்படுத்தி விடுவார்! ஆகவே நாம் ஒருவரையொருவர் அன்புகூர்ந்து; ஒருவருக்கொருவர் தாழ்த்தி; அடங்கி ஜீவிப்போமென்றால், அவிசுவாசமான இவ்வுலகத்திற்கு நம் மூலமாய் நாம் கிறிஸ்துவை முழுமையாகப் பிரதிபலித்துக் காண்பித்திட முடியும். தேவன் சபையைக் குறித்து வைத்திருக்கும் நோக்கம் இதுவேயாகும்!ஓர் ஸ்தல சபையில் அங்கமாகுதல்:


நீங்கள் மனந்திரும்பிக் குணப்பட்டவுடன், தேவனுடைய வார்த்தைக்கு கீழ்ப்படிய வாஞ்சித்து இயேசுவின் அடிச்சுவடுகளைப் பின்பற்றத் தீவிரிக்கும் ஓர் சீஷர்களின் ஐக்கியத்தோடு சேர்ந்துகொள்ள நீங்கள் முயற்சிக்கவேண்டியது அவசியமாகும்.


இங்குதான் ஓர் புதிய விசுவாசி தன்னைச் சுற்றியுள்ள கிறிஸ்தவ உலகில் காணும் எண்ணற்ற ஸ்தாபனங்களையும் குழுக்களையும் கண்டு குழப்பமடைந்திட முடியும்! துரதிர்ஷ்டமாக உபதேசத்தின் ஒரு முனையிலிருந்து மறுமுனை வரைக்கும் ஏராளமான ஸ்தாபனக் குழுக்கள் தோன்றிவிட்டன. இக்குழுக்களில் ஒருவர் பாக்கியில்லாமல், தாங்கள்தான் இப்பூமியில் கிறிஸ்துவை வெளிப்படுத்தும் உண்மையான ஸ்தானாதிபதிகள் எனவும் மார்தட்டிக் கொள்கிறார்கள்!!


இக்குழுக்களில் அநேகர், “நீங்கள் எங்கள் குழுவில் சேராவிட்டால் கிறிஸ்துவின் சரீரத்தில் அங்கமாயிருக்க முடியாது!” என தங்கள் வேதாகமத்தை 'அடித்து' ஆணித்தரமாகக் கூறி, உங்களிடம் நிரூபிக்கவும் செய்வார்கள்!?


"அவர்களின் குழுவில் இல்லாமலும், அவர்கள் பற்றிக் கொண்டிருக்கும் அதே ‘விந்தை உபதேசங்களைப் பற்றிக்கொள்ளாமலும் இருக்கும் அநேகம் பிள்ளைகள் தேவனுக்கு உண்டு!” என்ற உண்மையை பெரும்பாலான இக்குழுவினர்களுக்கு உணர்த்துவிப்பது கிட்டத்தட்ட சாத்தியமற்ற செயலாகவே இருக்கிறது. அவ்வளவாய் இவர்களின் “அகந்தை" வலிமை நிறைந்திருக்கிறது! இவ்வாறு இன்றைய கிறிஸ்தவ உலகத்தைப் பீடித்திருக்கும் பரிசேயத்துவத்திற்கும், தனி நபர் ஆதிக்க உணர்வுகளுக்கும் நீங்கள் சிக்கிக்கொள்ளாதபடி எச்சரிக்கையாயிருங்கள்!!


ஆகவே, தன் ஆண்டவரை நேசித்து அவரை உத்தமமாய் பின்பற்ற வாஞ்சிக்கும் எல்லோரிடமும் நீங்கள் திறந்த மனதுள்ளவர்களாயிருங்கள். நீங்கள் உபதேசத்திற்கு வைத்திடும் புள்ளியாகிய ‘ர்'யையும்; உபதேசத்திற்கு நீங்கள் சுளிக்கும் கொம்புமாகிய ‘ரி'யையும் அப்படியே மற்றவர்கள் செய்யாதவர்களாயிருக்கலாம்! ஆனால், தேவன் அவர்களுக்குத் தந்த வெளிச்சத்தில் அவர்கள் உண்மையாய் நடப்பவர்களாயிருந்தால் இவ்வித “ர்” “ரி” போன்ற உபதேச வித்தியாசங்களெல்லாம் ஒரு பொருட்டே அல்ல! தேவன் நமக்குக் கொடுத்த வெளிச்சத்தில் அவர்களும் நடக்கவேண்டும் என நாம் அவர்களை ஒருக்காலும் வற்புறுத்தவே கூடாது!!தேவனுடைய பிள்ளைகள் அனைவரையும் ஏற்றுக் கொள்ளுதல்:


தேவன் தனக்குப் பிள்ளைகளை உடையவராயிருக்கிறதுபோல நாமும் எவ்வளவு அதிகம் முடியுமோ அவ்வளவு அதிகமாய் சகோதர சகோதரிகளை உடையவர்களாயிருக்க வேண்டும்!


தேவன் ஏற்றுக்கொண்டவர்கள் எவர்களோ அவர்கள் அத்தனை பேரையும் நாமும் முழு இருதயமாய் உளமுவந்து ஏற்றுக்கொள்ள வேண்டும். “இயேசு அவர்களைச் சகோதரரென்று சொல்ல வெட்கப்படவில்லை” (எபிரெயர் 2:11) என இருக்கும்போது நாமும் அவ்விதமே அவர்களை அழைப்பதற்கு வெட்கப்படக்கூடாது.


நாம் ஐக்கியம் வைத்துக்கொள்ளும் முக்கியமான இவ்விஷயத்தில், விசுவாசிகள் இரு எதிர்மறையான கோடிக்குச் சென்றிட முடியும். ஒரு கோடிக்குச் செல்லும் விசுவாசிகள், ஐக்கியம் வேண்டும் என்பதற்காக சத்தியத்தையே மறுதலித்து ஒத்துப்போகிறார்கள்! மறுகோடிக்குச் செல்லும் மற்ற விசுவாசிகள், தங்களோடு ஐக்கியம் வேண்டுமென்றால் தாங்கள் விசுவாசிக்கும் எல்லா ஷரத்துகளையும் அப்படியே ஒரே சமநிலையாய் (uniformity) ஏற்றுக்கொள்ள வேண்டும் என வலியுறுத்துகிறார்கள்! நீங்கள் ஞானமுள்ளவர்களாயிருந்தால் இந்த இருகோடிக்குச் சென்றுமாயும் நிலை யிலிருந்து மிகுந்த ஜாக்கிரதையாக உங்களை நீங்கள் காத்துக் கொள்வீர்கள்!


தேவனுடைய பணி எவ்விதம் நடைபெற வேண்டுமோ அவ்விதமாய் பணி செய்திட சம்மதிக்காதவர்களோடு நாம் உடன் வேலையாட்களாய் சேர்ந்து (WORK TOGETHER) ஊழியம் செய்திட முடியாது என்பது திண்ணம்! ஆனால் நாம் ஒருவரோடு ஐக்கியம் (FELLOWSHIP) கொள்ளுவதற்கோ, நாம் விசுவாசிக்கும் ஒவ்வொரு சிறிய விஷயத்தையும் கூட அவரும் அங்ஙனமே விசுவாசிக்க வேண்டும் என நாம் ஒருக்காலும் ஒருவரை வற்புறுத்தக்கூடாது! நாம் ஒருவரோடு உடன் வேலையாளாய் சேர்ந்து ஊழியம் செய்வதற்கும் அவரோடு ஐக்கியம் கொள்ளுவதற்கும் இடையில் பெருத்த வித்தியாசம் உண்டு!


எப்படியாயினும், உங்கள் ஸ்தலத்தில், உங்களுக்கு ஓர் ஆவிக்குரிய இல்லமாக விளங்கும் ஒரு சபைக்காக நீங்கள் வாஞ்சித்து நோக்குங்கள். அவ்வித ஆவிக்குரிய இல்லமாய் திகழும் சபைக்கு உங்களை நீங்கள் அர்ப்பணித்து விடுங்கள்!!புதிய ஏற்பாட்டு சபை:


புதிய ஏற்பாட்டில் சபை எங்ஙனம் இருக்க வேண்டும்? என்பதை சற்று அறிந்துகொண்ட நீங்கள்,


உங்கள் ஸ்தலத்தில் ஏராளமான சபைகளின் மத்தியில் மேற்கண்ட புதிய ஏற்பாட்டுச் சத்தியங்களுக்கொப்பாய் காணப்படும் ஓர் சபையையே தேர்ந்தெடுங்கள்!


நாட்கள் செல்லச் செல்ல நீங்கள் இப்போது அதிக அதிகமாய் புதிய ஏற்பாட்டு சத்தியங்களை அறிந்து கொள்வீர்கள்! இச்சமயத்தில், இதுவரை நீங்கள் சென்றுகொண்டிருந்த 'சபையை' விட்டு தேவனுடைய வார்த்தை யோடு அதிக இணக்கமாய் இருக்கும் இன்னொரு சபையில் நீங்கள் சேர்ந்திட எண்ணத்துவங்கலாம், அது சாத்தியமே!! தேவன் நம் வாழ்விற்காக நியமித்த மேலானதைப் பெற்றுக் கொள்ள வாஞ்சித்து, தன் ஆவிக்குரிய ஜீவியத்தில் வளர்ந்துவரும் ஒருவருக்கு இவ்விதமாய் எண்ணம் உண்டாவது இயற்கையானதேயாகும். துரிதம் கொள்ளுங்கள்! உங்களுக்காக தேவன் நியமித்திருக்கும் மேலானதைவிட சிறிதாகிலும் குறைவான ஒன்றை ஏற்றுக்கொள்ள ஒரு போதும் துணியாதீர்கள்!! அவ்விதமாய் நீங்கள் முழு இருதயம் கொண்டிருந்தால் நித்தியத்தில் நீங்கள் மனம்வருந்தும்படி ஒன்றுமே இருக்காது!!


ஓர் புதிய ஏற்பாட்டின் சபை, ஒருக்காலும் ஏதோ ஒரு ஸ்தாபனப் பெயரையும் கொண்டிருக்காது! அந்த சபை இயேசுகிறிஸ்துவின் நாமத்தில் பரிசுத்தாவியினால் கூட்டப்பட்ட ஓர் ஜனங்களின் ஐக்கியமாகவே இருக்கும். இவ்விதமாய் கூட்டப்பட்ட ஓர் ஐக்கியத்தில் மாத்திரமே “நான் அவர்கள் நடுவில் இருப்பேன்” என ஆண்டவர் வாக்குரைத்திருக்கிறார்!! (மத்.18:20).


நீங்கள் அங்கம் வகித்திடப்போகும் சபை வேதாகமத்தை மாத்திரமே தேவனுடைய வார்த்தையாகவும், தங்கள் விசுவாசத்திற்கும் ஜீவியத்திற்கும் தேவனுடைய வார்த்தை ஒன்றையே அஸ்திவாரமாகக் கொண்டவர்களாயிருக்க வேண்டும். இதற்கு மாறாக, இன்று தனிநபர் தலைமையில் ஆதிக்கம் கொண்டு இயங்கும் அநேகக் குழுக்கள், வேதாகமம் ஒன்றே தங்களைக் கட்டுப்படுத்தும் அதிகாரம் கொண்டது என சொல்லிக் கொண்டாலும், அப்புனித அதிகாரத்திற்கு இணையான தங்கள் தலைவர்களின் பேச்சுக்களையும்; அவர்கள் எழுதிய ஷரத்துக்களையும் இக்குழுவினர் அடிக்கடி கோடிட்டுப் பேசுவதை நாம் கண்கூடாகக் காணமுடியும்! இப்படிப்பட்டவர்களை நீங்கள் நெருங்கி அணுகும் போது அவர்கள் தேவனுடைய வார்த்தையைவிட தங்கள் தலைவர்களின் போதனைகளால் மாத்திரமே அதிகம் கட்டுண்டிருப்பதைக் காண்பீர்கள். அவர்களில் அநேக நல்ல காரியங்கள் இருக்கக்கூடும். ஆனால் அதற்காக நீங்கள் அவர்களோடு சேர்ந்துவிட்டால் வெகு சீக்கிரத்தில் அவர்களின் தனிமனித தலைமை ஆதிக்க உணர்வுகள் உங்களையும் அடிமையாக்கிவிடும்!


தேவனுடைய சபையில் எல்லா விசுவாசிகளும் ஒரே சமமாக, ஆசாரியர்களாகவே (Priests of God) இருக்கிறோம். ஏனெனில், அவ்விதம் தேவனே நம் எல்லோரையும் ஆசாரியர்களாக்கி இருக்கிறார் (1 பேதுரு. 2:9). இதற்கு மாறாக, ஒரு ‘சபையில்' ஓர் விசேஷ பாதிரிக் குழுவினர் அல்லது 'பாஸ்டர்கள்' மாத்திரமே தேவனுடைய வார்த்தையைப் பிரசங்கிப்பதற்குத் தகுதி கொண்டவர்கள்போல் ஆக்கிரமித்திருந்தால்..... அது முழுக்க முழுக்க தேவனுடைய சித்தத்திற்கு விரோதமானதாகும்!


சபையை நடத்தும் பொறுப்பை (Leadership of the Church) தேவன், மூப்பர்களிடம் (மூப்பர்கள் - அதாவது, ஒன்றுக்கும் அதிகமானோரிடம்) ஒப்படைத்திருக்கிறார். ஆனால் இந்த மூப்பர்கள் முழு நேர ஊழியர்களாய்' இருக்கவேண்டும் என்ற நிர்ப்பந்தம் இல்லவே இல்லை! (அப்.14:23; தீத்து1:5).


ஓர் புதிய ஏற்பாட்டு சபையின் கூட்டத்தில் “தேவனுடைய வார்த்தை பேசப்படுவதே” பிரதானமாய் வலியுறுத்தப்பட்டிருக்கும். மேலும், அவ்வித சபையில் அங்கிருங்கும் எல்லா விசுவாசிகளும் அவரவர்களுடைய வளர்ச்சிக்கு ஏற்றவிதத்திலும் அவர்களின் ஆவிக்குரிய வரத்தின் அளவின் படியும் தேவனுடைய வார்த்தையைப் பகிர்ந்தளிப்பதற்கு சுயாதீனம் தரப்பட்டிருக்கும். அவ்வாறு பேசப்படும் வார்த்தைகள் உண்மையாகவே பரிசுத்தாவியின் அபிஷேகங் கொண்டதாயிருக்குமென்றால், அவ் வார்த்தைகள் ஆறுதலளித்து; சவாலிட்டு அழைத்து; ஜனங்களை ஊன்றக் கட்டவும் செய்யும் (1கொரி.14:3), மேலும் 'மனுஷருடைய இருதயத்தின் அந்தரங்கங்களும் வெளியரங்கமாகி' தேவனே நம்மோடு நேரடியாகப் பேசுகிறார்! என ஜனங்கள் ஏற்றுக்கொள்ளும்படியாகவும் இருக்கும் (1கொரி.14:24-31).


ஓர் உண்மையான புதிய ஏற்பாட்டு சபை, “சீஷர்களை உருவாக்கு வதும், அவர்களை இயேசு போதித்த உபதேசங்களுக்கு முழுமையாகக் கீழ்ப்படியச் செய்வதுமே” தன்னுடைய பிரதானமான வாஞ்சையாய் கொண்டிருக்கும் (மத்தேயு.28:19-20). மேலும் இவ்வித சபையின் ஓர் தனிச்சிறப்பாய் இருப்பது யாதெனில் அவர்கள் ஒருவரிலொருவர் அன்புள்ளவர்களாயிருப்பார்கள்! இயேசுவும் அதை வலியுறுத்தியே, “நீங்கள் ஒருவரிலொருவர் அன்புள்ளவர்களாயிருந்தால் அதினால் நீங்கள் என்னுடைய சீஷர்களென்று எல்லாரும் அறிந்து கொள்ளுவார்கள்” (யோவான்.13:35) எனக் கூறினார்.


இவ்வாறு தேவனுடைய வார்த்தை எங்கு வல்லமையாய் பேசப்படுகிறதோ; எங்கு தேவனுடைய அன்பு ஆளுகை செய்கிறதோ; எங்கு தேவனுடைய பிரசன்னம் நெருக்கமாய் உணரப்படுகிறதோ; அப்படிப்பட்ட ஓர் ஸ்தல சபையில்தான் நீங்கள் அங்கம் வகிக்க வேண்டும்!ஐக்கியத்தின் முக்கியத்துவம்:


நாம் பிறரோடு அன்பான ஐக்கியம் கொண்டு சேர்ந்து வாழ பிரயாசப்படும் பொழுதுதான் “நான் எவ்வளவாய் என் சுயத்தை வெறுக்க வேண்டுமென்ற தேவையையும்; அனுதினமும் நான் சிலுவையை எடுக்க வேண்டுமென்ற தேவையையும்" நாம் கண்டுகொள்ள முடியும். இவ்விதக் கிரியை நமக்குள் நடைபெறும் பொழுது மாத்திரமே ஐக்கியம் நமக்குள் நிலைவரப்படும்!!


தேவ ஜனங்களுக்கிடையில் எப்படியாகிலும் பிரிவினை கொண்டு வருவதற்குச் சாத்தான் துரிதமாய் செயல்பட்டுக் கொண்டிருக்கிறான். நாம் ஆவிக்குரிய வளர்ச்சியுடையவர்களாயிருந்தால், நமக்கும் பிறருக்கும் இடையில் முளைத்தெழும்பும் பிரிவினைகளைத் தவிர்ப்பதற்கு மிகுந்த ஜாக்கிரதையைப் பெற்றிருப்போம்.


கிறிஸ்துவின் சரீரத்தில் ஐக்கியம் முறிவது ஓர் பெரிய இழப்பாகும்! ஆம், அந்த இழப்பு தேவனுக்கு மாத்திரமல்லாமல் நமக்கும் பேரிழப்பாகவே இருக்கும்!!


சபையின் ஐக்கியத்தில் சொல்லிமுடியா வல்லமை அடங்கியுள்ளது. ஒன்றாய் இணைந்திருக்கும் ஓர் சபையில் மாத்திரமே சாத்தான் ஜெயிக்கப்பட முடியும். “இரண்டு விசுவாசிகளே இருந்தாலும்" தங்கள் ஆவியில் முழுமையாய் ஒன்றாகி, சீரிய ஐக்கியம் கொண்டிருந்தால், அவர்கள் பிதாவைக் கேட்பதெதுவோ அவ்விண்ணப்பங்கள் அவர்களுக்கு கேட்கப்படும்! ஏனெனில் இவ்விதம் “பரிசுத்தாவியினால் இரண்டு அல்லது மூன்று இணைந்த ஆத்துமாக்கள் எங்கு ஒன்றாய் கூட்டப்பட்டார்களோ அங்கே நான் (இயேசு) என்னுடைய வல்லமையோடு பிரசன்னமாகுவேன். இவ்வித ஐக்கியத்தைக் கொண்ட விசுவாசிகள், உன்னதங்களிலுள்ள சாத்தானின் அதிகாரங்களையும், பூமியிலுள்ள அவனுடைய அதிகாரங் களையும் கட்டி சாத்தானின் வல்லமைகளைச் சிதறடிப்பார்கள்!! மேலும் இவ்வித ஐக்கியம் கொண்டவர்கள் தங்கள் ஜெபங்களின் மூலமாய் ஜனங்களை சாத்தானின் கட்டுகளிலிருந்து விடுவிக்கவும் செய்வார்கள்!” (மத்.18:18-20 விரிவாக்க வசனங்கள்) என இயேசு கூறினார்.


இப்படியெல்லாம் காரியம் இருப்பதால்தான், சாத்தான் விசுவாசி களுக்கு மத்தியில் பிரிவினையைக் கொண்டுவருகிறான். அங்ஙனமே, ஓர் சபையில் மன வேறுபாடுகளையும் அவன் தனித்தனி குழுக்களையும் உருவாக்குகிறான். இவ்வாறு ஓர் ஐக்கியமான சபையின் தாக்குதலால் தன்னுடைய ராஜ்ஜியம் சிதைந்துவிடாதபடி அவன் தந்திரமாய் முயற்சிக்கிறான்!! ஆகவேதான் சாத்தானுடைய தந்திரங்களைக் குறித்து நாம் அறியாமையில் இல்லாமல் மிகுந்த விழிப்போடு இருக்க வேண்டும்.


இப்பூமியில் வாழ்ந்த கிறிஸ்துவின் மானிட சரீரம் அங்கவீன மாயிருந்து, அவைகள் ஒன்றாய் இணைந்து செயல்படாமலும், இருந்திருக்கு மென்றால், எவ்வளவாய் கிறிஸ்துவின் சரீரம் ஆற்றிய பணி மட்டுப்படுத்தப்பட்டிருக்கும் என்பதை எண்ணிப் பாருங்கள். ஆம், அவ்வாறிருந்திருந்தால் இயேசு இவ்வுலகத்தில் வெளிப்படுத்திய தேவனுடைய மகிமை பூரணமானதாய் இருந்திருக்கவே முடியாது. இதேபோல்தான், ஆவிக்குரிய சரீரமாகிய சபைக்குத் தலையாக இருக்கும் கிறிஸ்துவானவர், விசுவாசிகள் பிரிவினையில் இருக்கும் போது தன்னுடைய கிரியையில் மட்டுப்படுத்தப்படுகிறார்!


இச்சமயத்தில் நமக்கு ஏற்படும் இழப்பு பெரும் நஷ்டமாகும்! இவ்வாறு, தேவனுடைய பிள்ளைகள் ஒருவரேயாகிலும் அவரோடு உள்ள ஐக்கியத்தை நீங்கள் துண்டித்துக் கொள்வீர்களென்றால், தேவனுடைய ஐசுவரியத்தில் கணிசமான பங்கை இழந்தவர்களாகவே நீங்கள் நிற்பீர்கள். “அக்குறிப்பிட்ட தேவ ஐசுவரியத்தை” நீங்கள் துண்டித்துக்கொண்ட தேவபிள்ளையின் மூலமாக நீங்கள் பெறும்படியே தேவன் நிர்ணயம் செய்திருக்கக்கூடும்! ஆம், “சகல பரிசுத்தவான்களோடுங்கூட" சேர்ந்துதான் அறிவுக்கெட்டாத கிறிஸ்துவின் அன்பை நாம் அறிந்துகொள்ள முடியும்!! (எபேசியர்.3:17-19).


(மேலும் கிறிஸ்தவ ஐக்கியத்தின் முக்கியத்துவத்தை ஆழமாய் அறிந்துகொள்ள “கிறிஸ்துவுக்குள் ஒரே சரீரம்” (One Bodly in Christ) என்ற நான் எழுதிய ஆங்கிலப் புஸ்தகத்தை நீங்கள் படிக்கலாம்).

அதிகாரம் 10
நம் காலச்சக்கரத்தின் முடிவு

பழைய ஏற்பாட்டுக் காலத்தில், மரணத்திற்குப் பின்பான வாழ்க்கையைக் குறித்தும் நம் எதிர்காலத்தைக் குறித்த தேவனுடைய

திட்டத்தைப் பற்றியும் தெளிவான அறிவு உண்டாயிருக்கவில்லை. ஆனால் இந்த இரண்டு விஷயங்களையும் குறித்து புதிய ஏற்பாட்டில் இயேசு மிகவும் தெளிவாக போதித்திருக்கிறார். ஆகவே இவ்விஷயங்களைக் குறித்து நாம் அறிந்துகொள்ளுவது நமக்கு சாலச் சிறந்ததேயாகும்.மரணத்திற்குப் பின்பு என்ன? :


இயேசு மரணத்தை ஜெயித்தபடியால், இப்போது ஓர் உண்மையான இயேசுவின் சீஷனுக்கு மரணம் ஓர் அச்சுறுத்தும் பயங்கரம் அல்ல! ஆம், மரணம் நமக்கு ஓர் தோற்கடிக்கப்பட்ட சத்துருவேயாகும்!! இயேசு மரித்து தன் மரணத்தினால் சாத்தானின் வல்லமையை உரிந்து போட்டதால், இனியும் நாம் மரணபயம் கொண்டிருக்க அவசியமில்லை என சத்திய வேதம் வெற்றிக்களிப்போடு நமக்கு எடுத்தியம்புகிறது (எபி.2:14,15). இனிமேல், அவருடைய சீஷர்களுக்கு இயேசு மாத்திரமே மரணத்தின் வாசலைத் திறந்திட முடியும்! அவர்களைச் சாத்தான் 'தொடக்கூட முடியாது!


ஒரு மனிதன் மரிக்கும் பொழுது என்ன சம்பவிக்கிறது? ஐசுவரியவானையும் லாசருவையும் குறித்துப் பேசப்படும் பொழுது, இயேசு தெளிவாக இக்கேள்விக்குப் பதில் கொடுத்தார். இச்சத்தியங்களை அறிந்து கொள்ளுவதற்கு முன்பாக, நீங்கள் சற்று அமர்ந்து, சிறிது நேரம் செலவழித்து லூக்கா.16:19-31 வசனங்களைக் கவனமாய் வாசியுங்கள்.


இந்நிகழ்ச்சி ஓர் உவமானமல்ல! எந்த உவமானத்திலும் இயேசு யாருடைய பெயரையும் குறிப்பிட்டதில்லை. ஆனால், இந்நிகழ்ச்சியிலோ இயேசு பெயரைக் குறிப்பிட்டு பேசினார். ஆம், ஐசுவரியவானும் லாசருவும் இஸ்ரவேல் தேசத்தில் உயிரோடு வாழ்ந்தவர்களாவார்கள்!!


நாம் வாசித்த லூக்கா.16-ம் அதிகாரத்தின் நிகழ்ச்சியில், மரித்தவர்கள் செல்லும்படி 'இரு ஸ்தலங்கள்' மாத்திரமே உண்டு என்பதை இயேசு தெளிவாக எடுத்துக்காட்டியுள்ளார். 1) ஆபிரகாமின்மடி, இதைப் பரதீசி' Paradise என்றும் வேதம் அழைக்கிறது. 2) நரகம். இந்த ஸ்தலம் கொடிய வாதையும் வேதனையும் நிறைந்த இடமாகும். ஒரு மனிதன் மரித்தவுடன், இப்பூமியில் அவனுடைய சரீரம் அடக்கம் பண்ணப்படுவதற்கு முன்பாகவே அவனுடைய ஆத்துமா இந்த இரு ஸ்தலங்களில் ஏதேனும் ஓர் இடத்திற்கு உடனடியாகச் செல்கிறது! அவன் செல்லும் ஸ்தலத்தில், தன்னைச் சுற்றி சம்பவிக்கும் யாவையும் அறிந்துகொள்ளும்படி அவன் உணர்வுள்ளவனாகவே இருப்பான்! ஓர் சரீரத்தை உடையவனாய் அவன் இல்லாதிருந்தும், ஆறுதலையோ அல்லது வேதனையையோ உணரும் நிலையில்தான் இருப்பான்!!


திரித்துவத்தைப்போலவே, மனிதன் -ஆவி, ஆத்துமா, சரீரத்தைக் கொண்டவனாயிருக்கிறான் (1தெச.5:23), மரணத்தின் போது ஆவியும் ஆத்துமாவும் சரீரத்தை விட்டுப்பிரிந்து பரதீசிக்கோ அல்லது நரகத்திற்கோ செல்லுகிறது!


இயேசு சிலுவைமரத்தில் தொங்கிக் கொண்டிருந்தபோது, மனந்திரும்பிய கள்வனைப்பார்த்து “இன்று நீ என்னோடுகூட பரதீசியி லிருப்பாய்” எனக் கூறினார். அவர் சொல்லியபடியே, அவர்களுடைய ஆத்துமாக்கள் சரீரத்தைவிட்டுப் பிரிந்தவுடன், இயேசுவும் கள்வனும் அன்றே பரதீசிக்குச் சென்றார்கள். தன்னுடைய மரணத்திற்குப் பின்பு, தான் இரவும் பகலும் மூன்றுநாள் பூமியின் இருதயத்தில் இருப்பேன் என இயேசு ஏற்கெனவே கூறியிருந்தார் (மத்.12:40). எனவே, அச்சமயத்தில் பரதீசியானது பூமியின் இருதயமாகிய மத்திய பாகத்தில்தான் இருந்திருக்க வேண்டுமென்பதை இதன் மூலம் அறிந்து கொள்ளுகிறோம்.


ஆனால் கிறிஸ்து உயிர்த்தெழுந்தவுடன், “அவர் பூமியின் தாழ்விடங்களில் இறங்கி... சிறைப்பட்டவர்களைச் சிறையாக்கி.... உன்னதத்திற்கு ஏறினார்” (எபே.4:8, 9) எனவும் நாம் தொடர்ந்து போதிக்கப்படுகிறோம். அதாவது, பரதீசியோடு அங்கிருந்த எல்லா ஆத்துமாக்களையும் சேர்த்து தேவனுடைய உடனடி சமூகமான மூன்றாம் வானத்திற்கு இயேசு எடுத்துச் சென்றுவிட்டார்! 2 கொரிந்தியர் 12-ம் அதிகாரத்தில் 2-ம் வசனத்தையும், 4-ம் வசனத்தையும் ஒப்பிட்டுப் பார்த்தால், இப்போது பரதீசியானது மூன்றாம் வானத்தில் தான் இருக்கிறது என்பதை நாம் தெளிவாகக் காணமுடிகிறது. இப்போது, ஓர் இயேசுவின் சீஷன் மரிக்கும்போது, இந்த மூன்றாம் வானத்திற்கே உடனடியாகச் செல்லுகிறான் (பிலிப்பியர்.1:23),கிறிஸ்துவின் வருகைக்கான அடையாளங்கள்:


கிறிஸ்து இப்பூமிக்குத் திரும்ப வருவதற்கு முன்பாக அநேக சம்பவங்கள் நிகழும் என வேதம் நமக்குக் கூறுகின்றது. அவைகளில் சிலவற்றை நாம் காண்போம் :


1) யுத்தங்கள், பஞ்சங்கள், பூமியதிர்ச்சிகள்! (மத்.24:7). இந்நிகழ்ச்சிகள் பூமியில் எல்லாக் காலங்களிலும் சம்பவித்துக் கொண்டு தான் இருக்கிறது. ஆனால் இரண்டாம் உலக மகாயுத்தத்திற்குப் பின்பு (1939 - 1945) இச்சம்பவங்கள் பெருமளவில் அதிகரித்து வருவதை நாம் கண்கூடாகக் காண்கிறோம்!


2) வெடித்து உயர்வது போல், அறிவின் பெருக்கம் திடீரென உச்சகட்டத்தை நோக்கிச் சென்று கொண்டிருக்கிறது. மேலும் உலகமெங்கும் துரிதமாய் பிரயாணம் செய்யும் திறனும் அதிகரித்து விட்டது! இவைகள் கடைசி காலத்தின் அடையாளங்கள் என தானியேல் 12:4 நமக்குச் சுட்டிக் காட்டுகின்றது. இந்த இரு அடையாளங்களும் எப்பொழுதும் இருந்ததை விட இக்கடைசி 50 வருடங்களில் மிகமிக அதிகமாய் பெருகி வருகிறது!!


3) மனுஷர்கள் சுகபோகப் பிரியர்களாய் இருப்பார்கள் (2தீமோ.3:4). நம் நாட்களில், குறிப்பாக “கற்பு ஒழுக்கக்கேடு” படுமோசமாகப் பெருகி வருகிறது. நம்மை சுகபோகப் பிரியர்களாக்கும் சாத்தானின் நோக்கத்திற்கு டெலிவிஷனும், சினிமாவும், வீடியோ டேப்புகளும் அவனின் கைக்கூலிகளாகச் செயல்படுகின்றன! இவைகள் யாவும் மனிதன் கற்பு நெறியிலிருந்து தவறி விழுவதற்கே வகை செய்கின்றன.


4) மனுஷர்கள் அகந்தையுள்ளவர்களாயும் தூஷிக்கிறவர்களாயும் தாய் தகப்பன்மார்களுக்குக் கீழ்ப்படியாதவர்களாயும் மாறுகிறார்கள் (2தீமோ.3:24), அவ்விதமே, இன்று நம்மைச் சுற்றிலும் முரட்டாட்டத்தின் ஆவி வீடுகளிலும்; பள்ளிகளிலும்; கல்லூரிகளிலும்; தொழிற்சாலை களிலும் தலைவிரித்தாடு வதைக் காண்கிறோம்.

5) விசுவாசிகள், விசுவாசத்தை விட்டு விலகி வீழ்ந்து போவார்கள் (1தீமோ.4:1). எண்ணற்ற வஞ்சிக்கும் உபதேச தந்திரங்களுக்குள் “அநேக விசுவாசிகள்” வீழ்ந்து பலியாவது நம் நாட்களில் கண்கூடாய் காணும் துயரமாகும்!


6) ‘மறு ஜென்மம்' அடைவதற்கொப்பாய் இஸ்ரவேல் தேசம் மீண்டும் உதயமாகும். அதாவது, இஸ்ரவேலுக்கு அடையாளமாக உள்ள அத்திமரம் மீண்டும் துளிர்விடும் என லூக்கா 21:29-32 கூறுகிறது. கி.பி.70-ம் ஆண்டில் யூதர்கள் உலகின் கடைகோடியெங்கும் சிதறுண்டு போனார்கள். அவ்வருடங்களிலிருந்து சுமார் 19 நூற்றாண்டுகளாக இஸ்ரவேலாகிய இந்த அத்திமரம் பட்டுப் போயிருந்தது. ஆனால் 1948-ம் ஆண்டு மே மாதம் இஸ்ரவேல் தேசம் மறு ஜென்மமடைந்து மீண்டும் தோன்றியது! ஆம், அத்திமரம் துளிர்விட்டது!! இயேசு மேலும் கூறுகையில் புறஜாதியாரின் காலம் நிறைவேறும் வரைக்கும் 'எருசலேம்' புறஜாதியாரால் (யூதரல்லாதோரால்) மிதிக்கப்படும் என்று கூறினார் (லூக். 21:24). இவ்வசனம் நம் நாட்களில் நிறைவேறி 19 நூற்றாண்டு களுக்குப் பின்பு முதல் முறையாக 1967-ம் ஆண்டு ஜுன் மாதத்தில்தான் இஸ்ரவேல், எருசலேம் நகரைத் தன் வசப்படுத்தியது!


இன்று உலகில் நடைபெற்றுக் கொண்டிருக்கும் சம்பவங்கள் நம் ஆர்வத்தைத் தூண்டி நம்மைப் பரவசப்படுத்துகிறவைகளாகவே இருக்கின்றன! சம்பவித்துக் கொண்டிருக்கும் அடையாளங்கள் யாவும், கிறிஸ்து வெகு சீக்கிரத்தில் வரப்போகின்றார் என்ற உண்மையையே நமக்குப் பறைசாற்றி அறிவிக்கின்றன!!முதலாம் உயிர்த்தெழுதலும், கிறிஸ்துவின் நியாயாசனமும்:


கிறிஸ்து வரும்பொழுது, அவருக்குச் சொந்தமானவர்களாகிய நாம் அனைவரும் ஒரு இமைப்பொழுதிலே மறுரூபமாக்கப்படுவோம். அச்சமயம், முதிர்வயதும் சாவாமையும் இல்லாத புதிய சரீரங்களை நாம் யாவரும் தரித்துக்கொள்வோம் (1 கொரி.15:51-53), நாம் அடையும் புதிய சரீரம், இயேசு உயிர்த்தெழுந்தபின் பெற்ற அதே மகிமையான சரீரத்திற்கொப்பாகவே இருக்கும் (பிலி.3:20,21), மேலும், அச்சமயம் கிறிஸ்துவுக்குள் மரித்தவர்களும் தங்கள் கல்லறைகளிலிருந்து புதிய சரீரத்தோடு உயிர்த்தெழுந்து, உயிரோடிருக்கும் இயேசுவின் சீஷர்களோடு சேர்ந்து, தங்கள் ஆண்டவரை மத்திய ஆகாயத்தில் சந்திக்கும்படி துரிதமாய் வானங்களில் ஏறுவார்கள் (1 தெச. 4:13-17).


பின்பு, கிறிஸ்து தன்னுடைய நியாயத்தீர்ப்பின் சிங்காசனத்தில் வந்து அமர்வார். அவ்வேளையில் கிறிஸ்து நம் ஒவ்வொருவருக்கும் சரியான மதிப்பீடு தந்து நியாயந்தீர்ப்பார். மேலும், நாம் இப்பூலோக ஜீவியத்தில் ஜீவித்த உண்மையான ஜீவியத்தின் அளவின்படி, தனித் தனியாக நாம் ஒவ்வொருவரும் நம்முடைய பிரதிபலனை அவரிடமிருந்து அச்சமயத்தில் பெறுவோம்!!


அந்நாளில், “முந்தினோர் அநேகர் பிந்தினோராயும், பிந்தினோர் அநேகர் முந்தினோராயும்” இருப்பதை நாம் கண்கூடாகக் காண்போம் (மத்.19:30). இப்பூமியில், நம்முடைய பார்வைக்கு ஆழ்ந்த ஆவிக்குரிய மனிதர்களைப் போல் காணப்பட்ட அநேகர், தேவனுடைய பார்வையில் உண்மையற்றவர்களாய் ஜீவித்ததை அன்று நாம் கண்டு வியப்போம்! இதற்கு மாறாக, நாம் சாதாரணமாக எண்ணிய சிலர் தேவனுடைய பார்வையில் மகா உத்தமமான வாழ்க்கை வாழ்ந்ததையும் அன்று நாம் கண்டு வியக்கப்போகிறோம்!!


அந்நாளில் ஒருவரும் அறியாத உத்தமமாய் ஜீவித்த அற்பமான விதவை, உலகப்புகழ் கலாநிதியான உண்மையற்ற பிரசங்கியை முந்திச் சென்றிருப்பதை நம் கண்கள் கண்டு வியக்கும்!


அந்நாளில், இப்பூமியில் மனுஷர்கள் விலையேறப்பெற்றதாக மதிப்பிட்ட பணம்; புகழ் போன்ற ஏராளமானவைகள் தேவனுக்கு முன்பாக கடுகளவும் மதிப்பு பெறாததையும் நாம் காண்போம். ஆனால், மனுஷர்கள் மதிப்பு கொடுக்காத பரிசுத்தம்; தாழ்மை; சுயநலமின்மை; இரக்க குணம்: நன்மை செய்யும் நற்குணம் போன்ற அநேக தெய்வ சுபாவங்களையோ அன்று தேவன் பெருமதிப்பு கொடுத்து அங்கீகரிப்பதையும் நாம் கண்டு கொள்ளுவோம்!


எல்லாவற்றிற்கும் உச்சகட்டமாக, வேதம் குறிப்பிடும் “ஆட்டுக் குட்டியானவரின் திருமணம்” அந்நாளில் நடைபெறும். இந்த ஆவிக்குரிய திருமணம் இயேசுகிறிஸ்துவுக்கும், அவருடைய மணவாட்டிக்கும் நிகழும் நம் காலச்சக்கரத்தின் முடிவு திருமணமேயாகும். யார் இந்த மணவாட்டி? இப்பூமியில் தங்களைத் தாங்களே வெறுப்பதற்கு உண்மையுள்ளவர்களாயிருந்து, தங்கள் சிலுவையை அனுதினமும் எடுத்துத் தன் ஆண்டவரைப் பின்பற்றிய அவருடைய சீஷர்களே மணவாட்டியாவார்கள்!! (வெளி.19:8-10).


நம் ஆண்டவருக்காகவும் அவருடைய சுவிசேஷத்திற்காகவும் நாம் தவறாய் புரிந்து கொள்ளப்பட்டு; பகடி செய்யப்பட்டு; அவமானத்திற்குள்ளாகி; துன்புறுத்தப்பட்டு.... ஏன், மரணமே அடைந்திருந்தாலும் அவையாவும் தகும்! என்பதை நாம் அந்நாளில் கண்டுகொள்வோம்!!ஆயிரவருட அரசாட்சி:


பின்பு, தெய்வ சமாதானம் நிறைந்த ஆயிரவருட அரசாட்சி இப் பூமியில் துவங்கும். அந்த ஆட்சியில் ஏதேன் தோட்டத்திற்கொப்பான சூழல் பூமியெங்கும் காணப்படும். அப்புனித ஆட்சியில் புலி வெள்ளாட்டுக் குட்டியோடே படுத்திருக்கும்! பால்குடிக்கும் குழந்தை விரியன் பாம்பின் வளையின்மேல் விளையாடும்! (ஏசாயா 11:6-9).


அப்போது, இயேசு எருசலேம் துவங்கி பூமியின் மீதெங்கும் ராஜாவாய் இருந்து ஆளுகை செய்வார் (சகரியா 14:9-21). அந்த ஆயிரம் வருடங்கள் முழுவதும் சாத்தான் கட்டப்பட்டிருப்பான். ஆம், இப்போது அவன் பூமியில் தொடர்பு கொண்டிருப்பதுபோல் அந்நாளில் இருக்காது!


அந்த ஆயிரம்வருட அரசாட்சியின் முடிவில், பூமியில் வாசமாயிருக்கும் மனந்திரும்பாத குடிமக்கள் மீண்டும் ஒருமுறை சோதிக்கப்படும்படி கொஞ்சக்காலம் சாத்தான் விடுதலையாக்கப்பட்டிருப்பான்! ஆனால் பரிதாபம், பெருந்திரளான ஜனங்கள் மீண்டும் சாத்தானையே பின்பற்றிச் செல்லுவார்கள்! இவ்விதமாய் இந்த ஜனங்கள் ஆயிரம் வருட சமாதானமான ஆட்சியைக் கண்டபின்பும் “கிறிஸ்து தங்களை ஆள்வதை” விரும்பவில்லை என்ற உண்மையை தூதர்களுக்கும் மானிடர்களுக்கும் தேவன் பகிரங்கமாய் அன்று வெளிப்படுத்திக் காட்டுவார்!!


மனுஷனுடைய குருட்டுத்தன்மையும்; முரட்டாட்டமும்; பொல்லாத குணமும்தான் எத்தனை கொடியதாய் உள்ளது!!


இவ்வித வணங்கா கழுத்துள்ள திரள்கூட்டமாகிய ஜனங்களைத் தேவன் அந்நாளில் துரிதமாய் நியாயந்தீர்த்துவிடுவார். இறுதியில், சாத்தான் அக்கினிக் கடலில் போடப்படுவான் (அக்கினிக் கடல், நரகத்தைக் காட்டிலும் பெரிதும் மகா கொடியதுமாகும் வெளி.20:7-10).இரண்டாம் உயிர்த்தெழுதலும் கடைசி நியாயத்தீர்ப்பும்:


பின்பு, அவிசுவாசிகளை நியாயந்தீர்க்கும்படி தேவன் தன் நியாயாசனத்தில் அமர்வார். இச்சமயத்தில் நிகழ்வதே இரண்டாம் உயிர்த் தெழுதலாகும்! மரித்தவர்கள் தங்கள் கல்லறைகளிலிருந்தும் உயிர்த்தெழுவார்கள்!! மேலும், எல்லா அவிசுவாசிகளின் ஆத்துமாக்களும் நரகத்திலிருந்து திரும்பி தங்களின் பூமிக்குரிய சரீரங்களைப் பெற்று நியாயந்தீர்க்கப்படும்படி தேவனுக்கு முன்பாக வந்து நிற்பார்கள். அப்போது, “புஸ்தகங்களில் எழுதப்பட்டவைகளின்படியே மரித்தோர் தங்கள் தங்கள் கிரியைகளுக்குத்தக்கதாக" நியாயத்தீர்ப்படைவார்கள் (வெளி.20:12).


நம்மை ஒவ்வொரு நபராய் நியாயந்தீர்ப்பது, தேவனைப் பொறுத்த மட்டும் கடினமானதே அல்ல! நமக்குள் இருக்கும் ஞாபகசக்தி ஓர் வீடியோ-டேப் (Video-Tape) போன்றதாகும். இப்பூமியில் வாழ்ந்த ஜீவியகால மெல்லாம், நாம் சிந்தித்த; பேசிய; செய்த; மற்றும், நம் உள்நோக்கங்கள் முதலாய் எல்லாவற்றையும் ஒன்றுவிடாமல் நமக்குள்ளிருக்கும் வீடியோ - டேப் மிக உண்மையாய்ப் பதிவு செய்து வைத்திருக்கின்றது. அந்நாளில், எல்லா அவிசுவாசிகளின் மறைவான ஜீவியத்தையும் முழு உலகமும் காணும்படி இந்த வீடியோ டேப்பினை தேவன் இயக்குவார். அச்சமயத்தில், திரளான அவிசுவாசிகள் நித்திய ஆக்கினையில் பங்கடையும்போது “தேவன் பூரண நீதியுள்ளவர்தான்” என்பதை ஒவ்வொருவரும் காணும் பொருட்டே இவ்விதமாய் ஓர் வீடியோ - டேப்பின் முறையை மனுஷனுக்குள் தேவன் வைத்திருக்கிறார்!


ஜீவ புஸ்தகத்தில் பெயர் காணப்படாத அத்தனை பேரும் அன்று அக்கினிக் கடலிலே தள்ளப்படுவார்கள். இப்பூமியில் தங்களின் இச்சையை நிறைவேற்றும்படி சேவித்த சாத்தானே அக்கினிக் கடலில் அவர்களுக்கு உற்ற துணையாயிருப்பான்!? (வெளி.20:15).காலச்சக்கரத்தின் முடிவு:


இவ்வாறு ஆண்டாண்டு காலமாய் ஓடிய காலச்சக்கரம், இப்போது நின்று முடிவடைந்து விட்டது! புதுப்பொலிவோடு நித்தியம் துவங்கிவிடும்! மீட்கப்பட்ட புருஷர்களும் ஸ்திரீகளுமே “புதிய வானம் - புதிய பூமிக்குள்” பிரவேசிப்பார்கள்! அங்கேயோ கிறிஸ்துவின் மணவாட்டி தன் முழு மகிமையோடும் பிரகாசித்துக் கொண்டிருப்பாள்!! (வெளி.21).


இப்பொலிவூட்டும் தேவன் உருவாக்கிய புதியவானம் புதிய பூமியிலிருந்து சாத்தானும்; எல்லா அவிசுவாசிகளும்; அகற்றப்பட்டிருப்பார்கள்! இம்மகிமையான புதிய பொன்னுலகத்தில், இனியும் பாவம் தன் அருவருப்பான தலையை ஒருபோதும் உயர்த்திட முடியாது! நம் மாம்சத்தில் எவ்வித இச்சைகளும் இருக்கவும் செய்யாது! மகிழ்வோடு தேவனுடைய சித்தத்தைத் தெரிந்து கொண்ட ஜனங்களால் பரலோகம் நிரம்பியிருக்கும்! அவர்கள் நித்திய காலமும் தேவனோடு சுகித்திருப்பார்கள்!! அல்லேலூயா!!“ஜெயம் பெறுவீர்!” - உங்களை அண்டிவரும் அழைப்பு:


“இப்படி இவைகளெல்லாம் (இப்போது நாம் காணும் வானமும் பூமியும்) அழிந்து போகிறதாயிருக்கிறபடியால் நீங்கள் எப்படிப்பட்ட பரிசுத்த நடக்கையும் தேவபக்தியும் உள்ளவர்களாயிருக்க வேண்டும்!” என பேதுரு வியந்து வினவுகிறார் (2 பேதுரு 3:11,12).


இக்கடைசி நாட்களில் ஆவியானவரின் செய்தியை ஒரே வார்த்தையில் தொகையிட்டுக் கூறுவோமென்றால் அவ்வார்த்தை “ஜெயம் பெறுங்கள்!” (OVER-COME) என்பதுதான் (வெளி.2:7, 11, 17, 26; 3:5, 12, 21; 21:7).


இப்புத்தகத்தின் ஆரம்பத்தில், இன்று அவிசுவாசிகளுக்குப் (Unbelievers) பிரசங்கிக்கப்படும் பிரசங்கத்தில் மங்கி மறைந்துபோன “மனந்திரும்புங்கள்!” என்ற செய்தியை வலியுறுத்தியே துவங்கினோம்!


இப்புத்தகத்தின் இறுதியில், இன்று விசுவாசிகளுக்குப் (Believers) பிரசங்கிக்கப்படும் பிரசங்கத்தில் மங்கி மறைந்துபோன “ஜெயம் பெறுங்கள்!” என்ற செய்தியை வலியுறுத்தியே முடிக்கிறோம்!!


மனுஷன் பாவத்தில் வீழ்ந்த நாள்துவங்கி, அவனுக்கு தேவன் அழைக்கும் அழைப்பு “ஜெயம் பெறுங்கள்” என்ற அழைப்புதான். அவ்விதமே காயீனுக்கும் ஆரம்பத்தில் அழைப்பு விடுத்தார், “பாவம் உன் வாசற்படியில் (இருதயக் கதவருகில்) படுத்திருக்கிறது. நீ அதை அடக்கி ஆண்டு கொள்வாயாக” (ஆதி.4:7) என்றார். இதே அழைப்பு வேதாகமத்தின் கடைசி புத்தகத்தில் திரும்பவும் தரப்படுவதைப் பாருங்கள், “ஜெயம் பெறுகிறவன் எல்லாவற்றையும் சுதந்தரித்துக் கொள்ளுவான்; நான் அவன் தேவனாயிருப்பேன், அவன் என் குமாரனாயிருப்பான்!” (வெளி.21:7).


தேவனோடு நெருங்கி ஐக்கியம் கொண்டு அவருடைய நோக்கத்தை நம் வாழ்வில் நிறைவேற்றுவதற்கொப்பான மகிமையை இவ்வுலகத்திலுள்ள வேறு எதற்கும் நாம் ஒப்பிட்டுப் பார்க்கவே முடியாது. இப்பாருலகில் வாழ்ந்த எந்த மனிதனுடைய வாழ்க்கையைக் காட்டிலும் இயேசு இவ்வுலகில் வாழ்ந்த வாழ்க்கை மகா ஆச்சரியம் நிறைந்ததும்! மகா மகிமை பொருந்தியதும்! சொல்லிமுடியா சந்தோஷம் நிறைந்ததுமான வாழ்க்கை ஆகும்! அவர் உலகப்புகழ் பெற்ற நபர் அல்ல... ஓர் ஐசுவரியவானுமல்ல !! “ஆனால்” தன் ஜீவியத்தின் மூலமாய் தெய்வ மகிமையை சுடர்விட்டுப் பிரகாசித்து விட்டார்!!


இன்று உங்களை அணுகிவரும் சுவிசேஷத்தின் நற்செய்தியை தயவுகூர்ந்து கேளுங்கள்: ஆம், நீங்களும் இயேசுவிடம் ஜொலித்த அதே மகிமையை உங்கள் வாழ்க்கையில் ஜொலித்துப் பிரகாசித்திட முடியும்! இவ்வையகத்தில் நீங்கள் வாழும் நாட்களெல்லாம் ஓர் ஜெயம் பெற்றவராய் எந்நாளும் திகழ்ந்திட முடியும்!!


இனி என்ன? இன்றிலிருந்து நித்தியத்தின் சொல்லிமுடியா மதிப்பையே எப்போதும் மனதிற்கொண்டவர்களாய் வாழுங்கள்! இவ் வாழ்க்கையில்.