உங்கள் தீர்மானங்களே உங்களை உருவாக்குகிறது!

Article Body: 

இயேசு இந்த பூமிக்கு எதற்காக வந்தேன் என்பதை இரத்தினச் சுருக்கமாய் ஒரே வசனத்தில் கூறினார். "என் சித்தத்தின்படியல்ல, என்னை அனுப்பினவருடைய சித்தத்தின்படி செய்யவே நான் வானத்திலிருந்து இறங்கி வந்தேன்" என்பதே அந்த ஆச்சரியமான வசனமாகும்! இப்பூமியில், இயேசு தன் ஜீவியத்தின் ஒவ்வொரு நாளையும் எவ்வாறு வாழ்ந்தார் என்பதை இவ்வசனம் நமக்கு மிக நேர்த்தியாக விளங்கச் செய்கிறது.

நாசரேத்தூரில், இயேசுவினுடைய முப்பது ஆண்டு கால ஜீவியமானது, "மறைவான வருஷங்கள்" எனப் பொதுவாய் கருதுகின்றார்கள். ஆனால், இந்த ஒரு வசனத்தின் மூலமாய், தன்னுடைய முப்பது ஆண்டுகளின் ஒவ்வொரு நாளிலும் ‘அவர் என்ன செய்தார்’ என்பதை இயேசுவே வெளியரங்கப்படுத்தியிருக்கிறார்! ஆம், "அவர் தன்னுடைய சுயசித்தத்தை வெறுத்து தன் பிதாவின் சித்தத்தையே" ஒவ்வொருநாளும் செய்தார்!

நித்தியத்தில் இயேசு தன் பிதாவோடு பரலோகத்தில் வாசமாயிருந்தபோது, தன்னுடைய சுய சித்தத்தை வெறுக்க வேண்டிய நிர்பந்தம் அவருக்கு ஏற்படவில்லை. ஏனென்றால், அங்கு அவருடைய சித்தமும் பிதாவின் சித்தமும் ஒன்றாகவே இருந்தது! ஆனால், அவர் நம்மைப்போலவே மாம்சத்தை உடையவராய் இப்பூமிக்கு வந்தபோது, அவரது மாம்சத்தில் குடிகொண்டிருந்த சுயசித்தம், ஒவ்வொரு சமயமும் பிதாவின் சித்தத்தை நேருக்கு முரணாய் எதிர்த்தே நின்றது! அந்த எல்லா சமயங்களிலும் இயேசு தன் பிதாவின் சித்தத்தை செய்து முடிப்பதற்கு "தன் சுய சித்தத்தை வெறுப்பதையே" ஒரே வழியாகக் கண்டார். இப்பூலோக வாழ்க்கை முழுவதும் இயேசு சுமந்த சிலுவை இதுதான்! ஆம், தன் சுய சித்தத்தை சிலுவையில் அறைந்து வாழ்ந்த வாழ்க்கை! இப்போது யாரெல்லாம் அவரைப் பின்பற்ற வாஞ்சிக்கிறார்களோ அவர்களும் ‘தன்னைப்போன்று’ அனுதினமும் சிலுவை எடுத்துப் பின்பற்றி வரும்படியே கருத்துடன் அழைக்கிறார்.

இவ்வாறு விடாஉறுதியுடன் இயேசு தன் சுயசித்தத்தை வெறுத்த வாழ்க்கையே அவரை ஓர் ஒப்பற்ற ஆவிக்குரிய புருஷனாக உருவாக்கி மேன்மைப்படுத்தியது! இன்று நாமும் ஆவிக்குரியவர்களாய் உருவாகுவதற்கு "நம் சுய சித்தத்தை வெறுக்கும் அந்த ஒரே வழியே" நம் ஒவ்வொருவருக்கும் கையளிக்கப்பட்டிருக்கிறது!

நம் ஜீவியத்தின் ஒவ்வொருநாளும் பலதரப்பட்ட விஷயங்களைக் குறித்து நாம் தீர்மானங்கள் எடுக்கிறோம். நம் பணத்தை எவ்வாறு செலவழிப்பது? உபரி நேரத்தை எவ்விதம் கழிப்பது? பிறரிடம் அல்லது பிறரைப்பற்றி எவ்விதம் பேசுவது? குறிப்பிட்ட கடிதத்திற்கு எவ்வாறு பதிலளிப்பது? ஜெபத்திற்கு எவ்வளவு நேரம் செலவழிப்பது? போன்ற அநேக கேள்விகளுக்கு ஒவ்வொருநாளும் நாம் தீர்மானங்களை எடுக்கிறோம். இவ்வாறு காலை துவங்கி இரவுவரை நம்மைச் சுற்றியுள்ள ஜனங்களின் வார்த்தைகளுக்கோ அல்லது நடத்தைகளுக்கோ ஏற்ப நாம் ஏதாகிலும் பதிலுக்குப் பிரதிபலிக்கிறோம். இதுப்போன்ற சமயங்களில் ஒவ்வொரு நாளும் குறைந்தது இருபது அல்லது முப்பது தீர்மானங்களாவது நாம் எடுக்கத்தான் செய்கிறோம். அந்த ஒவ்வொரு தீர்மானங்களில்: நம்மைநாமே பிரியப்படுத்துவதற்கோ அல்லது தேவனைப் பிரியப்படுத்துவதற்கோ ஆகிய இரண்டில் ஒன்றைதான் நாம் நிறைவேற்றுகிறோம்.

நாம் பிரதிபலித்திடும் அநேக கிரியைகள் நம் "மனமறிந்து" தீர்மானித்த கிரியைகளாய் இருப்பதில்லை. அவ்வாறிருப்பினும் அக்கிரியைகளை நம்மைப் பிரியப்படுத்துவதற்கோ அல்லது தேவனை மகிமைப்படுத்துவதற்காகவோ செய்கிறவர்களாய் இருக்கிறோம். இவ்வாறு நம்மை அறியாமலே பிரதிபலித்திடும் கிரியைகளின் தன்மையானது, நாம் அறிந்து முடிவெடுக்கும் தீர்மானங்களின் அடிப்படையிலேயே நிர்ணயம் செய்யப்படுகிறது! ஆகவே, முடிவாக நம் தீர்மானங்களின் மொத்தக் கூட்டுத் தொகையின் அளவே, நாம் ஆவிக்குரியவர்களா? அல்லது மாம்சத்திற்குரியவர்களா? என்பதை நிர்ணயம் செய்யும் அளவுக்கோலாய் இருக்கிறது!

நாம் முதலாவது மனந்திரும்பி வந்தபோது, தீர்மானித்த பல்வேறு தீர்மானங்களை சற்று எண்ணிப்பாருங்கள். அந்தநாள் முதற்கொண்டு யாரெல்லாம் தங்கள் மனதறிந்து ‘தொடர்ச்சியான விடா உறுதியுடன்’ ஒவ்வொரு நாளும் தங்கள் சுயத்தை வெறுப்பதற்கும், தேவனுடைய சித்தம் மாத்திரமே செய்வதற்கும் ஆயத்தமாய் இருந்தார்களே, அவர்களே ஆவிக்குரிய புருஷனாய் அல்லது ஸ்திரீயாய் மாறியிருக்கிறார்கள். இதற்கு நேர்மாறாக, தங்களின் பாவங்கள் மன்னிக்கப்பட்டதில் மாத்திரமே அகமகிழ்ந்து விட்டு, தங்களின் எஞ்சிய ஜீவியத்தில் தங்களைப் பிரியப்படுத்தும்படி வாழ்ந்தவர்கள், மாம்சத்திற்குரியவர்களாய்த் தேங்கித் தங்கிவிட்டனர். இவ்வாறு அவரவர்கள் எடுக்கும் தீர்மானங்களே இறுதியில் அவர்கள் எத்தகையவர்களாய் மாறுவார்கள் என்பதை நிர்ணயம் செய்கிறது!

நீங்கள் எவ்வாறு இருக்கவேண்டும் என விரும்புகிறீர்களோ ‘அதே’ தாழ்மைக்குள்ளும், ‘அதே’ பரிசுத்ததிற்குள்ளும், ‘அதே’ அன்பிற்குள்ளும்... இன்று நீங்கள் வந்துவிட்டீர்கள்! அதற்கெல்லாம் காரணம், கடந்த வருடங்களில் உங்கள் வாழ்வின் பல்வேறு சூழ்நிலைகளின் மத்தியில் நீங்கள் எடுத்துக்கொண்ட உறுதியான தீர்மானங்களேயாகும்!

உண்மையான ஆவிக்குரிய தன்மையை ஒருவன் என்றோ ஒருநாள் தேவனோடு உறவுகொண்டபடியால் அடைந்துவிட முடியாது. மாறாக, சுயத்திற்கு மரிக்கும் வழியைத் தெரிந்துக்கொண்டு தேவனுடைய சித்தத்தை நாள்தோறும், வாரங்கள்தோறும், வருடங்கள்தோறும் ‘விடாஉறுதியுடன்’ செய்து முடிப்பவனே உண்மையான ஆவிக்குரிய தன்மையை அடைவான். உதாரணமாக, கிறிஸ்துவிடம் ஒரேநாளில், மனந்திரும்பிவந்த இரண்டு சகோதரர்களின் ஆவிக்குரிய நிலையை சுமார் பத்து வருடங்களுக்குப் பிறகு எவ்வாறு இருக்கிறது என்பதை ஒப்பிட்டுப் பாருங்கள். இந்த இரு சகோதரர்களில் ஒரு சகோதரன் ‘ஆவிக்குரிய பகுத்தறியும் தன்மைக்கொண்ட’ முதிர்ச்சியடைந்த சகோதரனாய் இருக்கிறபடியால், அவரிடம் சபையின் அதிகமான பொறுப்புகளை தேவன் ஒப்படைக்க முடிகிறது. அடுத்த சகோதரனோ, இவ்வித பகுத்தறியும் தன்மையைக் கொண்டவராக இல்லாதபடியால், இன்னமும் பிறர்தான் இச்சகோதரனை போஷித்து உற்சாகப்படுத்த வேண்டிய ‘குழந்தை’ நிலையில் இருக்கிறான். இந்த இருவருக்குள்ளும் காணும் இவ்வளவு பெரிய வித்தியாசத்திற்கு அடிப்படைக் காரணம் யாது?

இதோ அந்த விடையைக் கேளுங்கள்: இவர்கள் தங்களின் பத்து வருட கிறிஸ்தவ வாழ்க்கையில் ஒவ்வொருநாளும் எடுத்துக்கொண்ட சின்னச் சின்ன தீர்மானங்களேயாகும்!

இதே வித்தியாச நிலையில், இன்னும் அடுத்த பத்து வருடங்கள் கடந்து சென்றால், அவர்களுக்குள் காணும் வித்தியாசம் ‘பளிச்சென்று’ காணும் பெரிய வித்தியாசமாகவே இருக்கும்! முடிவில் இந்த இரு சகோதரர்களும் நித்தியத்திற்குச் செல்லும்போது இவர்கள் பெற்றுக்கொள்ளும் மகிமையின் வித்தியாசம், பிரகாசிக்கும் இரண்டாயிரம் வாட்ஸ் பல்பிற்கும்; மங்கி எரியும் ஐந்து வாட்ஸ் பல்பிற்கும் இடையில் காணும் வித்தியாசத்தைப் போன்றதாயிருக்கும் என்பதில் சந்தேகமேயில்லை! இவ்விதமாகவே, "மகிமையிலே ஒரு நட்சத்திரத்திற்கு இன்னொரு நட்சத்திரம் விசேஷித்திருக்கிறது" (1கொரி 15:41) என வாசிக்கிறோம்.

இவ்வித நடைமுறை வாழ்க்கைக்கு, மற்றுமொரு வாழ்க்கை சூழ்நிலையை உதாரணமாய் எடுத்துப்பாருங்கள். நீங்கள் ஒரு வீட்டிற்குச் செல்லுகிறீர்கள், உங்களோடு அமர்ந்திராத (உங்களுக்கு பிடிக்காத) சகோதரனைக் குறித்து ஏதோ ஒன்றை எதிர்மறையாய் கூறுவதற்கு நீங்கள் சோதிக்கப்படுகிறீர்கள். இவ்வித சூழ்நிலையில் நீங்கள் என்ன செய்வீர்கள்? அச்சோதனைக்கு நீங்கள் இணங்கி புறங்கூறிவிடுவீர்களா? அல்லது உங்களை நீங்கள் வெறுத்து வாய் மூடி இருப்பீர்களா? இப்படியெல்லாம் வாய்மூடி இருக்க வேண்டுமா? என்ன? பழைய ஏற்பாட்டின் நாட்களில் சம்பவித்தது போல் பிறரைத் தீமையாய் பேசும் ஒருவனுக்கு குஷ்டரோகமோ அல்லது புற்றுநோயோ தேவனால் இப்போது ஏற்படுவதில்லையே! காரியம் இப்படியாய் இருப்பதால்தான், இன்று அனேகர் இதுப்போன்ற பாவத்தினால் தங்கள் ஜீவியத்திற்கு எவ்வித அழிவும் ஏற்படாது என எண்ணிக்கொள்கிறார்கள். ஆனால், அந்தோ! அநேக சகோதர சகோதரிகள் நித்தியத்திற்குள் பிரவேசிக்கும்போதுதான், தங்களைப் பிரியப்படுத்தும்படி நடந்துகொண்ட ஒவ்வொருநேரமும், "தங்களையே அழித்துக்கொண்ட" உண்மையை அறிந்து அதிர்ச்சி அடைவார்கள். அப்போதுதான் அவர்கள் தங்களின் கடந்த கால பூமிக்குரிய ஜீவியத்தில் உள்ளம் வருந்துவார்கள்!

இவ்வாறு தன்னைத்தானே பிரியப்படுத்தி வாழும் ஜீவியம் ஒருவனுடைய வாழ்க்கையில் எத்தனையோ பகுதிகளில் சம்பவிக்க முடியும். உதாரணமாக ‘புசித்தல்’ என்ற நம் வாழ்வின் முக்கியப்பகுதியை சீர்தூக்கிப் பாருங்கள். ஒரு சூழ்நிலையில், உங்களுக்குப் பசிக்காவிட்டாலும் வாய்க்கு ருசியான தீனிகளை வாங்கிப் புசிப்பதற்கு பணம் செலவழித்திட நீங்கள் தீர்மானம் செய்கிறீர்கள். அவ்வாறு வாங்கிப்புசிப்பதில் நிச்சயமாய் எவ்வித பாவமோ அல்லது தவறோ இல்லை! ஆனால், அந்தச் சூழ்நிலை, உங்கள் ஜீவியமுறையை வெளிப்படுத்துவதாகவே உள்ளது. ஆம், உங்களிடம் பணம் இருக்கிறபடியால் உங்களுக்குப் பிடித்தமானதை ‘தேவை இருந்தாலும் இல்லாவிட்டாலும்’ வாங்கிக்கொள்கிறீர்கள். அதாவது, உங்கள் விருப்பத்தையே நீங்கள் இப்போது நிறைவேற்றிவிட்டீர்கள்!

இவ்வாறு, உங்கள் சொந்த விருப்பத்தின்படி எல்லாம் வாழ்ந்துக் கொண்டு, நீங்கள் கூட்டங்களுக்கு ஒழுங்காய் சென்று, ஒவ்வொரு நாளும் தவறாமல் வேதம் வாசிப்பதால் உங்களுக்கு முடிவில் என்ன பலன் கிட்டும்?

இவ்வித வாழ்க்கை வாழும் நீங்கள் இரட்சிப்பை இழக்காமல் இருக்கலாம். ஆனால், நிச்சயமாக தேவனுக்கே பிரியமாய் வாழ வேண்டிய இந்த ஒரே ஒரு வாழ்க்கையை நீங்கள் வீணாக்கிவிட்டீர்கள் என்ற உண்மையை இன்று அறிந்துக் கொள்ளுங்கள்.

ஆனால், இன்னொரு சகோதரனோ மேற்கண்ட ‘தான் தோன்றி’ வாழ்க்கை கோலத்திற்கு முற்றிலும் வித்தியாசமாய் ஜீவிக்கிறார்! ஆம், அவர் தன்னுடைய சரீரத்தை கட்டுப்பாட்டிற்குள் வைப்பதற்கு தீர்மானம் செய்தவராய் இருக்கிறார். அவருக்குப் பசியில்லாத நேரத்தில் தேவையில்லாமல் எதையும் புசிக்கக் கூடாது என தீர்மானம் செய்கிறார். தனக்கு பிரியமான ஆனால், அது தேவையற்றதாய் இருந்தால், அந்தப் பொருட்களை வாங்காதிருக்கும்படியும் தீர்மானம் செய்கிறார். தேவனோடு நேரம் செலவழிப்பதற்கு ஒவ்வொருநாளும் குறைந்தது பதினைந்து நிமிடங்கள் முன்கூட்டியே எழுந்திருப்பதற்கும் தீர்மானம் செய்கிறார். மேலும் தன்னிடம் யாராகிலும் கோபமாய் பேசினால், அவரிடம் மென்மையான பதிலைப் பேசுவதற்கும் தீர்மானிக்கிறார். அன்பிலும் நற்குணத்திலும் எப்போதும் நிலைத்திருக்க வேண்டும் எனவும் தீர்மானிக்கிறார்! செய்திதாளில், தன்னுடைய இச்சைகளைத் தூண்டிவிடும் சில குறிப்பிட்ட செய்திகளை வாசிக்காமல், இருப்பதற்கும் தீர்மானம் செய்கிறார். எல்லா சூழ்நிலைகளிலும் தன்னை எவ்விதத்திலும் நியாயப்படுத்தாமல் தன்னைத்தானே தாழ்த்துவதற்கும் தீர்மானம் செய்கிறார். உலகத்தின்பால் ஈர்க்கச்செய்யும் சில குறிப்பிட்ட நட்புறவுகளை விட்டு விலகவும் தீர்மானிக்கிறார். இவ்வாறு தொடர்ச்சியாய் விடா உறுதியுடன் தன்னைப் பிரியப்படுத்த வேண்டுமென்றிருந்த தன் சுய சித்தங்களை வெறுப்பதற்கு இவன் தீர்மானித்தபடியால், இப்போது தேவனை மாத்திரமே பிரியப்படுத்துவதற்கே அவனுடைய சித்தம் மிக வலிமை பெற்றதாய் விளங்குகிறது!

இத்தகைய மனிதன் தொடர்ச்சியாய் ஒவ்வொரு சின்ன விஷயங்களிலும் உண்மையாய் இருக்கிறபடியால், சில வருடங்களுக்குள்ளாகவே ஓர் நம்பிக்கைக்குரிய தேவ மனுஷனாய் மேன்மை பெறுகிறான். இந்த மேன்மையை தன் வேத அறிவினால் பெறாமல், "தன்னைத்தானே பிரியப்படுத்தாமல், தேவனையே பிரியப்படுத்த வேண்டும்" என தன் வாழ்வின் சூழ்நிலையில் சின்னச்சின்ன தீர்மானங்கள் எடுப்பதற்கு உண்மையாய் இருந்ததினிமித்தமே, இந்த மேன்மையைக் கண்டடைந்தான். காரியம் இவ்வாறு இருப்பதால், இனியும் நீங்கள் பெலவீன சித்தம் கொண்ட (Weak-willed) ‘தான் தோன்றி’ மனுஷராய் இல்லாதிருக்க விழித்துக் கொள்ளுங்கள்! எப்போதும் தேவசித்தம் செய்வதற்கே உங்கள் சித்தத்தை அப்பியாசப்படுத்துங்கள். ஏனெனில், முதிர்ச்சியடைந்த கிறிஸ்தவர்கள் "நன்மை தீமை இன்னதென்று பயிற்சியினால் (அநேக ஆண்டுகளாய் தங்கள் சித்தத்தை சரியான திசைக்கு நடத்தும் அப்பியாசத்தினால்) பகுத்தறியத்தக்கதாக முயற்சி செய்யும் ஞனோந்திரியங்களை உடையவர்கள்" என எபி 5:14 தெளிவாகக் கூறுகிறது. இதை விளக்குவதற்காக பயன்படும் ஓர் உதாரணத்தைக் கேளுங்கள். இரண்டு குண்டு மனிதர்கள் தங்களின் ‘அதிகப்படியான’ சதைகளை குறைப்பதற்காக டாக்டரிடம் சென்றார்கள். அந்த டாக்டர் அடுத்த பனிரெண்டு மாதங்களுக்கு தொடர்ச்சியாக சில பயிற்சிகளைச் செய்யும்படி ஆலோசனை கூறி அனுப்பிவிட்டார். இந்த இருவரில் ஒருவர் அந்த பயிற்சிகளை ஒவ்வொருநாளும் ஒழுங்காக கடைப்பிடித்து, பருமன் குறைந்த வலுவான தசைகளை பெற்றான். ஆனால், இன்னொரு மனிதனோ சில நாட்கள் மாத்திரமே அப்பியாசங்களை செய்துவிட்டு, பின் சற்று மந்தமாகி முடிவில் தன் முயற்சிகளையே விட்டுவிட்டான். இவ்வித கட்டுப்பாடற்ற அவனது நடத்தையினால் அவனுடைய பருமன் மேலும் மேலும் அதிகரித்து முடிவில் காலத்திற்கு முன்பே மரித்துப்போனான். இந்த உதாரணத்தின்படி, 1. நாம் நம்முடைய சித்தத்தை தேவ சித்தம் செய்வதற்கு வலிமையுள்ளதாக்கும்படி அப்பியாசப்படுத்தலாம். 2. அல்லது, சுய சித்தம் அப்படியே இருந்துவிடும்படி அனுமதித்து, ஊளைச்சதை போன்ற நம் பெலவீனமான சித்தத்தை சாத்தான் தனக்குச் சாதகமாய் கையாண்டிட விட்டுவிடலாம். ஆ, இது பரிதாபம்!

ஒருசமயம் ஓர் இளம் ஊழியனைக் குறித்த மிக நல்ல சாட்சி கீழ்கண்டவாறு கூறப்பட்டது: அந்த சகோதரன் தன்னுடைய டெலிவிஷனில் நல்ல நிகழ்ச்சி நிரல்களை மாத்திரமே பார்ப்பவராய் இருந்தாலும், ஒருநாள் தான் டெலிவிஷனைப் பார்ப்பதற்கு அதிக நேரம் செலவு செய்வதாக உணர்ந்தார். உடனே, தன்னுடைய டெலிவிஷன் பெட்டியை விற்று விடுவதற்கு தீர்மானித்தார். அது மாத்திரமல்ல, இவ்வளவு நாட்களும் தான் டெலிவிஷன் பார்ப்பதற்கு எவ்வளவு நேரம் செலவழித்தாரோ அவ்வளவு நேரத்தை, ஒவ்வொரு நாளும் தன் ஜெப நேரத்தோடு கூட்டி வைத்து ஜெபித்திட தீர்மானித்தார்! இந்த சிறிய தீர்மானத்தை அவர் கைக்கொண்டதினால் கிட்டிய நேரடி பலன் யாதெனில், "தேவன் அவருக்கு ஓர் ஊழியத்தை ஒப்படைத்து, அதன் மூலம் ஆயிரக்கணக்கானவர்களை" ஆசீர்வதித்தார்!

"நாங்கள் டெலிவிஷனில் நல்ல நிகழ்ச்சிகளை மாத்திரமே பார்க்கிறோம்! இதில் எவ்வித தவறும் இல்லை! எனக் கூறுபவர்களே சற்றே கவனியுங்கள். ஆம், இதுப்போன்றவர்களுக்கு பொறுப்பான ஊழியங்களை தேவன் ஒப்படைக்கவில்லை என்ற உண்மையை நீங்களே எளிதில் கண்டு கொள்ள முடியும்.

ஏனெனில், தேவன் "தம்மைத் தீவிரமாய் தேடுகிறவர்களுக்கே, அவர்களுக்கு மாத்திரமே, பலன் அளிக்கிறவராய் இருக்கிறார்" என்றே வேதம் கூறுகிறது! இவ்வாறு உங்கள் வாழ்வின் பகுதிகளாகிய உணவு, பணம், தூக்கம், வாசித்தல்... போன்றவைகளில் உங்களை நீங்களே வெறுப்பதற்கோ அல்லது உங்களைப் பிரியப்படுத்திக் கொள்வதற்கோ நீங்கள் தீர்மானித்த ஏராளமான சிறுசிறு தீர்மானங்களே இன்றைய உங்களின் வளர்ச்சியை நிர்ணயித்துள்ளது!

காலம் சீக்கிரமாய் நம்மைக் கடந்து செல்கிறது! தங்கள் ஜீவிய நாட்களில் தனக்குதானே பிரியமாய் வாழ்ந்து ‘நாற்பது வயதை’ கடந்தவர்கள், தேவனுக்காக அதிக பணியாற்ற இனி எதிர்பார்த்திட முடியாது! ஏனெனில், இவர்கள் தங்கள் ஜீவியத்தின் செழுமையான வருஷங்களை வீணாக்கிவிட்டார்கள். கடந்த ஆண்டுகளில் ஜீவியம் உங்களைவிட்டுப் போய்விட்டது - நிரந்தரமாய் போய்விட்டது! நீங்கள் இழந்த வருடங்களை சர்வவல்ல தேவன்கூட உங்களுக்கு மீட்டுத்தர முடியாது. ‘இருப்பினும்’ இப்போதாவது நீங்கள் மனந்திரும்பிவிட்டால், உங்களின் எஞ்சியுள்ள இரண்டாவது பாதி வாழ்க்கையில் தேவனுக்கென்று ‘ஏதாகிலும்’ பிரயோஜனமான ஊழியங்களைச் செய்திட இன்னமும் வாய்ப்பு இருக்கத்தான் செய்கிறது! காரியம் இவ்வாறிருப்பதால் இன்னமும் தங்கள் ‘வாலிப வருடங்களில் வாழ்பவர்களுக்காகவே’, நான் இப்போது பிரதானமாய் பேச விரும்புகிறேன். "வாலிபனே, நான் சொல்லப்போகும் இவ்வார்த்தைகளுக்கு கவனமாய் செவிக்கொடுங்கள். தேவன் உங்களை ஆசீர்வதித்து, மற்ற அநேகருக்கு நீங்கள் ஆசீர்வாதமாய் மாறிடவே அவர் விரும்புகிறார். நீங்கள் வளர்ந்து முப்பது அல்லது முப்பத்தைந்து வயதை அடையும் பொழுது, தேவன் தன்னுடைய சபையின் ஓர் முக்கியமான ஊழியத்தை உங்களிடம் ஒப்படைக்கவும் விரும்புகிறார், ஆனால், அவரின் இந்த வாஞ்சை உங்களில் நிறைவேறி முடிவதற்கு உங்களின் அடுத்த பத்து ஆண்டுகால வாழ்க்கையில் தேவனுடைய பார்வையில் உண்மையுள்ளவர்களாய் காணப்படுவீர்களா? நீங்கள் இன்றுவரை எவ்வளவுதான் வீழ்ச்சி அடைந்திருந்தாலும், இப்போதிருந்தே நீங்கள் உண்மையுள்ளவர்களாய் வாழ்ந்துவிட தீர்மானித்துவிட்டால், நித்தியத்தில் நீங்கள் மனம் வருந்த வேண்டிய நிலை ஏற்படாது. வாழ்க்கையின் பொறுப்பை உணர்ந்து விழித்துக் கொள்ளுங்கள்! தன் மாம்சத்தின் நாட்களில் நாசரேத்தூரில் ஒரு வாலிபனாய் இருந்த இயேசு எப்படி வாழ்ந்தார் என்பதை அடிக்கடி சிந்தித்துப் பார்த்து அவருடைய மாதிரியையே நீங்களும் பின்பற்றுங்கள்"!

அன்பான வாலிபர்களே, உங்களுக்கு நீங்களே கீழ்கண்டவாறு கூறுங்கள்: "நான் இந்த பூமியில் பிறந்ததின் நோக்கமே என் சுயசித்தத்தை வெறுத்து என் பரமபிதாவின் சித்தத்தை செய்வதற்கே ஆகும்!"

இவ்வாறு நான் உங்களிடம் கூறிய இந்த முக்கியமான செய்தியை நீங்கள் உடனடியாக அவ்விதமே ஜாக்கிரதையாக மனதில் கொள்ளுவதற்கு, பிசாசு எளிதில் அனுமதித்து விடுவான் என நீங்கள் எண்ணுகிறீர்களா? இல்லை! இவ்வேளையில் உங்களிடம் வந்து, "ஏன் அவசரம்? உனக்குதான இன்னமும் ஏராளமான வருடங்கள் உள்ளதே" என ஓதுவான். மேலும், "இவ்வளவு விழிப்பான ஜீவியம் அவசியமில்லை நீ ஜாலியாகவே இருக்கலாம்" என்றும் உங்கள் சுயத்தை மகிழ்விக்கும்படி தொடர்ந்து பேசுவான்! ஏன்? ஏனென்றால், உங்களுடைய அடுத்த இருபது ஆண்டுகால வாழ்க்கையில் இலக்கைவிட்டு விலகிச் செல்லும்படி நடத்திடவும், எல்லாம் காலதாமதம் ஆனபின்புதான், நீங்கள் ‘அலறியடித்து’ விழித்துக் கொள்ள அவன் விரும்புகிறான்! அன்பார்ந்த வாலிப சகோதரனே, இன்னமும் சாத்தானுடைய வஞ்சகத்திற்கு நீங்கள் பலியாகிவிட வேண்டாம்! தேவன் உங்களுக்கு இந்த ஒரே ஒரு வாழ்க்கையைதான் தந்திருக்கிறார்! உங்கள் காலமும் வேகமாய் கடந்து செல்கிறது! இந்த அரிய ஜீவியத்தை வீணாக்கி விடாதீர்கள்!

இவ்வித ஓர் கட்டுப்பாடான முழு இருதயமான ஜீவியம் செய்வதற்கு உங்களைச் சுற்றியுள்ள எண்ணற்ற விசுவாசிகள், ஏன்... புதிதும் ஜீவனுமான மார்க்கத்தை நன்றாய் விளங்கி கொண்டோம் என கூறுபவர்கள்கூட ‘ஆர்மற்றிருப்பதை’ நீங்கள் காண்பீர்கள். அவர்களை நீங்கள் நியாயந்தீர்க்க வேண்டாம்! ஓர் பரிசேயனாய் மாறி அவர்களை உதாசீனம் செய்யவும் வேண்டாம். அவர்களை விட்டுவிடுங்கள். ஆனால், நீங்களோ, அவர்களுக்கு நீங்கள் வேறுப்பட்டவர்களாய் நின்று இயேசு மாத்திரமே உங்களுடைய மாதிரியாகத் திகழட்டும். உங்கள் வாழ்க்கையில் ‘உங்களுக்கென ஓர் அழைப்பு உள்ளது’. இந்த பூமியில் நீங்கள் எதை இழந்தாலும் இந்த அழைப்பை இழப்பதற்கு ஒருக்காலும் சம்மதித்துவிடாதீர்கள். கிறிஸ்துவின் நியாயாசனத்திற்கு முன்பாக உங்கள் ஜீவியத்திற்கான கணக்கை ஒப்படைக்கும் அந்த நாளை அடிக்கடி சிந்தித்துக் கொள்ளுங்கள்!!

ஆகவே, சகோதரனே சகோதரியே, இதுவரை நீங்கள் செய்த உங்கள் வாழ்வின் மதியீனமான பிழைகளை மறந்து விட்டுவிடுங்கள்!

உங்கள் பாவங்களுக்காய் ஆழமாய் மனம்திரும்புங்கள்! இனிவரும் நாட்களிலாவது முழு இருதயம் கொண்டு வாழுங்கள்!

கடந்த கால உங்கள் ஜீவியத்தை தேவன் மன்னித்து அதை இப்போது நீக்கிவிட்டார். இந்த தக்கவேளையில் போய் உங்கள் தோல்விகளுக்காய் துவண்டு மயங்கிவிடாதீர்கள்! அப்படியெல்லாம் நீங்கள் துவண்டுவிட்டால், மீதமுள்ள உங்கள் ‘எதிர்கால ஜீவியத்தில்’ தொடர்ந்து தவறான பாதையிலேயே இழுத்துச் செல்லப்படுவீர்கள்! மாறாக, இந்நாள்வரை நீங்கள் அடைந்த தோல்விகள்தான், "நான் இருக்கிறது, தேவ கிருபையால் தான் இருக்கிறேன்" என்ற உணர்வைத் தந்திடும்! இந்த உணர்வுதான், தேவனுக்கு முன்பாக உங்கள் முகத்தை புழுதியில் புதைத்து வாழ்வதற்கு உங்களை உந்தித் தள்ளும்!

"ஓர் உண்மையான தேவ மனுஷனாய் அல்லது தேவ மனுஷியாய் மாறியே தீருவேன்" என்ற உறுதியான தீர்மானத்தை இன்றே தீர்மானித்திடுங்கள்!!