இருதயத்தின் இரகசிய சிந்தனைகள் வெளியாக்கப்படுதல்

Article Body: 

சிமியோன், “அவர் அநேகர் தாக்குதல் நடத்தும்படியான ஒரு தரத்தை நிறுவுவார். இப்படியாக அவர் அவர்களுடைய இருதயத்தின் இரகசிய சிந்தனைகளை வெளியரங்கப்படுத்துவார்” (லூக்கா 2:34 – J.B.பிலிப்ஸ் பொழிப்புரை) என்று இயேசுவைக் குறித்துத் தீர்க்கதரிசனம் உரைத்தார்.

இயேசுவானவர் ஓர் உயர்ந்த ஜீவிய தரத்தைப் பிரசங்கித்ததற்காக ஜனங்கள் அவரைக் குற்றப்படுத்தி, தாக்கியபோது, அவர்கள் ஒரு காரியத்தை உணரத் தவறிவிட்டார்கள். அதாவது அவர்களது செயல்களும் வார்த்தைகளும் உண்மையில் அவர்களது உள்ளான கறைபட்ட இருதயத்தின் நிலையைப் பிரதிபலித்துக் காண்பிக்கின்றன என்பதை அவர்கள் உணராமல் போய்விட்டார்கள். ஒருவேளை இயேசு அவர்கள் மத்தியில் வராமலிருந்திருந்தால், இப்படியாக அவை வெளிப்பட்டிருக்காது என்னும் அளவிற்கு அவை வெளியரங்கப்படுத்தப்பட்டன.

ஒரு சமயம் இயேசு கப்பர்நகூமிலுள்ள ஒரு தேவாலயத்தில் உபதேசித்துக் கொண்டிருக்கையில், அசுத்த ஆவி பிடித்த ஒருவன் கூக்குரலிட ஆரம்பித்தான். அந்தத் தேவாலயத்தில் அத்தனை ஆண்டுகளாக பரிசேயர் பிரசங்கித்துக் கொண்டிருந்த வரையிலும், அம்மனிதனுக்குள்ளிருந்த அசுத்த ஆவியானது சமாதானமாகவும், மௌனமாகவும் இருந்தது. ஆனால் இயேசு அங்கு வந்து பிரசங்கித்த மாத்திரத்தில், அந்த மனிதனின் உள்ளான நிலை வெளியரங்கமாக்கப்பட்டது (மாற்கு 1:21-27).

இயேசு ஜனங்களுக்கு மத்தியில் வந்த போதெல்லாம், அவர்களுடைய உள்ளான நிலையும், இருதயத்தின் போக்கும் எப்போதுமே வெளிப்படுத்தப்பட்டன.

தேவாலயத்தின் மதத் தலைவர்களனைவரும் ஜனங்களின் கண்களில் பரிசுத்தர்களைப் போலவே தென்பட்டனர். ஆனால் இயேசு அவர்கள் மத்தியில் வந்த போது, அவர்களுடைய வஞ்சனையான வெளித்தோற்றமானது தோலுரிக்கப்பட்டு, அவர்கள் மாய்மாலக்காரர்கள் என்றும், வஞ்சிக்கிறவர்கள் என்றும் அப்பட்டமாக அம்பலப்படுத்தப்பட்டனர்.

விபசாரத்தில் கண்டுபிடிக்கப்பட்ட ஸ்திரீயைக் கல்லெறிந்து கொல்ல வேண்டுமென்று விரும்பிய பரிசேயர்கள் கூட்டத்தின் மத்தியில் இயேசு வந்த போது, உடனடியாக அவர்களின் உள்ளான இருதயத்தின் மனோபாவங்கள் வெளியரங்கமாயின (யோவான் 8:3-11). அவர்கள் இயேசுவைக் குற்றப்படுத்துவதற்கான முகாந்தரத்தைக் கண்டுபிடிக்க விரும்பினர் (யோவான் 8:6). ஆனால் இயேசு அவர்களில் பாவம் இல்லாதவனெவனோ, அவன்தான் அவள்மீது முதலாவது கல்லை எறிய வேண்டுமென சொல்லிவிட்டார். உடனடியாக அவர்களுடைய இருதயத்தின் உள்ளான நிலையானது வெளியரங்கமாக்கப்பட்டது. அதனால், “பெரியோர் முதல்” ஒவ்வொருவராய் அங்கிருந்து கிளம்ப வேண்டியதாயிற்று!! மூத்த பரிசேயர்கள்தான் எப்பொழுதுமே பெரும் மாய்மாலக்காரராய் இருப்பார்கள்!!

இயேசு அவர்கள் மத்தியில் வந்த மாத்திரத்தில், தேவன் ஒரு ஸ்திரீயின் பாவத்தைக் கொண்டு, அவளைக் குற்றப்படுத்தினவர்களின் பொல்லாப்பை வெளியரங்கமாக்கியதை நாம் அங்கே காண்கிறோம்.

“பிறரை நியாயந்தீர்க்காதே. உங்களில் பாவம் இல்லாதவன் முதலாவது கல்லை எறியக் கடவன்” என்று இயேசு இன்று நம்மிடத்தில் பேசும்போது, அதை எச்சரிக்கையாகக் கொள்ளவில்லையானால், நாமும் கடைசியில் அந்த பரிசேயர் கூட்டத்தில்தான் முடிவடைவோம். பின்பு இயேசுவின் சமூகத்திலிருந்து நித்திய காலமாய்த் தள்ளப்பட்டுவிடுவோம். நீதிபரரான நியாயதிபதியாகிய தேவனிடமே எப்பொழுதும் எல்லா நியாயத்தீர்ப்புகளையும் விட்டுவிடுவதுதான் சாலச் சிறந்ததாகும்.

பிலாத்து எவருக்கும் அஞ்சாதவனும், எவருடைய கருத்தையும் கண்டு கொள்ளாதவனுமாய் உள்ள ஒரு சர்வ வல்லமை கொண்ட அதிபதியைப் போல தோற்றமளித்துக் கொண்டிருந்தான். ஆனால் இயேசு அவனுக்கு முன்பாக நின்று அவனிடத்தில் பேசியபோது, மெய்யாகவே அவன் எவ்விதமாய் இருக்கின்றான் என்று உடனடியாக வெளியரங்கப்படுத்தப்பட்டான். இயேசு குற்றமற்றவர் என்பதை அவன் அறிந்திருந்த போதும், ஜனங்களால் அவர் சிலுவையில் அறையப்படுவதற்கு அவரை அவர்களிடத்தில் ஒப்புக் கொடுத்தான். இப்படியாக பிலாத்து ஜனங்களின் அபிப்ராயத்தைக் கண்டு நடுங்கக்கூடிய ஒரு கோழை என்பது வெளிப்படுத்தப்பட்டது.

மேற்சொன்ன இவ்வனைத்துக் காரியங்களிலும், ஜனங்கள் இயேசுவுக்குக் காட்டிய எதிர்ப்பானது, அவர்களுடைய உள்ளான நிலையை வெளியரங்கப்படுத்தியது. இப்படியாக சிமியோனின் (மேலே சொன்ன) தீர்க்கதரிசனம் நிறைவேறியது.

அன்று கிறிஸ்துவின் சரீரமானது (இயேசுதாமே) நிறைவேற்றிய அதே ஊழியத்தை, கிறிஸ்துவின் சரீரத்தின் அவயவங்களான நாம் இன்று நிறைவேற்றி முடிக்க வேண்டும்.

இயேசு பிரசங்கித்த அதே உயர்ந்த ஜீவியத் தரத்தை நாமும் அறிவிப்பதினால், இன்றுள்ள மனுஷீகக் கிறிஸ்தவர்கள் நம்மைக் குற்றப்படுத்துகின்றனர். அந்த விமர்சகர்கள் அப்படிச் செய்வதன் மூலம் தங்களுடைய இருதயத்தின் மனுஷீகத்தைத்தான் வெளிப்படுத்துகிறோம் என உணர்வதில்லை. ஒருவேளை நாம் இத்தகைய புதிய உடன்படிக்கையின் செய்தியை அறிவிக்கும்படி அவர்கள் மத்தியில் வராமலிருந்திருந்தால், அவர்களிடத்தில் இவையெல்லாம் ஒருக்காலும் வெளிப்பட்டிருந்திருக்காது.

உதாரணமாக, “இயேசுவும் அப்போஸ்தலரும்தான், நமக்குப் பணக்காரியங்களில் முன்மாதிரியாக உள்ளனர்” என்று நாம் பிரகடனப்படுத்துகிறோம். அவர்கள் பரலோக கண்ணியத்தைக் காக்கிறவர்களாக இருந்தபடியால், தங்களுடைய தேவைகளுக்காகவோ, தங்களுடைய ஊழியத்திற்காகவோ ஒரு போதும் யாரிடமும் கையேந்தவில்லை. அவர்கள் விசுவாசிகளிடத்தில் ஏழைகளுக்கு உதவும்படி மட்டுமே கூறினர்.”

மனுஷீகமான பிரசங்கிமார்கள், நாம் அறிவிக்கின்ற தேவனுடைய வார்த்தையின் தரத்தைக் கேள்வி கேட்கிறவர்களாகவும், பழைய உடன்படிக்கையில் லேவியரின் உதாரணத்தை மேற்கோள் காட்டுகிறவர்களாகவும் இருக்கிறார்கள். அவர்களது இருதயத்தின் இரகசிய சிந்தனைகளெல்லாம் அவர்கள் 1. பணக்காரியங்களைக் குறித்த புதிய உடன்படிக்கையின் தரத்தை அலட்சியப்படுத்துவது; 2. அவர்களைப் பராமரிப்பதற்கான தேவ வல்லமையை விசுவாசியாமல் இருப்பது 3. பழைய உடன்படிக்கை அழிக்கப்பட்டுவிட்டது, இயேசுவும் அப்போஸ்தலரும்தான் இன்று நம்முடைய முன்மாதிரியாக உள்ளனர், லேவியர் நம்முடைய முன்மாதிரி அல்ல என்பவற்றைப் பற்றிய அறியாமையில் இருப்பது (எபி 8:7-1; 12:1,2; 1கொரி 11:1; பிலி 3:17). ஆகியவற்றின் மூலமாக வெளியரங்கமாக்கப்படுகின்றன.

இங்கு சொல்லப்பட்டிருப்பது ஒரேயொரு உதாரணம்தான். இன்னும் பல உள்ளன.

எனவே நம்முடைய நாட்களிலுள்ள மதத்தலைவர்களும், பிரசங்கிகளும் நம்மை எதிர்க்கும்போது, (இயேசுதாமே எதிர்க்கப்பட்டதைப் போல), அதைக் குறித்து நாம் ஆச்சரியப்படக் கூடாது. 20 நூற்றாண்டுகளுக்கு முன்பாக, முதலாவது கிறிஸ்துவின் சரீரம் (இயேசு) நிறைவேற்றிய அதே ஊழியத்தைத்தான் நாமும் முன்னெடுத்துச் செல்லுகின்றோம். விளைவு ஒன்று போலவேதான் இருக்கும்: நம்முடைய செய்திக்கு ஜனங்கள் தரும் எதிர்ப்பை, அவர்களுடைய இருதயத்தின் மனுஷீகத்தை வெளிப்படுத்துவதற்கு தேவன் பயன்படுத்துவார்.

சிலசமயங்களில், தேவன் தமது ஜனங்களின் உபத்திரவத்தை, மற்றவர்களின் இருதயத்தின் உள்ளான நிலையை வெளியரங்கப்படுத்துவதற்காகப் பயன்படுத்துவார்.

இயேசு சிலுவையில் தொங்கி உபத்திரவப்பட்ட போது, ஜனங்களில் அநேகரது உள்ளான நிலை வெளியரங்கப்படுத்தப்பட்டது. அவ்வழியே கடந்து போனவர்கள் அவரைப் பரிகசித்தனர். அதன் மூலமாக அவர்கள் இருதயத்தின் உள்ளான அவல நிலை வெளியரங்கமானது. அதற்கு மாறாக, இயேசுவானவர் தேவனுடைய குமாரன் என்று அறிக்கையிட்ட ரோமப் போர்ச்சேவகனின் உள்ளான உத்தமும் வெளிப்படுத்தப்பட்டது. சிலுவையில் அறையப்பட்ட ஒரு கள்வனின் உள்ளான இருதயம் கறைபட்டது என வெளியரங்கப்பட்டு, அவன் நரகத்திற்குச் சென்றான். ஆனால் அதே சமயம் சிலுவையில் அறையப்பட்ட இன்னொரு கள்வனின் இருதயமோ மெய்யாகவே மனந்திரும்பிய ஒன்றாக வெளிப்படுத்தப்பட்டு, அவன் பரதீசுக்குள் பிரவேசித்தான்.

மாற்கு 3:2 –ல், இயேசு ஒரு நாள் ஒரு தேவாலயத்திற்கு வந்த போது, அவரது சத்துருக்கள் அவர் மீது மூர்க்கங்கொண்டு, அவர்மீது ஏதாவது குற்றஞ்சாட்டும் முகாந்திரமாக, “அவர் மேல் நோக்கமாயிருந்தார்கள்” என்று வாசிக்கிறோம். நவீன கால பரிசேயரும், உத்தம விசுவாசிகளைக் குற்றப்படுத்துவதற்காக அவர்களுடைய வாழ்க்கையைக் கூர்ந்து கவனிக்கிறார்கள்.

நீங்கள் யாதொருவனிடத்திலாவது அதிகக் கோபம் கொண்டிருக்கும் போதும், பொறாமை கொண்டிருக்கும் போதும், நீங்கள் அந்த நபர் மீது குற்றம் கண்டுபிடிக்கும்படிக்கு, அவரை அதிக நெருக்கமாகக் கவனித்துப் பார்க்க வேண்டிய நிலை உருவாகும். அவருடைய வாழ்க்கையில் அல்லது வீட்டில் அல்லது குடும்பத்தில் மெய்யாகவே ஏதேனும் ஓர் அற்பமான தவறு (எல்லா மக்களிடத்திலும் காணப்படுவதைப் போலவே) இருக்கக்கூடும். ஆனால் தேவன் அவருடைய ஊழியர்களிடத்தில் காணப்படும் அற்பமான தவறுகளைப் பயன்படுத்தி, அவர்களை நியாயந்தீர்க்கிறவர்களின் இருதயத்தின் பொல்லாப்பை வெளிப்படுத்துகிறார்.

“குருவி பிடிக்கிறவர்கள் பதுங்குகிறது போல் பதுங்கி, மனுஷரைப் பிடிக்கக் கண்ணிகளை வைக்கிற துன்மார்க்கர் என் ஜனங்களில் காணப்படுகிறார்கள்… அவர்கள் வீடுகள் கபடங்களால் நிறைந்திருக்கிறது… இவர்களை விசாரியாதிருப்பேனோ? இப்படிப்பட்ட ஜாதிக்கு என் ஆத்துமா நீதியைச் சரிக்கட்டாதிருக்குமோ?” என்று கர்த்தர் சொல்லுகிறார் (எரே 5:25, 27, 29).

ஒரு சமயம் பரிசேயர்கள், ”இயேசுவை அவர் சொல்லுகின்ற ஏதேனும் ஒரு காரியத்தை முன்னிட்டு, அவரைக் கைது செய்யத் துடித்து, அவரைக் கேள்விக் கணைகளால் துளைத்தெடுத்தனர்” (லூக் 11:54 - Living). இன்னொரு சமயத்தில் அவர்கள், “அவரைப் பேச்சிலே அகப்படுத்தும்படிக்கு, வேறு சில மதத் தலைவர்களை அவரிடத்தில் அனுப்பினார்கள்” (மாற் 12:13).

தேவ ஊழியர்களை அவர்களது பேச்சிலே அகப்படுத்துவதற்காக, அவர்களை “மிகவும் நெருக்கமாகக் கவனித்துப் பார்த்து” கேள்விக்கணைகளால் துளைக்கிற பரிசேயர்களின் வழித்தோன்றல்கள் இன்றைய கிறிஸ்தவ உலகிலே பலுகிப் பெருகிக் கிடக்கிறார்கள். எனவே நாம், அவர்கள் மத்தியிலே, “சர்ப்பங்களைப் போல வினாவுள்ளவர்களாகவும்,” “ஓநாய்கள் மத்தியிலிருக்கிற ஆட்டுக்குட்டியைப் போலவும்” இருக்க வேண்டும் (மத் 10:16).

ஒருவன் “மற்ற விசுவாசிகளை உற்றுக் கவனிப்பதால்” அதுவே அவனை முதல் தரமான பரிசேயனாக மாற்றுவதற்கான அதிவிரைவு வழியாகும். நீங்கள் பரிசேயராய் இருப்பதைத் தவிர்ப்பவராய் இருந்தால், இந்தப் பழக்கத்தை முழுவதுமாய் ஒழித்துக் கட்டிவிடுங்கள். ஏனெனில், இது ஒருபோதும் மற்றவர்களுக்கு உதவி செய்ய வேண்டுமென்ற நல்ல நோக்கத்தோடு செய்யப்படுவதில்லை. மற்றவர்களிடத்தில் குறை கண்டுபிடிப்பதற்காகவே செய்யப்படுகிற ஒன்றாகும்.

பரிசேயத்தனத்திற்கான விஷமுறிவு மருந்து இரக்கமாகும். “ஆகவே தேவன் உங்கள்மீது இரக்கமுள்ளவராய் இருப்பதைப் போலவே நீங்களும் மற்றவர்கள் மீது இரக்கமுள்ளவர்களாயிருக்கக் கற்றுக் கொள்ளுங்கள்.”

இயேசு இப்பூமியில் நடந்து திரிந்த போது, தேவனுடைய அன்பும், இரக்கமும், நன்மையும் அவரது வாழ்க்கை மூலமாக வெளிப்பட்டது.

இன்று நாமும் பரிசுத்த ஆவியினால் (கிறிஸ்துவின் ஆவியினால்) நிரப்பப்பட முடியும். அதனிமித்தம் அதே அன்பும், இரக்கமும், நன்மையும் நம்முடைய வாழ்க்கையின் மூலமாகவும் வெளிப்பட முடியும் (ரோமர் 5:5-ல் வாக்குத்தத்தம் செய்யப்பட்டுள்ளதைப் போல) அப்படியே உண்டாகட்டும். ஆமென்.