(சகோ. சகரியா பூணன் அவர்களால், 2012-ல் ஓர் பெந்தேகொஸ்தே சபையில் அளிக்கப்பட்ட தேவசெய்தி).
தேவனுடைய வாக்குத்தத்தங்களும், அவருடைய கட்டளைகளும் நாம் காலூன்றி நிற்கவும், நடக்கவும், தேவையாயிருக்கிற இரண்டு கால்களை போன்றது!. வாக்குத்தத்தங்களை மாத்திரம் சார்ந்து வாழ்பவர்கள், ஒற்றை காலில் நடக்கிறவர்களைப்போலவும், வாக்குத்தத்தங்களை சொந்தமாக்கி கொள்ளாதவர்களாகவும், தங்களை தாங்களே வஞ்சித்துக் கொள்ளுபவர்களாகவும், இருக்கிறார்கள். அதேப்போல கட்டளைகளை மாத்திரம் சார்ந்து வாழ்பவர்கள் வாக்குத்தத்தமின்றி கட்டளைகளுக்கு கீழ்படிய இயலாமல், சோர்வடைந்து, தைரியமிழந்து போவார்கள். ஆகவே, நமக்கு வாக்குத்தத்தம், கட்டளைகள் இவை இரண்டுமே இன்றியமையாதவைகளாக இருக்கிறது.
ஆனால், வேத வாக்கியங்களை கவனமாக, படித்தாலொழிய, வாக்குத்தத்தத்தையோ அல்லது கட்டளைகளையோ நாம் ஒருக்காலும் அறியமுடியாது. பாஸ்டர்களும், டி.வி. பிரசங்கிமார்களும் சொல்லுகிறதை மாத்திரம் கவனித்தாலும், வேத வாக்கியங்களை அறிய முடியாது. ஏனென்றால், அவர்கள் அதிகமாக வேத வாக்கியங்களை அவைகள் வேதத்தில் இருக்கிற வண்ணமாக, அடிகோடிட்டு காண்பிப்பதில்லை. அவருடைய கட்டளைகளை துல்லியமாக, போதிப்பதில்லை. ஆகவே, நாமாகவே வேத வாக்கியங்களை தியானிக்கவேண்டும். நாம் ஒரு கிறிஸ்துவராகயிருந்தால், உலகத்திலுள்ள மற்றெந்த புத்தகத்தை காட்டிலும் வேதத்தை அதிகமாக அறிந்தவர்களாக இருக்க வேண்டும். மாறாக, சோம்பலுள்ளவர்களாய், வேதத்தை அறியாத பட்சத்தில், உங்கள் ஆவிக்குரிய வாழ்க்கை ஆழமற்றதாகவே காணப்படும். நீங்கள் இரட்சிக்கப்படாமலே, இரட்சிக்கப்பட்டோம் என்று எண்ணிக்கொள்ளலாம். ஒரு போலியான ஆவியின் அபிஷேகத்தை பெற்று, ஆவியிலே, நிறைந்து இருக்கிறோம் என்று எண்ணி கொள்ளலாம். ஆனால், நீங்கள் வேதத்தை அறிந்திருந்தால், நீங்கள் ஒருக்காலும் வஞ்சிக்கப்படமாட்டீர்கள்!
"வேதத்தை அறியாத யாவரும் வஞ்சிக்கப்பட தகுதியானவர்களே" அவர்கள் தேவனிடத்தில், "மனிதனுக்காக நீர் ஒரு புத்தகத்தை எழுதியிருக்கிறீர் அதை அறிவேன். ஆனால், அதைப் படிக்க எனக்கு நேரமில்லை. அதைவிட மிக முக்கியமானதாக, டி.வி. பார்ப்பதும், இணையதளத்தை அலசுவதுமாகிய காரியங்கள் எனக்கு உண்டு மற்றும் ஏதோ ஞாயிற்று கிழமை கொஞ்சம் நேரம் கொடுக்கமுடியும்" என்று சொல்லுகிறார்கள். அப்படிப்பட்ட மனப்பான்மை உங்களுக்கு இருந்தால், நீங்கள் இரட்சிக்கப்படவில்லை என்றே நான் சொல்லுவேன். எந்த ஒரு ஆரோக்கியமான குழந்தையும் பால் உண்ண அழுவதுப் போல, ஒவ்வொரு இரட்சிக்கப்பட்ட கிறிஸ்தவனும், வேதவசனமாகிய களங்கமில்லாத ஞானப்பாலின் மேல் வாஞ்சையாய் இருக்கவேண்டும் (1பேது 2:2). இந்த சத்தியத்தை நான் உங்களுக்கு அறிவித்தே ஆக வேண்டும். நியாயத்தீர்ப்பு நாளிலே நான் குற்றப்படுத்தபடாதபடிக்கு இந்த சத்தியத்தை உங்களுக்கு அறிவிக்கிறேன். அநேக வருடங்களுக்கு முன்பாகவே, தேவன், "நீ ஜனங்களை அன்பு கூர்ந்தால், அவர்கள் ஏற்றுக் கொண்டாலும், கொள்ளாவிட்டாலும் சத்தியத்தை அறிவிக்க வேண்டும்" என்று எனக்கு சொல்லியிருக்கிறார்.
தேவனுடைய வார்த்தையிலே அநேக அற்புதமான வாக்குத்தத்தங்கள் உண்டு. பழைய ஏற்பாட்டை காட்டிலும், புதிய ஏற்பாட்டிலே அநேக வாக்குத்தத்தங்கள் இருக்கிறது. அது, “மேன்மையும், அருமையுமான வாக்குத்தத்தங்கள்” என்று அழைக்கப்படுகிறது (2பேது 1:4). ஓர் விலையேறப்பெற்ற பொக்கிஷம் உங்கள் நிலத்துக்கடியில் புதைந்து இருக்கிறது என்று கண்டால், அதற்காக எவ்வளவு நேரம் அந்த புதையலை தேட செலவழிப்பீர்கள் என்று எண்ணிப் பாருங்கள்! தேவனுடைய வாக்குத்தத்தத்தை அதைக்காட்டிலும் மேன்மையானதும், விலையேறப் பெற்றது என்பதை நீங்கள் அறிந்தால், அதை வேத வாக்கியங்களில் ஆழமாக ஆராய்ந்து அந்த வாக்குத்தத்தங்களை கண்டுபிடிப்பது மிகவும் அவசியம்!
ஜீலை 1959- ல் என் வாழ்க்கையை முழுவதுமாக கிறிஸ்துவுக்கு கொடுத்துவிட்டேன். அதையடுத்து வந்த ஏழுவருடங்கள் தேவனுடைய வார்த்தையை முழுவதும் படித்தேன். நான் எந்த ஒரு வேத கலாசாலைக்கும் போகவில்லை. கப்பற்படையிலே நான் பணிபுரிந்த அந்த ஏழு வருடங்களில், விடுமுறையின் நாட்கள் முழுவதும், என் அறையிலே உட்கார்ந்து கர்த்தருடைய வேதத்தை தியானித்தேன். அது என் வாழ்வின் திசையை மாற்றி அமைத்தது!. வேதத்தில் உள்ள அநேக அற்புதமான வாக்குதத்தங்களை கண்டுபிடித்து அவைகளை தேவனிடத்தில் கேட்டபொழுது, அவைகள் பரலோகத்தின் ஆவியை என் வாழ்க்கைக்குள் கொண்டு வந்தது.
எனக்கு திருமணமான பொழுது, அந்த தேவனுடைய வார்த்தைகள்தான் பரலோகத்தின் ஆவியை என் குடும்பத்திலும் கொண்டு வந்தது. பின்னாளிலே, நானும் என் மனைவியும் அந்த வாக்குதத்தங்களை எங்களுடைய பிள்ளைகளுடைய வாழ்க்கையிலும் கோரினோம். அவர்களுக்கு தேவனுடைய கட்டளைகளையும் போதித்தோம். அதின்முடிவாக, இன்றைக்கு அவர்கள் எல்லோரும் கிறிஸ்துவை பின்பற்றுகிறவர்களாக இருக்கிறார்கள்! நாம் எல்லோரும் வங்கியில் உள்ள பண கணக்கின்படியே, நம் வாழ்க்கையை திட்டம் பண்ணுவதுப்போல, தேவனும் அவருடைய வாக்குத்தத்தத்தின் படியே அநுதினமும், நாம் ஜீவிக்க வேண்டும் என்றே விரும்புகிறார். நீங்கள் வேலை செய்யும் கம்பெனியிலே ஒரு போனஸ் கொடுத்தால், ஏற்றுக் கொள்ள மாட்டீர்களா? அந்தப் பணம் உங்கள் கணக்கிலே வரவு செய்யப்பட்டிருக்கிறது என்று கேள்விப்பட்ட உடனே, எவ்வளவு சீக்கிரமாக உங்கள் வரவை கணக்கு பார்ப்பீர்கள். அநேகர் தேவனுடைய வாக்குத்தத்தத்தை கோரி வாழுவதை காட்டிலும், தங்களுடைய வங்கி வரவு கணக்கை பார்ப்பதிலேயே, அதிக ஆர்வமுள்ளவராய் இருப்பதால்தான், அவர்கள் கிறிஸ்துவ வாழ்க்கையும் ஆழமற்றதாகவே இருக்கிறது.
தேவனுடைய கட்டளைகள் மற்றும் வாக்குத்தத்தங்கள் ஒன்றாக இணைந்தே நம்மை ஆவிக்குரிய ஐசுவரியவான்களாக மாற்றுகிறது. இதை உண்மையாக விசுவாசிப்பீர்களானால், அவை அனைத்தையும் கண்டுபிடித்து கைகொள்ள முழு இருதயத்தோடு நாடுவீர்கள்! நாமெல்லாருக்கும் வாழ ஒரே ஒரு வாழ்க்கை மாத்திரமே அளிக்கப்பட்டிருக்கிறது. அதைப்பற்றி தெளிவான எண்ணம்
உடையவர்களாக, (நம் வாழ்க்கையிலே) நாம் இருக்கவேண்டும். ஒருவேளை நாம் மரித்தால், பரலோகம் சென்றடைந்தால் போதும் என்ற எண்ணம் மாத்திரம் இருக்குமென்றால், ஒருநாள் நாம் ஆண்டவருக்கு முன்பாக நிற்கும்போது, அந்த நாளிலே எவ்வளவாய் மனவருத்தம் அடைவோம் என்பதை எண்ணிப்பாருங்கள்!.
என் வாழ்வின் நோக்கம் (குறிக்கோள்) என்னவென்பதை நான் உங்களுக்கு சொல்லுகிறேன். "கர்த்தாவே, இந்த பூலோகவாழ்க்கையை முடித்து நான் போகும்முன்னே, புது உடன்படிக்கை கிறிஸ்தவர்களுக்காய் நீர் அருளின எல்லா கட்டளைகளையும் ஒன்றுவிடாமல் நான் கீழ்ப்படிய விரும்புகிறேன் (வேண்டும்). இஸ்ரவேலர்களுக்கு கொடுத்த கட்டளைகளை குறித்து நான் கவலைப்படவில்லை. ஆனால், மறுபடியும் பிறந்த கிறிஸ்துவர்களுக்கு நீர் அருளின எல்லா கட்டளைகளுக்குமே என் பூலோக வாழ்க்கையை முடித்து நான் போகும் முன்னே கீழ்ப்படிய வேண்டும். அதுமாத்திரமல்ல; புது உடன்படிக்கை கிறிஸ்தவர்களுக்கு என்று நீர் அருளின வாக்குத்தத்தங்கள் எல்லாவற்றையும் கூட நான் கேட்டு பெற்றுக்கொண்டு எனக்குரியதாக்கி கொள்ளுவேன்"!.
நம் பிள்ளைகள் தங்கள் கல்லூரியிலே தாங்கள் மேற்கொண்ட கல்வி திட்டத்தை அரைகுறையாக முடிப்பதிலே பெற்றோர்களாகிய நாம் திருப்தி படாததை போலவே, ஆவிக்குரிய கல்வி திட்டத்திலும் முற்றும் முடிய முடிக்கவே நான் விரும்புகிறேன்!
விசுவாசிகளில் அநேகரின் பரிதாபம், அவர்களில் பெரும்பான்மையானோர் பரலோக சிந்தையுடையவர்களாக இருப்பதை தவிர்த்து, பூமிக்குரியவைகளையே சிந்தித்து வாழ்கிறவர்களாக அவர்களில் ஆவிக்குரியவர்களுக்கும் மற்றவர்களுக்கும் இடையே வித்தியாசமே இல்லாத வாழ்க்கையுடையவர்களாக இருக்கிறார்கள். ஏனென்றால், இருசாரரும் பூமிக்குரியவர்களாக இருப்பதையும், மனுஷர் கனத்தை தேடுபவர்களாகவும் இருப்பதின் மூலம் வெளிப்படுத்துவார்கள்! ஆனால், தேவனோ, “தங்களை ஆவிக்குரியவர்கள்” என்று சொல்லுபவர்களை நோக்கி, "நீங்கள், பூமிக்குரிய சிந்தை உடையவர்களாய் இருப்பதிலிருந்து மனந்திரும்புங்கள்" என்றே ஆண்டவர் அழைக்கிறார்.
இயேசுவுக்கு முன்னோடியான யோவான்ஸ்நானகன் "கர்த்தருக்கு வழியை ஆயத்தம் பண்ணுங்கள்" என்று ஜனங்களுக்கு சொன்னார். அப்படியே, நாமும் கிறிஸ்துவை நம் வாழ்க்கையில் ஏற்று கொண்ட உடன் அதே யோவான் ஸ்நானகனுடைய செய்திக்கு நாமும் கீழ்படிய வேண்டியதாயிருக்கிறது. அது, "மனந்திரும்புங்கள் பரலோக இராஜ்ஜியம் சமீபமாயிருக்கிறது"(மத்.3:2) என்பதேயாகும். அப்போது மாத்திரமே கிறிஸ்து நம் வாழ்வின் ஆண்டவராக இருக்கும் வழியை “ஆயத்தம்” பண்ணமுடியும்.
உண்மையிலே, யோவான் ஸ்நானகன் இஸ்ரவேலரை குறித்து கடந்த 1500 - வருடங்கள் மோசேயின் நாட்கள் தொடங்கி, நீங்கள் யாவரும் பூமிக்குரியவைகளினால், நிரப்பப்பட்டிருந்தீர்கள். ஆதியாகமம் முதல் மல்கியா வரையிலான எல்லா வாக்குத்தத்தங்களும், பூமிக்குரியவைகளை சார்ந்ததே. அதிலே, ஒன்றாகிலும் உன்னதத்திற்குரிய வாக்குத்தத்தமான ஆசீர்வாதமாக உங்களுக்கு இருந்ததில்லை. எல்லாம் பூமிக்குரிய ஆசீர்வாதங்கள், நீங்கள் ஐசுவரியவான்களாய் இருப்பீர்கள். உன் ஆலையும், வியாபாரமும், உன் தோட்டங்களும் ஆசீர்வதிக்கப்பட்டிருக்கும். உங்கள் வியாதிகள் சுகமாகும். பூமிக்குரிய சத்ருக்கள் தோற்க்கடிக்கப்படுவார்கள். உங்கள் பிள்ளைகளும், உங்களைப்போலவே, ஆசீர்வதிக்கப்பட்டிருப்பார்கள் போன்றவையே. ஆனால், இப்போதோ, மனந்திரும்புங்கள்! அந்த பூமிக்குரிய ஆசீர்வாதத்தின் எல்லா காரியங்களிருந்தும், மனந்திரும்புங்கள்! ஏனென்றால், பரலோக இராஜ்ஜியம் சமீபமாக இருக்கிறது! பரலோகத்திலிருந்து வருபவர் உங்களை பரிசுத்த ஆவியினால், ஞானஸ்நானம் பண்ணுவார்!. பரலோகத்தை உங்கள் இருதயத்துக்குள் வைப்பார்!. இவைகள், நீங்கள் உங்களை பூமிக்குரியதை தேடுவதிலிருந்து மனந்திரும்பி குணப்பட்டாலொழிய நடக்காது என்றான். இதுதான் யோவான்ஸ்நானகனால், பிரத்யோகமாக பிரசங்கிக்கப்பட்டது. பரிசுத்த ஆவியினால், ஞானஸ் நானம் பண்ணப்படுவதற்கு முன்பாக நாம் செய்ய வேண்டிய காரியமும் இதுதான்!
பரலோகத்தின் சுழலை நம் இருதயத்தில் கொண்டு வரும்படிக்கே பரிசுத்த ஆவியினாவர் வானத்திலிருந்து இறங்கி வந்தார். ஆவியில் நிறைந்திருக்கும் ஒரு மனிதனுடைய அடையாளம் என்னவெனில், அவன் பூமிக்குரிய சிந்தை உள்ளவனாக இல்லாமல், பரலோக (மேலான) சிந்தை உடையவனாய் இருப்பான். அவன் பரலோக வாசனையை வெளிப்படுத்துகிறவனாய் இருப்பான். கோபமடைந்து நிதானமிழந்து தன் மனைவியிடம் கோபிக்கிறவன் பரிசுத்த ஆவியினால், நிறைந்திருக்கிறான் என்று சொல்ல முடியுமா? அப்படிபட்ட கோபம், பரத்திலிருந்து வராமல் வேறொரு ஆவியினால் வந்ததாகவும் இருக்கிறது. பரலோகத்திலே கூட நிதானமிழக்கிறவர்கள் ஒருவரும் இல்லை.
தேவன் பரிசுத்த ஆவியினால், என்னை நிரப்பின போது, எனக்கு என்ன நடந்தது என்பதை கூறுகிறேன். "நான் இரட்சிக்கப்பட்ட பின்பும், ஆதாமின் சுபாவம் (வேதத்தில் அதை மாம்சம் என்கிறது) என்னை மேற்கொண்டதை அவ்வப்போது கண்டேன். ஆனால், பரிசுத்த ஆவியினவர் என்னை நிரப்பியதும் கிறிஸ்துவின் சுபாவத்துக்கு ஏற்றவனாக கொஞ்சம் கொஞ்சமாய் மறுரூபமடைய செய்தது. பரிசுத்த ஆவியினால் நிரப்பப்பட்ட மனுஷனுக்கு அடையாளம் இயேசுவே! தேவனும் அதேப்போலவே, என்னையும் மாற்ற விரும்புகிறார்".
முதலாவது, "உங்கள் பாவங்களை சுமந்து தீர்த்த தேவ ஆட்டுக்குட்டி" என்று யோவான் ஸ்நானகன் சொன்னார். வேறுவிதத்திலே சொன்னால், உங்கள் பாத்திரத்தை அவர் முதலாவது சுத்தம் பண்ணுவார்!. அதை அப்படி காலியாகவும் விடமாட்டார். அந்த பாத்திரத்தை நிரப்புவார்!. உங்கள் இருதயத்தை சுத்திகரித்து, அதை தம் ஆவியினால் நிரப்புவார்! அப்போது, உங்கள் உள்ளத்திலிருந்து, 'ஜீவதண்ணீர் உள்ள நதிகள்' ஓடும்.
பழைய ஏற்பாட்டிலும், ஜனங்கள் “பரிசுத்த ஆவியினால், நிரப்பட்டார்கள்”! அது புதிய உடன்படிக்கை போன்ற நிரப்புதல் இல்லை. (யோவா 7:39)- ல் வேதம் சொல்கிறது, 'இயேசு இன்னும் மகிமை படாதபடியினால், பரிசுத்த ஆவி இன்னும் அருளப்படாமலிருந்தது'.
நான் அதை விளக்கி கூறுகிறேன். ஒரு டம்ளரை தலைகீழாக கவிழ்த்து வைத்து அதில் நீரை வார்த்தால், தண்ணீர் மேலேயிருந்து பக்கவாட்டிலே எல்லாம் வழிந்தோடும். இப்படிதான் தேவன் பழைய உடன்படிக்கையின் கீழ் இருந்து எல்லா தேவ மனுஷர்கள் மேலும் வழிந்தோட செய்து அவர்கள் மூலம் ஆயிரக்கணக்கானோர் ஆசீர்வதிக்கப்பட்டனர். இப்படியாகதான், தேவஆவியானவரை கொண்டு, கிதியோன், சிம்சோன், சவுல், தாவீது இவர்கள் மூலம், இஸ்ரவேலரை அவர்களின் சத்துருக்கள் கரத்திலிருந்து விடுவிக்க உபயோகித்தார். ஆனால், அவர்களின் பாத்திரத்தின் உட்புறத்தை பார்த்தால், அவைகள் பாவத்தினாலும், அசுத்தத்தினாலும் நிறைந்திருந்தது. ஏனென்றால், டம்ளர் தலைகீழாக கவிழ்த்து வைக்கப்பட்டும், அதன் உள்ளே விபசாரம், விக்கிரக ஆராதனை போன்றவற்றால் நிறைந்திருந்தது. கிதியோனின் மேல், பரிசுத்த ஆவியானவர் இறங்கின போது, மீதியானியர் கரத்திலிருந்து இஸ்ரவேலரை மீட்டு இரட்சித்தார் (நியாதி 6:34). ஆனால், தேவன் அவ்வளவு வல்லமையாக உபயோகித்த பின்பு அவன்போய் விக்கிரங்களை பண்ணி, அதை ஆராதித்தான் (நியாதி 8:24-27). பாத்திரத்தின் உட்புறம் அசுத்தத்தினால் நிறைந்திருந்தது. அப்படியே, சவுல் தாவீது என்பவர்களுடைய இருதயமும் அசுத்தத்தினால் நிறைந்திருந்தது.
ஆனால், பெந்தேகொஸ்தே நாளிலே, டம்ளர் சரியாக திருப்பி வைக்கப்பட்டு, அதிலே பாத்திரத்தின் உள்ளே (இருதயம்) ஆவியானவர் நிரப்பினார். பாத்திரத்தின் உட்புறம் சுத்தம் செய்யப்பட்டு அது நிரப்பப்பட்டது! அப்போது, தண்ணீர் உள்ளாக நிரம்பி, வெளியே வழிந்தோடியது. அந்த நாள் வரை பரிசுத்த ஆவியானவர் ”அவர்களோடு இருந்தார்” என்றும், அந்த நாளுக்குப்பிறகு, ”அவர்களுக்குள் இருப்பார்” என்று சொன்னார் (யோவா 14:17). இதுவே, பழைய உடன்படிக்கையின் பரிசுத்த ஆவியானவரின் அனுபவத்துக்கும், புதிய உடன்படிக்கை பரிசுத்த ஆவியானவருக்கும் இடையே உள்ள வித்தியாசம்.
ஆகவே, ஒரு பிரசங்கியாளன் தேவனால் வல்லமையாக உபயோகப்படுத்தப்பட்டும் விபசாரத்தில் விழுகிறான் என்றால், அப்படிப்பட்டவன் தேவனுடைய புது உடன்படிக்கையின் ஊழியனாகவே இல்லை. என்பதையே காட்டுகிறது. பரிசுத்த ஆவியானவர் அவன் மேல் வழிந்தோடின ஒரு பழைய உடன்படிக்கையின் ஊழியனாக இருக்கிறானே அல்லாமல், தன் உள்ளான ஜீவியத்திலிருந்து ஆவியானவர் வழிந்தோடுகிறவனாக இல்லை. ஏனென்றால், தன் இருதயத்திலே இன்னமும் அந்த ஸ்திரீயை இச்சிக்கிறவனாக இருக்கிறான். அதேப் போலவேதான், பணத்தை நேசிக்கிற ஊழியனும் இருக்கிறான். கிறிஸ்துவின் ஆவியுள்ளவன் பணத்தை நேசிக்கிறவனாக இருக்கமாட்டான். அப்படிப்பட்டவன் ஆவியில் நிறைந்தவனாகவும் இருக்க முடியாது. தேவன் அவர்களை பிரயோஜனப்படுத்துவார். எப்படியென்றால், கவிழ்த்து போடப்பட்ட டம்ளரின் பக்கவாட்டிலே வழிவதுப்போல இருக்கும். அப்படிப்பட்டவர்கள் உள்ளான ஜீவியத்தில் மாறுதலை காணாதவர்கள். இப்படிப்பட்ட பிரசங்கிகளை குறித்தே கடைசி நாட்களில் நாங்கள் இதை செய்தோம், அதை சாதித்தோம் என்று பெருமையாய் சொல்லும்போது, அப்படியிருந்தும் இயேசு அவர்களை நரகத்திற்கே அனுப்புகிறார் (மத்7:22,23).
தேவன் உங்களை பரிசுத்த ஆவியினால் நிறைக்கும்போது, எதை கேட்பீர்கள்? தலையை விலுத்து கொள்ளும் அனுபவத்தையா? அல்லது உங்களை முதலாவது, சுத்திகரியும் என்று கேட்பீகளா? வெறும் சுகமளிக்கவும், தீர்க்கதரிசனம் சொல்லவும் மாத்திரம் தேவனால் பிரயோஜனப்பட வேண்டும் என்றால், மீண்டும் பழைய உடன்படிக்கைக்கு திரும்பி செல்லுகிறவர்களாகவே இருப்பீர்கள்!
தாவீது, பத்சேபாளிடத்தில் பாவம் செய்தபின், ஒரு சங்கீதத்தை எழுதி அதை ஒத்துக்கொண்டான். ஆனால், ஒரு சிறு வாசகம் அந்த 51 -ஆம் சங்கீதத்திலே உண்டு. அது மன்னிப்பை காட்டிலும் மேலான ஒன்று, அவனிடத்தில் இல்லாத ஒன்று. தேவன் அவனை பலவிதத்தில் பிரயோஜனப்படுத்தியிருந்தார். ஆனால், அவனோ, இதோ உள்ளத்தில் உண்மையாக இருக்க விரும்புகிறீர்” என்றான்! . தாவீது, அதை நன்கு அறிந்திருந்தான். அவனிடத்திலோ அது இல்லை. அதை அடைய வாஞ்சையுடன் இருந்தான். ஆனால், பழைய உடன்படிக்கையிலே அது சாத்தியமில்லாமல் போனது. நீங்களும் அப்படிபட்ட வாழ்க்கையை வாஞ்சிக்கிறீர்களா? ஒரு மனுஷன் வெளிப்பிரகாரமான வாழ்க்கையில் சுத்தமுள்ளவனாயிருந்து, அப்படி உள்ளான ஜீவியத்தில் இல்லாமலிருந்தால், அவன் ஒரு மாய்மாலக்காரன் அவன் பழைய உடன்படிக்கையின் கீழ் வாழ்கிற மனுஷன்.
யோ 7:38-ல் இயேசு, "புது உடன்படிக்கையில் பரிசுத்த ஆவியானவரை பெற்றுக்கொள்ளுகிறவர்களுடைய உள்ளத்திலிருந்து, ஜீவ தண்ணீர் உள்ள நதிகள் பாயும்" என்றார். இங்கே முக்கியமான காரியம் என்பது நதிகள் அல்ல. அவைகள் புறப்படுகிற இடமாகிய 'உள்ளமே'. இதைதான் தாவீது, சங்கீதம் 51-ல் உள்ளத்தில் என்பது பாத்திரத்தின் உட்புறத்தை குறிக்கிறது! ஆனால் தாவீது, அதை பெற முடியவில்லை. அவன் அடைந்ததெல்லாம் பாத்திரத்தின் வெளிப்புறம் அவ்வளவுதான்.
அதுதான் நம்முடைய அநுபவமாக இருக்கிறதா? உங்களுக்கு இருக்கிற பரிசுத்த ஆவியின் அபிஷேகம் பழைய உடன்படிக்கை பற்றியதா? அல்லது புதிய உடன்படிக்கைகுரியதா? நீங்கள் எதற்காக வாஞ்சிக்கிறீர்களோ அதுவே உங்களுக்கு கிட்டும். நீங்கள் கேட்கிறதையே பெற்றுக்கொள்ளுவீர்கள். ஆண்டவரே, என்னை பயன்படுத்தும் என்று கேட்பதாக இருந்தால், ஒருவேளை அவர் உங்களை பயன் படுத்துவார்! ஆனாலும், தலைகீழாக கவிழ்த்து வைக்கப்பட்ட டம்ளரைப் போலவே தொடர்ச்சியாக பாவத்தினாலும், அசுத்தத்தினாலும் நிறைந்த இருதயம் உடையவர்களாகவே இருப்பீர்கள். உங்களைக் கொண்டு ஒருவேளை தேவன் பெரியகாரியங்களை நிறைவேற்றலாம். ஆனால் ஒரு சிம்சோனை போல இருதயம் முழுவதும் பாவ இச்சையினால் நிறைந்தவராக இருப்பீர்கள். அதுதான் உங்களுக்கு தேவையா? அது புது உடன்படிக்கையின் ஆவியின் பரிசுத்த நிறைவு அல்ல.
உள்ளத்தில் உண்மை என்பது பழைய உடன்படிக்கையின் பழைய வாழ்க்கை வாழ விரும்பும் ஒருவருக்கும் சொந்தமாகாது என்பதை என் சொந்த அநுபவத்தின் மூலமாக நன்கு அறிந்திருக்கிறேன். நான் மறுபடியும் பிறந்த உடனே, "ஆண்டவரே, உம்முடைய வார்த்தையை பிரசங்கிக்கும் வரத்தை தந்து என்னை பிரயோஜனபடுத்தும்" என்றேன். ஆண்டவரும் அப்படியே செய்து என்னை பிரயோஜனப்படுத்தினார். ஆனால், காலம் கடந்தபோது, என் பாத்திரத்தின் உட்புறம் அசுத்தத்தால் நிறைந்து இருப்பதை கண்டேன்.
ஒரு தாவீது அல்லது சிம்சோனை போலவே, நானும் வாழ்ந்திருக்கலாம். ஏனென்றால், தண்ணீர் என் மேல் புரண்டு, அநேகரை ஆசீர்வதித்தது! உலகின் பல்வேறு பகுதியிலிருந்தும், அநேக ஆயிரம் ஜனங்கள் என் கருத்தரங்குகளின் பிரசங்கத்தினாலும், ரேடியோ ஊழியத்தினாலும், புத்தகங்களின் மூலமாகவும் ஆசீர்வதிக்கப்பட்டு இருந்தனர்! ஆனால், நானோ பாவத்தின் மேல் ஜெயம் பெறாத அசுத்த இருதயம் உள்ளவனாக இருந்தேன். நான் ஒரு மாய்மாலக்காரனாக இருந்தேன். தாவீதைப் போல, "என் ஆண்டவரே, என் உள்ளத்தில் உண்மையாயிருக்க நீர் வாஞ்சிக்கிறீர். ஆனால், என்னிடத்தில் அது இல்லை" என்று கதறினேன். என் சொந்த நிலையை குறித்து நான் கொஞ்சமேனும் சந்தோஷமடையவில்லை. புது உடன்படிக்கையிலான பரிசுத்த ஆவியின் அனுபவத்துக்காக வெகு வாஞ்சையாயிருக்கிறேன். கடைசியாக, நான் மாய்மாலகாரனாக இருந்ததினிமித்தம், பிரசங்கிக்க கூடாது என்று தீர்மானித்தேன். அப்போதுதான், தேவன் தம்முடைய மிகுந்த இரக்கத்தால் என்னைப்போல ஓர் பாவியின் மேல் மனதுருகி, என்னை சந்தித்து பரிசுத்த ஆவியினாலும், அக்கினியினாலும் நிரப்பினார்.
அக்கினி என்ன செய்யும்? அது சுத்திகரிக்கவே உதவும். இதைதான் யோவான் ஸ்நானகனும், " நான் தண்ணீரினால் உங்களுக்கு ஞானஸ்நானம் கொடுக்கிறேன். ஆனால் இயேசு உங்களுக்கு அக்கினியினால் ஞானஸ்நானம் கொடுப்பார்". அது உங்கள் ஜீவியத்தை சுத்திகரிக்குமே அல்லாமல் வேறொன்றும் செய்யாது என்று இஸ்ரவேல் ஜனங்களுக்கு சொன்னார்.
ஜனங்கள் என்னிடத்தில் வந்து என் மீது கைகளை வைத்து பரிசுத்த ஆவியினாலும், அக்கினியினாலும் ஞானஸ்நானம் பண்ணுவியுங்கள் என்று சொல்லும்போது, "நான் என் வெறும் கைகளை உங்கள் மேல் வைப்பதால் ஒன்றும் நிகழப்போவதில்லை. என்னிலும் வல்லவர் ஒருவர் இருக்கிறார். இயேசுவினிடத்தில் போங்கள்; அவர் ஒருவரே பரிசுத்த ஆவியினாலும் அக்கினியினாலும் உங்களை நிரப்புவார்".
இயேசுவே என்னை பரிசுத்த ஆவியினாலும் அக்கினியினாலும் நிரப்பினார். அவரே, தலைகீழான என்னுடைய டம்ளரை (பாத்திரத்தை) சரியாக நிமிர்த்தி நிரப்பினார். இது நான் இரட்சிக்கப்பட்டு பதினாறு வருடங்கள் கழித்து சம்பவித்தது. அப்படியே அதை உங்களுக்கும்கூட அவரால் செய்துவிட முடியும். தேவனிடத்தில் பட்சபாதமில்லை. ஆகவே, இன்றே அவரிடத்தில் சென்றுவிடுங்கள்!
ஆனால், நாம் ஏற்கனவே பார்த்தபடி ஜனங்கள் முதலாவது தாங்கள் பூமிக்குரிய இராஜ்ஜியத்திலிருந்து மனம் திரும்பவேண்டும் (மத்தேயு 3:2) என்று யோவான் ஸ்நானகன் சொல்லியிருந்தார். இந்த இயேசுவே பரிசுத்த ஆவியினாலும் அக்கினியினாலும் நம்மை நிறைத்து பரலோக இராஜ்ஜியத்தை நம் ஜீவியத்தில் கொண்டு வருவார். "மனந்திரும்புதல்" என்ற வார்த்தையானது, இராணுவத்தில் பயன்படுத்தப்படும் முழுவதும் திரும்பு (About turn) என்கிறதான கட்டளைக்குரிய வார்த்தையாகும். அது, 180 டிகிரி பாகைக்கு முழுவதும் எதிர்திசையில் என்பது அதன் பொருளாகும். நாம் பூமிக்குரிய ஆசீர்வாதங்களை தேடுகிறதிலிருந்து பரலோக ஆசீர்வாதங்களுக்கு நேராக அப்படியே திரும்பவேண்டும். அப்போது, மாத்திரமே போலியில்லாத நிஜமான பரிசுத்த ஆவியினால் நிரப்பப்படமுடியும்!
பரிசுத்த ஆவியின் ஞானஸ்நானத்தை தேடுகிற அநேகருடைய பிரச்சனை என்னவென்றால், அவர்கள் இன்னமும் பூமிக்குரிய ஆசீர்வாதங்களையே தேடிக்கொண்டிருப்பவர்களாகவே இருக்கிறார்கள். அதனிமித்தமே, பிசாசானவன் பரிசுத்த ஆவியின் ஞானஸ்நானத்தை போலவே உள்ள போலியான ஒரு அனுபவத்தை கொடுத்துவிடுகிறான். வேறே அநேக மதத்தை சேர்ந்தவர்கள் கூட அந்நியபாஷையில் பேசுகிறவர்களாக இருக்கிறார்கள். இது உண்மையானதில்லை; போலியானது என்று எப்படி வகையறுக்கமுடியும்? அதற்கு ஒரே வழி முதலாவது நாம் பூமிக்குரியவைகளை விட்டு பரலோகத்துக்குரியவைகளை தேட வேண்டும்.
இன்றைக்கு பரிசுத்த ஆவியின் ஒவ்வொரு வரமும் போலியாக்கப்பட்டது. அது எதைக்காட்டுகிறது என்றால், ஆவியின் நிஜமான வரங்கள் எல்லாம் மிகவும் விலையேறபெற்றது என்பதையே காட்டுகிறது. ஏனென்றால், ஒரு விலையேறப்பெறாத சாதாரண செய்தித் தாளையோ, பிரௌன் பேப்பரையோ யாரும் போலியாக தயாரிக்கமாட்டார்கள். ஏனென்றால், பூமியிலே அவைகளுக்கு எந்தவித மதிப்புமில்லை. வைரக்கற்கள், பொன் மற்றும் கரன்சிநோட்டுக்களை மாத்திரமே ஜனங்கள் போலியாக தயாரிக்கிறார்கள். அதைப்போலவேதான் அந்நியபாஷை, தீர்க்கதரிசனவரம் மற்றும் சுகமளிக்கும்வரம் போன்றவையெல்லாம் விலையேறப்பெற்றவைகளாக இருப்பதால்தான் சாத்தான் அவைகளை போலியாக்கிவைட்டான்!
வைரங்களைப்பற்றி அறியாத ஒரு மனிதன் வைரங்களை வாங்கும்போது, எளிதாக ஏமாற்றமடைந்துவிடமுடியும். அதனால்தான் வைரங்களைப்பற்றி நன்கு அறிந்தவர்களை கூட அழைத்துகொண்டுபோய் வாங்குகிறீர்கள். இப்படி பூமிக்குரிய காரியத்திலே அதிக கவனமாக இருக்கிற நீங்கள் ஏன் ஆவிக்குரிய வரங்களை குறித்த காரியத்திலும் அப்படி அதிக கவனமுள்ளவர்களாக ஏன் இருக்ககூடாது? இப்படியாக, சாத்தானின் வஞ்சகத்துக்கு நீங்கள் தப்புவிக்கபடுவதை நிச்சயத்துக்கொள்ளலாம். நீங்கள் பெற்றுக்கொண்ட அனைத்து வரங்களும் பரிசுத்த ஆவியினால் அருளப்பட்ட நிஜமான வரங்கள்தானா? நீங்கள் நிஜமான பரிசுத்த ஆவியினாலும், அக்கினியினாலும் நிரப்பப்பட்டவர்கள்தானா? இப்படி சில முக்கியமான கேள்விகளை உங்களை நீங்களே கேட்டுப்பாருங்கள்.
எனக்கு நன்றாக ஞாபகமிருக்கிறது, முதன்முதலில் பரிசுத்த ஆவியை பெற்றுக்கொள்ள நான் தேடினபோது, அதைப்பற்றி பிரசங்கிக்கிற ஒரு சபைக்கு சென்றேன். அங்கே அநேக ஜனங்கள் ஏகமாய் கூச்சலிட்டுக் கொண்டிருப்பதை கண்டேன். அது எனக்கு குழப்பமாயிருந்தது. அங்கே இருந்த பாஸ்டர்கள் நான் கப்பற்படை அதிகாரி என்பதை அறிந்து என்னிடத்திலிருந்த பணத்தில் நாட்டம் கொண்டவர்களாகவே இருந்தார்கள். நான் ஏமாற்றத்தோடு என் அறைக்குவந்து, "ஆண்டவரே, எவ்வளவு சப்தமாக கூச்சலிடவேண்டும் என்று கற்றுத்தருகிற அந்த அந்த ஆவி வேண்டாம். பண ஆசையிலிருந்து இரட்சிக்கப்படாமல் அதற்கு அடிமைப்படுத்துகிற அந்த ஆவி எனக்கு வேண்டாம். பெந்தேகொஸ்தே நாளிலே, பேதுரு, யோவான், யாக்கோபு பெற்றுக்கொண்ட அந்த ஆவியே எனக்கு வேண்டும். அது மாத்திரமே என்னை இந்த உலகத்திலிருந்து விடுதலையாக்கி, உமக்கென்று மகிமையான சாட்சியாக நிறுத்தும். அதைவிட்டு, மலிவானதும், போலியானதும் எனக்கு வேண்டாம். இதற்காக பத்துவருடம் காத்திருக்க வேண்டுமானாலும் கூட காத்திருந்து நிஜமானதை பெறுவேன்" என்று ஜெபித்தேன்.
ஒரு ஆரம்ப பாட சாலைக்குப்போகும் குழந்தை முதுகலைப்பட்டம் பெற இருபது வருடம் வாஞ்சையாக இருப்பதை எண்ணிப்பாருங்கள்! பரிசுத்த ஆவியை பெற்றுக்கொள்வது ஒரு முதுகலைப்பட்டம் பெறுவதைக் காட்டிலும் விலையேறப்பெற்றதும் முக்கியமானதும் அல்லவா? முதுகலைப்பட்டம் நிறைய சம்பாத்தியத்தை கொடுப்பதுப்போல, பரிசுத்த ஆவியானவர் கொடுக்கமாட்டார். ஆனால், நீங்கள் தேவனுக்கு மிகவும் பிரயோஜனமானவர்களாய் இருந்திட முடியும் என்பது நிச்சயம்!
இரட்சிக்கப்பட்டு மறுபடியும் பிறந்த உங்கள் அனைவரையும் ஒரு கேள்வி கேட்கிறேன், "நீங்கள் பரலோகம் போக மாத்திரம் நாட்டம் உள்ளவர்களா? அல்லது பரலோகத்துக்கு போகிறதிற்கு முன்னே பூமிக்குரிய இந்த வாழ்க்கையில் இயேசுவை பின்பற்ற நாட்டமுள்ளவர்களாக இருக்கிறீர்களா?"
தேவன் என்னை பரிசுத்த ஆவியினால், நிறைத்த போது, இந்திய தேசம் முழுவதும் போய், யார் பரலோகத்துக்கு போக விருப்பமுள்ளவர்களாக இருக்கிறார்கள் என்று பார்க்காமல், பூமியிலே இயேசுவைப் பின்பற்றுகிறவர்களையே தேடினேன்! ஏறக்குறைய இந்திய தேசத்தில் உள்ள நூறு கோடி ஜனங்களும் பரலோகம் செல்ல விருப்பமானவர்கள்தான்! அதில், ஒருவரேனும் நரகம் செல்ல விரும்பமாட்டார்கள். பரலோகம் போகணும் என்பதற்காக ஆவிக்குரியவர்களாக நீங்கள் இருக்கவில்லை. இவ்வுலகில், நாம் காணும் ஒவ்வொரு மனிதனும் பரலோகம் போகவே வாஞ்சிக்கிறான்!
ஆனால், நானோ பரலோகம் போகிறதுக்கு முன்பாக தங்கள் பூமிக்குரிய வாழ்க்கை முழுவதும் 'இயேசு கிறிஸ்துவை பின்பற்றி வாழவேண்டும் என்று வாஞ்சையுள்ள ஜனங்களையே' தேடினேன். அப்படிபட்ட ஜனங்கள் மிகவும் சொற்பமானவர்களே! உலகெங்கும் காணப்படுகிற அப்படிபட்ட ஜனங்களுக்காவே, கடந்த முப்பத்தேழு வருடங்கள் செலவழித்து வருகிறேன். தங்கள் பூமிக்குரிய இராஜ்ஜியத்தையும், கூடவே பரிசுத்த ஆவியினால், நிறைய வேண்டும் என விரும்புவர்களை அல்ல. மாறாக, யோவான் ஸ்நானகனுடைய அறைகூவலுக்கு கீழ்ப்படிந்து யார் தங்களை பூமிக்குரியக்காரியங்களை தேடுகிறதிலிருந்து, 180 (டிகிரி) பாகை திருப்பி பரலோகத்துக்குரிய காரியங்களை தேட விரும்புகிறவர்களையும், பணத்தை காட்டிலும் பரிசுத்தத்தை வாஞ்சிக்கிறவர்களாகவும் இருக்கிற கிறிஸ்துவர்களையே நான் தேடிக் கொண்டு இருக்கிறேன்!
உங்களில் எத்தனைபேர் தாங்கள் தேவனுக்கு முன்பாக நின்று, "ஆண்டவரே, இந்த உலகத்திலே வாழ எனக்கு பணம் தேவை என்பதையும்; ஆனால், உம்முடைய சமூகத்திலே நான் இருக்க பரிசுத்தமே தேவை என்பதையும் அறிந்திருக்கிறேன். ஆதலால், என் ஆண்டவரே, பணத்தை காட்டிலும் இன்று நான் பரிசுத்தத்தை அதிகமாக வாஞ்சிக்கிறேன்! இவ்வுலக கனம், ஐஸ்வர்யம் இவையாவற்றையும் விட தேவ ஆவியின் ஐக்கியம் என் வாழ்க்கைக்கு அதிகமாக தேவை என்பதை அறிந்திருக்கிறேன்" என்று சொல்லமுடியுமா?
இப்படி உண்மையாக நீங்கள் ஜெபிப்பீர்கள் என்றால், நீங்கள் பரிசுத்த ஆவியின் ஞானஸ்நானத்தை சீக்கிரமே பெற்றுக்கொள்ளுவீர்கள் என்று உறுதியாக என்னால் கூற முடியும்!
"நாற்பது ஆண்டுகளாய் பரிசுத்த ஆவியின் ஞானஸ்நானத்திற்காக ஜெபித்து கொண்டிருக்கிறேன். ஆனாலும் இன்னும் பெற்றுக்கொள்ளவில்லை" என்று சொன்ன ஒரு மனிதனை நான் அறிவேன். அப்படிபட்டவர்களுக்கு, பூமிக்குரிய காரியங்களை நீங்கள் தேடிக் கொண்டு இருப்பீர்களானால், நூறு வருடமானலும் பரிசுத்த ஆவியின் ஞானஸ்நானம் உங்களுக்கு கிடைக்காது என்பதே என்னுடைய பதில். ஒருவேளை, அப்படி பெற்றுக்கொண்டாலும், அது போலியானதே அல்லாமல், நிஜமில்லை! உண்மையான பரிசுத்த ஆவியின் ஞானஸ்நானம் நிச்சயம் விலை கிரயம் கொண்டதாகவே இருக்கிறது.
தேவன் தம்முடைய வார்த்தையிலே, அநேக அற்புதமான வாக்குத்தத்தங்களை கொடுத்திருக்கிறார். நான் ஏற்கனவே, சொன்னபடி அவைகளெல்லாம் “மேன்மையும்,அருமையானவைகள் (2 பேதுரு 1:4). ஆனால், வாக்குத்தத்தம் ஒவ்வொன்றும் நிபந்தனைக்குட்பட்டதாகவே, இருக்கிறது. நீங்கள், ஒரு வேலைக்கு விண்ணப்பிக்கும் போது, அதிலே சொல்லப்பட்ட சில நிபந்தனைகளை முதலாவது நிறைவேற்றப்பட வேண்டும். அவைகளிலே சில, நீங்கள் ஒரு பட்டதாரியாகவோ அல்லது கொஞ்சம் முன் அநுபவம் உள்ளவராகவோ இருக்கவேண்டும் என்றோ இருக்கலாம். இந்த நிபந்தனைகளையெல்லாம் நிறைவேற்றாமல், நாம் இண்டர்வியூக்கு போனால், இண்டர்வியூ கொடுப்பவர் "இந்த தகுதியெல்லாம் இந்த வேலைக்கு தேவை என்பதை அறியாமல் வந்து, ஏன் எங்கள் நேரத்தை வீணாக்குகிறீர் வீட்டுக்கு போங்கள்" என்றல்லவா கூறுவார்கள்? அதுப்போலவே, இயேசுவினிடத்தில் வந்து, "ஆண்டவரே, பரிசுத்த ஆவியினாலும், அக்கினியினாலும் என்னை நிரப்பும்" என்றால் "யோவான் ஸ்நானகன் சொன்ன நிபந்தனைகளை நிறைவேற்றினீர்களா?" என்றே ஆண்டவர் நம்மை கேட்பார். "நீங்கள் முழுவதுமாக பூமிக்குரியவைகளை விட்டுவிட்டு பரலோகத்துக்குரியவைகளை தேடுகிறதிலே மனம் திரும்பி இருக்கிறீர்களா? அப்படி இல்லாதபட்சத்தில், உங்கள் வீட்டுக்கு திரும்பிபோய், நிபந்தனைகளை நிறைவேற்றிவிட்டு திரும்ப வாருங்கள்" என்றே சொல்லுவார் அல்லவா? இன்றைக்கு நான் கண்ட அநேக கிறிஸ்துவர்கள், பரிசுத்த ஆவியினால் நிறைந்து இருக்கிறேன் என்று சொல்லுகிறவர்களில் அநேகர், போலியான ஒரு அனுபவத்தையே பெற்றிருக்கிறார்கள் என்று என்னால் அறுதியிட்டு கூறமுடியும்! ஏனென்றால், அவர் பெற்றுக்கொண்ட பரிசுத்த ஆவியானவர், அவர்களுடைய வாழ்க்கையில் ஓர் பரிசுத்தமுள்ள வாழ்க்கையை அவர்களுக்கு அளிக்க பெலனற்றவராகவே இருக்கிறார்.
இயேசுவுக்கு பதினொரு சீஷர்கள் அடங்கிய ஒரு சிறு சபையே இருந்தது. ஆனால், அவர்கள் எல்லோரும் பரிசுத்த ஆவியினால் நிரப்பப்பட்ட போது, ஓர் ஆணித்தரமான கிறிஸ்துவை பின்பற்றுகிற சீஷர்களாய் தாங்கள் மாறினதுமில்லாமல், அநேகமாயிரம் சீஷர்களையும் அவர்கள் மாற்றினார்கள். ஆனால், இன்றைக்கு தங்கள் மெகா (பெரிய) சபையிலே இருக்கும், ஆயிரமாயிரம் ஜனங்கள் தாங்கள் பரிசுத்த ஆவியினால், நிறைந்திருக்கிறோம் என்று மார்தட்டியும், தங்கள் அதின வாழ்க்கையிலே, பாவத்திலே தோற்கடிக்கப்பட்டவர்களும், பெலனற்றவர்களாகவும், பணத்தை நேசிக்கிறவர்களாகவே இருக்கிறார்கள். ஏனென்றால், தங்கள் வாழ்க்கையில் அவர்கள் பெற்றுக்கொண்ட பரிசுத்த ஆவியானவரின் அனுபவம் போலியானதே அல்லாமல், அது ஓர் நிஜமல்ல என்பதே, அதற்கு காரணம்.
ஒரு பெண்முயல் ஒரு பெண்சிங்கத்திடம் பேசின கதை ஒன்றை கேட்டிருக்கிறேன். பெண்முயல், "கடந்த வருடம் நான் இருபத்து நான்கு குட்டிகள் போட்டேன். நீ எத்தனை குட்டிகள் போட்டாய்?" என்று பெண்சிங்கத்திடம் கேட்டது. அதற்கு பெண்சிங்கம், "நான் ஒரே ஒரு குட்டிதான் போட்டேன். ஆனாலும் அது சிங்கக்குட்டி" என்றதாம். எப்போதெல்லாம் எங்கள் சபைக்கு திரளான ஜனங்கள் வருகிறார்கள் அதிலே ஏராளமான ஜனங்கள், ”பரிசுத்த ஆவியின் ஞானஸ்நானத்தை” பெற்றிருக்கிறார்கள் என்று சொல்லுகிறார்களோ அப்போது இந்த கதைதான் என் ஞாபகத்துக்கு வரும். இன்றைக்கு ஆயிரமாயிரமாய், ஆழமற்ற –”அந்நியபாஷை” பேசும் கிறிஸ்துவர்களை காட்டிலும், அந்த ஆதி அப்போஸ்தலர்களைப் போன்ற ஒரே ஒரு சீஷன், தேவனுக்கு அதிகமாய் பிரயோஜனபடுபவனாய் இருக்க முடியும் என்பதையே நான் நம்புகிறேன்.
அந்நியபாஷை பேசுகிற வரத்தை நான் இங்கு குறைத்துமதிப்பிடவில்லை. ஆனால், நீங்கள் பெற்றுகொண்டது உண்மையான அந்நியபாஷை வரம்தானா என்று எப்படி அறிவீர்கள்?
நானும் கடந்த முப்பத்தேழு வருடங்களாய் அந்நிய பாஷைகளை பேசிக்கொண்டுதான் இருக்கிறேன். அது எனக்குள் என்ன கிரியை செய்தது என்றும் சொல்லுகிறேன். அந்நிய பாஷையில் பேசுவதற்கு பதினாறு வருடங்களுக்கு முன்பாகவே நான் இரட்சிக்கப்பட்டேன். ஆனால், அந்த பதினாறு வருடங்களில், நான் அடிக்கடி தைரியமிழந்தவனாகவும், சோர்வடைந்தவனாகவும், கோபப்படுபவனாகவும், கெட்ட மனநிலை (Bad moods) உள்ளவனாகவும், சில நேரங்களில் மகிழ்ச்சியின் மலை உச்சியிலும், பல நேரங்களில் சோர்வின் பள்ளத்தாக்கிலும் பெரும்பான்மையான இரட்சிக்கப்பட்ட கிறிஸ்துவர்களை போலவே, நானும் இருந்தேன். அப்போது, 1கொரிந் 14:4- ஐ படித்த போது, "அந்நிய பாஷையில் பேசுகிறவன் தனக்கே பக்தி விருத்தி உண்டாக பேசுகிறான்”. பக்திவிருத்தி அடையவே, நானும் விரும்புகிறேன். 'பக்தி விருத்தி' என்றால், 'கட்டுவதற்காக' என்று அர்த்தம். யாரோ ஒருவர் இந்த கட்டிடத்தை வெடிகுண்டு வைத்து தகர்த்தால், எல்லாம் தவிடு பொடியாகிவிடும்! பின்பு வேறொருவர் அதை எடுத்து மீண்டும் கட்டுவாரென்றால், அது ஒரு கருத்தை கவர கூடிய அழகிய கட்டிடமாக மாறும். ஆகவே, “கட்டுவது” என்பது, கவரகூடிய அழகுடையதாக கட்டப்படும் என்று பொருள்படும்! ஆகவே, “அந்நிய பாஷையில் பேசுகிறவன் தன்னைதானே, கவரகூடிய அழகுள்ளதாக கட்டிக் கொள்ளுகிறான்” என்ற மொழிபெயர்ப்பு மிகவும் பாராட்டக்கூடியது.
இப்படிதான், நானும், "ஆண்டவரே, உடைந்து நிலைகுலைந்து பின்மாற்றமடைந்த என்னுடைய வாழ்க்கையையும் உம்மால் மாற்றமுடியுமா? என்று கேட்டேன். நானோ இரட்சிக்கப்பட்டும் அடிக்கடி கெட்ட மனநிலை உள்ளவனாகவே இருக்கிறேன். என் நாவைக்கட்டுப்படுத்த முடியாமலும், கோபப்படும்போது பிசாசை போலவே பேசுகிறவனாகவும் இருக்கிற எனக்கு உண்மையாகவே பரலோக நாவை கொடுப்பீரா? என்னையும் கவரக்கூடிய அழகுள்ளவனாய் கட்டுவீரா? அப்படியானால் எத்தனை விலைகிரயம்” ஆனாலும் நீர் எனக்குள் அதை செய்யும். நான் மிகவும் ஆதங்கமாயிருக்கிறேன்" என்று கேட்டேன்.
பிறகு, தேவன் என்னை பரிசுத்த ஆவியினால் நிரப்பி என் வாழ்க்கையை முழுவதும் மாற்றினார். அவர் எனக்கு அந்நிய பாஷை பேசும் வரத்தை மாத்திரம் கொடாமல், என் சொந்த பாஷையை (தாய் மொழி) சரியாக பேசும் கட்டுப்பாட்டினால் என்னை தரிப்பித்தார்!. இப்படியாகதான் நான் பெற்றுக்கொண்டது, போலியானது அல்ல உண்மையானது என்பதை உணர்ந்தேன். அந்நிய பாஷை பேசும் வரத்தை பெற்றுக்கொண்டேன் என்று சொல்லியும் உங்கள் சொந்த பாஷையில் (அறிந்த) கட்டுப்பாடு இல்லாமல் இருக்கிறீர்கள். உண்மையாகவே, அந்த வரம் பரிசுத்த ஆவியின் மூலமாய் உண்டான வரமே அல்ல என்பதையும் அறியுங்கள்.
அது மாத்திரமல்ல, அதைரியத்தையும், கெட்ட மனநிலையையும் கூட ஜெயிக்க முடியும் என்பதையும், "கர்த்தருக்குள் எப்பொழுதும் சந்தோஷமாக இருக்கமுடியும்" என்பதையும் நான் அறிந்துக்கொண்டேன். நான் இன்னும் அதைரியப்பட சோதிக்கபட்டாலும் அந்த சோதனை என்னை விட்டு நீங்கும்வரை அதை எதிர்த்தும், அந்நியபாஷையில் பேசியும், எப்போதும் வறண்ட ஓர் வாழ்க்கை இல்லாமல், புத்தம் புதியதாகவே, எப்போதும் இருக்கமுடியும். எப்போதும், அபிஷேகம் கொண்டு மற்றவர்களுக்கு ஊழியம் செய்யவும் உதவியாயிருக்கவும் முடியும். ஆகவே, மற்றெல்லா வரத்தையும் கொண்டு மற்றவர்களுக்கு உதவி செய்வதைப்போலவே, அந்நிய பாஷை வரத்தை கொண்டும் நாம் ஆசீர்வதிக்கப்பட்டும் மற்றவர்களை ஆசீர்வதிக்கவும் முடியும்.
எல்லாவற்றுக்கும், மேலாக இயேசுவின் பிரசன்னம் என் வாழ்க்கையை நிஜமாய் மாற்றியது. நான் இப்போது, ஆவியில் நிரப்பட்டிருக்கிற படியால், எனக்குள் இருந்தவர் சாத்தானைக் காட்டிலும் வல்லமையுள்ளவராய் இருக்கிறார். என்றும், முன்பு பிசாசு பிடித்த மனிதர்களை நேருக்கு நேர் சந்திக்கும்போது, பயப்படுகிறவனாயிருந்த நான் அப்படிபட்டவர்களுக்கு உதவி செய்யகூடியவனாகவும், பிசாசுகளை விரட்டுகிறவனாகவும், ஒரு காலத்தில் பிசாசை பார்த்து நான் பயப்படுகிறவனாக இருந்தேன். இப்போது என்னைப்பார்த்து பிசாசு பயப்படும்படி தேவன் உதவி செய்தார். இதிலே, நான் மட்டும் விசேஷமானவன் அல்ல. ஆனால், பரிசுத்த ஆவியால் தேவன் என்னை நிரப்பின போது, போலியில்லாத நிஜமான கிறிஸ்துவத்தை நான் பெற்றுக்கொண்டேன். என்னுடையதெல்லாவற்றையும் இயேசுவுக்கு கையளித்துவிட்டேன். இனி, இந்த பூமியில் எனக்கென்று எந்த ஓர் அபிலாஷையும் இல்லை. ஒருநாள் என் இரட்சகரை முகமுகமாய் காணும் அந்த நாள் மட்டும் நாள்தோறும் தேவனுடைய சித்தத்தை மாத்திரம் செய்து வாழுவேன்.
என்னை சுற்றியிருக்கிற இரட்சிக்கப்பட்டேன் என கூறும் கிறிஸ்துவர்களின் வாழ்க்கையை நான் காணும்போது, முன்பு நான் இரட்சிக்கப்பட்ட நாளிலே, முதல் பதினாறு வருடங்களில் நான் எந்த நிலைமையில் இருந்தேனோ அதே பிரகாரமாக அவர்களுடைய வாழ்க்கையும் இருக்கிறது. அப்படிப்பட்டவர்களை நான் அற்பமாய் எண்ணி குறை கூறிடவும் மாட்டேன். நானும் முற்காலத்திலே அப்படிபட்டவனாக இருந்தேன். இப்போது, எப்படி நான் குறை சொல்லமுடியும்? ""தேவன் உங்களுக்கென்று சிறப்பானதை, மேன்மையானதொன்றை வைத்து வைத்திருக்கிறார். பூமிக்குரியவைகளிலிருந்து முற்றிலும் மனந்திரும்பி பரலோகத்துக்குரியவைகளை நாடுங்கள். அப்போது, இயேசு உங்களை தம்முடைய ஆவியினால் நிரப்புவார். பழைய உடன்படிக்கையின் வாழ்க்கையை காட்டிலும், புதிய உடன்படிக்கையின் வாழ்க்கை, லட்சம் மடங்கு மேன்மையானது"" என்றே அவர்களுக்கு சொல்லுவேன்.
இந்த பூமியில் நம்மை செல்வந்தர்களாக, மாற்றும்படி இயேசு வரவில்லை. இந்த பூமியிலோ அல்லது சபையிலோ கனத்தை கொடுக்கும்படியும் வரவில்லை. அவரை போலவே, நம்மையும் மாற்றும்படிக்கே வந்தார். அன்போடும், தாழ்மையோடும், பரிசுத்ததோடும் வாழ உதவி செய்வார். அதே சமயம் தம்மைப்போலவே, நாம் மற்றவர்களால், அற்பமாக எண்ணப்படவும், புறக்கணிக்கப்படவும் அனுமதிப்பார். அவரைபோலவே, இவ்வுலகத்திலே, தரித்திராகவும், ஆவிக்குரிய வாழ்க்கையில் ஐசுவரியவானாகவும் மாற்றுவார்.
ஆபிரகாம், யோபு, தாவீது, சாலமோன் ஆகிய இவர்களை பூமியிலே செல்வ சீமான்களாய் மாற்றியவர் தேவனே!. இயேசுவும் நினைத்திருந்தால், பேதுரு, பவுல் இவர்களையும் எளிதாக பூமிக்குரிய செல்வந்தர்களாக மாற்றியிருக்க கூடும். ஆனால், அவர் அப்படி செய்யாமல், பரலோகத்தின் ஆசீர்வாதங்களை கொடுக்கும்படியாகவும், பரலோக இராஜ்ஜியத்தை திறக்கும்படியாகவே வந்தார்! அதனிமித்தமே, பவுல் தன்நிலையை குறித்து (2கொரி 6:10) -ல் "தரித்திரர் எனப்பட்டாலும், அநேகரை ஐசுவரியவான்களாக்குகிறவர்களாகவும் ஒன்றுமில்லாதவர்கள் எனப்பட்டாலும், சகலத்தையும் உடையவர்களாகவும் எங்களை விளங்கப் பண்ணுகிறோம்" என்றார். இதுவே, ஆவியில் நிறைந்து வாழும் புது உடன்படிக்கைக்குரிய கிறிஸ்துவம்.
இன்று பரலோகத்திலிருந்து வருகிற சத்தத்தை கேட்கிறீர்களா? அது ஓர் அன்பின் சத்தம், "என் மகனே, என் மகளே மேலே ஏறி வா. நீ இப்போது வாழ்ந்து கொண்டிருக்கிற இதே கீழான வாழ்க்கையிலே எப்போதும் வாழ நான் விரும்பேன். உன்னை சுற்றி இருக்கிற கிறிஸ்துவர்களை காட்டிலும் மேன்மையுள்ளவன் என்பதில் சந்தோஷம் கொள்ளாதே. உன்னுடைய அறிவை குறித்து மேன்மைபாராட்டாதே, உன் அனுபவத்தை குறித்தோ அல்லது உன்னை குறித்து மற்றவர்கள் கொண்டுள்ள அபிப்பிராயத்தையோ, உன்னுடைய ஆவிக்குரிய தன்மையை குறித்தோ அல்லது என்னால் எவ்வளவாய் பிரயோஜனப்படுத்தப்பட்டாய் என்பதை குறித்தோ சந்தோஷப்படாமல், மேலே ஏறி வா"
தேவன் உங்களை தம்முடைய ஆவியினால் நிரப்ப விரும்புகிறார். "ஆண்டவரே, நீண்ட காலம் இந்த போலியான வாழ்க்கை வாழ்ந்தது போதும். என்னை உண்மையான பரிசுத்த ஆவியின் வல்லமையால் நிரப்பும்" என்று அவரிடம் கேட்பீர்களா?
இன்னும் ஓர் காரியத்தையும் நான் சொல்லுகிறேன், நீங்கள் காத்திருக்க தேவையில்லை. அப்படி ஒன்று இருக்குமானால், தம்மிடத்தில் உங்களை பூரணமாய் ஒப்புக்கொடுக்கவே தேவன் காத்து கொண்டு இருக்கிறார். உன் எல்லா வாழ்க்கையும் அதின் அபிலாஷைகளையும், ஒருவேளை ஏதோ ஒன்று இன்னும் அவரிடத்தில் ஒப்புக்கொடுக்காமல் இருக்கலாம். உன் இருதயத்தின் ஏதோ ஒரு அறையின் கதவு இன்னும் அவருக்கு திறந்து அளிக்கப்படாமல் இருக்கலாம். ஏதோ ஒரு பழக்கம் இன்னும் விட்டுக்கொடுக்காமல் இருக்கலாம். இன்றைக்கு அவைகளை விட்டுவிட இப்போது தீர்மானிப்பீர்களா?
இயேசுவோடு சேர்ந்து பார்க்க முடியாத ஏதோ ஒரு சினிமா, டி.வி.டி இவைகளை தூக்கி எறிய இன்று விரும்புவீர்களா? இயேசு கேட்க விரும்பாத அந்த ராக் மியூசிக் சி.டிக்களை தூக்கி எறிவீர்களா? இயேசு பார்த்தால், வெட்கமடைய செய்யும்படி நீங்கள் வைத்திருக்கிற படங்கள், புத்தகங்களை தூக்கி எறிவீர்களா? உங்கள் பொருள் விவகாரங்களில் இயேசுவை தலையிடும்படியும், அவைகளை எப்படி செலவிட வேண்டும் என்பதை கூறவும் அவரை அனுமதிப்பீர்களா? உங்கள் கணவனோ மனைவியோ ஒருவருக்கொருவர் எப்போதும் பேசிக்கொள்ளுவதுபோல, இடையே இயேசுவும் இருக்கையிலும் அப்படியே ஒருவருக்கொருவர் பேசிக் கொள்ளுவீர்களா?
இப்படிபட்ட ஓர் வாழ்க்கைக்கே நீங்களும் வாஞ்சிப்பீர்களானால், அன்றைக்கே நீங்கள் பரிசுத்த ஆவியினால் நிரப்பப்படுவீர்கள் ஏன்று நிச்சயமாக சொல்லமுடியும்.
ஆனால், இன்னும் ஒருவேளை நீங்கள் பூமிக்குரியவைகளை சிந்தித்துக்கொண்டு, மேலான ஒர் வீடு, வசதியான கார் போன்று அநேக காரியங்களையே கேட்டுக்கொண்டு இருப்பீர்களானால், நீங்கள் இப்படிபட்ட காரியங்களிலிருந்து பூரணமாக மனந்திரும்பவில்லை என்றால், உங்களுக்கு கொடுக்கும்படி தேவனிடத்தில் ஒன்றும் இல்லை என நான் உங்களுக்கு சொல்லுகிறேன்.
இவைகளை எல்லாம் காணும்படியும் ஞானமுள்ளவர்களாய், இருக்கும்படியும் கர்த்தர் உங்களுக்கு உதவி செய்வாராக!
ஆமென்!