WFTW Body: 

ஆதலால் பிள்ளைகளே, எனக்குச் செவிகொடுங்கள்; என் வழிகளைக் காத்து நடக்கிறவர்கள் பாக்கியவான்கள். நீங்கள் புத்திமதியைக் கேட்டு, ஞானமடையுங்கள்; அதை விட்டு விலகாதிருங்கள். என் வாசற்படியில் நித்தம் விழித்திருந்து,... எனக்குச் செவிகொடுக்கிற (நான் சொல்வதைக் கவனமாகக் கேட்கிற) மனுஷன் பாக்கியவான் (மகிழ்ச்சியுள்ளவன்)” (நீதிமொழிகள் 8:32-34). தேவனுடைய வார்த்தையில் உள்ள 'பாக்கியவான்' என்ற சொல்லுக்கு எப்பொழுதும் 'மகிழ்ச்சியுள்ளவன்' என்பதே பொருளாகும். ஞானத்திற்குச் சில பிரமாணங்கள் உண்டு; நீங்கள் அந்தப் பிரமாணங்களைப் பின்பற்றினால், நீங்கள் உண்மையிலேயே மகிழ்ச்சியாக இருப்பீர்கள். இந்தப் பகுதி ஏன் "நித்தம் (அனுதினமும்) விழித்திருந்து" என்று கூறுகிறது? ஏனெனில், தேவனுடைய ஞானம் முழுவதையும் என்னால் ஒரே நாளில் மொத்தமாகப் பெற்றுக்கொள்ள முடியாது. நாம் அதை ஒவ்வொரு நாளும் கொஞ்சம் கொஞ்சமாகப் பெற்றுக்கொள்ள முடியும். மத்தேயு 6:34-இல் இயேசு, அந்தந்த நாளுக்கு அதினதின் பாடு (தீமை) போதும் என்று கூறினார். ஒவ்வொரு நாளும் நாம் மனிதர்களிடமிருந்தும், நம்முடைய சூழ்நிலைகளிலிருந்தும், பிசாசினிடமிருந்தும், நம்முடைய மாம்ச இச்சைகளிலிருந்தும் ஒரு குறிப்பிட்ட அளவு தீமையை (பாடு) எதிர்கொள்ளப் போகிறோம். நான் ஞானத்தைப் பெற்றுக்கொள்ள விரும்பினால், ஒவ்வொரு நாளும் நான் சிலுவையைச் சுமக்க வேண்டும். இயேசு, “அவன் தன்னைத்தான் வெறுத்து, தன் சிலுவையை அனுதினமும் எடுத்துக்கொண்டு…” என்றார்; இதனால், என்னுடைய பங்காக அன்றாடம் எனக்கு வரும் தீமையானது (மற்ற மனிதர்களைக் கெடுத்து அசுத்தப்படுத்துவது போல அல்லாமல்) எனக்கு ஞானமாக மாறுகிறது.

வைரங்கள் கரித்துண்டிலிருந்துதான் (charcoal) உருவாக்கப்படுகின்றன என்பது உங்களுக்குத் தெரியுமா? வைரத்திற்கும் கரித்துண்டிற்கும் ஒரே மூலப்பொருள்தான். பல நூற்றாண்டுகளாக பூமியின் அழுத்தத்திற்கு உட்படுத்தப்பட்ட கார்பன் தான் அது. கரித்துண்டை உருவாக்கும் அதே மூலப்பொருள்தான் வைரத்தையும் உருவாக்குகிறது. அந்த கறுத்த, அசிங்கமான கரித்துண்டை விலையுயர்ந்ததாகவும் மேன்மையானதாகவும் மாற்றுவது தான் காரியம். நாம் நாள்தோறும் சிலுவையைச் சுமந்தால், நம்முடைய அன்றாட தீமையின் பங்கு தேவனுடைய ஞானமாகவும் மகிமையாகவும் மாற்றப்பட முடியும் என்பதே அதிலுள்ள உவமையாகும். ஞானத்தின் வாசலண்டையில் நாள்தோறும் செவிகொடுத்து விழித்திருக்கிற மனுஷன் மகிழ்ச்சியுள்ளவன்; ஏனெனில் ஞானத்தை உங்களுக்கு ஒரே தடவையில் மொத்தமாகக் கொடுக்க முடியாது. எபேசியர் 5:15-16 ஞானத்தைக் குறித்து இப்படிக் கூறுகிறது: “ஆனபடியினாலே, நீங்கள் ஞானமற்றவர்களைப்போல நடவாமல், ஞானமுள்ளவர்களைப்போலக் கவனமாய் நடந்துகொள்ளப் பார்த்து, நாட்கள் பொல்லாதவைகளானதால் காலத்தைப் பிரயோஜனப்படுத்திக்கொள்ளுங்கள்.” ஒவ்வொரு நாளும் பொல்லாதது என்றுதான் இங்கு சொல்லப்பட்டிருக்கிறது. ஆகவே, ஒவ்வொரு நாளும் உங்களுக்கு வருகிற இந்தப் பங்கை முழுமையாகப் பயன்படுத்திக் கொள்ளுங்கள். மரிப்பதற்கான எந்தவொரு வாய்ப்பையும் தவறவிடாதீர்கள். நீங்கள் ஒன்றைத் தவறவிட்டால், தேவனுடைய மகிமையில் ஏதோ ஒன்றைத் தவறவிடுகிறீர்கள். உங்கள் வழியில் வருகிற அந்தப் பங்கை ஏற்றுக் கொள்ளுங்கள், ஏனெனில் தேவனே அதைத் தீர்மானித்திருக்கிறார். அவர் அதைத் திடீரென்று தீர்மானிக்கவில்லை. இன்று உங்களைத் தாக்கிய தீமையின் பங்கு உங்களுக்கு அதிர்ச்சியாக இருந்திருக்கலாம், ஆனால் அது தேவனுக்கு அதிர்ச்சியல்ல. நாம் ஞானத்தைப் பெற்றுக்கொள்ளும்படியாக, நாம் பிறப்பதற்கு முன்பே நமக்கு நியமிக்கப்பட்ட பங்கு அதுவே.

சிலுவையின் வழியைப் புரிந்து கொள்ளாதபடியினால் தான் ஞானத்தை எப்படிப் பெற்றுக்கொள்வது என்பதைப் புரிந்துகொள்பவர்கள் மிகச் சிலராயிருக்கிறார்கள். “என் வாசற்படியில் நித்தம் விழித்திருந்து, என் வாசல் நிலைகளண்டையில் காத்துக்கொண்டிருந்து, எனக்குச் செவிகொடுக்கிற மனுஷன் மகிழ்ச்சியுள்ளவன்.” இது ஒரு நிர்வாக இயக்குநரின் (Managing Director) அலுவலக வாசலுக்கு வெளியே அமர்ந்து, அவர் எப்பொழுது கூப்பிடுவார் என்று கேட்பதற்குக் காத்திருக்கும் ஒரு பயிற்சி ஊழியரைப் போல இருக்கிறது. ஒவ்வொரு நாளும் ஞானத்திற்காகக் காத்திருங்கள். நாள் முழுவதும் நம்முடைய மனப்பான்மை, இதுவாகவே இருக்க வேண்டும்: “ஆண்டவரே, இன்று எனக்கு ஞானத்தைத் தாரும். அவ்வளவுதான். உபத்திரவத்திலிருந்து என்னை விடுவிக்கும்படி நான் உம்மிடம் கேட்கவில்லை. வாழ்க்கையில் எனக்கு ஒரு சுலபமான வழியைத் தரும்படி நான் கேட்கவில்லை. ஆண்டவரே, எனக்கு ஞானத்தைத் தாரும். இன்று நீர் எனக்காகத் தீர்மானித்திருக்கும் திட்டத்தை நிறைவேற்ற எனக்கு உதவும்.

தேவன் உங்களை ஆசீர்வதித்திருக்கிறார் என்பதை நீங்கள் எப்படி அறிவீர்கள்? நீதிமொழிகள் 8:35-இன் படி, நீங்கள் தேவனுடைய ஞானத்தைப் பெற்றுக்கொள்ளும்போது தான். உங்களுக்கு ஒரு பதவி உயர்வோ அல்லது ஒரு சிறந்த வேலையோ அல்லது இந்த பூமியைச் சேர்ந்த வேறெதுவுமோ கிடைக்கும்போது அல்ல. நீங்கள் ஞானத்தைப் பெற்றுக்கொள்ளும்போது தான். அப்போதுதான் நீங்கள் கர்த்தரிடத்தில் தயவைப் பெற்றிருக்கிறீர்கள். தேவனுடைய பொறுமையும், சுத்தமும், சமாதானமும், இணக்கமும் ஆகிய ஞானத்தின் குணங்களை நீங்கள் பெற்றுக்கொள்ளும்போது தான் (யாக்கோபு 3:17) தேவனால் ஆசீர்வதிக்கப்படுகிறீர்கள்.

நீதிமொழிகள் 8:36-இன் விளக்கக்குறிப்பில், “என்னைத் தவறவிடுகிறவன் தன் ஆத்துமாவைச் சேதப்படுத்துகிறான்” என்று கூறுகிறது. அதாவது, நாம் வாழ்க்கையைக் கடந்து செல்லும்போது ஞானத்தைப் பெறத் தவறினால், நம்மிடம் எது இருந்தாலும் - வேதாகம அறிவு இருந்தாலும்கூட - நாம் உண்மையிலேயே நம்முடைய வாழ்க்கையை வீணடித்துவிட்டோம் என்றே இதற்கு அர்த்தம். நமக்கு ஒரு பெரிய வேலை கிடைத்திருக்கலாம் அல்லது ஏதேனும் ஒரு சபையில் மதிப்பிற்குரிய உறுப்பினர்களாக நாம் இருந்திருக்கலாம், ஆனால் நம்முடைய பூமிக்குரிய ஓட்டத்தில் தேவனுடைய ஞானத்தில் பங்குபெறுவதைத் தவறவிட்டால், வாழ்க்கையின் பிரதானமான காரியத்தை நாம் இழந்துவிட்டோம். தேவன் நான் பெற்றுக்கொள்ளும்படி நியமித்த ஒரு நாளின் ஞானத்தின் பங்கை நான் தவறவிட்டால், அதை நித்தியத்திற்கும் இழந்துவிட்டேன். அதை என்னால் மீண்டும் ஒருபோதும் பெற முடியாது. நேற்று நான் பங்குபெற வேண்டும் என்று தேவன் விரும்பிய ஞானத்தை, என்னால் மீண்டும் பெற முடியாது. அது போய்விட்டது. ஒவ்வொரு நாளும் நான் ஒரு குறிப்பிட்ட அளவு ஞானத்தைப் பெற்றுக்கொள்ள வேண்டும் என்று தேவன் நியமித்திருக்கிறார்; நான் அதைப் பெற்றுக்கொள்ளாவிட்டால், அதைத் தவறவிட்டுவிட்டேன். நித்திய காலத்திற்கும் அதைத் தவறவிட்டுவிட்டேன். இன்றைய தினத்திற்குரியதையும் நாளைய தினத்திற்குரியதையும் நான் பெற்றுக்கொள்ள முடியும், ஆனால் நேற்றைய தினத்திற்குரியதை என்னால் பெற்றுக்கொள்ள முடியாது. தேவனால் கூட அதை எனக்குத் திரும்பக் கொடுக்க முடியாது. அதனால்தான், நாட்கள் பொல்லாதவைகளானதால் காலத்தைப் பிரயோஜனப்படுத்திக்கொள்ள வேண்டும் என்று கூறுகிறது. ஒவ்வொரு நாளும் அந்தத் தீமையை ஞானமாக மாற்ற நான் கற்றுக்கொள்வேனாக.