"நீங்கள் குற்றவாளிகளென்று தீர்க்கப்படாதபடிக்கு மற்றவர்களைக் குற்றவாளிகளென்று தீர்க்காதிருங்கள்; ஏனெனில், நீங்கள் மற்றவர்களைத் தீர்க்கிற தீர்ப்பின்படியே நீங்களும் தீர்க்கப்படுவீர்கள், நீங்கள் மற்றவர்களுக்கு அளக்கிற அளவின்படியே உங்களுக்கும் அளக்கப்படும். நீ உன் கண்ணிலிருக்கிற உத்திரத்தை உணராமல், உன் சகோதரன் கண்ணிலிருக்கிற துரும்பைப் பார்க்கிறதென்ன? இதோ, உன் கண்ணில் உத்திரம் இருக்கையில் உன் சகோதரனை நோக்கி: நான் உன் கண்ணிலிருக்கும் துரும்பை எடுத்துப்போடட்டும் என்று நீ சொல்வதெப்படி? மாயக்காரனே! முன்பு உன் கண்ணிலிருக்கிற உத்திரத்தை எடுத்துப்போடு, பின்பு உன் சகோதரன் கண்ணிலிருக்கிற துரும்பை எடுத்துப்போட வகைபார்ப்பாய்" (மத்தேயு 7:1-5).
துரதிர்ஷ்டவசமாக, மற்றவர்களை நியாயந்தீர்ப்பதும், அவர்களைத் தாழ்வாகக் கருதுவதும், அவர்களை உதாசீனம் பண்ணுவதும் கிறிஸ்தவர்கள் மத்தியில் மிகவும் சாதாரணமான ஒரு பழக்கமாகிவிட்டது. பெரும்பாலான நேரங்களில், மற்றவர்களைப் பற்றி முழுமையாகத் தெரியாதபோதும், தங்களை மற்றவர்களை விடச் சிறந்தவராகக் கருதுவது கிறிஸ்தவர்களிடையே ஒரு பொதுவான பழக்கமாயிருக்கிறது. எபிரெயர் 9:27-ல், “அன்றியும், ஒரேதரம் மரிப்பதும், பின்பு நியாயத்தீர்ப்படைவதும், மனுஷருக்கு நியமிக்கப்பட்டிருக்கிறபடியே” என்று சொல்லப்பட்டுள்ளது. அப்படியானால், இந்தப் பிரபஞ்சத்தைப் படைத்த சர்வவல்லமையுள்ள தேவன் எப்போது ஜனங்களை நியாயந்தீர்க்கிறார்? “ஒரேதரம் மரிப்பதும், பின்பு நியாயத்தீர்ப்படைவதும்” என்ற இந்த வசனத்தின்படி, ஜனங்கள் மரித்த பின்னரே தேவன் அவர்களை நியாயந்தீர்க்கிறார்.
நீங்கள் எப்போது ஜனங்களை நியாயந்தீர்க்கிறீர்கள்? அவர்கள் மரிப்பதற்கு வெகு காலத்திற்கு முன்பே நீங்கள் அவர்களை நியாயந்தீர்க்கிறீர்கள். ஒரு நபர் மரிக்கும் வரை தேவன் ஏன் நியாயந்தீர்க்கக் காத்திருக்கிறார்? அவன் ஒரு தீய நபராக இருக்கலாம், ஆனால் தேவன், “அவன் மீது எனக்கு நம்பிக்கை இருக்கிறது. ஒருவேளை அவன் மனம் மாறுவான்,” என்று கூறுகிறார், அதனால் தேவன் காத்திருக்கிறார். சிலுவையில் மரித்து, பரலோகத்திற்குச் சென்ற அந்தக் கள்வனை, அவன் மரிப்பதற்கு முன்பே தேவன் நியாயந்தீர்த்திருந்தால் என்ன நடந்திருக்கும் என்று சிந்தித்துப் பாருங்கள். அவன் மரிப்பதற்குச் சில நிமிடங்களுக்கு முன்போ அல்லது சில மணிநேரங்களுக்கு முன்போ தேவன் அவனை நியாயந்தீர்த்திருந்தால் என்னவாகியிருக்கும் என்று யோசித்துப் பாருங்கள். அது மிகவும் பயங்கரமாக இருந்திருக்கும். அவன் இறுதியாகப் பரலோகத்திற்குச் செல்லத் தகுதியானவன்தான், ஆனால் அவன் நியாயந்தீர்க்கப்பட்டு நரகத்திற்கு நியமிக்கப்பட்டிருப்பான். தேவன் அவன் மரிக்கும் வரை காத்திருந்து, பின்னர் அவனைப் பரலோகத்திற்கு அழைத்துச் சென்றார். இது, தேவன் ஒரு நபரை நியாயந்தீர்ப்பதற்கு முன்பு அவன் மரிக்கும் வரை காத்திருக்கிறார் என்பதைக் காட்டுகிறது. மனுஷன் பொறுமையற்றவன், ஜனங்கள் மரிப்பதற்கு வெகு காலத்திற்கு முன்பே அவர்களை நியாயந்தீர்க்கிறான். இதுதான் மனுஷனின் மதியீனம். அவனுக்கு அந்த நபரைப் பற்றிய எல்லா உண்மைகளும் தெரியாது. ஒரு நபரின் தனிப்பட்ட, அந்தரங்க வாழ்க்கையின் 99% அவனுக்குத் தெரியாது. அந்த நபர் எவ்வளவு போராடியிருக்கிறார் அல்லது ஜெபித்திருக்கிறார் என்பது அவனுக்குத் தெரியாது, ஆனால் அவன் அவனை நியாயந்தீர்க்கிறான். எந்தவொரு நேர்மையான உயர்நீதிமன்ற நீதிபதியும் இவ்வளவு குறைவான ஆதாரங்களைக் கொண்டு ஒருபோதும் தீர்ப்பளிக்க மாட்டார். ஒரு நீதிபதிக்கு வழக்கில் 1% மட்டுமே தெரிந்திருந்தால், அவர், “கேளுங்கள், நான் தீர்ப்பளிப்பதற்கு முன் எனக்கு மேலும் ஆதாரங்கள் தேவை. அதுவரை, நான் தீர்ப்பை நிறுத்தி வைக்கிறேன்” என்று கூறுவார். ஒவ்வொரு கிறிஸ்தவரும் இதையேதான் கூற வேண்டும்.
நாம் ஒருவரை நியாயந்தீர்க்கும்போது, உண்மையில் நம்முடைய இருதயத்தின் நிலையையே வெளிப்படுத்துகிறோம். நீதிமொழிகள் 27:19-இல் சொல்லப்பட்டிருப்பது போல, “தண்ணீரில் முகத்திற்கு முகம் ஒத்திருக்குமாப்போல், மனுஷரில் இருதயத்திற்கு இருதயம் ஒத்திருக்கும்." அல்லது கண்ணாடியில், ஒரு மனிதன் தன் சொந்த முகத்தைப் பார்ப்பது போலாகும். இதன் பொருள், அந்த நபரின் இருதயத்தில் ஒரு கெட்ட நோக்கம் இருப்பது போல நீங்கள் கற்பனை செய்வது, உங்கள் சொந்த இருதயத்தில் நீங்கள் கொண்டிருக்கும் தவறான மனப்பான்மைகளின் அறிகுறி மட்டுமேயாகும். அந்த மனிதன் ஒரு நல்ல நோக்கத்துடன் அதைச் செய்திருக்கவே முடியாது என்று நீங்கள் கற்பனை செய்கிறீர்கள். “இது ஒரு கெட்ட நோக்கத்துடன்தான் இருக்க வேண்டும், ஏனென்றால் நானே அப்படிப்பட்ட ஒரு காரியத்தை ஒரு கெட்ட நோக்கத்துடன்தான் செய்வேன்” என்று நீங்கள் நினைக்கிறீர்கள். நீங்கள் உங்கள் சொந்த இருதயத்தையே வெளிப்படுத்துகிறீர்கள். மற்றவர்களை நியாயந்தீர்ப்பது மிகவும் முட்டாள்தனமானது.
கெட்ட குமாரனின் சம்பவத்தை எண்ணிப் பாருங்கள். அந்த சம்பவத்தில், நாம் மூத்த மகனைப் பற்றி வாசிக்கிறோம். கெட்ட குமாரன் திரும்பி வந்ததைக் குறித்து தன்னுடைய தகப்பன் மகிழ்வதைக் கண்டபோது, அவன் மிகவும் கோபமடைந்தான். தந்தை வெளியே சென்று, மூத்த மகனிடம் ஏன் அவன் இன்னும் உள்ளே வரவில்லை என்று கேட்டபோது, லூக்கா 15:30-இல் அவன் என்ன சொல்கிறான் என்று பாருங்கள், “உம்முடைய இந்த குமாரன்” என்று குறிப்பிடுகிறான். மூத்த குமாரன் இளைய குமாரனை, “எனது இந்த சகோதரன்” என்று கூட அழைக்கவில்லை. எவ்வளவு இழிவான முறையில் பேசுகிறான்?! “அவன் உம்முடைய ஐசுவரியத்தை வேசிகளுடன் செலவழித்துவிட்டான்” என்று கூறுகிறான். அது அவனுக்கு எப்படித் தெரியும்? தன் தம்பி வேசிகளுடன் சுற்றித் திரிகிறான் என்று அவன் எப்படி கற்பனை செய்துகொண்டான்? யாராவது வந்து அவனிடம் அதைப் பற்றிச் சொன்னார்களா? நிச்சயமாக இல்லை. தன் தம்பியான இவன், வேசிகளினிடத்தில் பணத்தைச் செலவழித்திருக்க வேண்டும் என்று அவன் எண்ணினான். அது உண்மையாக இல்லாமல்கூட இருக்கலாம். ஒருவேளை வேசிகளினிடத்தில் பணத்தை செலவழிக்காமல், குடித்துவிட்டு, தன் பணத்தை முட்டாள்தனமான வேறு பல வழிகளில் வீணடித்திருக்கலாம். ஆனால், இந்த மூத்த சகோதரன் தன் சகோதரனின் மீது கொண்டிருந்ததைப் போன்ற ஒரு தவறான மனப்பான்மை உங்களிடம் இருக்கும்போது, மற்றவரைப் பற்றி உங்களால் எப்போதும் மிக மோசமாகவே கற்பனை செய்துகொள்ள முடியும். மேலும், நீங்கள் மற்றவர்களைப் பற்றி மிக மோசமாக நினைக்கும்போதெல்லாம், பிரச்சனை அவர்களை விட உங்களிடம்தான் அதிகம் இருக்கிறது என்பதை நீங்கள் அறிந்து கொள்ளலாம். அந்த மற்ற நபர் தன் தந்தையுடன் உணவு மேசையில் அமர்ந்து கொழுத்த கன்றை உண்டு மகிழக்கூடும், ஆனால் நீங்களோ வீட்டை விட்டு வெளியே நிற்க நேரிடலாம்.
கெட்ட குமாரனின் சம்பவமானது, அதன் தொடக்கத்தில் இளைய மகன் வீட்டிற்கு வெளியேயும், மூத்த மகன் வீட்டிற்கு உள்ளேயும் இருக்கும் ஒரு சம்பவமாகும். ஆனால் அந்த சம்பவத்தின் முடிவில், இளைய மகன் வீட்டிற்கு உள்ளேயும், மூத்த மகன் வீட்டிற்கு வெளியேயும் இருக்கிறான், ஏனென்றால் அவன் பிறனைக் குற்றவாளியென்று தீர்க்கிறான். போதிய தகவல்கள் இல்லாமல் மற்றவர்களைக் குற்றவாளியாகத் தீர்ப்பதால், நீங்கள் தந்தையின் வீட்டிற்கு வெளியே தள்ளப்பட்டுவிடாதபடிக்கு கவனத்தோடு நடந்து கொள்ளுங்கள். குற்றவாளியென்று தீர்க்காமல் இருப்பதே மிகவும் பாதுகாப்பான செயலாகும்.
நியாந்தீர்க்காதிருங்கள். நீங்கள் தீர்ப்பு வழங்கினாலும், உங்கள் சொந்தக் கண்ணில் ஒரு பெரிய மரக்கட்டை(உத்திரம்) இருக்கும்போது, உங்கள் சகோதரனின் கண்ணில் உள்ள ஒரு சிறு துரும்பை நான் எடுத்து போடட்டும் என்று நீங்கள் சொல்வது எப்படி? என்று இயேசு கேட்டார். ஒரு மனிதனின் கண்ணில் இருக்கும் இந்த உத்திரம் என்பது என்ன? உங்கள் கண்ணுக்குள் ஒரு உத்திரம் இருக்க முடியாது. ஆனால், அவனுடைய பாவத்துடன் ஒப்பிடும்போது உங்கள் பாவம் எவ்வளவு கொடியது என்பதைக் காட்டுவதற்காக இயேசு மிகைப்படுத்திக் கூறுகிறார். ஒருவேளை அவன் மிக மோசமான தவறைச் செய்திருக்கலாம் என்பது உண்மைதான். ஆனால், அந்த நபரின் மீது நீங்கள் காட்டும் அன்பற்ற மனப்பான்மையை, அவனுடைய பாவத்துடன் ஒப்பிடும்போது, அவனுடைய பாவம் சிறிய துரும்பைப் போன்றும், உங்களுடைய பாவம் ஒரு பெரிய உத்திரம் போன்றும் இருக்கிறது.
ஒருவேளை அவன் விபச்சாரிகளிடம் சென்றிருக்கலாம். சரி, அது ஒரு பாவம் தான். ஆனால், அவன் மீது நீங்கள் கொண்டிருக்கும் அன்பற்ற மனப்பான்மையுடன் ஒப்பிடும்போது அதுகூட ஒரு சிறு புள்ளிதான். ஆனால் அன்பற்ற மனப்பான்மையோ உத்திரம் போன்றது. மற்றவர்கள் மீது நீங்கள் கொண்டிருக்கும் அன்பற்ற மனப்பான்மைகளை அகற்றிவிடும்படி ஆண்டவர் கூறுகிறார். அந்த நபர் மீது நீங்கள் கொண்டிருக்கும் அன்பற்ற மனப்பான்மை, அவரிடம் தொடர்ந்து குறை கண்டுபிடிக்க உங்களைத் தூண்டுகிறது என்று அவர் கூறுகிறார். அந்த நபர் என்ன செய்தாலும், நீங்கள் அதற்கு ஒரு தவறான நோக்கத்தைக் கற்பிக்கிறீர்கள். அந்த நபரால் எந்த நன்மையும் செய்ய முடியாது. உங்கள் பார்வையில் அந்த நபர் தீயவராகவே காணப்படுகிறார், ஆனால் அந்த நபர் மீது அத்தகைய அன்பற்ற மனப்பான்மையைக் கொண்டிருப்பதால் நீங்கள் எவ்வளவு தீயவர் என்பதை உணர்வதில்லை. எனவே ஆண்டவர் என்ன சொல்கிறார்? பார்வை மிகவும் குறைவாக உள்ள ஒரு மனிதனைக் கற்பனை செய்து பாருங்கள். உங்கள் கண்ணிலிருந்து எதையாவது எடுக்க அந்த நபரிடம் செல்வீர்களா? கண்புரை மற்றும் பிற கண் பிரச்சனைகளால் கிட்டத்தட்ட பார்வையற்ற ஒரு கண் மருத்துவரிடம் செல்வீர்களா? அவரால் எப்படியேனும் உங்கள் கண்களைப் பார்த்து, அதிலிருந்து ஒரு சிறு துரும்பை அகற்ற முடியுமா? நான் அந்த நபரின் அருகில் கூட செல்ல விரும்ப மாட்டேன்.
ஆண்டவர் அப்படித்தான் கூறுகிறார். உன் கண்ணில் ஒரு பெரிய உத்திரம் இருந்து, அது உன்னைச் சரியாகப் பார்க்க விடாமல் தடுக்கும்போது, உன் சகோதரனிடம், “உன் கண்ணில் உள்ள தூசியை நான் எடுக்கிறேன்” என்று எப்படிச் சொல்ல முடியும்? நீ அவனுடைய கண்களை மேலும் பழுதடையத் தான் செய்ய முடியும். ஆனால் கர்த்தர், “மாயக்காரனே! உன் அன்பற்ற மனப்பான்மையைப் பார்” என்கிறார். மத்தேயு 7:5-இன் படி, மற்றொருவரிடம் அன்பற்ற மனப்பான்மையைக் கொண்டு அவரை நியாயந்தீர்க்கும் ஒவ்வொருவரும் மாயக்காரனே. முதலில், இந்த அன்பற்ற மனப்பான்மையை அகற்றிவிடுங்கள், அப்பொழுது நீங்கள் தெளிவாகப் பார்ப்பீர்கள். அப்பொழுது அந்தச் சகோதரன் தானாகவே உங்களிடம் வந்து, “சகோதரனே, தயவுசெய்து என் கண்ணில் உள்ள தூசியை எடுக்க முடியுமா?” என்று கேட்பான். நீங்கள் அப்படிப்பட்டதொரு சூழ்நிலையை ஏற்படுத்தும்போது அது மிகவும் அற்புதமானதாக, இருக்கும் அல்லவா?