WFTW Body: 

"நீங்கள் பூமிக்கு உப்பாயிருக்கிறீர்கள்" (மத்தேயு 5:13). இயேசு இதைத் திரளான ஜனங்களிடம் கூறவில்லை. மலைப்பிரசங்கம் பிரதானமாக அவருடைய சீஷர்களுக்கானது என்பதையும், திரளான ஜனங்கள் சுற்றி அமர்ந்து கேட்டுக்கொண்டிருந்தார்கள் என்பதையும் நினைவில் கொள்ளுங்கள். அந்தத் திரளான ஜனங்கள் நிச்சயமாக பூமிக்கு உப்பு அல்ல - அவர்களிடம் எந்த சாரமும் இல்லை. ஆனால் சீஷர்கள் பூமிக்கு உப்பாயிருக்க வேண்டியவர்கள். வார்த்தை உருவகங்களைப் (உவமைகளைப்) பயன்படுத்துவதில் இயேசு திறம்பெற்றவர். பரிசுத்த ஆவியின் நடத்துதலையும், வெளிப்பாட்டையும் நாம் நாடி, அந்த உவமைகளுக்குப் பின்னால் உள்ள விசேஷங்களைப் புரிந்து கொள்ளும்படி அவர் அவற்றை நம்மிடம் உவமைகளாகக் கொடுத்திருக்கிறார். "நீங்கள் பூமிக்கு உப்பாயிருக்கிறீர்கள்; உப்பானது சாரமற்றுப்போனால், எதினால் சாரமாக்கப்படும்? வெளியே கொட்டப்படுவதற்கும், மனுஷரால் மிதிக்கப்படுவதற்குமே ஒழிய வேறொன்றுக்கும் உதவாது."

அவருடைய சீஷர்கள் எப்போதும் எண்ணிக்கையில் குறைவாகவே இருப்பார்கள் என்பதைக் காண்பிக்கும்படி அவர் இந்த உருவகத்தைப் பயன்படுத்துகிறார். உங்களிடம் ஒரு தட்டு நிறைய சாதமும், குழம்பும் இருந்தால், அந்த முழு சாதம், குழம்புக்கு எவ்வளவு உப்பு போடுவீர்கள்? நீங்கள் அரை தேக்கரண்டி உப்பு கூட போடமாட்டீர்கள். அந்த முழுத் தட்டிலுள்ள உணவையும் சுவையுள்ளதாக மாற்ற மிகக்குறைந்த உப்பே தேவை. ஆனால் அதே உப்பு சாரமற்றதாக இருந்தால், நீங்கள் அதில் 20 கரண்டி உப்பு போட்டாலும், சுவையில் அது எந்த வித்தியாசத்தையும் ஏற்படுத்தப் போவதில்லை. எனவே எண்ணிக்கை காரியமல்ல, தரமே முக்கியம். (மத்தேயு 5:13) -இல் “உப்பு சாரமற்றுப்போனால்” என்று இயேசு கூறும்போது, ​​அவர் உப்பின் அளவைப் பற்றிப் பேசவே இல்லை.

உணவின் அளவை ஒப்பிடும்போது உப்பின் விகிதம் எவ்வளவு குறைவாக இருக்கிறதோ அப்படியே உலகத்தின் ஜனத்தொகையை ஒப்பிடும்போது மெய்யான சீஷர்களின் எண்ணிக்கையும் இருக்கிறது (சில சமயம் சபையில் உள்ள ஜனங்களின் எண்ணிக்கையையும் விட குறைவாகவே இருக்கிறது!). ஆம், மெய்யான சீஷர்கள் மிகக் குறைவாகவே இருக்கிறார்கள்.

ஆனால் அப்படிப்பட்ட மெய்யான சீஷர்களே பூமிக்கு உப்பானவர்கள் என்று அழைக்கப்படுகிறார்கள். அந்த மெய்யான சீஷர்களினிமித்தம் மாத்திரமே பூமியானது நியாயத்தீர்ப்பிலிருந்து பாதுகாக்கப்பட்டிருக்கிறது. கர்த்தர் அழிக்கப்போவதாகச் சொன்ன பொல்லாத சோதோம் நகரத்திற்காக ஒரு சமயம் ஆபிரகாம் தேவனிடத்தில் மன்றாடினார். “ஆண்டவரே, சோதோமில் பத்து நீதிமான்களை மட்டுமே நீர் கண்டால் அந்த ஸ்தலத்தை அழிப்பீரோ?” என்று தேவனிடத்தில் கேட்டார் (ஆதியாகமம் 18:32). அதற்கு கர்த்தர்: “பத்து நீதிமான்கள் நிமித்தம் அதை அழிப்பதில்லை” என்றார். நகரம் அழிக்கப்படாமல் பாதுகாக்கப்பட பத்து நீதிமான்கள் போதுமானவர்களாய் இருந்தார்கள்; ஆனால் அங்கு பத்து நீதிமான்கள் கூட இல்லை, எனவே அந்த நகரம் அழிக்கப்பட்டது.

எரேமியாவின் காலத்தில், கர்த்தர் அந்த எண்ணிக்கையை மேலும் குறைத்தார். பாபிலோனிய ராஜாவால் இஸ்ரவேல் ஜனங்கள் சிறைபிடிக்கப்படவிருந்த காலத்தில் (அது தேவனுடைய தண்டனையாய் இருந்தது) எரேமியா தீர்க்கதரிசனம் உரைத்துக் கொண்டிருந்தார், ஆனால் எரேமியா இதற்கு முன்பிருந்தே, தீர்க்கதரிசனம் உரைத்துக் கொண்டிருந்தார். அவர் 40 ஆண்டுகளாக அவர்களுக்குப் பிரசங்கித்து எச்சரித்து வந்தார். ஆனால் அவர்களோ எரேமியாவுக்கு செவிசாய்க்கவில்லை. கர்த்தர் எரேமியாவை நோக்கி, “நியாயஞ்செய்கிற ஒரு மனுஷனைக் கண்டுபிடிப்பீர்களோ (பத்து மனுஷர்களை அல்ல, ஒரே ஒரு மனுஷனை) என்றும், சத்தியத்தைத் தேடுகிறவன் உண்டோ என்றும், எருசலேமின் தெருக்களிலே திரிந்துபார்த்து, விசாரித்து, அதின் வீதிகளிலே தேடுங்கள்; காண்பீர்களானால் அதற்கு மன்னிப்புத் தருவேன்” (எரேமியா 5:1) என்றார். இது வியப்பாக இருக்கிறது, ஆனால் அங்கு ஒரு நீதிமான் கூட இல்லை. அதனால் முழு நகரமும் சிறைபிடிக்கப்பட்டது.

அநேக சமயங்களில் தேவன் இவ்வாறாகவே எங்கிலும் தேடுகிறார். எசேக்கியேலும் பாபிலோனில் சிறையிருப்பின் காலத்தில் ஒரு தீர்க்கதரிசியாக இருந்தார். தேவன், "நான் தேசத்தை அழிக்காதபடிக்குத் திறப்பிலே நிற்கவும் சுவரை அடைக்கவுந்தக்கதாக ஒரு மனுஷனைத் தேடினேன், ஒருவனையும் காணேன்” (எசேக்கியேல் 22:30) என்று எசேக்கியேல் மூலம் கூறினார். ‘எண்ணிக்கை அல்ல, தரமே’ என்ற அதே வார்த்தைகளையே தேவன் பேசினார். அவர் 10,000 பேரைத் தேடிக்கொண்டிருக்கவில்லை. அவர் ஒரு மனிதனைத்தான் தேடிக்கொண்டிருந்தார்.

ஒரு மனுஷன் முழு மனதுடனும், தீவிரமுடையவனாகவும் இருந்தால், அவன் மூலம் தேவன் என்னவெல்லாம் செய்ய முடியும் என்பது ஆச்சரியமாக இருக்கிறது. பழைய ஏற்பாட்டில் மோசே என்ற ஒரு மனுஷனைப் பற்றி சிந்தித்துப் பாருங்கள் - அவர் மூலம் தேவன் 20 லட்சம் இஸ்ரவேலர்களை விடுவித்தார். இஸ்ரவேலில் தலைவராக இருக்கத் தகுதியான வேறு யாரும் அங்கு இல்லை. எலியாவின் நாட்களிலும், பாகாலுக்கு மண்டியிடாத 7000 பேர் இருந்தபோதிலும் (சிலைகளை வழிபடாத 7000 விசுவாசிகளுக்கு இது ஒப்பாயிருக்கிறது), வானத்திலிருந்து அக்கினியை இறக்கக்கூடிய ஒரே ஒரு மனுஷன் (எலியா) மட்டுமே இருந்தான். இன்றும் அதே விகிதம்தான். 7000 விசுவாசிகளில் தங்கள் ஊழியம் அல்லது தங்கள் ஜெபத்தின் மூலம் வானத்திலிருந்து அக்கினியை இறக்கக்கூடிய ஒரே ஒரு விசுவாசியை மட்டுமே நீங்கள் காணலாம்.

7000 பேர், “நான் இதைச் செய்வதில்லை, அதைச் செய்வதில்லை” என்று சொல்லலாம். அவர்களின் சாட்சி எதிர்மறையானது! “நான் திரைப்படங்களுக்குச் செல்வதில்லை, நான் குடிப்பதில்லை, நான் சூதாடுவதில்லை, நான் சிகரெட் புகைப்பதில்லை” என்ற எதிர்மறை சாட்சியாக இருக்கிறது. அவர்கள் பாகாலை வணங்குவதில்லை, ஆனால் பரலோகத்திலிருந்து அக்கினியை யார் கொண்டுவர முடியும்? எலியாவைப் போல தேவனுடைய முகத்திற்கு முன்பாக வாழும் ஒருவரால் மாத்திரமே முடியும்; எலியாவிடம் உப்பு (சாரம்) இருந்தது.

புதிய ஏற்பாட்டிலும் அப்படியே இருக்கிறது. ஒருவேளை அப்போஸ்தலனாகிய பவுல் ஒருபோதும் இருந்திராவிட்டால், திருச்சபை சந்தித்திருக்கும் இழப்பையும், நாம் சந்தித்திருக்கும் இழப்பையும் உங்களால் கற்பனை செய்ய முடிகிறதா? எவ்வளவு வேத வாக்கியங்கள் இல்லாமல் போயிருக்கும்? அவர் ஒரே ஒரு மனுஷன்! நிச்சயமாக ஒரு மனுஷனுடைய வீழ்ச்சியினால் தேவனுடைய ஊழியம் தடைபடப் போவதில்லை (தேவன் வேறொருவரைப் பயன்படுத்தியிருக்க முடியும்). ஆனால், வேதத்தில் நாம் காண்பது என்னவென்றால், தேவன் அநேக வேளைகளில் 10,000 ஒத்தவேஷதாரிகளைக் கொண்டு செய்வதை விட முழு மனதுடன் இருக்கும் ஒரு நபர் மூலம் அதிகமாகச் செய்து முடிக்கிறார். “நீங்கள் உப்பாயிருக்கிறீர்கள்” என்று இயேசு தம்முடைய சீஷர்களிடம் கூறியபோது இதைத்தான் அவர் வலியுறுத்தினார். ஆகவே, “நாங்கள் மிகவும் சிலராயிருக்கிறோம்” என்று ஒருபோதும் முறையிடாதீர்கள்!