WFTW Body: 

சாந்தகுணமுள்ளவர்கள் (அல்லது தாழ்மையும் பணிவும் உள்ளவர்கள்) பாக்கியவான்கள்; அவர்கள் பூமியைச் சுதந்தரித்துக்கொள்ளுவார்கள்” (மத்தேயு 5:5). இது தங்கள் உரிமைகளுக்காகப் போராடாதவர்களையும், தவறாக நடத்தப்படும்போது பதிலுக்குத் தாக்காதவர்களையுமே குறிக்கிறது என்று நான் நம்புகிறேன். இயேசு தம்முடைய உரிமைகள் பறிக்கப்பட்டபோது, சாந்தத்தை வெளிப்படுத்தினார், அவர் திருப்பித் தாக்கவில்லை. தம்மைச் சிலுவையில் அறைந்தவர்களைத் தேவன் நியாயந்தீர்க்க வேண்டும் என்று அவர் ஜெபிக்கவில்லை. “நான் சாந்தமும் மனத்தாழ்மையுமாய் இருக்கிறேன், என்னிடத்தில் கற்றுக்கொள்ளுங்கள்" என்று அவர் மத்தேயு 11:29-ல் நம்மிடம் கூறினார். இந்த வார்த்தையை ஆங்கிலத்தில் முழுமையாக மொழிபெயர்ப்பது எளிதான காரியம் அல்ல, அதனால்தான் மக்கள் பலவிதமான வேதாகம மொழிபெயர்ப்புகளைப் பயன்படுத்துகிறார்கள் - “சாந்தம்” (என் வேதாகமத்தின் ஓரத்தில்(in the margin of my Bible) “மனத்தாழ்மை, பணிவு” என்று குறிப்பிடப்பட்டுள்ளது). பொதுவாக, இப்பூமியில் தம் உரிமைகளுக்காகப் போராடாதவர் ஒரு நாள் பூமியைச் சுதந்தரித்துக்கொள்வார் என்று சொல்லப்படுகிறது. இந்த பூமிக்காகப் போராடாதவர்களுக்குத் தேவன் பூமியைக் கொடுக்கிறார். இதுவே தேவனுடைய வழி.

தங்களுடைய உரிமைகளுக்காகப் போராடுகிறவர்களுக்குத் தேவன் தமது பெரிதான ஆசீர்வாதங்களைக் கொடுப்பதில்லை, ஆனால் தங்கள் உரிமைகளை விட்டுக்கொடுக்கிறவர்களுக்கே கொடுக்கிறார். இயேசு சிலுவைக்குச் சென்றார்; அவர் தம்முடைய எல்லா உரிமைகளையும் விட்டுக்கொடுத்தார். அவர் தம்மைத்தாமே மரணபரியந்தம், அதாவது சிலுவை மரணபரியந்தம் தாழ்த்தினதில் அவருடைய தாழ்மையும் சாந்தமும் காணப்பட்டது (பிலிப்பியர் 2:8). அவர் அவமானப்படுத்தப்பட்டு நிந்தனைக்குள்ளானார், அவர் அப்படித் தாழ்ந்து போக மனதாயிருந்தபடியால், பிலிப்பியர் 2:9-ல், “தேவன் அவரை எல்லாவற்றிற்கும் மேலாக உயர்த்தினார்” என்று சொல்லியிருக்கிறது. கிறிஸ்து இன்று பிதாவின் வலதுபாரிசத்தில் உயர்த்தப்பட்டிருப்பதற்குக் காரணம் அவர் நித்திய காலமாக அங்கே இருந்ததினால் அல்ல. அவர் எப்போதும் தேவனாகவே அங்கே இருந்தார். ஆனால் அவர் ஒரு மனுஷனாகப் பூமிக்கு வந்தபோது, அவர் பிதாவின் வலதுபாரிசத்திற்கு திரும்ப வருவதற்கான உரிமையைப் பெற்றார். இதைப் புரிந்துகொள்வது மிகவும் முக்கியம். ஏனெனில் அவர் பூலோக வாழ்க்கையில் எல்லா விதமான சோதனைகளையும் சந்தித்த ஒரு மனிதனாக, அவர் தம்மைத்தாமே மரணபரியந்தம், அதாவது சிலுவையின் மரணபரியந்தம் தாழ்த்தி, தேவனுடைய குணத்தை மிகச் சரியாக வெளிப்படுத்தினார். அவர் தம்முடைய உரிமைகளுக்காகப் போராடவில்லை, எனவே ஒருநாள் முழு பூமியும் அவருக்குக் கொடுக்கப்படும்.

இப்போது அவர் எல்லா நாமத்திற்கும் மேலான நாமத்தைப் பெற்றிருக்கிறார், இயேசுவின் நாமத்தில் வானத்திலும் பூமியிலும் பூமிக்குக் கீழும் உள்ள ஒவ்வொரு முழங்காலும் முடங்கும். அது இன்னும் நடக்கவில்லை. இன்று அநேகர் இயேசுவின் நாமத்தை அசட்டை செய்கிறார்கள், அவருடைய நாமத்திற்கு முன்பாக முழங்கால்படியிடவில்லை. பிசாசுகள் முழங்கால்படியிடவில்லை, பூமியில் உள்ள அநேகரும் முழங்கால்படியிடவில்லை. ஆனால் ஒரு நாள் நிச்சயமாக வரும், அன்று ஒவ்வொரு முழங்காலும் இயேசுவின் நாமத்தில் முடங்கும், ஒவ்வொரு நாவும் இயேசு கிறிஸ்துவே கர்த்தர் என்று அறிக்கை செய்யும், முழு பூமியும் அவருக்குக் கொடுக்கப்படும். அவர் சாந்தகுணமுள்ளவராக இருந்ததினால் அது அவருக்குச் சொந்தமாகும். ஆகவே, சாந்தகுணமுள்ள அந்தப் பாதையில் அவரைப் பின்பற்றுகிறவர்களை நோக்கி, “என்னிடத்தில் கற்றுக்கொள்ளுங்கள்” (மத்தேயு 11:29) என்று இயேசு சொன்னார். அவர் தம்மிடமிருந்து கற்றுக்கொள்ளும்படி சொன்ன ஒரே விஷயம் இந்த சாந்தமும் மனத்தாழ்மையையுமே. “என்னிடத்தில் கற்றுக்கொள்ளுங்கள், நான் மனத்தாழ்மையும் சாந்தமுமுள்ள இருதயம் கொண்டிருக்கிறேன்”. இதை நாம் இயேசுவிடமிருந்து கற்றுக்கொள்ள வேண்டும். ஒரு புத்தகத்திலிருந்து கற்றுக்கொள்ளும்படி அவர் சொல்லவில்லை. “என்னைப் பாருங்கள், நான் எப்படி என் உரிமைகளுக்காகப் போராடாமல், என் உரிமைகளை விட்டுக் கொடுத்து சாந்தமும் மனத்தாழ்மையுமாய் இருந்தேன் என்று பாருங்கள், அப்பொழுது உங்கள் ஆத்துமாக்களுக்கு இளைப்பாறுதல் கிடைக்கும்” என்று அவர் கூறுகிறார். கிறிஸ்தவர்கள் பலர் அமைதி அற்றவர்களாகவும், பதட்டமாகவும், சிலர் நரம்புத் தளர்ச்சி அடைந்து போவதற்கும் ஒரே காரணம் அவர்கள் சாந்தகுணமுள்ளவர்களாக இல்லை என்பதே என்று நான் நம்புகிறேன். அவர்கள் தங்களுக்குள் எதற்காகவோ போராடிக்கொண்டிருக்கிறார்கள். அவர்கள் தங்கள் உரிமைகளைத் தேடுகிறார்கள், அதனால் அவர்கள் அமைதியற்று இருக்கிறார்கள்.

மிகவும் எளிதாகப் போலியாக மாற்றப்படும் நற்பண்புகளில் ஒன்று தாழ்மையாகும். உண்மையான தாழ்மை என்பது மற்றவர்கள் நம்மை காணும் போது தெரிவது இல்லை. அதைத் தேவன் நமக்குள்ளே காண்கிறார் - அது உள்ளானதாக இருக்கிறது. கிறிஸ்துவின் ஜீவியம் இதற்கு எடுத்துக்காட்டாக இருக்கிறது. பிலிப்பியர் 2:5-8 சொல்லுகிறபடி, இயேசு தாம் தேவனாயிருந்தாலும் தமக்கு இருந்த சிலாக்கியங்களையும் உரிமைகளையும் துறந்துவிட்டு, தம்மைத்தாமே வெறுமையாக்கி, அடிமையின் ரூபமெடுத்து, மனுஷர்களின் கைகளினால் சிலுவையில் அறையப்படுதற்கும் கூட தயாராக இருந்தார். நாமும் அந்தத் தாழ்மையின் பாதையில் அவரைப் பின்பற்றி நடக்க வேண்டியவர்களாய் இருக்கிறோம்.
இயேசு மூன்று படியாகத் தம்மைத் தாழ்த்தினார்.

  1. அவர் ஒரு மனுஷனானார்.
  2. அவர் ஒரு அடிமையானார்.
  3. சிலுவையிலே, அவர் ஒரு குற்றவாளியைப் போல் நடத்தப்படத் தயாராக இருந்தார்.

கிறிஸ்தவ வாழ்க்கையின் மூன்று இரகசியங்களை நாம் இங்கே காண்கிறோம். அது தாழ்மை, தாழ்மை, தாழ்மை என்பதே.

இயேசு இந்தப் பூமியில் 33 வருடங்கள் வாழ்ந்த போது, அவர் மற்றவர்களுக்குத் தாழ்மையுடன் சேவை செய்ததையும், துன்பங்களையும், அவமானங்களையும், காயங்களையும் பொறுமையாகச் சகித்துக் கொண்டிருந்ததையும் தேவதூதர்கள் ஆச்சரியத்துடன் பார்த்திருப்பார்கள். அவர்கள் பரலோகத்தில் ஆண்டாண்டு காலமாக அவரைத் தொழுது கொண்டு வந்தனர். ஆனால் பூமியில் அவருடைய நடத்தையை அவர்கள் பார்த்த போது, அவர் பரலோகத்தில் இருந்த போது ஒருபோதும் அவர்கள் பார்த்திராததும் புரிந்துகொண்டிராததுமான தேவனுடைய சுபாவமாகிய பணிவு, தாழ்மை என்னும் குணாதிசயத்தை இன்னும் அதிகமாகக் கற்றுக்கொண்டார்கள். இப்போது தேவன் பரலோகத்திலுள்ள தூதர்களுக்கு, கிறிஸ்துவின் அதே ஆவியைச் சபையில் (எபேசியர் 3:10-ல் சொல்வது போல) நம் மூலமாகக் காண்பிக்க விரும்புகிறார். இப்போது தேவதூதர்கள் நம்மிலும் நம்முடைய நடத்தையிலும் என்ன பார்க்கிறார்கள்? நம்முடைய நடத்தையானது தேவனுக்கு மகிமையைக் கொண்டுவருகிறதா?

மனத்தாழ்மையே எல்லாவற்றிலும் மேலான நற்பண்பு என்பதை நினைவில் கொள்ளுங்கள். நாமும் நம்மிடம் இருக்கும் எல்லாமும் தேவனுடைய ஈவுகளே என்பதை மனத்தாழ்மையானது முழுவதுமாக ஒப்புக்கொள்கிறது. மனத்தாழ்மை நம்மை அனைத்து மனிதர்களையும், குறிப்பாகப் பலவீனமானவர்கள், பண்பாடற்றவர்கள், பின்தங்கியவர்கள் மற்றும் ஏழ்மையானவர்களையும் மதிக்கச் செய்கிறது. மனத்தாழ்மை என்கிற மண்ணில் இருந்து மட்டுமே ஆவியின் கனியும் கிறிஸ்துவின் நற்பண்புகளும் வளர முடியும். ஆகவே, நம்மைப் பற்றின உயர்ந்த எண்ணங்களோ, கனத்தைத் தேடுவதோ, தேவனுக்குக் கொடுக்கப்பட வேண்டிய மகிமையை எடுத்துக்கொள்வதோ போன்ற எவ்வித விஷமும் நம்முடைய இருதயத்தில் ஒருபோதும் நுழையாமல் இருக்க, நீங்கள் உங்களைத் தொடர்ச்சியாக நியாயந்தீர்த்து வாழ வேண்டும். இயேசுவின் மனத்தாழ்மையை அதிகம் தியானியுங்கள். இதுவே நான் உங்களுக்குக் கொடுக்கும் மிக முக்கியமான புத்திமதியாகும்.