“நாங்கள் பிறரை மன்னிக்கிறது போல, எங்கள் பாவங்களை எங்களுக்கு மன்னியும்” என்று தினமும் ஜெபிக்க இயேசு நமக்குக் கற்றுக்கொடுத்தார். நாம் தினமும் மன்னிப்புக்காக ஜெபிக்க வேண்டும் என்பது உங்களுக்குத் தெரியுமா? இயேசுவின் ஜெபத்தை தினமும் அப்படியே சொல்லாவிட்டாலும் கூட, தினசரி மன்னிப்பு தேவை என்பதை நாம் குறைந்தபட்சம் உணர வேண்டும். நான் தினமும், “கர்த்தாவே, என் பாவங்களை மன்னியும்” என்று ஜெபிக்கிறேன். தினந்தோறும் மன்னிப்பு நமக்குத் தேவை என்பதை நாம் எப்படி அறிவோம்? ஏனெனில் ஜெபத்தின் முந்தைய வரி, “எங்களுக்கு வேண்டிய ஆகாரத்தை இன்று எங்களுக்குக் தாரும்” (மத்தேயு 6:11) என்று கூறுகிறது. ஆகவே, இது ஒரு தினசரி விஷயம். கர்த்தாவே, இன்று எனக்கு வேண்டிய ஆகாரம் தேவை, அதைத் தொடர்ந்து, இன்று என் பாவங்களையும் மன்னித்தருளும் என்று நான் ஜெபிக்கிறேன்.
“பாவத்தின் மேல் ஜெயம் பெற்றிருப்பதாகக் கூறிக்கொண்டு, ஒவ்வொரு நாளும் பாவம் செய்வதாக எப்படிச் சொல்ல முடியும்?” என்று நீங்கள் கேட்கலாம். நாம் அறிந்திருக்கிற பாவத்தை மேற்கொள்வதற்கும், நாம் அறிந்தே இராத பகுதிகளில் தன்னுணர்வற்று பாவம் செய்வதற்கும் இடையே வித்தியாசம் இருக்கிறது. உண்மையாகச் சொல்லப்போனால், நம்முடைய வாழ்க்கையின் பத்து சதவீதத்தைப் பற்றி மட்டுமே நாம் அறிந்திருக்கிறோம். பனிப்பாறையின் முனை மட்டுமே கண்ணுக்குத் தெரிவது போல, பாவத்தின் மேற்பரப்புப் பகுதியையே நாம் நம் வாழ்வில் காண முடியும். நம்முடைய வாழ்க்கையில் பாவத்தையும், கிறிஸ்துவின் சாயல் இல்லாமையையும் அறியாத அநேகப் பகுதிகள் உள்ளன. அந்தப் பகுதிகளிலும் கூட தேவன் நம்மை மன்னிக்க வேண்டும் என்று ஜெபிக்க வேண்டும்.
தினந்தோறும் பாவமன்னிப்பு கேட்பதின் அர்த்தம் இதுதான். அப்போஸ்தலனாகிய பவுலைப் போல, நாம் அறிந்த பாவத்தின் மேல் பரிபூரண ஜெயம் பெற்று வாழ முடியும். 1கொரிந்தியர் 4:4 -இல் பவுல், “நான் என்னைக் குறித்து எந்தக் குற்றத்தையும் உணரவில்லை” என்று கூறுகிறார். வேறு வார்த்தைகளில் சொன்னால், பவுல், “நான் அறிந்த பாவம் அனைத்தின் மேலும் ஜெயம் பெற்று வாழ்கிறேன். என் வாழ்வில் எந்தப் பாவமும் இருப்பதாக எனக்குத் தெரியவில்லை; ஆனால் அதனால் நான் முற்றிலும் குற்றமற்றவன் என்று அர்த்தமல்ல. என்னை சோதித்தறியும் ஒருவர் கர்த்தர் தாமே; அவரிடத்திலே நான் கணக்கு ஒப்புவிக்க வேண்டும். நான் காணாத என் வாழ்க்கையின் அநேக பகுதிகளை அவர் காண்கிறார். ஆகையால் தான் நான் குற்றமற்றவன் என்று அலட்சியமாகச் சொல்லிவிட முடியாது. நான் தேவனிடம் பாவ மன்னிப்பு கேட்க வேண்டும். முன்னர் நான் உணராத பகுதிகளைக் குறித்து அவர் எனக்கு வெளிச்சம் கொடுக்கும்போது, அந்தப் பகுதிகளிலும் ஜெயம் பெற முயற்சிப்பேன்.” இதுவே பரிசுத்தமாகுதல் ஆகும்.
“என்னைப் பின்பற்றுங்கள்” என்றதோர் எளிய கட்டளையைக் கர்த்தர் நமக்குக் கொடுக்கிறார்; பின்னர் படிப்படியாக பரிசுத்தமாக்கப்படுகிற அற்புதமான வாழ்க்கைக்குரிய வழியை நமக்குக் காட்டுகிறார். “நீதிமான்களுடைய பாதை நடுப்பகல்வரைக்கும் அதிகமதிகமாய்ப் பிரகாசிக்கிற சூரியப்பிரகாசம்போலிருக்கும்” என்று நீதிமொழிகள் 4:18 கூறுகிறது; நாம் மறுபடியும் பிறந்திருந்தால், கிறிஸ்துவின் நீதி நமக்கு கொடுக்கப்பட்டிருப்பதால் நாம் நீதிமான்கள் என்று அறிவிக்கப்படுகிறோம். மனந்திரும்பும் தருணம் என்பது இருளை விரட்டி அடிக்கும் காலை நேரத்தில் உதயமாகும் சூரியனைப் போன்றது. சூரியன் மேலே உயர்ந்து நண்பகல் நிலையை அடையும் வரை அதன் பிரகாசம் அதிகரிக்கிறது. அதேபோல, நாம் நீதிமான்களாக இருந்தால், நடைமுறை நீதியில் நாளுக்கு நாள் அதிக அளவில் முன்னேற வேண்டும். சூரியன் நம் வாழ்நாள் முழுவதும் அடிவானத்திலேயே இருக்கக்கூடாது. அது பிரகாசத்தில் அதிகரிக்க வேண்டும். நீதிமான்களின் பாதை அதிகாலை சூரியனின் பிரகாசத்தைப் போல கிறிஸ்து திரும்பி வரும் நாள் வரை மேன்மேலும் பிரகாசிக்கிறது. அப்போது நாம் அவரைப் போல இருப்போம்.
அவர் வரும்போதுதான் நாம் முழுவதுமாக அவரைப் போல இருப்போம், ஆனால், இன்றே அவரைப் போல நாம் நடக்க முடியும். “பிரியமானவர்களே, இப்பொழுது தேவனுடைய பிள்ளைகளாயிருக்கிறோம், இனி எவ்விதமாயிருப்போமென்று இன்னும் வெளிப்படவில்லை; ஆகிலும் அவர் வெளிப்படும்போது அவர் இருக்கிறவண்ணமாகவே நாம் அவரைத் தரிசிப்பதினால், அவருக்கு ஒப்பாயிருப்போமென்று அறிந்திருக்கிறோம்” என்று 1யோவான் 3:2 கூறுகிறது. 1யோவான் 3:2 -இல் உள்ள வித்தியாசத்தைக் கவனியுங்கள். நாம் ஏற்கனவே தேவனுடைய பிள்ளைகளாயிருக்கிறோம், ஆனால் நாம் என்னவாகப் போகிறோம் என்பது இன்னும் வெளிப்படவில்லை. நாம் எப்படி இருக்கப் போகிறோம்? நாம் முழுமையாய் இயேசுவைப் போல இருப்போம். நம்முடைய முழு குணமும், நம்முடைய எண்ணங்கள், வார்த்தைகள், செயல்கள், மனப்பான்மைகள், நோக்கங்கள், நம்முடைய உள் வாழ்க்கையின் ஒவ்வொரு பகுதி மற்றும் நம்முடைய தன்னுணர்வற்ற வாழ்க்கை உட்பட அனைத்தும் இயேசுவைப் போலவே இருக்கும்.
இது எப்போது நடக்கும்? அவர் திரும்ப வரும்போது, அவரை அவர் இருக்கிறவராகவே நாம் தரிசிக்கும்போது இது சம்பவிக்கும். ஆனால் அந்த நாள் வரை நாம் என்ன செய்ய வேண்டும்? 1யோவான் 3:3 இவ்வாறு கூறுகிறது: “அவர் வெளிப்படும்போது நாமும் அவரைப்போல் இருப்போம் என்று அறிந்திருக்கிறபடியால், இந்த நம்பிக்கையை உடையவனெவனும் அவர் சுத்தமுள்ளவராயிருக்கிறதுபோலத் தன்னையும் சுத்திகரித்துக்கொள்ளுகிறான்.” இயேசுவைப் போல முழுமையாக மாறுவோம் என்ற நம்பிக்கை உங்களுக்கு இருந்தால், அவருடைய பரிசுத்தத்தின் தரத்தை நீங்கள் அடையும் வரை ஒவ்வொரு நாளும் உங்களைச் சுத்திகரித்துக் கொண்டே இருப்பீர்கள். இது 1யோவான் 2:6 -இல் எழுதப்பட்டுள்ளதைப் போன்றது; நான் கிறிஸ்தவன் என்று சொல்கிறேன் என்றால், கிறிஸ்து வாழ்ந்தது போல வாழ வேண்டும், அவர் நடந்தது போல நடக்க வேண்டும். பின்னர் ஒரு நாள், நான் அவரைப் போல இருப்பேன்.
1யோவான் 2:6-க்கும் 1யோவான் 3:2-க்கும் வித்தியாசம் உண்டு. 1யோவான் 2:6-இன் செய்தி என்னவென்றால், இயேசு தமது பூலோக வாழ்க்கையில் வாழ்ந்த அதே கொள்கைகளின்படி நாமும் வாழ வேண்டும், அவரைப் பின்பற்ற வேண்டும். பொருட்கள், ஆண்கள், பெண்கள், பரிசேயர்கள், மதவாத மாய்மாலக்காரர்கள், எதிரிகள் ஆகியோர் மீது இயேசுவுக்கு இருந்த அதே மனப்பான்மை நமக்கும் இருக்க வேண்டும். உதாரணமாக, தம்மை சிலுவையில் அறைந்த சத்துருக்களுக்காக இயேசு, “பிதாவே, இவர்களுக்கு மன்னியும், தாங்கள் செய்கிறது இன்னதென்று அறியாதிருக்கிறார்களே” என்று ஜெபித்தார்.
நாம் இயேசுவைப் போல நடப்பதற்கு பரிசுத்த ஆவியானவர் நமக்கு வல்லமை அளிப்பார்; ஆனால் அது நம்முடைய உணர்வடைந்த வாழ்க்கையில் மட்டுமே இருக்கும், அது நம் முழு வாழ்க்கையில் பத்து சதவீதம் மட்டுமேயாகும். மீதமுள்ள தொண்ணூறு சதவீதம் மறைவானது. தேவன் அந்த மறைவான பகுதிகளை படிப்படியாக நமக்கு வெளிப்படுத்துவார், அதனால் நாம் அந்தப் பகுதிகளிலும் ஜெயம் பெற்று, மேன்மேலும் நம்மை சுத்திகரித்துக் கொள்ள முடியும். தேவன் நம்மை பாவத்திலிருந்து சுத்திகரிக்கிறார் (1யோவான் 1:7), ஆனால் நாமும் கூட பரிசுத்த ஆவியின் வல்லமையினால் பாவத்தைக் களைந்து நம்மை சுத்திகரித்துக் கொள்ள முயற்சிக்க வேண்டும் (1யோவான் 3:3).