WFTW Body: 

வனாந்தரத்தில் நடந்த இரண்டாவது சோதனையில், “நீர் தேவனுடைய குமாரனேயானால், நீர் ஏன் தேவாலயத்து உப்பரிகையின் மேலிருந்து தாழக்குதித்து தேவனுடைய வாக்குத்தத்தத்தை சுதந்தரித்துக் கொள்ளக்கூடாது?” (மத்தேயு 4:6) என்று சாத்தான் இயேசுவினிடத்தில் கேட்டான். “உனக்காகத் தம்முடைய தூதர்களுக்குக் கட்டளையிடுவார். உன் பாதம் கல்லில் இடறாதபடிக்கு அவர்கள் உன்னைத் தங்கள் கைகளில் ஏந்திக்கொண்டு போவார்கள்” என்று கூறும் சங்கீதம் 91-ஐயும் சுட்டிக்காட்டினான்.

உன் தேவனாகிய கர்த்தரைப் பரீட்சை பாராதிருப்பாயாக” என்று இயேசு மத்தேயு 4:7-இல் பதிலளித்தார். இது மிக முக்கியமானதொரு கோட்பாடாகும். இது நடைமுறைக்கு எவ்வாறு பொருந்தும்? இங்கே இயேசுவுக்கு ஏற்பட்ட சோதனை என்னவென்றால், தேவாலயத்து உப்பரிகையின் மேலிருந்து தாழக்குதித்து, சங்கீதம் 91-இல் உள்ள வாக்குத்தத்தத்தைச் சுதந்தரித்து, தேவாலயத்தின் முற்றத்திற்குக் காயமின்றி இறங்குவதாகும். அதன்மூலம் ஜனங்கள் அவரைப் பார்த்து, “ஓ, எவ்வளவு பெரிய தேவ மனிதர் இவர்! இவருடைய விசுவாசத்தைப் பாருங்கள், எப்படி அந்த வாக்குத்தத்தத்தை உரிமைகோரி எந்தத் தீங்கும் தமக்கு நேரிடாமல் காக்கப்பட்டிருக்கிறார் பாருங்கள்” என்று ஆச்சரியமாய் சத்தமிடுவார்கள். ஆனால் இயேசு, “நான் அவ்விதமாக தேவனைப் பரீட்சை பார்க்க மாட்டேன்” என்றார். தேவாலயத்து உப்பரிகையிலிருந்து கீழே இறங்குவதற்கு படிக்கட்டுகள் கொடுக்கப்பட்டிருக்கும்போது, கீழே குதிக்க அவசியமில்லை. தேவன் கொடுத்திருக்கிற வழிமுறைகளைப் பயன்படுத்தாமல், பிரமிக்கத்தக்க அற்புதமான ஒன்றைச் செய்ய வேண்டும் என்று தேவனிடத்தில் கேட்டு அவரைச் சோதிக்க வேண்டியதில்லை என்பதுதான் இயேசுவின் மறுப்பிற்கு அர்த்தம்.

உதாரணமாக, பிலிப்பு மந்திரிக்குப் பிரசங்கித்த பிறகு, அவரை அவ்விடத்திலிருந்து பரிசுத்த ஆவியானவர் எடுத்து ஆசோத் என்ற மற்றொரு இடத்திற்குக் கொண்டு சென்ற ஒரு நிகழ்வைக் குறித்து நாம் அப்போஸ்தலர் 8:39-இல் வாசிக்கிறோம். இன்று ஒரு ஹெலிகாப்டர் செய்வது போல அவருக்கு விமானப் போக்குவரத்து வசதியைப் பரிசுத்த ஆவியானவர் கொடுத்தார். இப்பொழுது ஒரு இடத்திலிருந்து இன்னொரு இடத்திற்கு நீங்கள் செல்ல விரும்பினால், “எனக்காக அதேவிதமாகச் செய்யும் ஆண்டவரே” என்று கேட்கக்கூடாது, அது தேவனைப் பரீட்சை பார்ப்பதாகும். பேருந்துகளையும், இரயில்களையும், ஸ்கூட்டர்களையும், விமானங்களையும் தேவன் பயன்படுத்தக் கொடுத்திருந்தால், (பிலிப்புவைக் கொண்டுசென்றதுபோல) நம்மை அவ்வாறு அழைத்துச் செல்ல வேண்டும் என்று நாம் ஏன் பரிசுத்த ஆவியானவரிடம் கேட்க வேண்டும்?

தேவன் எனக்கு ஓர் அற்புதமான காரியத்தைச் செய்தார் என்று பின்னர் சாட்சி பகருவதற்கென்று, ஒரு வாக்குத்தத்தத்தைச் சுதந்தரித்துக் கொள்ள முயற்சிப்பது தேவனைப் பரீட்சை பார்ப்பதற்கான மற்றொரு வழியாகும். உதாரணமாக, சிலர் நோய்வாய்ப்பட்டிருக்கும்போது, ​​அடுத்த தெருவில் மருந்துகள் கிடைத்தாலும், தங்களுக்கு ஆலோசனை வழங்க மருத்துவர்கள் இருந்தாலும், “தேவன் என்னைக் குணப்படுத்துவார் என்று நான் விசுவாசிக்கப் போகிறேன், அந்த மருத்துவர்களையும் அந்த மருந்துகளையும் நான் பயன்படுத்துவதில்லை” என்று கூறுகிறார்கள். “கர்த்தர் என் பரிகாரி, அதனால் எனக்கு மருந்துகள் தேவையில்லை” என்று ஒரு வாக்குத்தத்தத்தைச் சுதந்தரித்துக் கொள்ள முயன்று, தங்களையும், தங்களது மனைவியையும், தங்களுடைய பிள்ளைகளையும் மரிக்கக் கொடுத்த அநேக புத்தியீன கிறிஸ்தவர்கள் இருக்கிறார்கள். தேவாலயத்தில் படிக்கட்டுகளைத் தேவன் கொடுத்திருக்கும்போது உப்பரிகையிலிருந்து கீழே குதித்து சங்கீதம் 91-ஐ சுதந்தரித்துக் கொள்வதாகக் கூறுவதற்குப் பதிலாக, படிக்கட்டுகளைப் பயன்படுத்த வேண்டும் என்று அவர் எதிர்பார்க்கிறார். அதேபோல், தேவன் மருந்துகளைக் கொடுத்திருக்கும்போது, ​​அவற்றை நீங்கள் பயன்படுத்த வேண்டும் என்றும், கர்த்தர் உங்களைக் குணப்படுத்துவார் என்று புத்தியீனமாக சில வாக்குத்தத்தங்களைச் சுதந்தரித்துக் கொள்ள முயற்சிக்க கூடாது என்றும் அவர் எதிர்பார்க்கிறார். பிலிப்புவுக்குச் செய்தது போல, உங்களை ஒரு இடத்திலிருந்து இன்னொரு இடத்திற்கு அழைத்துச் செல்லும்படி கர்த்தரிடம் கேட்பது போன்ற புத்தியீனம் தான் இது.

தேவன் சிலருக்கு சில அற்புதமான காரியங்களைச் செய்கிறார் என்பதையும் நாம் நினைவில் கொள்ள வேண்டும். எல்லா விசுவாசிக்கும் எல்லா அற்புதத்தையும் அவர் செய்வதில்லை. வேதவசனங்களைப் படிப்பதில் நாம் மிகவும் கவனமாக இருக்க வேண்டும்; நமக்கு சில கனத்தைப் பெறுவதற்காக அற்புதமான ஒன்றைச் செய்ய முயற்சிக்கக் கூடாது. ஜனங்களிடமிருந்து கனத்தைப் பெறுவதற்கான ஆசை நம் மாம்சத்தில் மிகவும் ஆழமாக வேரூன்றியிருக்கிறது, ஆனால் சில நேரங்களில் நாம் அதை அறியாமலேயே இருக்கிறோம். இயேசு தம் சீஷர்களுக்கு கற்றுக் கொடுத்த சிறந்த காரியங்களில், ‘கனத்தைப் பெற விரும்புவதை எதிர்த்துப் போராட வேண்டும்’ என்பதும் ஒன்றாகும். தேவனுடைய வாக்குத்தத்தத்தைச் சுதந்தரித்து, தேவாலயத்தின் முற்றத்தில் காயமின்றி இறங்கினால், ஜனங்கள் பாராட்டுவார்கள். கனத்தைப் பெறுவதுதான் இங்கே காணப்படுகிற அடிப்படையான சோதனையாகும்.

ஆனால் சோதனை சில நேரங்களில் அவ்வளவு அற்புதமான பிரமிக்கத்தக்க வழிகளில் வராமலிருக்கலாம். “நீங்கள் ஜெபம் பண்ணும்போது உங்கள் ஜெபத்தைக் கேட்கிறவர்களிடமிருந்து கனத்தைப் பெறுவதற்காக ஜெபிக்க வேண்டாம். நீங்கள் உபவாசிக்கும்போது, நீங்கள் எத்தனை நாட்கள் உபவாசம் இருந்தீர்கள் என்பதை எல்லாருக்கும் தெரிவிப்பதற்காக உபவாசிக்க வேண்டாம். நீங்கள் தர்மஞ்செய்யும்போது, ​​நீங்கள் எதைக் கொடுத்தீர்கள் என்பதை யாருக்கும் தெரியப்படுத்த வேண்டாம்” என்று மத்தேயு 6-இல் இயேசு கூறினார். நீங்கள் அவ்வாறு செய்தால், கனத்தைப் பெறுவதற்காகவே செய்கிறீர்கள். அநேக கிறிஸ்தவர்கள் இந்தக் கட்டளைகளுக்குக் கீழ்ப்படியாமல் கனத்தைத் தேடி, தேவனைப் பரீட்சை பார்க்கிறார்கள்.