WFTW Body: 

இயேசுவின் வாழ்க்கையில் பல கடினமான மனிதர்களுடன் இடைபட வேண்டிய சூழ்நிலைகள் ஏராளமாக இருந்தன. சிலர் அவரை அவமதித்தனர், சிலர் துன்புறுத்தினர், சிலர் கேலி செய்தனர், மற்றும் சிலர் அவரைக் கண்டுகொள்ளாமல் புறக்கணித்தனர். சிலர் அவர் மீது கோபப்பட்டனர், துப்பினர், தர்க்கம் செய்தனர், சிக்க வைக்க முயன்றனர், கொல்ல முயன்றனர்.

நம் ஒவ்வொருவருக்கும் வாழ்நாள் முழுவதும் கடினமான மக்களுடன் இடைபட வேண்டிய சூழ்நிலைகள் ஏற்படும். அவர்கள் தெய்வபக்தியற்றவர்களாகவும், கடுமையானவர்களாகவும், எரிச்சலூட்டுபவர்களாகவும், தீயவர்களாகவும் தோன்றலாம். இத்தகைய கடினமான மனிதர்களை சமாளிப்பது குறித்து வேதாகமம் சொல்லும் சில கோட்பாடுகள் எனக்கு உதவியாக இருந்திருக்கின்றன. அவற்றை இங்கே பகிர்ந்து கொள்கிறேன்:

யோவான் 8:7 - “உங்களில் பாவமில்லாதவன் இவள்மேல் முதலாவது கல்லெறியக்கடவன்.

கடினமான மனிதர்களைப் பற்றி நான் கற்றுக்கொண்ட மிக முக்கியமான விஷயம் என்னவென்றால், நானும் அவர்களில் ஒருவன் என்பதுதான்!

மற்றவர்கள் எனக்கெதிராய் பாவம்செய்பவர்களாகவும், என்னிடத்தில் கடினமாகவும், சுயநலமாகவும் நடந்து கொள்ளலாம்... ஆனால் எனக்கும் அதே மாம்சம் உண்டு; நானும் அவர்களைப் போலவே ஒரு குற்றவாளிதான். பரலோகத்திலிருக்கும் என் பரிபூரணமான பிதாவிடம் நான் எவ்வளவு கடினமாகவும், சுயநலமாகவும், பாவத்துடனும் நடந்துகொண்டேன் என்பதை தெளிவாகப் பார்க்க பார்க்க, எனக்கு எதிராகப் பாவம் செய்யும் மற்றவர்களிடம் இரக்கமும் பொறுமையும் காட்டுவது எளிதாகிறது என்பதை என் அனுபவத்தில் கண்டிருக்கிறேன். பரிசேயனானவன் மற்றவர்களை எரிச்சலுடன் கீழ்நோக்கிப் பார்ப்பவனாயிருக்கிறான்; ஆனால் கிறிஸ்தவனோ, தன்னையும் தன் சொந்தப் பாவத்தையும் குறித்துப் பெரும்பாலும் எரிச்சலடைந்து சலிப்படைபவனாயிருக்கிறான் (லூக்கா 18:9-13). கடினமான சக ஊழியர்கள், தீய அரசாங்கம், சுயநலம்கொண்ட குடும்பத்தினர், மோசமான சபைகள் அல்லது வெதுவெதுப்பான கிறிஸ்தவர்கள் ஆகியவற்றினிமித்தம் விரக்தியடைந்தவர்களுக்கு சொந்தமானதல்ல தேவனுடைய ராஜ்யம். அது தங்களைக் குறித்து சலிப்படைந்தவர்களுக்கே சொந்தம்! இவர்களே ஆவியில் “எளிமையுள்ளவர்கள்.” ஏழை பிச்சைக்காரர்களைப் போல ஆண்டவரிடத்தில் வந்து “ஆண்டவரே, உதவி தேவைப்படுபவன் நான்தான், நான் வெறும் பாவமுள்ள பிச்சைக்காரன், என்னை மன்னித்து எனக்கு உதவி செய்யும்!” என்று கூறுபவர்கள்.

ஆவியில் எளிமையுள்ளவர்கள் பாக்கியவான்கள்; பரலோக ராஜ்யம் அவர்களுடையது” (மத்தேயு 5:3).

மற்றவர்கள் எப்படி என்னை நடத்தினாலும், கடினமான மனிதர்களை நேசிக்க வேண்டும் என்பதையே வேதாகமம் எனக்குப் போதிக்கும் மற்றொரு முக்கியமான கொள்கையாக நான் காண்கிறேன்:

மத்தேயு 5:44 - “உங்கள் சத்துருக்களைச் சிநேகியுங்கள்; உங்களைச் சபிக்கிறவர்களை ஆசீர்வதியுங்கள்.

ரோமர் 2:4 - “தேவனுடைய தயவு நீ மனம்திரும்புவதற்கு உன்னை நடத்துகிறதென்று அறியாமல்...

ஒரு கதையை நான் ஒருமுறை கேட்டேன்: ஒரு நாள் அதிகாலையில் காற்றும் சூரியனும் ஒரு போட்டியில் ஈடுபட்டன. சாலையில் ஒரு மனிதன் தனது கோட்டை அணிந்துகொண்டு நடந்து சென்றுகொண்டிருந்தான். காற்று சூரியனைப் பார்த்து, ‘உன்னைக் காட்டிலும் சீக்கிரமாக என்னால் அந்த மனிதனை அவனுடைய கோட்டை கழற்ற வைக்க முடியும்’ என்று சவால் விட்டது. சூரியன் விளையாட்டை ஏற்றுக்கொண்டது. காற்று முதலில் முயற்சிப்பதாகச் சொன்னது. காற்று முடிந்தவரை வேகமாக வீசியது, எவ்வளவு வேகமாக வீசியதோ, அவ்வளவுக்கு அந்த மனிதன் தன் கோட்டை இறுக்கமாகப் பிடித்துக் கொண்டான். பின்னர் சூரியன், “சரி, இப்போது நான் முயற்சிக்கிறேன்” என்றது. சூரியன் வானத்தில் உயர எழும்பி, மெதுவாக ஒளி வீசத் தொடங்கியது. சிறிது நேரத்தில், அந்த மனிதன் மெதுவாக தன் கோட்டை கழற்றினான். இந்தக் கதையில் காணப்படும் நீதி என்னவென்றால், ‘ஒருவரை கோபத்தாலும் பலவந்தத்தாலும் கட்டுப்படுத்த முயற்சிப்பதை விட அன்பால் அரவணைப்பது மேலானது’ என்பதாகும்.

நம் பரலோகப் பிதா காற்றைப் போன்றவரா அல்லது சூரியனைப் போன்றவரா? நாம் அவரை நேசிப்பதற்கு அவருடைய அன்பே காரணம் (1யோவான் 4:19) என்றும், நாம் மனந்திரும்புவதற்கு அவருடைய தயவே காரணம் (ரோமர் 2:4) என்றும் வேதாகமம் கூறுகிறது. மற்றவர்களுடன் நாம் இடைபடும்போதும் இந்தக் கோட்பாட்டை நம் வாழ்க்கையிலும் காண்போம் என்று நான் நம்புகிறேன். மற்றவர்களுடன் சண்டையிட்டு, நம்முடன் உடன்படவோ அல்லது நம்மை சரியாக நடத்தவோ கட்டாயப்படுத்த முயற்சிப்பதை விட, விடாமுயற்சியுடனும் தன்னலமின்றியும் அவர்களை நேசிப்பதே உறவுகளில் ஒற்றுமையையும் உடன்பாட்டையும் கொண்டுவருவதற்கான வழி.

பல சமயங்களில் அன்பு உடனடியாக (அல்லது ஒருபோதும்) எதிரியின் இருதயத்தை மாற்றாமல் போகலாம், அது பரவாயில்லை. நம் எதிரிகளையும், நமக்கு எதிராக மனந்திரும்பாமல் பாவம் செய்பவர்களையும் தொடர்ந்து நேசித்தால், பரலோகத்திலிருக்கும் நம் பிதாவைப் போல இருக்கும் சிலாக்கியம் நமக்குக் கிடைக்கும், ஏனெனில் அவர் அப்படித்தான்—தம்மை எதிரியாகக் கருதும் தீய மனிதர்களிடமும் கூட மிகுந்த பொறுமையும் அன்பும் உடையவராயிருக்கிறார்:

மத்தேயு 5:44-45நான் உங்களுக்குச் சொல்லுகிறேன், உங்கள் சத்துருக்களைச் சிநேகியுங்கள்; உங்களைத் துன்பப்படுத்துகிறவர்களுக்காகவும் ஜெபம் பண்ணுங்கள். இப்படிச் செய்வதினால் நீங்கள் பரலோகத்திலிருக்கிற உங்கள் பரம பிதாவுக்கு புத்திரராயிருப்பீர்கள்; அவர் தீயோர் மேலும் நல்லோர் மேலும் தமது சூரியனை உதிக்கப்பண்ணி, நீதியுள்ளவர்கள் மேலும் அநீதியுள்ளவர்கள் மேலும் மழையைப் பெய்யப்பண்ணுகிறார்.

மகன் என்பவன் தன் தந்தையைப் போலவே இருப்பவன். நம் சத்துருக்களை நேசிக்க வேண்டும் என்று இயேசு கூறினார்; அப்படிச் செய்வதன் மூலம் நாம் பரலோகத்திலிருக்கும் நம் பிதாவின் புத்திரராக இருக்க முடியும்.

நீதிமொழிகள் 15:1 - “மெதுவான பிரதியுத்தரம் உக்கிரத்தை மாற்றும்; கடுஞ்சொற்களோ கோபத்தை எழுப்பும்.

நாவானது மிகவும் வல்லமை கொண்டதாயிருக்கிறது. “அப்படியே, நாவானதும் சிறிய அவயவமாயிருந்தும் பெருமையானவைகளைப் பேசும். பாருங்கள், சிறிய நெருப்பு எவ்வளவு பெரிய காட்டைக் கொளுத்திவிடுகிறது!" (யாக்கோபு 3:5).

நாவினால் போர்கள் தொடங்குகின்றன, முடிகின்றன. இன்னும் சிறப்பாக, நாவினால் போர்கள் தடுக்கப்படுகின்றன! கோபத்துக்கு கோபம், கடுஞ்சினத்துக்கு கடுஞ்சினம் என்று பதிலளிப்பதற்கு பதிலாக, கோபமுள்ள மனிதருக்கு இனிய சொற்களையும், மென்மையான பதில்களையும் அளிப்பதே சிறந்தது என்று வேதாகமம் நமக்கு போதிக்கிறது. இதுவே சமாதானத்திற்கான சிறந்த வழி. தீய வார்த்தைகளுக்கு தீய வார்த்தைகளால் பதிலளிக்கும் போர்க்குணம் கொண்டவர்களை அல்ல, சமாதானம் செய்பவர்களையே தேவன் விரும்புகிறார் (மத்தேயு 5:9). மற்றவர்களின் கோபத்திற்கு மென்மையான வார்த்தைகளால் பதிலளிப்பதன் மூலம் நாமும் சமாதானம் பண்ணுகிறவர்களாக இருக்க முடியும்.

நீதிமொழிகள் 17:13-14நன்மைக்குத் தீமைசெய்கிறவன் எவனோ, அவன் வீட்டைவிட்டுத் தீமை நீங்காது. சண்டையின் ஆரம்பம் மதகைத் திறந்துவிடுகிறது போலிருக்கும்; ஆதலால் விவாதம் எழும்புமுன் அதை விட்டுவிடு.