WFTW Body: 

எலிசா ஏன் அபிஷேகிக்கப்பட்டான் என்ற கேள்விக்கு குறைந்தபட்சம் மூன்று காரணங்கள் உண்டு.

1. அவனுடைய தாகம்: எலிசா “அபிஷேகத்தின்மீது தாகம் கொண்டிருந்தான்” என்ற உண்மையை ஒருவராலும் சந்தேகித்திட முடியாது! இவ்வுலகத்தில் இருக்கும் எதைக்காட்டிலும் ‘அபிஷேகத்தின்மீது’ சொல்லி முடியாத தாகத்தை எலிசா பெற்றிருந்தான். இவனுக்கு இருந்த தாகத்தை எலியா சோதித்துப் பார்த்த நிகழ்ச்சியை 2இராஜாக்கள் 2:1-10 வசனங்களில் நாம் வாசிக்கிறோம். முதலாவதாக, தான் மாத்திரம் முன்நோக்கிச் சென்று கொண்டிருக்க எலிசாவை கில்காலில் தங்கிவிடும்படி கூறினான். ஆனால், எலிசாவோ எலியாவை விட்டுப் பிரிந்து செல்ல மறுத்துவிட்டான்! இதன் பின்பு எலியா அவனை பெத்தேலுக்கு மேற்குத் திசையில் 15 மைல் தூரத்திற்கு நடத்தி சென்றான்... பின்பு, மீண்டும் எரிகோவிற்கு 12 மைல் திரும்பி வரச்செய்தான்... பின்பு, யோர்தானுக்கு கிழக்கே 5 மைல் தூரம் நடத்தினான்! இவ்வாறு எலிசாவின் வைராக்கியத்தையும், வாஞ்சையையும் ஒவ்வொரு ஸ்தலத்திலும் எலியா சோதித்துப் பார்த்தான். கடைசியாக “நான் பூமியிலிருந்து எடுக்கப்படும் பொழுது நீ விரும்பும் ஒரேயொரு விண்ணப்பம் மாத்திரமே அருளப்படும்” என எலிசாவிடம் எலியா கூறினான். அதற்கு எலிசா சற்றும் தயங்காமல் “நான் விரும்புவதெல்லாம் ஒன்றேயொன்றுதான்! அதற்காகவே இவ்வளவு தூரம் நான் உம்மை பின்பற்றி வந்திருக்கிறேன். ஆகவேதான் நீர் என்னை உதறிவிட முயற்சித்த போதெல்லாம் விடாப்பிடியாய் உம்மைப் பின்பற்றினேன்! எனக்கு உம்முடைய ஆவியில் இரட்டிப்பான பங்கு வேண்டும்!!” எனக் கூறினான். ஆம், இந்த எலிசா அபிஷேகத்தை எத்தனை முழு இருதயமாய் நாடினான்! தான் விரும்பிய பங்கில் சிறிது குறைந்தாலும் திருப்தி காண மறுத்துவிட்டான்! இவ்வாறு, அவன் எதை வாஞ்சித்துக் கேட்டானோ அதை அவன் பெற்றுவிட்டான்!!

எலியா இந்த எலிசாவை நடத்தியது போலவே நம்மையும் தேவன் நடத்தி “பரிசுத்தாவியின் பூரண அபிஷேகத்திற்கு குறைவாய் வேறு யாதொன்றின்மீதும் நாம் திருப்தியடைகிறோமா?” என்பதை சோதித்துப் பார்க்கிறார். வேறு யாதொன்றின்மீதும் நமக்குத் திருப்தி எற்பட்டால் அதை மாத்திரமே பெற்றுக்கொள்ள தேவன் அனுமதித்து விடுவார்! தன் வீர-தீர, அழகு-சௌந்தரியத்தைக் கொண்டு எதையும் சாதித்துவிடலாம் என எண்ணிடும் விசுவாசிகளுக்கு “தன் அபிஷேகத்தை” தரவே மாட்டார்! வேறு எதைக் காட்டிலும் நமக்கு மிகுந்த தேவையாயிருப்பது “இது ஒன்றுதான்” என நாம் உணர்ந்திருக்கிறோமா? எலிசாவைப் போல் இந்த ஒன்றைப் பெற்றுக்கொள்ளும் வரை ஆண்டவரை விடாப்பிடியாய் தொடர்ந்திட நம்மால் கூடுமா? அன்று பெனியேலில் யாக்கோபு கூறியதைப் போல் “ஆண்டவரே, நீர் என்னை இந்த ஆசீர்வாதத்தினால் ஆசீர்வதித்தாலொழிய உம்மை நான் போகவிடேன்!” என நாம் மெய்யாகவே கூறிட முடியுமா? பரிசுத்தாவியின் வல்லமையையும், உயிர்த்தெழும் வல்லமையையும் இவ்வாறு தீராத வாஞ்சையோடு தேடுவீர்களானால், நாம் நிச்சயமாய் அதைப் பெற்றுக்கொள்வோம்! அப்போது நாமும், “இஸ்ரவேல்” என அழைக்கப்பட்டு தேவனிடத்திலும் மனுஷரிடத்திலும் மெய்யான வல்லமை பெற்றிருப்போம்!!

நம் ஜீவியத்தில் தோல்வியும் மனச்சோர்வும் வருவதற்கு தேவன் அவ்வப்போது அனுமதிக்கத்தான் செய்கிறார்! அது ஏனென்றால் “நமக்கு எவ்வளவாய் இந்த அபிஷேகம் தேவையாயிருக்கிறது!” என்ற அவசியத்தை நாம் உணர்ந்துகொள்ளும்படிக்கேயாகும். நாம் எவ்வளவுதான் உபதேச நிறைவு பெற்றிருந்தாலும், பல்லாண்டுகளாய் பரிசுத்தாவியானவர் நம்மிடத்தில் தங்கியிருந்தாலும்... இன்னமும் தேவ ஆவியானவர் நம்மீது வல்லமையாய் தொடர்ந்து தங்க வேண்டும் என நாம் உணர்வடைந்திடவே தேவன் விரும்புகிறார். அபிஷேகம் பெறுவதொன்றும் அவ்வளவு எளிதான காரியம் அல்ல! தன்மீது இருந்த அபிஷேகத்தை எலிசா விரும்பியதை எலியா கேட்டவுடன், "ஓ, இவ்வளவுதானா? இங்கே முழங்கால்படியிடு, நான் உன் தலைமீது என் கையை வைத்தவுடன் நீ அதை பெற்றுவிடுவாய்!" எனக் கூறவில்லை. அதற்கு மாறாக எலிசாவிடம் “மிகக் கடினமான ஒன்றை நீ கேட்டுவிட்டாய்” என்றே எலியா கூறினார். ஆம், அபிஷேகம் பெறுவது கடினமான காரியம்தான்! அதற்கு ஓர் விலைக்கிரயம் செலுத்தப்பட வேண்டும். அதைப் பெறுவதற்காக இவ்வுலகத்தில் உள்ள யாதொன்றையும் வெறுத்துவிட நாம் ஆயத்தமாய் இருக்க வேண்டும்!

அபிஷேகத்தைப் பெறுவதற்கு இவ்வுலகில் உள்ள பணம், வசதி, சொகுசு, புகழ், பிரபல்யம் மற்றும் கிறிஸ்தவ ஊழியத்தில் பெற்றிடும் சாதனைகளையும் விட “அபிஷேகத்தை” நாம் அதிகமாய் வாஞ்சிக்க வேண்டும்! ஆம், இது உண்மையாகவே ஒரு கடினமான காரியம்தான். ஆனால் இதுவே மெய்யான தாகத்திற்கு அர்த்தமாகும். இந்த மெய்யான தாகநிலைக்கு நாம் வந்துவிட்டால், நாம் உடனே இயேசுவிடம் சென்று பரிசுத்தாவியைப் பருகிவிடலாம்! வேதம் வாக்குரைத்தபடி, ஜீவ நதிகள் நம் உள்ளத்திலிருந்து பாய்ந்து சென்று, மரணத்திலிருந்து ஜீவனை நாம் செல்லும் இடமெல்லாம் கொடுத்துவிடும்! (யோவான் 7:37-39; எசே. 47:8,9). நாம் அபிஷேகத்தைப் பெற்றுவிட்டால், அதை எக்காரணம் கொண்டும் இழந்துவிடாதிருக்க மிகுந்த கவனம் கொண்டிருக்க வேண்டும்!! அவ்வாறு கவனமாய் இல்லையென்றால், நாம் எப்படிப் பெற்றோமோ அதேபோல் இழந்துவிடவும் முடியும்! ஆகவே, அன்பற்ற குற்றச்சாட்டுகள் அல்லது பொருளற்ற சம்பாஷணைகள் அல்லது அசுத்தமான கற்பனைகள் அல்லது பெருமையான எண்ணங்கள் அல்லது இருதயத்தின் கசப்புகள் ஆகிய யாதொன்றிலும் ஈடுபடாதிருக்க நாம் மிகுந்த கவனம் கொண்டிருக்க வேண்டும். அவ்வித கவனம் இல்லையென்றால், அபிஷேகம் நம்மைவிட்டுப் போய்விடும்!! அப்போஸ்தலனாகிய பவுல் 1கொரிந்தியர் 9:27 -ல் கூறும்போது, “மற்றவர்களுக்குப் பிரசங்கிக்கிற நான் தானே ஆகாதவனாய்ப் போகாதபடிக்கு என் சரீர அவயவங்களை ஒடுக்கிக் கீழ்ப்படுத்துகிறேன்” எனக் கூறினார். அவர் தம்முடைய இரட்சிப்பை இழக்கும் சாத்தியத்தைக் குறிப்பிடாமல், அபிஷேகத்தை இழக்கும் சாத்தியத்தையே இங்கே குறிப்பிடுகிறார் என்று நான் நம்புகிறேன். பல சபைகளை ஸ்தாபித்து அநேக அற்புதங்களைச் செய்து தேவனால் வல்லமையாய் உபயோகிக்கப்பட்ட இந்த மாபெரும் அப்போஸ்தலன்கூட “தன் சரீர அவயவங்களில் கவனமாயிராவிட்டால்” தேவனால் புறக்கணிக்கப்படும் அபாயத்தில் இருக்கும் நிலையை நான் சிந்தித்து சொல்லொண்ணா ஆச்சரியமடைகிறேன்! இந்த அப்போஸ்தலனுக்கே இவ்வித நிலையென்றால், நாம் எத்தனை கவனமாய் நின்றிட வேண்டும்! ஆகவே, “ஆண்டவரே, என் ஜீவியத்தில் நான் எதை இழந்தாலும், உமது அபிஷேகத்தை நான் ஒருபோதும் இழந்துவிடக்கூடாது!!” என்ற ஜெபமே நம்முடைய ஜெபமாய் இருக்கக்கடவது!

2. அவன் மனநோக்கத்தில் தூய்மை: எலிசா ஏன் அபிஷேகிக்கப்பட்டான்? என்ற கேள்விக்கு இரண்டாவது காரணம், “அவனுடைய மனநோக்கங்கள் தூய்மையாயிருந்தது” என்பதுதான். தேவனுடைய மகிமை ஒன்றே அவனுடைய நிரந்தர அக்கறையாய் காணப்பட்டது. அவனுடைய மனநோக்கத்தைக் குறித்து எந்த இடத்திலும் விவரித்துக் கூறப்படவில்லை. ஆனால், அவன் ஜீவிய நிகழ்ச்சிகளை நாம் வாசிக்கும்போது அவன் மனதில் குடிகொண்டிருந்தது என்ன என்பதை பகிரங்கமாய் காணமுடிகிறது! தேவ ஜனத்திற்கு இருந்த தேவையைக் கண்டு அவன் நெஞ்சம் பாரம் கொண்டது! தனக்கு முன் சென்ற எலியாவைப் போலவே, தேவனுடைய நாமத்திற்கு ஏற்பட்ட நிந்தை அவன் மனதை வெகுவாய் பாதித்தது! இவ்வாறு தன் தேசத்தின் மீதிருந்த தேவையை, தேவனுடைய ஊழியத்தின் மூலமாய் பூர்த்தி செய்வதற்கும், மகிமையுள்ள கர்த்தருடைய நாமத்திற்கு உண்டான நிந்தையை அகற்றுவதற்கும் “அபிஷேகத்தை” தீராத ஏக்கத்தோடு நாடினான்!! இன்று ஏராளமான தேவனுடைய பிள்ளைகள் அபிஷேகம் பெறாமல் இருப்பதற்கு காரணம், அவர்களிடம் இருக்கும் தூய்மையற்றதும், சுயநலமுமான மனநோக்கங்களேயாகும்! இன்றைய திரளான கிறிஸ்தவர்கள், தங்கள் வெளிப்புறத்தில் சரியாய் இருந்தால் திருப்தியான மகிழ்ச்சியடைந்துவிடுகிறார்கள். ஆனால், தேவனோ அவர்களுடைய அந்தகரணத்தில் உண்மையாயிருக்கவே நாடுகிறார்! அவருடைய மகிமைக்காக நாம் கரிசனை கொண்டிருக்கிறோமா? அல்லது நம் சொந்த மகிமைக்காக நாம் கரிசனை கொண்டிருக்கிறோமா? அவருடைய நாமத்திற்கு ஏற்பட்ட நிந்தையைக் குறித்து நாம் மனவேதனை அடைகிறோமா? என்பதையும் காண்கிறார்! இன்று நம் தேசத்தில் தேவனுடைய நாமம் நிந்திக்கப்படுவதை கண்டு நம் இருதயம் பாரமடையாமலும், வேதனையடையாமலும் இருந்தால் “நம்மை எவ்வாறு தேவன் அபிஷேகிக்க முடியும்?” என்றே நான் வியப்படைகிறேன்! எசேக்கியேல் 9:1-6 வசனங்களில், சில குறிப்பிட்ட ஜனங்களை “தனக்குரிய சொந்த ஜனமாய்” தேவன் அடையாளம் இட்டதை நாம் வாசிக்கிறோம். தேவஜனத்திடம் இருந்த அருவருப்பான பாவங்களினிமித்தம் பெருமூச்சு விட்டு அழுதவர்களையே தேவன் அடையாளம் இட்டார்! ஏனெனில், அவர்களுடைய இருதயங்கள் கர்த்தருடைய நாமத்தின்மேல் அக்கறை கொண்டு, அவரை மாத்திரமே மகிமைப்படுத்துவதற்கு மிகுந்த வாஞ்சை கொண்டதாய் இருந்தது! இவர்களே கர்த்தருடைய மீதியானவர்கள், இவர்களை மாத்திரமே கர்த்தர் அபிஷேகம்பண்ணுகிறார்!!

3. அவனிடம் உலக சிநேகம் இல்லை: எலிசா அபிஷேகிக்கப்பட்டதற்கு மூன்றாவது காரணம் “அவனிடம் உலக சிநேகம் சிறிதேனும் இல்லை!” என்பதுதான். எலிசா நாகமானோடு ஈடுபட்ட செயலிலிருந்து இதை நாம் வெளிப்படையாய் அறிய முடிகிறது. தான் பெற்ற சுகத்திற்காக அவன் பணத்தை வாரித் தந்த போது, தான் செய்த ஊழியத்திற்கு எந்த சம்பளத்தையும் பெற அவன் மறுத்துவிட்டான். இந்த உலகத்தின் மீதோ அல்லது பணத்தின் மீதோ எலிசாவிடம் துளியளவு விருப்பமும் காணப்படவில்லை. கர்த்தருடைய ஊழியத்திற்கு “சுய-ஆதாயத்தை” அவன் ஒருபோதும் நாடவில்லை. ஆனால் இதற்கு நேர்மாறான குணாதிசயத்தை கேயாசி நமக்கு வெளிப்படுத்தியிருக்கிறான். இந்த கேயாசி, எலியாவிற்கு எப்படி எலிசா உதவிக்காரனாக இருந்தானோ அதுபோலவே எலிசாவிற்கு இவன் உதவிக்காரனாய் இருந்தான்! எலியாவினுடைய ஆவியின் இரட்டிப்பான பங்கை எலிசா பெற்று, எலியாவின் ஊழியத்தை தொடர்ந்து செய்திடக்கூடுமானால்... அதேபோல், எலிசாவின் ஆவியை கேயாசி பெற்று, எலிசாவின் ஊழியத்தை தொடர்ந்து செய்திருக்க நிச்சயமாய் கூடும்! ஆனால், அவனோ அபிஷேகத்தைப் பெறாமல்... அதற்கு பதிலாய், குஷ்டரோகத்தைப் பெற்றான்! ஏன்? ஏனெனில், தேவன் அவனுடைய இருதயத்தைக் கண்டார்!! வெளித்தோற்றத்தில் ஆவிக்குரியவனைப் போல் எவ்வளவுதான் தோற்றம் அளித்தாலும் கேயாசியின் இருதயத்தின் ஆழத்தில் “சுய-ஆதாயத்தின் விருப்பமே” தேங்கிக் கிடந்தது. ஆரம்ப கட்டத்தில் கர்த்தருடைய ஊழியத்தை மிகுந்த உத்தமத்தோடுதான் செய்தான். ஆனால் வெகு சீக்கிரத்தில் அதே ஊழியத்தை “பொருளாதார லாபத்தைப் பெறும் அடிப்படையில்” ஊழியம் செய்திட தொடங்கிவிட்டான். பொருளாதார ஆஸ்திகளையும், அதோடு சேர்த்து அபிஷேகத்தையும் தான் பெற்றுகொள்ள முடியும் என்றே அவன் எண்ணிவிட்டான்!! ஆனால், அவனோ பெரும் பிழை செய்தவனாய் நின்றான்! ஆ இது பரிதாபம்!! நம் ஸ்தானத்தையோ அல்லது ஊழியத்தையோ கொண்டு யாதொரு சபையில் அல்லது யாதொரு கிறிஸ்தவ ஸ்தாபனங்களில், ஆதாயம் தேட முயற்சிக்கும் கேட்டிலிருந்து ஆண்டவர் நம்மை விடுவிப்பாராக!

இன்றும் “பரிசுத்தாவியின் அபிஷேகத்தைப் பெறுவதற்கும், பெற்றுக்கொண்ட அந்த வல்லமையை என்றும் தங்களில் பாதுகாத்துக் கொள்வதற்கும் எந்த விலைக்கிரயத்தையும் செலுத்திட ஆயத்தமாயிருக்கும்” புருஷர்களையும் ஸ்திரீகளையும் நம் தேசத்தில் காண்பதற்கே தேவன் தவிப்புடன் இருக்கிறார்.

ஆம், அபிஷேகத்தினால் மாத்திரமே சத்துருவின் நுகத்தை நம் தேசத்தில் முறித்துவிட முடியும்! (ஏசாயா 10:27). இயேசுவின் நாமம் நமக்கே கையளிக்கப்பட்டுவிட்டது! ஆனால், அந்த நாமத்தை தாங்கிச் சென்றிட வகை செய்திடும் “அபிஷேகம்” நம்மிடத்தில் உண்டா? நம் ஜீவியத்திலும், நம் ஊழியத்திலும் இந்த பரிசுத்தாவியின் வல்லமைக்காக நாம் தீராத தாகம் கொள்வோமாக! அப்போது மாத்திரமே, இப்பூமியில் நாம் தேவனை மகிமைப்படுத்தவும், அவருடைய சித்தத்தை நிறைவேற்றவும், அவரது ராஜ்ஜியத்தைக் கொண்டுவரவும் முடியும்!!