WFTW Body: 

ஒரு விசுவாசியின் மனதை ஒரு புதிய சத்தியம் பற்றிப் பிடிக்கும்போது, அவர் அதை மிகவும் தீவிரமாகப் பின்பற்றி, அந்த சத்தியத்தை சமநிலைப்படுத்த வேண்டிய மற்ற சத்தியங்களை உதாசீனப்படுத்த வாய்ப்புள்ளது. இது குறிப்பாக மெய்யான கிறிஸ்தவ விசுவாசத்தின் விஷயத்தில் உண்மையாயிருக்கிறது.

பழைய உடன்படிக்கையில் விசுவாசம் முக்கியமானதாகக் கருதப்படவில்லை. அங்கு கிரியைகளுக்கே முக்கியத்துவம் கொடுக்கப்பட்டது. மோசேயின் நியாயப்பிரமாணம் தேவனிடத்தில் விசுவாசம் வைப்பதைப் பற்றி எதுவும் கூறவில்லை. ஆனால், அது தேவனைப் பிரியப்படுத்த மனிதன் பின்பற்ற வேண்டிய 613 கட்டளைகளைக் கொண்ட ஒரு பெரிய பட்டியலைக் கொடுத்தது.

ஆனால், புதிய உடன்படிக்கையில், "கிருபையினாலே விசுவாசத்தைக்கொண்டு இரட்சிக்கப்பட்டீர்கள்; இது உங்களால் உண்டானதல்ல, இது தேவனுடைய ஈவு. ஒருவரும் பெருமைபாராட்டாதபடிக்கு இது கிரியைகளினால் உண்டானதல்ல" (எபேசியர் 2:8,9) என்று நாம் வாசிக்கிறோம். இந்த வசனத்தை மட்டும் தனியாகப் படிக்கும்போது, பல விசுவாசிகள் ஒருகோடிக்குச் சென்று, கிரியை முக்கியமில்லை என்று சொல்கிறார்கள். ஏனென்றால், இந்த வசனம் சொல்வதுபோல, கிரியைகள் மனிதனைத் தன்னுடைய திறமையைப் பற்றிப் பெருமைகொள்ளச் செய்யக்கூடும்.

ஆனால், புதிய உடன்படிக்கை உண்மையில் என்ன போதிக்கிறது? ஒரே ஒரு வசனத்தை மட்டும் படித்து முழு சத்தியத்தையும் தெரிந்துகொள்ள முடியாது. பிசாசு வனாந்தரத்தில் இயேசுவிடம் ஒரு வசனத்தை மேற்கோள் காட்டி, “இப்படி எழுதியிருக்கிறது…” (மத்தேயு 4:6) என்று சொன்னபோது, இயேசு, “வேதத்தில் இப்படியும் எழுதியிருக்கிறதே…” என்று பதிலளித்தார். ஆகவே, முழு சத்தியத்தையும் நாம் சரியாகப் புரிந்துகொள்ள வேண்டுமென்றால், வேதாகமத்தில் உள்ள ஒரு வசனம் வேறு பல வசனங்களால் சமநிலைப்படுத்தப்பட வேண்டும் என்று காண்கிறோம். சாத்தான் கர்த்தராகிய இயேசுவையே ஒரே ஒரு வசனத்தால் ஏமாற்ற முயன்றானென்றால், இன்றைய விசுவாசிகளை சில தனிப்பட்ட வசனங்களால் அவன் எவ்வளவு அதிகமாக ஏமாற்ற முயற்சி செய்வான்! எனவே, நாம் ஏமாற்றப்படுவதைத் தவிர்க்க, வேதாகமத்தைப் படிப்பதில் மிகவும் கவனமாக இருக்க வேண்டும். பறவைகளுக்கு இருப்பதுபோல, சத்தியத்திற்கும் இரண்டு சிறகுகள் உண்டு. நீங்கள் நேராகப் பறக்க விரும்பினால், இரண்டையும் பயன்படுத்த வேண்டும். ஒரே ஒரு சிறகை மட்டும் பயன்படுத்தினால், நீங்கள் முற்றிலும் வழி தவறுவீர்கள், அல்லது சுற்றிச்சுற்றி வட்டமடித்துக் கொண்டு எந்த முன்னேற்றமும் இல்லாமல் இருப்பீர்கள்!.

இந்த சமநிலையை எபேசியர் 2-இல் காண்கிறோம், அங்கு ஒரு புறத்தில், “கிருபையினாலே விசுவாசத்தைக்கொண்டு இரட்சிக்கப்பட்டீர்கள்; இது உங்களால் உண்டானதல்ல, இது தேவனுடைய ஈவு; ஒருவரும் பெருமை பாராட்டாத படிக்கு இது கிரியைகளினால் உண்டானதல்ல" என்று கூறுகிறது; ஆனால் யாரும் வழிதவறிப் போகாதபடிக்கு, (“அந்த ஒரு சிறகைக் கொண்டு” மட்டும் பறந்துவிடாத படிக்கு), உடனேயே அடுத்த வசனத்தில் தொடர்ந்து, “ஏனெனில், நற்கிரியைகளைச் செய்கிறதற்கு நாம் கிறிஸ்து இயேசுவுக்குள் சிருஷ்டிக்கப்பட்டு, தேவனுடைய செய்கையாயிருக்கிறோம்; அவைகளில் நாம் நடக்கும்படி அவர் முன்னதாக அவைகளை ஆயத்தம்பண்ணியிருக்கிறார்…" (எபேசியர் 2:8-10) என்று கூறுகிறது. ஆகவே: நாம் நற்கிரியைகளினால் இரட்சிக்கப் படவில்லை; ஆனால் தேவன் நமக்காக முன்னமே ஆயத்தம்பண்ணின நற்கிரியைகளைச் செய்வதற்கென்று இரட்சிக்கப் பட்டிருக்கிறோம்.

இதே சமநிலையை பிலிப்பியர் 2:12,13 வசனங்களில் நாம் காண்கிறோம். அங்கே “பயத்தோடும் நடுக்கத்தோடும் உங்கள் இரட்சிப்பு நிறைவேறப் பிரயாசப்படுங்கள்" என்று நமக்கு புத்திசொல்லப் பட்டிருக்கிறது ஆனால் பின்னர் அது தொடர்ந்து, “தேவனே தம்முடைய தயவுள்ள சித்தத்தின்படி விருப்பத்தையும் செய்கையையும் உங்களில் உண்டாக்குகிறவராயிருக்கிறார்” என்று கூறுகிறது. தேவன் முதலில் நமக்கு உள்ளாகக் கிரியை செய்வதை நாம் வெளியே நிறைவேற்ற வேண்டும்.

யாக்கோபு 2:17,18-இல், “அப்படியே விசுவாசமும் கிரியைகளில்லாதிருந்தால் தன்னிலேதானே செத்ததாயிருக்கும்" என்று சொல்லப்பட்டிருக்கிறது. பின்னர் யாக்கோபு தொடர்ந்து, “‘உனக்கு விசுவாசமுண்டு, எனக்குக் கிரியைகளுண்டு’ என்று ஒருவன் சொல்லலாம்” என்று கூறுகிறார். ஆனால் யாக்கோபு (பரிசுத்த ஆவியினால் ஏவப்பட்டு), “கிரியைகளில்லாமல் உன் விசுவாசத்தை எனக்குக் காண்பி, நான் என் விசுவாசத்தை என் கிரியைகளினாலே உனக்குக் காண்பிப்பேன்" என்று கூறுகிறார். ஆகவே “விசுவாசத்தின் கிரியைகளை” உண்டாக்காத விசுவாசம் செத்த விசுவாசமேயாகும். அதுதான் செத்த விசுவாசத்திற்கும் ஜீவனுள்ள விசுவாசத்திற்கும் உள்ள வித்தியாசம்.

மெய்யான கிறிஸ்தவ விசுவாசம் எப்போதும் “விசுவாசத்திலிருந்து வரும் கிரியைகளை” உண்டாக்கும் — அதாவது பரிசுத்த ஆவியைச் சார்ந்துகொண்டு செய்யும் கிரியைகள். மரத்தின் ஒரு கிளையானது மரத்தைச் சார்ந்துகொண்டு கனிகளைத் தருவது போல, நாம் பரிசுத்த ஆவியைச் சார்ந்துகொள்வதே விசுவாசம் ஆகும். ஆகவே, புதிய ஏற்பாட்டில் காணப்படும் சத்தியத்தின் சமநிலையை நாம் மெய்யாகவே கொண்டிருந்தால், அது நம்முடைய வாழ்வில் காணப்படும் கிறிஸ்துவைப்போன்ற குணாதிசயத்தில் வெளிப்படும். இந்த கிறிஸ்துவைப் போன்ற தன்மையானது, நம்முடைய குடும்ப உறவுகளிலும், வேலை செய்யும் இடங்களிலும் வெளிப்படும். இது விசுவாசத்தினால் (அதாவது, நாம் அவரைச் சார்ந்திருப்பதினால்) பரிசுத்த ஆவியின் வல்லமையால் உண்டாக்கப்படும்.

கிரியைகளில்லாத விசுவாசம் ஒரு செத்த அறிவு-சார்ந்த நம்பிக்கை மட்டுமேயாகும்; அது பரிசுத்த ஆவியினால் ஒரு நபரின் இருதயத்தில் உண்டாக்கப்பட்ட மெய்யான விசுவாசம் அல்ல. மெய்யான கிறிஸ்தவ விசுவாசம் தேவன் மீது முழுமையாக வைக்கும் நம்பிக்கையாகும். அது, கிறிஸ்துவைப் போன்ற கனியை ஒரு நபருடைய வாழ்க்கையில் எப்போதும் பெருகச் செய்யும். மறுபுறத்தில், விசுவாசமில்லாத கிரியைகள் என்பது ஒரு மனுஷன் தன் சொந்த மனுஷீக முயற்சிகளால் தேவனைப் பிரியப்படுத்த முயல்வதாகும். இதன் விளைவு சுய-நீதியே. வேதாகமம் இதை “அழுக்கான கிழிந்த ஆடை” என்று அழைக்கிறது. (“எங்களுடைய நீதிகளெல்லாம் அழுக்கான கந்தைபோல இருக்கிறது” - ஏசாயா 64:6).

நான் இந்தக் கட்டுரையில் பகிர்ந்துகொண்ட சத்தியம் ஒரு மிக முக்கியமான சத்தியமாகும். ஏனென்றால் நம்முடைய நித்திய முடிவு இதைச் சார்ந்திருக்கிறது. ஆகவே இந்த விஷயத்தில் நாம் கிஞ்சித்தும் தவறிடக் கூடாது. ஆகவே, கிறிஸ்துவினுடைய ஜீவனை நமக்குள்ளே உண்டாக்காததும், வெறும் அறிவு-சார்ந்த நம்பிக்கையாக இருப்பதுமான ஒரு போலியான “விசுவாசத்தினால்” பிசாசு உங்களை வஞ்சிக்க அனுமதித்திடாதீர்கள்.

கேட்கிறதற்குக் காதுள்ளவன் எவனோ, அவன் கேட்கக்கடவன். ஆமென்.