WFTW Body: 

மத்தேயு 14:19 -இல் நாம் மற்றவர்களுக்கு ஆசீர்வாதமாக மாறுவதற்கான மூன்று படிகளைப் பார்க்கிறோம்:

(1) இயேசு எல்லா அப்பங்களையும் மீன்களையும் எடுத்தார்;

(2) அவர் அவைகளை ஆசீர்வதித்தார்;

(3) அவர் அவைகளைப் பிட்டார்;

பின்னர், திரளான ஜனங்கள் போஷிக்கப்பட்டார்கள். இப்படித்தான் கர்த்தர் உங்களையும் மற்றவர்களுக்கு ஆசீர்வாதமாக மாற்ற விரும்புகிறார். அங்குள்ள சிறுவன் செய்தது போல், முதலில் அவருக்கு உங்களுடைய எல்லாவற்றையும் கொடுக்க வேண்டும். அப்போது அவர் பரிசுத்த ஆவியின் வல்லமையால் உங்களை ஆசீர்வதிப்பார். பின்னர், அவர் உங்களைப் பல்வேறு சோதனைகள், ஏமாற்றங்கள், அவநம்பிக்கைகள், தோல்விகள், வியாதிகள், துரோகங்கள் போன்றவற்றின் மூலம் உடைத்து, உங்களைத் தாழ்த்தி, மனிதர்களின் பார்வையில் உங்களை ஒன்றுமில்லாதவராக ஆக்குவார். பிறகு, ​​அவர் உங்கள் மூலம் மற்றவர்களை ஆசீர்வதிப்பார். எனவே, அவரது நொறுக்குதலுக்கு உங்களை ஒப்புக்கொடுங்கள். வேதம் சொல்லுகிறபடி, இயேசு முதலாவது நொறுக்கப்பட்டு, பின்பு பிதாவின் சித்தம் அவருடைய கையினால் வாய்த்தது (ஏசாயா 53:10-12).

இயேசு தன்னுடைய வாழ்வில் பல்வேறு சூழ்நிலைகளில் மனுஷீக சுயசித்தம் உடைக்கப்பட அனுமதித்தார். அவ்விதமாகத்தான், அவர் அப்பழுக்கற்றவராய் பிதாவிற்கு தம்மையே அர்ப்பணிக்க முடிந்தது. இந்த நோக்கத்திற்காகவே ஆவியானவர் அவரை பலப்படுத்தினார் (எபிரேயர் 9:14). உங்கள் சுய சித்தத்தின் பலத்தை உடைக்க நீங்கள் பரிசுத்த ஆவியை அனுமதித்தால் மட்டுமே நீங்கள் ஆவிக்குரியவர்களாய் மாறுவீர்கள். தேவன் என்ன செய்ய விரும்புகிறாரோ, அதைச் செய்வதற்குப் பதிலாக, உங்களுடைய கடினமான சுயசித்தம் விரும்புவதைச் செய்யும்படி நீங்கள் சோதிக்கப்படும் வேளைகளில், தேவனுடைய சித்தத்தைச் செய்ய உங்களுடைய சுயசித்தம் உடைக்கப்பட வேண்டும்.

தேவனுடைய சித்தம் உங்கள் சுயசித்தத்தில் குறுக்கிடும் இடங்களில் உங்கள் சிலுவை காணப்படும். அங்கே உங்கள் சுயசித்தம் சிலுவையில் அறையப்பட வேண்டும். அங்கே நீங்கள் மரிக்க வேண்டும் என்று ஆவியானவர் உங்களுக்குச் சொல்லுவார். நீங்கள் ஆவியானவரின் சத்தத்திற்குத் தொடர்ந்து கீழ்ப்படிந்தால், நீங்கள் தொடர்ந்து உடைந்தவர்களாய் இருப்பீர்கள்; நீங்கள் ஆவியில் தொடர்ந்து உடைந்தவர்களாய் இருக்கும் பொழுது உங்களுக்குத் தொடர்ச்சியான புத்துயிர் அளிப்பதாக தேவன் வாக்களித்திருக்கிறார். “உன்னதத்திலும் பரிசுத்த ஸ்தலத்திலும் வாசம்பண்ணுகிற நான், பணிந்தவர்களின் ஆவியை உயிர்ப்பிக்கிறதற்கும், நொறுங்கினவர்களின் இருதயத்தை உயிர்ப்பிக்கிறதற்கும், நொறுங்குண்டு பணிந்த ஆவியுள்ளவர்களிடத்திலும் வாசம்பண்ணுகிறேன்.” (ஏசாயா 57:15).

எப்பொழுதும் "ஆவியில் எளிமை"யோடு, அதாவது, உங்களது சொந்தத் தேவையைக் குறித்த உணர்வோடு இருப்பது நல்லது. ஆனால், அவரைத் தொடர்ச்சியாகத் தேடும் அனைவருக்கும் தேவன் பலன் அளிக்கிறார் என்பதையும் நீங்கள் விசுவாசிக்க வேண்டும். தேவன் உங்களை ஆசீர்வதிப்பார் என்றும் அவருடைய வல்லமையால் உங்களை நிரப்புவார் என்றும் நீங்கள் விசுவாசிக்கவில்லை என்றால், ஆவியில் எளிமையாக இருப்பதன் மதிப்பு ஒன்றுமில்லாததாகிவிடும்.

ஒவ்வொரு சபையிலும் எளியவர்களுடனும், பலவீனர்களுடனும் ஐக்கியத்தைத் தேடி, அவர்களை ஊக்குவியுங்கள். பெரும்பாலானவர்கள் குழந்தைகளைப் புறக்கணிப்பதால், குழந்தைகளுடன் பேசி அவர்களை ஊக்கப்படுத்துங்கள். எப்பொழுதும் தாழ்வான, கவனிக்கப்படாத இடத்தையும், சபையில் காணப்படாத ஊழியங்களையும் தேடுங்கள். எந்தவொரு சபையிலும் முக்கியத்துவத்தைத் தேடாதீர்கள், உங்கள் தாலந்து அல்லது உங்கள் திறமைகளால் யாரையும் எந்த வகையிலும் ஈர்க்க முயற்சிக்காதீர்கள். ஆனால், ஒவ்வொரு கூடுகையிலும் சாட்சியளிக்க எப்போதும் தைரியமாக இருங்கள், மேலும் சபையில் சாத்தியமான எல்லா வழிகளிலும் ஊழியம் செய்யுங்கள் - தரையைச் சுத்தம் செய்வதானாலும் அல்லது பியானோ வாசிப்பதானாலும். எவருடனும், எந்த ஊழியத்திற்கும் போட்டி போட்டுக் கொள்ளாதீர்கள். நீங்கள் உண்மையுள்ளவர்களாக இருந்தால், தேவன் தாமே உங்களுக்காகத் திட்டமிட்டுள்ள ஊழியத்தை சரியான நேரத்தில் திறப்பார்.