WFTW Body: 

இரண்டாந்தரம் கர்த்தருடைய வார்த்தை யோனாவுக்கு உண்டாகிற்று” என்று யோனா 3:1-ல் எழுதப்பட்டுள்ளது. நாம் ஒரு முறை தோல்வியடையும்போது இரண்டாம் வாய்ப்பினைக் கர்த்தர் நமக்குத் தருகிறபடியால் அவரைத் துதியுங்கள். யோனாவின் புத்தகத்திலிருந்து நமக்குக் கிடைக்கும் மிகச் சிறந்த செய்திகளில் இதுவும் ஒன்று. தேவனைப் பிரியப்படுத்துவதில் நீங்கள் தோல்வியடைந்து விட்டீர்களா? தேவன் உங்களுக்கு இன்னுமொரு வாய்ப்பினைக் கொடுக்க காத்திருக்கிறார். (தேவனைப் பிரியப்படுத்துவதில்) இரண்டாந்தரமும் நீங்கள் தோல்வியடைந்து விட்டீர்களா? அவர் உங்களுக்கு மூன்றாம் வாய்ப்பினைக் கொடுப்பார். அவர் இரண்டாவது வாய்ப்பின் தேவன் மாத்திரமல்ல – ஏனென்றால் நம்மில் அநேகர் நீண்ட காலத்திற்கு முன்பே இரண்டாம் வாய்ப்பில் தோல்வியடைந்துள்ளோம் – அவர் இன்னுமொரு வாய்ப்பை அளிக்கும் தேவன்! நீங்கள் எத்தனை முறை தோல்வியடைந்திருந்தாலும், நீங்கள் முழு இருதயத்தோடு மனந்திரும்பினால், இப்பொழுதும் கூட கர்த்தர் உங்களைத் திருப்பிக்கொள்ள முடியும், அவருக்காக ஒரு ஊழியத்தை நிறைவேற்ற உங்களுக்குப் பெலனையும் கொடுக்க முடியும்.

நினிவே விஸ்தாரமான மகா பெரிய நகரமாயிருந்தபடியால், “இன்னும் நாற்பது நாட்களில் நினிவே கவிழ்க்கப்பட்டுப்போம்” என்ற செய்தியை நகரத்தின் ஒவ்வொரு தெருவிலும் யோனா பிரசங்கிப்பதற்கு மூன்றுநாள் பிரயாணம் செய்யவேண்டியதாயிற்று. ஆச்சரியப்படும் விதமாக நினிவேயின் ஜனங்கள் உடனடியாக மனந்திரும்பினார்கள். இது உலக சரித்திரத்தில் நிகழ்ந்த உயிர்மீட்சிகளில் (revivals) மிகப்பெரியதானதும் அதிசீக்கிரத்தில் உண்டானதுமான உயிர்மீட்சி ஆகும். இங்கே என்னை ஊக்குவிக்கும் ஒரு காரியம் என்னவென்றால், நினிவே போன்ற ஒரு பொல்லாத நகரம் மனந்திரும்பியபோது தேவன் இரக்கமுள்ளவராக இருந்தார். இன்னும் சில ஆண்டுகளுக்குப் பிறகு, அதே நகரம் மிகவும் பொல்லாத நகரமாய் இருக்கப்போவதால் அதனை அழிக்க நேரிடும் என்பதையும் தேவன் அறிந்திருந்தார். ஆனால் தேவன் அவரவர் இப்பொழுது எப்படி இருக்கிறார்கள் என்பதற்கு ஏற்றபடி ஒவ்வொருவரையும் நடத்துகிறார். கடந்த காலத்தில் எப்படி இருந்தார்கள் என்பதை வைத்தோ அல்லது எதிர் காலத்தில் எப்படி இருப்பார்கள் என்பதை வைத்தோ அவர் நடத்துகிறதில்லை. அவருடைய நாமம் “இருந்தேன் (I was)” என்பதுமல்ல, “இருப்பேன் (I will be)” என்பதுமல்ல, “இருக்கிறேன் (I AM)” என்பதாகும். தேவன் நம்மை விட அதிக மனதுருக்கம் உள்ளவராக இருக்கிறார்.

தேவன் நினிவே மீது இரக்கம் காட்டியபோது யோனா உற்சாகம் அடைந்திருப்பான் என்று ஒருவன் நினைக்கக்கூடும், ஆனால் அவன் உற்சாகம் அடையவில்லை. யோனாவுக்கு ஒரு பாடத்தைக் கற்பிக்கும்படியாக தேவனாகிய கர்த்தர் ஒரு ஆமணக்குச்செடியை முளைக்கக் கட்டளையிட்டு, அதை அவன்மேல் ஓங்கிவளரப்பண்ணினார். அந்த ஆமணக்கின்மேல் யோனா மிகவும் சந்தோஷப்பட்டான். மறுநாளிலோ தேவன் ஒரு பூச்சியைக் கட்டளையிட்டார்; அது ஆமணக்குச்செடியை அரித்துப்போட்டது; அதினால் அது காய்ந்துபோயிற்று. வெயில் யோனாவுடைய தலையில் படுகிறதினால் அவன் மிகவும் கோபங்கொண்டு, “நான் உயிரோடிருக்கிறதைப் பார்க்கிலும் சாகிறது நலமாயிருக்கும்” என்றான். அப்பொழுது தேவன் யோனாவை நோக்கி, “ஒரு இராத்திரியிலே முளைத்ததும், ஒரு இராத்திரியிலே அழிந்துபோனதுமான ஆமணக்குக்காகப் பரிதபிக்கிறாயே. வலதுகைக்கும் இடதுகைக்கும் வித்தியாசம் அறியாத இலட்சத்து இருபதினாயிரம்பேருக்கு அதிகமான மனுஷரும் அநேக மிருகஜீவன்களும் இருக்கிற மகா நகரமாகிய நினிவேக்காக நான் பரிதபியாமலிருப்பேனோ” என்றார் (யோனா 4:11).

பழைய ஏற்பாட்டிலுள்ள வேறு எந்த வசனத்தையும் விட இந்த வசனத்தில் (யோனா 4:11-ல்) அழிந்துபோகின்ற ஆத்துமாக்களுக்காகத் தேவனுடைய மிகுதியான மனதுருக்கத்தைக் காண்கிறோம். ஒருவரும் கெட்டுப்போகாமல் நித்தியஜீவனை அடையும்படிக்கு, தேவன் தம்முடைய ஒரேபேறான குமாரனைத் தந்தருளி, இவ்வளவாய் உலகத்தில் அன்புகூர்ந்தார். யோனா இந்த காரியத்தில் தேவனோடு ஐக்கியம் கொள்ளவில்லை. யோனாவைப் போல பிரசங்கித்து உயிர்மீட்சிகளைக் காண்கிற அநேகப் பிரசங்கியார்கள் இன்றும் உண்டு. அவர்கள் யோனாவைப் போலவே தேவனுடைய மனதுருக்கமுள்ள இருதயத்தோடு ஐக்கியம் கொள்ளவில்லை. தேவன் விரும்புகிறபடி தங்களுடைய ஊழியத்தை அத்தகைய பிரசங்கியார்கள் நிறைவேற்றுகிறதில்லை. நீங்கள் பிரசங்கம்செய்து ஜனங்களை இரட்சிப்பிற்குள் நடத்தலாம்; ஆயினும் எல்லாவற்றிற்கும் முடிவில் யோனாவைப் போல நீங்களும் தேவனோடு எந்தவொரு ஐக்கியமும் கொள்ளாமலே போகலாம். தேவனுடைய மனதுருக்கமுள்ள இருதயத்தோடு ஐக்கியம் கொள்ளுதலே ஒரு சுவிசேஷ ஊழியத்திற்கு நேர்த்தியான அடித்தளமாகும். தேவன் வெளிச்சம் இல்லாதவர்கள் மேல் அவ்வளவு அதிக மனதுருக்கமுள்ளவராக இருக்கிறார். எல்லா மனுஷரும் மனந்திரும்பி இரட்சிக்கப்படவும், சத்தியத்தை அறிகிற அறிவை அடையவும், அவர் விருப்பமுள்ளவராயிருக்கிறார் என்று வேதாகமம் கூறுகிறது. அதனை அவர் வாஞ்சிக்கிறார். தேவனுடைய இருதயத்தோடு நாம் எவ்வளவு அதிகமாக ஐக்கியம் கொள்ளுகிறோமோ, அவ்வளவு அதிகமாய் அவருடைய பாரத்தை நாம் பகிர்ந்து கொள்வோம். தேவன் உங்களை ஒரு சுவிசேஷகராக அழைத்திருந்தால், அழிந்துபோகின்ற ஆத்துமாக்களுக்காக அவர் ஒரு பாரத்தை உங்களுக்கு தருவார். தேவன் உங்களை ஒரு போதகராக அழைத்திருந்தால், குருடர்களும் வஞ்சிக்கப்பட்டவர்களும் வெற்றி வாழ்க்கைக்குள் நுழையாதவர்களுமான விசுவாசிகளுக்காக அவர் ஒரு பாரத்தை உங்களுக்கு தருவார். நம்முடைய ஊழியத்தைப் பயனுள்ள விதத்தில் நிறைவேற்ற வேண்டுமென்றால், தேவனுடைய இருதயத்தோடு ஐக்கியம் கொண்டு அவருடைய மனதுருக்கத்தைப் பகிர்ந்துகொள்ளுவது அவசியமாகும்.